Aathmaavin Raagangal

ஆத்மாவின் ராகங்கள்

தலைப்பை பார்த்தவுடன் ஏனோ ஓர் ஈர்ப்பு உண்டாகி எடுத்து படிக்க ஆரம்பித்த நாவல். சுதந்திரப் போராட்டக் காலத்தில் மதுரையில் நடைபெறும் கதைக்களம். உண்மை சம்பவமும் கூட என்பது தனிச்சிறப்பு. நூலின் முதல் பகுதியில் புனைவு போல் தொடங்கும் நாவல் தனிநபரின் வரலாற்றுக் கதையாக மிளிரப் போவதாக பாவித்து விடுதலைப் போராட்டத்தின் அடிநாதமாக ஒலிப்பது கூடுதல் சிறப்பு.

- நா. பார்த்தசாரதி

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

முன்னுரை

இது ஒரு காந்தீய சகாப்த நாவல்; ஆனால் ஒன்றல்ல இரண்டு சகாப்தங்களை நீங்கள் இந்த நாவலில் சந்திக்கிறீர்கள். ஒரு தலைமுறையின் தேசபக்தர்கள் அனைவருமே இந்த நாவலின் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். உப்புச் சத்தியாக்கிரகத்திலிருந்து நேற்று வரை உள்ள நிலைமைகளினூடே இந்தக் கதை பாய்கிறது; வளர்கிறது, நிறைகிறது.

தேச சுதந்திர வரலாறும் போராட்டங்களும், பின்னணியாக அமைய உருவாக்கப்பட்ட இக்கதையை ஒரு தேசீய சமுகத்தின் புதிய வகைச் சரித்திர நாவலாக நான் கருதுகிறேன். அது எந்த அளவிற்குச் சரியான கருத்து என்பதைப் படிக்கிறவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஏனெனில், இது ஒரு சத்தியாக்கிரகியின் கதை. அபிப்பிராயங்களை வற்புறுத்தி எதிர்பார்க்க விரும்பவில்லை.

சுதந்திரமடைந்த ஒவ்வொரு மண்ணின் சுபீட்சமும் அந்த சுதந்திரத்தை அடையப் போராடியவர்களை உரமாகக் கொண்டு பெற்ற சுபீட்சம் தான் என்பதை மறந்து விடலாகாது. சுதந்திரப் போராட்டத்தின் போது இல்லாத இயக்கங்கள், சுதந்திரமே வேண்டாமென்ற இயக்கங்கள் எல்லாம் கூட இன்று நமது சுதந்திரத்தின் பயனை அநுபவிக்கின்றன. அன்று சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் யாரோ, அவர்கள் மரித்து மண்ணடியிலே மக்கி, என்றோ உரமாகி விட்டார்கள். ஆனால், சுதந்திரம் இன்னும் இருக்கிறது.

தியாகமும், தேச பக்தியும் சராசரி இந்தியனின் விரதமாக மாறிய சுதந்திர வேள்வித் தீயில் கலந்து, அதன் பின் அதையடுத்த பதவிகளின் பரபரப்பான காலத்தில் தனியே விலகி வாழ்ந்த ஒரு தேசபக்தரின் கதை இது. ஒரு சத்தியாக்கிரக யுகத்து நாவல் என்றே இதை வகுத்துக் கொண்டு எழுதியிருக்கிறேன்.

மகாத்மாவின் குரலையும், இந்திய சுதந்திரப் போரின் சங்கநாதத்தையும் இந்த நாவலிலும் கேட்கிறீர்கள். ஒரு மகத்தான தலைமுறையின் மங்கிய முடிவையும், மற்றொரு பரபரப்பான தலைமுறையின் ஆரம்பத்தையும் இக்கதை நிகழ்ச்சிகளாகப் பெற்றிருக்கிறது; இந்தக் கதை நடந்த காலத்து உண்மைத் தேசபக்தர்கள் சிலர் இன்னும் நம்மிடையே இருக்கின்றனர். இதில் வரும் கற்பனைக் கதாபாத்திரங்களை அறியவும், உணரவும் அந்த உண்மைத் தேச பக்தர்கள் தான் நமக்கு உரைகல்.

உலகறிய ஊரறிய நாட்டுக்குத் தியாகம் செய்த ஒருவரும், உலகறியாமல், ஊரறியாமல், அந்தரங்கமாக அவருக்காகத் தியாகம் செய்த ஒருத்தியும், அவர்களுடைய ஆத்மராகங்களும் இந்த நாவல் முழுவதும் சுருதி சுத்தமாக ஒலிக்கின்றன.

இந்தியாவில் 'காந்தியுகம்' பிறந்து ஒரு நூறாண்டுகள் நிறையும் நல்ல வேளையில் இந்த நாவல் வெளிவருகிறது. இது ஒரு காந்தி யுகத்துக் கதை. ஆனால் காந்தி சகாப்தம் நிறையும் போது வெளி வருகிறது. 'சத்தியாக்கிரகம்' என்ற பதமும் பொருளும் தவத்துக்கு இணையானவை. அந்தத் தேசீய மகாவிரதம் நிகழ்ந்த காலத்தில் நிகழும் கதை இது. இதற்குள்ள பெருமைகள் என இதை எழுதியவன் கருதி கணக்கிடுவனவற்றுள் அதுவே முதன்மையானது; முக்கியமானது.

உடம்பை விடப் புலன்கள் உயர்ந்தவை; புலன்களை விட மனம் உயர்ந்தது. உடம்பு, புலன்கள், மனம் எல்லவற்றையும் விட ஆத்மா மிக உயர்ந்தது; மிகப் பரிசுத்தமானது - என்கிறது பழைய வேதவாக்கியம்.

உடம்பாலோ, மனத்தாலோ, புலன்களாலோ மட்டுமே வாழாமல் அவற்றில் நின்று, அவற்றிலும் மேம்பட்டு ஆத்மாவினால் வாழ்ந்த ஒருத்தியின் தியாகத்தினாலும், சுதந்திரப் போர் என்ற பவித்திரமான நோன்பினாலும், முழுமையடைந்த ஒருவரின் இந்தக் கதையில் நீங்கள் இதுவரை கேட்டிராத ஆத்மாவின் இனிய பண்புகள் ஒலிக்கின்றன.

இந்நாவலின் இரண்டாவது பதிப்பைத் தமிழ்ப் புத்தகாலயத்தார் வெளியிடுகிறார்கள். தமிழ்ப் புத்தகாலய உரிமையாளர் திரு. கண. முத்தையா அவர்களும், கோவை புக் சென்டர் டி.வி. எஸ். மணி அவர்களும், 'எழுத்து' ஆசிரியர் சி.சு.செல்லப்பா அவர்களும் இந்நாவலை எழுதும் போது சில அரிய குறிப்புகளை அளித்து உதவியிருக்கிறார்கள். அவர்களுக்கும், 'வாசகர் வட்டத்' தாருக்கும், இதை எழுதும் போது உடனிருந்து படித்து ரசித்து உதவிய சகோதரர் ஆர். பாலசுப்ரமணியத்துக்கும், இதை வெளியிடும் போது நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன். நாட்டின் இன்றைய சுபீட்சத்துக்கு உரமாகி நிற்கும் நேற்றைய தியாகிகள் அனைவரின் திருவடிகளுக்கும், தேசபக்தர்களின் நினைவுகளுக்கும் அஞ்சலியாக இந் நாவலைச் சமர்ப்பிக்கிறேன்.

நா. பர்த்தசாரதி

"தீபம்", சென்னை - 2

27.7.70

அத்தியாயம் - 1

டெலிபிரிண்டரில் கிடைத்த கடைசித் தந்தியையும் சேர்த்த பின்பும் கூடப் பதினைந்து வரிகளுக்கு இடம் மீதமிருந்தது. வெளியூர்களுக்கான 'டாக் - எடிஷன்' இறங்கி, 'ஸிடி எடிஷ'னுக்கு மிஷின் தயாராயிருப்பதாக ஃபோர் மேன் நாயுடுவும் எச்சரிக்கை கொடுத்தாயிற்று, நைட் ரிப்போர்ட்டர் நாராயணசாமி கடைசித் தந்தியைச் செய்தியாக்கிக் கொடுத்துவிட்டு, இரண்டு மேஜைகளை இணைத்துப் படுக்கையாக்கிக் கொண்டு உறங்கத் தொடங்கியிருந்தார். ஹால் கடிகாரம் ஒரு மணி அடித்தது. அவ்வளவு பெரிய ஹாலில் நிசப்தத்தை மிரட்டுவது போல் ஒற்றை மணியோசையின் நாத அலைகள் சில விநாடிகளுக்குத் துரத்துவது போன்று சுழன்று கொண்டிருந்தன. நாயுடுவின் குரலைக் கேட்டுத் தலை நிமிர்ந்தேன்.

"ஸிடி எடிஷன் பேஜ் க்ளோஸ் பண்ணி மிஷின்ல ஏத்தலாமா? கடைசித் தந்திக்குக் கீழாலே இருக்கற எடத்தைக் காலியாவே வுட்டுப்புடறேன்."

நான் நாயுடுவுக்கு மறுமொழி கூறுவதற்குள் எதிர்பாராத விதமாக டெலிபிரிண்டர் சீறத் தொடங்கியது. ஃபோர்மேன் முகத்தைச் சுளிப்பதைக் கவனித்துக் கொண்டே டெலி பிரிண்டரை நோக்கி விரைந்தேன். தூங்கத் தொடங்கிவிட்ட நைட் ரிப்போர்ட்டரின் உதவியை இனி நான் எதிர்பார்க்கமுடியாது. ஸிடி எடிஷன் மிஷினில் ஏற வேண்டிய அவசியம் நைட் எடிட்டருக்கு இல்லையென்றாலும், பத்திரிகைத் தொழிலைப் பொறுத்தவரை பதவியின் கெளரவத்தை விடத் தொழிலின் நாணயம் பெரிதென்று நினைக்கிறவன் நான். மூன்று நிமிஷம் சீறிவிட்டு டெலிபிரிண்டர் ஓய்ந்தது. அலுமினியம் ஸ்கேலை எடுத்துத் தாளைக் கிழித்தபோது பாதி புரியாத நிலையில் கைகள் நடுங்கின. முதல் வரியிலேயே செய்தியை புரிந்து கொண்டு விட முடிந்தது என்றாலும், சிறிது நேரம் ஒன்றுமே செய்வதற்கு ஒடவில்லை.

"பிரபல தேசபக்தரும், அறுபத்தேழு வயது நிறைந்தவரும், காந்தீயக் கல்வி நிபுணரும், தியாகியுமான, சர்வோதயத் தலைவர் காந்திராமன் மதுரையருகே இன்று முன்னிரவில் தமது சத்திய சேவா கிராம ஆசிரமத்தில் மாரடைப்பினால் காலமானார். இறுதிச் சடங்குகள், நாளை மாலை நடை பெறலாமென்று தெரிகிறது."

- என் கண்களில் நீர் நெகிழ்ந்தது. இருபது வருடங்களுக்கு முன் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்திக்கு எட்டுக் காலமும் நிறையும்படி ஒரு தலைப்பு எழுதிய போது நான் இப்படிக் கண்ணீர் சிந்தியிருக்கிறேன். பத்திரிகைத் துறையில் நான் சம்பாதிக்கவும், புகழடையவும், வாழவும், சேமிக்கவும், சந்தர்ப்பங்கள் இருந்தது போலக் கண்ணீர் விடவும், பெருமிதப்படவும் கூட சந்தர்ப்பங்கள் இருந்தன. பல ஆண்டுகள் பாடுபட்டு பிஸ்மார்க் ஜெர்மனியை ஐக்கியப் படுத்தியது போல் இந்தியாவின் ஐந்நூற்றறுபத்து ஐந்து சமஸ்தானங்களைத் தமது திட சக்தியால் ஒன்றுபடுத்திய சர்தார் படேலின் மரணம், ஜவகர்லால் என்ற ரோஜாக் கனவு அழிந்த செய்தி, லால் பகதூரின் வீர மரணம், இவற்றை வெளியிடுகையில் எல்லாம் நான் ஒரு தேசபக்தியுள்ள இந்தியப் பத்திரிகையாளன் என்ற முறையில் இதயம் துடித்து நெகிழ்ந்திருக்கிறேன். நவ இந்தியாவை உருவாக்கிய பெரியவர்கள் ஒவ்வொருவராகப் போய்க் கொண்டே இருப்பதைப் பார்த்து அக்கறையோடு பயப்படுகிறவன் நான். தியாகமும், பெருந்தன்மையும் தேசபக்தியும், தீரமும், தெய்வநம்பிக்கையும் நிறைந்த ஒரு சகாப்தம் மெல்ல மெல்ல மறைவதையும், பதவியும் தேர்தலும் கட்சிப்பூசல்களும் கலவரங்களுமான ஒரு காலம் எதிரே தெரிவதையும் நாள்தோறும் பார்த்துப் பார்த்து வேதனையடைந்து கொண்டிருந்தவனுக்குக் காந்திராமனின் மரணச் செய்தி இன்னொரு பேரிடியாயிருந்தது.

பதவிகளையும் சுயநலங்களையும் துச்சமாக மதித்த கடைசிப் பெரிய மனிதனும் இன்று பாரத நாட்டிலிருந்து மறைந்து விட்டான்! ஒரு வாரத்திற்கு முன்புதான் தேச நலனில் அக்கறை கொண்டு காந்திராமன் சத்திய சேவாசிரமத்திலிருந்து அனுப்பியிருந்த இரண்டு அறிக்கைகளை வெளியிட்டிருந்தேன்; அதில் ஓர் அறிக்கை படைபலத்துக்கு எதிரே சத்தியக்கிரகத்தாலும், அகிம்சையாலும் வென்ற செக்கோஸ்லோவாக்கியாவைப் பற்றியது. 'செக் நாட்டில் காந்தீயம் வெல்கிறது' - என்ற தலைப்பில் காந்திராமன் அனுப்பியிருந்த அந்த அறிக்கையில், 'ஆக்கிரமித்தவர்களுக்குத் தோல்வி; ஆக்கிரமிக்கப்பட்டவர்களுக்கு மாபெரும் வெற்றி இது' - என்று குறிப்பிட்டுருந்தார். மற்றொரு அறிக்கை நாடு முழுவதும் தீயாகப் பரவிக் கொண்டிருக்கும் மாணவர் அமைதியின்மையைப் பற்றியது. நாடு போகிற நிலை பற்றி இந்த இரண்டாவது அறிக்கையில் மகவும் கவலை தெரிவித்திருந்தார் காந்திராமன்.

அந்த உருக்கமான அறிக்கைகளிலிருந்து பெற்ற ஆறுதலை இன்று நள்ளிரவில் இந்த வேளையில் இழக்கிறேன் நான். நாயுடுவின் குரல் என்னை விரட்டுகிறது.

"என்னங்க... நியுஸ் எதினாச்சும் உண்டுங்களா?"

"உண்டு! அவசியம் ஸிடி எடிஷன்லியாவது வந்தாகணும், காந்திராமன் போயிட்டார். கடைசித் தந்தியிலே மீதியிருக்கிற இடத்திலியாவது போட்டாகணும்..."

நாயுடுவின் முகத்திலும் ஒரு கலக்கம் நிழலிட்டது.

"இப்பவே மணி ஒண்ணரையாச்சு! மானோ ஆபரேட்டரும் வீட்டுக்குப் போயிட்டானே?"

"பரவாயில்லை! இந்தப் பத்துப் பதினைஞ்சு வரியை நானே அடிச்சுக் கொடுத்திட முடியும் நாயுடு...."

"சே! சே! நானே அடிச்சுக்கிறேங்க. நீங்க சிரமப்பட வேணாம். எழுதிக் குடுங்க. தேசத்துக்காக எவ்வளவோ செஞ்சவருக்கு நாம இதுகூடச் செய்யாட்டி... அப்புறம் இந்த நாட்டிலே நாம் பொறந்தோம்கிறதிலே அர்த்தமே யில்லை!.. கடைசிப் பெரிய மனுசனும் போயிட்டான்..."

நாயுடுவின் பதில் எனக்குத் திருப்தி அளித்தது. மனம் பதற - கை பதற செய்தியை எழுத உட்கார்ந்தேன். சொந்தத் தந்தையின் மரணத்தின்போதுகூட நான் இவ்வளவு வேதனைப்பட்டதில்லை. யாரால் இந்த நிலைக்கு வந்தேனோ அந்தப் பெருந்தன்மையாளரின் மரணச் செய்தியை எழுதும் போது நான் எத்தகைய உணர்வுகளை அடைந்திருப்பேனென்பதை விவரிக்க வேண்டியதில்லை. போன மாதம் மதுரைக்குப் போயிருந்த போது ஓர் இரண்டு மணி நேரம் ஆசிரமம் இருந்த கிராமத்துக்குப் போய், அவரோடு பேசிக் கொண்டிருந்தேன்.

"நாங்களெல்லாம் அரும்பாடுபட்டுப் பாரதமாதாவின் முகத்தில் பன்னூறு ஆண்டுகளாக மறைந்திருந்த புன்னகையை மீண்டும் வரவழைத்தோம். இந்த இருபத்தோராண்டுகளில் அந்தப் புன்னகை மீண்டும் படிப்படியாக மறைந்து கொண்டு வருகிறது. ராஜூ! மறுபடியும் அவள் முகத்தில் புன்னகையைப் பார்க்காமல் நான் சாக விரும்பவில்லை. எனக்கு வயதாகி விட்டது. நீங்களெல்லாம் புகழ்ந்து எழுதும்படி தேசத்துக்கு எவ்வளவோ செய்தாச்சு. ஆனாலும் மறுபடி நான் கவலைப்பட எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. நாங்கள் போராடிய காலத்தில் இந்த தேசத்தில் தேசம் விடுதலை பெற வேண்டுமென்ற ஒரே இயக்கமும், ஒரே தலைமையும் தாம் இருந்தன. இன்றோ ஒவ்வோரு மாநிலத்திலும் ஒன்பது வகை இயக்கம்; ஒன்பது வகைத் தலைமை எல்லாம் வந்துவிட்டன. ஆயிரம் காரணங்களுக்காகப் பதினாயிரம் கட்சிகள் போராடும் போது தேசம் என்கிற சக்தி எவ்வளவு பலவீனமாகி விடுகிறது பார்த்தாயா?"

"நீங்கள் இணையற்ற ஒரு சகாப்தத்தைப் பார்த்தீர்கள். இன்னொன்றையும் இப்போது பார்க்கிறீர்கள்..."

"கவலையோடு பார்க்கிறேன் என்று சொல்."

- கடைசியாக நான் அவரைச் சந்தித்த நினைப்பை மறுபடி எண்ணியபோது இப்படிப் பெருமூச்சோடு அந்த எண்ணம் முடிகிறது.

நாயுடு செய்தியை வாங்கிக் கொண்டு போன பின் மானோ மிஷின் இயங்கும் சப்தம் வருகிறது. நைட் ரிப்போர்ட்டரின் குறட்டை ஒலியை அந்த மிஷின் இயங்கும் ஓசை உள்ளடக்கிக் கொண்டு விழுங்கி விடுகிறது. இன்று ஸிடி எடிஷன் முக்கால் மணி நேரம் தாமதமாக மிஷினில் ஏறும். டெலிவரி வான் வெளியே வந்து நிற்கிறது. ஹார்ன் தொடர்ந்து ஒலிக்க, அதையடுத்து டைம்கீப்பர் உள்ளே வந்து பார்சல் செக்ஷனில் இரைவது கேட்கிறது. நான் என்னுடைய லீவு லெட்டரை எழுதிக் கொண்டிருக்கிறேன். மதுரைக்குப் போக வேண்டும். மாபெரும் தேச பக்தரின் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள வேண்டும். பத்திரிகை ஆசிரியன் என்ற முறையைவிட இதில் என் சொந்தக்கடமை பெரிதாயிருந்தது. மிகவும் நெருங்கிய ஆத்மபந்து ஒருவரின் மரணத்துக்குப் போவதுபோல், நான் இதற்குப் போக வேண்டியவனாயிருந்தேன். பல வருடங்களாக என் வாழ்க்கைக்கு அவர் குருவாகவும், நண்பராகவும் இருந்திருக்கிறார். வக்கீலுக்குப் படித்துவிட்டு, ராஜகோபால் பி.ஏ., பி. எல்., என்று போர்டு மாட்டிக் கொண்டு கோர்ட்டுகளின் படிகளில் நான் ஏறி இறங்கிக் கொண்டிருக்காமல், "உனக்குப் பத்திரிகைத் துறைதான் பொருத்தமாயிருக்கும். அதன் மூலமாகத் தேசத்துக்கும், பொது வாழ்க்கைக்கும் நீ எவ்வளவோ நல்லது செய்யலாம்" என்று எனக்கு அறிவுரை கூறி, என்னை இந்தத் துறைக்கு அனுப்பி வைத்தவரே காந்திராமன் தான். குடும்ப விஷயத்திலும் சரி, பொது விஷயங்களிலும் சரி, நேரிலோ கடித மூலமோ நான் அவரைக் கேட்காமல் எந்த முடிவும் செய்ததில்லை. எந்தக் காரியத்திலும் இறங்கியதில்லை.

அப்படி ஒரு வழிகாட்டி இனிமேல் எனக்கு இல்லை என்பதை மனம் ஒப்பி அங்கீகரித்துக் கொள்வது வேதனையாகத் தான் இருந்தது. மனிதனால் லாபத்தை சுலபமாக அங்கீகரித்து ஒப்புக் கொள்ள முடிவது போல் இழப்பை அத்தனை சுலபமாக அங்கீகரித்து ஒப்புக் கொண்டுவிட முடிவதில்லையே. கால் நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாக எனக்கு இருந்த ஒரு மகோந்நதமான துணை போய்விட்டது. எனக்கு மட்டுமில்லை, தேசத்துக்கும் தான். குருவையும், தெய்வத்தையும் தேடிக் கண்டுபிடிக்கிறவரை சராசரி இந்தியனின் வாழ்க்கை நிறைவதில்லை என்று நம்புகிறவன் நான். பன்னூறு யுகங்களாக இந்திய வாழ்க்கை வழிகாட்டுவதற்காகத் தகுதி வாய்ந்த ஒருவரைத் தேடிக்கொண்டுதான் இருந்திருக்கிறது. தனி மனிதனாக இந்தியனுக்கும் சரி, சமூகத்துக்கும் சரி, இது பொருந்துகிறது. ஒரு சமயத்தில் புத்தர் கிடைத்தார்; அப்புறம் கடைசியாக மகாத்மா காந்தி, எனக்குக் காந்திராமன் - எல்லோரும் இப்படித்தான் கிடைத்திருக்கிறார்கள். காந்தியைக் குருவாகக் கொண்டு நானும், இந்தத் தலைமுறையினரும் வாழ்ந்திருக்கிறோம். இந்திய வாழ்க்கையோடு கங்கை நதியையும், இமயமலையையும் போல் குருவும் - குரு பரம்பரைத் தத்துவமும், எவ்வளவு அழகாகப் பிணைந்திருக்கின்றன என்றெண்ணிய போது மெய்சிலித்தது எனக்கு.

நானறிய, சென்ற நூற்றாண்டு இந்தியன் ஆன்மாவைப் பெரிதாக மதித்து வாழ்ந்தான். இந்த நூற்றாண்டு இந்தியன் மனத்தைப் பெரிதாக மதித்து வாழ்கிறான். ஆன்மாவைப் பெரிதாக மதித்து வாழ்ந்த காலத்திற்கும் மனத்தைப் பெரிதாக மதித்து வாழும் காலத்திற்கும் நடுவே எவ்வளவோ தூரம் நமக்குத் தெரியாமலே இருக்கிறது. இந்த இரண்டு சகாப்தங்களின் எல்லைகளையும் பார்த்தவர் காந்திராமன். கங்கையின் உற்பத்தியையும், சங்கமத்தையும் பார்ப்பதுபோல், இரண்டு இந்திய சமூகங்களையும் அவர் பார்த்திருக்கிறார். இணையற்ற தியாகமும் சத்தியாக்கிரகமும், விரதங்களாயிருந்த காலத்திலும் இந்தியாவில் அவர் வாழ்ந்திருக்கிறார். தீ வைத்தலும், கலவரம் செய்தலும், பிடிவாதங்களாகிவிட்ட காலத்து இந்தியாவிலும் அவர் வாழ்ந்திருக்கிறார். சராசரி இந்தியன் ஆன்மாவை மதித்து வாழ்ந்த காலத்தின் மங்கலமான முடிவும் அவர் கண்களில் தென்பட்டிருக்கிறது. ஆசைகளும் அவை விளையும் மனமுமாக வாழத் தொடங்கிவிட்ட காலமும் அவர் கண்களில் தென்பட்டிருக்கிறது. ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் இப்படி இரண்டு சகாப்தங்களின் எல்லைகளைப் பார்த்தவரை உலகத்துக்கு வரலாறாக எழுதிக்காட்ட வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டு. ஆனால், அந்த ஆசை இன்றுவரை நிறைவேறவில்லை.

ஏழு வருடங்களுக்கு முன்பு சென்னையில் ராஜாஜி ஹாலில் வைத்துப் பெரியவர் காந்திராமனுடைய அறுபதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியபோது, முதல் முதலாக அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிப் புத்தகமாக வெளியிட வேண்டுமென்ற என் ஆசையை நான் அவரிடம் வெளியிட்டேன். சிரித்துக் கொண்டே அதை ஒப்புக் கொண்டு இசைவு தர மறுத்துவிட்டார் அவர்.

"என் மேலுள்ள பிரியம் உனக்கு இந்த ஆசையை உண்டாக்கியிருக்கிறது, ராஜூ! ஒரு மனிதன் உயிரோடு இருக்கிற வரை அவனுடைய வாழ்க்கை வரலாறு பூர்த்தியாகி விடுவதில்லை. உயிரோடு இருப்பவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளில் பொய்யும், மிகைப்படுத்தலும், புனைவுகளுமே அதிகமாக வரமுடியும். ஒவ்வொரு நாளும் நான் டைரி எழுதுகிறேன். ஆனால், அதையும் என் மனத்திருப்திக்காகத்தான் எழுதுகிறேன். நான் உயிரோடிருக்கிற வரை என் வாழ்க்கை வரலாற்றை எழுதக் கூடாது என்பதற்கு இப்போது நான் உன்னிடம் சொல்வதைத் தவிரவும் வேறு காரணங்கள் உண்டு, நீயும் தேசமும் என்னுடைய தியாகங்களுக்கு நன்றி செலுத்துவது போல் மறுக்கமுடியாத சில தியாகங்களுக்காக வெளியே கூறமுடியாமல் நான் இதயத்தில் அந்தரங்கமாக நன்றி செலுத்த வேண்டியவர்களும் இருக்கிறார்கள். மனத்தினால் எனக்கு நன்றி செலுத்தும் பல்லாயிரம் அன்பர்களிடமிருந்து நான் அதை ஏற்று இடைவிடாமல் என் ஆன்மாவினால் யாருக்கோ நன்றி செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த அறுபது வயது வரை குடும்பம் பந்தபாசம் எதுவுமே இன்றிக் கழித்து விட்ட என்னை நீங்களெல்லாம் தேசபக்த சந்நியாசி என்று புகழுகிறீர்கள். என்னை என்னுடைய பொன்னான வாலிபத்தில் சந்நியாசியாக்கியவள் பாரததேவி மட்டுமல்ல; இன்னொருத்தியும் இருந்திருக்கிறாள். இதற்குமேல் என்னால் இப்போது எதுவுமே சொல்ல முடியாததற்காக என்னை மன்னித்துவிடு ராஜூ. இந்த பாரத தேசத்தில் கங்கையும் இமயமலையும் உள்ளவரை நானும் சிரஞ்சிவியாக இருந்து பார்க்கவேண்டுமென்று எனக்குப் பேராசை உண்டு. ஆனால் அது முடியாது. ஒருநாள் நானும் போகவேண்டியிருக்கும். அப்படி இந்தத் தேசத்தைக் காண்பதற்கு என்னைவிட அதிகமான பாத்தியதை உள்ள மகாத்மாவே போய்ச் சேர்ந்துவிட்டார். நான் எம்மாத்திரம்? ஒரு நாவலின் கதாநாயகனை விடச் சுவாரஸ்யமாக நான் வாழ்ந்திருக்கிறேன். ஆன்மாவினால் வாழ்ந்திருக்கிறேன்; அதுதான் ரொம்ப முக்கியம். ஆன்மவினால் வாழ்ந்த தலைமுறையின் கடைசிக் கொழுந்து நான். எப்போதாவது நான் போனபின் என் டைரிகளைத் தேடி எடுத்து வாழ்க்கை வரலாறு எழுதும் உரிமையை உனக்கு நிச்சயமாகத் தருகிறேன். இப்போது என்னை விட்டுவிடு."

அப்போது அதற்குமேல் அவரை வற்புறுத்த எனக்கு விருப்பமில்லை, விட்டுவிட்டேன். அதற்குமேல் இரண்டொரு முறை அவரைப் பார்க்க ஆசிரமத்துக்குப் போயிருந்த போதும் இதைக் கேட்டுப் பழைய பதிலையே என்னால் அவரிடமிருந்து பெற முடிந்தது. ஆயினும், அவருடைய வாழ்க்கை வரலாற்றை என்றாவது எழுதும் உரிமை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்ற பெருமையிலேயே நான் திருப்தி அடைந்திருந்தேன்.

இப்போது அந்த வரலாற்றை எழுதித் திருப்தி அடைய வேண்டிய சந்தர்ப்பமும் வந்துவிட்டது. அவருடைய மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத வேதனையோடு இந்த ஒரு திருப்தியும் இருந்தது. உடனே மதுரைக்குப் புறப்பட ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த நேரத்திற்கு மேல் இரயில்கள் ஏதும் இல்லை. விடிந்ததும் பகல் எக்ஸ்பிரசில் போகலாமென்றால் அது மதுரைக்குப் போய்ச் சேரும்போதே இரவு பத்து மணி ஆகிவிடும். பெரியவருடைய இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாது. காலை விமானத்தில் மதுரை போய், அங்கிருந்து யாராவது நண்பர்களிடம் கார் கேட்டுப் போகலாமா, அல்லது மாம்பலம் போய் வீட்டிலிருந்து சொந்தக் காரிலேயே அதிகாலை நாலு மணிக்குக் கிளம்பி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஃபோர்மேன் ஸிடி எடிசன் முதல் பிரதியை மேஜையில் கொண்டு வந்து பரப்பினான். ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஏர்லயன்ஸ் கம்பெனிக்கு ஃபோன் செய்யத் தொடங்கி, அது தொடர்ந்து 'எங்கேஜ்டு' ஆகவே இருக்கவே, 'எதிர்த்தாற்போல் இருக்கிற இடத்துக்கு நேரில் தான் போவோமே' என்று புறப்பட்டேன்.

மணி மூன்று. மவுண்ட்ரோடு வெறிச்சென்றிருந்தது. கொத்தவால்சாவடிக்குப் போகும், அல்லது அங்கிருந்து வரும் இரண்டொரு கட்டை வண்டிகள் கடமுட வென்ற சப்தத்துடன் நகர்ந்து கொண்டிருந்தன. கவர்ன்மெண்ட் எஸ்டேட் மரங்களில் காகங்கள் கரையத் தொடங்கி விட்டன. கிழக்குப் பக்கமிருந்து கடற்காற்று சில்லென்று முகத்தில் வந்து மோதியது.

"மதுரையில் யாரோ முக்கியமானவங்க... செத்துப் போயிட்டாங்களாம். ஃப்யூனெரலுக்கு அட்டண்ட் பண்ண மந்திரிகளும், பிரமுகர்களுமா இப்பவே ஏகப்பட்ட வெயிட்டிங் லிஸ்ட். டெல்லி நைட் பிளேன்ல வேற ரெண்டு யூனியன் டெபுடி மினிஸ்டர்ஸ், நாலு எம். பி எல்லாம் வராங்க, மார்னிங் மதுரை பிளேன்ல அவங்களுக்கு ப்ரயாரிடி ஸீட் அரேஞ்ஜ் பண்ணனும். இங்கேயே வெயிட்டிங் லிஸ்டிலே பத்துப்பேர் இருக்காங்க. என்ன பண்றதுன்னே தெரியலே, சார்!" - என்று மன்னிப்புக் கோரினார், ஏர்லைன்ஸ் புக்கிங் அலுவலர். வீட்டுக்குப் போய்க் காரிலேயே புறப்படுவதென்று முடிவு செய்தேன். காரில் காலை பதினொரு மணிக்காவது மதுரை போய்ச் சேரலாம்; மதுரையிலிருந்து ஒரு மணி நேர டிரைவ் தான். எப்படியும் பகல் பன்னிரண்டு மணிக்கு ஆசிரமத்தில் இருக்கலாம்.

மறுபடியும் ஆபிஸ்க்கு வந்து சில விவரங்களை எழுதி மேஜையில் வைத்துவிட்டு, வீட்டுக்கு ஃபோன் செய்தேன். ரொம்ப நேரம் மணி அடித்துக் கொண்டிருந்தது. தூக்கக் கிறக்கத்தோடு டெலிபோனை எடுத்துப் பேசினாள் மனைவி.

"ராமு இருந்தால் உடனே காரை எடுத்துக் கொண்டு இங்கே வரச் சொல். அவசரமாக மதுரை போகனும்" - என்று என் மூத்த பையனைக் காருடன் வரச்செய்யும் படி மனைவியிடம் கூறினேன். டெலிபோனை வைத்துவிட்டுத் தலை நிமிர்ந்த போது,

"மதுரை போறீங்களா, சார்? என்ன விசேஷமோ?" என்று கண்ணைக் கசக்கிக் கொண்டே எதிர்ப்பட்ட நைட் ரிப்போர்ட்டரிடம் மேஜையில் கிடந்த பேப்பரை எடுத்துச் சுட்டிக் காட்டினேன். அதோடு, "மிஸ்டர் நாராயணசாமி காலையிலே சீஃப் கரஸ்பாண்டெண்ட் வந்ததுமே நான் சொன்னேன்னு ஸிடி ரிப்போர்ட்டரை அனுப்பி, எல்லா வி.ஐ.பி.ஸ்ஸோட கண்டலன்ஸையும் கேட்டு வாங்கிப் போடச் சொல்லுங்கள். இப்படி ஒரு பெரிய மனுஷன் இனிமே தமிழ் நாட்டிலே பிறக்கப்போறதுமில்லே; சாகப் போறதுமில்லே..." என்றேன்.

"நீங்க சொல்லணுமா? ரியலி ஹி டிஸர்வ்ஸ்..." என்று உருக்கத்தோடு பதில் வந்தது நாராயணசாமியிடமிருந்து. வாசலில் கார் வந்திருப்பதாக நைட் வாட்சுமேன் வந்து கூறவே, விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டேன். வீட்டுக்குப் போய் அவசரப் பயணத்துக்கான சிலவற்றை மட்டும் ஒரு பெட்டியில் திணித்துக் கொண்டபின், ஞாபகமாகக் கைக்காமிராவையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.

"முந்நூறு மைலுக்கு மேலே நீங்களே ஓட்டிண்டு போயிட முடியுமா; ராமுவை வேணாக் கூட்டிண்டு போங்களேன். ரெண்டு நாள் தானே?" என்றாள் மனைவி.

"காலேஜ் கெடும், அவன் வேண்டாம்! ஒரு வேளை இரண்டு நாளைக்கு மேலேயும் ஆகலாம்" - என்று அதை மறுத்துவிட்டுக் கிளம்பினேன்.

கார் செங்கல்பட்டைக் கடக்கும் போது மெயின் ரோட்டை ஒட்டியிருந்த ஒரு கம்பத்தில் மூவர்ணக் கொடி அரைக் கம்பத்தில் இறக்கப்படுவதைக் கவனித்தேன். கீழே சில ஊழியர்கள் கருப்புச் சின்னமணிந்து குழுமியிருந்தனர்; அவ்வளவு அதிகாலையிலேயே செய்தி அந்த ஊருக்கு எப்படிக் கிடைத்ததென்று தெரியவில்லை.

விழுப்புரத்தில் சாலையோரமாக இருந்த ஒரு நியுஸ் ஸ்டாலில் "தமிழ் நாட்டுக் காந்தி மறைந்தார்" என்ற ஒரே செய்தியோடு ஒரு தேசியத் தமிழ் தினசரியின் வால் போஸ்டர் தொங்குவதைப் பார்த்தேன்.

திருச்சியில் மெளன ஊர்வலம் ஒன்று மாலையில் நடைபெறுமென்று மலைக்கோட்டையருகே தார் ரோடில் சுண்ணாம்பால் பெரிதாய் எழுதியிருந்தார்கள். கண்ணுக்கு தெரிந்த மூவர்ணக் கொடிகள் எல்லாம் அரைகம்பத்தில் பறந்து கொண்டிருந்தன. கதர்ச் சட்டையணிந்த ஒருவன் அமைதியாகக் கையை நீட்டிக் காரை நிறுத்தி, என்னுடைய கதருடையைக் கவனித்து என்னிடமும் ஒரு சிறிய கருப்பு துணித் துணுக்கையும் குண்டூசியையும் நீட்டினார். வாங்கிச் சட்டையில் குத்திக் கொண்டு புறப்பட்டேன்.

மதுரை போய்ச் சேரும் போதே காலை பதினொன்றரை மணியாகி விட்டது. மதுரை நகரமே துயர வீடு போல் களை இழந்து காணப்பட்டது. ஹர்த்தால் அநுஷ்டித்துக் கடைகள் மூடப்பட்டிருந்தன. வீதிகள் கலகலப்பாக இல்லை. எல்லா கடைகளுமே அடைப்பட்டிருந்ததனால் மிகவும் சிரமப்பட்டு ஒரு பூக்கடைக்காரரின் வீட்டுக்குப் போய் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்து ஒரு ரோஜாப்பூ மாலையைத் தொடுத்து வாங்க வேண்டியதாயிற்று. சேவாசிரமத்துக்குள் பெரியவர் உயிரோடிருந்தவரை யாரும் ரோஜாப்பூ மாலைகளோ வேறெந்த மாலைகளோ கொண்டு போக முடியாது.

"பாரத மாதாவின் கழுத்தில் நாளைக்கு சூட்டுவதற்காக நானே இங்கு ஆயிரத்தைந்நூறு ரோஜாப்பூ பதியன்களை வளர்த்து வருகிறேன்" என்று தமது ஆசிரமத்தின் மாணவ மாணவிகளைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார் பெரியவர். ஒவ்வொரு ஆசிரமவாசியையும் ரோஜாப்பதியனாக உருவகப்படுத்திக் கூறும் அவருடைய கவித்துவத்தை வியந்திருக்கிறேன். நான் முதல் முதலாக இன்று தான் தைரியமாக அவருக்குச் சூட்ட ஒரு ரோஜாப்பூ மாலையை வாங்கிப் போகிறேன். தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி வளர்ச்சி, வாழ்க்கை வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட பெரியவர், மாலைகள் ஏற்பதையும் மரியாதைகள் பெறுவதையும் ஆடம்பரமாகக் கருதி வெறுத்து வந்தார். மாலைக்கு ஆகும் செலவைத் தமது தாழ்த்தப்பட்டவர் கல்வி நிதிக்குத் தரச் சொல்லிக் கேட்பது அவர் வழக்கம்.

மதுரையிலிருந்து சேவாசிரமமுள்ள கிரமத்துக்குப் போகிற சாலையில் ஒரே கூட்டம். நடந்தும், காரிலும், ஜீப்பிலும், பஸ்களிலுமாக மனிதர்கள் மெளனமாகப் போய்க் கொண்டிருந்தார்கள். எல்லார் மார்பிலும் சட்டைமேல் கருப்புச் சின்னம், நடையில் தளர்ச்சி, முகத்தில் துயரம். துக்கமே ஊர்வலம் செல்வது போலிருந்தது. ஆசிரமத்துக்கு வெளியிலேயே காரை 'பார்க்' செய்து விட்டு மாலையும் கையுமாக உள்ளே நுழைந்த போது அங்கிருந்த சூழ்நிலைகளைப் பார்த்து எனக்கே அழுகை வந்துவிடும் போலிருந்தது. இளம்மாணவிகளும், மாணவர்களும் பெரிய ஆலமத்தடியில் குழுமியிருந்தனர். உணர்ச்சி வசப்பட்டுச் சிலர் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்ததைக் கண்டேன். அன்பினால் மனிதர்கள் எவ்வளவு சிறு குழந்தைகளாகி விடுகிறார்கள் என்பதைப் பார்த்த போது மனம் நெகிழ்ந்தது. இத்தனை உயிருள்ளவர்களைக் கலங்க வைத்த ஒரு மரணத்தை என்னால் கற்பனை செய்திருக்கக் கூட முடியவில்லை. இந்த மரணத்துக்குக் காவலனே துணிந்திருக்கக் கூடாதென்று தோன்றியது.

இரகசியமாய்ச் சிரித்துக் கொண்டே உறங்குவது போல் மலர் மாலைகளுக்கிடையே அவர் முகம் தெரிந்தது. சுற்றிலும் அசையாமல் மெளனமாய் நிற்கும் மனிதர்கள் சலனமற்றுப் போயிருந்தனர். தலைப் பக்கம் ஒருவர் கீதையும் இன்னொருவர் திருவாசகமும் வாசித்துக் கொண்டிருந்தார்கள். வணங்கினார்கள். திரும்பினார்கள். சிலரிடம் அழுகை பீறிக் கொண்டு வெடித்தது; சிலரிடம் மெல்லிய விசும்பல்கள் ஒலித்தன. ஆசிரமத்தில் அவருடைய அறையில் நுழைந்ததும் கண்ணில் படுகிறமாதிரி, 'சத்தியாக்கிரகம் என்பது எல்லாக்காலத்துக்கும் பொருந்திவரக்கூடிய நியதி, ஒரு சத்தியாக்கிரகிக்குத் தோல்வியே இல்லை' - என்று மகாத்மாவின் படத்துக்குக் கீழே எழுதியிருந்ததை இன்றும் காண முடிந்தது. இன்று அந்த வாக்கியத்துக்கு அர்த்தங்களின் எல்லை விரிவடைவது போல் உணர்ந்தேன் நான். மாலையணிவித்து விட்டுக் காற்பக்கமாக வணங்கியபின் ஒதுங்கி நின்ற என் காதருகே, "மறுபடி சந்திக்க முடியாத புண்ணிய புருஷர்களை நாம் ஒவ்வொருவராக இழந்து கொண்டிருக்கிறோம்" - என்று துயரத்தோடு மெல்லிய குரலில் கூறினார் ஒரு பிரமுகர். மந்திரிகள், பிரமுகர்கள் தேசபக்தர்கள், கல்வி நிபுணர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக வந்து மாலையணிவித்து விட்டுக் குனிந்த தலை நிமிராமல் நின்றார்கள். தயங்கித் தயங்கி நான் சில புகைப்படங்கள் எடுத்தேன்.

மாலை ஐந்து மணிக்கு ஆசிரமத்தின் ஒரு கோடியிலேயே தகனக்கிரியை நடந்தது. அவர் ரொம்ப நாளாக விரும்பிச் சொல்லிக் கொண்டிருந்தபடி ஆசிரமத்தில் கடைசியாகச் சேர்ந்திருந்த அநாதைச் சிறுவன் ஒருவன் தான் அவருக்குக் கொள்ளியிட்டான். இரங்கல் கூட்டம் ஒன்றும் நடந்த்து. ஆலமரக் காற்றோடும், ஈமத் தீயின் சந்தனப் புகையோடும் மெல்லிய சோக இழைகளாக 'ரகுபதிராகவ' கீதமும் 'வைஷ்ணவ ஜன தோ' வும் ஒலித்தன. ஆசிரமப் பெண்கள் பாடினார்கள்.

ஒரு சாகப்தம் அங்கே அன்றைய சூரியாஸ்தமனத்தோடு முடிந்து போயிற்று. பெரியவரின் அந்தரங்கக் காரியதரிசி நாராயணராவைச் சந்தித்துப் பெரியவரின் டைரிகளைக் கேட்க எண்ணியும் அன்றிரவு அது சாத்தியமாயில்லை. மறுநாள் காலையிலும் சாத்தியமாயில்லை. பிற்பகல் நாராயணராவைச் சந்திக்க முடிந்தது.

"பெரியவர் பலதடவை சொல்லியிருப்பது ஞாபகமிருக்கிறது. நேற்று முன் தினம் மாலை வரையில் கூட அவர் டைரி எழுதியிருக்கிறார். நிதானமாக எல்லாம் தேடி எடுத்துத் தருகிறேன். இரண்டு நாள் தங்கிப் போகும்படி வைத்துக் கொள்ளுங்கள். அந்த மகா புருஷனின் வரலாறு வரவேண்டுமென்பதில் உங்களை விட எனக்கு ஆசை அதிகம்" - என்றார் நாராயணராவ். நான் அவருடைய விருப்பப்படியே இரண்டொரு நாள் சேவாசிரம கிராமத்தில் தங்க முடிவு செய்தேன். பெரியவரிடம் அவர் இருந்த போது வாழ்க்கை வரலாறு எழுதும் விருப்பத்தை நான் பிரஸ்தாபித்த சந்தர்ப்பங்களில் எல்லாம் "நாராயணராவ்! நான் உயில் எழுதாவிட்டாலும் என் டைரிகளின் உரிமை இவரைச் சேர வேண்டியது தான்; இதை இப்போதே உன்னிடம் சொல்லி வைக்கிறேன்," என்று பக்கத்திலிருந்த தமது காரியதரிசியிடம் சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறார் அவர்.

'ராஜூ இப்போது பத்திரிகைக்காரராக இருந்தாலும் வக்கீலுக்குப் படித்தவர். டைரிகளை அவரிடம் கொடுக்காவிட்டால் உம்மேல் கேஸ் கூடப் போடுவார், ஜாக்கிரதை!' என்று கூட ஒரு முறை நாராயணராவைக் கேலி செய்திருக்கிறார் பெரியவர்.

இரண்டு மூன்று நாட்களில் நாராயணராவ் பெரியவருடைய டைரிகள் எல்லாவற்றையும், அவர் மாரடைப்பால் இறந்து போவதற்க்குச் சில மணி நேரங்களுக்கு முன் எழுதியது உட்பட, என்னிடம் ஒப்படைத்து விட்டார். நாராயணராவுக்கு எப்படி நன்றி கூறுவதென்றே தெரியவில்லை. சென்னை திரும்பியதும் காரியாலயத்துக்கு ஒரு மாதம் லீவு போட்டுவிட்டுப் பெரியவர் காந்திராமனின் டைரிகளில் மூழ்கினேன். சத்தியாக்கிரக வாழ்வில் காந்தியுகம் அளிக்கமுடிந்த ஒரு காவியமாகவே அந்த வாழ்க்கை வரலாறு அமையும்போல் தெரிகிறது. சுதந்திரத்துக்குத் தியாகம் செய்தவர்களின் காலமும் சுதந்திரத்தை அநுபவிக்கிறவர்களின் காலமும் இந்த வரலாற்றில் சந்திக்கின்றன. பெரியவருடைய வாழ்க்கையில் உலகறியாத பகுதிகளும், அவரைத் தியாகியாக்கிய வேறொரு தியாகியின் கதையும் இதன் மூலம் வெளியாகிறது. அவரே சொல்லியதைப் போல் இந்த வரலாறு ஒரு நாவலைவிடச் சுவாரஸ்யமாயிருப்பதாவே எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டு வாசித்தாலும் சரிதான். ஒரு வரலாற்றைப் போல எழுத முனைவதைவிட ஒரு கதையைப்போலவே இதை நான் எழுதவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. பெரியவர் தம் வாழ்நாளில் யாரையும் வெறுத்ததில்லை; யாருக்கும் கெடுதல் செய்ததில்லை. எனவே அவருக்கு ஒரு காலத்தில் கொடுமை செய்தவர்களைப் பற்றிக் கடும் மொழியில் எழுதுவதைத் தவிர்க்க வேண்டியிருக்கிறது. இது கதையைப் போல் அமைவதற்கு அதுவும் ஒரு காரணம். 'இன்று பல்லாயிரக்கணக்கானவர்கள் எனக்குச் செலுத்தும் நன்றியை மனப்பூர்வமாக ஏற்று நான் அதை அப்படியே அந்தரங்கமாகவும், ஆன்ம பூர்வமாகவும் இன்னொருவருக்குச் செலுத்திக் கொண்டிருக்கிறேன்," என்று அவர் அடிக்கடி கூறிய அந்த இன்னொருவரைப் பற்றி எழுத முயலும்போது இதில் கவிதையின் மெருகேறிவிடலாம். எப்படியாயினும், இது ஒரு மகா புருஷனின் கதை. சகாப்தங்களின் எல்லைகளைப் பார்த்த சத்தியசீலரின் வரலாறு என்ற அளவில் இதைப் படைப்பதில் என் திறமை முழுவதையும் செலுத்தி எழுதியே ஆக வேண்டும். அவர் பிரியமாக அமர்ந்து, மாலை வேளைகளில் சத்திய சேவா ஆசிரமத்தின் அன்பு மாணவர்களிடம் உரையாடும் அந்தப் பிரம்மாண்டமான ஆலமரத்தடியிலிருந்து இந்தக் கதையை நான் எழுதத் தொடங்குகிறேன். அதற்காகவே சென்னைக்குப் போய்ச் சில நாள் தங்கிவிட்டு ஒரு மாத லீவில் நான் மறுபடி இங்கே வந்தேன்.

அத்தியாயம் - 2

மே மாதம் முதல் வாரம் சித்திரைத் திருவிழாவின் கலகலப்பும் இப்போது மதுரையில் இல்லை. வடக்குச் சித்திரை வீதியில் இருள் சூழ்ந்து விட்டது. என்ன காரணத்தாலோ முனிசிபல் விளக்குகள் பதினொரு மணிக்கே கண்மூடித் தூங்கிவிட்டன. மொட்டைக் கோபுரத்து முனியாண்டியைத் தூங்க வைப்பதற்கு தாலாட்டுப் பாடுவது போல், யாரோ ஒரு வேளார், அல்லியரசாணிமாலை ராகத்தில், மதுரை வீரன் கதையை உடுக்கடித்துச் சொல்லிக் கொண்டிருந்தார். மீனாட்சி கோவில் மதில்களில் அது பயங்கரமாக எதிரொலித்துக் கொண்டிருந்தது. மதிலை ஒட்டி இருந்த நந்தவனத்தில் தென்னை மரத்தின் பச்சை ஓலைகளைக் காற்று சுதந்திரமான சுகத்துடன் அசைத்துக் கொண்டிருந்தது. அன்று 7-5-30ல் வாசகசாலையில் ஒரு மிக முக்கியமான கூட்டம்.

அதனால் மதிலுக்கு எதிர் வரிசை மாடியில் திலகர் தேசிய வாசகசாலையின் அறையில் மட்டும் விளக்கு இன்னும் அணையவில்லை. மாடி முகப்பில் யாரோ சிலர் நின்று எவருடைய வரவையோ எதிர்பார்த்துக் கொண்டிருப்பது தெரிகிறது. மேலச்சித்திரை வீதியும், வடக்குச் சித்திரை வீதியும் சந்திக்கிற மூலையில் இருந்த ஓட்டல் வாசலில் வேலை செய்கிறவர்கள், கோடைக்காக வெளியே கட்டில்களை எடுத்துப் போட்டுக் கொண்டு, தூக்கம் வராததால் ஏதோ ஊர்க் கதைகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வாசக சாலையில் கூடியிருந்தவர்கள் எதிர்பார்த்திருந்த ராஜாராமன் அன்னக்குழி மண்டபத்துக்குப் பின்னாலிருந்து புறப்பட்டு வாசக சாலைக்கு வந்து சேரும் போது மணி பதினொன்றரை ஆகிவிட்டது. கையோடு முதல் நாள் சென்னையில் பதிப்பாகி மறுநாள் மதுரைக்குக் கிடைத்திருந்த 'சுதேசமித்திரன்' தினசரியையும் கொண்டு வந்திருந்தான் ராஜாராமன். மாடிப்படி இருண்டிருந்தது. ஆறடி உயரத்திற்கு மேலிருந்த ராஜாராமன் வெளேறென்று தும்பைப் பூப்போல் வெளுத்த தூய உடையின் கம்பீரத்தோடு படியேறி வந்தது மின்னல் புறப்பட்டு மேலேறி வருவது போலிருந்தது. ராஜாராமன் மேலே படியேறி வருவதைப் பார்த்ததும், மாடி முகப்பில் கூடியிருந்தவர்கள் உள்ளே திரும்பினர். வாசக சாலையையும் மாடிப்படியையும் இணைக்கும் கதவு ராஜாராமன் உள்ளே வந்ததுமே தாழிடப்பட்டது. கீழே விரிக்கப்பட்டிருந்த பாயில் நண்பர்கள் சூழ அமர்ந்தான் ராஜாராமன். விளக்கு வெளிச்சத்தில் அவன் தோற்றத்தை இப்போது மிக நன்றாகப் பார்க்க முடிகிறது. உயரத்திற்குத் தகுந்த அழகும் வசீகரமும் அவன் தோற்றத்தில் பொருந்தியிருக்கின்றன. ரோஜாப் பூ நீளமாகப் பூத்துச் சிவந்தது போல் நளினமாயிருந்த அவனுடைய அழகிய கைவிரல்களால் 'சுதேசமித்திரன்' தினசரி படிப்பதற்காக விரித்துப் பிடிக்கப்பட்ட போது எல்லோருடைய கண்களும் அவன் முகத்தையே பார்த்தன. பெண்மையின் வசீகரச் சாயலும், ஆண்மையின் எடுப்பும் கலந்திருந்த அந்த முகத்தில் கலக்கம் நிழலிட்டிருந்தது. சென்னையில் 1930-ம் ஆண்டு மே மாதம் ஆறாந்தேதி வெளியிடப்பட்டு மறுநாள் ஏழாந்தேதி மதுரைக்குக் கிடைத்திருந்த பேப்பர் அது. ராஜாராமன் பேப்பரைப் படிப்பதற்கு முன்,

"உனக்குத் தெரியுமா, ராஜா? புரொபஸர் சாமுவேல் கடைசியில் அந்தப் பக்கிரிசாமியை மதம் மாற்றி விட்டார். நேற்றிலிருந்து காலேஜ் அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரில் கூட அவன் பெயரை ஜான் பக்கிரிசாமி என்று மாற்றி எழுதியாச்சாம்!" - என்று உள்ளூர் மிஷன் கல்லுரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைப்பற்றிச் சுற்றிலும் அமர்ந்திருந்த இளைஞர்களில் ஒருவன் பிரஸ்தாபித்தபோது, அதைக் கேட்டு ராஜாராமனுக்குக் கோபமே வந்து விட்டது.

"காலேஜைப் பற்றியும், வெள்ளைக்காரனுக்குத் துதிபாடும் அந்தச் சாமுவேல் வாத்தியாரைப் பற்றியும் இங்கே பேசாதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது? இந்த தேசத்தில் இந்தத் தலைமுறையில் ஒரே ஒரு மதமாற்றம் தான் உடனடியா நடக்கணும். ஜனங்களை அடிமைத் தனத்திலிருந்து சுதந்திரத்திற்கு மதம் மாற்றியாக வேண்டும். அதைக் காந்தி மகான் செய்து கொண்டிருக்கிறார். பாவிகள் அது பொறுக்காமல், முந்தாநாள் அவரைக் கைது செய்திருக்கிறார்கள். விசாரணையே இல்லாமல் சிறைத்தண்டனையும் கொடுத்திருக்கிறார்கள்!"- கூறிவிட்டுச் 'சுதேசமித்திரனை'யும் படித்து காட்டிய போது, உயிர்க்களை ததும்பும் ராஜாராமனின் ஜீவன் நிறைந்த விழிகளில் சத்தியாவேசம் ஒளிர்ந்தது. 'சுதேசமித்திரனை'ப் பிடித்திருந்த அவன் கைகள் குங்குமமாகச் சிவந்திருந்தன. கூரிய நாசிக்குக் கீழே சிவந்த அழுத்தமான உதடுகள் அவன் எதையும் சாதிக்கக்கூடியவன் என்ற திடசித்தத்தைக் காட்டின.

மேலக் கோபுரத்தருகே ஃபண்டாபீஸில் மணி பன்னிரண்டு அடிக்கும் ஓசை காற்றில் மிதந்து வந்தது. மேலே ராஜாராமன் என்ன சொல்லப் போகிறான் என்று எதிர்பார்த்து எல்லோரும் அவனையே பார்க்கத் தொடங்கினார்கள். ராஜாராமனைத் தவிர அங்கிருந்த நால்வரில் முத்திருளப்பன் பள்ளி ஆசிரியா; குருசாமி பாண்டிய வேளாளர் தெருவில் தையற்கடை வைத்திருந்தார்; சுந்தரராஜன், பழநியாண்டி, இருவரும் கல்லூரி மாணவர்கள். ராஜாராமனும் சில மாதங்களுக்கு முன்புவரை அவர்களோடுதான் கல்லூரியில் சக மாணவனாகப் படித்துக் கொண்டிருந்தான். தேசத்தின் அறைகூவலை ஏற்றுக் கல்லூரியிலிருந்து அவன் வெளியேறிச் சில மாதங்கள்கூட ஆகவில்லை. இண்டர்மீடியட் இரண்டாவது வருடம் படித்துக் கொண்டிருந்த அவன் படிப்பைவிட்டு விட்டு தேசிய வேள்வித் தீயில் குதித்ததை அவன் தாயே விரும்பவில்லை. இளமையிலேயே விதவைக் கோலம் பூண்ட அந்த அன்னை, தான் வாழ்ந்த குடும்ப வாழ்வின் ஒரே இனிய ஞாபகமாக எஞ்சி நிற்கும் மகன் மனம் கோணும்படி அவனைக் கண்டிக்க முடியாமல் கவலைப்பட்டாள்.

"ராஜா! நீ இப்படிச் செய்திருக்கப்படாது," என்று ராஜாராமனின் தாய் அவன் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டதைப் பற்றி வருத்தப்பட்டபோது, "ஒரு பிள்ளையைப் பெற்ற தாயாகிய நீயே இப்படிக் கவலைப் படறியே அம்மா! கோடிக்கணக்கான பிள்ளைகளைப் பெற்றிருக்கும் ஒரு தாய் எவ்வளவு கவலைப்படுவாள் என்று நினைத்துப்பாரு"- என்பதாகப் பதில் சொன்னான் அவன். அந்தப் பதிலை எதிர்த்துப் பிள்ளையிடம் முரண்டு பிடிக்கத் தாயால் முடியவில்லை. அவன் போக்கில் விட்டு விட்டாள். ராஜாராமனைத் தொடர்ந்து கல்லூரியிலிருந்து வெளியேறுவதாக வாக்களித்திருந்த சுந்தரராஜனும், பழநியாண்டியும் இதுவரை அப்படிச் செய்யவில்லை. 'சுதேசமித்திரனை' மடித்து வைத்துவிட்டு "ஏண்டா, நீங்க ரெண்டுபேரும் எப்ப வெளியேறி வரப் போறீங்க?"- என்று சுந்தராஜனையும், பழநியாண்டியையும் பார்த்துக் கேட்டான் ராஜாராமன். பழநியாண்டியும், சுந்தரராஜனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சுந்தரராஜன் தான் முதலில் பதில் கூறினான்.

"ஃபாதர் ரொம்பக் கண்டிப்பா இருக்கார். ரெண்டு வருஷத்தை எப்படியாவது கடந்திட்டா, லா காலேஜிலே சேர்ந்துகிடலாம்ங்கிறார். அதான் பர்க்கிறேன்..."

"சரி! நீ உருப்படவே போறதில்லே. வக்கில் புதுத் தெருவிலேயே கிடந்து, அடிமையாகவே சாகத்தான் லாயக்கு."

வக்கீலான தந்தைக்குப் பயந்து சுந்தரராஜன் பின்வாங்கியது ராஜாராமனுக்குக் கோபமூட்டியது. மற்றொருவனாகிய பழநியாண்டி பதில் சொல்லுமுன்பே அவன் பதில் என்னவாயிருக்கும் என்று ராஜாராமனே அநுமானித்து விட்டான். பழநியாண்டியின் தந்தை பழுத்த ஜஸ்டிஸ் கட்சி ஆள். டாக்டர் நாயரைத் தெய்வமாக நினைத்து வெள்ளைக்காரனின் துதி பாடிக் கொண்டிருப்வர். பழநியாண்டியும் தனக்குத் துணை வரமாட்டான் என்பது ராஜாராமனுக்குப் புரிந்து விட்டது. அதனால் அதற்காகத் தன் முடிவை மாற்றிக் கொள்ள அவன் தயாராயில்லை.

"சுந்தரராஜன் வக்கீலாகப் போகிறான். உங்கப்பாவோ 'ஸர்' பட்டத்துக்குப் பழி கிடக்கிறார். பையன் தேசப் போராட்டத்துக்குப் போறது நிச்சயமாக அவருக்குப் பிடிக்காது. என்ன, பழநியாண்டி, நான் சொல்றது சரிதானே?

"நான் இங்கே வர்ரது போறது கூட எங்கப்பாவுக்குத் தெரியாது,"- என்று பழநியாண்டி பயந்து கொண்டு ஆரம்பித்த போது ராஜாராமனுக்கு மேலும் கோபம் வந்தது.

"தெரியாதா, ரொம்ப நல்லது! நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போய், வேஷ்டியை அவிழ்த்துப் போட்டு விட்டுச் சேலை கட்டிண்டு காலேஜுக்குப் போங்கடா. வேஷ்டி ஆம்பளைகளோட சின்னம். நீங்க அதைக் கட்டிக்கிறது அதுக்கு மரியாதையில்லே." ராஜாராமனுடைய கோபத்தைக் கண்டு நண்பர்கள் ஒன்றும் பேசத் தோன்றாமல் உட்கார்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் நேரமாகிறதென்று சொல்லிக்கொண்டே சுந்தரராஜனும், பழநியாண்டியும் மெல்ல வீட்டுக்கு நழுவினார்கள். முத்திருளப்பனும், குருசாமியும் ராஜாராமன் எப்படிச் செய்யச் சொன்னானோ அப்படிச் செய்யத் தயாராயிருந்தார்கள். வீட்டுக்குத் திரும்ப நேரமில்லாவிட்டால் அங்கேயே அந்த ஒரே பாயில் ராஜாராமனோடு படுத்துத் தூங்கக் கூடியவர்கள் அவர்கள். அது ராஜாராமனுக்கும் நன்றாகத் தெரியும். அதனால் தான் அவன் அவர்களை ஒன்றும் கேட்கவில்லை.

சுந்தரராஜனும் பழநியாண்டியும் புறப்பட்டுப் போனபின் அவர்கள் மூவரும் தாங்கள் செய்ய வேண்டிய காரியங்களுக்குத் திட்டமிடத் தொடங்கினார்கள். அன்னக்குழி மண்டபத்துச் சந்தில் தன்னுடைய வீட்டுக்கு முன்புறமிருந்த அறையிலேயே திலகர் தேசிய வாசக சாலையை நடத்தி வந்த ராஜாராமன, அந்த வீட்டுக்காரர் இந்த வாசக சாலையில் நள்ளிரவிலும் ஆட்கள் கூடுவது, வந்தே மாதரம் பாடுவது போன்றவற்றால் கோபப்பட்டுக் காலி செய்யச் சொன்னதால், வடக்குச் சித்திரை வீதி மாடிக்கு மாற்றியிருந்தான். இடம் மாற்றிச் சில நாட்களே ஆகின்றன. கீழேயும், பக்கத்திலும் குடியிருப்பு வீடுகள் இல்லாததால் வடக்குச் சித்திரை வீதி மாடியில் எந்த நேரத்திலும் நண்பர்கள் கூடிப் பேச வசதியாயிருந்தது. மாடிப்படியேறுகிற இடத்தில் கீழே தங்கம் - வெள்ளிப் பூச்சு வேலை செய்த ஒரு கில்ட் ஷாப் இருந்தது. கில்ட்-ஷாப்காரர் ரத்தினவேல் பத்தர் ஒரு காந்தி பக்தர். அவர் தான் இந்த இடத்தை ராஜாராமனுக்குச் சொன்னவர். மாடிப்படிப் பாதை தனியே நேராகத் தெருவுக்கு இறங்கி விடுவதால், இந்தப் புது இடம் எந்த நேரமும் பூட்டத்திறக்க வசதியாக இருந்தது. மாதம் பத்து ரூபாய் வாடகை, அதை நண்பர்கள் பங்கிட்டுக் கொண்டு கொடுத்துவர ஏற்பாடாகி இருந்தது. புது இடத்தில் முதல் முதலாக நடக்கும் நள்ளிரவுக் கூட்டம் இதுதான். பின்புறம் இந்த வாசக்சாலையின் மாடி ரூமை ஒட்டினாற்போல் ஒரு சின்ன மொட்டை மாடி! அடுத்துப் பக்கத்திலுள்ள ஒண்ணாம் நம்பர் சந்தில் இருக்கும் மாடி வீட்டில் அறை ஒன்று இந்த மொட்டை மாடியை ஒட்டி இருக்கிறது. ரொம்ப நேரம் வரை அந்தப் பக்கத்து மாடியறையிலிருந்து யாரோ சுகமாக வீணை வாசித்துக் கொண்டிருப்பதைக் கேட்க முடிந்தது. ஃபண்டாபீஸ் மணி இரண்டடித்தபின் அந்த வீணை ஒலியும் நின்று போயிற்று. ராஜாராமன், அந்நியத் துணி பகிஷ்காரம், கள்ளுக்கடை மறியல் போன்றவற்றைப் பற்றி ஒரு திட்டம் போட்டு, நண்பர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தான். எதை எப்படி எங்கெங்கே செய்வதென்பது பற்றி நண்பர்கள் விவாதித்தனர். உப்பு சத்தியாக்கிரகம் அப்போதுதான் நாடெங்கும் நடந்து தலைவர்கள் கைதாகியிருந்தனர்.

"கள்ளுக்கடை மறியலைச் செல்லூர்லியாவது திருப்பரங்குன்றத்திலயாவது நடத்தணும்,"- என்றார் முத்திருளப்பன். அந்நியத் துணிக்கடை மறியலை மேலக் கோபுர வாசலில் வைத்துக் கொள்வதா, கீழ்ச் சித்திரை வீதியில் அம்மன் சந்நிதியருகே வைத்துக் கொள்வதா என்பது பற்றி ராஜாராமனுக்கும் குருசாமிக்கும் அபிப்ராயபேதம் இருந்தது. பல பெரியவர்கள் ஏற்கெனவே நடத்தியிருந்த இந்த மறியல்களை அவர்கள் மீண்டும் நடத்த எண்ணினர்.

காந்தி கைதானதால் எதையாவது செய்து, தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தார்மீகக் கோபத்தைக் காட்ட வேண்டும் என்பதில், அவர்களுக்குள் அபிப்ராயபேதம் எதுவும் இருக்கவில்லை. எப்படிச் செய்வது, எங்கே செய்வது என்பதில் தான் அபிப்ராயபேதம் இருந்தது. குருசாமியும், முத்திருளப்பனும் ராஜாராமனைவிட மூத்தவர்கள். ராஜாராமனிடம் துடிப்பும், வேகமும், ஆவேசமும் இருந்தன. குருசாமியிடமும் முத்திருளப்பனிடமும் அநுபவ நிதானம் இருந்தது.

"நாடு முழுவதும் தலைவர்களும் தேசபக்தர்களும் எதையாவது சாதனை செய்து கைதாகிக் கொண்டிருக்கிற சமயத்திலே நாம மட்டும் வாசகசாலையில் உட்கார்ந்து பேப்பர் படிச்சிட்டு வம்பு பேசிக் கொண்டிருக்கிறதிலே பிரயோசனமில்லை" - என்று ராஜாராமன் கடைசித் தடவையாக வற்புறுத்திய போது ஃபண்டாபீஸ் மணி நாலடித்தது.

"நாளை ஒரு முடிவு எடுப்போம்" என்று குருசாமி சொல்லும் போதே போட்டி போட்டுக் கொண்டு வார்த்தைகளைத் தடுத்தது கொட்டாவி.

அவர்களும் அங்கேயே படுப்பார்கள் என்ற எண்ணத்தில் பாயை உதறி விரிக்க தொடங்கினான் ராஜாராமன். முத்திருளப்பன் புறப்படத் தயாராகி விட்டார்.

"இப்பவே மணி நாலாச்சு. நாங்க பேசிக்கிட்டே நடந்து போகச் சரியாயிருக்கும். இங்கே படுத்தா நேரந் தெரியாமத் தூங்கிடுவோம். குருசாமிக்குக் காலைல கடை தெறக்கணும். எனக்கு ஸ்கூல் லீவுன்னாலும் ஹெட்மாஸ்டர் வரச் சொல்லியிருக்காரு. நீயும் வீட்டுக்குப் போயிடேன், ராஜா. உனக்கு எங்களைவிடப் பக்கம் தானே?"

"இல்லை, நிங்க வேணும்னா போங்க. எங்க வீட்டு ஓனர் ஒரு முசுடு. ராத்திரியிலே சத்தம் போடறோம்னு வாசகசாலையையே கிளப்பி விட்டவன். இப்ப வீட்டையே காலி பண்ணும்பான். நான் காலையிலேயே போய்க்கிறேன்"-என்று நண்பர்களுக்கு விடைகொடுத்து விட்டுக் கதவைத் தாழிட்டான் ராஜாராமன்.

மாடி ஓட்டுச் சார்ப்பு. மாதமோ மே மாதம். உள்ளே வெக்கை பொறுக்க முடியவில்லை. தூங்க முடியாது போலிருந்தது. நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தவரை பேச்சு சுவாரஸ்யத்தில் வெக்கை தெரியவில்லை. ராஜாராமன் பாயைச் சுருட்டிக் கொண்டு மொட்டை மாடியில் பாய் விரித்துப் படுத்தான். அங்கிருந்த முற்றத்தில் அவன் கால் நீட்டிய போது சுவரில் இடித்தது. படுத்த சிறிது நேரத்திலேயே தூங்கிவிட்டான் அவன். நீட்ட இடமில்லாததால் தூக்கத்தில் மிகக் குறைந்த உயரமுள்ள விளிம்புச் சுவரில் இரண்டு கால்களையும் தூக்கிப்போட வேண்டியதாயிற்று. சுவர் மறுபுறமிருந்து பார்த்தால் இரண்டு தாமரைகள் பூத்துச் சுவர் விளிம்பில் கிடப்பது போல அந்தக் கால்களின் உட்புறங்கள் தெரிந்தன.

கால்களில் சில்லென்று ஏதோ வந்து விழுந்ததை உணர்ந்தபோது அவன் மறுபடி கண் விழித்தான். காலில் வந்து விழுந்த பொருள் உறுத்தவில்லை. மிருதுவாயிருந்ததுடன் சுகமாகவும் இருந்தது. மனோகரமான நறுமணத்தை அவன் நாசி உணரச் செய்தது. அந்தப் பொருள், கண்விழித்துப் பார்த்தால் இலேசாக வாடிய ஒரு கொத்து மல்லிகைச் சரம் சர்ப்பம் போல் சுருண்டு அவன் கால்களில் கிடந்தது. அரகஜா, ஜவ்வாது, புனுகு சந்தன வாசனையும் அந்தப் பூ வாசனையோடு கலந்திருந்தது. அந்த வாசனைகள் அவனைக் கிறங்க அடித்தன. பக்கத்து வீட்டு மாடியிலிருந்து யாரோ சன்னல் வழியே வீசி எறிந்திருக்க வேண்டும். பக்கத்து வீடு யாருடையாதாயிருக்கும் என்று அநுமானிக்க முயன்று அந்த அநுமானம் இலேசாக நினைவில் பிடிபட்டபோது அந்தப் பூவைக் காலால் உதைக்க எண்ணி, 'பூக்களை மிதிக்க வேண்டாம்,' என்ற இங்கிதமான நுண்ணுணர்வோடு கால்களிலிருந்து அதைக் கீழே தரையில் நழுவவிட்டான் அவன். கிழக்கே வானம் வெளுத்திருந்தது. பூ எந்த ஜன்னலிலிருந்து வந்து விழுந்ததோ, அந்த ஜன்னல் வழியே வீணையில் யாரோ பூபாளம் வாசிக்கத் தொடங்கும் ஒலி மெல்ல எழுந்தது. அவன் பாயைச் சுருட்டிக் கொண்டு உள்ளே வந்தான்.

அந்த மல்லிகைப் பூவின் வாசனை இன்னும் கால்களிலிருந்து போகவில்லை. உள்ளே பெரிதாக மாட்டியிருந்த திலகர், காந்தி படங்கள் அவன் பார்வையில் பட்டதும்,

"அப்பனே! உன்னுடைய தேசம் விடுதலையடைகிறவரை கூட நீ சுதந்திரமாக இரசிக்க முடியாது!" - என்று அந்தப் படங்களிலிருந்தவர்களின் பார்வை அவனை எச்சரிப்பது போலிருந்தது. மாடிக் கதவைத் திறந்து வாசக சாலைக்காகப் போடப்பட்டிருந்த பத்திரிகைகளை எடுத்தான். சென்னையிலும், மதுரையிலும், திருச்சியிலும், திருநெல்வேலியிலுமாக மேலும் பல சத்தியாக்கிரகிகள் கைதாகியிருந்தார்கள். தேசத்தின் நலனில் அக்கரையுள்ள பலர் தொடர்ந்து கைதாகிச் சிறைக்குப் போய்க் கொண்டிருக்கும்போது தான் மட்டும் வெளியே இருப்பது பாவமென்று தோன்றியது அந்த இளைஞனுக்கு. வாசக சாலையைப் பூட்டிக் கொண்டு அவன் கிழே இறங்கிய போது கில்ட் கடைப் பத்தர், கடையைத் திறந்து கொண்டிருந்தார். வாசகசாலைச் சாவியைக் கொடுக்க அவரிடம் போன போது,

"பின் பக்கம் மாடி வீடு யாரோடது; தெரியலியே?" என்று கொஞ்சம் தெரிந்தும் தெரியாமலுமிருந்த சந்தேகத்துடனேயே அவரைக் கேட்டான்.

"இதென்ன கேள்வி தம்பி! பின்பக்கம் ஒண்ணா நம்பர்ச் சந்துங்கிறது தெரியுமில்லே?" - என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் பத்தர். ராஜாராமனும் புரிந்து விட்டாற் போலப் பதிலுக்குச் சிரித்தான்.

"தெருப் பூராவுமே கந்தர்வ லோகம்கிறது ஊரறிஞ்ச விஷயமாச்சே? ஏன்? என்ன ஆச்சு?"

"ஒண்ணுமில்லே! சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்."

"அங்கே நீங்க தெரிஞ்சுக்கிறதுக்கு எதுவுமே இல்லை, தம்பி,"

பத்தரிடம் சாவியைக் கொடுத்து விட்டுப் புறப்பட்டான் ராஜாராமன். தெருவில் தயிர்க்காரிகளின் பட்டாளம் ஒன்று சேர்ந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. தலையில் அவ்வளவு பெரிய பானையைக் கூடைக்குள் வைத்துக் கொண்டு இரண்டு கைகளையும் வீசிச் சுதந்திரமாக ஒரு சிறிதும் பயப்படாமல் எப்படி அவர்களால் நடந்துவர முடிகிறதென்பது அவன் மனத்தில் ஆச்சரியமாயிருந்தது. வாழ்க்கையில் எந்த மூலையிலும் பொறுப்பும் சுமையுமுள்ளவர்கள் இப்படித்தான் அநாயசமாக நடந்து வருகிறார்களென்று தோன்றியது. பொறுப்பும் சுமையும் இல்லாதவர்கள் தான் தடுமாறி விழுகிறார்களோ என்று ஒரு சிந்தனை உள்ளே ஓடியது. வீட்டுக்குப் போய் குளித்து உடை மாற்றிக் கொண்டு வெளியே புறப்படக் கிளம்பிய ராஜாராமனை மேலுருக்குப் போய் குத்தகைக்காரனைப் பார்த்துவிட்டு வரச் சொல்லித் தாய் வற்புறுத்தினாள். அவர்களுக்குப் பூர்வீகம் மேலூர். மேலூரில் ஒரு பழைய வீடும், திருவாதவூரில் கொஞ்சம் நிலமும் உண்டு. அப்பா காலம் வரை மேலூரில் தான் வாசம். அவன் ஹைஸ்கூல் படிப்புத் தொடங்கிய போது மதுரைக்கு ஒண்டுக் குடித்தனம் வந்தவர்கள் தான்; மதுரை இன்னும் அவர்களை விட்டபாடாக இல்லை. மேலூர் வீடு ஒரு உர டிப்போவுக்காக வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அந்த உர டிப்போவின் ஹெட் ஆபீஸ் மதுரையிலிருந்ததால் வாடகையை அந்தக் கையால் வாங்கி, இந்தக் கையால் மதுரை ஒண்டுக் குடித்தனத்துக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள், அவன் அம்மா.

அவன் காலேஜ் படிப்பை விட்டதிலிருந்து, "ஏண்டா இனிமேலே மதுரையிலே எதுக்கு குடித்தனம்? மேலூருக்கே வீட்டோடப் போயிடலாமே?" என்று அவன் தாய் வாய்க்கு வாய் முணுமுணுப்பது சகஜமாகியிருந்தது. வாசக சாலையையும், தேச பக்த நண்பர்களையும், தலைவர்களையும் பிரிந்து தேசத்தின் பரபரப்பான காலத்தில் மேலூருக்குப் போக அவனுக்கு விருப்பமே இல்லை. அதனால் அது ஒன்றை மட்டும் அம்மாவிடம் கண்டிப்பாக மறுத்து வந்தான் அவன். ஏ.வைத்தியநாதய்யர், ஜார்ஜ் ஜோசப் போன்ற உள்ளூர்த் தலைவர்களின் ஆசியும் அவனுக்குக் கிடைத்திருந்தது. சீநிவாசவரதன் அவனுக்கு ஒரு பாரதி பாடல் புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். மூன்று வருஷங்களுக்கு முன் மதுரையின் வீதிகளில் தேச பக்தர் சோமயாஜூலு நடத்திய பட்டாக்கத்தி ஊர்வலத்தின் போது, இளைஞனாயிருந்த அவனைப் பலர் தடுத்தும் கேளாமல் அவனும் கூடப் போயிருந்தான். ஜெனரல் அவாரி நாகபுரியில் நடத்திய கொடி ஏந்திய தேசபக்திப் படையின் வாள் ஊர்வலத்தின் எதிரொலியாக இந்தப் பட்டாக்கத்தி ஊர்வலம் மதுரையிலும் நடந்தது. சென்னையில் நடந்த சைமன் கமிஷன் எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்ட தேசபக்தர்களையும், பொது மக்களையும் இரவில் வீடு திரும்புகையில், அந்நியர்களின் கூலிப் பட்டாளமும், குண்டர்களும் அடித்து நொறுக்கியதைக் கண்டித்துத் தீரர் சத்தியமூர்த்தி - லார்டு வெல்லிங்டனை அறைகூவி முழங்கிய வீர வாசகங்களைப் பாராட்டி, அப்போது ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த ராஜாராமன் அவருக்கொரு கடிதம் எழுதினான்.

"பகலில் எங்கள் ஆட்சி நடக்கிறது. இரவிலோ குண்டர்கள் ஆட்சி நடக்கிறது! அப்படியானால் வெல்லிங்டனே உமது ஆட்சி எங்கே நடக்கிறது? எங்கே போயிற்று?" - என்று அந்த தீரர் கூறிய வாக்கியங்களை அவன் பாராட்டி எழுதிய கடிதத்துக்கு ஆசி கூறி, அவர் ஒரு சிறு பதில் எழுதியிருந்தார். அந்தப் பதில் இன்னும் அவனிடம் பத்திரமாக இருந்தது. மதுரையின் இந்த ஞாபகங்களையும் அநுபவங்களையும் விட்டுவிட்டு மேலூர் போக அவனுக்குப் பிடிக்கவில்லை. மேலூரில் அவனுக்கு வேண்டிய சூழ்நிலையே இல்லை.

ஜோசப் சாரைப் பார்த்துவிட்டு வரலாம் என்றுதான் அன்று காலை அவன் வெளியே புறப்பட்டிருந்தான். மேலூர் போனாலோ, அங்கிருந்து திருவாதவூர் போய்த் திரும்ப மாலையாகிவிடும். அவனோ பசுமலை போக விரும்பினான்.

"மேலூருக்கு இன்னொரு நாள் போறேன்," என்று தட்டிக்கழித்து விட்டான் அவன். தாய் முணுமுணுத்தாள்.

"வெளியே போறதுதான் போறே; திரும்ப எவ்வளவு நாழியாகுமோ? ஏதாவது சாப்பிட்டு விட்டுப் போ" என்று இலையைப் போட்டாள் அம்மா. கண்டிப்பையும் விட முடியாமல் பாசத்தையும் விட முடியாமல் தாய் படும் சிரமத்தை அவன் நன்றாக உணர்ந்திருந்தான். ஒற்றைக்கொரு பிள்ளை என்பதால் ரொம்ப நாள் வரை அவனைப் பிச்சை என்று தான் அவள் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவன் காலேஜ் படிப்பு வயதுக்கு வந்ததும் தான், அவள் அப்படிக் கூப்பிடும் வழக்கமே நின்றது.

இரண்டு தோசை சாப்பிட்டதுமே அவன் இலையிலிருந்து எழுந்து விட்டான்.

"ஏண்டா, போதுமா?"

"சிக்கிரமா வந்துடுவேன். இது போறும்."

செய்யப்போகிற காரியங்களுக்கு உடனிருந்து உதவுகிற மாதிரி மனோதிடமுள்ள பத்திருபது பேர் அவனுக்கு தேவைப்பட்டார்கள். ஒருவர் இரண்டு பேர் செய்வதனால் ஒரு மறியலோ, ஆர்ப்பாட்டமோ நிரக்காது என்பதை அவன் உணர்ந்திருந்தான். மறியலைத் தொடங்கு முன்பே தடயம் தெரிந்து போலிஸ் பிடித்துக் கொண்டு போய்விட்டால் மறியலே நடக்காது. பழநியாண்டியும், சுந்தரராஜனும் இனிமேல் வாசகசாலைப் பக்கம் தலைக்காட்ட மாட்டார்கள் என்பது அவனுக்கு நிச்சயமாகப் புரிந்தது.

'வயதானவர்களில் பலர் அந்நிய அரசங்கத்துக்குப் பயப்படுகிறவர்கள்; வயதாகாத இளைஞர்கள் அப்பாவுக்குப் பயப்படுகிறவர்கள். கடவுளே! இந்த தேசம் எப்படித் தான் உருப்படப்போறதோ?' - என்று அவன் வாய் முணுமுணுத்தது. 'பயமென்னும் பேய் தன்னை விரட்டியடித்தோம். பொய்மைப் பாம்பைப் பிளந்து உயிரைக் குடித்தோம்' - என்று மனப்பாடம் செய்திருந்த பாரதியார் பாட்டு ஞாபகம் வந்தது. அந்நிய அரசாங்கத்துக்குப் பயப்படுகிற வயதானவர்களையும், வயதானவர்களுக்குப் பயப்படுகிற இளைஞர்களையும் வைத்துக் கொண்டு, இங்கு எதையுமே சாதிக்க முடியாது. மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதையும், நூலோர்கள் செக்கடியில் நோவதையும் இனியும் பொறுப்பதற்கில்லை என்று அவனுடைய இளம் ரத்தம் சூடேறிக் கொதித்தது. இதில் தனக்கு உதவக்கூடியவர்கள் என்று நம்பிக்கையளித்த பலரைப் போய்ச் சந்தித்து, வாசக சாலைக்கு அன்றிரவு வருமாறு வேண்டிக் கொண்டான். ராஜாராமன் நிறைய அலைய வேண்டியிருந்தது; நிறையப் பேச வேண்டியிருந்தது. தேச விடுதலையிலும், காந்தியிடமும், அநுதாபமும் நம்பிக்கையுமுள்ளவர்கள் கூடப் பயப்பட்டார்கள்.

"எல்லாம் சரி. இதுக்காக நீ காலேஜ் படிப்பை விட்டிருக்கப் படாதுப்பா" - என்று அவனைக் கடிந்து கொள்ளத் தலைப்பட்டனர் சிலர். எதைக் கேட்டும் அவன் கலங்கிவிடவில்லை. வீடு திரும்பும் போது பகல் இரண்டு மணி ஆகிவிட்டது. சாப்பாட்டை முடித்துக் கொண்டு வெளியே மறுபடி புறப்பட்டபோதும், "மேலூருக்குப் போய்க் குத்தகைக்காரனைப் பார்த்துட்டு வரணும்னேனே?" என்று மீண்டும் காலையில் சொன்னதையே திருப்பிச் சொன்னாள் தாய்.

"நாளைக்குப் போறேன், அம்மா. இன்னிக்கு ராத்திரியும் வாசகசாலையில் கூட்டம் இருக்கு. எல்லோரையும் வரச் சொல்லியிருக்கேன்."

"தினம் ராத்திரி ராத்திரி என்ன கூட்டம் வேண்டிக்கெடக்கு?"

"....."

ராஜாராமன் பதில் சொல்லவில்லை. அவன் வாசகசாலைக்குப் போய்ச் சேர்ந்த போது கில்ட் கடை பத்தர் புதிதாக ஒரு செய்தியைச் சொன்னார்.

"காலையிலேர்ந்து சி.ஐ.டி. ஒருத்தன் வட்டம் போடறான். எங்கிட்டக் கூட வந்து, 'மேலே என்ன லைப்ரரி?'ன்னான் 'திலகர் லைப்ரரி; சில சமயம் ராத்திரிலே கிதைப் பிரசங்கம் நடக்கும்'னேன். போலீஸ் கண்லே லைப்ரரியும் இருக்கு; தெரிஞ்சுக்கங்க தம்பீ" என்றார் பத்தர். சமயத்தில் அவர் அதைத் தன்னிடம் தெரிவித்ததற்காக ராஜாராமன் அவருக்கு நன்றி தெரிவித்தான்.

அத்தியாயம் - 3

அன்றிரவு கூட்டம் வாசக சாலையில் நடைபெறவில்லை. வைகைக் கரையில் பிட்டுத் தோப்பு மண்டபத்தருகே ஒரு நந்தவனத்தில் நடந்தது. வாசகசாலையில் கூட்டம் நடக்கும் என்று வந்தவர்களுக்குத் தகவல் சொல்லிப் பிட்டுத் தோப்புக்கு மாற்றி அனுப்புவதற்காகவே பத்தர் அன்று பிரமாத வேலையிருப்பது போல் கில்ட் கடையை ரொம்ப நேரம் திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தார். கடைசி நபரையும் பிட்டுத் தோப்புக்கு அனுப்பியதோடு அந்தக் கடைசி நபரிடமே வாசகசாலைச் சாவியையும் ராஜாராமனுக்குக் கொடுத்தனுப்பி விட்டார் பத்தர். ஒரு வேளை ராஜாராமனும், நண்பர்களும் பிட்டுத் தோப்பில் கூட்டம் முடிந்து வெகு நேரமாகித் திரும்பும் போது வாசக சாலையில் வந்து படுக்க நேர்ந்தாலும் அதற்கு வசதியாகச் சாவி இருக்கட்டும் என்ற முன்யோசனையோடு தான் சாவியைக் கொடுத்தனுப்பியிருந்தார் அவர். அன்று வழக்கத்துக்கு மாறாகக் கில்ட் கடையைப் பூட்டும் போது பதினொரு மணிக்கு மேலாகிவிட்டது. எதையாவது தகட்டைச் சுரண்டியும், 'ஆஸிட்' ஊறலில் நனையப் போடுவது போலவும் பதினொரு மணி வரை நடிக்க வேண்டியிருந்தது. அதற்குள்ளேயே இரண்டு தரம் சி.ஐ.டி. வந்து விட்டான்.

"என்ன, கில்ட் கடைக்காரரே, இன்னிக்குக் கீதைப் பிரசங்கம் கிடையாதா?" - என்றும் கூட ஒரு தடவை அவரைக் கேட்டிருந்தான் சி.ஐ.டி. அதையும் சாவி கொண்டு போனவரிடம் சொல்லி ராஜாராமனை எச்சரித்து வைக்கும்படி பத்தர் கூறியிருந்தார்.

பிட்டுத் தோப்பு நந்தவனத்தில் 'வந்தேமாதர' முழக்கத்துடன் நண்பர்கள் சந்தித்தனர்.

"நம்மில் சிலராவது திருச்சிக்குப் போய், வேதாரணியத்துக்கு அங்கிருந்து சேலம் வக்கீல் ஸி.ராஜகோபாலாச்சாரியார் தலைமையில் புறப்பட்ட உப்பு சத்தியாக்கிரக கோஷ்டியோடு கலந்து கொண்டிருக்க வேண்டும். நானே அப்படிக் கலந்து கொண்டு கைதாகியிருக்கலாம். அதற்கு நான் ஆசைப்பட்டேன்; முடியவில்லை. இப்போதும் காலம் கடந்து விடவில்லை. நாம் ஏதாவது செய்யவேண்டும். காலையில் ஜோசப் சாரை பார்க்கப் போயிருந்தேன். அவரும் இல்லை. காந்தியும் தலைவர்களும் கைதான செய்திகளைப் படிக்கப் படிக்க என் நெஞ்சு குமுறுகிறது. நமது மரியாதைக்குரிய தேசத் தலைவர்கள் சிறையில் வாடும்போது நாம் இப்படிச் சும்மா இருக்கலாகாது." - என்று ராஜாராமனும் அதையடுத்து முத்திருளப்பனும் குருசாமியும் பேசினார்கள்.

செல்லூரில் கள்ளுக்கடை மறியலும், கீழ்ச் சித்திரை வீதியில் அம்மன் சந்நிதி முகப்பில் துணிக்கடை மறியலும் செய்யலாமென்று முடிவாயிற்று. துணிக்கடை மறியலுக்கு ராஜாராமன் தலைமையேற்பதாகக் கூறினான். மற்றொன்றிக்குக் குருசாமி, முத்திருளப்பன், இருவருமே தயாராயிருந்தனர். சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்து விடலாமென்று கூறப்பட்டது. இருவருமே கைதாவதை விட யாராவது ஒருவர் வெளியே இருப்பது சில காரியங்களைச் செய்ய வசதியாயிருக்கும் என்று தோன்றியது. ராஜாராமனைப் பொறுத்தவரை அவன் நிச்சயமாகவே சிறைவாசம் அனுபவிக்க விரும்பினான்.

"இந்தத் தண்டனையை இன்று அடைய முடிந்தவன் படமுடிகிற பெருமிதத்தைத் தேசத்தில் இனி வரும் எந்தத் தலைமுறையிலும் எந்தத் தண்டனையாலும், எவனாலும் அடைய முடியாது," என்று அவன் அடிக்கடி கூறுவதுண்டு. சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்ததில், குருசாமியின் பெயர் விழுந்தது. முத்திருளப்பன் வெளியே இருந்து வாசக சாலையையும், மற்றக் காரியங்களையும் கவனித்துக் கொள்ளுமாறு வேண்டப்பட்டது. சிறை செல்ல முடியவில்லையே என்ற வருத்தத்தோடு தன் முத்திருளப்பனும் அதற்கு இணங்க வேண்டியதாயிற்று. நண்பர்கள் மீண்டும் 'வந்தே மாதர' முழக்கத்தோடு பிரியும் போது நள்ளிரவுக்கு மேலாகிவிட்டது. எல்லாரும் அவரவர் வீடுகளுக்குப் போய்விட்டார்கள். ராஜாராமன் மட்டும் வாசகசாலைக்கு வந்து மொட்டை மாடியில் பாயை விரித்துப் படுத்துக் கொண்டான். மறியலுக்குக் குறித்திருந்த தேதிக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்களே இருந்தன. அதற்குச் செய்ய வேண்டிய காரியங்களை நினைவு படுத்திக் கொண்டான் அவன். ரொம்ப நேரமாகத் தூக்கம் வரவில்லை. அதிகாலையில் தான் கொஞ்சம் கண்ணயர முடிந்தது. அன்று மிக அதிகாலையிலேயே எழுந்திருந்து மேலூருக்குப் போய்வர எண்ணியிருந்தான் அவன். கைதாகி ஜெயிலுக்குப் போவதானால் அம்மாவுக்கு வந்து சேர வேண்டிய குத்தகைப் பணம் தடைப்படும்படி நேரவிட அவன் விரும்பவில்லை. அவன் கைதாவதோ, மற்ற விவரங்களோ அம்மாவுக்குத் தெரியாது. குத்தகைக்காரனிடம், 'அப்பப்போ பணத்தை மதுரைக்குக் கொண்டு வந்து கொடுத்துடு, நான் கொஞ்ச நாள் ஊரிலிருக்க மாட்டேன்' - என்று சொன்னாலே போதும்.

அவன் கண் விழித்தபோது, நேற்றைப் போலவே இன்றும் காலில் பூச்சரம் வாடிக் கிடந்ததைப் பார்த்தான். தாங்க முடியாத கோபம் வந்தது அவனுக்கு. அந்தக் கோபத்தின் வேகத்தை வீணையின் நாதம் மட்டுப்படுத்த முயன்றாற் போல ஒலித்தது. அதே வாசனைகள். ஆனால், பூ மட்டும் இன்று பிச்சிப்பூ. அதனால் முதல் நாள் மல்லிகையை விடக் கொஞ்சம் அதிகமாகவே வாடியிருந்தது இது.

பக்கத்து மாடியிலிருந்து விதம் விதமான பூக்களைச் சூடிக் கழித்து, விடிந்ததும் எறியும் அந்த உருவத்தைப் பார்க்கவும் கண்டிக்கவும் வேண்டும் போல் அவனுக்குத் தோன்றியது. அடுத்த கணமே, 'தொலையட்டும்; நமக்கேன் இந்த வம்பு? நாளை முதல் மொட்டை மாடியில் படுக்க வேண்டாம்; அல்லது வேறு பக்கமாகக் கால் நீட்டிப் படுக்கலாம்' - என்றெண்ணிய போது சகிப்புத் தன்மையுடன் விட்டு விடலாமென்றும் தோன்றியது. 'நாள் தவறாமல், வாசகசாலை மொட்டை மாடியில், சாந்தி முகூர்த்தம் கழித்த அறை முற்றம் போல் வாடிய பூக்கள் விழுந்து கிடந்தால், வருகிறவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?' என்றெண்ணியபோது முடிவாகக் கோபமே விசுவரூபமெடுத்தது.

பக்கத்து மாடியிலிருக்கும் பெயர் தெரியாத அந்த அப்சரஸை என்ன சொல்லி எப்படிச் சப்தம் போட்டு இரைந்து கூப்பிடுவதென்று தயங்கியபோது, இரு கைகளையும் சேர்த்துப் பலமாகத் தட்டுவதைத் தவிர வேறு எந்த வழியும் புலப்படவில்லை. சுகமான வீணை வாசிப்பை அப்படிக் கை தட்டித் தடுப்பது நாகரிகமாகாதுதான். ஆனாலும், இந்த ஒண்ணாம் நம்பர் சந்து ஜன்மங்களுக்கு நாகரிகமென்ன கேடு? மனிதர்களைக் கூப்பிடும் போது மிருகங்களைக் கூப்பிடுவது போல் அநாகரிகமாக ஓசைப்படுத்திக் கூப்பிடக் கூடாதுதான். ஆனால், அதே சமயத்தில் மிருகங்களைக் கூப்பிடும்போது மனிதர்களைக் கூப்பிடுவது போல் இங்கிதமாகப் பெயர் சொல்லிக் கூப்பிட வேண்டிய அவசியமில்லை. உடம்பை வியாபாரம் பண்ணும் ஒருத்தியை மிருகமாக நினைப்பதில் தப்பென்ன?

'மிருகம் இவ்வளவு சுகமாக வீணை வாசிக்குமா? மிருகம் இத்தனை வாசனையுள்ள பூக்களைத் தொடுத்துச் சூடுமா?'

அவன் மனத்திற்குள்ளேயே ஒரு போராட்டம் நடந்தது. கடைசியில் தன்மானமே வென்றது. அவன் பலமாகக் கை தட்டினான். சிறிது நேரம் கை தட்டிய பின்னும் வீணை வாசிப்பது நிற்கவில்லை. 'ஒரு வேளை கொஞ்சம் செவிடாயிருப்பாளோ? - சே! சே! இத்தனை சுகமான வாத்தியத்தை இசைப்பவள் செவிடாயிருக்க முடியாது; இருக்கவும் கூடாது.' மறுபடியும் பலங் கொண்ட மட்டும் கைகளை இணைத்துத் தட்டினான் ராஜாராமன். பூப்போன்ற அவன் கைகளில் இரத்தம் குழம்பிவிட்டது. சட்டென்று வீணை ஒலி நின்றது. புடவை சரசரக்க வளையல்கள் குலுங்க யாரோ எழுந்துவரும் ஓசை கேட்டது. அடுத்த கணம் எதிரே கைப்பிடிச் சுவரருகில் வந்து நின்ற வனப்பைப் பார்த்ததும் முதலில் அவனுக்கு பேச வரவில்லை. சரஸ்வதியின் மேதைமையும், லட்சுமியின் சுமுகத் தன்மையும் சேர்ந்த ஓர் இளம் முகம் அவன் கண்களை இமைக்க முடியாமற் செய்தது. அந்த முகத்தின் வசீகரத்தில் அவன் பேச முடியாமல் போய்விட்டான்.

"கை தட்டினது நீங்கதானே?"

பேசுகிறாளா, அல்லது இதழ்களாலும் நாவினாலுமே மீண்டும் வீணை வாசிக்கிறாளா என்று புரியாமல் மருண்டான் ராஜாராமன்.

நெகிழ, நெகிழத் தொள தொளவென நீராடி முடித்த கூந்தலும், நீலப் பட்டுப் புடவையும், நெற்றியில் திலகமுமாக நின்றவள் கேட்ட கேள்வியில் எதைக் கண்டிப்பதற்காக அவளைக் கைதட்டிக் கூப்பிட்டோம் என்பதை அவனே மறந்துவிட்டான். அவளுடைய மூக்கிலிருந்த வைரப் பேஸரியில் சூரிய ஒளிப்பட்டுத் தோற்றுக் கூசியது போலவே அவனும் கூசிப் போனான்.

கைதட்டிவிட்டுப் பேசவும் முடியாமல் நிற்கும் அந்த வாலிபனிடம் வெட்கியது போல் அவளும் மெல்ல உள்ளே திரும்பினாள். துண்டு நழுவிய பொன் நிற மார்பில் அரைக்கிரை விதை தூவினாற்போல் கருகருவென்று ரோமமடர்ந்த இவன் நெஞ்சையும் தோளையும் அளந்து விட்டு அவளுடைய அபூர்வமான விழிகள் தரையை நோக்கிக் கொண்டே சிரித்தன. மெல்ல உட்பக்கம் திரும்பிய அவள் உதடுகளில் புன்னகை ஊறியிருந்தது. ரசம் தளும்பி நிற்கும் திராட்சைக்கனிபோல் மதுவூறிய அந்த இதழ்களில் ஓடி ஒளிந்த நகையுடன் அவள் திரும்பிய போதுதான், கூப்பிட்டவனுடைய தைரியம் திரும்ப வந்தது.

"நான் தான் கூப்பிட்டேன்" - என்று தோளும் மார்பும் மறையும்படி மேல் துண்டைப் போர்த்திக் கொண்டே மென்று முழுங்கிய பின், மேலே பேசுவதற்காக அவளை 'நீ' என்பதா 'நீங்கள்' என்பதா என்று தெரியாமல் தவித்தான் ராஜாராமன். 'நீ' என்று சொல்ல வாய் வரவில்லை. 'நீங்கள்' என்று சொல்ல மனம் ஒப்பவில்லை. வயதில் அவனை விடச் சிறியவளாகவே தெரிந்த அவளையொத்த ஒண்ணாம் நம்பர்ச் சந்து அப்சரஸ்களை 'நீ' என்று எவனெவனோ நித்தம் நித்தம் கூப்பிட்டு உறவு கொண்டாடுகிறபோது, தான் நீ என்று கூப்பிடுவதால் ஒன்றும் குடிமுழுகி விடாதென்ற துணிவு உண்டாகச் சில விநாடிகள் ஆயிற்று. அப்படியும் பேச்சின் முதல் வாக்கியத்தில் 'நீ' யோ 'உன்'னோ வராமலே போய்விட்டது.

"ஒரு நாளைப்போல விடியற வேளைக்கு யாராரோ கழற்றி எறியற பூவெல்லாம் இங்கே என் மேலே வந்து விழறது. அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்."

"யாராரோ ஒண்ணுமில்லே! நான் தான் கழற்றி எறியறேன். அது உங்க மேலே விழும்னோ விழுந்து கொண்டிருக்குன்னோ இதுவரை எனக்குத் தெரியாது. இனிமே அப்படிச் செய்யலே. இது செஞ்சதுக்குப் பெரிய மனசு பண்ணி மன்னிக்கணும்," - என்று தாமரை மொட்டுப் போல் கைகூப்பினாள், அவள்.

வணக்கத்தோடு மிகவும் பவ்யமாக மன்னிப்புக் கேட்டுவிட்டு உள்ளே போய்விட்டாள் அவள். எதிர்பாராத அந்த பவ்யம் ராஜாராமனைத் திணறச் செய்தது. முழுக் கோபத்தையும் காட்டித் திட்ட முடியாமல் பண்ணி விட்டாளே என்று ரோஷம் வேறு பொத்துக் கொண்டு வந்தது. அந்த ரோஷத்தை உறங்கப் பண்ணுவதுபோல் பாயைச் சுருட்டிக் கொண்டு படியிறங்கிய அவன் காதில் மீண்டும் வீணையின் இசை வந்து பாய்ந்தது. அவளையும் அவள் முகத்தையும் கூப்பிய கைகளின் விரல்களையும் பார்த்தபின் வீணையை அவள் வாசிக்கிறாளா, அல்லது வீணையே அவளுடைய மதுரமான விரல்களைத் தடவி வாசிக்கிறதா என்று ராஜாராமனுக்குச் சந்தேகம் வந்தது. சந்தேகமும், கோபமும், மாறி மாறி எழும் மனநிலையோடு, அவள் பெயர் என்னவாயிருக்கும் என்ற யோசனையிலும் மூழ்கினான் அவன். அந்தக் குரலும் உடனே பணியும் அந்த பவ்யமும், பிறவியோடு வந்த அழகுகள் போல் அவளுக்குப் பொருந்தியிருந்ததாகத் தோன்றியது. கீழே இறங்கி வந்த பின்பும் அவளை அத்தனை சுலபமாக மறந்துவிட முடியவில்லை, அவனால். பத்திரிகைகளைப் பார்த்து விட்டுக் கீழே இறங்கியபோது பத்தர் முதல் நாள் பிட்டுத் தோப்புக் கூட்டம் பற்றி விசாரித்தார். அவன் எல்லாவற்றையும் அவருக்குச் சொன்னான். பக்கத்து வீட்டு மாடிப் பெண்ணைக் கூப்பிட்டு இரைந்தது பற்றியும் கூறினான்.

"அவளா, மதுரம்னு செல்லமாகக் கூப்பிடுவாங்க - மதுரவல்லீன்னு முழுப்பேரு. தனபாக்கியத்தோட மகள்" - என்று அவன் கேட்காமலே மேல் விவரங்களைச் சொல்லத் தொடங்கினார் பத்தர். அந்தப் பேச்சை மாற்ற விரும்பிய ராஜாராமன், "மேலூருக்குப் போறேன் பத்தரே! திரும்பி வர ஒரு வேளை சாயங்காலமாயிடும். முத்திருளப்பனாவது, குருசாமியாவது வந்தா சாவியைக் கொடுங்க. அதோடு வாசக சாலையையும் பார்த்துக்கங்க" என்று சாவியை நீட்டினான்.

"பார்த்துப் போயிட்டு வாங்க தம்பீ! எங்க பார்த்தாலும் சி.ஐ.டி. நடமாட்டம் இருக்கு. உங்க பேரு அவங்க லிஸ்டிலே இருக்காமே?" என்று அவனை எச்சரித்தார் பத்தர். வீட்டுக்கு வந்து, பல் விளக்கி முகம் கழுவிக் கொண்டு புறப்பட்ட அவனைப் பழையது சாப்பிட்டு விட்டுப் போகச் சொன்னாள் தாய். பழைய சோறும் தயிறும் நார்த்தங்காய் ஊறுகாயும் அமிர்தமாயிருந்தன. கொல்லைப் பக்கம் நாலு ஒண்டுக் குடித்தனத்துக்கும் பொதுவான கிணற்றடியில் பெண்கள் கூட்டமாயிருந்ததால் குளிப்பதை, போகிற இடத்தில் எங்காவது வைத்துக் கொள்ள வேண்டியதுதான் போலிருந்தது. பழைய சோற்றிலும் தயிரிலும் ஒரு சக்தி - மறுபடி சாயங்காலம் வரை பசி தாங்கும் போலிருந்தது. குத்தகைக்காரனைப் பார்த்துப் பேசிவிட்டுத் திருவாதவூர்க் காரியங்கள் முடிந்ததும், மேலூரில் கூட சில தொண்டர்களையும் ஊழியர்களையும் அவனால் சந்திக்க முடிந்தது. அந்தத் தொண்டர்களில் ஒருவர் வீட்டிலேயே பகலில் சாப்பிடச் சொன்னார்கள். ஊருக்கு மேற்கே அணை திறந்து முல்லை வாய்க்காலில் தண்ணீர் விட்டிருந்தார்கள். போய்க் குளித்து அங்கேயே வேஷ்டியை உலர்த்திக் கட்டிக் கொண்டு வந்தான் ராஜாராமன். பகல் உணவு முடிந்து நண்பர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, மேலூர்த் தொண்டர்களுக்கும் சில உற்சாகமான திட்டங்களைச் சொன்னான் அவன். அங்கிருந்த தேசத் தொண்டர்கள் அவனை விட வயதில் மூத்தவர்கள் என்றாலும் உலக நடப்பைத் தெரிந்து கொள்ளும் வசதி குறைவாயிருந்ததாலும், நடத்திச் செல்வதற்குத் தலைமை இல்லாததாலும், இரண்டொரு விவரம் தெரிந்தவர்களும் வேதாரணியத்தில் கைதாகி சிறைக்குப் போய்விட்டதாலும், யோசனைகளை ராஜாராமன் சொல்ல வேண்டியிருந்தது.

மேலூரிலிருந்து அவன் மதுரை திரும்பும்போது இருட்டிவிட்டது. வீட்டுக்குப் போய் அம்மாவிடம் தகவலைச் சொல்லிவிட்டு வாசகசாலைக்குப் போக நினைத்தான். அவன் வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மா அவனுக்கு அந்தத் தகவலைச் சொன்னாள்:

"நீ திரும்பி வந்தா, வாசகசாலைக்கு வரவேண்டாம்னு பத்தர் உங்கிட்டச் சொல்லச் சொன்னார். அஞ்சு மணிக்கு முத்திருளப்பனும், குருசாமியும் வந்தாங்களாம். போலீஸ் பிடிச்சிண்டு போயிடுத்தாம். நீ வர வேண்டாம்னு பத்தர் வந்து அவசர அவசரமாச் சொல்லிவிட்டுப் போனார்."

-அம்மாவின் முகத்தில் கவலை தேங்கியிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. தான் செய்து கொண்டிருக்கும் காரியங்கள் எதுவுமே பிடிக்காதது போன்ற மனத்தாங்கல் அந்த முகத்தில் தெரிவதையும் ராஜாராமன் கண்டான். நிதானமாக அவன் அவளைக் கேட்டான்.

"பத்தர் எப்ப வந்தார்?"

"இப்பதான், சித்த முன்னே வந்து சொல்லிட்டுப் போறார். நீ போக வேண்டாம்டா குழந்தை. நான் சொல்றதைக் கேளு... என்னை வயிறெரியப் பண்ணாதே! வயசு வந்தவன் இப்படி அலையறதே எனக்குப் பிடிக்கல்லே."

அவன் தாயின் குரல் அவனைக் கெஞ்சியது. ஏறக்குறைய அவள் அழத் தொடங்கிவிட்டாள். அக்கம்பக்கத்து ஒண்டுக் குடித்தனக்காரர்கள் கூடிவிடுவார்கள் போலிருந்தது.

"எதுக்கம்மா இப்பிடி அழுது ஒப்பாரி வைக்கிறே? ஊர் கூடி விசாரிக்கணுமா! இப்ப என்ன நடந்துடுத்து? போக வேண்டாம்னாப் போகலை..."

-அம்மாவின் அழுகை அடங்கியது. அவன் மனம் கவலையிலாழ்ந்தது. ஒன்றுமே செய்து முடிக்காமல் தான் கைதாகி விடக்கூடாது என்பதில் அவன் அதிக அக்கறையோடு இருந்தான். சிறிதோ பெரிதோ ஒவ்வொரு மழைத் துளிக்கும் பிரவாகத்தில் பங்கு உண்டு. இந்த மறியல்களை எல்லாம் அவனைவிடப் பெரியவர்கள் கடந்த காலத்தில் நிறைய நடத்தியிருந்தார்கள். இப்போது அவன் மீண்டும் நடத்த விரும்பியதற்குக் காரணமாக இருந்த உள் முனைப்பை விட்டுவிட அவன் தயாராயில்லை. உப்பு சத்தியாக்கிரகத்திற்குப் போய்க் கைதாக முடியாத வேதனையை அவனும், அவனைப் போன்றவர்களும் இப்படித் தணித்துக் கொள்ள விரும்பினார்கள். கைதாகிச் சிறைகளில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் தலைவர்களின் வேதனை தங்கள் இதயத்திலும் எதிரொலித்துத் தூண்டுக்கிறது என்பதைக் காட்டவே அவன் இதைச் செய்ய விரும்பினான். போலீஸ் வீட்டுக்கும் தேடி வருமோ என்ற முன்னெச்சரிக்கை அவன் மனத்தில் இருந்தது. எப்படித் தப்புவதென்ற முன்யோசனைகளும் அவன் உள்ளத்திலிருந்தன. வீட்டிலேயே இருந்து இன்னும் ஒரு நாளைக் கழித்துவிட விரும்பினான் அவன். இன்னும் ஒரு நாளைக் கழித்துவிட்டால், அப்புறம் அடுத்த நாள் தான் அந்தத் துணிக்கடை மறியலுக்குக் குறித்திருக்கும் தினம். ஒரு விநாடியாவது மறியலை நடத்தி விட்டோம் என்ற பெருமிதத்தோடு கைதாக வேண்டுமென்றிருந்தான் அவன்.

இரவு எட்டு மணிக்குச் சாப்பிட உட்காருமுன் கைகால் கழுவிவர அவன் பின்பக்கம் கிணற்றடிக்குப் போனபோது அங்கே கோடைக்காகக் கட்டிலை எடுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த பக்கத்துப் போர்ஷன் வக்கீல் குமாஸ்தா திருவேங்கடம் அவனை வம்புப் பேச்சுக்கு இழுத்தார்.

"என்னப்பா ராஜாராமன், இந்த உப்பு சத்தியாக்கிரகம், அந்நியத் துணிமறியல், கள்ளுக்கடை எதிர்ப்பு இதனாலெல்லாம் என்ன பிரயோஜனம் வந்துடப் போறதுன்னு உங்க காந்தி இதையெல்லாம் கட்டிண்டு அழறார்? சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை இதனாலெல்லாம் அசைச்சுப்பிட முடியும்னா நினைக்கிறே? எல்லாம் சின்னக் குழந்தைகள் விளையாடற மாதிரீன்னா இருக்கு..."

"சின்னக் குழந்தைகள் விளையாடித்தான் பெரியவாளாகணும். ரொம்ப நாளா உமக்கு ஜஸ்டிஸ் கட்சி வக்கீல் கிட்டக் குமாஸ்தாவா இருந்து இருந்து, அந்தப் புத்தியே வந்திருக்கு ஓய்! இந்த தேசத்தில் இன்னிக்கு முக்கால்வாசி ஜனங்களுக்கு சுதேசி உணர்ச்சின்னா என்னன்னே தெரியலே. அது ஏதோ தப்பான காரியம், அல்லது ராஜத்துவேஷமான காரியம்னு பொய்யான பிரமை பிடிச்சு ஆட்டிக்கிண்டிருக்கு. அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் போக்க முடியும். அதைப் போக்கறதுக்குக் காந்தி செய்யற எல்லாமே சரியான காரியம் தான். சுதேசி உணர்ச்சிங்கறது என்னன்னு பால பாடமே சொல்லிக் கொடுக்கறாப்பிலே, உம்மைப் போலக் கோடிக்கணக்கான ஜனங்கள் இங்கே இருக்கு ஓய்! பிரிட்டீஷ்காரன் யாரோ நீர் யாரோ; ஆனா அவனை உம்ம தாத்தா மாதிரி நினைச்சுப் பேசறீர் நீர். இந்தப் பிரமையை எப்படியாவது முதல்லே போக்கியாகணும்..."

"என்னமோ போ! உங்கம்மா ரொம்ப மனக் கஷ்டப்படறா. நீ படிப்பைக் கெடுத்திண்டு வீணுக்கு அலையறே?"

"ஓய், எங்கம்மாதான் படிக்காதவ! ஒரு பாசத்திலே அப்பிடி நெனைக்கறா - நீரெல்லாம் படிச்சவர்; நீரே இங்கே அப்படி நெனைக்கறபோது என்ன செய்யறது?..."

வக்கீல் குமாஸ்தா மேலே ஒன்றும் பேச முடியவில்லை. ஈரக்கையை மேல் துண்டினால் துடைத்துக் கொண்டே உள்ளே போனான் ராஜாராமன். சாப்பாட்டில் மனம் செல்லவில்லை. சாப்பிட்டோம் என்று பேர் செய்யத்தான் முடிந்தது. வெள்ளைக்காரன் சிறைக்குள் கொண்டு வைப்பதற்கு முன் அதற்குத் தயங்கித் தானே சிறையில் வைத்துக் கொண்டதைப் போல் வீட்டில் ஒடுங்கிக் கிடப்பது அவனுக்குப் பொறுக்க முடியாததாயிருந்தது. பொறுத்துக் கொண்டும் ஆக வேண்டியிருந்தது. அந்த வீட்டில் அவனுக்குப் பிடித்ததைப் பேசவும் மனிதர்கள் இல்லை; பிடிக்காததை எதிர்த்துப் பேசினால், அதைக் கேட்கவும் மனிதர்கள் இல்லை. சொந்த ஊரில், சொந்த நாட்டில், குடியிருக்கும் வீட்டிலேயே அந்நிய நாட்டில் இருப்பது போல் இருக்க வேண்டியிருந்தது.

குருசாமியும், முத்திருளப்பனும் கைதாகிய செய்தி அவனைப் பலவிதமான யோசனைகளில் மூழ்கச் செய்திருந்தது. குருசாமியாவது தனிக்கட்டை; தையற்கடையை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்பது தவிர வேறு கவலையில்லை. முத்திருளப்பன் குடும்பஸ்தர். ஜெயிலுக்குப் போனதால் வேலையும் போய்விடும். அவருடைய குடும்பத்துக்கு இது பெரிய சோதனையாயிருக்குமென்பதை இப்போதே ராஜாராமனால் உணர முடிந்தது. ஏற்கெனவே பிட்டுத் தோப்பில் சீட்டுக் குலுக்கிப் போட்டு முடிவு செய்த மாதிரிக் குருசாமி செல்லூரில் கள்ளுக்கடை மறியல் செய்வதும் நடைபெற முடியாது. முத்திருளப்பன் வெளியே இருந்து வாசக சாலையைக் கவனிப்பது என்பதும் நடக்காது. ஒருவேளை வாசக சாலையைப் பத்தர் கவனித்துக் கொள்ளலாம். போலீஸ் தொந்தரவு, சி.ஐ.டி. நடமாட்டம் அதிகமாகித் தொழிலுக்குத் தொந்தரவு வருமானால், பத்தரும் அதைச் செய்ய மாட்டார். வக்கீல் குமாஸ்தா திருவேங்கடத்தை போல் வெள்ளைக்கார தாசர் இல்லை என்பது தான் பத்தரிடம் விரும்பத்தக்க அம்சமே தவிரப் போராட்டத்தில் இறங்கும் துணிவெல்லாம் அவரிடம் கிடையாது. உபகாரி, காந்தியிடம் நம்பிக்கை என்ற அளவில் முழுமையான பக்தி உள்ளவர் என்பது வரை, பத்தர் சந்தேகத்துக்கிடமில்லாதவர். வாசக சாலையை அவர் நடத்துவாரா இல்லையா என்பது பற்றியும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்தான் ராஜாராமன்.

'பிள்ளை, எங்கே நடு ராத்திரியில் எழுந்திருந்து வாசக சாலைக்குப் போய்விடுவானோ' என்ற பயத்தில் அம்மாவும் தூங்காமல் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவளுடைய பயமும் அக்கறையும் ராஜாராமனுக்குப் புரிந்தன.

மறுநாளும் அவன் வெளியே போகவில்லை. காலை பதினொரு மணிக்கு ஒரு சி.ஐ.டி. வீட்டுக்குத் தேடி வந்தான். நல்லவேளையாக, ராஜாராமனின் அம்மாவே அப்போது வாசல் திண்ணையில் இருந்ததால், "அவன் மேலூர்லேருந்து இன்னும் வரலியே!" என்று பதில் சொல்லி அனுப்பிவிட்டாள். வந்த ஆள் சி.ஐ.டி.யா இல்லையா என்பது பற்றி ராஜாராமனின் தாய்க்குத் தெரியாது. சி.ஐ.டி.யாக இல்லாவிட்டாலும் அவள் அதே பதிலைத்தான் சொல்லியிருப்பாள். பிள்ளையாண்டான் வெளியே போய் கைதாகக் கூடாதென்பதில் அவளுக்கு அவ்வளவு அக்கறை.

அத்தியாயம் - 4

அடுத்த நாள் காலை விடிவதற்கு முன்பே எழுந்து நீராடித் தயாராகிவிட்டான் ராஜாராமன். காரியத்தைச் செய்துவிட்டே கைதாக விரும்பியதால் வீட்டிலிருந்தே அகப்பட்டுக் கொள்ளாதபடி முன்னெச்சரிக்கை அவசியமாகியது. நண்பர்கள் எல்லோரும் அம்மன் சந்நிதி முகப்பில் தேங்காய் மண்டபத்தில் காலை 9 மணிக்குச் சந்திக்க வேண்டுமென்று பிட்டுத் தோப்புக் கூட்டத்திலேயே சொல்லப்பட்டிருந்தது. வீட்டிலிருந்து முதலில் மேலக் கோபுர வாசல் வழியே கோவிலுக்குள் புகுந்து கொண்டால் அப்புறம் கோவிலிலிருந்தே அம்மன் சந்நிதிக்குப் போவது சுலபம். அவன் புறப்படுகிற காரியத்துக்கு ஆசி வழங்க அவனுடைய அன்னை விரும்ப மாட்டாள். மதுரைக்கே அன்னையாகிய மீனாட்சியிடம் ஆசி வாங்கிக் கொண்டு போக விரும்பினான் அவன். பலபலவென்று கிழக்கே வெளுக்கு முன்பே புறப்பட்டு விட்டான். அவனுடைய தாய் குறுக்கே நின்றாள்.

"எங்க கிளம்பியாச்சு?"

"கோவிலுக்குப் போறேன்..."

"ஜாக்கிரதையாப் போயிட்டு வா..."

அவனைப் பொறுத்தவரையில் அவன் சொல்லியது பொய்யில்லை. தேசமும் கோவிலும் அவனுக்கு ஒன்று தான்; இரண்டையும் அவன் வ்ழிபடுகிறான். இரண்டையுமே அவன் போற்றித் தொழுகிறான்.

பொற்றாமரையில் கை கால் சுத்தம் செய்து கொண்டு அம்மன் சந்நிதி முகப்பில் அவன் பிரவேசித்த போது, உள்ளே இருந்து எதிரே வந்து கொண்டிருந்தவளைப் பார்த்து ஒரு கணம் தயங்கி நின்றான், அவன். அவள் இதழ்களில் நகை ஓடி ஒளிந்தது. கோயிலுக்குப் போகிற போதும் அந்த ஒண்ணாம் நம்பர்ச் சந்து ஜன்மத்தின் முகத்தில் விழிக்க நேர்ந்ததே என்று மனம் அருவருப்படைய மேலே நடந்தான் அவன். அவளருகே வந்து கொண்டிருந்தவள் அவளுடைய தாயாயிருக்க வேண்டும். தாயின் காதருகே மெதுவாக அவள் ஏதோ சொல்வதையும் அவன் கவனிக்க முடிந்தது. மதுரம் என்று பத்தர் அவளுடைய பெயரைச் சொல்லியிருந்தது நினைவு வந்தது. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே நடந்தான் அவன். ஒரு முறை யதேச்சையாக, அவன் பின்னால் திரும்பிப் பார்த்த போது, அவளும் அவனைத் திரும்பிப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். அந்தப் பார்வையை அவனால் மறக்க முடியவில்லை. அப்படிப் பார்த்ததற்காக அவள் மேல் கோபமும் வந்தது.

அம்மன் சந்நிதியிலிருந்து சாமி சந்நிதிக்குப் போகும் போதும் அவளை அவன் அங்கே காண முடிந்தது. ஏதோ அபிஷேக கலசங்கள் அலங்கரிக்கப்பட்டுக் குருக்கள் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவளும் அவள் தாயும் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தனர். அவள் அந்தக் கலசாபிஷேகதுக்குப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டிருக்கிறாள் போலும். கைநிறைய மோதிரங்களும், மார்பில் மெல்லிய தங்கச் சங்கிலியும் டாலடிக்க ஒரு பிரமுகரும் இன்னொரு பக்கம் உட்கார்ந்திருந்தார். தரிசனமும் முடிந்த பின்னும் நிறைய நேரமிருந்தது. மீண்டும் அம்மன் சந்நிதி வந்து, கிளி மண்டபத்தருகே குளக்கரையில் சப்பணம் கூட்டி உட்கார்ந்தான் அவன்.

காலையில் அவன் எதுவும் சாப்பிட்டுவிட்டு வரவில்லை; பசித்தது. கோவிலுக்குப் போய்விட்டு வருவதாகக் கூறியிருந்ததால் அவன் தாயும் அவனைச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தவில்லை. "நல்ல காரியங்களைப் பசியோடு செய்தால் தான் சிரத்தையைக் காண்பிக்கலாம் - என்று விரதங்களையும் நோன்புகளையும் பசித்த வயிற்றோடு செய்யச் சொல்லி பாரத நாட்டு முன்னோர்கள் வழக்கப்படுத்தியிருக்கிறார்கள். இந்தத் தலைமுறையில் மிகப் பெரிய விரதம் சுதேசி இயக்கம் தான்!" என்று என்ணிய போது பசியைக் கூட மறக்க முடிந்தது, அவனால்.

நேரம் மெதுவாக நகர்வது போலிருந்தது. மண்டபத்தில் கூண்டில் அடைப்பட்டிருந்த கிளிகளின் மிழற்றும் குரல்களைக் கொஞ்ச நாழிகை அவன் இரசித்துக் கொண்டிருந்தான். சுமார் எட்டே முக்கால் மணிக்கு அவன் அங்கிருந்து கிழக்கே அம்மன் சந்நிதி முகப்புக்கு நடந்தான். எதிர்ச்சரகில் ஜவுளிக் கடைகளை ஒவ்வொன்றாகத் திறந்து கொண்டிருப்பது தெரிந்தது. நண்பர்கள் பன்னிரண்டு பேர் மறியலுக்கு வருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் வந்தது மூன்று பேர்கள். மற்றவர்கள் பயந்து தயங்கியோ, அல்லது முத்திருளப்பன், குருசாமி கைதானது தெரிந்தோ மறியலுக்கு வராமல் பின் தங்கிவிட்டார்கள். அவனையும் மற்ற மூவரையும் தேங்காய், பழக்கடைக்காரர்கள் முறைத்து முறைத்துப் பார்த்தனர். அதிக நேரம் தாமதித்தால், இந்த மூன்று பேரும் கூடப் போய்விடுவார்களோ என்று சந்தேகமாயிருந்தது. யாருக்காகவும் காத்திராமல் மறியலை உடனே தொடங்குவது நல்லதென்று நினைத்தான் அவன்.

"வந்தே மாதரம்! மகாத்மா காந்திக்கு ஜே!" - என்ற குரல்கள் அந்த நான்கு பேருடைய கண்டத்திலிருந்தும் ஒரே சமயத்தில் ஒலித்தன. ஜவுளிக்கடை வாசலில் போய்க் கைகோத்து நின்று, சுலோகங்கள் முழக்கினார்கள் அவர்கள். கடைக்காரர் வந்து சத்தம் போட்டார்.

"உங்களோட எங்களுக்கு எதுவும் பேச்சில்லை. அந்நிய நாட்டு ஜவுளி வாங்க வருகிற ஜனங்களிடம் நாங்க சொல்ல வேண்டியதையும், தெரிவிக்க வேண்டியதையும் தான் இப்படித் தெரிவிக்கிறோம்" - என்றான் ராஜாராமன். சுற்றிலும் கூட்டம் கூடிவிட்டது. கடைக்குத் துணி வாங்க வந்த இரண்டொருவர் திரும்பிப் போய் விட்டனர். கடைக்காரருக்குக் கோபம் வந்துவிட்டது. கீழ்வாசல் போலீசுக்குத் தகவல் சொல்லி அனுப்புவதாக மிரட்டினார். ராஜாராமன் கடைவாசல் படியில் குறுக்கே படுத்தான். போலீசுக்குத் தகவல் சொல்லப் புறப்பட்ட ஆள் அவன் தோள்பட்டையில் மிதித்துக் கொண்டுதான் போக முடியுமென்ற நிலை ஏற்பட்டது. அந்த ஆள் அதைச் செய்யத் தயங்கினான்."

"போய்த் தொலையேண்டா; நாய்ப் பயலே!" - என்று கடைக்காரர் அவனைத் துச்சமாக ஒரு வார்த்தை சொல்லித் திட்டினார். அவன் ராஜாராமனின் தோளைத் தாண்ட முயன்று, முடியாமல் நெஞ்சில் மிதித்துக் கொண்டு படி இறங்கித் தன்னை மறந்த நிலையில் ஒருவரைத் தெரியாமல் மிதித்துவிட்ட சமயத்தில் செய்வது போல் கண்களில் கையை ஒற்றிக் கொண்டு விடவே, அதைக் கண்டு மேலும் கோபம் கொண்ட கடைக்காரர், "பெரிய சாமியை மிதிச்சிட்டாப்பல கண்ணிலே ஒத்திக்கிறான். போடான்னா நிக்கிறியே?" என்று கூச்சல் போட்டார். 'வந்தே மாதரம், மகாத்மா காந்திக்கு ஜே!' - என்ற கோஷங்கள் மறியல்காரர்களிடமிருந்து இடைவிடாமல் முழங்கிக் கொண்டே இருந்தன. கடைக்குள் ஒரு ஜனம் கூட நுழையவில்லை. மறியல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது. பத்தே முக்கால் மணிக்குப் போலீஸ்காரர்களும் ஒரு சப் இன்ஸ்பெக்டரும் வந்தார்கள். அதற்குள்ளேயே தண்ணீரில் சாணியைக் கரைத்துக் கொட்டிவிடப் போவதாகக் கடைக்காரர் பயமுறுத்திக் கொண்டிருந்தார்.

போலீஸ்காரர்களும் சப் இன்ஸ்பெக்டரும் வந்த பின்பும் ராஜாராமன் மறியலை விடவில்லை. கடைக்காரர் குறுக்கே குய்யோ முறையோவென்று சப் இன்ஸ்பெக்டரிடம் முறையிட்டார். மறியல்காரர்கள் கடையையே கொளுத்த வந்ததாகப் புளுகினார் அவர். ராஜாராமனுடைய தோள்பட்டையில் லத்திக் கம்பால் ஓங்கி அடி விழுந்தது. இரண்டு போலீஸ்காரர்கள் அவனைத் தூக்கி நிறுத்தினார்கள். நண்பர்களுக்குச் சரியான அடி விழுந்திருந்தது. கோஷமிடுவதை அவர்கள் இன்னும் நிறுத்தவில்லை.

போலீஸ்காரர்கள் அவனையும் நண்பர்களையும் இழுத்துப் போகும் போது, அம்மன் சந்நிதி வாசலில் ஒரு ஜட்காவில் அவள் ஏறிக் கொண்டிருந்தாள். அவளோடு அவள் தாயும் அந்தத் தங்கச் சங்கிலிப் பிரமுகரும் உடனிருப்பது தெரிந்தது. அவள் கண்கள் கலக்கத்தோடு தன்னைப் பார்ப்பதை அவனும் கவனித்தான். அபிஷேகம் முடிந்து இப்போதுதான் அவர்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதாக அவனுக்குத் தோன்றியது. அதற்குள் ஒரு போலீஸ்காரன் பிடரியில் கையைக் கொடுத்து அவனை முன்னுக்குத் தள்ளினான். 'இவள் சூடிக்கழிக்கும் வாடிய பூக்கள் வாசகசாலை முற்றத்தில் வந்து விழ இனிமேல் ஒரு தடையுமிருக்காது...' என்று எண்ணியபடியே பசித் தளர்ச்சியும் அடி வாங்கிய வலியுமாகத் தள்ளாடித் தள்ளாடி மேலே நடந்தான் அவன்.

சாயங்காலம் வரை அவனையும் நண்பர்களையும் கீழவாசல் லாக் அப்பில் வைத்திருந்தார்கள். ரிமாண்டு - விசாரணைக்குப் பின்பு அவன் மட்டும் வேலூருக்குக் கொண்டு போகப்பட்டான். நண்பர்களை என்ன செய்யப் போகிறார்கள்; எங்கே கொண்டு போகப் போகிறார்கள் என்பதை அவனால் அறிய முடியவில்லை. மதுரை ரயில்வே பிளாட்பாரத்தில், மேற்கே சூரியன் மறையும் காட்சியைப் பார்த்துக் கொண்டே விலங்கிட்ட கைகளுடன் அவன் ரயிலேற்றப்பட்டபோது ரத்தினவேல் பத்தர் கண்களில் தென்பட்டார். செய்தியைக் கேள்விப்பட்டு அவனைப் பார்க்கத்தான் அவர் வந்திருக்க வேண்டும். ஆனால் அவரோடு அவன் எதுவும் பேச முடியவில்லை. ஜாடை காட்ட முயன்றும், அதைச் செய்ய முடியாமல் கூட்டம் அவருக்கு அவனையும், அவனுக்கு அவரையும் மறைத்துவிட்டது. பரஸ்பரம் பார்த்துக் கொள்ள மட்டும் முடிந்தது. மனத்தில் என்னென்னவோ அலை மோதிற்று.

ரயில் வைகைப் பாலம் தாண்டியபோது ஊரும், கோபுரங்களும் மாலை இருளில் மங்கலாகத் தெரிந்தன. திண்டுக்கல்லில் ஏதோ சாப்பிட வாங்கிக் கொடுத்தார்கள். வலது கையை மட்டும் கழற்றிவிட்டு, இடது கையைத் தன் கையோடு பிணைத்து விலங்கைப் பூட்டிக் கொண்டுதான் ராஜாராமனை சாப்பிட அனுமதித்தான் போலீஸ்காரன். அன்று முழுவதும் வீட்டில் அம்மா சாப்பிட்டிருக்க மாட்டாள் என்று ஞாபகம் வந்தது. அவளுக்கு எப்படியும் இரவுக்குள் பத்தர் போய்ச் சொல்லிவிடுவார். அவள் என்னென்ன உணர்ச்சிகளை அடைவாள் என்பதை அவனால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. தோள்பட்டையில் அடி விழுந்த இடத்தில் வலித்தது. உருட்டிய கவளத்தை வாய் வரை உயர்த்திப் போட்டுக் கொள்ளக் கூட முடியாமல் வலித்தது. அடிபட்ட இடத்தில் பெரிய நெல்லிக்காயளவு வீங்கி இருந்தது.

ராஜாராமன் மறுநாள் வேலூர் சிறையில் சி வகுப்புக் கைதியாக நுழைந்தான். அரசியல் கைதிகளுக்கு பி வகுப்புத் தருவார்கள் என்று எங்கோ யாரோ சொல்லியிருந்தார்கள். மதுரை போலீஸ் என்ன சார்ஜ் எழுதி அனுப்பியிருந்ததோ, அவனை சி வகுப்பில் தள்ளினார்கள். 'பி'யிலும் 'சி'யிலும் இருந்த பல தேசத் தொண்டர்களைப் பார்த்தபோது அவனுக்குத் தன் இனத்துக்கு நடுவே வந்து சேர்ந்து விட்டோம் என்று பெருமையாயிருந்தது. மனநிம்மதி ஏற்பட்டது.

அங்கிருந்த அனைவருமே தாய், தந்தை, குடும்பம், மனைவி மக்கள், பந்தபாசம் எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் தேசத்தை விடுவிப்பதற்காக இப்படி வந்து வாடுகிறார்கள் என்பதை நினைத்தபோது ஒரு பெரிய தாயின் வேதனைக்காகத் தன் தாயைப் போல் எங்கெங்கோ பல சிறிய தாய்மார்கள் வேதனைப்படலாமென்று எண்ணி ஆறுதலடைய முடிந்தது. முத்திருளப்பனையும், குருசாமியையும் எங்கே கொண்டு போயிருப்பார்களென்று அவனால் அனுமானிக்க முடியவில்லை. ஒரு வேளை கடலூருக்குக் கொண்டு போயிருக்கலாம். அல்லது திருச்சிக்குக் கொண்டு போயிருக்கலாம்; நாகபுரிக்கோ, பெல்லாரிக்கோ, கொண்டு போயிருக்க அவ்வளவு தீவிரமான காரணம் இல்லையென்றே தோன்றியது. அவர்களை விடப் பெரிய காரணங்களுக்காகக் கைதானவர்கள் எல்லாம் கூட வேலூர் ஜெயிலில் தான் இருந்தார்கள். ஜெயிலில் கொடுத்த கேழ்வரகுக் களி முதல் தடவை அவனுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. அமிர்தத்தையே உண்ணும் தகுதிள்ள பெரிய பெரிய தலைவர்களும் அங்கே இதைத்தான் சாப்பிடுகிறார்கள் என்று எண்ணியபோது, ருசிகளைக் கட்டுப்படுத்த முயன்றான் அவன். கூட இருந்தவர்களில் ஒருவர் வேதாரணியம் உப்புச் சத்தியாக்கிரகத்தில் கைதானவர். அவரிடம் வேதாரணியம் நிகழ்ச்சிகளை விவரித்துச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிற அனுபவமாக இருந்தது. நடுத்தர வயதினரான அவர் ஒரு கீதைப் புத்தகம் வைத்திருந்தார். மாலைவேளையில் சிறிது நேரம் அவரைக் கீதைக்குப் பொருள் சொல்லச் செய்து கேட்டான் ராஜாராமன். அது மனதுக்கு ஆறுதலளிப்பதாயிருந்தது.

"பாரதத்தின் மகத்தான அனுபவ கிரந்தமே போரில் தான் பிறந்திருக்கிறது" என்று அவர் கீதையைப் பற்றிச் சொன்னதை அவன் இரசித்தான்.

"இப்போது நாம் நடத்திக் கொண்டிருப்பது கூட ஒரு தர்ம யுத்தம் தான். இதில் நம்முடைய கீதை காந்தியாயிருக்கிறார். நமது தயக்கம் பந்தபாசம் எல்லாவற்றையும் விட்டு விட்டு நாம் இந்தப் போரில் குதிக்கத் துணிந்ததற்கு அந்த மகான் தான் காரணம். பாரிஸ்டருக்குப் படித்துவிட்டுத் தொழில் செய்து ஆயிரக்கணக்கில் சம்பாதிக்காமல், இந்த தேசத்துக்காக ஒரு நாட்டுப்புற விவசாயியைப் போல் ஒற்றை ஆடையை முழங்காலுக்கு மேலுடுத்துப் புறப்பட்டிருக்கிறார் பாருங்கள்" - என்று கண்களில் நீர் நெகிழ வர்ணித்தார் அந்த நண்பர்.

'சி' கிளாஸ் அரசியல் கைதிகள் பத்துப் பேருக்கு மேல் அந்த நீண்ட கூடம் போன்ற அறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். கீதைப் புத்தகம் வைத்திருந்த நண்பர் பிரகதீஸ்வரன் புதுக்கோட்டைக்காரர். கல்கத்தா காங்கிரஸுக்கு நேரில் போய்க் கலந்து கொண்டவர் அவர். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தெட்டில் நடந்த கல்கத்தா காங்கிரசைப் பற்றி அவர் கூறிய வர்ணனைகளைக் கேட்டுக் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தான் ராஜாராமன். கல்கத்தா காங்கிரஸின் சேவாதளத் தொண்டர்களுக்குத் தலைவர் என்ற முறையில் சுபாஷ் சந்திரபோஸ் ராணுவ உடை தரித்த கோலத்தில் காட்சியளித்த கம்பீரத்தைப் பற்றி பிருகதீஸ்வரன் வர்ணித்த போது, அதைக் கேட்டுக் கொண்டிருந்த ராஜாராமனுக்கு உடம்பு புல்லரித்தது. வீரமும், இளமையும் பொங்கித் ததும்பும் சுபாஷ் போஸின் சுந்தர முகத்தை அகக்கண்ணில் நினைத்துப் பார்த்து மெய்சிலிர்த்தான் அவன். ரோமன் ரோலந்து கல்கத்தா காங்கிரஸுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்ததைப் பற்றியும், 'பரிபூர்ண விடுதலையே பாரத நாட்டின் குறிக்கோள்' என்று அந்தக் காங்கிரஸில் ஜவஹர்லால் நேருவும், சுபாஷ் போஸும் திருத்தப் பிரேரணைகள் கொண்டு வந்ததைப் பற்றியும் - எல்லாம் பிருகதீஸ்வரன் விவரித்துச் சொன்னார்.

கதை கேட்பது போல் எல்லாரும் பிருகதீஸ்வரனைச் சுற்றி அமர்ந்து, அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். லாகூர் காங்கிரஸைப் பற்றியும் சொல்லுமாறு அவரைக் கேட்டான் ராஜாராமன்.

"ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தொன்பதிலே லாகூர் காங்கிரஸுக்கு நான் போக முடியலே. அந்தச் சமயம் தான் என் மனைவி இரண்டாவது பிரசவத்துக்குப் பின் ரொம்ப உடம்பு சவுகரியமில்லாமே, பிழைப்பாளோ மாட்டாளோ என்றிருந்தது. போக முடியாமப் போச்சு" என்று வருத்தப்பட்டுக் கொண்டார் பிருகதீஸ்வரன். குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படுவது போலவே தேசத்தைப் பற்றிக் கவலைப்படும் இந்தப் பவித்திரமான மன நிலையை ஒவ்வொரு இந்தியனும் அடையச் செய்த திலகரும், காந்தியும் எவ்வளவு பெரிய சத்திய சக்தியுள்ளவர்களாயிருக்க வேண்டும் என்று நினைத்து நினைத்து வியந்தான் ராஜாராமன். மனைவி உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்தும் லாகூர் காங்கிரஸுக்குப் போக முடியவில்லையே என்று பிருகதீஸ்வரன் வருந்தியிருப்பதை எண்ணிய போது தேசபக்தி என்கிற மாயசக்தி என்னென்ன காரியங்களைச் சாதிக்கிறதென்று புரிந்து கொள்ள முடிந்தது. வேதகாலத்து இந்தியாவுக்குப் பின் திலகரும் மகாத்மாவும் தேசபக்தி என்னும் ஒரு புதிய தவத்தையே வழக்கத்துக்குக் கொண்டு வந்திருப்பதாகத் தோன்றியது. தனி மனிதனுக்கு முக்தியும் சித்திகளும் அளிப்பதே பழைய தவத்துக்கு இலட்சியங்கள். இந்தப் புதிய தவத்துக்கோ எல்லா இலட்சிய நோக்கமும் தேசமளாவிய பயன்களைத் தருவதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புதிய தவத்தைச் செய்யும் யோகிகளில் இளையவனாக அவர்கள் கூட்டத்தில் தானும் இருக்கிறோம் என்பதை எண்ணி யெண்ணிப் பூரித்தான் ராஜாராமன். சத்தியாக்கிரகம் என்ற பதத் தொடரின் அர்த்தத்தைப் பிரகதீஸ்வரன் விளக்கியபோது அவன் பிரமிப்பு அடைந்தான். 'இயக்கம்' என்ற சாதாரண வார்த்தையை விடப் பொருளாழம் உள்ளதாயிருந்தது அது.

சிறையில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவு மிகமிக மோசமாயிருந்தது. ஒரு நாள் பிரகதீஸ்வரனுக்கு அளிக்கப்பட்ட கேழ்வரகுக் களியிலிருந்து ஒரு கரப்பான் பூச்சியை எடுத்துக் காட்டிவிட்டு அந்தக் களியை உண்ணாமல் மூலையில் ஒதுக்கி வைத்தார் அவர். வேறு சத்தியாக்கிரகிகளில் சிலர் வயிற்றுப் போக்காலும் சிலர் வாந்தியாலும் வேதனைப்பட்டார்கள். எல்லாவித வகுப்புக் கைதிகளும் சேர்ந்து தங்கள் உணவுக்கான சாமான்களைக் கொடுத்துவிட்டால் தாங்களே உணவு தயாரித்துப் பரிமாறிக் கொள்வதாக விடுத்த வேண்டுகோளைச் சிறை நிர்வாகம் ஏற்றது. பிருகதீஸ்வரனுக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும். சமையல் பொறுப்பை அவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். அவருக்கான உதவிகளைச் செய்வதில் ராஜாராமன் முன் நின்றான். வித்தியாசம் பாராமல் பெரிய பெரிய தலைவர்கள் எல்லாரும் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டதைக் கண்டு அவனும் பிருகதீஸ்வரனும் மிகவும் திருப்தியடைந்தார்கள். சில சத்தியாக்கிரகிகள் உணவுப் பந்தியில் பிரார்த்தனைக் கீதங்களைப் பாடினார்கள். வேறு சிலர் பாரதியாருடைய 'இதந்தரு மனையின் நீங்கி' - என்று தொடங்கும் சுதந்திரதேவி துதியை இனிய எடுப்பான குரலில் பாடினார்கள். நியாயமான காரணத்துக்காகப் போராடிச் சிறை புகுந்திருக்கிறோம் என்ற சத்திய ஆவேசம் அங்கு எல்லாருக்கும் இருப்பதைப் பார்த்தபோது அவனுக்கு அது தனிப் பெருமிதத்தை அளித்தது. சிறைச்சாலை தவச் சாலையைப் போலிருந்தது.

பேட்டை முத்துரங்க முதலியாரின் நாலாயிர திவ்யப் பிரபந்த ஆராய்ச்சியும், பிருகதீஸ்வரனின் கீதை வகுப்பும், ராஜாராமன் தானே விரும்பி நடத்திய பாரதி பாடல் வகுப்பும் மாலை வேளைகளில் சத்தியாக்கிரகிகளை உற்சாகப் படுத்தின. 'வந்தே மாதரம் என்போம் - எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்' - என்று பாடிய ஒவ்வொரு முறையும் சீவசக்தி ததும்பும் தாரக மந்திரம் ஒன்றை ஓதி முடித்த மகிழ்ச்சி அவர்களுக்குக் கிடைத்தது. ராஜாராமன் வேலூர் சிறைக்கு வந்த ஒரு வாரத்தில், அவன் தாய் சொல்லி ரத்தனவேல் பத்தர் கைப்பட எழுதப்பட்ட கடிதம் ஒன்று அவனுக்குக் கிடைத்தது. அந்தக் கடிதத்திலிருந்து தன்னுடைய தாய் மிகவும் அதிர்ந்து போயிருக்கிறாள் என்பதை அவன் உணர முடிந்தது. அதற்கப்புறமும் மாதம் ஒன்றோ இரண்டோ - அவன் தாய் சொல்லிப் பத்தர் கேட்டு எழுதிய கடிதங்கள் அவனுக்குத் தவறாமல் கிடைத்துக் கொண்டிருந்தன. ஐந்தாறு மாதங்கள் விளையாட்டுப் போல் வேகமாக ஓடிவிட்டன. சிறைவாசம் நன்றாகப் பழகிவிட்டது. முரட்டுத் தரையில் கித்தான் விரிப்பில் தூக்கம் கூட வந்தது. அதுவே ஓர் ஆசிரம வாழ்க்கை போலாகியிருந்தது. மதுரையிலிருந்து அந்த மாதம் கடிதம் வரவேண்டிய வழக்கமான தேதிக்குக் கடிதம் வராமல், இரண்டு நாள் கழித்துப் பத்தரே நேரில் சந்தித்து அவனைப் பரோலில் அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளுடன் வந்திருப்பதாகத் தெரிவித்தார் அவர். அவன் அதற்கான காரணத்தைக் கேட்டபோது,

"உங்கம்மா நெலைமை ரொம்ப மோசமாயிருக்கு. இன்னும் ரெண்டு மூணு நாள் தாங்கறது கூடக் கஷ்டம்" என்று கவலை தோய்ந்த குரலில் பதில் கூறினார் பத்தர். ராஜாராமன் 'பரோலில்' மதுரை போக விரும்பவில்லை. சில தினங்களுக்கு முன்பு பேட்டை முத்துராமலிங்க முதலியாரின் தாயார் காலமான செய்தி வேலூர் சிறைக்கு வந்தபோது 'பரோலில் ஊர் போய் வருமாறு' - அவரை எல்லா சத்தியாக்கிரகிகளும் வற்புறுத்தியபோதும், அவர் போக மறுத்திருந்தார். தாய்த் திருநாட்டின் விடுதலைக்காகக் கிடைத்திருந்த துன்பத்தைப் பந்த பாசக் கவலையில் சில நாட்கள் கூட இழக்க விரும்பாத அந்த நெஞ்சுரம், அவனிடம் இருந்தது. 'பரோலில்', அழைத்துப் போவதற்கான எல்லா ஏற்பாடுகளுடனும் வந்திருந்த பத்தரோடு போக மறுத்துவிட்டான், அவன். அவர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் கேட்கவில்லை.

"அந்தப் பெண் மதுரத்துக்கு ஏதாச்சும் சொல்லணுமா?" என்று பத்தர் கேட்டபோது முதலில் அவனுக்கு அவர் யாரைப் பற்றிச் சொல்லுகிறார் என்றே நினைவு வரவில்லை. புரியவுமில்லை. சிறிது நேரம் கழித்துப் புரிந்ததும் கோபம் தான் வந்தது.

"நீங்க என்ன பத்தரே; எந்தெந்த ஒண்ணா நம்பர்ச் சந்துப் பிறவிகளுக்கெல்லாமோ தகவல் கேட்கிறீங்க...? அதுக்கும் எனக்கும் என்ன இருக்கு? நான் எதுக்குச் சொல்லணும், என்ன சொல்லணும்?" என்று கடுமையாகக் கேட்டதும், பத்தர் பேசாமல் போய்விட்டார். ஆனால் அவர் போய் வெகு நேரமான பின்பும் பழக்கமில்லாத ஒருத்திக்கு ஏதாவது தகவல் உண்டா? - என்று தன்னை எதற்காக அவர் கேட்டார் என்பது புரியாமல் அவன் மனம் யோசித்துக் கொண்டே இருந்தது; பத்தர் என்ன நினைத்துக் கொண்டு அப்படிக் கேட்டார். என்ன எதிர்பார்த்துக் கேட்டார் என்று அநுமானிக்கக் கூட அவனால் முடியவில்லை.

சூரிய ஒளியில் மூக்குத்தி மின்னும், நகை ஓடி ஒளிகிற இதழ்களுடன் கூடிய அந்த வசீகரமான முகமும், கண்களும், வீணையின் குரலும், குரலின் வீணை இனிமையும் மெல்ல மெல்ல அவன் ஞாபகத்தில் வந்து போயின.

"அவளைப் பற்றி என்னிடம் தகவல் கேட்க என்ன இருக்கு?"

நீண்ட நேரம் இந்த சிந்தனையிலிருந்து அவன் மீளவில்லை. அம்மன் சந்நிதி வாசலில் தான் கைதான போதும், அதற்கு முன்னால் கோவிலுக்குள்ளும் தன்னை அவள் பார்த்தாள் என்பதும் இப்போது அவனுக்கு நினைவு வந்தது. பத்தர் வந்து போன அவசரத்திலும், பரபரப்பிலும், அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களைத் தான் கேட்க மறந்து விட்டோம் என்பதை நிதானமாக நினைத்துப் பார்த்த போதுதான் உணர முடிந்தது. முத்திருளப்பன், குருசாமி இருவரையும் பற்றிய விவரங்கள், வாசக சாலை எப்படி நடைபெறுகிறதென்ற நிலைமை, தன்னோடு அம்மன் சந்நிதி வாசலில் கைதான மற்ற இரு சத்தியாக்கிரகிகள் பற்றிய விவரங்கள், எதையுமே தான் பத்தரிடம் விசாரித்துத் தெரிந்து கொள்ளவில்லை என்பதை அவர் புறப்பட்டுப் போன பின்பே அவன் நிதானமாக உணர்ந்தான்.

தான் வரவில்லை என்பதை அறிந்தால் தன் தாயின் மனம் என்ன பாடுபடும் என்பதை எண்ணிப் பார்த்தபோது அவனுக்கே வேதனையாகவும் இருந்தது. அந்த அதிர்ச்சியை அவளால் தாங்கவே முடியாதென்பது அவனுக்குத் தெரியும்.

"உங்கம்மாவுக்கு நீதான் ஒரே பிள்ளைன்னாப் போயிட்டு வறதுதான் நியாயம்னு படறது எனக்கு. பதினஞ்சு நாள் வரை கூடப் 'பரோல்'லே போயிட்டு வரலாமே?" என்றார் பிருகதீஸ்வரன். அவரே இப்படிச் சொல்லியதைக் கேட்ட போது, 'போய்விட்டே வந்திருக்கலாமோ?' என்று கூட அவனுக்குத் தோன்றியது. தன்னை அறியாமல் அவன் அன்று முழுவதுமே ஓயாமல் அவரிடம் தன் தாயைப் பற்றியும் அவளுக்குத் தன் மேலுள்ள பிரியத்தைப் பற்றியுமே திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருந்தான். எவ்வளவோ மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றும் அவனால் அதைத் தவிர்க்க முடியவில்லை. அவன் மனம் என்ன நினைக்கிறதென்று புரிந்துதான் பிருகதீஸ்வரன் அந்த யோசனையை அவனுக்குக் கூறினார். 'அவ்வளவு தூரம் தன்னுடைய கில்ட் கடை வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு, எனக்காக வேலூருக்குத் தேடிவந்த பத்தருக்கு உபசாரமாக ஒரு வார்த்தை நன்றிகூடச் சொல்ல மறந்துவிட்டேனே' - என்று நினைத்தபோது அவசரத்திலும் மனக் கவலையிலும் பல வேலைகளைச் செய்யத் தவறியிருப்பது அவனுக்கு ஞாபகம் வந்தது.

வீட்டையும், அம்மாவையும் சுற்றிச் சுற்றித் தயங்கிய மனத்தை அன்று மாலை பிருகதீஸ்வரன் நடத்திய கீதை விளக்கவுரை ஓரளவு அமைதியடையச் செய்தது. இரவு வெகுதூரம் உறங்காமல் விரித்த கித்தானில் உட்கார்ந்து கொண்டே இருந்தான் ராஜாராமன். மற்ற சத்தியாக்கிரகிகள் தாறுமாறாகக் கிடந்து உறங்கிக் கொண்டிருந்த சிறையிருளில் பிருகதீஸ்வரன் அருகிலமர்ந்து அவன் மனக் கவலையைப் பகிர்ந்து கொள்ள முயன்றார். 'அம்மா போய் விடுவாளோ' என்ற பயமும் துக்கமும் மிகுந்த போது பொறுக்க முடியாமல் அழுகையே வந்து விட்டது அவனுக்கு. அப்போது ஒரு மூத்த சகோதரனின் பாசத்தோடு அவன் தோளைத் தொட்டுத் தட்டிக் கொடுத்தார் பிருகதீஸ்வரன்.

'மனசை விட்டு விடாதே' - என்று அவருடைய சாத்வீகமான குரல் அப்போது அவன் காதருகே மிருதுவாக ஒலித்தது.

மறுநாள் காலையில் கொஞ்சம் கவலை குறைந்தது. அன்று காலை சத்தியாக்கிரகிகள் குளிப்பதற்கு முறை; உடலில் தண்ணீர் பட்டதும் ஏதோ புத்துணர்ச்சி பெற்று விட்டாற் போலிருந்தது. பந்திக்கு உணவு பரிமாறுவது, பிரார்த்தனை எல்லாவற்றிலுமாகக் கவலைகளை அன்று பகலில் ஓரளவு மறக்க முடிந்தது. வக்கீல்கள், ஆசிரியர்கள், செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று பந்தியில் அமர்ந்து சிறை உணவைச் சாப்பிட்டவர்கள் ஒவ்வொருவரும், இப்படி எத்தனை எத்தனை கவலைகளை மறந்து தேச விடுதலைக்காக இங்கே கிடந்து மாய்கிறார்கள் என்பதை எண்ணியபோது தன் கவலை மிகவும் சிறிதாகவே இருக்கும் என்று தோன்றியது அவனுக்கு.

மாலையில் கீதை வகுப்பு நடத்தியபோது எல்லா சத்தியாக்கிரகிகளும் சுற்றி அமர்ந்திருந்தாலும், அவனுக்காகவே அந்த வகுப்பை நடத்தியதுபோல் நடத்தினார் பிருகதீஸ்வரன். அவன் மனம் முற்றிலும் ஆறுதல் அடையத்தக்க விதத்தில் அவருடைய உரைகள் அமைந்திருந்தன. மறுநாள் விடிந்தால் வெள்ளிக்கிழமை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்திருந்து, மகாகவி பாரதியாரின் திருப்பள்ளி எழுச்சியைப் பாடுவதை வழக்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள் அவர்கள். முதலில் ராஜாராமன் பாடுவான்; அப்புறம் மற்றவர்களும் திருப்பிப் பாடுவார்கள். அங்கிருந்தவர்களில் அவனுக்கும் இன்னொரு இரண்டொருவருக்கும் தான் பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி நன்றாக மனப்பாடம் ஆகியிருந்தது.

முதல் நாளிரவு, "நாளைக்கு வெள்ளிக்கிழமை! காலையிலே திருப்பள்ளி எழுச்சி இருக்கு. அஞ்சு மணிக்கே எழுந்திருக்கணும். சீக்கிரமாகத் தூங்கு" - என்று அவனையும் தூங்கச் சொல்லிப் பிரியத்தோடு வேண்டிக் கொண்டுதான் அப்புறம் பிருகதீஸ்வரன் படுத்தார்.

அவர் காலையில் நாலே முக்கால் மணிக்கே எழுந்திருந்து ராஜாராமனையும் எழுப்பிவிட்டார். ஜெயில் காம்பவுண்டுக்குள் இருந்த மரங்களில் பறவைகளின் விதவிதமான குரல்கள் ஒலிக்கத் தொடங்கிய அதே வேளையில்,

"பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
புன்மை இருட்கணம் போயின யாவும்..."

என்று ராஜாராமன் பாடத் தொடங்கினான். அப்போது யாரும் எதிர்பாராமல் வார்டன் கதவைத் திறக்க ஜெயில் அதிகாரி ஒருவர் உள்ளே வந்தார். அவர் கையில் ஒரு தந்தி இருந்தது. டக்டக் என்று பூட்ஸ் ஒலிக்க வார்டனும் அதிகாரியும் வழக்கமில்லாத வழக்கமாக அந்த வேளையில் அங்கே வந்ததைக் கண்டும், அவர்கள் பாட்டு நிற்கவில்லை. பாட்டு முடிகிற வரை வார்டன் காத்திருக்க நேர்ந்தது.

"ராஜாராமன் என்பது?"

"நான் தான்" - என்று ராஜாராமன் ஓரடி முன்னால் வந்தான்.

"மதுரையில் உன் தாயார் காலமாகி விட்டாள். தந்தி நடுராத்திரிக்கு வந்தது."

"....."

"பரோல்ல யாராவது அழைச்சிண்டு போக வந்தால் அனுப்பறேன்... ஐ யாம் ஸோ ஸாரி..."

-ராஜாராமன் ஒன்றும் பேசத் தோன்றாமல் அப்படியே திக்பிரமை பிடித்துப்போய் நின்றான். அழக்கூட வரவில்லை. மனத்தை ஏதோ பிசைந்தது. இரும்பு அளியின் நீள நீளமான கம்பிகள் ஆகாசத்துக்கும் பூமிக்குமாக நீண்டு தெரியத் தொடங்குவது போல பிரமை தட்டியது. தாயின் முகமும் மதுரையின் கோபுரங்களும், நடுவாக நீர் ஓடும் கோடைகாலத்து வைகையின் தோற்றமும், சம்பந்தத்தோடும் சம்பந்தமில்லாமலும், உருவெளியில் தோன்றுவதும் மறைவதுமாயிருந்தன. தொண்டைக் குழியில் ஏதோ வந்து அடைப்பது போலிருந்தது.

'பொழுது புலர்ந்தது' என்று அவன் பாடத் தொடங்கிய வேளையில் மறுபடி இருட்டிவிட்டது. வார்டன் துணைவர அவனைக் கிணற்றடிக்குக் கூட்டிக்கொண்டு போய் இரண்டு வாளி தண்ணீரை இறைத்துத் தலையில் ஊற்றினார் பிருகதீஸ்வரன். சொந்தத் தாயின் மரணத்துக்கே, யாரோ உறவினர் சாவைக் கேட்டுத் தலை முழுகுவது போல், முழுகினான் அவன்.

"அன்னிக்கே 'பரோல்'லே போயிருக்கலாம். முகத்துலே முழிக்கக்கூட உனக்குக் கொடுத்து வைக்கலே! பாவம்..." என்றார் பிருகதீஸ்வரன்.

"கருமம்லாம் பண்ணணுமே? பரோல்லே போறியா?"

"இல்லை. போக வேண்டாம். நான் போய் இனிமேல் அவள் திரும்பிக் கெடைக்கப் போறதில்லே" என்றான் ராஜாராமன். சொல்லும்போதே அவன் குரல் கம்மியது. கண்கள் கல்ங்கிவிட்டன. சிரமப்பட்டு அவன் அழுகையை அடக்க முயன்றதைப் பிருகதீஸ்வரன் கவனித்தார். அன்று முழுவதும் ராஜாராமன் சாப்பிடவில்லை. யாருடனும் பேசவில்லை. பிருகதீஸ்வரன் ஆறுதலாக ஏதேதோ கூறிக் கொண்டிருந்தார். மறுநாள் பகலிலும் அவர் வற்புறுத்திய பின்பே அவன் ஏதோ கொஞ்சம் சாப்பிட்டதாகப் பேர் பண்ணினான். நாளாக நாளாக அவன் மனம் ஆறியது. ஒரு வாரத்துக்குப் பின் பத்தர் மறுபடி வந்துவிட்டுப் போனார். காலம் ஓடியது.

அத்தியாயம் - 5

1931-ஆம் வருடத் தொடக்கத்தில் முதலில் மகாத்மா காந்தி விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து பிற தலைவர்களும், சத்தியாக்கிரகிகளும் நாடெங்கும் விடுதலை செய்யப்பட்டார்கள். காந்தி - இர்வின் உடன்படிக்கை ஏற்பட்டது. வேலூரிலிருந்து ராஜாராமன் நேரே மதுரைக்கு வரவில்லை. வேலூரிலிருந்து விடுதலையானவர்களில் மதுரை, பெரியகுளம் போன்ற ஊர்களைச் சேர்ந்த சத்தியாக்கிரகிகளும் இருந்தனர். அவர்களை வரவேற்க அவரவர்கள் ஊரிலிருந்து தொண்டர்களும் உறவினர்களும் வந்திருந்தனர். ஊர்க்காரர்கள் எல்லோரும் தங்களோடு மதுரைக்கு வந்துவிடச் சொல்லி ராஜாராமனைக் கூப்பிட்டனர். பிருகதீஸ்வரனோ, தன்னோடு புதுக்கோட்டைக்கு வந்து சில நாட்கள் தங்கிவிட்டு அப்புறம் மதுரை போய்க் கொள்ளலாம் என்று அவனிடம் கூறினார். பத்தர் கடைசியாக மதுரையிலிருந்து வேலூருக்கு வந்தபோது, அன்னக்குழி மண்டபத்துச் சந்தில் ஒண்டுக் குடித்தனம் இருந்த வீட்டிலிருந்த பாத்திரம், பண்டம், தட்டுமுட்டுச் சாமான்களை ஒழித்து, மேலூர் வீட்டில் சொந்த உபயோகத்துக்கு வைத்துக் கொண்டிருந்த மாடிப் பரணில் கட்டிப் போட்டுவிடுமாறு அவன் கடிதத்தில் தெரிவித்தபடியே செய்து விட்டதாகக் கூறியிருந்தார். வாசக சாலை நன்றாக நடப்பதாகவும் கூறியிருந்தார். 'எப்படி நடக்கிறது? யார் வாடகை கொடுக்கிறார்கள்? - பத்திரிகைகள், புத்தகங்கள் வாங்க யார் உதவுகிறார்கள்?' என்றெல்லாம் அவன் தூண்டித் தூண்டிக் கேட்டபோது,

"அதெல்லாம் இப்ப எதுக்குங்க தம்பி? நீங்க விடுதலையாகி வந்தப்புறம் சாவகாசமாப் பேசிக்கலாம்" - என்று மழுப்பிவிட்டார் பத்தர். ஒரு வேளை அவரே கைப்பணத்தைச் செலவழித்துச் செய்து கொண்டு அதைத் தன்னிடம் சொல்லக் கூசுகிறாரோ என்று தோன்றியது அவனுக்கு. முத்திருளப்பனும் குருசாமியும் கடலூர் சிறையிலிருக்கும் செய்தியையும், அந்தத் தடவை பத்தர் வந்திருந்தபோதுதான் அவன் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தான். எனவே, பிருகதீஸ்வரனோடு புதுக்கோட்டை போய் ஒரு வாரமோ பத்துநாளோ தங்கி விட்டுப் போகலாமென்று அவனுக்கே தோன்றியதால், அவன் அவரிடம் மறுக்காமல் ஒப்புக் கொண்டான்.

'வீட்டைக் காலி செய்து சாமான்களை மேலூரில் கொண்டு போய்ப் போட்டாயிற்று. வாசகசாலை ஒழுங்காக நடக்கிறது' - என்ற இரண்டு விவரங்களுமே அவன் உடனடியாக மதுரை போக அவசியமில்லை என்பதை அவனுக்கு உணர்த்தின. அவன் பிருகதீஸ்வரனோடு புதுக்கோட்டைக்குப் போனான்.

அந்த ஒரு வாரமும் முழுமையாக அவன் புதுக்கோட்டையில் தங்கவில்லை. போகும்போது இருவருமே திருச்சியில் இரண்டு நாள் தங்கிச் சில தேச பக்தர்களையும் தொண்டர்களையும் சந்தித்தனர். புதுக்கோட்டையில் மூன்று நாட்கள் இருக்க முடிந்தது. ஒரு நாள் பிரான்மலைக்கும், இன்னொருநாள் அன்னவாசல் கிராமத்துக்கும், அவனை அழைத்துச் சென்றார் பிருகதீஸ்வரன். அவருடைய குடும்பத்தில் எல்லாரும் ராட்டை நூற்கப் பழகியிருந்ததையும், மனைவி குழந்தைகள் உட்பட அனைவரும் கதரணிந்திருந்ததையும் பார்த்துப் பெருமைப்பட்டான் அவன்.

அவன் மதுரை திரும்பும்போது காரைக்குடி வரை பிருகதீஸ்வரனும் கூட வந்தார். காரைக்குடியிலும் அவர்கள் சந்திக்க வேண்டியவர்கள் இருந்தார்கள். காரைக்குடியில் அவனுக்கு விடை கொடுக்கும்போது, "நாளையிலிருந்து நானும் என் மனைவியும் பாரதி பாடல்களைப் பாடிக் கொண்டே, தெருத் தெருவாய், எங்கள் புதுக்கோட்டைச் சீமையிலுள்ள கிராமம் கிராமமாய்க் கதர்த் துணிகளைச் சுமந்து விற்கலாமென்றிருக்கிறோம். மதுரையில் நீங்களும் அது மாதிரி ஏதாவது செய்தால் எனக்குச் சந்தோஷமாயிருக்கும்" - என்று சொல்லியனுப்பினார் பிருகதீஸ்வரன். கதர்ப் பிரசாரத்தில் ஈடுபடுவதாக அவனும் அவருக்கு வாக்குக் கொடுத்தான். ஒருவரை ஒருவர் பிரிவது பரஸ்பரம் இருவருக்குமே வேதனையளிப்பதாயிருந்தது; அவருடைய நட்பின் அருமையைப் பல மாதங்கள் உடனிருந்து பழகியபோது உணர்ந்ததை விட இப்போது இந்தப் பிரியும் விநாடிகளில் மிகமிக அதிகமாக உணர்ந்தான் ராஜாராமன். அவன் மதுரைக்கு வந்த நேரம் இரவு எட்டு மணிக்கு மேலிருக்கும். புறப்படுகிற தினத்தன்று இப்படி இருட்டில் தான் புறப்பட்டோம் என்பது நினைவு வந்தது. மேலக்கோபுர வாசலுக்கு வந்து நின்ற போதுதான் எங்கே போய்த் தங்குவது என்ற கேள்வி எழுந்தது. தாய் இறந்த அந்த வீடு மிக அருகிலேயே இருப்பதை உணர்ந்த போது மனம் நெகிழ்ந்து அழுதது. வைத்தியநாதய்யர் வீட்டுக்கோ, ஜோஸப் சார் வீட்டுக்கோ போகலாம் என்று தோன்றினாலும், பொது வேலைகளைச் செய்வதற்கு வாசகசாலையில் தங்குவதே நல்லதென்று நினைத்தான் ராஜாராமன்.

'பத்தர் வாசகசாலையைப் பூட்டிக் கொண்டு வீட்டுக்குப் போயிருந்தால் என்ன செய்வது?'

'வீட்டுக்குப் போயிருந்தாலும் பரவாயில்லை. பத்தர் வீடு பக்கத்திலேயே செம்பியன் கிணற்றுச் சந்திலேதான் இருக்கிறது, அங்கேயே போய்ச் சாவியை வாங்கிக் கொண்டு வந்து விடலாம்...'

-இந்த முடிவுக்கு வந்ததும் அவன் வடக்கே திரும்பிக் கோபுர வாசலிலிருந்து சித்திரை வீதிக்கு நடந்தான். அவன் நினைத்தபடி பத்தர் கடை பூட்டப்பட்டிருந்தாலும், நல்ல வேளையாக வாசக சாலை மாடியில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. யாரோ வாசக சாலை மாடியில் இருப்பதை அறிய முடிந்தது.

வாசக சாலைக்காக மேலே படியேறியபோது மாடிக் கதவு தாழிட்டிருந்தது. கதவை மெதுவாக தட்டினான் அவன். உள்ளே கேட்ட பேச்சுக் குரல்களிலிருந்து நாலைந்து பேர் கூடியிருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது. கதவைத் திறந்ததே முத்திருளப்பன் தான். நண்பனை அப்படியே கட்டித் தழுவிக் கொண்டான் ராஜாராமன். குருசாமியும், அந்நியத் துணி மறியலில் அவனோடு கைதான உள்ளூர் நண்பர்களும், பத்தரும் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். வாசகசாலையில் இப்போது ஐந்தாறு பழைய மடக்கு நாற்காலிகளும், இரண்டு புத்தக அலமாரியும், ஒரு பெரிய மேஜையும் இடம் பெற்றிருப்பதைக் கவனித்து ஆச்சரியப்பட்டான் அவன். இடத்துக்கு வாடகை கொடுக்க முடியாமல் வாசக சாலையே நடக்க முடியாது நின்று போயிருக்குமோ என்ற பயந்தவனுக்கு, 'அப்படி இல்லை! வாசக சாலை நடக்கிறது' என்று பத்தர் வேலூரில் வந்து சொல்லி, நிம்மதி அளித்திருந்தார். இப்போது இந்த வளர்ச்சி அவனுக்குப் புதுமையாய் இருந்தது. நண்பர்கள் எல்லாரும் அவனை உற்சாகமாக வரவேற்று அளவளாவினார்கள். பத்தரைத் தவிர மற்றவர்கள் இப்போதுதான் அவனைப் பார்க்கிறார்கள். ஆதலால் அவன் தாய் இறந்ததைப் பற்றித் துக்கம் கேட்பதில் சிறிது நேரம் கழிந்தது. துக்கப் பேச்சுத் தொடங்கியதுமே அங்கிருந்த கலகலப்புப் போய்விட்டது.

"தம்பி நான் போய்க் கூப்பிட்டப்பவே 'பரோல்'லே வந்திருக்கலாம், பெரியம்மா மனசு நோகப் பண்ணிருக்க வேண்டாம். நான் திரும்பி வந்து, 'அம்மா உங்க மகன் பரோல்லே வர மாட்டேன்னிட்டாரு'ன்னு கூடச் சொல்லலே, 'ஜெயில்லே விட மாட்டேங்கிறாங்க பெரியம்மா! நாம் கொடுத்து வச்சது அவ்வளவு தான்'னு பொய் சொன்னேன். உள்ளதைச் சொல்லியிருந்தா அந்தம்மா இன்னும் ரொம்ப மனசு நொந்து போயிருக்கும். 'அந்தக் காந்திக்குத் தத்துக் கொடுக்கத்தான் நான் பிள்ளை பெற்றேன். எனக்குக் கொள்ளிப் போடப் பெறலே'ன்னு அன்னமாறிக்கிட்டே போய்ச் சேர்ந்தாங்க பாவம்!..." என்று பத்தரும் அம்மாவைப் பற்றிப் பேச ஆரம்பித்து விடவே, ஒன்றும் சொல்லத் தோன்றாமல் கண்கலங்கிப் போனான் ராஜாராமன். சிறிந்து நேரம் யாருடைய பேச்சுக் குரலுமற்ற தனி மௌனம் நிலவியது அங்கே.

முத்திருளப்பன், குருசாமி, பத்தர் மூவரைத் தவிர மற்றவர்கள் விடைபெற்றுக் கொண்டு போனார்கள். அங்கிருந்த துயரச் சூழ்நிலையில் வார்த்தைகளால் சொல்லி விடைபெற அஞ்சியோ தயங்கியோ, ஜாடையால் கையசைத்து விடை பெற்றனர் அவர்கள். மீதமிருந்த மூவருக்கும் பரஸ்பரம் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருந்தும் தொடர்ந்து மௌனமே நீடித்தது. ராஜாராமன் இன்னும் மனம் தெளிந்து தலை நிமிரவில்லை. அவன் மனம் சரியாகி அவனாகப் பேசுகிறவரை அவனை அப்படியே விடுவது நல்லதென்று மற்றவர்கள் பேசாமலிருந்தனர். சிறிது நேரத்திற்குப் பின் அவனே தலை நிமிர்ந்து முத்திருளப்பனை விசாரித்தான்.

"உங்களுக்குத்தான் ரொம்பக் கஷ்டம். வேலை வேறு போயிருக்கும். மாசக் கணக்கிலே ஜெயில் வாசம் பண்ணிட்டீங்க, குடும்பத்தை யார் கவனிச்சுண்டாளோ, என்ன சிரமமோ?"

"அப்பிடித்தான் நான் கவலைப்பட்டேன் ராஜா! ஆனா, இதோ பக்கத்திலே இருக்காரே; இந்தப் புண்ணியவாளன் தயவுலே மாசம் தவறாமே என் குடும்பத்துக்குப் பண உதவி கிடைச்சிருக்கு. 'கில்ட் கடை ரத்தினவேல் பத்தர் மாதா மாதம் பணம் கொடுத்து உபகாரம் பண்ணிக்கிட்டு இருக்கார்'னு என் சம்சாரம் எழுதின கடுதாசி ஜெயிலுக்குக் கிடைச்சப்ப எத்தினி சந்தோஷமாக இருந்திச்சுத் தெரியுமா?" என்று பத்தரைக் காட்டிப் பதில் சொன்னான் முத்திருளப்பன்.

"தேசம்கிற பெரிய குடும்பத்தைக் காப்பாத்தறதுக்கு நாம கஷ்டப்படறோம். அப்ப நம்மோட சின்னக் குடும்பத்திலே எத்தனையோ கஷ்டங்கள், நஷ்டங்கள் எல்லாம் வரது."

"என்னுது சாதாரணம்! உன் நஷ்டம் ரொம்பப் பெரிசு ராஜா. நீ ஜெயிலுக்குப் போகாம இருந்திருந்தா உன் தாயாருக்கு இப்பிடி நேர்ந்திருக்காது..."

"நேர்ந்தது நேர்ந்தாச்சு... மரணம் நாம தடுக்க முடிஞ்சதில்லை..."

"அன்னக்குழி மண்டபத்துச் சந்தில் போர்ஷனைக் காலை பண்ணிச் சாமான்களையெல்லாம் மேலூர் வீட்டிலே கொண்டு போய்ப் பூட்டியாச்சுன்னு பத்தர் சொன்னார். இனிமே எங்கே தங்கப் போறே? உனக்கு ஆட்சேபனை இல்லேன்னா கொஞ்ச நாளைக்குத் தெற்கு வாசலிலே எங்களோட வந்து தங்கலாம் ராஜா."

"தங்கறது ஒரு பெரிய பாடா? இங்கேயே வாசகசாலையிலே கூடத் தங்கிப்பேன். கீழே படியிறங்கினால் பத்தர் கில்ட் கடையில் குளிக்கக் கொள்ள முடியும். பத்தர் தான் மனசு வைக்கணும்..."

"பேஷாத் தங்கலாம்! நீங்க கேட்டு, நான் எதுக்காவது மாட்டேன்னிருக்கேனா தம்பீ?"

"ஆனாலும், உங்க அனுமதி வேணுமில்லியா பத்தரே?"

"அனுமதியாம், பெரிய அனுமதி! இதெல்லாம் என்ன பேச்சுன்னு பேசறீங்க தம்பீ?"

ராஜாராமன் பத்தரைப் பார்த்துச் சிரித்தான்.

"உங்களுக்காக எப்படிப்பட்ட மனுஷாளுங்கள்ளாம் என்னென்னவோ செய்யக் காத்துக்கிட்டிருக்காங்க. நான் பெரிசா என்ன செஞ்சிடப் போறேன் தம்பீ..."

"எனக்குக்கூட இங்கே எங்கியாவது சித்திரை வீதியிலியே ஒரு எடம் பாருங்க, பத்தரே! நானும் தையல் மெஷினைத் தூக்கிட்டு வந்துடறேன்," - என்றான், அது வரை பேசாமலிருந்த குருசாமி. உடனே ராஜாராமன் மறுத்தான்.

"வேண்டாம்! நீ பாண்டிய வேளாளர் தெருவிலேயே இரு. காந்தியைப் பத்திப் பேசறவங்க நாலா பக்கத்திலேயும் ஊர்ல இருக்கணும். எல்லாரும் ஒரே தெருவிலே மட்டும் குவிஞ்சிடப்படாது."

ஃபண்டாபீஸ் மணி ஒன்பதடித்தது.

"மணி ஒன்பதடிக்குதே. நீங்க ஏதாவது சாப்பிட வேண்டாமா தம்பீ?"

"நீங்கள்ளாம்?"

"நான் சாப்பிட்டாச்சு. முத்திருளப்பனும் குருசாமியும் வீட்டுக்குப் போயிடுவாங்க. உங்களுக்குத்தான் ஏதாவது வாங்கியாரணும்; வாங்கியாரட்டுமா?"

"வேண்டாம், நானே போய்ச் சாப்பிட்டுக்கிறேன், பத்தரே! ஆனா, நான் திரும்பி வர்ற வரை நீங்க இங்கே இருக்கணும், எனக்கு உங்ககிட்டக் கொஞ்சம் பேச வேண்டியிருக்கு."

"இங்கேயா? சரி! இருக்கேன். பக்கத்தில் கடை எதுவும் இருக்காது. நீங்க மேலமாசி வீதியில கட்டிச்சட்டி மண்டபம் பக்கமாய்ப் போய்ப் பார்த்தால் தான் ஏதாவது ரெண்டு பால் கடை, மிட்டாய்க் கடை திறந்திருக்கும். நீங்க திரும்பி வரவரை நான் இருக்கேன் தம்பீ... போய் வாங்க..."

- குருசாமி, முத்திருளப்பன், ராஜாராமன் மூவரும் புறப்பட்டனர். குருசாமியும், முத்திருளப்பனும் மேலமாசி வீதி வரை கூட நடந்து வந்து, ராஜாராமனை விட்டு விட்டுப் போவதற்காக உடன் வந்தனர்.

மேலக் கோபுர வாசல் தெருவும் டவுன் ஹால் ரோடும் சந்திக்கிற இடத்தில் மேற்குமாசி வீதியில் கட்டிச்சட்டி மண்டபத்தருகே ஒரு பால் கடை திறந்திருந்தது. குருசாமியையும், முத்திருளப்பனையும் கூடத் தன்னோடு ஏதாவது சாப்பிடும்படி வேண்டினான் ராஜாராமன். இருவரும் மறுத்துவிட்டுச் சிரித்துக் கொண்டே விடை பெற்றனர்.

ராஜாராமன் பால் கடையில் கிடைத்ததைச் சாப்பிட்டுப் பாலைக் குடித்துவிட்டு, வாசக சாலைக்குத் திரும்பினான். பத்தர் அவனுக்காக வாசக சாலையில் காத்திருந்தார்.

ஆனால், இதென்ன? நாற்காலிகள் மடக்கி வைக்கப்பட்டு, மேஜை ஓரமாக ஒதுக்கிப் போடப்பட்டு, நடுவாகத் தரையில் மெத்தை விரிக்கப்பட்டிருக்கிறதே! மெத்தையின் இருபுறமும் எம்பிராய்டரி வேலை செய்து பூப்போட்ட தலையணைகள் கிடக்கின்றன! ஓர் ஓரமாக ஒரு வெள்ளிக் கூஜாவும், பக்கத்தில் மேலே டபராவால் மூடிய தம்ளரும் வைக்கப்பட்டிருக்கின்றனவே!

"இதெல்லாம் என்ன பத்தரே! நம்ம பழைய பத்தமடைப் பாயைக் காணலியே? உங்க வீட்டிலிருந்து தலைகாணி மெத்தை கொண்டு வந்தீங்களா?"

ஒரு நிமிஷம் பதில் சொல்லத் தயங்கிவிட்டு, "அப்படித் தான் வச்சுக்குங்களேன் தம்பி?" - என்று சொல்லிச் சிரித்தார் பத்தர். சிரித்துக் கொண்டே டவராவால் மூடி வைத்திருந்த வெள்ளித் தம்ளரை எடுத்துப் பாலை ஆற்றத் தொடங்கிய அவரிடம்,

"பத்தரே! நான் பால் குடித்துவிட்டு வந்தாச்சு. நீங்க வேறே கொண்டு வந்திருக்கீங்களே?" - என்று மறுத்தான் ராஜாராமன்.

"பரவாயில்லை தம்பீ! ஆயிரமிருந்தாலும் கடைப்பால் வீட்டுப் பால் ஆயிடுங்களா?" - என்று சொல்லிக் கொண்டே பாலை ஆற்றி அவனிடம் கொடுத்தார். கையில் வாங்கிய பால் கள்ளிச் சொட்டாய்ப் பாதாம்கீர் நிறத்துக்கு இருந்தது. பச்சைக் கற்பூரமும் குங்குமப்பூவும் கமகமவென்று மணந்தன. அவன் பாலைக் குடித்தான். பால் அமிர்தமாயிருந்தது.

"ஜெயில்லே கட்டாந் தரையிலும் மொரட்டுக் கித்தான்லியும் படுத்துப் படுத்துச் சங்கடப்பட்டிருக்கீங்க. நீங்க நல்லாத் தூங்குங்க தம்பீ! சும்மா அலையப்படாது. உடம்பையும் கவனிச்சுக்கணும். உங்களைக் கவனிக்க இப்போ உங்கம்மா கூட இல்லை."

"அது சரி! புறப்பட்டுடாதீங்க பத்தரே! நான் உங்ககிட்டப் பேசணும்னேனே?"

"என்ன பேசணும்? எல்லாம் கார்த்தாலே பேசிப்பம்! இப்ப தூங்குங்க தம்பீ!"

"இல்லை? அஞ்சு நிமிஷம் இருந்திட்டுப் போங்க. உங்க கில்ட் கடை வருமானம் என்னன்னு எனக்குத் தெரியும் பத்தரே. நீங்க கடனோ உடனோ வாங்கி அதிகமாச் சிரமப்பட்டிருக்கீங்கன்னு தெரியுது. நாற்காலி, மேஜை, அலமாரி எல்லாம் வாசகசாலைக்கு வாங்கிப் போட்டிருக்கீங்க. ரெண்டு மூணு தரம் வேலூர் வந்திருக்கீங்க; கடைசித் தடவை வந்த போது எங்கிட்டக் கொஞ்சம் பணமும் கொடுத்தீங்க. முத்திருளப்பன் குடும்பத்துக்கு வேற மாசா மாசம் குடுத்திருக்கீங்களே. வாசக சாலை வாடகையும் நீங்க தான் குடுத்திருக்கணும். இத்தனை பெரிய செலவு உமக்குத் தாங்காதுங்கிறது எனக்குத் தெரியும்; நீரும் பெரிய குடும்பஸ்தர்..."

"அதுக்கென்ன இப்ப? சாவகாசமாய்ப் பேசிக்குவமே?"

"வேலூர்லே நான் கேட்டப்பவே இப்படித்தான் பதில் சொல்லித் தட்டிக் கழிச்சீரு? தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறுதான் பத்தரே! விவரம் சொன்னீர்னா நல்லது."

பத்தர் சிரித்தார். பதில் சொல்லத் திணறினாற் போலச் சிறிது நேரம் தயங்கினார்.

"நம்ம சிநேகிதம் நீடிக்கணும்னா நீங்க இதைச் சொல்லணும்..."

"தூங்குங்க தம்பீ? இப்ப இதுக்கென்ன அவசரம்? விடிஞ்சு பேசிக்கப்படாதா?" என்று மழுப்ப முயன்றார். அவன் விடவில்லை.

"நான் நிம்மதியாகத் தூங்கணும்னா நீங்க இதுக்குப் பதில் சொல்லியாகணும் பத்தரே?"

பத்தர் மேலும் சிறிது நேரம் தயங்கினார்.

"இதிலே தயங்கறதுக்கு என்ன இருக்கு?"

"சொன்னா, உங்களுக்குக் கோபம் வருமோன்னுதான் பயமாயிருக்கு தம்பீ! 'மதுரத்துக்கு ஏதாச்சும் தகவல் சொல்லணுமா'ன்னு வேலூர்லே கேட்டப்பவே உங்களுக்கு கோபம் வந்திச்சு?"

"அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்? அதை ஏன் இப்ப சொல்லிக் காட்டறீரு?"

"சம்பந்தம் இருக்கிறதினாலேதான் பயப்பட வேண்டியிருக்கு. உபகாரம் பண்ண வந்த தேவதை போல் அந்தப் பெண்ணுதான் வலுவிலே வந்து உபகாரம் பண்ணிக்கிட்டிருக்கு. அதுக்கு நீங்க ஒரு தெய்வத்தைப் போல, சதா உங்களையே நெனைச்சு அது உருகிட்டிருக்கு..."

"போதும் நிறுத்தும்! ஒரு தேவடியாளுடைய உபகாரத்திலே நாம இந்தத் தேசத்தைக் காப்பாத்த வேண்டாம்."

"நீங்க இந்த வார்த்தையைச் சொல்லக்கூடாது, தம்பீ! மத்தவங்க சொல்லலாம்; ஆனா, நீங்க சொல்லக்கூடாது. காந்தியையும், அஹிம்சையையும், சத்தியத்தையும் நம்பறவங்க இப்பிடி உதாசீனமாப் பேசப்படாது. 'கடவுள் மனிதனைத்தான் படைச்சார் - மனிதனோ ஜாதிகளைப் படைத்து விட்டான்'னு காந்தி நெனைக்கிறாரு. மனிதத்தன்மை உள்ளவங்க, மனிதத் தன்மை இல்லாதவங்கன்னு உலகத்திலேயே ரெண்டு ஜாதிதான் இருக்கு."

அவருடைய வார்த்தைகள் அவன் இதயத்தைத் தாக்கின. இளமைத் துடிப்பிலே பேசிய பேச்சுக்காக வருந்தி தலைகுனிந்தான் ராஜாராமன். பத்தருக்குப் பதில் சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை அவனுக்கு. அவர் காந்தியின் பேரை எடுத்ததும் அவனுக்குத் திட்ட வரவில்லை.

"நீங்க கைதான அன்னிக்கி உங்களைக் கோவில்லே பார்த்துதாம். கோவிலிலேருந்து வெளியிலே வர்ரப்ப உங்களை விலங்கு போட்டுப் போலீஸ்காரங்க இழுத்துட்டுப் போறதையும் பார்த்துதாம். என்னை ஏதோ நகை வேலை செய்யறதுக்காகக் கூப்பிடறாப்ல கூப்பிட்டு, இத்தனையும் சொல்லி அழுதிச்சு. நீங்க கைதானதே அது சொல்லித்தான் எனக்குத் தெரியும். கீழ்வாசலுக்கு ஓடி வந்தேன்; பார்க்க விடமாட்டேனுட்டாங்க. அப்புறம் தான் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடிவந்தேன். அங்கேயும் பேசமுடியலை. நான் வேலூருக்கு வந்தப்பல்லாம் நானா வரலே. 'போங்க! போய்ப் பார்த்திட்டு வாங்க'ன்னு அது துரத்தித்தான் நான் ஓடி வந்தேன். இந்த வாசகசாலை, முத்திருளப்பன் குடும்பம், எல்லாத்தையும் காப்பாத்த அதுதான் உபகாரம் பண்ணியிருக்கு. உபகாரம் பண்ணச் சொல்லி, நான் கேட்கலை. 'அவரு ஜெயிலுக்குப் போயிட்டதினாலே எதுவும் நிக்கப்படாது. நான் தரேன். செய்யுங்க'ன்னு அதுவாக் கூப்பிட்டு உபகாரம் பண்ணிச்சு. இப்பக் கூடச் சித்தே முன்னே மாடி வழியா என்னைக் கூப்பிட்டு, 'வந்தாச்சா'ன்னு கேட்டுது. 'வந்தாச்சு; சாப்பிடப் போயிருக்காரு'ன்னேன். உடனே உள்ளே ஓடி இந்த மெத்தை தலைகாணியைக் கொண்டாந்து கொடுத்துப்பிட்டு, 'பாவம்! ஜெயில்லே படுக்க வசதிகள் இருந்திருக்காது! இதை விரிச்சு நல்லாத் தூங்கச் சொல்லுங்கள். மொட்டை மாடியிலே படுக்க வேண்டாம்; பகல் முழுதும் வெயிலடிச்ச வெக்கை தரையிலே இருக்கும். உள்ளேயே படுக்கச் சொல்லுங்க'ன்னுது. மெத்தையோட நான் உள்ளே வர்ரத்துக்குள்ள மறுபடி கூப்பிட்டு, இந்த கூஜா, பால், எல்லாத்தையும் கொடுத்திட்டு, 'என்னைப்பத்தி அவருக்கு ஞாபகமாவது இருக்கா பத்தரே?'ன்னு கண்ணுலே நீர் தளும்பக் கேட்டிச்சு! உங்கம்மா உடம்புக்குச் சுகமில்லாமே படுத்தப்ப, ரெண்டு வாட்டி கூடை நிறையச் சாத்துக்குடி வாங்கிக் கொடுத்தனுப்பிச்சுது. 'நீயே வந்து, பெரியம்மாவைப் பார்த்துக் குடேன் அம்மா'ன்னேன். அதுக்கு மதுரம் ஒப்புக்கலை.

'வேண்டாம்! எனக்கு அவர்களைத் தெரியாது. என்னைப் பார்த்தா, அவர்களுக்குச் சொந்தப் பிள்ளை மேலேயே மனசு சம்சயப்படும். ஊர்க்காரர்களும் வம்பு பேசுவாங்க. என் பிறவி ராசி அப்படி'ன்னுச்சு. 'தாசி தனபாக்கியத்துக்கு இப்பிடி ஒரு நல்ல மனசு நிறைஞ்ச பொண்ணா'ன்னு நானே வியந்து போனேன். அந்த அழுக்குப் பிடிச்ச வீட்டிலே தன்னை ஒரு தேவதையா நடமாட வச்சுக்கிட்டிருக்கு அது. உங்களைப் பார்த்த நாள்ளேயிருந்து நீங்கதான் அதும் மனசிலே இருக்கீங்க தம்பி. இத்தனை இங்கிதமான பொண்ணு அந்தச் சந்திலே இருக்க முடியும்னே என்னாலே நம்ப முடியலை. வேலூர்லே வந்திருந்தப்ப, 'மதுரத்துக்கு கோபமாப் பதில் சொன்னீங்க. அந்தப் பதிலை அப்படியே வந்து சொல்லியிருந்தா அது மனசு ஒடிஞ்சு போயிருக்கும். ஏதோ, நானா இட்டுக் கட்டிச் சொன்னேன். 'பரோல்'லே வரமாட்டேன்னு நீங்க பிடிவாதம் பிடிச்சதைச் சொல்லாமே, 'ஜெயில்காரன் விட மாட்டேன்னுட்டான்'னு உங்கம்மாவுக்குப் பொய் சொன்ன மாதிரி மதுரத்துக்கும் ஒரு பொய் சொன்னேன். அந்தக் காந்தி மகானைப் பின்பற்றத் தொடங்கின நாள்லேருந்து நான் பொய் சொல்றதை விட்டாச்சு. ஆனா, என்ன செய்யிறது? இது மனுசங்களோட உலகம். இங்கே சில சமயங்களிலே உண்மையைக் கூட பொய் ரூபத்திலேதான் வழிபட வேண்டிருக்கு தம்பீ!"

அவன் பதில் பேச முடியாமலும், குனிந்த தலை நிமிராமலும் உட்கார்ந்திருந்தான். முழங்கால்களைக் குத்த வைத்து முகத்தைப் புதைத்துக் கொண்டு அவன் அமர்ந்திருந்த நிலை தீவிர சிந்தனையைக் காட்டியது. ஒரு கூடை கருப்புத் திராட்சைக் குலைகளைக் கவிழ்த்தது போல் அவன் தலை சுருள் சுருளாகப் படிந்து கருமை மின்னியது. இருந்தாற்போலிருந்து தலை நிமிர்ந்து அவன் பத்தரை ஒரு கேள்வி கேட்டான்.

"ஜெயிலுக்குப் போறதுக்கு முந்தி, துணிக்கடை மறியலுக்கு முன்னே ஒருவாரமிருக்கும். அப்ப, நான் ஒரு நாள் ராத்திரி இங்கே படுத்திருந்தேன். மறுநாள் காலையிலே, கீழே படியிறங்கறப்ப பின் பக்கத்து மாடியைப் பத்தி உங்ககிட்ட விசாரிச்சேனே; ஞாபகமிருக்கா?"

"அதுக்கென்ன இப்ப? ஞாபகமிருக்கு. 'பின்பக்கம் ஒண்ணா நம்பர்ச் சந்துங்கிறது தெரியுமில்லே'ன்னேன். அடுத்த நாள் நீங்க மதுரத்தைப் பற்றியும் விசாரிச்சீங்க! 'தனபாக்கியத்தோட மகள்'னும் பதில் சொன்னேனே?"

"அப்ப உண்டான அருவருப்புத்தான் இன்னும் போகலை. கோவில்லே வேறே, அவளோட யாரோ ஒரு பணக்கார ஜமீந்தார் உட்கார்ந்திருந்தானே அன்னிக்கி?"

"அதுக்கு அவ என்ன செய்யுவா?"

"உடம்பை விற்கிற பாவம் மிகமிக மோசமானது!"

"மனுஷாளோட மனசைப் புரிஞ்சுக்காமே உதாசீனமும் வெறுப்பும் காட்டறது அதைவிடப் பாவம் தம்பீ! அஹிம்சையும் சத்தியமும் காந்தி மகாத்மாவோட உபதேசங்கள். ஒரு சத்தியாக்கிரகிக்கு இத்தனை உதாசீனம் கூடாதுங்க..."

அவனால் பத்தருக்குப் பதில் சொல்ல முடியவில்லை. மறுபடியும் தலை குனிந்து மௌனமானான் அவன். மதுரத்தை அவன் புரிந்து கொள்ளும்படி செய்வது எப்படி என்ற யோசனையில் பத்தரும் மூழ்கினார். 'அவளோ ராஜாராமன் மேல் உயிரையே வைத்து உருகிக் கொண்டிருக்கிறாள்! இந்தத் தம்பியின் மனத்திலோ உதாசீனமும் வெறுப்பும் நிரம்பிக் கிடக்கின்றன. எப்படியாவது இந்த உதாசீனத்தை மாற்றியாக வேண்டும் என்று தோன்றியது அவருக்கு. பூப்போன்ற மிருதுவான மனமும் கோமளமான சுபாவமும், அதிரப் பேசாத இங்கிதமும் நிரம்பிய மதுரம் இந்த உதாசீனத்தைத் தாங்கி நிற்காமல் உருகிவிடுவாள் என்பது அவருக்குத் தெரியும்.

பத்தரிடம் மறுபடியும் அவனே பேசினான்.

"உங்க வீட்டிலே காய்ச்சின பால்னு நினைச்சு, அதைக் குடிச்சேன்! தெரிஞ்சிருந்தா அதை தொட்டிருக்கக்கூட மாட்டேன்."

"ஆமாமா? எங்க வீட்டிலேதானே நித்த நித்தம் குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம்லாம் போட்டுப் பால் காய்ச்சிக் குடிச்சிக்கிட்டு இருக்கோம்? சொல்ல மாட்டீங்களா, பின்னே?"

"இந்த மெத்தை தலைகாணியெல்லாம் நீங்க வாங்கியிருக்கப்படாது பத்தரே! அவள் இதுவரை வாசகசாலைக்கும் முத்திருளப்பன் குடும்பத்துக்கும், மற்றதுக்கும், எவ்வளவு குடுத்திருக்காளோ, அவ்வளவையும் கணக்குப் பார்த்துச் சொல்லுங்க. நாளைக்கு மேலூர் போயிட்டு வரேன். வந்ததும், கணக்குத் தீர்த்துப்பிடலாம்."

"தீர்ர கணக்கு இல்லீங்க தம்பி, இது! ஆத்திரத்துலே பேசறீங்க. நிதானமா யோசியுங்க. பின் பக்கத்துச் சந்திலே எத்தினியோ பாவப் பிறவிங்க இருக்கு. அந்தச் சேற்றிலே இந்த மதுரம் ஒரு செந்தாமரை. ஒரு தேச பக்தனுக்கு உபகாரம் பண்ணனும்கிற மனசு அதுக்கு வந்தப்பவே இதை நீங்க புரிஞ்சிட்டிருக்கணும். பணத்தை எண்ணித் திருப்பிக் கொடுத்திடலாம். ஆனா, அந்த நல்ல மனசை நீங்க திருப்பித் தர முடியாது. பணத்தைத் திருப்பிக் கொடுத்தா, அந்த நல்ல மனசுலே முள்ளை வாரிக் கொட்றாப்ல இருக்கும்..."

ஃபண்டாபீஸ் மணி பதினொன்று அடித்தது.

"தூங்குங்க தம்பி! நான் வீட்டுக்குப் போறேன். தயவு செஞ்சு மெத்தையிலே படுத்துக்கங்க. குடுத்தவங்க - நல்லெண்ணத்தோட, மனசு தவிச்சுத் தவிச்சு, அம்மாவுக்குத் தெரியாமே, அல்லசலுக்குத் தெரியாமே, உங்க உடம்பு நோகுமேன்னு வேதனைப்பட்டுக் கொடுத்திருக்காங்க! சத்தியமான அன்பை அவமானப்படுத்திப்பிட்டா, அப்பறம் காந்திக்குப் பின்னாலே போறதுக்குக்கூட நமக்கு யோக்கியதை இருக்காது."

கூறிவிட்டுப் பத்தர் புறப்பட்டார். 'காந்திக்குப் பின்னாலே போறதுக்குக்கூட யோக்கியதை இருக்காது' என்று தான் கூறிய கடுமையான வாக்கியத்துக்கு ராஜாராமன் மிகவும் ஆத்திரம் அடைந்து ஏதாவது கடுமையாகப் பதில் சொல்லுவான் என்று அவர் எதிர்பார்த்தார். அவன் பதில் சொல்லாமல் யோசிக்கவே, தன் வார்த்தைகளால் அவன் மனம் மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருக்கிறதென்பதை உணர முடிந்தது அவரால்.

கதவைத் தாழிட்டுக் கொள்ளுமாறு மீண்டும் கூறிவிட்டுப் படியிறங்கினார் அவர். கதவைத் தாழிட்டுக் கொண்டு சிறிது தயங்கி நின்றபின், ஏதோ முடிவுக்கு வந்தவன் போல் அவன் அந்த மெத்தையில் நடுவாகப் படுத்துக் கொண்டான். தலையணை மெத்தை எல்லாம் பூவும், சந்தனமும் மணந்தன. பச்சைக் கற்பூர வாசனை கமகமத்தது. நீண்ட நேரம் பத்தர் சொல்லியவற்றையெல்லாம் யோசித்துக் கொண்டே படுத்திருந்தான் அவன். அவர் சொல்லியது நியாயமென்றே அவனுக்குப் பட்டது.

'நான் இத்தனை வெறுக்கும்படி அவள் அப்படி என்னதான் செய்துவிட்டாள்! அவள் ஒண்ணாம் நம்பர்ச் சந்தில் பிறந்ததும், தனபாக்கியத்தின் கைகளில் வளர்ந்ததும், வாழ்வதும் அவள் பிழைகள் அல்லவே! மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது பெரிதில்லை. எப்படி இருக்கிறார்கள் என்பதுதான் பெரியது. ஜாதியையும், குலத்தையும் வைத்து மட்டும் நான் ஒருத்தியை உதாசீனம் செய்ய முடியுமானால், காந்தியை மனப்பூர்வமாகப் பின்பற்றுகிறவனாக இருக்க மாட்டேன்; உதாசீனம் - அரக்கர்களுக்காகவும், கருணை - மனிதர்களுக்காகவும், கடாட்சம் - தெய்வங்களுக்காகவும் உபகரிக்கப்பட்ட குணங்கள். எந்த அளவுக்கு மற்றவர்களை உதாசீனப்படுத்தும் குணம் எனக்குள் இருக்கிறதோ, அந்த அளவுக்கு நான் ராட்சஸனாகிறேன். எந்த அளவுக்கு மற்றவர்கள் மேல் கருணை காட்டும் சுபாவம் எனக்குள் இருக்கிறதோ அந்த அளவுக்கு நான் மனிதனாகிறேன். எந்த அளவுக்கு மற்றவர்கள் மேல் என் கடாட்சம் சுகத்தை உண்டாக்க முடியுமோ, அந்த அளவுக்கு நான் தேவதையாகிறேன். தேவதையாக முடியாவிட்டாலும் நான் மனிதனாகவாவது இருக்க வேண்டும்.'

ஸௌரி ஸௌரா சம்பவத்தின் போது மகாத்மா கூறிய அஹிம்சைத் தத்துவம் ராஜாராமனுக்கு நினைவு வந்தது. 'வெறுப்புக்கு அடிப்படை உதாசீனம்; குரோதத்துக்கு அடிப்படை வெறுப்பு. கொலை, கொள்ளைகளுக்கு அடிப்படை குரோதம். உதாசீனம் படிப்படியாக மனிதனை அரக்கனாக்குகிறது. கருணையோ படிப்படியாக மனிதனை தெய்வமாக்குகிறது.'

யோசித்துக் கொண்டே இருந்தவன் எப்போது தூங்கினோம் என்று தனக்கே தெரியாத ஒரு வேளையில் நன்றாக அயர்ந்து தூங்கி விட்டான். மெத்தை - தலையணைகளின் நளினமான நறுமணங்கள் அவனைச் சுகமான உறக்கத்திலும் தழுவியிருந்தன. தூக்கத்தில் ஒரு சொப்பனம்.

ஒரு தேவதை கை நிறைய மல்லிகைப் பூக்களை அள்ளிக் கொண்டு ஓடிவந்து அவன் பாதங்களில் கொட்டுகிறாள்.

அவன் விலகி நிற்க முயலுகிறான். கோபத்தோடு "இப்படிச் செய்ய உனக்கு அருகதையில்லை" என்று அவன் கூப்பாடு போடுகிறான்.

"பாதங்கள், அவற்றை வழிபடுகிறவர்களுக்குச் சொந்தம்," என்று சொல்கிறாள் அவள். சொல்லிய அளவில் யாரோ வீணை வாசிக்கிற குரல் கேட்கிறது. அவள் தோற்றம் மறைகிறது; வீணையும் நிற்கிறது. 'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு' என்று யாரோ மெதுவாக இனிய குரலில் பாடுகிறார்கள். தூக்கம் கலைகிறது.

அத்தியாயம் - 6

ராஜாராமன் எழுந்திருந்து கண்களைக் கசக்கிக் கொண்டு மொட்டை மாடிப்பக்கம் வந்து கைகளைத் தூக்கிச் சோம்பல் முறித்த போது, எதிர்ப்புறம் கைப்பிடிச் சுவரருகே மதுரம் நின்று கொண்டிருந்தாள்.

"சௌக்கியமா?" -

அடி மனத்திலிருந்து ஆத்ம பூர்வமாக வந்த அந்தக் குரல் சுகமான சங்கீதம் போல் ஒலித்தது. திடீரென்று, சௌந்தரியவதியான அவளை எதிரே சந்தித்ததும் அவனுக்குப் பேச வரவில்லை. 'சௌக்கியம்' என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டி வைத்தான்.

"அம்மா காரியம் ஆச்சுப் போலிருக்கே!"

"ம்! நாம் கொடுத்து வச்சது அவ்வளவுதான். என்ன செய்யலாம்?" - அவன் அவளுக்குப் பதில் சொன்னான்.

"ரொம்ப இளைச்சுப் போயிட்டீங்க..."

"....."

"உடம்பும் கறுத்துப் போயிருக்கே?"

அந்தப் பரிவான விசாரணையின் கனிவில் மூழ்கி, ஒன்றும் பதில் சொல்ல முடியாமல் தவித்த ராஜாராமன்...

"இப்பப் பாடினது யாரு, நீதானே?" - என்று கேள்வியை வேறு பக்கம் திருப்பினான்.

அவள் சிரித்தாள்.

"ஏன்? நான் தான் பாடினேன்! உங்களைச் சிரமப் படுத்தாமல் தூக்கத்திலிருந்து எழுப்ப எனக்கு வேற உபாயம் தெரியலே?"

"என்ன பாடினே?"

"'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு'ன்னு பாடினேன். ஏன்? பாட்டுப் பிடிக்கலியா உங்களுக்கு?"

"ரொம்பப் பிடிச்சிருந்தது! காலங்கார்த்தாலே கேட்கறதுக்கு சுகமா இருந்தது; அதான் கேட்டேன்."

"இன்னொரு தரம் பாடட்டுமா?"

"பாடேன்..."

"தெலியலேது ராமா பக்தி மார்க்கமு!"

- அவள் பாடத் தொடங்கியதுமே குறிக்கிட்டு கேட்டான் அவன்;

"இதுக்கென்ன அர்த்தம், மதுரம்?"

"ராமா! உன்னைப் பக்தி செய்யும் மார்க்கம் தெரியவில்லையே?" என்று அவன் பக்கமாகக் கையைச் சுட்டிக் காட்டிப் பதில் கூறினாள் அவள். அப்படிப் பதில் சொல்லும் போது அவள் முகத்தில் வெட்கமும் புன்னகையும் போட்டியிட்டன.

அதைக் கேட்டு ராஜாராமனுக்கு மெய்சிலிர்த்தது. இரண்டு அர்த்தத்தில் அவள் அந்த வாக்கியத்தைச் சொல்லியதை அவன் இதயம் உணர்ந்தது. 'காவியம், அலங்காரம் எதுவுமே கற்காமல் தாசிகளுக்கு எப்படி இவ்வளவு நயமாக உரையாட வருகிறது? இவர்கள் சங்கீதத்தை விட நயமாகச் சம்பாஷிக்கிறார்கள். நிருத்தியத்தை விட லலிதமாகவும் கோமளமான சுபாவத்தோடும் பழகுகிறார்கள். இந்தக் கவர்ச்சிகள் யாவும் இவர்களுக்குப் பரம்பரையான மூலதனம் போலும்!" - என்றெண்ணி உள்ளூற வியந்தான் அவன்.

"மதுரம்! எங்கே அந்த அர்த்தத்தை இன்னொரு தரம் சொல்லு?"

அவள் நாணித் தலைகுனிந்தாள். அதிகாலையில் கண்ட கனவு நினைவு வந்தது அவனுக்கு.

"இன்று காலையில் உன்னுடைய பூக்கள் அர்ச்சிக்கும் பாக்கியம் கால்களுக்குக் கிடைக்கவில்லை மதுரம்?"

"தேவதைகளின் பாதங்கள் அர்ச்சிக்க முடியாத எல்லை வரை விலகிப் போகும் போது, பக்தி செய்கிறவர்களுக்கு அவற்றை அடையும் மார்க்கம் புரிவதில்லை; நடுவில் எத்தனை சுவர்களோ தடுக்கின்றன..."

- மறுபடியும் அவள் பாடிய சங்கீதத்தை விடப் பேசிய சங்கீதம் நயமாயிருப்பதை உணர்ந்தான் அவன். வாசக சாலைக்கும், முத்திருளப்பன் குடும்பத்துக்கும் பத்தர் மூலம் உதவி செய்ததற்காக அவளுக்கு மனப்பூர்வமாக நன்றி சொல்ல நினைத்து நினைத்தபடி வார்த்தைகள் வராமல் அவன் ஏதோ சொல்லத் தொடங்கிய போது,

"அதுக்கென்ன இப்ப? நான் பெரிசா ஒண்ணும் பண்ணிடலை" - என்று பெருந்தன்மையாகப் பதில் சொல்லிப் பேச்சை உடனே முடித்துவிட்டாள் அவள்.

- அந்தச் சமயத்தில் உட்புறமிருந்து அவள் தாய் தனபாக்கியத்தின் குரல் அவளைக் கூப்பிடவே,

"அம்மா கூப்பிடறா! அப்புறமாப் பார்க்கறேன். உங்க உடம்பு தேறணும். கவனிச்சுக்குங்கோ..." - என்று கூறிவிட்டு அன்னமாய் அசைந்தசைந்து நடந்து போய் விட்டாள்.

காலையில் சலூனுக்குப் போய் முடி வெட்டிக் கொள்ள நினைத்திருந்தான் அவன். கீழே பத்தர் 'கில்ட்' கடையைத் திறந்திருந்தார். அவரிடமே கொஞ்சம் உமிக்கரி வாங்கிப் பல் விளக்கி முகம் கழுவிக் கொண்டு சலூனுக்குப் புறப்பட்டான் ராஜாராமன்.

அவன் முடிவெட்டிக் கொண்டு திரும்பி வந்தபோது பத்தர் அவனுக்குச் சொல்வதற்காகத் தகவல் வைத்திருந்தார்.

"காந்தி - இர்வின் உடன்படிக்கையைக் கொண்டாடும் சந்தர்ப்பத்தை ஒட்டி மாகாண காங்கிரஸ் மாநாடு இங்கே மதுரையில் கூடப் போகிறதாம். சத்தியமூர்த்தி தலைமை வகிக்கப் போகிறாராம். பெரிய ஊர்வலத்துக்கும் ஏற்பாடு செய்யணுமாம். விருதுப்பட்டிக் காமராஜ் நாடார், முத்துசாமி ஆசாரி, எல்லாரும் வந்திருக்காங்களாம். பூர்வாங்கக் கூட்டம் இன்னிக்குப் பதினொரு மணிக்கு இருக்காம். உங்களை வரச் சொல்லித் தகவல் சொல்லி அனுப்பியிருக்காங்க. குளிச்சிட்டுப் புறப்படுங்கள்" என்றார் பத்தர்.

சத்தியமூர்த்தி வரப்போகிறாரென்று கேள்விப்பட்டு அவனுடைய வாலிப உள்ளம் துள்ளியது. அவருடைய அற்புதமான, ஆணித்தரமான பிரசங்கத்தைக் கேட்கலாம் என்று தோன்றிய போது, இளம் தேசபக்தன் ஒருவனுக்கு இயல்பாக ஏற்படக் கூடிய குதூகலம் அவனுக்கும் ஏற்பட்டது. குளித்து உடைமாற்றிக் கொண்டு - சித்திரை வீதி மூலை ஹோட்டலில் ஏதோ சாப்பிட்டுவிட்டு அவசர அவசரமாகக் கமிட்டி அலுவலகத்துக்கு விரைந்தான் அவன். அங்கே கூடியிருந்த பெரியவர்கள் எல்லாரும் அவனை அனுதாபத்தோடு விசாரித்தார்கள். செய்தி தெரிந்த சிலர் அவன் தாய் காலமானது பற்றித் துக்கமும் கேட்டார்கள்.

"இனிமே என்ன கவலை? நம்மூர் 'சுபாஷ் போஸ்' கூட்டத்துக்கு வந்தாச்சு!" என்று வேடிக்கையாக அவனை வரவேற்றார் ஒரு தேசபக்தர். உள்ளூர் தேசபக்தர்கள் அவனுடைய உயரமான - கம்பீரமான தோற்றத்தை வைத்து செல்லமாக அவனை, 'மதுரை போஸ்' - என்று அழைப்பது வழக்கம். வெண்ணிறக் கதர்க் குல்லாய்களோடு கூடியிருந்த அந்தக் கூட்டத்தின் தலைகளைப் பார்த்த போது பரிசுத்தமான கடமையைச் சிரமேற் சுமந்தபடி அவர்கள் எல்லாரும் அமர்ந்திருப்பதாகத் தோன்றியது அவனுக்கு.

"ஊர்வலத்துக்கு ஏற்பாடு பண்றத்துக்கும், மகாநாட்டு சேவாதளத் தொண்டர்களை மேற்பார்த்துக்கிறதுக்கும் ராஜாராமனை நியமிச்சுடலாம்" - என்றார் ஜோசப் சார். மற்றவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டார்கள். ஊர்வலத்துக்கும், மாநாட்டுக்கும், அவரவர்களால் முடிந்ததை வசூல் செய்ய வேண்டும் என்று கமிட்டிக் கூட்டத்தில் கூறப்பட்டது. கதர்ப் பிரசாரத்தில் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டுமென்று பிரதிக்ஞை எடுத்துக் கொள்ளப்பட்டது. "பாரதி பாடல்களைப் பிரபலப் படுத்துவது ஒவ்வொரு தேசியவாதிக்கும் கடமையாக இருக்க வேண்டும்" - என்று சீநிவாச வரதன் உற்சாகமாகக் கூறினார். அவருடைய மனைவி பத்மாஸனி அம்மாள் அடக்கமே உருவாக அருகே அமர்ந்திருந்தாள்.

"மாமா! நீங்க கொடுத்த பாரதி பாடல் புஸ்தகத்தை அநேகமாக மனப்பாடமே பண்ணிட்டேன்" - என்று ராஜாராமன் அவரிடம் கூறியபோது, "சபாஷ்டா அம்பி!" - என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார் சீநிவாச வரதன். 'அம்பி' என்று கூப்பிட்டால் சிறுவயசிலேயே அவனுக்குக் கோபம் வரும். பலரிடம் அப்படிக் கோபப்பட்டுமிருக்கிறான்; வாலிபனான பிறகும், சீநிவாச வரதன் சார் அப்படிக் கூப்பிடும் போது மட்டும் அவனுக்குக் கோபமே வருவதில்லை.

கமிட்டி ஆபீஸிலிருந்து மறுபடி அவன் வாசக சாலைக்கு வரும்போது ஒரு மணிக்கு மேலாகிவிட்டது.

"டிபன் காரியர்லே சாப்பாடு மேலே இருக்கு! போய்ச் சாப்பிடுங்க தம்பீ!" - என்றார் பத்தர். சந்தேகத்தோடு அவன் அவரைக் கேட்டான்.

"ஏது? உங்க வீட்டிலேருந்து கொண்டாந்தீங்களா?"

பத்தர் சிரித்தார். பதில் சொல்லத் தயங்கினார்.

"எங்கேயிருந்து கொண்டாந்தா என்ன? போய்ச் சாப்பிடுங்க. அப்புறம் பேசிக்கலாம்."

அவன் மேலே படியேறி வந்தான். டிபன் கேரியரில் 'தனபாக்கியம்' என்ற எழுத்து அடித்திருந்தது. அவனுக்குக் கொள்ளவும் முடியாமல், தள்ளவும் முடியாமல் மனசு தவித்தது. பத்தரைக் கூப்பிட்டுத் திருப்பிக் கொடுக்கச் சொல்லிவிட்டு ஓட்டலுக்குப் போய்விடலாமா என்று ஒரு கணம் தோன்றினாலும், அடுத்த கணமே மதுரத்துக்கு மனம் புண்படுமே என்று தயக்கமாகவும் இருந்தது.

தயக்கத்தோடு தயக்கமாக அவன் சாப்பிட்டுக் கை கழுவியதும் பத்தர் மேலே வந்தார்.

"கவலைப் படாதீங்க தம்பீ! தப்பான காரியத்துக்கு நான் எப்பவும் ஒத்தாசையாக இருக்க மாட்டேன். எது கில்ட், எது அசல்னு எனக்கு நல்லாத் தெரியும். வீணா மனசு நோகப் பண்ணாதீங்க."

அவர் என்ன சொல்கிறார், யாரைப் பற்றிச் சொல்கிறார் என்பது அவனுக்கு நன்றாகப் புரிந்தது. அவன் அவரை மறுத்துப் பேசவில்லை. அந்த மௌனத்தின் அங்கீகாரம் பத்தருக்குத் திருப்தியளித்திருக்க வேண்டும். உடனே அந்தப் பேச்சை விட்டுவிட்டு, மகிழ்ச்சியோடு கமிட்டி ஆபீஸ் கூட்டத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார் அவர். அவனும் அவருக்கு அதை விவரித்துச் சொல்லலானான். பத்தர் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். சொல்லி முடிந்ததும், "சாயங்காலம் முத்திருளப்பனும், குருசாமியும் வருவாங்களா? இல்லே யாரிட்டவாவது தகவல் சொல்லி அனுப்பணுமா?" - என்று அவரைக் கேட்டான் அவன்.

"தகவல் சொல்லி அனுப்ப வேண்டியதில்லை. அவர்களே சாயங்காலம் வருவாங்க. பொழுது சாயற வரைக்கும் பார்ப்போம்" - என்று பதில் சொல்லிவிட்டுக் கடை வேலையைக் கவனிக்கச் சென்றார் அவர். மொட்டை மாடிப் பக்கமிருந்து மறுபடி அந்த வீணைக்குரல் ஒலித்தது.

"சாப்பாடு பிடிச்சிருந்ததா?" காலி டிபன் கேரியரோடு எழுந்து படியேறி மொட்டை மாடிக்குப் போனான் அவன். டிபன் கேரியரைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, அவன் கேட்டான்:

"நீ என்னை ரொம்பச் சிரமப்படுத்தறே மதுரம்."

"உங்களை முதமுதலாகப் பார்த்ததுலேருந்து இந்தக் கொஞ்ச மாசமா என் மனசை நீங்க எவ்வளவு சிரமப்படுத்தியிருப்பீங்க தெரியுமா? அதுக்குப் பதில் நீங்களும் இப்ப சிரமப்படுவதுதான் நியாயம்..."

"இப்படி நிதம் சாப்பாடு கொடுக்கறது - சாத்தியமில்லை..."

"முடிஞ்சபோது கொடுக்கிறேன். முடியாதபோது வெளியிலே சாப்பிடுங்கோ..."

"பிரயோஜனப்படாத விருந்தாளிக்கு விழுந்து விழுந்து உபசாரம் செய்கிறாய்?"

"வந்து போகிறவர்கள் தான் விருந்தாளிகள். நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்களை அந்த வார்த்தை குறிக்காது..."

"எங்கே தங்கிவிட்டவர்களை?"

"இங்கே!" - என்று நெஞ்சைத் தொட்டுக் காட்டிச் சிரித்துக் கொண்டே அவள் உள்ளே போய்விட்டாள். வாதங்களால் ஜெயிக்க முடியாத நளினத்துக்குத் தோற்றுப் போய் உள்ளே படியிறங்கித் திரும்பினான் ராஜாராமன். அவளிடம் எப்படிப் பேசி ஜெயிப்பது, அல்லது தோற்கச் செய்வதென்று தெரியவில்லை அவனுக்கு. புதுக்கோட்டையிலிருந்து வரும்போது பிருகதீஸ்வரன் அவனுக்கு நிறையப் புத்தகங்கள் கொடுத்தனுப்பியிருந்தார்.

அன்று சாயங்காலம் வரை புத்தகம் படிப்பதில் கழிந்தது சாயங்காலம் முத்திருளப்பனும், நண்பர்களும் வந்தார்கள். "ஊர்வலம், மாநாட்டு ஏற்பாடுகளைக் கவனிக்கணும். சத்தியமூர்த்தி வராராம்" - என்று முத்திருளப்பன், குருசாமி முதலிய நண்பர்களிடம் விவரித்தான் ராஜாராமன்.

"மாகாண மாநாடு தங்கள் ஊரில் நடக்கப் போகிறது. சத்தியமூர்த்தி தலைமை வகிக்க வரப்போகிறார்" - என்ற செய்தி எல்லோருக்குமே உற்சாகத்தை அளித்தது. வசூலில் தங்கள் பங்கை அதிகமாகக் கொடுப்பதற்காக நான்கு கோபுர வாசலிலும் உண்டியல் ஏந்தி நிற்கலாம் என்று யோசனை கூறினான் குருசாமி. முத்திருளப்பன் குருசாமியைக் கிண்டல் பண்ணினார்.

"மீனாட்சியம்மனுக்குப் போட்டியா என்ன? பையிலே இருக்கறதை எல்லாம் வாசல்லேயே நீ பறிச்சிக்கிட்டியின்னா கோயிலுக்கு உள்ளேயிருக்கிற உண்டியல்களோட கதி என்ன ஆகிறது?"

"பாரத மாதாங்கிற பெரிய அம்மனைச் சிறை மீட்கணும்னா எதையும் செய்யலாம். அந்த மீனாட்சியம்மனுக்கே வாயிருந்தா, 'வாசல்லே நிற்கிற கதர் குல்லாய்க்காரனோட உண்டியல்லே உள்ளே போடற காசைப் போடுங்க'ன்னு அதுவே சொல்லி ஆசீர்வாதம் பண்ணும்" என்று குருசாமி முத்திருளப்பனுக்குப் பதில் சொன்னான்.

"நீ சொல்றே அப்பனே! ஆனா எத்தினி மகாத்மாக்கள் பிறந்தாலும், இந்த ஜனங்களுக்குப் புத்தி வராது போலேருக்கு. இன்னிக்கு வஸ்திராலயத்திலேருந்து ஒரு மூட்டை கதர்த்துணியை வாங்கிச் சுமந்துக்கிட்டுத் தெருத் தெருவாகப் போனேன். ஒருத்தன் கேட்டான், "வாத்தியாரையா, உமக்கேன் இந்த வம்பு! 'விருதுப்பட்டிச் சனியனை வெலைக்கு வாங்கறாப்ல' இதுல நீர் ஏன் போய் மாட்டிருக்கிறீரு? பேசாம டானா டாவன்னாச் சொல்லிக் கொடுத்துக்கிட்டிருக்கப்படாது?'ன்னு. இன்னொரு ஷர்பத் கடைக்காரன் கேலி பண்ணினான். இடம் தெரியாமே ஒரு ஜஸ்டிஸ் பார்ட்டி வக்கீல் வீட்டிலே போயிக் கதர் சட்டையோட நுழைஞ்சி வச்சேன்; அடிக்கவே வந்தாங்க. கடைசியிலே எங்கிட்ட மனசு கோணாமக் கதர் வாங்கினது யாருங்கிறே? நான் வேலை பார்த்தப்பக் கூட இருந்த ரெண்டு மூணு வாத்தியாருங்களும் தெற்கு வாசல் நல்லமுத்துப் பிள்ளையும் தான் முகமலர்ந்து வாங்கினாங்க-"

முத்திருளப்பன் கதர் விற்கப்போன அனுபவத்தைக் கேட்டு ராஜாராமனுக்கு மிகவும் வருத்தமாயிருந்தது. காரைக்குடியில் விடைபெற்றுக் கொண்டு புறப்படும்போது பிருகதீஸ்வரன் தன்னிடம் கதர் விற்பது பற்றிக் கூறி அனுப்பியிருந்தது மீண்டும் ஞாபகம் வந்தது.

"முத்திருளப்பன்! நாளைக்கு வஸ்திராலயத்துக்குப் புறப்படறப்போ, இங்கே வந்து போங்க. நானும் உங்களோட வரேன்!" - என்றான் ராஜாராமன்.

"நீ வரணுமா, ராஜா? மாகாண மாநாட்டு வேலை, ஊர்வல ஏற்பாடு எல்லாம் இருக்கே. அதையெல்லாம் கவனிக்க வேண்டாமா நீ?" - என்றார் முத்திருளப்பன். "இருந்தாலும் பரவாயில்லை! கொஞ்ச நாழி சுற்றலாம்" - என்று ராஜாராமன் பிடிவாதம் பிடித்தான். மாகாண மாநாட்டு வேலைக்காக வெளியே சுற்றிப் பார்க்க வேண்டியவர்களை அன்று மாலையிலேயே பார்த்தார்கள் அவர்கள். சுப்பராமன் அவர்களையும் ஜோசப் சாரையும் பார்த்துச் சில யோசனைகள் கேட்டுக் கொண்டார்கள். வைத்தியநாதய்யர் வேறு வரச் சொல்லியிருந்தார். ஏழரை மணிக்குச் சந்தைப் பேட்டைத் தெருவிலிருந்து முத்திருளப்பனும், குருசாமியும் மற்ற நண்பர்களும் விடை பெற்றுக் கொண்டு போய்விட்டார்கள். வாசகசாலைக்குப் போவதற்கு முன் ராஜாராமனுக்குச் சொந்தத் தேவைக்காகச் சில சாமான்கள் வாங்க வேண்டியிருந்தது.

மதுரையில் வீட்டை ஒழித்துச் சாமான்களை மேலூரில் கொண்டுபோய்ப் போடுவதற்கு முன் பத்தர் ஞாபகமாக அவனுடைய துணிமணிகள், புத்தகங்கள் அடங்கிய டிரங்குப் பெட்டியை வாசகசாலையில் கொண்டு வந்து வைத்திருந்தார். ஆனாலும், தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்ள ஒரு வாளி, அவசரத்துக்கு வெந்நீர் வைத்துக் கொள்ள ஒரு சிறிய கரியடுப்பு எல்லாம் வாங்க வேண்டியிருந்தது. புது மண்டபத்துக்குப் போய் இந்தச் சாமான்களை வாங்கிக் கொண்டு, கீழவாசல் வழியாய் வடக்காடி வீதி வந்து குறுக்கு வழியில் வாசக சாலையை அடையும் போது மணி எட்டரை ஆகியிருந்தது.

பத்தர் கில்ட் கடையைப் பூட்டிக் கொண்டு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார். சாவியை அவனிடம் கொடுத்துவிட்டு,

"உடம்பு ரொம்ப இளைச்சுக் கறுத்துப் போயிருக்கீங்களாம், தம்பீ! 'வெளியே கண்ட கண்ட இடத்துல சாப்பிட வேண்டாம், கொஞ்ச நாளைக்கு நானே எல்லாம் தரேன். உடம்பு தேறுகிறவரை இங்கேயே சாப்பிடச் சொல்லி அவரிட்ட வற்புறுத்திச் சொல்லுங்கோ, பத்தரே'ன்னு மதுரம் பிடிவாதம் பிடிக்குது..."

"அது எப்படி சாத்தியமாகும், பத்தரே? ஒரு நாளைப் போல அம்மாவுக்குத் தெரியாமே, அதுதான் எப்படிச் சாப்பாடு எடுத்துக் கொடுக்கும்? நான் தான் நாலு இடம் அலையறவன் எப்படிச் சாப்பாட்டுக்காக இங்கேயே ஓடி வர முடியும்?"

"உங்களுக்கு முடியுமா இல்லையங்கிறதுதான் கேள்வியே தவிர, அதுக்கு முடியுமாங்கறது கேள்வியே இல்லை, தம்பி. அந்த வீட்டுக்கு அதுதான் ராணி. இந்த மாதிரி விஷயத்துலேயே உங்க கெட்டிக்காரத்தனம் என் கெட்டிக்காரத்தனம் எல்லாம் அதனோட சாமர்த்தியத்துக்கு உறை போடக் காணாது. குறிப்பறிஞ்சு காரியங்கள் செய்யறத்துலே அதுக்கு இணையே சொல்ல முடியாது. தனபாக்கியத்தைத் தவிர அந்த வீட்டிலே - அவ தம்பி - மதுரத்தோட மாமாக்கிழவன் ஒருவன் இருக்கிறான். ரொம்ப நாளா மிருதங்கத்தைத் தட்டித் தட்டியே என்னவோ, அவன் டமாரச் செவிடாகிப் போய் விட்டான். மங்கம்மான்னு ஒரு வேலைக்காரக் கிழவி இருக்கா. அவளே தான் சமையற்காரியும். அவ மதுரத்துக்கு ரொம்ப அந்தரங்கம். தனபாக்கியம் பெத்தாளே தவிர, மதுரத்தை சீராட்டி ஊட்டி வளர்த்தவள் மங்கம்மா தான். அவளுக்கு மதுரம் செல்லப் பெண் மாதிரி!

"இப்ப எதுக்கு இந்தக் குலமுறைக் கதையெல்லாம் சொல்றீங்க, பத்தரே?"

"ஒண்ணுமில்லே! கொஞ்ச நாளைக்கு அது சொல்றபடிதான் செய்யுங்களேன்னு சொல்ல வந்தேன்..."

"பத்தரே! நான் பெரிய தப்புப் பண்ணி விட்டேன்."

"என்ன சொல்றீங்க தம்பீ?"

"உம்ம பேச்சைக் கேட்டு வாசக சாலைக்கு இந்த மாடியை வாடகைக்குப் பிடித்ததைத்தான் சொல்றேன்."

"அதிலே என்ன தப்பு?"

"என் பிரியமெல்லாம் தேசத்திற்காகச் செலவிட வேண்டிய சமயத்தில் இன்னொருவருடைய பிரியத்தில் நான் மூழ்க முடியாது."

"தேசத்து மேலே பிரியம் செலுத்துறதுலே மதுரமும் குறைஞ்சவ இல்லை. அதுவும் ராட்டை வாங்கி வச்சிக் கதர் நூற்குது. வீணை வாசிக்கிறதிலே உள்ள பிரியம், நூல் நூற்கிறதிலேயும் அதுக்கு இருக்கு. அதுவும் மகாத்மா காந்தியைத் தெய்வமாகக் கொண்டாடுது. அதுனோட வீட்டுக்கு வீணைக் கச்சேரி கேட்க வருகிற நாதமங்கலம் ஜமீந்தாரும், திருவேங்கடம் முதலியாரும், தென்கரை வக்கீலும் ஜஸ்டிஸ்காரங்கதான் என்றாலும் அது பிரிட்டிஷ் ஆட்சியை வெறுக்குது. அதுக்கு தேசத்துக்கு மேலே உள்ள பிரியமும், உங்க மேலே உள்ள பிரியமும் வேற வேற இல்லே. இரண்டும் ஒண்ணுதான். சொல்லப்போனா தேசத்துமேலே உள்ள பக்தியாலேதான் அதுக்கு உங்க மேலேயும் பக்தி ஏற்பட்டிருக்கு. உங்களைப் பார்க்கிறதுக்கு முந்தியே அது ராட்டை நூற்குது, உங்களைப் பார்க்கிறதுக்கு முந்தியே காந்தியைக் கொண்டாடுது."

"அதனாலே?"

"தம்பி! இங்கே பாருங்க! எனக்குச் சுத்தி வளைச்சுப் பேச வராது. இது கில்ட் இல்லே; அசல் சொக்கத் தங்கம். அவ்வளவுதான் நான் சொல்வேன். அப்புறம் உங்கபாடு."

"யாரோ நாகமங்கலம் ஜமீந்தார்னீங்களே? யாரது...?"

"அதான் அன்னிக்குக் கோவில்லே பாத்தீங்களாமே தம்பீ? கழுத்திலே தங்கச் சங்கிலியோட இருந்திருப்பாரே!"

"அவர் எதுக்கு அங்கே வருகிறார்?"

"எப்பவாவது அவரும், திருவேங்கடம் முதலியாரும், தென்கரை வக்கீலும் வீணை கேட்க வருவாங்க..."

சிறிது நேரம் ஒன்றும் பேசத் தோன்றாமல் நின்றான் ராஜாராமன். வாளியையும் கும்மட்டி அடுப்பையும் அவன் கையிலிருந்து வாங்கிக் கொண்டு மாடி வரை உடன் வந்து கொடுத்து விட்டுப் புறப்பட்டார் பத்தர்.

அறையில் குப்பென்று மல்லிகைப் பூ வாசனை கமகமத்தது. ராஜாராமன் திரும்பிப் பார்த்தான். வாசகசாலைச் சுவரிலிருந்த காந்தி படம், திலகர் படம், பாரதியார் படம் எல்லாவற்றிற்கும் மல்லிகைப் பூச்சரம் போட்டிருந்தது. இது மதுரத்தின் வேலையாகத்தான் இருக்க வேண்டுமென்று தோன்றியது. மொட்டை மாடியை இணைக்கும் படிக்கு மேலே மரநிலைதான் உண்டு, கதவு கிடையாது. ஆனாலும், பின்பக்கத்து மொட்டை மாடிச் சுவருக்கும் வாசகசாலை மொட்டைமாடிச் சுவருக்கும் நடுவே முக்கால் பாக நீளம் இடைவெளி உண்டே; எப்படித் தாவி வர முடியும் என்பது அவனுக்கு வியப்பாகவே இருந்தது. சந்தேகத்தோடு மேலே படியேறிப் போய்ப் பார்த்தான் அவன். இரண்டு சுவர்களையும் ஒரு பழைய ஊஞ்சல் பலகை பாலம் போட்டாற்போல இணைத்துக் கொண்டிருந்தது. அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மதுரம் வெள்ளித் தட்டில் - ஆவி பறக்கும் இட்லிகளுடன் அந்தப் பலகை வழியே ஏறி நடந்து வந்தாள். அவள் கையில் இலையும் இருந்தது.

ராஜாராமனுக்குத் திடீரென்று அவளைக் கேலிசெய்து பார்க்க வேண்டுமென்று தோன்றியது.

"சுவறேறிக் குதிக்கிற அளவுக்கு வந்தாச்சு! இல்லியா மதுரம்?"

"என்ன செய்யறது? போனாப் போறதுன்னு நான் அதைச் செய்யாட்டா, நீங்க செய்ய வேண்டி வருமே!"

"நான் ஏன் செய்யறேன்?"

"வேண்டாம்! நானே ஏறிக் குதிச்சுக்கிறேன். வீணா அதுக்கு ஒரு சண்டையா? சாப்பிட உட்காருங்கோ."

"மொட்டை மாடியிலேயே உட்காரட்டுமா?"

"வேண்டாம்! திறந்த வெளியிலே சாப்பிடப்படாதுன்னு சாஸ்திரம். தவிர, வெக்கையாகவும் இருக்கும்..."

"சுவரேறிக் குதிக்கப்படாதுன்னு சாஸ்திரம் ஒண்ணும் இல்லை போலிருக்கு..."

"சுவரேறிக் குதிச்சுப் பாக்கறபடி என்னைச் சிரமப்படுத்தர தெய்வத்தைக் கேட்க வேண்டிய கேள்வி இது."

அவன் உள்ளே வந்து உட்கார்ந்தான். அவள் இலையைப் போட்டு இட்லியை எடுத்து வைத்தாள். அந்த வளைகளணிந்த அழகிய ரோஜாப்பூக் கை - வெள்ளை வெளேரென்று மல்லிகைப் பந்து போலிருந்த இட்லியை எடுத்து வைப்பது செந்தாமரைப் பூ ஒன்று வெண் தாமரைப் பூவைப் பரிமாறுவது போலிருந்தது. செல்லத்தம்மன் கோவில் செக்கு நல்லெண்ணெயும், மிளகாய்ப் பொடியும், இட்லிக்கு அமுதாய் இசைந்தன.

"உங்கம்மா வந்துடப் போறாளேன்னு பயமில்லையா மதுரம்? ரொம்ப நிதானமாப் பறிமாரறியே?"

"இன்னிக்குப் பிரதோஷம். பிரதோஷம், சோம வாரம்னா எங்கம்மாவும், மாமாவும் முதல்லே திருப்பரங்குன்றம், அப்புறம் மீனாட்சி கோயில், அப்புறம் பழைய சொக்கநாதர் கோயில், எல்லாத்துக்கும் போயிட்டு அர்த்த ஜாமம் முடிஞ்சப்பறம்தான் திரும்புவாங்க."

"நீ போகலியா கோவிலுக்கு?"

"என் கோவில்தான் இங்கே பக்கத்திலேயே வந்தாச்சே?"

இப்படிச் சொல்லிவிட்டு, அவன் ஆத்மாவிலேயே ஊடுருவிப் பதிவதுபோல் புன்னகை பூத்தாள் அவள். புதிய கரி அடுப்பும், வாளியும், அவள் பார்வையில் தென்பட்டன.

"என்னது? மெல்ல மெல்ல இந்த அறையிலேயே ஒரு பெரிய சம்சாரியா மாறிண்டு வாராப்லே இருக்கே..."

"ஆமாம், அதுவும் இந்தச் சமயத்தில் இந்த அறையை யாராவது பார்த்தால் ஒரு சம்சாரம் நடந்து கொண்டிருப்பது போல் தான் தெரியும்!"

இதைக் கேட்டு அவள் கலீரென்று சிரித்துவிட்டாள். சிரித்த உடனேயே நாணித் தலை கவிழ்ந்தாள். ஓரக்கண்களால் பருகுவதுபோல் அவனைத் தாபத்தோடு பார்த்தாள்.

"மதுரம்..."

"என்ன?"

"நீ ரொம்ப அற்புதமா வீணை வாசிக்கிறே!"

"இப்ப இங்கே கொண்டு வந்து வாசிக்கட்டுமா?"

"வேண்டாம்! காலையிலே நீ அங்கேயிருந்து வாசிக்கறதைக் கேட்டுத்தான் கண் முழிக்கிறேன்."

"உங்களை எழுப்பிவிடத்தான் நான் வாசிக்கிறேன், இல்லையா?"

"எழுந்திருக்கிறேன். மறுபடி உன் வாசிப்பு தூங்க வைத்து சொப்பனலோகத்துக்குக் கொண்டு போகிறது. தூங்கிவிடுகிறேன்."

"ஜாக்கிரதை! என் வீணைக்கச்சேரிக்கு ரேட் அதிகம். ஒரு கச்சேரிக்கு ஐநூறு ரூபாய் வாங்கறா எங்கம்மா. நாகமங்கலம் ஜமீந்தார் அதை இங்கேயே வந்து தந்துடறாரு."

"நான் ஜமீந்தார் இல்லையே, மதுரம்?"

"தேவதைகள் ஜமீந்தார்களைவிடப் பெரியவர்கள் - மரியாதைக்குரியவர்கள்-"

"சில சமயங்களில், நீ பாடுவதைவிடப் பேசுவதே சங்கீதமாயிருக்கிறது, மதுரம்..."

"நீங்க புகழாதீங்கோ, நீங்க புகழ்ந்தா எனக்குக் கிறுக்கே பிடிச்சுடும் போலிருக்கு."

- திடீரென்று வேறொரு விஷயம் ஞாபகத்துக்கு வந்து அதை அவளிடம் சொல்லத் தொடங்கினான் ராஜாராமன்.

"மாகாண காங்கிரஸ் மதுரையிலே கூடப் போறது. சத்தியமூர்த்தி தலைமை வகிக்கப் போறார். அதுக்கான சில வேலைகளை நானும் செய்யணும். நாளையிலேருந்து பண வசூலுக்காக உண்டியல் எடுக்கப் போறோம். பகல் சாப்பாடு எங்கெங்கே நேர்ந்ததோ, அங்கேதான். எனக்காக நீ பகல் சாப்பாடு வைக்க வேண்டாம். மறுபடி நான் சொல்ற வரை விட்டுடு..."

"அதுசரி, அந்த வசூலுக்கு, நானும் கொஞ்சம் பணம் தரலாமோ?"

"நீயா, ஏற்கனவே நீ நெறையச் செஞ்சிருக்கே, அதுக்கு நான் கடன் பட்டிருக்கேன். இப்ப வேறே சிரமம் எதுக்கு?"

"கடன் கிடன்னு நீங்க சொல்றதா இருந்தா இப்பவே நான் இங்கேயிருந்து எழுந்திருந்து போயிடுவேன். கொடுக்கிறதை மரியாதையா வாங்கிக்கணும். வாங்கிக்காட்டா உண்டியல்லே கொண்டு வந்து போடுவேன்; அப்ப எப்படித் தடுப்பீங்க நீங்க?" கேட்டுவிட்டுச் சிரித்தாள் அவள்.

"அது சரி! மரியாதையா வாங்கிக்கணும்னியே; அது யாருக்கு மரியாதை?"

"தப்புத்தான்? அப்பிடிச் சொன்னதுக்காகக் கன்னத்துலே போட்டுக்கிறேன்..."

"கன்னத்திலியும் போட்டுக்க வேண்டாம்; கால்லேயும் போட்டுக்க வேண்டாம்! பணத்தை எடு!"

அரைத்த சந்தனம் போல் செழுமை மின்னும் தோளில் ரவிக்கை மடிப்பிலிருந்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவனிடம் நீட்டினாள் அவள். அவன் திகைத்துப் போனான்.

அந்த நோட்டுக்களில் பச்சைக் கற்பூர வாசனை கமகமத்தது. அவன் வாங்கிக் கொண்டான்.

"பணம் மணக்கிறது, மதுரம்! கொடுத்தவர்களின் கைராசி போலிருக்கிறது!..."

"ஒரு வேளை வாங்கிக் கொண்டவர்களின் கைராசியாகவும் இருக்கலாம்."

திரும்பப் புறப்படும்போது, திடீரென்று அவன் எதிர்பாராத சமயத்தில், அவனுடைய பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு தட்டுடன் புறப்பட்டாள் அவள். அவள் செய்கை அவனை மெய்சிலிர்க்கச் செய்தது. அந்தச் சிலிர்ப்பிலிருந்து நீண்ட நேரமாக மீள முடியவில்லை. அவள் போன சிறிது நேரத்திற்குப் பின் அவளுடைய மாடியறையிலிருந்து பாடல் கேட்டது.

'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு' - உருகி உருகிப் பாடினாள். மிக இங்கிதமாகப் பக்தி செய்கிற ஒருத்தி பக்தி மார்க்கம் தெரியவில்லையே என்று பாடுவதைக் கேட்டு அவனுக்கு வியப்பாயிருந்தது. அந்த இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களைக் கண்களில் ஒற்றிக் கொண்டான் ராஜாராமன்.

அத்தியாயம் - 7

மறுநாள் காலையில் குருசாமி வசூலுக்கான உண்டியல்களோடு வந்தபோது முதல் உண்டியலில் தன் கையாலேயே அந்த இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளைப் போட்டான் ராஜாராமன். குருசாமியும் வேறு இரண்டு மூன்று தொண்டர்களும் உண்டியல்களோடு கோபுர வாசல்களுக்குச் சென்றார்கள். குளித்து உடை மாற்றிக் கொண்டு முத்திருளப்பனை எதிர்பார்த்துக் காத்திருந்தபோது - மதுரம் வந்தாள். அவள் கையில் ஒரு கூடை நிறையக் கதர் நூல் சிட்டங்கள் பெரிய கட்டாக இருந்தன.

"என்னது, மதுரம்?"

"எனக்கு நீங்க உபகாரம் பண்ணனும்."

"உபகாரமா? நானா?"

"ஆமாம்! இந்தச் சிட்டங்களைப் போட்டு ஒரு கதர்ப் புடவை - வாங்கிண்டு வந்து கொடுங்கோ!"

"எனக்கு ஆட்சேபணையில்லே மதுரம்! ஆனா, உங்கம்மா உன்னைக் கதர்ப் புடவை கட்டிக்க விடுவாளா?"

"விடாட்டா, உங்களைப் பார்க்க வர்ரப்போ மட்டும் கட்டிண்டு வருவேன்..."

"உனக்குக் கதர் பிடிக்குமா?"

"உங்களுக்கு எதெல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் எனக்கும் பிடிக்கும்..."

"அது சரி! ஆனா, நான் சிட்டத்தைக் கொண்டு போட்டுட்டுப் புடவை கேட்டால் - வஸ்திராலத்திலேயே சந்தேகப்படுவாளே மதுரம்? எங்கம்மாவும் போயிட்டா. நான் யாருக்காகப் புடவை வாங்கறேன்னு இல்லாத சந்தேகம்லாம் வருமே! என்ன செய்யலாம்?"

"உங்க கையாலே வாங்கிக் கட்டிக்கணும்னு எனக்கு ஆசை! மறுத்துச் சொல்லாதீங்க..."

அவன் நூல் சிட்டங்களை வாங்கிக் கொண்டான்.

"சாப்பிடறதுக்கு ஏதாவது கொண்டு வரட்டுமா?"

"வேண்டாம்; சிநேகிதர் ஒருத்தர் வரப்போறார். ரெண்டு பேருமாக் கதர் விற்கப் போறோம். மத்தியானமும் நான் இங்கே சாப்பிட வரமாட்டேன்."

"காப்பியாவது தரேனே?"

"விடமாட்டே போலிருக்கே?"

"விடமாட்டேன்கிற முடிவு என்னிக்கு மொதமொதலா இந்தப் பாதங்களைப் பார்த்தேனோ அப்பவே வந்தாச்சு..."

அவன் சிரித்தான்.

"எந்தக் கால்களை மனத்தினால் பற்றிக் கொண்டு விடுகிறோமோ அந்தக் கால்களை விடவே முடிவதில்லை."

சொல்லிவிட்டுக் காபி கொண்டு வரப் போனாள் மதுரம். அவள் வந்து நின்றுவிட்டுப் போனதால் அந்த அறையில் பரவிய நருமணங்கள் இன்னும் இருந்தன இந்தப் பெண்ணின் மேனியைக் கடவுள் சந்தனத்தாலும் பச்சைக் கற்பூரத்தாலும் மல்லிகைப் பூக்களாலும் படைத்திருக்கிறானோ - என்று நினைக்கத் தோன்றியது.

அவள் வருகிறவரை காலைத் தினசரிகளைப் புரட்டுவதில் கழிந்தது.

கீழேயிருந்து முத்திருளப்பனும், மேலே மொட்டை மாடியிலிருந்து உள்ளே இறங்கும் படிகளில் அவளும் ஒரே சமயத்தில் உள்ளே நுழையவே, ராஜாராமனுக்குத் தர்மசங்கடமாகப் போயிற்று. ஆனால் முத்திருளப்பன் சங்கடப்படவில்லை. "சௌக்கியமா அம்மா" - என்று மதுரத்தை விசாரித்தார் அவர். காபியை ராஜாராமனிடம் கொடுத்துவிட்டு, முத்திருளப்பனை வணங்கினாள் மதுரம்.

"உங்களுக்கும் கொண்டு வரேன் அண்ணா..."

"வேண்டாம்! நான் இப்பத்தான் சாப்பிட்டேன் அம்மா"

ராஜாராமன் ஆச்சரியப்பட்டான். 'தன் மனத்துக்குத் தான் இல்லாத பயங்களும், தயக்கங்களும் வந்து தொலைக்கின்றன போலும்! மதுரம் வந்து காபி கொடுப்பதைப் பார்த்து முத்திருளப்பன் சந்தேகப்படாமல் சுபாவமாகக் குசலம் விசாரிக்கிறார். மதுரம் பதறாமல், பயப்படாமல் அவரிடம் பேசுகிறாள்!' தன் மனப்போக்கிற்காக வெட்கினான் அவன். பத்தர் முத்திருளப்பனை ஏற்கனவே அவளுக்கு அறிமுகப்படுத்தியிருக்க வேண்டுமென்று தோன்றியது.

"உங்க சிநேகிதருக்குச் சொல்லுங்கண்ணா! ரொம்ப அலையறார். இளைச்சுக் கறுத்துப் போயாச்சு..."

"என்னப்பா ராஜா, சொல்றது காதிலே விழுந்ததா?"

"....."

"உன்னைத்தானப்பா, காதில் விழுந்ததா?"

"விழுந்தது" என்று சொல்லிக் கொண்டே டபரா டம்ளரை மதுரத்திடம் நீட்டினான் ராஜாராமன்.

"என்ன! ஒரு புடவைக்குச் சிட்டம் போட்டாச்சா அம்மா? பேஷ்! நாளைக்கு இன்னும் கொஞ்சம் பஞ்சு கொணர்ந்து தரட்டுமா?"

"கொண்டு வாங்கோ அண்ணா!"

அவளுக்குச் சர்க்காவும் பஞ்சும் கொடுத்து நூற்கப் பழக்கியதே முத்திருளப்பனாகத்தான் இருக்க வேண்டுமென இந்த உரையாடலிலிருந்து ராஜாராமனுக்குப் புரிந்தது.

"இவரிட்ட சிட்டங்களைக் கொடுத்திருக்கேன்; புடவைதான் நல்லதாக் கிடைக்கணும்."

"இவரிட்டக் கொடுத்திட்டா நல்லாத்தான் கிடைக்கும்" என்று குறும்புத்தனமாகச் சிரித்தார் முத்திருளப்பன். மதுரம் இருவரிடம் சொல்லிக் கொண்டு போய்ச் சேர்ந்தாள்.

"புறப்படலாமா?" என்றார் முத்திருளப்பன்.

"இந்தப் பெண்..." என்று ராஜாராமன் ஏதோ ஆரம்பித்தபோது,

"இது பெண்ணே இல்லை; சரஸ்வதி! இதை எதிரே பார்க்கறப்பெல்லாம் சாட்சாத் சரஸ்வதியையே எதிரே பார்க்கற மாதிரி எனக்கு ஒரு வாஞ்சை உண்டாறது ராஜா."

"உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?"

"தெரியும்! சர்க்கா நான் தான் கொடுத்தேன். அரசரடித் திருவிழாவிலே வருஷா வருஷம் வீணை வாசிக்கும்; கேட்டிருக்கேன். 'சர்க்கா' கொடுத்தப்பத்தான் - அதுக்கு யாருக்கும் சளைக்காத தேச பக்தியும் இருக்கிறது தெரிஞ்சது! ஜெயில்லேருந்து வந்தப்ப - பத்தரும் எல்லாம் சொன்னார்."

வாசக சாலையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிப் பத்தரிடம் சொல்லிவிட்டு, இருவரும் வஸ்திராலயத்துக்குப் புறப்பட்டனர். ராஜாராமனிடமிருந்து நூல் சிட்டங்களை முத்திருளப்பன் வாங்கிக் கொண்டார்.

"இப்பக் கதர் விற்கிறது பெரிசில்லே ராஜா! சித்திரா பௌர்ணமிக் கூட்டத்திலே நமக்கு நல்ல வாய்ப்பு இருக்கு; அதை நாம் நல்லாப் பயன்படுத்திக்கணும்" என்று ஒரு புது யோசனையைக் கூறினார் முத்திருளப்பன்.

"உண்டியல் கூடக் குலுக்கலாமே?"

"கள்ளழகர் உண்டியலுக்குப் போட்டியாவா ராஜா?"

"அப்படியில்லை! தேச பக்தியும் தெய்வ பக்தியும் வேற வேறேன்னு நினைக்காதீங்க முத்திருளப்பன். தேசபக்தி புறங்கை என்றால், தெய்வ பக்தி உள்ளங்கை. ஒரே கையிலே தான் உள்ளும், புறமும் இருக்கு. புறங்கைக்குப் போடற மருந்து தான் உள்ளங்கையையும் குணப்படுத்தும்."

"சரியான கருத்து! ரொம்ப நல்லாச் சொல்றே!"

"என்னோட, ஜெயில்லே பிருகதீஸ்வரன்னு ஒரு புதுக்கோட்டைக்காரர் இருந்தார்னு சொன்னேனே! அவர் அடிக்கடி இதைச் சொல்லுவார். சுதந்திரப் போரை ஒரு பெரிய மகாபாரத யுத்தமாகவும், ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களை கௌரவர்களாகவும், நம்மைப் பாண்டவர்களாகவும், நமக்கு வழிகாட்டும் கீதையாகக் காந்தியையும் சொல்லுவார் அவர். உலகத்திலே ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் நடுவே தர்ம - அதர்ம, நியாய - அநியாயப் பிரச்சனை இருக்கிறவரை கீதை நித்யகிரந்தமாயிருக்கும் என்று அவர் அடிக்கடி சொல்லுவார்."

"சிந்தனை புதுசா இருக்கு ராஜா!"

"இப்படி ஆயிரமாயிரம் புதுச் சிந்தனைகள் அவரிடம் இருக்கு முத்திருளப்பன்."

"நான் வேலூருக்கு வரக் கொடுத்து வைக்கலே. முன்னாலேயே கைதாகி கடலூருக்குப் போயி, முன்னாலேயே வெளியிலேயும் வந்து தொலைச்சுட்டேனே?" பேசிக் கொண்டே வஸ்திராலயத்துக்கு வந்து விட்டார்கள் அவர்கள். முத்திருளப்பன் மதுரத்தின் சிட்டத்தைப் போட்டார். திரும்ப வரும்போது புடவை எடுத்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டுக் கதர் மூட்டைகளோடு இருவரும் புறப்பட்டனர். ராஜாராமன் ஒரு பாரதி பாடலை மிகக் கம்பீரமான குரலில் பாடினான்.

மேங்காட்டுப் பொட்டலில் கூட்டம் கூடுகிறாற்போல், ஓரிடத்தில் நின்று முயன்றார்கள் அவர்கள். பாட்டினால் கூட்டம் கூடியது.

பூதாகாரமான சரீரத்தோடு, மலை நகர்ந்து வருவது போல், ஒரு நகைக் கடைச் செட்டியார் வந்தார்.

"இவருக்குக் கதர் வித்தால் உன் மூட்டை, என் மூட்டை இரண்டுமே காணாது ராஜா!" என்று ராஜாராமனின் காதருகே முணுமுணுத்தார் முத்திருளப்பன்.

ராஜாராமனுக்குச் சிரிப்பு வந்தது. அடக்கமுடியாமல் விழுந்து விழுந்து சிரித்தான். செட்டியார் கேட்டார்:

"என்னா, துணி விக்கிறீங்களா?"

"துணியில்லே, கதர் விக்கிறோம்... கதர்!"

"ரொம்ப சல்லிசாக் கிடைக்குமாங்கிறேன்..."

"துணியைப் பாருங்க செட்டியாரே?"

செட்டியார் துணியை வாங்கிப் பார்த்துவிட்டு,

"அடியாத்தே! பொணமாக் கனக்குதே?" என்ற போது முத்திருளப்பனுக்குக் கோபம் வந்துவிட்டது.

"எத்தினி பொணம் தூக்கி அனுபவம் உமக்கு? இத்தனை பெரிய உடம்பைத் தூக்குறீரே; இந்தத் துணியைக் கட்டினாலாவது இளைப்பீரே செட்டியாரே; வாங்கும்." மலை கோபத்தோடு முறைத்துப் பார்த்துவிட்டு நடந்தது.

வேறு சிலர் கதர் வாங்கினார்கள். அடுத்த இடமாகப் பெருமாள் தெப்பக் குளக்கரைக்குப் போனார்கள் அவர்கள். அங்கேயும் கொஞ்சம் வியாபாரம் ஆயிற்று.

மாலையில் தல்லாகுளம் பெருமாள் கோவில் அருகே போய் விற்றார்கள். ராஜாராமன் பாரதி பாட்டுப் பாடியதனால் கூட்டம் சேர்வது சுலபமாயிருந்தது. முதல் நாளை விட அன்று கணிசமான விற்பனை ஆகியிருந்தது.

ஏழு மணிக்கு வஸ்திராலயத்துக்குத் திரும்பிப் போய்ப் பணத்தையும், மீதித் துணிகளையும் கணக்கு ஒப்பித்ததும் முத்திருளப்பன் அங்கிருந்தே வீடு திரும்புவதாகச் சொன்னார்.

ராஜாராமன், "மதுரத்தின் நூல் போட்டதற்குப் புடவை எடுக்க வேண்டும்," என்றான்.

"அடடா! மறந்து போச்சே? எனக்கு மறந்தா என்ன? ஞாபகம் இருக்க வேண்டிய ஆளுக்கு இருக்கே" என்று அவர் கேலி செய்த போது ராஜாராமன் வெட்கப்பட்டான்.

தன்னை எப்படி மதுரம் இப்படி மாற்றினாள் என்று நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு. புடவையை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார் முத்திருளப்பன். அவர் அங்கிருந்தே விடை பெற்றுக் கொண்டு போன பின், அவன் வாசக சாலைக்குத் திரும்பினான்.

வழக்கமாக வாசகசாலைக்கு வெளியார் யாரும் படிக்க வருவதில்லை. ராஜாராமனும் அவன் நண்பர்களும் பத்தரும் தவிர, மற்றவர்கள் புழக்கம் அங்கே குறைவு. போலீஸ் கெடுபிடிக்குப் பயந்து தான் வாசகசாலை என்ற பெயரில் ஒரு தேச பக்திக் கூட்டத்தின் இளம் அணியினரை ஒன்று சேர்த்திருந்தான் ராஜாராமன். அது அவர்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனால், அன்று அதற்கு விரோதமாய் யாரோ பொது ஆட்கள் உட்கார்ந்து பேப்பரும் புத்தகமும் படித்துக் கொண்டிருக்கவே அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. மேலே ஏறிச் சென்ற வேகத்தோடு கீழே இறங்கி வந்து -

"யாரோ படிச்சிக்கிட்டிருக்காங்களே? என்ன சமாசாரம்?" என்று பத்தரைக் கேட்டான், அவன். யாராவது சி.ஐ.டி.க்களாக இருக்குமோ என்று அவனுள் சந்தேகம் முளைத்திருந்தது. காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டு, நாட்டில் சுமுகமான நிலை தாற்காலிகமாக இருந்தாலும், தயக்கம் எழத்தான் செய்தது. அவன் தன் சந்தேகத்தையும் பத்தரிடம் கூறினான்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க தம்பீ! திருநாள் பார்க்க வந்து பக்கத்து சத்திரத்துல தங்கியிருக்கிற புள்ளையாண்டானுங்கதான். இங்கே கடையிலே கொஞ்சம் வேலை கொடுத்திருக்காங்க. வேலை முடியிற வரை, 'மேலே படிச்சிட்டிருங்க'ன்னு - நான் தான் உட்காரச் சொன்னேன். மதுரம் கூட இல்லே; - நாகமங்கலம் போயிருக்கு."

பதிலுக்கு ஏதோ கேட்க வாயெடுத்தவன் அதைக் கேட்காமல் அடக்கிக் கொண்டான். மாலையில் நாகமங்கலம் போக வேண்டுமென்று அவள் தன்னிடம் சொல்லக்கூட இல்லை என்று தோன்றியவுடன், எதற்காகவோ அவள் மேல் கோபப்பட வேண்டும் போல் இருந்தது. அப்படிக் கோபப்படத் தனக்கு என்ன உரிமை இருக்கிறதென்று உடனே மனசில் தோன்றியது.

"இருங்க தம்பீ! நிற்கிறீங்களே! கையில் என்ன பொட்டலம்? கதரா?"

"மதுரம் நூல் சிட்டம் போட்டுப் புடவை வாங்கிட்டு வரச் சொல்லியது..."

"உங்ககிட்ட சொல்லிடும்படி எங்கிட்டச் சொல்லிட்டுப் போச்சு. ஜமீந்தாருக்கு என்னவோ தோணிச்சாம் - திடீர்னு வந்து வீணை வாசிச்சிட்டுப் போகணும்னு ஆளனுப்பிச்சிட்டாரு!... ஆனா ராத்தங்கற வழக்கம் இல்லை. எத்தினி மணியானாலும் வந்துடும்! மங்கம்மா போகலை. வீட்டிலதான் இருக்கா. கிழவி உங்களுக்கு ராப்பலகாரம் கொண்டு வந்து கூப்பிடுவா. இருங்க, எங்கேயும் போயிடாதீங்க..."

ராஜாராமன் சிரித்தான். அவன் சிரிக்கிறதைப் பார்த்துவிட்டு "என்ன தம்பி சிரிக்கிறீங்க?" - என்று கேட்டார் பத்தர்.

"ஒண்ணுமில்லை! இந்த ஜஸ்டிஸ் பார்ட்டிக்காரங்களை நெனைச்சேன்; சிரிப்பு வந்தது. ஆசை, பிரியம் எல்லாம் இந்தத் தேசத்துச் சங்கீதம், இந்தத் தேசத்து வீணை, இந்தத் தேசத்துச் சாப்பாடு, இந்தத் தேசத்துக் கோவில் குளம் எல்லாத்து மேலேயும் இருக்கு. விசுவாசம் மட்டும் இந்தத் தேசத்து மேலே இல்லே. விசுவாசத்தை மட்டும் வெள்ளைக்காரன் மேலே அடகு வச்சுட்டாங்க போலிருக்கு! இந்த நாகமங்கலம் ஜமீந்தாரும் அப்பிடித்தான். இல்லையா பத்தரே...?"

"மதுரத்துக்கும் அது பிடிக்காது தம்பீ!"

"பிடிக்காமேதான் போயிருக்கா?"

"கொள்கை வேறே, கலை வேறே. அங்கே போறதுனாலே தன் கொள்கையை அது விட்டுப்பிடும்னு மட்டும் நினைக்காதீங்க."

"நான் ஏன் நினைக்கப் போகிறேன். நினைக்கிறதுக்கு நான் யாரு...?"

அவனுடைய உள்ளடங்கின கோபத்தைப் புரிந்து கொண்டு பத்தர் சிரித்தார். காரணம், அந்தக் கோபம் மதுரத்தின் மேல் இவன் கொண்டுவிட்ட பிரியத்தின் மறுபுறமாயிருப்பதை இவர் புரிந்து கொண்டதுதான். உதாசீனம் உள்ளவர்கள் மேல் வெறுப்புத்தான் வரும். கோபம் வராது. மதுரத்தின் மேல் அவனுக்கு வெறுப்பு இல்லை, கோபம்தான் வருகிறது என்பது தெரியும் போதே அவருக்கு மகிழ்ச்சியாயிருந்தது. அவன் திரும்பத் திரும்ப அவளைப் பற்றியே பேசியதிலிருந்தும் அவன் மனதில் அவள் இருப்பதையே புரிந்து கொள்ள முடிந்தது.

"மேலே போய் இருங்க, தம்பீ! மங்கம்மாக் கிழவி கூப்பிடும். மதுரத்தைப் போல அதுக்குச் சுவரேறி வரத் தெரியாது. பலகாரம் ஆறிப் போகும்..."

அவன் மறுபடி பத்தரைப் பார்த்துச் சிரித்தான்.

"என்ன சிரிக்கிறீங்க?"

"நீர் ரொம்ப சாமார்த்தியமாகப் பேசறதா நினைச்சுப் பேசறதைப் பார்த்துத்தான் சிரிச்சேன் பத்தரே?"

இந்தச் சமயத்தில் மேலே படித்துக் கொண்டிருந்தவர்கள் கீழிறங்கி வந்தனர். பத்தர் சிவப்பு லேஸ்தாள்களில் நகைகளை மடித்துக் கொடுத்தார். அவர்கள் வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்துவிட்டுப் போனார்கள். கைகளைக் கழுவிவிட்டுக் கடையைப் பூட்டிக் கொண்டு அவரும் அவனோடு மேலே மாடிக்கு வந்தார். மங்கம்மாக் கிழவி கொடுத்த தோசைகளை எப்படியோ பத்தர் மறுக்காமல் ராஜாராமனைச் சாப்பிடச் செய்துவிட்டார். அவரும் அங்கேயே தோசை சாப்பிட்டார்.

"புடவையைக் கார்த்தாலே குடுத்துடலாம் தம்பீ!"

"இங்கேயே வச்சிருக்கேன்? நீங்களே கடை திறக்க வர்றப்ப எடுத்துக் கொடுத்திடுங்க."

"ஏன் தம்பி?"

"நான் கார்த்தாலே மேலூர் போறேன்..."

"போனா என்ன? திரும்பி வந்தப்புறம் நீங்களே உங்க கையாலே குடுங்க தம்பீ! அது ரொம்பச் சந்தோஷப்படும்."

ராஜாராமன் இப்போதும் ஏதோ பேச வாயெடுத்தவன் பேசாமலே அடக்கிக் கொண்டு விட்டான். பத்தர் தயங்கித் தயங்கிச் சொல்லிக் கொண்டு புறப்பட்டார். அவனுக்கு உறக்கம் வரவில்லை. யோசித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தவன், திடீரென்று நினைத்துக் கொண்டு நாற்காலியை மேஜையருகே நெருக்கிப் போட்டுக் கொண்டு பிருகதீஸ்வரனுக்குக் கடிதம் எழுதலானான். அன்று காலை கதர் விற்கப் போனது, மாகாண மகாநாட்டு ஏற்பாடுகள், ஊர்வலப் பொறுப்பு, சத்தியமூர்த்தி மதுரை வரப்போவது, எல்லாவற்றையும் பற்றி அவருக்கு எழுதினான். முடிந்தால் மகாநாட்டின் போது அவரை மதுரை வர வேண்டியிருந்தான் கடிதத்தில். கடிதத்தை உறையிலிட்டுக் கோந்து பாட்டிலைத் தேடி எடுத்து ஒட்டியும் ஆயிற்று. மேலூர் வீட்டு வாடகையை இனிமேல் வாசகசாலை விலாசத்துக்குக் கொண்டு வந்து கொடுக்கவோ, மணி ஆர்டர் செய்யவோ வேண்டும் என்று உரக் கம்பெனிக்கும் ஒரு கடிதம் எழுத வேண்டியிருந்தது. அதையும் எழுதி முடித்த போது ஃபண்டாபீஸ் மணி பன்னிரண்டு அடித்தது.

விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தான் ராஜாராமன். 'நாளைக்குத்தான் மேலூர் போகிறேன்! உரக் கம்பெனிக்குக் கடிதம் எதுக்கு?'

'மேலூராவது, நாளைக்குப் போகிறதாவது? ஒரு கோபத்தில் பத்தரிடம் அப்படிக் கூறியாயிற்று. நாளையும் அடுத்த சில நாட்களும் மாகாணக் காங்கிரஸ் மகாநாட்டு வேலைகள் நிறைய இருக்கு. நாளும் நெருங்கிவிட்டது.'

-'பத்தரிடம் அப்படி ஏன் ஒரு பொய் சொன்னோம்?' என்றெண்ணியபோது, அப்படிப் பொய் சொல்லியிருக்கக் கூடாதென்றே தோன்றியது. ரொம்ப நேரமாகத் தூக்கம் முழுமையாக வரவில்லை. அரைகுறைத் தூக்கமும், நினைவுகளுமாக அவன் தவித்துக் கொண்டிருந்தான். புரண்டு புரண்டு படுத்தான்.

இலேசாகத் தூக்கம் கண்களைத் தழுவியபோது ஃபண்டாபீஸ் மணி ஒன்றடித்து ஓய்ந்தது. புரண்டு படுத்த ராஜாராமன், பாதங்களில் மிருதுவாக ஏதோ படுவது போல் உணர்ந்து வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான்.

மதுரம் கண்களில் நீர் தளும்ப நின்று கொண்டிருந்தாள். இருளில் மின்னல் அழுது கொண்டு நிற்பது போல.

"இந்தப் பாதங்களைக் கைகளால் பிடிக்க உனக்கு என்ன யோக்கியதை?"

"முதல் முதலாக இந்தப் பாதங்களைத் தேடிக் கண்டு பிடித்துப் புஷ்பங்களை அர்ச்சித்தவள் நான் தான்..."

"இருக்கலாம்! ஆனால் - ஜமீன்தார்களைத் திருப்திப் படுத்துகிறவர்களை நான் பார்க்கவே வெட்கப்படுகிறேன்..."

"என்னுடைய கைகளால் நான் இந்தப் பாதங்களைப் பற்ற முடியாமல் போகலாம். ஆனால், மனத்தினால் இடைவிடாமல் நான் இந்தப் பாதங்களைப் பற்றுவதை நீங்கள் தடுக்க முடியாது..."

-இருளில் அவளுடைய விசும்பல் ஒலி ஒரு தேவதை மிகவும் சோகமான ராகத்தை முணுமுணுப்பதுபோல் இருந்தது. சிறிது நேரம் ஒன்றும் பேசாமலிருந்த பின் மௌனமாக அந்தப் புடவைப் பொட்டலத்தை எடுத்து அவள் பக்கமாக நகர்த்தினான் அவன்.

கைகளால் அதை அவன் கொடுக்காமல் தரையில் நகர்த்தியது அவள் மனத்திற்கு வருத்தத்தை அளித்தது. தான் கொடுத்திருந்த மெத்தை, தலையணைகளை உபயோகப்படுத்தாமல், அவன் தரையில் பாயை விரித்துப் படுத்திருப்பதையும் அவள் கவனித்தாள்.

"என் மேல் கோபப்படுங்கோ! வேண்டாம்னு சொல்லலை! ஆனா, அதுக்காக வெறுந் தரையிலே படுத்துக்காதீங்க..."

அவன் பதில் சொல்லாமல் இருக்கவே, அவள் மெத்தையை எடுத்துப் பாயின் மேல் விரித்தாள். தலையணைகளையும் நேரே எடுத்துப் போட்டுவிட்டு ஒதுங்கி நின்றாள்.

அதையும் அவன் மறுக்கவில்லை. அவன் பேசாமலே இருந்தது அவளை வருத்தத்துக்குள்ளாக்கியது. தயங்கித் தயங்கித் புடவைப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு திரும்பிப் போனாள் அவள்.

"காலம்பறப் பாக்கிறேன், தூங்குங்கோ" என்று அவள் போகும்போது சொல்லிக் கொண்டு போன வார்த்தைகளுக்கும் அவனிடமிருந்து பதில் இல்லை. அவள் போன பின், 'தான் காரணமின்றி அவளை வேதனைப்படுத்தி விட்டோம்' என்று உணர்ந்தான் ராஜாராமன். ஆனால் காலதாமதமாக ஏற்பட்ட அந்த உணர்ச்சியினால் ஒரு பயனும் கிட்டவில்லை. என்ன காரணத்துக்காக அவள் மேல் கோபப்பட்டு மௌனம் சாதித்தோம் என்று மறுபடி இரண்டாம் முறையாக யோசித்தபோது, காரணம் தெளிவாகப் புலப்படவில்லை; கோபப்பட்டு விட்டோமே என்ற கழிவிரக்கம்தான் புலப்பட்டது.

மறுநாள் காலையில் விடிவதற்கு முன்பே எழுந்திருந்து குளித்து உடைமாற்றிக் கொண்டு, கோவிலுக்குப் போய்விட்டு மறுபடியும் வாசக சாலைக்குத் திரும்பாமல், அங்கிருந்தே கமிட்டி அலுவலகத்துக்குச் சென்றான் ராஜாராமன்.

"ராஜாராமன்! வேலை நிறைய இருக்கிறது. மகா நாட்டுக்கு வேறு அதிக நாள் இல்லே. பல ஏற்பாடுகளைக் கவனிக்கணும். மகாநாடு முடிகிற வரைக்கும் நாலைந்து நாளைக்கு நீ இங்கேயே தங்கிவிட்டால் நல்லது" என்றார் வரவேற்பு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த தலைவர். ராஜாராமனும் அதற்குச் சம்மதித்துவிட்டான். முத்திருளப்பனுக்கும், குருசாமிக்கும் தகவல் சொல்லி அனுப்பி உண்டியல் வசூல், ஊர்வல ஏற்பாடுகள் செய்வது, தொண்டர் படைக்கு இளைஞர்கள் சேர்ப்பது, எல்லாவற்றையும் கமிட்டி அலுவலகத்தின் மூலமே செய்தான். ஓய்வு ஒழிவின்றி வேலை இருந்தது. மதுரம் என்ன நினைப்பாள், எப்படி எப்படி வேதனைப்படுவாள் என்று நடுநடுவே நினைவு வரும் போதெல்லாம் காரியங்களின் பரபரப்பில் மூழ்கி அதை மறக்க முயன்றான் அவன்.

அவன் கமிட்டி அலுவலகத்துக்கு வந்து தங்கிவிட்ட மறுநாளைக்கு மறுநாள் இரவு எட்டு மணி சுமாருக்கு ரத்தினவேல் பத்தர் அவனைத் தேடி வந்தார். அவர் முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடியாதபடி மிகவும் கவலையாயிருப்பதாகத் தெரிந்தது. அவர் வந்தபோது அவனும் இன்னும் ஐந்தாறு தேசியத் தொண்டர்களுமாக அமர்ந்து தோரணத்துக்காக வர்ணத் தாள்களைக் கத்தரித்து ஒட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால் அவன் அவரைக் கண்டவுடனேயே எழுந்து சென்று பேசமுடியவில்லை. 'வாங்க பத்தரே' என்று ஒரு வார்த்தை சொல்ல முடிந்தது. பத்தரும் சும்மா உட்காராமல் அவர்களோடு சேர்ந்து கொண்டு கொஞ்சம் வேலை செய்தார். ஒரு குறிப்பிட்ட காரியமாக ராஜாராமனை மட்டும் தேடி வந்தது போல் காண்பித்துக் கொள்ளக் கூசியது அவர் மனம். சிறிது நேரம் அவர்களோடு வேலை செய்துவிட்டு, "உங்கிட்டத் தான் கொஞ்சம் பேசணும் தம்பீ" என்று சொல்லி ராஜாராமனிடம் சைகை காட்டி அவனை வெளியே கூப்பிட்டார் பத்தர்.

ராஜாராமன் பசை அப்பியிருந்த கையைக் கழுவித் துடைத்துக் கொண்டு அவரோடு வெளியே வந்தான்.

"ஏதோ கோவிச்சுக்கிட்டு வந்துட்டீங்க போல் இருக்கு..."

"....."

"பாவம் அது ரொம்ப சங்கடப்படுது! இப்ப நான் திரும்பிப் போயி ரெண்டு வார்த்தை நீங்க நல்லபடியாச் சொன்னீங்கன்னு காதிலே போட்டாத்தான் அது சாப்பிட உட்காரும்..."

அவர் சொல்வதெல்லாம் - அவருடைய வாயிலிருந்து வருவதற்கு முன்பே அவனுக்குப் புரிந்தவைதான். என்றாலும், என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் கேட்டுக் கொண்டு நின்றான் அவன்.

"புடவையைக் கூட கையாலே கொடுக்காமே தரை மேலே வச்சு, நகர்த்தி விட்டிங்களாம். இந்த இரண்டு நாளா மதுரம் படற வேதனையை என்னாலே பொறுக்க முடியலே."

"....."

"என்ன தம்பீ? நான் பாட்டுக்குச் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீங்க பாட்டுக்குப் பேசாம நிக்கறீங்க?"

"வேலை இருந்தது; இங்கேயே தங்கிட்டேன். அடுத்தவங்க மனசிலே நினைச்சுக்கறதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியுமா?"

இப்படிப் பதில் சொன்ன விதத்திலிருந்தே ராஜாராமன் மனத்தில் கோபம் இருப்பதைப் பத்தர் புரிந்து கொண்டார்.

"தம்பீ! உங்களுக்குப் பல தடவை நான் உத்தரவாதம் கொடுத்தாச்சு. இது அசல் தங்கம்; மாற்றுக் குறையாத சொக்கத் தங்கம்; கில்ட் இல்லைன்னு படிச்சுப் படிச்சுச் சொல்லியும் நீங்க புரிஞ்சுக்கலே! பக்கத்திலே நிஜமான அன்போட வந்து நிற்கறவங்களோட பக்தியை அலட்சியம் பண்ணிப்பிட்டுத் தேசத்து மேலே மட்டும் பக்தி பண்ணிட முடியாது. மனுசங்க இல்லாமத் தேசம் இல்லே..."

"குத்திக் காட்ட வேண்டாம், பத்தரே! என்ன காரியமா வந்தீங்கன்னு மட்டும் சொல்லுங்க..."

"அதைத்தானே தம்பீ, இப்பச் சொல்லிக்கிட்டிருக்கேன்..."

"அதான் அப்பவே பதில் சொன்னேனே, அடுத்தவங்க மனசிலே நினைச்சுக்கறதுக்கெல்லாம் நாம என்ன பண்ண முடியும்?"

"அப்ப நீங்க ஒண்ணும் மனசிலே வச்சுக்கலியே?"

"....."

"வேலை இருக்காம். மகாநாடு முடியிறவரை அங்கேயே தங்க வேண்டியிருக்குமாம். வேற கோபம் எதுவும் இல்லியாம்னு போய்ச் சொல்லிடட்டுமா தம்பீ?"

'சொல்லுங்கள்' என்று சம்மதிக்கவும் செய்யாமல் - சொல்லக்கூடாது என்று மறுக்கவும் செய்யாமல் உள்ளே திரும்பி விட்டான் ராஜாராமன். "அப்ப நான் போயிட்டு வரலாமில்லையா?" என்று பத்தர் இரைந்து கேட்ட கேள்விக்கு மட்டும் "சரி! மகாநாட்டுக்கும் ஊர்வலத்துக்கும் வாங்க!" என்று உள்ளே நடந்து போகத் தொடங்கியிருந்தவன், ஒரு கணம் திரும்பி அவரைப் பார்த்து மறுமொழி கூறினான். பத்தர் புறப்பட்டுச் சென்றார். மகாநாட்டிற்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருந்ததால் முத்திருளப்பன், குருசாமி எல்லாருமே கமிட்டி ஆபீஸீல்தான் கூடினர். பத்தர் வந்து விட்டுப் போன மறுதினம் ஏதோ காரியமாக வாசகசாலைக்குப் போய்விட்டு அப்புறம் கமிட்டி அலுவலகத்துக்கு வந்த முத்திருளப்பன், "ராஜா! மதுரத்து மேலே ஏதாவது கோபமா?" என்று அவனைக் கேட்டபோது கொஞ்சம் தயங்கிவிட்டு "அதெல்லாம் ஒண்ணுமில்லே" என்று பதில் சொன்னான் ராஜாராமன்.

அத்தியாயம் - 8

தமிழ் மாகாண மகாநாடு மதுரையில் கூடியது. பல ஊர்களிலிருந்தும் தேச பக்தர்கள் குழுமினார்கள். சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். நகரம் முழுவதுமே வந்தே மாதர முழக்கமும், 'மகாத்மா காந்திக்கு ஜே!' என்ற கோஷமும் நிரம்பியிருப்பது போல் தோன்றியது. ஊர்வலமும் மிகப் பிரமாதமாக நடைபெற்றது. ராஜாராமனுடைய முயற்சியால் ஏராளமான இளைஞர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். சத்தியமூர்த்தியின் தலைமைப் பிரசங்கம் பாரதியாருடைய கவிதைகளின் சக்தியையும், ஆவேசத்தையும் வசனத்திற் கொண்டு வந்தாற் போல அவ்வளவு ஆற்றல் வாய்ந்ததாக அமைந்தது. மகாநாட்டின் முடிவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தேர்தலும் நடைபெற்றது. சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி, சர்தார் வேதரத்னம் பிள்ளை, திருவண்ணாமலை அண்ணாமலைப் பிள்ளை ஆகியவர்களுடைய பெயர்கள் பிரேரேபிக்கப் பட்டனவாயினும், பின்னால் ஒரு சமரசம் ஏற்பட்டது. ராஜகோபாலாச்சாரியார் தலைவராகவும், சத்தியமூர்த்தி துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சர்தாரும், அண்ணாமலைப் பிள்ளையும், வாபஸ் வாங்கிக் கொண்டார்கள். தேசத் தொண்டர் காமராஜ் நாடார் முதல் தடவையாகக் காரியக் கமிட்டிக்கும், அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக்கும் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜனும் பக்தவத்சலமும் காரியதரிசிகளாயினர்.

மகாநாடு முடிந்த பின் கமிட்டி அலுவலகம் கலியாணம் நடந்து முடிந்த வீடு போலிருந்தது. அப்புறம் இரண்டொரு நாளைக்கு அங்கே வேலைகள் இருந்தன. முத்திருளப்பன், குருசாமி எல்லோருமே கமிட்டி அலுவலகத்துக்குத்தான் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். வாசகசாலையைக் கவனிப்பதற்குப் பத்தர் மட்டும் தான் இருந்தார். மகாநாடு முடிந்த மூன்றாம் நாள் அதிகாலையில் ராஜாராமன் வாசகசாலைக்குப் போய்ப் பத்தரிடம் சாவியை வாங்கி மாடியைத் திறந்த போது மாடியறையில் கோயில் கர்ப்பகிருகத்தின் வாசனை கமகமத்தது. தினசரி தவறாமல் அங்கிருந்த படங்களுக்கு மல்லிகைச் சரம் போட்டு ஊதுவத்தி கொளுத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதை அவன் சுலபமாக உணர முடிந்தது. பின் பக்கத்து மாடியறையில் அப்போது தான் மதுரம் வீணை சாதகம் செய்யத் தொடங்கியிருந்தாள். அதைத் தொடர்ந்து 'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு' - என்று அவள் உருகி உருகிப் பாடிய குரலையும் அவன் கேட்டான். அப்போது பத்தர் மேலே படியேறி வந்து, அவனிடம் ஏதோ சொல்ல விரும்பினாற் போலத் தயங்கித் தயங்கி நின்றார்.

"என்ன பத்தரே? ஏதோ சொல்ல வந்திருக்கீங்க போலத் தெரியுதே?"

"ஒண்ணுமில்லே! அடிக்கடி சொன்னாலும், நீங்க கோவிச்சுப்பீங்களோன்னு பயமாயிருக்குத் தம்பீ! 'அது மேலே உங்களுக்குக் கோபம் இல்லே'ன்னு சொல்லி ஒரு மாதிரிச் சமாதானப்படுத்தி வச்சிருக்கேன். மறுபடியும் ஏதாவது கோபமாப் பேசிச் சங்கடப் படுத்திடாதீங்கன்னு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்..."

"சரி! சரி! போம். சதா உமக்கு இதே கவலைதான் போலிருக்கு."

ராஜாராமன் பத்தரை நோக்கிப் புன்முறுவல் பூத்தான். அவன் முகத்தில் புன்முறுவலைப் பார்த்து அவருக்கு ஆறுதலாயிருந்தது. அவர் கீழே படியிறங்கிப் போனார். அந்த ஐந்தாறு நாட்களாகப் படிக்காத பத்திரிகைகள், புத்தகங்களை எடுத்து, வரிசைப்படுத்தத் தொடங்கினான் அவன். பழைய 'நவஜீவன்' - 'யங் இந்தியா' தொகுப்பு வால்யூம்களை யாரோ மேஜையில் எடுத்து வைத்திருப்பதைக் கண்டு, ஒரு கணம் அதை அலமாரியிலிருந்து யார் வெளியே எடுத்திருக்கக் கூடுமென்று யோசித்தான் அவன். மதுரம் எடுத்திருப்பாளோ என்று சந்தேகமாயிருந்தது. அது சாத்தியமில்லை என்றும் தோன்றியது. அப்புறம் பத்தரை விசாரித்துக் கொள்ளலாமென்று நினைத்துக் கொண்டே, அவற்றை உள்ளே எடுத்து வைத்த போது, அளவாகத் தாளமிடுவது போல் காற்கொலுசுகளின் சலங்கைப் பரல்கள் ஒலிக்க யாரோ படியிறங்கும் ஒலி கேட்டுத் திரும்பினான். மதுரம் காபியோடு வந்து கொண்டிருந்தாள். அவளுடைய உடலில் அவன் சிட்டம் கொண்டு போய்ப் போட்டு வாங்கிக் கொண்டு வந்தளித்த அந்தக் கதர்ப் புடவை அலங்கரித்திருந்தது. பட்டுப் புடவையும், நகைகளும், வைர மூக்குத்தியுமாக இருக்கும் போதும் அவள் அழகு அவனை வசீகரித்தது; கதர்ப் புடவையுடன் வரும் போது அந்த எளிமையிலும் அவள் வசீகரமாயிருந்தாள். இதிலிருந்து அலங்காரம் அவளுக்கு வசீகரத்தை உண்டாக்குகிறதா, அல்லது அலங்காரத்துக்கே அவள் தான் வசீகரத்தை உண்டாக்குகிறாளா என்று பிரித்துப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. அதுவும் நாலைந்து நாட்களுக்கு மேல் அவளைப் பார்க்காமல் இருந்துவிட்டு இப்போது திடீரென்று பார்த்தபோது அந்த வசீகரம் இயல்பை விடச் சிறிது அதிகமாகித் தெரிவது போல் உணர்ந்தான் அவன்.

ஒன்றும் பேசாமல் காபியை மேஜைமேல் வைத்து விட்டு எதிரே இருக்கும் ஒரு சிலையை வணங்குவது போல் அவனை நோக்கிக் கை கூப்பினாள் மதுரம். அவள் கண்கள் நேருக்கு நேர் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்கத் தயங்கின.

"எதிரே இருப்பது மனிதன் தான் மதுரம். ஒரு சிலையைக் கை கூப்புவது போல் கூப்பி வணங்குகிறாயே?"

"என்ன செய்றது? மனிதர்களே சமயா சமயங்களில் சிலையைப் போலாகி விடுகிறார்களே!"

"யாரைக் குற்றம் சாட்டுகிறாய்?"

"யார் குற்றமாக எடுத்துக்கிறாங்களோ, அவங்களைத் தான் சொல்றேன்னு வச்சுக்குங்களேன். சிலைக்காவது உடம்பு மட்டும் தான் கல்லாயிருக்கு, சிலையைப் போலாயிடற மனஷாளுக்கோ மனசும் கல்லாப் போயிடறது."

"....."

"காபியைக் குடிக்கலாமே, ஆறிடப் போறது..."

"ஆறினா என்ன? கல்லுக்குத்தான் சூடு, குளிர்ச்சி ஒண்ணுமே தெரியப் போறதில்லையே?"

"இதை நான் சொல்லலை. நீங்களாகவே வேணும்னு சொல்லிக்கிறீங்க..."

-அவன் காபியை எடுத்துப் பருகினான். பருகிவிட்டு ஒன்றுமே சொல்லாமல் சில விநாடிகள் அவள் முகத்தையே உற்றுப் பார்த்தான். அவன் பார்வை பொறுக்காமல் அவள் தலைகுனிந்தாள். இதழ்களில் நாணமும், நகையும் தோன்றின. அதுவரை நிலவிய கடுமைப் பூட்டுடைந்து அவள் மெல்ல இளகினாள். கண்களிலும் மாதுளை இதழ்களிலும் சிரிப்பின் சாயல் வந்து சேர்ந்தது.

"கதர்ப் புடவையைக் கட்டிக் கொண்டு வந்திருக்கே போலிருக்கே..."

"இன்னிக்கு ரெண்டாவது தடவையாகக் கட்டிக்கிறேன். அன்னிக்கே கட்டிண்டாச்சு! நீங்க பார்க்கலியா?"

"என்னிக்கு?"

"சத்தியமூர்த்தி தலைமைப் பிரசங்கம் பண்றன்னிக்கி இந்தப் புடவையைக் கட்டிண்டு மகாநாட்டுப் பந்தலுக்கு நானும் வந்திருந்தேன்."

"அப்பிடியா! எனக்குத் தெரியவே தெரியாதே மதுரம்?"

"உங்களுக்கு ஏன் தெரியப்போறது? சிதம்பர பாரதியோட ஏதோ பேசிக் கொண்டே நீங்க கூட அந்தப் பக்கமா வந்தீங்களே!"

"வந்திருப்பேன்! ஆனா, நீ இருந்ததை நான் சத்தியமா பார்க்கலை மதுரம்!"

"....."

"இந்த அஞ்சாறு நாளா எப்படிப் பொழுது போச்சு?"

"நிறைய ராட்டு நூற்றேன். 'ராமா உன்னைப் பக்தி செய்யிற மார்க்கம் தெரியலியே'ன்னு கதறிக் கதறிப் பாடினேன். வீணை வாசிச்சேன்! இதையெல்லாம் செய்ய முடியாதபோது நிறைய அழுதேன்..."

"யாரை நெனைச்சு?"

"இப்ப எங்கிட்ட இப்பிடிக் கேட்கிறவர் யாரோ, அந்த மகானுபாவரை நெனைச்சுத்தான்..."

இதைச் சொல்லும் போது மதுரம் சிரித்துவிட்டாள். அவள் பேசும் அழகையும், நாசூக்கையும் எண்ணி எண்ணித் திகைத்து ஒன்றும் சொல்லத் தோன்றாமல் இருந்தான் அவன்.

மத்தியானம் வெளியில் எங்கும் சாப்பிடப் போய்விடக் கூடாது என்றும், அங்கேயே சாப்பிட வேண்டுமென்றும் வற்புறுத்திச் சொல்லிவிட்டுப் போனாள் மதுரம். மாகாண காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிரகதீஸ்வரன் மதுரை வந்து போவார் என்று எதிர்பார்த்திருந்தான். அவர் வரவில்லை. 'ஏன் வரமுடியவில்லை' என்பது பற்றிக் கடிதமாவது எழுதுவார் என்று எண்ணியிருந்ததற்கு மாறாகக் கடிதமும் அவரிடமிருந்து வராமற் போகவே, தானே அவருக்கு இன்னொரு கடிதம் எழுதினால் என்ன என்று தோன்றியது. மகாநாடு பிரமாதமாக நடந்ததைப் பற்றியும், அவர் வராததால் தனக்கு ஏற்பட்ட வருத்தத்தைப் பற்றியும் விவரித்துக் கடிதம் எழுதினான் அவன். அதற்குப் பின் ஓர் அரைமணி நேரம் ஒரு வாரமாக விட்டுப் போயிருந்த டைரிக் குறிப்புக்களை ஞாபகப்படுத்தி எழுதினான்.

பகல் உணவுக்குப் பின் சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்துவிட்டு, அவன் மேலூருக்குப் புறப்பட்டான். முதலில் திருவாதவூர் போய் நிலத்தையும், குத்தகைக்காரனையும் பார்த்துவிட்டு, அப்புறம் மேலூர் போக வேண்டுமென்று நினைத்திருந்தான் அவன். ஒரு வேளை திரும்புவதற்கு நேரமாகிவிட்டால் இரவு மேலூரிலேயே தங்கிவிட வேண்டியிருக்கும் என்று தோன்றியது.

நினைத்ததுபோல் திருவாதவூரிலேயே அதிக நேரம் ஆகிவிட்டது. குத்தகைக்காரன் பேச்சுவாக்கில் ஒரு யோசனையை ராஜாராமன் காதில் போட்டு வைத்தான்.

"வள்ளாளப்பட்டி அம்பலக்காரர் ஒருத்தரு இந்த நிலம், மேலூர் வீடு எல்லாத்தையும் மொத்தமா ஒரு விலை பேசிக் கொடுக்கற நோக்கம் உண்டுமான்னு கேட்கச் சொன்னாரு. நீங்களோ பொழுது விடிஞ்சா ஜெயிலுக்குப் போறதும், வாரதும், மறுபடி ஜெயிலுக்குப் போறதுமா இருக்கீங்க, பெரியம்மா இருந்தவரை சரிதான். இனிமே இதெல்லாம் நீங்க எங்கே கட்டிக் காக்க முடியப் போகுது?"

மேலூர் புறப்பட்டு வரும்போது ராஜாராமனுக்கே இப்படி அரைகுறையாக மனத்தில் ஓரெண்ணம் இருந்தது. இப்போது குத்தகைக்காரனும் அதே யோசனையைச் சொல்லவே, 'என்ன நிலம் வீடு வாசல் வேண்டிக் கெடக்கு? எல்லாவற்றையும் கொடுத்து விட்டால் என்ன?' என்று தோன்றியது. உடனே அது சம்பந்தமாக குத்தகைக்காரனிடம் மேலும் அக்கறையோடு விசாரித்தான் ராஜாராமன்.

"வள்ளாளப்பட்டிகாரர் என்ன விலைக்கு மதிப்புப் போடறாரு?"

"அதெல்லாம் நான் பேசிக்கிடலீங்க. வேணா இன்னிக்கு ராத்திரி பார்த்துப் பேசலாம். ரெண்டு நாளா அவரு மேலூர்ல தான் தங்கியிருக்காரு."

குத்தகைக்காரனையும் கூட அழைத்துக் கொண்டே திருவாதவூரிலிருந்து மேலூர் புறப்பட்டான் ராஜாராமன். அன்றிரவு வள்ளாளப்பட்டி அம்பலத்தார் அவனைப் பார்க்க வந்தார். ராஜாராமனை அவர் பார்க்க வந்த போது, அவன் தனக்கு மிகவும் வேண்டிய மேலூர்த் தேசத் தொண்டர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தான். வலது கையில் முறுக்குப் பிரி அளவுக்குத் தங்கக் காப்பும், காதுகளில் சிவப்புக் கடுக்கன்களும் மின்ன அந்த அம்பலக்காரர் தோற்றமளித்தார். பதினெட்டாம் படிக்கோவில் அரிவாள் போல மீசை கம்பீரமாயிருந்தது. குரல் தான் இவ்வளவுக்கும் பொருந்தாமல் கரகரத்த கீச்சுக் குரலாயிருந்தது.

"சாமி காந்திக்கார கட்சியிலே ரொம்பத் தீவிரம் போலேயிருக்கு?"

"ஆமாம். அதைப்பத்தியென்ன அம்பலக்காரரே? விலை விஷயமாகத் திகைய வேண்டியதைப் பேசுங்க..."

"என் மதிப்பைக் குத்தகைக்காரனிட்டவே சொல்லியிருந்தேனே சாமி! வீடு ஒரு ஆயிரத்தஞ்சு நூறும், நெலம் வகையறாவுக்காக ஆறாயிரத்தஞ்சு நூறுமா மொத்தத்திலே எட்டாயிரத்துக்கு மதிப்புப் போட்டேன்..."

"இந்த விலைக்குத் திகையாது அம்பலக்காரரே! பத்தாயிரத்துக்குக் குறைஞ்சு விற்கிற பேச்சே கிடையாது..."

"இவ்வளவு கண்டிஷனாப் பேசினீங்கன்னா எப்படி சாமி? கொஞ்சம் இடம் கொடுத்துப் பேசுங்க..."

இப்படி அம்பலக்காரர் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் ராஜாராமனின் நண்பரான தேசத் தொண்டர் - ஒரு நிமிஷம் தன்னோடு உட்பக்கமாக வருமாறு - ஜாடை செய்து அவனைக் கூப்பிட்டார். அவன் எழுந்து சென்றான்.

"ஒன்பதாயிரம்னு ரெண்டு பேருக்கும் பொதுவா வச்சுக்கலாம். அதுவே நல்ல விலைதான் அப்பா. ஆனா, அதை இப்பவே அவன்கிட்ட சொல்லாதே. 'யோசிச்சு வைக்கிறேன். காலையிலே வாரும் அம்பலக்காரரே'ன்னு சொல்லியனுப்பு. காலையிலே வந்ததும், 'ஒன்பதாயிரத்தி ஐநூறு'ன்னாத் திகையும்னு பேச்சை ஆரம்பிச்சா அவன் ஒன்பதாயிரத்துக்கு வழிக்கு வருவான். ஏதாவது ஒரு 'அக்ரிமெண்ட்' எழுதிக்கொண்டு கொஞ்சம் அட்வான்ஸ் வாங்கிக்கலாம். அப்புறம் ஒரு வாரத்திலே பூராப் பணத்தையும் வாங்கிக் கொண்டு ரெஜிஸ்திரேஷனை முடிச்சுடலாம்."

"நாளைக்குக் காலை வரை இங்கே தங்க முடியாதேன்னு பார்த்தேன்..."

"பரவாயில்லை, தங்கு. நாளை மத்தியானம் புறப்பட்டுப் போய்க்கலாம்" - என்றார் நண்பர். அந்த நிலையில் அவனும் அதற்குச் சம்மதிக்க வேண்டியதாயிற்று. நண்பர் கூறியபடி அம்பலக்காரரிடம் கூறி அனுப்பினான் அவன். அவரும் காலையில் வருவதாகக் கூறி விட்டுச் சென்றார். குத்தகைக்காரனும் அன்றிரவு மேலூரிலேயே தங்கினான்.

மறுநாள் காலையில் எல்லாம் நண்பர் சொன்னபடியே நடந்தது. வீடும் நிலமும் ஒன்பதினாயிர ரூபாய்க்கு விலை திகைத்த பின் - இரண்டாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து, ஒரு வாரத்துக்குள் முழுத் தொகையுடன் பத்திரம் பதிவு செய்து கொள்வதாக ராஜாராமனுடன் அக்ரிமெண்ட் செய்து கொண்டார் அம்பலக்காரர். ராஜாராமன் விடைபெற்றுக் கொண்டு புறப்படும்போது,

"பணத்துக்கு ஒண்ணும் அட்டியில்லே. சீக்கிரமா வந்து ரெஜிஸ்திரேஷனை முடிச்சுக் குடுத்துடுங்க" என்றார் அம்பலக்காரர். அவனும் அப்படியே செய்வதாகச் சொல்லிவிட்டு மதுரை புறப்பட்டான். முதல் நாள் பகலில் மதுரையிலிருந்து கிளம்பும் போது மதுரத்திடம் சொல்லிக் கொள்ளாமலே வந்து விட்டோம் என்பது நினைவு வந்தது. அவள் நாகமங்கலத்துக்குப் போன போது சொல்லிவிட்டுப் போனது போலப் பத்தரிடம் சொல்லியாவது அவளுக்குச் சொல்லச் செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

'மேலூர் போனாலும் போவேன்' - என்று பத்தரிடமே இரண்டுங் கெட்டானாகத்தான் சொல்லியிருந்தான் அவன். 'மதுரத்துங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டீங்களா தம்பீ?' என்று அவரே அவனைக் கேட்டிருக்கக் கூடியவர் தான். ஆனால், அவன் பயணத்தை உறுதிப் படுத்தாமல் சொல்லியதனாலோ, அவனிடம் அப்படிக் கேட்டால் அவன் கோபித்துக் கொள்வான் என்று கருதியதனாலோ, அவர் கேட்கவும் இல்லை. கேட்காவிட்டாலும், விட்டுக் கொடுக்காமல் சில காரியங்கள் செய்து விடுகிற சமயோசித சாமர்த்தியம் பத்தரிடம் உண்டு என்பது ராஜாராமனுக்குத் தெரியும். 'உன்னைக் கூப்பிட்டுச் சொல்லிவிட்டுப் போகணும்னு தான் பார்த்தாரு; முடியலை. 'நீங்களே ஒரு வார்த்தை சொல்லிடுங்க பத்தரே'ன்னு சொல்லிவிட்டுப் போனாரு' என்பதாகச் சொல்லிக் கொண்டு விடுகிற சாமர்த்தியம் பத்தரிடம் இருந்ததால் இப்போது அவன் நிம்மதியாகத் திரும்பினான்.

மேலூரிலிருந்து திரும்பி, காலை பதினொரு மணிக்கு அவன் வாசகசாலை மாடிப்படியேறிய போது, "தம்பீ! ஒரு நிமிஷம். இதைக் கேட்டிட்டுப் போங்க" என்று பத்தர் குரல் கொடுத்தார். வேகமாக மேலே படியேறத் தொடங்கியிருந்தவன் மறுபடி கீழே இறங்கி, கில்ட் கடை முகப்பில் வந்து நின்றான். என்ன ஆச்சரியம்! அவன் எதை நினைத்துக் கொண்டே வந்தானோ அதையே அவனிடம் வேண்டினார் அவர். "அதென்ன 'மேலூர் போனாலும் போவேன்'னிட்டுப் போனீங்க. ஒரேயடியாப் போயிட்டிங்களே. ராத்திரியே திரும்பிடுவீங்கன்னு பார்த்தேன். மதுரம் ஏழெட்டு வாட்டி எங்கே எங்கேன்னு கேட்டுச்சு. அப்புறம் தான் சொன்னேன் - அதுங்கிட்டச் சொல்லச் சொல்லி நீங்க எங்கிட்டச் சொல்லிவிட்டுப் போனதாக ஒரு பொய்யும் சொன்னேன். 'நான் யாரிட்டவும் யாருக்காகவும் சொல்லிட்டுப் போகலையே'ன்னு மூஞ்சிலே அடிச்ச மாதிரிப் பதில் சொல்லி விடாதீங்க..."

"அதிருக்கட்டும் பத்தரே! இப்ப நீங்க எனக்கு இன்னொரு உபகாரம் பண்ணனுமே! மேலூர் நிலம், வீடு எல்லாத்தையும் விலை பேசி அட்வான்சும் வாங்கியாச்சு. அந்தப் பணத்தை உங்ககிட்ட கொடுத்து வைக்கிறேன். பத்திரமா வச்சிருக்கணும்..."

"வச்சிருக்கறதைப் பத்தி எனக்கொண்னுமில்லை. ஆனா இவ்வளவு அவசரப்பட்டு ஊருக்கு முந்தி நிலம் வீட்டையெல்லாம் ஏன் விற்கணும்?"

"விற்றாச்சு! இப்ப அதைப் பற்றி என்ன? பணத்தைக் கொஞ்சம் அட்வான்ஸா வாங்கியிருக்கேன். ஒரு வாரத்திலே ரெஜிஸ்திரேஷன் முடியும்போது மீதிப் பணமும் கிடைக்கும்..."

"தம்பீ! நான் சொன்னால் கோவிச்சுக்க மாட்டீங்களே?"

"எதைச் சொல்லப் போறீங்கன்னு இப்பவே எனக்கெப்படித் தெரியும்?"

"பணத்தைக் கொடுத்து வைக்கிறதுக்கு என்னைவிடப் பத்திரமான இடம் இருக்குன்னுதான் சொல்ல வந்தேன்."

"யாரிட்டக் கொடுத்து வைக்கலாம்கிறீர்?"

"மதுரத்துக்கிட்டக் கொடுத்து வைக்கலாம் தம்பீ!"

பத்தரின் யோசனையைக் கேட்டு அவன் மனம் கொதிக்கவோ ஆத்திரமடையவோ செய்யாமல் அமைதியாயிருந்தான். அவனுக்கும் அவர் சொல்வது சரியென்றே பட்டது. வாசகசாலைக்காகவும், வேறு காரியங்களுக்காகவும் அவள் இதுவரை செலவழித்திருப்பதைத் திருப்பி எடுத்துக் கொள்ளச் சொல்லுவதோடு, மேலே செலவழிக்க வேண்டிய சந்தர்ப்பம் எப்போது ஏற்பட்டாலும், தான் கொடுத்து வைத்திருக்கும் தொகையிலிருந்தே செலவழிக்க வேண்டும் என்பதையும் அவளிடம் வற்புறுத்திச் சொல்லி விடலாமென்று எண்ணினான் அவன். தான் கூறியதை அவன் மறுக்காதது கண்டு பத்தருக்கு வியப்பாயிருந்தது. அவன் தட்டிச் சொல்லாமல் உடனே அதற்கு ஒப்புக் கொள்வான் என்று எதிர்பார்க்கவேயில்லை அவர். அவன் ஒப்புக் கொண்டாற்போல அமைதியாயிருந்ததைக் கண்டு அவருக்கு மகிழ்ச்சியாயிருந்தது.

அவன் மேலே போய்விட்டு மறுபடி வெளியே புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, மொட்டை மாடிப் பக்கமிருந்து வளைகளின் ஜலதரங்க நாதமும், புடவை சரசரத்துக் கொலுசுகள் தாளமிடும் ஒலிகளும் மெல்ல மெல்ல நெருங்கி வந்தன.

"நல்லவாளுக்கு அழகு, சொல்லாமப் போயிடறது தான், இல்லையா?"

"அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை; பத்தர் சொல்லியிருப்பாரே!"

"சொன்னார்! ஆனா, நீங்களே எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போயிருந்தீங்கன்னா, எனக்கு இன்னும் சந்தோஷமா இருந்திருக்கும்..."

"மேலூர் போக வேண்டியிருந்தது. திடீர்னு நினைச்சுண்டேன். உடனே அவசரமாகப் புறப்பட வேண்டியதாச்சு..."

"பரவாயில்லை! இப்ப கொஞ்ச நாழிகை இருங்கோ, சாப்பாடு கொண்டு வரேன். சாப்பிட்டு அப்புறம் வெளியே போகலாம்..."

"சரி! இன்னொரு காரியம் மதுரம்..."

"என்ன? சொல்லுங்கோ."

மேலூர் நிலத்தையும், வீட்டையும் விலை பேசி அட்வான்ஸ் வாங்கியிருப்பதையும், அந்தப் பணத்தை அவளிடம் கொடுத்து வைக்கப் போவது பற்றியும் சொல்லிவிட்டு, அதில் அவளுக்குச் சேர வேண்டிய பழைய கடன் தொகையை எடுத்துக் கொள்வதோடு, புதிதாக ஏதேனும் வாசகசாலைக்கோ, தனக்கோ செலவழிக்க வேண்டியிருந்தாலும் அதிலிருந்தே செலவழிக்க வேண்டுமென்று அவன் நிபந்தனைகள் போட்டபோது, அவனுடைய அந்த நிபந்தனைகளைக் கேட்டு அவளுக்குக் கோபமே வந்து விட்டது.

"நீங்க அடிக்கடி இப்படிப் பேசறது உங்களுக்கே நல்லா இருந்தா சரிதான்! திடீர் திடீர்னு ரூபாய் அணாப் பைசாப் பார்த்துக் கணக்கு வழக்குப் பேச ஆரம்பிச்சுடறீங்க. நான் கணக்கு வழக்குப் பார்த்து இதெல்லாம் செய்யலை. ஒரு பிரியத்திலே செஞ்சதையும், செய்யப் போறதையும் கணக்கு வழக்குப் பேசி அவமானப்படுத்தாதீங்க? நீங்க பணத்தை எங்கிட்டக் கொடுத்து வைக்கறேன்னு சொல்றதைக் கேட்டு நான் ரொம்ப சந்தோஷப்படறேன்! ஆனா, என்னை ஏன் அந்நியமாகவும், வேற்றுமையாகவும் நினைச்சுக் கணக்கு வழக்குப் பார்க்கறீங்கன்னு தான் புரியலை..."

இதைச் சொல்லும்போதே அவள் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருவதைப் பார்த்து ராஜாராமன் ஒன்றும் பேசத் தோன்றாமல் நின்றான். மதுரத்தின் மனம் அனிச்சப் பூவைக் காட்டிலும் மென்மையாகவும், உணர்வுகள் அசுணப் பறவையைக் காட்டிலும் இங்கிதமாகவும் இருப்பது அவனுக்குப் புரிந்தது. அழுத்தி மோந்து பார்த்தாலே வாடிவிடும் அனிச்சப்பூவும், அபஸ்வரத்தைக் கேட்டால் கீழே விழுந்து துடிதுடித்து மரண அவஸ்தைப்படும் அசுணப் பறவையும் தான் அவளை எண்ணும் போது அவனுக்கு ஞாபகம் வந்தன.

ஒன்றும் பேசாமல் மேலூரில் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு வந்திருந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

மதுரம் அதை இரண்டு கைகளாலும் அவனிடமிருந்து வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

"இப்ப அப்படி என்ன பெரிய பணமுடை வந்துவிட்டது உங்களுக்கு? எதற்காகத் திடீரென்று சொல்லாமல் ஓடிப்போய் நிலத்தையும் வீட்டையும் விற்கிறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டு வரணும்?"

"அதுக்காகன்னே நான் போகலை; போன இடத்திலே முடிவானதுதான்..."

"அப்படி முடிவு பண்ண, இப்ப என்ன அவசரம் வந்ததுன்னுதான் கேட்கிறேன் நான்..."

"....."

"என்னை ஒரு வார்த்தை கேட்டிருந்தீங்கன்னா, நான் விட்டிருக்க மாட்டேன்."

ஆத்மாவோடு ஆத்மாவாகக் கலந்து உறவு கொண்டுவிட்டவளைப் போல இவ்வளவு ஒட்டுதலாக அவளால் எப்படிப் பேச முடிகிறதென்று மனத்துக்குள் வியந்தான் ராஜாராமன். ஆனால் அவள் அப்படிப் பேசியது அவனுக்கு மிகவும் இதமாக இருந்தது.

தொடர்ந்து சில நாட்களாக ராட்டு நூற்கவும் படிக்கவும் எண்ணினான் அவன். எனவே, நாலைந்து நாட்கள் தொடர்ந்து அவன் வேறெங்கும் வெளியே சுற்றவில்லை; வாசகசாலையிலேயே தங்கிப் புத்தகங்கள் படித்தான். மதுரத்தின் அன்பும் பிரியமும் நிறைந்த உபசரிப்பு அவனைச் சொர்க்க பூமிக்குக் கொண்டு போயிற்றெனவே சொல்ல வேண்டும். அந்த அன்புமயமான நாட்களில் ஒரு நாள் மாலை தன் தாய் கோயிலுக்குப் போயிருந்த போது, அங்கேயே வீணையை எடுத்துக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு அவனுக்காக ஒரு மணி நேரம் வீணை வாசித்தாள் மதுரம். அந்த இசை வெள்ளத்தில் அவன் மனம் பாகாய் உருகியது. எதிரே சரஸ்வதி தேவியே ஒரு வசீகரவதியாகி வந்தமர்ந்து வீணை வாசித்துக் கொண்டிருப்பது போல் அவனுக்குக் காட்சியளித்தாள் அவள்.

மறுபடி வீடு நில விறபனை ரிஜிஸ்திரேஷனுக்காக அவன் மேலூர் புறப்படுவதற்கிருந்த தினத்துக்கு முந்திய தினத்தன்று காலையில் பிருகதீஸ்வரனின் பதில் கடிதம் அவனுக்குக் கிடைத்தது. வருட ஆரம்பத்தில் மோதிலால் நேரு மரணமடைந்த செய்தி தன் மனத்தைப் பெரிதும் பாதித்திருப்பதாக எழுதியிருந்தார் அவர். தானும் தன் மனைவியுமாகப் புதுக்கோட்டைச் சீமையில் ஊர் ஊராகச் சென்று கதர் விற்பனைக்கும், சுதேசி இயக்கத்திற்கும் முடிந்தவரை பாடுபட்டு வருவதாகவும், மாகாண மாநாட்டின் போது மதுரை வரமுடியாவிட்டாலும் முடிந்தபோது அவசியம் மதுரை வருவதாகவும் கடிதத்தில் விவரித்து எழுதியிருந்தார், அவர். அந்தக் கடிதத்தை அவன் பிரித்துப் படித்துக் கொண்டிருந்த போது மதுரம் வந்ததால் அதை அவளிடமும் படிக்கக் கொடுத்தான் அவன். பிருகதீஸ்வரனின் கடிதத்தைப் படித்துவிட்டு அவரைப் பற்றி ஆர்வமாக விசாரித்தாள். சிறை வாழ்க்கையில் அவரோடு கழித்த இனிய நாட்களையும், வேளைகளையும் சுவாரஸ்யமாக அவளுக்கு வருணித்துச் சொன்னான் அவன்.

மறுநாள் அதிகாலையில் மேலூர் போய்ப் பத்திரம் பதிந்து கொடுத்துவிட்டுப் பாக்கிப் பணத்தையும் வாங்கி வரப் போவதாக முதல் நாளிரவே மதுரத்திடம் சொல்லியிருந்தான் அவன். அதனால் அவன் எழுவதற்கு முன்பே அவள் காபியோடு வந்து, அவனை எழுப்பிவிட்டாள்; சீக்கிரமாகவே அவன் மேலூர் புறப்பட முடிந்தது.

அம்பலக்காரர் ஸ்டாம்ப் வெண்டரைப் பிடித்துப் பத்திரம் எல்லாம் தயாராக எழுதி வைத்திருந்தார். சப்-ரிஜிஸ்திரார் ஆபீஸிலும் அதிக நேரம் ஆகவில்லை. முதல் பத்திரமாக ராஜாராமனின் பத்திரமே ரிஜிஸ்தர் ஆயிற்று. ரிஜிஸ்திரார் முன்னிலையிலேயே பாக்கி ஏழாயிரத்தையும் எண்ணிக் கொடுத்து விட்டார் அம்பலக்காரர். சப்-ரிஜிஸ்திரார் ஆபீஸ் படியிலிருந்து இறங்கியபோது, பிறந்த ஊரின் கடைசிப் பந்தமும் களையப்பட்டு விட்டது போல ஓருணர்வு நெஞ்சை இலேசாக அரித்தது. வீட்டில் வாடகைக்கு இருக்கும் உரக் கம்பெனிக்காரனுக்கு வீட்டை விற்று விட்டதை அறிவிக்கும் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுக்கும்படிக் கேட்டார் அம்பலக்காரர். அப்படியே ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தான் ராஜாராமன். மேலூர் நண்பர் பகல் சாப்பாட்டை அங்கேயே தன்னோடு சாப்பிட்டுவிட்டுப் போக வேண்டும் என்றார். பகல் சாப்பாட்டை முடித்துக் கொண்டு புறப்படும் போது மணி பன்னிரண்டு ஆகிவிட்டது. சப்-ரிஜிஸ்திரார் ஆபீஸ் படியிலிருந்து இறங்கியபோது மனத்தை அரித்த உணர்வு, ஊரிலிருந்து புறப்படும்போது ஏற்பட்டது. மேலூர் வீட்டுப் பரணில் மதுரையிலிருந்து ஒழித்துக் கொண்டு போய்ப் போட்டிருந்த பண்டம் பாடிகளை மீண்டும் மதுரைக்குக் கொண்டு வர நண்பர் பொறுப்பு எடுத்துக் கொண்டார்.

மாலையில் அவன் மதுரை திரும்பியதும், நேரே வாசக சாலைக்குத் திரும்பி மதுரத்திடம் பணத்தைச் சேர்த்து விட எண்ணினான். அவன் வாசகசாலைக்கு வந்தபோது, பின்பக்கத்து மாடியில் வீணை வாசித்துக் கொண்டிருப்பது கேட்டது.

'சரி, அவள் வீணை வாசித்து, முடித்துவிட்டு வருகிறவரை சர்க்காவில் நூற்கலாம்' என்று உட்கார்தான் அவன். முதலில் எடுத்த பஞ்சுப் பட்டையை முடித்து விட்டு, இரண்டாவது பட்டையை எடுத்த போது பத்தர் மேலே வந்தார்.

"என்ன ரெஜிஸ்திரேஷன் முடிஞ்சுதா தம்பி? பாக்கிப் பணம்லாம் வாங்கியாச்சா?"

"எல்லாம் முடிஞ்சுது பத்தரே! மதுரத்துக்கிட்டப் பணத்தை கொடுக்கணும். அது வீணை வாசிச்சுக்கிட்டிருக்குப் போலேருக்கு. தொந்திரவு பண்ண வேண்டாம். தானா வாசிச்சு முடிச்சிட்டு வரட்டும்னு சர்க்காவை எடுத்து வச்சுக்கிட்டு உட்கார்ந்தேன்."

"அது இப்ப வந்துடுங்க தம்பீ! திடீர்னு எதிர்பாராம ஜமீந்தார் - யாரோ அவர் சிநேகிதனாம் ஒரு வெள்ளைக்காரனையும் கூப்பிட்டுக்கிட்டு வீணை கேட்கணும்னு வந்து உட்கார்ந்திட்டாரு. மத்தியானம் வரை நீங்க வந்தாச்சா வந்தாச்சான்னு கால் நாழிகைக்கொரு தரம் கேட்ட வண்ணமாயிருந்திச்சு. பன்னிரண்டு மணிக்கு முத்திருளப்பன் வந்தாரு. அவருக்கிட்டக்கூட நீங்க மேலூருக்குப் போனதைப் பற்றித் தான் பேசிக்கிட்டிருந்தது."

"அப்புறம் நாகமங்கலத்தார் வந்ததும் - நான், நீர், முத்திருளப்பன் எல்லாருமே மறந்து போய்ட்டோமாக்கும்."

"சே! சே! அப்பிடி எல்லாம் பேசப்படாது! ஜமீந்தார் பேரை எடுத்தாலே, உங்களுக்கு உடனே மதுரத்து மேலே கோபம் வந்துடுது. அது என்ன செய்யும் பாவம்! ஜமீந்தாருக்கு முன்னாடி வீணை வாசிச்சாலும், உங்க ஞாபகத்திலே தான் வாசிக்குது அது! அதை நீங்களாவது புரிஞ்சுக்கணும்..."

"நான் புரிஞ்சுக்கலேன்னு சொல்லலியே இப்ப..."

"புரிஞ்சுக்கிட்டுத்தான் இப்படி எல்லாம் பேசறீங்களா தம்பீ!"

"சரி! சரி! அந்தப் பேச்சை விடுங்க, நான் கொஞ்சம் கோவில் வரை போயிட்டு வரேன்" - என்று 'சர்க்காவை' ஓரமாக வைத்துவிட்டுக் கீழே இறங்கிக் கோவிலுக்குப் புறப்பட்டான் ராஜாராமன்.

மீண்டும் அவன் திரும்பி வந்த போது இரவு ஏழு மணிக்கு மேலாகிவிட்டது. அவன் மாடிக்குப் போனபோது பத்தர் உட்புறம் நாற்காலியிலும் மதுரம் மொட்டை மாடியிலிருந்து உள்ளே வரும் முதற்படியிலுமாக உட்கார்ந்து இருவருமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

உள்ளே வரும் அவனைப் பார்த்ததும் மதுரம் பவ்யமாக எழுந்து நின்றாள். முழு அலங்காரத்துடன் பரிபூரண சௌந்தரியவதியாக எழுந்து நின்ற அவளைப் பார்த்தவுடன் அவள் அவ்வளவு நேரம் ஒரு ஜஸ்டிஸ் கட்சி ஜமீந்தார் முன்னிலையிலும், ஒரு வெள்ளைக்காரன் முன்னிலையிலும் வீணை வாசித்துவிட்டு வந்திருக்கிறாள் என்பதையொட்டி அவளிடம் அவனுக்கு ஏற்பட்டிருந்த உள்ளடங்கிய ஆத்திரம் கூடப் பறந்து விடும் போலிருந்தது. அக்கினியாகக் கனன்று வருகிறவன் மேல் பார்வையினாலேயே பனி புலராத புஷ்பங்களை அர்ச்சிக்கும் இந்தக் கடாட்சத்தை எதிர் கொண்டு ஜெயிக்க முடியாதென்று தோன்றியது அவனுக்கு. ஒன்றும் பேசாமல் பத்திரம் முடித்து வாங்கிக் கொண்டு வந்திருந்த ஏழாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து அவளிடம் நீட்டினான் அவன். அவள் முன்பு செய்தது போலவே இரண்டு கைகளாலும் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். பத்தர் மெல்லக் கீழே புறப்பட்டுப் போனார். எதையாவது சொல்லி அவளை வம்புக்கு இழுக்க ஆசையாயிருந்தது அவனுக்கு; ஜமீந்தார் வந்து போன விஷயத்தை நேரடியாகச் சொல்லிக் காண்பிக்கவும் மனம் வரவில்லை; வேறு விதத்தில் வம்புப் பேச்சு ஆரம்பமாயிற்று.

"ஒன்பதாயிரம் - இதைச் சேர்த்து மொத்தம் கொடுத்திருக்கேன். முன்னாலே ஆன செலவு, இனிமே ஆகப் போற செலவு, எல்லாத்தையும் இதிலிருந்துதான் எடுத்துக்கணும்..."

"ரொம்ப சரி! உங்க வார்த்தைக்குக் கட்டுப்படறேன். எப்பவும் எதிலயும் நான் உங்களை மீறிப் போகமாட்டேன். ஆனா இதிலே மட்டும் ஒரு உரிமை கொடுங்கோ...! தேசத்துக்காக நீங்க கஷ்டப்படறதுக்கும், தியாகம் பண்றத்துக்கும் உங்களுக்கு உரிமை இருக்கறாப்பல உங்களுக்காகக் கஷ்டப்படறதுக்கும், தியாகம் பண்றதுக்கும், எனக்கும் கொஞ்சமாவது உரிமை வேண்டும். ஒரு தியாகி மத்தவாளும் தியாகியாகறதுக்கு அனுமதிக்கணும். இல்லாட்டா தியாகத்தையே அவன் ஒரு சுயநலமாப் பயன்படுத்தற மாதிரி ஆயிடும். நீங்க ஊரறிய உலகறிய தேசத்துக்காகத் தியாகம் பண்ணுங்கோ. ஆனால் ஊரறியாமல், உலகறியாமல் - புகழை எதிர்பாராத ஒரு அந்தரங்கமான தியாகத்தை உங்களுக்காக நான் பண்றதை நீங்க தடுக்கப்படாது. அது நியாயமில்லை; தர்மமுமாகாது. தயவு பண்ணி இனிமே எங்கிட்ட நீங்க ரூபாய் அணா கணக்குப் பேசப் படாது."

"சரி பேசலே, அப்புறம்?..."

"நீங்க கொடுத்து வச்சிருக்கறதை விட அதிகமாகவும் நான் உங்களுக்காக செலவழிப்பேன். பக்தி செய்கிறவர்கள் தனக்கு எவ்வளவு செலவழிக்க வேண்டுமென்பதைத் தெய்வங்கள் முடிவு செய்ய உரிமையில்லை..."

"முடிவு செய்ய உரிமையில்லை என்றாலும், கவலைப்பட உரிமை உண்டல்லவா மதுரம்?"

"நான் ஒருத்தி இருக்கிறவரை உங்களுக்கு ஒரு கவலையும் வராது. வர விடமாட்டேன்."

"வேடிக்கைதான் போ! பக்தர்களின் கவலையைப் போக்கும் தெய்வங்களைப் பற்றித்தான் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறேன். தெய்வங்களின் கவலைகளையே போக்க முடிந்த பக்தர்களைப் பற்றி இப்போது நீதான் சொல்கிறாய் மதுரம்...!"

அவள் மறுமொழி கூறாமல் புன்னகை பூத்தாள்.

அத்தியாயம் - 9

மகாத்மா காந்தி லண்டனுக்கு வட்ட மேஜை மகாநாட்டிற்குப் போய்விட்டுத் திரும்பினார். பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் அவருக்கும் பேச்சு வார்த்தைகள் நடந்தன. சமரசமோ, உடன்பாடோ எதுவும் சாத்தியமில்லாமல் போயிற்று. மகாத்மா லண்டனில் இருந்த போதே இந்தியாவில் காங்கிரஸ் இயக்கத்தை ஒடுக்கி அழிப்பதற்கான ஏற்பாடுகளைப் பிரிட்டிஷ் அரசாங்கம் செய்யத் தொடங்கிவிட்டது. லண்டனிலிருந்து திரும்பிய மகாத்மா பம்பாய் ஆசாத் மைதானத்தில் பேசிய பேச்சின் சுவடு மறையுமுன்னே, நாட்டில் அங்கங்கே தேசியவாதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டார்கள்.

முற்றிலும் எதிர்பாராத விதமாக, ஒரு வருஷத்திற்கு ஜாமீன் கோரி ராஜாராமன் மேல் வழக்குத் தொடுக்கப்பட்டது. வேறு சில தேசபக்தர்கள் மேலும் இப்படி ஜாமீன் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. அரசியல் கைதிகளுக்கும், தேசபக்தர்களுக்கும் ஜாமீன் கேட்பது வழக்கமில்லாத புதுமையாயிருந்தது. ஜாமீன் தர மறுப்பது என்று எல்லாத் தேசபக்தர்களும் முடிவு செய்தார்கள். ராஜாராமனும் அதே முடிவுக்கு வந்தான். அரசாங்கம் யாவரையும் கைது செய்தது. ராஜாராமனும் கைதானான். முத்திருளப்பன், குருசாமி இருவர் மேலும் ஜாமீன் வழக்கு இல்லாததால் அவர்கள் வெளியிலேயே தங்கினர்.

எங்கோ வெளியே சுற்றிவிட்டு வாசக சாலைக்குத் திரும்பி வந்தபோது, மொட்டைக் கோபுர வாசலில் வைத்து அவனைப் போலீஸார் கைது செய்ததால் - அந்தச் செய்தி உடனே பத்தருக்கோ மதுரத்துக்கோ எட்டவில்லை.

போலீஸ் எஸ்கார்ட்டுடன் இரண்டு நாள் கழித்து அவன் கடலூருக்குக் கொண்டு போகப்பட்டான். பத்தர், முத்திருளப்பன், குருசாமி மூன்று பேருமே ரயில் நிலையத்தில்தான் அவனைப் பார்த்தார்கள்.

"அதுக்கு என்ன சொல்லட்டும் தம்பீ?" - என்று கண்கலங்கிய பத்தரைப் பார்த்து:

"கவலைப்படாதிரும் பத்தரே! உங்களைப் போல் மதுரமும் கண் கலங்கினாலும், உங்களுக்கே ஆறுதல் சொல்ற மனபலம் அவளுக்கு இருக்கு" - என்றான் ராஜாராமன். கைவிலங்குகளோடு செய்த அந்த இரயில் பயணத்தின் போது, அவன் மனமுருகி நினைவில் பதித்துக் கொண்ட ஒரே காட்சி - ஒரு நொண்டிப் பிச்சைக்காரன் திருச்சி நிலையத்தில் வண்டிக்குள் ஏறி,

'பண்டித மோதிலால் நேருவைப்
பறி கொடுத்தோமே!
பறி கொடுத்தோமே! - உள்ளம்
பறிதவித்தோமே'

- என்று பாடியதுதான். தன் போக்கில் பிச்சைக்கு வரும் இரயில் பிச்சைக்காரனைக்கூட அந்தத் தேசிய நஷ்டம் பாதித்திருப்பதை உணர்ந்தபோது, அவனுக்கு ஆறுதலாயிருந்தது. எஸ்கார்ட்டிடம் சொல்லித் தன் கையிலிருந்த சில்லறையில் கொஞ்சம் அந்தப் பிச்சைக்காரனுக்கு எடுத்துப் போடும்படி செய்தான் ராஜாராமன். தேசபக்தியுள்ள பல பிரபல பாடகர்கள் பாடியிருந்த இந்தப் புதிய பாட்டு இரயிலில் பிச்சையெடுக்க வருகிறவனாலும் அழுது கொண்டே பாடப் படுகிறது என்பதைக் கவனித்த போது, தேசம் முழுவதுமே சுதந்திரத்தை எதிர் நோக்கி அழுது தவிப்பதை அவன் உணர்ந்தான். ஒரு தேசபக்தன் என்ற முறையில் அவனுக்குப் பெருமிதமாக இருந்தது.

கடலூர் சிறையில் வேறொரு எதிர்பாராத தொந்திரவும் இருந்தது. முன்பு வேலூர் ஜெயிலில், கூட இருந்த எல்லாருமே தேசபக்தர்களாக இருந்தார்கள். இங்கேயோ அப்படியில்லாமல் பயங்கரவாதிகள் சிலரும், பல்வேறு கிரிமினல் குற்றவாளிகளும் அடங்கிய 'அஸோஸியேஷன் பிளாக்' ஒன்றில் ராஜாராமன் அடைக்கப்பட்டான். பிருகதீஸ்வரனைப் போல் நட்புக்கும், அன்புக்கும் உரியவராக இங்கு யாருமே கிடைக்கவில்லை. வார்டர்களோ, கிரிமினல் கைதிகள் யார், தேசபக்தர்கள் யார் என்று சிறிதும் தரம் பிரிக்காமல் எல்லாரையுமே கிரிமினல் கைதிகளைப் போலவே கொடுமையாக நடத்தினார்கள். சிறைவாசத்தின் முழுக்கொடுமையும் இப்போது கடலூரில் தான் ராஜாராமனுக்கு நன்றாகத் தெரிந்தது. அவன் கடலூருக்கு வந்த இரண்டாவது வாரம் மதுரம் எழுதிக் கொடுத்த கடிதம் ஒன்றை வாங்கிப் பத்தர் தபாலில் அவனுக்கு அனுப்பியிருந்தார். உண்மை அன்புக்கு மனிதர்களில்லாத அந்தச் சிறையின் சூழலில், அவள் கடிதம் அவனுக்குப் பெரிய ஆறுதலாயிருந்தது.

"யாருடைய பவித்திரமான மனத்தில் நான் சதாகாலமும் விரும்பிச் சிறைப்பட்டுக் குடியிருக்கிறேனோ அவருடைய பாதாரவிந்தங்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள். செய்தியைப் பத்தர் வந்து சொன்னதும் அதிர்ந்து போனேன். பாவி எந்த வேளையில் உங்கள் மேல் பிரியம் வைத்தேனோ, அந்த வேளையிலிருந்து உங்களுக்குச் சிறைவாசமாக வந்து கொண்டிருக்கிறது. சிறு வயதிலிருந்து நான் கூண்டுக் கிளியாகவே வளர்க்கப் பட்டவள். உங்களைப் பார்ப்பதற்கு முன்னால் மனிதர்கள் மேல் பிரியம் செலுத்துவதைப் பற்றி எனக்குத் தெரியாது. உங்களைக் கூட நான் முகத்துக்கு முகம், நேருக்கு நேர் முதலில் பார்க்கவில்லை. நான் முதன் முதலில் பார்த்தது உங்கள் பொன்நிற உட்பாதங்களைத்தான். அழகர் கோவில் தங்க விமானத்தில் பளீரென்று இரண்டு பாதங்களை வடித்திருக்கிறார்கள். மொட்டை மாடி விளிம்புச் சுவரில் காலை வெயிலில் தகதகவென்று தங்கத் திருவடிகளாய் மின்னிய உங்கள் உள்ளங்கால்களைத் தான் முதன் முதலில் நான் பார்த்தேன். அந்தப் பாதங்களைப் பார்த்தவுடன் கள்ளழகர் கோவில் விமானத்தில் பார்த்த தங்கத் திருவடிகள் தான் எனக்கு நினைவு வந்தன. தெரியாமல் நான் உங்கள் கால்களில் எறிந்துவிட்ட பூக்களுக்காக நீங்கள் என்னைக் கோபித்துக் கொண்டீர்கள். அப்போது அதற்காக நான் உங்களிடம் பணிந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டாலும் - அர்ச்சிக்க வேண்டிய தகுதியுள்ள பாதங்களிலேயே என்னுடைய பூக்களை நான் அர்ச்சித்திருப்பதாக உள்ளூர மகிழ்ந்து பெருமைப்படவே செய்தேன். இப்படி எல்லாம் மனம் திறந்து உங்களுக்குக் கடிதம் எழுதும்போது, ஏதாவது தப்பாக அசட்டுப் பிசட்டென்று எழுதுகிறேனோ என்று எனக்குப் பயமாகவும் இருக்கிறது. நான் ரொம்பப் படித்தவளில்லை. ஜமீந்தாருடைய ஏற்பாட்டில் தமிழ்ச் சங்கத்துக் கவிராயர் ஒருவர் கொஞ்ச நாள் நிகண்டு, நன்னூல், நைடதம், திருவிளையாடற் புராணம், பிரபுலிங்க லீலை எல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். வாசகசாலைக்கு வருகிற பத்திரிகைகளில் சுதந்திரச் சங்கு, காந்தி - எல்லாம் நானே பிரியமாகத் தேடி வாங்கிப் படிக்கிறேன். ஆனாலும், நான் ஒரு கவி இல்லை. ஆனால், உங்களுக்கு எழுதுகிறோம் என்ற ஒரே காரணத்தினால், என்னுடைய கடிதத்தை நான் விசேஷ சிரத்தையோடும் ஒரு கவியின் உற்சாகத்தோடும் எழுத முற்படுகிறேன். எழுதுகிறவர்களின் திறமையினாலன்றி எழுதப்படிகின்றவர்களின் சிறப்பால் மட்டுமே சில விசயங்களுக்கு கவிதையின் அந்தஸ்து வந்து சேரும் போலிருக்கிறது. இந்தக் கடிதத்திலும் அப்படி ஏதாவது ஓர் அந்தஸ்து இருக்குமானால் அதற்கு இதை எழுதுகிற என் திறமை காரணமல்ல. நான் இதை யாருக்கு எழுதுகிறேனோ அவருடைய பெருமை தான் அதற்குக் காரணமாக இருக்கும்.

பத்தர் என்னிடம் நீங்கள் கைதாகிவிட்ட செய்தியை வந்து சொன்ன போது நான் அழுதேன்.

"என்னம்மா, நீயே இப்படிப் பச்சைப்புள்ளே கணக்கா அழுதா எப்படி? எங்களுக்கெல்லாம் ஆறுதல் சொல்ற மனோபலம் உனக்கு உண்டுன்னு அவர் சொல்லிட்டுப் போறாரு," என்றார் பத்தர். உடனே நீங்கள் அப்படி எனக்கொரு கட்டளை இட்டிருந்தால், அதை நான் நிறைவேற்ற வேண்டியது என்னுடைய முதல் கடமை என்று நான் உணர்ந்தேன். நான் உங்களுக்கு கட்டுப்பட்டவள். உங்கள் சொற்படி நடக்க விரும்புகிறவள். நீங்கள் விடுதலையாகி வருகிறவரை சகல காரியங்களையும் நான் கவனித்துக் கொள்கிறேன். சிறைவாசம் என்ற ஒரு கவலையைத் தவிர வேறெந்தக் கவலையையும் நீங்கள் படக்கூடாது. நீங்கள் விடுதலையாகி வந்து, உங்களுடைய கம்பீரத் திருவுருவத்தைத் தரிசிக்க ஒவ்வொரு நாளும் நான் ஏங்கிக் கொண்டிருப்பேன் என்பது ஒன்று மட்டும் உங்களுக்கு நினைவிருந்தால் போதும். பக்கத்தில் இருக்காவிட்டாலும், மானஸீகமாக நானும் உங்களோடு இருந்து அந்தச் சிறைவாசத்தை அனுபவிப்பதாகவே எனக்குள் பாவித்துக் கொண்டிருக்கிறேன். முடிந்தால் இந்த மாதமுடிவில் பத்தரைக் கடலூருக்கு அனுப்புவேன். என்னுடைய இந்தக் கடிதத்துக்கு நீங்கள் பதில் எழுத முடியாமற் போனாலும் பத்தர் வரும்போது அவரிடம் நேரிலே ஏதாவது கூறி அனுப்புங்கள். அதைக் கேட்டே நான் திருப்திப் பட்டுக் கொள்வேன். பத்தர் வரும்போது அவரிடம் நேரில் சில தகவல்கள் சொல்லியனுப்புகிறேன். இந்தக் கடிதத்தில் என்னையறியாமல் நான் ஏதாவது பிழை செய்திருந்தால் பொருத்தருள வேண்டுகிறேன்.

என்றும் தங்கள் அடிமை மதுரவல்லி"

என்று கடிதத்தை முடித்திருந்தாள், அவள். இந்தக் கடிதத்தை அது தனக்குக் கிடைத்த தினத்தன்றே பலமுறை திரும்பத் திரும்பப் படித்துவிட்டான் ராஜாராமன். பாலைவனத்தின் இடையே பயணம் செய்யும் போது பருகக் கிடைத்த நல்ல தண்ணீர் போல இருந்தது அது.

வேலூர் சிறைவாசம் எந்த அளவுக்கு ஒரு குருகுல வாசத்தைப் போல் சுகமாகக் கழிந்ததோ அப்படி இது கழியவில்லை. வேலூரிலும் 'தனிக் கொட்டடி' இல்லையானாலும் - ஒரே பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த அத்தனை கைதிகளும் சுதேசி இயக்கத்தினால் மட்டுமே சிறைக்கு வந்தவர்களாக இருந்தனர். தவிர, அந்தச் சிறைவாசத்தின் கடுமையே தெரியாதபடி, பிருகதீஸ்வரன் போன்ற ஒருவரின் நட்பும் பாசமும் அவனுக்கு அங்கே கிடைத்திருந்தன. இங்கேயோ எல்லாமே கடுமையாக இருந்தது.

இருபது முப்பது பேர் கொண்ட 'அஸோஸியேஷன் பிளாக்' முதல் நாள் மாலை ஆறு மணிக்குப் பூட்டப்பட்டால் மறுநாள் காலை ஆறுமணிக்குத்தான் மறுபடி திறந்து விடுவார்கள். அவசர மலஜல உபாதைகளை உள்ளேயே ஒரு கோடியில் தான் முடித்துக் கொள்ள வேண்டும். ஈக்களும், கொசுக்களும், தாராளமாகப் பறக்கக் கக்கூஸ் வாடைவீசும் ஒரு நரகமாக இருந்தது அந்தக் கொட்டடி. இரவு நேரமாக நேரமாகக் கொட்டடியிலேயே உள்ளேயிருக்கும் துர்நாற்றங்கள் சுற்றிச் சுற்றி வரும். அது தூக்கத்தைக் கெடுத்தது; நோய்களை உண்டாக்கியது.

முப்பது கைதிகளின் குறட்டை, உளறல், கனவு அரற்றல், இருமல், செருமல், இவைகளுக்கிடையே இரவு நரகமாகக் கழிந்து கொண்டிருந்தது. முறையான வார்டர்கள் கடுமையில் சிறிதும் குறைந்தவர்களில்லை. கைதிகளிலேயே விசுவாசமுள்ள கைதிகளிலிருந்து பொறுக்கி நியமித்த 'கன்விக்ட் வார்டர்' - யாராவது வந்தால் சில சமயம் கருணையாக நடந்து கொள்வது உண்டு. கிரிமினல் கைதிகள் பெரும்பாலோர் கூட இருந்ததனால் - அவர்களோடு இருந்த பாவத்துக்காகச் சத்தியாக்கிரகிகளுக்கும், கதவைத் திறக்காமலே சந்து வழியே ஆகாரத்தைக் கொடுக்கும் 'ஸாலிடரி கன்ஃபைன்மென்ட்' முறை கடலூரில் கடைப்பிடிக்கப்பட்டது. சில சத்தியாக்கிரகிகள் 'ஸாலிடரி கன்ஃபைன்மென்ட்' முறையை எதிர்க்கவும் செய்தனர். ஆனால் பயன் ஒன்றும் உடனே விளையவில்லை.

முதன் முறை அவனைப் பார்க்க வந்ததைப் போலவே பத்தரோ முத்திருளப்பனோ இரண்டு மாதத்துக்கு ஒரு முறை தவறாமல் கடலூருக்கு வந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பது ஆறுதல் அளிக்கக் கூடியதாக இருந்தது. தேசத்திற்காக விரும்பி அடைந்த தண்டனை இது என்ற பெருமையோடு கடலூரில் நாட்களை ஒவ்வொன்றாக எண்ணி எண்ணிக் கழித்துக் கொண்டிருந்தான் ராஜாராமன். கடலூர் சிறையில் உணவு முறை மிகமிக மோசமாயிருந்ததால், மூலக் கடுப்பு அடிக்கடி வந்தது. கல்லைவிடக் கடுமையான உண்டைக் கட்டிகள் வழங்கப்பட்டன. சிறை வைத்தியர் உணவைவிட மோசமான மருந்துகளைக் கொடுத்ததனால் வைத்திய உதவியும் பயனளிக்கவில்லை. ஒவ்வொரு திங்கள் கிழமையும் சிறை மைதானத்தில் நடைபெற்ற கைதிகளின் 'பரேட்'டின் போது ஒவ்வொரு கைதியும் தன் குறைகளை அதிகாரியிடம் கூறலாம் என்றிருந்தாலும், அப்படிக் கூறப்பட்ட குறைகளும் அதிகாரிகளால் அலட்சியமே செய்யப்பட்டன.

அவன் கடலூர் சிறைக்கு வந்த சிறிது காலத்திற்குப் பின்பு முத்திருளப்பனும், பத்தரும் அவனைச் சந்திக்க வந்திருந்த ஒரு சமயத்தில்தான், மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியை அறிந்தான். அவர்கள் மூலமாக அவ்வப்போது ஏதாவது தகவல் சொல்லி அனுப்பிக் கொண்டிருந்தான், அவன். அவளும் ஏதாவது கடிதம் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தாள். கடலூர் சிறையில் அவனுடைய உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. மார்புக் கூடு பின்னித் தெரிவது போல் எலும்பும் தோலுமாக ஆகிவிட்டான் அவன். குளிப்பதற்கும் தண்ணீரை உபயோகப்படுத்துவதற்கும் அதிகக் கடுமையான நிபந்தனைகள் இருந்தன அங்கே. படுக்க விரிப்பு வசதிகள் அறவே இல்லை. முழங்கையை மடித்துத் தலைக்கு வைத்துக் கொண்டு அப்படியே தூங்க வேண்டியதுதான். மலஜல நாற்றமும், முடைவீச்சும், அழுக்குத் துணிகளின் வாடையுமாக ஒவ்வொரு நாளும் அருவருப்போடு கழிக்க வேண்டியிருந்தது.

வேலூரில் செய்தது போல பாரதி பாடல் வகுப்புகள் நடத்தவோ, அடிக்கடி ஒன்று சேர்ந்து, எல்லோரும் ஒருமுகமான மனத்துடன் பிரார்த்தனைக் கீதங்கள் இசைக்கவோ கடலூர் ஜெயிலில் வாய்ப்புக்கள் இல்லை. மன ஆறுதலோ, நிம்மதியோ கிடைக்க முடியாத காராக்கிருக வாசமாகவே இருந்தது அது.

மனத்தில் தனிமை உறுத்திய ஒரு பின்னிரவில் நீண்ட நேரம் தூக்கம் வராமல் அவஸ்தைப் பட்டுவிட்டுச் சிறிது கண்ணயர்ந்த அவன் ஒரு சுகமான கனவு கண்டான். மதுரம் கனவில் சர்க்கா நூற்றுக் கொண்டே 'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு' என்று பாடுகிறாள். அவன் அருகே அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறான்; நேரம் போவதே தெரியவில்லை.

சிறையில் அப்போது விடியும் நேரம் நெருங்கிவிடவே 'பரேடு'க்காக அவனை அடித்து எழுப்பிவிட்டார்கள். அன்று முழுவதும் சோகம் இழையும் அந்த இனிய குரல் 'தெலியலேது ராமா' - என்று அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. எல்லையில்லாதோர் அடர்ந்த காட்டில் எங்கோ ஒரு மூலையில், இருளென்றும் ஒளியென்றும் புரியாத மருளில் ஒலிக்கும் சோகக் குயிலின் குரல் ஒன்று கூவுவது போல் அந்தக் குரல் அவன் செவிகளில் கேட்டுக் கொண்டே இருந்தது. அதே பிரமை அன்று முழுவதும் அவனை வாட்டியது. மனவிளிம்பில் தாபமாகவும் தாகமாகவும் ஊமைத்தனமாக நின்று கதறிய வேதனை சில வரிகளாக உருப்பெற்று வார்த்தைகளாகச் சேர்ந்து கோத்துக் கொண்டு வந்தன.

"எல்லையிலாத தோர் காட்டிடை - நள்
இருளென்றும் ஒளியென்றும்
சொல்ல வொணாத தோர் மயக்கத்தை - இளஞ்
சோகக் குயில்ஒன் றிசைக்கிறது - அதன்
சுவடு முழுதும் தெரியுதிலை
சோகம் முழுவதும் புரியுதிலை,
தொல்லைப் பழங்கால முதலாய் - எனைத்
தேடி அலையும் குரல்
சொல்லைக் குழைத் தாளுங்குரல் - ஒரு
சோகம் முதிர்ந்து முதிர்ந்தூறிப்
பல்லாயிர மூழிகள் தொடர்ந்து
பாடிப் பசித்த குயிலின் குரல்..."

-முறையின்றியும் முறையாகவும், வரிசையாகவும் வரிசையின்றியும் தோன்றிய இதைத் திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லிப் பார்த்து நினைவு கொள்ள முடிந்ததே ஒழிய, ஒழுங்குபடுத்தி எழுதி வைத்துக் கொள்ள வசதிகள் இல்லை. பென்சில் காகிதத்துக்கு வார்டனிடம் கெஞ்சத் தயங்கி, இந்த வரிகளைத் திரும்பத் திரும்ப முணுமுணுத்து மனப்பாடமே செய்து கொண்டான் அவன். பொறுக்க முடியாத தனிமையும், மனத்தின் வேதனை வெடித்த வெடிப்புமாக இந்த வரிகளை இயற்றும் சக்தியை அவனுக்கு அளித்திருந்தன. இந்த வரிகளை மீண்டும் நினைப்பதிலும், மறப்பதிலும் மறுபடி முயன்று நினைப்பதிலுமாகப் பல தினங்களையே கழிக்க முடிந்தது அவனால். அப்படி ஒரு மயக்கம் இந்தச் சில வரிகளில் இருந்தன. விடுதலையானதும் இதை டைரியில் எழுதிக் கொள்ள எண்ணினான் அவன்.

ஒவ்வொன்றாக மாதங்கள் ஓடின. அவன் விடுதலையாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக வந்திருந்தபோது நாகமங்கலம் ஜமீந்தார் காலமாகிவிட்ட செய்தியைப் பத்தர் தெரிவித்தார். அதை ஏன் அவர் தன்னிடம் தெரிவிக்கிறார் என்பது முதலில் அவனுக்குப் புரியவில்லை. சிறிது நேரத்தில் அது புரிந்தது. புரிந்த போது வேறொரு தெளிவும் கிடைத்தது.

"மதுரம், தனபாக்கியம், மங்கம்மா, மாமாக் கிழவர் எல்லாருமே வீட்டைப் பூட்டிக்கிட்டு, நாகமங்கலம் போயிருக்காங்க தம்பி; வர ஒரு மாசம் கூட ஆகலாம்..."

"போக வேண்டியதுதானே?" - அவன் குரலில் சிறிது ஏளனம் ஒலித்தது.

"பாவம்! தனபாக்கியத்துக்கு இது பெரிய சோதனை..."

அவனுக்கு அவர் மேலும் இப்படிக் கூறியது இன்னும் புரியவில்லை.

"மதுரத்துக்கு இனிமே தகப்பனார் இல்லே..."

"நீங்க என்ன சொல்றீங்க பத்தரே?"

"நான் சொல்றது புரியலீங்களா தம்பீ?"

"புரியும்படியாக நீங்க சொன்னால் தானே?"

"நம்ம மதுரம், ஜமீந்தார்கிட்ட தனபாக்கியத்துக்குப் பிறந்த பொண்ணு, நாகமங்கலத்தார் தான் அதுக்கு அப்பா! - ஜமீந்தார் இதை அதிகமாக வெளியிலே சொல்லிக்கிறதில்லே! ஆனால், தன் மகள்ங்கிற முறையிலே மதுரத்துக்கிட்ட அவருக்குக் கொள்ளை வாஞ்சை..."

அதுவரை ஜமீந்தாரைப் பற்றி தான் நினைத்திருந்த நினைப்புக்களுக்காக மனம் கூசி, என்ன பதில் பேசுவதென்றே தெரியாமல் இருந்தான், ராஜாராமன். பயத்தாலோ, வெட்கத்தாலோ மதுரம் தன்னிடம் ஜமீந்தாரைப் பற்றிப் பேசிய சமயங்களில் கூட, அவரைத் தன் தந்தை என்று தெரிவிக்காமல் விட்டிருக்க வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு.

"மனுஷன் போயிட்டாலும் தன்னோட உயில்லே முறையா ஜமீந்தாரிணிக்குப் பிறந்த வாரிசுகளைவிட அதிகமாகவே மதுரத்துக்கு வேண்டியது எழுதி வச்சிட்டுப் போயிருக்கிறாருங்க..."

"இதை ஏன் இது வரை நீங்க எங்கிட்டச் சொல்லலே?"

"எப்படிச் சொல்றதுன்னு தெரியலே; அதுனாலே சொல்லலே. சொல்ல அவசியமும் ஏற்படலை; ஜமீந்தாரோட முகஜாடையை நீங்கள் மதுரத்துக்கிட்டப் பார்த்திருப்பீங்கன்னு நெனச்சேன்..."

"....."

"மதுரம் கூட உங்ககிட்டச் சொல்லலியா தம்பீ!"

"என்ன கேள்வி கேட்கிறீங்க பத்தரே! அம்மாவுக்குப் புருஷன் யாருன்னு மகள் எப்படிக் கூச்சமில்லாமல் பேச முடியும்?"

"ஏன் இதுலே தப்பொண்ணுமில்லீங்களே?"

ராஜாராமனுக்கு மனம் லேசாகி விட்டாற் போலிருந்தது. மகள் பெயருக்கு அபிஷேகம் செய்ய வந்த தந்தையைப் போல் அந்த நாகமங்கலம் ஜமீந்தார் கோவிலில் அன்று அமர்ந்திருந்த காட்சியை மீண்டும் நினைவு கூற முயன்றான் அவன்! தன்னுடைய மனம் சில வேளைகளில் செய்துவிட்ட தப்பான அநுமானங்களுக்காக இப்போது தனக்குத் தானே வெட்கப்பட்டான் ராஜாராமன். மதுரத்தை உடனே பார்க்க வேண்டும் போல் இப்போது பிரியம் பொங்கியது அவனுள். சேற்றில் தாமரைப் பூவாக அவனுள் அவள் நிரூபணம் பெற்றுவிட்டாள். அந்த நிரூபணம் அவன் அன்பைத் தாகமாகவே மாற்றியது. அவன் அவளைக் காணத் தவித்தான். 'எல்லையிலாததோர் காட்டில் நள்ளிருளென்றும் ஒளியென்றும்' - என்ற வரிகள் அவனுக்கு நினைவு வந்தன. அந்தக் குரல் இப்போது புரிந்தது. அது யாருடையது என்றும் தெரிந்தது. மதுரத்துக்குத் தன்னுடைய ஆறுதல்களைத் தெரிவிக்கும்படி அவன் பத்தரிடம் கூறி அனுப்பினான்.

மறு மாதம் அவன் விடுதலையாகிற தினத்தன்று, அவனை அழைத்துக் கொண்டு போக முத்திருளப்பனும், பத்தரும் கடலூர் வந்திருந்த போது, மதுரமே ஒரு கடிதம் கொடுத்தனுப்பியிருந்தாள். அவன் பத்தரிடம் கூறியனுப்பியிருந்த வார்த்தைகள் தனக்கு மிகவும் ஆறுதலளித்ததாக அவள் எழுதியிருந்தாள். 'என்னை வாஞ்சையோடு வளர்த்தது மட்டுமின்றி, என் வீணையின் முதல் இரசிகராகவும் இருந்த அப்பா காலமாகி விட்டது என்னைப் பெரிதும் கலங்கச் செய்துவிட்டது' - என்று அவள் தன் தந்தையின் மரணத்தைப் பற்றி அந்தக் கடிதத்தில் மனம் உருகி எழுதியிருந்த வரிகள் அவன் இதயத்தை தாக்கின. சிறுவயதிலிருந்து ஜமீந்தார் தன்னைச் செல்லப் பெண்ணாக வளர்த்த பெருமைகளை, ஒவ்வொன்றாக அந்தக் கடிதத்தில் அவள் கூறியிருந்தாள்.

உடன் வந்த பத்தரோடும், முத்திருளப்பனோடும் கடலூரிலிருந்து நேரே மதுரை போகாமல் திருச்சியில் இறங்கிப் புதுக்கோட்டை சென்றான் ராஜாராமன். பிருகதீஸ்வரனுடன் இரண்டு நாள் தங்கிவிட்டு, அப்புறம் அங்கிருந்து மதுரை புறப்பட்டார்கள் அவர்கள். அந்த முறை அவரோடு தங்கியிருந்தபோது, பிருகதீஸ்வரன் வ.வே.சு. அய்யரின் சேரமாதேவி குருகுலத்தைப் பற்றி நிறையச் சொன்னார்.

"மிக உயர்ந்த நோக்கத்தோடு தொடங்கப்பட்ட சேரமாதேவி 'பாரத்வாஜ ஆசிரமம்' அபவாதத்துக்கு ஆளாகி மறைந்துவிட்டது. பாரதப் பண்பாட்டிலும், தேச பக்தியிலும் சிறந்த தீரராகிய வ.வே.சு. ஐய்யர், ஊரின் சூழலினாலும் உடனிருந்த சிலரின் தேவையற்ற அளவு கடந்த ஆசாரப் பிடிப்பினாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டதனால், தமிழ்நாட்டிலும் ஒரு ஞானத் தபோவனம் உருவாக முடியாமல் போயிற்று. மறுபடியும் ஒரு பெரிய ஆசிரமம் தோன்ற வேண்டும். சேரமாதேவி குருகுலத்துக்கு ஏற்பட்டது போன்ற அபவாதம் எதுவும் ஏற்பட்டு விடாமல் தெளிவான நோக்கத்துடன் சாதிபேதமற்ற அடிப்படையிலும், தாழ்த்தப்பட்டோர் உயர வழி வகுக்கும் திட்டங்களுடனும், காந்திய இலட்சியங்களுடனும் ஓர் அருமையான குருகுலம் ஆரம்பிக்க வேண்டும். பயிற்சித் திட்டங்களும், சுதேசி மனப்பான்மையை வளர்க்கும் நாட்டுப்புற ஆசிரம வாழ்வும் இல்லாமல் வேகமாக நாட்டைத் திருத்த முடியாது. மனிதர்கள் ஒரே சாதி. அவர்களில் ஏற்றத் தாழ்வு இல்லை என்ற உணர்வைக் கலந்து பழகும் பண்பாடுகளால்தான் நடைமுறைக்குக் கொண்டு வரமுடியும்" - என்றார் பிருகதீஸ்வரன்.

அவர் விவரித்துச் சொல்லிய விதத்திலும், எடுத்துக் காட்டிய பழைய 'பால பாரதி' இதழ்களைப் படித்ததிலிருந்தும் ஒரு தேசிய சமூக ஞானபீடம் வேண்டும் என்ற ஆசை ராஜாராமனுக்கும் ஏற்பட்டது. அவன் மனத்தில் வித்தூன்றினாற் போல் அழுத்தமாகப் பதியும்படி அந்தக் கருத்தை நன்றாக எடுத்துச் சொல்லியிருந்தார் பிருகதீஸ்வரன்.

"இங்கே புதுக்கோட்டைச் சீமையில் இடமோ, அதற்கு வேண்டிய பொருளுதவியோ எனக்குக் கிடைக்கவில்லை. ராஜாராமன்! நகரச் சூழலிலிருந்து விலகிய இடமும், கொஞ்சம் பொருள் வசதியும் கிடைத்தால் நானே அப்படி ஒரு குருகுலத்தைத் தொடங்கி விடுவேன். இன்று என்னுடைய ஆசையெல்லாம் அதில் தான் இருக்கிறது. செயல் திட்டத்தோடு கூடிய அமைப்பு இல்லாமல் நாம் காணும் புதிய பாரத சமூகத்தை உருவாக்க முடியாது. இயக்கங்கள் நாட்டுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கலாம். சமூகப் பழக்க வழக்கங்களிலுள்ள அடிமைத்தனத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும் விடுதலை பெற இப்படி அமைப்புக்கள் நாடெங்கும் அவசியம். நாளை இந்தியாவை இவை தான் காக்க முடியும்," என்றார் அவர். காந்தி மகானின் சபர்மதி ஆசிரமத்தின் தன்மையும், சேரமாதேவி குருகுலத்தின் இலட்சியமும் சாந்தி நிகேதனத்தின் அழகும் பொருந்திய ஒரு புது அமைப்பை அவர் விரும்பினார்.

புதுக்கோட்டையிலிருந்து விடை பெறும் போது பிரிய மனமில்லாமலே பிரிந்தார்கள் அவர்கள். மதுரை திரும்பியதும் ராஜாராமன் மதுரம் இருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். ஏதோ காய்ச்சலில் விழுந்து - பிழைத்து எழுந்தவள் போல இளைத்து வாடியிருந்தாள் அவள். தனபாக்கியம் வெள்ளைப்புடவையும் நெற்றியில் திருநீறுமாகக் கோலம் மாறியிருந்ததையும் அவன் கவனித்தான். என்னென்னவோ தப்புத் தப்பாக நினைத்திருந்த பழைய நினைவுகளுக்காக அவன் மனம் கூசியது. திரும்பத் திரும்பத் தெரிவதையும், ஏற்கனவே தெரிந்து கொண்டிருந்ததையும் சேர்த்து நினைத்த போதெல்லாம் அவன் மனம் கூசியது.

அவன் மதுரத்துக்கு நிறைய ஆறுதல் சொல்லித் தேற்றினான். நாகமங்கலத்தாரைப் பற்றி அவன் துக்கம் கேட்கத் தொடங்கியபோதே அவள் சிறு குழந்தை போல் விசும்பி விசும்பி அழத் தொடங்கிவிட்டாள். தந்தையின் மேல் அவளுக்கிருந்த பாசம் அவனை வியக்கச் செய்தது. ஜமீந்தாரின் பெருந்தன்மையைப் பற்றி அவள் சம்பவம், சம்பவமாகச் சொல்லி அழுதாள். தம்முடைய சொந்த மனைவி வயிற்றுப் பிள்ளைகளைப் போலவும் அதைவிட அதிகக் கனிவுடனும் தன்னை அவர் பேணி வளர்த்ததை எல்லாம் அவள் கூறக்கேட்டுக் கேட்டு, அவர் ஒரு ஜஸ்டிஸ் கட்சி ஆள் என்ற எண்ணமும், மாற்சரியமும் மெல்ல மறைந்து 'பெருந்தன்மையான ஒரு மனிதர்' என்ற எண்ணம் மட்டுமே தோன்றி அமைதி பெற்றது அவன் மனத்தில். போகப் பொருளாகக் கிடைத்த ஒருத்தியை அப்படியே ஒதுக்கிவிடாமல் - அவளையும் மனைவியாக நடத்தி அவள் மகளையும் வாஞ்சையோடு மகளாகப் பாவித்த பெருந்தன்மைக்காக 'மனசாட்சியுள்ள மனிதர்' - என்ற அளவு அவன் இதயத்தில் புதுப்பார்வை பெற்றார் நாகமங்கலத்தார். சமூகத்துக்குப் பயந்து அந்தரங்கமாக இருந்தாலும், இந்த உறவுக்கும் பாசத்துக்கும் அவர் போலித் திரையிட்டு மனத்திலிருந்தே மூடவில்லை என்பது ராஜாராமனுக்குப் பெரிய காரியங்களாகத் தோன்றின.

ராஜாராமன் விடுதலை பெற்று வந்த பின் திலகர் தேசிய வாசகசாலை நண்பர்கள் கதர்ப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார்கள். தெருத் தெருவாகக் கிராமம் கிராமமாகப் பாரதி பாடல்கள் முழங்கின. கதர் விற்பனை துரிதமடைந்தது. வந்தே மாதர கீதம் வளர்ந்தது. எங்கும் ராட்டை நூற்பவர்கள் பெருகினார்கள்.

இந்த நல்ல சமயத்தில் மறுபடியும், தங்கள் வட்டாரத்துத் தேசத் தொண்டர்களைச் சிறைக்கு அனுப்புவதற்காக ஜோடிக்கப்பட்ட சதிவழக்கு ஒன்றை ராஜாராமனும், நண்பர்களும், எதிர்கொள்ள வேண்டியிருந்தது. விருதுப்பட்டி தபாலாபீஸ் மீதும் ஸ்ரீ வில்லிபுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் மீதும் வெடிகுண்டு எறிந்து தகர்க்க முயன்றதாக உண்மைத் தேசத் தொண்டர்களான காமராஜ் நாடார், கே. அருணாச்சலம், கே.எஸ். முத்துசாமி ஆசாரி, மீசலூர் நாராயணசாமி, விருதுபட்டி மாரியப்பா ஆகியவர்கள் மேல் ஜோடிக்கப்பட்ட வழக்கு ஒன்றை ராமநாதபுரம் போலீசார் தொடர்ந்தார்கள். வேலூர் சிறையில் ஏற்கனவே அவதிப்பட்டுக் கொண்டிருந்த காமராஜ் போன்ற சத்தியாக்கிரகிகளை மீண்டும் நீண்ட காலம் வெளியே வரவிட முடியாமற் செய்ய முயன்ற இந்தப் பொய் வழக்கை வக்கீல் ஜார்ஜ் ஜோசப் அவர்களின் உதவியால் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு முறியடித்தார்கள் ராஜாராமனும், நண்பர்களும். இந்த வழக்கின் மூலம் மதுரை ராமநாதபுரம் சீமையின் பல அருமையான தேசபக்தர்களின் வாழ்வையே ஒடுக்கிவிட முயன்ற அரசாங்கத்தின் சதி தவிடுபொடியானது. இந்த வழக்கில் வெற்றி பெற அல்லும் பகலும் அன்ன ஆகாரக் கவலையின்றி ராஜாராமனும், முத்திருளப்பனும், நண்பர்களும் அலைந்தார்கள்.

நாளாக நாளாகத் திலகர் தேசிய வாசகசாலையின் தொண்டர்கள் எண்ணிக்கை பெருகியது. ராஜாராமன் ஓர் இளம் தேசியவாதிகளின் அணிக்கு வழி நடத்தும் பொறுப்பை ஏற்றான். இயக்கம் மெல்ல மெல்லப் பலமடைந்து கொண்டு வந்தது. அந்த வருடம் தனக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு 'காந்தி' என்று பெயர் சூட்டினார் முத்திருளப்பன். அதே சமயம் ரத்தினவேல் பத்தருக்கு ஒரு பேரன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு ஒரு நல்ல பெயர் சொல்லும்படி ராஜாராமனைக் கேட்டார் பத்தர். ராஜாராமன் 'சித்தரஞ்சன்' என்று பத்தரின் பேரனுக்குப் பெயர் சூட்டினான்.

திலகர் தேசிய வாசகசாலையின் செலவுகள், துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு விநியோகிக்கும் செலவு, கஷ்டப்படும் தேசத் தொண்டர் குடும்பங்களுக்கு உதவி என்று எல்லாச் செலவுகளுக்கும் பொக்கிஷதாரராக அமைந்தது போல் முகங்கோணாமல் கொடுத்தாள் மதுரம். ஜமீந்தார் இறந்த வருஷம் முழுவதும் கச்சேரிக்கோ, மேடையில் பாடவோ ஒப்புக் கொள்ளாமல் துக்கம் கொண்டாடினாள் அவள். தனபாக்கியம் வெளியே நடமாடுவதையே நிறுத்தியிருந்தாள். குடும்பத்தை விட விசுவாசமாக அவர்கள் நாகமங்கலத்தாரைப் பாவித்த அந்த உண்மை அன்பு ராஜாராமனைக் கவர்ந்தது. ஜமீந்தாருடைய மனைவி மக்கள் கூட அந்தத் துக்கத்தை இவ்வளவு சிரத்தையோடு அநுஷ்டித்திருப்பார்களா என்பது சந்தேகமாயிருந்தது. மனித சமூகம் நீண்ட நாளாக யாருக்கு உண்மை நன்றி செலுத்தவில்லையோ, அவர்களிடம் நிரம்பிக் கிடக்கும் சத்தியமான அன்பின் இறுக்கத்தைக் கண்டு ராஜாராமனுக்கு ஆச்சரியமாயிருந்தது. மனிதர்கள் யாருடைய அன்பு பணத்துக்காக மட்டுமே கிடைக்குமென்று நினைக்கிறார்களோ அவர்களிடம் பணத்தைக் கொண்டு அளவிட முடியாத பிரியம் சுமந்து கிடப்பதை அவன் கண்டான். யாருடைய மனங்கள் நிதிவழி நேயம் நீட்டும் பொதுமனம் என்று பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாடி வைத்துப் பழி சுமத்தப்பட்டிருக்கிறதோ அவர்களிடம் மனமே ஒரு பெரிய அன்பு நிதியாக இருப்பதை அவன் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருந்தான். ஜமீந்தாருடைய பிறந்த நாளை நினைவு வைத்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது முதல், அவர் இறந்த தேதியில் விரத நியமங்களோடு திதி கொடுப்பதுவரை தனபாக்கியமும், மதுரமும் காட்டிய அக்கறை அவனை மலைக்கச் செய்தது. அன்பைக் கலையாகவே, சங்கீதம் போல், நிருத்தியம் போல் போற்றி வளர்க்கும் நாகரிகம் இவர்கள் குலதனம் போலிருக்கிறது என்றே அவன் எண்ணினான். ஜமீந்தார் தனபாக்கியத்துக்கு ஊரறிய தாலி கட்டவில்லை. ஆனால், தனபாக்கியமோ அதைச் சிறுமையாக எண்ணியதாகவே தெரியவில்லை. இது மிக மிக விநோதமாயிருந்தது அவனுக்கு. அந்தக் குடும்பத்தின் மேல், குடும்பமாக உலகம் கருதாத வீட்டின் மேல் எல்லையற்ற பரிவு ஏற்பட்டது அவன் மனத்தில். அவர்களுடைய விளம்பரம் பெறாத பண்பாடு அவ்னைக் கருத்தூன்றிக் கவனிக்கச் செய்தது.

உயர்ந்த சாதிக் குடும்பங்களில் இருப்பதை விட சுத்தத்தில் அக்கறை, தேவதைகளைவிட அழகு, கந்தர்வர்களை விடக் கலையில் சிரத்தை, பிராமணர்களை விட விரதங்களில் பற்று, மேதைகளை விட அதிகமான குறிப்பறியும் நாகரிகம், படித்தவர்களைவிட இங்கிதம் இவை எல்லாம் ஒரு தாசியின் வீட்டில் இருப்பதைக் கண்டு அவன் சொல்ல முடியாத வியப்பில் மூழ்கினான். 'இது இவர்கள் குலதனம்' - என்று அவன் மனம் இடையறாது கூவியது.

'பரிசுத்தமான அன்புதான் இவளுடைய முதல் சங்கீதம். இவள் வாசிக்கும் சங்கீதமோ அதே அன்பின் இன்னொரு வெளியீடு' - என்று மதுரத்தைப் பற்றி அவன் எண்ணினான். அவள் பாடும் சங்கீதத்தில் மட்டுமல்ல, பேசும் சங்கீதத்திலும் அபஸ்வரமே வராமலிருப்பதை அவன் ஒவ்வொரு முறையும் கூர்ந்து கவனித்தான். ஜமீந்தார் காலமான பின்போ மதுரம் படிப்படியாகத் தன்னிடமிருந்த பட்டுப் புடவைகளை உபயோகிப்பதையே விட்டுவிட்டாள். அவளிடம் மிக மிக எளிமையான கதர்ப் புடவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. அவன் ஒரு நாள் அவளைக் கேட்டான்.

"என்ன மதுரம், பட்டுப்புடவை ஆசையை அறவே விட்டாச்சுப் போலிருக்கே!"

"எப்பவும் எனக்கு அந்த ஆசையே இல்லை? அப்பா பட்டுப் புடவையா வாங்கிக் குமிச்சார். அரண்மனைக்குப் பட்டுப்புடவை வாங்கினா ஞாபகமா இங்கேயும் சேர்த்து வாங்குவார். கட்டிக்காவிட்டால் அவர் மனசு புண்படுமேன்னு கட்டிண்டிருந்தேன். இனிமே அது கூட அவசியமில்லே..."

"ஏன்? இனிமே பட்டுப்புடவை கிடைக்காதோ?"

"சந்தேகமென்ன? உங்ககிட்டச் சொன்னா, நீங்க கதர்ப் புடவைதானே வாங்கிக் குடுப்பீங்க? நானும் நிறைய நூல் சிட்டம் போடுகிறேன். கதர்தானே சிட்டத்துக்குக் கிடைக்கும்?"

"உனக்கு வேணும்னாப் பட்டுப்புடவையே வாங்கிக்கலாமே?"

"அப்படியில்லை! தனியா எனக்குப் பிரியம்னு எதுவுமே கிடையாது. உங்களுக்கு எது பிரியமோ அதுதான் எனக்குப் பிரியம்..."

மனத்தின் ஆழத்திலிருந்து பிறந்த அவளுடைய இந்தச் சொற்கள் ராஜாராமனைப் பெருமைப்பட வைத்தன. அவள் இசைக்க முடிந்த ராகங்களில் மிக உயர்ந்த ராகமாக இந்தச் சொற்கள் அவன் செவிகளில் ஒலித்தன. இந்த வார்த்தைகள் அவனைக் கிறங்கவே செய்தன. முரட்டுத்தனமும், இங்கிதமும், நளினமும், நாசூக்கும், நாகரிகமும் தெரியாத பல ஜமீந்தார்களும், செல்வக் குடும்பத்து இளைஞர்களும் அவற்றை முதல் முதலாக தாசிகளின் வீடுகளிலிருந்துதான் இப்படிப்பட்ட நளினவதிகளிடம் கற்றுக் கொள்கிறார்களோ என்று கூட அவன் அடிக்கடி நினைக்கத் தொடங்கியிருந்தான். 'சங்கீதமும், கலைகளும் தான் மனிதனை நாகரிகமடையச் செய்கின்றன' என்று கூறுவது உண்டு. ஆனால், குரூரமான மனிதர்களாகிய பல செல்வந்தர்கள் கருணை, அன்பு, இங்கிதம் போன்ற கனிவான அம்சங்களையே கலையை ஆளும் அழகின் கிருஹங்களில்தான் படித்துத் தேறுகிறார்கள் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் அவனுள் வலுத்தது. நாகமங்கலம் ஜமீந்தாரின் பட்டமகிஷி அவரைக் கணவனாகவும் கனவானாகவும் வேண்டுமானால் ஆக்கியிருக்கலாம். ஆனால், மதுரை ஒண்ணாம் நம்பர்ச் சந்தில் தனபாக்கியத்தின் நட்பு கிடைத்த பிறகே, அவர் மனிதராக நாகரிகம் அடைந்திருக்க முடியுமென்று அவனுக்குப் புதிதாக ஒரு கருத்துத் தோன்றியது. ஜப்பானிய கெய்ஷாக்களைப் பற்றி இப்படிக் கூறும் ஓர் ஆங்கிலப் புத்தகத்தை அவன் படித்திருந்தான். கெய்ஷாக்களைப் போலவே தமிழ்நாட்டுத் தேவதாசிகளிடம் அந்தப் பண்பு நிறைந்திருப்பது அவனுக்குப் புரிந்தது. 'மிருச்ச கடிக'த்தில் சாருதத்தனுக்குக் கிடைத்த சுகம் அன்பின் சுகமாகத்தான் இருக்க வேண்டும். வஸந்தசேனையின் நாகரிகம், கலை நாகரிகத்தின் மிக உயர்ந்த எல்லையாக அவனுக்குத் தோன்றியது.

இவர்கள் மிருகங்களை மனிதர்களாக்குகிறார்கள்! மனிதர்களைத் தெய்வங்களாக்குகிறார்கள்!" என்று எண்ணிய போது மிக மிக விநோதமாக வளர்ந்தது அந்தச் சிந்தனை. வேட்டையிலும், குடியிலும், மல்யுத்தத்திலும் போதையேறிக் கிடந்த நாகமங்கலம் ஜமீந்தாரைத் தனபாக்கியம் மனிதனாக்கிச் சங்கீத ரசிகராக மாற்றி விட்டாள். தனபாக்கியத்தின் மகளோ வெறும் மனிதனாகிய என்னைத் தன்னுடைய பக்தியால் தெய்வமாகவே ஆக்க முயல்கிறாள். என்னையே எண்ணி உருகி உருகித் 'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு' - என்று பாடுகிறாள். மனிதனைப் பக்தி செய்த உடம்பை இழப்பதன் மூலம் தெய்வத்தைப் பக்தி செய்யும் தத்துவத்துக்கு உலகத்தைப் பழக்கும் உபாசனா மார்க்கங்களில் ஒன்றாகவே தொடக்கத்தில் இந்தத் துறை தோன்றியதோ என்றெல்லாம் பலவிதமாகச் சிந்திக்கத் தொடங்கியபோது அவன் மனத்திலிருந்த பல பழைய மாற்சரியங்களை அந்தச் சிந்தனை போக்கி விட்டது.

அத்தியாயம் - 10

அந்த வருஷம் காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்தை வாபஸ் வாங்கினார். இயக்கம் இருந்தவரை சிறைக்குப் போகவும் அடிபடவும் நேர்ந்த தேசியவாதிகள் அனைவரும் இப்போது வெளியே இருந்ததால் - அவர்கள் செய்ய வேண்டிய பணிகளுக்கு நிறைய வாய்ப்பிருந்தது. ஆன்மா பரிசுத்தமான இலட்சியத்தை நிரூபிக்கக் காந்திமகான் இருபத்தொரு நாள் கடுமையான உண்ணாவிரதம் இருந்தார். அந்தச் சமயங்களில் கிடைத்த ஹரிஜன், சுதந்திரச் சங்கு, காந்தி பத்திரிகைகளின் இதழ்களை ராஜாராமனும் நண்பர்களும் கண்களில் நீர் நெகிழ வாசித்தனர். காந்தியடிகள் சத்தியாக்கிரக ஆசிரமத்தைக் கலைத்த போதும், அரசியலிலிருந்து விலகிக் கொள்ளப் போவதாக அறிவித்த போது, வேதனையடைந்த தேசபக்தர்கள் மீண்டும், அவர் கிராமக் கைத்தொழில்களில் அக்கறை காட்டித் தொடங்கிய குடிசைத் தொழில் திட்டத்தாலும், மற்றவற்றாலும் ஓரளவு நம்பிக்கை கொள்ள முடிந்தது. சில மாதங்களுக்கு முன்புதான் பிருகதீஸ்வரனோடு பம்பாய் காங்கிரசுக்குப் போய் விட்டு வந்திருந்தான் ராஜாராமன். காந்தியின் மன வேதனைகளும், சட்டமறுப்பு இயக்கம் தளர்ச்சி அடைந்ததும், சூழ்நிலைகளை விறுவிறுப்பில்லாமல் ஆக்கியிருந்தன. அந்த வேளையில் மத்திய அசெம்பிளி தேர்தலில் தேசபக்தர்களுக்கு அமோகமான வெற்றி கிடைத்ததால் மீண்டும் ஒரு புதிய உற்சாகம் பிறந்திருந்தது. சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை வில்லிங்டன் பிரபுவின் தாசர்களாக இருந்த தேசிய எதிரிகள் பலர் தேர்தலில் தோற்றது தேசபக்தர்களின் செல்வாக்கை அதிகமாக்கியது. தேர்தல் வேலைகளாலும், இணையற்ற வெற்றியாலும் தொண்டர்களிடையே மறுபடி விறுவிறுப்பு வந்திருந்தது. மிக முக்கியமான நிகழ்ச்சியாக மகாத்மாவின் தமிழ்நாட்டுச் சுற்றுப் பயணம் வாய்ந்தது.

அகில இந்திய ஹரிஜன சேவா சங்கத்தாரின் ஏற்பாட்டுப்படி காந்திமகான் தமிழ்நாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்தார். அவர் மதுரைக்கு வந்த தினத்தன்று நல்ல மழை. முதலில் அவருக்காக ஏற்பாடு செய்த பெருங்கூட்டம் கலைக்கப்பட்டு, மறுநாள் வேறு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார் வைத்தியநாதய்யர். மதுரைக்கு மாலை 6 மணிக்கு வருவதாக இருந்த மகாத்மா இரவு பத்தரை மணி வரை வர முடியாமல் போகவே மழையில் பிரயாணம் என்ன ஆயிற்றோ என்று கவலைப்பட்டுக் கூட்டத்தையும் கலைத்துவிட்டு வைத்தியநாதய்யர், சுப்பராமன், ராஜாராமன் எல்லாரும் திருமங்கலம் வரை எதிர் கொண்டு போய்ப் பார்த்தார்கள். காற்றும் மழையுமான அந்த தினத்தில் எதுவும் நினைத்தபடி நடக்கவில்லை. வைகையில் வெள்ளம் கோரமாயிருந்தது. மகாத்மா மதுரை வரும்போது அகாலமாகி விட்டது. ஜார்ஜ் ஜோசப் சார் திருமங்கலத்திலிருந்து கூடவே காந்தியோடு வந்தார். மகாத்மா காந்தி தேசபக்தர் சுப்பராமனின் பங்களாவில் தங்கினார். பெண்களோடு பெண்களாகப் போய், அவருடைய ஹரிஜன் நிதிக்குத் தன் நகைகளில் கணிசமான பகுதியைக் கொடுத்து விட்டு வந்தாள் மதுரம். தன்னிடம் கேட்காமல் தானாகவே அவள் இந்த நல்ல காரியத்தைச் செய்தது ராஜாராமனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ராஜாராமனும், நண்பர்களும் கூட ஒரு பெருந்தொகை திரட்டி ஹரிஜன நிதிக்காக மகாத்மாவிடம் கொடுத்தனர். அப்போது உடனிருந்த டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் திடீரென வாய் தடுமாறி, 'மிஸ்டர் ராஜாராமன்' - என்று கூப்பிடுவதற்குப் பதில் 'மிஸ்டர் காந்திராமன்' - என்று அவனைக் கூப்பிடவே, வைத்தியநாதய்யர் சிரித்துக் கொண்டே, "இப்படியே உன் பெயரை மாற்றிக் கொண்டு விடு! காந்தி மதுரைக்கு வந்ததற்கு அடையாளமாக நீ இதைச் செய்யச் சொல்லித்தான் மிஸ்டர் ராஜன் உனக்கு இப்படிப் பெயர் சூட்டுகிறார்!" - என்றார். ராஜாராமனுக்கு அவர் அப்படி அழைத்தது மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது. "அப்படியே செய்கிறேன்," என்று சிரித்துக் கொண்டே வைத்தியநாதய்யரிடம் பணிவாகக் கூறினான் அவன். வைத்தியநாதய்யர் ராஜாராமனை மிக உற்சாகமாக மகாத்மாவுக்கு அறிமுகப்படுத்தினார். மறுநாள் காலை மகாத்மா ஒரு ஹரிஜனச் சேரிக்குச் சென்றார். மாலையில் மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடந்தது. மதுரையிலிருந்து அமராவதி புதூர் வரை ராஜாராமனும் மகாத்மாவோடு சென்றான்; அங்கே புதுக்கோட்டையிலிருந்து பிருகதீஸ்வரனும் வந்திருந்தார். இருவரும் மகாத்மாவின் சந்நிதியில் சந்தித்துக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து சில மாதங்கள், சுற்றுப்புற ஊர்களான சோழவந்தான், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, பெரியகுளம், உத்தமபாளையம் என்று தேசியப் பணிகளுக்காக ராஜாராமனும் நண்பர்களும் அலைந்தனர். பெரியகுளமும், வத்தலக்குண்டும் தேசபக்தி உணர்வில் இயல்பாகவே நன்கு கனிந்திருந்தன. பி.எஸ். சங்கரன், முனகலா பட்டாபிராமையா முதலிய அப்பகுதித் தேச பக்தர்கள் அப்படிப்பட்ட சூழலை உண்டாக்கி வைத்திருந்தனர். ஆலயப் பிரவேசத்துக்காகவும் சில முயற்சிகள் நடந்தன. ஓராண்டுக் காலம் இந்தப் பணிகளில் கழிந்தது.

மதுரம் வீட்டிலேயே வீணை வாய்ப்பாட்டு வகுப்புக்கள் நடத்தத் தொடங்கியிருந்தாள். இடையிடையே கச்சேரிகளுக்கும் போய்விட்டு வந்தாள். தகப்பனார் காலமான கொஞ்ச நாளைக்குள்ளேயே நாகமங்கலத்தோடு அந்த வீட்டின் உறவுகள் விடுபட்டுப் போயின. போக்குவரவும் கூட இரு குடும்பங்களுக்கும் இடையே விட்டுப் போயிற்று. ஜமீன் குடும்பத்துக்கு இந்த உறவைக் காட்டிக் கொள்ளக் கூச்சமாயிருப்பதாகத் தெரிந்தது. தவிர ஜமீந்தாரின் உயிலில் மதுரத்தின் பெயருக்குத் தனியே சொத்து எழுதி வைத்திருந்தது வேறு மனஸ்தாபத்தை ஆழமாக்கி விட்டிருந்தது. குடும்பப் பெண்கள் பலர் ஒண்ணாம் நம்பர் சந்து தேடி வந்து படிக்கக் கூசினர். என்றாலும் ஆசைப்பட்டுத் தேடி வந்து கேட்டவர்களுக்கு மட்டுமே மதுரம் கற்பித்தாள். அப்படிப் படிக்க வருகிறவர்களிடம் அவள் காந்தியைப் பற்றியும், கதர் நூற்பது பற்றியும் கூட எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தாள். சிலர் செவி சாய்க்காவிட்டாலும், பலர் அவள் பிரசாரத்தினாலும் மாறினர்.

ராஜாராமன் காங்கிரஸ் வேலைகளில் மிக உற்சாகமாக ஈடுபட்டான். மதுரம் தன் மேல் செலுத்திய அன்பையும், பக்தியையும் ஏற்று, அவன் தேசத்தின் மேலும் பொதுக் காரியங்களிலும் பக்தி சிரத்தை காண்பித்தான். பக்தி செய்யப்படுகிறவர்களால்தான் பக்தி செய்ய முடிகிறதென்ற நுணுக்கத்தை அவன் இப்போது அனுபவ பூர்வமாக உணர முடிந்தது. மக்கள் எல்லோரும் தன் மேல் பக்தி செலுத்தினால் அதை ஏற்கும் தலைவன் நாடு முழுவதின் மேலும் பக்தி செய்ய உற்சாகம் பிறக்கிறது. ஒரு பக்தியை ஏற்கும்போது தான் இன்னொரு பக்தி செய்ய ஆர்வம் பிறக்கிறது. மதுரம் அவனைப் பக்தி செய்தாள். அவன் தேசத்தை பக்தி செய்தான். அன்பில் கிடைக்கிற உற்சாகம் எத்தனை அன்புப் பெருக்கை வளர்க்க முடியும் என்பதற்கு அவர்கள் உதாரணமாயிருந்தனர். ஒருவர் அன்பு செய்தாலும், அன்பு செய்கிறவனும் செய்யப்படுகிறவனும் உலகில் இரகசியமாகவே ஒரு சுமுகமான வித்தைப் பயிர் செய்து வளர்த்து விட முடியும் போலிருக்கிறது. உலகில் இரகசியமாகவே பயிராகும் நல்லுணர்வுப் பயிர்களில் மிகப் பெரியது தூய அன்பு தான் என்று தோன்றியது.

அடுத்த வருட ஆரம்பத்தில் அவன் காரைக்குடியில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸுக்குப் போய்விட்டுத் திரும்பிய போது மதுரத்தின் தாய் தனபாக்கியம் தேக அசௌக்கியப்பட்டு படுத்த படுக்கையாயிருந்தாள். காரைக்குடிக்கு வந்திருந்த பிருகதீஸ்வரன் அவனோடு மதுரைக்கு வந்திருந்தார். காரைக்குடி காங்கிரஸில் தீரர் சத்தியமூர்த்தி தலைவராகவும், காமராஜ் காரியதரிசியாகவும் வந்தது ராஜாராமன் உட்பட மதுரைச் சீமைத் தேச பக்தர்களுக்குப் பெரு மகிழ்ச்சியை உண்டாக்கியிருந்தது. மகிழ்ச்சியோடு மகிழ்ச்சியாக ஆசிரமம் அமைப்பதைப் பற்றி ஆலோசனைகளை மீண்டும் நினைவூட்டினார் பிருகதீஸ்வரன். அதைப் பற்றித் திட்டமிடவே அவரை மதுரைக்கு அழைத்து வந்திருந்தான் ராஜாராமன். மதுரத்தின் தாய் படுத்த படுக்கையாயிருக்கவே, அவர்கள் கவனம் ஆசிரம ஏற்பாடுகளில் செல்ல முடியாமல் இருந்தது. மகாத்மாவின் ஆசிபெற்று வைத்தியநாதய்யர் ஆலயப் பிரவேச ஏற்பாடுகளுக்காக அவன் போன்ற தொண்டர்களின் ஒத்துழைப்பை நாடினார். மீனாட்சி கோவிலில் அப்போதிருந்த டிரஸ்டி ஆர்.எஸ். நாயுடு அதற்கு மிகவும் ஒத்துழைத்தார்.

ஏறக்குறைய அதே சமயம் காந்திமகான் வார்தா சேவாசிரமம் அமைக்கும் முயற்சியில் இருப்பதை அறிந்து தங்கள் முயற்சிக்குச் சுபசூசகமாக நண்பர்கள் அதைக் கொண்டனர். ஏற்கெனவே ராஜாராமனும் பிருகதீஸ்வரனும், ராமசொக்கலிங்கத்தின் விருந்தினராக அமராவதி புதூரில் மகாத்மா வந்து தங்கியிருந்தபோது, இதுபற்றிக் கூறி அவருடைய ஆசியைப் பெற்றிருந்தனர். இப்போது அதைச் செய்ய ஏற்ற தருணம் வந்துவிட்டதாகப் பிருகதீஸ்வரன் கருதினார். சட்டசபை முனிசிபல் தேர்தல்களில் ஈடுபட்டுப் பதவியை அடைவதை விட இப்படிப் பணிகளில் இறங்குவது நாட்டுக்கு நல்லதென்று பிருகதீஸ்வரன் கருதினார். ஜில்லா போர்டு தேர்தல்கள், சட்டசபைத் தேர்தல்களைவிட மகாத்மாவின் சமூக சீர்த்திருத்த லட்சியங்களே இருவரையும் கவர்ந்தன. அடுத்தடுத்துத் தமிழ்நாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்த பாபு ராஜேந்திர பிரசாத், ஜவஹர்லால் நேரு ஆகியவர்களிடம் இது பற்றிக் கூறி யோசனை கேட்டார்கள் அவர்கள். அவர்களுடைய ஆசியும் கிடைத்தது. லக்னோ காங்கிரஸுக்குப் போகாத குறை நேருவைத் தமிழ்நாட்டில் சந்தித்ததில் தீர்ந்தது போலிருந்தது அவர்களுக்கு.

ஒவ்வொரு முறையும் தேர்தல், தலைவர் பதவி போட்டி எல்லாம் ஏற்படக் காங்கிரஸ் இயக்கத்தில் குழுமனப்பான்மை மெல்ல மெல்ல வளருவது அவர்களுக்குக் கவலையளித்தது. மதுரை, காரைக்குடி, வேலூர், வத்தலக்குண்டு ஆகிய இடங்களில் ஒவ்வொரு தலைவர் தேர்தலிலும் இயக்கத்தின் சகோதர பாவமுள்ள தொண்டர்கள் பிரிவதும், கட்சி கட்டுவதும் கண்டு, "ஐயோ! இந்த ஒற்றுமைக் குறைவு பெரிதாகி நாட்டின் எதிர் காலத்தைப் பாதிக்கக் கூடாதே" என்று அவர்கள் கவலைப்பட்டார்கள். ஹரிபுரா காங்கிரஸில் சுபாஷ் பாபு மகாசபைத் தலைமையைப் பெற்றார். அசெம்பிளி தேர்தலில் விருதுபட்டி தேசத் தொண்டரும் நண்பரும் அயராத ஊழியரும் ஆகிய காமராஜ் நாடார் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டது ராஜாராமனுக்குப் பெரிதும் மகிழ்ச்சி அளித்தது. முதல் முதலாகச் சட்டசபை அமைத்த போது ராஜாஜி மந்திரி சபையில் சத்தியமூர்த்தி மந்திரியாக இடம் பெறாதது அந்த மகிழ்ச்சியை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட்டது. ஆனால், அந்த மந்திரி சபை ஆலயப் பிரவேசச் சட்டம் கொண்டு வந்தது உடனடி உதவியாக அமைந்தது. சேலம் ஜில்லாவில் மதுவிலக்கும் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. மாபெரும் தேசிய விரதத்தைப் போலவும், பல கோடி மக்களின் நோன்பைப் போலவும் தொடங்கப்பட்ட காங்கிரஸில், போட்டிகளும் பகைகளும் இலேசாகத் தெரிவதையே பொறுக்க முடியாமல் கலங்கினார்கள் அவர்கள். இந்த தேசிய மகாவிரதம் நாளைய உலகில் வெறும் கட்சியாகி விடக்கூடாதே என அவர்கள் கவலைப்பட்டார்கள்.

1933-ல் திரிபுரா காங்கிரஸில் பட்டாபி தோற்று, சுபாஷ் ஜெயித்தது காந்தியடிகளுக்கு வருத்தத்தை அளிக்கவே தலைமை தாங்கிவிட்டுப் பின் சுபாஷ் ராஜிநாமா செய்தார்.

ராஜாராமனின் வேண்டுகோளுக்கு இணங்கி பிருகதீஸ்வரன் மதுரையிலேயே தொடர்ந்து சிறிது காலம் தங்கினார். 1939-ல் இரண்டாவது உலக மகாயுத்தம் தொடங்கியபோது, காங்கிரஸ் மந்திரி சபை பதவிகளை விட்டு வெளியேறியது. அந்த வருஷம் சுபாஷ் மதுரை வந்திருந்தார். வைஸ்ராய் இந்திய விடுதலையைக் கவனிக்க மறுத்ததால், வார்தாவில் கூடிய காங்கிரஸ் தனிப்பட்டவர் சட்ட மறுப்புக்கு மீண்டும் அனுமதி வழங்க முடிவு செய்தது. முதல் சத்தியாக்கிரகியாக வினோபாபாவேயைத் தேர்ந்தெடுக்க முடிவு ஆயிற்று. அப்போது முதல் பிருகதீஸ்வரனும் ராஜாராமனும் ஆசார்ய வினோபாபாவேயுடன் கடிதத் தொடர்பு கொண்டனர். ஆசிரம அமைப்புப் பற்றியும் அவரிடம் யோசனைகள் கேட்டனர். அவரும் விரிவாக எல்லாம் எழுதியிருந்தார். மதுரையிலேயே தங்கி ஆசிரம அமைப்பு வேலைகளைக் கவனித்த பிருகதீஸ்வரன் ஒரு நாள் ராஜாராமனையும் மதுரத்தையும் வைத்துக் கொண்டு சிரித்தபடியே ஒரு யோசனை கூறினார்.

"நீங்கள் ரெண்டு பேரும் வார்த்தாவுக்குப் போய் மகாத்மாவின் ஆசி பெற்று கலியாணம் செய்து கொண்டால் என்ன?"

இதைக் கேட்டு மதுரம் தலைகுனிந்தாள்; சிறிது நேரத்தில் சிரித்துக் கொண்டே படியேறி மொட்டை மாடி வழியே வீட்டிற்கும் ஓடிவிட்டாள். ராஜாராமன் பதில் சொல்லாமல் இருந்தான். பிருகதீஸ்வரன் விடவில்லை, மீண்டும் தொடர்ந்தார்.

"விளையாட்டுக்குச் சொல்லலை ராஜா! நிஜமாகவே தான் சொல்றேன்..."

"நானும் குருசாமியும் இன்னும் நாலைந்து சத்தியாக்கிரகிகளும் சுதந்திரம் கிடைக்கிறவரை கலியாணத்தைப் பற்றி நினைக்கிறதில்லேன்னு மீனாட்சியம்மன் கோவிலில் சத்தியம் பண்ணியிருக்கோம். பத்து வருஷத்துக்கு முன்னே நான் இண்டர் முதல் வருஷத்தில் படித்துக் கொண்டிருந்த போது அந்த சத்தியத்தைப் பண்ணினோம். இந்த நிமிஷம் வரை எங்களில் ஒருவரும் அந்தச் சத்தியத்தை மிறவில்லை..."

"அப்படியானால் உனக்குக் கல்யாணம் ஆகறதுக்காகவாவது தேசம் சீக்கிரம் விடுதலையடையணும்னு நான் மீனாட்சியம்மனைப் பிராத்திச்சுக்கிறதைத் தவிர வேறே வழி இல்லை."

"சத்தியம் பண்ணிட்டோம்! அதைக் காப்பாத்தியாகணும்..."

"நான் மறுக்கலியே! சீக்கிரம் சுதந்திரம் கிடைக்கணும்னுதானே சொன்னேன்..."

"சுதந்திரம் கிடைக்கிற விஷயத்திலாவது உங்க பிரார்த்தனை பலிக்கணும் சார்!"

"பலிச்சா ஒண்ணு மட்டும் பலிக்காது ராஜா! ரெண்டு பிரார்த்தனையும் சேர்ந்துதான் பலிக்கும்! நீ ரொம்ப பாக்கியசாலி அப்பா! இந்தப் பெண் மதுரம் இருக்கே! இதைப் போல ஒரு சுகுணவதியை நான் பார்த்ததே இல்லை. கடவுளின் படைப்பில் மிக உத்தமமான ஜாதி ஏதாவது தனியாக இருக்குமானால், அதில் இவளுக்குத்தான் முதலிடம் கொடுப்பேன் நான்."

"உங்கள் ஆசீர்வாதம்..." என்றான் ராஜாராமன். அவன் முகம் அப்போது மிகவும் மந்தகாசமாக இருந்தது. இதழ்களில் அபூர்வமாகப் புன்சிரிப்பும் தெரிந்தது.

மதுரையிலிருந்து நாகமங்கலத்துக்குப் போகிற வழியில் மதுரத்துக்குச் சொந்தமான ஜமீந்தார் எழுதி வைத்த ஒரு பெரிய தோட்டம் இருந்தது. மாமரங்களும், நெல்லி மரங்களும், தென்னைக் கூட்டமுமாக இருந்த அந்த இருபத்தைந்து ஏக்கர் பரப்புள்ள தோட்டத்தின் நடுவே ஒரு தாமரைக் குளமும், மிகப் பரந்த விழுதுகளோடு படர்ந்து பெருங் குடை போல் பழங்காலத்து ஆலமரம் ஒன்றும் இருந்தன. அதை ஆசிரமத்துக்குத் தந்துவிடுவதாக மதுரம் சொல்லிக் கொண்டிருந்தாள். தனபாக்கியத்தின் சம்மதம் பெறச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிருகதீஸ்வரனுக்கு அந்த ஆலமரமும் குளக்கரையும் ரொம்பப் பிடித்திருந்தது. அடிக்கடி அதை வியந்து பேசிக் கொண்டிருந்தார்.

"ஒரு காலத்தில் ஆலமரத்தடிகளில் வளர்ந்த தத்துவங்கள் தான் இன்று பாரதம் முழுவதும் வியாபித்திருக்கிறது. இந்த இடத்தைப் பார்த்ததும் எனக்கு வேத காலத்துத் தபோவனங்களை நினைக்கத் தோன்றுகிறது" என்றார் பிருகதீஸ்வரன்.

"இந்த இடத்தில் ஒரு நாளந்தா சர்வகலாசாலையையே உண்டாக்கி விடலாம்" என்று அடிக்கடி புகழ்வது அவர் வழக்கமாயிருந்தது.

"எங்கம்மாவைக் கேக்கணும்கிறதே இல்லை! அவ படுத்த படுக்கையாயிட்டா. இன்னமே பொழச்சா கடவுள் புண்ணியம்தான். உங்களுக்கு அந்த இடம் பிடிச்சிருந்தா நானே பத்திரம் எழுதி சாஸனம் பண்ணிக் கொடுத்துடறேனே," என்று மதுரம் ஆர்வமாகச் சொன்னாலும் பிருகதீஸ்வரன் அப்படிச் செய்யத் தயங்கினார். இதற்குள் தனபாக்கியமே ஒரு நாள் பிருகதீஸ்வரனைக் கூப்பிட்டனுப்பிப் பேசினாள். ரத்தினவேல் பத்தரும் கூட இருந்தார். அப்போது, "மங்கம்மா எல்லாம் சொன்னா! நான் சாகறதுக்குள்ள அந்த வாசகசாலைப் பிள்ளையாண்டானிடம் மதுரத்தைக் கையைப் பிடிச்சு ஒப்படைச்சுடணும். கலியாணம்னு நான் வற்புறுத்தலை. எம் பொண்ணை ஒப்படைச்சுக் 'காப்பாத்து அப்பா!' ன்னு சொல்லிட்டாக் கூட அப்புறம் நிம்மதியா மூச்சை விடுவேன்."

தனபாக்கியம் இதைத் தன்னைக் கூப்பிட்டு ஏன் சொல்கிறாள் என்று முதலில் பிருகதீஸ்வரன் தயங்கினார்.

"தம்பிக்குத் துணையா கூட இருக்கிறவங்களிலே நீங்க தான் வயசு மூத்தவங்க. அதான் பெரியம்மா உங்களைக் கூப்பிட்டுச் சொல்றாங்க. தப்பா நினைக்காதீங்க ஐயா," என்று பத்தர் அதை விளக்கினார். அது தான் சமயமென்று, "இந்தக் கல்யாணத்தை நான் முடிச்சு வைக்கிறேன். ஆனா அதுக்குப் பதிலா நீங்க ஓர் உபகாரம் பண்ணனுமே பெரியம்மா!" என்று சிரித்துக் கொண்டே மாந்தோப்பு நிலத்தைப் பற்றி ஆரம்பித்தார் பிருகதீஸ்வரன். அவள் கூறிய பெருந்தன்மையான பதில் அவரை வியப்பில் ஆழ்த்தியது.

"தாராளமா எடுத்துக்குங்க. சந்தோஷத்தோட பத்திரம் எழுதித் தரச் சொல்றேன்" என்றாள் தனபாக்கியம். ராஜாராமனின் சபதம் நிறைவேற வேண்டியதைப் பற்றியும் பிருகதீஸ்வரன் அவளிடம் கூறினார் அதற்கும் அவள் சம்மதித்தாள். தனபாக்கியத்துக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை அவருக்கு.

"ஏதோ நீங்க பெரியவங்க வாக்குக் கொடுத்தாச் சரிதான். எங்க சாதித் தொழில்லே விட இஷ்டமில்லே. நானும் அப்படி வாழலே. ஜமீந்தார் கௌரவமா என்னை வச்சிருந்தார். கௌரவமாப் பெத்தேன்; வளர்த்தேன். மறுபடி இந்த நரகத்திலே போய் விழுந்துடாமே கௌரவமா ஒருத்தன் கையிலே ஒப்படைச்சுட்டுச் சாகணும். 'நாகமங்கலம் ஜமீந்தாருக்குப் பொறந்த பொண்ணு ஒண்ணாம் நம்பர்ச் சந்துலே தொழில் பண்றா'ன்னு அவப்பேர் வரப்பிடாது. நீங்க பாத்துக்கணும். மகராசனா இருப்பீங்க ஐயா."

"நீங்க சொன்னாக்கூட உங்க பெண் அப்பிடி ஆக மாட்டா அம்மா! கவலைப்படாதீங்கோ! நானே ராஜாராமனுக்குச் சொல்லியிருக்கேன். அவன் கோவில்லே சத்தியம் பண்ணியிருக்காட்டா, நானே திருவேடகம் கோவிலுக்கோ வார்தா ஆசிரமத்துக்கோ கூப்பிட்டுக் கொண்டு போய் நாளைக்கே ரெண்டு பேருக்கும் கலியாணம் பண்ணி வச்சுடுவேன்," என்றார் பிருகதீஸ்வரன். அவள் குச்சி குச்சியாகத் தளர்ந்த விரல்களைக் கூப்பி அவரை வணங்கினாள். அதற்கு மேல் பேச அவளுக்குச் சக்தியில்லை. அவர் விடைபெற்றுக் கொண்டு, பத்தரோடு புறப்பட்டார். பவித்ரமான மனித இதயங்கள் எங்கெங்கோ இப்படி இருளில் இருப்பதாகத் தோன்றியது அவருக்கு. தனபாக்கியம் இத்தனை மிருதுவான சுபாவமுடையவளாக இருப்பாளென்று அவர் எதிர்பார்க்கவே இல்லை.

அன்றிரவு ராஜாராமனையும், பிருகதீஸ்வரனையும், பத்தரையும், முத்திருளப்பனையும் தன் வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிட்டனுப்பியிருந்தாள் தனபாக்கியம். இதை மங்கம்மா வந்து பத்தரிடம் சொல்லி, பத்தர் மேலே வந்து பிருகதீஸ்வரனிடம் தெரிவித்தார்.

இரவு அங்கே போனதும் பிருகதீஸ்வரன் தனபாக்கியத்திடம், "என்ன பெரியம்மா, நிச்சயதார்த்த விருந்து வக்கிறீங்க போலிருக்கே?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார். தனபாக்கியமும் முகம் மலர்ந்தாள். வீடு முழுவதும் மட்டிப் பால் வாசனை கமகமத்தது. அவர்கள் எல்லோரும் போகும்போது மதுரம் தனபாக்கியத்தின் கட்டிலருகே கீழே ஜமுக்காளத்தில் அமர்ந்து, வீணை வாசித்துக் கொண்டிருந்தாள்.

பிருகதீஸ்வரனோடு ராஜாராமனைப் பார்த்ததும் பதறி எழுந்து நிற்க முயன்றவனைக் கையமர்த்தி உட்கார்ந்து வாசிக்கும்படி சொன்னான் அவன். அவர்களும் ஜமுக்காளத்தில் உட்கார்ந்தார்கள். மதுரத்தின் முகத்தில் மணப்பெண்ணின் கவர்ச்சி பொலிந்தது. கூந்தலில் பூக்கள் மணந்தன.

"எப்போ முதல் முதலா நீ நூத்த சிட்டத்தோட இவன் கதர்க்கடைக்குப் புடவை வாங்க வந்தானோ, அப்பவே தெரியுமே எனக்கு?" - என்று முத்திருளப்பன் அவளைக் கேலி செய்தார்.

பிரமாதமாக விருந்து சமைத்திருந்தாள் மங்கம்மாக் கிழவி. விருந்து முடிந்து - மதுரம் சிறிது நேரம் பாடினாள். விடை பெற்றுக் கொண்டு புறப்படும்போது,

"எங்களைப் போலவே பாரத தேசம் சீக்கிரமாக அந்நியர்களிடமிருந்து விடுதலை அடைஞ்சு சுதந்திரம் பெறணும்னு நீங்களும் பிரார்த்திச்சுக்குங்கோ அம்மா. அப்பத்தான் உங்க பெண்ணுக்குக் கலியாணமும் சீக்கிரம் ஆகும்" - என்று படுக்கையில் சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்திருந்த தனபாக்கியத்திடம் சொல்லிவிட்டு வந்தார் பிருகதீஸ்வரன்.

மறுநாள் அதிகாலையில் ராஜாராமன், பிருகதீஸ்வரன், முத்திருளப்பன் மூவரும் ஆசிரமம் அமைய இருந்த அந்த மாந்தோப்புக்குச் சென்றார்கள். பர்ண சாலைகள் மாதிரி முக்கால் அடி கனத்துக்குச் சம்பங்கோரை வேய்ந்து குடிசைகளாகக் கட்டிடங்களை அமைப்பது - எளிமையைக் காட்டுவதோடு செலவிலும் சிக்கனத்தை உண்டாக்கும் என்றார் பிருகதீஸ்வரன். ஆலமரமும் தாமரைப் பூக்குளமும் அப்படியே இருக்க வேண்டுமென்றும் கூடியவரை பச்சை மரங்களை வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் முடிந்தால் மரங்களை மேலே விட்டு விட்டு அடிமரம் கட்டிடத்திற்குள் தூண் போல் அப்படியே இருக்கும்படியாகவே சார்ப்பை நெருக்கிக் கூரை வேய்ந்துவிட வேண்டும் என்றும் கூட அவர் அபிப்பிராயப்பட்டார். ஒரு சிறு மரத்தை வெட்டுவதைக் கூட அவர் விரும்பவில்லை. மாந்தோப்பின் தென்புறச் சரிவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, நெடுந்தூரம் ஓடையாகவே வந்து பின்பு வைகையில் கலந்துவிடும் ஒரு பெரிய கால்வாய் பாய்ந்து கொண்டிருந்தது. அந்த ஓடைக்குப் 'பன்னீர் ஓடை' என்பதாகத் தோட்டத்துக் காவல் ஆள் பெயர் கூறினான். தோட்டத்திற்குள் இருந்து ஓடைக்குள் இறங்க இரண்டு மூன்று இடங்களில் ஜமீந்தாரே எப்போதோ கச்சிதமான படிகளைக் கட்டிவிட்டிருந்தார். தோட்டத்துக்குள்ளேயும் இரண்டு மூன்று இடங்களில் பெரிய பெரிய இறங்கு கிணறுகள் இருந்தன. கிணற்றின் தண்ணீர் கரும்பாக இனித்தது. எதிர்க்கரையில் ஓடையில் மறுபுறமாக ஒரு கரடு இருந்தது. அதை மலையென்றும் சொல்ல முடியாது. பெரிய மரங்கள் அடர்ந்திருக்கவில்லை என்றாலும், அந்தக் கரடு ஏதோ காட்டுச் செடிக் கொடிகளால் மண் தெரியாதபடி பசுமையாயிருந்தது. சிறிய மலை போன்ற கரடும் அடுத்து ஓடையும், அதையடுத்து மாந்தோப்புமாக அந்த இடம் அற்புதமான இயற்கை அழகு கொழிப்பதாகத் தோன்றியது. சர்க்கா நூற்பது, கதர் நெய்வது, தவிர முதலில் ஓர் ஆரம்பப் பள்ளி நடத்தவும், பின்பு படிப்படியாக உயர்தரப் பள்ளி, கிராமீயக் கலாசாலை ஆகியவற்றை நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். படிப்பறிவில்லாத ஏழைகளுக்கும் படிக்க வசதியற்ற நாட்டுப் புறத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அறிவு புகட்டுவது ஆசிரமத்தின் முக்கிய நோக்கமாக அமைய வேண்டும் என்று கருதினார் பிருகதீஸ்வரன்.

மதுரை திரும்பியதும் ஆசிரமத்துக்குப் பெயர் வைப்பது பற்றி யோசித்தார்கள். மூத்தவரும் அநுபவஸ்தரும் ஆகிய வைத்தியநாதய்யரிடம் போய்க் கேட்கலாம் என்றான் ராஜாராமன். அவர்கள் வைத்தியநாதய்யரைச் சந்திக்கச் சென்றார்கள். அப்போது மதுரை வந்திருந்த மட்டப்பாறை வெங்கட்ராமய்யரையும் சந்திக்கச் சொல்லி அவர்களுக்கு அவர் கூறினார். ஆசிரமத்தின் பெயர் சம்பந்தமாக யோசனை கேட்டபோது,

"சத்தியம் - தன்னைத் திருத்த உதவுவது. சேவை - பிறரைச் சுகம் காணச் செய்ய உதவுவது. இந்த இரண்டுமே காந்தீய மகாவிரதங்கள். சத்தியமும், சேவையும் உள்ளங்கையும் புறங்கையும் போல் சேர்ந்திருக்க வேண்டும். உங்கள் ஆசிரமத்துக்குச் 'சத்திய சேவாசிரமம்' என்று பெயர் வைத்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்" - என்றார் வைத்தியநாதய்யர். அந்தப் பெயர் அவர்களுக்கும் பிடித்திருந்தது. பெயரைச் சொல்லிவிட்டு அவர்கள் கேட்காமலேயே ஆசிரமத்துக்காக வைத்துக் கொள்ளும்படி ஐநூறு ரூபாய் பணமும் கொடுத்தார் வைத்தியநாதய்யர். ராஜாராமன் தயங்கினான்.

"பெரியவர் ஆசிர்வாதம் போலக் கொடுக்கிறார், வாங்கிக் கொள்," என்றார் பிருகதீஸ்வரன். ராஜாரமன் வைத்தியநாதய்யரை வணங்கிவிட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டான். "தீர்க்காயுசா இருந்து நாட்டுக்குத் தொண்டு செய்," என்று அவனை வாழ்த்தினார் அவர். அப்புறம் தொடர்ந்து இக்னேஷியஸ், சுப்பராமன் ஆகியோரையும் போய்ப் பார்த்தார்கள். பிருகதீஸ்வரனும் முத்திருளப்பனும் கட்டிட வேலையில் பழக்கமுள்ளவரும், கொஞ்சம் சுதேசி மனப்பான்மை உள்ளவருமான கொத்தனார் ஒருவரைத் தேடிக் கண்டுபிடிக்க முயன்றார்கள். ரத்தினவேல் பத்தர் சுண்ணாம்புக்காரத் தெருவில் இருக்கும் சுப்பையாக் கொத்தனார் என்பவரைத் தேடிக் கூப்பிட்டுக் கொண்டு வந்தார். சுப்பையாக் கொத்தனார் கதர் கட்டியிருந்தது அவர்களுக்கு நம்பிக்கையளிப்பதாய் இருந்தது. வானம் தோண்டித் தரை மட்டம் வரை கல்கட்டு, அப்புறம் செங்கல், கூரைச் சார்புடன் ஆறு, தனித் தனிக் கட்டிடங்கள், ஒரு பிரேயர் ஹால், ஆலமரத்தைச் சுற்றி வட்டமாக மேடை என்று ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. சில மரச் சாமான்களும், மேஜை, நாற்காலிகளும், கைராட்டினங்களும், நெசவுச் சாதனங்களும், தறிகளும், தேனீ வளர்க்கும் மரக்கூடுகளும் கூடத் தேவைப்பட்டன. ஆசிரமத்தின் சிக்கனமான தேவைகளுக்கே எல்லாமாகச் சேர்ந்து இருபதாயிரம் ரூபாய் வரை வேண்டியிருக்கும் போலிருந்தது. அப்போது போத்தனூரில் அவிநாசிலிங்கம் செட்டியார் நடத்தி வந்த ராமகிருஷ்ண வித்தியாலயத்தை முன் மாதிரியாகக் கொள்ளுமாறு நண்பர்கள் சிலர் யோசனை கூறினர்.

அடுத்த வெள்ளிக்கிழமையே தாமதமின்றி மாந்தோப்பை ஆசிரமத்துக்காகப் பத்திரம் பதிந்து சாஸனம் செய்து கொடுத்துவிட்டாள் மதுரம். வீட்டுக்கு வரவழைத்து பிருகதீஸ்வரன் முன்னிலையில் மதுரமே ராஜாராமனிடம் அதைக் கொடுத்தாள்.

அடக்க ஒடுக்கமாக அவனைப் பாதங்களில் சாஷ்டாங்கமாக வணங்கி, எழுந்து அந்தப் பத்திரத்தை மதுரம் கொடுத்த விதம் பிருகதீஸ்வரன் இதயத்தை நெகிழ வைத்தது.

"இதே தெருவில் உன்னையொத்த வயதிலுள்ள பெண்கள் எப்படி எப்படி எல்லாம் சொத்துச் சேர்க்கலாம் என்று அலைந்து கொண்டிருக்கும்போது, நீ உன்னுடைய சொத்துக்களைப் பவித்திரமான காரியங்களுக்காக ஒவ்வொன்றாய்த் தியாகம் செய்து கொண்டிருக்கிறாய் அம்மா! கடவுள் உனக்கு ஒரு குறையும் வைக்க மாட்டார். மீனாட்சி கிருபையால் உனக்குச் சகல ஐஸ்வரியமும் பெருகும்," என்றார் பிருகதீஸ்வரன். மதுரம் அவரையும் வணங்கி எழுந்து, அடக்கமாகக் குனிந்த தலைநிமிராமல் நின்றாள்.

'என்னுடைய சகல ஐஸ்வரியமும் இவர்தான்' என்று ராஜாராமனைச் சுட்டிக்காட்டிச் சொல்லிவிடத் தவிப்பது போல அவளது இதழ்கள் துடிதுடித்தன. மன்மதனின் ஆசை நிறைந்த விழிகளின் சிவப்பைப் போல சிவந்திருந்த அந்த இதழ்களில் நாணி மறையும் புன்னகை ஒன்று ஒரு சீராக எரியும் குத்துவிளக்கின் ஒளியைப் போல் நிரந்தரமாக ஒளிர்ந்து கொண்டிருப்பதாக ராஜாராமனுக்குத் தோன்றியது. எல்லாப் பற்களும் தெரியும்படி அவள் அரட்டையாகச் சிரித்து, அவன் பார்த்ததேயில்லை. விலை மதிப்பற்ற வெண் முத்துக்களைப் பாதுகாப்பது போல் பற்கள் தெரியாத இங்கிதச் சிரிப்பே அவள் அலங்காரமாயிருந்து வருவதை அவன் அவ்வப்போது கவனித்திருக்கிறான். பத்திரம் பதிவாகிக் கிடைத்த தினத்தன்றும் அவர்கள் அங்கேயே சாப்பிட வேண்டுமென்று தனபாக்கியம் பிடிவாதம் செய்தாள். அதையும் அவர்கள் மறுக்க முடியவில்லை. மறுநாள் காலை பிருகதீஸ்வரனும், சுப்பையாக் கொத்தனாரும், முத்திருளப்பனும், கட்டிட அளவு வேலைகளுக்காக மாந்தோட்டத்துக்குப் போயிருந்தார்கள். ராஜாராமனுக்குக் காலையிலிருந்து இலேசான ஜுரம் அடித்துக் கொண்டிருந்தது. முந்திய முறை மாந்தோப்புக்குப் போன போது, ஓடையில் புதுத் தண்ணீரில் குளித்தது உடம்புக்கு ஒத்துக் கொள்ளாமல், நீர் கோத்துக் கொண்டு விட்டது. அவன் வாசகசாலையிலேயே படுத்துக் கொண்டிருந்தான்.

மதுரம் அவன் நெற்றியில் போடுவதற்காகச் சாம்பிராணிப் பற்று அரைத்து, கொதிக்க வைத்துக் கொண்டு வந்தாள்.

"பிருகதீஸ்வரன் இங்கே வந்து தங்கினப்புறம், நீ எங்கிட்டப் பேசறதையே விட்டாச்சு இல்லையா மதுரம்?"

"பேசாட்டா என்ன? அதான் விடிஞ்சு எழுந்திருந்தா நாள் தவறாம, 'தெலியலேது ராமா'ன்னு கதறிண்டிருக்கேனே; அது உங்க காதிலே விழறதோ இல்லையோ?"

-கேட்டுக்கொண்டே சுடச்சுட நெற்றியில் பத்தைப் போட வந்தவளிடமிருந்து விலகி உட்கார்ந்தான் அவன். வளையணிந்த தந்தக்கை பின் வாங்கியது.

"ஏன்? நான் போடப்படாதா?"

"இப்படி வச்சுடு; நானே எடுத்துப் போட்டுக்கறேன்."

"முடியாது! நீங்களே உங்க நெத்தியிலேயும் தலையிலேயும் போட்டுக்க வசதியாயிருக்காது. எனக்கே இப்படி வேளையிலே அம்மாவோ, மங்கம்மாவோதான் போட்டு விடுவாங்க. பத்து வேறே கொதியாகக் கொதிக்கிறது. சூடு தாங்காது உங்க கைக்கு..."

அதைக் கேட்டு ராஜாராமன் சிரித்தான்.

"என் கை தாங்காத சூட்டை உன் கை தாங்க முடியும் போலேருக்கு?"

-பதில் சொல்லமுடியாமல் இதழ்கள் பிரியாத அந்தப் புன்னகையோடு தலைகுனிந்தாள் மதுரம்.

"தேசம் சுதந்திரமடையறவரை 'எந்தப் பெண்ணின் கையும் இந்த சரீரத்தில் படவிடுவதில்லை' என்று சத்தியம் பண்ணியிருக்கேனாக்கும்..."

"சேவை செய்கிறவர்களைத் தடுப்பதற்கு எந்தச் சத்தியத்துக்கும் உரிமையில்லே...!"

-இதற்கு அவன் பதில் சொல்ல முடியவில்லை.

மீண்டும் அவளுடைய நளினமான கோமள மென் விரல்கள் அவன் நெற்றியை அணுகியபோது அவன் தடுக்கவில்லை. வெண்ணெய் திரண்டது போன்ற அந்த மிருதுவான வளைக்கரம் நெற்றியில் பட்டபோது இதமாயிருந்தது. பற்றும் கூடக் குளிர்ந்திருப்பது போல் உணர்ந்தான் அவன். பற்றுப் போட்டு முடிந்ததும் சிரித்துக் கொண்டே அவனை அவள் ஒரு கேள்வி கேட்டாள்:

"உங்களை ஒண்ணு கேக்கணும் எனக்கு..."

"கேளேன். வரங்கள் எதையும் கொடுக்கும் சக்தி இல்லாத சாதாரணத் தேசத் தொண்டன் நான்... நான் கொடுக்க முடியாத பெரிய வரமாகப் பார்த்து நீ கேட்டால் அதற்கு நான் பொறுப்பில்லை மதுரம்!"

அவள் புன்னகை பூத்தாள்.

"அது ஏன் அப்படிச் சொல்லணும் நீங்க? 'எந்தப் பெண்ணும்' என்னைத் தொட முடியாதுன்னீங்களே! உங்களை என்னைத் தவிர வேறொருத்தியும் தொடக் கூடாதுன்னு நான் கதறிக் கதறிப் பாடறதைக் கேட்டும், நீங்க அப்படிச் சொல்லியிருக்கப்படாது. எத்தனை தினங்கள் என் பூக்களால் உங்களுடைய இந்த அழகிய பாதங்களை அர்ச்சித்து, பக்தியை அச்சாரம் கொடுத்திருக்கேன்? அப்படியிருந்தும் நீங்க இது மாதிரிப் பேசலாமா? 'நீ அதுவரை தொட முடியாது'ன்னு மட்டும் தான் நீங்க சொல்லணும்! இன்னொருத்தர் தொடறதுங்கற பிரஸ்தாபமும் கூடவே கூடாது."

"தப்புத்தான்! வாய் தவறிச் சொல்லிவிட்டேன் மதுரம். ஆனா, நீ மட்டும் 'சூடு தாங்கற சக்தி உன் கைக்கு மட்டும்தான் உண்டு' என்பது போலப் பேசலாமா?"

"அதுலே என்ன தப்பு? சேவை செய்யறவங்களுக்குச் சூடு தெரியாது. பக்தி சிரத்தையோட மாரியம்மன் கோவிலில் தீ மிதிக்கிறவர்களுக்குக் கால் சுடறதில்லையே?"

"ஏதேது? உங்கிட்டப் பேசி ஜெயிக்க முடியாது போலிருக்கே?"

"இருக்கலாம்! ஆனா, உங்களை ஜெயிக்கிற நோக்கம் எனக்கு ஒரு நாளும் கிடையாது! என் தவமே உங்களுக்காக சகலத்தையும் தோற்கணும்கிறதுதான்..."

-இப்போதும் பதில் பேச முடியாமல் மெய்சிலிர்த்துப் போய் இருந்தான் அவன். பற்று உறைந்து முகமும் நெஞ்சும் வேர்த்துக் கொட்டியது. சிரிக்காமல், அந்த வாக்கியங்களை ஒவ்வொரு வார்த்தையாக, அவள் நிதானமாய்க் கூறிய போது, அவள் கண்களில் ஈரம் பளபளப்பதை அவன் கவனித்தான். இப்படி ஒரு பிறவியைப் பலமுறை அவளுக்காகவே - அவளுடைய சேவைக்காகவே - அடைய வேண்டும் போல, அந்த வாக்கியங்களால் இந்த விநாடியில் அவனைத் தவிக்கச் செய்தாள் மதுரம். அவள் பற்றுக் கொதித்துக் கொண்டு வந்த கரண்டியோடு எழுந்து போன பின்பும், நீண்ட நேரம் அந்தத் தவிப்பிலேயே இருந்தான் அவன். படியேறித் திரும்பிச் சென்ற போது கருநாகமாகச் சுழன்ற அவள் பூச்சூடிய கூந்தல் பின்னல், வீணையாய் இயங்கிய சரீர நளினம், நிருத்தியமாக நடந்த நடையின் அழகு, சுகந்தமாய்ச் சுழன்ற நறுமணங்கள், எல்லாம் 'நாங்கள் உனக்குச் சொந்தம்' - 'நாங்கள் உனக்குச் சொந்தம்' - என்று அவனை நோக்கி மௌனமாகத் தவிப்பது போலிருந்தது. இவ்வளவு பெரிய தாபத்தை அவன் இதற்கு முன் எப்போதுமே உணர்ந்ததில்லை. சிறையில் பாடிய கவிதை நினைவு வந்தது.

மதுரம் சொல்லியபடி பூண்டு, மிளகு, தேசாவரம் எல்லாம் சேர்த்துப் பகல் உணவில் பத்தியமாக ஒரு ரசம் வைத்திருந்தாள் மங்கம்மா. அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்ட போது ஜுரத்துக்கு அது மாற்றாக இருந்தது.

அவன் அன்று பகலில் நன்றாக அயர்ந்து தூங்கினான்.

மாலை அவன் கண் விழித்தபோது பக்கத்து மாடியில் மதுரம் வீணை வகுப்பு நடத்திக் கொண்டிருப்பதை அநுமானிக்க முடிந்தது. சாயங்காலத் தபாலில் வந்த கடிதங்கள் மேஜை மேல் இருந்தன. அவற்றில் ஒரு கடிதம் தமிழ்நாடு மாகாண காங்கிரஸின் அடுத்த கூட்டம் பற்றியும், தலைவர் தேர்தல் பற்றியும் கூறியது. இன்னொரு கடிதம் சென்னையிலிருந்து, தலைவர் தேர்தலில் என்ன மாதிரி யாரை ஆதரிக்க வேண்டும் என்பது பற்றிச் சென்னை போயிருந்த மதுரைத் தேச பக்தர் ஒருவர் எழுதியது. அவற்றை அவன் படிக்கத் தொடங்கியபோதே பிருகதீஸ்வரனும், முத்திருளப்பனும், சுப்பையாக் கொத்தனாரும் திரும்பி வந்தார்கள். கடிதங்களைப் பிருகதீஸ்வரனிடம் கொடுத்தான் அவன்.

அத்தியாயம் - 11

தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் தலைமைக்கு அந்தத் தடவை சி.பி. சுப்பையாவும், காமராஜும் போட்டியிட்டார்கள். போட்டியில் சி.பி. சுப்பையாவுக்கு நூறு ஓட்டுக்களும் காமராஜுக்கு நூற்று மூன்று ஓட்டுக்களும் கிடைத்தன. காமராஜ் வெற்றி பெற்றார். தங்கள் பக்கத்து மனிதர் தலைமைப் பதவியை ஏற்க நேர்ந்ததில் ராஜாராமன், முத்திருளப்பன், குருசாமி எல்லாருக்கும் பெருமகிழ்ச்சி ஏற்பட்டது.

"மதுரை மாகாண மகாநாட்டில் ஏற்பட்ட கட்சி கட்டும் மனப்பான்மை ஒவ்வொரு தலைவர் தேர்தலின் போதும் பெரிசாகிக் கொண்டே வருகிறதே என்று தான் கவலையாக இருக்கிறது. காங்கிரஸ் என்ற தேசிய மகாவிரதம் பங்கப் படக்கூடாதே என்று நான் பயப்படுகிறேன். காமராஜும் அப்பழுக்கற்ற தேசபக்தர். சி.பி. எஸ்ஸும் அப்பழுக்கற்ற தேசபக்தர். இருவரில் ஒருவரைப் போட்டியின்றி தேர்ந்தெடுத்திருக்கலாம். காங்கிரஸ் என்ற சத்திய விரதத்தைச் சுதந்திரமடையும் முன்பு - இப்போதே தலைவர் தேர்தல்கள் எப்படி எப்படி எல்லாம் குலைக்க முயல்கின்றன பாரு!" என்று பிருகதீஸ்வரன் மட்டும் கொஞ்சம் மனங்கலங்கினார். தேர்தல் முடிந்ததுமே சி.பி. சுப்பையா பெயரைப் பிரேரேபித்திருந்த முத்துரங்க முதலியார் கமிட்டி உறுப்பினர் பதவியிலிருந்து விலகிவிட்டதாக வந்த செய்தி இன்னும் வருத்தத்தை அளிப்பதாயிருந்தது. அந்தச் சமயம் சென்னை கார்ப்பரேஷன் மேயராயிருந்த சத்தியமூர்த்திக்கு இதைப் பற்றிக் கவலை தெரிவித்து, வருத்தத்தோடு ஒரு கடிதம் எழுதினான் ராஜாராமன். அதே கடிதத்தில் பிருகதீஸ்வரனும் கையெழுத்திட்டிருந்தார்.

யுத்த நிலைமை பற்றிப் பேசுவதற்காக அந்த வருடம் காந்தி வைஸ்ராயைச் சந்தித்தார். தனிப்பட்டவர் சத்தியாக்கிரகத்துக்கு அநுமதி கிடைத்திருந்ததால், தேசத் தொண்டர்கள் செயலாற்றுவதற்கு ஆர்வமாயிருந்தார்கள். அந்தச் சமயம் ஆசிரம வேலைகளுக்காக வெளியே தேசபக்தியுள்ள செல்வந்தர்களிடம் கூட உதவி கேட்க ஏற்ற சூழ்நிலை உடையதாக இல்லை. ராஜாராமன் ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தான். மேலூர் நிலம் வீடு விற்றப் பணம் கொடுத்து வைத்திருந்ததில் பெரும் பகுதியை மதுரத்திடமிருந்து வாங்கி, வசூலான சிறு தொகையையும் சேர்த்து, நிரந்து மகாத்மாவின் ஹரிஜன நிதிக்காகக் கொடுத்தாயிற்று. அதைப் போல இரண்டு மடங்கு, வாசகசாலை, துண்டுப் பிரசுரம், முத்திருளப்பன் போன்றவர்களுக்கு உதவி, என்று மதுரமே இதற்குள் நிறைய அவள் கையை விட்டுச் செலவழித்திருக்க வேண்டுமென்று கணக்குப் பார்த்த போது புரிந்தது. அவன் பணமும் தவிர அதிகமாகவே கையிலிருந்து செலவழித்திருந்தாள் அவள். போதாதற்குப் பெரிய சொத்தாகிய மாந்தோப்பையும் இப்போது ஆசிரமத்துக்கு எழுதிக் கொடுத்துவிட்டாள். ஆசிரமக் கட்டிட ஏற்பாட்டுக்குப் பணமுடை பற்றிப் பிரஸ்தாபித்தாலும் மதுரம் ஏதாவது செய்வாள் என்றாலும், அவளுக்குச் சிரமம் தரக்கூடாது என்பதற்காக அதைப் பற்றியே அவன் அவளிடம் பேச்செடுக்க விரும்பவில்லை. வைத்தியநாதய்யர் நல்ல மனத்தோடு கொடுத்த ஐநூறு ரூபாய் மட்டும் கையில் இருந்தது. பணத்துக்கு ஒரு ஏற்பாடு செய்து ஆசிரம வேலையைப் பிருகதீஸ்வரனிடம் ஒப்படைத்து விட்டால் - தானும், முத்திருளப்பனும், தனி நபர் சத்தியாக்கிரகத்தில் இறங்கலாம் என்ற எண்ணம் ராஜாராமனுக்கு இருந்தது. ஆனால், பணத்திற்குத்தான் ஒரு வழியும் புரியவில்லை. அவர்கள் இவ்வாறு யோசித்துக் கொண்டிருந்த வேளையில் குருசாமி, தனிநபர் சத்தியாக்கிரகத்தில் கோர்ட்டுக்கு முன் மறியல் செய்து சிறை சென்றுவிட்ட செய்தி தெரிந்தது. தானும், முத்திருளப்பனும் தயங்கும்படி நேர்ந்ததற்காக ராஜாராமனுக்கு நாணமாயிருந்தது. பிருகதீஸ்வரன் நடுவே புதுக்கோட்டை போய் ஒரு வாரம் இருந்துவிட்டுத் திரும்பினார். வரும்போது அவர் ஒரு ஆயிரம் ரூபாய் ஆசிரமத்துக்காகக் கொண்டு வந்தார். ஆசிரமத்தின் அமைப்புப் பற்றியே அவர் சிந்தனை இருந்ததால், தனி நபர் சத்தியாக்கிரகத்தில் அவர் அக்கறை காட்டவில்லை. ராஜாராமனும், முத்திருளப்பனும் சத்தியாக்கிரகத்தை விட மனமின்றி, எப்படியும் அதில் ஈடுபடுவதென்று உறுதியாயிருந்தனர். அந்தத் துடிப்பை அவர்களால் அடக்க இயலவில்லை.

"அம்மா நிலைமை மோசமாயிருக்கு! எப்ப என்ன நேருமோ? இனிமே பிழைப்பாள்னு எனக்கே தோணலை. இந்த நெலமையிலே என்னை அநாதையா விட்டுட்டு நீங்களும் ஜெயிலுக்குப் போயிடாதீங்கோ," - என்று மதுரம் ஒருநாள் சாயங்காலம் அவன் மட்டும் தனியாயிருந்த போது வந்து அழுதாள். அவளுக்கு ஆறுதலாகப் பேசி அனுப்பினான் அவன். அவளுடைய கவலையும், பயமும் அவனுக்குப் புரிந்தது.

ஆசிரம வேலையாகப் பணம் திரட்டும் சிரமங்களையும், பிறவற்றையும் மட்டும் அவன் கூடிய வரை அவளிடம் சொல்லாமலே தவிர்த்து விட்டான். ஆசிரம முயற்சிக்கு மட்டப்பாறை ஐயர் சிறிது பண உதவி செய்தார். வந்தேமாதரம் செட்டியார் என்ற பாலகிருஷ்ணன் செட்டியாரும், டி.கே. ராமாவும், திலகர் வாசகசாலையைத் தேடி வந்து ஆளுக்கு ஐம்பது ரூபாய் வீதம் நன்கொடை கொடுத்து விட்டுப் போனார்கள். பெரிய குளத்திற்கும், சிவகங்கைக்கும் வசூல் நோக்கத்தோடு சென்றால், டாக்டர் கோபாலசாமியைச் சேர்ந்தவர்களும், ஆர்.வி. சுவாமிநாதனும் ஏதாவது உதவிகளைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது ராஜாராமனுக்கு. ஆசிரமத்தில் ஹரிஜன முன்னேற்றம், பின் தங்கியவர் கல்வி முன்னேற்றம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வக்கீல் சோமசுந்தர பாரதியும் அவர் மாப்பிள்ளை கிருஷ்ணசாமி பாரதியும், அவர் மனைவி லட்சுமி பாரதியும் கருதினார்களென்று தெரிவித்தார்கள் நண்பர்கள். பிருகதீஸ்வரனும், ராஜாராமனும் ஆசிரம விஷயமாகப் பலரைச் சந்திக்க வேண்டியிருந்தது. சிலர் பண உதவிக்குப் பதில் கருத்துக்களை உதவி செய்ய முடிந்ததும் பயன்படவே செய்தது. பண உதவி செய்கிற நிலையில் எல்லோரும் இல்லை.

ஒருநாள் பிருகதீஸ்வரனும், ராஜாராமனும், வடக்கு மாசி வீதியில் வந்து தங்கியிருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைச் சந்திக்கப் போயிருந்தனர். தேவருடன் சசிவர்ணத் தேவரும் இருந்தார். ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்து மூன்றாம் ஆண்டு சாயல்குடி விவேகாநந்தர் வாசக சாலையில் முதலாவது ஆண்டு விழாவில் முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய வீரவுரை விவேகாநந்தரே நேரில் வந்து பேசுவது போல் அவ்வளவு சிறப்பாக இருந்ததென்று காமராஜும் சீநிவாசவரதனும் அடிக்கடி சிறைவாசத்தின் போது சக சத்யாக்கிரகிகளிடம் வியந்து கூறியதுண்டு. ராஜாராமனுக்கு இப்போது அது நினைவு வந்தது. தேவர் தமது கம்பீரமான தோற்றத்தோடு சத்திய ஆவேசம் நிறைந்த குரலில் அவர்களோடு உரையாடினார். உதவிகளுக்கும் வாக்களித்தார். பாரதா முத்துத் தேவர் குடும்பத்தினரையும் பார்க்கச் சொல்லி அவரே யோசனையும் கூறினார். தேவரைப் பார்த்தபின் மௌலானா சாகிப் மூலம் சில முஸ்லீம் தேசபக்தர்களையும் சந்தித்தார்கள் அவர்கள். இக்னேஷியஸ் முதலிய கிறிஸ்தவ சகோதரர்களும் முடிந்தவரை உதவினர். திருமங்கலத்தில் விசுவநாத தாஸோடு முன்பு எப்போதோ பல காங்கிரஸ் கூட்டங்களில் சந்தித்திருந்தவர்கள் சிலரும் இதற்காக முன் வந்து உதவினர்.

அப்போதே தனி நபர் சட்டமறுப்பில் யார் யார் முதல் அணியாக ஈடுபட்டுச் சிறை சென்றுவிட்டார்களோ அவர்களை எல்லாம் பார்க்க முடியவில்லை. எனவே, ஆசிரம முயற்சி போதுமான பண வசதியின்றித் தள்ளிப் போடப்பட்டது. தங்கள் நிதிக்குப் பணம் கேட்காததோடு, அப்போது கவர்னர் வசூலித்துக் கொண்டிருந்த யுத்த நிதியை எதிர்த்துத் தேசபக்தர்கள் பிரசாரமும் தொடங்கினர்.

மறு வாரமே ராஜாராமனும், முத்திருளப்பனும், கலெக்டர் ஆபீஸ் முன்பு மறியல் செய்து கைதானார்கள். மதுரத்துக்கோ, பத்தருக்கோ, பிருகதீஸ்வரனுக்கோ தெரிந்தால் ஒருவேளை அவர்கள் தங்களைத் தடுக்கக் கூடும் என்று மறியல் விஷயத்தை அவர்கள் முன்கூட்டியே யாருக்கும் தெரியவிடவில்லை. இருவரும் கைதான பின்பே மற்றவர்களுக்கு அச்செய்தி தெரிந்தது. திருச்சி ஜெயிலில் கடுமையான 'குவாரன்டைன் பிளாக்' அவர்களுக்குக் கிடைத்தது.

அப்போது அவர்களோடு திருச்சி சிறையில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், சர்தார் வேதரத்தினம், வி.வி. கிரி, டி.எஸ். அவினாசிலிங்கம், சுப்பராயன், அனந்த சயனம், பக்தவத்சலம் போன்ற தலைவர்களும் இருந்தனர். அவன் திருச்சிக்கு வந்த இரண்டு வாரங்களுக்குப் பின், தனபாக்கியம் காலமாகிவிட்ட செய்தியைப் பிருகதீஸ்வரன் தந்தி மூலம் மதுரையிலிருந்து தெரிவித்தார். மதுரம் என்ன வேதனைப்படுவாள் என்பதை அவனால் கற்பனையே செய்ய முடியாமலிருந்தது. பிருகதீஸ்வரனும், பத்தரும் அவளுக்குத் துணையாயிருந்து ஆறுதல் கூறுவார்கள் என்றாலும், அவள் மனம் தான் இல்லாத தனிமையை எப்படி எப்படி உணரும் என்றெண்ணிய போது அவனுக்கு மிக மிக வேதனையாயிருந்தது. அவன், மதுரத்துக்குக் காண்பித்து ஆறுதல் கூறும்படி சிறையிலிருந்து பிருகதீஸ்வரனுக்கு உடனே ஒரு கடிதம் எழுதினான். எவ்வளவோ பரிவாகவும், கனிவாகவும் எழுதியும் கூட, அந்தக் கடிதமே தான் அப்போது அருகில் இல்லாத குறையைப் போக்கி மதுரத்துக்கு ஆறுதலளிக்குமென ராஜாராமனால் நம்ப முடியவில்லை. தான் முதலில் நினைத்திருந்ததற்கு மாறாகத் தனபாக்கியம் மிகமிக நல்ல மனமுள்ளவளாகப் பழகிய பின்பு இப்போது அவளுடைய மரணம் அவன் மனத்தைக் கலங்கச் செய்தது. ஜமீந்தாருடைய மரணத்துக்குப் பின்னே அவள் தளர்ந்து விட்டாள் என்று தோன்றினாலும், அவள் இன்னும் சிறிது காலம் உயிர் வாழ்ந்திருந்தால் மதுரத்துக்குப் பெரிதும் ஆறுதலாயிருக்கும் எனத் தோன்றியது.

"அம்மா நெலைமை மோசமாயிருக்கு. இனிமேல் பிழைப்பான்னு தோணலை. இந்த நெலைமையிலே நீங்களும் என்னை அநாதையா விட்டுவிட்டு ஜெயிலுக்குப் போயிடாதீங்கோ" - என்று மதுரம் ஒரு நாள் தன்னிடம் அழுதிருந்ததை இப்போது ஜெயிலில் நினைவு கூர்ந்தான் அவன். வயது ஆனபின் இறந்தாலும் தாயின் மரணம் எத்தனை மூத்த பின்பும் சகித்துக் கொள்ள முடியாதது. மதுரம் இதில் மிகவும் அதிர்ந்து போயிருந்தாள் - என்பது அவனுக்குப் புரிந்தது.

"வீட்டிலேயே மங்கம்மாவும் மதுரத்தோட மாமாவும் இருக்காங்க. போதாததுக்குப் பிருகதீஸ்வரன் மதுரையிலேயே இருந்தார். பத்தர் வேறே ஆறுதல் சொல்வார்! நீ கவலைப்படாம இரு. நீ மனோதிடத்தை விட்டுடாம இருக்க வேண்டியது இப்ப முக்கியம்," - என்று சிறையில் உடனிருந்த முத்திருளப்பன் அவனிடம் கூறினார்.

அடுத்த மாதம் பிருகதீஸ்வரனும் பத்தரும் அவர்களைப் பார்த்துவிட்டுப் போகத் திருச்சி ஜெயிலுக்கு வந்திருந்தார்கள். மதுரம் அவர்களிடம் அவனுக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தனுப்பி இருந்தாள். கடிதத்தில் அம்மாவின் மரணத்துக்கு வருந்திக் கலங்கியிருந்ததோடு, அவன் உடல் நலனையும் விசாரித்திருந்தாள் அவள். நாகமங்கலம் ஜமீந்தாரிணியும், தனக்கு ஒரு விதத்தில் சகோதரர்கள் முறையுள்ள ஜமீந்தாரின் மக்களும் மனம் மாறிப் பெருந்தன்மையோடு அம்மாவின் மரணத்துக்குத் துக்கம் கேட்டுவிட்டுப் போக வந்திருந்ததையும் கடிதத்தில் அவனுக்கு மதுரம் எழுதியிருந்தாள். தான் விடுதலையாகி வரும்வரை மதுரையிலேயே தங்கி இருக்கும்படி பிருகதீஸ்வரனை வேண்டிக் கொண்டான் அவன்.

"நீயே என்னை ஊருக்குத் திரும்பிப்போ என்று சொன்னாலும் நான் இப்போ மதுரையிலிருந்து போக மாட்டேன் ராஜா! ஆசிரமக் கட்டிட வேலையை ஆரம்பிச்சாச்சு. சுப்பையாக் கொத்தனார் வானம் தோண்டிக் கட்டு வேலை தொடங்கிவிட்டார்."

"பணம்...?"

"வசூலாகி கையிலே இருந்ததோட - வேற பணமும் கொஞ்சம் கிடைச்சது..."

"கிடைச்சுதுன்னா... எப்படி?"

"மதுரம் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாள்! உங்கிட்டச் சொன்னா, நீ கோவிச்சுப்பியோன்னுதான் சொல்லத் தயங்கினேன்..."

"நீங்க செய்தது எனக்குப் பிடிக்கலை சார்! மாந்தோப்பை எழுதி வாங்கினோம். அதுக்கு முன்னாடியே வாசகசாலைக்கும் எங்களுக்கும், ஹரிஜன நிதி, ஆலயப் பிரவேச நிதின்னு மதுரம் நிறையச் செய்தாச்சு. இன்னமும் அவளையே சிரமப்படுத்தினா எப்படி? அது நல்லாவா இருக்கு?"

"இதை அவ சிரமமா எடுத்துண்டால்தானே? 'இது தான் என் சந்தோஷம்! நீங்க ஆசிரம வேலையைத் தொடங்குங்கோ'ன்னு மதுரமே எங்கிட்ட வந்து கெஞ்சினா, நான் என்ன செய்ய முடியும் ராஜா?"

"இதுக்குப் பயந்துதான் நான் அவகிட்ட ஆசிரம வேலை பற்றி பணக் கஷ்டத்தைச் சொல்லாமலே வைத்திருந்தேன்."

"நான் மட்டும் சொன்னேனா என்ன! 'ஏன் ஆசிரம வேலை நின்னிருக்கு?'ன்னு மதுரமாகவே எங்கிட்ட வந்து கேட்டு உதவறபோது, வாங்கிக்காமல் வேறென்ன செய்ய முடியும்? தவிர நீ நினைக்கிற மாதிரி நாம் இனிமே மதுரத்தை அந்நியமா நினைக்க வேண்டியதில்லை என்று அபிப்பிராயப்படுகிறேன் நான். நீ மட்டும் இதுக்கு ஏன் தயங்கணும்னு தான் எனக்குப் புரியலே ராஜா?"

"....."

அவருடைய கேள்விக்கு ராஜாராமனால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அன்று அவன் மதுரத்துக்கு ஒரு கடிதம் எழுதி அவரிடம் கொடுத்திருந்தான். அதில் அவள் செயலைப் பாராட்டி வியந்து எழுதியிருந்தான். என்றாலும் மனத்துக்குள் கவலையாகத்தான் இருந்தது.

அதற்குப் பின் மீண்டும் இரண்டு மாதங்கள் கழித்துப் பத்தர் மட்டும் தனியே அவர்களைப் பார்க்க வந்து விட்டுச் சென்றார். மதுரம் அவரிடம் நிறையத் தகவல்கள் சொல்லி அனுப்பியிருந்தாள். அவனும் பதிலுக்கு அவளிடம் சொல்லுமாறு நிறைய ஆறுதல் கூறி அனுப்பினான்.

முத்திருளப்பனும் அவனும் விடுதலை ஆவதற்கு ஒரு மாதத்திற்கு முன் மீண்டும் பத்தர் வந்த போது ஆசிரம வேலை முடிந்து, பிருகதீஸ்வரன் ஹரிஜனக் குழந்தைகளுக்கு ஒரு பள்ளிக்கூடமும், சர்க்கா-நெசவுப் பிரிவும் அங்கே தொடங்கி விட்டதாகத் தெரிவித்தார். அன்றே - அந்த விநாடியே - ஆசிரமத்துக்குப் போய்ப் பார்க்க வேண்டும் போல் ஆசையாயிருந்தது அவர்களுக்கு. முத்திருளப்பனும் ராஜாராமனும் அன்றிலிருந்து நாட்களை எண்ணினார்கள். கைதாகிய நாளிலிருந்து சரியாக ஒன்பதாவது மாதம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையாகி மதுரை போய் அவன் மதுரத்தைக் காணச் சென்ற போது, அவள் வீட்டு முன் கூடத்தில் ஏற்கனவே மாட்டியிருந்த நாகமங்கலத்தாரின் பெரிய படத்தருகே இப்போது தனபாக்கியத்தின் படமும் இணையாக மாட்டப் பட்டிருப்பதைக் கண்டான். மதுரத்துக்கு அவனைப் பார்த்ததும் அழுகை வெடித்துக் கொண்டு வந்தது.

"அம்மா போயிட்டா!" என்று சிறு குழந்தையாக அப்போதுதான் புதிதாக அதை உணர்ந்தவள் போன்று அவனிடம் கதறினாள். மனம் திறந்து பிறக்கும் சோகம் இதயத்தைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கு முன் தவிர்க்கப் பட முடிவதில்லை என்பதை அவள் நிலையிலிருந்து அவன் நன்றாக உணர்ந்தான். முத்திருளப்பன் முறைப்படி அவளிடம் துஷ்டி கேட்டார். பிருகதீஸ்வரன் வாசகசாலையில் இல்லை. அவர் ஆசிரமத்திலேயே வசிக்கத் தொடங்கி சில வாரங்களுக்கு மேல் ஆவதாக, மதுரமும் பத்தரும் தெரிவித்தார்கள்.

"நீங்களும் அங்கே போய் ஆசிரமத்திலேயே தங்கி விடக்கூடாது. இங்கே தான் இருக்கணும். இல்லாட்டா நான் இந்தத் தனிமையில் உருகிச் செத்தே போவேன்," என்று மதுரம் ராஜாராமனிடம் முறையிட்டாள்.

அவன் அவள் வேண்டுகோளை மறுக்கும் சக்தியற்றவனாக இருந்தான். அடிமையாகிற சமர்ப்பண சுபாவத்துடனும், அடிமையாக்கி விடுகிற பிரியத்துடனும் எதிரே நிற்கும் அந்த சௌந்தரியவதியிடமிருந்து மீள முடியாமல் தவித்தான் ராஜாராமன். முத்திருளப்பன் ரயிலிலிருந்து இறங்கி நேரே வடக்குச் சித்திரை வீதிக்கே வந்திருந்தாராகையினால், ராஜாராமனிடமும், மதுரத்திடமும் சொல்லிக் கொண்டு பகல் சாப்பாட்டுக்குப் பின் தம் வீட்டுக்குப் போனார். முத்திருளப்பன் போன பின் தனியே அவனிடம் ஏதோ பேச வந்தவர் போல் மேலே வந்த பத்தர், தம் பேச்சை எப்படி ஆரம்பிப்பதென்று தெரியாத மாதிரி தயங்கித் தயங்கி நின்றார். அவருடைய குறிப்புப் புரிந்து ராஜாராமனே அவரைக் கேட்டான்.

"என்ன சமாசாரம் பத்தரே? சொல்ல வந்ததைச் சொல்லுங்களேன்..."

"ஒண்ணுமில்லீங்க தம்பி..."

"சும்மா சொல்லுங்க..."

"பெரியம்மாவும் போயாச்சு. இனிமே நீங்க தான் 'அதை' ஆதரவா கவனிச்சுக்கணும்..."

"....."

அவருடைய வேண்டுகோள் மிகவும் கனிவாயிருந்தது. மதுரத்தைக் கவனித்துக் கொள்ளும்படி அவர் தனக்குச் சிபாரிசு செய்வதைக் கேட்டு உள்ளூறச் சிரிப்பாயிருந்தாலும் அவருடைய அந்தரங்கமான பாசவுணர்வு அவனை வியக்கச் செய்தது. நிஜமான அன்பு என்பது மனிதர்களை மீண்டும் மீண்டும் குழந்தைகளாக்குவதை அவன் கவனித்தான். தன் சொந்த மகளைப் பற்றி அக்கறைப்படுவது போல் பத்தர் மதுரத்திடம் அக்கறை காட்டினார். ஆசிரமம் தொடங்கி நடந்து கொண்டிருந்தாலும், அவன் வாசகசாலையிலேயே தங்கி மதுரத்துக்கு ஆறுதலளிக்க வேண்டுமென்றும் அவரே கேட்டுக் கொண்டார்.

"இதை மதுரமே எங்கிட்டச் சொல்லியாச்சு."

"அது எனக்கும் தெரியும் தம்பீ! ஆனா, நீங்க அந்த வேண்டுகோளைப் புரிஞ்சுக்கணும்கிறதை நானும் ஞாபகப்படுத்த ஆசைப்படறேன்..."

"சரி! இந்த விஷயத்திலே மட்டும் உங்க ரெண்டு பேர் வார்த்தையையும் நான் தட்டலை, இப்பத் திருப்தி தானே உமக்கு?"

பத்தரின் முகம் மலர்ந்தது.

அன்றிரவு மதுரத்தைக் கொஞ்ச நேரம் வீணை வாசிக்கச் சொல்லி வேண்டினான் ராஜாராமன்.

"அம்மா போனதிலிருந்து நான் வாத்தியத்தைத் தொடலே! நீங்களே ஆசைப்பட்டுக் கேட்கிறபோது நான் மாட்டேங்கப்படாது. இதோ வாசிக்கிறேன்."

"வேண்டாம்னு இருந்தா நான் வற்புறுத்தலே மதுரம். எனக்காக அதை மாத்திக்க வேண்டாம்..."

"இல்லே! உங்களுக்கில்லாததுன்னு எதுவும் கிடையாது எங்கிட்ட. நான் இதிலே வாசிக்கறதே உங்களைத்தான். வாசிக்கிற ராகம் எல்லாமே நீங்க தான் எனக்கு..."

"நீ வாசிக்காட்டாலும் நான் எங்கேயிருந்தாலும் எப்படி இருந்தாலும், எனக்கு உன் குரல் தான் கேட்கிறது மதுரம்! போன தடவை ஜெயில்லே இருந்தப்ப உன்னை நினைச்சு, ஒரு கவி கூடக் கட்டினேன்..."

"நீங்க எங்கிட்ட இதுவரை சொல்லவே இல்லியே! எங்கே, அதை முழுக்கச் சொல்லுங்கோ கேட்கலாம்..."

"இப்ப எனக்கே சரியா நினைவு இல்லையே! இரு... அதை மறுபடி நெனைச்சுச் சரிப்பார்த்துக்கிறேன்..."

"வேடிக்கைதான்! பாட்டு எழுதினவருக்கே அது நினைவில்லையா, என்ன? பாட்டை மறந்த மாதிரி என்னையும் ஒருநாள் மறந்துடப் போறீங்க!"

"தப்பு! அது மட்டும் என்னால் முடியவே முடியாது. பாட்டுத்தான் மறந்ததே ஒழிய அர்த்தம் மறக்கலே. பாட்டும் கொஞ்சம் கொஞ்சமா இப்ப நினைவு வந்திடும். மறக்காது..."

"யோசிச்சுப் பாருங்கோ..."

"இதோ ஞாபகம் வரது, சொல்றேன் கேளு..."

பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக நினைத்து அவளுக்குச் சொன்னான் அவன்.

"எல்லையிலாத தோர் காட்டிடை - நள்
இருள் என்றும் ஒளி என்றும்
சொல்ல ஒணாத தோர் மயக்கத்தே - இளஞ்
சோகக் குயில்ஒன் றிசைக்கிறது - அதன்
சோகம் முழுதும் புரியுதிலை
சுவடு முழுதும் தெரியுதிலை
தொல்லைப் பழங் காலமுதலாய் - எனைத்
தேடி அலையும் குரல்
சொல்லைக் குழைத் தாளுங்குரல் - ஒரு
சோகம் முதிர்ந்து முதிர்ந்தூறிப்
பல்லாயிர மூழிகள் தொடர்ந்து
பாடிப் பசித்த குயிலின் குரல்..."

"பிரமாதமாக வந்திருக்கிறது! பசித்த குரல் என்று சொல்லியிருக்கிறீர்களே; அது என்னுடைய குரல் தான்..."

வீணை வாசித்த பின் - இந்தப் பாடலைத் தானே பாடிப் பார்க்கும் ஆசையை அவனிடம் வெளியிட்டாள் அவள்.

"உன் இஷ்டம். ஒரு வேளை உன் குரலினிமையினால் இதுவும் ஒரு மகா காவியமாகி விடலாம். பாடேன்," என்றான் ராஜாராமன். அவன் சொன்னதே பலித்தது. தன் குரலினிமையால் அந்தப் பாடலை அவள் ஒரு மகா காவியமாகவே ஆக்கிக் காட்டினாள். 'பாடிப் பசித்த குயிலின் குரல்' - என்று கடைசி வரியை அவள் முடித்த போது - ஆத்மாவுக்கே பசிப்பது போல் ஒரு இனிய சோகத்தைப் பரவச் செய்தது அவள் சங்கீதம். அன்றே அந்தப் பாடலைத் தன் நாட்குறிப்பில் நினைவாக எழுதிக் கொண்டான் ராஜாராமன்.

மறுநாள் காலை அவனும், முத்திருளப்பனும் ஆசிரமத்துக்குச் சென்று பிருகதீஸ்வரனைச் சந்தித்தார்கள். அந்த மாந்தோப்பு இப்போது ஓரளவு மாறிக் காட்சியளித்தது. மாந்தோப்பை ஒட்டியிருந்த கிராமத்தார்களுக்குக் கூட 'அங்கே யாரோ காந்திக்காரங்க பள்ளிக்கூடம் நடத்தறாங்க' - என்பது போல் ஆசிரமத்தின் பெருமை பரவியிருந்தது. மாமரங்களின் இடையே பர்ணசாலைகள் போல் கூரைச் சார்ப்புக்கள் தெரிந்தன. தாமரைக் குளத்தருகே மேடையில் பிருகதீஸ்வரன் மாணவர்களை அணிவகுக்கச் செய்து, 'வெள்ளைத் தாமரைப் பூவில்' என்ற பாரதியின் பிரார்த்தனை கீதத்துடன் பிரேயர் வகுப்பைத் தொடங்கிக் கொண்டிருந்த போது அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்திருந்தார்கள். பிருகதீஸ்வரன் அவர்களை நெஞ்சாரத் தழுவி வரவேற்றார். மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.

தங்கள் நினைவிலும் கனவிலும் மட்டுமே இருந்த சத்திய சேவாசிரமம் உருவாகி விட்டதைக் கண்டபோது ராஜாராமனுக்குப் பூரிப்பாயிருந்தது. சுதேசிக் கல்வி அங்கே எப்படி எப்படிக் கற்பிக்கப்பட வேண்டும் என்று பிருகதீஸ்வரனே காந்தீயக் கோட்பாடுகளை வைத்து ஒரு திட்டம் வகுத்திருந்தார். அவரைத் தவிர வேறு இரண்டு மூன்று தேசபக்தர்களும் ஆசிரமவாசிகளாகி இருந்தார்கள். ஆசிரமத்தின் தேவைகளுக்கான உணவுப் பொருள்கள் அங்கேயே பயிரிடப்பட்டன. நாலைந்து பசுக்கள், தேன் கூடுகளை வளர்க்கும் தேனீப் பண்ணை எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாணவர்களும் ஆசிரியர்களும் ஒத்துழைத்து, உணவு தயாரித்தார்கள். ஒரே பந்தியாக அமர்ந்து, கட்டுப்பாட்டோடு சுத்தமாக உண்டார்கள். உணவுப் பந்தியே ஒரு பிரார்த்தனைக் கூடம் போலச் சிந்தாமல் சிதறாமல், துப்புரவாக இருந்தது. ஒரே சீரான கதர் உடையுடன் ஆசிரமத்துப் பிள்ளைகளையும், மற்றவர்களையும் பார்க்கும் போது ஒரு சத்திய இயக்கத்தை நோன்பாக அங்கீகரித்துக் கொண்டவர்களைப் பார்ப்பது போல் பெருமிதமாக இருந்தது.

அன்று பகலில் ராஜாராமனும், முத்திருளப்பனும் அங்கேயே நீராடி ஆசிரமத்துப் பந்தியிலேயே பகல் உணவு கொண்டார்கள்.

"ஆசிரம வேலைகளுக்காக மதுரத்துக்கிட்டப் பணம் வாங்கினதே இப்படி ஒரு சத்திய விரதத்தை நாள் கடத்தாமே தொடங்கறதுக்காகத்தான். அதுக்காக நீ என்னை மன்னிக்கணும்," என்றார் பிருகதீஸ்வரன்.

"அப்படிச் சொல்லாதீங்க. நீங்க செய்திருக்கிறது பெரிய சாதனை. நான் ஏதோ, எப்பவோ சொன்னதை நீங்க மனசிலே வைச்சுக்கப்படாது, சார்..." என்றான் ராஜாராமன்.

முத்திருளப்பன் மறுநாளிலிருந்து ஆசிரமத்தின் ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்று பிருகதீஸ்வரன், ராஜாராமன் இருவருமே அவரை வேண்டினார்கள். அவர்கள் சொல்லுமுன் தாமாகவே அந்த முடிவுக்கு வந்து விட்டதாகத் தெரிவித்தார் அவர். அன்று மாலையில் ஓடக்கரையில் உட்கார்ந்து சூரியாஸ்தமனத்தின் அழகை இரசித்துக் கொண்டே நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். ஆசிரமத்தின் எதிர்காலம், அதன் நிதி வசதிகளைப் பெருக்குவது, அதை ஒரு காந்திய மகாவித்யாலயமாக மாற்றும் இலட்சியம், எல்லாவற்றையும் பற்றி அந்தரங்க சுத்தியோடு மனம் விட்டு உரையாடினார்கள் நண்பர்கள்.

முத்திருளப்பனும், ராஜாராமனும் அன்றிரவு ஆசிரமத்திலேயே தங்கிவிட்டு, மறுநாள் காலை மதுரைக்குத் திரும்பினர். அடுத்த நாள் மீண்டும் முத்திருளப்பன் தொடர்ந்து ஆசிரமத்தில் பணிபுரிய அங்கேயே வந்துவிட வேண்டும் என்றும், வாசகசாலை, இயக்க வேலைகள் எல்லாவற்றையும் ராஜாராமனிடமும் குருசாமியிடமும் விட்டுவிட வேண்டும் என்று புறப்படும்போது பிருகதீஸ்வரன் வற்புறுத்திச் சொல்லியிருந்தார். முத்திருளப்பனும் அதற்கு மகிழ்ச்சியோடு இணங்கிவிட்டுத்தான் புறப்பட்டார். ஆனால், குருசாமிக்கும் இயக்க வேலையை விட ஆசிரம வாசமே பிடிப்பதாகத் தெரிந்தது.

அன்று மதுரையில் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி பரவி எல்லாரையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தது. சிறையில் இருந்த காமராஜ் விருதுபட்டி முனிசிபல் சேர்மனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். சிறையில் உள்ள ஒருவரையே விசுவாசத்தோடு தேர்ந்தெடுத்திருந்த காரியம் தேச பக்தர்களுக்கு உற்சாகம் அளிப்பதாயிருந்தது. ஆசிரமத்திலிருந்து திரும்பிய தினத்தன்று பகலில், மதுரத்தினிடம் நீண்ட நேரம் ஆசிரமம் அமைந்திருக்கும் பெருமைகளையே சொல்லிச் சொல்லி வியந்து கொண்டிருந்தான்.

"இந்த ஆசிரமத்தை இப்படி ஏற்பாடு பண்ணியிருக்காட்டா அவருக்குப் பைத்தியமே பிடிச்சிருக்கும்; அவ்வளவு உற்சாகமாக அலைஞ்சார் பிருகதீஸ்வரன். அந்த உற்சாகத்துக்காகவே, எல்லா நகையையும் வித்துப் பணம் கொடுக்கணும்னு தோணித்து எனக்கு..." என்றாள் மதுரம்.

அப்போது அவளைப் பார்த்த அவன், அவள் மூக்கில் பேஸரி, கால்களில் கொலுசுகள், கைகளில் தங்க வளைகள், காதில் வைரத்தோடு எதுவுமே இல்லாமல் மூளியாயிருப்பதை முதல் முறையாகக் கூர்ந்து கவனித்தான்... தான் வந்த முதல் தினத்தன்று அம்மாவின் மறைவிற்குத் துக்கம் கொண்டாடுவதற்காக அவள் ஒன்றும் போட்டுக் கொள்ளாமல் கழற்றி வைத்திருப்பதாக அவன் நினைத்திருந்தான். இப்போது தான், அவ்வளவு நகையும் பணமாக மாறி, ஆசிரமமாகியிருப்பது புரிந்தது. மேலும் பேசியதில் நகை விற்ற பணம் போதாதென்று வீட்டையும் அடமானம் வைத்துப் பெரும் தொகை வாங்கியிருப்பது தெரிந்தது. அவன் அதற்காக அவளைக் கடிந்து கொண்டான். அவளோ நிஷ்களங்கமாகப் புன்னகை பூத்தாள்.

"பணத்துக்கு என்ன? நாளைக்கே கச்சேரிக்குன்னு கிளம்பிட்டா சம்பாதிக்கலாம்... பணம் என்னிக்கும் கிடைக்கும். நல்ல மனுஷாளும், நல்ல காரியமும் தான் எப்பவும் கிடைக்கமாட்டா... நல்ல மனுஷாளும், நல்ல காரியமும் எதிர்ப்படற போதே பணத்தைச் செலவழிச்சுட்டா அதைப் போல நிம்மதி வேறே இல்லை," என்று சிரித்துக் கொண்டே அவனுக்கு மறுமொழி கூறினாள் அவள்.

பெரிய பெரிய தியாகங்களைப் பண்ணிவிட்டு, அவை தியாகம் என்ற நினைவே இல்லாமல் அவன் முன் பேதமையோடு சிரித்துக் கொண்டு நின்றாள் மதுரம்.

'இந்தப் பேதைக்கு எப்படி நன்றி சொல்லுவது?' என்று தெரியாமல் மலைத்து நின்றான் ராஜாராமன்.

முத்திருளப்பன் அடுத்த நாளிலிருந்து சத்திய சேவாசிரமத்தின் ஆசிரியர்களில் ஒருவராகி விட்டார். குருசாமி தையல்மிஷினோடு ஆசிரமத்திற்குப் போய்விட விருப்பம் தெரிவித்தான். ஆசிரமத்திலேயே சர்க்கா நூற்றல், நெசவு எல்லாம் இருந்ததால், உடைகள் தைக்கக் கொள்ள ஒருவர் வேண்டுமென்று பிருகதீஸ்வரன் சொல்லிச் சொல்லித் தன்னையறியாமலே அவனுக்கும் அந்த ஆவலை வளர்த்து விட்டார். ராஜாராமன் வாசகசாலையோடும், நகர காங்கிரஸ் கமிட்டி வேலைகளோடும், தனித்து விடப்பட்டது போன்ற உணர்ச்சியை அடைந்தான். அவனுடைய உலகம் திடீரென்று சின்னஞ் சிறியதாகிவிட்டது போலிருந்தது.

பத்தர் முன்போல் அதிகம் கடைக்கு வருவதில்லை. வயதாகி விட்டதால் மகனிடமும் வேலையாட்களிடமும் கில்ட் கடையை விட்டுவிட்டு, காலையில் ஓடுகால் ஸ்நானம், வடக்கு மாசி வீதி ராமாயணச் சாவடியில் சனிக்கிழமை பஜனை, ராமாயணம் கேட்பது - என்று மாறிப் போய்விட்டார். எப்போதாவது அவனையும் மதுரத்தையும் பார்த்துப் பேச வருவதைத் தவிரச் சித்திரை வீதியில் அவரைப் பார்ப்பது அபூர்வமாகிவிட்டது. அந்த வருடம் சித்திரையில் தம்முடைய இரண்டாவது பெண்ணுக்குக் கலியாணம் கட்டிக் கொடுத்துவிட வேறு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் பத்தர். ராஜாராமன் பெரும்பாலான நேரத்தைக் கமிட்டி ஆபீஸிலும் மீதி நேரத்தை வாசகசாலையிலும் கழிக்க நேர்ந்தது. இதற்கிடையே தனபாக்கியம் காலமாகி ஆறுமாதத்துக்கு மேலாகியிருந்ததால் மதுரம் கச்சேரிகளுக்கு மீண்டும் போய்வரத் தொடங்கியிருந்தாள். இந்தக் கச்சேரிகளுக்குத் தேடி வருகிற தனவந்தர்களிடம் பேசி முடிப்பதை அவன் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டாள் அவள். அதனால் அந்த வேலை வேறு ராஜாராமனிடம் வந்து சேர்ந்தது. கச்சேரி கேட்டு அவள் வீட்டுக்கு வருகிறவர்களை வாசகசாலைக்கு அனுப்பினாள் அவள். அவன் ஒப்புக் கொண்டு சம்மதித்தால் தான் அவள் அந்தக் கச்சேரிக்குப் போவாள். அவனுக்குப் பிரியமில்லை, பிடிக்கவில்லை என்றால், அவள் அந்த இடத்துக்குப் போவதில்லை. மாமா செவிடு என்பதாலும் மங்கம்மாவுக்குப் பேசி முடிவு செய்யத் தெரியாது என்பதாலும் அவனை வேண்டி இந்த ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தாள் அவள். ராஜாராமனும் மறுக்காமல் அதற்கு ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது. ஓரளவு சந்தோஷத்துடனேயே அவளுக்காக அதைச் செய்தான் அவன்.

பத்தரின் இரண்டாவது பெண் கலியாணத்துக்காக அவரிடம் கொடுக்கச் சொல்லி, ஒரு ஐந்நூறு ரூபாயை அவனிடம் கொடுத்தாள் மதுரம்.

"நீயே கொடேன் மதுரம்! பத்தரை வரச் சொல்றேன்" என்றான் அவன்.

"அது முறையில்லே! நீங்கதான் கொடுக்கணும். நானும் வேணா கொடுக்கறப்போ உங்ககூட இருக்கேன்" என்றாள் அவள். அவள் மனம் புரிந்து சிரித்துக் கொண்டே அதற்குச் அம்மதித்தான் அவன். பத்தர் மகள் கலியாணத்திலும், சித்திரா பௌர்ணமித் திருவிழா, ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் - எல்லாவற்றிலுமாக ஒரு மாதம் கலகலப்பாயிருந்தது. அந்த மாதமும் அடுத்த முகூர்த்த நாட்கள் உள்ள மாதங்களுமாக மதுரத்துக்கு நிறையக் கச்சேரிகள் இருந்தன. எவ்வளவு பணம் வந்தாலும், வீட்டுச் செலவு, உடன் வாசிக்க வருபவர்கள் பணம் போக ஒரு பகுதியை ஆசிரமத்துக்குக் கொடுத்து வந்தாள் அவள். கடனுக்கும் வட்டி கொடுக்க வேண்டியிருந்தது.

"தேசம் விடுதலை அடைகிறவரை பிரம்மச்சாரியாயிருக்க ஆசைப்பட்டவனை உன்னைத் தொடாமலே நீ குடும்பஸ்தனாக்கிவிட்டாய் மதுரம்? நீ பண்ணினது உனக்கே நல்லாயிருக்கா?" - என்று ஒரு நாள் அவளிடம் வேடிக்கையாகக் கேட்டான் ராஜாராமன். அவள் சிரித்தாள்.

"உங்க சத்தியத்துக்கு நான் துணையிருக்கிறேனே தவிர அதைப் பங்கப்படுத்தணும்னு நெனைக்கக்கூட இல்லே."

"ஆனாலும், உனக்கு நெஞ்சழுத்தம் அதிகம்..."

"உங்களுக்கு மட்டும் எப்பிடியாம்?

-இதைக் கேட்கும் போது அவள் முகம் மிக மிக அழகாயிருந்ததை ராஜாராமன் கவனித்தான்.

தினம் மாலையில் கமிட்டி அலுவலகத்துக்குப் போவது அந்நாட்களில் அவனது வழக்கமாயிருந்தது. அப்படிப் போயிருந்த ஒரு நாளில் - விருதுப்பட்டி காமராஜ் விடுதலையாகி வந்து, தான் சிறையிலிருந்தபோது தேர்ந்தெடுக்கப்பட்ட முனிசிபல் சேர்மன் பதவியை ஒரே ஒரு நாள் வகித்த பின், ராஜிநாமா செய்துவிட்ட சமாசாரம் வந்தது. எல்லோருக்கும் வியப்பை அளித்த செய்தியாயிருந்தது அது. பதவியை விடத் தேசபக்தி பெரிதென்றெண்ணிய அந்த மனப்பான்மையைக் கொண்டாடி, நண்பர்களிடம் சொல்லிச் சொல்லி ஆச்சரியப்பட்டான் அவன்.

அத்தியாயம் - 12

ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்திரண்டாம் ஆண்டின் தொடக்கத்தில், நின்று போயிருந்த 'ஹரிஜன்' பத்திரிக்கையை மகாத்மா மீண்டும் தொடங்கினார். அடுத்து டெல்லியில் ஸ்டாபோர்டு கிரிப்ஸைச் சந்தித்துப் பேசினார். வார்தாவில் கூடிய அ.இ.கா.க கூட்டத்தில் மகாத்மாவின் வாய்மொழியாக 'ஜவஹர்லால் நேருவே என் வாரிசு' என்ற வாக்கியம் வெளியாயிற்று. ஹரிஜன் இதழ்களில் 'வெள்ளையனே வெளியேறு' என்ற கருத்தைப் பல்வேறு கோணங்களிலும் வற்புறுத்தி எழுதத் தொடங்கினார் மகாத்மா. அலகாபாத்தில் அகில இந்திய காங்கிரஸ் கூடியது. பாகிஸ்தான் பிரிவினை பற்றி ராஜாஜி கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடையவே, அவர் அ.இ.கா.கமிட்டியிலிருந்து ராஜிநாமா செய்து விலகினார். காங்கிரசின் எல்லாத் தொடர்புகளையும் விட்டார். அதற்கு முன்பே காங்கிரஸிலேயே ஓரளவு தீவிரமான மனப்பான்மை உள்ளவர்கள் சுபாஷைத் தலைவராகக் கருதத் தொடங்கியிருந்தனர். 'பார்வார்டு பிளாக்' உதயமாகியது. தமிழ்நாட்டில் முத்துராமலிங்கத் தேவர் அதில் சார்பு பெற்றிருந்தார். 1939-ல் சுபாஷ் மதுரை வந்திருந்த போதே இந்த அணி பிரிந்து விட்டது.

1942-ஆம் ஆண்டு ஆகஸ்டு 8ந் தேதி அபுல்கலாம் ஆசாத் தலைமையின் கீழ் அ.இ.கா.க. பம்பாயில் கூடி 'வெள்ளையனே வெளியேறு' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் விளைவுக்குப் பயந்த அரசாங்கம் கொடுமையான அடக்கு முறையை மேற்கொண்டது. மகாத்மா உள்பட எல்லாத் தலைவர்களும் கைது செய்யப்பட்டு எங்கெங்கோ கொண்டு போகப் பட்டார்கள். காரியக் கமிட்டி அங்கத்தினர்கள் அனைவரும் கைதாகிப் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர். தலைவர்கள் யார் யார் எந்த எந்த இடங்களில் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தார்கள் என்ற செய்தியும் பொதுமக்களுக்குத் தெரியாமல் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. 'செய் அல்லது செத்துமடி' என்ற இரகசிய அறிவிப்பு எல்லாக் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் கிடைத்திருந்தது. அஹிம்சையிலிருந்து ஆவேசத்திற்குத் திரும்பும் திருப்புமுனை இக்காலத்தில் காங்கிரசுக்கு நேர்ந்தது. யுகப் புரட்சிபோல் ஓர் போர் பிறந்தது. நாடெங்கும் சுதந்திர ஆவேசக் கனல் மூண்டது. அன்பையும், அகிம்சையையும் நம்பிய மகாத்மாவின் சாந்தக் குரலே, 'செய் அல்லது செத்துமடி', 'வெற்றி! அல்லது இறுதிவரை போராட்டம்' என்று கனலாக மாறி ஒலித்தபோது, அந்தக் குரலின் சத்தியவேட்கையை நாடுமுழுவதும் புரிந்து கொண்டு கிளர்ந்து எழுந்தது. சர்க்காரும் பதிலுக்குக் கொதித்து எழவே போராட்டம் மகாத்மா எதிர்பார்த்ததற்கு மாறாக வன்முறைகளுக்குத் திரும்பி விட்டது. தேசபக்தர்கள் அங்கங்கே தடியடிக்கும், சித்திரவதைக்கும், மானபங்கத்துக்கும் ஆளாயினர். ஒரு பாவமுமறியாத பொதுமக்கள் சுட்டுத் தள்ளப்பட்டனர். நாடெங்கும் ஒரு பஞ்சாப் படுகொலைக்குப் பதில் பல பஞ்சாப் படுகொலைகளை அரசாங்கம் நடத்தத் தொடங்கியது. பெண் தேசபக்தர்கள் சொல்லக் கூசும் மானபங்கங்களுக்கு ஆளாயினர். இரண்டொரு மாகாணங்களில் ஒரு போர் நடத்துவது போலவே விமான மூலம் வெடி குண்டுகளை வீசி அடக்க முயன்றது அந்நிய அரசாங்கம். பொதுமக்களுக்கும், தேசபக்தர்களுக்கும் வேறு வழியில்லாததால் பழிக்குப் பழி வாங்கும் அதீத வெறி மூண்டது. பாலங்கள் தகர்க்கப்பட்டன. ரயில் தண்டவாளங்களை அழிக்க முற்பட்டனர். எங்கும் அமைதியின்மை உருவாயிற்று. தேசபக்தர்கள் அமைதியாக நடத்த முயன்ற கூட்டங்களையும் அடி உதையின் மூலம் அடக்க முற்பட்ட சர்க்காரின் வெறியினால், அதுவரை அமைதியையும் சாத்வீகத்தையும் நம்பிக் கொண்டிருந்தவர்களும் ஆவேசமான காரியங்களில் இறங்கும்படி ஆயிற்று. இப்படி 1942 போராட்டம் ஒரு சுதந்திர மகாயுத்தமாகவே ஆகிவிட்டது.

பம்பாயில் தலைவர்களும், தேசபக்தர்களும் கைதான செய்தி மதுரையில் பெரும் குமுறலையும் பரபரப்பையும் உண்டாக்கியது. உடல் நலம் குன்றிப் படுத்த படுக்கையாயிருந்த ரத்தினவேல் பத்தரைப் போய்ப் பார்த்துவிட்டுக் கமிட்டி ஆபீஸுக்குச் சென்ற ராஜாராமன், அங்கே சிதம்பர பாரதியோடு பேசிக் கொண்டிருந்தபோது, போலீஸார் வந்து இருவரையுமே கைது செய்தார்கள். மறுநாள் மதுரை நகரமே அமளி துமளிப்பட்டது. தேசபக்தியின் ஆவேசம் எங்கும் பொங்கி எழுந்தது. கடை அடைப்பு, வேலை நிறுத்தம் என்று எதிர்ப்புக்கள் எழுந்தன. திலகர் சதுக்கத்தில் மாபெரும் கூட்டம் திரண்டது. கூட்டத்தைச் சுற்றி ஒரே போலீஸ் மயம். அவசர அவசரமாக 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேங்காட்டுப் பொட்டலில் கூடிய கூட்டமோ கலையவே இல்லை. வந்தே மாதரம் செட்டியாரும், சீநிவாசவரதனும் கூட்டத்தை அமைதிப் படுத்தி வன்முறைகளைத் தவிர்க்க முயன்றார்கள். போலீஸார் தடியடியில் இறங்கிக் கூட்டத்தைக் கலைக்க முற்படவே கூட்டம் கல்லெறியில் இறங்கியது. போதும் போதாத குறைக்கு ஸ்பெஷல் ரிஸர்வ் போலீஸ் வேறு லாரி லாரியாக வந்தது. பத்து பன்னிரண்டு தேச பக்தர்களுக்குப் பயங்கரமான ரத்தக் காயங்கள் ஏற்பட்டன. ஐந்தாறு பேர் கூட்டத்திலேயே உயிர் நீத்தனர். குலசேகரன் பட்டணத்தில் ஓர் அதிகாரி கொலையே செய்யப்பட்டார். மதுரையிலோ மேங்காட்டுப் பொட்டல் தடியடி உள்ளூர்த் தேச பக்தர்களிடையே ஆத்திரமூட்டியது.

அதனால் மறுநாள் நகரில் பெரும் கொந்தளிப்பு மூண்டது. போலீஸ் லாரிகள் நுழைய முடியாதபடி பெரும் பெரும் கற்களாலும், குப்பைத் தொட்டிகளாலும் தெரு முனைகளை அடைத்துவிட்டுச் சின்னக்கடைவீதித் தபாலாபீஸுக்கும், தெற்குச் சித்திரை வீதித் தபாலாபீஸுக்கும் நெருப்பு வைக்கப்பட்டது. வைத்தியநாதய்யர் முதலியவர்களும் கூட ஆவேசமடைந்தனர். 144 உத்தரவு யாருக்குமே நினைவில்லை. நகரமே போர்க்களமாகிவிட்டது. கட்டுப்பாட்டை உண்டாக்க முடியாமற் போகவே, நகர் மிலிடரி கண்ட்ரோலில் ஒப்படைக்கப்பட்டது. வைத்தியநாதய்யர் உட்படப் பலர் கைதாகினர். எல்லா தேசபக்தர்களும் பாதுகாப்பில் வைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டனர். அடக்குமுறை முழுமூச்சாக நடைபெற்றது. மதுரை பழைய மதுரையாகச் சில மாதங்கள் ஆயின. 'சிப்பாய்க் கலகத்துக்குப் பின்பு நடந்த மாபெரும் சுதந்திர யுத்தமே இதுதான்' என்று கூறுமளவுக்கு இப்போராட்டம் முக்கியமாய் இருந்தது.

மதுரையில் அதே வருடம் அக்டோபர் இரண்டாந்தேதி காந்தி ஜயந்தி அன்று கத்ர்க்கொடியுடன் ஊர்வலம் சென்ற தொண்டர்களையும் இரு பெண்மணிகளையும் போலீஸார் பிடித்து லாரிகளில் ஏற்றிக் கொண்டு போய்த் தொலைவில் நடுக்காட்டில் இறக்கிவிட்டு, எல்லாருடைய ஆடைகளையும் அபகரித்துவிடவே மீண்டும் கொந்தளிப்பு மூண்டது. அந்த ஈனச்செயலைச் செய்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மீது அக்கினித் திராவகம் கொட்டப்பட்டது. காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த முக்கியமானவர்களும், தொண்டர்களும் கைதாகி விட்டதால் வெளியே இயக்கத்துக்கு ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. அன்றைய நிலையில் அது தவிர்க்க முடியாததாயிருந்தது. காங்கிரஸ் சோஷலிஸ்டுகளாகிய ஜெயப்பிரகாஷ் நாராயணன், அச்சுதப்பட்டவர்த்தன், அருணா அஸப் அலி, ராம் மனோகர் லோகியா, அசோக் மேத்தா போன்றவர்கள் மறைவாக இருந்து இந்த இருண்ட கால கட்டத்தில் இயக்கம் அழிந்து விடாமல் சுதந்திர வேள்வித் தீயைக் கனிய வைத்துக் கொண்டிருந்தனர். இவர்களைத் தவிர அப்போது சிறை செல்லாமல் வெளியே இருந்தவர்கள் ராஜாஜியும், புலாபாய் தேசாயுமே.

இதே சமயத்தில் மற்றொரு நம்பிக்கை ஒளியும் பளிச்சிட்டது. கல்கத்தாவில் பாதுகாப்புக் கைதியாயிருந்த சுபாஷ்சந்திரபோஸ், 'குவிட் இண்டியா' இயக்கத்துக்கு முன்பே எப்போதோ எப்படியோ தப்பி ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும் போய், ராஷ்பிகாரி போஸின் உதவியோடு இந்திய சுதந்திர அரசாங்கத்தை ஸ்தாபித்திருந்தார். இந்திய தேசிய ராணுவமும், ஜான்சிராணிப் படையும் அவர் தலைமையில் உருவாயின. அந்தமான், நிகோபார் தீவுகள் ஐ.என்.ஏ. வசப்பட்டன. திரிபுரா காங்கிரஸில் கருத்து முறிவு ஏற்பட்டிராவிட்டால் சுபாஷ் இப்படிப் போய் ஒரு சாதனை புரிந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிராது தான். கருத்து வேற்றுமையும் கூட நல்லதாயிற்று.

கைது செய்யப்பட்ட ராஜாராமன் முதலில் வேலூர்ச் சிறையிலே வைக்கப்பட்டிருந்தான். பின்பு அங்கிருந்து நாகபுரி மூலமாக அமராவதி சிறைக்குக் கொண்டு போகப்பட்டான். அமராவதியில் மாட்டுக் கொட்டகை போன்ற ஓர் இடத்தில் அடைக்கப்பட்ட தேசபக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். எல்லாச் சோதனைகளின் போதும் 'வந்தேமாதர' கோஷமும், 'மகாத்மா காந்திக்கு ஜே!' - என்ற தாரக மந்திரமுமே அவர்களுக்குத் துணையாயிருந்தன. அமராவதிச் சிறைவாசம் கொடுமையின் எல்லைகளைக் கொண்டதாயிருந்தது. கைதிகள் கடிதம் எழுதவோ, பெறவோ முடியாமல் அதிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. சுகாதார நிலையோ படுமோசமாயிருந்தது. ஜெயில் அதிகாரிகளுக்கும் வார்டன்களுக்கும் மராத்தி மட்டுமே பேசத் தெரிந்திருந்தது. சத்யாக்கிரகிகளில் பலருக்குத் தமிழும், ஆங்கிலமுமே தெரிந்திருந்தன. அதனால் பல குழப்பங்களும் நேர்ந்தன. சிறை மேலதிகாரியாயிருந்த ஸ்காட் என்ற ஆங்கிலேயன் மிகமிகக் கொடுமையாக நடந்து கொண்டான். ராஜாராமனைப் பொறுத்த வரையில் மதுரையைப் பற்றி எதுவுமே தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு தீவுக்கு நாடு கடத்தப்பட்டு விட்டது போல ஆகிவிட்டது நிலைமை. யாரைப் பற்றியும் எதுவும் தெரிந்து கொள்ள முடியாது போயிற்று. மழைக்காலத்தில் கடுமையான அடைமழை, வெய்யில் காலத்தில் கடுமையான வெப்பம் என்று அமராவதியின் சூழ்நிலை இருந்தது. ராஜாராமனின் உடல் நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. நரக வேதனை அனுபவிப்பது போல நாட்களை ஒவ்வொன்றாக எண்ண வேண்டியிருந்தது. மதுரம் எப்படித் தவிப்பாள் என்பதை ஒவ்வொரு விநாடியும் அவன் உணர்ந்தான். ஆறுதல் கூற முடியாமல் பத்தர் தளர்ந்து ஒடுங்கிப் படுத்துவிட்டார். பிருகதீஸ்வரனும், முத்திருளப்பனும், குருசாமியும் ஆசிரமவாசிகளாகி, மாந்தோப்பிலேயே தங்கி விட்டார்கள். மதுரத்தைப் பொறுத்தவரை மதுரை நகரமே சூனியமாகிவிட்டது போலிருக்குமென்பதை அவன் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் நிலைமையைப் பல நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தே உணர்ந்தான் அவன்.

சிறையில் உடனிருந்த மற்றவர்களில் பலர் குடும்பஸ்தர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எத்தனை எத்தனை குடும்பக் கவலைகளோடு மனம் வெந்து கொண்டிருப்பார்கள் என்று நினைத்த போது தன் கவலையை அவனால் மறந்து விட முடிந்தது. முன்பு ஒரு முறை இதே போல் சிறை வாசத்தின் போது மதுரத்தையே நினைத்துப் பாடிய அந்த வரிகள் ஞாபகம் வந்தன.

எல்லையிலாததோர் காட்டிடைநள்
இருளென்றும் ஒளியென்றும்
சொல்ல ஒணாததோர் மயக்கத்தே

- தான் இப்போது இருக்கும் நிலையே பாடலில் பாடியிருப்பது போல் தான் என்று தோன்றிய போது மனத்துக்குள் சிரித்துக் கொண்டான் அவன். சோகமும் தனிமையும் மனத்தை ரம்பமாய் அறுக்கும் சில பொறுக்க முடியாத வேளைகளில் எங்கிருந்தோ மங்கலாக வீணையை மீட்டும் ஒலியும் 'தெலியலேது ராமா' என்ற குரலும் காதருகே வந்து ஒலிப்பது போல் பிரமை ஏற்பட்டது அவனுக்கு. அந்தக் குரலில் பவ்யமும், பசியும், இனிமையும், அன்பும், அனுராகமும் அவன் இதயத்தையே குளிர்விப்பனவாயிருந்தன.

அமராவதி சிறையில் அவனோடு இருந்த மதுரைத் தேச பக்தர்களில் சிலர் அவனுக்குப் பின் கைதானவர்கள். அவர்கள் மதுரையிலும், நெல்லையிலும், கோயம்புத்தூரிலும் நடந்த மாபெரும் போராட்ட நிகழ்ச்சிகளையும் போலீஸாரின் அடக்குமுறையையும் விவரித்துக் கதை கதையாகச் சொன்னார்கள். தந்திக் கம்பிகள் அறுத்தல், ரயில் தண்டவாளத்தைத் தகர்த்தல், பாலங்களுக்கு வெடி வைத்தல், தபாலாபீஸுக்குத் தீ என்று சுதந்திர ஆவேசத்தில் பல பெரிய பெரிய ஆத்திரமான காரியங்கள் நடந்திருப்பது தெரிந்தது. 'டூ ஆர் டை' என்ற மகாத்மாவின் வாசகம் ஒரு குமுறலையே கிளப்பியிருந்ததை அவன் உணர்ந்தான். சாத்வீகத்தை நம்பியே பழகிய தலைமையும் 'வெற்றி அல்லது மரணம்' என்ற நிலைக்கு வந்துவிடும்படி நேர்ந்துவிட்ட சூழ்நிலையை அவன் சிறையில் பல நாட்கள் தொடர்ந்து சிந்தித்த வண்ணமிருந்தான். கண்ணீர் விட்டு வளர்த்த சுதந்திரப் பயிரைச் செந்நீர்விட்டுப் பெற வேண்டிய நிலையும் வந்துவிட்டது குறித்து நிதானமாக யோசித்தான் ராஜாராமன்.

மதுரை மேங்காட்டுப் பொட்டல் தடியடியில் உயிர் நீத்தவர்களையும் அக்கினித் திராவக வழக்கில் கைதானவர்களையும் பற்றி அறிந்த போது வேதனையாயிருந்தது. சொந்தக் கவலைகளும், நாட்டின் சுதந்திர இயக்கத்தைப் பற்றிய கவலைகளுமாக அமராவதி சிறையில் தவித்தான் அவன்.

ராஜாராமனும், அவனைப் போலவே அமராவதியிலிருந்த பிற தேசபக்தர்களும் விடுதலையாகு முன், இந்த இரண்டரை ஆண்டுச் சிறைவாசக் காலத்திற்குள், நாட்டில் பல நிகழ்ச்சிகள் அவர்களை அறியாமலே நடந்து விட்டன. எதிர்காலத்துக்கு மிகவும் பயன்படவல்ல சத்தியமூர்த்தி போன்றவர்களின் மரணம் தமிழ்நாட்டைத் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது.

இந்திய சிப்பாய்களை வைத்து ஆங்கில ஏகாதிபத்தியத்தைத் தோற்கச் செய்து டெல்லி செங்கோட்டையைப் பிடிக்கத் திட்டமிட்ட இந்திய தேசிய இராணுவமும் அதன் தலைவர் சுபாஷும் தீரச் செயல்கள் பலவற்றை எட்டாத தொலைவிலிருந்து சாதித்தனர். காந்தியடிகளிடம் தமக்கு அபிப்பிராய பேதம் ஏற்பட்ட போதிலும், அவரையே தம் தேசப்பிதாவாகக் கருதுவதாக நேதாஜி சுபாஷ் அரிய செய்தியை ஒலி பரப்பிய காலத்தில், இந்தியாவில் அதைக் கேட்டவர்களுக்கெல்லாம் மெய்சிலிர்த்தது. இளைஞர்களின் நெஞ்சங்களில் 'ஜெய் ஹிந்த்' என்ற கோஷம் எதிரொலித்துக் கொண்டிருந்த காலம் அது.

பின்னால் இந்திய தேசிய ராணுவம் சரணடைய நேரிட்டதும், புலாபாய் தேசாயின் வாதத்திறமையால் சரண் அடைந்து கைதான, இ.தே.ரா. வீரர்கள் பலர் விடுதலை பெற்றதும், நேதாஜி இருக்கிறா இல்லையா என்பதே புரியாத மர்மமும் பாரத நாட்டைக் கலங்க வைக்கும் நிகழ்ச்சிகளாக அமைந்தன.

மகாத்மா காந்தி புனாவில் ஆகாகான் மாளிகையிலும் மற்றுமுள்ள காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் அகமத் நகர் கோட்டையிலும் சிறை வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சிறைவாசத்தைத் தொடங்கும்போதே தமது உயிருக்குயிரான மகாதேவ தேசாயை இழந்து வருந்திய மகாத்மாவுக்கு அடுத்த பேரிடியாக கஸ்தூரி பாய் காந்தியின் மரணமும் நேர்ந்தது. அக்காலத்தில் சிறைப்படாமல் காங்கிரஸில் கருத்து வேறுபட்டு வெளியே இருந்து - முடிந்ததைச் செய்தவர்கள் புலாபாய் தேசாயும் ராஜாஜியுமே. கஸ்தூரிபாய் காந்தியின் மரணத்துக்கு முன்பே நாட்டில் நடைபெறும் கொடுமைகளைக் கேட்டு மனம் நொந்து, 21 நாள் உபவாசமும், உண்ணாவிரதமும் இருந்து தளர்ந்திருந்த காந்தியடிகளின் உடல்நிலை துயரங்களின் கனம் தாங்காது மேலும் மேலும் தளர்ந்தது. உடனிருந்தவர்கள் வருந்தினர்.

முன்பு வேலூரிலும், கடலூரிலும், திருச்சியிலும் நண்பர்கள் பார்க்க வந்தது போல் இங்கு அமராவதிக்கு ராஜாராமனை யாரும் பார்க்க வரவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தது. எல்லாக் கட்டுப்பாடுகளையும் மீறி எப்படியோ மகாதேவ தேசாயின் மரணமும், அன்னை கஸ்தூரிபாய் காந்தியின் மரணமும் தெரிந்த வேளைகளில் ராஜாராமன் கண் கலங்கினான். எல்லா தேசபக்தர்களையுமே அதிரச் செய்தன, அந்தத் துயரச் செய்திகள். ஊரைப் பற்றியும், நண்பர்களைப் பற்றியும், வாசகசாலையைப் பற்றியும், ரத்தினவேல் பத்தரின் உடல் நிலையைப் பற்றியும் பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல் பழைய சம்பவங்களை நினைத்து நினைத்து மனம் நெகிழ்ந்து உருகினான் ராஜாராமன். காலம் மிகவும் மெதுவாக நகர்வது போல் சிறைவாசம் மிக வேதனையாயிருந்தது.

சிறையில் ராஜாராமனுக்கு ஒவ்வொரு சாயங்காலமும் கடுமையான தலைவலி வேறு வந்து ராத்தூக்கமே இல்லாமற் செய்து கொண்டிருந்தது. சரியான வைத்திய உதவிகள் கிடைப்பதற்குச் சிறை அதிகாரி உதவவில்லை. 'ஒற்றைத் தலைவலி' என்று அதைச் சொன்னார்கள் நண்பர்கள். அது வருகிற நேரம் நரக வேதனையாயிருந்தது. வார்டனிடம் கெஞ்சிக் கதறி, சட்டியில் கொஞ்சம் வெந்நீர் வரவழைத்துச் சக தேச பக்தர் ஒருவர் வெந்நீரில் துணியை நனைத்து நெற்றியில் ஒத்தடம் கொடுத்து வந்தார். நரக வேதனையாக அந்த வலிவரும் போதெல்லாம் இப்படி ஒரு சாதாரண வைத்திய உதவிதான் அவனுக்குக் கிடைத்தது. முன்பு மதுரம் நெற்றியில் சாம்பிராணிப் பற்று அறைத்துப் போட்ட சம்பவம் இந்தத் தலைவலி வரும்போதெல்லாம் அவனுக்கு நினைவு வந்து மனத்தை உருக்கியது. தெரிந்த மனிதர்களும், வேண்டியவர்களும் அருகே இல்லாமல் தனிமை என்ற வேதனையில் உருகி இளைத்துக் கொண்டிருந்தான் அவன். அறிந்தவர்களும், தெரிந்தவர்களும், வேண்டியவர்களுமாகிய தேசபக்தர்கள் பலர் உடனிருந்தாலும், பிருகதீஸ்வரனைப் போல் அன்பும் பாசமும், சகோதரத்துவப் பான்மையும் நிறைந்த ஒருவர் அருகில் இல்லாததால் அவன் தவித்துப் போயிருந்தான்.

1944-ம் வருடம் மே மாதம் முதல் வாரத்தில் மகாத்மா காந்தி விடுதலை செய்யப்பட்டார். செப்டம்பர் மாதம் முகம்மது அலி ஜின்னாவுடன் பாகிஸ்தான் சம்பந்தமாகப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.

யுத்தம் ஒரு விதமாக முடிந்தது. இங்கிலாந்தில் சர்ச்சில் ஆட்சி போய் அட்லி சர்க்கார் வந்தது. உலக அரசியல் நெருக்கடியை மனதில் கொண்டும், நேதாஜி போன்ற தீவிரவாதிகளின் செயல் அதிர்ச்சியை அளித்த்திருந்ததாலும், யுத்தத்தில் இந்திய மக்கள் செய்த அபார உதவியை நினைத்தும் அட்லி சர்க்கார் தன் மனப்பான்மையையே மாற்றிக் கொண்டிருந்தது. ஒரு பார்லிமென்ட் தூது கோஷ்டியை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கவும், சமரசம் செய்து கொள்ளவும் நினைத்தது.

நாட்டில் மாதர் நலனுக்குப் பயன்படுத்தும் பொருட்டு 'கஸ்தூரிபாய் காந்தி நிதி' ஒன்று திரட்டப்பட்டது. ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு மேல் சேர்ந்தது அந்த நிதிக்கு.

புதிதாக வேவல்துரை வைஸ்ராயாக வந்தார். 1942 போராட்டத்தில் கைதான தலைவர்கள் நாற்பத்தைந்தாம் ஆண்டின் முற்பகுதியில் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டார்கள். ராஜாராமனும் விடுதலையானான்.

நாற்பத்தைந்தாம் ஆண்டில் தமிழ்நாட்டுக் காங்கிரஸில் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்தது. நாற்பத்திரண்டிலேயே காங்கிரஸிலிருந்து ராஜிநாமா செய்திருந்த ராஜாஜி திடீரென்று திருச்செங்கோட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பு வந்ததும், அந்தத் தேர்தல் செல்லாதென்று மறுக்கப்பட்டதோடு - 1945 அக்டோபர் 30-ந் தேதி திருப்பரங்குன்றத்தில் ஒரு மகாநாடு கூட்டுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காங்கிரஸ் என்ற மகாவிரதத்தில் எப்போதோ ஆரம்பமாகியிருந்த சிறிய பிளவு தமிழ்நாட்டில் இப்போது ஒரு சலனத்தையே உண்டாக்கிவிட்டது. திருப்பரங்குன்றம் மகாநாடு தமிழ்நாட்டுக் காங்கிரஸில் ஒரு திருப்பத்தையே உண்டாக்குவதாக வந்து வாய்த்ததை யாவரும் உணர்ந்தனர்.

திருப்பரங்குன்றம் மகாநாட்டில் முத்துராமலிங்கத் தேவர் கொடியேற்றினார். பேட்டை முத்துரங்க முதலியார் தொடங்கி வைத்தார். கல்லிடைக்குறிச்சி யங்ஞேஸ்வரசர்மா மகா நாட்டுக்குத் தலைமை தாங்கினார். திருச்செங்கோடு தேர்தல் செல்லாதென்று கண்டித்துப் பலர் பேசினார்கள். அத் தேர்தலைக் கண்டித்துத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மறுநாள் காரியக் கமிட்டிக் கூட்டமும் நடைபெற்றது. இந்தியா முழுவதும் எந்த ஒற்றுமைக்காகச் சுதந்திரப் போராட்டம் என்ற நோன்பில் இறங்கியதோ அந்த நோன்பில் - அந்த நோன்பின் பயன் விளையுமுன்பே தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள் பிரிய வழி ஏற்பட்டு விட்டது. இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தி விட்டதற்காகப் பல மூத்தவர்கள் ராஜாஜி மேல் கோபப்பட்டார்கள். சிலர் ராஜாஜி மேல் தப்பில்லை என்று விலகியும் போனார்கள். விலகிப் போனவர்கள் ராஜாஜிக்கு ஆதரவாகச் சீர்காழியில் ஒரு கூட்டம் போட்டார்கள். கோஷ்டி மனப்பான்மை வளரலாயிற்று.

ராஜாராமன் விடுதலையாகி மதுரைக்குத் திரும்பி வந்த போது அவன் எதிர்பாராத பல மாறுதல்கள் அங்கே நேர்ந்திருந்தன. சில மாறுதல்கள் அவன் அநுமானித்தவை தான் என்றாலும், பல மாறுதல்கள் அவன் அநுமானிக்காதவை என்பதோடு மட்டும் அல்லாமல், அவனுக்கு அதிர்ச்சியளிப்பவையாகவும் இருந்தன. தாடியும் மீசையுமாக இளைத்த உடம்பும், குழி விழுந்த கண்களுமாக அவன் மேலக் கோபுர வாசலில் வந்து நின்ற போது, தெரிந்தவர்களுக்கும் கூட அவனை முதலில் அடையாளம் புரியவில்லை. நீண்ட காலத்துக்குப் பின் மதுரை மண்ணை மிதிக்கும் சந்தோஷம் உள்ளே இருந்தாலும் அவன் மனத்தில் இனம் புரியாத கலக்கங்கள் ஊடாடின. நெஞ்சு எதற்காகவோ ஊமைத் துயரத்தால் உள்ளேயே புலம்பியது. மேலச் சித்திரை வீதியில் வடக்கு நோக்கித் திரும்பித் தெரு முனையில் போய்ச் சிறிது தொலைவு நடந்ததுமே அவனுக்குத் 'திக்' கென்றது. வாசகசாலை இருந்த மாடியே இல்லை; ஒரு புதிய பெரிய மாடிக் கட்டிடம், அந்த இடத்தில் ஒரு பல சரக்கு மளிகைக் கடை வந்திருந்தது. மாடியில் ஏதோ ஒரு ஃபவுண்டரி இரும்பு சாமான்கள், பம்பு செட் விற்கும் கம்பெனியின் போர்டு தெரிந்தது. சந்தில் நுழைந்து, மதுரத்தின் வீட்டுக்குப் போய்ப் பார்க்கலாமா, மளிகைக் கடையிலேயே விசாரிக்கலாமா என்று அவன் கால்கள் தயங்கி நின்றது. கில்ட் கடையும், வாசக சாலையும் அங்கே இல்லாததை அவன் ஏமாற்றத்தோடும் அதிர்ச்சியோடும் எதிர் கொண்டான். ஓரிரு கணங்கள் ஒன்றுமே புரியாமல் அவன் மனம் குழம்பியது. தலை சுற்றியது. யாரை விசாரிப்பதென்றும் விளங்கவில்லை. மனத்தைச் சமாளித்துக் கொண்டு மளிகைக் கடையில் விசாரித்த போது, ரத்தினவேல் பத்தர் காலமாகி விட்ட செய்தியும் கில்ட் கடை தெற்காவணி மூல வீதிக்கு மாறிப் போயிருப்பதும் தெரிந்தது. வாசகசாலையைப் பற்றி அவர்களுக்கு ஒரு விவரமும் தெரியவில்லை. சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருந்த ராஜாராமனுக்கு மறுபடியும் சிறைக்கே போய்விட்டது போலிருந்தது. பத்தருக்காக அவன் கண்களில் நீர் நெகிழ்ந்தது. மதுரத்தைப் பற்றி மளிகைக் கடையில் விசாரிப்பது உசிதமில்லை என்று எண்ணியபடி பக்கத்து ஒண்ணாம் நம்பர்ச் சந்தில் நுழைந்தவன், அவளுடைய அந்த வீட்டையும் திகைப்போடு பார்த்தான். காரணம், அந்த வீடும் இடித்துப் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. வேலை செய்து கொண்டிருந்த ஆட்களுக்கு மதுரத்தைப் பற்றித் தெரியுமோ, தெரியாதோ என்று தயங்கி நின்றான் அவன். அவளே வேறு இடத்திலிருந்து கொண்டு வீட்டை இடித்துக் கட்டுகிறாளா, அல்லது வேறு யாராவது விலைக்கு வாங்கிக் கட்டுகிறார்களா என்பதையும் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லாம் குழப்பமாகவும், தன்னைத் தொடர்ந்து ஏமாற்றம் அடையச் செய்யவுமே நடப்பது போலவும் தோன்றின. அநாதை போல் திரும்பி வந்து சித்திரை வீதியில் நின்று மீனாட்சி கோவில் கோபுரங்களைப் பார்த்தான் அவன். திடீரென்று அந்தக் கோபுரங்களே இல்லாத மதுரையைக் காண்பது போல் அவன் கண்கள் பிரமையடைந்தன. கண்களுக்கு முன் எதுவுமே தெரியாமல் இருண்டுவிட்டது போலிருந்தது. மறுபடியும் மளிகைக் கடைக்காரரிடம் சென்று பத்தருடைய கில்ட் கடையைத் தெற்கு ஆவணி மூலவீதியில் எந்த இடத்திற்கு மாற்றியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முயன்றான் ராஜாராமன். மளிகைக் கடையில் இருந்தவர்களுக்கு அந்த விவரம் ஒன்றும் தெரியவில்லை.

உடனே செம்பியன் கிணற்றுச் சந்துக்குப் போய் பத்தர் குடியிருந்த வீட்டில் தேடினான். பத்தர் குடும்பமும் இப்போது அங்கே இல்லை என்று தெரிந்தது. பத்தர் காலமானதுமே அந்தக் குடும்பத்தினர் தெற்கு மாசி வீதிப் பக்கம் மறவர் சாவடிக்கு அருகே எங்கோ குடிபோய் விட்டதாகத் தெரிவித்தார்கள். கடையை இடம் மாற்றியது போல் வீட்டையும் மாற்றியிருந்தார்கள். ஒன்றும் புரியாமல் ராஜாராமனுக்குத் தலை சுற்றியது. நேரே ஆசிரமத்துக்கே போய்விட்டால் என்னவென்று தோன்றியது. இடங்களையும் காணாமல், தெரிந்த மனிதர்கள் என்ன ஆனார்கள் என்றும் புரியாமல் மதுரையின் வீதிகளில் அநாதை போல் சுற்றி அலைவதை விட ஆசிரமத்துக்கே போய்விடலாம் என்று தோன்றினாலும், எதற்கும் தெற்காவணி மூல வீதியில் ஒரு தடவை சுற்றிப் பார்த்து விடவும் ஆவலாயிருந்தது. சொந்த ஊரிலேயே ஒன்றும் புரியாமல் கண்களைக் கட்டி விட்டது போல் அநாதையாக அலைவது மனத்துக்கு வேதனையளித்தாலும், தெற்கு ஆவணி மூல வீதிக்கு மட்டும் ஒரு நடை போய்ப் பார்த்து விடுவதென்று புறப்பட்டான் அவன். ஆசிரமத்துக்குப் போய்விட்டால் மறுபடியும் இருபது மைலுக்கு மேல் திரும்பவும் உடனே எடுத்துக் கூட்டி மதுரைக்கு வர முடியாது. அதனால் கையோடு கில்ட் கடையைத் தேடிப் பார்த்து விடுவதென்ற முடிவுக்கு வந்திருந்தான் அவன். தெற்காவணி மூல வீதியில் எல்லா கில்ட் கடைகளும் ஒரு சந்தில் இருந்தன. எல்லாத் தங்கம், வெள்ளி, நகைக் கடைகளும் தெற்காவணி மூல வீதியிலேயே இருந்ததால் கில்ட் தொழிலில் ஓரளவு நிறைய சம்பாதிக்க அந்த இடமே ஏற்றதாயிருக்கும் என்று பத்தருடைய காலத்துக்குப் பின் அவருடைய மகன் நினைத்து இடம் மாறியிருக்க வேண்டும் என்று தோன்றியது.

தெற்காவணி மூல வீதியில் நினைத்ததை விடச் சுலபமாகவே பத்தரின் மகன் கடை வைத்திருந்த இடத்தைக் கண்டு பிடித்துவிட முடிந்தது. ரத்தினவேல் பத்தர் காலத்தில் இருந்ததைவிடக் கடை இப்போது பெரிதாகியிருந்தது. நிறைய ஆட்களும் வேலை பார்த்தனர். பத்தரின் மகன் ராமையாவுக்கு, இளைத்துத் தாடியும் மீசையுமாக வந்து நின்ற ராஜாராமனை முதலில் அடையாளமே புரியவில்லை.

"அப்பா காலம் ஆயிடுச்சு ராமையா! இனிமே அப்படி ஒரு நல்ல மனுஷனை நான் எந்தக் காலத்திலே பாக்கப் போறேனோ?" என்று ராஜாராமன் ஆரம்பித்த பின்பும் இவனை அவனுக்கு இனம் புரியவில்லை.

"என்னைத் தெரியலியா ராமையா! நாப்பத்திரண்டு ஆகஸ்டுலே அரஸ்டாகி ஜெயிலுக்குப் போனவன் இப்பத் தான் வரேன். வாசகசாலை என்ன ஆச்சு? அப்பா இன்னும் கொஞ்சம் காலம் படுத்த படுக்கையாகவே உயிரோட இருப்பார்னு பார்த்தேனே! அவருக்கு என்ன ஆச்சு?" என்று அவன் இன்னும் தெளிவாக அடையாளம் புரியும்படி சொன்ன பின் ராமையாவுக்குப் புரிந்தது.

ஆளை இனம் புரிந்ததும், "அடடே! நம்ம ராஜாராமன் சாரா! அடையாளமே புரியலையே சார்! எப்படி இருந்தவர் எப்படி ஆயிட்டீங்க?" என்று முகம் மலர்ந்தான் ராமையா.

"ஜெயிலுக்குப் போறதுக்கு முன்னே நீங்க அப்பாவை வந்து பார்த்திட்டுப் போனீங்களே; அப்பவே வைத்தியர் ஒரு வாரம் கூடத் தாங்கறது கஷ்டம்னாரு. ஆனா நீங்க வந்திட்டுப் போன மூணாவது நாளே அப்பா போயிட்டாரு. நீங்க ஜெயிலுக்குப் போயிட்டீங்கங்கிற விஷயமே எனக்குப் பின்னாடித்தான் தெரியும் சார்! ஆசிரமத்துக்குத் தாக்கல் சொல்லி அனுப்பிச்சேன். பிருகதீஸ்வரன் சார், முத்திருளப்பன் ஐயா, குருசாமி எல்லாரும் உடனே வந்தாங்க. அவங்க தான் நீங்க ஜெயிலுக்குப் போயிட்ட சங்கதியையே சொன்னாங்க. மதுரம் கூட வந்திரிந்திச்சு. பாவம்! அந்தப் பொண்ணு அப்பா போனதைத் தாங்கிக்க முடியாமே கதறிக் கதறி அழுதிச்சு."

"அதுசரி ராமையா, நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லலியே? வாசகசாலை என்ன ஆச்சு? மதுரத்தோட வீட்டை யார் இடிச்சுப் புதிதாகக் கட்றாங்க...? மதுரம் எங்கே இருக்கு இப்ப?"

"நீங்க போனப்புறம் என்னென்னமோ நடந்து போச்சு சார்! உள்ளர வாங்க சொல்றேன்."

ராஜாராமனின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. அவன் ராமையாவோட கடைக்குள் சென்றான். பட்டறை, வேலை செய்யும் ஆட்கள் எல்லாரையும் கடந்து பின்புறம் ஒழுகறைப் பெட்டி, பூஜைப் படங்கள் எல்லாம் வைத்திருந்த அறைக்கு ராஜாராமனை அழைத்துக் கொண்டு போனான் ராமையா. அந்த அறையில் தரை மேல் பாய் விரித்திருந்தது. ஒழுகறைப் பெட்டி, கணக்குப் பிள்ளை மேஜை, தராசு, தங்கம் உறைத்துப் பார்க்கும் கல் எல்லாம் வைத்திருந்த இடங்கள் போகப் பாயில் இரண்டு பேர் தாராளமாக உட்கார்ந்து பேச இடம் இருந்தது அங்கே.

"ரொம்பக் களைப்பாகத் தெரியறீங்க சார்? பையனை காப்பி பலகாரம் வாங்கியாறச் சொல்றேன். முதல்லே சாப்பிட்டுடுங்க. அப்புறம் பேசுவோம்," - என்ற ராமையாவிடம் ராஜாராமன் எவ்வளவோ மறுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. இட்லி, வடை, சுக்குமல்லிக் காப்பி எல்லாம் வந்தது. ராஜாராமனால் அப்போதிருந்த மனநிலையில் அவற்றை ருசித்துச் சாப்பிட முடியவில்லையானாலும், ராமையாவின் பிரியத்தைக் கெடுக்க மனமில்லாமல் ஏதோ சாப்பிட்டோம் என்று பேர் பண்ணி விட்டுக் கை கழுவினான். என்னென்ன நடந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள அவன் மனம் தவித்துக் கொண்டிருந்ததால், இட்லி காப்பியில் சுவை காண முடியவில்லை. சிறிது நேரம் தான் சொல்ல வேண்டியவற்றை எப்படித் தொடங்கி எப்படிச் சொல்லுவதென்று தெரியாமல் ராமையா தயங்கினான். பின்பு ராஜாராமன் கேள்வி மேல் கேள்வி போட்டுத் துளைக்கவே தன்னால் சொல்ல முடிந்தபடி எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினான் ராமையா.

"நீங்களும் ஜெயிலுக்குப் போயிட்டீங்க. அப்பா திடமாக நடமாடிக்கிட்டிருந்தாலும் இப்படியெல்லாம் ஆகியிருக்காது. கொஞ்ச நாள்லே அவரும் கண்ணை மூடிட்டதனாலே என்னென்னவோ நடந்து போச்சு. இப்ப நெனைக்கறதுக்கே சங்கடமாயிருக்கு. அப்பா இருந்திருந்தா இப்பிடி எல்லாம் நடந்திருக்காது. அவரும் போயிட்டார், நீங்களும் இங்கே இல்லே. பிருகதீஸ்வரன் சார், முத்திருளப்பன் ஐயா, குருசாமி டெயிலர் எல்லாரும் ஆசிரமத்தோட ஆசிரமமாத் தங்கிட்டாங்க. நீங்க ஜெயிலுக்குப் போயிட்டதனாலே மதுரம் மனசு நொந்து போய்க் கச்சேரிக்குப் போறதை ஒவ்வொண்ணா விட்டுடுச்சு. கச்சேரிக்குப் போகவும், பாடவும் அதும் மனசிலே உற்சாகமே இல்லே. பணம் வேணுமேங்கிறதுக்காகப் போன இரண்டொரு கச்சேரியும் நிரக்கலே. மனசு நிறைய வேதனை இருந்தா அந்த வேதனையோட எப்படி நல்லாப் பாட முடியும்? கச்சேரிக்குப் போகறது படிப்படியா நின்னுது. அது போதாதுன்னு அந்தக் கிழவி மங்கம்மாவும் அவ மாமனும் அப்பா போன ஆறுமாசத்துக்குள்ளே அடுத்தடுத்துச் சொல்லி வச்சாப்பல ஒவ்வொருத்தராப் போய்ச் சேர்ந்தாங்க. தனிமை அதைக் கொஞ்சம் கொஞ்சமா உருக்கிடிச்சு. எங்க வீட்டோட வந்து இருக்கச் சொல்லி நான் கெஞ்சினேன். அது கேட்கலே. ஆசிரமத்திலேயே வந்து தங்கச் சொல்லிப் பிருகதீஸ்வரன் சார் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாரு. அதையும் அது கேட்கலே. தனியா அத்தினி பெரிய வீட்டுலே ஒண்ணா நம்பர்ச் சந்திலே கிடந்து தானாகவே அங்கே அது வாடின வேதனையை எங்களாலே தாங்க முடியலே."

"கச்சேரி வருமானம் இல்லாததுனாலே, வீட்டு மேலே வாங்கியிருந்த கடனுக்கு வட்டியும் கொடுக்கப்படலே, வாசகசாலைக்கும் ரெண்டு மூணு மாசமா வாடகை நின்னு போச்சு. வீட்டுக்காரன் ஏற்கெனவே ரொம்பக் கோபமாயிருந்தான். அவனுக்குக் கொஞ்சம் ஜஸ்டிஸ் பார்ட்டி அநுதாபம் உண்டு. வாடகையும் நின்று போகவே, வாசக சாலையைக் காலி பண்ணிட்டு வேறு வேலை பாருங்கன்னு வந்து கத்தினான். மதுரம் ஒண்ணும் புரியாமே அழுதது. நான் போய் ஆசிரமத்துல சொன்னேன். ஆசிரமமே ரொம்பப் பணக் கஷ்டத்திலே இருந்த சமயம் அது. பிருகதீஸ்வரன் சாரும் முத்திருளப்பன் ஐயாவும் எப்படியோ பழைய வாடகை பாக்கியைக் கொடுத்துக் கணக்குத் தீர்த்து வாசகசாலையைக் காலி பண்ணிப் பொஸ்தகங்களையும், பண்டம் பாடிகளளயும் ஆசிரமத்துக்கு எடுத்துக்கிட்டுப் போனாங்க. போறபோது மதுரத்தையும் ஆசிரமத்துக்கு வந்துடச் சொல்லி எவ்வளவோ கெஞ்சினாங்க, அது கேக்கலே. வாசக சாலை விஷயமாப் பேசினதிலே எனக்கும் வீட்டுக்காரனுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினாலே கில்ட் கடையையும் அங்கேயிருந்து காலி பண்ணிட்டு நான் இங்கே வந்திட்டேன். இங்கே வந்தப்புறம் ஒரு நாள் மதுரத்துக்கு உடம்பு சௌகரியமில்லேன்னு ஒண்ணாம் நம்பர்ச் சந்திலேருந்து ஆள் வந்திச்சு. போய்ப் பார்த்தேன். அது படுத்த படுக்கையா, இளைச்சுப் போய் உடம்புக்குச் சுகமில்லாமே இருந்திச்சு. உடனே நான் ஆசிரமத்துக்குத் தாக்கல் சொல்லி அனுப்பிச்சேன். ஆசிரமத்திலேருந்து எல்லாரும் வந்தாங்க. அங்கேயே வந்துடச் சொல்லி மதுரத்தை மறுபடியும் எவ்வளவோ கெஞ்சினாங்க. அப்பவும் அது கேட்கலே. வைத்தியரை வரவழைச்சு இங்கேயே பார்த்தாங்க. 'டி.பி. அட்டாக்'னு தெரிஞ்சது. பிருகதீஸ்வரன் புதுக்கோட்டைக்குத் தந்தி அடிச்சு அவர் மனைவியை வரவழைத்தார். அந்தம்மா வந்து மதுரத்தைக் கூடவேயிருந்து பெத்த தாய் மாதிரிக் கவனிச்சிக்கிட்டாங்க. இதுக்குள்ளே கடன்காரன் மதுரத்தின் வீட்டுக்கு ஜப்தி 'வாரண்ட்' கொண்டு வந்திட்டான். வீட்டை மீட்டுக் கடனைக் கொடுத்திடணும்னு பிருகதீஸ்வரன் சார் ஆனமட்டும் என்னென்னமோ பண்ணிப் பாத்தாரு, முடியலே. வீடு ஜப்தியாகிக் கடன்காரனிட்டப் போயிடிச்சு. மதுரம் சங்கீத விநாயகர் சந்திலே ஒரு வாடகை வீட்டுக்குக் குடிபெயர வேண்டியதாச்சு. அந்தச் சமயத்திலே நாகமங்கலம் ஜமீந்தாரிணிக்குத் தகவல் எப்பிடியோ எட்டி, அவங்க வந்து பார்த்தாங்க. மதுரத்தை ரொம்பக் கோவிச்சுக்கிட்டு, உடனே நாகமங்கலத்துக்கு வரணும்னாங்க. அதுக்கு மதுரம் சம்மதிக்கலே. ஒரே பிடிவாதமாக இங்கியே இருந்திடிச்சு. நாகமங்கலத்துக்குப் போனா உங்களுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோன்னுதான் அது பயப்பட்டுதுன்னு பிருகதீஸ்வரன் வீட்டு அம்மா எங்கிட்ட இதைப் பத்திப் பின்னாடி சொன்னாங்க. நாலஞ்சு மாசம் மதுரத்துக்குத் தெரியாமே ஜமீந்தாரிணியே வீட்டு வாடகை, வைத்தியச் செலவு, எல்லாத்துக்கும் பணம் கொடுத்தாங்க. பஞ்சவர்ணக் கிளியா இருந்த மதுரம் இந்த நாலஞ்சு மாசத்திலே எலும்பும் தோலுமா ஆயிடிச்சு. கபம் கட்டி ஒரே கோழையாத் துப்பித் துப்பிக் கண்ணுங்க குழிவிழுந்து பார்க்கறதுக்கு சகிக்காம ஆயிடுச்சு. பிருகதீஸ்வரன் சார் புதுக்கோட்டைக்குப் போயி யாரோ தெரிஞ்ச டாக்டரை இதுக்காகவே கூட்டியாந்தாரு. அவரு வந்து பார்த்திட்டு, "க்ஷயரோகம் ரொம்பக் கடுமையாப் பிடிச்சிருக்கு! ரொம்ப ஜாக்கிரதையா கவனிக்கணும். மனசு உற்சாகமா இருக்கும்படி செய்யணும். பால், தக்காளி, முட்டை எல்லாம் நெறையக் கொடுக்கணும். மனசு ரொம்பக் கெட்டிருக்கு, ஆதரவான சூழ்நிலையும் நல்ல காற்றும் வேணும்"னு ஏதோ மருந்தும் எழுதிக் கொடுத்திட்டுப் போனாரு. அதைப் பத்தி உங்களுக்குக் கூட அமராவதி ஜெயிலுக்கு ரெண்டு மூணு கடிதாசி எழுதினாங்க. பதில் இல்லே. அந்தக் கடிதாசி உங்களுக்குக் கிடைச்சிதா இல்லியான்னும் தெரியலே. இவ்வளவும் ஆனப்புறம் ஜமீந்தாரிணி அம்மா ரொம்ப வேதனைப்பட்டு, "இந்தா மதுரம்! ஆயிரமிருந்தாலும் நீ எங்க வீட்டுப் பொண்ணு! உன்னை நான் சாகவிடமாட்டேன், நீ சம்மதிச்சாலும், சம்மதிக்காவிட்டாலும் நாகமங்கலத்துக்கு வந்தாகணும். உன் உடம்பு தேற வேறே வழியே இல்லே..." என்று வற்புறுத்தி நாகமங்கலத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. அப்படி அவங்க கூப்பிட்டுக்கிட்டுப் போனப்புறம் தான் பிருகதீஸ்வரன் வீட்டு அம்மா புதுக்கோட்டைக்குத் திரும்பிப் போனாங்க. அதுவரை அந்தம்மா தான் கூட இருந்து மதுரத்தை ராப்பகலாகக் கவனிச்சிக்கிட்டாங்க. நாகமங்கலத்துக்குப் போனப்புறம் மதுரத்துக்கு உடம்பு தேறியிருக்குன்னு போன வாரம் பிருகதீஸ்வரன் சார் போய்ப் பார்த்துவிட்டு வந்து சொன்னாரு! நீங்க உடனே நாகமங்கலத்துக்குப் போகணும். போறப்பவே ஆசிரமத்திலே இறங்கி முடிஞ்சா பிருகதீஸ்வரன் சாரையும் கூடவே கூட்டிக்கிட்டுப் போங்க. உங்களைப் பார்த்தாலே மதுரத்துக்குப் பழைய உற்சாகம் வந்துடும். அது உருகின உருக்கத்துக்கு எல்லாமே நீங்க தான் காரணம் சார்! என்னமோ இப்படி எல்லாம் நடந்திருக்க வேண்டாம். நடந்திருச்சு. கடவுளும் நல்லவங்களைத்தான் இப்பிடி எல்லாம் சோதிக்கிறாரு. மகாலட்சுமி மாதிரி இருந்த பொண்ணு எலும்புந் தோலுமா ஆயிடிச்சு, நீங்க தான் பார்த்துப் பொழைக்க வைக்கணும்" - என்றான் ராமையா. இப்பிடிச் சொல்லும் போது அவனுக்குக் கண் கலங்கி விட்டது.

அத்தியாயம் - 13

பத்தரின் மகன் ராமையாவிடம் விடைபெற்றுக் கொண்டு ராஜாராமன் ஆசிரமத்துக்குப் போய்ச் சேர்ந்த போது சாயங்காலமாகிவிட்டது. சில வளர்ச்சிகளும் மாறுதல்களும் காலப்போக்கில் நேர்ந்திருந்தன. ஆசிரமம் இருந்த மாந்தோப்புக்கு அருகிலிருந்த கிராமத்தின் ஒரு புறமாகச் சென்ற மெயின் ரோடிலிருந்து ஆசிரமத்துக்குள் செல்ல இரண்டு பர்லாங் தூரத்துக்கு முன்பு ஒற்றையடிப் பாதைதான் உண்டு. இப்போது அந்த இரண்டு பர்லாங் தூரத்துக்கும் செம்மண் சாலை போடப்பட்டிருந்ததை ராஜாராமன் கவனித்தான்.

பிருகதீஸ்வரனும் நண்பர்களும் அவனைப் பார்த்த போது அவனிருந்த கோலம் அவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

"என்ன ராஜா இது? ஏன் இப்படி எலும்புந் தோலுமா ஆயிட்டே? ஜெயில்லே உடம்பு சௌகரியமில்லாம இருந்தியா?"

"உடம்பு, மனசு எல்லாம் தான் சரியில்லே. ஒருத்தரிட்ட இருந்தும் கடிதாசு இல்லே. நானும் ஒருத்தருக்கும் கடிதாசு போட முடியலே. பார்க்கவும் முடியலே. அதனாலேயே தவிச்சுப் போனேன்..."

"நான் உனக்கு ரெண்டு மூணு கடிதாசு போட்டேனே, ராஜா. பத்தர் காலமானது பற்றி, மதுரத்தோட அசௌக்கியம் பற்றி, ஆசிரம நிலைமை பற்றி எல்லாம் எழுதியிருந்தேனே?..."

"ஜெயில்லே 'சென்சார்' ரொம்பக் கடுமை. ஸ்காட்னு ஒரு கிராதகன் அமராவதியிலே ஜெயில் அதிகாரியா இருந்தான். யாருக்கும் கடிதம் வரவும் விடலை. யாரும் கடிதம் போடவும் விடலை. எங்களுக்கு உலகமே தெரியாதபடி பண்ணிப்பிட்டான். நாடு கடத்தி ஏதோ தீவுலே கொண்டு போய் வச்ச மாதிரி இருந்தது."

"சொல்ல முடியாத கஷ்டமா இருந்திருக்கும். ரெண்டரை வருஷத்துக்கு மேலே நரக வேதனை அநுபவிச்சிருப்பே. இங்கே எங்களுக்கெல்லாம் சதா உன்னைப் பற்றித்தான் நெனைப்பு. நாங்க மனசுனாலே தான் உன்னை நெனைச்சுக் கவலைப்பட்டோம். மதுரமோ மனசு, உடம்பு எல்லாமே உருகித் தவிச்சுத் தவிச்சு மாஞ்சுது. இப்பிடி ஒரு பிரியம் வச்சுத் தவிக்கிற மனித ஜன்மத்தை உலகத்திலே பார்க்கவே முடியாது. மாந்தோப்பை ஆசிரமத்துக்கு எழுதிக் கொடுத்தப்பவும் சிரிச்சிக்கிட்டே கொடுத்தது. நீ தனிப்பட்டவர் சத்தியாக்கிரகத்திலே ஜெயிலுக்குப் போயிருந்தப்ப வீட்டை அடமானம் வச்சு ஆசிரமச் செலவுக்குப் பணம் கொடுத்தப்பவும் சிரிச்சுக்கிட்டே கொடுத்தது. கடைசியா, வீடு ஜப்திக்கு வந்தப்பவும் சிரிப்பு மாறாத முகத்தோடதான் வாடகை வீட்டுக்குப் போச்சு. மங்கம்மாக் கிழவியும், மாமனும் போய்த் துக்கம் தாங்காம தனியா இருந்ததும் நீ ஜெயிலுக்குப் போயிட்டதுமாச் சேர்ந்தே அதை உருக்கி ஒடுங்கப் பண்ணிட்டது. மனசை உருக்கற பிரியத்தைப் பார்த்திருக்கேன். உடம்பை உருக்கற பிரியத்தைப் பார்த்திருக்கேன். இந்தப் பிரியமோ மனசு, உடம்பு, எலும்பு அத்தனையையும் உருக்கியிருக்கு. தங்க விக்கிரகமா இருந்தவ எப்படியோ இளைச்சு உருகிப் போயாச்சு. நீ பார்த்தா அப்படியே அழுதுடுவ. அந்த ஜமீந்தாரிணி வந்து பிடிவாதமாகக் கூப்பிட்டுக் கொண்டு போயிருக்காட்டா மதுரம் பிழைக்கறதே சிரமம். 'தயங்காம எங்ககூட வாம்மா! நீ என் வயிற்றிலே பொறக்காட்டாலும் நீயும் என் பொண் தான். எப்ப எப்பவோ உங்கம்மாவுக்கும் எனக்கும் அப்பா உயிரோட இருந்தப்ப மனஸ்தாபம் இருந்திருக்கலாம்; நானே அந்த மனஸ்தாபத்தை எல்லாம் மறந்தாச்சு. நீயும் மறந்துடணும். என் பிள்ளை - தூர தேசத்துக்குப் படிக்கப் போயிருக்கான். பெண் கலியாணமாகிப் புருஷன் வீட்டோட மெட்றாஸ் போயாச்சு. நீ இங்கே மதுரையிலே தனியாக் கிடந்து உருகற மாதிரி நான் அங்கே நாகமங்கலத்திலே கடல் போல் அரண்மனையிலே கிடந்து தவிக்கிறேன். நீ அங்கே வந்தா என் மனசும் குளிரும்; உன் உடம்பும் தேறும்'னு வந்து கூட்டிண்டு போயிட்டா அந்தம்மா. நீ ஜெயில்லேருந்து வந்து உன்னைப் பார்க்கணும்னு இங்கே தவிச்சுட்டிருந்தது அது. அதுக்கு நாகமங்கலம் போக மனசே இல்லே. நானும் எங்க வீட்டுக்காரியும் கண்டிச்சுச் சொன்னோம். அப்புறம் தான் ஜமீந்தாரிணியோட புறப்பட்டுப் போச்சு. நீ ஜெயில்லேருந்து வந்ததும் உன்னைக் கூட்டிண்டு நாகமங்கலத்துக்கு வரேன்னிருக்கேன்" - என்றார் பிருகதீஸ்வரன். அவருக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் பிரமை பிடித்து நின்ற ராஜாராமனுக்குச் சுயநினைவு வரச் சில விநாடிகள் ஆயின.

"க்ஷயரோகம்னு சொல்றீங்களே; அதைக் கேட்டுத் தான் ரொம்பக் கவலையாயிருக்கு..."

"அதான் சொன்னேனே ராஜா, உடம்பை உருக்கற பிரியத்தைப் பார்த்திருக்கேன், மனசை உருக்கற பிரியத்தைப் பார்த்திருக்கேன். எலும்பையே உருக்கற பிரியத்தை இப்பத்தான் பார்க்கறேன் நான்... அந்த ஜமீந்தாரிணி, பாவம், சும்மா சொல்லப்படாது. தம் சொந்தப் பெண்ணைக் கவனிச்சுக்கற மாதிரிப் பார்த்துக்கறா. நீ வந்து கொஞ்ச நாள் அங்கேயே கூடத் தங்கியிருந்தீன்னா, மதுரத்துக்கு உடம்பு தேறிடும்..."

"ஜமீந்தார் காலமானப்புறம் அந்தக் குடும்பத்தைப் பத்தி நான், மதுரம் எல்லாருமே தப்பா நினைச்சிருந்தோம். மதுரத்தின் அம்மா காலமானப்ப ஜமீந்தாரிணியும், மத்தவங்களும் மதுரத்தைப் பார்த்துத் துக்கம் கேட்க வந்திருந்தாங்கன்னு கேட்டப்ப ஓரளவு அவுங்க மனசு கூட மாறியிருக்குன்னு தெரிஞ்சுது. இப்ப மதுரத்தை அங்கே அழைச்சுண்டு போய் வச்சுக் கண்ணுங் கருத்துமாக் கவனிச்சுக்கிறாங்கன்னு நீங்க சொல்றதைக் கேட்டு, மனசுக்குச் சந்தோஷமாயிருக்கு..."

"உண்மையே அதுதான் ராஜா! மனுஷாளிலே நிரந்தரமாக கெட்டவங்க யாருமே கிடையாது. காலதேச வர்த்தமானங்களிலே எல்லாரும் மாற முடியும்கிறதைத் தான் இந்த ஜமீந்தாரிணி விஷயத்திலேயும் பார்க்கிறோம்."

நாகமங்கலத்துக்குப் புறப்படும் முன்னால் ஆசிரம நிலைகளைப் பற்றியும் அவர்கள் சில மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். முத்திருளப்பன் ஆசிரமப் பள்ளிக் கூடத்தில் ஆசிரியரான சிறு காலத்தில் ஆசிரமத்துக்கு அருகிலுள்ள கிராமத்திலேயே ஒரு வீடு பார்த்துக் குடும்பத்தோடு அங்கே குடி வந்து விட்டதாகத் தெரிந்தது. அந்த சில வருடங்களில் ஆசிரமத்துக்கு ஏற்பட்ட பொருளாதாரத் தட்டுப்பாடுகளையும், தடைகளையும், கஷ்டங்களையும் நண்பர்கள் அவனுக்குக் கூறினார்கள். பெரியகுளம் தாலுகா - அநுமந்தன்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி ஐயங்கார் என்ற தேசபக்தரும், திண்டுக்கல் அப்துல் சத்தார் சாயபுவைச் சேர்ந்தவர்களும் அந்தக் கஷ்ட காலத்தில் மாதம் தவறாமல் சத்திய சேவாசிரமச் செலவுக்காக ஐம்பது ஐம்பது ரூபாய் மணியார்டர் பண்ணிக் கொண்டிருந்தார்கள் என்ற செய்தியைக் கண்களில் நீர் நெகிழத் தெரிவித்தார் பிருகதீஸ்வரன். சில சமயங்களில் தாம் யாத்திரை செய்து கொண்டிருந்த ஊர்களில் வசூல் செய்த தொகையைச் சுவாமி விலாட்சணானந்தர் என்பவர் ஆசிரமத்துக்கு அவ்வப்போது அனுப்பி உதவியதாகவும் தெரிந்தது. அவற்றை எல்லாம் கேட்ட போது பிருகதீஸ்வரனும் நண்பர்களும் ஆசிரமத்தை எவ்வளவு சிரமப்பட்டு நடத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.

"வ.வே.சு. ஐயரின் ஆசிரமத்தில் இருந்த ஆத்ம பலமும், தாஸரின் சாந்தி நிகேதனத்திலிருப்பது போன்ற கலாசார பலமும், மகாத்மாவின் சபர்மதியில் இருந்த புனிதத் தன்மையும் பொருந்தியதாக இது வளர வேண்டுமென்று ஆசைப்பட்டு இத்தனை நாள் கட்டிக்காத்துவிட்டேன் ராஜா! போன மாதம் வடக்கே இருந்து ஒரு குஜராத்தி தேசபக்தர் இங்கே இந்த ஆசிரமத்தைப் பார்க்க வந்திருந்தார். அவர் என்ன சொன்னார் தெரியுமா? 'எல்லாவிதத்திலும் இதுவும் சபர்மதி ஆசிரமத்தைப் போன்ற சூழ்நிலையிலேயே அமைந்திருக்கிறது. அதே போல் அமைதி, அதே போல் நதிக்கரை, அதே போல் இயற்கைச் சூழ்நிலை, எல்லாம் வாய்த்திருக்கிறது' என்று புகழ்ந்தார் அவர். நாளடைவில் இதை இப்படியே ஒரு சுதேசிப் பல்கலைக் கழகமாக ஆக்கிவிட வேண்டும்" என்று உற்சாகமாகக் கூறினார் பிருகதீஸ்வரன். தினந்தோறும் ஆசிரமத்தில் இப்போது நூறு சர்க்காக்கள் நூற்கப்படுகின்றன என்பதை அறிந்து ராஜாராமன் மகிழ்ந்தான்.

பரபரப்பான திருப்பரங்குன்றம் மாநாட்டைப் பற்றியும் அவர்கள் பேசினார்கள். சத்தியாக்கிரகம் என்ற மகா நோன்பு மனிதர்களின் போட்டி பொறாமைகளில் அழிந்து விடக் கூடாது என்று எப்போதும் போல் கவலை தெரிவித்தார் பிருகதீஸ்வரன். "திருச்செங்கோடு நிகழ்ச்சியால் தான் இவ்வளவும் வந்தது. திருச்செங்கோடு தேர்தல் - என்ற ஒன்று வந்திருக்காவிட்டால் இவ்வளவு நடந்திருக்காது" என்று முத்திருளப்பன் அபிப்பிராயப்பட்டார். இந்தக் கருத்து வேறுபாடுகள் படிப்படியாக வளர்ந்து, மகாத்மா ஏற்படுத்திய சுதேசி விரதத்தைப் பாதிக்கக் கூடாதே என்று தான் மீண்டும் மீண்டும் அவர்கள் எல்லாருமே கவலைப்பட்டார்கள்.

அன்று இரவே ஓர் இரட்டை மாட்டு வண்டி அமர்த்திக் கொண்டு பிருகதீஸ்வரனும், ராஜாராமனும் நாகமங்கலத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஆசிரமத்திலிருந்து புறப்படும்போதே மழை பிடித்துக் கொண்டது. பாதை நல்ல காட்டுப் பாதை. போகப் போக மழையும் கடுமையாகியது. வழி நெடுக அங்கங்கே காட்டு ஓடைகள் குறுக்கிட்டன. ஓடைகளில் நீர்ப்பெருக்குத் தணிகிறவரை பிரயாணம் தடைப்பட்டது. ஆசிரமத்துக்கும் நாகமங்கலத்துக்கும் இருபது மைலுக்கு மேலிருக்காது என்றாலும் கடுமையான மழை காரணமாக அங்கங்கே நின்று பயணம் செய்து மறுநாள் காலையில்தான் அவர்கள் நாகமங்கலத்துக்குப் போய்ச் சேர முடிந்தது. நாகமங்கலம் ஊருக்குள் இருந்த ஜமீன் அரண்மனைக்கு அவர்கள் முதலில் சென்றார்கள். ஆனால், அவர்கள் போன போது ஜமீந்தாரிணியோ, மதுரமோ அரண்மனையில் இல்லை. க்ஷயரோகத்துக்கு மாற்றான நல்ல காற்றுக்காக டாக்டர் இடம் மாறச் சொல்லியிருந்ததை முன்னிட்டு ஆறு மைல்களுக்கு அப்பால் நாகமங்கலத்துக்கு மேற்கே மலையடிவாரத்தில் இருந்த ஜமீனுக்குச் சொந்தமான கோடை வாசஸ்தலத்தில் அவர்கள் போய் தங்கியிருப்பதாக தகவல் கூறப்பட்டது. உடனே ராஜாராமனும், பிருகதீஸ்வரனும், தாங்கள் வந்த இரட்டை மாட்டு வண்டியிலேயே மலையடிவாரத்துக்கு விரைந்தனர். எவ்வளவோ முயன்றும் மேடும் பள்ளமுமாக இருந்த மழைகாலத்து வண்டித் தடத்தில் வேகமாக வண்டியை ஓட்ட முடியவில்லை.

ஜமீன் கோடை வாசஸ்தலத்துக்கு அவர்கள் போய்ச் சேரும் போது காலை பத்து மணிக்கு மேலாகிவிட்டது. ஜமீந்தாரிணி அவர்களை மிகவும் பிரியமாக வரவேற்றாள். அன்று வெள்ளிக்கிழமையாதலால் அவர்கள் போய்ச் சேர்ந்த போது மதுரம் பூஜையறையில் இருந்தாள். அந்த உடல் நிலையிலும் அவளுக்குப் பூஜை புனஸ்காரங்களில் இருந்த பற்றையும், நம்பிக்கையையும் வியந்தார்கள் அவர்கள். ஜமீந்தாரிணியும், பிருகதீஸ்வரனும் மாளிகை வாசலிலேயே பேசியபடி நின்று விட்டார்கள். ராஜாராமன் மட்டும் ஆவலை அடக்க முடியாமல் பூஜை அறை வாசலுக்கே போய்விட்டான். காலையில் இன்னும் நீராடவில்லையாதலால் பூஜையறை உள்ளே போகாமல் வெளியிலேயே கதவருகே நின்றுவிட்டான் அவன். உள்ளே இருந்த மதுரம் வீணை வாசித்தபடி பூசை செய்து கொண்டிருந்தாள். அங்கே அமர்ந்திருந்த உருவம் தான் மதுரம் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. அவன் கண்கள் ஈரமாயின; விழிகளில் நீர் பெருகியது. அப்போதும் அவள் அதே 'தெலியலேது ராமா'வைத்தான் வாசித்துக் கொண்டிருந்தாள். வீணை வாசிப்பதை நிறுத்திவிட்டு அவள் குச்சி குச்சியாக இளைத்திருந்த தன் கைகளால் ரோஜாப்பூக்களை அள்ளி அர்ச்சித்த போது அவற்றில் எவை ரோஜாப் பூக்கள், எவை கைகள் என்று கண்டுபிடிக்க அவன் கண்களால் முடியவில்லை. கைகள் இளைத்திருந்தாலும் ரோஜாப்பூக்களை அவள் அள்ளிய போது உள்ளங்கைகளுக்கும் ரோஜாப்பூக்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாமலிருந்தது. அவள் கண்கள் இன்னும் அவன் பக்கமாகத் திரும்பவில்லை. ஒருக்களித்து உட்கார்ந்திருந்ததாலும், கண்கள் தியானிப்பதைப்போல் மூடியிருந்ததாலும் அவன் வந்து நின்றதை அவள் இன்னும் கவனிக்கவில்லை போலிருந்தது.

ஒரு வேளை அவனைப் பார்ப்பதற்குத் தவித்தே அவள் தெய்வங்களை அப்படிப் பூஜித்துக் கொண்டிருக்கிறாளோ என்னவோ? அவள் இளைத்து உருகிக் குச்சிபோல் ஆகியிருந்த சோகக் கோலத்தைக் கண்டு மறுகித் திகைத்து நின்றான் ராஜாராமன். பூஜையறைக்கு வெளியே சுவரில் மதுரத்தின் தாய் தனபாக்கியம், நாகமங்கலம் ஜமீந்தார் படங்கள், அவளுடைய மதுரை வீட்டில் மாட்டப்பட்டிருந்த பழைய படங்கள் எல்லாம் மாட்டப்பட்டிருந்தன. படுக்கையருகே ஒரு நீள பெஞ்சிலே அவள் வழக்கமாக நூற்கும் சர்க்கா வைக்கப்பட்டிருந்தது. படுக்கையின் கீழ் பேஸின், பழைய சட்டி ஒன்று எல்லாம் இருந்தன. அவள் வசிக்குமிடம் ஒரு தீவிர நோயாளியின் அறையாக மாறியிருந்தது.

பூஜை முடிந்து அவள் திரும்பிய போது கதவருகே நின்ற அவன் கண்களும், கருவட்டம் போட்டுக் குழிந்திருந்த அவள் கண்களும் சந்தித்துக் கொண்டன. மனத்தில் கனத்திருந்த உணர்ச்சிகளால் இருவருக்குமே ஒன்றும் பேச வரவில்லை. பவித்ரமான உணர்ச்சிகளுடன் மனிதர்கள் எதிரெதிரே சந்தித்துக் கொள்ளும்போது தங்கள் சேவை அநாவசியம் என்று கருதினாற்போல் வார்த்தைகள் அவர்களை விட்டுப் போயிருந்தன போலும். அவன் கண்களில் நீர் நெகிழ நிற்பதை அவள் பார்த்தாள். அவள் கண்களிலும் ஈரம் பளபளத்தது.

காற்றில் ஒடிந்து விழுவது போலிருந்த அவள் சரீரம் ஒரு நூல் அசைவது போல் அசைந்து அவனருகே வந்தது. கீழே குனிந்து அவன் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டாள் அவள். பூஜை செய்த அவள் வலது கை ஈரத்தில் ஒரே ஒரு ரோஜா இதழ் ஒட்டிக் கொண்டிருந்தது. அந்த ஒற்றை ரோஜா இதழை அவன் பாதங்களில் அவள் உதிர்த்தாள். சூடனா இரண்டு துளிக் கண்ணீரும் ஒரு ரோஜா இதழும் அவன் பாதங்களில் அர்ச்சிக்கப்பட்டன.

மேலே நிமிர்ந்த அவள் நெற்றியில் அவன் கண்ணீர் உதிர்ந்து சுட்டது. உணர்வுகள் அவன் இதயத்தைப் பிசைந்தன.

"மதுரம்..." இதயத்தின் ஆழத்திலிருந்து பிறந்த ஒரே ஒரு வார்த்தை மட்டும் அவன் வாயிலிருந்து வெளிப்பட்டது. அவள், இளைத்துக் கறுத்துத் தாடியும் மீசையுமாக அவன் இருந்த நிலை கண்டு கண் கலங்கினாள்.

"தெய்வமே!" என்று அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து அவள் விளித்த குரல் கிணற்றுக்குள்ளிருந்து வருவது போல் ஒடுங்கித் தளர்ந்திருந்தது. தொடர்ந்து அவள் நாலைந்து முறை மூச்சு இழுக்க இழுக்க இருமினாள். அவளுடைய உடல் தள்ளாடியது. அவள் தள்ளாடி தள்ளாடி நடந்து போய்க் கோழையைத் துப்புவதற்காகப் பேஸினை எடுத்துக் கொள்ளக் குனிந்த போது, அவன் ஓடிப்போய் பேஸினை எடுத்துப் பிடித்தான். குனிந்ததன் காரணமாக மேலும் இருமல் குத்திக் கொண்டு வந்தது. மறுபடியும் கோழையைத் துப்பினாள் அவள். கடைசியாக அவள் துப்பிய கோழையோடு ஒரு துளி ரத்தமும் கலந்து சிவப்பாகக் குழம்பியிருந்தது. அதைக் கண்டு ராஜாராமன் இதயம் துடித்தது. பேஸினைக் கீழே வைத்துவிட்டுக் கட்டிலருகே இருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு அவளைப் படுத்துக் கொள்ளுமாறு கையால் சைகை செய்தான் அவன். எவ்வளவோ அடக்கியும் முடியாமல் அவன் கண்களிலிருந்து மாலை மாலையாகக் கண்ணீர் வடிந்தது. வாழ்நாளிலேயே இப்படி அவன் மனம் விட்டு அழுதது இதற்கு முன் சில முறை நேர்ந்திருக்கிறது. தமது தள்ளாத வயதையும் பொருட் படுத்தாமல் மகாத்மா உப்புச் சத்தியாக்கிரகத்தின் போது இருநூற்று நாற்பது மைல்களுக்கு நடந்தே தண்டியாத்திரை மேற்கொண்டிருந்தார் என்ற செய்தியை அறிந்த தினத்தன்று அவன் சிறு குழந்தை போல் அழுதிருந்தான்! அதற்குப் பின் சத்தியமூர்த்தி, மகாதேவ தேசாய், கஸ்தூரிபாய் காந்தி ஆகியவர்களின் மரணத்தைக் கேள்விப்பட்டபோது அமராவதிச் சிறையில் முரட்டுச் சுவர்களை வெறித்துப் பார்த்தபடி கண்ணீர் சிந்தியிருந்தான். வேலூர் சிறையில் தாயின் மரணம் அறிவிக்கப்பட்ட போது அழுதிருந்தான்.

இன்றோ அவன் மனம் சொல்ல முடியாத துயரத்தால் துடித்தது. கண்களில் நீரும், மனத்தில் ரத்தமும் வடிவது போலிருந்தது. அவள் கண்களோ அவனையே பார்த்தபடி இருந்தது. சாய்ந்தாற் போல் படுக்கையிலே அவன் பக்கமாக ஒருக்களித்துப் படுத்திருந்தாள் அவள். அவளுடைய விழிகளில் நெகிழும் நீரும், முகத்தின் எல்லையற்ற சாந்தமும் அவனை உருக்கின. எவ்வளவு நேரம் அப்படிக் கண் கலங்கியிருந்தோமென்று அவனுக்கே தெரியாது. இளைத்த வலது கையைத் தூக்கி அவனை அழாமலிருக்கும்படி ஜாடை காட்டினாள் அவள். அவன் கண்களைத் துடைத்துக் கொண்டான். கை ஜாடையாலேயே அவனைக் 'காலையில் ஏதாவது சாப்பிட்டாயிற்றா இல்லையா?' என்றும் விசாரித்தாள் அவள். தளர்ந்து செத்துக் கொண்டிருந்த நிலையிலும் வெள்ளமாகப் பெருகும் அவள் அன்பு அவனைப் பிரியத்தாலேயே கொல்வது போலிருந்தது. ஆசிரமத்துக்கு நிலம் எழுதித் தந்தது, வீட்டை அடமானம் வைத்தும் நகைகளை விற்றும் பணம் உதவியது, எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகச் சொல்லிப் புலம்பினான் அவன். 'அவள் இப்படியாகி இந்த நிலைக்கு வந்ததற்குத் தானே காரணம்,' என்று அவன் கூறத் தொடங்கியபோது, செல்லமான கண்டிப்பு முகத்தில் தெரிய,

"நீங்க வந்து பக்கத்திலே இருக்கீங்கங்கற சந்தோஷத்திலே எனக்குப் போன மூச்செல்லாம் திரும்ப வந்திண்டிருக்கு. அந்த சமயத்திலே நீங்கள் இப்படி எல்லாம் பேசினா எப்படி? தயவு செய்து இப்படிப் பேசாதீங்கோ...?" என்று ஒவ்வொரு வார்த்தையாக இருமலை அடக்கியபடி கூறினாள் மதுரம். அவளுடைய ஒவ்வொரு சொற்களும் சற்றுமுன் அவளே அவன் பாதத்தில் உதிர்த்த ரோஜா இதழைப் போல் மிருதுவாக அவன் செவிகளில் வந்து பூவிதழ்களாய் உதிர்ந்தன. அவனுடைய உடம்பு இளைத்திருப்பதைப் பற்றி வருத்தப்பட்டாள் அவள்.

அப்போது பிருகதீஸ்வரனும் ஜமீந்தாரிணியும் உள்ளே வந்தார்கள். பிருகதீஸ்வரன் வந்த திசையை நோக்கி, எழுந்திருக்க முயன்றபடியே கைகூப்பினாள் மதுரம். பிருகதீஸ்வரன் 'எழுந்திருக்க வேண்டாம்' என்று அவளுக்கு ஜாடை காண்பித்துக் கொண்டே அருகே வந்தார்.

"ஆசிரமம் எப்படி நடக்கிறது?" என்று கேட்க நினைத்து "ஆசிரமம்..." என்று மதுரம் தொடங்கிய போதே இருமலும் சேர்ந்து வந்து அவளைப் பேசவிடாமல் செய்தது. அவளைப் பேசாமலிருக்கும்படி சொல்லிவிட்டு அவரே ஆசிரமத்தைப் பற்றி அவளுக்குத் திருப்தி ஏற்படும்படி எல்லாம் சொன்னார். கேட்டு முகமலர்ந்தாள் அவள்.

"கொண்டு வந்து சேர்த்தாச்சு. கொஞ்ச நாள் இங்கே உன்னோட இருக்கச் சொல்லி உத்தரவே போட்டிருக்கேன் இவனுக்கு. நீதான் பிழைச்சு எழுந்திருக்கணும் அம்மா! சீக்கிரமே நம்ம ஆசிரமத்துக்கு வந்து, 'ரகுபதி ராகவ, வைஷ்ணவ ஜனதோ' எல்லாம் பாடணும் நீ. தேசத்துக்குச் சுதந்திரமும் கிடைச்சிடும் போலேருக்கு. முதல் சுதந்திர கீதமாக உன் குரலாலே 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே - ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' என்று அந்தப் பாரதியார் பாட்டை நீ பாடி நாங்க கேட்கணும். சுதந்திரம் வந்ததுமே ராஜாராமனோட விரதமும் முடிஞ்சிடறது. உங்க கலியாணத்தையும் நானே ஆசிரமத்தில் வச்சு நடத்தி சந்தோஷப்படணும்" என்று ராஜாராமனைக் காண்பித்துச் சிரித்துக் கொண்டே அவளிடம் கூறினார் பிருகதீஸ்வரன். பதிலுக்கு அவள் முகத்தில் வழக்கமாக மலரும் நாணம் கலந்த புன்னகை ஒரு கணம் மெல்லிய ஒளிக்கீற்றாக மலர்ந்து மறைந்தது. பற்களே வெளியில் தெரியாமல் இரகசியமாய் சிரிக்கும் பெண்களைக் குடும்ப ஸ்திரிகளிலேயே தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டுமென்றிருக்கையில், அவள் சிரிக்கும் போதெல்லாம் அதில் ஓர் இங்கிதமான அந்தரங்கம் இருப்பதாக ராஜாராமன் என்றும் வியந்தது போலவே இன்றும் வியந்தான். கலீரென்று அவள் சிரித்து அவன் பார்த்ததில்லை. எப்போதோ தனியே அவன் முன் ஓரிரு முறை அவள் அப்படி சிரித்திருந்த போது கூட அந்தப் பற்களின் வனப்பையும் ஒளியையும் கவர்ச்சியையும் முழுமையாகக் காண முடியாத வேகத்தில் சிரித்த சுவட்டோடு அந்தச் சிரிப்பையே விரைந்து ஓர் இரகசியமாக்கி விடும் நளினத்தை அவள் சுபாவமாகவே பெற்றிருந்தாள். அவள் வாசிக்கும் ராகங்களைப் போலவே அதுவும் ஓர் சுகமான ராகமாக அவனுக்குத் தோன்றியது.

சிறிது நேரத்தில் பிருகதீஸ்வரனும் ராஜாராமனும் பக்கத்தில் மலையடிவாரத்தில் இருந்த ஓர் அருவிக்குப் போய்க் குளித்துவிட்டு வந்தார்கள். பிருகதீஸ்வரன் சட்டையே போடுவதில்லை. ஒரு நாலு முழம் கதர் வேட்டியும் துண்டும்தான். அருவிக் கரையிலேயே அவற்றை உலர்த்தி உடுத்திக் கொண்டு விட்டார் அவர். நீண்ட நேரம் அருவியில் துளைத்துத் துளைத்து நீராடிய ராஜாராமன், வேறு துணிமணிகள் கைவசம் இல்லையென்பதையும் மறந்து நனைந்த துணிகளை உலர்த்தாமல் ஈரத்தைக் கட்டிக் கொண்டே வீடு திரும்பினான். நடந்து வந்த வழியில் மழை மப்பான மந்த வெளியில் அந்தக் கதர்த் துணிகள் கொஞ்சமும் உலரவில்லை. அவர்கள் வீடு திரும்பிய போது ஜமீந்தாரிணி சமையற்கட்டிலிருந்தாள். பிருகதீஸ்வரன் பூஜையறையில் நுழைந்துவிட்டர். மதுரம் ராஜாராமனை ஜாடை செய்து கட்டிலருகே கூப்பிட்டாள். அவன் போய் நின்றான். "ஈர வேஷ்டியோட நிற்கிறீங்களே? உடம்பு என்னத்துக்கு ஆகும்? வேற வேஷ்டி இல்லையா?"

தான் ஈர வேஷ்டியோடிருப்பது அவனுக்கே அப்போது தான் நினைவு வந்தது. அவள் எழுந்திருக்க முயன்றாள். அவன் தடுத்தான்.

"பரவாயில்லே..." என்று அவள் மீண்டும் எழுந்திருக்க முயன்ற போதும் அவன் தடுத்தான்.

"என்ன செய்யணும்னு சொல்லு மதுரம்! நானே செய்யறேன். நீ எழுந்திருக்க வேண்டாம்."

"நான் உங்களை வேலை வாங்கப்படாதுன்னு பார்த்தேன். நீங்க விட மாட்டீங்க போலேருக்கு..."

"என்னன்னு சொல்லேன்... நான் செய்யறேன்..."

"அந்தக் கோடி அறையிலே என் டிரங்குப் பெட்டி இருக்கு... அதைக் கொஞ்சம் இப்பிடிக் கொண்டு வாங்கோ..."

அவன் டிரங்குப் பெட்டியை எடுத்து வந்து பெஞ்சின் மேல் வைத்தான். அவள் அதைத் திறக்கச் சொல்லி ஜாடை காட்டினாள். அவன் அதைத் திறந்தான். பெட்டியைத் திறந்ததுமே சந்தன வாசனையும், ஜவ்வாது, புனுகு, பச்சைக் கற்பூர மணமும் கம்மென்று எழுந்தன. பெட்டியில் மேலாக அவளுடைய கண்ணாடி வளைகளும், அதையடுத்து கதர்ப் புடவைகளும் அடுக்கியிருந்தன. அவற்றை ஒதுக்கிவிட்டுக் கீழே அடியில் கையைவிட்டு ஒரு கதர் வேஷ்டியையும் துண்டையும், சட்டையையும் மடிப்புக் குலையாமல் எடுத்தாள் அவள்.

"ஜெயிலுக்குப் போறதுக்கு முந்தி நீங்க வாசகசாலை மொட்டை மாடியிலே உலர்த்திவிட்டுப் போனது இது. நான் மறுநாள் காத்தாலே பத்திரமா உலர்ந்ததும் எடுத்து மடிச்சு என் பெட்டியிலே வச்சிருந்தேன்..."

அவன் அவற்றை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டான். வேஷ்டியும், சட்டையும், துண்டும் பரிமளமான நறுமணங்களில் மூழ்கியிருந்தன. அவள் பெட்டியில் அவை இருந்ததால் வந்த மணம் அது. அவளது அந்த சிரத்தையும் ஞாபக சக்தியும் அவன் மனத்தைக் குளிரச் செய்தன.

"இன்னிக்காவது ஈர வேஷ்டியைப் பத்திரமா உலர்த்துங்கோ, நாளைக்குக் கொடுக்கறதுக்கு எங்கிட்டக் கதர் வேஷ்டி சட்டை இல்லே" என்று அந்நிலையிலும் வேடிக்கையாகப் பேச முடிந்தது அவளால். அவன் சிரித்துக் கொண்டே ஈர வேஷ்டியை உலர்த்தப் போனான்.

பிருகதீஸ்வரனும், அவனும் சேர்ந்து சாப்பிட உட்கார்ந்த போது -

"என்னப்பா, வேஷ்டி புது மாப்பிள்ளை மாதிரி மணக்கிறது?" என்று அவர் அவனைக் கேலி செய்தார். ஒரு விருந்துச் சாப்பாடே தயாரித்திருந்தாள் ஜமீந்தாரினி அம்மாள். சமையலுக்கு ஆளும், உதவியாளும் இருந்தும் கூட அவர்களுக்கு அந்தம்மாளே பரிமாறினாள். வடை, அப்பளம் எல்லாம் இரண்டிரண்டாக இலையில் விழவே -

"இதென்ன சம்பந்தி உபசாரம் போல எல்லாம் ரெண்டு ரெண்டாப் போடறீங்களே! நான் ரொம்ப அல்ப ஆகாரக்காரன். ராஜாராமனுக்கு வேணுமானா நாலு நாலாப் போடுங்கோ; தாங்கும்! அமராவதி ஜெயில்லே காய்ந்து போய் வந்திருக்கான்!" என்று சிரித்துக் கொண்டே கூறினார் பிருகதீஸ்வரன். அந்த அம்மாளும் விடவில்லை. உடனே அதற்குப் பொருத்தமாகப் பதில் சொன்னாள் -

"சம்பந்தி உபசாரம்னே வச்சுக்குங்களேன். அவர் இன்னிக்கு இல்லேன்னாலும் நாளைக்கு எப்பவாவது ஒரு நாள் இந்த வீட்டு மாப்பிள்ளையாகப் போறவர். நீங்களோ அவருக்குத் தமையன் ஸ்தானத்திலே இருக்கிறவர். குறைச்சலாப் பரிமாறி மிச்சம் பிடிச்சேன்னா, நீங்களே மாமியார் பொல்லாதவள்னு நாளைக்கு என்னைக் குறை சொல்ல மாட்டேளா?"

"கேட்டுக்கோ ராஜா! உனக்குத்தான் சொல்றாங்க..." என்று ராஜாராமனைப் பார்த்துச் சிரித்தார் பிருகதீஸ்வரன். ராஜாராமன் பதிலே சொல்லவில்லை. வெட்கப்பட்டுக் கூசியவன் போல் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டு முடித்தான்.

அன்று பிற்பகலில் தாங்கள் வந்த இரட்டை மாட்டு வண்டியிலேயே, எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு ஆசிரமத்துக்குத் திரும்பி விட்டார் பிருகதீஸ்வரன்.

"நீ கொஞ்ச நாளைக்கு இங்கே இருந்து வரலாம். மதுரத்துக்கு உடம்பு தேறணும். நான் போகாட்டா ஆசிரம வேலைகள் தடைப்படும். நான் இன்னிக்கே புறப்படறேன்" என்று போகும்போது அவனிடம் வற்புறுத்திச் சொல்லிவிட்டுப் போனார் அவர். அவனும் அதற்கு இணங்கினான்.

அங்கே ஜமீந்தார் இருந்த காலத்தில் சேகரித்த பல ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய பெரிய லைப்ரரி ஒன்றிருந்தது. தமிழிலும், ஆங்கிலத்திலும், இந்தியிலும், சமஸ்கிருதத்திலுமாக ஏராளமான புத்தகங்கள் அங்கே இருந்தன. அதிர்ஷ்டவசமாக ராஜாராமன் அந்த நான்கு மொழிகளிலும் பயிற்சி உள்ளவனாக இருந்ததால் நிறையப் படிக்க முடிந்தது. சில கதைப் புத்தகங்களை மதுரத்துக்கும் படித்துச் சொன்னான் அவன். பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில் நுணுக்கம் பற்றிய புத்தகங்களையும், எண்ணிக்கையில் அதிகமாக இருந்த அரசியல் புத்தகங்களையும் அவன் ஆழ்ந்து கருத்தூன்றிப் படித்தான். ஒரு வாரம் கழித்து, ஓர் ஆள் வசம் அவன் உபயோகத்துக்காக, ஆசிரமத்திலேயே நெய்த கதர் வேஷ்டிகளும், துண்டுகளும், குருசாமி தைத்து அனுப்பிய சட்டைகளும் கொடுத்து விட்டிருந்தார், பிருகதீஸ்வரன். அவற்றை வாங்கிக் கொண்டு தான் முடிந்தவரை அங்கு நூற்றிருந்த நூல் சிட்டங்களைக் கொடுத்தனுப்பினான் ராஜாராமன். படித்த நேரம் தவிர மற்ற ஓய்வு நேரங்களில் விட்டுப் போய் இருந்த நாட்களுக்கு எல்லாம் சேர்த்து டைரி எழுதவும் முடிந்தது.

ஒரு நாள் மாலை மதுரத்தோடு அவன் பேசிக் கொண்டிருந்த போது அவள் அவனிடம் ஒரு விநோதமான வேண்டுகோள் விடுத்தாள்.

"நீங்க இந்தத் தாடி மீசையை எடுத்துடுங்களேன். இன்னமும் எதுக்குத் தாடி மீசை? அதான் ஜெயில்லேருந்து வந்தாச்சே. இன்னமும் பார்க்கறதுக்குச் சாமியார் மாதிரி இருக்கணுமா, என்ன?"

"இருந்தா என்ன? சாமியார்னே வச்சுக்கயேன். தேசத்துக்காக என்னைப் போல இப்படி எத்தினியோ பேர் சாமியாராயிருக்கோம்!..."

"அது சரிதான்! நான் ஒருத்தி இருக்கேனே இன்னும்!"

"இருந்தா...?"

"நான் ஒருத்தி இருக்கறவரை நீங்க சாமியாராக முடியாது... அதற்கு விடவும் மாட்டேன்..."

சொல்லிவிட்டு அவனை நேருக்கு நேர் பார்க்க நாணிக் கீழே பார்த்தாள் அவள்.

"இப்ப நீ என்ன சொல்றே மதுரம்? நான் தாடி மீசையை எடுத்தே ஆகணுமாக்கும்!"

"எனக்கு உங்க பழைய முகத்தைப் பார்க்கணும் போல இருக்கு..."

"எனக்கும் கூட உன் பழைய முகத்தையும், பழைய விழிகளையும், பழைய இதழ்களின் கனிவையும் பார்க்கணும் போல இருக்கு! அதுக்கு நான் இப்ப என்ன செய்யறது?" என்று கேட்பதற்கு நினைத்து, அதைக் கேட்பதால் அவள் மனம் புண்படும் என்ற பயத்தில் கேட்காமலேயே இருந்தான் அவன். என்றாலும் அவள் விருப்பத்தையும் அவன் நிறைவேற்றினான். மறுநாள் காலை தாடி மீசையை எடுத்துவிட்டு, அவன் அவள் முன் போய் நின்ற போது, அவள் கண்கள் மலர்ச்சியோடு அவனைப் பார்த்தன. இதழ்கள் புன்னகை பூத்தன.

"இப்பத்தான் பழைய மாதிரி இருக்கீங்க! முகத்திலே பழைய ராஜ களை வந்திருக்கு..."

"நம்ம சீநிவாசவரதன் 'சுபாஷ் சந்திரபோஸ் மாதிரி இருக்கே'ன்னு அடிக்கடி கேலி பண்ணுவார் மதுரம்."

"அப்படி ஒண்ணுமில்லே! சுபாஷ் சந்திர போஸுக்கு மூக்கு கொஞ்சம் சப்பை. உங்களுக்கு அழகான கூர் மூக்கு. நீங்க அவரை விட உயரம். அவரை விடச் சிவப்பு! நீங்க மூக்குக் கண்ணாடி போட்டுக்கலே."

"நீ அப்படி நினைக்கிறே! ஆனா, நான் பார்த்த தலைவர்களில் தெய்வீகமானவர் மகாத்மா. நளினமானவர் ஜவஹர்லால் நேரு, கம்பீரமானவர் சுபாஷ் சந்திர போஸ். அவருக்கு இணையான கம்பீர புருஷனை இந்தியத் தலைவர்களில் நான் இன்னும் பார்க்கலை..."

"நீங்க இருக்கேளே..."

"நான் தலைவன் இல்லையே; சாதாரண தேசத் தொண்டன். மகாத்மாவின் பல்லாயிரம் பக்தர்களில் ஒரு பக்தன்."

"எனக்கு நீங்க தான் தலைவர்! நான் உங்களைத்தான் பக்தி செய்கிறேன்..."

"....."

அவனால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை. பிரியம் என்ற மழையில் நனைந்து, பேசச் சக்தியற்றுப் போயிருந்தான் அவன்.

"நான் எப்போதோ செத்துத் தொலைத்திருக்கணும். அம்மா போயிட்டா; பத்தர் போயிட்டார். மாமா, மங்கம்மா எல்லாரும் போயிட்டாங்க. இந்த உயிர் மட்டும் உங்களுக்காக இன்னும் உடம்பிலே ஊசலாடிண்டிருக்குங்கிறதாவது உங்களுக்குப் புரியறதா?" கண்களில் நீர் நெகிழ அவனைக் கேட்டாள் அவள். பதில் சொற்களாக வெளிவருவதற்குப் பதில் அவன் கண்களிலும் நீராக நெகிழ்ந்தது. பல சமயங்களில் வார்த்தைகளை விடக் கண்ணீர் தான் அன்பின் சத்தியமான சாட்சியாயிருக்கிறதென்பதற்கு அவர்கள் அப்போது நிதரிசனமாயிருந்தார்கள்.

ஜமீந்தாரின் அந்தக் கோடை வாசஸ்தலம் அமைந்திருந்த இடம் மனோரம்யமாக இருந்தது. மேற்கே மிக அருகில் மலைத் தொடரும், கீழ்ப்புறமும், வடக்கும், தெற்கும் சரிவில் ஜமீன் மாந்தோப்பும் அமைய, நடுவே மேட்டில் அமைந்திருந்தது அந்த பங்களா. கொஞ்சம் உடல் நிலை தேறிய பின், தான் உலாவப் போகும்போது காலை மாலை வேளைகளில் மதுரத்தையும் காற்றாட அழைத்துப் போனான் அவன். அவளுடைய உற்சாகம் மெல்ல மெல்லத் திரும்பிக் கொண்டிருந்தது. டாக்டர் மதுரையிலிருந்து வந்து போய்க் கொண்டிருந்தார்.

ஒரு நாள் பகலில் ஜமீந்தாரிணி ஏதோ காரியமாக நாகமங்கலம் ஊருக்குள் போயிருந்தாள். சமையற்கார ஆளிடம் எல்லாவற்றையும் எடுத்துத் தரச் சொல்லி வாங்கி மதுரமே அவனுக்குப் பகல் சாப்பாடு பறிமாறினாள். அவன் சாப்பிட்டு எழுந்திருந்து கைகழுவி விட்டு வந்து பார்த்தால் அவன் சாப்பிட்ட அதே இலையில் உட்கார்ந்து எல்லாப் பண்டங்களையும் கைக்கெட்டுகிற தொலைவில் வைத்துக் கொண்டு தனக்குத் தானே பரிமாறியபடி சாப்பிடத் தொடங்கியிருந்தாள் அவள். அவன் அருகே போய் உட்கார்ந்து கொண்டு பரிமாறுவதில் அவளுக்கு உதவி செய்தான். இலையைப் பற்றிச் சிரித்துக் கொண்டே மெல்ல அவன் கேட்கத் தொடங்கிய போதே அவள் வெட்கப்பட்டு அவன் பக்கம் நிமிரவே இல்லை. யுகயுகாந்திரமாகக் கன்னி கழியாமலே இருந்துவிட்ட ஒருத்தி வாழத் தவிப்பது போல் அவள் வாழத் துடிப்பது அவனுக்குத் தெரிந்தது. அன்று பகலில் பெட்டியிலிருந்து வளைகளை எடுத்து அணிந்து கொண்டாள் அவள். மாலையில் உலாவப் போகு முன் தலைவாரிப் பூச்சூடி முடிந்து கொண்டாள். அன்று மாலை அவளை மலையடிவாரத்து அருவிக்கரை வரை அழைத்துச் சென்றான் அவன். மழைக்காலம் முடிந்து அன்று அபூர்வமாகப் பகல் முழுவதும் நன்றாக வெயில் காய்ந்திருந்தது. பச்சைக் கம்பளம் விரித்தாற் போல் மண்ணின் இடைவெளி தெரியாது மலைச்சரிவில் புல்வெளி செழித்திருந்தது. அருவியின் தண்ணீரில் அளவு குறைந்திருந்தாலும் மாலை வெயிலில் அது மிக மிக அழகாயிருந்தது. பறவைகளின் சப்தங்கள், அருவி விழும் ஓசை, கிழிப்பது போல் ஓசையுடன் அடிக்கும் மலைக்கணவாய்க் காற்று, எல்லாமே செவிக்கு இன்பமாக இருந்தன. மாந்தோப்பில் எங்கிருந்தோ ஒரு குயில் விட்டு விட்டுக் கூவியது. ராஜாராமன் கூட நடந்து வந்து கொண்டிருந்த மதுரத்தின் பக்கம் திரும்பி -

"உலகத்தில் இன்னொரு குயிலும் இருக்கிறது மதுரம். நான் நீ மட்டும் தான் இருக்கிறாய் என்று இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன்" என்றான்.

"இருக்கலாம்! நீங்க பாடியிருக்கேளே, 'பல்லாயிரம் ஊழிகள் பாடிப் பசித்த குயில்'னு அந்தக் குயில் என்னைத் தவிர வேறே எங்கேயும் இருக்க முடியாது."

அந்தப் பாடலை அவள் மறக்காமல் நினைவு வைத்துக் கொண்டிருந்தது அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது.

"அந்தப் பாட்டு உனக்கு இன்னும் நினைவிருக்கா?"

"உங்களுக்கு மறந்துட்டாலும் எனக்கு மறக்காது. அப்படி மனப்பாடம் பண்ணியிருக்கேன்."

வீடு திரும்பியதும் அவன் கேட்காமல் அவளாகவே அந்தப் பாட்டைப் பாடினாள். பாடினாள் என்பதை விட நெஞ்சில் இழைத்து இழைத்து உருகினாள் என்று தான் தோன்றியது ராஜாராமனுக்கு. நீண்ட நாட்களுக்குப் பின் அவள் தன் ஆத்மாவில் ஊடுருவிப் பதிவது போல் பாடவே அவன் மெய்மறந்து போனான். அந்த உடல் நிலையில் அவள் பாடக் கூடாது என்பது அவனுக்கும் நினைவில்லை. டாக்டரின் கடுமையான எச்சரிக்கைகள் அந்த உணர்ச்சிமயமான வேளையில் அவளுக்கும் நினைவில்லை. ஆத்மாவோடு ஆத்மாவாக உறைந்து போன அன்பு பெருக்கெடுத்து அதுவே சங்கீதமாக நிறைந்து வழிந்தாற் போல் பாடினாள் மதுரம்.

எல்லையில்லாததோர் காட்டிடை - நள்
இருளென்றும் ஒளியென்றும்
சொல்ல ஒணாததோர் மயக்கத்தே - இளம்
சோகக் குயில் ஒன்றிசைக்கிறது அதன்
சோகம் முழுதும் தெரியுதிலை
சுவடு முழுதும் புரியுதிலை
....................

பாட்டு நடுவே தடைப்பட்டது. அவள் பயங்கரமாக இருமத் தொடங்கினாள். முகம் குப்பென்று வியர்த்தது. கண்கள் சொருகிக் கொண்டு போயின. ராஜாராமன் பயந்து போனான். வீணையை அவள் மடியிலிருந்து எடுத்தான். அவளைப் படுக்க வைத்த போது கண்களை முழித்து முழித்து அவனைப் பார்த்தாள். பேஸினில் கோழையைத் தாங்கினான் அவன். கோழையைத் துப்பி முடித்ததுமே -

"இப்போதாவது என் சோகம் முழுவதும் புரிகிறதா? என் சோகத்தின் சுவடு முழுவதும் தெரிகிறதா?" குரல் நலிந்து போய் அவனைக் கேட்டாள் அவள். மறுபடியும் இருமல் குத்திப் பிடுங்கியது. பேஸினில் மறுபடி ஒரு கொத்துக் கோழை செம்பருத்திப் பூவாக வந்து விழுந்தது. ராஜாராமன் பயந்து போய் சமையற்காரனைக் கூப்பிட்டு உடனே ஜமீந்தாரிணிக்கு ஆளனுப்பச் சொன்னான்.

டாக்டரைக் கூப்பிட்டுக் கொண்டு வரவும் சொல்லியனுப்பினான். மதுரையிலிருந்து வரும் பெரிய டாக்டரைக் கூப்பிட்டுக் கொண்டு வருவது என்பது அந்த நேரத்திற்கு மேல் உடனே சாத்தியமில்லை. நாகமங்கலத்தில் லோகல் பண்டு ஆஸ்பத்திரியில் ஒரு வயதான எல்.எம்.பி. டாக்டர் உண்டு. அவரைக் கூப்பிட்டுக் கொண்டு வரச் சொல்லி சமையற்காரன் ஆளனுப்பினான். மதுரம் பரக்க பரக்க விழித்தாள். வாய் கோணிக் கோணி வலித்துக் கொண்டு போயிற்று. அரண்மனையிலிருந்த ஒரு பழைய ஃபோர்டு காரில் ஜமீந்தாரிணி அம்மாளும், எல்.எம்.பி. டாக்டரும் விரைந்து வந்தார்கள். ஜமீந்தாரிணி ஒன்றும் புரியாமல் பெரிதாக வாய்விட்டு அழத் தொடங்கி விட்டாள். இரத்தம் ரத்தமாகக் கோழையைப் பார்த்ததும் எல்.எம்.பி. டாக்டருக்குப் பயம் தோன்றியிருக்க வேண்டும். உடனே மதுரைக்குப் போய்ப் பெரிய டாக்டரைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து விடச் சொன்னார் அவர். ஜமீந்தாரிணியையும் வைத்தியரையும் மதுரத்தைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அரண்மனைக் காரில் அவன் மதுரைக்கு விரைந்தான். அந்தக் காரில் எவ்வளவு வேகமாகப் போயும் மதுரைக்குப் போக இரவு பதினோரு மணி ஆகிவிட்டது. டாக்டரை தூக்கத்திலிருந்துதான் எழுப்ப வேண்டியிருந்தது. ஜமீன் குடும்பத்துக்கு நீண்ட நாளாகப் பழக்கமுள்ள டாக்டராகையால் நிலைமையைப் புரிந்து தட்டிச் சொல்லாமல் வர உடனே ஒப்புக் கொண்டு புறப்பட்டார்.

"நான் போன வாரம் வந்திருந்தப்ப நிலைமை கொஞ்சம் தேறி நல்லாவே இருந்துதே! மறுபடியும் எப்படி இதுமாதிரி ஆச்சு?" என்று காரில் வரும்போதே டாக்டர் அவனைக் கேட்டார். அவன் நடந்தவற்றைச் சொன்னான்.

"நீங்கள் அவளைப் பாடவிட்டிருக்கக் கூடாது. நானே 'எப்பவாவது வீணை மட்டும் தான் வாசிக்கலாம்; அதுகூட அடிக்கடி கூடாது'ன்னு கண்டிச்சுச் சொல்லிருக்கேனே."

"....."

டாக்டருக்கு அவனால் ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை. டாக்டர் கடுமையாகக் கோபித்துக் கொண்டார். அவன் கண்கள் நெகிழ்ந்தன. மனத்தில் என்னென்னவோ நினைவுகள் ஓடின. நல்லதும், பொல்லாததுமாக மாறி மாறித் தோன்றியது.

"கோழையிலே பிளட் வரது நின்றிருந்தது - நல்ல 'டெவலப்மென்ட்னு' நான் சந்தோஷப்பட்டுண்டிருந்தேன். மறுபடியும் இப்படி ஆச்சுங்கிறீங்க, கடவுள் தான் காப்பாத்தணும்...!"

"இப்ப என் கடவுள் நீங்க தான் டாக்டர்" என்று அவர் கால்களில் விழாத குறையாகக் கெஞ்சினான் ராஜாராமன். போகும் போதும் வரும்போதும், மெயின் ரோடிலிருந்து கூப்பிடு தூரத்தில் ஆசிரமம் இருந்தும், அவசரம் காரணமாக, அவனால் பிருகதீஸ்வரனுக்கோ மற்றவர்களுக்கோ தகவல் சொல்ல முடியவில்லை. அந்த நள்ளிரவில் மேடும் பள்ளமுமான நாகமங்கலம் சாலையில் எவ்வளவு வேகமாகப் போக முடியுமோ அவ்வளவு வேகமாகக் கார் போயிற்று. டாக்டர் அமைதியாயிருந்தார். அவரிடம் அதிகம் பேசினாலும் கோபித்துக் கொள்வார் போலிருந்தது. பேசாமலும் இருக்க முடியவில்லை. தெய்வங்களை எல்லாம் மனத்திற்குள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தான் அவன். ஓர் அநாதையைப் போல் அவன் இதயம் நிராதரவாய் அழுதது. கார் நாகமங்கலத்தைக் கடந்து மலைச் சாலையில் ஏறி மேல் வளைவில் திரும்பிய போது, டாக்டர் டார்ச் ஒளியைப் பாய்ச்சிக் கைக்கடிகாரத்தில் மணி பார்த்தார். மணி இரண்டே கால் ஆகியிருந்தது. சாலை மேல் மலைச்சரிவில் இருந்த மாந்தோப்புக்களில் காவல் நாய்கள் கார் சத்தத்தில் குரைத்தன. மலைச்சாரற் பனி சில்லென்று உறைந்தது. சிள்வண்டுகளின் ஓசையை வெட்டுவது போல் எங்கோ ஓர் ஆந்தை அலறி ஓய்ந்தது. தூரத்தில் நாய் அழுது தணியும் ஒலி இருளில் கோரமாகக் கேட்டது. ராஜாராமன் செவிகளைப் பொத்திக் கொண்டான். அவன் மனம் வேகமாக அடித்துக் கொண்டது.

மலைச்சரிவில் பங்களா வாசலில் போய்க் கார் நின்ற போது எல்.எம்.பி. டாக்டர் மாட்டு வண்டியில் திரும்பிப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் காரிலிருந்து இறங்குவதற்குள் வண்டி நகர்ந்து விட்டது. வீட்டில் எல்லா விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன. வாசலில் பெட்ரோமாக்ஸ் லைட் ஒளியில் ஈசல்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. கட்டை மாட்டு வண்டியில் சக்கரங்கள் தொலைவில் நகரும் ஒலியைத் தவிர பங்களா அமைதியாயிருந்தது. டாக்டர் படிகளில் தயங்கினார். வாசலில் யாருமே இல்லை.

உள்ளிருந்து ஜமீந்தாரிணி அம்மாள் எதிர்ப்பட்டாள். அழுதழுது அவள் கண்கள் வீங்கியிருந்தன. தலைமுடி அவிழ்ந்து முதுகில் புரண்டு கொண்டிருந்தது.

"ஆசிரமத்திலே பிருகதீஸ்வரனுக்கும், மதுரையிலே அவ மனுஷ்யாளுக்கும் சொல்லி அனுப்புங்கோ. நாம் கொடுத்து வச்சது அவ்வளவுதான்" - என்று நிதானமாய் ஒவ்வொரு வார்த்தையாய் அவள் ராஜாராமனிடம் வந்து கூறினாள். கூறி முடிக்கு முன்பே அழுகை பொங்கிக் கொண்டு வந்தது அவளுக்கு. ராஜாராமன் கோவென்று கதறியழுது கொண்டே உள்ளே ஓடினான்.

சரீரத்தோடு அவனை அடைவதற்கு ஆசைப்பட்ட மதுரம் சரீரத்தை நீத்து ஆத்மாவாகவே அவனுள் வந்து கலந்து விட்டாள். "சங்கீத உலகத்துக்கு மிகப் பெரிய நஷ்டம் இது" என்று வெளியே டாக்டர், ஜமீந்தாரிணியிடம் சொல்லிக் கொண்டிருப்பது கேட்டது. 'சங்கீத உலகத்துக்கு நஷ்டம் மட்டும்தான். எனக்கோ என் உலகமே இருண்டு போய்விட்டதே' - என்று கதறியது அவன் உள்ளம்.

புன்முறுவல் பூத்தபடி, உறங்குவது போல, வாடிய ரோஜா மாலையாகக் கட்டிலில் கிடந்தது மதுரத்தின் சரீரம். அந்தக் குடும்பத்தின் வழக்கம் போல் சுமங்கலிகள் இறந்தால் செய்யும் முறைப்படி அவள் கைகளை நெஞ்சில் குவித்து பூவும் மஞ்சள் கிழங்கும், குங்குமச் சிமிழும் அவள் கைகளின் அருகே நெஞ்சில் வைக்கப்பட்டிருந்தன. அபூர்வமாக அன்று பகலில் அவள் தலைவாரிப் பின்னிப் பூ வைத்துக் கொண்டதும், பெட்டியிலிருந்து வளைகளை எடுத்து அணிந்து கொண்டதும், ராஜாராமனுக்கு நினைவு வந்தன. அவன் அப்படியே ஸ்தம்பித்துப் போனான். கண்கள் வற்றுகிறவரை அழுது கொண்டே நின்றான். இப்படிப் போவதற்காகவே, அன்று பகலில் அவள் அவன் இலையில் சாப்பிட்டுவிட்டு அந்த அல்ப மகிழ்ச்சியிலேயே யுகம் யுகமாகத் தாம்பத்யம் நடத்திவிட்டாற் போன்ற பரிபூரணத் திருப்தியோடு எழுந்திருந்தாளோ என்று அவன் மனம் எண்ணியது. அவள் பேசியிருந்த பேச்சுக்கள் ஒவ்வொன்றாக நினைவு வந்து அவன் நெஞ்சை அலைக்கழித்தன.

"நான் ஒருத்தி இருக்கிற வரை நீங்க சாமியாராக முடியாது... அதற்கு விடவும் மாட்டேன்."

-ஆம் இப்போது அவள் அவனைச் சந்நியாசியாக்கி விட்டாள். தாம்பத்தியத்தின் நளினங்களுக்குச் சாட்சியாக இருந்தவள் போனபின் இனி அவன் யாருக்காகவும் அந்த ஆசையை வைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லைதான். ஒருவருடைய அன்புக்குக் காரணமான சாட்சி அழியும்போது, மனிதன் சந்நியாசியாகிறான். சந்நியாசியான பின்போ உலகமே அன்பு மயமாகத் தெரிய ஆரம்பிக்கிறது. அன்பின் எல்லைகள் விரிவடைகின்றன.

அத்தியாயம் - 14

அவளுடைய மரணத்தை அவனால் நம்பவே முடியவில்லை. சுற்றிச் சுற்றி அவளுடைய முகமும், புன்னகையுமே அவன் கண்களில் நின்றன. அந்த சங்கீதக் குரல் அவன் செவிகளில் இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. மதுரம் என்ற பதத்திற்கு இனிமை என்று பொருள். அவள் இருந்த வரை அவனுடைய உலகம் இனிமையாயிருந்தது. அவள் போன பின்போ அவனுடைய உலகம் கசப்பு மயமாகி விட்டது.

"நீ கொடுத்து வச்சது அவ்வளவுதான்! அழுது என்ன பிரயோசனம் இனிமே?" என்றார் பிருகதீஸ்வரன். நான்கு நாள் வரை மதுரத்தைப் பறிகொடுத்த அந்த மலையடிவாரத்து வீட்டில் இருப்பதே வேதனையாயிருந்தது. அவன் பைத்தியம் போலானான். வேளா வேளைக்குச் சாப்பிடவில்லை. அன்ன ஆகாரமின்றி அவன் பட்ட அவஸ்தையைப் பார்த்து பிருகதீஸ்வரன் இடம் மாறினால் அவன் கொஞ்சம் ஆறுதல் பெற முடியுமென்று நினைத்தார். முத்திருளப்பனும் அப்படியே அபிப்பிராயப்படவே இருவருமாக ராஜாராமனை ஆசிரமத்துக்கு அழைத்துக் கொண்டு போக முடிவு செய்தனர்.

ஆசிரமத்துக்குப் புறப்படுமுன் கடைசியாக அவள் தன் கைகளில் கொடுத்த அந்த வீணையையும் தன்னோடு எடுத்துக் கொண்டான் ராஜாராமன். அவர்கள் எல்லாரும் புறப்பட்ட போது ஜமீந்தாரிணி மனசு பொறுக்காமல் வாய்விட்டுக் கதறி அழுதே விட்டாள்.

"நீங்க எல்லாம் நல்லதா நெனைச்சு, நல்லபடி செஞ்சும், பகவான் வேற மாதிரி நினைச்சுட்டான். நாம என்ன செய்ய முடியும்? நம்ம கையிலே எதுவும் இல்லே. தேசத்துக்குச் சுதந்திரம் வந்ததும், அவா ரெண்டு பேருக்கும் நானே கூட இருந்து கலியாணத்தைப் பண்ணி வைக்கிறேன்னு மதுரத்தோட அம்மாவுக்கு வாக்குக் கொடுத்தேன். தெய்வ சித்தம் வேறு மாதிரி இருக்கும் போலத் தெரியறது" - என்று பிருகதீஸ்வரனும் கண் கலங்கினார்.

ஆசிரமத்தில் ஓடையின் கரை ஓரமாக பிருகதீஸ்வரன், தான் தங்கியிருந்த ஒரு குடிசையில் ராஜாராமனையும் தன்னோடு தங்கச் செய்து கொண்டார்.

இதற்கிடையில் தேசத்திலும், தமிழ்நாட்டிலும் எவ்வளவோ மாறுதல்கள் நடந்தன. தமிழ்நாட்டுத் தேச பக்தர்களிடையே திருப்பரங்குன்றம் மகாநாட்டில், திருச்செங்கோடு தேர்தல் செல்லாதென்று தீர்மானம் நிறைவேற்றியதோடு, 'பார்லிமெண்டரி போர்டு அமைக்கும் அதிகாரத்தைக் காரியக் கமிட்டியிடம் கொடுக்க வேண்டும்' என்ற தீர்மானமும் நிறைவேறியிருந்தது. பார்லிமெண்டரி போர்டு அமைக்கும் வேலையைக் காரியக் கமிட்டியிடம் விடக்கூடாது என்று இன்னொரு கோஷ்டியினர் கருதினார்கள். இந்தக் குழப்பம் காங்கிரஸ் மேலிடம் வரை போயிற்று. பிரிவுகளும் பேதங்களும் பலமாயின.

அப்போது அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராயிருந்த அபுல்கலாம் ஆசாத் நிலைமையை நேரில் கண்டறிவதற்காகக் காரியக் கமிட்டி உறுப்பினரான அஸப் அலியைத் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்தார். 1945-டிசம்பர் மாதம் பதினெட்டாம் தேதி அஸப் அலி சென்னைக்கு வந்து சேர்ந்தார். ஒரு வாரம் தங்கினார். அப்புறம் சர்தார் பட்டேலைச் சந்திப்பதற்காகப் பம்பாய் போனார். கடைசியில் இந்தக் கோஷ்டியில் ஐந்து பேர், அந்தக் கோஷ்டியில் மூன்று பேருமாக எட்டுப் பேரும் கொண்ட பார்லிமெண்டரி கமிட்டி அமைக்கப்பட்டது.

இப்போதெல்லாம் முன்னைப் போல் கட்சி வேலைகளில் ராஜாராமனுக்கு ஈடுபாடு இல்லை. ஆசிரமத்தை வளர்க்கவும் கல்வி அறிவைப் பெருக்கி வேற்றுமைகளை அகற்றுவதன் மூலம் நாட்டின் தீண்டாமையை ஒழித்துக் கட்டவும் சுதேசித் தொழில்களை வளர்க்கவும் பாடுபட விரும்பினான் அவன். மகாத்மா காந்திக்குப் பின் அவரைப் போல் இனிமேல் ஆத்ம பலத்தையும், சேவை மனப்பான்மையையும் பெரிதாக மதிக்கும் தலைவர்கள் தோன்றுவார்களா என்று எண்ணித் தயங்கியது அவன் உள்ளம். 'எப்போதோ இந்தத் தேசம் செய்த தவத்தின் பயனாக மகாத்மா வந்து தோன்றியிருக்கிறார். அவரை நம்பி, அவருடைய சத்யாக்கிரக வழியை நம்பித் தேசிய இயக்கம் என்கிற மகாவிரதத்தை மேற்கொண்டவர்கள், அவர் இருக்கிறவரைதான் இங்கே வணங்குவதற்கும், பூஜிப்பதற்குமுரிய ஒரு அவதார புருஷனைப் பார்க்க முடியும். அப்புறம் இந்தியாவில் தலைவர்கள் இருப்பார்கள். ஆனால் ஆத்ம பலத்தையும், சத்தியத்தையும், கருணையையும், அன்பையும் மட்டுமே நித்திய சாதனங்களாக நினைக்கும் தலைவர்கள் இருப்பார்களா? கொஞ்ச நாட்களாக அவனுக்கும், பிருகதீஸ்வரனுக்கும் இதைப் பற்றியே விவாதங்கள் நடந்தன.

"நீ சொல்வதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் காந்தி மகானைப் போல் ஆத்மபலத்தை நம்பிச் செயலில் இறங்குகிறவர்களும் இல்லாமற் போய், சுபாஷ் சந்திர போஸைப் போல் மன வலிமையையும், உடல் வலிமையையும் நம்பிச் செயலில் இறங்குகிறவர்களும் இல்லாமற் போய்விட்டால் நாளைய இந்தியாவை என்னால் நினைக்கவே முடியவில்லை ராஜா!..."

"கீதையைச் சொல்வதற்கு ஒரு பரமாத்மாவும் சத்தியத்தையும் அகிம்சையையும் சுட்டிக் காட்டுவதற்கு ஒரு மகாத்மாவும் தான் இங்கே பிறக்க முடியும் போலிருக்கிறது..."

"காரணம் அதில்லை ராஜா! காந்தி ஒரு தேசிய மகா முனிவரைப் போல் அகங்காரத்தையும், நான் எனது என்னும் உணர்வையும் அழித்துவிட்டு அப்புறம் ஒரு குழந்தையின் மனத்தோடு அரசியலுக்கு வந்திருக்கிறார். இந்த நாட்டில் தவத்துக்கு என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்ட விரத நியமங்களை அரசியலுக்கும், தேசபக்திக்கும் கூட ஏற்று அங்கீகரித்துக் கொண்டு ஒரு தவத்தோனின் உடை, தவத்தோனின் உணவு, தவத்தோனின் பழக்க வழக்கங்களோடு இந்தியாவில் உலாவுகிறார் அவர். அகங்காரத்தை அழித்து விட்டு இப்படித் தவம் செய்பவர்களைப் போல அரசியலுக்கு வருகிறவர்கள் நாளைக்கும் இங்கே இருப்பார்களா, இல்லையா என்பதைப் பொறுத்திருக்கிறது இந்தியாவின் எதிர்காலம்" - என்றார் பிருகதீஸ்வரன்.

"யாருக்குத் தொண்டனாகும் மனோதிடம் இருக்கிறதோ அவனே தலைவனாக முடியும். மகாத்மாவுக்கு அது பரிபூரணமாக இருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் இருக்கும் போது அதற்குத் தயாராகி விட்டார் அந்த மகாமுனிவர்..." என்றார் முத்திருளப்பன். குருசாமி எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். கட்சி அரசியலிலிருந்து அவர்கள் வழி மெல்ல மெல்ல விலகி அதை விட விசாலமான பணிகளுக்கு வந்துவிட்டது. ஆசிரமப் பணிகளிலும், நண்பர்களின் கூட்டுறவிலும் உயிர்க்குயிராக நேசித்தவளை மரணத்துக்குப் பறிகொடுத்த துயரத்தை மறக்க முயன்றான் ராஜாராமன். எவ்வளவோ மனத்தைத் தேற்றிக் கொள்ள முயன்றும் சில சமயங்களில் சோகம் அவன் மனத்தைக் கவ்விச் சித்ரவதை செய்தது.

சில வேதனையான மனநிலைகளில் தன் அறையில் வைக்கப்பட்டிருந்த அந்த வீணையையே இமையாமல் பார்த்தபடி பைத்தியம் போல் நேரம் போவது தெரியாமல் அமர்ந்திருப்பது அவன் வழக்கமாயிருந்தது. அப்படி வேளைகளில் ஜடப்பொருளான அந்த வீணையும் அவனோடு பேசியிருக்கிறது, பாடியிருக்கிறது. ஆத்மாவுக்கு மட்டுமே புரிகிற ஆத்மாவின் அநுராகங்களையும், ராகங்களையும், தாபங்களையும், தவிப்புகளையும் சொல்லியிருக்கிறது. ஒரு பிரமையைப் போலவும், நிஜத்தைப் போலவும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த வீணையின் ஒலி அவன் செவிகளை மட்டும் நிறைத்திருக்கிறது. வளையணிந்த தந்தக் கைகள் அதன் தந்திகளை மீட்டி நிசப்தமான நள்ளிரவு வேளைகளில் அவனுக்கு மட்டுமே கேட்கும்படியான மதுர சங்கீதத்தை வாரி வழங்கியிருக்கிறது. இன்னும் சில வேளைகளில் அந்த வாத்யத்துக்குப் பதில் மதுரமே அங்கு நளினமாக ஒடுங்கி உறங்குவது போல் ஒரு பிரமை அடைந்து மனம் தவித்துத் துடித்திருக்கிறான் அவன். பிருகதீஸ்வரனும், நண்பர்களும் கூட அவன் படும் வேதனையை அறிந்து நெகிழ்ந்து போயிருந்தார்கள். காலம் தான் மெல்ல மெல்ல அவன் மனப் புண்ணை ஆற்ற வேண்டுமென்று தோன்றியது அவர்களுக்கு.

1946-ஆம் வருஷம் ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் இந்திப் பிரசார சபை வெள்ளி விழாவிற்குத் தலைமை வகிக்க மகாத்மா காந்தி சென்னைக்கு வந்தார். பின்னால் சென்னையில் பார்லிமெண்டரி தூதுக் குழுவையும் சந்தித்தார். சென்னையில் மகாத்மாவின் பிரார்த்தனைக்கும், கூட்டங்களுக்கும் இலட்சக் கணக்கில் மக்கள் கூடினார்கள். இந்திப் பிரச்சார சபைக்கருகே அவர் தங்கியிருந்த இடத்தில் திருவிழாக் கூட்டம் கூடியது. மகாத்மாவைத் தரிசிப்பதிலும் அவருடைய பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வருவதிலும், உபதேசங்களைக் கேட்பதிலும் சென்னை மக்கள் அளவற்ற உற்சாகம் காட்டினர். ஒரு வாரத்துக்கு மேல் சென்னையில் தங்கி விட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும் பழனி முருகனையும் தரிசிப்பதற்காக மகாத்மா தெற்கே மதுரைக்கு வந்தார். எப்படியாவது முயன்று, அந்த மகாபுருஷனின் திருவடிகள் சத்திய சேவாசிரமத்து மண்ணிலும் படவேண்டுமென்று ஏற்பாடு செய்ய முயன்றார்கள் பிருகதீஸ்வரனும், ராஜாராமனும். ஒரு மணி நேரமாவது அவர் ஆசிரமத்தில் வந்து இருக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களைப் பார்த்துக் கேட்டும் பயனில்லை. மகாத்மாவின் பிரயாண ஏற்பாடுகளை உடனிருந்து கவனித்த எல்.என். கோபாலசாமியைச் சந்தித்து வேண்டிய போதும் முடியவில்லை. மகாத்மாவின் பிரயாணத் தளர்ச்சி காரணமாகவும், சத்திய சேவாசிரமத்துக்கு ஒரு மணி நேரம் பிரயாணத் தொலைவு இருந்ததன் காரணமாகவும், வரவேற்புக்குப் பொறுப்பான தலைவர்கள் எவ்வளவோ முயன்றும் அது முடியாமல் போய்விட்டது. எனினும் மகாத்மாவைச் சந்தித்து வணங்கும் பாக்கியமும் 'ஆசிரமம் நன்றாக வளர்ந்து நாட்டுக்குப் பயன்படவேண்டும்' என்று அவர் வாய்மொழியாகவே ஆசிபெறும் பேறும் அவர்களுக்குக் கிடைத்தது.

"எல்லாத் தொழில்களையும், யந்திரமயமாக்கி விட்டால் கிராமங்களும், தரித்திர நாராயணர்களும் வருந்திப் பாழடைய நேரிடும். சர்க்கா, நெசவு போன்ற குடிசைத் தொழில்கள் பெருகவும், வளரவும் உங்கள் சத்திய சேவாசிரமம் பாடுபடவேண்டும்" என்று ராஜாராமனிடம் கூறினார் மகாத்மா. அவன் அப்படியே செய்வதாகப் பாபுஜியிடம் வாக்களித்தான். ஆசிரமத்தின் பெயர் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக அவர் பாராட்டினார்.

"கதர் மூலம் பல கோடி மக்களின் உடைத் தேவை நிறைவேறாது என்று விவரம் தெரிந்தவர்கள் கூட நினைப்பதுதான் வருத்தத்தை அளிக்கிறது. இந்தியா ஏராளமான கிராமங்களும், விவசாயிகளும் நிறைந்த நாடு. கிராமங்கள் அழிந்தால் இந்தியாவே அழிந்துவிடும். கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கும் ஏற்பாடு தான் கதர். இதைப் பலர் புரிந்து கொள்ளவில்லை. கதர் ஓர் புனிதமான தேசிய விரதத்தின் சின்னம். நான் சொல்லும் ஏனைய இலட்சியங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் கதர் அணிவதால் மட்டும் பயனில்லை. அவர்கள் கதரையும், என் இலட்சியங்களையும் சேர்த்தே எரித்து விடலாம்" - என்று வருத்தப்பட்டார் மகாத்மா.

"சத்தியத்தின் நம்பிக்கை இல்லாதவன், அகிம்சையில் நம்பிக்கை இல்லாதவன், சுயநலத்தை விட மனமில்லாதவன், பிறர்க்குத் தீங்கு நினைப்பவன், கதர் அணிவதில் அர்த்தமே இல்லை! உங்கள் ஊர் ஆலயம் ஹரிஜனங்களுக்குத் திறக்கப்பட்டது என்று அறிந்த பின்பே நான் மகிழ்ச்சியோடு இங்கே தரிசிக்க வந்தேன். ஹரிஜனங்களுக்கும் ஏழைகளுக்கும் நன்மை உண்டாக்கப் பாடுபட வேண்டும். மதுவிலக்கும், கதரும், கிராமப் புனருத்தாரணமும் எந்த சத்தியாகிரகிக்கும் இலட்சியங்களாகவும் விரதங்களாகவும் ஆகியிருக்கின்றனவோ அவனே கதர் அணிய யோக்யதை உள்ளவன்."

ராஜாராமனுக்கு கங்கையில் மூழ்கி எழுந்தது போல் மகாத்மாவைச் சந்தித்து அவர் உரைகளைக் கேட்ட அநுபவம் மெய்சிலிர்க்கச் செய்வதாயிருந்தது. அந்தப் பொக்கை வாய்க் கிழவரின் புன்முறுவலிலும், ஆசியிலும் சகல துக்கங்களையும் மறக்க முடிந்தது. தங்கள் காலத்தின் மகா முனிவரைச் சந்தித்து வணங்கிய பெருமிதத்தோடு ஆசிரமத்திற்குத் திரும்பினார்கள் ராஜாராமனும் நண்பர்களும். காந்தியடிகள் ஆசிரமத்துக்கு வரமுடியவில்லையே என்ற மனத்தாங்கள் அவரை தரிசித்து வணங்கியதிலும் அவரோடு சிறிது நேரம் உரையாடியதிலும் மறைந்து விட்டது.

இதற்கு முந்திய முறை மகாத்மா மதுரை வந்திருந்த போது மதுரம் தன் விலையுயர்ந்த நகைகளை எல்லாம் கழற்றி ஹரிஜன நிதிக்குக் கொடுத்ததும் தான் சுப்பராமன் பங்களாவில் அவரைச் சந்தித்து வணங்கியபோது அங்கே உடனிருந்த டி.எஸ்.எஸ். ராஜன் வாய் தடுமாறி "மிஸ்டர் காந்தி ராமன்" என்று தன்னை அழைத்ததையும் நினைத்துக் கண் கலங்கினான் ராஜாராமன். எப்படி நினைத்தாலும் எதை நினைத்தாலும் அந்த நினைவு மதுரத்தோடு போய் முடிந்து அவன் மனத்தைத் தவிக்கச் செய்தது. அவனுடைய நினைவுகளின் எல்லா ஆரம்பத்துக்கும் அவளே முடிவாயிருந்தாள்.

மெல்ல மெல்ல ஒரு வருடமும் ஓடிவிட்டது. அவள் இறந்த வருடம் முடிந்து முதல் சிரார்த்த தினத்தன்று பிருகதீஸ்வரனையும் அழைத்துக் கொண்டு நாகமங்கலம் போயிருந்தான் அவன். ஜமீந்தாரிணி அம்மாள் அன்று மதுரத்துக்காக சுமங்கலிப் பிரார்த்தனை கொடுத்துக் கொண்டிருந்தாள். அந்த நிகழ்ச்சி அவர்கள் மனத்தை உருக்கியது. தன கணவனுக்கும், தனக்குச் சக்களத்தியாக வந்து முளைத்த யாரோ ஒருத்திக்கும், பிறந்த பெண் என்று ஒதுக்காமல் வயிற்றில் பிறந்த பெண்ணுக்குச் செய்வது போல் அவள் சிரத்தையாக நீராடிப் பட்டினி இருந்து, நாலு சுமங்கலிகளுக்குச் சாப்பாடு போட்டுப் புதுப் புடவையும், வெற்றிலைப் பாக்கும், மஞ்சள் கிழங்கும் வைத்துக் கொடுத்ததைப் பார்த்து அவர்கள் மனம் நெகிழ்ந்தே போனார்கள். அன்று முழுவதும் நாகமங்கலத்திலும் மலையடிவாரத்து வீட்டிலுமாக இருந்துவிட்டு, மறுநாள் அவர்கள் ஆசிரமத்துக்குத் திரும்பினார்கள். மறுநாளும் அதற்கடுத்த நாளும் ஒரு வேலையும் ஓடாமல் பிரமை பிடித்தது போல் இருந்தான் ராஜாராமன். மனம் தேறி அவன் பழைய நிலைமை அடைய இரண்டு நாள் பிடித்தது. மறுவாரம் ஆசிரமம் நடத்தி வந்த பள்ளிக் கூடத்துக்கு அரசாங்க அங்கீகாரமும் 'கிராண்ட்'டும் வாங்குகிற விஷயமாக அவனும், பிருகதீஸ்வரனும் சென்னைக்குப் போக வேண்டியிருந்தது. போகும் போது வழியில் திருச்சியில் இறங்கிப் புதுக்கோட்டைப் போய்க் குடும்பத்தினரோடு ஒரு நாள் தங்கிப் போக விரும்பினார் பிருகதீஸ்வரன். ராஜாராமனும் அவரோடு புதுக்கோட்டைக்குப் போனான். பிருகதீஸ்வரன் மனைவி, மதுரத்தின் மரணத்துக்காக அவனிடம் துக்கம் கேட்டு அழுதாள். 'மதுரத்தைப் போலத் தங்கமான பெண்ணை நான் பார்த்ததே இல்லை' என்று வியந்து கூறி, மதுரத்தோடு தான் மதுரையில் இருந்த நாட்களை நினைவு கூர்ந்தாள் அவள். தன்னைப் போலவே எல்லாரும் மதுரத்தை நினைவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் - எல்லாருடைய நினைவிலுமே அவள் பசுமையாகத் தங்கியிருக்கிறாள் என்பதை அறியும் போதெல்லாம் அவன் மனத்தைத் தவிக்க வைத்தது. அடைய முடியாத - அடையக் கூடாத ஒரு நஷ்டத்தைத் தான் உணர்ந்து அனுபவிப்பது போதாதென்று ஒவ்வொருவராக அதை நினைவுபடுத்தும் போதெல்லாம் அந்த நஷ்டத்தின் கனம் பெரிதாகித் தாங்க முடியாத பாரமாய் அவன் இதயத்தையே அமுக்கியது.

மறுநாள் அவர்கள் புதுக்கோட்டையிலிருந்து சென்னை புறப்பட்டார்கள். சென்னையிலும் சில தேச பக்தர்களையும், மந்திரிகளையும், பிரமுகர்களையும் அவர்கள் சந்தித்தனர். ஆசிரமத்துக்கு அங்கீகாரமும் உதவித் தொகையும் பெற முயலும் முயற்சி வெற்றியடையும் போலிருந்தது. எல்லாருமே உதவி செய்வதாக வாக்களித்தனர். மாகாண மந்திரிகளாயிருந்த தேசபக்தர்கள் உதவுவதாக வாக்களித்திருந்தார்கள். ஆசிரமத்தின் எதிர் காலத்தில் நம்பிக்கையோடு அவர்கள் சென்னையிலிருந்து திரும்ப முடிந்தது. பொருளாதார ரீதியாக ஆசிரமத்துக்குப் பல சிரமங்கள் இருந்தாலும், அவர்கள் மனோபலத்தால் காரியங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். உணவு, காய்கறி, பால், தயிர், நெய் எல்லாமே ஆசிரமத்திலே கிடைக்க வசதிகள் இருந்தன. உடைத் தேவையும் அங்கே சுழன்ற சர்க்காக்களின் மூலமும், தறிகளின் மூலமும் நிறைவேறியது. மதுரம் அவ்வளவு பெரிய நிலப்பரப்பையும் தோட்டத்தையும் மனமுவந்து அன்றைக்கு எழுதிக் கொடுத்திருக்காவிட்டால் இன்று இந்த ஆசிரமமே உருவாகியிருக்காது என்பதை மனப்பூர்வமாக உணரும் போதெல்லாம் அவன் இதயத்தில் நன்றியும் கண்களில் நீரும் சுரந்தன.

அவனுக்கும் பொதுக் காரியங்களுக்கும் வேண்டிய எல்லா உபகாரங்களையும் செய்துவிட்டுப் பதிலுக்கு ஒரு நன்மையையும் அநுபவிக்காமல் போய்விட்டவளை எண்ணியபோது மட்டும் மனம் உள்ளேயே குமுறி ஊமையாய் அழுதது. அந்த ஆசிரமத்தையே மதுரத்தின் நினைவாகப் பாவித்தான் அவன்.

தமிழ்நாட்டின் தலைவர்கள், பாரத நாட்டின் பல பகுதியிலிருந்தும் வந்த தேசபக்தர்கள், எல்லோரும் ஆசிரமத்துக்கு வந்து பார்த்து மகிழ்ச்சியோடு அதைப் பாராட்டத் தொடங்கினர். பத்திரிகைகளில் ஆசிரமத்தைப் பற்றிய கட்டுரைகள் 'ராஜாராமன் என்கிற தனி ஒரு காந்தீயவாதியின் சாதனை இது' என்று புகழ்ந்து வெளிவரலாயின. அவனை இத்தனை பெரிய சாதனைகள் புரிய வைத்த ச்கதி எது என்பது அவனுக்கும் அவனுடைய அத்யந்த நண்பர்களுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. எந்தப் பவித்திரமான இதயத்தின் பிரியத்தால் அத்தனை விரைவாக நாடு முழுவதும் கொண்டாடிப் பிரியம் செலுத்தப்படும் அந்தஸ்தை அடைந்தானோ, அந்தப் பிரியத்துக்குரியவள் அவனுக்காகத் தவித்து உருகி உருகியே மாய்ந்தாள் என்ற நினைவு வரும்போது சோகம் அவனை இருளாய்க் கவ்வி மூடியது.

தன் தாயின் மரணம், தான் நிலம் கரைகளை விற்றுத் தேச சேவைக்குச் செலவழித்தது, எல்லாத் துயரத்தையும் உணர முடியாமல் தன்னை ஊக்கிய அன்பின் ஒளி எது என்பதை இப்போது அவன் நன்றாக உணர்ந்திருந்தான். மதுரம் செய்த தியாகங்களின் ஒளியில் தன்னைச் சுற்றியிருந்த அந்தகாரங்கள் எல்லாம் மறைந்து, தான் உலகின் பார்வையில் பல தியாகங்களின் சொந்தக்காரனாகத் தோன்றியிருப்பதையும் உணர்ந்தான் அவன். பக்தியின் சுகத்தை அனுபவிக்கிறவர்களால் தான் பக்தி செய்யவும் முடிகிறதென்ற தத்துவத்தை வாழ்க்கையில் அநுபவங்களால் இப்போது புரிந்து கொண்டிருந்தான் ராஜாராமன். தன்னுடைய புஷ்பங்களால் அவனுடைய பாதங்களில் அர்ச்சித்தாள் மதுரம். அவனுடைய புஷ்பங்களால் பாரத மாதாவின் பாதங்களை அர்ச்சித்திருந்தான் அவன். உதாசீனத்திலிருந்து அன்பின் எல்லைக்கு அவனை அழைத்து வந்தவள் அவள். வெறுப்பிலிருந்து பிரியத்தின் எல்லைக்கு அவனை அழைத்து வந்தவள் அவள். சிறைச்சாலையின் துன்பங்களை அவன் தாங்கிக் கொள்ளச் செய்தது - அவள் பிரியமாயிருந்தது. 'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு' என்று அவள் பாடிய போதெல்லாம் தான் தேசத்தைப் பக்தி செய்யும் மார்க்கங்கள் ஒவ்வொன்றாக அவனுக்குப் புரிந்தன.

அந்த வருஷக் கடைசியில் ஆசிரமத்தின் பள்ளிக்கூடம் அரசாங்க அங்கீகாரம் பெற்றது. ஆசிரமக் கட்டிடங்களுக்காகவும், வளர்ச்சிக்காகவும் ஒரு பெருந்தொகை அரசாங்க 'கிராண்ட்' ஆக வழங்கப்பட்டது. ஆசிரமத்தின் பணிகள் வளர்ந்து விரிவடைந்தன. அதிக வகுப்புகளும், பலதுறை ஆசிரியர்களும் வந்தார்கள். சமூக சேவகர்களைத் தயாரிக்கும் சோஷியல் செர்வீஸ் டிரெயினிங் வகுப்புகளும், பெண்களுக்கான மாதர் நலத்துறையைப் பயிற்றும் வகுப்புக்களும், கிராமப் புனருத்தாரணத்தை விளக்கும் ரூரல் செர்வீஸ் டிரெயினிங் வகுப்புகளும் தொடங்கப்பட்டன. தெற்கே உருவாகும் புதிய யுவ இந்தியாவின் சாந்திநிகேதனமாக அது வளர்ந்தது. அநாதைப் பெண்கள் பலர் ஆசிரமத்தில் சேர்ந்து சமூக சேவகிகளாக வாழ்வு பெறத் தொடங்கினர். புதிய இந்தியாவின் தொண்டர்களை அந்த ஆசிரமம் அந்தரங்க சுத்தியோடு உருவாக்கத் தொடங்கியது. ராஜாராமனின் புகழ் நாடு எங்கும் பேசப்பட்டது. தேசியப் போராட்டங்கள் ஓய்ந்திருந்த காலத்தில் சமூக சேவையின் காந்தியச் சின்னமாக அந்த ஆசிரமம் வளரத் தொடங்கியிருந்தது.

இந்து - முஸ்லீம் கலவரம் மூண்டு நாட்டின் வடக்கேயும் வடகிழக்கேயும் மகாத்மா ஒற்றுமைக்காக யாத்திரை மேற்கொண்டார். நவகாளி கலவரப் பகுதிகளில் மகாத்மாவின் பாதங்கள் நடந்தபோது கவலையோடு பத்திரிகைச் செய்திகளைப் படித்தான் ராஜாராமன். அந்த வருடம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் போட்டியில் சா. கணேசனும், காமராஜும் போட்டியிட்டுக் காமராஜ் வென்றார். பிரகாசம் மந்திரிசபை கவிழ்ந்தது. பின் ஓமந்தூர் ரெட்டியார் வந்தார். சுதேசி ஆட்சியில் நன்மைகள் விளையலாயின.

1947 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரம் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக முகம்மதலி ஜின்னாவும், மகாத்மா காந்தியும் கூட்டு அறிக்கை ஒன்று வெளியிட்டார்கள். சுதந்திரத்துக்கான நன்னாள் பாரதத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

1947 ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் இந்தியா சுதந்திரம் அடைந்தது. கண்ணீராலும் செந்நீராலும் வளர்த்த இயக்கம் சுதந்திரப் பயனளித்தாலும், பாரத நாடு இந்தியா என்றும் பாகிஸ்தான் என்றும் பிரிந்த வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தார்கள் உண்மைத் தேசபக்தர்கள். மதுரையிலும் சத்திய சேவாசிரமத்திலும் சுதந்திர தினத்தைப் பிரமாதமாகக் கொண்டாடினார்கள். பல்லாயிரம் ஆண்டுகள் வராமலிருந்து பின் வந்த ஒரு தேசியத் திருவிழாவாகவே அது கொண்டாடப்பட்டது. எங்கும் மூவர்ணக் கொடிகள் பட்டொளி வீசின.

சுதந்திர தினத்தன்று தன்னுடைய பழைய விரதம் ராஜாராமனுக்கு நினைவு வந்தது. பதினெட்டு வருஷங்களுக்கு முன் இளமை ஆவேசத்தோடு மீனாட்சியம்மன் சந்நிதிக்கு முன்னால் அவனும், நண்பர்களும் செய்து கொண்ட அந்தச் சத்தியம் அவனைப் பொறுத்த வரையில் இன்னும் தொடரவே செய்தது. தேசம் சுதந்திரம் அடைகிறவரை திருமணமே செய்து கொள்வதில்லை என்று அன்று எடுத்துக் கொண்ட விரதத்தை மற்றவர்கள் இனிமேல் கைவிடலாம்; கைவிட முடியும். ஆனால் அவனோ, அந்த விரதத்தை இனியும் கைவிட முடியாமலே போய்விட்டது. எந்த மகத்தான காரணத்துக்காக அவர்கள் எல்லாம் வீடு வாசலைத் துறந்து, சுகங்களையும் பந்தபாசங்களையும் விடுத்து நோன்பு இயற்றினார்களோ, அந்த நோன்புக்குப் பயன் கிடைத்து விட்டது. ஆனால், அவனுடைய நோன்பு பலித்த வேளையில், அவனுக்காக அல்லும் பகலும் நோன்பிருந்து, "ராமா உன்னைப் பக்தி செய்யும் மார்க்கம் தெரியவில்லையே" என்று மொழியாலும், வீணையாலும் கதறியவள் யாரோ, அவளுடைய நோன்பு பலிக்காமலே தனிப்பட்டவர்களின் விரதங்கள் அந்தத் தியாக வேள்வியில் எரிந்து போயின. தேசபக்தர்களின் மகாவிரதம் பலித்து விட்டது. காந்தி என்ற சத்தியாக்கிரக மகாமுனிவரின் தவம் சித்தி பெற்று விட்டது. அந்த மகா விரதத்தில் எத்தனையோ அல்பமான விருப்பங்களும், தனிப்பட்டவர்களின் அபிலாஷைகளும், குடும்பங்களின் சுகங்களும் அழிந்து போயிருக்கலாம். ஆனால், பனி உருகி இமயம் அழியாது என்றாலும், கங்கை பிறக்கும். தேசபக்தி இமயத்தைப் போன்றதென்றால் சுதந்திரம் கங்கையைப் போன்றது. ராஜாராமனைப் போல் பலருடைய பொன்னான வாலிபத்தைக் காந்தி என்ற மகாமுனிவர் தம்முடைய பணிக்காக வாங்கிக் கொண்டார். அதனால் ராஜாராமன் பெருமைப்படலாம். ஆனால், அவனுடைய தியாகத்தில் அவனுக்காகத் தியாகங்களைச் செய்தவளுடைய தியாகமும் கலந்துதான் இருக்கிறது. அது தனித் தியாகம் இல்லை. வாழ்வில் கலக்க முடியாதவர்கள் தியாகங்களில் கலந்து விட்டார்கள். 'நான் ஒருத்தி இருக்கிறவரை நீங்கள் சாமியாராக முடியாது' என்றாள் அவள். இப்போது அவள் இல்லை. ஆகவே, அந்த விரதத்தை முடிக்க வேண்டிய அவசியமும் அவனுக்கு இல்லை. 'வேத காலத்துக்கு மட்டும்தானா முனிவர்கள் தேவை? நவீன இந்தியாவுக்கும், சுயநலத்தைத் துறந்து பல கோடி மக்களுக்காகத் தங்களை வருத்திக் கொண்டு தவம் புரியும் பல்லாயிரம் சத்தியாக்கிரக முனிவர்கள் தேவைதான். அவர்களின் முதல் அவதாரமாகவே காந்தி தோன்றியிருக்கிறார். காந்தியைத் தொடர்ந்து இன்னும் பல்லாயிரம் புதிய முனிவர்கள் தேசத்துக்கு வேண்டும். சங்கரரின் அத்வைதம் போல், ராமாநுஜரின் விசிஷ்டாத்வைதம் போல் காந்தியம் நாளை வாழ்நாளுக்கு ஓர் அகில இந்திய ஆசாரமாக அமைய வேண்டும். அந்த ஆசாரத்தைப் பரப்பும் வாரிசுகளில் ஒருவனாக நான் இருப்பேன்' என்று சுதந்திர தினத்தன்று நீண்ட நேர மனவேதனைக்குப் பின் தனக்குள் பிரதிக்ஞை செய்து கொண்டான் ராஜாராமன்.

இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக வந்திருந்த லார்டு மவுன்ட்பேட்டனே இந்திய மக்களின் விருப்பப்படி கடைசி கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்றார். அதே சமயம் ஜின்னா பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலானார். ஜவஹர்லால் நேருவைப் பிரதமராகக் கொண்ட மந்திரிசபை அமைந்தது. சில மாகாணங்கள் நீங்கலாக மற்ற மாகாணங்களுக்குக் கவர்னர்கள் நியமிக்கப் பட்டார்கள்.

இந்து - முஸ்லிம் கலவரங்கள் மீண்டும் தலையெடுக்கவே மகாத்மா கல்கத்தாவில் உண்ணாவிரதம் தொடங்கினார். பலருடைய அன்பான வேண்டுகோளுக்கு இணங்கி எழுபத்து மூன்று மணி நேரத்துக்குப் பின் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் மகாத்மா. அடுத்த வருடம் ஜனவரி மாதம் டில்லியிலே நடைபெற்ற கலவரத்தைக் கண்டித்து மகாத்மா மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். மகாத்மாவின் உண்ணாவிரதம், நாள் கணக்கில் நீடித்தது. எல்லாத் தலைவர்களும் வாக்குறுதி அளித்து மகாத்மா உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி செய்தார்கள். பிரார்த்தனைகளும் கூட்டங்களும் நடந்தன. மக்கள் வெள்ளமாகக் கூடினார்கள். 'வைஷ்ணவ ஜனதோ'வும் 'ரகுபதி ராகவ'வும் இலட்சக் கணக்கான செவிகளில் ஒலித்துச் சாந்தியளித்தன.

ஜனவரி மாதம் இருபதாம் தேவி மகாத்மாவின் பிரார்த்தனைக் கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட செய்தியை அறிந்து ராஜாராமன், அந்தச் செய்தி தெரிந்த வேளையிலிருந்து அன்ன ஆகாரமின்றி மலைத்துப் போய் உட்கார்ந்து விட்டான். காரணமின்றி அவன் மனம் கலங்கியது. கீதையை எடுத்து வாசித்து ஆறுதல் பெற முயன்றான். அப்போது பிருகதீஸ்வரனும் புதுக்கோட்டை போயிருந்தார்.

உலகில் கெட்டவர்களுக்குத்தான் எதிரிகளும் பகைவர்களும் இருப்பார்கள் என்று அவன் இது வரை எண்ணியிருந்தான். இப்போதோ மகான்களுக்கும், நல்லவர்களுக்கும் கூட எதிரிகள் இருப்பார்களென்று நிதரிசனமாகத் தெரிந்தது. எந்த மகானின் விரதங்களால் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா சுதந்திரம் அடைந்ததோ, அந்த இந்தியாவிலேயே மகாத்மாவின் பிரார்த்தனைக் கூட்டத்திலே வெடிகுண்டு வீசவும் ஒருவன் இருப்பான் என்பது நினைக்கவும் கூச வேண்டிய விஷயமாயிருந்தது. கங்கையும், வேதங்களும் பிறந்த நாட்டில் கருணையும், அன்புமாக வாழ்கிறவர்களின் உயிருக்கு உலை வைக்கும் கொடியவர்களும் பிறந்திருக்க முடியும் என்பதையே இப்போது தான் அநுமானிக்க முடிந்தது. மகாத்மாவுக்காகத் தெய்வங்களைப் பிரார்த்தித்துக் கொண்டான் அவன்.

அத்தியாயம் - 15

1948 ஜனவரி முப்பதாந்தேதி டில்லியில் பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போகும்போது காந்தி மகான் சுட்டுக் கொல்லப்பட்டார். ரேடியோவில் அஞ்சல் செய்து கொண்டிருந்த திருவையாறு தியாகராஜர் உற்சவ நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு இந்தப் பேரிடி போன்ற செய்தி அறிவிக்கப்பட்டது. அன்று டில்லியில் சூரியன் அஸ்தமிக்கும் போது சூழ்ந்த இருள் அதன்பின் பல நாள் வரை பாரத நாட்டில் நீடித்தது. செய்தியறிந்த போது ராஜாராமன் மூர்ச்சையாகிவிட்டான். அன்று காலையில் தான் ஊரிலிருந்து திரும்பி வந்திருந்த பிருகதீஸ்வரன் ராஜாராமனை மூர்ச்சை தெளிவித்து ஆசுவாசப்படுத்தினார். ஓடையில் போய் மகாத்மாவுக்காக முழுகி எழுந்தார்கள் இருவரும். மறுநாள் காலை பிருகதீஸ்வரன் தேசபிதாவைத் தன் சொந்தப் பிதாவாக அங்கீகரித்துக் கொண்டு, அத்தனை காலம் வைத்திருந்த பாசத்தின் அடையாளமாக மகாத்மாவுக்குத் தர்ப்பணம் செய்து எள்ளும் தண்ணீரும் வாரி இறைத்தார். தண்ணீரால் அவர் அந்தத் தர்ப்பணத்தைச் செய்தார் என்பதைவிடக் கண்ணீரால் செய்தார் என்பதே பொருத்தமாயிருக்கும். ராஜாராமனும் தாய் தந்தைக்கே செய்தறியாத தர்ப்பணத்தை மகாத்மாவுக்காகச் செய்தான். முத்திருளப்பனும் குருசாமியும் தலையை மொட்டையடித்துக் கொண்டார்கள்.

தொடர்ந்து ஆசிரமத்தில் காலையும், மாலையும் பிரார்த்தனைகளும், பஜனைகளும் நடந்தன. 'வைஷ்ணவ ஜனதோ'வும் 'ரகுபதி ராகவ' பாடலும் இடைவிடாமல் பல நாட்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. தேசம் நிலை கலங்கிப் போயிருந்தது. ஆன்ம பலத்தினாலும் தூய யோகியின் எளிமைக் கோலத்தாலும், பாரத சுதந்திர யுத்தத்துக்கு வழிகாட்டிய தந்தையின் மறைவு பல கோடி மக்களின் கண்களில் நீரைப் பெருக்கியது. மகாத்மாவின் வாழ்நாளில் அவர் உயிரோடு இருக்கும் போது பணியின் காரணமாகவும், தன்னடக்கத்தின் காரணமாகவும் செய்யத் தயங்கியிருந்த ஒரு காரியத்தை இப்போது ராஜாராமன் மனப்பூர்வமான பிரியத்தோடு செய்து கொண்டான். முன்பு ஹரிஜன நிதிக்காக மகாத்மா மதுரை வந்திருந்தபோது டி.எஸ்.எஸ். ராஜன் தன்னைக் கூப்பிட்டபடி 'காந்திராமன்' என்றே தன் பெயரை மாற்றிக் கொண்டு கெஸட்டுக்கும் அறிவித்து விட்டான் அவன். டி.எஸ்.எஸ். ராஜன் அன்று வாய் தடுமாறி அப்படி அழைத்தபோது, "இப்படியே பேர் வச்சுக்கயேன்" - என்று அருகிலிருந்த வைத்தியநாதய்யர் செய்த ஆசிர்வாதமே இன்று பலித்ததாகக் கருதினான் அவன். காந்தியோடு இந்தியாவில் ஒரு மாபெரும் சகாப்தம் முடிந்துவிட்டதாகத் தோன்றியது அவனுக்கு.

தேர்தலில் நின்று வெற்றி பெற்றுச் சட்டசபையிலோ பார்லிமெண்டிலோ அவன் பணிபுரிய வேண்டும் என்று பின்னாளில் சக தலைவர்களும், தேசபக்தர்களும் அவனை எவ்வளவோ வற்புறுத்தினார்கள். அவன் தீர்மானமாக மறுத்துவிட்டான். ஆசிரமப் பணியே அவன் பணியாகியது.

"எல்லாருமே பதவிகளிலும், நாற்காலிகளிலும் போய் அமர்ந்துவிட்டால், மகாத்மாவின் பணிகளைத் தொடரமுடியாது. பதினெட்டு வருஷ காலத்துக்கும் மேலாக இந்த மகாவிரதத்தில் நாங்கள் ஈடுபட்டோம். பயன் கிடைத்துவிட்டது. கட்சிப் பூசல்களிலும், நாற்காலியைப் பிடிக்கும் பரபரப்பிலும் நமது விரதம் பங்கப்பட்டுப் போய்விடக் கூடாதென்று தான் பயப்படுகிறேன் நான். சுதந்திரம் பெறுவதற்கு முன் நம் எல்லோருக்கும் அடைய வேண்டிய இலட்சியம் சுதந்திரம் என்ற ஒன்றாக மட்டுமே இருந்தது. 'சுதந்திரம் என் பிறப்புரிமை' - என்று திலகர் கொடுத்த குரலையே நம் எல்லாருடைய இதயங்களும் எதிரொலித்தன. அடைய வேண்டியதை அடைந்தபின் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்கும் எல்லைக்கு இப்போது நாம் வந்திருக்கிறோம். நோக்கங்களுக்காகப் போராடும் போது இருந்த ஒற்றுமை பிரயோஜனங்களுக்காக நெருங்கும் போது இருக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும். நாட்டுக்கு நான் எதைச் செய்ய வேண்டுமோ அதை இந்த ஆசிரமத்தின் மூலம் தாராளமாகச் செய்வேன். பதவிகள் ஒரு வேளை சேவை செய்வதில் எனக்குள்ள விநயத்தையும் தாகத்தையும் போக்கினாலும் போக்கிவிடலாம். தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்" என்றான் அவன். பிருகதீஸ்வரனும் அதே மனநிலையில் தான் இருந்தார்.

1948-ம் வருடக் கடைசியில் நடந்த தலைவர் தேர்தலில் பட்டாபி சீதாராமையாவுக்கும், புருஷோத்தமதாஸ் தாண்டனுக்கும் போட்டி கடுமையாயிருந்தது. தாண்டன் தோற்றார். பட்டாபி ஜெயித்தார். பிருகதீஸ்வரனோ, அவனோ அந்தக் காங்கிரஸுக்குப் போகவில்லை. அடுத்த ஆண்டு சென்னையில் குமாரசாமி ராஜாவின் மந்திரிசபை ஏற்பட்டது.

இந்தியா முழுமையான குடியரசு நாடாகிய 1950-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் நாஸிக்கில் கூடிய காங்கிரஸின் போது - பிருகதீஸ்வரன் உடல் நலங் குன்றியதால் புதுக்கோட்டைக்குப் போய் குடும்பத்தோடு தங்கி விட்டார். உள்ளூர்ப் பிரமுகர்களும், சக தலைவர்களும் வற்புறுத்தியதால், ராஜாராமன் தட்ட முடியாமல் நாஸிக் காங்கிரஸுக்குப் போய் வந்தான். நாஸிக் காங்கிரஸில் தாண்டன், கிருபளானி, சங்கரராவ் தேவ் ஆகிய மூவர் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்கள். போட்டியிடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாகக் கட்சியில் உட்பிளவுகளும் அதிகமாகத் தொடங்குவதாகவே உணர்ந்தான் அவன். அந்தக் காங்கிரஸில் தாண்டன் வெற்றி பெற்றார். ஜவஹர்லால் நேருவுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால் கட்சிக்கும் - மந்திரி சபைக்கும் ஒற்றுமையின்றி முரண்பாடுகள் வருமோ என எல்லோரும் வருந்தினார்கள்.

நாஸிக் காங்கிரஸ் முடிந்து அவன் திரும்பிய போது மற்றவர்களோடு மதுரை போகாமல் புதுக்கோட்டை போய்ப் பிருகதீஸ்வரனைப் பார்க்கக் கருதித் திருச்சியிலேயே இறங்கினான் அவன். திரும்பும் போது அப்படி வந்து திரும்புவதாக முன்பே அவருக்கு எழுதியிருந்தான்.

ரயிலிலிருந்து திருச்சியில் இறங்கியதுமே பேரிடி போல் அந்தச் செய்தி அவனுக்குத் தெரிய வந்தது. பிருகதீஸ்வரன் காலமாகிவிட்டார் என்று தெரிவிக்கப்பட்ட போது அந்தச் செய்தியை அவனால் நம்ப முடியவில்லை. இது தாங்கிக் கொள்ள முடியாத அதிர்ச்சியாயிருந்தது அவனுக்கு. அரசியலில் தன் ஆத்மார்த்தமான குருவையும் நண்பரையும் சேர்த்து ஒரே சமயத்தில் இழந்துவிட்டது போல் வேதனையை உணர்ந்து தவித்தது அவன் உள்ளம். அவன் புதுக்கோட்டைக்கு விரைந்தான். அந்தக் குடும்பத்தினருக்குப் பிருகதீஸ்வரனின் மறைவு மிகப் பெரிய அதிர்ச்சியாயிருந்தது. மங்கலமான தோற்றத்தையுடைய பிருகதீஸ்வரனின் மனைவியைச் சுமங்கலிக் கோலத்தில் பார்த்துப் பார்த்துப் பழகியிருந்த அவன் கண்கள், இந்தப் புதிய கோலத்தைப் பார்த்து அதை ஏற்க முடியாமல் தயங்கின. பிருகதீஸ்வரனின் மனைவி வகையில் தமையன்மார்கள், தம்பிமார்கள் வசதியானவர்களாக இருந்ததால் அந்தக் குடும்பம் எதிர்காலத்தை மானமாகக் கழிப்பதில் சிரமப்படாது என்று தோன்றியது. உடன் பிறந்தவர்கள் அனைவருமே அந்த அம்மாளுக்கு ஆறுதலாக அப்போது புதுக்கோட்டையில் வந்து தங்கியிருந்தார்கள். ராஜாராமனைப் பார்த்ததுமே மாமி பொறுக்க முடியாமல் அழுது விட்டாள். அவள் மதுரத்துக்காக மதுரையில் வந்து துணையிருந்ததை எல்லாம் நினைத்தான் அவன்.

"உன் மேலே கொள்ளைப் பிரியம் அவருக்கு. சதா 'ராஜா, ராஜா'ன்னு உன்னைப் பத்தியே சொல்லிண்டிருப்பார். நீ நாஸிக்லேருந்து திரும்பி வர போது இங்கே வரேன்னு மதுரையிலேர்ந்து புறப்படறப்பவே கடிதாசி போட்டிருந்தே. நீ திரும்பி வரபோது உடம்பு சரியாயிடும்; உன்னோடவே மதுரை வரலாம்னு இருந்தார்..."

ராஜாராமன் மாமிக்கு ஆறுதல் கூறிவிட்டுத் தன் மனதுக்கு அப்படி ஆறுதல் கூறிக்கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டான்.

"எனக்குத்தான் மாமா இல்லாமே ரொம்ப ரொம்பக் கஷ்டம் மாமீ! வலது கை ஒடிஞ்ச மாதிரித்தான் இனிமே..." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மேலே பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது அவனுக்கு. கடிதம் போட்டு ஆசிரமத்திலிருந்த குருசாமியையும் முத்திருளப்பனையும் புதுக்கோட்டைக்கு வரவழைத்தான் அவன்.

புதுக்கோட்டையில் பிருகதீஸ்வரனுடைய காரியங்கள் முடிகிறவரை இருந்துவிட்டு ஆசிரமத்துக்குத் திரும்பிய பின்பு துக்கமும் தனிமையும் வாட்டவே, ராஜாராமனுக்கு ஆசிரமத்தில் இருப்புக் கொள்ளாமல் உடம்பும் மனமும் தவித்துப் பறந்தன. பிருகதீஸ்வரனைப் போல் உலக அனுபவமும், முதுமையும், சாந்த குணமுமுள்ள ஒருவர் இல்லாமல் அந்த ஆசிரமத்தை நடத்துவது எவ்வளவு சிரமமான காரியம் என்பது போகப் போக அவனுக்குத் தெரிந்தது. அவனுக்குச் சிரமமே கொடுக்காமல் எல்லா நிர்வாகப் பொறுப்பையும், கஷ்டங்களையும் இதுவரை அவர் தாங்கிக் கொண்டிருந்தார். இப்போது எல்லாப் பொறுப்பையும் அவனே தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. நெருங்கியவர்களும் வேண்டியவர்களும் ஆத்மார்த்தமானவர்களும் ஒவ்வொருவராகப் போய்க் கொண்டிருந்தார்கள். உலகில் தான் மட்டுமே தனியே நிற்பது போன்ற வேதனையைச் சில வேளைகளில் உணர்ந்து தனிமையில் கண்ணீர் விட்டான் அவன்.

ரத்தினவேல் பத்தர் போய் விட்டார். சிரித்துக் கொண்டே பெண்ணைக் காப்பாற்றச் சொல்லி வேண்டிய மதுரத்தின் தாய் போய்விட்டார். மதுரமும் போய்விட்டாள்! அவனைப் போன்ற பல்லாயிரம் இளைஞர்களை இந்தத் தேசபக்தி என்ற மகாவிரதத்துக்கு அழைத்த மகாத்மாவும் போய்விட்டார். வேலூர் சிறையில் அறிமுகமான நாளிலிருந்து குருவாகவும், நண்பராகவும் உடனிருந்து உதவிய பிருகதீஸ்வரன் போய்விட்டார். மனித ஜாதியே அழிந்தபின் மீதமுள்ள மயான பூமியில் தனியே இருப்பது போலிருந்தது அவனுக்கு. துயரத்தை மறக்கவும், தன் மேல் அன்பு செலுத்தியவர்களின் பிரியத்தை எல்லாம் பகிர்ந்து, தான் பிறர் மேல் அன்பு செலுத்தவும் சுயநலமற்ற சேவைகளைச் செய்யும் ஒரு புதிய காலத்துத் தவமுனிவனாக மாறினான் அவன்.

பாரதநாடு பரிபூரணக் குடியரசாக உருப்பெற்றதன் பின் நாட்டில் ஒவ்வொன்றாக வருடங்கள் நகர்ந்தன. நாட்டின் தேர்தல்களும் புதிய புதிய மந்திரி சபைகளும் மாறி மாறி வந்தன. சுதந்திரத்துக்காகப் போராடிய இந்தியாவில் ஒரே ஓர் இயக்கம் தான் இருந்தது. ஓரே ஒரு நோக்கம் தான் இருந்தது. நாட்டுக்கு வந்த சுதந்திரம் அரசியலில் சிந்திக்கும் உரிமையையும் கருத்து வேறுபடும் உரிமையையும் அளித்தது. அகில இந்திய ரீதியிலும், ராஜ்யங்களிலும் பல்வேறு கட்சிகள் தோன்றின. பல்வேறு தலைவர்கள் வந்தார்கள். பல்வேறு இலட்சியங்களைக் கூறினார்கள். கொள்கைகளை உபதேசித்தார்கள். ஆன்மபலத்தில் நம்பிக்கையுள்ள - மகாத்மாவைப் போன்ற அரசியல் சத்தியாக்கிரகி ஒருவரை மட்டும் மீண்டும் பார்க்கவே முடியாமலிருந்தது. அணைக்கட்டுகளும் பிரம்மாண்டமான தொழிற்சாலைகளும் உருவாயின. பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் பெருகின. மொழிவாரியாக மாகாணங்கள் பிரிந்தன. ஒவ்வொரு பிரதேச மொழியும் வளர வாய்ப்பளிக்கும் நல்லெண்ணத்தோடு இது செய்யப்பட்டது. பரிபூரணமாக குடியரசு அந்தஸ்துப் பெற்றுவிட்ட இந்தியாவில் வெளிநாட்டு உறவுப் பிரச்னையில் காஷ்மீரும், உள்நாட்டு உறவு நிலைகளில் மொழியும் நிரந்தரமான தடைகளாக நின்றன. 'செப்புமொழி பதினெட்டு இருந்தாலும் சிந்தனை ஒன்றே' - என்று பல ஆண்டுகளுக்கு முன் பாரதி பாடி வைத்த ஒற்றுமை மெல்ல மெல்லப் போய் எத்தனை மொழிகள் உண்டோ அத்தனைக்கும் அதிகமான வேற்றுமைகளும், வெறுப்புகளும் பிடிவாதங்களும் பெருகின.

1959-ல் காந்திராமன் தலைமையில் 'ரூரல் எஜுகேஷன் ஸ்டடி மிஷன்' ஒன்றை இந்திய அரசாங்கம் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பியிருந்தது. இந்தப் பிரயாணத்தின் போது காந்திராமன் மிகவும் உற்சாகமாயிருந்தார். வெளிநாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும், விஞ்ஞான வேகத்தையும் பார்க்கப் பார்க்க இந்தியா இப்படி வளர்வது என்றைக்கு என்னும் நியாயமான கவலை அவர் மனத்தில் பிறந்தது. ஸ்விட்ஸர்லாந்திலும், ஜெனிவாவிலும் இருந்த போது மகாத்மா ரோமன் ரோலந்தைச் சந்தித்துப் பேசிய பழைய நிகழ்ச்சிகளை அங்குள்ள சில முதியவர்கள் தம்மிடம் சொல்லக் கேட்டு, மனம் நெகிழ்ந்தார் அவர். அந்தப் பிரயாணம் முடிந்து திரும்பியதும் டில்லியில் ஒரு மாதம் தங்கி எல்லாத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார் அவர். நாட்டுப்புறங்களில் கல்வி வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் செய்ய வேண்டிய உடனடியான காரியங்கள் பற்றி நூற்றைம்பது பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை அவர் கல்வி மந்திரியிடம் சமர்ப்பித்தார். சென்னையிலும் மதுரையிலும் அவருக்குப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டைப் பற்றிய தன் எதிர்காலக் கவலைகளை அவர் அந்த வரவேற்புக்களில் மனம் திறந்து பேசினார். மகாத்மாவுக்குப் பின்பு ஆன்ம பலத்திலும் சத்தியத்திலும் தொண்டு செய்வதிலும் கவலையுள்ள ஒரே பெரியவராக ஆசாரிய விநோபாபாவே ஒருவர் மட்டுமே மீதமிருப்பதாக அந்தச் சொற்பொழிவின் போது அவர் குறிப்பிட்டார். ஆன்மாவினால் வாழ முயலும் பரம்பரை போய்விட்டதோ என்று காந்திராமனைப் போன்றவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் விநோபாபாவேயின் சர்வோதயத் தத்துவங்களும் பூமிதான இயக்கமும் அவர் மனத்தைப் பெரிதும் மகிழச் செய்தன. தேசிய மகா விரதங்களைச் செய்யும் முனிவர்களின் கடைசிக் கொழுந்தாக விநோபாபாவே அவருக்குக் காட்சியளித்தார்.

காந்திராமன் மீண்டும் 1961 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காந்தீயச் சொற்பொழிவுகள் செய்யவும், நல்லெண்ணங்களைப் பரப்பவும், இலங்கையிலும், தென்கிழக்கு ஆசியாவிலும், பர்மாவிலும், ஆஸ்திரேலியாவிலுமாக மூன்று மாத காலம் சுற்றுப் பயணம் செய்ய நேர்ந்தது. அந்தச் சுற்றுப் பிரயாணம் முடிந்ததும் சில மாதங்களில் அவருடைய அறுபதாண்டு நிறைவு விழா வந்து சேர்ந்தது. நாடு இருந்த நிலையில் விழாக்கள் கொண்டாடும் மன நிலையிலோ, மாலைகள் அணிந்து கொள்ளும் உற்சாகத்திலோ அவர் இல்லை. எவ்வளவோ மறுத்தும் கேளாமல் நண்பர்களும், அவரால் படித்து முன்னுக்கு வந்தவர்களும், தேசபக்தர்களும் சென்னையில் அந்த விழாவைப் பிரமாதமாக நடத்தி விட்டார்கள். அடுத்த மாதமே ஆசிரமத்துக்குத் திரும்பியதும், தம்மோடு ஆரம்ப முதல் இருந்து ஆசிரமத்துக்குப் பணிபுரியும் முத்திருளப்பனையும், குருசாமியையும் பாராட்டி அவர் ஒரு விழா நடத்தினார். அந்த விழாவில் தங்களைப் பாராட்டி அவர் மனம் விட்டுப் பேசிய பேச்சினால் முத்திருளப்பனும் குருசாமியும் மனம் நெகிழ்ந்து உருகினார்கள். ஆசிரமத்தின் ஒரு பிரேயர் ஹாலுக்குப் பிருகதீஸ்வரனின் பெயரை வைத்துப் 'பிருகதீஸ்வரன் ஹால்' என்று கூப்பிடச் செய்திருந்தார் அவர். மதுரத்தின் நினைவையோ தன் இதயத்துக்கு மட்டுமே சொந்தமான அந்தரங்கமாக வைத்துக் கொண்டுவிட்டார்.

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் நீண்ட நாட்களாக எழுதி வந்த... 'மை கன்டரி - பாஸ்ட் அண்ட் ப்ரெஸென்ட்' - என்ற புத்தகத்தின் இரண்டு பாகங்களும் வெளியிடப்பட்டன. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலருடைய பாராட்டுக்களைப் பெற்றது அந்த நூல். 'மிகவும் பயன்படத் தக்க நூலைப் பயன்பட வேண்டிய சமயத்தில் நாட்டுக்கு அளித்திருக்கிறீர்கள்' - என்று ஜவஹர்லால் நேரு அதைப் படித்துவிட்டு எழுதியிருந்தார். காந்திராமன் அந்தப் பாராட்டில் உள்ளம் குளிர்ந்தார். அந்தப் புத்தகத்தில் இந்தியாவில் இரண்டு சகாப்தங்கள் அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டிருந்தன. சர்தார் படேலின் மறைவு வரை உள்ள காலம் அந்த நூலில் கூறப்பட்டிருந்தது.

சத்திய சேவாசிரமத்தின் கடந்த காலத்தைச் சேர்ந்த வருடங்களில் எத்தனையோ பேர் படித்து வெளியேறிச் சமூகத்தில் கலந்து விட்டார்கள். காந்திராமன் அந்த ஆசிரமத்தில் பல எளிய திருமணங்களையும் நடத்தி வைத்தார். அவற்றில் சில மனம் விரும்பிச் செய்து கொண்ட அன்பின் அடிப்படையைக் கொண்ட கலப்பு மணங்கள். பலருக்கு வாழ்க்கை வழிகாட்டியாக அமையும் நட்பினரும், பழகியவர்களும், அன்பர்களும், அவரைச் சூழ்ந்திருந்த காலங்களில் சொந்த மனத்தின் துயரங்களை அவர் மறக்க முடிந்தது. வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்ட எத்தனையோ திறமையுள்ள இளைஞர்களுக்கு அவரால் வேலை கிடைத்தன. இளமையில் வழி தவறிய இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும், திருந்தவும் வாழவும் வாய்ப்புக் கிடைத்தது. அவருடைய சாந்தமயமான புன்சிரிப்பிலேயே திருந்தியவர்கள் பலர்; பேசிக் கேட்டுத் திருந்தியவர்கள் பலர்; கூட இருந்து ஆசிரம வாழ்வில் பழகிப் பழகிப் பண்பட்டவர்கள் சிலர். சத்திய சேவாசிரமத்தை எப்படி ஆக்கவேண்டுமென்று ஒரு காலத்தில் அவரும் பிருகதீஸ்வரனும் கனவு கண்டார்களோ அந்தக் கனவு இன்று நனவாகிவிட்டது. அவர் அந்தக் கனவு நனவாகியதை இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். பிருகதீஸ்வரனுக்குத்தான், பாவம் இதை இருந்து பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. நாட்டின் அடுத்த பேரதிர்ச்சியாக ஜவஹர்லால் நேருவின் மரணம் நேர்ந்தது. அன்று தன் டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார் அவர்:

'தேசத்தின் ரோஜாக் கனவு அழிந்துவிட்டது. ரோஜா இதழ்களைத் திறந்து பேசிய வாய் இனிப் பேசாது. ரோஜாப்பூக் கைகள் இனி பணி புரியா. 'எனக்குப் பின் என் மொழியை நேரு பேசுவார்' என்று யாரைப் பற்றிப் பெருமையாக மகாத்மா சொல்லிவிட்டுப் போயிருந்தாரோ அந்த இனிய வாரிசும் பாரத நாட்டில் இன்று மறைந்து விட்டது.'

ஜவஹர்லால் நேருவுக்குப் பின் வலிமை வாய்ந்த தலைமை - தேசம் முழுவதும் செவிசாய்க்கும் ஒரு தலைமை இல்லாமற் போய்விட்டது. லால்பகதூர் சாஸ்திரி வந்தார். நாடு முழுவதும் மொழிக் கிளர்ச்சி தீயாய்ப் பரவியது; அவசரப்பட வேண்டாததற்கு அவசரப்பட்டு கலகத்தை வாங்கிக் கட்டிக் கொள்ள நேர்ந்தது. தேசீய ஒருமைப்பாடு மொழிப் பிரச்னையால் சின்னா பின்னமாகிவிடும் போலிருந்தது. வடக்கும், தெற்கும் இணைந்த மனப்பான்மையோடிருக்கப் பாடுபடும் நியாயமான செல்வாக்குள்ள தலைமை இல்லை. பஞ்சசீலக் கரம் நீட்டிய இந்தியாவின் காலை வாரிவிட்டு விட்டிருந்தது சீனா.

போராட்டங்களின் முறை மாறியது. சுதந்திரத்துக்கு முன்பு சத்தியாகிரகமும், தியாகவுணர்வும் பிறரை மனங்கனிய வைப்பதற்காகத் தன்னைத் துன்புறுத்திக் கொள்ளுதலும் அடங்கிய சாத்வீகப் போர் முறை இருந்தது. படிப்படியாகத் தியாக மனப்பான்மை குறைந்து வேண்டியதைத் துன்புறுத்திப் பெறலாம் என்ற அசுர மனப்பான்மை சில பகுதிகளில் வந்துவிட்டது. ஒரு சத்தியாக்கிரகிக்குத் தன்னைக் கொன்று கொள்ளும் பலம் வேண்டுமென்றார் மகாத்மா. தேவையை அடையப் பிறரைக் கொல்லலாம் என்று நினைக்குமளவுக்கு மாறியிருந்தது நாடு. ஒவ்வொரு ராஜ்யத்துக்கும் தன் சுய நன்மைகளில் மட்டுமே பற்று விழுந்தது. வடக்கே உள்ளவர்களின் அவசர மனப்பான்மையால் எல்லாம் குழப்பமாகி விட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பும் தொடர்ந்து தாஷ்கண்ட் சந்திப்பும் நேர்ந்தது. ஆக்கிரமிப்பு வேளையில் மட்டும் மொழி பேதம், மாநில பேதங்களை மறந்து, அபூர்வமாகவும் அவசரமாகவும் நாட்டில் ஓர் ஒற்றுமை உணர்வு தென்பட்டது. தாஷ்கண்டில் எதிர்பாராத விதமாக சாஸ்திரி மறைந்தார். நேருவின் மறைவை ஈடுசெய்வது போல வந்த தைரியசாலியும் மறையவே இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப் பட்டார்கள் பெரியவர்கள். காந்திராமன் மீண்டும் கலக்கம் அடைந்தார்.

மெல்ல மெல்ல நாட்டில் ஓர் அமைதியின்மை உருவாயிற்று. அறுபது வருஷங்களுக்கும் மேலாகக் கட்டிக்காத்து வளர்த்த தேசிய மகாவிரதம் இருபது வருஷங்களில் படிப்படியாகப் பலவீனமடைந்தது. பன்னூறு மகான்களின் எண்ணற்ற தியாகங்களை அஸ்திவாரம் போட்டுக் கட்டிய சுதந்திர மாளிகையில் தூசுகள் அடையத் தொடங்கியிருந்தன. அன்பும், கருணையும் சத்தியமுமாகிய சிறந்த மொழிகளின் பொருளை உணர்ந்த நாட்டில், பேசும் மொழிகளால் வேறுபாடுகள் பிறந்துவிட்டன. அரசியல்வாதிகளிடையே தியாக மனப்பான்மை போய்விட்டது. தேர்தலில் ஜயிப்பதும், ஜயித்தபின் உடனே அடுத்த தேர்தலில் ஜயிக்கும் வழி வகைகளை யோசிப்பதுமாக மாறிவிட்டார்கள். அவர்கள் வறுமையை, பசியை, அறியாமையை ஜயிக்க வேண்டுமென்று சுதந்திரம் பெறுமுன் இருந்த தாகம், சுதந்திரம் பெற்ற பின் தேர்தல்களில் ஜயிக்கும் வெறும் ஆசையாக மட்டுமே வந்து மீந்தது. பணமுள்ளவர்களே தேர்தல்களில் நிற்க முடியுமென்றும் ஆயிற்று.

சத்திய சேவாசிரமத்தின் ஒரு மூலையிலிருந்து செய்தித்தாள்களில் நாட்டு நடப்புக்களைப் படிக்கும் போதெல்லாம் கண்ணீர் வடித்தார் காந்திராமன். ஒரு நிச்சயமான நல்ல காரியம் அல்லது பொதுக்காரியம் தேர்தலில் ஜயிக்க இடையூறாக இருக்கும் என்றால் அதைச் செய்யத் தயங்குவதும், ஒரு நிச்சயமான கெட்ட காரியம் அல்லது பொது நன்மைக்கு இடையூறான காரியம் தேர்தலில் ஜயிக்க உதவியாக இருக்கும் என்றால் அதை உடனே செய்து விடுவதுமாக மாறியது அரசியல். சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்த ஆத்ம பலமும் சத்திய வேட்கையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் எங்கே போயின என்றே தெரியவில்லை.

பல வருடங்களுக்கு முன் பிருகதீஸ்வரன் தன்னிடம் கூறிய ஒரு கருத்தை இப்போது மிகவும் கவலையோடு நினைவு கூர்ந்தார் காந்திராமன்.

"காந்திமகானைப் போல் ஆத்ம பலத்தை நம்பிச் செயலில் இறங்குகிறவர்களும் இல்லாமற் போய் சுபாஷ் சந்திர போஸைப் போல் மனவலிமையையும் உடல் வலிமையையும் நம்பிச் செயலில் இறங்குகிறவர்களும் இல்லாமற் போய்விட்டால் நாளைய இந்தியாவை என்னால் நினைக்கவே முடியவில்லை." -

அன்று என்றோ அவர் கூறிய வார்த்தைகள் இன்றைய நிலைமைக்குத் தீர்க்க தரிசனம் போல் அமைந்திருந்தன. ஆத்ம பலமும், வீரமும் ஒரு புறம் இருக்கட்டும், காந்தியோடும் சுபாஷ் போஸுடனும் அந்தத் தலைமுறை போய்விட்டதென்றே வைத்துக் கொள்வோம். வாக்கு நாணயமும் சத்தியத்தில் பற்றுமுள்ள ஓர் அரசியல் வாதியையாவது இங்கே சந்திக்க முடியாமலிருக்கிறதே! மாணவர்களைக் கட்சி அரசியலில் ஈடுபடுத்தக் கூடாதென்று காந்தி சொன்னார். இன்று ஒவ்வொரு கட்சியும் மீன்களுக்கு வலை வீசுவது போல் கல்விக் கடலிலிருந்து அரசியல் கரைக்கு வலை வீசி மாணவர்களை இழுக்கின்றன. படிப்புக் கெடுகிறது. ஏழைப் பெற்றோர்கள் கவலை அடைகிறார்கள். கட்டுப்பாடு எல்லாத் திசையிலும் குலைகிறது. மூத்தவர்களை மதிப்பதில்லை. காரண காரியத்தோடு நிதானமாக விவாதிக்கவோ சிந்திக்கவோ பொறுமை இல்லை. வெள்ளத்தில் மிதப்பது போல் தவிக்கிறார்கள். எங்கும் எல்லாரும் சந்தர்ப்பவாதிகளும், தேசத் துரோகிகளும், சமூக விரோதிகளும் எங்கே எந்தக் குழப்பம் நடந்தாலும் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் காத்திருக்கிறார்கள். பொதுக் காரியங்களில் சிரத்தை குறைந்துவிட்டது. காந்திராமன் மிகவும் மனம் நொந்து போயிருந்தார். 'மை கன்டரி பாஸ்ட் அண்ட் பிரெஸென்ட்' புத்தகத்தின் மூன்றாவது பாகம் வெளியாயிற்று. 1967 பொதுத் தேர்தல் வரை உள்ள நிலைமைகளும், பிறவும், புத்தகத்தில் அடங்கியிருந்தன. பல்லாயிரம் சதுர மைல்களைச் சீனாவுக்குப் பறி கொடுத்திருக்கும் துயரத்தைப் பற்றி மனம் நெகிழ எழுதியிருந்தார் நூலில். பணத்துக்காகவும் பதவிக்காகவும் கட்சி மாறும் கயமை கண்டிக்கப்பட்டிருந்தது. படித்தவர்கள் விவரம் தெரிந்தவர்கள் கட்சி மாறுவது நாட்டின் ஜனநாயகத்துக்கு இழைக்கும் அவமானமாகும் என்று அந்த நூலில் அவர் மிகவும் வருந்தியிருந்தார்.

1967க்குப் பிறகு நாட்டின் பல மாநிலங்களில் கூட்டு அரசாங்கங்களும், மாறி மாறி மந்திரி சபை கவிழ்தலும், தினம் ஒரு கட்சி மாறுதலும், மாணவர்கள் போராட்டமும் தொழில் அமைதியின்மையும் நிலவின. பலவீனமான நாட்டுத் தலைமை எல்லாவற்றையும் தீர்க்க வழியின்றித் தவித்தது.

"இறைவா! மகத்தான ஒரு சகாப்தத்தைப் பார்த்து விட்டேன். கவலைகளைத் தரும் ஒரு காலம் எதிரே தெரிகிறது. மகாத்மாவின் கண்கள் எந்த இந்தியாவைப் பார்த்தால் ரத்தக் கண்ணீர் சிந்துமோ அந்த இந்தியாவை நான் இருந்து பார்க்க நேரிட்டு விடாமல் என்னை அழைத்துக் கொண்டுவிடு" என்று சதா காலமும் இறைவனைப் பிரார்த்திப்பது அவர் வழக்கமாயிருந்தது. அடிக்கடி நெஞ்சு வலியாலும் ரத்தக் கொதிப்பாலும் அவஸ்தைப்பட்டார் அவர். நாடும் தலைவர்களும், இளம் தலைமுறையும் அவர் ஒருவர் இருக்கிறார் என்பதைப் பற்றிக் கவலைப்படாத வேகத்தில் எங்கோ போய்க் கொண்டிருந்தாலும், அவர் நாட்டைப் பற்றியும், தலைவர்களைப் பற்றியும், இளம் தலைமுறையைப் பற்றியுமே கவலைப்பட்டுச் சிந்தித்தார். அறிக்கைகள் விட்டார். பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். ஆத்மாவினால் வாழ்ந்தவர்களின் நிதானமான தலைமுறை மெல்ல மெல்ல மறைவதையும், மனத்தினால் - உடம்பினால் வளரும் தலைமுறை பரபரப்பாக எதிரே எழுவதையும் கண்டு நெஞ்சு துடித்தார் அவர்.

எங்கெங்கோ ரயில்கள் கவிழ்க்கப்படுதலும் பஸ்கள் எரிக்கப்படுதலுமாகப் பத்திரிகைகளில் படித்த ஒவ்வொரு செய்தியும் அவரைத் தளர்த்தி ஒடுங்கச் செய்தன. அன்பும், கருணையும், சத்தியமும், சுபீட்சமும் நிறைந்த இந்தியாவை அவர் கண்கள் தேடின. உதாசினமும், வெறுப்பும், குரோதமும், மனிதத் தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்காத வெறும் தேர்தல் வேட்டையாடும் கட்சிகளும் நிறைந்த இந்தியாதான் எதிரே தெரியத் தொடங்கியது. தேசத்தை எண்ணிப் பல இரவுகள் உறங்காமல் தவித்தார் அவர். பார்க்க வந்த பிரமுகர்களிடம் எல்லாம் கவலைப்பட்டார். தம் வயதை ஒத்த சர்வோதயத் தலைவர்களுக்குக் கடிதங்கள் எழுதினார். காந்தியமும் சகிப்புத் தன்மையும் இந்திய மண்ணில் மறைவது போல் தோன்றும் போது எங்கோ அது உயிர் பெறுவது புரிந்தது. ஆயுத பலத்தைச் சகிப்புத் தன்மையால் எதிர்கொண்ட செக்கோஸ்லோவேக்கியாவை ரஷ்யா ஆக்கிரமித்த செய்தி வெளியான தினத்தன்று அவர் தம் டைரியில் கீழே வருமாறு எழுதினார்.

'ஏ செக் நாடே! ஒரு காலத்தில் இட்லர் உன் சுதந்திர நெஞ்சில் மிதித்தான். இன்றோ 'வியட்நாமில் மனிதத்தன்மை காப்பாற்றப்படவேண்டும்' என்று கூறிக் கொண்டே எழுபதாயிரம் ரஷ்யர்கள் துப்பாக்கிகளோடு கனமான பூட்ஸ் கால்களால் அழுத்தமாக உன் சுதந்திர நெஞ்சை மிதித்துக் கொண்டு நிற்கிறார்கள். 'தற்காப்புக்கு அடுத்தவனைக் கொல்லும் சக்தி தேவை இல்லை. தானே சாவதற்குரிய மன உறுதிதான் தேவை' என்று எங்கள் மகாத்மா கூறிய உறுதி உனக்கு இன்று இருக்கிறது. நீ அறத்தினால் வெல்வாய்! உன்னை எதிர்க்கும் மறமும், கொடுமைகளும் நிச்சயமாய் அழியும்...'

இது பற்றிப் பத்திரிகைகளுக்கு அவர் ஓர் அறிக்கையும் விடுத்தார். மொழி விஷயத்தில் அவசர மனப்பான்மை காட்டாமல் தென்னிந்தியர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்குமாறு பிரதம மந்திரிக்கு ஒரு கடிதமும், வன்முறைகளில் இறங்குவதைத் தவிர்க்குமாறு மாணவர்களை வேண்டிப் பத்திரிகைகளுக்கு ஓர் அறிக்கையும் அனுப்பினார். அவரிடமிருந்து வெளி உலகுக்குக் கிடைத்த கடைசி உரைகள் இவைதான். இதற்குப் பின்பு அவர் அறிக்கைகள் விடவில்லை. பிரசங்கங்கள் செய்யவில்லை. அறிவுரைகள் கூறவில்லை.

அன்று மதுரத்தின் சிரார்த்த தினம். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தினத்தன்று தவறாமல் நாகமங்கலம் போய்த் திரும்புவது அவர் வழக்கமாயிருந்திருக்கிறது. அன்றும் அதிகாலையிலேயே அவர் நாகமங்கலம் போயிருந்தார். பகல் முழுவதும் அங்கேயே இருந்துவிட்டு மாலையில் ஆசிரமம் திரும்பினார். திரும்பும் போது இருபது வருஷங்களுக்கும் மேலாகத் தாங்கிய சோகம் திடீரென்று கனப்பது போல் ஓர் உணர்வு அவர் உள்ளே உந்தியது.

ஆசிரமம் திரும்பியதும் - மேஜையில் மீதமிருந்த பைல்களில் குறிப்பு எழுதிக் கையொப்பமிட்டார். ஆசிரம நிர்வாக வேலைகளாக முத்திருளப்பனிடமும் குருசாமியிடமும் சிறிது நேரம் பேசினார். காரியதரிசி நாராயண் ராவைக் கூப்பிட்டு 'பெண்டிங்' ஆக இருந்த கடிதங்களுக்குப் பதில் கூறி எழுதிக் கொள்ளச் செய்தார். அது முடிந்ததும் ஓர் அரை மணி நேரம் சர்க்காவில் நூல் நூற்றார். ஆசிரமத்துப் பையன் ஒருவன் அவரைப் பார்க்க வந்தான். அவனோடு பத்து நிமிஷம் பேசி அனுப்பினார். நாகமங்கலம் போய்விட்டு வந்த நினைவுகளை டைரியில் எழுதினார்.

தூங்குமுன் வழக்கமாகப் படிக்கும் கீதைப் பகுதியைப் படித்தபோதும், படுக்கையை நோக்கி நடந்த போதும் நெஞ்சு தாங்க முடியாமல் வலித்தது. மறுபடி திரும்பிப் போய் அறைக் கோடியில் ஒரு மேடையில் வைக்கப்பட்டிருந்த அந்த வீணையை எடுத்து வந்து கண் பார்வையில் படும்படி படுக்கைக்கு அருகே கிடந்த பெஞ்சின்மேல் வைத்துக் கொண்டார். ஜன்னல் வழியே நிலா ஒளியில் மலைகளும், ஓடைக் கரையும், மரங்களும் அழகாகவும் நிசப்தமாகவும் அவரையே பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றின. ஓடை நீர் கலகலவென்று பாயும் ஜலதரங்க ஒலியாகத் தொலைவில் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. நிலாக்காலத்து முன்னிரவின் சௌந்தரியங்கள் அமைதியான அந்த ஆசிரமத்தைச் சுற்றிலும் சூழ்ந்திருந்தன. நிசப்தத்தின் அர்த்தமில்லாத சங்கீதம் போல் காற்று வீசிக் கொண்டிருந்தது. மேகங்கள் இல்லாத நீல நீர்க்குளம் போல் நிலாவைச் சுற்றிய ஆகாயம் களங்கமற்றுத் தெரிந்ததை ஜன்னல் வழியாகப் பார்த்தார் அவர்.

எங்கிருந்தோ 'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு' - என்று ஒரு குரல் மிருதுவாக அவர் செவிகளில் வந்து பூவிதழ்களாய்ச் சொற்களை உதிர்ப்பது போல் உணர்ந்த போது, அவருடைய நெஞ்சு மேலும் தாங்க முடியாமல் வலித்தது. நிலாக்காலத்து முன்னிரவின் சோபைகளும் ஆகாயத்தின் நீலநிற சௌபாக்கியங்களும், ஓடை நீரின் உருவமில்லாத பேச்சும், அநுராகத்தின் சுபசோபனங்களை உணர்த்தும் தென்றலும் எல்லாமே சங்கீதமாய் நிறைந்து தவிப்பது போல் மனத்துள் உணர்ந்தார் அவர்.

அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த வீணையில் வளைகள் அணிந்த தந்தநிறக் கைகள் மெல்ல வந்து ஸ்வர ஜதிகளையும், ராக தேவதைகளையும் மிருதுவாகத் தடவிக் கொடுப்பது போல் மீட்டின. அந்த ஒலிகள் அவருடைய ஆத்மாவைத் தொட்டு அழைத்தன. வீணைக்கும் அப்பால் மகாத்மாவின் படமும் - 'சத்தியாக்கிரகம் என்பது எல்லாக் காலத்துக்கும் பொருந்தி வரக்கூடிய நியதி' என்ற வாக்கியமும் மங்கலாகத் தெரிந்தன. பார்வை மங்கிக் கொண்டே வந்தது. சரீரம் மெதுவாவது போல் இலேசாயிருந்தது. செவிகளில் ஒலித்த ராகங்களிலும், கண்களில் மங்கிய மகாத்மாவின் படத்திலுமாக இதயம் மெல்ல மெல்லக் கரைந்தது.

எல்லையில்லாததோர் காட்டிடை - நள்
இருளென்றும் ஒளியென்றும்
சொல்ல ஒணாததோர் மயக்கத்தே - இளம்
சோகக்குயில் ஒன்றிசைக்கிறது - அதன்
சோகம் முழுதும் தெரியுதிலை
சுவடு முழுதும் புரியுதிலை
தொல்லைப் பழங் காலமுதலாய் - எனைத்
தேடித் தவித்த குரல்
சொல்லைக் குழைத் தாளுங்குரல் ஒரு
சோகம் முதிர்ந்து முதிர்ந்தூறிப்
பல்லாயிர மூழிகள் தொடர்ந்து
பாடிப் பசித்த குயிலின் குரல்...

என்று எப்போதோ - தனிமையும் சோகமும் உந்திப் பிறந்த அந்தக் கவிதை மெல்லிய தொனியில் காதருகே கேட்கிறது. இப்போது உண்மையில் இந்தக் குரலின் தொனியிலேயே ஒரு பசி தெரிகிறது. பல்லாயிரம் ஊழிகள் பாடிய பசி தெரிகிறது. இருளும் ஒளியும் புரியாத மயக்கத்தில் அக்குரல் வருகிற இடத்துக்குத் தேடிப் போக வேண்டும் போல் இருக்கிறது. போகத் தொடங்கிய பாதையோ முடிவில்லாததாயிருந்தது. எட்டாத தொலைவிலிருந்து கேட்கும் அந்தக் குரலின் பிறப்பிடம் வரை தேடிக் கொண்டு போகும்போதே அந்த அவசரத்தில் சரீரம் தவறி ஆன்மா நடந்து போகத் தொடங்குகிறது. ஆன்மாவின் யாத்திரை ஆரம்பமாகும் போதே கேட்கின்ற குரல் மிகமிக அருகில் வந்து விட்டது போலிருந்தது. இருளிலிருந்து ஒளிக்குப் போவது புரிந்தது. துக்கத்திலிருந்து மகிழ்ச்சிக்குப் போவது தெரிந்து சோகமும் சுவடுகளும் புரிந்தன. தன்னைத் தேடும் குரல் எது என்றும் புரிந்தது; தெரிந்தது. கடைசியாகத் தெரிந்த உருவமும், ஒலித்த ராகங்களும், அளித்த புன்னகையும் சாந்தமும் மட்டுமே முகத்தில் அப்படியே பதிந்தன.

பத்து பதினைந்து நிமிஷங்களுக்குப் பின் விளக்குகளை அணைப்பதற்காக நாராயணராவ் அங்கே வந்தபோது பெரியவர் இருளென்றும் ஒளியென்றும் புரியாத உலகிற்குப் போயிருந்தார். இருளிலிருந்து ஒளியை அடைந்திருந்தார். அவர் ஒளியை அடைந்த போது ஆசிரமம் இருண்டது; அழுதது; தவித்தது. பல நூறு குரல்கள் கதறின. கண்கள் நெகிழ்ந்தன.

முத்திருளப்பன் தம்முடைய மூப்பையும், தளர்ச்சியையும் பொருட்படுத்தாமல் அடிக்கடி உடனிருந்து பல விஷயங்களைக் கூறியதாலும் டைரிகளின் குறிப்புக்கள் ஓரளவு பெரியவரின் நினைவுகளையும், அவ்வப்போது கருதிய கருத்துக்களையும் அறிந்ததாலும், என்னால் முடிந்த வரை இந்தக் கதையை எழுதிவிட்டேன். எழுதி முடிந்ததும் நாராயணராவும், குருசாமியும் இதைப் படித்துப் பார்த்துச் சில திருத்தங்களைச் சொன்னார்கள். அந்தத் திருத்தங்களையும் செய்தாயிற்று.

சத்திய சேவாசிரமத்தை அமைக்கும் போதும், பின்னாலும், பெரியவர் காந்திராமனுக்கும் பிருகதீஸ்வரனுக்கும் கெடுதல்கள் பல செய்த சிலரைப் பற்றிக் கதையில் எழுதியிருந்தேன். முத்திருளப்பன் அப்பகுதிகளை நீக்கிவிடுமாறு வேண்டினார்.

"அவன் கருணையும், அன்புமே பெருக வாழ்ந்தவன். அவனுடைய கதையில் கெட்டவர்களைத் தூற்றுவதைக் கூட அவன் விரும்பமாட்டான். தவிரவும் ஒரு சகாப்தத்தின் தியாகிகள் அனைவரும் அவர்கள் மகாவிரதத்தை அவர்களுக்கு அளித்த மகாத்மாவும் இந்தக் கதையில் வருகிறார்கள். அவர்கள் எல்லாரும் வருகிற கதையில் சாந்தமும் சத்தியமுமே நிரம்பியிருக்கட்டும். பல இடங்களை ஒரு கதையாகவே சித்தரித்து விட்டீர்கள். சில இடங்களில் மட்டும் அதற்கு விதிவிலக்காகக் கெட்டவர்களைப் பற்றிய உண்மைகளைச் சொல்வானேன்? அதை விட்டுவிட்டாலும் இதன் சுவை குறையாது! இந்தக் கதைக்கு வில்லன்களே வேண்டாம்." -

நான் அதற்கு ஒப்புக் கொண்டு அப்படியே செய்து விட்டேன். காந்திராமனோடு பழகிய முத்திருளப்பன் காந்திராமனை விட வயது மூத்தவராயிருந்தும், அவரையே தமது குருவாகக் கருதினார். கண்களில் ஒளி மின்ன மின்ன அவரைப் பற்றிப் பேசினார்:

"எங்களை இந்த நோன்பில் ஈடுபடுத்தியவனே அவன் தான்! எத்தனையோ சோர்வான வேளைகளில் அவனுடைய புன்னகையே எங்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. நீங்கள் எல்லாம் ரொம்பப் பிற்காலத்தில் இங்கு வந்து பழகினீர்கள். வடக்குச் சித்திரை வீதித் திலகர் தேசிய வாசகசாலை மாடியில் ஒரே பாயில் படுத்த நாளிலிருந்து அவனோடு பழகியிருக்கேன் நான். அவனைப் போல் விசாலமான மனசு படைச்சவனை இனிமே எப்பப் பார்க்கப் போறேன்னே தெரியலே. நினைச்சதைச் சாதிச்சு முடிக்கிற மனோபலம் அவனுக்குண்டு. மதுரம் போனப்போ அந்த திட மனத்தையும் இழந்து தவிச்சான் அவன். பல விதத்தில் அவன் தேசபக்திக்கு அவள் தான் தூண்டுதல். அவளுடைய பிரியம்தான் அவனைப் பல சாதனைகளுக்குத் தூண்டியதுன்னு சொல்லணும். ஜமீன் குடும்பத்தை, நான் சொன்னதைக் கேட்டு, ரொம்ப நல்லவங்களா மாற்றி எழுதியிருக்கீங்க. ஜமீந்தார் காலமானப்ப அந்த ஜமீந்தாரிணி அம்மா சும்மா இருந்தாலும், வாரிசுங்க - மாந்தோப்பு மதுரத்துக்குப் பாத்தியதை ஆக முடியாதுன்னு - மைனர் லிட்டிகேஷன் சூட்போட்டு வதைச்சாங்க. கேட்கிறவங்க பேச்சைக் கேட்டுக் கொஞ்ச நாள் ஆட்டமா ஆடினாங்க. ஆசிரமத்துக்கு எத்தனையோ சோதனை வந்தது. அதெல்லாம் உலகத்துக்குத் தெரியாது. அத்தனை ஏன்? மதுரம்னு ஒருத்தியோட பிரியத்துலே மூழ்கி எழுந்துதான் காந்திராமன் பெரிய பெரிய காரியங்களைச் சாதிக்கும் சக்தி பெற்றான் என்பது கூட உலகத்துக்கு அதிகம் தெரியாது. காந்திராமனும் அவளுக்குக் கடைசி வரை ஆத்மபூர்வமாகத்தான் நன்றி செலுத்தினான். போகட்டும்; நீங்க இதைக் கதையா எழுதினதிலே எனக்கு ரொம்ப சந்தோஷம். எங்கள் தலைமுறையின் தேசபக்தர்கள் எல்லாருமே இந்தக் கதையிலே கதாபாத்திரங்களாக வராங்க. ரெண்டு தலைமுறைகளைச் சந்திக்க வச்சிருக்கீங்க... அதுக்காக உங்களுக்கு ரொம்ப நன்றி சொல்லணும்" - என்றார் முத்திருளப்பன்.

"பெரியவருக்கு நான் எவ்வளவோ நன்றிக் கடன் பட்டிருக்கேன். இதென்ன சாதாரணமான பிரதியுபகாரம் கூட இல்லே. நான் எழுதாவிட்டால் இன்னும் கொஞ்ச நாள்லே வேற யாராவது இதை எழுதத்தான் செய்வாங்க - ஆனா இதை எழுதற உரிமையை அவரே எனக்குக் கொடுத்திருந்தார் என்பதற்காகவே நான் பெருமைப்படறேன். கதையிலே கூட நான் மாணவ வாழ்விலிருந்து அவரைச் சந்தித்துப் பழகத் தொடங்கிய காலத்தையும் நான் ஒரு பத்திரிகையாளனாக வர அவர் ஊக்கமளித்து எனக்கு உதவியதையும் வேணும்னே எழுதிக்கலை. நானே இதை எழுதினதுனாலே என்னைப் பத்திச் சொல்லிக்க வேண்டாம்னு விட்டுவிட்டேன்" என்று நான் முத்திருளப்பனுக்குப் பதில் கூறினேன். அவர் தலைப்பைப் பற்றிப் பிரஸ்தாபித்தார்;

"இந்த கதைக்கு நீங்க 'மகாவிரதம்'னே பேர் வச்சிருக்கணும்."

"வச்சிருக்கலாம்; ஆனால் இதிலே வர்ரவங்க எல்லோரும் சரீர சுகத்தையும், உடம்பின் தேவைகளையும் பெரிதாக மதிக்காமல் ஆத்மபலத்தினாலே தேசத்துக்காக உழைக்கிறாங்க. அதனாலே, இந்தப் பேரே பொருத்தமாயிருக்கும்னு நினைச்சேன் நான்" என்று அவருக்குச் சமாதானம் சொன்னேன்.

"மதுரத்தை நெனைச்சு இப்படிப் பேர் வச்சீங்களோன்னு தோன்றியது எனக்கு."

"அப்படியும் நான் நினைத்ததுண்டு. உங்கள் கருத்துப்படிப் பார்த்தாலும் அவள் காந்திராமனுக்காகச் செய்த விரதத்தையே இதன் கதாபாத்திரங்கள் அனைவரின் விரதங்களுக்கும் மேலான விரதமாக நான் நினைக்கிறேன்."

நான் கூறியதைக் கேட்டு முத்திருளப்பன் புன்முறுவல் பூத்தார். ஆசிரமத்தில் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு புறப்படுமுன் மீண்டும் கடைசியாகப் பெரியவரின் அறைக்குப் போய் அந்த வீணையையும் அவருடைய கட்டிலையும், பொருட்களையும், டைரிகளையும் பார்த்தேன்.

இணையற்ற சகாப்தத்தின் நினைவுச் சின்னங்களாக அவை தோன்றின. 'மறுபடியும் பாரத மாதாவின் முகத்தில் புன்முறுவல் பூக்கச் செய்ய இப்படி மகாவிரதங்களை நம்புகிறவர்கள் தோன்ற வேண்டும். பனி உருகி இமயம் அழிந்து விடக்கூடாது; அழியவும் அழியாது. கங்கை பிறக்கும்; பிறக்க வேண்டும். எந்த மண்ணில் இறங்கும் ஒவ்வொரு மழைத் துளியும் கங்கையாகிறதோ அந்த மகான்களின் தியாகங்கள், இந்தப் பாரத புண்ணிய பூமியில் உரமாயிருந்து எதிர்காலப் பயிர் என்ற சுபீட்சத்தை வளர்க்க வேண்டும்' என்ற பிரார்த்தனையோடு அங்கிருந்து புறப்பட்டேன் நான். இந்தக் கதையைப் படிக்கும் வாசகர் நினைவிலும் அந்தரங்க சுத்தியோடு இதே பிரார்த்தனை ஏற்பட வேண்டுமென்று பரிபூரணமாக நான் ஆசைப்படுகிறேன்.

நான்கு மாதங்களுக்குப் பின் இந்தக் கதையின் அச்சான முதற்பிரதியோடு மீண்டும் ஆசிரமத்திற்குச் சென்றேன். 'ஆத்மாவின் ராகங்கள்' முதற் பிரதியைப் பெரியவர் காந்திராமனின் அறையில், மதுரத்தின் அந்த வீணை அருகே கொண்டு போய் வைத்தாலே அதை அவரிடம் சமர்ப்பித்ததாக எனக்குள் ஒரு பாவனை தோன்றியது. அவ்வாறு செய்ய விரும்பினேன் நான்.

அப்படியே செய்தபோது அந்த வீணையில் மோனமாக உறைந்து கிடந்த ராகங்கள் எல்லாம் என் செவிகளில் கிளர்ந்து வந்து ஒலிப்பதாக நான் உணர்ந்தேன். வாசிக்கப் படாது எஞ்சிய ராகங்கள் பலவற்றைக் கேட்கும் புதுமையான அநுபவமாயிருந்தது அது. யாருடைய ஆத்மாவின் ராகங்கள் கதையில் சொல்லப்பட்டிருந்தனவோ அவளிடமும் அவரிடமுமே அந்தப் புத்தகத்தைச் சேர்த்துவிட்ட திருப்தி அப்போது எனக்கு ஏற்பட்டது. ஆத்மாவின் ராகங்கள் உறைந்து கிடக்கும் அந்த வாத்தியத்தோடு புத்தகமும் சேர்ந்து தென்படுவதை என் விழிகள் நீண்ட நேரம் இமையாமல் பார்த்துக் கொண்டேயிருந்தன. கண்களில் நீர் நெகிழ்ந்தது.