akka akka idi yengirunthu varuthu

அக்கா! அக்கா! இடி எங்கிருந்து வருது?

சின்ன தம்பியின் விஷயதாகம் நிரம்பிய மனதில் எப்பொழுதும் பெரிய அக்காவிடம் கேட்பதற்காக நிறைய கேள்விகள் இருக்கும். அக்காவிடம் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் இருக்கும் என்பதும் தம்பிக்கு தெரியும். ஏனென்றால் அக்காதான் எப்பொழுதும் பெரிய பெரிய புத்தகங்களாக படிக்கிறாரே!இந்த புத்தகத்தில் சின்ன தம்பிக்கு இடிமுழக்கம் எங்கிருந்து வருகிறது என்று சந்தேகம். சொர்க்கத்தையே நடுங்கவைக்கும் வண்ணம் வானத்தில் வாழும் கோபம் கொண்ட அரக்கனின் கர்ஜனைதான் இடிமுழக்கமோ என்பதில் தொடங்கி, அட்டகாசம் புரியும் பைக் வீரர்கள் மேகத்தில் கூடி செய்யும் சப்தம்தான் இடியோ என்று பலவித பதில்கள்.கடைசியில் அக்கா சரியான விடையை சொல்கிறார். குதூகலமூட்டும் இந்த புத்தகத்தை படித்து விடையை தெரிந்து கொள்ளும்முன் நீங்களே சொல்லுங்கள்: இடிமுழக்கம் எங்கிருந்து வருகிறது?

- S. Jayaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அக்கா! அக்கா! எனக்கு புரியலை...

என்ன புரியலை? சின்னதம்பி என்ன புரியலை?

இடி இடிக்குதே, அது எங்கிருந்து வருதுன்னு எனக்கு புரியலை!

நான் நினைக்கிறேன்,

நான் நினைக்கிறேன்...

என்ன நினைக்கிறேன்னு எனக்கு சொல்லு சின்ன தம்பி?

நான் நினைக்கிறேன்!

இருக்காரு ஒருத்தரு பெரிய கும்பகர்ணனு!

வானத்திலே படுத்துகிட்டுத் தூங்குறாரு

வெள்ளி மழை சாட்டையாலே

அடிவிழுந்ததும் தூக்கம் கலையுது!

அவரு எழுந்திருக்கிறாரு!

கண்களில் பொறி பறக்குது,

அது மின்னலாகத் தெரியுது. பெரிய காலை

ஓங்கி மிதிச்சி, ஆழமாக மூச்சை இழுத்து

கோபத்திலே கத்தறாரு மிகவும் சத்தமா...

(நான் ஒண்ணு சொல்லட்டுமா? இப்படி வீட்டிலே நான் செய்திருந்தா, எங்கம்மா என்னை புடைச்சிருப்பாங்க, நல்லா செமத்தியா!)

நான் நினைக்கிறேன்!

இடி அங்கிருந்துதான் வருது!

தூக்கம் போனதாலே,

மழையில் நனைஞ்சு

போனதாலே கும்பகர்ணன்

வானத்திலே கோபப்பட்டதாலே!

புத்திசாலி நான் அக்கா? அப்படித்தானே?

நிச்சயமா! சின்னதம்பி! நீ புத்திசாலிதான்!

நீ சொன்னதில் கூட உண்மையிருக்கலாம்!

ஆனால் நான் படித்த புத்தகங்கள்

சொல்வது இப்படி இல்லையே!

என்ன சொல்லுது? அக்கா என்னதான் சொல்லுது?

நீ என்ன நினைக்கிறே? சின்னதம்பி என்ன நினைக்கிறே?

நான் நினைக்கிறேன், நான் நினைக்கிறேன்...

சொல்லு சின்ன தம்பி! நீ என்ன நினைக்கிறே?

நான் நினைக்கிறேன்...

வானத்திலே பைக் வண்டி ஓட்டும் கூட்டம் ஒண்ணு

கருப்பு தோலு ஜாக்கெட்,

கால் ௨றையில் இரும்பு ஆணிகள்!

கண்ணு மறைக்குமே போட்ட கருப்பு கண்ணாடி,

சினிமாவில் பார்ப்போமே அது போல இருப்பாங்க!

அவங்களுக்குப் புடிச்சது என்ன தெரியுமா?

மழையில் நனைஞ்சுகிட்டு பைக்கிலே பந்தயம்!

நான் நினைக்கிறேன்...

பைக் மேலே ஏறி கிளம்ப உதை கொடுக்கிறாரு,

இரும்பும் இரும்பும் மோதும் போது

தெரிவதுதான் மின்னல்!

அப்புறம் செய்வது எல்லாருமே செய்வதுதான்!

விரைவாக செல்ல இஞ்சினின் வேகத்தைக் கூட்டுறார்

அந்த சத்தம்தான் நமக்கு இடியாகக் கேட்குது!

இடி வருவது இங்கிருந்துதான் என்று நினைக்கிறேன்.

அசுரனின் கோபமல்ல,

ஆகாய விமானமல்ல காரணம்,

மழையில் பந்தயம் செல்லும் பைக் வீரர்கள்தான்!

புத்திசாலி நான்

அக்கா? அப்படித்தானே?

நிச்சயமா! சின்னதம்பி! நீ புத்திசாலிதான்!

நீ சொன்னதில் கூட உண்மையிருக்கலாம்!

ஆனால் நான் படித்த புத்தகங்களில்

பதிலாய் சொல்வது இது இல்லையே!

என்ன சொல்லுது? அக்கா என்னதான் சொல்லுது?

நீ என்ன நினைக்கிறே? சின்னதம்பி என்ன நினைக்கிறே?

நான் நினைக்கிறேன், நான் நினைக்கிறேன்...

சொல்லு சின்ன தம்பி! நீ என்ன நினைக்கிறே?

நான் நினைக்கிறேன்...

மழை ரொம்ப அதிகம் பெய்யும் பொழுது

வானத்தில் இருக்கும் வயதான பாட்டியின்

பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு,

வெளியில் சென்று விளையாட

நிச்சயமாக அனுமதியில்லை!

(ஜலதோஷம் பிடித்துவிட்டால்?)

அறைக்குள்ளே அடைபட்ட பிள்ளைகளோ

அட்டகாசமும், ரகளையும், செய்கிறார்களே!

நான் நினைக்கிறேன்...  வயதான பாட்டி தன் பெட்டியை திறக்கிறார்.

குழந்தைகளும் குதூகலத்தில் கையை தட்டுது.

பகடைக் காய்களும் இப்போ தரையில் உருளுது!

பரம சந்தோஷமாக பொழுதும் போகுது!

பகடைக் காய்களைப் பாட்டி உருட்டும் போது

வானத்தில் அவை உருண்டோடும் சத்தம்

இடிபோல் கேட்பது அதுதான் என்று நினைக்கிறேன்!

புத்திசாலி நான்அக்கா? அப்படித்தானே?

நிச்சயமா! சின்னதம்பி! நீ புத்திசாலிதான்!

நீ சொன்னதில் கூட உண்மையிருக்கலாம்!

ஆனால் நான் படித்த புத்தகங்கள்

சொல்வது இப்படி இல்லையே!

என்னதான் சொல்லுது அக்கா?

புத்தகங்கள் என்னதான் சொல்லுது?

இங்கே வா என் சின்னதம்பி!

புத்தகங்கள் சொல்வதை சொல்கிறேன்!

அவை சொல்லுது!

அவை சொல்லுது...

என்ன சொல்லுது அக்கா? எனக்கும் சொல்லு அக்கா!

புத்தகங்கள் சொல்லுது...

மின்னலை தொடர்ந்துதான் எப்போதும் இடி வரும்,

உனக்கு இது தெரியும் அல்லவா?

மின்னல்தான் இடியை உருவாக்குகிறது,

நான் சொல்வது உனக்கு புரிகிறதா?

புத்தகங்கள் சொல்வது இதுதான்!

மின்னல் என்பது மின்சாரம் போல!

விந்தைகள் புரியும் அதே மின்சாரம்தான்!

பம்ப்பை ஓட்டும் மின்சாரம்! பளிச்சென

வீட்டிற்கு ஒளி தரும் மின்சாரம்!

அதுவும் ஒரு விசையை தட்டிய உடனே!

சச்சின், சௌரவை டிவியில் பார்த்திட உதவும் சமாசாரம்!

ஆனால் நான் கேட்டது இடியை பற்றி அக்கா! இடியை பற்றி!

கொஞ்சம் பொறுத்திடு சின்னதம்பி! கொஞ்சம் பொறுத்திடு! புத்தகம் சொல்லுது!

மின்னல் என்பது வெகு சூடானது!

மின்சாரத்தை போல! காற்றைக் கிழித்து கீழிறங்கி,

பூமியில் படும்போது, வருகின்ற பாதையில்

தொடுகின்ற காற்றையும், மிகமிக சூடாக்கும்! சூடான காற்று விரிவடையும்!

பூம் என்ற அதிர் வெடி ஒலியுடன்!

தீபாவளி ராட்சஸப் பட்டாசு போல!

சில சின்னக் குழந்தைகள், தாயின் சேலைக்குள் தம்மை, பாதுகாப்பாய் மறைத்துக்கொள்வார்கள் உன்னைப் போன்ற பயமில்லா பிள்ளைகளோ, காற்று பூம் என்று வெடிப்பதைக் கேட்டு பின்னால் திரும்பி என்னைக் கேட்பீர்கள்,

அக்கா! அக்கா! இடி எங்கிருந்து வருகிறது? இதுதான் உண்மையா! அக்கா! இது உண்மையா? நான் எப்படி சொல்வேன் சின்னதம்பி! எப்படி சொல்வேன்? ஆனால் நான் படித்த அத்தனை புத்தகங்களிலும் இப்படித்தான் எழுதியிருக்குது!

மேலும் தெரிந்து கொள்ளுங்கள்!

இடி எங்கிருந்து வருகிறது?

நன்மைச் சுற்றியுள்ள எல்லா பொருட்களுமே சிறிய துகள்களானஅணுக்களால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு அணுவிலும் கருப்பகுதியாக இருப்பதை நியூக்ளியஸ் என்பர். இதில் இரண்டு வகையான துகள்கள் இருக்கும். புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள். பூமி சூரியனைச் சுற்றி வருவது போல் கருப்பகுதியை சுற்றி வரும் மிகச்சிறிய துகள்களை எலக்ட்ரான்கள் (மின்னணு) என்பார்கள்.

புரோட்டான்கள் மற்றும் எலெக்ட்ரான்களில் மின்னேற்றம் (charge) உண்டு. புரோட்டான்களில் நேர்மறை மின்னேற்றமும், எலெக்ட்ரான்களில் எதிர்மறை மின்னேற்றமும் இருக்கும். ஒவ்வொரு அணுவிலும் புரோட்டான்களுக்கு சமமான அளவில் எலெக்ட்ரான்கள் இருக்கும். ஒரு அணுவை மொத்தமாக பார்த்தால் அது மின்னேற்றத்தில் நடுநிலையில்(neutral) இருக்கும்.

ஆனால் இரண்டு அணுக்கள் ஒன்றை ஒன்று உரசும் பொழுது, அவைகளுக்கிடையே எலெக்ட்ரான்கள் மாற்றம் நிகழலாம். இதில் எலெக்ட்ரான்களை இழக்கும் அணு, அதிக புரோட்டான்களுடன், நேர்மறை மின்னேற்ற சக்தி அதிகம் பெற்று இருக்கும்.

அதிக எலெக்ட்ரான்களை பெறும் அணு, எதிர்மறை மின்னேற்ற சக்தி அதிகம் பெற்றிருக்கும். இப்பொழுது இவைகளை சக்தியூட்டப்பட்ட துகள்கள் அல்லது அயனிகள்(ions) என்று அழைப்பார்கள்.

இடி உண்டாக்கும் மேகங்களில், பனிக்கட்டி மற்றும் நீர்த்திவலைகளை காற்று மேல் நோக்கி எடுத்து செல்லும். இவை ஒன்றையொன்று உரசிக் கொள்ளும் பொழுது, இதில் உள்ள அணுக்கள் அயனிகளாகும்.

நேர்மறை அயனிகள், எலெக்ட்ரான்களை இழந்தால், இலேசாக இருக்கும். அவை மேல் நோக்கி செல்லும். அதே சமயம் பளுவான எதிர்மறை அயனிகள் மேகங்களின் கீழ்பாகம் நோக்கி செல்லும்.

எதிரெதிர் மின்னேற்றங்கள் ஒன்றையொன்று கவரும். மேகங்களின் கீழ்ப் பகுதியில் உள்ள எதிர்மறை அயனிகள், பூமியின் மேலுள்ள நேர்மறை அயனிகளை ஈர்க்கும். அயனிகள் ஒன்றை ஒன்று நோக்கி நகரத் தொடங்கும். இதனால் மின்சாரம் உண்டாகி, இது ஒரு பெரிய, சக்தி வாய்ந்த மின்னலாக காட்சி தரும்.

இந்த மின்னல் சுற்றியுள்ள காற்றை சூரியனின் வெப்ப நிலை அளவுக்கு சூடுபடுத்துகிறது. இதனால் காற்று விரைவாக, அதிர் வெடி சத்தத்துடன் விரிவடைகிறது. மின்னல் கடந்து சென்ற பின்னே, வெப்பம் உடனடியாக குறைந்து, காற்று சுருங்கிவிடுகிறது. காற்றின் விரைந்த, அதிர்வெடி

செய்து பாருங்கள்!

விந்தை பலூனை உருவாக்குங்கள்.

தேவை:

ஒரு பலூன்.

பட்டு அல்லது கம்பளி துணி துண்டு.

ஒரு சுவர்.

செய்முறை:

பலூனை ஊதுங்கள்.

பட்டு அல்லது கம்பளி துணி கொண்டு,

பலூன் மீது நன்கு உரசுங்கள்.

அதை ஒரு சுவருக்கு எதிராக பிடித்து கொள்ளுங்கள். இரும்பு காந்தத்தில் ஒட்டுவது போல் சுவரில் பலூன் ஒட்டிக் கொள்ளும்.

காரணம் என்ன?

பலூனை பட்டு/ கம்பளி துணியால் உரசும்

பொழுது இரண்டிற்குமிடையே எலெக்ட்ரான்கள்

மாற்றம் நடைபெறுகிறது. பலூன் அணுக்கள் அதிக எலெக்ட்ரான்களை எடுத்து கொள்வதால், அதில் எதிர்மறை மின்னேற்றம் உண்டாகிறது.

அதை சுவருக்கு எதிராக பிடிக்கும் பொழுது, பலூனில் உள்ள எதிர்மறை அயனிகள், சுவரில் உள்ள நேர்மறை அயனிகளால் ஈர்க்கப்படும்.

இந்த ஈர்ப்பினால் பலூன் சுவரில்

ஒட்டிக் கொள்கிறது.