adi eduthu vaikka sirandha kaal

அடியெடுத்து வைக்க சிறந்த கால்

காலையில் நடை பழக, திருவாளர் பூரான் 21 ஜோடி காலணிகள் அணிந்து தயாராகிறார். இவ்வளவு கால்கள் இருந்தும் எந்தக் காலை முதலில் எடுத்து வைப்பது என்று அவருக்கு ஒரே குழப்பம்! எண்களை எண்ணுதல் மற்றும் ஐயப்பாடான நிலை பற்றி சொல்லும் இக்கதையில் பூரான் மற்றும் அவரது தோட்ட நண்பர்களுடன் இணைந்து கொள்ள வாருங்கள்.

- Rajam Anand

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

“நடை பழக உகந்த நாள்!” என்று எண்ணினார் திருவாளர் பூரான்.

‘எனது 42 கால்களைச் சீராகவும், உறுதியாகவும் வைத்துக்கொள்ள இதைவிடச் சிறந்த வழி வேறேது?’ என்று சிந்தித்தார்.

தனது ஒவ்வொரு காலிலும் ஒரு தரமான, அழகான, பளிச்சிடும் காலணியை அணிந்து கொண்டார். மொத்தம் 21 ஜோடி காலணிகள், அவரது 42 கால்களுக்காக!

வீட்டின் வெளியே, அவர் முதலில் சந்தித்தது அம்மணி ஊசித்தட்டான் தும்பியை.“ஆஹா! எவ்வளவு பெரிய காலணிகளை அணிந்திருக்கிறீர்கள்!” என்றுஅவள் ஆச்சரியப்பட்டாள்.

‘‘அது சரி, நீங்கள் நடப்பதற்கு முதலில் எந்தக் காலை எடுத்து வைப்பீர்கள்?” என்று கேட்டாள்.

“ஏன், இந்தக் காலைத்தான்!” என்று இரண்டாம் காலைத் தூக்கினார் திருவாளர் பூரான். “இல்லை! இரு... இரு... இந்தக் காலை!” என்றுநான்காம் காலைத் தூக்கினார் திருவாளர் பூரான்.

“எவ்வளவு அழகான காலணிகள்!” என்று வியந்தார் அங்கு வந்த வண்டு  மாமா.

“சொல்லுங்கள் பூரான் ஐயா, நீங்கள் நடப்பதற்கு முதலில் எந்தக்  காலை முன் வைப்பீர்கள்?” என்று கேட்டார்.

"எவ்வளவு ஒரு மடத்தனமான  கேள்வி?" என்று கோபமடைந்த பூரான், தனது மூன்றாவது காலை நீட்டிக் காட்டினார். உடனே அதைக் கீழே இறக்கி, அதற்குப் பதிலாகத் தனது ஆறாவது காலை நீட்டினார்!

“இங்கே என்ன நடக்கிறது?” என்று கேட்டவாறே வந்தார் எறும்பு பாட்டி.

“உஷ்! பாவம்! மிகவும் குழம்பிப் போயிருக்கிறார் நம் பூரான் ஐயா” என்று அம்மணி ஊசித்தட்டான் அவரிடம் ரகசியமாக சொன்னாள். பின், “இவ்வளவு நேரமாகியும், எவ்வளவோ காலணிகள் இருந்தும், அவரால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை” என்றாள்.

“அப்படியா!” என்று பெருமூச்சு விட்ட எறும்பு பாட்டி“பூரானே, நீங்கள் நடக்க முயலும் போது எந்தக் காலை முதலில் எடுத்து வைப்பீர்கள்?” என்று கேட்டார்.

“நான் பொதுவாக இந்தக் காலைத்தான் வைப்பேன்!” என்று தனது நான்காவது காலைக் காட்டினார் திருவாளர் பூரான்.

உடனே, மீண்டும், “இல்லை, இல்லை இதுதான்.” என்று தன் எட்டாவது காலைத் தூக்கிக் காட்டினார்!

பின்னர், “இல்லை, இல்லை. இவற்றில் எதுவுமில்லை. ஓ! இல்லை! இவற்றில் ஏதாவது ஒன்று! ஓ! இல்லை! எனக்கு நான் என்ன சொல்ல வந்தேன் என்றே மறந்து விட்டது!” என்றார்.

“ஓடுங்கள், விரைந்தோடுங்கள்!” என்று ஒரு குரல் எச்சரித்தது. “யாரது?” என்று வண்டார் உரத்த குரலில் கேட்டார். “நான்தான்! குச்சிப் பூச்சி! உங்கள் காலணிகளின் உதவியுடன் வேகமாக ஓடுவது உமக்கு நல்லது, பூரான் ஐயா!’’ என்று அது எச்சரித்தது.

“நான் ஒரு கருப்புப் பறவையைப் பார்த்தேன்! அது பசியுடன் காலை உணவுக்காக அலைவதைப் போலிருந்தது. நான் இளைப்பாறிக் கொண்டிருந்த மரப்பட்டையை ஒத்த நிறத்தில் நான் இருப்பதால் அந்தப் பறவையால் என்னைப் பார்க்க முடியாது. ஆனால், உங்களைக் கண்டிப்பாகப் பார்த்துவிடும்! உங்கள் பளிச்சிடும் வண்ணக்காலணிகளே உங்களைக் காட்டிக் கொடுத்துவிடும். ஆகவே, விரைந்தோடி மறைந்து கொள்ளுங்கள்!’’ என்று கிசுகிசுப்பான குரலில் சொன்னது.

“ஹஹ்ஹா” என்று குச்சிப்பூச்சி சிரித்தார்.“அப்படி என்ன வேடிக்கை இங்கே?” என்று கேட்டாள் ஊசலாடியபடி அங்கு வந்து சேர்ந்த சிலந்திப் பெண்மணி.

“உண்மையில் நான் சொன்னது போல எந்தக் கருப்புப் பறவையும் வரவில்லை. நான் விளையாட்டுக்குத்தான் அப்படிச் சொன்னேன்! திருவாளர் பூரான் அவர்களால் நன்கு ஓடமுடியும் என்று உங்களுக்கும் இப்போது புரிந்திருக்குமே!” என்றது குச்சிப் பூச்சி.

ஒரு அடி கூட எடுத்து வைக்கத் தயங்கிய பூரானால் வேகமாக ஓடமுடியும் என்பது வேடிக்கையாக இருக்கிறது அல்லவா?

இது நமக்கும் பொருந்தும்! நம்மை அறியாமலேயே நாம் பல விஷயங்களை தினமும் செய்கிறோம். உதாரணமாக, பேசும்போது கண்களைச் சிமிட்டுவதும், கைகளை அசைப்பதும் நாம் உணராமலே செய்வதாகும். எத்தனை முறை கண்களைச் சிமிட்டுகிறோம் அல்லது கைகளை எப்படியெல்லாம் ஆட்டுகிறோம் என்று கவனிக்க ஆரம்பித்தால் நாம் மிகவும் குழம்பிவிடுவோம்!

இதையே பூரானின் தடுமாற்றம்(Centipede's dilemma) அல்லது ஹம்ப்ரி விதி என்று சொல்கிறோம்.