ahilyabai holkar

அஹில்யாபாய் ஹோல்கர்

மல்வாவை 28 ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் கதை இது. தன்னுடைய சிறந்த பணிகளால் சரித்திரத்தில் இடம் பெற்ற இந்த ராணியைப் பற்றிப் படிக்க வாருங்கள்.

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

எதேச்சையான ஒரு சந்திப்பு (1733)

“ஆஹா, என்ன அழகான குதிரைகள், யானைகள்!” பரவசத்தோடு கூச்சலிட்ட அஹில்யா, “யார் இவைகளை இங்கே அழைத்துவந்தார்கள்?” என்றாள் வியப்பு நீங்காமலேயே. அவள் அந்த அழகிய விலங்குகளிடமிருந்து பார்வையை விலக்க மனமின்றி கண்களைத் திருப்பினாள். இன்னும் சில நிமிடங்களில் இருட்டிவிடுமே!

ஆகவே, அவள் சட்டென்று ஆலயத்துக்குள் சென்று, ஒரு விளக்கை ஏற்றினாள். கண்களை மூடிக்கொண்டு தலைதாழ்த்தி இறைவனை வணங்கினாள்.

அங்கே, அவளை மல்ஹர் ராவ் கவனித்துக்கொண்டிருந்ததை அவள் அறியவில்லை. அவர், வீரமும் துணிவும் நிறைந்த ஒரு சுபேதார்; மல்வா பிரதேசத்தின் மூத்த மராத்தா அதிகாரியும் ஆவார். மல்ஹர் ராவ் புணேவுக்குச் சென்றுகொண்டிருந்த வழியில் சௌண்டி என்ற மஹாராஷ்டிர கிராமத்தில் முகாமிட்டிருந்தார்.

அவரோடு வந்த குதிரைகள் மற்றும் யானைகளைத் தான் அஹில்யா கண்டு, வியந்து, ரசித்துக்கொண்டிருந்தாள். அவளைக் கவனித்த மல்ஹர் ராவ், 'இவளிடம் ஏதோ ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. என் மகன் கந்தே ராவுக்கு இவள் இசைவான மனைவியாக இருப்பாள்' என்று எண்ணினார். அந்தக் காலத்தில் திருமணங்கள் மிக இளமையிலேயே நடத்தப்பட்டன.

இந்தூர் பயணம் அஹில்யா கிராமத் தலைவர் மங்கோஜி ஷிண்டே என்பவரின் மகள். அவள் ஆட்டிடையர் குடும்பத்தைச் சேர்ந்தவள். அந்தக் காலத்தில் பெண்களைப் பள்ளிக்கு அனுப்பமாட்டார்கள். வீட்டையும் குடும்பத்தையும் கவனித்துக்கொள்வது தான் பெண்களின் வேலை என்று சமுதாயம் கருதியது. பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஆனால், அஹில்யாவின் தந்தை இதற்கு மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார். அவர் தன் மகளுக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்தார். அஹில்யாவுக்கும் கந்தே ராவுக்கும் திருமணமானதும், அவள் ஹோல்கர் குடும்பத்தின் மருமகளானாள். மல்வா பிரதேசத்தில் இருந்த இந்தூருக்குச் சென்றாள். அதன் பிறகு நடந்தவையெல்லாம் சரித்திரமாகிவிட்டன. அஹில்யா அரசியாவது நடந்தே தீரவேண்டிய ஒரு சம்பவம்!

யார் இந்த அஹில்யாபாய்?

முந்நூறு ஆண்டுகளுக்கு முன், 28 ஆண்டுகள் (1767-1795 கி.பி) மல்வா அரசை ஆண்ட அரசிதான் மஹாராணி அஹில்யாபாய். 18ம் நூற்றாண்டில் மல்வாவை இவர் ஆட்சி செய்த விதம் மிகவும் பாராட்டப்படுகிறது.  இவருடைய அரசாங்கம், சரித்திரத்திலேயே மிகவும் கருணை மற்றும் செயல்திறன் நிறைந்த அரசாங்கமாகக் கருதப்படுகிறது. அந்த நேரத்தில், மராத்தா அரசாங்கத்துக்கு, "பேஷ்வா"க்கள் பல புதிய எல்லைகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். ‘பேஷ்வா’ என்பது பெர்ஷிய மொழிச் சொல். இதன் பொருள் – ‘முதன்மையான’ அல்லது ‘முதல் அமைச்சர்’ என்பதாகும். மராத்திய சாம்ராஜ்யத்தின் முதலமைச்சர்களுக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டது. மராத்திய சாம்ராஜ்யம் உச்சத்தில் இருந்தபோது அதன் எல்லை தமிழ்நாட்டின் தஞ்சாவூரிலிருந்து, தற்போது பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் வரை நீண்டிருந்தது. அதன் வடக்குப்பகுதியை குவாலியரின் ஷிண்டேக்களும் இந்தூரின் ஹோல்கர்களும் வலுவாகக் காத்தார்கள்.

மல்ஹார் ராவ் தான் ஹோல்கர் ஆட்சியை நிறுவியவர். மத்திய இந்தியாவின் மல்வாவில் முதல் மராத்தா சுபேதாராக சிறப்பாக அறியப்படுபவர். அவருக்குப் பிறகு, அஹில்யாபாய் மல்வாவை ஆண்டார். அஹில்யாபாய்

ஒரு மிகச்சிறந்த அரசியாகத் திகழ்ந்தார். படையெடுப்புகளின் போது அழிக்கப்பட்டக் கோயில்களைப் புதுப்பித்தார், நர்மதை நதிக்கரையில் படித்துறைகளை அமைத்தார், தன்னுடைய நாட்டு மக்களை நன்கு கவனித்துக்கொண்டார்.

இதனால், “புண்யஷ்லோக் அஹில்யாபாய்” என்று அழைக்கப்பட்டார். குறையில்லாத குணமுடையவரைக் குறிக்க வழங்கப்படும் சமஸ்கிருதப் பட்டம் அது.

ஒரு கொந்தளிப்பான வாழ்க்கை(1754)

அஹில்யாபாய்க்கு 29 வயதே ஆகியிருந்த போது, அவரைச் சோகம் தாக்கியது. அப்போது ராஜபுத்திரர்களின் ஆட்சியின் கீழ் இருந்த ராஜஸ்தானிலிருக்கும் கும்பெர் கோட்டையை மராத்தாக்கள் முற்றுகையிட்டிருந்தார்கள். அஹில்யாபாயின் கணவர் கந்தே ராவை ஒரு பீரங்கிக் குண்டு தாக்கியதில். அவர் உடனடியாக இறந்தார். கண்மூடித் திறக்கும் நேரத்துக்குள் எல்லாம் முடிந்துவிட்டது. அஹில்யாபாய் வேதனையில் வீழ்ந்தார். அக்கால வழக்கப்படி, அஹில்யா ‘உடன்கட்டை’ (சதி) ஏறத் தயாரானார். ‘சதி’ என்பது, அன்றைய இந்துப் பெண்கள் மத்தியில் பின்பற்றப்பட்ட ஒரு வழக்கம் – இறந்துவிட்ட கணவனின் உடல் எரியூட்டப்படும் போது அந்தத் தீயில் மனைவி தானும் குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொள்வதாகும். கணவன் இறந்த பிறகு, ஒரு மனைவிக்குப் பாதுகாப்பு இல்லையென்பதால், அவளது வாழ்க்கைக்கு மதிப்பில்லை என்று தவறாகக் கருதப்பட்டது.

இப்போது, ‘சதி’ இந்தியாவில் தடை செய்யப்பட்டுவிட்டது.

கந்தே ராவுக்கு இன்னும் இரண்டு மனைவிகள் இருந்தனர். (பலதாரமணம் – ஒருவர் பல பெண்களை மணப்பது என்பது அக்கால வழக்கத்தில் இருந்தது) அவர்கள் இருவரும் உடன்கட்டை ஏறினார்கள். அடுத்து உடன்கட்டை ஏறத் தயாரான அஹில்யாபாயை, கடைசி நேரத்தில், மனமுடைந்து போயிருந்த மல்ஹர் ராவ் தடுத்துவிட்டார். ‘‘என் ஒரே மகனை நான் இழந்துவிட்டேன். இப்போது நீயும் நெருப்பில் குதிக்காதே. எங்களை விட்டுச் சென்று விடாதே. இனிமேல் நீதான் எனக்கு மகனைப் போல‘’ என்றார்.

மல்ஹர் ராவ், மகன் இறந்துவிட்ட நிலையில் தன் நம்பிக்கையை அஹில்யாபாயின்  மீது வைத்தார். தன் மருமகள், தன் மகனைவிடத் புத்திசாலி என்று அவருக்குத் தெரியும். ஆகவே, அவள் மல்வாவைத் திறமையுடனும், புத்திசாலித்தனத்துடனும் ஆட்சி செய்வாள்  என்று மல்ஹர் ராவ் நம்பினார்.

ராணி அஹில்யா மல்ஹர் ராவ், தான் போருக்குப் போகும் சமயங்களில், அஹில்யாபாய் நாட்டை ஆள வேண்டுமெனத் தீர்மானித்தார். அதற்காக, அவர் அஹில்யாவுக்கு போர்க்கலையிலும், நிர்வாக விஷயங்களிலும் பயிற்சி அளித்தார். அவர் வெளியூர்களுக்குச் சென்ற போதும், கடிதங்கள் வாயிலாக அவளுக்கு ஆளுமைத்திறன் பற்றி அறிவூட்டி வந்தார். மராத்தா வழக்கப்படி, கணவரோடு அஹில்யாபாயும் பல சமயங்களில் போர்க்களங்களுக்குச் சென்றிருந்த காரணத்தால் போருக்குத் திட்டமிடல், போர் நடத்துதல் போன்ற சிக்கலான விஷயங்கள் அவருக்கு புதியனவாக இருக்கவில்லை.

ஒருமுறை, மல்ஹர் ராவ் அஹில்யாபாய்க்கு, குவாலியரில் உடனடியாக ஓர் ஆயுதத் தொழிற்சாலை அமைக்கவேண்டும் என்று செய்தி அனுப்பினார். அதற்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், சிறந்த கண்காணிப்பாளர்கள், பீரங்கிகளைக் கொண்டு செல்வதற்கான காளைகள் ஆகியவை தேவைப்பட்டன. அதிவிரைவில் தொழிற்சாலை அமைக்கப்பட்டு இயங்க ஆரம்பித்திருந்தது. இத்தகைய வேகமான செயலாக்கத்திற்குக் காரணம், எந்த வேலையை யாரிடம் ஒப்படைப்பது என்று தேர்வு செய்யும் சிறப்புத் திறமை அஹில்யாபாயிடம் இருந்ததே ஆகும்.

அஹில்யாபாயைப்பற்றி அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ என்னும் தன் புத்தகத்தில் பண்டிட் ஜவஹர்லால் நேரு, இவ்வாறு எழுதுகிறார்: “அஹில்யாவின் ஆட்சியில் மிகச்சிறந்த ஒழுங்கும், திறமையான ஆளுமையும் நிலவியது; மக்கள் வளமாக வாழ்ந்தனர்; ஆகவே அது வரலாறு படைத்தது. அவர் ஒரு திறன்மிகுந்த ஆட்சியாளராகவும் அதிகாரியாகவும் திகழ்ந்தார், பிறரால் பெரிதும் மதிக்கப்பட்டார், அவர் காலமான பிறகும் அவரை ஒரு புனிதரைப் போல் மக்கள் புகழ்ந்தார்கள்.”

பிரிட்டிஷ் வரலாற்று அறிஞரான ஜான் கீ அஹில்யாபாயை, “தத்துவஞானி அரசி” என்கிறார். பிரிட்டிஷ் இந்தியாவில் பணியாற்றிய அதிகாரியான ஜான் மால்கம், அஹில்யாபாய் காலமான பின்பு அவருடைய வாழ்க்கையைப் பதிவுசெய்தார். “இவரைப் போல் மிகவும் தூய்மையான, பின்பற்றத்தக்க ராணியாக இதுவரை எவரையும் நான் அறியவில்லை” என்கிறார்.

அடுத்த சுபேதார் யார்?

கந்தே ராவ் இறந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மல்ஹர் ராவ் காலமானார். மல்ஹர் ராவ்தான் அஹில்யாபாயின் மிகப்பெரிய ஆதரவாளராக இருந்தார். அவருடைய மரணத்துக்குப்பிறகு, பேஷ்வாக்கள் அஹில்யாபாயின் மகன் மலே ராவைச் சுபேதாராக நியமித்தார்கள். அப்போது மலே ராவுக்கு வயது 21. ஆனாலும், தினசரி நிர்வாகக் கடமைகளை  அஹில்யாபாய் தானே கவனித்துக்கொண்டார்.

மலே ராவின் காப்பாளர் அல்லது அரசுப் பிரதிநிதி என்ற முறையில் அவர் ஆட்சியை நடத்தினார். மலே ராவ் ஒன்பது மாதங்கள் மட்டுமே சுபேதாராக இருக்க முடிந்தது என்பது வருத்தமான விஷயம். அவருக்குச் சில மனநலப் பிரச்சனைகள் இருந்தன. அந்தப் பாதிப்பில்இருந்த தருணத்தில் அவர் ஒரு நெசவாளியைக் கொன்றுவிட்டார். தன்னுடைய சொந்த மகனாயிருந்த போதும், அவர் மீது விசாரணையைத் தொடங்கினார் அஹில்யாபாய். விசாரணையில் நெசவாளி மீது எந்தப் பிழையும் இல்லை என்று தெரிய வந்தது. அதிர்ந்து போன மலே ராவ், குற்றவுணர்ச்சி வதைக்க, விரைவிலேயே இறந்தார்.

தனியாகக் காத்தவர்

மலே ராவின் மரணத்துக்குப் பிறகு, அஹில்யாபாயின் அரசு ஒரு பெரிய ஆபத்தைச் சந்தித்தது. அஹில்யாபாய் அரசு மேலாளரான கங்கோபதாத்யா, புணேவின் ரகோபதாதா பேஷ்வேயுடன் சேர்ந்துகொண்டு ஒரு சதி செய்தார். மஹேஷ்வருக்கு வந்து அஹில்யாபாயின் நாட்டைப் பிடித்துக்கொள்ளுமாறு ரகோபதாதாவுக்கு அழைப்பு விடுத்தார்.

மராத்தா அரசாங்கத்தின் நான்காவது பேஷ்வாவான மாதவ்ராவ் பேஷ்வாவின் மாமாதான் இந்த ரகோபதாதா.

அவர், தான் பேஷ்வா ஆகவேண்டும் என்று எப்போதும் கனவு கண்டுகொண்டிருந்தார். ஆனால்,  அந்தப்பதவியை நழுவவிட்டதில் ஆழ்ந்த மனவருத்தத்துடன் இருந்தார். கங்கோபதாத்யா அழைத்ததும் ரகோபதாதா புதியவாய்ப்பைக் கண்டு உற்சாகமானார். ஆரவாரமின்றி, திருட்டுத்தனமாக மஹேஷ்வர் செல்லத் திட்டமிட்டார். அங்கே சென்றதும் அஹில்யாபாயைப் போருக்கு அழைத்து மல்வாவைப் பிடித்துவிடலாம் என்று நினைத்தார்.

அஹில்யாபாய் ஒரு பெரிய, பரந்த ஒற்றர் படையை உருவாக்கியிருந்தார், அவர்கள் எதிரிகளின் நடவடிக்கைகளை அவ்வப்போதே தெரிவித்தனர். நிதானத்துடனும் உடனுக்குடனும் செயல்பட்டு, தன்னுடைய விசுவாசமிக்க, பாதுகாப்புப்படை வீர்ரான துகோஜி ஹோல்கரைப் படைத்தலைவராக நியமித்தார். பின்னர் மாதவ்ராவ் பேஷ்வாவுக்கு தானே அப்பகுதியின் நிர்வாக விவகாரங்களை கவனித்துக்கொள்வதற்கு அனுமதி வேண்டி ஒரு கடிதம் அனுப்பினார், அத்துடன், மற்ற மராத்தா தலைவர்களுக்கும்; அவர்களுடைய ஆதரவையும் படைபலத்தையும் கோரி கடிதங்களை அனுப்பினார்.

ரகோபதாதா மஹேஷ்வரை நோக்கி வந்துகொண்டிருக்கையில், அஹில்யாபாய் அவருக்கு, 'ஒரு பெண்ணிடம் தோற்றால் உங்கள் கௌரவம் பாதிக்கப்படும் அளவுக்கு உங்களுடன் போரிடுவது என்னை பாதிக்காது'என்று ஒரு செய்தி அனுப்பினார். ரகோபதாதா உஜ்ஜயினியை அடைந்தார். அஹில்யாபாய் அவரைச் சந்திக்க எப்படிச் சென்றார் தெரியுமா? யானைப்படையும் குதிரைப்படையும் அணிவகுக்க தனது மொத்தப் படைகளோடு  தலைமை வகித்து ஊர்வலமாகச் சென்றார்!

காவியம் படைத்த  இந்தக் காட்சியைக் கண்டு, வியந்து பாராட்டி, ஆதரவைத் தெரிவிக்க மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வந்தனர். குடிமக்களின் அன்பு, மரியாதை, பாராட்டு மற்றும் விசுவாசம் இவற்றைக் காண்பித்த இந்தச் செயலே அஹில்யாபாயின் வெற்றிக்கு உண்மையான சான்று! மாதவ்ராவ் பேஷ்வா ரகோபதாதாவைத் திரும்பிச் செல்லுமாறு உத்தரவிட்டார், மல்வாவை தொடர்ந்து நிர்வகிக்க அஹில்யாபாய்க்கு அனுமதி அளித்தார். அஹில்யாபாய் தன்னுடைய தலைநகரை இந்தூரிலிருந்து அருகிலிருந்த மஹேஷ்வருக்கு மாற்றினார். அது நர்மதை நதிக்கரையிலிருந்தது.

செழுமையும் எளிமையும்

மராத்தா ராஜ்ஜியத்திலேயே செல்வச் செழிப்புமிக்க ஆட்சியாளர்களில் ஒருவர் அஹில்யாபாய். ஆனால், அரசுப்பணத்தைத் தனிப்பட்ட சுகபோகங்களுக்குப் பயன்படுத்தும் பழக்கம் ஹோல்கர்களிடம் கிடையாது. அஹில்யாபாய் மாளிகையில் அன்றி ஓர் எளிய இரண்டு மாடிக் கட்டிடத்தில்தான் வாழ்ந்தார். தினந்தோறும் அஹில்யாபாய் அரசவையைக் கூட்டுவார். இன்றைக்கும் பெண்களுக்குக் கிடைக்காத பல உரிமைகளுக்கு போராடிக் கொண்டிருக்கையில், முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே அவ்வுரிமைகளை, அஹில்யாபாயால் வழங்க முடிந்தது. விதவைகள் சொத்து வாங்கவும், குழந்தைகளைத் தத்தெடுத்துக்கொள்ளவும் தடை விதித்திருந்த சட்டங்களையெல்லாம் நீக்கினார்.

அஹில்யாபாயின் ஆட்சியில், வர்த்தகம் வளர்ந்தது, விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள், பிற நாடுகளுடனான உறவுகள் ஆழமாகின, அவருடைய தலைநகரில் கலையும், இசையும், இலக்கியமும் வளர்ந்தன. சுருக்கமாகச் சொன்னால், அவருடைய ஆட்சி ஒரு நிறைவான, இலட்சிய அரசாட்சியாக விளங்கியது! நெசவாளிகள், கைவினைக் கலைஞர்கள், சிற்பிகள், ஓவியர்கள் ஆகிய எல்லாருக்கும் மஹேஷ்வர் நகரம் ஆதரவளித்தது.

இசைவான நெசவு

இன்றைக்கும், மஹேஷ்வர் நகரம் சிறந்த பருத்தி மற்றும் பட்டாடைகளுக்குப் புகழ்பெற்று விளங்குகிறது. நெசவாளிகள் இங்கு வேரூன்றியதற்கு அஹில்யாபாயின் ஊக்கமளிப்பே காரணம், அஹில்யாபாய், மஹேஷ்வர் நகரில் ஒரு நெசவாலையை அமைத்தார். இங்கே  நெய்யப்பட்ட ஆடைகள் மிக அருமையாக  இருந்ததால், பேஷ்வா அரசவையில் இருந்த பணக்கார அதிகாரிகள் இவற்றை புணேவுக்கு வரவழைத்து அணிந்தார்கள்.

தீர்க்க தரிசனம்

நல்ல தலைவர்கள் நிகழ்காலத்தை மட்டுமல்ல, எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு திட்டமிடுவார்கள். ஆங்கிலேய அரசாங்கத்தால் இந்தியாவுக்கு வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே யூகித்துப் புரிந்துகொண்ட முதல் சில ஆட்சியாளர்களில் ஒருவர் அஹில்யாபாய்.

இந்தியர்களோடு ஒப்பிடும்போது ஆங்கிலேயப் படைகள் வேறுவிதமாகச் போரிடுகின்றன என்று புரிந்துகொண்ட அஹில்யாபாய், தன் படையில் ஒரு ஃபிரெஞ்சுத் தளபதியை நியமித்தார். அவர் நான்கு படைப்பிரிவுகளுக்கு ஐரோப்பியப் போர்முறைகளில் பயிற்சியளித்தார்.

அஹில்யாபாய், 1772–ல் பேஷ்வாக்களை ஆங்கிலேய அரசோடு மிகவும் நெருங்கிப் பழகவேண்டாம் என்று எச்சரித்து கடிதம் எழுதினார். அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

‘ஒரு பொறி அமைத்துப் பிடித்தோ அல்லது நம் பலம் கொண்டு தாக்கியோ ஒரு புலியைக் கொன்றுவிடலாம் ஆனால், கரடி நம்மைக் கட்டிப்பிடித்து இம்சைப்படுத்தியே கொன்றுவிடும்.'

இந்திய அரசர்கள், பிரபுக்கள் மற்றும் தளபதிகளுக்கு தங்களுக்குள் சண்டையிடுவதற்கே நேரம் சரியாக இருந்தது, ஆங்கிலேயருக்கு எதிராக அனைவரும் ஒன்றுகூட வேண்டும்என்கிற தொலைநோக்குப் பார்வை யாருக்கும் இருக்கவில்லை.இதைக் கண்டு அஹில்யாபாய் மிகவும் வருந்தினார்.

வரலாற்றில் அழியாப் புகழ்(1795) அஹில்யாபாய் 1795ல் காலமானார். அப்போது அவருக்கு வயது எழுபது. அஹில்யாபாயைப் பெருமைப்படுத்தும்வகையில் 1996ம் ஆண்டு, இந்திய அரசாங்கம் அவர் பெயரில் ஒரு தபால்தலையை வெளியிட்டது. இந்தூரிலுள்ள சமூக அமைப்பொன்று, பொதுமக்களின் நன்மைக்காக உழைப்பவர்களுக்கு அஹில்யாபாயின் பெயரில் விருது ஒன்றை அளிக்கிறது. இந்தூர் விமான நிலையத்துக்கு, அவர் நினைவாக, ‘தேவி அஹில்யாபாய் விமானநிலையம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தூர் பல்கலைக்கழகம் ‘தேவி அஹில்யாபாய் விஷ்வவித்யாலயா’ என்று அவரது பெயரில் இயங்குகிறது.

மக்களுக்காக அஹில்யாபாய்

அஹில்யாபாய் துணிவோடு ஆட்சி செய்தார், மக்கள் அவரை நம்பினார்கள்.

அவருடைய மஹேஷ்வர் அரண்மனைக்கு வெளியே பொறிக்கப்பட்டுள்ள வாசகம் இது:

“நான் என் குடிமக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கக் கடமைப்பட்டவள். என் செயல்களுக்கு நானே பொறுப்பு. நான் செய்யும் செயல் அனைத்துக்கும் கடவுளிடம் நான் பதில் சொல்லியாக வேண்டும்.”