aindhu kambangal konda kiraamam

ஐந்து கம்பங்கள் கொண்ட கிராமம்

தங்கள் ஊரில் மின்சாரக் கம்பங்கள் நிறுவப்படுவதால் உற்சாகம் அடைகின்ற மக்கள், அதற்கு தங்களால் இயன்ற உதவியும் செய்கின்றார்கள். ஆனால் தங்கள் வேலையை நிறைவு செய்ய மின்சாரத்துறை ஊழியர்கள் வராமல் போகவே, அவர்கள் பலநாட்கள் காத்திருந்த பின் நம்பிக்கை இழக்கிறார்கள். மின்சாரக் கம்பிகளின்றி நிற்கும் ஐந்து காலி கம்பங்களை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்?

- Ayshwarya Ra.Vi

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு அமைதியான கிராமாத்தில் புதிதாக மின்சார கம்பங்கள் நடுவதற்கான வேலை தொடங்கியிருந்தது.  அதற்காக நடந்த ஏற்பாடுகள் ஊர்மக்களுக்கு விசித்திரமாக இருந்தன.

ஒவ்வொரு நாளும் கம்பங்களுக்காக ஒரு பள்ளம் வெட்டப்பட்டது.  மொத்த கிராமமும் கூடி அதை  வேடிக்கை பார்த்தது.

கம்பங்களை தூக்கி பள்ளங்களுக்குள் நிறுத்த கயிறுகளை பயன்படுத்தினர்.  ஊர்மக்களும் அதற்கு உதவி செய்தனர். சிறுபிள்ளைகள் கூட உற்சாகத்துடன் தங்களால் முடிந்த வரையில் பலமாக கயிற்றை இழுத்தனர். "ஏலேலோ ஐலசா!"

எல்லா கம்பங்களும் நிறுவப்பட்ட பின், அங்கு வந்திருந்த மின்சாரத்துறைக் குழுவினர் காணாமல் போயினர். அவர்கள் திரும்ப வருவார்கள் என்று ஊர்மக்கள் தினமும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். மின்சாரம்

கிடைக்கப்போவதைப் பற்றி உற்சாகமாக கூடிக் கூடி பேசினர்.

சில நாட்களில், மக்கள் அந்த கம்பங்களில் ஏறி இறங்கத் தொடங்கினார்கள். உயரத்தில் இருந்து தூரத்தில்

உள்ள ஊர்களையும்

சுற்றுப்புறக் காட்சிகளையும்

பார்க்க வசதியாக இருந்தது.

நாட்கள் பல கடந்தன. ஆனால்

மின்சாரம் கிடைப்பதற்கான

அறிகுறியே இல்லை.

ஒரு நாள் மாலை, ஒரு சிறுமி தன் வீட்டில் எரிந்து கொண்டிருந்த விளக்கை எடுத்து வந்து ஒரு கம்பத்தின் உச்சியில் மாட்டினாள்.

ஊரார் அனைவரும் கம்பத்தில் ஒளிரும் விளக்கை கவனித்தனர்.

மறுநாள் மாலை ஐந்து கம்பங்களிலும் விளக்குகள் மாட்டப்பட்டன. அன்று முதல் மக்களுக்கு தினமும் விளக்குகளில் எண்ணை ஊற்றி ஏற்றுவது வழக்கமானது. அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு அதை செய்து மகிழ்ந்தனர் (களித்தனர்).

இதனால், மின்சாரம் இல்லாதபோதும்

இரவு நேரத்தில்

பக்கத்து கிராம மக்களுக்கு

இந்த ஊர் தெளிவாகத் தெரிந்தது.

எனவே, அவர்கள் இதனை

"ஐந்து  கம்பங்கள் கொண்ட

கிராமம்" என்று அழைக்கத்

தொடங்கினர்.