adisaya thalayanai

அதிசயத் தலையணை

மஞ்சள் தலையணை, நீலத் தலையணை இரண்டு தலையணைகளுக்குள் போட்டி. யார் தலைப்பக்கம் இருப்பது? யார் காலடியில் கிடப்பது? நீங்கள் யார் பக்கம்? போட்டியைத் தீர்த்து வையுங்களேன்.

- கொ.மா.கோ. இளங்கோ

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

கட்டிலில் இருந்த மஞ்சள் தலையணையைப் பார்த்து,

“ஏதோ சிந்தனையில் இருக்கிற மாதிரி தெரியுது” என்று கேட்டது, நீலத் தலையணை.

“ஆமாம்! சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நினைத்து யோசிச்சிட்டு இருக்கேன்”

என்றது, மஞ்சள் தலையணை.

“ஓ!உனக்கு யோசிக்கத் தெரியுமா? காலடியில் கிடக்கிற தலையணையே, ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சிட்டுருந்தேன்”

என்றது, நீலத் தலையணை.

“ஒரு வாரத்துக்கு நீ காலடியில் இருக்கணும். நான் தலைக்குப் போகிறேன்.”

என்றது, மஞ்சள் தலையணை.

“என்னது, நான் காலடியில் கிடக்கணுமா? நான் உயர்ந்தவன் என்பதால்தான் என்னைத் தலைக்கும் உன்னைக் காலுக்கும் வைத்திருக்கிறார்கள்”

என்று கோபத்துடன் சொன்னது,

நீலத் தலையணை.

“நீயும் நானும் ஒரே இடத்தில் இருந்துதான் இங்கே வந்திருக்கோம். இதில் நீ உயர்வு, நான் தாழ்வு எப்படி வந்தது?”

“எங்கிட்டயே மோதிப் பார்க்கிறயா. உன்னை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைத்தும் , என்ன திமிர்ப் பேச்சு?” என்று கோபத்துடன் கூறியது, நீலத் தலையணை.

“நீ தலைப்பகுதியில் இருக்கிறதுக்கான நியாயமான காரணம் ஒண்ணு சொல்லு?”

“இதுகூடத் தெரியாமல்தான் இவ்வளவு பேசுனீயா, மஞ்சள் தலையணையே? கண், காது, மூக்கு, வாய், மூளை போன்ற முக்கிய உறுப்புகள் எல்லாம் என் மீதுதான் ஓய்வெடுக்கின்றன தெரியுமா?”

“நீ புத்திசாலின்னு நினைச்சேன், நீலத் தலையணையே! இப்படி விசயம் தெரியாமல் இருக்கியே? மூளை ஓய்வெடுத்தாலும் நீயும் நானும் தேவைப்பட மாட்டோம்.” என்றது, மஞ்சள் தலையணை.

அதிர்ச்சியில் இருந்த நீலத் தலையணை சுதாரித்துக்கொண்டு,    ”அது எனக்கும் தெரியும். அவ்வளவு முக்கியமான மூளையே மேலதான் இருக்கு, ஆனா ஒண்ணு. உன்னால் எப்பவும் மேலே வரமுடியாது.” என்றது.

“நான் ஏன் மேலே வரப் போறேன்?

நீ சொல்கிற முக்கியமான உறுப்புக்களைச் சுமந்து செல்வதே நாந்தான். யோசித்துப் பார், உடலுக்குத் தலையும் காலும் எவ்வளவு முக்கியமோ, அதேபோலதான் மஞ்சள் தலையணையான நானும் நீலத் தலையணையான நீயும் முக்கியம்.”

“என்னால் அதை ஒரு நாளும் ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்றது, நீலத் தலையணை.

“நீ ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்

அதுதான் உண்மை” என்றது,

மஞ்சள் தலையணை.

அதுவரை அமைதியாக இருந்த மெத்தை,” நிறுத்துங்க.

இது வேண்டாத விவாதம். தலையணைகளுக்குள் இருப்பது என்ன?” என்று கேட்டது.

“இது என்ன கேள்வி, பஞ்சுதான்” என்றது நீலத் தலையணை. “இல்லை, தலையணைக்குள் மனிதர்களின் ஆயிரம் ஆயிரம் கனவுகள் புதைந்திருக்கின்றன. அவற்றுக்குக் கை,கால் முளைத்து கதைகளாக வெளிவருகின்றன. மகிழ்ச்சி, அன்பு, கருணை போன்ற அற்புதமாக பண்புகளைக் கற்றுத் தருகின்றன. அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன” என்று சொல்லிவிட்டு, மஞ்சள் தலையணையும் நீலத் தலையணையும் பார்த்தது, மெத்தை.

இரண்டு தலையணைகளும் திகைப்புடன் அமர்ந்திருந்தன.

“காலில் இருக்கும் தலையணைக்குள் மனிதர்கள் கடக்க வேண்டிய பாதைகளும் பயணிக்க வேண்டிய தொலைவும் புதைந்துள்ளன.

கால், தலை எனத் தனித்தனி தலையணைகள் இல்லை.

காலில் உள்ள மஞ்சள் தலையணை தலைக்குப் போனால், தலை செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்யும். அதேபோல் தலையில் உள்ள தலையணை காலுக்கு வந்தால்,

கால் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்யும். இரண்டு தலையணைகளும் ஒன்றே. இதைப் புரிந்துகொண்டால் போதும்” என்றது, மெத்தை.

“மனிதர்களோடு இருந்து அவர்களின் குணங்கள் எனக்கும் வந்துவிட்டன. என் தவறை உணர்ந்தேன். நான் கொஞ்ச நாளைக்குக் கால் பக்கம் இருக்கிறேன். நீ தலைப்பக்கம் போ” என்றது நீலத் தலையணை.

உடனே மஞ்சள் தலையணை, நீலத் தலையணையை அன்போடு கட்டிப் பிடித்தது. மெத்தைக்கு மகிழ்ச்சி.