அய்மன் ஒரு குட்டிப் பெண். நான் அய்மனுடைய பள்ளிப் பை. நாங்கள் இருவரும் நண்பர்கள்.
அய்மன் காலையில் எழுந்து பள்ளிக்கு கிளம்புவாள்.
நான் அறையின் மூலையில் என் இடத்தில் இருந்து அவளை கவனிப்பேன். சீக்கிரம் வெளியில் செல்லப் போகிறோம் என்று எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
தினமும் காலையில், என்னை முதுகில் மாட்டிக் கொண்டு அய்மன் பள்ளிக்கு செல்வாள். அவள் வேகமாக நடக்கும்போது என் இதயமும் வேகமாக அடித்துக் கொள்ளும்.
அவள் சாலையில் நடக்கும்போது நான் அவள் முதுகில் சவாரி செய்வேன். பள்ளி வாகனத்தில் நான் அவள் மடியில் வசதியாக உட்கார்ந்திருப்பேன். அய்மனுக்கு என்னை மிகவும் பிடிக்கும்.
பள்ளிக்குச் செல்லும் வழியில் நான் மற்ற பள்ளிப் பைகளை சந்திப்பேன். நாங்கள் பேசிக் கொண்டும் பாடிக் கொண்டும் குழந்தைகளுடன் குதித்தும் ஓடியும் பள்ளியைச் சென்றடைவோம்.
வண்ணப்படங்கள் நிறைந்த புத்தகங்கள், குறிப்பேடுகள், அழிப்பான், எழுதுகோல், சாப்பாட்டு டப்பா போன்ற பல சாமான்களை அய்மன் என் உள்ளே வைப்பாள். அவள் சாப்பாட்டு டப்பாவிலிருந்து கம-கமவென்று நல்ல மணம் வரும்.
இந்தச் சாமான்கள் எல்லாம் என்னுள்ளே புரண்டு கொண்டே இருக்கும். அய்மன் என்னை முதுகில் மாட்டிக் கொண்டு குதிப்பாள். அய்மன் மேலும் கீழும் ஓடுவாள். நான் எப்போதும் அவளுடனே இருப்பேன்.
மதிய சாப்பாட்டு இடைவெளியின் பொழுது அவள் என்னைப் வகுப்பறையில் வைத்து விட்டுச் செல்வாள். அந்தச் சமயத்தில் நான் தனிமையாக உணர்வேன். வகுப்பறையில் மற்ற பைகளும் இருக்கும். நாங்கள் எல்லோரும் பேசி, பாடி, சிரித்தாலும் எனக்கு அய்மன் இல்லாமல் தனிமையாகத் தோன்றும்.
பள்ளி முடிந்தவுடன் அய்மன் என்ன செய்வாள் தெரியுமா? வீட்டுக்குச் செல்லும் அவசரத்தில் எல்லாச் சாமான்களையும் எனக்குள் வைத்துத் திணிப்பாள். அவள் வேகமாக ஓடும்போது எனக்கு மூச்சு வாங்கும்.
வீட்டிற்கு வந்த பிறகு என்னை ஒரு மூலையில் போட்டுவிட்டு என்னைப் பற்றி மறந்து போவாள். நான் அவளை ஒரு மூலையிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பேன்.
அய்மன் வளர வளர என் சுமையும் வளர்ந்து கொண்டே போகிறது. அவளுக்கு என்னைச் சுமப்பது சிரமமாக இருக்கின்றது. எங்கள் சுமையை யாரவது குறையுங்களேன்!