தேவபட்டணத்துத் தேரோடும் வீதியில் ஒரு குதிரை வண்டி கடகடவென்று சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. வண்டிக்குள்ளே ஒரு இளம் பிரயாணி உட்கார்ந்திருந்தான். அவன் தலையிலே பல வர்ணக் கோடுகள் போட்ட உருமாலையைத் தலைப்பாகையாகக் கட்டிக் குஞ்சம் தொங்கவிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தால், மத்திய இந்தியாவிலிருந்து வரும் வியாபாரியைப் போல் காணப்பட்டது. அவனுக்குப் பக்கத்தில் இருந்த தகரப் பெட்டியும் துணி மூட்டையும் மேற்கூறிய ஊகத்தை உறுதிப்படுத்தின.
அட்வகேட் ஆத்மநாதய்யரின் வீட்டு வாசலில் வந்து வண்டி நின்றது. இளைஞன் வண்டிக்குள்ளிருந்தபடியே வண்டிக்காரனுக்கு வாடகைப் பணம் கொடுத்துவிட்டு ஒரு கையில் பெட்டியையும் ஒரு கையில் துணி மூட்டையையும் எடுத்துக்கொண்டு வண்டியிலிருந்து இறங்கினான்.
"நிற்கட்டுமா, சேட்; ஜல்தி வருவீர்களா?" என்று வண்டிக்காரன் கேட்டதற்கு, "நை! தும் ஜாவ்!" என்றான் அந்த வாலிபன். ஜட்கா வண்டி புறப்பட்டுச் சென்றது.
ஆத்மநாதய்யர் வீட்டு வாசலில் இரும்புக் கம்பிக் கதவண்டை அந்த வாலிபன் நின்று உள்ளே எட்டிப் பார்த்தான். ஒரு இளம் பெண்மணியின் முகம் தெரிந்தது. "ஊதுவத்தி வேண்டுமா, அம்மா! அத்தர் புனுகு ஜவ்வாது வேண்டுமா? பெனாரிஸ் ஸில்க் வேண்டுமா?" என்று அவ்வாலிபன் கேட்டதற்கு, உள்ளேயிருந்து, "ஒன்றும் வேண்டாம், போ" என்று ஒரு பெண் குரலில் பதில் வந்தது.
"என்னம்மா, இப்படி ஒரேயடியாய் ஒன்றும் வேண்டாம் என்று சொல்றே? இந்த வீட்டில்தானே நாளைக்குக் குழந்தைக்குச் சஷ்டி அப்த பூர்த்திக் கலியாணம் என்று சொன்னாங்க?" என்று சொல்லிக்கொண்டே அந்த மார்வாரி இளைஞன், பூட்டப்படாமல் வெறுமே சாத்தியிருந்த இரும்புக் கம்பிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
வீட்டுத் தாழ்வாரத்துக்கும் வெளி கேட்டுக்கும் மத்தியில் இருந்த சுமார் பத்து அடி அகலமுள்ள இடத்தில் ஒரு பன்னீர் மரம், ஒரு மனோரஞ்சிதச் செடி, சில அழகிய பல வர்ணக் குரோடன்ஸ் செடிகள் ஆகியவை இருந்தன.
வீட்டின் வாசல் திண்ணைக்கு அருகில் ஒரு இளம் பெண்ணும் ஒரு வயதான ஸ்திரீயும் நின்றார்கள். "பார்த்தாயோ இல்லையோ, இவன் சொல்லுகிறதை! குழந்தைக்கு ஒரு வயது ஆகப்போகிறது; சஷ்டிஅப்த பூர்த்திக் கல்யாணமாம்!" என்று சொல்லிவிட்டு கடகடவென்று சிரித்தாள் அந்த இளம் பெண்.
"திடுதிடுவென்று உள்ளே நுழைந்து வருகிறானே? கேள்வி முறையில்லையா? கதவைப் பூட்டி வைக்கவேண்டும்!" என்றாள் வயதான ஸ்திரீ.
உள்ளே நுழைந்த இளைஞன் அவர்களுடைய பேச்சைக் கவனியாதவன் போல், "அரே பாப்ரே! இங்கே இருக்கிற புஷ்பங்களில் வாசனை நம்முடைய ஊதுவத்தி, அத்தர், சவ்வாது வாசனையைத் தோற்கடித்துவிடும் போலிருக்கிறதே!" என்றான்.
பிறகு பெட்டியையும் மூட்டையையும் கொண்டு போய்த் திண்ணையில் வைத்து, "ஏன்! அம்மா! நிஜமாக ஊதுவத்தி, அத்தர், புனுகு, சவ்வாது ஒன்றும் வேண்டாமா?" என்று சொல்லிக்கொண்டே பெட்டியைத் திறந்ததும், உள்ளேயிருந்து ஊதுவத்தியின் மணம் கம்மென்று வீசிற்று.
"ஏன், லலிதா! நல்ல ஊதுவத்தியாயிருக்கிறதே! கொஞ்சம் வேணுமானால் வாங்கி வைக்கலாமே?" என்று லலிதாவின் தாயார் சரஸ்வதி அம்மாள் சொன்னாள்.
"ஒன்றும் வேண்டாம்! நீ கொண்டு போ, அப்பா!" என்றாள் லலிதா.
"அப்படி முகத்திலடித்ததுபோல் சொல்லாதே, சின்னம்மா! பெரியம்மா சொல்கிறதைக் கேள்!" என்று ஊதுவத்தி வியாபாரி சொல்லிவிட்டு, சரஸ்வதி அம்மாளைப் பார்த்து, "ஊரிலேயிருந்து கிட்டாவய்யர் வந்திருக்கிறார்களா? அவர்களுடைய மூத்தபிள்ளை கங்காதர ஐயர் வந்திருக்கிறார்களா?" என்றான்.
"ஏது, ஏது! உனக்கு எல்லாரையும் தெரியும் போலிருக்கிறதே! நீ யாரப்பா?" என்று கேட்டாள் சரஸ்வதி அம்மாள்.
"காலம் அப்படி ஆகிவிட்டது! என்ன செய்யலாம்? பெற்ற தாய்க்குப் பிள்ளையை அடையாளம் தெரியாமல் போய்விட்டது!" என்று ஊதுவத்தி வியாபாரி சொல்லிவிட்டுத் தலையில் சுற்றியிருந்த வர்ணக் கோட்டு முண்டாசைக் கையில் எடுத்தான்.
"அம்மா! நம்ம சூரியாண்ணா?" என்று கூவினாள் லலிதா.
"அட என் கண்ணே!" என்று சொல்லிக்கொண்டு சரஸ்வதி அம்மாள் தன்னுடைய குமாரனைக் கட்டிக்கொண்டாள்.
"ஏன் சூரியா! இது என்ன வேஷம்! சகிக்கவில்லையே?" என்றாள் லலிதா.
"சும்மா உங்களையெல்லாம் ஒரு தமாஷ் செய்யலாம் என்று நினைத்தேன்!" என்றான் சூரியா.
உடனே சரஸ்வதி அம்மாள், "தமாஷாவது, மண்ணாங்கட்டியாவது? அழகாயிருக்கிறது! லலிதாவின் மாமனார் இப்போது கோர்ட்டிலேயிருந்து வந்துவிடுவார். உன்னை இந்தக் கோலத்திலே பார்த்தால் ஏதாவது நினைத்துக் கொள்வார். உன் அப்பா, அண்ணா எல்லாரும் இராத்திரி ரயிலிலே வருகிறார்கள். இந்த வேஷத்தை கலைத்துவிட்டு மறு காரியம் பார்!" என்றாள் சரஸ்வதி அம்மாள்.
"ஆகட்டும்! ஆனால் வேஷத்தைக் கலைப்பதற்கு என்னை அரை மணி நேரம் தனியா இருக்க விடவேண்டும். லலிதா! மேலே உன் அகத்துக்காரர் அறை காலியாகத்தானே இருக்கிறது?" என்று சூரியா கேட்டான்.
லலிதா பதில் சொல்வதற்குள் சரஸ்வதி அம்மாள், "காலியாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்தப் பெண் அந்த அறையில் யாரும் போவதற்கு விடுவதில்லை. மாப்பிள்ளையின் படத்தை அங்கே மாட்டியிருக்கிறாள். அந்தப் படத்துக்குத் தினம் பூத்தொடுத்து மாலை போடுகிறது இவளுக்கு ஒரு வேலை! சத்தியவானுக்காகச் சாவித்திரி கூட இப்படித் தபசு இருந்திருக்க மாட்டாள்! ஏண்டாப்பா சூரியா? உனக்குச் சமாசாரம் தெரியுமோ, இல்லையோ?" என்றாள்.
"மாப்பிள்ளை ஜெயிலுக்கு போயிருக்கிறதைத்தானே சொல்கிறாய்? அது எனக்குத் தெரியாமல் இருக்குமா, அம்மா! ஆனால் பத்திரிகையிலே படித்ததும் ஒரே ஆச்சரியமாகத்தான் இருந்தது. நம்ம பட்டாபி இப்படித் துணிந்து இறங்குவான் என்று நான் நினைக்கவேயில்லை" என்றான் சூரியா.
"ஆனால் ஒன்று, சூரியா! இவர் மற்றவர்களையெல்லாம் போலக் கோர்ட்டைக் கொளுத்தினார், தண்டவாளத்தைப் பெயர்த்தார், பாலத்தை உடைத்தார் என்றெல்லாம் பெயர் வாங்கிக்கொண்டு ஜெயிலுக்குப் போகவில்லை. போன அக்டோ பர் இரண்டாம் தேதி காந்தி மகான் ஜயந்தியில் காந்திஜியைச் சிறையில் வைத்திருப்பதைக் கண்டித்துப் பொதுக் கூட்டத்தில் பேசினார். அதற்காக இவரைப் பிடித்துப் போட்டு விட்டார்கள்!" என்றாள் லலிதா.
"இந்தக் கஷ்டமெல்லாம் என்னத்திற்காக, எப்போது முடியப் போகிறது என்று தெரியவில்லை. எல்லாம் என்னுடைய துரதிருஷ்டந்தான்! நீயானால் இப்படி அம்மா அப்பாவுக்குப் பிள்ளையாக இராமல் போய்விட்டாய்! ஊர் ஊராய் அலைந்து கொண்டிருக்கிறார். லலிதாவை எவ்வளவோ நல்ல இடம் என்று பார்த்துக் கொடுத்தேன். அவளுடைய தலையெழுத்து இப்படி இருக்கிறது!" என்று சரஸ்வதி அம்மாள் வருத்தப்பட்டுக் கொண்டு சொன்னாள்.
"நம்ம ராமாயணத்தை அப்புறம் வைத்துக்கொள்ளலாமே, அம்மா! முதலிலே சூரியா அவன் காரியத்தைப் பார்க்கட்டும், எல்லாரும் வருவதற்குள்ளே!" என்றாள் லலிதா.
"உன் அகத்துக்காரரின் அறையை இரண்டு நாள் நான் வைத்துக் கொள்ளலாம் அல்லவா லலிதா?"
"பேஷாக வைத்துக் கொள்ளலாம்; நீயும் அவரும் எவ்வளவு சிநேகம் என்று எனக்குத் தெரியாதா? அடிக்கடி உன்னைப் பற்றி அவர் பேசிக் கொண்டிருப்பார். அவருடைய அறையிலே உனக்கு இல்லாத பாத்தியதை வேறு யாருக்கு?" என்றாள் லலிதா.
ரேழி அறையிலிருந்த மச்சுப்படி வழியாகச் சூரியா பெட்டி மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு மேலே போய்ப் பட்டாபிராமனுடைய அறையில் ஆக்கிரமித்துக் கொண்டான். அந்த அறை வெகு சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது. மேஜை, அதன் மேலிருந்த மைக்கூடு, பேனா, புத்தக அலமாரி, கோட் ஸ்டாண்டு எல்லாம் ஒரு தூசி துப்பு இல்லாமலிருந்தன. சுவர் மூலைகளில் ஒரு ஒட்டடை கிடையாது. ஒரு பக்கச் சுவரில், சரஸ்வதி அம்மாள் சொன்னது போல் பட்டாபிராமன் படம் காணப்பட்டது. இன்னொரு பக்கச் சுவரில் மகாத்மா காந்தி படம் இருந்தது. இரண்டு படங்களும் அப்போதுதான் தொடுத்துப் போட்ட பூ மாலைகளுடன் விளங்கின. மல்லிகைப் பூவின் மணம் அறையில் கம்மென்று நிறைந்திருந்தது.
பின்னோடு தன்னை அறையிலே கொண்டுவிட வந்த லலிதாவைப் பார்த்து, "என்ன லலிதா! மகாத்மா காந்தியையும் உன் அகத்துக்காரரையும் ஒன்றாக வைத்து விட்டாய் போலிருக்கிறதே! இனிமேல் உன் புருஷனையும் 'மகாத்மா பட்டாபிராமன்' என்று அழைக்க வேண்டியது தான் போலிருக்கிறது!" என்றான் சூர்யா.
"மகாத்மா காந்தி உலகத்திலேயே பெரியவர்; ஆகையால் அவரைப் பூஜிக்கிறேன். உன்னுடைய சிநேகிதர் எனக்குத் தெய்வம்; ஆகையால் அவரையும் பூஜை செய்கிறேன்!" என்றாள் லலிதா.
"உன்னுடைய பக்தியை ரொம்பப் பாராட்டுகிறேன், லலிதா! உன்னுடைய மாமியார் கூடக் காலமாகி விட்டாளாமே?"
"அவர் கண்ணை மூடி இப்போது இரண்டு வருஷம் ஆகிறது. போன வருஷத்தில் உயிரோடிருந்து பிள்ளை ஜெயிலுக்குப் போனதைப் பார்த்திருந்தால் நெஞ்சு உடைந்து போயிருப்பார். என்னுடைய நெஞ்சு கல் நெஞ்சு. அதனால் உயிரோடிருக்கிறேன். அண்ணா! என் மாமியாரைப்பற்றி நான் புகார் கூறியதையெல்லாம் நினைத்தால் எனக்கு இப்போது வெட்கமாயிருக்கிறது. அவரைப் போல் உத்தமி இந்த உலகத்திலேயே கிடைக்க மாட்டார். என் பேரில் அவருக்கிருந்த பிரியம் அப்புறந்தான் எனக்குத் தெரிய வந்தது. என்னைக் குற்றம் கூறியதெல்லாம் என்னுடைய நன்மைக்காகவே என்று தெரிந்து கொண்டேன். கேள், சூரியா! என் மாமியார் சாகும்போது என் கையை அவருடைய கையால் பிடித்துக் கொண்டே செத்துப் போனார். அவருடைய பிள்ளையைப் பற்றிக் கூட அவ்வளவு கவலை காட்டவில்லை."
"உலகமே அப்படித்தான் இருக்கிறது, லலிதா! நாம் ரொம்ப நல்லவர்கள் என்று எண்ணிக்கொண்டிருப்பவர் பொல்லாதவர்களாகி விடுகிறார்கள். பொல்லாதவர்கள் நல்லவர்களாகி விடுகிறார்கள். உலகத்தின் இயல்பே மாறுதல்தானே? சீதாவின் புருஷன் சௌந்தரராகவன் இப்படிப்பட்ட மூர்க்கனாவான் என்று யார் எதிர்பார்த்தார்கள்? உன்னுடைய அதிர்ஷ்டக்கட்டையைப் பற்றி அம்மா சொன்னாளே? பட்டாபிக்குக் கொடுக்காமல் சௌந்தரராகவனுக்கு உன்னைக் கலியாணம் செய்து கொடுத்திருந்தால் அப்போது தெரிந்திருக்கும். ஐயோ! சீதா படுகிற கஷ்டத்தை நினைத்தால் எனக்கு இதயம் வெடித்து விடும் போலிருக்கிறது.
"ஆம் அண்ணா! அதைப்பற்றி நீ எனக்கு விவரமாகச் சொல்ல வேண்டும். டில்லிக்குப் போன புதிதில் எவ்வளவோ உற்சாகமாகக் கடிதம் எழுதியிருந்தாள். வர வரக் கடிதம் வருவதே குறைந்து போய்விட்டது. கடைசியாக அவள் எழுதிய கடிதங்கள் ஒரே துக்கமயமாயிருக்கின்றன. குழந்தையைக் கூட மாமியாருடன் மதராஸுக்கு அனுப்பி விட்டாளாமே? எதற்காக?"
"விவரமாகப் பிற்பாடு சொல்லுகிறேன். மொத்தத்தில் சீதாவின் வாழ்க்கை நரக வாழ்க்கையாகிவிட்டது. உன்னுடைய நிலைமை எவ்வளவோ தேவலை உன் மாமனார் எப்படி இருக்கிறார்?"
"என் மாமனார் என் பேரில் காற்றும் படக்கூடாது என்கிறார். வீட்டுக்கு நான்தான் எஜமானி, இரும்புப் பெட்டிச் சாவி என்னிடந்தான் இருக்கிறது. குழந்தைக்கு நாளைக்கு ஆண்டு நிறைவுக் கலியாணம் வேண்டாம் என்று சொன்னேன். 'இவர் ஜெயிலில் இருக்கும்போது கலியாணம் எதற்கு?' என்றேன். என் மாமனார், 'அதெல்லாம் கூடாது; வீட்டுக்கு முதல் பிள்ளைக் குழந்தை; கட்டாயம் அப்த பூர்த்திக் கலியாணம் செய்ய வேண்டும்' என்று சொல்லிவிட்டார். அதற்குத் தகுந்தாற்போல் இவரும் சிறைச்சாலையிலிருந்து எழுதியிருந்தார்."
"எதிர் வீட்டுக்கும் உங்களுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் எப்படியிருக்கிறது; போக்கு வரவு நின்றது நின்றதுதானா?"
"இது வரையில் அப்படித்தான்! ஆனால் இரண்டு நாளைக்கு முன்பு இவருடைய சிநேகிதர் அமரநாதனும் அவர் மனைவி சித்ராவும் கல்கத்தாவிலிருந்து வந்திருக்கிறார்கள். நாளைக் காலையில் மாமனாரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு அவர்களைப் போய் அழைத்துவிட்டு வரலாமென்றிருக்கிறேன். எதிர் வீட்டுக்காரர்கள் வராமல் என்ன கலியாணம் வேண்டிக்கிடக்கிறது?"
"அப்படியே செய், லலிதா! கட்டாயம் போய் அவர்களை அழைத்துவிட்டு வா! நான் இன்று ராத்திரியே எதிர் வீட்டுக்குப் போய் வரலாம் என்றிருக்கின்றேன். நானும் உன் புருஷனும் அமரநாதனும் எதிர்வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்து எத்தனை நாள் குஷியாகப் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம் தெரியுமா? அப்படிச் சிநேகமாயிருந்தவர்கள் திடீரென்று விரோதம் செய்து கொள்ள எப்படித்தான் முடிந்ததோ, தெரியவில்லை!"
"இவருக்கு அந்த விஷயம் ஒன்றும் பிடிக்கவேயில்லை. சூரியா! எல்லாம் கிழவர்கள் செய்த வேலை. தகப்பனாரிடம் உள்ள பக்தியினாலே தான் இவர் சும்மா இருந்தார்!"
இந்தச் சமயத்தில் சுண்டுப் பயல் - இப்போது நன்றாய் வளர்ந்து வாலிபப் பருவத்தை அடைந்திருந்தவன் தடதடவென்று மாடிப்படி ஏறி வந்தான்.
"சூரியா வந்திருக்கிறானாமே எங்கே?" என்று கேட்டுக் கொண்டே இறைக்க இறைக்க ஓடி வந்தவன், சூரியாவைப் பார்த்துத் திகைத்து நின்று, "ஐயையோ! இவனா சூரியா? முகத்திலே மீசை வைத்துக் கொண்டிருக்கிறானே?" என்றான்.
"சுண்டு! என் மீசை உனக்குப் பிடிக்கவில்லையா? அப்படியானால் அதை எடுத்தெறிந்துவிட்டு மறுகாரியம் பார்க்கிறேன்!" என்று சொல்லிவிட்டுச் சூரியா முகக்ஷவரம் செய்து கொள்ள ஆரம்பித்தான். வடநாட்டு உடையை களைந்தெறிந்து விட்டு, வேஷ்டி ஜிப்பா அணிந்ததும் பழைய சூரியாவாகக் காட்சி அளித்தான்.
அன்றிரவு சுமார் எட்டு மணிக்குச் சூரியா எதிர்வீட்டுக்குப் போகலாமென்று புறப்பட்டுச் சென்றபோது அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவன் போல் அமரநாத் நின்று கொண்டிருந்தான்.
"வருக! வருக! சுதந்திர வீரர் சூரியாவின் வரவு நல்வரவாகுக!" என்று தமாஷ் செய்து கொண்டே சூரியாவின் கைகளைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துப் போனான் அமரநாத்.
கூடத்தில் போட்டிருந்த ஸோபாக்கள் ஒன்றில் உட்கார்ந்து வர்ண நூலினால் பூவேலை செய்து கொண்டிருந்தாள் ஒரு பெண். இவர்கள் உள்ளே வந்ததும் அவள் எழுந்தாள்.
அமரநாத் அவளைப் பார்த்து, "சித்ரா! என் அருமை நண்பன் சூரியாவை உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். சூரியா! இவள்தான் என்னை மணம் புரிந்த பாக்கியசாலி சித்ரா. பெயர் சித்ராவாக இருப்பதற்கேற்பச் சித்திரக் கலையில் மிகத் தேர்ந்தவள். அணில் போட்டால் கிட்டத்தட்ட ஆடு மாதிரி இருக்கும்!" என்று சொன்னான்.
சூரியா சிரித்துக்கொண்டே, "ஆடு போட்டால் எப்படி இருக்கும்?" என்று கேட்டான்.
சித்ரா பளிச்சென்று, "ஆடு போட்டால் அமரநாத் மாதிரி இருக்கும்" என்று கூறினாள்.
"பார்த்தாயா, சூரியா! இதிலிருந்து என்ன ஏற்படுகிறது? இந்த மாதரசியின் இதய கமலத்தில் எப்போதும் எழுந்தருளியிருப்பது இந்த அமரநாத் என்று தெரிகிறதல்லவா! ஆகா! என்னைப் போன்ற பாக்கியசாலி யார்?" என்றான் அமரநாத்.
"குடியிருக்க வீடு கிடைப்பதுதான் இந்தக் காலத்தில் கஷ்டமாயிருக்கிறதே! ஒருவருடைய இதய கமலத்தில் இன்னொருவர் குடியிருக்கிறது என்று வைத்துக் கொண்டால் எவ்வளவோ சௌகரியமாயிருக்கும்!" என்றாள் சித்ரா.
இந்தத் தம்பதிகளின் அன்யோன்ய உல்லாசப் பேச்சைக் கேட்ட சூரியா, 'புருஷன் மனைவி என்று இருந்தால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்?' என்று எண்ணிக் கொண்டான்.
வெளிப்படையாக, "அமரநாத்! உங்கள் மனைவியைப் பற்றி லலிதா வர்ணித்திருந்ததெல்லாம் சரிதான்!" என்று சொன்னான்.
"லலிதா என்பது யார்?" என்று சித்ரா ஒரு கேள்வி போட்டாள்.
"இதென்ன இப்படிக் கேட்கிறீர்கள்? உங்களுக்கு எதிர்வீட்டில் இருக்கும் என்னுடைய சகோதரி லலிதாவைத் தான் சொல்கிறேன்."
"ஓகோ! எங்கள் சத்துரு வீட்டு நாட்டுப் பெண்ணையா? நான் அவளைப் பார்த்து எத்தனையோ வருஷம் ஆயிற்றே! என்னைப்பற்றி அவள் என்ன வர்ணித்திருக்க முடியும்?" என்று கேட்டாள் சித்ரா.
"முன்னே எழுதியிருந்ததைத்தான் சொல்கிறேன். அவளும் தாங்களும் ரொம்ப சிநேகிதம் என்று எழுதியிருந்தாள்."
"சிநேகமும் இல்லை, ஒன்றுமில்லை; நாங்கள் ஜன்ம விரோதிகள் அல்லவா?"
இதற்குள் அமரநாத், "சூரியா! முனிசிபல் எலெக்ஷன் விஷயமாக இந்த இரண்டு வீட்டுக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் ஏற்பட்டதல்லவா? அது விஷயத்தில் இவளுக்கு ரொம்பக் கோபம், அந்தக் கோபத்தை இப்படிக் காட்டுகிறாள்!"
"எனக்குக் கோபம் ஒன்றுமில்லை. மனிதர்கள் இப்படி மூடர்களாயிருக்கிறார்களே என்று பரிதாபந்தான். மொத்தத்தில் நமது தமிழ் நாட்டு ஜனங்கள் வாழத் தெரியாதவர்கள். வாழும் வகை தெரிய வேண்டுமானால் கல்கத்தாவுக்குப் போய் வங்காளிகளுக்கு மத்தியில் இரண்டு வருஷமாவது இருந்துவிட்டு வரவேண்டும்!" என்றாள் சித்ரா.
"நான் அதை ஒப்புக் கொள்ள மாட்டேன். தமிழ்நாட்டார் மற்றவர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன இருக்க முடியும்?" என்றான் சூரியா.
"இதைக் கேள், சூரியா! எலெக்ஷன் சண்டைக்குப் பிறகு இவளை இங்கே வைத்துக் கொண்டு காலட்சேபம் செய்ய முடியாது என்று தான் முக்கியமாக நான் கல்கத்தாவுக்குப் போனேன். போன பிறகு, ஏண்டாப்பா போனோம் என்று இருக்கிறது. இவளுக்கு வங்காளி நாகரிகத்தில் அத்தனை மோகம் பிறந்துவிட்டது. அதுவும் நேதாஜி சுபாஷ் மலாய் நாட்டில் சுதந்திர இந்திய சர்க்காரை ஸ்தாபித்திருக்கிறார் என்று தெரிந்த பிறகு இவளுக்கு ஒன்றுமே தலைகால் புரியவில்லை. ஆகாச விமானம் ஒன்று கிடைத்தால் என்னை இவள் பரிதவிக்கவிட்டு நேதாஜி போஸிடம் பறந்து போய்விடுவாள்!" என்றான் அமரநாத்.
இந்தச் சமயத்தில் வாசலில் ஆள்வரும் சத்தம் கேட்கவே, சித்ரா, "மாமனார் வருகிறார் போலிருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே எழுந்து, மச்சுப்படி ஏறத் தொடங்கினாள்.
"நாளை ஆண்டு நிறைவுக்கு உங்களை வந்து லலிதா அழைப்பாள்! அவசியம் வரவேண்டும்" என்றான் சூரியா.
தாமோதரம் பிள்ளை உள்ளே வந்ததும், இளைஞர்கள் இருவரும் எழுந்து நின்றார்கள். "அப்பா! யார் பார்த்தீர்களா? அடையாளம் தெரிகிறதா?" என்று அமரநாத் கேட்டான்.
"ஓகோ! நம்ம சூரியா போலிருக்கிறதே! ஒருவேளை தவறாகச் சொல்கிறேனோ? கண் அவ்வளவு துல்லியமாக இல்லை; வயதாகி விட்டதல்லவா?" என்றார் தாமோதரம் பிள்ளை.
"சூரியாதான், அப்பா! சூரியாவேதான்!" என்றான் அமரநாத்.
"நமஸ்காரம்" என்றான் சூரியா.
தாமோதரம் பிள்ளை அவருடைய ஆபீஸ் அறைக்குப் போய் விடுவார் என்று அமரநாத் நினைத்ததற்கு மாறாக அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தார். வாலிபர்கள் இருவரும் உட்கார்ந்த பிறகு சூரியாவை அவர் மறுபடியும் உற்றுப் பார்த்தார்.
"ஆமாம், சூரியாதான்! என்ன ஓய்! சூரியநாராயண ஐயரே! நீர் எங்கேயோ ஆப்கானிஸ்தானத்தில் இருக்கிறதாகச் சொன்னார்கள்; மாஸ்கோவில் பார்த்ததாகச் சொன்னார்கள்; அப்புறம் ஸைகானுக்கு வந்து விட்டதாகச் சொன்னார்கள்; கடைசியில் நம்ம ஊரிலே இருக்கிறீரே? இந்தியாவின் சுதந்திரம் எந்த மட்டில் இருக்கிறது? எங்கே கொண்டு வந்து நிறுத்தி வைத்திருக்கிறீர்?" என்றார்.
"மாமா! என்னைப்பற்றி இவ்வளவு தூரம் ஞாபகம் வைத்துக் கொண்டு, எந்த நாட்டுக்குப் போயிருக்கிறேன் என்றெல்லாம் விசாரித்து வைத்திருக்கிறீர்களே? அதற்காகச் சந்தோஷம், ஆனால் நான் எந்த அயல் நாட்டுக்கும் போகவில்லை. இந்தியாவின் சுதந்திரம் இந்தியாவிலே தான் இருக்கிறது. இந்தியாவின் சுதந்திரத்துக்காக ஆப்கானிஸ்தானத்துக்கு ஏன் போக வேண்டும்?" என்றான் சூரியா.
"அப்படிச் சொல்லாதேயும், ஓய் சூரியநாராயண ஐயரே. நேதாஜி போஸ் மலாய் நாட்டில்தானே சுதந்திர இந்திய சர்க்காரை ஸ்தாபித்திருக்கிறாராம்? அப்புறம், ஜயப்பிரகாச நாராயணன் நேபாளத்திலோ திபெத்திலோ இந்தியாவின் சுதந்திரத்தை ஸ்தாபித்திருப்பதாகச் சொல்கிறார்கள்! அதெல்லாம் பொய்யா?"
"உண்மையில் இந்தியாவின் சுதந்திரம் ஆமத்நகர் சிறைச்சாலையில் காந்தி மகாத்மா, நேருஜி முதலிய தலைவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது!" என்றான் அமரநாத்.
"சூரியநாராயண ஐயரே! அமரநாத் சொல்வதை நீர் ஒத்துக் கொள்கிறீரா?" என்றார் தாமோதரம் பிள்ளை.
"மாமா! என்னைச் சூரியா என்று அழைத்தால்தான் இனிமேல் பதில் சொல்வேன்.
"சரி அப்பா, சூரியா! இப்போது சொல்லு! இந்தியாவுக்குச் சுதந்திரம் எந்த வழி மூலமாக வரப் போகிறதென்று நினைக்கிறாய்?" என்று தாமோதரம் பிள்ளை கேட்டார்.
"சொல்ல முடியாது மாமா! எந்த வழியினாலும் வரும்; எல்லா வழியினாலும் வரும். ஆனால் வரும்போது அதைக் கைப்பற்ற ஜனங்கள் தயாராயிருக்க வேண்டும். இதற்கு நம்முடைய ஜனங்களைத் தயார் செய்வதுதான் இப்போது நாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலை..."
"சுதந்திரத்துக்கு நம்முடைய ஜனங்களைத் தயார் செய்கிறதா? சூரியா! அது ஒரு நாளும் முடியாத காரியம். நம்முடைய ஜனங்களைச் சுதந்திரத்துக்குத் தயார் செய்ய வேண்டுமானால் அதற்கு வழி என்ன தெரியுமா? ஜப்பான்காரன் படையெடுத்து வந்து இந்தியாவைப் பிடித்து ஒரு பத்து வருஷமாவது ஆட்சி நடத்த வேண்டும். நம்ம ஜனங்களுக்கு ஜப்பான்காரன் தான் சரி. அவன் உச்சிக்குடுமிகளையெல்லாம் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கிச் சாதி வித்தியாசம், மத வித்தியாசம் எல்லாவற்றையும் அடியோடு ஒழிக்க வேண்டும். அரிசியும் பருப்பும் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருப்பவர்களையெல்லாம் சவுக்கினால் நாலு அடி அடித்து மாமிசமும் மீனும் சாப்பிடச் செய்ய வேண்டும். பத்து வருஷம் இப்படி ஜப்பானிய ஆட்சியிலே இருந்தால் இந்தியா சுதந்திரத்துக்கு லாயக்காகும்! என்ன சொல்கிறாய், சூரியா!"
"நான் அதை ஒப்பவில்லை; ஜப்பான் ஆட்சியில் பத்து வருஷம் இருந்தால் அதற்குப் பிறகு இன்னும் 140 வருஷம் ஜப்பான் ஆட்சியிலே இருக்க நேரிடும். ஆனால் ஜப்பானியர்கள் அவ்வளவு மூடர்கள் என நான் நினைக்கவில்லை. இந்தியாவைத் தாங்கள் ஜயிப்பதற்குப் பதிலாக, நேதாஜி சுபாஷ்போஸுக்கு உதவி செய்து அவரைக் கொண்டு இந்தியாவின் சுதந்திரத்தை நிலைநாட்டவே பார்ப்பார்கள். இந்தியாவை ஜயித்து ஆள்வதைக் காட்டிலும் இந்தியாவைச் சிநேகமாக வைத்துக் கொள்வதுதான் ஜப்பானுக்கு அனுகூலம்."
"ஜப்பானுக்கு எது அனுகூலம் என்று உமக்குத் தெரிந்திருக்கிறது, ஓய்! அது ஜப்பானுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே? நாய் குரைத்ததைப் பார்த்து ஒருவன் பயப்பட்டானாம். 'குரைக்கிற நாய் கடிக்காது' என்கிற பழமொழி தெரியாதா? என்று இன்னொருவன் சொன்னானாம். 'பழமொழி எனக்குத் தெரியும்; ஆனால், அந்த நாய்க்குத் தெரிந்திருக்க வேண்டுமே!' என்றானாம் பயந்த பேர்வழி. அந்த மாதிரி, நேதாஜிக்கு உதவி செய்வதின் அனுகூலத்தை ஜப்பான் உணர்ந்திருக்க வேண்டுமே?"
"நேதாஜி படையில் இதுவரை ஐம்பதினாயிரம் வீரர்கள் சேர்ந்திருக்கிறார்களாம். ஜப்பான்தான் ஆயுதம் கொடுத்து உதவியிருக்கிறதாம்!" என்றான் அமரநாத்.
"ஐம்பதினாயிரம் வீரர்கள் என்றால் அவ்வளவு அதிகமா? அவர்களைக் கொண்டு இந்தியா தேசத்தையே பிடித்துவிட முடியுமா?" என்றார் தாமோதரம் பிள்ளை.
"நேதாஜி ஐம்பதினாயிரம் பேரோடு வந்தால் இந்தியாவில் அவருடன் சேர்வதற்கு ஐம்பது லட்சம் பேர் காத்திருக்கிறார்கள்!" என்றான் சூரியா.
"வங்காளத்தில் மட்டுமே ஐம்பது லட்சம் பேர் சேர்வார்கள். கல்கத்தாவெல்லாம் ஓயாமல் இதைப்பற்றியே பேச்சாக இருக்கிறது" என்றான் அமரநாத்.
"ஐம்பது லட்சம் பேர் சேரட்டும்; ஐந்து கோடிப் பேர் வேணுமானாலும் சேரட்டும். நேதாஜி புது டில்லிக்கு வந்து சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ளட்டும், நான் குறுக்கே நிற்கவில்லை. ஆனால் அரசனை நம்பிப் புருஷனைக் கைவிடுகிற காரியம் மட்டும் உதவாது. நேதாஜி எப்போதோ வரப்போகிறார் என்பதற்காக இப்போது இங்கே சில தறிதலைகள் 'ஸாபொடாஜ்' வேலையில் இறங்குகிறார்களே, அது சுத்த முட்டாள்தனம். ஜப்பான் வருகிறவரையில் காத்திருப்பது தானே! அதற்குள்ளே ரயிலைக் கவிழ்க்கிறேன், பாலத்தை உடைக்கிறேன் என்று ஆரம்பிக்கிறார்களே! 'ஸாபொடாஜ்' வேலைகள் அரசாங்கத் துரோகம் மட்டுமல்ல, பொது ஜனத் துரோகம். நான் ஜட்ஜாயிருந்தால் அப்படிப்பட்ட காரியம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிப்பேன்."
இவ்விதம் தாமோதரம் பிள்ளை சொல்லி வந்த போது சூரியாவின் முகத்தில் ஒரு மாறுதல் காணப்பட்டது. மலர்ந்திருந்த அவன் முகம் சட்டென்று சுருங்கிற்று. இந்த மாறுதலை அமரநாத் கவனித்தான். அமரநாத் கவனித்தான் என்பதைச் சூரியாவும் தெரிந்து கொண்டான். தெரிந்து கொண்டதும் அமரநாத்தின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். சூரியாவின் கண்கள் ஏதோ ஒரு உறுதியை அமரநாத்தினிடம் எதிர்பார்த்ததாகத் தோன்றியது. அமரநாத்தின் கண்கள் அந்த உறுதியைச் சூரியாவுக்கு அளித்தன.
சிரஞ்சீவி பாலசுப்பிரமணியன் ஆண்டு நிறைவுக் கலியாணம் மேள தாளத்துடன் சிறப்பாக ஆரம்பமாயிற்று. கலியாண வீட்டில் எல்லாரும் வெகு உற்சாகமாக இருந்தார்கள். இதற்கு முக்கிய காரணம் சூரியாவின் எதிர்பாராத வருகை தான். நெடுநாளாகப் பாராத பிள்ளையைப் பார்த்துக் கிட்டாவய்யரும், அவருடைய மனைவியும் ஆனந்தக் கடலில் மூழ்கினார்கள். லலிதாவின் குதூகலத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தன் கணவன் சிறைச்சாலையில் இருப்பதைக் கூட அவள் அன்றைக்கு மறந்து கலியாண ஏற்பாடுகளில் உல்லாசமாக ஈடுபட்டு ஓடியாடிக் கொண்டிருந்தாள்.
லலிதாவின் மாமனார் ஆத்மநாதய்யருக்கு, சூரியாவின் வருகை காரணமாக எதிர் வீட்டுத் தாமோதரம் பிள்ளையுடன் மறுபடியும் பேச்சுவார்த்தை தொடங்கியது பற்றி மிகவும் சந்தோஷம் உண்டாயிற்று.
சூரியாவுக்கும் அன்றைக்கு என்றுமில்லாத உற்சாகம் ஏற்பட்டிருந்தது. அப்பா அம்மா முதலியவர்கள் தன்னை எப்படி வரவேற்பார்களோ என்று அவன் மனத்தில் ஏற்பட்டிருந்த சந்தேகம் நீங்கிற்று. அமரநாதன் தன்னுடைய சிநேகத்தை மறந்து விடவில்லை என்பதும் அவனுடைய தகப்பனார் தாமோதரம் பிள்ளை கூடத் தன்னுடன் சல்லாபமாகப் பேசியதும் அவனுடைய உற்சாகம் வளரக் காரணமாயிருந்தன. இது மட்டுமா, அவனுடன் பெருஞ்சண்டை போட்ட தமையன் கங்காதரன் இன்று அன்பாகப் பேசினான். "சூரியா! அப்பாவுக்கு வயதாகிவிட்டது. அவரால் பண்ணைக் காரியங்களைக் கவனிக்க முடியவில்லை. நானும் என் வேலையைவிட்டு கிராமத்துக்குப் போய் இருப்பது முடியாத காரியம். நீதான் ராஜம்பேட்டைக்குப் போய் அப்பாவுக்கு ஒத்தாசையாயிருக்க வேண்டும். குடியானவர்கள் விஷயத்தில் உன் இஷ்டம் போல் எப்படி வேணுமானாலும் செய்துகொள்; நான் ஆட்சேபிக்கவில்லை. ஐந்து வருஷம் அலைந்தது போதும், பேசாமல் ஊருக்கு வந்துவிடு!" என்று கங்காதரன் கூறியது சூரியாவுக்கு மிக்க ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது. எல்லோரும் தன்னிடம் இவ்வளவு அன்பாக இருப்பது ஏன் என்று அடிக்கடி கேட்டுக் கொண்டான்.
எல்லாரும், "சூரியா! சூரியா!" என்று அவனைப் பிரமாதப்படுத்துவதைப் பார்த்துவிட்டு லலிதாவின் சீமந்த புத்திரி பட்டுவும் அவனுடன் அதி விரைவில் சிநேகமாகி விட்டாள். சூரியாவின் மடியில் ஏறி உட்கார்ந்துகொண்டு வேறு யார் அழைத்தாலும் வரமாட்டேன் என்று அந்தக் குழந்தை பிடிவாதம் பிடித்தது.
இதனாலெல்லாம் சூரியா வெகு நாளாக அறியாத உற்சாகத்துடன் இருந்த சமயத்தில் காலை சுமார் எட்டு மணிக்கு, வாசலில் தபால்காரன் வந்தான். தபால்காரனுடைய குரல் சூரியாவுக்கு ஏற்கனவே கேட்ட குரலாகத் தொனித்தது. உடனே லலிதா, "தெரியுமா, அண்ணா உனக்கு? தபால்கார பாலகிருஷ்ணன் இப்போது இந்த ஊருக்கு மாற்றலாகி வந்துவிட்டான். இந்த வீதிக்கு அவன் தான் இப்போது தபால் கொண்டு வந்து கொடுக்கிறான்!" என்றாள். அவள் சொல்லி வாய் மூடுவதற்குள்ளே, "இந்த வீட்டிலே கே.எஸ். நாராயணன் என்று யாராவது வந்திருக்கிறார்களா?" என்று பாலகிருஷ்ணன் கேட்டது சூரியாவின் காதில் விழுந்தது.
உடனே சூரியா வீட்டுக்கு வெளியே சென்று "என்ன, பாலகிருஷ்ணா! சௌக்கியமா? என்னை நினைவு இருக்கிறதா?" என்று கேட்டான்.
"ஓகோ! நீங்கள்தானா ஸார்? அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன். என்ன சேதி! என்ன சமாசாரம்? எப்போது வந்தீர்கள்? இந்தக் கடிதம் உங்களுக்குத்தானா பார்த்துச் சொல்லுங்கள்!" என்று ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினான்.
விலாசம் தாரிணியின் கையெழுத்தில் இருப்பதைக் கண்டு சூரியா ஆவலுடன் அதை வாங்கி, "ஆமாம், எனக்குத் தான்!" என்றான்.
"ஓகோ! கே.சூரிய நாராயணய்யர் என்ற பெயரை கே.எஸ். நாராயணன் என்று சுருக்கிக் கொண்டீர்களாக்கும்! நினைத்தேன்; நினைத்தேன். லலிதா அம்மாளுக்குக் கூட ஒரு கடிதம் இருக்கிறது, அதையும் நீங்களே..." என்று சொல்வதற்குள், லலிதா அங்கு வந்து சேர்ந்தாள். "இந்தாங்க அம்மா உங்களுக்கு ஒரு கடிதம். குழந்தைக்கு இன்றைக்கு ஆண்டு நிறைவுக் கலியாணம் போலிருக்கிறது. ராஜம்பேட்டையிலே நடந்த கலியாணம் நேற்று நடந்ததுபோல் இருக்கிறது!" என்று சொல்லிக்கொண்டே பாலகிருஷ்ணன் லலிதாவிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். பிறகு சூரியாவைப் பார்த்து, "ஸார்! மதகடியில் நாம் சண்டை போட்டோ மே ஞாபகம் இருக்கிறதா? கடிதத்தை நான் பிரித்துப் பார்த்துவிட்டேன் என்று கோபித்துக் கொண்டீர்களே?" என்றான்.
"அதைப்பற்றி இப்போது என்ன? எந்தக் காலமோ நடந்தது!" என்று சொன்னான் சூரியா.
"அதற்காகச் சொல்லவில்லை; இப்போது உங்களிடம் கொடுத்தேனே, அந்தக் கடிதத்தை நான் பிரித்துப் பார்க்கவில்லை என்பதற்காகத் தான் சொன்னேன் தெரிகிறதா?"
சூரியா உடனே சந்தேகத்துடன் தன் கையிலிருந்த கடிதத்தை முன்னும் பின்னும் திருப்பி உற்றுப் பார்த்தான்.
பால கிருஷ்ணன் புன்னகையுடன், "என்ன, ஸார்! பிரித்துப் பார்த்திருக்கிறதா!" என்று கேட்டான்.
"இல்லை" என்றான் சூரியா.
"அதற்காகத் தான் சொன்னேன்; ஒருவேளை பிரித்துப் பார்த்திருந்தாலும் பிரித்தது நான் இல்லை. பழைய ஞாபகத்தை வைத்துக்கொண்டு என் பேரில் சந்தேகப்படாதீர்கள்; தெரிகிறதா? லலிதா அம்மா! உங்கள் கடிதத்தையும் நான் பிரித்துப் பார்க்கவில்லை. மிஸ்டர் சூரியா பெரிய சந்தேகப்பிராணி ஆயிற்றே! அவர் என் பேரில் சந்தேகப்படக் கூடாது! நான் போய் வரட்டுமா?"
"போஸ்டுமேன்! மத்தியானம் இங்கே வந்து சாப்பிட்டுவிட்டுப் போகலாமே?" என்றாள் லலிதா.
"அந்தக் காலம் மலையேறிப் போச்சு; இப்போ எனக்கும் குடும்ப பாரம் சுமந்திருக்கிறது. மத்தியானம் வீட்டுக்குச் சாப்பிடப் போகாவிட்டால் நல்ல டோ ஸ் கிடைக்கும். சாப்பாடு கிடக்கிறது அம்மா! மனது நல்ல மனதாயிருக்க வேண்டும் அவ்வளவுதான். மிஸ்டர் சூரியா! உங்கள் கடிதத்தை நான் பிரித்துப் பார்த்ததாக எண்ணிக்கொள்ள வேண்டாம், தெரிகிறதா? என்ன லலிதா அம்மா, நான் சொல்கிறது என்ன?" என்று சொல்லிக் கொண்டே பாலகிருஷ்ணன் நடையைக் கட்டினான்.
அவன் கொஞ்ச தூரம் போனதும் சூரியா லலிதாவைப் பார்த்து, "பாலகிருஷ்ணனுடைய கிறுக்கு முன்னைவிட அதிகம் போலிருக்கிறதே? இப்படி உளறுகிறானே?" என்றான்.
"அவன் ஒன்றும் உளறவில்லை, அண்ணா! அவனுக்குக் கிறுக்கும் இல்லை. பாலகிருஷ்ணன் சொன்னதில் அர்த்தம் உனக்குப் புரியவில்லையா?"
"அவன் சொன்னதில் அர்த்தம் வேறே இருக்கிறதா?" என்று கேட்டான் சூரியா.
"ஏன் இல்லை? உனக்கு இது தெரியாதது ஆச்சரியமாயிருக்கிறது. வடக்கேயெல்லாம் ஒருவேளை இந்த வழக்கம் கிடையாதோ என்னமோ? இவர் ஜெயிலுக்குப் போனதிலிருந்து எனக்கு வரும் கடிதங்களையெல்லாம் பிரித்துப் பார்த்துவிட்டுத் தான் அனுப்புகிறார்கள்; இதற்கு 'சென்ஸாரிங்' என்று பெயராம்..."
சூரியாவுக்கு 'சுருக்' என்றது. மறுபடியும் கடிதத்தை முன் பின் திருப்பிப் பார்த்துவிட்டுத் தைரியமாக, "எனக்கு வந்திருக்கும் கடிதத்தை யாரும் பிரித்துப் பார்க்கவில்லை" என்றான்.
"உனக்கு எப்படித் தெரியும், பிரித்துப் பார்க்கவில்லை என்று? சில கடிதங்களைப் பகிரங்கமாகப் பிரித்துப் பார்த்து மேலே 'சென்ஸார் செய்யப்பட்டது' என்று சீட்டை ஒட்டி விடுவார்களாம். இன்னும் சில கடிதங்களைப் பிரித்து தெரியாதபடி திருப்பி ஒட்டிவிடுவார்களாம். எனக்கு இரண்டு விதமாகவும் வருவதுண்டு."
"உன் அகத்துக்காரர் சிறையிலிருந்து உனக்கு எழுதும் கடிதங்களை அப்படியெல்லாம் பிரித்துப் பார்த்து அனுப்பலாம். ஆனால், நான் இன்றைக்கு வந்தவன்தானே? என் கடிதத்தை எதற்காகப் பிரிக்கிறார்கள்?"
"அப்படியில்லை, அண்ணா, இந்த வீட்டு மேல் விலாசம் இருப்பதால் ஒருவேளை பிரித்துப் பார்த்திருப்பார்கள். நீயும் அப்படி இலேசுபட்டவன் அல்லவே? என்னென்னமோ செய்து கொண்டிருக்கிறாய் அல்லவா? நமக்குப் பார்த்தால் உறை பிரிக்கப்பட்டதாகவே தெரியாது. ஆனால் பாலகிருஷ்ணனுக்குப் பார்த்தவுடனே தெரிந்து போய்விடும். அவன் சொன்னதிலிருந்து நம் இரண்டு பேருக்கும் வந்த கடிதங்களைப் பிரித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். எல்லாவற்றுக்கும் கடிதத்தைப் படித்துப் பார்க்கலாம்!"
இவ்விதம் சொல்லிக் கொண்டே லலிதா உறையைப் பிரித்தாள். உள்ளேயிருந்த கடிதத்தைப் பார்த்ததும் அவளுடைய முகம் மலர்ந்தது. "இவர் தான் ஜெயிலிலிருந்து எழுதியிருக்கிறார்! குழந்தையின் ஆண்டு நிறைவு அன்றைக்குச் சரியாக வந்து சேரும்படியாக எழுதியிருக்கிறார். அவர் மட்டும் இங்கே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? நீ வந்ததற்காக எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்?" என்றாள் லலிதா.
இதற்குள் உள்ளேயிருந்து அம்மா கூப்பிடும் குரல் கேட்கவே லலிதா வீட்டுக்குள் சென்றாள்.
சூரியாவும் தனக்கு வந்த கடிதத்தைப் பிரித்துப் பார்த்தான். பிரிக்கும்போதே அவன் மனதிலிருந்த கலக்கம் அகன்றுவிட்டது. கடிதம் எழுதியிருப்பது தாரிணி. ஸி.ஐ.டி. போலீஸுக்கு உபயோகப்படக்கூடிய எந்த விஷயமும் அவள் எழுதியிருக்கமாட்டாள். புரட்சிக் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதும்போது மனிதர்களின் உண்மைப் பெயர்களைக் கூடக் குறிப்பிடுவதில்லை, எல்லோருக்கும் மாறு பெயர்கள் இருந்தன. தாரிணிக்குச் 'சரித்திரம்' என்று பெயர் சூரியாவுக்கு 'தூதன்' என்று பெயர். இப்படியெல்லாம் முன் ஏற்பாடு செய்து கொண்டிருக்கும்போது ஸி.ஐ.டி. பிரித்துப் பார்த்து என்ன தெரிந்து கொள்ள முடியும்?
சூரியா எண்ணியது போலவே தாரிணியின் கடிதத்தில் போலீஸுக்கு உபயோகப்படக்கூடிய விஷயம் ஒன்றுமில்லை. ஆனால் வேறுவிதக் கவலை சூரியாவுக்குத் தரக்கூடிய விஷயம் இருந்தது. தாரிணி வெகு சுருக்கமாகச் சில வரிகள் தான் எழுதியிருந்தாள். "அத்தங்காளின் நிலைமை முன்னைவிட மோசமாயிருக்கிறது. உடம்பு, மனது ஒன்றும் சரியாயில்லை; உங்களைச் சந்திக்க விரும்புகிறாள். கூடிய சீக்கிரம் வந்து சேரவும், நீங்கள் உடனே வந்து சேராவிட்டால் ஏதாவது விபரீதமாக முடியலாம். - சரித்திரம்."
இந்தக் கடிதம் சூரியாவை ரொம்பவும் கலக்கிவிட்டது. தென்னாட்டுக்கு எந்த வேலையை முன்னிட்டு வந்தானோ அது பூர்த்தியாகி விட்டதாகச் சொல்வதற்கில்லை. ஆயினும் பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பிப் போக வேண்டியது தான். ஆகா! இது என்ன தொல்லை! நல்ல அத்தங்காள் வந்து சேர்ந்தால், தன்னுடைய வேலையையெல்லாம் கெடுப்பதற்கு! அந்த மூர்க்கன், அவளுடைய கணவன், இப்படியும் ஒரு மனிதன் உண்டா? சீதாவின் வாழ்க்கை எப்படி முடியப் போகிறதோ, தெரியவில்லையே?
ஆண்டு நிறைவுக் கலியாணத்துக்காக வைதிகப் பிராமணர்களும் பந்துமித்திரர்களும் வரத் தொடங்கினார்கள். சூரியாவும் வீட்டுக்குள்ளே சென்றான். வைதிக காரியங்கள் ஆரம்பமாயின. வைதிகர்கள் வேத மந்திரங்களை ஓதினார்கள். ஸ்திரீகள் 'கௌரீ கலியாணம்' பாடினார்கள். நாதஸ்வர கோஷ்டியர் ஜாம்ஜாம் என்று முழங்கினார்கள். சூரியாவும் சற்று நேரத்தில் மேற்படி வைபவங்களில் முழுதும் மனதை ஈடுபடுத்தினான். தான் வந்த காரியத்தையும் புது டில்லி அத்தங்காளின் கஷ்டத்தையும் மறந்து விட்டான் என்றே சொல்லலாம்.
காலை மணி 10-30 ஆயிற்று; தாமோதரம் பிள்ளை தம்முடைய ஆபீஸ் அறையில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். டெலிபோன் மணி அடித்தது; ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்துக்கொண்டு பேசினார். "ஹலோ! தாமோதரம் பிள்ளை பேசுகிறது, போலீஸ் ஸ்டேஷனா? என்ன விசேஷம் - எதிர் வீட்டிலா? - ஓகோ? - நான் எதிர்வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கிறது கூடக் கிடையாதே... உங்களுக்குத் தான் நன்றாய்த் தெரியுமே?..இல்லை, நான் பார்க்கவில்லை. தெரியாது, ஒன்றுமே தெரியாது!... வாருங்கோ! வாருங்கோ! பேஷாய் வாருங்கோ! எல்லாத் தமாஷையும் என் வீட்டிலிருந்தே பார்க்கிறேன்!"
டெலிபோன் ரிஸீவரை வைத்த பிறகு தாமோதரம் பிள்ளை மேலே நோக்கியவண்ணம் இரண்டு நிமிஷம் யோசித்துக் கொண்டிருந்தார்; பிறகு, "அமர்நாத்!" என்று அழைத்தார்.
அமர்நாத் அறைக்குள்ளே வந்தான்.
"எங்கேயோ புறப்படுகிறாப்போல் இருக்கே?" என்றார்.
"ஆம், அப்பா! நானும் சித்ராவும் எதிர்வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம். போகலாமல்லவா!"
"அவசியம் போகலாம், அமர்நாத்! நீ எதிர் வீட்டுக் கலியாணத்துக்குப் போவதில் எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை. ஆனால் ஒரு விஷயத்தைப்பற்றி யோசிக்க வேண்டும்."
"என்னத்தை யோசிக்கறது! நானும் சித்ராவும் கட்டாயம் போகத் தான் போகிறோம். நியாயமாய்ப் பார்த்தால் நீங்கள் கூட வரலாம். எத்தனை நாளைக்கு மனதிலே துவேஷத்தை வளர விட்டுக் கொண்டிருக்கிறது!"
"கூடாது, கூடாது! துவேஷத்தை வளரவிடவே கூடாது. உண்மையில் நான் கூடக் கலியாணத்திற்கு வருவதாகத் தான் இருந்தேன். அதற்குள் ஒரு தடை குறுக்கிட்டிருக்கிறது..?"
"அது என்ன தடை, அப்பா?"
"உன் சிநேகிதன் சூரியாவைப் பற்றி இந்த ஊர்ப் போலீஸுக்கு ஏதோ தகவல் வந்திருப்பது போலத் தோன்றுகிறது...?"
"என்ன? என்ன?" என்று திடுக்கிட்டுக் கேட்டான் அமர்நாத்.
"ஆமாம்; சூரியாவைப்பற்றி ஏதோ சி.ஐ.டி. தகவல் வந்திருக்கும் போலிருக்கிறது. இப்போது டெலிபோனில் டி.எஸ்.பி. என்னைக் கேட்டார். 'சூரியா என்கிற பையன் எதிர் வீட்டுக்கு வந்திருக்கிறது தெரியுமா' என்று கேட்டார்..?"
"நீங்கள் என்ன சொன்னீர்கள்?"
"எனக்கும் எதிர் வீட்டுக்கும் தான் ஜன்ம விரோதமாயிற்றே?" என்றேன். 'வீட்டு வாசலில் ஒரு புதிய இளைஞனைப் பார்க்கவில்லையா?" என்று கேட்டார். அங்க அடையாளம் கூடச் சொன்னார். 'தெருவிலே நின்று வருகிறவர் போவோரையெல்லாம் பார்ப்பது தான் எனக்கு வேலையா?" என்று நான் பதிலுக்குக் கேட்டேன்."
"அப்புறம்"
"அப்புறம் என்ன? சீக்கிரத்தில் போலீஸார் இங்கே வரப் போகிறார்கள்? எதிர் வீட்டில் அமளி துமளிப்படும். இந்த நிலைமையில் நான் எப்படி எதிர் வீட்டுக்குப் போவது? என்னை அங்கே பார்த்தால் டி.எஸ்.பி.யிடம் சொன்னது பொய் என்று ஏற்பட்டுவிடும் அல்லவா!"
"அப்பா! இப்போது என்ன செய்யலாம்? சூரியாவுக்கு ஓர் எச்சரிக்கை கொடுக்க வேண்டாமா?"
"அது உன் இஷ்டம் நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன்; அப்புறம் உன் உசிதம் போலச் செய். ஒரு விஷயம். எச்சரிக்கை செய்வதாயிருந்தால் உடனே செய்ய வேண்டும். இன்னும் பதினைந்து நிமிஷத்தில் போலீஸ் படை இங்கே வந்து விடும். சூரியாவை அரஸ்டு செய்து கொண்டு போனால், அவன் அறியாத உண்மைகளையெல்லாம் சொல்லும்படி செய்வார்கள்... நம் ஊர்ப் போலீஸ்காரர்கள் இவ்வளவு மிருகத்தனமாக நடந்து கொள்வார்கள் என்று நீ கனவிலே கூட எண்ணியிருக்க முடியாது; தெரிகிறதா?"
"அப்பா! நீங்கள் சொல்லும்போதே எனக்கு மயிர்க்கூச்சல் உண்டாகிறது. ஆனால் சூரியாவுக்கு இப்போது வெறுமனே எச்சரிக்கை செய்து என்ன பிரயோசனம்? இன்னும் பதினைந்து நிமிஷத்திலே போலீசார் வந்துவிடுவார்கள் என்று சொல்கிறீர்கள். அதற்குள் அவன் எப்படித் தப்பிக்க முடியும்? எங்கே போய் ஒளிந்து கொள்வான்!"
"இதையெல்லாம் என்னைக் கேட்டு என்ன பயன்? நீயும் உன்னுடைய சிநேகிதனும் எப்படியாவது போங்கள். திடீரென்று அவன் எங்கே போய் ஒளிந்து கொள்வான்? அக்கம் பக்கத்தில் யாராவது உதவி செய்தால் தான் தப்பித்துக் கொள்ளலாம்."
"அப்பா! மன்னித்துக்கொள்ளுங்கள்; சூரியாவுக்கு இந்த வீட்டில் அடைக்கலம் கொடுக்கலாமா?"
"மறுபடி என்னைக் கேட்கிறாயே? இந்த வீட்டில் எனக்கு எவ்வளவு பாத்தியதை உண்டோ , அவ்வளவு உனக்கும் உண்டு; உன்னிஷ்டம் போல் செய். மேலே மாடியில் பின்கட்டு அறையில் போட்டுப் பூட்டிச் சாவியை வேணுமானாலும் காணாமல் அடித்துவிடு! ஆனால் உன் இஷ்டம் என்னை இந்த விஷயமாக ஒன்றுமே கேட்க வேண்டாம்! தெரிந்ததா!"
மறு நிமிடம் அமரநாத் வெளியேறி எதிர் வீட்டுக்குச் சென்றான். ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் சூரியாவைக் கூட்டிக் கொண்டு திரும்பினான். மேல் மச்சுக்கு அழைத்துப் போய்த் தகப்பனார் சொற்படி பின்கட்டு அறையில் அடைத்துக் கதவைப் பூட்டினான்.
சில நிமிஷத்துக்கெல்லாம் வீதியில் தட தட தட தட என்று மோட்டார் சைக்கிள் வரும் சத்தம் கேட்டது. மோட்டார் சைக்கிளுடன் ஜீப் ஒன்றும் வந்தது. வீதியின் இரு புறத்திலிருந்தும் போலீஸார் மார்ச் செய்து கொண்டு வந்தார்கள். கைதிகளைப் போட்டு அடைத்துக் கொண்டு போகும் இரும்புக் கூண்டு போட்ட போலீஸ் வண்டி ஒன்றும் வந்தது. ஆத்மநாதய்யரின் வீட்டு வாசலிலும் கொல்லையிலும் போலீஸ் ஜவான்கள் நின்று கொண்டார்கள். அப்புறம் சிறிது நேரம் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது.
வைதிகப் பிராமணர்கள் மந்திரம் சொல்வதை நிறுத்திவிட்டு வெளியில் ஓடிவந்தார்கள். அவர்களையெல்லாம் குண்டாந்தடியால் அடித்துப் போலீஸார் வீட்டுக்குள்ளே விரட்டினார்கள். "யாரையும் வெளியில் விட வேண்டாம்" என்று ஒரு பெரும் அதிகாரக் குரல் உத்தரவிட்டது.
ரேழியில் உட்கார்ந்திருந்த நாதஸ்வரக்காரர்கள் வெளியேறப் பார்த்தார்கள். அதன் பயனாகத் தவுல் வாத்தியம் இரண்டு பக்கமும் படார் என்று கிழிந்தது. நாதஸ்வரக் குழாயும் ஒத்து வாத்தியமும் நொறுங்கின. ஜாலராத் தாளங்கள் சுக்குநூறாயின.
போலீஸ் உத்தியோகஸ்தர்கள் வீட்டுக்குள்ளே பிரவேசிக்கப் பார்த்தபோது கிட்டாவய்யர் வந்து வாசற்படியில் நின்றார். தன்னுடைய பிள்ளையைப் பிடிக்கத் தான் வந்திருக்கிறார்கள் என்று ஒருவாறு தெரிந்து கொண்டார் போலும். பையன் வெளியேறி விட்டான் என்பது அவருக்குத் தெரியாது. ஆகையால் கையைக் கட்டிக்கொண்டு கம்பீரமாக நின்று, "உள்ளே வைதிக காரியம் நடக்கிறது; ஒருவரும் நுழையக்கூடாது. அப்படி நுழைந்தால் என் செத்த உடம்பை மிதித்துக் கொண்டு தான் போகவேண்டும்" என்றார். அவர் சொல்லி வாய் மூடுவதற்குள் மண்டையில் ஒரு அடி, கழுத்தில் ஒரு கல்தா.
ஆத்மநாதய்யர் முன் வந்து, "ஏன், ஸார், இவ்வளவு தடபுடல் செய்கிறீர்கள்? சாவதானமாகப் பரிசோதனை செய்து யார் வேண்டுமோ அவரைக் கொண்டு போங்கள். யாரும் தடுக்கவில்லை. வீணாகப் பெண் பிள்ளைகளைப் பயப்படுத்த வேண்டாம்" என்றார். ஆத்மநாதய்யருடைய சாந்தமான பேச்சின் பயனாக அவருக்கு மண்டையில் இரண்டு அடி கிடைத்தது.
அவ்வளவு தான்; போலீஸார் தடதட என்று வீட்டுக்குள்ளே பிரவேசித்தார்கள். முன்கட்டிலும் பின்கட்டிலும் மேல் மாடியிலும் ஒவ்வொரு அறையாகப் புகுந்து தேடினார்கள். காலில் தட்டுப்பட்டதை எல்லாம் உதைத்துத் தள்ளினார்கள். கையில் அகப்பட்டதை எல்லாம் உடைத்து நொறுக்கினார்கள். எதிரில் தட்டுப்பட்டவர்களைப் பிடித்துத் தள்ளினார்கள்; அல்லது தடியால் அடித்தார்கள். படுக்கையறைக்குள்ளே புகுந்து மெத்தை தலையணைகளைப் பிய்த்து எறிந்தார்கள். சாமான் அறைக்குள்ளே புகுந்து சட்டி பானைகளை உடைத்தார்கள். சமையல் கட்டுக்குள்ளே பிரவேசித்து அடுப்பிலே கொதித்துக் கொண்டிருந்த சாம்பார் பாத்திரத்தில் குண்டாந்தடியை விட்டுத் துளாவிப் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் தேடி வந்த ஆசாமி எங்கேயும் அகப்படவில்லை.
வீட்டு ஸ்திரீகள் இன்னது செய்வது என்று தெரியாது அழுது கொண்டே அங்குமிங்கும் ஓடினார்கள்; குழந்தைகள் 'கோ' என்று கதறினார்கள்.
இதற்குள் ஒருவாறு சமாளித்துக்கொண்டு எழுந்து வந்து கிட்டாவய்யர், "எதற்காக எல்லாரும் இப்படிக் கூச்சல் போடுகிறீர்கள்? எல்லோரும் பேசாமலிருங்கள்; நடக்கிறது நடக்கட்டும்; பகவான் ஒருவர் இருக்கிறார்" என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.
முதலில் போலீஸார் தாங்கள் தேடி வந்த ஆசாமி கங்காதரனோ என்று அவனைப் பிடித்து நாலு அடி கொடுத்தார்கள். ஆனால் அவனுடைய தலையில் வைத்திருந்த கட்டுக்குடுமி, புரட்சிக்காரன் அவன் இல்லை என்பதை நிரூபித்தது. பிறகு அவனை விட்டுவிட்டார்கள்.
அநாவசியமாக அடிபட்ட கங்காதரன், "எனக்கு அப்போதே தெரியும், நான் சொன்னால் யார் கேட்கிறார்கள். அந்தக் காலிப் பயலை வீட்டுக்குள்ளேயே விடக்கூடாது என்று சொன்னேன், கேட்டீர்களா? அருமைப் பிள்ளை என்று செல்லம் கொஞ்ச ஆரம்பித்து விட்டீர்கள். அவன் தான் சனீசுவரனுடைய அவதாரம் ஆயிற்றே? வரும்போதே சங்கடத்தையும் கூட அழைத்துக் கொண்டு வருவானே?" என்று இரைச்சல் போட்டுக் கொண்டிருந்தான்.
போலீஸார் வீடு முழுவதும் சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்தும் பயனில்லை; தேடிய ஆசாமி அகப்படவில்லை. மேலே, கீழே, அறைக்குள்ளே, அலமாரிக்குள்ளே, அரிசி மூட்டைக்குள்ளே, சாம்பார் பாத்திரத்துக்குள்ளே, மெத்தை தலையணைக்குள்ளே, எங்கேயும் அவனைக் காணவில்லை. தரையிலே சுரங்க அறை ஏதேனும் இருக்குமோ என்று சில போலீஸ் ஜவான்கள் குண்டாந்தடியால் தட்டிக் கூடப் பார்த்தார்கள்; அதிலும் பயனில்லை. அரை மணி நேர அமர்க்களத்துக்குப் பிறகு போலீஸ்காரர்களுக்குத் திரும்பி போக உத்தரவு பிறந்தது.
தாமோதரம் பிள்ளை தம்முடைய வீட்டு வாசலில் வந்து நின்று எதிர் வீட்டில் நடந்த அமர்க்களத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். பார்க்கப் பார்க்க, அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
வந்த காரியம் பயன்படாமல் போலீஸ்காரர்கள் வெளியில் வந்ததையும் அவர் பார்த்தார். அவர் தம்முடைய சிநேகிதர் டி.எஸ்.பி.யின் அருகில் சென்று, "இன்று நீங்கள் செய்த காரியம் எனக்கு வெட்கத்தை உண்டாக்குகிறது. இந்தப் பஞ்சாங்கப் பிராமணர்களை இப்படித் தடியால் அடித்ததில் உங்களுக்கு என்ன திருப்தி? இந்தச் சூரத்தனத்தை எல்லாம் ஜப்பானியரிடம் அல்லவா காட்ட வேண்டும்!" என்றார்.
"மிஸ்டர் பிள்ளை, நீங்கள் விஷயம் தெரியாமல் பேசுகிறீர்கள். 'ஸாபோடாஜ்' கோஷ்டியைச் சேர்ந்த ஒரு பையன் இந்த வீட்டுக்கு வந்திருந்ததாகத் தகவல் கிடைத்தது. காவேரிப் பாலத்தை வெடி வைத்து இடிக்கச் சதியாலோசனை நடந்திருக்கிறது.."
"ஆமாம்; காவேரிப் பாலத்தை இடித்து விட்டார்கள், போங்கள், ஸார்! அவர்களுடைய மூளையைச் சொல்கிறதா? உங்களுடைய அக்கிரமத்தைச் சொல்கிறதா? இப்படியெல்லாம் செய்துதானா இராஜாங்கத்தினிடம் விசுவாசத்தை வளர்த்து விட முடியும்?...சரி...தேடிய பையன் அகப்பட்டானா?"
"பையன் இந்த வீட்டில் இல்லை. ஆனால் இந்த டவுனிலே தான் இருக்கிறான். எப்படியும் பிடித்து விடுவோம்?" என்றார் டி.எஸ்.பி.
மோட்டார் சைக்கிளும், ஜீப்பும், குண்டாந்தடிப் போலீஸும் ஏக ஆர்ப்பாட்டத்துடன் அவ்விடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றன.
ஆத்மநாதய்யரின் வீட்டுக்குள்ளே லலிதாவின் விம்மல் சத்தம் கேட்டது.
அத்துடன் அவளுடைய இரண்டு குழந்தைகளின் அழுகைச் சத்தமும் கலந்தது.
இவ்வாறு சிரஞ்சீவி பாலசுப்பிரமணியனின் ஆண்டு நிறைவுக் கலியாணம் சிறப்பாக முடிவடைந்தது.
இரவு மணி பத்து அடித்தது. வானத்தைக் கருமேகங்கள் மூடிக்கொண்டிருந்தன. பொச பொசவென்று மழைத் தூற்றல் போட்டுக் கொண்டிருந்தது. சிலுசிலுவென்று குளிர்ந்த காற்று அடித்துக் கொண்டிருந்தது.
ஆத்மநாதய்யர் வீட்டுக்குள் சந்தடி இன்னும் அடங்கவில்லை. ஆனால் தாமோதரம் பிள்ளையின் வீட்டில் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டு விட்டன. வீட்டில் இருளோடு நிசப்தம் குடிகொண்டிருந்தது.
வீட்டுக்குப் பக்கத்துச் சந்திலிருந்து ஒரு மோட்டார் வண்டி வந்து தாமோதரம் பிள்ளை வீட்டு வாசலில் நின்றது. அடுத்த நிமிஷம் வீட்டுக் கதவு திறந்தது. இருளடைந்திருந்த வீட்டின் உட்புறத்திலிருந்து ஓர் உருவம் வெளிப்பட்டு வந்தது. அந்த உருவத்தின் மீது மங்கலான வீதி விளக்கின் ஒளி விழுந்த போது, இடுப்பில் காஷாயம் தரித்துக் கையில் கமண்டலம் ஏந்திய பால சந்நியாசியின் உருவம் என்று தெரிய வந்தது. அந்தப் பால சந்நியாசி திண்ணை ஓரத்தில் நின்று வீதியின் இருபுறமும் எதிர்ப்பக்கமும் கவனித்துப் பார்த்தார். ஒருவரும் இல்லை என்று அறிந்ததும் மோட்டார் வண்டிக்குள் திறந்திருந்த கதவின் வழியாகப் பாய்ந்து ஏறினார். மறுகணம் வண்டி சத்தம் செய்யாமல் புறப்பட்டது.
சிறிது நேரம் வரையில் வண்டிக்குள்ளேயும் நிசப்தம் நிலவியது. தேவபட்டணத்துத் தெருக்களைத் தாண்டி அப்பாலிருந்த சாலையில் வண்டி பிரவேசித்ததும், வண்டி ஓட்டிய அமரநாத், "அப்பா! பிழைத்தோம், இனிப் பயமில்லை!" என்றான்.
"எனக்கு என்னமோ இன்னும் கொஞ்சம் பயமாகத்தானிருக்கிறது. இந்த மோட்டாரில் இருக்கிற வரையில் எனக்குப் பயந்தான் இறங்கிவிட்டால் கவலையில்லை. எனக்காக நீ இவ்வளவு பெரிய அபாயத்துக்கு உட்பட எண்ணியதை நினைத்தால்...?"
"இந்த தேசத்திலேயே நீ ஒருவன் தான் எதற்கும் துணிந்த வீராதி வீரன் என்று எண்ணம் போலிருக்கிறது!"
"அப்படியில்லை, அமரநாத், எந்த நிமிஷத்திலும் கைதியாவதற்குத் தயாராகவே நான் இருந்து வருகிறேன். என்றைக்காவது ஒரு நாள் கைதியாகியே தீரவேண்டும். உன் விஷயம் அப்படியல்ல. எனக்காக நீ கஷ்டப்பட வேண்டி நேர்ந்தால்..."
"உனக்காக நான் ஒன்றும் கஷ்டப்படவில்லை. உனக்காக கஷ்டப்பட்டவர்கள் உன் தகப்பனார், தமையன், உன் தங்கையின் மாமனார் முதலியவர்கள். எல்லாரும் இன்றைக்குச் செம்மையாக அடி வாங்கினார்கள். உன் தங்கையும் அம்மாவும் பட்ட வேதனை கொஞ்சமல்ல. அவர்களுக்கு ஆறுதல் சொல்லுவதற்குள்ளே எனக்குப் பிராணன் போய்விட்டது."
"அதை நினைத்தால் எனக்கு அவமானமாயிருக்கிறது. என்றைக்காவது ஒரு நாள் அவர்களுடைய முகத்தில் விழிக்க வேண்டி நேர்ந்தால், என்ன சமாதானம் சொல்வேன்? அவர்களை அடிபடும்படி விட்டுவிட்டு நான் தப்பித்துக் கொண்டதைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்...?"
"ஒன்றும் நினைக்க மாட்டார்கள். எப்படியாவது நீ தப்பித்துக் கொண்டாயே என்று சந்தோஷப்படுவார்கள். இப்போதும் கூட உன் கதி என்ன ஆயிற்றோ என்று தான் அவர்களுக்குக் கவலை. நீ நிச்சயமாய்த் தப்பித்துக் கொண்டாய் என்று தெரிந்தால் அவர்களுடைய கவலை நீங்கிவிடும்."
"என்ன தான் இருந்தாலும் நான் இன்று செய்தது ரொம்ப அவமானமான காரியந்தான். உன்னுடைய வற்புறுத்தலைக் கூட நான் பொருட்படுத்தியிருக்க மாட்டேன். அவர்களை அடிபட விட்டு நான் ஒளிந்து கொண்டிருக்க என் மனம் இடம் கொடுத்திராது. டில்லியில் இருந்து என் அத்தங்கா சீதாவைப் பற்றிக் கடிதம் வரவில்லையென்றால் நானே போலீஸ் அதிகாரிகளிடம் சென்று என்னை ஒப்புக் கொடுத்திருப்பேன்."
"அதனால் யாருக்கும் எந்தவிதச் சந்தோஷமும் ஏற்பட்டிராது. உன்னைச் சேர்ந்தவர்கள் எல்லாம் மன வேதனைப்பட்டிருப்பார்கள், - என் தகப்பனார் உள்படத்தான்!"
"தாமோதரம் பிள்ளை என் விஷயத்தில் காட்டிய அனுதாபத்தை நினைத்தால் தான் எனக்குப் பரம ஆச்சரியமாயிருக்கிறது."
"அதற்குக் காரணம் என்னவென்று உனக்குத் தோன்றுகிறது? ஊகித்துச் சொல், பார்க்கலாம்!"
"காரணம் வேறு என்ன இருக்க முடியும்? நான் உன்னுடைய சிநேகிதன் என்ற காரணந்தான்."
"அதெல்லாம் இல்லை; இங்கிலீஷ்காரன் சிங்கப்பூரில் அடிபட்டதிலிருந்து நம்மவர்கள் எல்லாருடைய மனமும் மாறிப் போயிருக்கிறது. இந்த இங்கிலீஷ் ராஜாங்கம் எப்படியும் இந்தியாவை விட்டுப் போய்விடப் போகிறது என்று சிறு பிள்ளைகள் முதல் வயது முதிர்ந்த கிழவர்கள் வரையில் எல்லாரும் நம்புகிறார்கள்..."
"அதற்கும் உன்னுடைய தகப்பனார் எனக்குச் செய்த உதவிக்கும் என்ன சம்பந்தம்?"
"சம்பந்தம் இருக்கிறது; நாளைக்கு இங்கிலீஷ்காரன் இந்தியாவை விட்டுப் போய்விட்டால், அடுத்தாற்போல் அதிகாரத்துக்கு யார் வருவார்கள்? உன்னைப் போன்ற காங்கிரஸ் புரட்சிக்காரர்கள் ஒருவேளை வந்தாலும் வருவீர்கள். எல்லாவற்றுக்கும் 'கப்பலில் பாதிப் பாக்குப் போட்டு வைக்கலாம்' என்று கருதி தான் அப்பா உன்னைத் தப்புவிக்க முன் வந்தார்."
"அது உண்மையானால், உன் தகப்பனாரின் பாதிப் பாக்கு நஷ்டந்தான். என்னைப் போன்ற ஓட்டைக் கப்பலில் பாக்குப் போட்டு என்ன பிரயோஜனம்? ஆனால், நீ சொல்லும் காரணத்தை நான் ஒரு நாளும் ஒப்புக் கொள்ள மாட்டேன். உன்னுடைய சிநேகிதன் என்ற காரணத்துக்காகவும் என் பேரில் உள்ள பிரியத்தினாலுந்தான் இந்தக் காரியம் செய்திருக்க வேண்டும்."
"போனால் போகட்டும், நீ சொல்கிறபடி வைத்துக் கொள்ளலாம். உன் அத்தங்காளின் விஷயம் என்னவோ சொன்னாயே?"
"என் தங்கை லலிதாவைப் பார்க்க வந்த மாப்பிள்ளை தனக்குச் சீதாவைத் தான் பிடித்திருக்கிறது என்று சொல்லி அவளைக் கலியாணம் செய்து கொண்டானல்லவா? அந்தக் காதல் கலியாணம் பற்றி அப்போது நாமெல்லோரும் பிரமாதமாய்ப் பேசிக் கொண்டிருந்தது நினைவிருக்கிறதா? உண்மையில் அந்தக் கலியாணம் பெரிய துரதிர்ஷ்டமாய் முடிந்திருக்கிறது. அவர்களுடைய இல்வாழ்க்கையில் சந்தோஷமே கிடையாது அமரநாத்! ஓயாமல் சண்டை தான்."
"நீ வீணாக மிகைப்படுத்திக் கூறுகிறாய், சூரியா! நம்முடைய தேசத்தில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது தம்பதிகள் ஓயாமல் சண்டை போட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சந்தோஷமாக இல்லை என்று அர்த்தமா? நானும் சித்ராவும் தினம் டஜன் தடவை சண்டை போட்டுக் கொள்கிறோம்..."
"உங்களுடைய விஷயம் வேறு, அமரநாத்! உங்களைப் போன்ற தம்பதிகள் உலகத்தில் வெகு அபூர்வம். உங்களுடைய சண்டையெல்லாம் காதலர்களின் சண்டை; வேடிக்கைச் சண்டை. சீதா - சௌந்தரராகவனுடைய விஷயம் அப்படியல்ல. பூனையும் எலியும் போல அவர்களுடைய வாழ்க்கை நடந்து வருகிறது."
"சௌந்தரராகவன் சீமைக்குப் போய் வந்தவன்; பெரிய சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பவன். ஆகையால் தன் மனைவி ஆங்கில தோரணையில் நவநாகரிகமாக வாழ வேண்டும் என்று நினைக்கலாம். உன் அத்தங்காள் அதற்குச் சம்மதியாமல் இருக்கலாம். எனக்குத் தெரியும்; எத்தனையோ ஐ.சி.எஸ். காரர்கள் இந்தக் காரணத்துக்காகவே மனைவியைத் தள்ளி வைத்திருக்கிறார்கள்."
"சீதா விஷயத்தில் அந்தக் காரணம் சொல்ல முடியாது அமரநாத்! முதலிலே ஒருவேளை கொஞ்சம் தயங்கியிருக்கலாம். பிற்பாடு சௌந்தரராகவன் நாகரிக ஏணியில் ஒரு படி ஏறினால் சீதா இரண்டு படி ஏறினாள். எனக்கு கூட, 'ஐயோ! அத்தங்கா இப்படி மாறிப்போய்விட்டாளே?' என்று வருத்தமாயிருந்தது. அதனால் பயன் ஒன்றும் ஏற்படவில்லை. சௌந்தரராகவனுடைய மூர்க்கத்தனம் மேலும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது."
"இப்போது தெரிகிறது, எனக்குக் காரணம். நம்மில் இங்கிலீஷ் படித்த இளைஞர்கள் கலியாணமான புதிதில் தங்களுடைய மனைவிமார் நவநாகரிகமடைந்து எல்லாருடனும் கூச்சமின்றிப் பழக வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்புறம் அவர்களுக்கு இது பிடிக்காமல் போய்விடுகிறது. ஹிந்து தர்மத்தின்படி பெண்கள் அடக்கமாக இருந்தால் தான் நல்லது என்று நினைக்கிறார்கள். அப்படி ஆண் பிள்ளைகள் நினைக்கும் போது பெண் பிள்ளைகளுக்குப் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிப்போகப் பிடிப்பதில்லை... நான் சொல்கிறதைக் கேள், சூரியா! அந்தத் தம்பதிகள் விஷயத்தில் நீ ஒன்றும் தலையிடாமல் இருந்துவிடு. கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகப் போய்விடும்!"
"அப்படி என்னால் இருக்க முடியவில்லை, அமரநாத்! வாழ்நாள் முழுதும் கஷ்டப்பட்ட என் அத்தை இறப்பதற்கு முன்னால் தன்னுடைய அனாதைப் பெண்ணைக் கவனித்துக் கொள்ளவேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டாள். அதை என்னால் மறக்க முடியவில்லை!" என்றான் சூரியா.
சாலையின் இருபுறத்திலும் கழனிகளில் தண்ணீர் ததும்பி அலை மோதிக் கொண்டிருந்தது. சற்று தூரத்தில் காவேரி நதியின் பிரவாகம். மேட்டார் வண்டி சாலை வளைவில் திரும்பும் போது நெடுந்தூரத்துக்கு மோட்டார் விளக்கின் வெளிச்சம் அடித்து நாலாபுறமும் பரவியிருந்த நீர்வளத்தைக் காட்டியது. கழனியிலும் காவேரியிலும் இலேசான மழைத் தூற்றல் விழுந்தபோது உண்டான சலசலசல சத்தம் மந்திர ஸ்தாயி சங்கீதத்தைப் போல் மனதுக்கு அமைதியை உண்டாக்கியது. நல்ல சங்கீதக் கச்சேரியின் நடுவில் அரசியல் சம்பாஷணை தொடங்கும் ரசிகர்களைப் போல் திடீர் திடீரென்று தவளைகள் உற்சாகமடைந்து வரட்டுக் கூச்சல் போட்டன.
மோட்டார் வண்டியின் முன் கண்ணாடியில் விழும் மழைத் துளிகளைத் துடைக்கும் கருவிகள் டக் டக் என்ற சத்தத்தோடு தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தன.
"அடாடா! நீர்வளம் என்றால் இது அல்லவா நீர்வளம்? வடநாட்டில் பல பகுதிகளை நான் பார்த்திருக்கிறேன். எல்லாம் வறண்ட பிரதேசங்கள். இந்த மாதிரி நீர்வளம் எங்கேயும் கிடையாது" என்றான் சூரியா.
"நீ வங்காளத்துக்கு வந்ததில்லை, சூரியா! தமிழ்நாட்டைக் காட்டிலும் நீர்வளம் நிறைந்தது வங்காளம். அதிலும் கீழ் வங்காளம் அதிக வளம் பொருந்தியது. மழைக் காலத்தில் எங்கே பார்த்தாலும் தண்ணீர் மயந்தான்!" என்று அமரநாத் கூறினான்.
"அப்படிப்பட்ட நீர்வளம் நிறைந்த தேசத்தில் இப்போது பஞ்சம் என்று சொல்கிறாயே?" என்றான் சூரியா.
"அதுதானே வேடிக்கை! நான் சொல்லுவதை மட்டும் என்ன? பத்திரிகைகளில் நீ பார்க்கவில்லையா; வெளி ஜில்லாக்களிலிருந்து வரும் ஜனங்கள் சாலை ஓரங்களில் விழுந்து சாகிறார்கள்."
"கல்கத்தா நிலைமை அப்படியிருக்கும்போது நீ மறுபடியும் அங்கே போகப் போவதாகச் சொல்கிறாயே."
"போகாமல் என்ன செய்வது? உத்தியோகம் இருக்கிறதல்லவா? வங்காளத்தில் பஞ்சம் என்றால், கல்கத்தாவிலுள்ள நாற்பது லட்சம் பேரும் சாப்பாடு இல்லாமல் செத்துப் போய் விடுவார்கள் என்பதில்லை."
"தெரியும், தெரியும். உண்மையில் அரிசிப் பஞ்சமே இல்லை; பணப் பஞ்சம் தான். பணம் இருந்தால் அரிசிக்குப் பஞ்சமில்லை. இருக்கிற அரிசியைச் சில சண்டாளர்கள் வாங்கிச் சேர்த்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய கொள்ளை லாபத்துக்காக ஏழை எளியவர்கள் உயிர் பலி கொடுக்கப்படுகிறது. அப்படித்தானே, அமரநாத்!"
"ஆம்; அப்படித்தான் இத்தகைய பேராசை பிடித்த கிராதகர்கள் நம்முடைய நாட்டில் இருக்கிறார்கள். இந்த நாட்டுக்குத் தான் நீ பூரண சுதந்திரம் வேண்டும் என்கிறாய்."
"இங்கிலீஷ்காரன் எப்போது இந்த நாட்டைவிட்டு வெளியேறுகிறானோ, அப்போது இப்படிப்பட்ட தீமைகள் ஒழிந்து போய்விடும். பிரிட்டிஷ் ஆட்சியினால் வந்த கேடுகள் தானே இவையெல்லாம்?"
"ஆனால், இங்கிலீஷ்காரன் இந்தியாவைவிட்டுப் போய் விடுவான் என்று நீ நம்புகிறாயா? உண்மையாகச் சொல்!" என்றான் அமரநாத்.
"கட்டாயம் ஒருநாள் இங்கிலீஷ்காரன் இந்த நாட்டை விட்டுப் போகத்தான் போகிறான். காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரையில் நான் பிரயாணம் செய்திருக்கிறேன். அமரநாத்! வங்காளத்துக்கு மட்டும் தான் வரவில்லை. நான் போன இடத்திலேயெல்லாம் ஜனங்களுடைய மனது கொதித்துக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்டேன். இந்தியா தேசம் ஒரு பெரிய எரிமலையாகியிருக்கிறது. எந்தச் சமயத்தில் எரிமலை வெடித்து நெருப்பைக் கக்குமோ தெரியாது. ஏதாவது ஒரு சந்தர்ப்பம் ஏற்படவேண்டியது தான்; நாற்பது கோடி ஜனங்களும் சீறி எழுந்து புரட்சி செய்யப் போகிறார்கள். அந்தப் புரட்சி நெருப்பிலே பிரிட்டிஷ் ஆட்சி எரிந்து பஸ்பமாகப் போகிறது. அது மட்டுமா? நாட்டைப் பிடித்த எல்லாப் பீடைகளும் எரிந்து பொசுங்கிச் சாம்பலாகப் போகின்றன."
"போதும், சூரியா! போதும்! நம்மைச் சுற்றிலும் ஒரே குளிர்ச்சியாயிருக்கிறது. இருந்தாலும் உன்னுடைய பேச்சு இந்த மோட்டாருக்குள் டெம்பரேச்சரையே அதிகமாக்கிவிட்டது. எரிமலை வெடிக்கிறபோது வெடிக்கட்டும், பார்த்துக்கொள்ளலாம்... அதோ மயிலம்பட்டி ஸ்டேஷன் வந்துவிட்டது; இப்போது நாம் பிரியவேண்டும்!" என்றான் அமரநாத்.
சற்று தூரத்தில் விளக்குகள் மினுக்கின. ஒரு சின்னக் கட்டிடம், கைகாட்டி முதலிய ரயில்வே ஸ்டேஷன் சின்னங்கள் மங்கலாகத் தெரிந்தன. தேவபட்டணம் ஸ்டேஷனில் ரயில் ஏறுவது அபாயம் என்று அமரநாத் இந்தப் பட்டிக்காட்டு ஸ்டேஷனுக்குச் சூரியாவைக் கொண்டு விட்டான்.
வண்டி ஒரு மரத்தடியில் நின்றது, நல்லவேளையாகத் தூறல் குறைந்திருந்தது. சூரியா கதவைத் திறந்துகொண்டு வண்டியிலிருந்து கீழே இறங்கினான்.
"சூரியா! உன்னை இப்போது பார்த்தால் சாக்ஷாத் விவேகானந்த சுவாமியைப் போலிருக்கிறது. பார்க்கிறவர்கள் 'யாரோ மகான்; பால சந்நியாசி' என்று நினைத்துக் கொள்வார்கள்!" என்றான் அமரநாத்.
"உண்மையில் நான் 'பால சந்நியாசி' அல்ல; போலி சந்நியாசி. இந்தப் புனிதமான வேஷத்தைப் பொய்யாகப் போட வேண்டியிருப்பது பற்றி எனக்கு மிக்க வருத்தமாயிருக்கிறது..."
"ஆனால் இந்த வேஷம் போதும் என்று நினைக்கிறாயா? சி.ஐ.டி. புலிகள் இதற்கு ஏமாந்து போய்விடுவார்களா?" என்று அமரநாத் கேட்டுக்கொண்டே வண்டியிலிருந்து இறங்கினான்.
"சொல்லுவதற்கில்லை. தென்னிந்தியர்கள் எல்லாக் காரியங்களிலும் கெட்டிக்காரர்களாயிருப்பதுபோலவே சி.ஐ.டி. வேலையிலும் கெட்டிக்காரர்களாய் இருக்கிறார்கள். வட இந்தியாவில் சி.ஐ.டி. சுத்த மோசம். சம்பந்தமில்லாதவர்களைத் தான் பிடிப்பார்கள். இத்தனை தூரம் நான் பிரயாணம் செய்திருக்கிறேன்; தேவபட்டணத்தில் எப்படியோ கண்டு கொண்டு விட்டார்கள், பார்! எல்லாம் கடவுள் சித்தம்போல் நடக்கும். டில்லிக்கு ஒரு தடவை போய்விட்டேனானால், அப்புறம் என்ன ஆனாலும் பாதகமில்லை! நான் போய் வரவா?" என்றான் சூரியா.
அமரநாத் சூரியாவின் கையைப் பிடித்துக் குலுக்கிய வண்ணம் "உன்னை இப்படி விட்டுப் போவது எனக்கு எவ்வளவோ கஷ்டமாயிருக்கிறது; ஆனாலும் வேறு வழியில்லை. சூரியா! இந்தியா தேசமெங்கும் பிரயாணம் செய்த நீ வங்காளத்துக்கு மட்டும் ஏன் வராதிருக்க வேண்டும்? டில்லியில் உன் காரியம் முடிந்ததும் கல்கத்தாவுக்கு வந்துவிடு. கல்கத்தா புரட்சிக்காரர் கூட உன்னைப் பிடிக்க மாட்டார்கள். வேறு யாரையாவது தேடிக்கொண்டு போவார்கள். கல்கத்தாவுக்கு வந்து என் வீட்டில் சில காலம் தங்கி இரு. என் கல்கத்தா விலாசம் ஞாபகம் இருக்கிறதல்லவா?" என்றான்.
"டில்லிக்குப் போய் என் காரியம் முடிகிறவரையில் நான் பிடிபடாதிருந்தால், கட்டாயம் கல்கத்தா வருகிறேன், அமரநாத்! விலாசம் ஞாபகம் இருக்கிறது!" என்று சூரியா கூறினான். அப்போது அடித்த மின்னல் ஔதயில் அவனுடைய கண்களில் துளித்திருந்த கண்ணீர்த் துளிகள் முத்துப் போலப் பிரகாசித்தன.
அமரநாத் மேலே ஒன்றும் சொல்லாமல் மௌனமாக வண்டியைத் திருப்பிக்கொண்டு போனான்.
இருட்டிலே தன்னந்தனியே நடந்து சென்று சூரியா ரயில்வே ஸ்டேஷனை அடைந்தான். அங்கேயிருந்த இரவு ஸ்டேஷன் மாஸ்டரும் குமாஸ்தாவும் இரண்டு போர்ட்டர்களும் அந்தப் பால சந்நியாசியின் முக தேஜஸைப் பார்த்துப் பிரமித்தார்கள். "சுவாமி எங்கேயிருந்து வருகிறது? எங்கே போகிறது?" என்று அவர்கள் விசாரித்துத் தெரிந்து கொள்ளப் பார்த்தார்கள். ஆனால் அவர்களுடைய எல்லாக் கேள்விகளுக்கும் சுவாமியிடமிருந்து "ஹர ஹர மகாதேவ" என்ற ஒரு பதில் தான் வந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் தெற்கே போகும் ரயில் வரவே சந்நியாசி பிளாட்பாரத்துக்குள்ளே சென்றார். கேட்டில் நின்ற போர்ட்டர் அவரை நிறுத்தலாமா என்று பார்த்தான். அதற்குள் இரவு ஸ்டேஷன் மாஸ்டர், "வேண்டாம், அப்பா! சாமியாரை நிறுத்தாதே!" என்று சொன்னார்.
பிளாட்பாரத்தில் வந்து நின்ற ரயில் ஓரமாகப் பால சந்நியாசி விடுவிடு என்று நடந்து சென்றார். தேவபட்டிணம் ஸ்டேஷனில் அமரநாத் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த இரண்டாம் வகுப்பு டிக்கட் சந்நியாசியிடம் இருந்தது. ஆனால் அவர் மூன்றாம் வகுப்பு வண்டிகளைப் பார்த்துக்கொண்டே போனார். மழையை முன்னிட்டு அநேக வண்டிகளில் ஜன்னல் கதவுகள் சாத்தப்பட்டிருந்தன. ஒரு வண்டியில் சில ஜன்னல்கள் திறந்திருந்தன. சாமியார் அந்த வண்டியில் ஏறினார். ஒவ்வொரு அரை பெஞ்சியிலும் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அல்லது ஒருவர் காலை மடக்கிக் கொண்டு படுத்திருந்தார். ஒரே ஒரு அரை பெஞ்சியில் மட்டும் ஒரு மனிதன் சப்பணம் போட்டு உட்கார்ந்திருந்தான். அவனுக்குப் பக்கத்தில் ஒரு டைரியும் பென்சிலும் இருந்தன.
பால சந்நியாசி நேரே அந்தப் பெஞ்சியண்டை போய் நின்று, "ஹரஹர மகாதேவா" என்றார். அந்த மனிதன் நிமிர்ந்து பார்த்துவிட்டு, "உட்காருங்கோ, சாமி!" என்றான்.
சாமியார் உட்கார்ந்து மடியில் செருகியிருந்த சிறு பட்டுப் பையை எடுத்து, அதிலிருந்து கொஞ்சம் விபூதி எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு, "திருச்செந்தூர் முருகா!" என்றார்.
"சாமி எவ்விடத்துப் பிரயாணமோ?" என்று அந்த மனிதன் கேட்டான்.
"இந்தக் கட்டை காசிக்குப் போய்த் திரும்பி வருகிறது. இராமேசுவரம் போக ஆசை! முருகன் அருள் எப்படியோ?" என்றார் பால சந்நியாசி.
"சாமியிடம் டிக்கட் இருக்கிறதா?" என்று அந்த மனிதன் கேட்டான்.
"மதுரை வரையில் இருக்கிறது; ஒரு பக்தர் வாங்கிக் கொடுத்தார். அதற்கப்பால் முருகனுடைய சித்தம்!" என்று சொல்லிக் கொண்டே சந்நியாசி இடுப்பில் செருகியிருந்த டிக்கட்டை எடுத்துக் காட்டினார்.
"இது இரண்டாம் வகுப்பு டிக்கட் அல்லவா? சாமி தவறி மூன்றாம் வகுப்பு வண்டியில் ஏறிவிட்டதே!"
"இல்லை; இல்லை தெரிந்து தான் ஏறினேன். பக்தன் வாங்கிக்கொடுத்தாலும் இந்தக் கட்டைக்கு இரண்டாம் வகுப்பில் போக விருப்பமில்லை. ஆகையால் ரயில் இங்கே நின்றதும் இரண்டாம் வகுப்பிலிருந்து இறங்கி மூன்றாம் வகுப்பில் ஏறலாயிற்று!"
அந்த மனிதனுக்கு ஒரே ஆச்சரியமாக போய்விட்டது.
"சாமியார் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும். இந்தக் காலத்தில் எங்கே பார்த்தாலும் போலிச் சாமியார்கள் தான் அதிகமாய்ப் போயிருக்கிறார்கள்!" என்றான்.
"முருகன் செயல்!" என்றார் பால சந்நியாசி.
ரயில் போய்க்கொண்டிருந்தது. வெளியே மழைத் தூறல் போட்டுக்கொண்டிருந்தது. உள்ளே பிரயாணிகள் தூங்கி வழிந்தார்கள். சாமியாருக்கும் அவருடைய புதிய பரமானந்த சீடனுக்கும் மட்டும் தூக்கம் வரவில்லை.
"அப்பனே! உன் மனதிலே கவலை குடிகொண்டிருக்கிறது!" என்றார் சந்நியாசி.
"ஆமாம் சாமி! வீட்டிலே சம்சாரத்துக்கு உடம்பு சரியில்லை. ஒரு மாதமாய் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய் வருகிறேன். ஒன்றும் குணம் தெரியவில்லை அதற்குள் இந்த 'டியூடி' வந்துவிட்டது."
சாமியார் விபூதிப் பையை எடுத்து, "இந்தா! காசி விசுவநாதர் கோயில் விபூதி. இதைக் கொண்டுபோய் பக்தியுடன் உன் சம்சாரத்தின் நெற்றியில் இடு குணமாகிவிடும்!" என்றார்.
பயபக்தியுடன் அந்த மனிதன் விபூதியை வாங்கிக்கொண்டு டைரியிலிருந்து ஒரு ஏட்டைக் கிழித்து அதில் பொட்டணம் கட்டினான்.
"அந்த ஒரு கவலைதானா? இன்னும் ஏதாவது உண்டா?"
"வேறு ஒன்றும் பெரிய கவலையில்லை. இன்றைக்கு போகிற காரியம் ஜயமானால் நல்லது. 'பிரமோஷன்' கிடைக்கும் இல்லாவிட்டால் 'பிளாக் மார்க்' கிடைக்கும்."
"யாரோ ஒரு ஆளைத் தேடிக்கொண்டு நீ போகிறாய் இல்லையா, அப்பனே?"
"உண்மை! உண்மை! சாமியாருக்கு ஞான திருஷ்டி கூட உண்டு போல் இருக்கிறது."
"திருச்செந்தூர் முருகன் செயல்!" என்றார் சாமியார்.
"நான் தேடிப் போகிற ஆசாமி அகப்படுவான்களா, சாமி!"
"இந்தக் கட்டைக்கு என்ன தெரியும், அப்பா? அந்த ஆசாமி இந்த ரயிலிலே தான் இருக்கிறதாக இவ்விடத்தில் உதயமாகிறது!" என்று சாமியார் தம் நெற்றியை விரல்களால் தட்டிக் கொண்டார்.
"இந்த ரயிலிலே ஐந்நூறு பேர் இருக்கிறார்கள். அங்க அடையாளம் ஒன்றும் இல்லாமல் ஆளைக் கண்டுபிடி என்று சொன்னால், என்னத்தைச் செய்வது, சாமி! சர்க்கார் வேலையைப் போல் அதிலும் இந்த சி.ஐ.டி. உத்தியோகத்தைப் போல், தொல்லை பிடித்த வேலை வேறொன்றுமில்லை?" என்றான் சீடன்.
"உண்மை அப்பனே, உண்மை! இந்தத் தரித்திரம் பிடித்த வேலையை நீ விட்டுவிடு! திருச்செந்தூர் முருகன் அருளால் உனக்கு வேறு நல்ல வேலை கிடைக்கும்!" என்றார் சாமியார்.
ரயில் திண்டுக்கல் ஜங்ஷனை அடைந்தது. சி.ஐ.டி. கேசவன் பால சந்நியாசியைப் பார்த்து, "சாமி! நான் இவ்விடத்தில் இறங்கி இன்னும் இரண்டு வண்டி தேடிப் பார்த்துவிட்டு வருகிறேன். தாங்கள் இங்கேயே இருந்து என் இடத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். மதுரையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு டிக்கட்டைப் பற்றிச் சாமி கவலைப்பட வேண்டாம். மதுரையில் நான் டிக்கட் வாங்கித் தருகிறேன்" என்றான்.
"இந்தக் கட்டைக்கு டிக்கட் இருந்தாலும் ஒன்றுதான்; இல்லாவிட்டாலும் ஒன்றுதான். முருகன் ரயிலில் ஏறச் சொன்னால் ஏறும்; இறங்கச் சொன்னால் இறங்கும்" என்றார் பால சந்நியாசி.
பத்து நிமிஷத்துக்கெல்லாம் அந்த சி.ஐ.டி. கேசவன் ஒரு ரயில்வே போலீஸ் உத்தியோகஸ்தரை அழைத்துக்கொண்டு திரும்பி வந்தான். தான் உட்கார்ந்திருந்த பெஞ்சு காலியாயிருந்ததைப் பார்த்துத் திகைத்தான். ஒருவேளை வேறு வண்டியாயிருக்கும் என்று அங்குமிங்கும் ஓடிப்போய்ப் பார்த்தான்; பயனில்லை. பிறகு அதே வண்டிக்கு வந்து உள்ளே தூங்கி வழிந்த பிரயாணிகள் சிலரைப் பார்த்து, "இங்கேயிருந்த சாமியார் எங்கே?" என்று கேட்டான். யாரைக் கேட்டாலும், "தெரியாது; நாங்கள் பார்க்கவில்லை!" என்றார்கள். இதற்குள் வண்டி புறப்படும் நேரமாகி, விசில் ஊதிவிட்டது. போலீஸ் உத்தியோகஸ்தர் அவனை இரண்டு திட்டுத் திட்டிவிட்டுத் திரும்பிப் போனார். சி.ஐ.டி. கேசவன் ரயிலில் ஏறிப் பழைய இடத்திலேயே போய் உட்கார்ந்து கொண்டான். "எல்லாம் முருகன் செயல்!" என்று சொல்லிக் கொண்டே சட்டைப் பையிலிருந்து விபூதிப் பொட்டணத்தை எடுத்துப் பிரித்துக் காசி விசுவநாதர் விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டான்.
சென்னை மாநகரின் சிரோரத்தினமாக விளங்கி வந்த பத்மாபுரத்தில் "தேவி ஸதனம்" என்னும் பங்களாவில் ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரிகள் துர்வாச முனிவராக உருக்கொண்டிருந்தார். தன்னுடைய இதய கமலத்திலிருந்து பொங்கி வந்த குரோதமோகமாற்சரியங்களைப் பேனா முனை வழியாகக் காகிதத்தில் தீட்டிக் கொண்டிருந்தார். "தார்மிக கேஸரி" என்னும் ஆங்கிலப் பத்திரிகைக்கு அவர் எழுதிக் கொண்டிருந்த கட்டுரை, எழுதிய காகிதம் தீப்பட்டு எரியுமாறு அவ்வளவு உத்வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. சில காலமாக மேற்படி பத்திரிகையின் பத்திகளில் ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரியாருக்கும் பேராசிரியர் பரிவிராஜகசர்மாவுக்கும் மாபெரும் விவாத யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அந்த யுத்தத்துக்கு மூல காரணம் சாஸ்திரியார் பத்மாபுரம் சர்வக்ஞ சங்கத்தில் நிகழ்த்திய ஒரு பிரசங்கந்தான்.
ஹிந்து சமுதாயத்தில் அநாதி காலமாக ஏற்பட்டுள்ள வருணாசிரமத்தின் சிறப்பைச் சாஸ்திரியார் மேற்படி பிரசங்கத்தில் சாங்கோபாங்கமாக விளக்கினார். வர்ணாசிரம தர்மத்தை மேற்கொள்ளாததினால் மேனாடுகள் எப்படிப் பயங்கரமான யுத்தத்தில் அகப்பட்டுக் கொண்டு தவிக்கின்றன என்று எடுத்துக் காட்டினார். நாலு வர்ணங்களைப் பற்றிச் சொல்லி விட்டு நாலு ஆசிரமங்களைப் பற்றிக் கூறும்போது, சந்நியாச ஆசிரமத்தின் மகிமையைப் பற்றி மிக விஸ்தாரமாக எடுத்துச் சொன்னார். காலாகாலத்தில் சந்நியாச ஆசிரமத்தை மேற் கொள்ள முடியாதவர்கள் அந்திக் காலம் நெருங்கிவிட்டதென்று தெரிந்த பிறகாவது 'ஆபத் சந்நியாசம்' வாங்கிக் கொள்வதின் அவசியத்தை இலேசாகக் குறிப்பிட்டார். சாஸ்திரியாரின் மேற்படி பிரசங்கத்தின் சாராம்சம் சற்று விரிவாகவே தினப் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.
மேற்கண்ட கருத்துக்கள் சாதாரணமாகப் பேராசிரியர் பரிவி ராஜக சர்மா ஒப்புக்கொள்ளக் கூடியவைதான். ஆயினும் சாஸ்திரியார் பிரசங்கம் செய்து அது பத்திரிகையிலும் வந்து விட்ட காரணத்தினால் ஏதாவது ஒரு விதத்தில் அதைத் தாக்குவது சர்மாவின் இன்றியமையாத கடமையாயிற்று. எனவே, "தார்மிக கேஸரி"க்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அதன் சாராம்சமாவது:- "இந்தக் காலத்தில் சிலர் சந்நியாச ஆசிரமத்தைப் பற்றிப் பிரமாதமாகப் புகழ்ந்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள். உண்மையில் பழைய வேத காலத்து ஹிந்துக்கள் சந்நியாசத்துக்கு அவ்வளவு உயர்வைக் கொடுக்கவில்லை. சஹதர்மினி இல்லாதவன் யாகம் செய்வதற்கு உரியவனாகக் கருதப்படவில்லை. அத்திரி, பிருகு, ஆங்கிரஸர், அகஸ்தியர், வசிஷ்டர், வாமதேவர், பராசரர் முதலிய மகரிஷிகளுக்குப் பத்தினிகள் இருந்தார்கள். கௌதம புத்தருடைய காலத்துக்குப் பிறகு தான் இந்தியாவின் சந்நியாசத்துக்குச் சிறப்பு ஏற்பட்டது. 'ஆபத் சந்நியாசம்' வாங்கிக் கொள்ளும் வழக்கம் மிக்க அபத்தமானது. புதல்வர்கள் சரிவரச் சிரார்த்தம் செய்ய மாட்டார்களோ என்று பயந்தவர்கள் தான் கடைசி காலத்தில் அவசர அவசரமாகச் சந்நியாசம் பெறுவார்கள். சில அபூர்வமான புத்திர சிகாமணிகள் தகப்பனாருக்கு சிரார்த்தம் செய்யும் சங்கடம் இல்லாமற் போவதற்காக தகப்பனாரைக் கட்டாயப்படுத்தி மொட்டையடித்துக் காஷாயம் கட்டிவிடுவதும் உண்டு. ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரியாருக்கு இத்தகைய விபத்து எதுவும் நேராது என்று நம்புகிறேன். சாஸ்திரியார் இம்மாதிரியெல்லாம் உளறிக் கொட்டாமல் தமது திருவாயை மூடிக்கொண்டிருந்தாரானால் ஹிந்து தர்மத்துக்குப் பேருதவி செய்தவராவார்."
இத்தகைய அவதூறு நிறைந்த கடிதத்தைப் படித்துவிட்டு ராவ்பகதூர் பத்மலோசனை சாஸ்திரியார் அளவில்லாத கோபம் கொண்டது இயல்பேயல்லவா? அவர் எழுதிய மறுப்புக் கடிதத்தில் பேராசிரியர் சர்மாவை வெளு வெளு என்று வெளுத்திருந்தார். "ஹிந்து சமயத்தில் சந்நியாச ஆசிரமத்துக்கு உயர்வு கொடுக்கவில்லையென்று எந்த மூட சிகாமணி - எந்த நிரட்சரகுட்சி சொல்லுவான்? இந்தியாவில் ஹிந்து தர்மத்தை நிலை நாட்டிய மகா புருஷரான ஆதி சங்கராச்சாரியார் சந்நியாசி அல்லவா? நம்முடைய காலத்தில் ஹிந்து தர்மத்தின் உயர்வை உலகமெல்லாம் உணரும்படி செய்தவர் சுவாமி விவேகானந்தர் அல்லவா? இன்று திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் ரமண மகரிஷியின் பெருமையை உணராத ஜடமாக யார் இருக்க முடியும்? இராமாயண காலத்தில் இந்தியாவிலே சந்நியாச ஆசிரமத்துக்கு எவ்வளவு பெருமை இருந்தது என்பதை வால்மீகி பகவான் சந்தேகத்திற்கு இடமின்றிச் சொல்லி இருக்கிறார். சந்நியாசி வேடத்தில் வந்த இராவணனைப் பார்த்ததும் சீதாதேவி எவ்வளவு பயபக்தி மரியாதையுடன் அவனை உபசரிக்கிறாள்? சந்நியாசத்துக்கு அவ்வளவு மரியாதை அந்தக் காலத்தில் இருந்தபடியால் அல்லவா இராவணன் சந்நியாச கோலம் பூண்டு சீதையிடம் வந்தான்? நிற்க, ஆசிரமங்களை எப்படி வரிசைப்படுத்தியிருக்கிறது என்பதிலிருந்து எது உயர்ந்த ஆசிரமம் என்பதை அறியலாம். பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப் பிரஸ்தம், சந்நியாசம் என்னும் வரிசையில் கடைசியில் இருப்பதனாலேயே அது எல்லா ஆசிரமங்களுக்கும் சிகரமானது என்று விளங்கவில்லையா? சாதாரணமாக எல்லோருக்கும் இது விளங்கக் கூடிய விஷயந்தான். மெத்தப் படித்த மேதாவியான பேராசிரியர் சர்மாவின் அபார மூளைக்கு மட்டும் இது விளங்கவில்லை போலும்!"
இவ்வாறு சாஸ்திரியார் எழுதிய விவாதத்தைக் கடைசி வார்த்தையாக இருக்கும்படி விட்டுவிட்டுப் பேராசிரியர் சர்மா சும்மா இருந்து விடுவாரா? மீண்டும் அவர் எழுதத்தான் செய்தார்.
"ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரிகள் தாம் மெத்தப் படித்தவர் இல்லை என்று ஒப்புக்கொள்கிறார். அப்படியானால் கொஞ்சம் படித்தவர் என்று ஏற்படுகிறது. ஆனால் அந்தக் கொஞ்சமும் எதைப் படித்தாரோ தெரியவில்லை. இந்தியாவின் சரித்திரத்தைத் தொட்டுப் பார்த்ததேயில்லையென்று திட்டமாய்த் தெரிகிறது. புத்தருக்குப் பிறகு இந்தியாவிலே சந்நியாசத்துக்குப் பெருமை ஏற்பட்டது என்று தான் சொன்னேன். சாஸ்திரியார் ஸ்ரீசங்கராச்சாரியாரையும், சுவாமி விவேகானந்தரையும், ஸ்ரீரமண ரிஷிகளையும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த மூவரும் புத்தருக்கு முன்னாலிருந்தவர்கள் என்பது சாஸ்திரியாரின் எண்ணம் என்று தெரிகிறது. ஆனால் சாஸ்திரியார் சொல்லிவிட்டதால் சரித்திரம் வந்த வழியே திரும்பிப் போய்விடாது. சாஸ்திரியார் 'இராவண சந்நியாசி'யைக் குறிப்பிட்டது பற்றிச் சந்தோஷப்படுகிறேன். இராமாயண காலத்திலே சந்நியாச ஆசிரமம் போலிகளுக்கும் மோசக்காரர்களுக்கும் வேஷமாகி விட்டது என்பதை வால்மீகி பகவான் நன்றாக ஸ்தாபனம் செய்திருக்கிறார். ஆசிரம வரிசைக் கிரமத்தில் சந்நியாசம் கடைசியில் வருவதால் அதுவே உயர்ந்த ஆசிரமம் என்று சாஸ்திரியார் சாதிக்கிறார். இதே மாதிரி வர்ணங்களிலும் கடைசி வர்ணமே உயர்ந்தது என்று சாஸ்திரியார் ஒப்புக்கொள்கிறாரா? அப்படி ஒப்புக்கொண்டால் நானும் சந்நியாசத்தின் உயர்வை ஒப்புக்கொண்டு சாஸ்திரியாருக்கு இப்போதே 'ஆபத் சந்நியாசம்' வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்.
சாஸ்திரிகளின்பாடு இப்போது மிகவும் சங்கடமாகத்தான் போய்விட்டது. தம்முடைய வாதங்களில் உள்ள பலக் குறைவைக் கோபத்தினாலும் சாபத்தினாலும் இட்டு நிரப்புமாறு காரசாரமுள்ள பதில் ஒன்றை எழுதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார். அந்தப் பிரயத்தனம் காரணமாகச் சாஸ்திரியார் ரௌத்ராகாரம் கொண்டிருந்தபோது, அவருடைய பங்களாவின் வாசலில், "பவதி பிட்சாந் தேஹி" என்று குரல் ஒன்று கேட்டது.
மேல்மாடித் தாழ்வாரத்திற்கு வந்து சாஸ்திரியார் எட்டிப் பார்த்தார். இளம் பிராயத்துத் துறவி ஒருவர் நிற்பதைக் கண்டார். அவருக்கு ஏற்பட்ட வியப்பைச் சொல்லி முடியாது. தம் வாழ்நாளிலேயே இதுவரையில் இல்லாத பரபரப்புடன் மச்சுப்படிகளை மூன்று மூன்று படியாகக் குதித்துத் தாண்டிக் கொண்டு கீழே இறங்கினார். பின்கட்டிலிருந்த தமது வாழ்க்கைத் துணைவியை அழைத்து "காமாட்சி! ஒரு அதிசயத்தைக் கேள்! வாசலில் யாரோ பால சந்நியாசி வந்து நிற்கிறார். முகத்திலே தேஜஸ் ஜொலிக்கிறது. 'பிட்சாந்தேஹி!' என்ற வார்த்தை கேட்டதும் எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது. வாசற்கதவுச் சாவியைச் சீக்கிரம் கொண்டுவா! ஒரு மகானை எத்தனை நேரம் வாசலிலே நிறுத்தி வைக்கிறது? சாக்ஷாத் ஆதிசங்கரரே திரும்ப அவதாரம் எடுத்து வந்திருப்பது போலிருக்கிறது. நம் பிதாமகர்கள் செய்த பாக்கியம் நம் வீட்டைத் தேடி வந்திருக்கிறார். என்ன பேசாமல் நிற்கிறாயே?" என்று இரைந்தார்.
இதற்குள் வாசற்புறம் எட்டிப் பார்த்து யாரோ ஒரு சந்நியாசி நிற்பதைத் தெரிந்து கொண்ட காமாட்சி அம்மாள் "எதற்காக இவ்வளவு படபடப்பாய் பேசுகிறீர்கள்? வாசற் கதவு திறந்துதானிருக்கிறது. அப்படி அதிசயமான மகான் எங்கேயிருந்து வந்து குதித்து விடப் போகிறார்? இராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சாமியாராயிருக்கும் ஏதாவது நன்கொடை வசூலிப்பதற்காக வந்திருக்கிறார் போலிருக்கிறது!" என்றாள்.
இதைக் கேட்டதும் சாஸ்திரியாரின் உற்சாகம் கொஞ்சம் தணிந்தது. காமாட்சி அம்மாள் சொன்னதைப் போலவே இராமகிருஷ்ண மடம் அல்லது கௌடியா மடத்திலிருந்து யாராவது நன்கொடை கேட்க வந்திருக்கலாம் என்று நினைத்தார். ஆனால் அப்படியிருந்தால், "பவதி பிக்ஷாந்தேஹி!" என்று கேட்டிருக்க மாட்டாரல்லவா? இந்த எண்ணம் கொஞ்சம் தைரியத்தை ஊட்டியது. எப்படியிருந்தாலும் பார்த்து விடலாம் என்று வாசற் பக்கம் சென்றார். காமாட்சி அம்மாளும் வஸந்தியும் பின்னோடு வந்தார்கள்.
இதற்குள் சாமியாரும் கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் பிரவேசித்தார். சந்நியாசியை நெருங்கி நின்று பார்த்ததும் சாஸ்திரியாரும் காமாட்சி அம்மாளும், 'தெரிந்த முகமாய்த் தோன்றுகிறதே; யாராக இருக்கும்?' என்று திகைத்தார்கள்.
"மாமி என்னை அடையாளம் தெரிகிறதா?" என்று சுவாமியார் கேட்டதும் காமாட்சி அம்மாளுக்குப் பளிச்சென்று உண்மை தெரிந்துவிட்டது.
"நம்ம சூரியாவைப் போலிருக்கிறதே? இது என்ன கோலம்?" என்றாள் காமாட்சி அம்மாள்.
"நம்ம சூரியா போலிருக்கிறதா? என்ன உளறுகிறாய்? நம்ம சூரியா என்றால் யார்?" என்றார் சாஸ்திரியார்.
"ராஜம்பேட்டை கிட்டாவய்யர் பிள்ளை சூரியா தான். வேறு எந்தச் சூரியாவைச் சொல்லப் போகிறேன்?"
"நிஜமாகவா? அதனாலேதான் எனக்குக் கூடப் பார்த்த முகமாகத் தோன்றியது" என்றார் சாஸ்திரியார்.
"ஆமாம்; பூர்வாசிரமத்தில் இந்தக் கட்டையின் பெயர் சூரியா தான்; இந்த ஆசிரமத்தில் சுதந்திராநந்தர்" என்று சொன்னார் சந்நியாசி.
"அப்படியா? ரொம்ப சந்தோஷம். பழம் நழுவிப் பாலில் விழுவது போலாயிற்று!" என்று உபசரித்துக் கொண்டே சாஸ்திரிகள் ஸ்ரீசுதந்திராநந்தரை அழைத்துச் சென்று ஹாலில் சோபாவில் உட்காரச் செய்தார்.
காமாட்சி அம்மாள், "இத்தனை சின்ன வயதில் இது என்ன கோலம்? அப்பா அம்மா சம்மதித்தார்களா? காலாகாலத்தில் ஆகவேண்டியதெல்லாம் ஆகி, வயதான பிறகு சந்நியாசம் வாங்கிக் கொண்டால் பாதகமில்லை!" என்றாள்.
சுவாமியார் பதில் சொல்வதற்குள் சாஸ்திரியார் குறுக்கிட்டு, "ரொம்ப லட்சணம்! உன்னைக் கேட்டுக் கொண்டு தான் சந்நியாசி ஆகவேணும் போலிருக்கிறது. உலகத்தைத் துறந்து ஆசிரமம் வாங்கிக்கொண்ட பிறகு, அப்பா யார்? அம்மா யார்? பிரிவிராஜகர் ஆன பிறகு, உலக பந்தமே கிடையாது; குடும்ப பந்தம் எப்படி வரும்? அவள் கிடக்கிறாள், சுவாமிகளே! தங்களைப் போல் பால வயதில் வைராக்கியமடைந்து ஆயிரம் பேர் சந்நியாசம் வாங்கிக் கொண்டு ஸநாதன தர்மத்தைப் பிரசாரம் செய்வது என்று ஆரம்பித்தால் ஸநாதன தர்மம் உத்தாரணமே ஆகிவிடும். அது இருக்கட்டும்; தாங்கள் எங்கே, எப்போது இந்த ஆசிரமத்தை மேற்கொண்டது? எந்த மகானிடம் ஆசிரமம் வாங்கிக் கொண்ட பிறகு எங்கெங்கே போய் வந்தது? இந்த நகரத்தில் எத்தனை நாள் தங்குவதாக உத்தேசம்? எல்லாம் விவரமாகச் சொல்ல வேண்டும். காமாட்சி! நீ சமையலறைக்குப் போய்க் கொஞ்சம் கவனி. சாஸ்திரோத்தமாகச் சுவாமிகளுக்குப் பிக்ஷை பண்ணி வைக்க வேண்டும்; ஒரு குறையும் ஏற்படக் கூடாது தெரிகிறதா?" என்றார்.
"நன்றாய்த் தெரிகிறது எல்லாம் ஒரு குறைவுமில்லாமல் நடந்துவிடும். நீங்கள் கவலைப்பட வேண்டாம்!" என்று சொல்லிவிட்டுக் காமாட்சி அம்மாள் பின்கட்டுக்குச் சென்றாள். அவளுடன் வஸந்தியும் போனதைப் பார்த்த பால சந்நியாசி, "வஸந்தி! என்னை ஞாபகம் இல்லையா? பேசமாட்டேன் என்கிறாயே?" என்றார். வஸந்தி அப்படியும் சுவாமியாருடன் பேசாமல் பாட்டியைக் குனியச் சொல்லி அவள் காதோடு, "ஏன், பாட்டி! சூர்யா மாமா எதற்காகத் தலையை மொட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்? திருப்பதிக்குப் போய்விட்டு வந்தாரா?" என்று கேட்டதும் எல்லோரும் சிரித்து விட்டார்கள்.
வஸந்தியையும் அழைத்துக் கொண்டு காமாட்சி அம்மாள் பின்கட்டுக்குச் சென்ற பிறகு சாஸ்திரியார், "ஆமாம்; தாங்கள் எப்படி இந்த ஆசிரமத்தை மேற்கொண்டது? ஏதோ காங்கிரஸில் சேர்ந்து 'குவிட் இந்தியா' இயக்கத்துக்குப் பாடுபட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னார்களே?" என்றார்.
"ஆம்? அதுவும் உண்மை தான்; 'குவிட் இந்தியா' இயக்கத்துக்காகத்தான் ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன். ஹரித்துவார் போயிருந்த சமயத்தில் அங்கே ஒரு சுவாமியாரைத் தரிசித்தேன். தரிசித்த வேளை, விட்டகுறை வந்து தொட்டுக் கொண்டது. அவரிடம் சிஷ்யனாகி ஒரு வருஷம் இருந்து தொண்டு செய்தேன். பிறகு ஆசிரமம் பெற்றுக் கொண்டு க்ஷேத்திர யாத்திரை செய்து வருகிறேன். இப்போது ராமேசுவரத்துக்குப் போய்த் திரும்பி வருகிறேன்!" என்றார் பால சந்நியாசி.
"தங்களுடைய பூர்வீகர்களிலே யாராவது மகான்கள் இருந்து யாக யக்ஞங்கள் செய்திருக்க வேண்டும். அதனாலே தான் இந்தப் பிராயத்தில் இப்படிப்பட்ட பாக்கியம் தங்களுக்குக் கிடைத்தது. ஈரேழு பதினாலு தலைமுறையும் தங்களால் கடைத்தேறப் போகிறது. இந்த நகரிலே எத்தனை நாள் தங்குவதாக உத்தேசம்?"
"இன்றைக்கும் நாளைக்கும் இருந்துவிட்டு நாளை மறுநாள் புறப்படலாம் என்று நினைக்கிறேன்."
"அதெல்லாம் கூடவே கூடாது; இங்கே ஒரு மாதமாவது தங்கியிருக்க வேண்டும். இருக்கிற வரையில் நம்முடைய கிரஹத்திலேயே பிக்ஷை, பூஜை எல்லாம் வைத்துக்கொள்ளலாம். சர்வக்ஞ சங்கத்தின் ஆதரவில் உபந்நியாசங்களுக்கு ஏற்பாடு செய்கிறேன். ஸநாதன தர்மத்தைப் பற்றியும் முக்கியமாக வர்ணாசிரம தர்மத்தைப் பற்றியும் உபந்நியாசம் செய்யவேண்டும். ஹிந்து சமூகத்தில் சந்நியாசத்துக்கு எவ்வளவு பெருமை என்பது எல்லாரும் மறந்து விட்டார்கள். பரிவிராஜக சர்மாவைப் போன்ற படித்த முட்டாள்கள் கூட இந்த விஷயத்தில் தப்பபிப்பிராயம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய உபந்நியாசங்கள் அவர்களையெல்லாம் வாயடைத்துப் போகும்படி செய்ய வேண்டும்."
இந்தச் சமயத்தில் வாசற்பக்கமிருந்து ஒரு இளம் பெண்மணி உள்ளே வந்தாள். அவள் தூய வெள்ளைக் கதருடை தரித்திருந்தாள். தலையில் மாத்திரம் மிக்க நவநாகரிக முறையில் 'பாப்' செய்யப்பட்டுப் பரட்டையாகத் தொங்கியது. ஆனால் நடையுடை பாவனையெல்லாம் அடக்கமாக இருந்தன.
"நமஸ்காரம் மாமா! சௌக்கியமா? மாமி உள்ளே சமையலறையில் இருக்கிறாரா?" என்று கேட்டுக்கொண்டே அவள் பின்கட்டுக்குச் சென்றாள்.
"இந்த அம்மாள் யார்?" என்று சுவாமியார் கேட்கவும்,
"உனக்குத் தெரியாது? இவள்தான் என்னுடைய மூத்த நாட்டுப் பெண். இவளுடைய வாழ்க்கையில் திடீரென்று இந்த மாறுதல் ஏற்பட்டு விட்டது. இவளுடைய சிநேகிதிகள் சிலர் 1942 ஆகஸ்டு இயக்கத்தில் சிறைக்குப் போயிருக்கிறார்களாம். இவளுடைய இன்னொரு சிநேகிதி பர்மாவில் நேதாஜி சுபாஷ் பாபுவின் ஐ.என்.ஏ.யில் சேர்ந்திருக்கிறாளாம். இதெல்லாம் சேர்ந்து இவளையும் இப்படிக் கதர், காங்கிரஸ், பைத்தியமாக அடித்து விட்டது. ஆனால் மொத்தத்தில் நல்ல மாறுதல் தான். இவள் இந்த வீட்டுக்கு வந்து இருப்பதாகக் கூடச் சொல்கிறாள். ஆனால் நான் தான் கொஞ்ச நாள் போகட்டுமே என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். இவள் இங்கிருக்கும்போது போலீஸ்காரர்கள் வந்து இவளைப் பிடித்துக் கொண்டுபோனால், என்னுடைய பென்ஷனுக்கு அல்லவா ஆபத்து வந்து தொலையும்?" என்றார் சாஸ்திரியார்.
"ஆனால் தங்கள் பென்ஷனுக்கு இப்போது ஆபத்து வந்தாலும் சுயராஜ்யம் வந்தவுடன் பென்ஷனும் திரும்பி வந்துவிடும் அல்லவா?" என்றார் சந்நியாசி.
"வரலாம் வரலாம், ஆனால் இந்த மாதிரி இளம் பெண்கள் வேலை செய்துதானா, இந்தியாவுக்குச் சுயராஜ்யம் வரப்போகிறது? மகாத்மா காந்தி, வல்லபாய்ப் படேல், ஜவாஹர்லால் நேரு முதலியவர்கள் சிறை புகுந்ததற்கே சுயராஜ்யம் வரவில்லையே?"
"அப்படியானால் இந்தியாவுக்குச் சுயராஜ்யம் வரவே வராது என்று நினைக்கிறீர்கள்?" என்றார் சந்நியாசி.
"யார் சொன்னது? இந்தியாவுக்குச் சுயராஜ்யம் கட்டாயம் வரத்தான் போகிறது. ஆனால் இவர்களாலெல்லாம் வரப்போவதில்லை; கடவுளுடைய சித்தத்தினால் வேறு வழியில் வரப் போகிறது. கலி புருஷர் ஜெர்மனியில் அவதாரம் எடுத்திருக்கிறார்; ஹிட்லரைத் தான் சொல்கிறேன். ஹிட்லர் ருஷியாவின் மேல் படையெடுத்தது முட்டாள்தனம் என்று சில பிரகஸ்பதிகள் இங்கே சொல்கிறார்கள். ஹிட்லரை விட இவர்கள் மேதாவிகள் என்கிற எண்ணம். ஹிட்லர் ருஷியாவின் மீது படையெடுத்ததே இந்தியாவை நோக்கமாக வைத்துக் கொண்டுதான்! ஸ்டாலின் கிராடைப் பிடித்தவுடன், ஒரே தாவில் இந்தியாவிலே ஆகாச விமானத்தில் வந்து இறங்கப் போகிறார். ஐம்பதினாயிரம் ஆகாச கப்பல்களில் துருப்புகளும் வந்து இறங்கப் போகின்றன. ஹிட்லர்தான் ஸ்பஷ்டமாகச் சொல்லிவிட்டாரே, உலகத்திலேயே ஆரிய ஜாதி தான் உயர்ந்த சாதி என்று? அப்படியானால் இந்தியாவிலேதானே உலக சாம்ராஜ்யத்தின் தலைநகரத்தை ஸ்தாபித்தாக வேண்டும்? ஹிட்லர் இந்தியாவில் வந்து இறங்கிய உடனே செய்யப் போகிற முதல் வேலை என்ன தெரியுமா? 'சாதி வித்தியாசம் கூடாது' என்று சில பிரகஸ்பதிகள் உளறிக்கொண்டிருக்கிறார்களே, அவர்கள் எல்லாரும் தலையிலே துணியைப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்! உலகத்திலுள்ள ஜனங்களையெல்லாம் அடால்ப் ஹிட்லர் நான்கு வர்ணங்களாகப் பிரித்துவிடப் போகிறார். அப்போது அல்லவா தெரியப் போகிறது வர்ணாசிரம தர்மத்தின் பெருமை? பிழைத்துக் கிடந்தால் நானும் பார்க்கத்தான் போகிறேன்?" என்றார் சாஸ்திரியார்.
அங்கே தேவபட்டிணத்தில் தாமோதரம்பிள்ளை, "ஜப்பான்காரன் வந்து எல்லாச் சாதிகளையும் ஒன்றாக்கப் போகிறான்" என்று சொன்னதையும், இங்கே சாஸ்திரிகள், "ஹிட்லர் வந்து வர்ணாசிரம தர்மத்தை நிலைநாட்டப் போகிறார்" என்று சொல்வதையும் மனதிற்குள் சுவாமியார் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டார். அதனால் தன்னை மீறி வந்த சிரிப்பைப் அடக்கிக்கொண்டு, "ஆனால் சில பேர் ஹிட்லர் தோற்றுப் போய்விடுவார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே!" என்றார்.
"அப்படிச் சில பேர் உளறிக் கொண்டிருக்கிறார்கள், நானும் கேட்டுத் தான் இருக்கிறேன். இவர்கள் இப்படி உளறினால் நடக்க வேண்டியது நடக்காமல் போய்விடுமா? ஹிட்லர் எப்பேர்ப்பட்ட வாழ்க்கை நடத்துகிறார் என்பது தெரியுமல்லவா? மாமிசம் சாப்பிடுவதில்லை; மது பானம் செய்வதில்லை; ஸ்திரீகளின் முகத்தில் விழிப்பதில்லை. பிறந்ததிலிருந்து பிரம்மச்சரிய விரதம். சுவாமிகளே! ஹிட்லரைச் சாதாரண மனுஷன் என்று எண்ணிவிட வேண்டாம். அவர் ஹடயோகி; கலிபுருஷனுடைய அவதாரம். ஸமஸ்கிருத பாஷையைக் கரைத்துக் குடித்த மகாபண்டிதர்கள் இப்போது ஜெர்மனியில் தான் இருக்கிறார்கள் என்பது தெரியும் அல்லவா? ஒரு நாள் ஜெர்மன் ஸயன்டிஸ்டுகளை எல்லாம் ஹிட்லர் கூப்பிட்டார். 'உங்கள் அசட்டு ஆராய்ச்சிகளையெல்லாம் மூட்டை கட்டி வையுங்கள்; அதர்வண வேதத்தைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள்' என்றார். ஜெர்மன் ஸயன்டிஸ்டுகள் அப்படியே செய்தார்கள். அதன் பலன் என்ன வி. ஒன்று, வி. இரண்டு, வி. மூன்று என்பதாகப் புதுப் புது ஆயுதங்கள் புறப்பட்டுக் கொண்டே இருக்கின்றன! இங்கிலீஷ்காரர்கள், அமெரிக்கர்கள், ருஷ்யர்கள் எல்லோரும் முழி முழியென்று முழிக்கிறார்கள்! எல்லாம் அதர்வண வேதத்திலுள்ள இரகசியம் என்று இவர்களுக்கெல்லாம் தெரியாது. இன்னும் ஒரு விஷயம் தெரியுமோ இல்லையோ? ஹிண்டு ஜோதிஷ சாஸ்திரத்தின்படி நாள் நட்சத்திரம் பார்த்துக் கொண்டு தான் ஹிட்லர் ஒவ்வொரு காரியத்தையும் ஆரம்பித்தார். செக்கோஸ்லோவேகியா மீது படையெடுத்த போதும் அப்படி; பிரான்ஸைப் பிடிக்க கிளம்பிய போதும் அப்படி; இல்லாவிட்டால் நெப்போலியன் பிறந்த பிரான்ஸ் தேசத்தைப் பத்தே நாளில் பிரியைக் கட்டி இழுத்திருக்க முடியுமா? நான் சொல்கிறது என்ன?" என்று சாஸ்திரியார் நிறுத்தினார்.
"கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்!" என்று பால சந்நியாசி பட்டுக் கொள்ளாமல் சொன்னார்.
"கவனமாக கேட்டு என்ன பிரயோஜனம்? மனதிலே வாங்கிக் கொள்ள வேண்டும். இன்னொரு சர்வ இரகசியமான விஷயம். நாள் நட்சத்திரம் பார்த்துச் சொல்வதற்கு ஹிட்லர் எப்பொழுதும் பக்கத்திலே வைத்துக் கொண்டிருக்கிற ஆசாமி யார் என்று சுவாமிகளுக்குத் தெரியுமா?"
"அது யார்! தெரியாதே?"
"நான் சொல்லுகிறேன். மன்னார்குடி பஞ்சு சாஸ்திரிகள் பிரசித்தமாயிருந்தாரே, தெரியுமோ இல்லையோ? நாலு வேதம் ஆறு சாஸ்திரம் தெரிந்த மகான். அவருடைய சாக்ஷாத் பெண் வயிற்றுப் பேரன் பிச்சு சாஸ்திரிகளைத் தான் எப்போதும் ஹிட்லர் தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருக்கிறாராம். எப்பேர்ப்பட்ட ஜெனரல் ஆகட்டும், பீல்டு மார்ஷல் ஆகட்டும், சீப் ஆப் ஸ்டாப் ஆகட்டும், யார் வந்து 'இதுதான் சமயம்; படை கிளம்ப வேண்டும்!' என்று சொன்னாலும் ஹிட்லர், 'ஊஹும்' என்று சொல்லிவிடுவாராம். பிச்சு சாஸ்திரிகள் பஞ்சாங்கத்தைப் புரட்டிப் பார்த்துப் 'படை கிளம்பலாம்' என்று சொன்னால் தான், புறப்பட உத்தரவு கொடுப்பாராம்! அதன் பலன் என்ன? ஜயத்துக்கு மேல் ஜயம்! வெற்றிக்கு மேல் வெற்றி! உலகமே ஹிட்லரின் காலடியில் வந்து கொண்டிருக்கிறது. அங்கே ஹிட்லர் நம்முடைய சாஸ்திரங்களுக்கு அவ்வளவு மதிப்புக் கொடுக்கிறார். இங்கே சில பிரகஸ்பதிகள் 'பழம் பஞ்சாங்கம்' என்று பரிகாசம் செய்கிறார்கள்! என்னத்தைச் சொல்கிறது? எந்தக் குட்டிச் சுவரிலே போய் முட்டிக் கொள்கிறது என்று கேட்கிறேன்."
இவ்விதம் சாஸ்திரியார் சரமாரியாகப் பொழிந்ததைச் சந்நியாசி வேறு வழியின்றிக் கேட்டுக் கொண்டிருந்தார். இவ்வளவு படித்த மனிதர், பி.ஏ., பட்டம் பெற்றவர், ஸப் ஜட்ஜு உத்தியோகம் பார்த்தவர், உலக அனுபவம் பெற்றவர் - இத்தகைய குருட்டு நம்பிக்கையைப் பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டிருப்பது குறித்து அவருடைய மனதில் ஒரு பகுதி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தது. பரம்பரையாக வந்து இரத்தத்தில் ஊறிப்போன நம்பிக்கைகளைக் கைவிடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல போலும் என்று எண்ணினார். அதே சமயத்தில் அவருடைய மனதில் இன்னொரு பகுதி 'இவருடைய சளசளப்பு எப்போது ஓயும்? காமாட்சியம்மாளிடம் தனியாகச் சீதாவைப் பற்றிப் பேச எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும்?" என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தது.
கடைசியில் சாஸ்திரிகள் பேச்சை நிறுத்துவதற்குச் சாமியார் ஒரு வழி கண்டுபிடித்தார்.
"நீங்கள் சொல்லுவதெல்லாம் சரியாயிருக்கலாம். ஆனால் இப்படி இறைந்து பேசுகிறீர்களே? இப்போது தான் எங்கே பார்த்தாலும் சி.ஐ.டி.க்காரர்கள் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்களே? யார் காதிலாவது விழுந்து ரிப்போர்ட்டு செய்தால் வீண் வம்பு அல்லவா?" என்றார்.
சாஸ்திரியாரின் சரமாரியான பிரசங்கம் அந்தக் கணமே பளிச்சென்று ஓய்ந்தது.
சாஸ்திரியார் மாடி ஏறிச் சென்றதும், காமாட்சி அம்மாள் வார்த்தைகளைப் பொழிந்தாள்:- "சூரியா! இது என்ன இப்படிப்பட்ட காரியம் செய்து விட்டாய்? இந்த வயதில் சந்நியாசமாவது? இவர் ஓயாமல் 'சந்நியாசம் வாங்கிக் கொள்ளப் போகிறேன்' 'சந்நியாசம் வாங்கிக் கொள்ளப் போகிறேன்' என்று பயமுறுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் வீட்டை விட்டு அசைகிற வழியாகக் காணோம். வயதாக ஆக, பாச பந்தம் அதிகமாகி வருகிறது. மூத்த நாட்டுப் பெண் வேறு வந்து செல்லம் கொஞ்ச ஆரம்பித்திருக்கிறாள். நீ இந்த வயதில் காஷாயம் வாங்கிக் கொண்டாயே? கொஞ்சங்கூட நன்றாயில்லை. உன்னை எப்படிக் கூப்பிடுவது என்றே எனக்குத் தெரியவில்லை. 'சுவாமிகளே! வாங்கள்! போங்கள்!' என்று மரியாதையாகச் சொல்ல வேண்டுமோ, என்னமோ?" என்றாள்.
"மாமி, அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். தாராளமாய்ச் 'சூரியா' என்றும் 'வா' 'போ' என்றும் சொல்லுங்கள். உங்களிடம் நிஜத்தைச் சொல்லி விடுகிறேன். ஒரு காரியார்த்தமாக இந்த வேஷம் போட்டுக் கொண்டேன். உண்மையில் நான் சந்நியாசம் வாங்கிக் கொண்டு சாமியார் ஆகிவிடவில்லை" என்றான் சூரியா.
"இது என்ன கூத்து? போயும் போயும் எதற்காக இந்த வேஷம் போட்டுக்கொண்டாய்? இந்தக் காலத்துப் பிள்ளைகளின் காரியமே வேடிக்கையாகத் தான் இருக்கிறது. ஒருவேளை சினிமாவிலே, கினிமாவிலே சேர்ந்திருக்கிறாயா, என்ன?"
"அதெல்லாம் இல்லை, மாமி! நான் சுயராஜ்ய இயக்கத்தில் சேர்ந்திருக்கிறேன் அல்லவா?"
"சுயராஜ்யமும் ஆச்சு, மண்ணாங்கட்டியும் ஆச்சு! இந்தக் காஷாய வேஷத்தைக் கலைத்துவிட்டு மறு காரியம் பார்! உனக்குக் கலியாணத்துக்குப் பெண் பார்த்து வைத்திருக்கிறேன். உன்னை இந்தக் கோலத்தில் பார்த்ததும் எனக்குப் பகீர் என்றது."
"மாமி! கலியாணம் அவ்வளவு அவசியமான காரியமா? கலியாணம் செய்து கொண்டவர்கள் எல்லோரும் சந்தோஷமாயிருக்கிறார்களா?" என்று சூரியா கேட்டான்.
"எத்தனையோ பேர் கலியாணம் செய்து கொண்டு பிள்ளையும் குட்டியுமாய்ச் சந்தோஷமாய்த்தானிருக்கிறார்கள். சில பேருடைய தலை எழுத்து சந்தோஷமாயிருக்க முடிகிறதில்லை. அப்படிப் பார்த்தால் உலகத்திலே யார்தான் எப்போதும் சந்தோஷமாயிருந்தார்கள்? இராமன் சீதையைக் கலியாணம் செய்து கொண்டு எவ்வளவோ கஷ்டப்பட்டார். அதனால் இராமர் கலியாணமே செய்து கொண்டிருக்கக் கூடாது என்று சொல்லமுடியுமா?" என்றாள் காமாட்சி அம்மாள்.
"இராமரும் சீதையும் ஒருவருக்கொருவர் எவ்வளவோ பிரியமாயிருந்தார்கள். அதனால் அவர்கள் சந்தோஷமாயிருந்தார்கள். தம்பதிகள் அன்யோன்யமாயிருந்து மற்றவர்களால் எவ்வளவு கஷ்டம் நேர்ந்தாலும் பொறுத்துக் கொள்ளலாம்; சந்தோஷமாகவும் இருக்கலாம். ஆனால் இந்தக் காலத்துத் தம்பதிகள் அப்படி இல்லையே?" என்றான் சூரியா.
"நீ எதைக் குறிப்பிட்டுச் சொல்லுகிறாய் என்று எனக்குத் தெரிகிறது. சூரியா! என் பிள்ளையும் நாட்டுப் பெண்ணும் அன்யோன்யமாயில்லை என்றுதானே சொல்கிறாய்? அது வாஸ்தவந்தான். பெரியவர்கள் சொல்லுகிறதைக் கேட்காமல் தான் தோன்றித்தனமாகக் காரியம் செய்ததினால் வந்த வினை இது. கலியாணம் நிச்சயம் செய்வது என்றால், ஜாதகம் பார்த்துச் செய்ய வேண்டும் என்று எதற்காகப் பெரியவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்? இந்த மாதிரியெல்லாம் ஏடாகூடமாக ஆகக் கூடாது என்றுதான் நான் அப்போதே அடித்துக் கொண்டேன்; 'எல்லாவற்றுக்கும் ஜாதகம் வாங்கிப் பார்த்து விடலாம்' என்று நான் சொன்னதை யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. எப்போது பார்த்தாலும் சாஸ்திரம் சம்பிரதாயம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்தப் பிராமணருக்குக் கூட அப்போது புத்தி எங்கேயோ போய்விட்டது! உன் அத்தங்காள் ஜாதகத்தில் என்ன தோஷம் இருந்ததோ, என்னமோ? உன் தங்கை லலிதாவைப் பார்ப்பதற்காகத்தானே நாங்கள் ஊருக்கு வந்திருந்தோம்? லலிதாவின் ஜாதகமும் ராகவனுடைய ஜாதகமும் பொருந்தியிருந்தது. அப்படி நடந்திருந்தால் இந்தக் கஷ்டமெல்லாம் வந்திராது!" என்றாள் காமாட்சி அம்மாள்.
"இப்போது என் அத்தங்கா படுகிற கஷ்டத்தையெல்லாம் என் தங்கை பட்டிருப்பாள்!" என்றான் சூரியா.
காமாட்சி அம்மாளுக்குக் கோபம் வந்துவிட்டது. "நன்றாய் சொன்னாய் சூரியா! உன் அத்தங்காள் பரம சாது. ராகவன் தான் அவளைக் கஷ்டப்படுத்துகிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயாக்கும்! கலியாணம் ஆன புதிதில் நானும் உன் அத்தங்காளைச் சாது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்படிப்பட்ட நாட்டுப் பெண் எனக்குக் கிடைத்தாளே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். போகப் போகத் தான் தெரிந்தது; உன் அத்தங்காள் எப்படிப்பட்ட ராட்சஸி என்று. அவளுக்குச் சீதை என்று பெயர் வைத்தது ரொம்பத் தப்பு. சூர்ப்பநகை, தாடகை என்று வைத்திருக்க வேண்டும்?" என்றாள்.
"சாதுப் பெண்ணாயிருந்தவள் எப்படித் திடீரென்று ராட்சஸியாகி விட்டாள்? அதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும் அல்லவா?"
"காரணம் என்ன காரணம்? அவளைச் சாதுப் பெண் என்று நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோமே, அதுதான் தப்பு! உலகத்தில் துஷ்டைகள் எத்தனையோ பேரை நானும் பார்த்திருக்கிறேன். உன் அத்தங்காளைப் போல் பார்த்ததே இல்லை! ஒவ்வொரு சமயம் எனக்குப் பயமா இருக்கிறது. சூரியா! ஏதாவது விஷத்தைக் கிஷத்தைக் கலந்து..."
"ஐயையோ! அப்படிச் சொல்லாதீர்கள்; அம்மா! எப்பேர்ப்பட்ட ராட்சஸியாக இருந்தாலும் புருஷனுக்கு விஷம் வைத்துக் கொல்லும்படி அவ்வளவு பாதகியாயிருப்பாளா?" என்று அலறினான் சூரியா.
"மெள்ளப் பேசுடா, அப்பா! மெள்ளப் பேசு! புருஷனுக்கு விஷம் வைத்துவிடுவாள் என்று நான் சொல்லவில்லையே! கிராமாந்தரத்துப் பெண்கள் சிலர் புருஷனை வசப்படுத்தி வைத்துக் கொள்வதற்கு என்று எண்ணிக் கொண்டு மருந்து வைத்து விடுவதுண்டு. அது பல புருஷனுக்கு யமனாக முடியும். உன் அத்தங்காள் அவ்வளவு அசடு அல்ல; அப்படிச் செய்யவும் மாட்டாள். தான் விஷத்தைக் குடித்துவிட்டு ராகவன் பேரில் பழியைப் போட்டு விடுவாளோ என்றுதான் பயப்படுகிறேன். 'புருஷன் படுத்தும் கொடுமை தாங்காமல் செத்துப் போகிறேன்!' என்று எழுதி வைத்துவிட்டுச் செத்தாலும் சாவாள்! அவளுடைய மூர்க்கத்தனத்தை நினைத்தால் சில சமயம் எனக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது..."
"மாமி! விஷங்குடித்துச் செத்துபோக வேண்டும் என்று நினைப்பதற்குச் சீதாவின் மனது எவ்வளவு வெறுத்துப் போயிருக்க வேண்டும்? அப்படி மனது வெறுப்பதற்குக் காரணமில்லாமலா இருக்கும்? உங்கள் பிள்ளை பேரில் தப்பே இல்லையென்றால், வேறு என்ன காரணம் இருக்க முடியும்?" என்றான் சூரியா.
இதற்குக் காமாட்சி அம்மாளின் பதில் சொல் மாரியாக வந்தது:
"என் பிள்ளை பேரில் தப்பு இல்லையென்று யார் சொன்னது? எவ்வளவோ தப்பு உண்டு. உன் தங்கையைப் பார்ப்பதற்காகப் போனவன், இந்த ரதியைத் தெருவிலே பார்த்துவிட்டு மயங்கிப் போய் 'இவளைத்தான் கலியாணம் செய்து கொள்வேன்' என்றானே? அது பெரிய தப்புத் தான். ஒரு செப்புக்காசு வரதட்சணை இல்லாமல் கலியாணம் செய்து கொண்டதும் தப்புத் தான். குப்பையில் கிடந்தவளைக் கொண்டு போய்க் கோபுரத்தில் வைத்தானே, அதுவும் தப்புத் தான். அந்த நாளில் எவ்வளவோ நான் அடித்துக் கொண்டேன். 'இவ்வளவு இடங்கொடுக்காதே!' என்று; இவன் கேட்கவில்லை. ஆக்ரா எங்கே, சிம்லா எங்கே, காஷ்மீர் எங்கே, என்று அழைத்துக் கொண்டு திரிந்தான். என்னைக் காசிக்கு அழைத்துக் கொண்டு போக அவனுக்குச் சாவகாசம் கிடைக்கவில்லை. சீதாவை லண்டனுக்கு அழைத்துக் கொண்டு போகக்கூடத் தயாராயிருந்தான். வைஸ்ராய் வீட்டுப் பார்ட்டிகளுக்கும் அழைத்துக் கொண்டு போனான். இங்கிலீஷ் படிக்க வைத்தான். அன்னிய புருஷர்களோடு கை குலுக்கவும் ஒரே சோபாவில் உட்கார்ந்து பேசவும் மோட்டார் கார் ஓட்டவும் கற்றுக் கொடுத்தான். அப்படியெல்லாம் செய்த தப்புகளின் பலனை இப்போது அனுபவிக்கிறான். அவனுடைய ஜாதகத்தில் அப்படி எழுதியிருந்தது! இன்னொரு புருஷனாயிருந்தால் இப்படிப்பட்ட பெண்டாட்டியை விறகுக் கட்டையால் அடித்துத் துரத்திவிட்டு வேறு கலியாணம் செய்து கொண்டிருப்பான்!..."
இந்த ரீதியில் காமாட்சி அம்மாளுடன் பேசுவதில் பயனில்லையென்று சூரியா அறிந்து கொண்டான். பேச்சை வேறு பாணியில் ஆரம்பித்தான்.
"மாமி! நான் ஏதோ என் அத்தங்காளுக்குப் பரிந்து பேசுவதாகவும் உங்கள் பிள்ளையைக் குற்றம் சொல்வதாகவும் நீங்கள் எண்ணிக் கொள்ளக்கூடாது. சீதா தாயில்லாப் பெண் என்பது உங்களுக்குத் தெரியும். தகப்பனார் உயிரோடிருக்கிறாரா, இல்லையா என்பது ஒருவருக்கும் தெரியாது. உங்களையும் உங்கள் பிள்ளையையும் தவிர அவளுக்குக் கதி கிடையாது. அடித்து விரட்டினால் குளத்திலே கிணற்றிலே விழுந்து சாக வேண்டியது தான். சீதாவை உங்கள் பிள்ளைக்குக் கலியாணம் செய்து கொடுப்பதற்கு நானும் ஒரு வகையில் பொறுப்பாயிருந்தவன். நான் வற்புறுத்திச் சொன்னபடியினாலே தான் என் அப்பா அம்மா இந்தக் கலியாணத்துக்குச் சம்மதித்தார்கள். சீதாவின் தாயாரையும் நான்தான் சம்மதிக்கப் பண்ணினேன். என் அத்தையை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதல்லவா? வாழ்நாளெல்லாம் கஷ்டப்பட்டவள், 'நான்தான் கஷ்டப்பட்டே காலம் கழித்து விட்டேன்; சீதாவாவது நல்ல இடத்தில் வாழ்க்கைப்பட்டுச் சௌக்கியமாயிருக்கட்டும்' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். இந்த கலியாணத்தை நடத்தி வைத்ததற்காக என்னை ஆயிரம் தடவை 'மகராஜனாயிரு!' என்று வாழ்த்தினாள். அதையெல்லாம் நினைத்து இப்போது உங்கள் பிள்ளையும் நாட்டுப் பெண் இருக்கிற நிலையையும் எண்ணும்போது எனக்கு எவ்வளவோ துக்கமாயிருக்கிறது. அதனால் நான் எடுத்துக் கொண்ட முக்கியமான வேலைகள் கூடத் தடைப்பட்டுப் போகின்றன. ஏதாவது முயற்சி பண்ணி உங்கள் பிள்ளையும் சீதாவும் சந்தோஷமாயிருக்கப் பண்ண வேண்டும் என்று எனக்கு ஆசை; அதனாலே தான் உங்களிடம் வந்தேன். சீதா என்ன தப்புச் செய்கிறாள் என்று தெரிந்தால் அவளுக்குப் புத்தி சொல்லித் திருப்ப முயற்சி செய்வேன்."
சூரியாவின் இந்த நயமான பேச்சினால் காமாட்சி அம்மாளின் கோபம் கொஞ்சம் தணிந்தது.
"எனக்கும் அந்த ஆசை இல்லையா, சூரியா! ராகவனும் சீதாவும் முன்போல் சந்தோஷமாக இருந்தால் அதைக் காட்டிலும் எனக்குச் சந்தோஷம் வேறு கிடையாது. ஆனால் காரணம் என்பதாக ஒன்று இருந்தால்தானே சொல்வதற்கு! மனத்திற்குள் அவர்களுக்கு ஒருவர் பேரில் ஒருவர் பிரியம் இருக்கிறது என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால் தினம் பொழுது விடிந்தால் சண்டையும் ரகளையும் நடப்பதில் குறைவில்லை, எல்லாவற்றுக்கும் உன் அத்தங்காளின் வாயாடித்தனந்தான் காரணம். வருகிற போது பேசவே தெரியாத ஊமையைப் போல வந்தாளே, அவளுக்கு இத்தனை வாய் எப்படி வந்ததோ, எனக்கே ஆச்சரியமாய்த்தானிருக்கிறது. அவன் ஒன்று சொன்னால் இவள் நாலு சொல்லுவது என்று ஏற்பட்டுவிட்டது. அவன் எது சொன்னாலும் இவள் மறுத்துச் சொல்லாமல் விடுவதில்லை. எங்கேயாவது இவளை அழைத்துப் போகாவிட்டால் 'ஏன் அழைத்துப் போகவில்லை!' என்று சண்டை பிடிக்கிறது. அழைத்துக் கொண்டு போனால் திரும்பி வரும்போது 'ஏன் அவளோடு பேசினீர்கள்?' 'ஏன் இவளோடு பேசினீர்கள்?' என்று ஓயாமல் பிடுங்கி எடுக்கிறது. வெளியிலே வாசலிலே போய் உத்தியோகம் பார்த்துவிட்டு வருகிறவனை இப்படிப் போட்டு வதைத்தால் அவன்தான் என்ன செய்வான்? சில சமயம் அவனுக்கும் ரௌத்ராகாரம் வந்துவிடுகிறது. கோபம் வந்திருக்கும் வேளையிலாவது எதிர்த்துப் பேசாமலிருக்கத் தெரிகிறதா? அதுவும் இல்லை. உனக்குத் தான் அந்தத் தாரிணி என்கிற பெண்ணை நன்றாகத் தெரியுமே! அவளைக் கேட்டுப் பார்! நான் காசிக்குப் போயிருந்தபோது சீதாவுக்குச் சுரம் வந்து பிழைப்பது துர்லபம் என்று ஆகிவிட்டது. அந்தச் சமயத்தில் தாரிணி வந்து இரவு பகலாக இவளுக்குச் சிசுருஷை செய்து காப்பாற்றினாள். உடம்பு சௌகரியமானதும் சீதா அவளைத் திட்டிய திட்டுக்கு அளவே இல்லை. நாக்கில் நரம்பில்லாமல் அவளையும் ராகவனையும் பற்றிப் பேசினாள். தாரிணி அவ்வளவையும் பொறுத்துக் கொண்டு சமாதானமாக நல்ல வார்த்தை சொல்லிவிட்டுப் போய்ச் சேர்ந்தாள். ஒரு சமயம் அந்தப் பெண்ணின் வயிற்றெரிச்சலை நான் கொட்டிக் கொண்டேன். இந்த வீட்டில் பூஜை அறையில் அவள் என் காலில் விழுந்து நமஸ்காரம் செய்து ராகவனைக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதம் கொடுக்கும்படி கேட்டாள். அவள் என்ன சாதியோ என்னமோ என்ற காரணத்தினால் கண்டிப்பாக முடியாது என்று சொல்லி விட்டேன். இப்போது நினைத்துப் பார்த்தால் அது பெரிய தப்பு என்று தோன்றுகிறது. தாரிணியைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் என் பிள்ளை எவ்வளவோ சந்தோஷமாக இருந்திருப்பான். அதற்கு நான் தடையாக நின்றேன். அந்தப் பெண்ணின் வயிற்றெரிச்சல் தான் இப்படி என்னையும் என் பிள்ளையையும் படுத்தி வைக்கிறது என்று தோன்றுகிறது."
இதைக் கேட்ட சூரியா சிறிது சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். தாரிணியின் பேரில் அவனுக்குக் கோபம் வந்தது. பழைய கதை இப்படி எல்லாம் இருக்கும்போது ராகவன் சீதாவின் வாழ்க்கையில் தாரிணி தலையிட்டிருக்கவே கூடாது என்று எண்ணினான். அவளுடைய மனதிலும் ராகவனுடைய மனதிலும் பழைய சிநேகத்தின் பாசம் இல்லை என்பது என்ன நிச்சயம்? ஆகையால் அவர்கள் விஷயத்தில் சீதா அசூயைப் படுவதிலே தான் என்ன தவறு?
இவ்விதம் எண்ணிக்கொண்டே போன சூரியா சட்டென்று அந்த எண்ணப் போக்குக்கு முட்டுக்கட்டை போட்டு நிறுத்தினான். "மாமி! நடந்துபோன காரியத்தைப் பற்றி, அது வேறு விதமாய் நடந்திருக்க கூடாதா என்று யோசிப்பதில் என்ன பிரயோஜனம்? பிரம்மா தலையில் எழுதின எழுத்தை யார் மாற்றி எழுத முடியும்? உங்கள் பிள்ளை சந்தோஷமாயிருப்பதற்கு என்ன வழி என்றுதான் இனி மேல் நாம் பார்க்க வேண்டும். சீதாவின் வாயாடித்தனத்தைப் பற்றி நீங்கள் சொன்னதை நான் மனதில் வைத்துக் கொண்டிருக்கிறேன். அவளுக்கு என்னால் முடிந்த வரையில் புத்திமதி சொல்லிப் பார்க்கிறேன். நீங்களும் நல்ல முறையில் கொஞ்சம் சொல்லிப் பாருங்கள். டில்லிக்கு எப்போது வரப்போகிறீர்கள்?" என்று கேட்டான்.
"ராகவனிடமிருந்து எப்போது கடிதம் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் டில்லிக்குப் போவதென்றால் ஒரு விதத்தில் பயமாகவும் இருக்கிறது. புருஷன் மனைவி சண்டையில் இந்தக் குழந்தைக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடப் போகிறதே என்று பயப்படுகிறேன். உன்னிடம் சொன்னால் என்ன? உனக்குத் தெரிந்திருக்க வேண்டியது தான். ஒரு தடவை சீதா இந்தப் பச்சைக் குழந்தையிடம் ஏதோ அப்பாவிடம், 'அம்மாவை வையாதே, அடிக்காதே!' என்று சொல்லியிருக்கிறாள். அவனும் முரட்டுத்தனமாகத் தன் கோபத்தை இந்தக் குழந்தையிடம் காட்டி இரண்டு அடி அடித்துவிட்டான் குழந்தைக்குச் சுரம் வந்துவிட்டது..."
"ஐயோ!" என்றான் சூரியா.
"நீ 'ஐயோ' என்று பரிதாபப்படுகிறாயல்லவா? ஆனால் சீதா என்ன செய்தாள் தெரியுமா? குழந்தைக்குச் சுரம் என்பதை மூன்று நாள் வரையில் ஒருவரிடமும் சொல்லவில்லை. அப்புறம் ராகவனுக்கு எப்படியோ தெரிந்து டாக்டரை அழைத்துக் கொண்டு வந்தான். குழந்தை பிழைப்பது புனர் ஜன்மம் ஆகிவிட்டது. உன் அத்தங்காளின் ராட்சசத்தனத்தைப் பார்த்தாயல்லவா?" என்றாள்.
சூரியாவின் மனதிற்குள் அது சீதாவின் ராட்சசத்தனமா, அல்லது தன் புருஷனைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தினால் அப்படிச் செய்தாளா என்ற சந்தேகம் தோன்றியது. அதைப் பற்றிக் காமாட்சி அம்மாளிடம் வாதிப்பதில் பயனில்லை என்று தீர்மானித்து, "போனதெல்லாம் போகட்டும், நான் நாளைக் காலை டில்லி புறப்படுகிறேன். டில்லி போய்ச் சேர்ந்ததும் சீதாவைப் பார்த்துப் பேசிவிட்டு உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன். எப்படியாவது தகராறைத் தீர்த்து வைத்து உங்கள் பிள்ளையும் நாட்டுப்பெண்ணும் நன்றாயிருக்கும்படி செய்வோம்!" என்றான்.
"நானும் அதற்காகவே தான் எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக் கொண்டிருக்கிறேன். சூரியா! உலகத்திலேயே அவர்கள் இரண்டு பேரிடத்திலும் இந்தக் குழந்தை இடத்திலும் தான் எனக்குப் பாசம். நீ சீதாவிடம் பேசுகிறபடி பேசு. அதோடு சீதாவின் ஜாதகம் எங்கேயாவது கிடைக்குமா என்று பார்த்து வாங்கி அனுப்பு. அவளுடைய ஜாதகத்தில் ஒருவேளை ஏதாவது தோஷம் இருந்தால் அதற்கு வேண்டிய சாந்தியைப் பண்ணச் சொல்லலாம்!" என்றாள் காமாட்சி அம்மாள்.
சரித்திரத்தில் புகழ் பெற்ற டில்லி மாநகருக்கு மறுபடியும் நேயர்களை அழைத்துச் செல்ல வேண்டியதாகிறது. 1943-ம் வருஷத்தின் பிற்பகுதியில் டில்லி நகரம் அதிவிரைவாகப் பணப் பெருக்கமும் ஜனப் பெருக்கமும் அடைந்து கொண்டு வந்தது. யுத்தம் இந்தியாவின் எல்லையை நெருங்கி வந்து கொண்டிருந்ததை முன்னிட்டுத் தலைநகரில் யுத்த முஸ்தீப்புகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. பிரிட்டிஷ் சோல்ஜர்களும் அமெரிக்க சோல்ஜர்களும் கூர்க்க சிப்பாய்களும் சீக்கியத் துருப்புகளும் தென் இந்திய வீரர்களும் எங்கே பார்த்தாலும் காணப்பட்டார்கள். டாக்ஸி கார்களுக்கும், டோ ங்கா வண்டிகளுக்கும், ரிக்ஷாக்களுக்கும் கூட என்றுமில்லாத கிராக்கி ஏற்பட்டிருந்தது. இத்தகைய நிலைமையில் டில்லி ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்கிய சூரியாவுக்கு வண்டி எங்கே கிடைக்கப் போகிறது.
ஸ்டேஷன் வாசலில் வந்து நின்ற சூரியா ஐந்து நிமிஷம் தயங்கி நின்று யோசனையில் ஆழ்ந்திருந்தான். புதுடில்லிப் பக்கம் நடையைக் கட்டுவதா அல்லது முதலில் பழைய டில்லிக்குப் போவதா என்னும் பிரச்சனை தான் அவனை அத்தகைய சிந்தனைக்கு உள்ளாக்கியிருந்தது. கடைசியில் பழைய டில்லிக்கே சீட்டு விழுந்தது. விடுவிடு என்று பழைய டில்லியை நோக்கி நடந்தான்.
பழைய டில்லியில் 'சாந்தினி சவுக்' என்னும் வீதிக்கு வந்ததும் சூரியாவின் நடை மெதுவாயிற்று. அவனுடைய உள்ளமோ சில நூறு வருஷம் பின்னால் சென்று அந்தப் பிரசித்தி பெற்ற 'வெள்ளி வீதி'யில் அவ்வப்போது நடந்த சரித்திர நிகழ்ச்சிகளைப் பற்றிச் சிந்திக்கலாயிற்று.
அந்தச் 'சாந்தினி சவுக் ஒரு காலத்தில் உலகத்திலேயே மிகப் பணக்கார வீதி என்று பெயர் பெற்றிருந்தது. தங்க நகைக் கடைகளும் நவரத்தின ஆபரணக் கடைகளும் உலகமெங்குமிருந்து வந்த பலவித அபூர்வமான பொருள்களின் கடைகளும் அவ்வீதியில் இருந்தன. மன்னாதி மன்னர்களெல்லாம் அணிய விரும்பக்கூடிய பட்டுப் பட்டாடைகளும் ரத்தினக் கம்பளங்களும் பல கடைகளில் விற்கப்பட்டன. அந்த வீதியில் வசித்தவர்கள், கடை வைத்திருந்தவர்கள் அனைவரும் செல்வத்தில் சிறந்த சீமான்கள். இப்படியாகச் செல்வம் குவிந்திருந்த இடத்துக்கு ஆபத்துக்கள் வருவது இயற்கையேயல்லவா? ஆபத்து ஒரு தடவை அல்ல, எத்தனையோ தடவைகள் அந்த வெள்ளி வீதிக்கு வந்தது.
ஐந்நூற்றைம்பது வருஷங்கள் முன்னால் மங்கோலியா தேசத்திலிருந்து தைமூர் என்னும் அசுரன் ஒரு பெரிய ராட்சதப் படையுடன் வந்தான். அச்சமயம் டில்லியில் முகம்மது துக்ளக் என்னும் பாதுஷா அரசாண்டான். தைமூரும் முகம்மது துக்ளக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தான். இது காரணமாகத் தைமூர் கருணை காட்டினானா? இல்லை. முகம்மது துக்ளக்கின் சைன்யத்தை டில்லிக் கோட்டை வாசலிலே தோற்கடித்து நகருக்குள் புகுந்தான். ஆயிரமாயிரம் பிரஜைகளைக் கொன்று குவித்தான்; வெள்ளி வீதியின் செல்வத்தைக் கொள்ளையடித்தான்; இரத்தின கம்பளங்களின் மீது இராஜ குமாரர்களும் இராஜகுமாரிகளும் நடமாடிய இடமெல்லாம் இரத்த ஆறு ஓடும்படி செய்தான்.
தைமூர் டில்லியில் இரண்டு வாரம் தங்கியிருந்து ஹதாஹதம் செய்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றான். அவன் போன பிறகு டில்லி நகரம் ஒரு பயங்கர சொப்பனத்திலிருந்து விழித்து எழுந்தது போல எழுந்தது. கண்டது கனவல்லவென்றும் உண்மையான பயங்கரம் என்றும் உணர்ந்தது. ஆயினும், அந்த அதிசயமான ஜீவசக்தியுள்ள நகரம் மறுபடியும் அதிசீக்கிரத்தில் சீரும் செல்வமும் பெற்றுக் குபேர புரியாயிற்று. இரத்த ஆறு ஓடிய 'வெள்ளி வீதி'யில் மறுபடியும் தங்க மொகராக்கள் குலுங்கும் சத்தமும் இராஜ குமாரிகளின் பாதச் சிலம்பின் சத்தமும் கேட்கத் தொடங்கின.
டில்லியின் சரித்திரத்தில் முந்நூற்று நாற்பது வருஷங்கள் சென்றன. பாபர் முதல் ஔரங்கசீப் வரையில் மொகலாய சக்ரவர்த்திகள் வீற்றிருந்து அரசு செலுத்திய இடத்தில் இப்போது முகம்மதுஷா என்பவன் அரசு புரிந்தான். அப்போது பாரஸீகத்திலிருந்து நாதிர்ஷா என்னும் கொடிய அரக்கன் பெரும் சைன்யத்துடன் படையெடுத்து வந்தான். மறுபடியும் 'சாந்தினி சவுக்'குக்கு ஆபத்து வந்தது. 'சாந்தினி சவுக்'குக்கு அருகில் இருந்த மசூதியின் கோபுரத்தில், உட்கார்ந்து கொண்டு நாதிர்ஷா தன் மூர்க்கப் படைகள் டில்லி வாசிகளைப் படுகொலை செய்யும் காட்சியைப் பார்த்துக் களித்தான். கொலைக்குப் பிறகு கொள்ளையும் அடித்தான். மீண்டும் அந்த வீதியில் இரத்த ஆறு ஓடியது; இரத்த ஏரி தேங்கி நின்றது. இந்த பயங்கர சம்பவத்தின் ஞாபகார்த்தமாக அந்த வீதியின் ஒரு முனையிலுள்ள வாசலுக்குக் 'கூனிதர்வாஜா' (இரத்த வாசல்) என்னும் பெயர் இன்று வரையில் வழங்கி வருகிறது.
நாதிர்ஷா வந்து போன இருபது வருஷத்துக்கெல்லாம் அவனுடைய ஸ்தானத்துக்கு வந்திருந்த ஆமத்ஷா அப்தாலி என்பவன் டில்லி மீது படை எடுத்து வந்தான். நாதிர்ஷா பாக்கி வைத்து விட்டுப் போன செல்வத்தை எல்லாம் ஆமத்ஷா கொள்ளையடித்தான்; படுகொலையும் நடத்தினான். இந்தத் தடவையும் அந்த டில்லி நகரில் பெரும் கொடுமைக்கு உள்ளான பகுதி 'வெள்ளி வீதி' தான்.
ஆமத்ஷாவுக்குப் பிறகு ஸிந்தியாக்களும், ஹோல்கார்களும் ரோஹில்லர்களும் படையெடுத்து வந்து தங்கள் பங்குக்குக் கொள்ளையடிக்கும் கைங்கரியத்தைச் செய்தனர்.
கடைசி கடைசியாகப் பிரிட்டிஷாருடைய பெரும் கருணைக்கு டில்லி மாநகரம் பாத்திரமாயிற்று. 1857-ம் ஆண்டில் 'சிப்பாய்க் கலகம்' என்று அழைக்கப்பட்ட புரட்சி தோல்வியுற்றதும் பிரிட்டிஷ் துருப்புகள் டில்லியைப் பழி வாங்கின. ஒரு வாரம் நகரமெல்லாம் கொள்ளையும் கொலையுமாக இருந்தது. ஒரு வாரத்துக்குப் பிறகு பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்கள் சைன்யத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். வரைமுறை இல்லாமல் கொலை செய்ததை நிறுத்தி, முறைப்படி விசாரித்துக் கலகக்காரர்களைத் தண்டிக்கத் தொடங்கினார்கள்! நாதிர்ஷாவும் ஆமத்ஷாவும் படுகொலை நடத்திய அதே வெள்ளி வீதியில் பிரிட்டிஷ் இராணுவ கோர்ட்டின் தூக்குமரம் நாட்டப்பட்டது. சுமார் ஆயிரம் பேர் தூக்கிலிடப்பட்டார்கள்.
அத்தகைய பயங்கரச் சம்பவங்களுக்கு இடமான சரித்திரப் பிரசித்தி பெற்ற 'சாந்தினி சவுக்'கென்னும் வெள்ளி வீதியில் சூரியா நடந்து சென்று கொண்டிருந்தான். நடந்து கொண்டிருக்கையில் அவனுடைய மனக்கண்ணின் முன்னால் மேற்கூறிய சரித்திர நிகழ்ச்சிகள் எல்லாம் வரிசைக்கிரமமாக வந்து கொண்டிருந்தன. அந்த நிகழ்ச்சிகளைக் கற்பனை செய்து பார்த்தபோது அவனுடைய உடம்பு சிலிர்த்தது. ஒவ்வொரு சமயம் தலை சுற்றுவது போலிருந்தது.
இன்னொரு பக்கத்தில் அளவில்லாத அதிசயம் அவனைப் பற்றிக்கொண்டிருந்தது. இவ்வளவு கொடூரங்களுக்கும் பயங்கரங்களுக்கும் உள்ளான இந்த வெள்ளி வீதி இன்றைய தினம் எவ்வளவு கலகலப்பாயிருக்கிறது! எத்தனை கடைகள்? அவற்றில் எவ்வளவு விலை உயர்ந்த பொருள்கள்! வீதியில் நடப்பதற்கு இடமின்றி நெருங்கியிருக்கும் ஜனக்கூட்டத்தை என்னவென்று சொல்வது? எத்தனை விதமான ஜனங்கள்? எத்தனை நிலத்தினர்? எத்தனை மதத்தினர்? ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், வங்காளிகள், பஞ்சாபியர், தென்னிந்தியர், இங்கிலீஷ் டாம்மிகள், அமெரிக்க நிபுணர்கள் அம்மம்மா! இது என்ன கூட்டம்? இது என்ன பணப் பெருக்கம்? அமெரிக்கர்கள் எப்படிப் பணத்தை வாரி இறைக்கிறார்கள்? 'சரித்திரம் திரும்பி வரும்' என்று சொல்கிறார்களே? ஒருவேளை 'மறுபடியும் இந்த வெள்ளி வீதிக்குத் துர்த்திசை ஏற்படுமா? கொள்ளையும் கொலையும் இங்கே நடக்குமா? இரத்த ஆறு ஓடுமா? ஜெர்மானியரோ, ஜப்பானியரோ, ருஷியரோ, இங்கே படையெடுத்து வருவார்களா? மறுபடியும் இந்த வெள்ளி வீதி ரணகளம் ஆகுமா...?
இப்படியெல்லாம் சூரியா சிந்தித்துக்கொண்டே நடந்தான். மனம் சிந்தனை செய்து கொண்டிருக்கையில் கண்கள் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தன. யாரையோ, எதையோ, அவனுடைய கண்கள் சுற்றிச் சுழன்று தேடிக் கொண்டிருந்தன. ஆயினும் பலன் கிட்டவில்லையென்று அவனுடைய முகத்தில் காணப்பட்ட ஏமாற்றமான தோற்றம் தெரிவித்தது.
சூரியா வெள்ளி வீதியைக் கடந்து இன்னும் அப்பால் சென்று கடைசியாக ஜும்மா மசூதியை அடைந்தான். ஷாஜஹான் சக்கரவர்த்தி கட்டியதும் இந்தியாவிலேயே பெரியதுமான அந்த கம்பீர மசூதியைக் கீழிருந்து அண்ணாந்து பார்த்தான். பிறகு அதன் படிகளில் ஏறினான், முக்கால்வாசிப் பார்த்தான். பிறகு சற்றுத் தூரத்திலிருந்த கோட்டையைப் பார்த்தான். கோட்டைக்கும் மசூதிக்கும் நடுவிலிருந்த பகுதி ஒரு காலத்தில் ஜன நெருக்கம் வாய்ந்த பகுதியாயிருந்ததென்றும், அங்கிருந்த ஆயிரக்கணக்கான வீடுகளையும் மசூதிகளையும் பிரிட்டிஷ் துருப்புகள் பீரங்கி வைத்து இடித்து நாசமாக்கித் திறந்தவெளியாகச் செய்துவிட்டார்கள் என்றும் நினைவு கூர்ந்தான். அவன் நின்று கொண்டிருந்த புகழ்பெற்ற ஜும்மா மசூதி கூட பிரிட்டிஷ் துருப்புகளின் ஆதிக்கத்தில் கொஞ்ச காலம் இருந்தது. தைமூரும் நாதிர்ஷாவும் ஆமத்ஷாவும் காட்டுமிராண்டிகள் என்று சொல்லத்தக்க பழைய காலத்து ராட்சதர்கள். ஆனால் படித்தவர்கள் என்றும் நாகரிகமடைந்தவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளும் பிரிட்டிஷார் இந்த டில்லி மாநகரில் செய்த அக்கிரமங்களைப்பற்றி என்னவென்று சொல்வது? அவற்றை எண்ணிப் பார்த்தபோது சூரியாவின் இரத்தம் கொதித்தது.
ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தங்களுடைய அற்பமாற்சரியங்களை ஒழித்துப் பிரிட்டிஷாரை இந்தியாவை விட்டு ஓட்டும் காலம் வருமா? பழைய டில்லியிலும் புது டில்லியிலும் யூனியன் ஜாக் கொடி இறங்கி இந்திய சுதந்திரக் கொடி பறக்கும் நாள் வருமா? அந்த நாளைப் பார்க்கத் தனக்குக் கொடுத்து வைத்திருக்குமா...?
இவ்விதம் சூரியா எண்ணமிட்டுக் கொண்டிருந்தபோது யாரோ தன் இடது கையை இரும்புப் பிடியாகப் பிடித்ததை உணர்ந்து சூரியா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.
இரும்பையொத்த கையினால் தன் கையை அவ்விதம் பிடித்தவன் ஆஜானுபாகுவான ஒரு போலீஸ்காரன் என்பதைக் கண்டான். ஒரு கணநேரத்துக்குள் சூரியாவின் உள்ளத்தில் ஆயிரம் எண்ணங்கள் பாய்ந்து சென்றன. இத்தனை நாட்கள், இத்தனை தூரம் பிரயாணம் செய்தபோதெல்லாம் பிடிபடாமல் வந்து கடைசியாக இந்த டில்லி நகரின் முழுச் சோம்பேறிப் போலீஸ்காரனிடந்தானா சிக்கிக்கொள்ள வேண்டும்? அதுவும் தான் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்கள் சில பாக்கியிருக்கும் போது? இன்னும் இரண்டு நாள் அவகாசம் தனக்குக் கிடைத்திருக்க கூடாதா? இவ்விதம் ஏற்பட்ட மனக் கலக்கத்தைச் சூரியா வெளியில் காட்டிக்கொள்ளாமல், "யார் நீ? எதற்காக என் கையைப் பிடிக்கிறாய்?" என்று அதட்டலாகக் கேட்டான். போலீஸ்காரன், "இன்ஸ்பெக்டர் சாகிப் உன்னைக் கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்!" என்று சொன்னதும் சூரியாவின் கலக்கம் அதிகமாயிற்று. "உன் இன்ஸ்பெக்டர் சாகிப்பை எனக்குத் தெரியாது, அவரிடம் எனக்கு என்ன வேலை? நான் வர முடியாது!" என்று சொன்னான்.
அதற்கு அந்தப் போலீஸ்காரன், "இன்ஸ்பெக்டர் சாகிப்பை பார்த்தால் இப்படிச் சொல்ல மாட்டாய். சீக்கிரம் வா" என்று கூறினான்.
இதை அவன் கூறிய குரல் சூரியாவின் மனதில் ஏதோ ஒரு சந்தேகத்தை உண்டாக்கியது. குரலைக் காட்டிலும் அதிகமாக அந்தப் போலீஸ்காரனுடைய முகத்தில் தோன்றிய புன்னகையும் கண்சிமிட்டலும் சூரியாவின் மனதில் குழப்பத்தை உண்டாக்கின. இதற்குள் ஜும்மா மசூதியின் படிகளில் அவர்கள் நின்ற இடத்துக்கு அருகில் கூட்டம் அதிகமாகச் சேர ஆரம்பித்தது. சிலர் போலீஸ்காரனுக்கும் சூரியாவுக்கும் நடந்த விவாதத்தைக் கவனிக்கவும் தொடங்கியிருந்தார்கள். இதையெல்லாம் ஒரு வினாடி நேரத்துக்குள் எண்ணிப் பார்த்து, எப்படியிருந்தாலும் அந்தப் போலீஸ்காரனுடன் போவதே நல்லது என்று சூரியா தீர்மானித்தான். "சரி; வருகிறேன் இன்ஸ்பெக்டர் சாகிப் எங்கே இருக்கிறார்?" என்று கேட்டான் சூரியா. "பேசாமல் என்னுடன் வா! ஆனால் ரொம்ப நெருங்கி வராதே! கொஞ்ச தூரத்திலேயே என் பின்னால் வந்து கொண்டிரு! இன்ஸ்பெக்டர் சாகிப்பிடம் நான் உன்னை அழைத்துக் கொண்டு போகிறேன்!" என்று சொல்லிவிட்டுப் போலீஸ்காரன் நடந்தான்.
சூரியாவுக்கு இப்போது தைரியம் அதிகமாயிற்று. தான் தப்பித்துக் கொள்வதற்குச் சௌகரியமாகப் போலீஸ்காரன் முன்னால் சென்றதினாலும், அவன் திரும்பிக் கூடத் தன்னைப் பார்க்காததினாலும் சூரியாவின் மனதில் ஏற்கனவே தோன்றிய எண்ணம் உறுதிப்பட்டது. போலீஸ்காரன் போன வழியே அவனைத் தன் கண் பார்வையிலிருந்து தவற விடாமல், பின்னால் நடந்து சென்றான். போலீஸ்காரன் ஜும்மா மசூதியைச் சுற்றி ஜேஜே என்று நெருங்கி நின்ற ஜனக்கூட்டத்தின் வழியாகப் புகுந்து நடந்து வெள்ளி வீதிக்குச் சென்று மணிக்கூண்டை அடைந்தான். பிறகு டவுன் ஹால் காம்பவுண்டுக்குள் புகுந்து போய் அதன் பின்புறத்தில் கொஞ்ச தூரத்தில் இருந்த விசாலமான மைதானத்தை அடைந்தான்.
இன்று 'காந்தி மைதானம்' என்ற பெயர் பெற்று விளங்கும் அந்த மைதானத்தில் ஆங்காங்கே சில மரங்களும் செடிகளும் இருந்தன. மைதானத்தின் விளிம்பை அடைந்ததும் போலீஸ்காரன் நின்று திரும்பிப் பார்த்தான். சூரியா சமீபத்தில் வந்த உடனே அவன் சற்றுத் தூரத்தில் இருந்த ஒரு மரத்தைச் சுட்டிக்காட்டி, "அந்த மரத்துக்குப் பின்னால் இன்ஸ்பெக்டர் சாகிப் இருக்கிறார், போய்ப் பார்த்துக் கொள்! இன்ஸ்பெக்டர் சாகிப்பும் நீயும் பேசும்போது நான் அருகில் இருப்பது நன்றாயிராது. உங்களுக்குள் எத்தனையோ இரகசியங்கள் இருக்கும்!" என்று சொல்லி மறுபடியும் புன்னகை புரிந்தான்.
சூரியா பொங்கி வந்த வியப்புடனே போலீஸ்காரன் சுட்டிக்காட்டிய மரத்தை நோக்கிச் சென்றான். மரத்தின் அருகில் போகும்போது அதன் பின்னால் ஒரு பெண் உட்கார்ந்து கையில் வைத்துக் கொண்டிருந்த புத்தகத்தை ஆழ்ந்த கவனத்துடன் படித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. "அவள் யார்?" என்ற எண்ணம் சூரியாவின் உள்ளத்தில் உதயமாவதற்குள், அவனுடைய காலடிச் சத்தத்தைக் கேட்டு அந்தப் பெண் தலை நிமிர்ந்து பார்த்தாள். அவள் தாரிணி என்று கண்டதும் சூரியாவுக்கு மகிழ்ச்சி பொங்கிற்று.
"வருக! வருக! வீரர் சூரியாவின் வரவு நல்வரவாகுக!" என்றாள் தாரிணி.
"ஓகோ! இன்ஸ்பெக்டர் சாகிப் நீங்கள்தானா? அந்தப் போலீஸ்காரர் என் கையைப் பிடித்ததும் ஒரு நிமிஷம் திணறிப் போய்விட்டேன்!" என்று சொல்லிக்கொண்டே சூரியா தாரிணிக்கு எதிரில் உட்கார்ந்தான். மேலும் தொடர்ந்து, "உங்களுடைய சாமர்த்தியம் எனக்குத் தெரிந்த விஷயந்தான். ஆயினும் ஒரு போலீஸ்காரனையே உங்கள் வலையில் சிக்க வைப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை," என்று சொன்னான்.
"போலீஸ்காரனைப் பார்த்து எதற்காக அவ்வளவு பயம்? புரட்சி வீரர் சூரியாவே போலீஸ்காரனுக்குப் பயப்பட்டால் மற்றவர்களின் கதி என்ன?" என்று தாரிணி கேட்டாள்.
"பயம் என்று நான் சொன்னேனா? எத்தனையோ இடங்களில் எவ்வளவோ வேஷம் போட்டு எத்தனையோ தந்திரம் செய்து போலீஸாரிடம் தப்பி வந்தேன். புனிதமான சந்நியாசி வேஷங்கூடப் போட்டுக்கொண்டேன். அப்படியெல்லாம் செய்து இத்தனை தூரம் டில்லிக்கு வந்துவிட்டுத் தங்களைச் சந்திக்காமல், விஷயம் இன்னதென்று தெரிந்து கொள்ளாமல், போலீஸ் 'லாக் - அப்'புக்குப் போகிறதென்றால் திகைப்பாயிராதா?"
"போன காரியமெல்லாம் பூர்த்தியாயிற்றா?" என்று தாரிணி கேட்டாள்.
"எப்படி பூர்த்தியாகும்? அதற்குள்ளேதான் தலை போகிற காரியம் என்று தங்களிடமிருந்து கடிதம் வந்து விட்டதே? அந்தக் கடிதத்தினால் தேவப்பட்டணத்தில் நேர்ந்த விபரீதங்களைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். எதற்காக அப்படிக் கடிதம் எழுதினீர்கள்? சீதாவுக்கு அவ்விதம் என்ன நேர்ந்துவிட்டது? உண்மையில் சீதாவை நினைத்தால் எனக்குக் கோபம் வருகிறது. ஒரு தனிப்பட்ட மனுஷிக்காக எவ்வளவோ முக்கியமான தேசீய காரியங்கள் தடைப்பட்டுப் போகிறதென்றால்?..."
"நான் அவ்விதம் நினைக்கவில்லை. கோபுரத்தைப் பொம்மை தாங்குகிறது என்று நினைத்துக்கொள்வது போல நம்மாலேதான் தேசத்தின் காரியங்கள் நடக்க வேண்டுமென்று நினைத்துக் கொள்கிறோம். தெய்வ சித்தம் ஒன்று இருக்கிறது; அதன் சட்டப்படி எல்லாம் நடக்கின்றன. தேசத்தை நாம் காப்பாற்ற முயல்வதைவிட நமக்குத் தெரிந்திருக்கும் ஒருவரின் கஷ்டத்தைப் போக்கினால் கைமேல் பலன் உண்டு" என்றாள் தாரிணி.
"கடைசியாக நாம் சந்தித்த பிறகு தத்துவ ஆராய்ச்சி பலமாகச் செய்திருக்கிறீர்கள். முன் தடவை நாம் பேசிய போது தனி மனிதர்களுடைய சுக சௌகரியங்களைக் காட்டிலும் தேச நன்மையே பெரிது என்று முடிவு செய்தோம். இந்த மாறுதலுக்கு காரணம் என்னவோ தெரியவில்லை."
"உங்கள் அத்தங்காதான் காரணம் தேசம். எந்தக் கேடாவது கெட்டுப் போகிறது. சீதாவின் கஷ்டம் நீங்கினால் போதும் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது."
"சீதாவின் பேரில் உங்களுக்கு அளவில்லாத கருணை உண்டாகியிருக்கிறது. அதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை."
"ஒருவரிடம் ஒருவர் பிரியம் கொள்ளுவதற்குக் காரணம் வேண்டுமா என்ன?"
"வேண்டியதில்லைதான். பிரியம் கொள்ளுவதற்குக் காரணம் வேண்டியதில்லை என்பதினாலேதான் ஸ்திரீகள் முதல் நம்பர் அயோக்கியர்கள் பேரில் காதல் கொள்ளுகிறார்கள்?"
"நீங்கள் சொல்வது எனக்கு நன்றாய்ப் புரியவில்லை. ஸ்திரீகள் அயோக்கியர்கள் மீது மட்டுமே காதல் கொள்ளுகிறார்கள் என்றா சொல்லுகிறீர்கள்? அப்படியானால் அதை நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஸ்திரீகள் காதல் கொள்ளக்கூடிய யோக்கியர்கள் சிலரும் இருக்கிறார்கள். எனக்கு அப்படிப்பட்ட யோக்கியர் ஒருவரைத் தெரியும்" என்று தாரிணி கூறிவிட்டு எங்கேயோ பார்த்தாள்.
சூரியா எரிச்சலுடன், "அப்பேர்ப்பட்ட தனிப் பெரும் யோக்யன் யார் என்று எனக்கும் தெரியும். அவன் பெயர் சௌந்தரராகவன், இல்லையா?" என்றான்.
"நான் சௌந்தரராகவனை நினைத்துக் கொண்டு பேசவில்லை. என்றாலும் அவரையும் நான் அயோக்கியர் என்று சொல்ல மாட்டேன். ஏதோ சில தவறுகள் அவர் செய்யக் கூடும். ஆனால் சீதாவிடம் அவருக்கு எவ்வளவோ அன்பு உண்டு என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும். சீதா தன்னுடைய வீண் சந்தேகங்களினால் அவருடைய அன்பையெல்லாம் விஷமாகச் செய்து விடுகிறாள்" என்றாள் தாரிணி.
"போகட்டும்; ராகவனுடைய அந்தரங்கத்தைச் சீதாவை விட நீங்கள் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா?"
"சில சமயம் ஒரு பொருளுக்கு மிகவும் சமீபத்திலிருப்பவர்களைக் காட்டிலும் கொஞ்சம் தூரத்திலிருப்பவர்களுக்கு அதன் சொரூபம் நன்றாய்த் தெரிகிறது. அதனால் சீதாவைக் காட்டிலும் ராகவனுடைய உள்ளத்தை என்னால் நன்றாய் அறிந்து கொள்ள முடிந்தது."
"யார் கண்டார்கள்? சீதாவைக் காட்டிலும் ராகவனுடைய உள்ளத்துக்கு நீங்கள் அதிக சமீபத்தில் இருக்கலாமல்லவா?"
"சூரியா! நீங்கள் ஏதோ விகல்பமாகப் பேசுகிறீர்கள், இத்தனை நேரமும் அறியாமற் போனேன். இப்படிப் பேசுவதானால் நான் உங்களுடன் பேசுவதற்கே இஷ்டப்படவில்லை, நீங்கள் எழுந்து போகலாம்!"
"இந்த மைதானம் உங்களுக்குச் சொந்தமா என்ன?"
"சரி; அப்படியானால் நான் எழுந்து போகிறேன்" என்று சொல்லிக் கொண்டு தாரிணி எழுந்தாள்.
சூரியா பரபரப்புடன், "தாரிணி! நான் சொன்னதையெல்லாம் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். நான் கூறியது பிசகு தான்; தயவு செய்து உட்காருங்கள்! சீதா விஷயமாக நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போங்கள்" என்றான்.
தாரிணி மறுபடி உட்கார்ந்து "திடீரென்று உங்களிடம் இந்த மாறுதல் காணப்படுவதன் காரணம் தெரியவில்லை. யாரோ ஏதோ சொல்லி உங்கள் மனதைக் கெடுத்திருக்கிறார்கள். சீதாவைப் பார்த்துவிட்டு இங்கு வந்தீர்களா?" என்றாள்.
"இல்லை; ஸ்டேஷனில் இறங்கியதும் நேரே இங்கு வந்தேன். என்னுடைய அறைக்குக் கூடப் போகவில்லை. சீதா எப்படி இருக்கிறாள்? அவள் விஷயத்தில் நான் என்ன செய்ய வேண்டும்."
"அவள் மனதில் ஏதோ ஒரு விஷம் புகுந்திருக்கிறது. ஏதோ ஒரு சந்தேகம் குடிகொண்டிருக்கிறது. அதனாலேயே அவளுடைய குடும்ப வாழ்க்கை பாழாகிக் கொண்டிருக்கிறது. அவளுடைய ஆயுளுக்கே அபாயம் வந்துவிடும் போலிருக்கிறது. நீங்கள் உடனே போய் விசாரித்து அவளுடைய மனதிலுள்ளதைத் தெரிந்து கொள்ள முயல வேண்டும். சில நாளைக்கு அவளை எங்கேயாவது அனுப்பி வைத்தாலும் நல்லது."
"அவள் எந்த ஊருக்குப் போவாள்? போவதற்கு எந்த ஊர் இருக்கிறது? நான் சொல்கிறேன், தாரிணி! சீதா இனிமேல் சுகமடைவதற்கு ஒரே வழிதான் இருக்கிறது; அவள் விவாகரத்து செய்து கொள்ள வேண்டும். ஆனால் ஹிந்து சாஸ்திரமும் பிரிட்டிஷ் சட்டமும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஆகையால் துன்பப்பட்டுச் சாகவேண்டியது தான்."
"நான் கூடச் சில சமயம் நினைத்ததுண்டு. சீதா விவாகரத்து செய்துவிட்டு உங்களைக் கலியாணம் செய்து கொண்டால் எவ்வளவு சந்தோஷமாயிருப்பாள் என்று."
"ஒரு நாளும் இல்லை; நீங்கள் நினைப்பது பெருந்தவறு. சீதாவிடம் என்னுடைய அபிமானம் அந்த விதமானது அன்று. அத்தையிடம் நான் கொண்ட அபிமானம் அவளுடைய பெண்ணின் க்ஷேமத்தில் அக்கறை கொள்ளச் செய்திருக்கிறது. மற்றபடி அவளுடைய இலட்சியங்களுக்கும் என்னுடைய இலட்சியங்களுக்கும் பொருந்தவே பொருந்தாது. சீதா பட்டுப்பூச்சி இனத்தைச் சேர்ந்தவள். பட்டிலும் பகட்டிலும் பளபளப்பிலும் படாடோ பத்திலும் பிரியம் கொண்டவள். பார்ட்டிகளுக்குப் போவதே ஜன்ம சாபல்யம் என்று எண்ணியிருக்கிறவள்..."
"சீதா பிறக்கும்போதே இந்த மாதிரி குணங்களுடனே பிறந்தாளா? எல்லாம் பின்னால் ஏற்பட்ட பழக்க வழக்கங்கள் தானே?"
"அது எப்படி இருந்தால் என்ன? உங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். தேவப்பட்டணம் போலீஸாரிடமிருந்து தப்புவதற்காக நான் சந்நியாசி வேஷம் பூண்டேன். அந்த வேஷத்திலேயே நான் சில நாள் இருக்க நேர்ந்தது. அப்போது உண்மையாகவே நான் சந்நியாசி ஆகிவிட வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. மதராஸில் காமாட்சி அம்மாளைப் பார்த்துப் பேசிய பிறகு அந்த எண்ணம் பலம் பெற்றுத் தீர்மானம் ஆயிற்று."
"தங்களுடைய தீர்மானத்தை நான் மிகவும் மெச்சுகிறேன்."
"எல்லா விஷயத்திலும் நம்முடைய கருத்துக்கள் ஒத்திருப்பது பற்றிச் சந்தோஷம்" என்றான் சூரியா.
"எனக்கும் சந்தோஷந்தான்; ஆனால் காமாட்சி அம்மாள் தங்களுடைய குருநாதரானது எப்படி?"
"சீதாவைப் பற்றி விசாரிப்பதற்காக அந்த அம்மாளிடம் போயிருந்தேன். சீதாவுக்கு டைபாய்ட் சுரம் வந்தது பற்றியும் நீங்கள் அவளுக்குச் சிசுரூஷை செய்து பிழைக்க வைத்தது பற்றியும் தெரிவித்தாள்."
"அவ்வளவுதானா! அதிலிருந்து எப்படிச் சந்நியாசம் வாங்கிக் கொள்ளும் உறுதி ஏற்பட்டது?"
"காமாட்சி அம்மாள் இன்னும் சில விஷயங்களும் சொன்னாள். ராகவனுடைய இளம்பிராயத்தில் அவன் வேறொரு பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ள இஷ்டப்பட்டதைப் பற்றியும் அவளும் அதற்கு ஆவலாயிருந்தது பற்றியும் சாதி வித்தியாசம் காரணமாகத் தான் அதற்குச் சம்மதம் கொடுக்க மறுத்துவிட்டது பற்றியும் சொன்னாள். தாயாருடைய வாக்கை இவ்வளவு பக்தியாக நிறைவேற்றி வைத்த சௌந்தரராகவனை நான் மனதார மெச்சினேன்."
"நீங்கள் இன்றைக்கு ஒரு மாதிரி பேசி வந்ததின் காரணம் இப்போது தெரிகிறது. ஒரு விஷயம் கேட்க விரும்புகிறேன். அந்தப் பெண்ணின் இப்போதைய அபிப்பிராயத்தைப் பற்றிக் காமாட்சி அம்மாள் சொன்னாளா?"
"இல்லை; அவளுக்கு எப்படி அது தெரியுமா? ஆனால், 'ராகவன் அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் ஒருவேளை சந்தோஷமாயிருந்திருப்பான்' என்று சொன்னாள்."
தாரிணி சிறிது நேரம் யோசனை செய்துவிட்டு, "இதற்கும் தங்களுடைய சந்நியாசத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டாள்.
"நான் எப்போதாவது கலியாணம் செய்து கொள்ளுவதாயிருந்தால், அவள் இன்னொரு ஆசாமியிடம் காதல் கொண்டிருப்பதாகத் தெரிந்தால் நான் சந்நியாசம் வாங்கிக்கொள்வதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது?"
"நீங்கள் நினைப்பது முற்றும் தவறு; அந்தப் பெண்ணின் இதயத்தில் ராகவனுக்கு இப்போது கொஞ்சம் கூட இடமில்லை. நீங்கள் சந்நியாசி ஆனதாகத் தெரிந்தால் அவளும் கிறிஸ்துவ மதத்தைத் தழுவி கன்னிகா மடத்தைச் சேர்ந்து விடுவாள்."
சூரியா ஆர்வத்துடன் தாரிணியின் கரங்களைப் பிடித்துக் கொண்டு, "இது உண்மைதானா?" என்று கேட்டான்.
"தங்களுடைய இருதயத்தையே கேட்டுப் பார்க்கிறதுதானே?" என்று சொன்னாள் தாரிணி.
"என் இருதயம் சொல்லியதை நம்புவதற்கு இதுவரை எனக்குப் பயமாயிருந்தது. அவ்வளவு பெரிய பாக்கியம் இந்த துரதிர்ஷ்டசாலிக்கு எப்படிக் கிடைக்கும் என்றும், இருதயம் நம்மை ஏமாற்றுகிறது என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன்."
"இருதயம் ஏமாற்றவில்லை; சலன சுபாவமுள்ள அறிவு தான் ஏமாற்றிற்று. சீதாவையும் அதே அறிவு தான் ஏமாற்றுகிறது. நீங்கள் உடனே சென்று அவளுடைய நிலையைத் தெரிந்து கொண்டு வாருங்கள். சீதாவை நான் பார்த்து இருபது நாள் ஆகிவிட்டது எப்படியிருக்கிறாளோ என்று கவலையா இருக்கிறது?"
"அப்படியே ஆகட்டும், நாளைக்கு நாம் இந்த இடத்திலேயே சந்திக்கலாமா?"
"கூடவே கூடாது; சுற்றுமுற்றும் பாருங்கள். நம்மை எத்தனை பேர் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியும். நாளைக்கு ஜாகையில் சந்திக்க வேண்டியது தான். நம்முடைய நண்பர்கள் உங்களுடைய அனுபவங்களைக் கேட்க ஆவலுள்ளவர்களாயிருக்கிறார்கள். நாளைக்கு இதே நேரத்துக்கு மணிக்கூண்டுக்கு அருகில் வாருங்கள். போலீஸ்காரன் இந்துலால் உங்களைச் சந்தித்து ஜாகைக்கு அழைத்துக் கொண்டு வருவான். இப்போது என்னுடன் தொடர்ந்து வரவேண்டாம். நான் அந்தப் போலீஸ்காரன் அருகில் போய்ச் சேரும் வரையில் தாங்கள் அந்த மரத்தடியிலே உட்கார்ந்திருப்பது நல்லது."
இவ்விதம் கூறிவிட்டுத் தாரிணி எழுந்து நடந்தாள். சூரியா அங்கேயே உட்கார்ந்து தாரிணியும் போலீஸ்காரனும் மறையும் வரையில் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
தாரிணி கண்ணுக்கு மறைந்ததும் சூரியா அங்கிருந்து எழுந்து செல்லலாம் என்று நினைத்தான். அச்சமயம் இத்தனை நேரமும் சற்றுத் தூரத்தில் உட்கார்ந்திருந்த மூன்று மனிதர்கள் தன்னை நோக்கி வருவதைச் சூரியா பார்த்தான். அவர்கள் அருகில் வரட்டும் என்று காத்திருந்தான்.
மூன்று மனிதர்களும் வந்து சூரியாவைச் சுற்றி உட்கார்ந்து கொண்டார்கள்.
"தம்பி! உனக்கு எந்த ஊர்?" என்று அவர்களில் ஒருவன் கேட்டான்.
"எனக்கு மதராஸ்!" என்றான் சூரியா.
"ஆ! மதராஸ்!" என்று மூன்று பேரும் சேர்ந்து சொன்னார்கள்.
சற்றுப் பொறுத்து, "இங்கு ஒரு பெண் உட்கார்ந்திருந்தாளே, அவள் உனக்கு என்னமாக வேணும்?" என்று ஒருவன் கேட்டான்.
"அவள் என் சிநேகிதி!" என்றான் சூரியா.
"ஆகா! அவள் உன் சிநேகிதி!" என்றார்கள் மூன்று பேரும் சேர்ந்தாற்போல்.
அதற்குப் பிறகு சற்று நேரம் சம்பாஷணை நகரவில்லை. சூரியா பொறுத்துப் பார்த்துவிட்டு, "உங்களுக்கு என்ன வேண்டும்? எதற்காகக் கேட்கிறீர்கள்?" என்றான்.
"பஹுத் அச்சா! அப்படிக் கேள் சொல்கிறோம்" என்றான் ஒருவன்.
"பஹுத் அச்சா! அப்படிக் கேள் சொல்கிறோம்" என்றார்கள் மற்ற இருவரும்.
அவர்கள் ஏதோ ஒரு சுதேச சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்களாயிருக்கலாம் என்று ஏற்கனவே சந்தேகித்தான். இப்போது அவர்கள் பல்லவி, அனுபல்லவி முறையில் பேசுவதிலிருந்து அந்தச் சந்தேகம் உறுதிப்பட்டது.
"சொல்லுங்கள்; கேட்பதற்குத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் சூரியா.
"அந்தப் பெண்ணின் சிநேகம் உனக்கு வேண்டாம்!" என்று ஒருவன் சொன்னான்.
மற்ற இருவரும் அதையே திருப்பிச் சொன்னார்கள்.
"ஏன் அந்தப் பெண்ணிடம் என்ன கெடுதல்? அவளிடம் சிநேகம் செய்தால் என்ன?" என்று சூரியா கேட்டான்.
"பெரிய இடத்துச் சமாசாரம்!" என்றான் ஒருவன்.
"ஆமாம் ரொம்பப் பெரிய இடத்துச் சமாசாரம்" என்றார்கள் மற்ற இருவரும்.
"அப்படியானால் அந்த ரொம்பப் பெரிய இடத்திலே போய்ச் சொல்லுங்கள் என்னிடம் ஏன் சொல்லவேண்டும்?" என்றான் சூரியா.
மூன்று பேரில் ஒருவருடைய முகத்தை ஒருவர் பார்த்தார்கள்.
"எனக்கு நேரமாகிறது; நான் போய் வருகிறேன்" என்றான் சூரியா.
மூன்று பேரில் ஒருவன் மற்றவர்களைப் பார்த்து, "சொல்லி விடலாமா?" என்று கேட்டான்.
"சொல்லிவிடலாமா?" என்று அவர்களும் கேட்டார்கள்.
முதல் மனிதன் சூரியாவைப் பார்த்து, "தம்பி! உனக்குப் பணம் வேணுமா?" என்றான்.
"எவ்வளவு?" என்று சூரியா கேட்டான்.
முதல் மனிதன் மற்றவர்களைப் பார்த்து, "எவ்வளவு என்று கேட்கிறான்; சொல்லட்டுமா?" என்றான்.
"சொல்லு!" என்றார்கள்.
"தம்பி! உனக்கு லட்சம் ரூபாய் பணம் வேண்டுமா? ஒரு லட்சம் ரூபாய்!" என்றான் முதல் மனிதன்.
சூரியா கொஞ்சம் திகைத்துப் போனான். மெதுவாகச் சமாளித்துக் கொண்டு, "கள்ள நோட்டா? நிஜப் பணமா?" என்றான்.
"ஆகா! கள்ளநோட்டு!" என்று சொல்லிவிட்டு மூவரும் சிரித்தார்கள்.
பிறகு முதல் மனிதன், தம்பி! நிஜப் பணம்! ஒரு லட்சம் ரூபாய் நோட்டு வேண்டாமென்றால் தங்கமாகத் தருகிறோம்!" என்றான்.
"ஆமாம் தங்கமாகத் தருகிறோம்!" என்றார்கள் மற்றவர்கள்.
"கொடுங்கள்" என்று சூரியா கையை நீட்டினான்.
"கெட்டிக்காரப் பையன்; பணத்துக்குக் கையை நீட்டுகிறான்!" என்று சொல்லிவிட்டு மூவரும் சிரித்தார்கள்.
கடைசியில் ஒருவன் மென்று விழுங்கிக்கொண்டு, "ஒரு லட்சம் ரூபாய் சும்மாக் கிடைக்குமா? எங்களுக்கு ஒரு உதவி செய்தால் கிடைக்கும்!" என்றான்.
"என்ன உதவி?" என்றான் சூரியா.
"சற்று முன்னால் நீ ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தாயே? அவளைக் கொண்டு வரும்படி எங்களுக்குப் பெரிய இடத்து உத்தரவு கிடைத்திருக்கிறது. அதற்கு நீ உதவி செய்தால் லட்சம் ரூபாய் ரொக்கமாகப் பெற்றுக் கொள்ளலாம்!"
சூரியா இம்மாதிரி ஏதோ வரப்போகிறது என்று எதிர் பார்த்தான். ஆயினும் அதைக் காதால் கேட்டதும் சொல்ல முடியாத கோபம் வந்தது.
கோபத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டான். இப்போது கோபித்துக்கொண்டு என்ன பயன்? அவர்கள் மூன்று பேர்; முரட்டுத் தடியர்கள். அவர்களுடன் சண்டை பிடிப்பதால் பல காரியங்கள் கெட்டுப் போகும். மேலும் அவர்களுடைய உண்மையான நோக்கம் என்ன என்று அவனுக்கு இன்னும் சந்தேகமாயிருந்தது.
கொஞ்ச நேரம் யோசிப்பதுபோலப் பாசாங்கு செய்துவிட்டு, "இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள்; யோசித்துப் பதில் சொல்கிறேன்" என்றான்.
"எப்போது எங்கே சந்திக்கலாம்!" என்று முதல் மனிதன் கேட்டான்.
"இதே இடத்தில் இதே நேரத்தில் நாளை மறுநாள் சந்திக்கலாம்!" என்றான் சூரியா.
"உன்னுடைய ஜாகை எங்கே?" என்று ஒருவன் கேட்டான்.
"ஜாகை எங்கே?" என்று மற்ற இருவரும் கேட்டார்கள்.
"தற்போது எனக்கு ஜாகை எதுவும் இல்லை; இனிமேல் தான் தேட வேண்டும்!" என்று சொல்லிக்கொண்டு சூரியா எழுந்தான். அவர்களும் எழுந்தார்கள்.
சூரியா எங்கே போனாலும் அவர்களும் சற்றுத் தூரத்தில் பின் தொடர்ந்து வந்தார்கள்.
காரியம் இல்லாத இடங்களுக்கெல்லாம் சூரியா சென்று அந்த மூன்று பேருடைய பார்வையிலிருந்து தப்புவதற்கு இரவு வெகு நேரமாகிவிட்டது. ஆயினும் சீதாவை அன்று இரவு எப்படியும் பார்த்துவிடுவது என்ற தீர்மானத்துடன் நடந்தான்.
சீதா தன்னுடைய வீட்டில் அறையில் தன்னந்தனியாக உட்கார்ந்திருந்தாள்.
சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் 'டிக் டிக், டிக், டிக்' என்று அடித்துக் கொண்டிருந்தது.
சீதாவின் இதயம் கடிகாரத்தின் 'டிக்' சத்தத்தோடு ஒத்து அடித்துக் கொண்டிருந்தது.
கடிகாரத்தின் ஒவ்வொரு 'டிக்'கும் தன்னுடைய வாழ்நாளின் இறுதியை அருகில் கொண்டுவந்து கொண்டிருக்கிறது என்பது சீதாவுக்குத் தெரிந்துதானிருந்தது.
கடிகார முள் நள்ளிரவின் பன்னிரண்டு மணியை நெருங்க நெருங்க, சீதாவின் இதயத்தில் குத்தியிருந்த துன்ப முள்ளின் வேதனை அதிகமாகிக் கொண்டிருந்தது.
மணி பதினொன்றரை ஆகிவிட்டது. அவளுடைய ஆயுளில் இன்னும் அரை மணி நேரந்தான் பாக்கியிருக்கிறது.
அதற்குள் எத்தனையோ காரியங்கள் செய்தாக வேண்டும்.
குழந்தைக்குக் கடிதம் எழுத வேண்டும்; இவருக்கும் நாலு வரி எழுதத்தான் வேண்டும்.
ஆனால் எத்தனை முயன்றாலும் ஒன்றும் எழுத வரவில்லையே, என்ன செய்கிறது.
சரியாக மணி பன்னிரண்டுக்குக் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு செத்துப் போவது என்று சீதா முடிவு செய்திருந்தாள். அதற்குத் தயாராவதற்காக ஒன்பது மணிக்கே ஆடை ஆபரணங்களை அணிந்து கொண்டாள். சாகிறபோது அவலட்சணமாக எதற்குச் சாகவேண்டும்? நாலு பேர் வந்து பார்க்கிறவர்கள், "அடடா! இப்பேர்ப்பட்ட அழகியை மனைவியாகப் படைத்தும் இந்த ராகவனுக்கு அவளை வைத்துக்கொண்டு வாழக் கொடுத்து வைக்கவில்லையே?" என்று சொல்ல வேண்டாமா?
அதற்காகவே ஆடை ஆபரணங்களைப் பூண்டு அழகு செய்துகொண்டு வந்து எழுதுவதற்கு உட்கார்ந்தாள்.
வஸந்திக்கு முதலில் கடிதம் எழுதி வைக்க எண்ணினாள். ஆனால் குழந்தையை நினைத்துக்கொண்டதும் அழுகை அழுகையாக வந்தது. அவளைப் பார்க்காமல் செத்துப் போகிறோமே என்ற எண்ணத்தினால் நெஞ்சு பிளந்துவிடும் போலிருந்தது. குழந்தைக்கு என்ன எழுதுவது? "உன் அப்பா என்னைக் கொன்று விட்டார்! அவரை நீ எனக்காகப் பழி வாங்கு" என்று எழுதலாமா? சீச்சீ! இது என்னை பைத்தியக்கார எண்ணம்?
முதலில் லலிதாவுக்குக் கடிதம் எழுதலாம் என்று ஆரம்பித்தாள். "என் ஆருயிர்த் தோழி லலிதாவுக்கு..." என்பதற்கு மேல் ஒன்றும் எழுதத் தோன்றவில்லை. லலிதாவை நினைத்ததும் பழைய ஞாபகங்கள் எல்லாம் பொங்கிக்கொண்டு வந்தன. ஆகா! ராஜம்பேட்டையில் கலியாணத்துக்கு முன்னால் லலிதாவும் தானும் கூடிக் குலாவி அந்தரங்கம் பேசிய நாட்கள் எவ்வளவு ஆனந்தமாக இருந்தன? அப்புறம் இவர் பெண் பார்க்க வந்த போதும், லலிதாவுக்குப் பதிலாகத் தன்னை மணப்பேன் என்று சொன்னபோதும் தான் அடைந்த களிப்பு என்ன? இப்போது அனுபவிக்கும் நரக வேதனை என்ன? தான் அப்போது லலிதாவுக்குச் செய்த துரோகந்தான் இப்போது தன்னை வந்து இப்படிப் பீடித்திருக்கிறதோ?
லலிதாவுக்கு என்ன எழுதுவது? "என்னை மன்னித்துவிடு!" என்று எழுதுவதா? அப்படி எழுதினால் அவளுக்கு அர்த்தமே ஆகாதே! எதற்காக மன்னிப்பு என்று கேட்பாளே? தன்னுடைய துயரத்தைச் சொன்னால் கூட அவளுக்கு விளங்காது. அவள் ஆனந்தமான இல்வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறாள். சந்தோஷமாய் இருக்கிறவர்களுக்குத் துக்கப்படுபவர்களின் துக்கத்தை அறிந்து கொள்ளக் கூட முடியாது. "என் புருஷன் என்னைக் கஷ்டப்படுத்துகிறான்!" என்றால், "வெறுமனே ஒரு புருஷன் கஷ்டப்படுத்துவானா? உன்னுடைய நடத்தையில் ஏதாவது கெடுதல் இருக்கும்!" என்று சொல்வார்கள். அதிலும் இல்வாழ்க்கையில் சந்தோஷமாயிருப்பவர்கள் அப்படித்தான் நினைப்பார்கள்.
லலிதாவுக்கு இப்போது என்ன எழுதி என்ன பிரயோஜனம்? சந்தோஷமாயிருக்கிறவளிடம் போய்த் தன்னுடைய துக்கத்தைச் சொல்லிக் கொள்வானேன்? அப்படிச் சொல்லிக்கொண்டு அவள் பரிதாபப்படுவதாக வைத்துக் கொள்ளலாம். அதனால் சாகப் போகிற தனக்கு என்ன உபயோகம் ஏற்படப் போகிறது?
இவருக்குக் கடிதம் எழுதலாம் என்றால், அதைப் பற்றி நினைக்கும்போதே அவளுடைய இதயம் வெடித்து விடும் போலிருந்தது.
என்னத்தை எழுதுவது?
"இந்த உலகத்தில் தங்களைத் தவிர எனக்கு வேறு கதியில்லை. தாங்களே என்னை வெறுத்து விட்டீர்கள். இனி இந்தப் பூமியில் இருந்து தான் என்ன பயன்!" என்று எழுதலாமா?
"ஓயாமல் 'தொலைந்து போ!' 'தொலைந்து போ!' என்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே? அதன்படி இதோ தொலைந்து போகிறேன்" என்று எழுதி வைக்கலாமா?
இவ்விதம் எண்ணியதும் சீதாவின் கண்களிலிருந்து பொல பொலவென்று கண்ணீர் உதிர்ந்தது.
ராகவன் தன்னை எத்தனையோ விதத்தில் கொடுமைப்படுத்தியதெல்லாம் சீதாவின் மனதை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. ஆனால் 'தொலைந்து போ!' 'தொலைந்து போ!' என்று சில காலமாக அவன் அடிக்கடி சொல்லி வந்தது அவளை எல்லையில்லாத துன்பத்துக்கு ஆளாக்கியது. எங்கே தொலைந்து போகிறது? தன்னை அழைத்துக் கொள்ள யார் காத்துக் கொண்டிருக்கிறார்கள்? தாயில்லை; தகப்பனாரைப் பற்றித் தகவல் இல்லை; வேறு எங்கே தொலைந்து போகிறது?
ஒரு வழியாகச் செத்து தொலைந்து போக வேண்டியது தான்!
ஆகா! சீதையைப் பூமாதேவி அழைத்துக் கொண்டது போல் தன்னையும் அழைத்துக் கொள்ளக்கூடாதா? சகுந்தலையை அவள் தாயார் அழைத்துக்கொண்டு போனது போல் தன்னைத் தன்னுடைய தாயார் அழைத்துக் கொண்டு போகக்கூடாதா?
அப்படியெல்லாம் கதைகளிலே தான் நடக்கும், உண்மை வாழ்க்கையில் நடைபெறாது. தானே சுட்டுக்கொண்டு செத்துப் போனால் தான் போனது! நல்ல வேளையாக இவர் கைத் துப்பாக்கி வாங்கி வைத்திருக்கிறார்! அதற்காகத் தன் கணவருக்கும் நன்றி செலுத்த வேண்டியது தான். கடிதத்தில் அவ்விதம் நன்றி செலுத்துவதாக எழுதி வைக்கலாமா?
ஐயோ! இந்தக் கடிகாரத்துக்கு என்ன இத்தனை அவசரம்? ஏன் இவ்வளவு வேகமாக இது ஓடுகிறது? ஏன் இவ்வளவு துரிதமாக இருதயம் அடித்துக் கொள்கிறது.
இதோ மணி பன்னிரண்டுக்கு நெருங்கி வந்துவிட்டதே இன்னும் சில நிமிஷந்தானே பாக்கி இருக்கிறது?
பன்னிரண்டு மணி அடித்ததும் தன்னைத்தானே சுட்டுக் கொள்வதாகச் சீதா தீர்மானம் செய்திருந்தாள்.
பன்னிரெண்டரை மணிக்கு அவர் வருவார். வருவதற்குள்ளே காரியம் முடிந்து போய்விட வேண்டும். அவர் வீட்டிலிருக்கும்போது இந்தக் காரியம் தான் செய்தால், வீணாக அவர் பேரில் பழி விழுந்தாலும் விழும். "இருந்தும் கெடுத்தாள்; இறந்தும் கெடுத்தாள்!" என்ற அபகீர்த்தி தனக்கு ஏன் ஏற்பட வேண்டும்.
குழந்தை வஸந்தி தாயில்லாப் பெண்ணானால், தகப்பனாராவது அவளுக்கு இருக்க வேண்டாமா?
அந்த இரண்டு நிமிஷமும் ஆகிவிட்டது கடிகாரம் டிங், டிங், டிங் என்று பன்னிரண்டு மணி அடித்தது.
மணியை மனதில் எண்ணிக்கொண்டே வந்த சீதா, பன்னிரண்டு மணி அடித்து முடிந்ததும் கைத் துப்பாக்கியைக் கையில் எடுக்க எண்ணினாள்.
அந்தச் சமயத்தில் அறையில் அருகில் யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்டது.
சீதாவின் இதயத்தின் துடிப்புச் சட்டென்று நின்றது; அவளுடைய கை செயலற்றுப் போயிற்று.
வருகிறவர் யார்? அவர்தானா? சீக்கிரம் வந்துவிட்டாரா? மனத்துக்கு மனது விஷயம் தெரிந்து போய்த் தன்னைக் காப்பாற்றுவதற்காக வருகிறாரா? கைத் துப்பாக்கியைப் பார்த்ததும் தான் செய்ய எண்ணிய காரியத்தை ஊகித்து அறிந்து கொள்வாரா? தன்னுடைய மனவேதனையைத் தெரிந்து கொள்வாரா? தன்னிடம் பணிந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்வாரா?
காலடிச் சத்தம் வெகு சமீபத்தில் வந்த பிறகும் சீதா திரும்பிப் பார்க்கவில்லை. எதற்காகத் திரும்பிப் பார்க்க வேண்டும்? தான் என்ன செய்ய எண்ணியிருந்தாள் என்பதை அவர் தெரிந்து கொள்ளட்டும்; அருகில் வந்து கைத் துப்பாக்கியைப் பார்த்துத் திடுக்கிடட்டும்; தன்னை ஏதாவது கேட்கட்டும், பிறகு பதில் சொல்லிக் கொள்ளலாம்.
வந்த ஆசாமி சீதாவுக்குப் பின்புறம் வந்து சமீபமாக நின்றான். சட்டென்று கையை நீட்டிக் கைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டான். பிறகு "சீதா!" என்றான்.
குரல் ராகவனுடைய குரல் அல்ல என்பதை அறிந்ததும் சீதா வியப்புடன் திரும்பிப் பார்த்தாள். வந்திருப்பவன் சூரியா என்பதைத் தெரிந்து கொண்டாள். இதனால் அவள் மனதில் அளவற்ற ஏமாற்றம் உண்டாயிற்று. அதே காலத்தில் ஓர் விந்தையான மாறுதல் அவள் மனப்போக்கில் ஏற்பட்டது. தான் உயிரை விட்டு விடுவது என்கிற தீர்மானத்தைச் சீதா அந்தக் கணத்தில் மாற்றிக் கொண்டாள். உயிரோடு எவ்வளவு நாள் இருக்கலாமோ இருந்து ராகவனுக்கு எவ்வளவு மனக்கிலேசம் அளிக்கலாமோ அவ்வளவும் அளிக்க வேண்டுமென்று எண்ணினாள். இந்தத் திடீர் நோக்கம் நிறைவேறுவதற்கு சூரியாவின் உதவி தனக்குத் தேவை. அதற்குத் தகுந்தபடி அவனிடம் நடந்து கொள்ளவேண்டும்.
"அம்மாஞ்சி! நீயா? நல்ல சமயத்தில் தான் வந்தாய்; வா!" என்று வரவேற்றாள்.
"அப்படி ஒன்றும் நல்ல சமயமாக எனக்குத் தோன்றவில்லையே? நீ செய்ய உத்தேசித்திருந்த காரியத்துக்குத் தடங்கலாக அல்லவா நான் வந்துவிட்டதாகத் தோன்றுகிறது?"
"நான் என்ன செய்ய உத்தேசித்ததாக எண்ணினாய்!"
"நள்ளிரவில் கைத் துப்பாக்கியைத் தயாராக வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது எதற்காக இருக்கும்?"
"ஏன்? திருடன் வந்தால் அவனைச் சுடுவதற்குத் தயாராக வைத்திருக்கலாம்."
"புது டில்லியில் திருடன் வந்தால் அவ்வளவு சுலபமாய் வந்து விடுவானா? வாசற் காவற்காரன் இருக்கிறானே?"
"காவற்காரன் இருந்தால் உன்னை எப்படி உள்ளே விட்டான்?"
"அவன் நன்றாய்த் தூங்கிக் கொண்டிருக்கிறான் நான் சத்தம் செய்யாமல் உள்ளே வந்துவிட்டேன்."
"ஆம்; இந்த ஊர் வேலைக்காரர்களே இப்படித்தான். ஓயாமல் தூங்கி விழுவார்கள்... பின்னே, கைத் துப்பாக்கி எதற்காக வைத்திருக்கிறேன் என்று நினைத்தாய்? என்னைச் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதற்காக என்று நினைத்தாயா?"
"அப்படியில்லையென்றால் மிக்க சந்தோஷமடைவேன். உன் முகத்தையும் கண்ணீர் ததும்பும் கண்களையும் பார்த்தால் அப்படித் தோன்றுகிறது. எனக்கு இவ்விடமிருந்து வந்த கடிதமும் அவ்விதம் எண்ணும்படி செய்தது."
"கடிதம் யார் எழுதியது."
"அதைப்பற்றி உனக்கு என்ன கவலை, சீதா! யாரோ எழுதினதாக வைத்துக் கொள்ளலாம்."
"கடிதத்தில் என்ன எழுதியிருந்தது? அதையாவது எனக்குச் சொல்லலாமா?"
"நீ மிகவும் மனக் கஷ்டத்துக்கு உள்ளாகியிருப்பதாக எழுதியிருந்தது. என்ன மனக் கஷ்டம் என்பதை நேரில் தெரிந்து கொள்ளலாம் என்றுதான் வந்தேன். உண்மையில் உனக்குக் கஷ்டம் ஒன்றுமில்லையா, அத்தங்கா! அப்படியானால், என் கவலை தீர்ந்தது. நான் உடனே திரும்பிப் போய் என்னுடைய வேலையைப் பார்ப்பேன்."
"சூரியா! உன்னிடம் உண்மையை மறைப்பதில் என்ன பயன்? உன்னுடைய உதவி எனக்குத் தேவையாயிருக்கிறது. அதனால்தான் 'நல்ல சமயத்தில் வந்தாய்' என்றேன். நான் சுட்டுக்கொண்டு சாகத் தயாராயிருந்தேன். சூரியா! ஆனால் சாவதற்கு முன்னால் என் ஆசைக் கண்மணிக்கு ஒரு கடிதம் எழுதி வைக்கவேண்டும் என்று நினைத்தேன். ஒன்றும் எழுதவே தோன்றவில்லை. உன்னிடம் சொன்னால் நீ நேரிலே போய்த் தெரிவித்து விடுவாயல்லவா? மதராஸுக்கு எப்போதாவது போகாமலா இருக்கப் போகிறாய்?" என்று சீதா பரிதாபம் நிறைந்த குரலில் கூறினாள்.
"அத்தங்கா! கொஞ்ச நாளைக்கு முன்பு நான் மதராஸுக்கும் தேவப்பட்டணத்துக்கும் போயிருந்தேன்."
"அப்படியா? மதராஸில் வஸந்தியைப் பார்த்தாயா!" என்று சீதா பரபரப்புடன் கேட்டாள்.
"பார்த்தேன், உன் மாமனார் மாமியாரையும் பார்த்தேன்!"
"வஸந்தி எப்படியிருக்கிறாள்? உன்னிடம் பேசினாளா?"
"உடம்பு நன்றாக இருக்கிறாள்; ஆனால் குழந்தையின் மனம் குன்றிப்போயிருக்கிறது; அப்பா அம்மாவைப் பார்ப்பதற்கு ஏங்கிப் போயிருக்கிறாள். அப்படிப்பட்ட குழந்தையை விட்டு விட்டுச் சுட்டுக் கொண்டு சாவதற்கு உனக்கு எப்படி மனம் வந்தது என்று நினைத்தால் எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது."
"இதிலிருந்தே என்னுடைய நிலைமையை நீ தெரிந்து கொள்ளலாமே, சூரியா! பெற்ற பெண்ணைத் தூரதேசத்துக்கு அனுப்பிவிட்டு அவளைப் பார்க்காமல் சாவதற்கு இலேசில் மனம் துணியுமா? அப்படிப்பட்ட நரக வேதனையை வாழ்க்கையில் நான் அனுபவித்துக் கொண்டிருகிறேன்."
"அத்தங்கா! நரக வேதனையும் சொர்க்க சுகமும் நாமே செய்து கொள்வதுதான். 'கடவுளுடைய ராஜ்யம் உனக்குள்ளே' என்பதை நீ கேட்டதில்லையா?"
"அந்த வேதாந்தமெல்லாம் என் விஷயத்தில் இனிமேல் உபயோகமில்லை, அம்மாஞ்சி! என்னுடைய நரகத்தை நானே சிருஷ்டி செய்து கொள்ளவும் இல்லை. நீங்கள் எல்லோரும் சேர்ந்துதான் என்னை இந்த நரகத்திலே தள்ளினீர்கள். இவரை நான் கலியாணம் செய்து கொண்டது பெரும் பிசகு, சூரியா! எங்கள் இருவருக்கும் கொஞ்சங்கூடப் பொருத்தமில்லை. இவர் யாராவது ஒரு வெள்ளைக்காரிச்சியையோ பார்ஸிக்காரியையோ கலியாணம் செய்துகொண்டிருக்க வேண்டும். உன்னுடைய சினேகிதி தாரிணி இருக்கிறாளே அவளைப்போல ஒருத்தியையாவது..."
"பிறரைப்பற்றி நாம் எதற்காகப் பேசவேண்டும் சீதா!"
"பேசாமல் என்ன செய்வது? என்னுடைய வழிக்கு அவர்கள் வராமலிருந்தால் நானும் பேசவேண்டியதில்லை. அந்தத் தாரிணியும் என் மாமியாரும் சேர்ந்து எனக்கு விஷம் கொடுத்துக் கொல்லப் பார்த்தார்கள், சூரியா? அதுவும் நான் படுத்த படுக்கையாய்க் கிடந்தபோது என் மாமியாரைப்பற்றி எவ்வளவோ மேலாக நான் எண்ணியிருந்தேன். அவள் எப்பேர்ப்பட்ட ராட்சஸி என்று கொஞ்ச நாளைக்கு முன்புதான் தெரிந்தது."
"உனக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா, சீதா! நீ சாகக் கிடந்தபோது அவர்கள் இருவரும் உனக்கு இரவு பகல் பணிவிடை செய்து உன்னைக் காப்பாற்றினார்கள். அவர்களைப் பற்றி இவ்வளவு கொடுமையாகப் பேசுகிறாயே!"
"அவர்கள் பணிவிடை செய்து என்னைக் காப்பாற்றியது உனக்கு எப்படித் தெரியும்? அவர்கள் சொல்லித்தானே தெரியும்? நான் அவ்வளவு அறிவற்றவள் அல்ல. ஒரு நாள் இரவு தாரிணியும் மாமியாரும் கூடிக்கூடி இரகசியம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு, டாக்டர் வழக்கமாகக் கொடுத்த மருந்தில் இன்னொரு வெள்ளைப் பவுடரை தாரிணி கலந்து கொடுத்தாள். நான் பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டு செய்தாள். எனக்கும் அப்போது உண்மை தெரியாது. மருந்தைச் சாப்பிட்டு விட்டேன். சற்று நேரத்துக்கெல்லாம் கண்ணைச் சுற்றிக்கொண்டு மயக்கமாய் வந்தது. கொடுத்த விஷம் போதவில்லை போலிருக்கிறது. காலையில் எப்படியோ பிழைத்து எழுந்தேன். அது முதல் ஜாக்கிரதையாகி விட்டேன். தாரிணி மருந்து கலந்து கொடுத்தால் அதைச் சாப்பிடுவதாக ஜாடை செய்து எச்சில் பாத்திரத்தில் கொட்டி விடுவேன். அப்போது இன்னும் என் மனதில் கொஞ்சம் சபலமிருந்தது. இப்போது அதுவும் போய்விட்டது. துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு நான் சாவது உனக்குப் பிடிக்காவிட்டால் தாரிணியைக் கேட்டு கொஞ்சம் விஷம் வாங்கிக்கொண்டு வந்து கொடு!"
"அத்தங்கா! உண்மையிலேயே உனக்குப் பைத்தியந்தான் பிடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இவ்வளவு படுபாதகமான வார்த்தையைச் சொல்லியிருக்கமாட்டாய். உனக்குச் சுரமாக இருக்கும் போது தூக்கமில்லாமல் கஷ்டப்படுகிறாயே என்பதற்காக அவர்கள் யோசித்துத் தூக்க மருந்தைக் கொடுத்திருப்பார்கள்.."
"ஆமாம்; ஒரேயடியாய்த் தூங்குவதற்குத் தான் மருந்து கொடுத்தார்கள். ஆனால் அதற்கு வேண்டிய அளவு கொடுக்கவில்லை ஆகையால் விழித்துக்கொண்டு விட்டேன்!"
"அப்படி உனக்கு சந்தேகமாயிருந்தால் உடனே உன் புருஷனிடம் சொல்லியிருக்கலாமே?"
"சொல்லியிருக்கலாம்; ஆனால் அவர் நம்பியிருக்க மாட்டார். உன் அருமை அத்தங்காளின் பேச்சை நீயே நம்பவில்லையே? திரும்பித் திரும்பிப் பேசிப் பயன் இல்லை. நான் அனாதை; திக்கற்றவள்! என் பேச்சை யாரும் நம்பப்போவதில்லை. நீ எதற்காக வந்தாய்? உன் காரியத்தைப் பார்த்துக் கொண்டு நீ போ!" என்று சீதா சொல்லிக் கலகலவென்று கண்ணீர் உதிர்த்தாள்.
"என் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போகிறதாயிருந்தால் நான் எவ்வளவோ முக்கியமான காரியங்களை விட்டுவிட்டு ஆயிரம் மைல் பிரயாணம் செய்து வந்திருக்க மாட்டேன்; என்னுடைய காரியத்தை மட்டுமல்ல; தேசத்தின் காரியத்தைக் கூட விட்டுவிட்டு வந்திருக்கிறேன். நீ எப்படியாவது சந்தோஷமாயிருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்கு என்ன வழி என்று சொல். உன் புருஷனிடம் உனக்கு என்ன குறை என்று சொன்னால், அவனையே கேட்டு விடுகிறேன். என் தலையை அவன் இறக்கிவிடமாட்டான். அவனிடம் எனக்குப் பயம் ஒன்றும் கிடையாது..."
"உனக்கு பயமில்லை; ஆனால் எனக்குப் பயமாயிருக்கிறது. அவரிடம் நீ பேசுவதினால் எனக்கு நல்லது ஒன்றும் விளையாது. உன் பேரில் வரும் கோபத்தை என் பேரில் வைத்துத் தாக்குவார். எனக்கு அவர் பேரில் என்ன குறை என்று கேட்கிறாய். என்னுடைய மனக்குறையைச் சொன்னால் உனக்குப் புரியவே புரியாது. பெண்ணாய்ப் பிறந்தவர்களுக்கே புரியவில்லை! உனக்கு எப்படிப் புரியும்? 'பார்ட்டிக்கு வா!' என்று சொல்லி அழைத்துப் போகிறார். அங்கே முப்பது ஸ்திரீகளுக்கு முன்னால் என்னை அவமானப்படுத்துகிறார். நான் எவ்விதமாக நடந்து கொண்டாலும் அது தப்பாகப் போய்விடுகிறது. நான் கலகலப்பாக நாலு பேரிடம் பேசிக்கொண்டிருந்தால் 'சுத்த அதிகப்பிரசங்கி! உன் அசட்டுத்தனத்தை எதற்காக இப்படிக் காட்டிக்கொள்கிறாய்? வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கக் கூடாதா? என் மானம் போகிறதே!' என்கிறார். இப்படி இவர் சொல்கிறாரே என்பதற்காகப் பேசாமலிருந்தால், 'ஏன் இப்படி ஏதோ பறிக்கொடுத்தவளைப் போல இருந்தாய்? நாலு பேரிடம் கலகலப்பாகப் பேசத் தெரியாத ஜன்மத்தைக் கலியாணம் செய்து கொண்டேனே?' என்கிறார். சிரிக்காவிட்டால் 'நகைச்சுவையை அறியாத நிர்மூடம்!' என்கிறார். துக்கம் தாங்காமல் மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தால், 'இங்கேயிருந்து ஏன் என் பிராணனை வாங்குகிறாய்? எங்கேயாவது தொலைந்து போ!' என்கிறார். 'தொலைந்து போ!' என்ற வார்த்தையைக் கேட்டுக் கேட்டு என் மனது புண்ணாகிவிட்டது! நான் எங்கே தொலைந்து போவேன்? எனக்குப் போக்கிடம் எங்கே இருக்கிறது? ஒரேயடியாக இந்த உலகத்திலிருந்து தொலைந்து போவதைத் தவிர வழி ஒன்றுமில்லை. அம்மாஞ்சி, அந்தத் துப்பாக்கியை கொடுத்து விட்டுப்போ!"
"அத்தங்கா! உயிரை விடுகிற பேச்சை மறந்து விடு! அப்படி நீ அனாதையாகப் போய்விடவில்லை. நான் ஒருவன் இருக்கும் வரையில் உன்னை 'அனாதை'யாக விட்டுவிடமாட்டேன். எப்பேர்ப்பட்ட கஷ்டமாயிருந்தாலும் அதற்குப் பரிகாரம் ஏதாவது இல்லாமற் போகாது. கொஞ்ச நாள் நீ பொறுத்துக் கொண்டிரு! நான் யோசித்து ஏதாவது ஒரு பரிகாரம் கண்டுபிடிக்கிறேன்."
"ஒரு நாள் கூட என்னால் இனிமேல் பொறுக்க முடியாது. நான் உயிரோடு இருக்க வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது ஆனால் அந்த வழி உனக்குச் சம்மதமாயிராது."
"அது என்ன வழி என்று சொல்! என்னால் முடியுமா என்று பார்க்கிறேன்."
"என்னை இங்கிருந்து அழைத்துக் கொண்டு போ! இந்த டில்லி நகரம் எனக்கு நரகமாகிவிட்டது; இந்த நரகத்திலிருந்து என்னை அழைத்துக் கொண்டு போ! இந்த வீடு எனக்கு சிறைச்சாலையாகி விட்டது; இந்தச் சிறையிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு போ! நீ பார்த்து என்னை எங்கே அழைத்துப் போனாலும் நான் வருகிறேன், பம்பாய்க்கு, கல்கத்தாவுக்கு, லாகூருக்கு, இலங்கைக்கு, லண்டனுக்கு, அமெரிக்காவுக்கு - எங்கே வேணுமானாலும் உன்னோடு புறப்பட்டு வரத் தயாராயிருக்கிறேன்...!"
"அத்தங்கா! அப்படி ஒரு காலம் வந்தால், அதற்கு அவசியம் ஏற்பட்டால், அங்கேயெல்லாம் உன்னை அழைத்துப் போகிறேன். ஆனால் அதற்கு இப்போது சமயம் அல்ல. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் நான் ஈடுபட்டிருக்கிறேன். 'இந்தியா சுதந்திரம் அடையும் வரையில் வேறு காரியத்தில் பிரவேசிப்பதில்லை' என்று பல நண்பர்களின் மத்தியில் சபதம் செய்திருக்கிறேன். இந்தியா சுதந்திரம் அடையட்டும்! அதற்குப் பிறகு..."
"சூரியா! இந்தியாவின் சுதந்திரப் போரில் ஸ்திரீகளுக்குப் பங்கு எதுவும் இல்லையா? தாரிணி செய்து புரட்டுகிறதை நான் செய்து புரட்டமாட்டேனா? நான் ஒன்றுக்கும் லாயக்கற்றவள் என்று இவரைப்போல் நீயும் நினைக்கிறாயா? நீ மட்டும் என்னை அழைத்துக் கொண்டு போ! நான் எப்பேர்ப்பட்ட காரியம் எல்லாம் செய்கிறேன் என்று பார்! 'சுதந்திரம்', 'சுதந்திரம்' என்று சொல்லிக் கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? சந்திலும் பொந்திலும் ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள். வேஷம் போட்டுக் கொண்டு ஊரையும் பேரையும் மாற்றி வைத்துக் கொண்டு இராத்திரி வேளை பார்த்து அங்குமிங்கும் அலைகிறீர்கள். என்னை மட்டும் நீ அழைத்துக் கொண்டு போ! ஜான்ஸி ராணியைப்போல் கையில் வாள் பிடித்துக் குதிரை மீதேறி யுத்தகளத்துக்குச் சென்று யுத்தம் செய்கிறேன். தேசமெல்லாம் திரிந்து சுதந்திரப் போருக்கு ஆயிரம் பதினாயிரம் வீரர்களைத் திரட்டுகிறேன்; கோழைகளை வீரர்களாக்குகிறேன். பிரான்ஸ் தேசத்து ஜோன் ஆப் ஆர்க் என்னும் வீரப் பெண்மணியைப் போல் இந்தியாவின் சுதந்திரத்தை நான் நிலைநாட்டுகிறேனா இல்லையா, பார்!"
"சீதா! ஜான்ஸி ராணியைப் போலும் ஜோன் ஆப் ஆர்க்கைப் போலும் சுதந்திரப் போர் செய்யும் காலம் இது அல்ல. ஆகாசவிமானத்திலிருந்து குண்டு போட்டு ஆயிரம் பதினாயிரம் ஜனங்களைக் கொல்லும் காலம் இது. இங்கிலீஷ் சர்க்காரோடு பகிரங்கமாகச் சண்டை போட்டுச் சுதந்திரத்தை நிலைநாட்ட முடியாது. இந்தத் தேசத்தில் இப்போது பகிரங்கமாக ஒரு பொதுக் கூட்டம் கூட்ட முடியாது. 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்று கோஷிக்க முடியாது. எப்படிப் படை திரட்டுவது? யுத்தகளத்துக்கு போவது? காலத்துக்குத் தகுந்த முறையை அனுசரிக்க வேண்டும்."
"அப்படியானால் ஒன்று செய்! என்னை அழைத்துக் கொண்டு போய்க் காந்தி மகாத்மாவின் ஆசிரமத்தில் விட்டு விடு! அங்கே என்னைப்போல் கஷ்டப்பட்டவர்களும் அனாதைகளும் பலர் இருப்பதாக அறிகிறேன். சீமையிலிருந்து வந்த வெள்ளைக்காரி கூட ஒருத்தி இருக்கிறாளாம்! முஸ்லீம் பெண் ஒருத்தி இருக்கிறாளாம்! அவர்களைப்போல் நானும் மகாத்மா இட்ட கட்டளையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு என்னை வந்து அழைத்துக் கொண்டு போ!"
"அத்தங்கா! மகாத்மா சிறையில் இருக்கிறார். அவருடைய ஆசிரமத்தில் இப்போது யார் இருக்கிறார்களோ தெரியாது. புதியதாக யாரையும் ஆசிரமத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்."
"அப்படியானால் ஒன்று செய், சூரியா! என்னை எங்கேயாவது ஒரு நல்ல சினிமாக் கம்பெனியில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடு! சினிமாவில் நான் எப்படி நடித்துப் பெயர் வாங்குகிறேன், பார்! எத்தனையோ தமிழ் சினிமாவும், ஹிந்தி சினிமாவும் பார்த்திருக்கிறேன். ஒன்றிலாவது சோகமான கட்டங்களில் நடிக்க யாருக்கும் தெரியவில்லை. சினிமாவில் நடிக்க எனக்கு ஒரு சான்ஸ் கிடைத்தால் சோக நடிப்பில் இணையற்ற நட்சத்திரம் என்று பெயர் வாங்கி விடுவேன்! என்ன சொல்கிறாய், சூரியா!"
சூரியா எதுவும் சொல்ல முடியாமல் திகைத்துப் போயிருந்தான். ஜான்ஸிராணி எங்கே, மகாத்மாவின் ஆசிரமம் எங்கே, சினிமா நட்சத்திரம் எங்கே! சேர்ந்தாற்போல் இந்த மூன்று காரியங்களிலும் ஆசை செலுத்தும் தன் அத்தங்காளின் மனோநிலை அவனுக்கு அளவில்லா வியப்பை அளித்தது. சீதாவுக்கு உண்மையிலேயே கொஞ்சம் சித்தப்பிரமை ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தான். ஆகையால் இன்றைக்கு ஏதாவது சமாதானமாகச் சொல்லிவிட்டு போகலாமென்றும், நாளைக்கு தாரிணியைக் கேட்டுக் கொண்டு தீர்மானிக்கலாம் என்று முடிவு செய்தான்.
"அத்தங்கா, எனக்குச் சினிமா விஷயம் ஒன்றும் தெரியாது; சினிமாக்காரர்களையும் தெரியாது. ஆகையால் நீ கடைசியாகச் சொன்னதும் முடியாத காரியம். ஆனால் சில நாளைக்கு நீ வேறு எங்கேயாவது போயிருக்க வேண்டும் என்றால், அதற்கு இடமில்லாமற் போகவில்லை. ராஜம்பேட்டையில் நீ போய் இருக்கலாம் என்று சொல்வேன். என் அம்மா சமாசாரம் எனக்குத் தெரியும். உன்னை அவளுக்குப் பிடிக்காது; ஆகையால் ராஜம்பேட்டையை நான் சொல்லவில்லை. தேவபட்டிணத்தில் லலிதா இருக்கிறாள், அல்லவா? உன்னை நினைத்து நினைத்து அவள் உருகிப் போகிறாள். இந்த உலகத்தில் லலிதாவைப்போல் உன்னிடம் அன்பு கொண்டவர்கள் யாருமே இருக்க முடியாது. நீ சந்தோஷமாயில்லை என்று தெரிந்து அவள் படுகிற வருத்தத்தைச் சொல்லி முடியாது. லலிதாவின் புருஷன் இப்போது சிறையில் இருக்கிறான். அவனும் என் அத்தியந்த சிநேகிதன் என்பது உனக்குத் தெரியுமே. லலிதாவின் மாமனார் ரொம்ப நல்ல மனுஷர். நீ தாராளமாகத் தேவபட்டிணத்துக்குப் போய்ச் சில மாதம் இருக்கலாம். உன் குழந்தையையும் அங்கே வரவழைத்துக் கொள்ளலாம்" என்று கூறினான்.
"லலிதா என்னிடம் எவ்வளவு அன்பு கொண்டவள் என்பது எனக்குத் தெரியாதா, சூரியா! அவள் சந்தோஷமாயிருக்கிறாள் என்பதை நினைத்தால் எனக்கும் சந்தோஷமாயிருக்கிறது. லலிதாவுக்குத் துரோகம் செய்து இவரை நான் கலியாணம் செய்து கொண்டதாக ஒரு காலத்தில் வருத்தப்பட்டேன். ஆனால் இப்போது அவளுக்குப் பெரிய நன்மை செய்ததாக அறிந்து சந்தோஷப்படுகிறேன். இவரை அவள் கலியாணம் செய்து கொண்டிருந்தால் இப்போது நான் படுகிற கஷ்டத்தையெல்லாம் அவள் பட்டிருக்க வேண்டும் அல்லவா? ஆனால் லலிதா வீட்டில் போய் நான் இருக்க மாட்டேன். என்னுடைய எண்ணம் என்னவென்பதை இன்னமும் நீ அறிந்து கொள்ளவில்லை. நான் எங்கே போனேன் என்ன ஆனேன் என்பது இவருக்குத் தெரியக் கூடாது. தேவபட்டணத்துக்குப் போனால் இரண்டு நாளில் இவருக்குத் தெரிந்து போய்விடுகிறது. அதில் என்ன பிரயோஜனம்? இவர் என்னைத் தேடி அலையும்படியாகவும், கவலைப்படும்படியாகவும் எங்கேயாவது தூரதேசத்துக்கு, சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு நான் போக விரும்புகிறேன். அப்படிப்பட்ட இடத்துக்கு என்னை நீ அழைத்துக் கொண்டு பேவதாக இருந்தால் சொல்லு! இல்லாவிட்டால் உன் காரியத்தைப் பார்த்துக் கொண்டு போ!"
"அந்த மாதிரி நாம் இருவரும் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டுப் போனால் உன் புருஷனும் சரி, மற்றவர்களும் சரி, என்ன நினைத்துக் கொள்வார்கள்? ஏதாவது தப்பாக எண்ணிக் கொள்ள மாட்டார்களா? வீண் சந்தேகத்திற்கு இடமாயிராதா? இதைப்பற்றி நீ யோசித்துப் பார்த்தாயா?" என்றான் சூரியா.
"தப்பாக எண்ணிக் கொண்டால் எண்ணிக் கொள்ளட்டும்; சந்தேகப்பட்டால் படட்டும். எனக்கு அதைப்பற்றி அக்கறையில்லை. மூன்று மாதத்திற்கு முன்னால் இவர் என்ன செய்தார் தெரியுமா? யாரோ ஒரு பெண்ணுடன் காரில் ஏறிக் கொண்டார். பானிபெட்டுக்குச் சமீபத்தில் இவருடைய காரும் ஒரு மிலிடெரி லாரியும் மோதிக்கொண்டன. இவருக்குக் காயம் ஒன்றுமில்லை; ஆனால் அந்தப் பெண்ணுக்குக் காயம். இந்த விஷயம் புது டில்லியெல்லாம் சிரிப்பாய் சிரித்தது. அதற்காக அவரை யார் என்ன செய்துவிட்டார்கள்? புருஷர்கள் மட்டும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று எந்தச் சட்டத்தில் சொல்லியிருக்கிறது?"
"அத்தங்கா! அந்த மாதிரிச் சட்டம் ஒன்றும் கிடையாது. தப்பான காரியத்தைப் புருஷன் செய்தாலும் பிசகு தான்; பெண் செய்தாலும் பிசகு தான். ஆகையினால் தான் நீ சொல்வதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது; அதைச் சொல்லுகிறேன், கேள். தேவபட்டணத்தில் எனக்கு இரண்டு சிநேகிதர்கள் உண்டு என்று உனக்குத் தெரியும் அல்லவா? ஒருவன் தான் லலிதாவின் கணவன் பட்டாபிராமன். இன்னொருவன் பட்டாபிராமன் வீட்டுக்கு எதிர்வீட்டு அமரநாதன். அவனும் அவனுடைய மனைவி சித்ராவும் கல்கத்தாவில் இருக்கிறார்கள். நான் தேவபட்டணம் போயிருந்தபோது அவர்களும் தற்செயலாக வந்திருந்தார்கள். அமரநாதனும் அவன் மனைவியும் ரொம்ப நல்லவர்கள். சித்ராவுக்கு உன்னைப்பற்றி லலிதா எல்லாம் சொல்லியிருக்கிறாள். என்னுடைய யோசனை என்ன தெரியுமா? உன்னைப் பக்கத்து ஸ்டேஷன் எதற்காவது அழைத்துப் போய் ரயில் ஏற்றி விட்டு விடுகிறேன். நீ கல்கத்தாவுக்கு போய், அமரநாத் - சித்ரா வீட்டில் சில காலம் நிம்மதியாக இரு. இதற்குள் உன் புருஷன் இங்கே என்ன செய்கிறான் என்பதை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அவசியம் ஏற்பட்டால் நீ போயிருக்கிற இடத்தைச் சொல்லுகிறேன்."
"அதுதான் கூடாது; அவருக்குத் தெரியவே கூடாது! எனக்கு இஷ்டமானபோது தெரிவித்துக் கொள்வேன் சூரியா. நான் கல்கத்தாவுக்குப் போகத் தயார். ஆனால் இன்றைக்கோ நாளைக்கோ என்னை நீயே அழைத்துப் போகவேண்டும். இங்கே நாளைக்குப் பிறகு என்னால் இருக்க முடியாது. தனியாகப் போகவும் முடியாது. ஒருவேளை நீ என்னை அழைத்துப் போவது உன்னுடைய சிநேகிதி தாரிணிக்குப் பிடிக்காமலிருக்கலாம். அவளிடம் உனக்குப் பயமாயிருந்தால் அதையும் இப்போதே சொல்லிவிடு!"
"சீதா! என்னென்னமோ விசித்திரமான எண்ணங்கள் உன் மனதில் குடிகொண்டிருக்கின்றன. எனக்கு யாரிடத்திலும் பயம் கிடையாது. நாம் செய்கிற காரியம் நமக்கே சரியாயிருக்க வேண்டுமல்லவா? ஆகையால் கொஞ்சம் யோசிப்பதற்கு அவகாசம் கொடு!" என்றான் சூரியா.
"பேஷாக யோசித்துச் சொல்! செய்கிற யோசனையை இங்கேயே செய்துவிடு! இத்தனை நாள் கழித்து அம்மாஞ்சி வந்திருக்கிறாய்; தாகத்திற்குத் தண்ணீர் வேண்டுமா என்று கூட நான் கேட்கவில்லை. இதோ உள்ளே போய்க் கொஞ்சம் ஓவல்டின் கலந்து கொண்டு வருகிறேன். அது வரையில் யோசனை செய்து கொண்டிரு!" என்று சொல்லிவிட்டுச் சீதா சமையலறைக்குள் போனாள்.
சூரியாவின் உள்ளம் பெரும் கலக்கத்தில் ஆழ்ந்தது. 'இது என்ன! இவ்வளவு பயங்கரமான பொறுப்பை நாம் ஏற்றுக் கொண்டு விட்டோ மே! இது சரியாக முடியுமா? அல்லது கேடாக முடியுமா?' என்று அவன் மனம் தத்தளித்தது. இந்த நெருக்கடியிலிருந்து எப்படியாவது தப்பித்துக்கொள்ள முடியுமா என்று யோசித்தான். இந்தச் சமயத்தில் டெலிபோன் மணி அடித்தது.
வேறு சிந்தனையில் ஆழ்ந்திருந்த சூரியாவின் மனதில் இரவு பன்னிரண்டு மணிக்கு மேலே யார் டெலிபோனில் பேசுவார் என்ற யோசனை கூடத் தோன்றவில்லை. ரிஸீவரை கையில் எடுத்துக்கொண்டு, "ஹலோ! யார் அது!" என்று கேட்டான்.
டெலிபோன் மணிச் சத்தத்தைக் கேட்டுவிட்டுச் சீதா சமையல் அறை உள்ளேயிருந்து பரபரப்புடன் வந்தாள். சூரியா ரிஸீவரைக் கையில் எடுத்துப் பேசுவதைப் பார்த்ததும் அவள் முகத்தில் பீதியின் அறிகுறி தோன்றியது.
ரஜினிபூர் மாஜி திவான் ஆதிவராகாச்சாரியார் புதுடில்லியில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார். சுதேச சமஸ்தான மன்னர்களுக்குச் சட்ட சம்பந்தமான யோசனை சொல்லும் உத்தியோகம் அவருக்குக் கிடைத்திருந்தது. இந்த உத்தியோகத்தில் வேலை கொஞ்சம்; வருமானமும் செல்வாக்கும் அதிகம். எனினும் அவருடைய புதல்விகள் தாமாவுக்கும் பாமாவுக்கும் மட்டும் இன்னும் கலியாணம் ஆனபாடில்லை. புதுடில்லி சமூக வாழ்க்கையில் அவர்கள் மிக்க பிரபலம் அடைந்திருந்தார்கள். வைஸ்ராய் மாளிகையிலும் மற்றும் சுதேச மன்னர்களும் பெரிய உத்தியோகஸ்தர்களும் கொடுக்கும் பார்ட்டிகளிலும் தாமா பாமா சகோதரிகளைத் தவறாமல் காணலாம்.
இன்றைக்கும் அவர்கள் தந்தையுடன் ஒரு பார்ட்டிக்குப் போய்விட்டு இரவு பதினோரு மணிக்கு வீட்டுக்குத் திரும்பி வந்தார்கள். அதே பார்ட்டிக்குச் சென்றிருந்த சௌந்தரராகவனும் அவர்களுடன் வந்தான். அவர்கள் நாலு பேரும் சீட்டு விளையாடத் தொடங்கினார்கள்.
ஆட்டம் சிறிது நகர்ந்ததும் பாமா, "மிஸ்டர் ராகவன்! உங்கள் மனைவியை ஏன் பார்ட்டிக்கு அழைத்து வரவில்லை? இன்னும் உடம்பு சரியாகவில்லையா?" என்று கேட்டாள்.
"உடம்பு ஒரு மாதிரி சரியாகிவிட்டது. ஆனால் சுரம் அடித்துக் கிடந்ததிலிருந்து அவளுடைய மனது பேதலித்துப் போயிருக்கிறது. வீட்டுக்குப் போனால் ஓயாத புகாரும் ஒழியாத அழுகையுந்தான்!" என்றான் ராகவன்.
"அவ்வளவு கடுமையாகச் சுரம் அடித்துக் கிடந்தவளுக்கு நீங்கள் கொஞ்ச நாள் இடமாறுதல் கொடுக்க வேண்டும். இங்கேயே வைத்துக் கொண்டிருப்பது தவறு!" என்றாள் தாமா.
"அது எனக்கு தெரியாமலா இருக்கிறது? ஆனமட்டும் நான் சொல்லிப் பார்த்தாகி விட்டது. மதராஸுக்குப் போய் என் அம்மாவுடன் சில நாள் இருந்துவிட்டு அவளுடைய பந்துக்களையும் பார்த்துவிட்டு வரும்படி எத்தனையோ தடவை சொல்லியாகி விட்டது. அவள் சம்மதம் கொடுத்தால்தானே? என் பாடு ரொம்பவும் சங்கடமாயிருக்கிறது. ஆபீஸுக்குப் போனால் அங்கே ஒருவிதக் கஷ்டம்; வீட்டுக்குப் போனால் இன்னொருவிதக் கஷ்டம். என்ன செய்கிறதென்று தெரியவில்லை. ஒரு சமயம் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகலாமா என்று தோன்றுகிறது. இங்கே எப்போதாவது வந்து உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேனே இம்மாதிரி சந்தர்ப்பங்களிலேதான் கொஞ்சம் மன நிம்மதி ஏற்படுகிறது."
"வீட்டிலே உள்ள கஷ்டம் சரி; ஆபீஸில் உங்களுக்கு என்ன கஷ்டம்?" என்று தாமா கேட்டாள்.
"உங்கள் தகப்பனாரைக் கேட்டுப் பாருங்கள், சொல்லுவார். திவான் சாகிப்! நான் முஸ்லிம் ஆகிவிடலாம் என்று யோசிக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்றான் ராகவன்.
ஆதிவராகாச்சாரியார் அதற்குப் பதில் ஒன்றும் சொல்லாமல் சீட்டைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
"இது என்ன கூத்து? நீர் எதற்காக முஸ்லிம் ஆக வேண்டும்?" என்று பாமா ஆச்சரியம் ததும்பக் கேட்டாள்.
"இப்போதெல்லாம் முஸ்லிமாயிருந்தால்தான் கவர்ன்மெண்ட் உத்தியோகத்தில் பிரமோஷன் கிடைக்கிறது. எனக்கு நாலு வருஷத்துக்குப் பிறகு உத்தியோகத்தில் சேர்ந்தவனை எனக்கு மேலே தூக்கிப் போட்டிருக்கிறார்கள். போன வருஷம் எனக்குக் கீழே வேலை பார்த்தவனுக்கெல்லாம் 'எஸ் ஸார்!' சொல்ல வேண்டியிருக்கிறது. அப்படியாவது அவன் மகா மேதாவியா? மூளை உள்ளவனா? ஒன்றும் இல்லை. 'மகா மூடன்' என்ற பட்டத்துக்கு மிகவும் தகுதியுள்ளவன். அவன் கீழே நான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இந்த அவமானத்தை என்னால் பொறுக்க முடியவில்லை. திவான் சாகிப்! எனக்கு ஒரு யோசனை சொல்லுங்கள். நான் இஸ்லாம் மதத்தில் சேர்ந்து விடட்டுமா? அல்லது இந்த உத்தியோகத்தை ராஜினாமா செய்து விடட்டுமா?" என்று ராகவன் கேட்டான்.
"இரண்டும் வேண்டாம்; கொஞ்ச நாள் பொறுத்துக் கொண்டிரும்!" என்று ஆதிவராகாச்சாரியார் முதல் முறையாகத் திருவாய் மலர்ந்தார்.
"பொறுத்துக் கொண்டிருந்தால் என்ன ஆகிவிடும்? இந்த நிலைமையில் மாறுதல் ஏதாவது ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?"
"ஏற்படலாம் என்றுதான் நினைக்கிறேன். இந்த காங்கிரஸ் தலைவர்களுக்குக் கொஞ்சம் புத்தி வந்தால் நிலைமை கட்டாயம் மாறிவிடும். இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ்காரர்களின் தவறு தான். யுத்தத்தில் ஒத்துழைப்பதாகச் சொல்லிக் கொண்டு ஜில்லா உத்தியோகங்களையும் கைப்பற்ற வேண்டிய சமயத்தில் சிறைக்குள் போய் உட்கார்ந்திருக்கிறார்கள். இந்த யுத்த சமயத்தில் காங்கிரஸ்காரர்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால் வைஸ்ராய் நிர்வாக சபையின் பாதிக்கு மேற்பட்ட ஸ்தானங்கள் கிடைத்திருக்கும். காங்கிரஸ்காரர்கள் செய்யும் தவறு முஸ்லிம் லீகர்களுக்குச் சௌகரியமாய்ப் போயிருக்கிறது. முக்கியமான உத்தியோகங்களில் எல்லாம் முஸ்லிம்கள் வந்து நன்றாக உட்கார்ந்து கொள்கிறார்கள்..."
"காங்கிரஸ்காரர்கள் வந்துவிட்டால்தான் என்ன நடந்து விடும் என்று நினைக்கிறீர்கள், திவான் சாகிப்! அவர்களும் முஸ்லிம்களுக்குத் தான் சலுகை கொடுப்பார்கள். 'சிறுபான்மையோருக்கும் நியாயம்' வழங்குவதாகச் சொல்லிக் கொண்டு பெரும்பான்மையோர் தலையில் மண்ணை வாரிப்போடுவார்கள்! எனக்கு என்னமோ ஹிந்து மகாசபையின் கொள்கைகள் தான் பிடித்திருக்கிறது. இங்கிலீஷ்காரர்களோடு சண்டை போடுவது கூட அவ்வளவு முக்கியமில்லை. முதலில் முஸ்லீம்களை ஒழித்துக் கட்டவேண்டும். எட்டுக் கோடி முஸ்லீம்களை இந்தியாவில் வைத்துக்கொண்டு சுயராஜ்யம் வந்துதான் என்ன பிரயோஜனம்?"
"என்ன மிஸ்டர் ராகவன்! சற்று முன்னால் முஸ்லிம் ஆகிவிடப் போவதாகச் சொன்னீர்; இப்போது முஸ்லிம்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிறீரே?" என்று பாமா கேட்டாள்.
"பின்னே என்ன செய்கிறது? ஒன்று முஸ்லிம்களைத் தொலைத்துத் தலை முழுக வேண்டும்; அது முடியாவிட்டால் எல்லோரும் முஸ்லிம் ஆகிவிடுவதே நல்லது. அப்போது உத்தியோகங்களில் இந்தப் பாரபட்சம் காட்ட முடியாதல்லவா? எங்கேயாவது சுதேச சமஸ்தானத்தில் ஒரு உத்தியோகம் வாங்கிக் கொடுங்கள் என்று உங்கள் தகப்பனாரைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அவர் கவனிக்கிற வழியாயில்லை. திவான் சாகிப் சொன்னால் உடனே இந்த தரித்திரம் பிடித்த உத்தியோகத்தை ராஜினாமாச் செய்யத் தயாராயிருக்கிறேன்."
"அப்பா! ராகவனுடைய கோரிக்கையை நீங்கள் கொஞ்சம் கவனிக்கிறதுதானே?" என்றாள் பாமா.
"எல்லாம் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன். ஆனால் ராகவன் ராஜினாமா செய்து விடக் கூடாது. ஒரு வேலையில் இருக்கும் போதே இன்னொரு வேலை கிடைத்தால் தான் கிடைத்தது; விட்டுவிட்டால் கிடைக்காது!" என்றார் மாஜி திவான்.
"இப்படித் தான் வெகு காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள், ஆனாலும் இன்னும் கொஞ்ச நாள் பார்க்கிறேன்" என்றான் ராகவன்.
"அது கிடக்கட்டும், ராகவன்! நீர் முஸ்லிம் அல்ல - ஹிந்து என்பது ஒன்றைத் தவிர உத்தியோகத்தில் பிரமோஷன் கிடைக்காததற்கு வேறு காரணம் எதுவும் இல்லையா?" என்று தாமா கேட்டாள்.
"மதராஸி என்ற காரணமும் இருக்கத் தான் இருக்கிறது. என்னுடைய துரை வரவு செலவு மந்திரியாயிருந்த காலத்தில் முக்கியமான வேலைகளுக்கெல்லாம் மதராஸியைத் தேடிப் பொறுக்கிப் போடுவார். இப்போது மதராஸி என்றால் புது டில்லியில் வேப்பங்காயாக இருக்கிறது. இவர்களுக்கு முதலாவதாக யாராவது முகம்மதியர் வேண்டும். முகம்மதியர் இல்லாவிட்டால் மதியில்லாத மகாமூடனாயிருக்க வேண்டும். ஆனால் மதராஸி மட்டும் உதவாது. இந்தியாவைத் தற்சமயம் ஆளும் முகமது துக்ளக்குகள், அறிவுக்கு அமித லாப வரி போட்டாலும் போடுவார்கள்!"
இப்போது ஆதிவராகாச்சாரியார் சம்பாஷணையில் மீண்டும் கலந்துகொண்டு, "பாமா அதைச் சொல்லவில்லை ராகவன்! உம் பேரில் இன்னொரு புகார் இருப்பதாக ஊரெல்லாம் பிரஸ்தாபமாயிருக்கிறதே? உமக்குத் தெரியாதா?" என்று கேட்டார்.
"தெரியாதே! அது என்ன புகார்?" என்றான் சௌந்தரராகவன்.
"புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஒரு மாதம் நீர் உம்முடைய வீட்டில் ஒளித்து வைத்திருந்தீராமே? அது உண்மையா?"
"தாரிணியைப் பற்றிச் சொல்கிறீர்களாக்கும். அவள் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவள் என்பது கட்டுக்கதை. அவளை நான் என் வீட்டில் ஒளித்து வைத்திருக்கவும் இல்லை. சீதாவுக்கு உடம்பு ரொம்ப மோசமாயிருந்தபோது, கிட்ட இருந்து பணிவிடை செய்து அவள் உயிரைக் காப்பாற்றினாள். தாரிணி எவ்வளவு சாது! எவ்வளவு புத்திசாலி! என்பதுதான் உங்கள் புதல்விகளுக்குத் தெரியுமே?" என்றான் ராகவன்.
"சாதுவாயும் புத்திசாலியாயும் இருக்கலாம். அதனால் புரட்சிக்காரியாயிருக்கக் கூடாது என்று ஏற்படாது?" என்றாள் பாமா.
"அப்படியே வைத்துக்கொண்டாலும் அதற்கு நான் எப்படி பொறுப்பாளி? அவள் புரட்சிக்காரி என்பது எனக்கு எப்படித் தெரியும்? அது போகட்டும் இந்தப் புதுடில்லியில் அசல் புரட்சி இயக்கத் தலைவர்கள் எவ்வளவு பெரிய உத்தியோகஸ்தர்களின் வீடுகளில் மறைந்திருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? கருணாவதிதேவி எங்கே ஒளிந்திருந்தாள்? சந்த்ரகாந்த் ஸின்னா யார் வீட்டில் மூன்று மாதம் ஒளிந்திருந்தான்? அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களை என்ன செய்து விட்டார்கள்? என் பேரில் மட்டும் புகார் சொல்லுவானேன்?"
"அவர்கள் எல்லோரும் ரொம்பப் பெரிய பதவிகளில் உள்ளவர்கள். ஆகையால் யாரும் புகார் செய்யத் துணியமாட்டார்கள். உம்முடைய விஷயம் அப்படியில்லையே, ராகவன்! நீ உத்தியோகத்தில் பிரமோஷனை எதிர்பார்க்கிறவராயிற்றே!"
"அதுமட்டுமல்ல, அப்பா! இவர் ஒரு புரட்சிக்காரியை ஒளித்து வைத்திருந்தார் என்று புகார். இவருடைய மனைவி சீதா ஒரு புரட்சிக்காரனுக்கு உதவி செய்வதாகப் புகார். இந்த ஊரிலிருந்து சென்னை மாகாணத்திற்குப் போன ஒரு கடிதத்தில் இவர் மனைவி சீதாவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்ததாம். அந்தக் கடிதம் சூரியா என்பவருக்கு எழுதப்பட்டதாம். நேற்று ஒரு பார்ட்டியில் ஒரு சி.ஐ.டி. உத்தியோகஸ்தர் என்னிடம் சீதாவையும் சூரியாவையும் பற்றி விசாரித்தார். அவர்களுக்குள் ஏதாவது உறவு உண்டா?" என்று பாமாதேவி கேட்டாள்.
"உறவு உண்டு, அவர்கள் அத்தங்காவும் அம்மாஞ்சியும் ஆகவேண்டும்" என்றான் ராகவன்.
"அப்படியானால் சரிதான்! அந்தப் போலீஸ் உத்தியோகஸ்தர் கொஞ்சம் விரஸமாகக் கூடப் பேசினார்...."
"அது என்ன?" என்று ராகவன் பரபரப்புடன் கேட்டான்.
"அவர்கள் இரண்டு பேரும் 'லவர்ஸ்' (காதலர்கள்) என்பதாக ஏதேனும் வதந்தி உண்டா என்று கேட்டார். எனக்குச் சீதாவை நன்றாகத் தெரியுமாதலால் 'அதெல்லாம் சுத்தப் பொய்; அவதூறு' என்று சொல்லி, அந்த சி.ஐ.டி.காரர் தமது வார்த்தையை வாபஸ் வாங்கிக் கொள்ளும்படி செய்தேன்."
"நீங்கள் செய்தது ரொம்ப சரி. ஆனாலும் அந்தச் சூரியா ஒரு காலிப் பயல் என்பது உண்மை. கொஞ்ச நாளைக்கு முன்பு சந்நியாசி வேஷம் போட்டுக்கொண்டு மதராஸில் என் தாயார் வீடு சென்று பார்த்தானாம். என்னென்னமோ அனாவசியமான கேள்வியெல்லாம் கேட்டானாம். அவன் மறுபடியும் என் கண்ணில் தென்பட்டால் போலீசாரிடம் ஒப்படைத்து விட்டு மறுகாரியம் பார்ப்பேன். அவன் பேரில் ஏதாவது அரெஸ்ட் வாரண்ட் இருக்கிறதா, உங்களுக்குத் தெரியுமா?"
"தெரியாமல் என்ன? மதராஸ், பம்பாய், மத்திய மாகாணம் ஆக மூன்று மாகாணங்களில் அவன் பேரில் வாரண்ட் இருக்கிறதாம்!"
"நல்ல காரியம்! சூரியாவைப் போன்றவர்களைச் சிறையிலே தள்ளினால் தேசத்துக்கே க்ஷேமம். சுதந்திர இயக்கம் தூய்மை அடையும்!" என்று ராகவன் சொல்லிக்கொண்டே டெலிபோன் அருகில் சென்றான்.
"இந்த நேரத்தில் யாருடன் டெலிபோன் பேசப் போகிறீர்கள்?" என்று பாமா கேட்டாள்.
"வீட்டில் என் மனைவி தூங்கிவிட்டாளா என்று தெரிந்து கொண்டு தான் நான் செல்வது வழக்கம். அவள் விழித்துக் கொண்டிருக்கும்போது சென்றால் தேள் கொட்டுவதுபோல் கொட்டி விடுவாள். இராத்திரியெல்லாம் இரண்டு பேருக்கும் சிவராத்திரிதான்!" என்றான் ராகவன்.
"ஐயோ! பாவம்! உங்களுடைய நிலைமை பரிதபிக்கத்தக்கது தான்" என்று சொன்னாள் பாமா.
சௌந்தரராகவன் டெலிபோனில் தன்னுடைய வீட்டு நம்பரைக் கூப்பிட்டான். அதற்குப் பதில் உடனே வந்தது. டெலிபோனில் பேசிய குரலைக் கேட்டதும் ராகவனுடைய முகத்தில் ஆச்சரியமும் ஆத்திரமும் பொங்கி கோரத்தாண்டவம் புரிந்தன.
டெலிபோனில் ராகவனுடைய குரலைக் கேட்ட அதே சமயத்தில் சீதாவின் முகத்தையும் சூரியா பார்த்தான். ஏதாவது தவறு நேர்ந்து விட்டதோ என்ற எண்ணத்தில் அவன் உள்ளம் குழம்பிற்று. ராகவன், "யார்? சூரியாவா?" எப்போது வந்தாய்!" என்று கேட்டதற்கு, "இன்றைக்குத் தான்!" என்று பதில் அளித்தான்.
"ஓகோ! நான் வருகிற வரையில் இருப்பாயல்லவா?" என்று ராகவன் கேட்டான். "ஆகா! இருக்கிறேன்!" என்றான் சூரியா. பிறகு, "அத்தங்கா! மாப்பிள்ளை பேசுகிறார்!" என்று சொல்லி டெலிபோன் ரிசீவரைச் சீதாவின் கையில் கொடுத்தான்.
ரிஸீவரைக் காதில் வைத்துக் கொண்டபோது சீதாவின் முகம் மேலும் பீதியைக் காட்டியது. ராகவன் என்ன கேட்டான் என்பது சூரியாவின் காதில் விழவில்லை. சீதா, "இல்லையே! இன்றைக்குத்தானே வந்திருக்கிறான்!" என்று சொன்ன போது அவள் கண்கள் கலங்கிக் கண்ணீர் துளித்ததைச் சூரியா பார்த்தான். பிறகு, "சரி, சரி இருக்கச் சொல்கிறேன்!" என்று சொல்லிவிட்டு டெலிபோன் ரிஸீவரை வைத்து விட்டாள்.
"அத்தங்கா! மாப்பிள்ளை என்ன சொன்னார்? எதற்காக உன் கண் இப்படி கலங்கியிருக்கிறது?" என்று சூரியா கவலையுடன் கேட்டான்.
சீதா சிறிது நேரம் எங்கேயோ பார்த்துக்கொண்டு சும்மா இருந்தாள். பிறகு திடீரென்று விம்மிக்கொண்டே, "சூரியா! நீ போய்விடு! உடனே போய்விடு!" என்றாள்.
"அத்தங்கா! இது என்ன? எதற்காக என்னைப் போகச் சொல்கிறாய்? மாப்பிள்ளை இருக்கச் சொல்லியிருக்கிறாரே?" என்றான் சூரியா.
"அதனாலே தான் உன்னைப் போகச் சொல்கிறேன். என்னிடமும் உன்னை இருக்கப் பண்ணும்படிதான் சொன்னார். ஆனால் எனக்கு என்னமோ பயமாயிருக்கிறது. சூரியா! நீ இன்றைக்கு இங்கே இருந்தால் ஏதாவது அபாயம் நேரிடும் என்று தோன்றுகிறது போய்விடு!"
"நான் அவசரப்பட்டுக்கொண்டு போனால்தான் அபாயம் வரும். அவர் இரு என்று சொல்லியிருக்கும்போது நான் போகலாமா? வீண் சந்தேகத்துக்கு இடமாகாதா?"
"சந்தேகம் இனிமேல்தானா வரப்போகிறது? உனக்கு ஒன்றுமே தெரியவில்லை, சூரியா! பச்சைக் குழந்தையாய் இருக்கிறாய்! நம் இருவர் பேரிலும் தகாத சந்தேகம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. என்னை அவர் படுத்துவதெல்லாம் அதற்காகத் தான்."
"சுத்த மூடத்தனம்; என் பேரில் மாப்பிள்ளைக்குச் சந்தேகமாவது! அவர் இப்போது வரட்டும்; நேரிலே கேட்டு விடுகிறேன். அவருக்கு உன்னைக் கலியாணம் செய்து வைத்ததே நான் தானே?" என்றான் சூரியா.
"நீதான்! நீ செய்த பெரிய தவறு அது தான்! நேரில் பார்த்துப் பேசுவதினால் அவருடைய சந்தேகத்தை நீ போக்கி விட முடியாது. ஏதாவது நீ பதில் சொன்னால் அவருடைய கோபம் அதிகமாகும். நீ இன்றைக்கு இங்கே இருந்தால் நிச்சயமாகக் கொலை விழும்! அந்தப் பாவத்துக்கு என்னை ஆளாக்காதே! தயவு செய்து போய்விடு! உன் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன்!"
சீதாவின் வெறி நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகி வருவதைச் சூரியா கவனித்தான். ஆனாலும் அவனுக்குப் போக மனம் வரவில்லை. "சீதா! பதட்டம் வேண்டாம்! கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்! நான் இப்போது போய்விட்டால் அவருடைய சந்தேகத்தை உறுதிப்படுத்துவதுபோல் ஆகாதா?" என்றான்.
"உறுதிப்பட்டால் படட்டும். அவரையே தெய்வம் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தும் எப்போது சந்தேகப்படுகிறாரோ, அப்போது அவருடைய சந்தேகத்தை உண்மையாக்கி விட்டால்தான் என்ன? அதனாலேயே என்னை எங்கேயாவது அழைத்துக் கொண்டு போகும்படி உன்னைக் கேட்டேன்; ஆனால் நீ பயங்கொள்ளி, கோழை, ஸ்திரீகளின் சுதந்திரத்தைப் பற்றி வாய் கிழியப் பேசுவாயே தவிர, அதற்காக ஒரு துரும்பு எடுத்துப் போடமாட்டாய். உன்னை நான் நம்பியிருக்கவும் இல்லை. ஒரு நாளைக்கு இவரை விட்டு விட்டு ஓடவே போகிறேன். உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும்; என்னை வீண் கஷ்டத்துக்கு ஆளாக்காமல் உடனே போய்விடு. உன்னால் எனக்கு உபகாரம் இல்லாவிட்டாலும் அபகாரமாவது இல்லாமல் இருக்கட்டும்."
இனிமேல் தான் அங்கு இருந்தால் சீதாவின் இரத்த நரம்புகள் வெடித்து அவள் மூர்ச்சையாகி விடுவாள் என்று சூரியா பயந்தான். போய்விட வேண்டியதுதான்; ஆனால் அப்புறம் என்ன? சீதாவின் நிலையைப் பற்றி எப்படித் தெரிந்து கொள்வது? ஆம்; டெலிபோன் ஒன்று இருக்கிறதே! டெலிபோன் மூலம் நாளைக்கு விசாரித்துக் கொள்ளலாம். இன்றைக்கு ஒரு இராத்திரி நடக்கிறது நடக்கட்டும். நாளை தாரிணியுடன் யோசித்துக் கொண்டு சீதா விஷயமாக என்ன செய்கிறது என்று தீர்மானிக்கலாம்.
"சரி அத்தங்கா! நீ இவ்வளவு வற்புறுத்துகிறபடியால் நான் போகிறேன். அப்புறம் நாம் எப்போது சந்திப்பது? நாளைக்கு டெலிபோன் பண்ணட்டுமா?"
"ஆமாம்; நாளைக்குப் பதினொரு மணிக்கு மேல் டெலிபோனில் பேசு எல்லாம் சொல்கிறேன்."
"அத்தங்கா! ஒரே ஒரு விஷயம் ஞாபகம் வைத்துக்கொள். உனக்கு உண்மையில் உதவி தேவையாயிருந்தால் நான் அதற்கு பின்வாங்க மாட்டேன். உன்னுடைய மனதைத் திடப்படுத்திக்கொண்டு சொல்லு. என்ன சொல்கிறாயோ, அந்தப்படி செய்யத் தயாராயிருக்கிறேன். உன்னுடைய க்ஷேமந்தான் எனக்குப் பெரிது; தேச விடுதலை கூட அப்புறந்தான்!" என்றான் சூரியா.
இப்படிச் சூரியா சொன்னபோது அவனுடைய மனதில் உண்மையாக எண்ணியதையே சொன்னதாகக் கூற முடியாது. அவசரப்பட்டுச் சீதா ஏதாவது செய்துவிடக் கூடாதே என்ற எண்ணத்தினால் அவளைத் தைரியப்படுத்துவதற்காகவே சொன்னான்.
ஆனால் சீதா, சூரியா சொன்னதை நூற்றுக்கு நூறு பங்கு உண்மையாகவே எடுத்துக்கொண்டு, "ரொம்ப வந்தனம், அம்மாஞ்சி! அபாய காலத்தில் உன்னுடைய உதவியைக் கோரும்படி அம்மா எனக்குச் சொல்லியிருந்தாள்; அவளுடைய வாக்கு வீண் போகவில்லை. நாளைக்கு மத்தியானத்துக்கு மேலே டெலிபோனில் பேசு. நானும் அதற்குள் நன்றாக யோசித்து வைக்கிறேன். அவசரப்பட்டு ஒரு காரியத்தைச் செய்தோம் என்ற பெயர் வேண்டாம். இல்லாவிட்டால் இப்போதே என்னை அழைத்துக்கொண்டு போகும்படி சொல்லியிருப்பேன்!" என்றாள் சீதா.
சூரியா புறப்பட எழுந்தான் சீதாவிடமிருந்து எடுத்துக் கொண்ட கைத்துப்பாக்கியை முன்னமேயே கால்சட்டையின் பைக்குள் போட்டுக் கொண்டிருந்தான். 'இந்தப் பித்துக்குளிகளின் வீட்டில் துப்பாக்கி இருப்பது ஆபத்து. நம்மிடம் இருந்தால் ஒரு சமயம் பயன்படும்' என்று முடிவு செய்திருந்தான். அதன்படி கைத்துப்பாக்கியுடன் கிளம்பிச் செல்ல ஆயத்தமானான்.
அப்போது வாசலில் 'பாம்' 'பாம்' என்ற சத்தம் கேட்டது. மோட்டார் கார் 'விர்' என்று வேகமாக வந்து வீட்டு வாசலில் நின்றது சீதாவும் சூரியாவும் திகைத்து நின்றார்கள்.
ராகவன் வண்டியை வீட்டு முகப்பில் நிறுத்திவிட்டு இறங்கி 'விடுவிடு' என்று உள்ளே வந்தான்.
சூரியாவையும் சீதாவையும் மாற்றி மாற்றி வெறித்துப் பார்த்தான். அவன் உள்ளத்தில் குடிகொண்டிருந்த குரோதம் அவனுடைய பார்வையில் ஒருவாறு தெரிந்தது. ஆனால் வாய் வார்த்தையில் குரோதத்தைக் காட்டிக் கொள்ளாமல், "என்ன சூரியா? புறப்படத் தயாராக நிற்கிறாய் போலிருக்கிறதே?" என்றான்.
"ஆமாம், மாப்பிள்ளை! போக வேண்டும். மணி பன்னிரண்டரை ஆகிவிட்டதல்லவா? நீங்கள் வந்ததும் புறப்படலாம் என்று காத்துக் கொண்டிருந்தேன்" என்றான் சூரியா.
"அதென்ன இத்தனை நேரம் கழித்து எங்கே போவாய்? பெரிய 'நைட் பர்ட்' (இராத்திரி சஞ்சாரப் பறவை) ஆகிவிட்டாய் போலிருக்கிறதே!"
"நீங்களும் என் தோழனாகத் தான் இருக்கிறீர்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் வீட்டுக்கு வந்திருக்கிறீர்களே?" என்று சூர்யா கொஞ்சம் துடுக்காகப் பதில் சொல்லி ராகவனுடைய கோபத்தைக் கிளறிவிட்டான்.
"நான் ஓரிடத்தில் மிக முக்கியமான வேலையாகப் போக வேண்டியிருந்தது."
"நானும் முக்கிய வேலையாகத் தான் போகவேண்டியிருக்கிறது. இன்று இராத்திரி சில சிநேகிதர்களைச் சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறேன்."
"அழகுதான்! இத்தனை நேரம் கழித்துச் சிநேகிதர்களைச் சந்திக்கவாவது! சந்தித்து? என்ன செய்வீர்கள் எங்கேயாவது கொள்ளையடிக்கப் போகிறீர்களா, என்ன?"
"கொள்ளையடிக்கப் போகிறவர்களும் இராத்திரியில் போவார்கள்; அவர்களைப் பிடிக்கப் போகிறவர்களும் இராத்திரியிலே தான் போய் ஆக வேண்டும்? இந்தியா தேசத்தைக் கவர்ந்த கொள்ளைக்காரர்களைத் துரத்தியடிக்கும் கைங்கரியத்தில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். உங்களுக்குத் தெரியாதா, மாப்பிள்ளை?"
"எனக்கு எப்படித் தெரியும்? உன் அத்தங்காளுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம். அவளை நீ அடிக்கடி வந்து பார்த்து விட்டுப் போகிறாய் அல்லவா...!"
"அடிக்கடி நான் வந்து பார்ப்பதில்லையே? மூன்று மாதத்துக்கு முன்னால் ஒரு தடவை வந்திருந்தேன். அப்போது நீங்கள் வெளியூருக்கு போயிருந்தீர்கள், உங்கள் தாயார் இருந்தார் அவரைத் தரிசித்து விட்டுப் போனேன்."
"அது கிடக்கட்டும், அப்பா! இப்போது நீ எங்கெங்கேயோ போய்விட்டு வந்தாயாம். மதராஸுக்குக் கூடப் போயிருந்தாயாம். அவ்விடத்து விஷயங்கள் எல்லாம் உன்னிடம் தெரிந்து கொள்ளலாம் என்றல்லவா இவ்வளவு அவசரமாக ஓடி வந்தேன்? நீ போக வேண்டும் என்கிறாயே? இராத்திரி இங்கே தங்கியிருந்துவிட்டுக் காலையில் போகக்கூடாதா?"
"இல்லை ஸார்! நான் அவசியம் இப்போதே போக வேண்டும். மதராஸில் உங்கள் தாயாரையும் குழந்தையையும் பார்த்தேன். குழந்தை இங்கே வரவேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஆனால் வழியில் எனக்குப் பல ஜோலிகள் இருந்தபடியால் அவளை நான் அழைத்து வரவில்லை. மற்ற விவரங்கள் எல்லாம் இன்னொரு நாள் சாவகாசமாகச் சொல்லுகிறேன்."
"இன்னொரு நாள் என்றால் என்றைக்கு?" என்று ராகவன் கேட்டான்.
"சௌகரியப்பட்டால் நாளைக்கே வருகிறேன்; இல்லாவிட்டால் மறுநாள் வருகிறேன். என்னுடைய பிரயாண விவரங்கள், அனுபவங்கள் எல்லாம் சொல்கிறேன்."
"சரி; அப்படியானால் போய் வா! நாளைக்கு வருகிறதாயிருந்தாலும் இரவிலே தான் வருவாயாக்கும்!"
"ஆமாம்; போலீஸ்காரர் கண்ணுக்குப் படாமல் வருவதாயிருந்தால் இராத்திரியில் தான் வரவேண்டியிருக்கிறது. என்னுடைய காரியங்கள் சம்பந்தமாக உங்களுக்குத் தொந்தரவு எதுவும் விளைவதை நான் விரும்பவில்லை. சர்க்கார் உத்தியோகத்தில் இருக்கிறீர்கள் அல்லவா? அதுவும் சாமானிய உத்தியோகமா?"
"ஓஹோ! அவ்வளவு தயவு என் பேரில் வைத்திருக்கிறாயா? போகட்டும்! ராஜம்பேட்டை கிட்டாவய்யர் குமாரன் தலையில் இப்படியா எழுதியிருக்க வேண்டும்?"
"என் தலையில் எப்படி எழுதியிருக்கிறது; எதைப் பற்றிச் சொல்கிறீர்கள்!"
"இப்படிப் போலீஸ்காரர்களுக்குப் பயந்து திருடனைப் போல் இராத்திரியில் ஒளிந்து திரிய வேண்டியிருப்பதைப் பற்றித் தான். இருக்கட்டும், சூரியா! உன்னுடைய சிநேகிதி தாரிணி எங்கே இருக்கிறாள்? அவளை நீ பார்ப்பதுண்டா?"
சூரியா சீதாவின் முகத்தைப் பார்த்தான். அவளுடைய முகம் கொடூரமாவதைக் கவனித்தான்.
"தாரிணி இந்த ஊரிலேதான் இருக்கிறாள் என்று நினைக்கிறேன். ஒருவேளை பார்த்தாலும் பார்ப்பேன். ஆனால் நிச்சயம் சொல்வதற்கில்லை."
"பார்த்தால் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது என்றும் அவளை நான் சந்திக்க விரும்புவதாயும் சொல்லு. அவளுடைய இருப்பிடம் உனக்குத் தெரியுமா?"
"பழைய இருப்பிடம் தெரியும். ஆனால் இப்போது தாரிணி அங்கே இல்லை. வேறு ஜாகைக்கு மாற்றிக்கொண்டு போயிருக்கிறாளாம்."
"பழைய ஜாகை எனக்குத் தெரியும். புது இடம் தெரியாது. ஒரு நாள் பழைய டில்லியில் ஜும்மா மசூதிக்குப் பக்கம் நான் போய்க்கொண்டிருந்தபோது தாரிணி மாதிரி ஒருத்தி போவது தெரிந்தது. அவளே தான் என்று நினைத்துப் பார்த்துப் பேசுவதற்காகப் போனேன். திடீரென்று அவள் குறுகலான சந்து ஒன்றில் புகுந்து அவசரமாகச் சென்று அங்கே ஒரு வீட்டுக்குள் புகுந்தாள். எப்படியும் அவளைப் பார்த்துவிடுவது என்று வீட்டுக் கதவை இடித்தேன். அந்த வீதி துருக்க வீதி போலிருக்கிறது. நூறு முஸ்லீம்கள் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டு சண்டைக்கு வந்துவிட்டார்கள். அவர்களிடமிருந்து தப்பி வருவது பெரும் பாடாகி விட்டது சூரியா! முதலில் நீங்கள் இந்த நாட்டிலிருந்து துருக்கர்களை ஒழித்துக் கட்ட வேண்டும். இல்லாவிட்டால் நம் இந்திய தேசம் உருப்படப் போவதில்லை."
"நாங்கள் அப்படி நினைக்கவில்லை; முஸ்லிம்கள் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள்; நம் சகோதரர்கள் அவர்களை எப்படி ஒழித்துக் கட்ட முடியும்? வெள்ளைக்காரர்களை அடித்து விரட்டி விட்டால், அப்புறம்..."
"அப்புறம் நீங்கள் வைத்ததுதான் சட்டமாயிருக்கும். அரசாங்கமே உங்கள் கையில் வந்துவிடும்."
"அது எனக்குத் தெரியாது, மாப்பிள்ளை! சுதந்திரப் போரில் நாங்கள் எல்லாம் உயிர் துறக்க நேரிட்டாலும் நேரிடலாம். ஆனால் ஒன்று நிச்சயம். இந்த நாட்டு ஜனங்களின் பிரதிநிதிகள் இந்தியாவைக் கூடிய சீக்கிரம் ஆளப் போகிறார்கள். நேரமாகி விட்டது; நான் போய் வருகிறேன்" என்று சொல்லி விட்டுச் சூரியா புறப்பட்டுச் சென்றான்.
அவன் போவதைப் பொருட்படுத்தாமல் ராகவன் சோபாவில் உட்கார்ந்தபடி இருந்தான். ஆனால் சீதா சூரியாவின் பின்னோடு வாசல் வரையில் போனாள். வாசற்படிக்கு அருகில் வந்ததும், "சூரியா! என் தலை மேல் ஆணை! நாளைக்குக் கட்டாயம் எனக்கு டெலிபோன் பண்ணு!" என்று மெதுவான குரலில் கூறினாள்.
"சரி, அத்தங்கா!" என்றான் சூரியா.
வாசல் வரையில் சூரியாவைக் கொண்டு போய் விட்டு விட்டுச் சீதா திரும்பி உள்ளே வந்தாள். உட்கார்ந்திருந்த ராகவன் ஆக்ரோஷத்தோடு எழுந்து நிற்பதைக் கண்டாள்.
"அவனிடம் என்னடி இரகசியம் பேசினாய்?" என்று ராகவன் கண்களில் தீப்பொறி பறக்கக் கேட்டான்.
இன்னது சொல்கிறோம் என்பதை நன்கு உணராமலேயே "நான் என்ன பேசினால் உங்களுக்கு என்ன?" என்றாள் சீதா.
"என்ன சொன்னாய்?... எனக்கு என்னவா?" என்று சொல்லி ராகவன் சீதாவின் கன்னத்தில் பளீரென்று அறைந்தான்.
சீதா பல்லைக் கடித்து வலியைப் பொறுத்துக் கொண்டு, "இவ்வளவுதானா? இன்னொரு கன்னம் பாக்கி இருக்கிறது!" என்றாள்.
"ஓகோ அப்படியா? காந்தி மகாத்மாவின் சிஷ்யை ஆகிவிட்டாயாக்கும்! இந்தா! வாங்கிக்கொள்!" என்று இன்னொரு கன்னத்திலும் அறைந்தான்.
சீதா அவனை வெறிக்கப் பார்த்துவிட்டுச் சமையலறையை நோக்கிப் போனாள்.
"எங்கே அவசரமாய்ப் போகிறாய்? இங்கே வா! கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டுப் போ!" என்று ராகவன் கத்தினான்.
சமையல் உள்ளேயிருந்த டம்ளரில் ஓவல்டின் எடுத்துக் கொண்டு வந்து மேஜை மீது வைத்தாள்.
"வெறும் ஓவல்டினா? அல்லது விஷத்தைக் கலந்து கொண்டு வந்தாயா?" என்று ராகவன் கேட்டான்.
"ஆமாம்!" என்றாள் சீதா.
"அப்படியானால் நீயே சாப்பிடு...! வேண்டாம்; உனக்கும் இந்த உலகத்தில் வேலை கொஞ்சம் பாக்கியிருக்கிறது. இவ்வளவு சீக்கிரத்தில் உலகத்தை விட்டுப் போய்விடாதே!" என்று சொல்லிக்கொண்டே ராகவன் டம்ளரைக் கையிலெடுத்து அதிலிருந்த ஓவல்டின் பானத்தை ஜன்னல் வழியாக வீசிக் கொட்டினான்.
"இப்பேர்ப்பட்ட கொலை பாதகியை வீட்டில் வைத்துக் கொண்டு நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். நாளைக்கு நான் புறப்பட்டுப் போய்விடுகிறேன்" என்றாள் சீதா.
"எங்கே போவதாக உத்தேசம்?" என்றான் ராகவன்.
"போகிறவள் எங்கே போனால் உங்களுக்கு என்ன? நீங்கள் ஏன் கேட்க வேண்டும்?" என்றாள் சீதா.
"உனக்கு நான் தாலி கட்டிய புருஷனாயிருக்கிறபடியால் தான் கேட்டேன். முன்னே நான் போகச் சொன்னபோதெல்லாம் 'போகமாட்டேன்' என்று பிடிவாதம் பிடித்தாய். இப்போது நாளைக்கே போகிறேன் என்கிறாயே? எங்கே போவதாக உத்தேசம்? யாருடன் போவதாக உத்தேசம்? சூரியாவுடனா?"
"சூரியா அழைத்துக்கொண்டு போனால் அவனுடன் போகிறேன்; இல்லாவிட்டால் தனியாகப் போகிறேன்" என்றாள் சீதா.
"சூரியா உன்னை எங்கே அழைத்துப் போகப் போகிறான்! அவன்தான் நித்திய கண்டம் பூரணாயுசாகப் போலீஸுக்குப் பயந்து ஒளிந்து திரிகிறானே! நீ தனியாகத் தான் போகும்படி இருக்கும், எந்த ஊருக்குப் போகப் போகிறாய்?"
"எங்கேயாவது தொலைந்து போகிறேன். நீங்கள்தான் வாய் ஓயாமல் தொலைந்து போ என்கிறீர்களே?"
"இப்போதும் அதைத்தான் சொல்கிறேன், திவ்யமாய்த் தொலைந்து போ! போவதற்கு முன்னால் நான் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டுப் போ!"
"தொலைந்து போகப் போகிறவளிடம் கேள்வி என்ன கேட்பது? பதில் என்ன சொல்வது?"
"பதில் சொல்லத்தான் வேண்டும். உன்னையும் சூரியாவையும் பற்றி எனக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது."
"என்ன சந்தேகம்?"
"என்ன சந்தேகமா? உங்களுடைய நடத்தையைப் பற்றிய சந்தேகந்தான்."
"ரொம்ப சந்தோஷம்."
"சந்தோஷமா?" என்று சொல்லி ராகவன் சீதாவின் ஒரே கன்னத்தில் இன்னும் இரண்டு பலமான அறை கொடுத்தான்.
சீதா அவ்விடமிருந்து நகரவும் இல்லை; கண்ணீர் விடவும் இல்லை; முகத்தைச் சுருக்கக்கூட இல்லை.
"ரொம்ப சந்தோஷம். என்னை ஒரே அடியாக அடித்துக் கொன்று விடுங்கள்!" என்றாள்.
"எதற்காக உன்னைக் கொல்ல வேண்டும் என்கிறாய்?" என்றான் ராகவன்.
"கொன்று விட்டால் நாளைக்கு நான் ஓடிப் போக வேண்டிய அவசியமிராது" என்றாள் சீதா.
"உன் மனதில் ஏதோ களங்கம் இருக்கிறது. குற்றமுள்ள நெஞ்சு அடித்துக் கொள்கிறது. ஆகையால் தான் 'ஓடிப் போகிறேன்' என்று சொல்கிறாய்."
"என் மனதில் களங்கமும் இல்லை; நெஞ்சில் குற்றமும் இல்லை."
"பின் எதற்காக 'ஓடிப் போகிறேன்' என்கிறாய்? கட்டிய புருஷனை விட்டு விட்டு ஏன் ஓடவேண்டும்?"
"உங்களுடைய மனது வேற்றுமைப்பட்டுவிட்டது. இனிமேல் நமக்குள் ஒட்டாது. மனது ஒட்டாதவர்கள் எப்படிச் சேர்ந்து வாழ முடியும்?"
"என் மனது வேற்றுமைப்பட்டுவிட்டது என்றால், அதற்குக் காரணம் உன்னுடைய நடத்தை தான். நான் இல்லாத சமயம் பார்த்து சூரியா எதற்காக உன்னைப் பார்க்க வருகிறான்? இதோ பார்! நீ உண்மையில் பதிவிரதையாக இருந்தால்...?"
"பதிவிரதையாக இருந்தால்..? கடவுளே! இது என்ன விசித்திர உலகம்?" என்றாள் சீதா.
"மாயா உலகத்தைப் பற்றிய வேதாந்தப் பேச்செல்லாம் அப்புறம் இருக்கட்டும். நீ பதிவிரதையாயிருந்தால் நான் இப்போது சொல்லப் போகிறதைச் செய்ய வேண்டும். செய்வாயா?" என்றான் ராகவன்.
சீதா மௌனமாக இருந்தாள்.
"நான் சொல்வதைச் செய்வாயா, மாட்டாயா? சொல்லு பதில்!" என்று ராகவன் அதட்டினான்.
"இன்ன காரியம் என்று தெரியப்படுத்தினால், என்னால் முடியும் முடியாது என்று சொல்லுகிறேன்!"
"காரியத்தை முதலில் சொல்ல முடியாது. நான் எது சொன்னாலும் நீ செய்யத் தயாராயிருக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்த வீட்டை விட்டு நடந்து விட வேண்டும்."
"நான்தான் போகத் தயார் என்று சொல்லிவிட்டேனே? இந்த நிமிஷமே வேண்டுமானாலும் கிளம்பி விடுகிறேன்."
"ஆனால் நான் சொன்னதை மட்டும் செய்ய மாட்டாயாக்கும்?"
"இன்ன காரியம் என்று சொல்லாமல் எப்படிச் செய்வதாக ஒப்புக்கொள்ள முடியும்?"
"ஏன் முடியாது? புருஷன் சொல்வது எதுவானாலும் செய்ய வேண்டியது மனைவியின் கடமையல்லவா?"
"அன்யோன்ய தம்பதிகளாயிருந்தால் சரிதான். ஆனால் உங்கள் மனம் பேதலித்துவிட்டது. என் பேரில் உங்களுக்குச் சந்தேகம்; உங்கள் பேரில் எனக்குச் சந்தேகம். அப்படியிருக்கும் போது காரியம் இன்னதென்று தெரியாமல் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?"
"என் பேரில் உனக்குச் சந்தேகமா? அழகாய்த்தானிருக்கிறது. அப்படியே இருக்கட்டும்; நீ செய்ய வேண்டியதைச் சொல்கிறேன். இப்போதே - இந்த நிமிஷமே - போலீஸ் ஸ்டேஷனை நீ டெலிபோனில் கூப்பிட்டு, சூரியா இங்கு வந்து விட்டுப் போனதை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்."
"ஒரு நாளும் மாட்டேன்."
"ஏன் மாட்டாய்? சூரியா பேரில் உனக்கு என்ன அத்தனை கரிசனம்?"
"சூரியா என்னுடைய மாமாவின் பிள்ளை. நம் இருவருக்கும் கலியாணம் பண்ணி வைத்ததே அவன்தான். இப்போது சூரியா தேச விடுதலைக்காகப் பாடுபட்டு வருகிறான். என்னிடமும் உங்களிடமும் நம்பிக்கை வைத்து, நாம் காட்டிக் கொடுக்க மாட்டோ ம் என்று உறுதியாக நம்பி, அவன் என்னைப் பார்க்க வந்தான். அவனைப் போலீஸுக்குக் காட்டிக் கொடுப்பது துரோகம்; மகா பாவம்."
"உன்னுடைய அம்மாஞ்சி சூரியாவினால் எனக்குப் பெரிய ஆபத்து வந்திருக்கிறது. புரட்சி வேலைகளில் அவன் ஈடுபட்டவன். அப்படியிருந்தும் சர்க்கார் உத்தியோகஸ்தனாகிய என் வீட்டுக்கு அவன் வந்தது பெரும் பிசகு. அதனால் எனக்கு உத்தியோகத்தில் பிரமோஷன் தடைப்பட்டு விட்டது. எனக்குக் கீழே இருந்தவர்கள் எல்லாரும் எனக்கு மேலே போய் விட்டார்கள். இன்றைக்குத் தகவலாவது கொடுக்காவிட்டால், என்னுடைய உத்தியோகம் போய்விடும்."
"போனால் போகட்டும், உத்தியோகத்துக்காகச் சிநேகிதத் துரோகமான இந்தக் காரியம் செய்ய வேண்டாம். நான் வீடு வீடாகப் பிச்சை எடுத்தாவது ஏதோ கொண்டு வருகிறேன்."
"சீ! நாயே! உன்னுடைய பிச்சைக் காசை எதிர்பார்த்து நான் ஜீவிக்க வேண்டுமாக்கும்! அதெல்லாம் முடியாது. உன்னுடைய மூடத்தனத்துக்காக இரண்டாயிரம் ரூபாய் சம்பளமுள்ள உத்தியோகத்தை விட்டுவிடச் சொல்கிறாயா? ஒரு நாளும் மாட்டேன். இந்தச் சங்கடம் குறுக்கிடாவிடில் சீக்கிரத்தில் இன்னும் பெரிய உத்தியோகம் எனக்குக் கிடைக்கும். மாதம் மூவாயிரம் நாலாயிரம் சம்பளம் வரும். அதையெல்லாம் விட்டு விடச் சொல்கிறாயா? உன்னுடைய புத்தி உலக்கைக் கொழுந்துதான்."
"அப்படியே இருக்கட்டும் ஆனால் நான் போலீஸுக்கு ஒரு நாளும் தகவல் சொல்லமாட்டேன்; அதைக் காட்டிலும் உயிரையே விட்டு விடுவேன்."
"எனக்குத் தான் தெரியுமே? உன்னுடைய யோக்கியதை வெளியாகட்டும் என்று உன்னை 'டெலிபோன்' பண்ணச் சொன்னேன். வெளியாகிவிட்டது. இங்கே நிற்காதே! போ! தொலை!" என்று சீதாவின் கழுத்தைப் பிடித்துப் படுக்கை அறைப் பக்கமாக அவளை ராகவன் தள்ளினான்!
சீதா படுக்கையறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள். கண்களில் ஒரு சொட்டு ஜலம் கூட வரவில்லை. கன்னத்தில் கணவன் அடித்த இடத்தில் விண் விண் என்று தெறித்துக் கொண்டிருந்தது. இன்று நடந்ததெல்லாம் உண்மையா அல்லது தூங்கும்போது கனவு கண்டோ மா என்று வியந்தாள்.
ராகவன் இருந்த அறையில் டெலிபோன் கருவியை 'டயல்' செய்யும் சத்தம் கேட்டது. உடனே சீதாவின் காதுகள் கூர்மையாயின; அவளது உள்ளம் ஒருமுகப்பட்டது.
"ஹலோ! போலீஸ் ஸ்டேஷனா?" என்று ராகவனுடைய குரல் காதில் கேட்டதும் சீதா பளிச்சென்று எழுந்து ஓடி வந்தாள். டெலிபோன் ரிஸீவரை வைத்திருந்த ராகவன் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, "யாருக்கு டெலிபோன் செய்கிறீர்கள்?" என்று கேட்டாள்.
கோபத்தினால் முகம் கறுத்துக் கண்கள் சிவந்து கொடூரமாய் விழித்த ராகவன், "உனக்கு என்ன அதைப்பற்றி?" என்றான்.
"எனக்கு ஏன் சம்பந்தம் இல்லை? நீங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் பண்ணப் போகிறீர்கள் சூரியாவைப் பற்றி. அதற்கு நான் ஒருநாளும் விடமாட்டேன். என்னைக் கொன்றுவிட்டு டெலிபோன் செய்யுங்கள்" என்றாள் சீதா.
"நாளைக்கு நான் ஆபீஸிலிருந்து டெலிபோன் பண்ணினால் என்ன செய்வாய்?" என்றான் ராகவன்.
"அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை என் காதில் விழாதிருந்தால் சரி " என்றாள் சீதா.
"சூரியாவிடம் உனக்கு என்ன அவ்வளவு அக்கறை? உனக்கும் அவனுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை, என்று சொன்னாயே!"
"அப்படி நான் சொல்லவில்லை இந்த உலகத்திலேயே சூரியா ஒருவன் தான் என் பேரில் அபிமானம் உள்ளவன். எனக்காக எது வேணுமானாலும் செய்யத் தயாராயிருப்பவன். அவனை நீங்கள் காட்டிக் கொடுப்பதை நான் எப்படிப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்?" என்று சீதா கேட்டாள்.
"அடி பாதகி! சூரியாவின் மோகம் உன்னை எவ்வளவு தூரம் பைத்தியமாக்கியிருக்கிறது என்று இப்போதல்லவா தெரிகிறது?"
"ரொம்ப சந்தோஷம்."
"என்னடி சந்தோஷம்? என்ன சந்தோஷம்?" என்று சொல்லிக்கொண்டு கையை ஓங்கினான் ராகவன்.
"இவ்வளவு படுபாதகமான விஷயத்தைச் சொல்லியும் உங்கள் நாக்கு அறுந்து விழாதது பற்றிச் சந்தோஷம்."
"என் நாக்கு அறுந்து விழவேண்டுமா? சாபம் வேறு கொடுக்கிறாயா?" என்று சொல்லிக்கொண்டே மிதமிஞ்சிய கோபாக்கிரந்தனாகியிருந்த ராகவன், டெலிபோன் ரிஸீவரை வைத்திருந்த கையினாலேயே ஓங்கி ஒரு அடி அடித்தான். அந்த அடி சீதாவின் காதின் மேல் விழுந்தது.
அவ்வளவுதான்; சீதாவின் முகத்தில் திடீரென்று ஒரு மாறுதல் ஏற்பட்டது; கண்களில் நீர் ததும்பிற்று. அடித்த காதைக் கையினால் பொத்திக் கொண்டாள். "அம்மா! அம்மா! அலை ஓசை கேட்கிறதே! அம்மா! என்னை அழைத்துக் கொண்டு போ அம்மா!" என்று விம்மலும் அழுகையுமாகக் கதறினாள். முகத்திலும் கண்களிலும் வெறி தாண்டவமாடியது! சீதாவுக்கு 'ஹிஸ்டீரியா' வந்துவிட்டது என்று ராகவன் உணர்ந்தான்.
உடனே அவளை மெதுவாகப் பிடித்து சோபாவில் உட்கார வைத்தான். தானும் பக்கத்தில் உட்கார்ந்தான், "வேண்டாம் சீதா! வேண்டாம்? நான் உன்னைச் சோதனையல்லவா செய்தேன்? உண்மையென்று நினைத்துக்கொண்டாயா?" என்று சாந்தமான குரலில் பேசிக் கொண்டே முதுகிலே இலேசாகத் தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தான்.
சற்று நேரத்துக்கெல்லாம் சீதா சோபாவில் குப்புறப் படுத்துக் கொண்டாள். விம்மலும் அழுகையும் நின்றன. சீதா நித்திரையில் ஆழ்ந்து விட்டாள்.
வீட்டுக்கு வெளியிலே சென்ற சூரியா, காம்பவுண்டு கேட்டின் கதவைத் திறந்து மூடிவிட்டு, மறுபடியும் தோட்டத்துக்குள் நுழைந்து வீட்டின் ஒரு ஓரமாகச் செடிகள் மரங்களின் மறைவில் சத்தமின்றி நடந்து வந்தான். ராகவனும் சீதாவும் இருந்த அறையின் ஜன்னலுக்கு அருகில் மறைவாக நின்று நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தான். பேசிய விஷயங்கள் எல்லாம் நன்றாகக் காதில் விழவில்லை. ஆனால் கண்கள் எல்லாவற்றையும் நன்கு பார்த்தன.
ராகவன் டெலிபோன் கட்டையால் சீதாவை அடித்ததையும் அவள், "அம்மா! அம்மா!" என்று அலறியதையும் பார்த்த பிறகு சூரியாவால் பொறுக்க முடியவில்லை. கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டு விடலாமா என்று ஒரு கணம் நினைத்தான். ஆனால் அது தவறு என்றும் பல முக்கியமான காரியங்கள் பாக்கி இருப்பதால் இன்னும் ஒரு நாள் பொறுத்திருக்க வேண்டும் என்றும் தீர்மானித்தான். அடுத்த காட்சியையும் பார்த்துவிட்டுச் சூரியா அங்கிருந்து நடையைக் கட்டினான்.
நள்ளிரவுக்குப் பிற்பட்ட பின்னிரவில் பழைய டில்லி நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த சூரியாவின் உள்ளம் அன்று வரை இல்லாத மாதிரிக் கொந்தளித்தது. "தேசம் எப்படி போனால் என்ன? சுதந்திரம் எக்கேடு கெட்டால் என்ன? தேசத்தையும் சுதந்திரத்தையும் கவனிக்க எத்தனையோ பேர், ஆனால் சீதா அனாதை, திக்கற்றவள். அவளைச் சந்தோஷமாக வைப்பதுதான் என்னுடைய முதல் கடமை. அந்தக் கடமையை எப்படி நிறைவேற்றுவது? நாளைக்குத் தாரிணியைக் கேட்டுக்கொண்டு தீர்மானிக்க வேண்டும். அதுவரையில், பாவம் அந்த ராட்சதனிடம் அகப்பட்டுக் கொண்ட என் அத்தங்காள் உயிரோடு இருக்க வேண்டுமே!"
இத்தகைய சிந்தனையில் ஆழ்ந்த வண்ணம் சூரியா நடந்தான். போக வேண்டிய இடம் போய்ச் சேர்ந்து படுத்துக்கொண்ட பிறகும் தூக்கம் வந்தபாடில்லை அன்று அவனுக்குச் சிவராத்திரியாயிற்று.
மறுநாள் மாலை நேரத்தில் சூரியா மீண்டும் வெள்ளி வீதியின் வழியாகப் போய்க்கொண்டிருந்தான். அவன் உள்ளம் பெரிதும் கலக்கமடைந்திருந்தது. முதல் நாள் இரவு உறக்கம் இல்லாமையும் மனதில் அமைதி இல்லாமையும் முகத்தில் நன்றாகத் தெரிந்தன.
அன்று காலை பதினோரு மணிக்குச் சூரியா சீதாவுக்கு டெலிபோன் செய்தான். இரண்டு தடவை டெலிபோனில் வேறு யாரோ பேசிக் கொண்டிருந்தபடியால் கிடைக்கவில்லை. மூன்றாவது தடவை சீதாவின் குரல் கேட்டது. "சூரியா! சற்று முன்னால் நீ என்னைக் கூப்பிட்டுப் பேசினாயா?" என்றாள் சீதா. "இரண்டு தடவை கூப்பிட்டேன்; ஆனால் நீ கிடைக்கவில்லை?" என்றான் சூரியா.
"அரைமணிக்கு முன்னால் டெலிபோன் மணி அடித்தது. நீயாகத் தான் இருக்கும் என்று எடுத்தேன். ஆனாலும் முன் ஜாக்கிரதையாக 'யார்?' என்று கேட்டேன். 'நான்தான் சூரியா! எப்போது சந்திக்கலாம்'? என்று குரல் கேட்டது. அது உன் குரல் இல்லையென்று சந்தேகித்து டெலிபோனை வைத்து விட்டேன். இதைப்பற்றி என்ன நினைக்கிறாய்?" என்றாள் சீதா.
"ஆச்சரியமாக இருக்கிறதே! அப்படி யார் கேட்டிருப்பார்கள்? எதற்காக? எனக்கு ஒன்றுமே தெரியவில்லையே? ஒருவேளை உன் அகத்துக்காரர் தானோ என்னமோ?" என்றான் சூரியா.
"இல்லை; என் அகத்துக்காரர் குரல் இல்லை; இருந்தால் எனக்கு உடனே தெரிந்திருக்கும். அது போனாற் போகட்டும்; நான் இன்றைக்கு உன்னை அவசியம் சந்திக்க வேண்டும். எங்கே எப்போது சந்திக்கலாம்?" என்று சீதா பரபரப்புடன் கேட்டாள்.
"எங்கே சந்திக்கிறது? சந்தித்தால் உன் வீட்டில் தான் சந்திக்க வேண்டும். இரண்டு நாள் கழித்து வருகிறேன்!" என்றான் சூரியா.
"முடியாது! முடியாது! இன்றைக்கு என்னைப் பார்க்காவிட்டால் அப்புறம் என்னை உயிருடன் பார்க்கமாட்டாய். இங்கே நீ வரவேண்டியதும் இல்லை. வந்தால் பெரிய ஆபத்தாக முடியும். நான் பழைய டில்லிக்கு வந்து உன்னைப் பார்க்கிறேன்?"
"இது என்ன யோசனை, சீதா! நீ தனியாகப் புறப்பட்டு வருவாயா? அவருக்குத் தெரியாமல் இருக்குமா? அப்படித் தெரிந்தால் ஏற்கெனவே வீண் சந்தேகப்படுகிறவர்..."
"யார் என்ன சந்தேகப்பட்டாலும் சரிதான், இன்று சாயங்காலம் உன்னை நான் பார்த்தேயாக வேண்டும். இவருக்கு இன்றைக்குப் பார்ட்டி இருக்கிறது. நேரங்கழித்துத்தான் வருவார்? அதற்குள் உன்னைப் பார்த்துவிட்டுத் திரும்பி விடுவேன்."
"அப்படியானால் நானே அவ்விடம் வந்துவிடுகிறேன்?"
"கூடவே கூடாது இந்த வீட்டுப் பக்கமே இனிமேல் நீ வரக்கூடாது. சாயங்காலம் ஆறு மணிக்கு நான் பழைய டில்லி வந்து சேருகிறேன். எனக்குப் பயம் ஒன்றுமில்லை உன்னை எங்கே பார்க்கிறது?"
சூரியாவுக்கு, டவுன் ஹாலுக்குப் பின்னால் உள்ள மைதானந்தான் உடனே நினைவுக்கு வந்தது; அங்கே வரும்படியாகச் சொன்னான். சீதாவும் சரியென்று சொல்லி டெலிபோனைக் கீழே வைத்துவிட்டாள்.
அது முதல் சூரியாவின் உள்ளம், 'சீதாவிடம் ஏன் அப்படி சொன்னோம் - பிடிவாதமாக வரக்கூடாது என்று சொல்லாமற் போனோமே - இதனால் சீதாவுக்கு மேலும் என்ன கஷ்டம் நேருமோ என்னமோ?' என்று கவலைப்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருந்தது.
இதற்கிடையில் நேற்று ஏற்பாடு செய்திருந்தபடி தாரிணியையும் மற்ற நண்பர்களையும் பார்த்தாக வேண்டும்! அதற்காகத் தான் இப்போது சூரியா வெள்ளி வீதியில் போய்க்கொண்டிருந்தான். தாரிணியைப் பற்றி எண்ணியதும் முதல் நாள் மூன்று பேர் தாரிணியைப் பிடித்துக் கொடுத்தால் லட்சம் ரூபாய் தருவதாகக் கூறியது நினைவு வந்தது. இந்த ஞாபகம் சூரியாவின் மனக்குழப்பத்தை மேலும் அதிகமாக்கியது.
'இரத்த வாசல்' என்று பெயர் பெற்ற பயங்கர சரித்திர சம்பவங்கள் நடந்த இடத்தைத் தாண்டிச் சென்றதும், ஆஜானுபாகுவான முஸ்லீம் லீக் தொண்டர் ஒருவர் - பச்சைச் சட்டைக்காரர் - சூரியாவின் பேரில் மோதிக் கொண்டு, "மாப்கீஜீயே! குவாதே ஆஜம் ஜிந்தாபாத்!" என்றார். அந்த ஆசாமி வேண்டுமென்றே தன் பேரில் மோதிக்கொண்டு விஷமத்துக்காக மன்னிப்புக் கோருகிறார் என்று எண்ணிய சூரியா கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தான். ஆசாமியின் கண் சிமிட்டலைக் கண்டதும் நேற்று போலீஸ் உடையில் காட்சி தந்தவரே தான் என்று அறிந்து, "இதென்ன இன்றைக்கு இந்த வேஷம்?" என்றான் சூரியா. "தினம் ஒரே வேஷம் போட்டா பிழைப்பது எப்படி? உன்னைக் கூட ஜாக்கிரதை செய்யும்படி தலைவர் சொன்னார். நீ நேற்று மாதிரியே இன்றும் இருக்கிறாயே?" என்றார் முஸ்லீம் லீக் தொண்டர்.
"அதனால் என்ன? இங்கே என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது" என்றான் சூரியா.
"அப்படிச் சொல்லுவதற்கில்லை; உன்னைப்பற்றி சி.ஐ.டி. விசாரணை பலமாயிருக்கிறதாகத் தகவல் வந்திருக்கிறது."
"தலைவர் ஜாகையில் இருக்கிறாரா?"
"இருக்கிறார், நீ எனக்கு ஐம்பது அடிக்குப் பின்னால் தொடர்ந்து வா! ரொம்ப நெருங்கியும் வராதே; ரொம்பத் தூரமாகவும் போய்விடாதே!" என்று சொல்லிவிட்டு அந்த ஆசாமி விடுவிடு என்று மேலே நடந்தார்.
அவர் கூறியபடியே சூரியா பின் தொடர்ந்தான். ஜும்மா மசூதியின் வலது பக்கத்து வீதியிலிருந்து குறுக்கே பிரிந்து சென்ற ஒரு குறுகிய வீதியில் முஸ்லீம் தொண்டர் பிரவேசித்தார். அந்த வீதியிலிருந்து மறுபடியும் பிரிந்து சென்ற சந்துகளின் வழியாக மடக்கி மடக்கித் திரும்பி நடந்தார். கடைசியில், சூரிய வெளிச்சம் என்பதையே அநேகமாகக் கண்டிராத ஒரு குறுகிய தெருவில், முஸ்லீம் லீக் கொடி பறந்த ஒரு வீட்டின் வாசலில் நின்றார். சூரியா வந்து சேர்ந்ததும் இருவரும் வீட்டுக்குள் பிரவேசித்தார்கள். முன் முகப்பு அறையில் முஸ்லிம் மௌல்வி போல் காணப்பட்ட ஒருவர் குரான் ஷெரிப்பைப் போல் தோன்றிய அரபு எழுத்துப் புத்தகம் ஒன்றைத் தடவித் தடவிப் படித்துக் கொண்டிருந்தார். வந்தவர்களை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்துவிட்டு மௌல்வி சாகிப் மறுபடியும் புத்தகம் படிப்பதில் ஆழ்ந்தார்.
'இந்த மௌல்வி யார்? எங்கேயோ பார்த்திருக்கிறோமே?' என்று சூரியா எண்ணமிடுவதற்குள்ளே முஸ்லிம் தொண்டர் அவனுடைய கையைப் பிடித்து, ஒரு பக்கத்துச் சுவர் ஓரமாக வைத்திருந்த பழைய புத்தக அலமாரிக்குப் பின்புறம் அழைத்துச் சென்றார். அலமாரிக்கும் சுவருக்கும் மத்தியில் ஒருவர் சிரமப்பட்டு நுழைய இடைவெளி இருந்தது. அங்கே சுவரில் ஒரு கதவும் இருந்தது. தொண்டர் அந்தக் கதவைத் திறந்து சூரியாவை உள்ளே பிடித்துத் தள்ளிவிட்டு கதவைச் சாத்திக்கொண்டார்.
சூரியா ஒரு நிமிஷம் இருட்டில் தடுமாறினான். அடுத்த நிமிஷம் ஒரு மிருதுவான பெண்ணின் கரம் அவனுடைய கையைப் பற்றியது. தாரிணியின் குரல், "என்னுடன் வாருங்கள்" என்று அவனை அழைத்தது.
தாரிணியின் கையைப் பிடித்துக் கொண்டு இருளில் நடந்து சென்ற போது சூரியாவுக்குப் பழைய காலத்து இராஜமாளிகைக்குள்ளே இரகசிய குகை வழியாகப் பிரவேசிப்பது போல் உணர்ச்சி ஏற்பட்டது. சிறிது நேரத்திற்குள் அவன் மனம் அதிசயமான ஆகாசக் கோட்டைகளை எல்லாம் நிர்மாணித்தது.
மிக மங்கலான வெளிச்சமுள்ள ஒரு பழைய காலத்து மண்டபத்துக்குள்ளே சூரியா வந்து சேர்ந்தான். அந்த மண்டபத்தின் கல் தூண்கள் பழமையைக் குறிப்பிட்டன. மேல் தளம் மிகவும் தாழ்வாக, ஆள் நின்றால் மேலே ஒரு அடிதான் பாக்கியிருக்கும்படி அமைந்திருந்தது. ஆனால் மண்டபம் விஸ்தாரமாக இருந்தது. நாதிர்ஷா, ஆமத்ஷா முதலிய கொடிய கொள்ளைக்காரர்களுக்கு டில்லி அடிக்கடி இரையாகி வந்த காலங்களில் வெள்ளி வீதியின் செல்வம் மிகுந்த வியாபாரிகள் சிலர் இந்த மண்டபத்தில் தங்களுடைய விலை உயர்ந்த பொக்கிஷங்களைப் பத்திரப்படுத்தி வந்தார்கள். அந்த இருண்ட மண்டபம் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து, அதற்கு வழி தெரிந்து கொண்டு உள்ளே பிரவேசிப்பது மிகவும் பிரயாசையான காரியமாதலால், அதில் ஒளித்து வைக்கப்பட்ட பொக்கிஷங்கள் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டன.
அந்தப் பழைய இரகசிய மண்டபம் இப்போது புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டவர்களின் முக்கிய தலைமை ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கியது.
மண்டபத்தில் அச்சமயம் சுமார் இருபது பேர் இருந்தார்கள். சிலர் தனியே படுத்துப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் கும்பல் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் சுருட்டுப் பிடித்தார்கள்; சிலர் படுத்துத் தூங்கினார்கள். அவர்களுடைய உடைகள் விதவிதமாக இருந்தன. சுவரில் ஒரு ஆணியில் போலீஸ் தலைப்பாகையும் உடைகளும் தொங்குவதைச் சூரியா கவனித்தான். நேற்றுத் தன்னைத் தாரிணி இருக்குமிடம் அழைத்துச் சென்ற ஆசாமி அணிந்திருந்த உடை தான் அது என்பதையும் தெரிந்து கொண்டான்.
தனியே உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்த ஒருவரைத் தாரிணி சுட்டிக்காட்டி, "அதோ தலைவர்!" என்றாள். சூரியா அவரிடம் சென்று, "இன்குலாப் ஜிந்தாபாத்!" (புரட்சி வாழ்க) என்று கோஷித்தான்.
புது ஆசாமி வந்திருப்பதைக் கண்டதும் எல்லாரும் வந்து கும்பலாகத் தலைவரைச் சுற்றி உட்கார்ந்தார்கள்.
"எங்கெங்கே போயிருந்தீர்? போன இடங்களில் எல்லாம் நாட்டின் நிலைமை எப்படியிருக்கிறது?" என்று சூரியாவைத் தலைவர் கேட்டார்.
"மத்திய மாகாணத்துக்கும், ஆந்திர தேசத்துக்கும், மதராசுக்கும் போயிருந்தேன். கிட்டத்தட்ட மதுரை வரையில் போனேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் ஜனங்களின் உள்ளம் எரிமலை போலக் குமுறிக் கொண்டிருந்தது. எந்த நிமிஷமும் எரிமலை வெடித்து நெருப்பைக் கக்கத் தொடங்கலாம். அந்த அக்கினிப் பிரவாகத்தில் பிரிட்டிஷ் ஆட்சி எரிந்து பொசுங்கி சாம்பலாகப் போகப் போகிறது."
"உம்முடைய நம்பிக்கைக்கு ஆதாரமென்ன? எதைக் கொண்டு சொல்லுகிறீர்?"
"சென்னையில் பென்ஷன் வாங்கும் மாஜி சப் ஜட்ஜ் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் ஹிட்லர் ஜயித்து இந்தியாவுக்குள் பிரவேசிக்கப் போகும் தினத்தை நிர்ணயிக்க ஜோசிய சாஸ்திரத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறார். தேவபட்டணத்தில் திவான் பகதூர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் நெடுங்காலம் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்திருந்தவர். 'ஜப்பான்காரன் வந்தால்தான் இந்தியாவுக்குக் கதிமோட்சம்' என்றார். எங்கெங்கே போனாலும் சாதாரண ஜனங்கள் 'இங்கிலீஷ்காரன் யுத்தத்தில் கட்டாயம் தோற்பான்; இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சி ஒழிந்து போகும்' என்ற ஆசையுடன் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்."
"ஆசையும் நம்பிக்கையும் இருந்து என்ன பிரயோஜனம்? பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிப்பதற்கும் சுயராஜ்யம் அமைப்பதற்கும் ஜனங்கள் எந்த விதத்தில் உதவி செய்யத் தயாராயிருக்கிறார்கள்? சென்ற வருஷத்தைப் போல இந்த ஆகஸ்டு 9-ந் தேதி தேசமெங்கும் புரட்சி இயக்கம் சுடர் விட்டு ஓங்கும் என்று எதிர்பார்த்தபடி ஒன்றும் நடக்கவில்லையே!"
"அந்த விஷயம் தான் ஏமாற்றமாயிருக்கிறது ஜெர்மெனியோ, ஜப்பானோ படையெடுத்து வந்து இந்தியாவுக்கு விடுதலை கிட்டும் என்று பெரும்பாலோர் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பலர் சுபாஷ் பாபு மலாய் நாட்டிலிருந்து சைன்யம் திரட்டிக் கொண்டு பர்மா வழியாக வரப் போகிறார் என்று எதிர் பார்க்கிறார்கள். சுதந்திரத்துக்காக நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் பெரும்பாலோர் மனதில் படவில்லை. பெயரும் செல்வாக்கும் இல்லாத தொண்டர்கள் சிலர் அங்கங்கே புரட்சிக் கொடியை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மேல் போலீஸார் பிரயோகிக்கும் பயங்கர முறைகள் பொது ஜனங்களைப் பீதியில் ஆழ்த்துகின்றன. போலீஸ் பயங்கரத்துக்கு ஓர் உதாரணத்தை நானே பார்த்தேன்.."
தேவபட்டணத்தில் வக்கீல் ஆத்மநாதய்யர் வீட்டில் ஆண்டு நிறைவுக் கலியாணத்தின் போது நடந்த போலீஸ் அட்டூழியத்தைப் பற்றிச் சூரியா விவரித்துக் கூறினான்.
எல்லாவற்றையும் கேட்டுவிட்டுப் புரட்சித் தலைவர் சொன்னார்: "மற்ற நாடுகளில் சுதந்திரப் போர் நடத்தியவர்கள் இதைக்காட்டிலும் எத்தனையோ மடங்கு பயங்கரங்களை அனுபவித்திருக்கிறார்கள். நீண்ட அன்னிய ஆட்சியின் பயனாக நம் ஜனங்கள் அடியோடு தீரத்தை இழந்து கோழைகளாகி விட்டார்கள். ஆனாலும் அங்கங்கே ஒரு சிலராவது பிடிவாதமாயிருக்கும் வரையில் நம்பிக்கை உண்டு. மக்களின் மனதிலுள்ள மனக்கசப்பு திடீரென்று ஒரு சமயம் பொங்கி எழாமற் போகாது. குமுறிக் கொண்டிருக்கும் எரிமலை வெடிக்கும் வரையில் புரட்சித் தீ அணையாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். சூரியா! உன்னுடைய வருகையைப்பற்றி இந்த ஊர்ப் போலீஸுக்குத் தகவல் தெரிந்து விசாரித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. நீ இன்றைக்கே இந்த ஊரை விட்டுப் போய்விடுவது நல்லது. கல்கத்தாவுக்குப் போகிறாயா? அங்கே முக்கிய காரியம் இருக்கிறது?" என்றார் தலைவர்.
"ஓ! போகிறேன்!" என்றான் சூரியா.
ஒருவேளை சீதா பிடிவாதம் பிடித்தால் அவளையும் கல்கத்தாவில் கொண்டுபோய் விடுவதற்குச் சௌகரியமாயிருக்கும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.
கல்கத்தாவில் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றித் தலைவர் அவனுக்கு விவரமாகக் கூறினார்.
மௌல்வி சாகிப் உட்கார்ந்து குர்ஆன் படித்துக் கொண்டிருந்த அறையின் ஒரு மூலையில் மரத்தினாலான குறுகிய மச்சுப் படிகள் அமைந்திருந்தன. சூரியாவும் தாரிணியும் இருண்ட மண்டபத்திலிருந்து அந்த அறைக்குள் வந்து மச்சுப்படி ஏறி மேலே சென்றார்கள். மாடி அறையில் கிடந்த இரண்டு பழைய பிரம்பு நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள்.
"கல்கத்தாவுக்கு எப்போது கிளம்புவதாக உத்தேசம்?" என்று தாரிணி கேட்டாள்.
"இன்றைக்கே புறப்பட்டாலும் புறப்படலாம். போவதற்கு முன்னால் சீதாவின் விஷயத்தைப் பற்றி முடிவு செய்ய வேண்டும். நீங்கள் டில்லியிலேயே இருக்கப் போகிறீர்களா?" என்று சூரியா வினவினான்.
"இல்லை; நான் பம்பாய் போகப் போகிறேன். பம்பாய் மாகாணத்தில் ஸதாரா ஜில்லாவில் ஆங்கில ஆட்சியின் அடிச்சுவடு கூட இல்லாமல் துடைத்து விட்டார்களாம். ஜனங்களின் குடியரசு சர்க்கார் நடைபெறுகிறதாம். இங்கிலீஷ் சர்க்காருக்கு ஒரு பைசாக் கூட வரி வசூல் ஆவதில்லையாம். அந்த அதிசயத்தை நேரில் போய்ப் பார்த்துவிட்டு வரும்படி எனக்கு உத்தரவு பிறந்திருக்கிறது. ஸதாரா ஜில்லாவில் நடப்பது போல் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு ஜில்லாவிலே நடந்தால் போதும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு மங்களம் பாடி விடலாம்."
"ஸதாராவுக்கு நீங்கள் தனியாகவா போகப் போகிறீர்கள்?"
"தனியாகப் போனால் என்ன? யார் என்னை என்ன செய்து விடுவார்கள்?"
"அப்படியா நினைக்கிறீர்கள்? ஒரு சமாசாரத்தைக் கேளுங்கள். நேற்று மைதானத்தில் நாம் பேசி முடித்த பிறகு நீங்கள் முதலிலே போய்விட்டீர்கள் அல்லவா? நீங்கள் போய்ச் சிறிது நேரத்துக்கெல்லாம் மூன்று ஆசாமிகள் என்னிடம் வந்தார்கள். உங்களைப் பிடித்துக்கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னார்கள்! முதலில் என் காதுகளை நான் நம்பவில்லை. அப்புறம் அவர்கள் உண்மையாகவே அப்படிச் சொல்வதாகத் தெரிந்து கொண்டேன்."
"இது என்ன விந்தை? எனக்காக ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவா சொன்னார்கள்? அப்படிப்பட்ட பைத்தியக்காரர்கள் யார்? போலீஸ்காரர்களாய் இருக்க முடியாது. புரட்சி இயக்கத்தின் மாபெரும் தலைவருக்கே ஐயாயிரம் ரூபாய்களுக்கு மேல் அவர்கள் பரிசு தரமாட்டார்களே? ஒருவேளை உங்களைக் 'கோட்டா' செய்வதற்காக அவ்விதம் சொல்லியிருப்பார்களோ!"
"அதெல்லாம் இல்லை; அவர்கள் உண்மையாகவே அவ்விதம் சொன்னார்கள் என்பது நிச்சயம். பிற்பாடு கூட என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு சுதேச சமஸ்தானத்து அரண்மனை ஆட்கள் என்று நினைக்கிறேன். யாரோ ஒரு ராஜாவோ நவாப்போ அவர்களுடைய எஜமானராயிருக்க வேண்டும்."
தாரிணி கலகலவென்று சிரித்துவிட்டு, "நல்ல வேடிக்கை சூரியா! ஒரு யோசனை! நம் இயக்கத்தை நடத்துவதற்குப் பணம் இல்லாமல் திண்டாடுகிறோம். இப்போது ஒரு வழி கிடைத்திருக்கிறதே? அடித்த அடியில் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்து விடலாமே. நீங்கள் இன்று கல்கத்தா போவதை ஒத்திப் போட்டு விட்டு எப்படியாவது அந்தப் பைத்தியக்காரர்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள். என்னை அவர்களிடம் ஒப்புவித்து விட்டு ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு விடுங்கள்" என்றாள்.
"இந்த வழியில் பணம் சேகரித்துப் புரட்சி நடத்திச் சுதந்திரம் பெறுவதைக் காட்டிலும் இந்தியா அடிமை நாடாகவே இருந்துவிட்டுப் போகட்டும்!" என்றான் சூரியா.
"எதனாலே அவ்வாறு சொல்கிறீர்கள்? கிடைக்கிற பணத்தை வேண்டாம் என்று சொல்லுவானேன்? அப்படியே அவர்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு என்னைப் பிடித்துக்கொண்டு போனால் என்ன செய்து விடுவார்கள்? நான் என்ன சிறு குழந்தையா? அல்லது என்னைக் கடித்துத் தின்று விடுவார்களா?"
"அப்படிக் கூடச் செய்வார்கள்தான்! ஏன் செய்ய மாட்டார்கள்? தாரிணி! இந்த உலகத்தில் மனுஷர்கள் என்ற ரூபத்தில் எத்தனை ராட்சஸர்கள் உலாவுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. எனக்கும் நேற்று இராத்திரி தான் அது துல்லியமாகத் தெரிய வந்தது. சீதா அந்த ராட்சஸ ராகவனிடம் அகப்பட்டுக் கொண்டு பட்ட பாட்டைப் பார்த்த பிறகு தான் தெரிந்தது!"
"அது என்ன விஷயம்? முன்னாலேயே நான் கேட்காமல் போனேனே? நேற்று இரவு சீதாவின் வீட்டுக்குப் போயிருந்தீர்களா? சீதா என்ன சொன்னாள்? ராகவனைப் பற்றி ரொம்பப் புகார் சொல்லியிருக்க வேண்டும் என்று தெரிகிறது" என்றாள் தாரிணி.
"சீதா சொல்லி நான் தெரிந்து கொள்ளவில்லை. சீதா முதலில் சொன்னதையெல்லாம் நான் நம்பக்கூடவில்லை. மூளை பிசகிப் போய் உளறுகிறாள் என்றே நினைத்தேன். நேரில் என் கண்ணால் பார்த்த பிறகு தான் சீதா உண்மையில் பத்தில் ஒன்று கூடச் சொல்லவில்லை என்று அறிந்து கொண்டேன்."
பிறகு சூரியா, சீதாவின் வீட்டுக்குத் தான் போனதிலிருந்து நடந்ததையெல்லாம் விவரமாகச் சொன்னான்.
கதையைக் கேட்டுக் கொண்டு வந்த தாரிணியின் முகத்தில் கவலையும் துயரமும் குடிகொண்டன.
"இதையெல்லாம் நீங்கள் நேரில் பார்த்ததாகச் சொல்லியிராவிட்டால் நான் நம்பவே மாட்டேன். ராகவன் இவ்வளவு மூர்க்கமான மனிதர் என்று நான் நினைக்கவே இல்லை."
"யார் தான் நினைத்தார்கள்? இப்படியெல்லாம் ஆகும் என்று தெரிந்திருந்தால், அவர்களுடைய கலியாணத்தை நான் நடத்தி வைத்திருப்பேனா? சீதாவின் தகப்பனாரிடமிருந்து வந்த தந்தியை மறைத்து வைத்துக் கலியாணம் தடைப்படாமல் செய்திருப்பேனா?"
"பிறத்தியாருடைய காரியங்களில் தலையிடுவது எவ்வளவு பிசகு என்று இதிலிருந்து தெரிகிறது. பெண்ணின் தகப்பனார் நன்றாக யோசிக்காமல் அவ்விதம் தந்தி அடித்திருப்பாரா? அதில் நீங்கள் தலையிட்டிருக்கக் கூடாது."
"இப்போது அதைச் சொல்லி என்ன பயன்? இத்தனை நேரம் சீதா மைதானத்துக்கு வந்திருந்தாலும் வந்திருப்பாள். அவளிடம் நான் என்ன சொல்வது? என்னோடு கல்கத்தாவுக்கு அழைத்துக்கொண்டு போகட்டுமா?" என்று கேட்டான் சூரியா.
"சீதாவின் வாழ்க்கையில் நீங்கள் தலையிட்டு ஒரு தடவை தவறு செய்தது போதாதா? மறுபடியும் அம்மாதிரி செய்ய வேண்டாம். நீங்கள் அவளைக் கல்கத்தாவுக்கு அழைத்துப் போனால் அத்துடன் அவளுடைய வாழ்க்கை முடிந்துவிடும். சீதாவுக்கு ஏதாவது தைரியம் சொல்லி அவளை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு நீங்கள் போங்கள். நான் அவளைப் பார்த்துக் கொள்கிறேன். இன்று இரவே ராகவனைப் பார்த்துப் பேசுகிறேன்" என்றாள் தாரிணி.
"இன்று ராத்திரியே ராகவனை எப்படிப் பார்ப்பீர்கள்?" என்ற சூரியாவின் கேள்வியில் ஆவலும் கவலையும் தொனித்தன.
"அவர் போகிற பார்ட்டிக்கே நானும் போக எண்ணியிருக்கிறேன்" என்றாள் தாரிணி.
"இது என்ன விபரீதம்! உங்கள் பெயரில் டில்லிப் போலீஸாரிடம் ஏற்கெனவே புகார் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். உத்தியோகஸ்தர்களின் பார்ட்டிக்கு எப்படிப் போவீர்கள்?"
"என் பெயரில்தானே புகார் இருக்கிறது? ஆனால் அந்தப் பெயர் என்னுடையது என்று ஒருவருக்கும் தெரியாது. இன்றைக்குப் பார்ட்டி கொடுக்கிறவர் வைஸ்ராய் நிர்வாக சபை மெம்பர். அவருடைய மனைவி எனக்கு ரொம்ப சிநேகிதம். இன்றைக்குப் பார்ட்டிக்குப் போய்விட்டு அவர் வீட்டிலேயே இரண்டு நாள் தங்கியிருக்கப் போகிறேன். அவரிடம் கவர்ன்மெண்ட் பாஸ் வாங்கிக் கொண்டு தான் பம்பாய்க்குப் பிரயாணமாவேன்."
"உங்களுடைய சாமர்த்தியத்தை நினைத்தாலே எனக்கு மூர்ச்சை போட்டு விடும்போலிருக்கிறது. நானுந்தான் சிற்சில வேஷங்கள் போட்டுக்கொண்டு சி.ஐ.டி.காரர்களிடமிருந்து தப்பியிருக்கிறேன். ஆனால் நீங்கள் செய்யும் காரியங்கள் ஒரே பிரமிப்பாயிருக்கின்றன."
"நாம் ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வதை அப்புறம் வைத்துக் கொள்ளலாம். இப்போது உடனே சென்று சீதாவைக் கவனியுங்கள். சீதாவின் தேக நிலைமையையும் மனோ நிலைமையையும் உத்தேசிக்கையில் அவள் தனியாக மைதானத்துக்கு வருவது பற்றி எனக்குப் பயமாயிருக்கிறது. இப்போது டில்லி நகரில் எங்கே பார்த்தாலும் அன்னிய சோல்ஜர்களும் சுதேசி சிப்பாய்களும் அலைந்தவண்ணம் இருக்கிறார்கள்."
"சோல்ஜர்களும் சிப்பாய்களும் மட்டுந்தானா? சுதேச சமஸ்தானக் கழுகுகளும் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. தாரிணி! நீங்களும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்."
"என்னை நான் பார்த்துக் கொள்வேன்; கவலை வேண்டாம். சீதாவைப் பற்றித்தான் கவலையாயிருக்கிறது. தயவு செய்து நீங்கள் உடனே போங்கள். சீதாவைச் சந்தித்து எப்படியாவது சமாதானப்படுத்தி இன்று ராத்திரி அவள் வீட்டில் கொண்டு சேருங்கள். ராகவனுடைய குணத்தில் இன்றைய தினமிருந்தே மாறுதல் இருக்கும், அதற்கு நான் ஜவாப்தாரி."
"அந்த மூர்க்கன் ராகவனை நீங்கள் பார்த்துப் பேசுவது என்பது எனக்குப் பிடிக்கவேயில்லை அவன் வெறும் தூர்த்தன்!"
"எனக்கு மட்டும் ராகவனைப் பார்த்துப் பேசப் பிடிக்கிறதா? சீதாவின் நன்மைக்காக அவ்விதம் செய்யப் போகிறேன்."
"தாரிணி! ஒரே ஒரு கேள்விக்குப் பதில் சொல்வீர்களா? சீதாவின் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு சிரத்தை கொண்டிருப்பதின் காரணம் என்ன?"
"அவள் புரட்சி வீரர் சூரியாவின் அத்தங்காள் என்னும் காரணம் போதாதா?" "என்னுடைய அத்தங்காள் என்பதற்காக அப்படிப் பணிவிடை செய்து அவளுடைய உயிரைக் காப்பாற்றத் தோன்றியிராது. அவளுடைய வசை மொழிகளையெல்லாம் பொருட்படுத்தாமல் அவளுடைய க்ஷேமத்தைக் கருதவும் தோன்றாது. வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்டும்."
"உங்களுடைய ஊகம் உண்மை தான்! அதற்கு வேறொரு முக்கிய காரணம் இருக்கிறது. உங்களுக்குச் சீதாவிடம் இருக்கும் அக்கறையைக் காட்டிலும் எனக்கு அதிகம் இருக்கக் காரணம் உண்டு. ஆனால் தயவு செய்து அந்தக் காரணம் என்னவென்று கேட்க வேண்டாம். அது இன்னொருவருடைய ரகசியம்; அவருடைய சம்மதம் இல்லாமல் நான் அதைச் சொல்லக் கூடாது" என்றாள் தாரிணி.
"போனால் போகட்டும் சீதாவிடம் உங்களுக்கு அவ்வளவு அக்கறை இருப்பதால் பம்பாய்க்குப் போகும்போது சீதாவின் தகப்பனாரைப்பற்றி ஏதாவது தகவல் உண்டா என்று விசாரியுங்கள். அவருடைய பழைய விலாசம் தருகிறேன். சீதாவின் நிலைமையை அவரிடம் தெரிவித்துவிட்டால் நம்முடைய பொறுப்புக் குறையும்."
"சூரியா! ஆச்சரியப்பட வேண்டாம்! சீதாவின் தகப்பனார் இருக்குமிடம் எனக்குத் தெரியும். ஆனால் அவரால் தற்சமயம் சீதாவுக்கு உதவி செய்ய முடியாது. அவருடைய தற்போதைய நிலைமையைச் சீதா அறிந்தால் சந்தோஷப்படவும் மாட்டாள்."
சீதாவின் தகப்பனார் ஏதோ பெரிய கிரிமினல் குற்றம் செய்து நீண்ட கால தண்டனையடைந்து சிறையில் இருக்க வேண்டும் என்று சூரியா நினைத்துக் கொண்டிருந்தான். தாரிணியின் வார்த்தை அதை உறுதிப்படுத்துவதாக நினைத்தான். ஆனால் சட்டென்று அவனுடைய மனக் கண்ணின் முன்னால் ஒரு முகம் வந்து நின்றது. தாடி வளர்த்துக் கொண்டிருந்த முஸ்லிம் மௌல்வியின் முகம் அது.
"தாரிணி! கீழே ஒரு மௌல்வி சாகிப் உட்கார்ந்து குர்ஆன் வாசித்துக் கொண்டிருக்கிறாரே? அவர் யார்? சொல்ல முடியுமா?" என்று கேட்டான்.
"சொல்ல முடியும் சூரியா! அந்த மௌல்வி சாகிபு தான் என்னுடைய தகப்பனார்!... தாங்கள் மூர்ச்சையடைந்து விழுவதற்குத் திண்டு மெத்தை கொண்டு வரட்டுமா?" என்றாள் தாரிணி.
அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் ஒரே மாதிரி குறுகலாயும் அசுத்தம் நிறைந்துமிருந்த சந்துகள் வழியாகச் சூரியாவை முஸ்லீம் லீக் தொண்டர் அழைத்துச் சென்று சற்று தூரத்தில் ஜும்மா மசூதி தெரியும் இடம் வந்ததும், "அதோ! ஜும்மா மசூதி! இனிப் போய் விடுவீர் அல்லவா?" என்றார். "வந்தனம்! இவ்வளவு தூரம் கூட நீங்கள் வந்திருக்க வேண்டியதில்லை" என்று சொல்லிவிட்டுச் சூரியா மைதானத்தை நோக்கி நடந்தான். நடக்கும்போதே அவனுடைய கால்கள் தடுமாறின. டில்லி நகரமே அவனைச் சுற்றிச் சுழல்வது போலிருந்தது. தாரிணி ஒரு முஸ்லீம் மௌல்வியைத் தன்னுடைய தகப்பனார் என்று சொன்னது அவ்வளவு தூரம் அவனுக்கு அதிர்ச்சி உண்டு பண்ணி விட்டது. அந்தச் செய்தியினால் அவனுடைய ஆகாசக் கோட்டைகள் பல தகர்ந்து இடிந்து அவன் தலை மீது விழுந்து கொண்டிருந்தன. ஆம்; அந்தச் செய்தி உண்மையானால் அவனுடைய வாழ்க்கையின் போக்கே மாற வேண்டியதுதான். ஒரு முஸ்லீம் பெண்ணை மணந்துகொள்ள வேண்டுமானால் தானும் ஒரு முஸ்லீம் ஆக வேண்டும். ஆயிரமாயிரம் வருஷங்களாக நிலைபெற்று உலகத்துக்கெல்லாம் வழி காட்டும் ஜோதியாக விளங்கும் சநாதன ஹிந்து தர்மத்தைத் துறந்துவிட அவன் தயாராயில்லை.
"ஒருவேளை பொய்யாயிருக்குமோ? நமக்குப் போக்குக் காட்டுவதற்காக அப்படிச் சொல்லியிருப்பாளோ?" என்ற எண்ணம் தோன்றியவுடனே, இன்னொரு விதமான சிந்தனைப் போக்கில் அவன் உள்ளம் ஆழ்ந்தது. ஆகா! அந்தப் பெண்ணை எந்த விதத்திலும் நம்புவதற்கில்லை. ஒரு பக்கத்தில் புரட்சிக்காரர்களுக்கு மத்தியில் தீவிர புரட்சிக்காரியாக விளங்குகிறாள். இன்னொரு பக்கத்தில் பெரிய பெரிய சர்க்கார் உத்தியோகஸ்தர்களுடன் சிநேகம் வைத்துக்கொண்டிருக்கிறாள். ஆங்கில நவீனங்களிலே யுத்த காலத்தில் அழகு வாய்ந்த பெண்கள் ஒற்று வேலை செய்வதைப் பற்றிப் படித்திருக்கிறோமல்லவா? அவர்கள் எந்தக் கட்சிக்காக ஒற்று வேலை செய்கிறார்கள் என்பதைக் கடைசி வரையில் கண்டுபிடிக்க முடிகிறதேயில்லை. இந்தத் தாரிணியையும் அந்த ரகத்தில் சேர்க்க வேண்டியதுதான். "என்னைப் பிடித்துக் கொடுத்துவிட்டு ஒரு லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்ளுங்கள்!" என்று எவ்வளவு சர்வ சகஜமாகக் கூறினாள். வைஸ்ராய் நிர்வாக சபை அங்கத்தினர்களுடன் சாதாரணமாகப் பழகக்கூடியவள் தன்னைப் போன்ற ஏழை வாலிபனிடம் அன்பு கொண்டிருப்பதாகச் சொல்வதை எப்படி நம்புவது? சௌந்தரராகவனிடம் அவளுக்கிருக்கும் செல்வாக்கைப் பற்றி நினைத்தாலும் பலவித சந்தேகங்களுக்கு இடம் ஏற்படுகிறது. சீதா விஷயத்தில் இவளுடைய உண்மையான மனப்பாங்கு தான் என்ன? சீதாவின் க்ஷேமத்தில் அவள் அக்கறை கொண்டிருப்பதாகச் சொன்னதெல்லாம் ஏதோ ஒரு அந்தரங்க நோக்கத்துடன் இருக்குமோ? அப்படியானால் அந்த நோக்கம் என்ன?
அந்தப் பேதைப் பெண் சீதாவை இவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து ஏறக்குறைய பைத்தியமாக அடித்து விட்டார்கள்? தாரிணியின் வார்த்தையை நம்பி அந்த அனாதையை கைவிட்டுத் தான் கல்கத்தாவுக்குப் போய்விடுவது சரியா?
இவ்விதமெல்லாம் யோசனை செய்து கொண்டே ஜும்மா மசூதியைத் தாண்டி அப்பால் வெள்ளி வீதிக்குள் சூரியா பிரவேசித்தான். டவுன் ஹாலை அடைந்ததும் அங்கே வீதி ஓரத்தில் சீதா தன்னந்தனியாக நிற்பதைக் கண்டான். விரைந்து அவளிடம் சென்று, "சீதா! நீ இங்கே வந்து ரொம்ப நேரமாகி விட்டதா?" என்றான்.
"கால் மணி நேரந்தான் ஆயிற்று; ஆனாலும் சாலையில் போகிறவர்கள் என்னை உற்று உற்றுப் பார்த்துவிட்டுப் போவது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இன்னும் ஐந்து நிமிஷத்துக்குள் நீ வராவிட்டால் வீட்டுக்குத் திரும்பிப் போய்விடுவது என்று எண்ணி கொண்டிருந்தேன். நல்ல வேளையாக நீ வந்து விட்டாய்!" என்று சொன்னாள் சீதா.
சூரியாவின் மனதில் அப்போது, ஐந்து நிமிஷம் கழித்து 'வராமற் போனோமே!' என்று தோன்றியது. அப்படித் தாமதித்திருந்தால் சீதா திரும்பிப் போயிருப்பாள். தனக்குப் பொறுப்பு ஒன்றும் இல்லாமல் போயிருக்கும். மறுகணம் சூரியாவுக்குத் தன்னுடைய சுயநல எண்ணம் வெட்கத்தை அளித்தது. அநாதை சீதாவுக்கு யாருமே சிநேகம் இல்லை; அனுதாபத்துடன் அவளுக்கு உதவி செய்வாரும் கிடையாது. நாமும் இப்படி அவளைக் கைவிட எண்ணினால்?...
இருவரும் டவுன் ஹாலுக்குப் பின்புறமுள்ள சாலையின் வழியாகக் காந்தி மைதானத்தை நோக்கி நடந்தார்கள். முதல் நாள் தாரிணியுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அதே மரத்தடிக்குச் சூரியா சீதாவை அழைத்துச் சென்றான். வழியில் அவர்கள் ஒன்றுமே பேசவில்லை. ஏனெனில் நடக்கும் போது சூரியாவின் மனம் சீதாவின் விஷயத்தில் தன்னுடைய கடமை என்ன என்பதைப் பற்றி மிகத் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தது.
மரத்தடியில் சென்று உட்கார்ந்ததும் சீதா அக்கம் பக்கம் பார்த்து விட்டு, "அம்மாஞ்சி! நீ உடனே இந்த ஊரை விட்டுப் போய்விடு! உன்னைப் போலீஸார் பிடிப்பதற்குத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். டெலிபோனில் உன் மாதிரி பேசி என்னிடம் விஷயம் தெரிந்து கொள்ள முயன்றவர்கள் போலீஸார் தான். இதை எப்படியாவது உன்னிடம் சொல்லி விட்டுப் போகத்தான் நான் முக்கியமாக இங்கே வந்தேன். டெலிபோனில் சொல்வதற்கும் பயமாயிருந்தது. நடுவில் யாராவது டெலிபோனில் பேச்சை ஒட்டுக் கேட்டாலும் கேட்கக் கூடுமல்லவா? இன்றைக்கு ராத்திரியே புறப்பட்டுப் போய்விடு, சூரியா!" என்று படபடவென்று பேசினாள்.
"அத்தங்கா! என்னைப் பற்றி உனக்கு ஏன் இவ்வளவு கவலை? போலீஸார் என்னைப் பிடித்துவிட்டால் தான் என்ன? எந்த நிமிஷமும் கைதியாகிச் சிறைக்குப் போவதற்கு நான் தயாராகத் தான் இருக்கிறேன். உன்னுடைய விஷயத்தைப் பற்றிப் பேசு சீதா! நேற்றிரவு நான் வாசலில் போவதாகப் போக்குக் காட்டி விட்டுத் தோட்டத்திற்குத் திரும்பி வந்து ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். உன்னை ராகவன் கை நீட்டி அடித்ததைப் பார்த்தபோது எனக்கு இரத்தம் கொதித்தது. கைத்துப்பாக்கியால் சுட்டுவிடலாம் என்று கூட எண்ணினேன். நீ உன் அகத்துக்காரர் மீது புகார் சொன்னபோது எனக்கு அவ்வளவு நம்பிக்கை உண்டாகவில்லை. ஸ்திரீகளுடைய சுபாவமே புகார் சொல்வதுதான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ஆனால் ராகவன் உன்னை நடத்திய விதத்தைப் பார்த்த பிறகு சந்தேகமில்லாமல் போய் விட்டது. இப்பேர்ப்பட்ட ராட்சதன் உனக்குப் புருஷனாக வாய்த்தானே, நான் அதற்குக் காரணமாயிருந்தேனே என்று எண்ணி எண்ணி நேற்று இரவெல்லாம் நான் தூங்கவில்லை. இப்படிப்பட்ட புருஷனை விட்டு விட்டு நீ ஓடிப் போக எண்ணினால் நான் உன் பேரில் குற்றம் சொல்லமாட்டேன். நானே உன்னை அழைத்துப் போகத் தயாராயிருக்கிறேன். என்னுடன் நீயும் வா! அமரநாத்தின் வீட்டில் உன்னை ஒப்புவித்து விட்டுப் பிறகு நான் என் காரியத்தைப் பார்க்கிறேன். அமரநாத்தும் அவன் மனைவி சித்ராவும் எனக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். உன்னை வைத்துக் காப்பாற்றுவார்கள்...."
இவ்வளவு நேரம் அரைமனதாகக் கேட்டுக் கொண்டிருந்த சீதா இப்போது குறுக்கிட்டு, "சூரியா! அந்த யோசனையெல்லாம் இனி வேண்டாம். நான் என்ன செய்வது என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்!" என்று சொன்னாள்.
"அத்தங்கா! அந்த மாதிரி முடிவு செய்ய வேண்டாம். நீ எதற்காக உயிரை விடவேண்டும்? ராகவனைப் போன்ற ஈவிரக்கமில்லாத கிராதகனுக்காகவா? என்னுடைய உடம்பில் மூச்சு உள்ள வரையில் உன்னை நான் சம்ரக்ஷிப்பேன். இந்த உலகமெல்லாம் உனக்கு விரோதமாயிருந்தாலும் நான் உன்னுடைய கட்சியில் இருப்பேன். ஏதாவது கெட்ட பெயர் வருகிறதாயிருந்தால் அந்தக் கெட்ட பெயரை நான் உன்னுடன் பகிர்ந்து கொள்கிறேன். உயிரை விடுகிற எண்ணத்தை மட்டும் நீ விட்டு விட வேண்டும்!" என்று சூரியா உணர்ச்சி பொங்கக் கூறினான்.
"சூரியா! உயிரை விடுவது பற்றி யார் பேசினார்கள்? உயிரை விடும் உத்தேசம், என் அகத்துக்காரரை விட்டுப் போகும் உத்தேசம் இரண்டையும் நான் கைவிட்டு விட்டேன். அவருடைய மனம் போல் நடந்து அவருடைய திருப்தியைச் சம்பாதித்துக் கொள்வது என்று முடிவு செய்து விட்டேன். உனக்கு ஒருவேளை வியப்பாயிருக்கும். நேற்று இராத்திரி சம்பவத்துக்குப் பிறகு இத்தகைய தீர்மானம் நான் எப்படிச் செய்தேன் என்று ஆச்சரியப்படுவாய். ஒருவேளை நம்பக்கூட மாட்டாய், ஆனாலும் நான் சொல்வது உண்மை. இன்றைக்கு மத்தியானம் ஒரு பத்திரிகையில் கஸ்தூரிபாய் காந்தியின் சரித்திரத்தை வாசித்தேன். அதுதான் என் மனதை மாற்றி விட்டது. கஸ்தூரிபாய் காந்தி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறாள் தெரியுமா? எழுபதாவது வயதில் ஜெயிலுக்குப் போயிருக்கிறாள்! அவள் அல்லவா உத்தமி; நானும் என் கணவர் இஷ்டப்படி இனிமேல் நடந்து கொள்கிறது என்று தீர்மானித்திருக்கிறேன்."
சூரியாவின் தலையிலிருந்து ஒரு பெரிய பாரம் நீங்கியது போலத் தோன்றியது. சீதாவின் முடிவு அவனுடைய இருதயத்துக்கு உகந்ததாயிருந்தது. ஆனால் அவனுடைய அறிவு அந்த முடிவை ஆட்சேபித்தது. சீதாவைப் பார்த்து அவன் கூறியதாவது:- "ஸ்திரீகளின் மனதைக் கண்டுபிடிக்கவே முடியாது என்கிறார்களே, அது வாஸ்தவமாகத்தானிருக்கிறது. பெண்களின் சஞ்சலப் புத்தியைப் பற்றிப் பெரியோர்கள் சொல்லியிருப்பதிலும் தவறில்லை. இரண்டுக்கும் நீயே உதாரணமாயிருக்கிறாய். நேற்று இரவு எப்படிப் பேசினாய்? இன்றைக்கு எப்படிப் பேசுகிறாய்? புருஷன் என்ன கொடுமை செய்தாலும் மனைவி பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்னும் கட்சியை நான் ஒப்புக்கொள்ள முடியாது. அதெல்லாம் பழைய காலம். பெண்களை அடிமைப்படுத்தப் புருஷர்கள் எழுதி வைத்த சாஸ்திரங்கள் சொல்லும் கடமை. 'ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானம்' என்பது இந்தக் காலத்துத் தர்மம். கஸ்தூரிபாய் காந்தியைப் பற்றிக் கூறுகிறாயே? கஸ்தூரிபாயின் கணவர் உலகம் போற்றும் உத்தமர். மகாத்மா காந்தியோடு மற்றவர்களை இணை சொல்ல முடியுமா?"
"சூரியா! காந்திஜியின் இஷ்டத்தைப்போல் கஸ்தூரிபாய் நடந்து கொள்ள ஆரம்பித்தபோது அவர் மகாத்மா ஆகியிருந்தாரா? இல்லையே? ரொம்ப சாதாரண மனிதராகத் தானே இருந்தார்? அப்போது முதல் கஸ்தூரிபாய் கணவரைத் தெய்வம் என்று நினைத்து நடந்தபடியால் தான் காந்திஜி மகாத்மா ஆனார். பெண்களின் சுதந்திரத்தைப் பற்றியும் நான் யோசித்துப் பார்த்தேன். சூரியா! எனக்கு இவர் எல்லாவிதமான சுதந்திரமும் கொடுத்துத் தான் இருந்தார்! நான் எங்கே போனாலும் ஏன் போனாய் என்று கேட்பதில்லை. யாரோடு பேசினாலும் ஏன் பேசினாய் என்று கேட்பதில்லை. நான் தான் அவரை அப்படியெல்லாம் கேட்டு அவருடைய வாழ்க்கையை நாசமாக்கினேன். எனக்கு அவர் பூரண சுதந்திரம் கொடுத்திருந்தார். நான் அவருக்கு எந்தவிதமான சுதந்திரமும் கொடுக்கவில்லை. யோசிக்க யோசிக்கத் தப்பெல்லாம் என் பேரில் தான் என்று உணர்கிறேன். என்னுடைய மூளை எப்படியோ கெட்டுப் போயிருந்தது. இப்போது நிச்சயமாக முடிவு செய்துவிட்டேன். இனிமேல் நீ என் மனதை மாற்ற முயல்வதில் பயனில்லை" என்றாள் சீதா.
சூரியா திகைத்துப் போய்விட்டான். "நான் உன் மனதை மாற்ற முயலவேயில்லை. எப்படியாவது நீ ராகவனுக்கு உகந்த மாதிரி நடந்து அவனைச் சீர்திருத்தினால் சரிதான். நீயும் ராகவனும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தினால் அதைக் காட்டிலும் எனக்குச் சந்தோஷம் வேறில்லை. புறப்படு, போகலாம்! இருட்டி விட்டது. உன்னை உன்னுடைய வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு என் காரியத்தைப் பார்க்கப் போகிறேன்" என்றான்.
"நீ என்னுடன் வரவேண்டாம்; ஒரு டாக்ஸி பிடித்து என்னை அதில் ஏற்றிவிட்டால் போதும். இல்லாவிடில் நானே பிடித்துக் கொள்கிறேன்" என்று சீதா சொன்னாள்.
"அது மாத்திரம் முடியாது, சீதா! என்னுடைய கடமையை நான் செய்தே தீருவேன். இப்போதெல்லாம் டில்லியில் எங்கே பார்த்தாலும் அபாயம் அதிகமாகி வருகிறது. ஸ்திரீகள் தனியாகப் போவது உசிதமல்ல அதிலும் இருட்டிய பிறகு போகவே கூடாது."
"எனக்கு என்ன அபாயம் வந்துவிடும், சூரியா! நீ எதற்காக என்னைப் பற்றி வீணில் பயப்படுகிறாய்?"
"உனக்குத் தெரியாது, நேற்றுச் சாயங்காலம் தாரிணியும் நானும் இதே மரத்தடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.."
"தாரிணியோடு இந்த இடத்திலேயே பேசிக் கொண்டிருந்தாயா? என்னிடம் சொல்லவே இல்லையே?" என்று கேட்ட சீதாவின் குரலில் இத்தனை நேரம் இல்லாத ஈருஷை தொனித்தது.
"உன்னிடம் சொல்லச் சந்தர்ப்பம் ஏற்படாதபடியால் சொல்லவில்லை; அதனால் என்ன?"
"அதனால் என்ன? ஒன்றுமில்லை; நீயும் தாரிணியும் எதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தீர்கள்? இந்த மரத்தின் அடிக்கு எதற்காக வந்தீர்கள்?"
"தனியாகப் பேச வேண்டியிருந்தது; அதனால்தான் வந்தோம். இன்றைக்கு நாம் இருவரும் வரவில்லையா?"
"தனியாக நீங்கள் என்ன பேசினீர்கள் என்று கேட்டேன்."
"பல விஷயங்களைப் பற்றியும் பேசினோம். முக்கியமாக, புரட்சி இயக்கத்தை மேலே நடத்துவது பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம், உன்னைப் பற்றியும் பேசினோம்."
"என்னைப் பற்றி என்ன பேசினீர்கள்? தாரிணியுடன் நீ என்னைப் பற்றிப் பேசுவதற்கு அவசியம் என்ன?" என்று சீதா கேட்டாள்.
"உன்னுடைய உடல்நிலையும் உள்ளத்தின் நிலையும் சரியாயில்லாதது பற்றிப் பேசினோம். உனக்கு எப்படி உதவி செய்வது என்று யோசித்தோம்."
"எனக்கு ஒரு உதவியும் தேவையில்லை. என்னமோ சொல்ல வந்தாயே அதைச் சொல்! நீயும் தாரிணியும் இங்கே பேசிக் கொண்டிருந்தீர்கள் அப்புறம்?"
"தாரிணி போன பிறகு நான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு மூன்று ஆசாமிகள் வந்தார்கள். வந்து லோகா பிராமமாகக் கொஞ்ச நேரம் பேசினார்கள். பிறகு தங்கள் நோக்கத்தை வெளியிட்டார்கள். அதாவது தாரிணியை அவர்கள் கைப்பற்றிக் கொண்டு போவதற்கு நான் உதவி செய்தால் எனக்கு லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னார்கள்! நன்றாயிருக்கிறதல்லவா?"
"இது என்ன அநியாயம்? அப்படிப்பட்ட மனிதர்கள் யாராயிருக்கும்?" என்றாள் சீதா.
"ஏதோ ஒரு சுதேச சமஸ்தானத்து ஆட்கள் என்று தோன்றியது. இந்த 1943-ஆம் வருஷத்தில் வைஸ்ராய் வேவலின் ஆட்சியின் கீழ் டில்லி நிலைமை இப்படி இருக்கிறது. இருட்டிலே உன்னைத் தனியாக அனுப்ப எப்படி எனக்கு மனம் வரும்?"
"சூரியா! என் விஷயத்தில் அந்த மாதிரிக் கவலை உனக்கு வேண்டாம். தாரிணியைப் போன்ற அழகிக்கு லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னால், எனக்கும் அப்படிச் சொல்வார்களா? என் மூஞ்சி இருக்கிற லட்சணத்துக்கு என்னை ஏலம் போட்டாலும் ஒரு லட்சம் பைசாக்கூட யாரும் கொடுக்க மாட்டார்கள். என் அகத்துக்காரர் தாரிணியை வேண்டாம் என்று சொல்லி விட்டு என்னை இஷ்டப்பட்டுக் கலியாணம் செய்து கொண்டாரே, அதை நினைத்தால் அவருக்கு எவ்வளவோ நான் நன்றியோடிருக்க வேண்டும்."
"அப்படி நீயிருப்பதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. இன்று உன்னை உன் வீட்டுக்குக் கொண்டு போய் விட்டுவிடுகிறேன். அது என்னுடைய கடமை இல்லாவிட்டால் என் மனது அடித்துக் கொண்டேயிருக்கும்."
"சூரியா! உன்னை வரவேண்டாம் என்று நான் சொல்லுவது உனக்காகத் தான். எங்கள் வீட்டுக்கருகில் போலீஸார் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீ அவ்விடம் வந்தால் உடனே உன்னை அரெஸ்டு செய்து விடுவது என்று காத்திருக்கிறார்கள்..."
"அரெஸ்டைப் பற்றி எனக்குக் கொஞ்சமும் கவலையில்லை என்று தான் முன்னமே சொன்னேனே?"
"உனக்குக் கவலையில்லை என்பது சரிதான். நீ எப்போது கைதியாவோம், ஜெயிலுக்குப் போய் நிம்மதியாயிருப்போம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாய். ஆனால் என் அகத்துக்காரர் சர்க்கார் உத்தியோகஸ்தர் என்பதை நீ கவனித்தாயா? எங்களுடைய வீட்டில் உன்னைக் கைது செய்யும்படி நேர்ந்தால் அவருடைய நிலைமை என்ன ஆகும்? அவருடைய உத்தியோகத்துக்கு ஆபத்து வராதா?"
சூரியா ஒரு நிமிஷம் திகைத்து ஸ்தம்பித்துப்போய் விட்டான். பிறகு "மன்னிக்க வேண்டும், சீதா! அந்த விஷயத்தை நான் எண்ணிப் பார்க்கவேயில்லை. போகட்டும்; நான் உன் வீடு வரையில் வரவில்லை. வீட்டுக்குக் கொஞ்ச தூரம் வரையில் வருகிறேன். அப்புறம் நீ தனியே போய்விடு இவ்வளவாவது செய்தால் தான் என் மனம் நிம்மதியடையும்" என்றான் சூரியா.
"நல்லது; அப்படியே செய். உன் மனது நிம்மதி அடையட்டும்" என்று சீதா சம்மதித்தாள்.
இருவரும் அந்த மரத்தடியிலிருந்து புறப்பட்டார்கள். மைதானத்திலிருந்து வெள்ளி வீதிக்குப் போகும் சாலை ஜன நடமாட்டம் இல்லாமலிருந்தது. அந்தச் சாலையில் ஓரிடத்தில் ஒரு பெரிய மோட்டார் நின்று கொண்டிருந்தது. அதனுடைய பின்புறத்திலிருந்த 1111 என்னும் நம்பர் சூர்யாவின் மனதில் பதிந்தது. வண்டிக்குள் இரண்டு பேர் இருந்தார்கள். வண்டிக்கு வெளியில் சாலை ஓரத்து வேலிக்கருகில் நின்று இருவர் சுருட்டுப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். வண்டியைத் தாண்டிச் சென்ற போது சூரியாவின் மனதில் ஒரு சந்தேகம் உதித்தது. ஆனால் அதைத் தீர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பம் அதுவல்ல என்பதை உணர்ந்தான். பின்னர் கொஞ்சம் வேகமாகவே நடந்தான்.
சூரியாவும் சீதாவும் வெள்ளி வீதியை அடைந்து மணிக்கூண்டுக்கு அருகில் ஒரு டாக்ஸியைப் பிடித்தார்கள். அதில் ஏறி உட்கார்ந்ததும், வண்டி புதுடில்லியை நோக்கிப் போயிற்று.
அவர்கள் ஏறிய டாக்ஸியைப் பின்னால் ஒரு மோட்டார் வண்டி தொடர்ந்து வருகிறது என்று சூரியா சந்தேகித்தான். அதை நிச்சயம் செய்துகொள்ள முடியவில்லை! புது டில்லிச் சாலையில் மோட்டார் வண்டிகள் முன்னும் பின்னும் போகாமலா இருக்கும்? வண்டி வேகமாய்ச் சென்றது; ஜந்தர் மந்தர் என்னும் வான சாஸ்திர ஆராய்ச்சிக் கூடத்தைக் கடந்ததும் சீதா, "இங்கேயே வண்டியை நிறுத்திவிடலாம். எங்களுடைய வீடு இன்னும் கொஞ்ச தூரந்தான் இருக்கிறது" என்றாள்.
"சரி என்று சொல்லிச் சூரியா வண்டியை நிறுத்தச் செய்தான்.
"நான் இவ்விடம் இறங்கிக் கொள்ளட்டுமா? நீ வீட்டுக்குப் போய் வண்டியை அனுப்பிவிடுகிறாயா?"
"வேண்டாம்! டாக்ஸிக் காரில் போய் இறங்கினால் வேலைக்காரர்கள் ஏதாவது நினைத்துக் கொள்வார்கள். நடந்து போனால் வழக்கம்போல் உலாவப்போய் வருவதாக எண்ணிக் கொள்வார்கள். இங்கிருந்து நடந்தே போய்விடுகிறேன். இரண்டு பர்லாங்கு தூரம் கூட இராது" என்றாள் சீதா.
"சரி" என்றான் சூரியா.
சீதா வண்டியிலிருந்து இறங்கியதும், "இன்று ராத்திரியே கல்கத்தா போகப் போகிறாயல்லவா? கட்டாயம் போய்விடு, சூரியா!" என்றாள்.
"போகத்தான் போகிறேன், சீதா?"
"நாம் மறுபடியும் எப்போது சந்திக்கிறோமோ என்னமோ? ஆனால் என்னிடம் உனக்குள்ள அபிமானத்தையும் நீ எனக்குச் செய்திருக்கும் உதவியையும் ஒருநாளும் நான் மறக்கமாட்டேன்" என்றாள் சீதா.
"நானும் உன்னை ஒருநாளும் மறக்க முடியாது, அத்தங்கா!"
சீதா சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தாள். சூரியா வண்டியிலிருந்து இறங்கி அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான்.
வெண்ணிலா துல்லியமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. பக்கத்து வீடுகளின் தோட்டங்களிலிருந்து இரவு பூக்கும் மலர்களின் சுகந்தம் வந்துகொண்டிருந்தது. காற்று மிருதுவாக வீசிற்று; பக்கத்து வீடு ஒன்றிலிருந்து, "ஸோஜா ராஜ குமாரி! ஸோஜா!" என்னும் கிராமபோன் கீதம் கேட்டுக் கொண்டிருந்தது.
இத்தகைய சூழ்நிலையில் சீதா மேலே மேலே அந்தச் சாலையில் தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருந்தது ஏதோ ஒரு சினிமாப் படத்தில் வரும் காட்சியைப் போல் தோன்றியது.
சீதாவின் வருங்கால பாக்கியம் எப்படியோ? அவளுடைய மன மாறுதலைப்பற்றி அவள் சொன்னதெல்லாம் உண்மைதானா? அல்லது நம்மிடம் அவ்விதம் சொல்லிவிட்டுச் சென்று, விஷத்தை அருந்திச் சாகப் போகிறாளா? அப்படி நேர்ந்தால் அந்தச் சாவில் நமக்கு பொறுப்பு இல்லாமல் போகுமா?" என்று சூரியா எண்ணமிட்டுக் கொண்டிருந்தான்.
பின்னால் தொடர்ந்து வந்துகொண்டிருந்த கார் சூரியாவைத் தாண்டிப் போயிற்று. அதனுடைய நம்பர் 1111 என்பது மறுபடியும் அவனுடைய கண்ணில் பட்டுக் கவனத்தில் பதிந்தது.
வேகமாகச் சென்ற அந்த மோட்டார் கார் பட்டென்று பிரேக் போடப்பட்டுச் சீதாவின் அருகில் நின்றது. வண்டியிலிருந்து இரண்டு பேர் குதித்தார்கள். சீதாவைப் பலவந்தமாகக் காருக்குள் தள்ளினார்கள். தாங்களும் ஏறிக்கொண்டார்கள், கதவு சாத்தப்பட்டது. வண்டி 'கிர்' என்ற சத்தத்துடன் திரும்பி சூரியா நின்ற வழியாகவே மறுபடியும் வரத் தொடங்கியது.
இவ்வளவும் சுமார் அரை நிமிஷத்துக்குக் குறைவான நேரத்தில் நடந்துவிட்டது. சூரியாவின் மூளை சற்று நேரம் செயலிழந்து போயிருந்தது. ஆனால் அந்த வண்டி நின்ற இடத்தைத் தாண்டிச் சென்றபோது மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. வண்டிக்குள்ளிருந்து 'அம்மாஞ்சி' என்ற தீனக்குரல் வந்தது போலத் தோன்றியது. சூரியா தன் கால்சட்டைப் பையிலேயே வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அந்த வண்டியின் டயர்களை நோக்கிச் சுட்டான். டயர் மீது குண்டு படவில்லை. சட்டென்று பக்கத்தில் நின்ற டாக்ஸிக்குள் ஏறிக்கொண்டு, "அதோ அந்த வண்டிக்குப் பின்னால் விடு! உனக்கு வேண்டியதைத் தருகிறேன்! இல்லாவிட்டால் உன்னைச் சுட்டுக் கொன்று விடுவேன்!" என்றான்.
"பெட்ரோல் குறைவாக இருக்கிறது, சாகிப்!" என்றான் வண்டியின் டிரைவர்.
"அதனால் பரவாயில்லை பெட்ரோல் இருக்கிறவரையில் வண்டியை ஓட்டு சீக்கிரம்!" என்றான் சூரியா.
இந்தச் சமயம் பார்த்து ஒரு போலீஸ்காரன் அங்கு வந்து "சுட்டது நீதானா? அந்தத் துப்பாக்கியை இப்படிக் கொடு!" என்று கேட்டான்.
சூரியா அந்தப் போலீஸ்காரனைப் பிடித்து வேகமாக ஒரு தள்ளுத் தள்ளினான். போலீஸ்காரன் தூரப் போய் விழுந்தான். "ஜாவ்! ஜாவ்!" என்று சூரியா அதட்டினான். டாக்ஸி டிரைவரும் மூளை குழம்பிப் போய் வண்டியை அதி வேகமாக விட்டுச் சென்றான்.
விழுந்த போலீஸ்காரன் எழுந்து மூன்று தடவை விசில் ஊதினான். சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு ஜீப் வண்டி வந்தது. அதில் நாலு போலீஸ்காரர்கள் இருந்தார்கள். இந்தப் போலீஸ்காரனும் அதில் ஏறிக்கொண்டு ஏதோ சொன்னான். ஜீப் வண்டி இரண்டு வண்டிகளைத் தொடர்ந்து அதிவேகமாகச் சென்றது.
சீதாவை ஏற்றிக்கொண்ட மோட்டார் புது டில்லியிலிருந்து ஷாஜஹான் புரத்தை நோக்கி அதிவிரைவாகச் சென்றது. வெள்ளி வீதி வழியாகப் போய், ஜும்மா மசூதியைத் தாண்டி, செங்கோட்டையை வலப் புறத்தில் விட்டு, ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து அப்பால் சென்று, யமுனைப் பாலத்தை நெருங்கிற்று.
முதலில் சிறிது நேரம் சீதா திக்பிரமை கொண்டிருந்தாள். பின்னர் சூரியாவின் எச்சரிக்கை நினைவு வந்தது. தன்னைப் பின் தொடர்ந்து சூரியா வருகிறான் என்ற எண்ணத்தினால் சற்றுத் தைரியமாயிருந்தாள். எப்படியும் சூரியாவின் கார் இந்தக் காரைப் பிடித்துவிடும் என்று நம்பியிருந்தாள். ஆனால் யமுனைப் பாலத்தைக் கார் நெருங்கியதும் அவளுடைய மனதில் 'திக்' என்றது. அது மிகவும் குறுகலான பாலம், வண்டிகள் ஒரு வரிசை தான் அதில் போகலாம். இரண்டு பக்கத்திலிருந்தும் வரும் வண்டிகள் ஒரே சமயத்தில் அந்தப் பாலத்தில் போக முடியாது. பாலத்தின் இரு முனைகளிலும் போலீஸ்காரர்கள் நிற்பார்கள். ஒரு பக்கத்துக் கார்களை விடும்போது மற்றொரு முனையில் உள்ள போலீஸ்காரர்கள் அங்கு வரும் கார்களையெல்லாம் தடுத்து நிறுத்தி வைப்பார்கள். பிறகு இந்த முனையிலிருந்து கார்களை விடும்போது அந்த முனையிலிருந்து வரும் வண்டிகளை நிறுத்தி வைப்பார்கள். இது சீதாவுக்கு நினைவு வந்தது. தான் ஏறியுள்ள வண்டியைப் பாலத்தில் போக விட்டு விட்டு, பின்னால் வருகிற சூரியாவின் காரை நிறுத்திவிட்டால் என்ன செய்கிறது என்ற துணுக்கமடைந்தாள். சூரியாவின் வண்டியோ பின்னால் இரண்டு பர்லாங்கு தூரத்தில் வந்து கொண்டிருந்தது.
சீதா பயந்தவண்ணமே ஆயிற்று; அவள் ஏறியிருந்த வண்டி பாலத்தில் சென்றதும், பின்னால் வருகிற வண்டிகள் நிற்க வேண்டும் என்று போலீஸ்காரன் கையைக் காட்டி விட்டான். சீதாவின் வண்டி பாலத்தைக் கடந்தவுடனே அந்த முனையில் காத்திருந்த வண்டிகள் பாலத்தில் விடப்படுவதைச் சீதா கவனித்தாள். உடனே ஒரு பெரும் பீதி சீதாவை பற்றிக் கொண்டது. அவளுடைய வயிற்றிலிருந்து குடல் மேலே கிளம்பி மார்பை அடைத்தது போலவும் மார்பிலிருந்து நெஞ்சு கிளம்பித் தொண்டையை அடைத்தது போலவும் இருந்தது. தலைக்குள்ளே வெடிகுண்டு வெடித்து நாலாபுறமும் சிதறிச் சென்றது போலத் தோன்றியது. தன்னையறியாத ஆக்ரோஷத்துடன் 'வீல்' என்று ஒரு தீர்க்கமான கூச்சல் போட்டுக் கொண்டு சீதா ஓடுகிற காரிலிருந்து குதிக்க முயன்றாள். பக்கத்திலிருந்த மனிதன் அவளுடைய முகத்தைப் பார்த்து ஓங்கி ஒரு அறை கொடுத்தான். உடனே சீதாவின் கூச்சல் நின்றது. காரிலிருந்து குதிக்கும் முயற்சியும் நின்றது. வண்டிக்குள் நிசப்தம் குடிகொண்டது. எதிர்ப்புறமாகப் போய்க்கொண்டிருந்த வண்டிகளிலிருந்து சிலர் இந்த வண்டியிலிருந்து ஏதோ கூச்சல் வந்ததைக் கவனித்துக் காரை உற்றுப் பார்த்தார்கள். ஆனால் அவர்களால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டுபிடிக்க முடியாதபடி சீதாவை ஏற்றிக் கொண்டிருந்த மோட்டார் வண்டி அதிவேகமாகச் சென்றது.
அந்த முரட்டு மனிதன் முகத்தில் கொடுத்த அறை சீதாவுக்கு தன் சுய புத்தியைத் திருப்பிக் கொடுத்தது. ஒரு நொடியில் அவள் மனம் அமைதி அடைந்தது. தன்னுடைய நிலைமையைப் பற்றிச் சீதா நிதானமாக யோசிக்கத் தொடங்கினாள்.
சாயங்காலம் சூரியா தனக்கு எச்சரிக்கை செய்தபோது தான் அலட்சியமாகப் பேசியதை ஞாபகப்படுத்திக் கொண்டாள். இப்போது தனக்கு உண்மையிலேயே ஆபத்து வந்து விட்டது. யார் தன்னைக் கொண்டு போகிறார்கள்? எதற்காகக் கொண்டு போகிறார்கள்? வட இந்தியாவில் அவ்வப்போது நடந்த நர கோரங்களைப் பற்றியும் பெண் விற்பனையைப் பற்றியும் அவள் கேள்விப்பட்டிருந்த வரலாறுகள் அலையலையாக நினைவுக்கு வந்தன. எங்கேயாவது கொண்டுபோய்த் தன்னை விற்று விடுவார்களோ என்று எண்ணிய போது அவளுடைய தேகம் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் நடுங்கியது.
அல்லது ஒருவேளை யாராவது ஒரு துர்த்தனான மகாராஜா அல்லது நவாபின் அந்தப்புரத்தில் கொண்டு போய்த் தன்னைச் சேர்த்து விடுவார்களோ? இந்த மாதிரிச் சம்பவங்களைப் பற்றியும் அவள் கேட்டிருந்தாள்; கதைகளிலும் பத்திரிக்கைகளிலும் படித்திருந்தாள். தன் விஷயத்தில் அப்படியெல்லாம் நடக்கக் கூடுமென்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் இப்போது...?
ஒரு விஷயம் நிச்சயம். வெறும் கூச்சல் போடுவதினாலோ பலாத்காரத்தினாலோ இந்த யமகிங்கரர்களிடமிருந்து தப்பித்துச் செல்ல முடியாது.
தான் படித்திருந்த நாவல்களில் இம்மாதிரியான அபாயத்துக்குள்ளான பெண்கள் என்னென்ன விதமான தந்திரங்களைக் கையாண்டு தப்பினார்கள் என்று யோசித்துப் பார்த்தாள். ஞாபகத்துக்கு வந்தது ஒன்றும் தன் விஷயத்தில் காரியத்துக்கு உதவும் என்றும் தோன்றவில்லை. தெய்வாதீனமான உதவிகளும் சந்தர்ப்பங்களும் கிடைத்ததினாலேயே அவர்கள் தப்பியிருக்கிறார்கள். தனக்கோ, வந்த உதவியையும் தெய்வம் குறுக்கே நின்று தடுத்துவிட்டது! ஆகா! யமுனா நதியே! கண்ணன் விளையாடிய புண்ணிய யமுனா நதியே! உனக்கு நான் என்ன அபசாரம் செய்தேன்? ஏன் என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டாய்? நல்ல சமயத்தில் சூரியாவைத் தடுத்து நிறுத்தி விட்டாயே? எத்தகைய பயங்கரமான படுகுழியில் விழப் போகிறேனோ தெரியவில்லையே?
ஆனால் அதற்குள்ளாக ஏன் நிராசை அடைய வேண்டும்? சூரியா எப்படியும் தொடர்ந்து வராமல் இருந்து விடுவானா? கால் மணி தாமதமாயிருக்கும் அவ்வளவுதானே? அதற்காகத் தன்னைப் பின் தொடர்வதை விட்டு விடுவானோ? ஒருநாளும் மாட்டான் வந்து கொண்டுதானிருப்பான்.
ஆகையால் இந்தக் காரை எங்கேயாவது தாமதப்படுத்தினால் நல்லது; அது ஒன்றுதான் வழி. எப்படிக் காரைத் தாமதப்படுத்துவது? ஆம்; எங்கேயாவது ஊர் கண்ட இடத்தில் 'தாகமாயிருக்கிறது' என்று சொல்லலாம். அப்புறம் 'பசிக்கிறது' என்று சொல்லலாம். அதற்கு அந்த மனிதர்களோடு நல்லதனமாகப் பேசி முன்னாடியே சிநேகம் செய்து கொள்ள வேண்டும்.
இப்படிச் சீதா தீர்மானித்து எப்படிப் பேச்சுத் தொடங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அந்த மனிதனே பேசினான். "மகளே நீ கூச்சல் போடாமலும் தொந்தரவு கொடுக்காமலும் இருந்தால் உமக்கு ஒரு கஷ்டமும் ஏற்படாது. நன்மைதான் ஏற்படும். உன்னை அடிக்க நேர்ந்ததற்காக ரொம்பவும் வருத்தப்படுகிறேன்!" என்றான்.
அந்த மனிதன் நடுப்பிராயத்தைக் கடந்த முதிய மனிதன் என்பதைச் சீதா கவனித்திருந்தாள். அவனுடைய குரலும் பேச்சின் பாணியும் உண்மையாகவே அவன் அன்புடனும் அனுதாபத்துடனும் பேசுகிறான் என்று தெரியப்படுத்தின.
ஆகையால் சீதா மனதைத் திடப்படுத்திக் கொண்டு "நீங்கள் யார்? என்னை எங்கே அழைத்துக்கொண்டு போகிறீர்கள்?" என்று கேட்டாள்.
"அப்படிக் கேள், சொல்கிறேன்! உன்னை உன் மாதாஜியிடம் அழைத்துப் போகிறோம்" என்று அந்த மனிதன் சொன்னான்.
சீதாவுக்கு குபீர் என்று சிரிப்பு பீறிக்கொண்டு வந்தது. அவளுடைய மாதாஜி இறந்து எத்தனையோ வருஷம் ஆயிற்று. அகண்ட காவேரிக் கரையில் அன்னையின் உடம்பு எரிந்து சாம்பலாகி எவ்வளவோ காலம் ஆயிற்று. அதற்குப் பிறகு சென்ற காலம் ஒரு யுகம் போலத் தோன்றியது. இப்போது இந்த வடக்கத்தியான் "உன்னை உன் தாயாரிடம் அழைத்துப் போகிறேன்" என்கிறான் இது என்ன பைத்தியக்காரத்தனம்?
ஒருவேளை கனவு காண்கிறோமா? அல்லது தனக்கு மரணமே சம்பவித்து விட்டதா! மரணத்துக்குப் பிறகு நடப்பதா இது?
இவர்கள்தான் யம தூதர்களா? உண்மையிலேயே மறு உலகத்தில் உள்ள தன் தாயாரிடம் தன்னை அழைத்துச் செல்கிறார்களா....
அப்படி இருக்க முடியாது மறு உலகப் பிரயாணம் மோட்டாரில் நடைபெறும் என்று கேட்டதே இல்லையே? இந்த மனிதர்களும் ஆவி வடிவத்தினராகத் தோன்றவில்லையே?
சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளச் சீதா தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக்கொண்டாள். கிள்ளிய இடத்தில் வலித்தது தான் உயிரோடும் உடலோடும் இருப்பது நிச்சயம்.
பின்னர், இந்த மனிதன் இப்படிச் சொல்லுவதின் அர்த்தம் என்ன?
அவன் சொன்னதைத் தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் சீதாவுக்கு உதித்தது. "என்னை எங்கே அழைத்துப் போகிறீர்கள்?" என்று அந்த மனிதனைப் பார்த்து மறுபடி கேட்டாள்.
"அதுதான் சொன்னேனே? உன் தாயாரிடம் அழைத்துப் போகிறோம். சகோதரரும் உன்னைப் பார்க்க ஆவலாயிருக்கிறார்!" என்று அம்மனிதன் சொன்னான்.
சீதாவின் திகைப்பு அதிகமாயிற்று. சகோதரன்! தன்னுடைய சகோதரன்! - சீதாவுக்கு முன்னால் பிறந்த ஆண் குழந்தையைப் பற்றி அவளுடைய தாயார் சில சமயம் கூறியதுண்டு. ஆனால் பிறந்து மூன்று மாதத்திற்குள் அந்தக் குழந்தை செத்துப் போயிற்று. அதைக் குறித்து அடிக்கடி அவள் தாயார் புலம்புவாள். "அவன் முகத்திலே பால் வடிந்தது, ராஜகளை சொட்டியது சிரித்தால் ரோஜா மொட்டு மலருவதைப் போல இருக்கும். அவன் உயிரோடிருந்தால் எனக்கு ஒரு கவலையும் இல்லை. உன் தகப்பனார் இந்த மாதிரி இருப்பதைப் பற்றிக் கவலைப்படவே மாட்டேன். எனக்கும் உனக்கும் கொடுத்து வைக்கவில்லை!" என்று ராஜம்மாள் அடிக்கடி புலம்பியது சீதாவுக்கு ஞாபகம் வந்தது. ஆனால் அந்தக் குழந்தை தான் பிறப்பதற்கு இரண்டு வருஷம் முன்பே செத்துப் போயிற்று. வேறு சகோதரன் தனக்குக் கிடையாது. ஆகா! உண்மையிலேயே ஒரு சகோதரன் மட்டும் தனக்கு இருந்திருந்தால்?.... இத்தகைய கஷ்டங்கள் எல்லாம் நேர்ந்திருக்குமா?
இந்த மனிதன் தன்னைப் பார்க்க சகோதரன் காத்துக்கொண்டிருப்பதாக உளறுகிறான்! எதற்காக இம்மாதிரி இவன் பொய் சொல்ல வேண்டும்?.....
சீதாவின் எண்ணப் போக்கில் திடீரென்று ஒரு தடை ஏற்பட்டது. ஏதோ ஒரு நிழல் போன்ற எண்ணம் - ஆச்சரியமான சந்தேகம் - சாத்தியமென்று நம்புவதற்கு முடியாத அபிலாஷை... தோன்றியது. ஆனால் ஏன் உண்மையாயிருக்க முடியாது? இந்த மனிதன் எதற்காக இப்படிப்பட்ட பொய்யைக் கற்பனை செய்து சொல்ல வேண்டும்? தன்னுடைய பிறப்பைக் குறித்து ஏதோ ஒரு மர்மம் இருக்க வேண்டும் என்று சில சமயம் தான் பகற்கனவு கண்டது உண்மையாயிருக்குமோ? - "கல்யாணத்தை நிறுத்தி விடவும்" என்று தன் தகப்பனார் தந்தி அடித்ததின் காரணத்தை அவர் சொல்லவே இல்லை. அதைப் பற்றித் தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களில் ஏதேனும் உண்மை இருக்குமோ? சீச்சீ! என்ன அசட்டுத்தனம்! ஓயாமல் கற்பனைக் கதைகளும் மர்மம் நிறைந்த நாவல்களும் படித்ததின் பலனே இந்தப் பிரமையெல்லாம் என்று பல தடவை அவற்றை ஒதுக்கித் தள்ளியிருக்கிறோமே? மறுபடியும் அந்தப் பிரமைகளுக்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும்?
ஆனால் இப்போது தன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் கற்பனைக் கதைகளையெல்லாம் மிஞ்சியதாயிருக்கிறதே! துப்பறியும் நாவல்களில் வரும் மர்மத்தைக் காட்டிலும் பெரிய மர்மமாயிருக்கிறதே! உண்மையில் இந்த மனிதர்கள், யார்? எதற்காகத் தன்னைக் கொண்டு போகிறார்கள்? போகுமிடத்தில் என்னுடைய கதி என்ன ஆகப் போகிறது!...
கொஞ்ச தூரத்தில் தீப வரிசைகள் தெரிந்தன. ஏதோ ஒரு பட்டணத்தை நெருங்குகிறோம் என்பதற்கு அறிகுறியான சந்தடி கேட்டதுடன் மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டு வந்தது.
ஒருவேளை சூரியா பின்தொடர்ந்து வருவதாயிருந்தால் அவனுக்கு இந்தக் காரைப் பிடிக்க அவகாசம் ஏற்படுவதற்கு யுக்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மறுபடியும் சீதாவின் மனதில் உதித்தது.
"எனக்கு வயிற்றைப் பசிக்கிறது. தாகம் எடுக்கிறது. சாப்பிடுவதற்காவது குடிப்பதற்காவது ஏதாவது கிடைக்குமா?" என்று சீதா கேட்டாள். காரைத் தாமதப்படுத்த வேண்டும் என்றுதான்.
"ஆகட்டும்; பார்க்கலாம்" என்றான் அந்த மனிதன். சீதாவுடன் இதுவரையில் ஹிந்தியில் பேசி வந்தவன் காரின் முன் பகுதியில் இருந்தவர்களிடம் வேறொரு பாஷையில் ஏதோ பேசினான். அந்த பாஷை பஞ்சாபியாகவோ அல்லது மார்வாரியாகவோ இருக்க வேண்டும். சீதாவுக்கு நன்றாகத் தெரியவில்லை.
ஏதோ ஒரு பட்டணத்தின் குறுகலான வீதிகளின் வழியாகக் கார் சென்றது. கடைத் தெருவில் ஒரு ஹோட்டலுக்கு எதிரில் நின்றது. அந்த ஹோட்டல் வாசலில் பூரிகள், லட்டுகள் மற்றும் தித்திப்புப் பண்டங்கள் விற்பதற்கு வைத்திருந்தன. அந்தப் பண்டங்களின் மீது ஆயிரம் கோடி ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அடுப்பில் சட்டுவத்தில் கொதித்துக் கொண்டிருந்த பழைய நெய்யின் மணம் சாக்கடை நாற்றத்தோடு கலந்து வந்து மூக்கைத் தாக்கியது.
வாய் அகன்ற பெரியதொரு பித்தளைச் சட்டுவத்தில் கெட்டியான பால் காய்ந்து கொண்டிருந்தது. காரிலிருந்து ஒருவன் இறங்கி அந்தக் கடையண்டை போனான்.
சீதாவுக்கு ஒரு கணம் அங்கே கூச்சல் போட்டு ரகளை செய்யலாமா என்று தோன்றியது. உடனே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். தெருவிலே போய்க் கொண்டிருந்த மனிதர்களைப் பார்த்ததும், "இங்கே கூச்சல் போடுவது ஒரு ஆபத்திலிருந்து இன்னொரு ஆபத்தில் தாண்டிக் குதிப்பதாகும்" என்று அவளுக்குத் தோன்றியது. அது மட்டுந்தானா காரணம்? அவளுடைய உள்ளத்தின் அந்தரங்கத்தில், இந்தப் பிரயாணத்தின் முடிவுதான் என்ன? என்று தெரிந்து கொள்ளும் ஆவல் குடிகொண்டிருந்ததும் ஒரு காரணமாயிருக்கலாம். மனித உள்ளத்தின் விசித்திரங்களைப் பூரணமாகக் கண்டறிந்தவர்கள் யார்?
இறங்கிய மனிதன் பூரியும் மிட்டாயும் பொட்டணம் கட்டி எடுத்துக் கொண்டு, ஒரு பெரிய மண் சட்டியில் கொதிக்கின்ற பாலும் வாங்கிக் கொண்டு காரில் வந்து ஏறினான்.
வண்டியைத் தாமதப்படுத்தலாம் என்கிற சீதாவின் நோக்கம் அவ்வளவாக நிறைவேறவில்லை. ஏனெனில் ஐந்து நிமிஷத்துக்கு மேல் அந்த இடத்தில் வண்டி நிற்கவில்லை.
அந்தப் பட்டணத்தைக் கடந்து கொஞ்ச தூரம் போனதும் மறுபடியும் சாலையின் இருபுறமும் ஒரே பொட்டல் திடலாகக் காட்சியளித்தது. குட்டை குட்டையான கருவேல மரங்களையும் குத்துக் குத்தான புரசஞ் செடிகளையும் தவிர வேறு எதுவும் காணப்படவில்லை.
கொஞ்ச தூரம் அந்தச் சாலையில் சென்ற பிறகு கார் மறுபடியும் நின்றது. சீதாவைப் பார்த்து அந்த மனிதன், "பூரியும் மிட்டாயும் சாப்பிடுகிறாயா?" என்று கேட்டான்.
பூரி-மிட்டாயின் பேரில் மொய்த்திருந்த ஈக்களின் ஞாபகம் வரவே சீதா, "வேண்டாம்" என்றாள்.
"பசிக்கிறது என்று சொன்னாயே?" என்று அந்த மனிதன் கேட்டான்.
"பூரி மிட்டாய் பிடிக்காது, அரிசிச் சாதம்தான் எனக்குப் பிடிக்கும்" என்று சொன்னாள் சீதா.
"ஆகா; இந்தப் பெண்ணின் பேச்சைப் பார்! அரிசிச் சாதம் வேண்டுமாம்!" என்று சொல்லி அந்த மனிதன் சிரித்தான்.
பிறகு, "கொஞ்சம் பாலாவது சாப்பிடு" என்றான்.
அதையும் வேண்டாம் என்று சொல்லுவது சந்தேகத்துக்கு இடமாகும் என்று சீதா எண்ணி, "சரி சாப்பிடுகிறேன்" என்றாள்.
மண் சட்டியிலிருந்து டம்ளரில் பாலை ஊற்றிச் சீதாவிடம் கொடுத்தார்கள். பால் கமகமவென்று ஏலக்காய், குங்குமப்பூ மணம் வீசிக்கொண்டிருந்தது. சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாகவும் இருந்தது.
சீதா பால் சாப்பிட்டவுடன் கார் மறுபடியும் கிளம்பிற்று. சிறிது நேரத்துக்கெல்லாம் சீதாவுக்கு கண்ணைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வந்தது. இது தூக்கம்தானா? அல்லது மயக்கமா?-ஒருவேளை பாலில் எதையாவது கலந்து கொடுத்திருப்பார்களா? சீதா உடம்பு சுரமாய்க் கிடந்தபோது ஒவ்வொரு நாள் மருந்து சாப்பிட்ட பிறகு இப்படித்தான் மயக்கமும் தூக்கமும் கலந்து வந்தது என்பது ஞாபகம் வந்தது. "ஐயோ! மயக்க மருந்து எதற்காகக் கொடுத்தார்கள். தன்னைக் கொன்று விடுவார்களோ? கொன்று அந்த வனாந்தரத்தில் எறிந்து விடுவார்களோ? ஐயோ! இந்தக் கதிக்கா ஆளாகப் போகிறேன். என் அருமைக் கண்மணியைப் பார்க்காமல் போகிறேனே? ஆகா! அவருக்கு நன்றாய் வேண்டும்! நான் கொலையுண்டு செத்துப் போனதை அறிந்து அவர் சந்தோஷப்படட்டும்!
ஒரு கணம் கூச்சல் போடலாமா என்று சீதா நினைத்தாள். ஆனால் கூச்சல் போட முடியவில்லை. கண்ணைச் சுழற்றியது தலை சுற்றியது; உடம்பு சோர்ந்தது.
சாலையில் மறுபடியும் வண்டி நின்றது போலத் தோன்றியது. எதிரில் வந்த ஒரு வண்டி பக்கத்தில் நின்றது. ஏதோ தெரியாத பாஷையில் பேசிக் கொண்டார்கள். கிணற்றுக் குள்ளிருந்து பேசுவது போலக் கேட்டது. புதிதாக வந்த காரிலிருந்து ஒரு மூதாட்டி இறங்கி வந்து சீதா இருந்த வண்டியில் அவள் பக்கத்தில் ஏறிக் கொண்டது போலிருந்தது. அப்புறம் சீதா அடியோடு நினைவை இழந்து நித்திரையில் ஆழ்ந்தாள்.
வைஸ்ராயின் நிர்வாக சபை அங்கத்தினர் கொடுத்த ஜாஜ்வல்யமான இரவு விருந்து முடிவடைந்து, விருந்தாளிகள் அவரவர்களுடைய கார் கிடைத்துப் புறப்படுவதற்கு அரைமணி நேரம் ஆயிற்று. வழக்கம்போல் ராகவனுடைய காரில் மாஜி திவானும் அவருடைய புத்திரிகளும் ஏறிக் கொண்டார்கள். வண்டி போய்க் கொண்டிருந்தபோது தாமாவும் பாமாவும், விருந்தில் பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் பற்றிச் சளசளவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் வழக்கம் போல ராகவன் அந்த பேச்சுக்களில் கலந்து கொள்ளாமல் மௌனமாக இருந்தான். மாஜி திவானுடைய பங்களா வாசலில் வண்டி நின்றதும் அவரும் அவருடைய புதல்விகளும் காரிலிருந்து இறங்கினார்கள். ராகவன் இறங்கவில்லை.
"மிஸ்டர் ராகவன்! நீங்கள் வரவில்லையா? ஒரு ஆட்டம் போடலாமே?" என்று தாமா கேட்டாள்.
"இல்லை; இன்றைக்கு வீட்டுக்குச் சீக்கிரமாகப் போக வேண்டும்" என்றான் ராகவன்.
அப்போது பாமா தாமாவிடம் ஏதோ இரகசியமாகச் சொல்ல இருவரும் கலகலவென்று சிரித்தார்கள்.
ராகவன் வண்டியிலிருந்து இறங்கி பங்களா முகப்பு வரையில் அவர்களுடன் சென்று, அங்கே நின்றான். "நீங்கள் எதற்காகச் சிரித்தீர்கள் என்று எனக்குத் தெரியும்" என்றான்.
"பின்னே தெரியாமல் இருக்குமா? விருந்தில் தாரிணியைப் பார்த்துப் பேசியதில் மதி மயங்கிப் போயிருக்கிறீர்கள் என்று சொன்னேன். அது உண்மைதானே?" என்று சொல்லித் தாமா மறுபடியும் சிரித்தாள்.
"அதில் ஒரு பாதிதான் உண்மை. தாரிணியைப் புரட்சிக்காரி என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்களே? அது எவ்வளவு பெரிய தவறு என்று தெரிந்து கொண்டீர்களா?" என்று ராகவன் கேட்டான்.
"மிஸ்டர் ராகவன்! அது எப்படித் தவறு என்று சொல்கிறீர்கள்?"
"புரட்சிக்காரியாயிருந்தால் இன்றைய விருந்துக்கு வந்திருக்க முடியுமா? விருந்து கொடுத்த நிர்வாக சபை அங்கத்தினரும் அவருடைய மனைவியும் தாரிணியிடம் எவ்வளவு சிநேகமாக நடந்து கொண்டார்கள். பார்க்கவில்லையா? இன்னும் என்ன அத்தாட்சி வேண்டும்?"
"ஓ! ராகவன்! சில காரியங்களில் நீங்கள் இன்னும் பச்சைக் குழந்தையாக இருக்கிறீர்கள்! தாரிணி புரட்சிக்காரியாயிருந்தால் அவள் இன்றைய விருந்துக்கு வந்திருக்க முடியாதா? அது அவள் எவ்வளவு சாமர்த்தியசாலி என்பதைக் காட்டுகிறது!"
"நம்முடைய சி.ஐ.டி. போலீஸார் எவ்வளவு சாமர்த்தியசாலிகள் என்பதையும் காட்டுகிறது?" என்றான் ராகவன்.
"அதுவும் உண்மை சி.ஐ.டி. போலீஸார் வேண்டுமென்று தான் அவளை விட்டு வைத்திருக்கிறார்கள். டில்லியில் புரட்சிக் கூட்டம் தங்கும் இரகசிய இடம் ஒன்று இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதற்காக அவளைப் பிடிக்காமல் சும்மா விட்டு வைத்திருக்கிறார்கள்!" என்றாள் தாமா.
"அப்படியா? நம்ப முடியாத விஷயமாக இருக்கிறதே!"
"நீங்கள் நம்ப முடியாத விஷயங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன. அது போகட்டும் இன்றைக்கு வீட்டுக்குப் போவதற்கு அவசரம் என்ன?"
"இரண்டு நாளாகச் சீதாவுக்கு உடம்பு அதிகமாயிருக்கிறது. அவளுடைய மனோநிலை மேலும் கெட்டிருக்கிறது. அதனால் தான் சீக்கிரம் வீடு போகிறேன். ஒரு மாதம் லீவு எடுத்து அவளை மதராஸில் கொண்டு போய் விட்டு வரலாம் என்று இருக்கிறேன்."
"ஓகோ! இப்போது தெரிகிறது; நீங்களும் சீதாவும் மட்டும் போகிறீர்களா? தாரிணியும் கூட வருகிறாளா?"
"நீங்கள் சீதாவை மதராஸில் கொண்டு போய் விட்டு விட்டுப் பம்பாய்க்குப் போகப் போகிறீர்களாக்கும்!"
"உங்களுக்கு எப்படித் தெரிந்தது? கிட்ட இருந்து கேட்டது போலச் சொல்லுகிறீர்களே?" என்றான் ராகவன் அதிசயத்துடன்.
"பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும் என்ற பழமொழி தெரியாதா?" என்றாள் பாமா.
இந்தச் சமயத்தில் பங்களாவுக்குள்ளே டெலிபோன் மணி அடித்தது. ஏற்கெனவே பங்களாவுக்குள் சென்றிருந்த ஸ்ரீஆதிவராகாச்சாரியார் டெலிபோனை எடுத்து "யார்?" என்று கேட்டு விட்டு, "மிஸ்டர் ராகவனுக்கு டெலிபோன்" என்றார்.
ராகவன் உள்ளே போய் டெலிபோனை வாங்கிச் செய்தியைக் கேட்டான். அவனுடைய முகத்தில் கவலையும் பயமும் குடிகொண்டன.
"என்ன? என்ன?" என்று தாமாவும் பாமாவும் கேட்டார்கள்.
"சீதா சாயங்காலம் வெளியில் உலாவச் சென்றவள் இன்னும் திரும்பி வரவில்லையாம். வேலைக்காரன் சொல்கிறான்!"
"சீக்கிரம் போய்ப் பாருங்கள்; சாயங்காலம் எட்டு மணி சுமாருக்கு ஜந்தர் மந்தர் பக்கத்தில் ஏதோ கலாட்டா என்றும் துப்பாக்கிச் சத்தம் கேட்டது என்றும் விருந்தில் பேசிக்கொண்டார்கள்!" என்றாள் தாமா.
"சீதாவுக்கும் துப்பாக்கிச் சத்தத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?" என்று ராகவன் கேட்டான்.
"இந்தக் காலத்தில் எப்போது என்ன நடக்கும் என்று சொல்வதற்கில்லை. எல்லாவற்றுக்கும் உடனே போய்ப் பாருங்கள். ஏதாவது உதவி தேவையாயிருந்தால் எங்களுக்கு டெலிபோன் பண்ணத் தயங்க வேண்டாம்!" என்றாள் பாமா.
"ஆமாம் அப்பா! சீக்கிரம் போய்ப் பார்! அவசியமாயிருந்தால் டெலிபோன் பண்ணு!" என்றார் ஆதிவராகாச்சாரியார்.
சௌந்தரராகவன் வீடு போய்ச் சேர்ந்த பிறகு புதிய விவரம் எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. சாயங்காலம் வழக்கம் போல் உலாவச் சென்ற அம்மாள் திரும்பி வீட்டுக்கு வரவில்லை என்று மட்டும் வேலைக்காரர்கள் சொன்னார்கள்.
"யாராவது சிநேகிதர்கள் வீட்டிலிருந்து டெலிபோன் ஏதாவது வந்ததா?" என்று ராகவன் கவலையுடன் கேட்டான்.
"சிநேகிதர்கள் வீட்டிலிருந்து டெலிபோன் வரவில்லை. ஆனால் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து நாலு தடவை கூப்பிட்டார்கள்" என்று சமையற்காரப் பையன் சொன்னான்.
ராகவன் சிறிது திடுக்கிட்டு, "போலீஸ் ஸ்டேஷனிலிருந்து என்ன செய்தி வந்தது?" என்று கேட்டான்.
"ஒன்றும் இல்லை எஜமான் வீட்டுக்கு வந்துவிட்டாரா? என்று கேட்டார்கள் அவ்வளவுதான்!" என்றான் சமையற்காரப் பையன்.
பிறகு ராகவன் போலீஸ் ஸ்டேஷனுக்கு டெலிபோன் செய்தான். அவனுக்குத் தெரிந்த சிநேகிதரான போலீஸ் உத்தியோகஸ்தர் பேசினார்.
"யார் மிஸ்டர் ராகவனா? உங்களை ஒன்பது மணியிலிருந்து கூப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். விருந்துக்குப் போய் இப்போது தான் திரும்பினீர்கள் போலிருக்கிறது! இங்கே உடனே புறப்பட்டு வந்தால் நல்லது!" என்றார்.
"என்ன விசேஷம்?" என்று ராகவன் கேட்டான்.
"விசேஷத்தை நேரில் தான் சொல்ல வேண்டும். உடனே புறப்பட்டு வாருங்கள்!" என்று சொன்னார் போலீஸ் அதிகாரி.
"இங்கே எனக்கு ஒரு தொந்தரவு நேர்ந்திருக்கிறது. என்னுடைய மனைவி சீதா சாயங்காலம் உலாவச் சென்றவள் இன்னும் திரும்பி வரவில்லை. தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை!"
"ஓஹோ! அப்படியா சமாசாரம்? நீங்கள் உடனே புறப்பட்டு வரவேண்டியது இன்னும் முக்கியமாகிறது!" என்றார் அதிகாரி.
சௌந்தரராகவன் போலீஸ் ஸ்டேஷனை அடைந்ததும் இன்ஸ்பெக்டர் முதலில் சீதாவைப் பற்றி அவனிடமிருந்து தகவல் கேட்டுக்கொண்டார்.
வேலைக்காரர்கள் சொல்வதை அவரிடம் கூறிவிட்டு "உங்களிடம் ஏதாவது தகவல் கிடைத்திருக்கிறதா?" என்று ராகவன் கேட்டான்.
"கிடைத்திருக்கிறது. ஆனால் உபயோகமான தகவல் இல்லை!" என்றார் இன்ஸ்பெக்டர்.
பிறகு, ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து மேஜை மேல் வைத்து, "இது யாருடையது, தெரியுமா?" என்றார்.
ராகவன், அதைப் பார்த்துத் திடுக்கிட்டான். பிறகு தயக்கத்துடன் "எனக்குத் தெரியாதே!" என்றான்.
"ராகவன்! என்னிடமே மறைக்கப் பார்க்கிறீரா? அழகாயிருக்கிறது!" என்றார் இன்ஸ்பெக்டர்.
"இல்லை; ஆமாம்; மன்னிக்க வேண்டும் முதலில் பார்த்த போது தெரியவில்லை; என்னுடையது தான் எப்படிக் கிடைத்தது?" என்று உளறித் தடுமாறினான் ராகவன்.
"நீங்கள் தகவல் கொடுத்திருந்தீர்கள் அல்லவா? அந்தப் புரட்சிக்கார ஆளிடந்தான் இருந்தது. அவனுக்கு எப்படிக் கிடைத்திருக்கும்? யார் கொடுத்திருப்பார்கள்?"
"சத்தியமாக எனக்குத் தெரியாது!" என்றான் ராகவன்.
பிறகு அவனை இன்ஸ்பெக்டர் போலீஸ் ஸ்டேஷன் 'லாக்-அப்' அறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கே சூரியா தலையிலும் தோளிலும் கட்டுக்களுடன் உணர்வின்றிப் படுத்திருந்தான்.
"இவனைக் கைது செய்வது சுலபமான காரியமாயில்லை. நாலு போலீஸ் ஜவான்களைத் திமிறிக்கொண்டு தப்பிக்கப் பார்த்தான். அதன் பயனாக இவன் மண்டையிலும் தோளிலும் நல்ல அடி! மண்டை பிளந்தே விட்டது!" என்றார் இன்ஸ்பெக்டர்.
மறுநாள் பிற்பகலில் சௌந்தரராகவன் மாஜி திவான் ஆதிவரகாச்சாரியார் வீட்டுக்கு வந்தபோது அவனுடைய முகத்தில் சோகம் குடிகொண்டிருந்தது. பல நாள் கவலைப்பட்டு இராத்தூக்கமின்றிக் கண் விழித்ததினால் ஏற்படக்கூடிய சோர்வு அவனுடைய முகபாவத்திலும் குழி விழுந்த கண்களிலும் பிரதிபலித்தது.
"என்ன ஸார்! உங்களைப் பார்த்தால் பெண்டாட்டியைப் பறி கொடுத்தவன் மாதிரி இருக்கிறதே!" என்று கூறிப் பாமா ராகவனை வரவேற்றாள்.
சுருக்கென்று கூரிய ஊசியினால் உடம்பிலே எங்கேனும் குத்தினால் முகம் எப்படிச் சுருங்குமோ, அப்படி ராகவனுடைய முகம் சுருங்கிப் பொறுக்க முடியாத வேதனையைக் காட்டியது.
"நீங்கள் கூட இப்படி அனுதாபம் இல்லாமல் பேசுவீர்கள் என்று நான் நினைக்கவேயில்லை. நான் போய் வருகிறேன்!" என்று அழமாட்டாக் குறையாகச் சொல்லிவிட்டு ராகவன் திரும்பிப் போக யத்தனித்தான்.
அப்பொழுது தாமா எழுந்து வந்து ராகவனுக்கு முன்னால் நின்று மறித்துக்கொண்டு, "அவள் கிடக்கிறாள், ஸார்! பாமாவுக்கு நாக்கிலே விஷம்! எல்லாரையும் விரட்டியடிப்பது தான் அவளுடைய வேலை. அதனால் தான்.." என்று ஆரம்பித்தவள் தயங்கி வாக்கியத்தை நடுவில் நிறுத்திவிட்டு, "நீங்கள் வந்து உட்காருங்கள்! உங்களிடம் எங்களைப் போல் அனுதாபம் உள்ள சிநேகிதர்கள் இந்த டில்லியில் யாரும் இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயந்தானே!" என்று சொன்னாள்.
ராகவன் திரும்பிப் போகும் உத்தேசத்தைக் கைவிட்டுச் சோபாவில் உட்கார்ந்தான். "டில்லியில் மட்டும் என்ன? எங்கேயும் எனக்குச் சிநேகிதர்கள் கிடையாது. உத்தியோக சிநேகம் ரயில் சிநேகத்தை விட மோசமானது. நல்ல நிலைமையில் இருக்கும் வரையில் எல்லாரும் பிராண சிநேகிதர்கள் போல நடிப்பார்கள். ஏதாவது கொஞ்சம் கஷ்டம் வந்து விட்டால் எல்லாரும் கையை விரித்து விடுவார்கள். முழுகுகிற கப்பலிலிருந்து எலிகள் ஓடுவது போல ஓடிப்போய் விடுவார்கள். நீங்களும் உங்கள் தகப்பனாரும் அதற்கு விதிவிலக்கு என்றும் நீங்கள் என்னுடைய உண்மையான சிநேகிதர்கள் என்றும் நம்பியிருக்கிறேன். நல்லதோ, கெட்டதோ, உங்கள் தகப்பனாரிடம் சொல்லி யோசனை கேட்டால் மனம் நிம்மதி அடைகிறது. இப்போது அப்பா எங்கே?" என்றான்.
"அப்பாவின் சிநேகிதர் பாங்கர் கஜான்ஜியாவை உங்களுக்குத் தெரியுமல்லவா? அவரும் இன்னும் சிலரும் சேர்ந்து இன்றைக்கு ஒரு புதிய இன்ஷியூரன்ஸ் கம்பெனி ஆரம்பிக்கிறார்கள். அதற்காக அப்பா போயிருக்கிறார். புதிய கம்பெனியில் அப்பாவும் ஒரு டைரக்டர்" என்றாள் தாமா.
"சில பேர்களுக்குத் திடீரென்று யோகம் பிறந்து விடுகிறது. இந்த கஜான்ஜியா ஐந்து வருஷத்துக்கு முன்னால் சாதாரண மனிதராயிருந்தார். இப்போது ஐந்தாறு கோடி ரூபாய் சம்பாதித்து விட்டதாகச் சொல்லுகிறார்கள். இத்தனைக்கும் ஆசாமிக்கு இங்கிலீஷில் கையெழுத்துப் போடக் கூடத் தெரியாது. என்னைப் போல் எத்தனையோ பேர் 'எக்னாமிக்ஸ்' படித்துப் பட்டம் பெற்றுவிட்டு வாழ்நாள் எல்லாம் மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு காலம் கழிக்கிறார்கள். இவ்வளவு லட்சணமான உத்தியோகத்துக்கும், மேலே உள்ள மூடர்கள் எப்போது சீட்டுக் கிழிப்பார்களோ என்று பயந்து நடக்க வேண்டியிருக்கிறது. இன்றைக்கு அவ்விதம் எனக்கு நேர்ந்து விட்டது!" என்று சொன்னான் சௌந்தரராகவன்.
"என்ன? என்ன?" "சீட்டுக் கிழித்துவிட்டார்களா?" "உத்தியோகம் போய்விட்டதா?" "எதற்காக?" "அக்கிரமமாயிருக்கிறதே!" என்று தாமாவும் பாமாவும் மாற்றி மாற்றிப் பொழிந்தார்கள்.
"இன்னும் வேலை அடியோடு போய்விடவில்லை. விசாரணை முடியும் வரையில் 'ஸஸ்பெண்டு' செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் திரும்ப எடுத்துக்கொண்டாலும் எனக்கு வேலைக்குத் திரும்பிப் போகும் உத்தேசம் இல்லை. வெகு நாளாக வேறு உத்தியோகத்துக்குச் சிபாரிசு செய்யும்படி அப்பாவைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கு இதுதான் சமயம். அப்பா இந்தச் சமயம் எனக்கு உதவி செய்தேயாக வேண்டும். இல்லாவிட்டால் வேறு வழியில்லை."
"அப்பாவுக்கு அதில் கஷ்டம் ஒன்றுமிராது. கஜான்ஜியாவின் பாங்கிலோ இன்ஷியூரன்ஸ் கம்பெனியிலோ பேஷாக உங்களுக்கு வேலை போட்டுத் தரச் சொல்லுவார். உங்கள் விஷயத்தில் அப்பாவுக்கு ரொம்ப அபிமானமும் சிரத்தையும் உண்டு என்று தான் தெரியுமே? ஆகையால் உத்தியோகத்தைப் பற்றி நீங்கள் கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நடந்ததையெல்லாம் தயவுசெய்து விவரமாய்ச் சொல்லுங்கள். என்ன காரணத்துக்காக உங்களை 'ஸஸ்பெண்டு' செய்தார்களாம்? விசாரணை எதற்காக?" என்று தாமா கேட்டாள்.
அப்போது பாமா, "இதையெல்லாம் கேட்டு அவரை ஏன் தொந்தரவு செய்கிறாய்? பாவம்! அவர் சம்சாரத்தைப் பறி கொடுத்துவிட்டு அதைப் பற்றிப் பேசிப் புலம்புவதற்காக வந்திருக்கிறார்!" என்றாள்.
"சீ! நீ சும்மா இரு! - அவள் கிடக்கிறாள் நீங்கள் சொல்லுங்கள், ஸார்!" என்றாள் தாமா.
"இன்றைக்கு நான் ஆபீஸுக்குப் போனதும் இலாகாத் தலைவர் கூப்பிட்டு அனுப்பினார். 'சரி, ஏதோ வரப் போகிறது' என்று எண்ணிக்கொண்டு போனேன். அதற்குத் தகுந்தாற்போல் அவரும், 'ராகவன்! உங்களை ஸஸ்பெண்ட் செய்து வைக்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. அதற்காக ரொம்பவும் வருத்தப்படுகிறேன். காரணம் உங்களுக்கே தெரிந்திருக்க கூடியதுதான்!" என்றார். 'எனக்குக் காரணம் ஒன்றும் தெரியவில்லை. தயவு செய்து தாங்களே சொல்லிவிட்டால் நல்லது' என்றேன். 'அப்படியானால் சொல்கிறேன் புரட்சிக்காரர்களுக்கு அடிக்கடி உம்முடைய வீட்டில் அடைக்கலம் கொடுத்ததாக உம் பேரில் புகார்' என்றார். 'அது எப்படி என் பேரில் புகார் ஏற்பட முடியும்? புரட்சிக்காரனைப் பற்றி நான்தானே போலீஸுக்குத் தகவல் கொடுத்தேன்?' என்று கேட்டேன். 'மிஸ்டர் ராகவன்! நீர் மிக்க அறிவாளி! என்றார் இலகாத் தலைவர். 'உங்கள் நற்சாட்சிப் பத்திரத்துக்காக மிக்க வந்தனம்!' என்றேன். 'எனக்கு வந்தனம் தேவையில்லை, நீர் மிக்க அறிவாளியாகையால் விசாரணையின்போது இதை ஒரு காரணமாகச் சொல்ல வேண்டாம். அந்தப் புரட்சிக்காரப் பையனைப்பற்றிப் போலீஸார் தகவல் அறிந்து கைது செய்வதற்குத் தயாராகவே இருந்தார்கள். அந்தச் சமயத்தில் நீர் தகவல் கொடுத்ததினால் என்ன பிரயோசனம்? தப்பித்துக் கொள்வதற்காகக் கடைசி நேரத்தில் தகவல் கொடுத்ததாகவே ஏற்படும்!' என்றார். இதைக் கேட்டு நான் திகைத்துப் போனேன். முதலில் இன்னது சொல்வதென்று தெரியவில்லை. கார்டினல் உல்ஸி மரணதண்டனைக்கு ஆளானபோது சொன்னது நினைவு வந்தது. 'என்னுடைய அரசருக்கு நான் செய்த சேவை என் ஆண்டவனுக்குச் செய்திருந்தால் இந்தக் கதியை அடைந்திருக்க மாட்டேன்!' என்று உல்ஸி சொன்ன வாக்கியத்தை நானும் சொன்னேன். 'உம்முடைய அரசருக்கு நீர் உண்மையாகச் சேவை செய்யவில்லை என்பதுதான் உம் பேரில் புகார். தெரிகிறதா? சர்க்கார் உத்தியோகஸ்தர்கள், அதிலும் புது டில்லி செகரடேரியட்டில் வேலை பார்ப்பவர்கள், ஸீஸருடைய மனைவியைப் போல் சந்தேகத்துக்கு இடங்கொடாதவர்களாக இருக்க வேண்டும். இது யுத்த காலம் என்பது உமக்கு நினைவில் இருக்கிறதல்லவா? யுத்தத்திலும் மிக நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறோம். இதை உத்தேசித்துத் தான் இத்தனை காலமும் இல்லாத வழக்கமாக ஒரு இராணுவ தளபதியை இந்தியாவின் வைஸ்ராய் ஆக்கியிருக்கிறார்கள். தளபதி வேவல் இந்தியாவின் வைஸ்ராயாக வந்ததைக் கொண்டு யுத்த நிலைமையின் நெருக்கடியை நீர் ஊகிக்கலாமே?' என்றார். அதற்கு நான், 'ஆம், பேஷாக ஊகிக்கலாம்! இந்த வேவல் எங்கேயாவது எந்த யுத்த களத்திலாவது இருந்தால் கட்டாயம் கோட்டை விட்டுவிடுவார் என்றுதானே அவரைப் பிடித்து வைஸ்ராயாகப் போட்டிருக்கிறார்கள்?' என்றேன். ஆபீஸர் சிரித்துவிட்டு, 'இந்த அபிப்பிராயத்தை நாளைக்கு விசாரணை நடக்கும்போது சொல்லலாம், இப்போது போய்வாரும்!' என்றார். 'என் பேரில் என்ன குற்றம்? என்ன சந்தேகம்? - அதைச் சொல்லவில்லையே?' என்று கேட்டேன். 'விசாரணையில் எல்லாம் விவரமாகச் சொல்வார்கள். நான் ஒரு குறிப்பு வேண்டுமானால் கொடுக்கிறேன். கைது செய்யப்பட்டவனிடம் உம்முடைய கைத்துப்பாக்கி இருந்தது சந்தேகத்துக்கு ஒரு காரணம்' என்றார். 'கைத்துப்பாக்கியை அவன் திருடியிருக்கலாம் அல்லவா?' என்று கேட்டேன். 'திருடியிருக்கலாம் ஆனால் அதற்கு ருசு வேண்டும். சந்தேகத்துக்கு இன்னொரு காரணம், உம்முடைய மனைவி திடீரென்று நேற்று ராத்திரி காணாமற் போனது' என்று ஆபீஸர் சொன்னதும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டு விட்டது. 'என் மனைவி காணாமற் போனதற்கும் நாம் பேசும் விஷயத்துக்கும் என்ன சம்பந்தம்?' என்று கேட்டேன். அதற்கு ஆபீஸர் சொன்ன பதிலைக் கேட்டதும் என்னுடைய கவலைகள் - கஷ்டங்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டேன். குபீரென்று சிரித்து விட்டேன். அதை நினைத்தால் இப்போது கூட எனக்குச் சிரிப்பு வருகிறது!" என்று சொல்லிவிட்டு ராகவன் முகத்தில் அசடு வழிய, பலவீனமான சிரிப்பு ஒன்று சிரித்தான்.
"அப்படிச் சிரிக்கும்படியாக உங்களுடைய இலாகாத் தலைவர் என்னதான் சொன்னார்? சர்க்கார் உத்தியோகஸ்தர்களிலே அவ்வளவு நகைச்சுவை உடையவர்கள் கூட இருக்கிறார்களா?" என்று பாமா கேட்டாள்.
"அவர் அப்படி நகைச்சுவை உடையவர் அல்ல; ஹாஸ்ய உணர்ச்சியுடனும் பேசவில்லை. ஆனால் அவர் சொன்னது அவ்வளவு விசித்திர விஷயமாயிருந்தபடியால் தான் சிரித்தேன். சீதாவும் ஒரு புரட்சிக்காரியாம். அவளும் சூரியாவும் சதி செய்து சட்டவிரோதமான பல காரியம் செய்து வந்தார்களாம். இந்தியத் துருப்புகளின் போக்குவரவைப் பற்றி இரகசிய ரேடியோ மூலம் சத்துருத் தேசங்களுக்குத் தகவல் கொடுத்து வந்தார்களாம், நானும் அவர்களுக்கு உடந்தையாம். போலீஸுக்குத் தகவல் சொல்வது போலச் சொல்லிவிட்டு, அவர்களுக்கும் எச்சரிக்கை செய்து தப்பித்துக் கொள்ளும்படி செய்து விட்டேனாம். சீதா மட்டும் எங்கேயோ போய்ப் பதுங்கிக் கொண்டிருகிறாளாம். எப்படி இருக்கிறது கதை?"
"கதைக்கு என்ன? நன்றாய்த்தானிருக்கிறது. ஒரு நாள் திடீரென்று போலீஸார் இந்த வீட்டுக்கு வந்து சோதனை போட்டாலும் போடுவார்கள். சீதா இங்கே ஒளிந்து கொண்டிருக்கிறாளோ என்று பார்ப்பதற்கு!"
"என்ன மூடத்தனம்! புது டில்லிப் போலீஸார் எதை வேணுமானாலும் நம்பி விடுவார்கள் போலிருக்கிறது."
"சொல்லுகிறவர்கள் பக்குவமாய்ச் சொன்னால், கேட்பவர்கள் நம்புவதற்கு என்ன? ஏற்கெனவே போலீஸார் வெறும் வாயை மெல்லுகிறவர்கள், அவர்களுக்கு ஒரு பிடி அவலும் கிடைத்து விட்டால்?"
"பாமா! மறுபடி ஏதோ மர்மமாகப் பேசுகிறீர்களே? பக்குவமாக யார் என்னத்தைச் சொல்லியிருக்க முடியும்?" என்று ராகவன் கேட்டான்.
"ராகவன்! இது விஷயமாக உங்களுக்கு ஒன்றும் சந்தேகமே உதிக்கவில்லையா? உங்கள் மனைவியையும் அந்த வாலிபனையும் பற்றிப் போலீஸுக்கு யாராவது உளவு சொல்லியிருக்க வேணும் என்று தோன்றவில்லையா? நீங்களும் அவர்களுக்கு உடந்தை என்று கூடச் சொல்லியிருக்க வேணும். இல்லாத வரையில் உங்கள் பேரில் இவ்வளவு சந்தேகப்பட்டு நடவடிக்கை எடுத்திருக்க மாட்டார்கள்.
"கடவுளே! இப்படியும் இருக்க முடியுமா? யார் அந்த மாதிரிப் பொய் உளவு கொடுத்திருப்பார்கள்!"
"நேற்று மாலை நடந்த டின்னர் பார்ட்டியில் யாரோடு கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருந்தீர்கள்? அவளாயிருக்கலாம் அல்லவா? உங்களுடைய குடும்பத்தின் அந்தரங்க விவகாரங்கள் வேறு யாருக்குத் தெரியும்? வேறு யார் அப்படி நம்பிக்கை ஏற்படும்படி சொல்லியிருக்க முடியும்?"
"தாரிணியையா சொல்லுகிறீர்கள்; அழகாயிருக்கிறது? முந்தாநாள் அவளைப் புரட்சிக்காரி என்றீர்கள். இன்றைக்கு அவள் எங்களைப் பற்றி உளவு சொல்லி இருப்பாள் என்கிறீர்கள். இது என்ன வேடிக்கை?"
"வேடிக்கை ஒன்றுமில்லை. உங்கள் ஆபீஸர் சொன்னது போல் நீங்கள் அறிவாளிதான். ஆனால் சிற்சில விஷயங்களில் நீங்கள் பச்சைக் குழந்தை போல் உலகமே தெரியாதவராயிருக்கிறீர்கள். நான் முந்தாநாள் சொன்னதற்கும் இன்று சொல்வதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. புரட்சிக்காரர்களுக்கு மத்தியில் தாரிணி புரட்சிக்காரி தான். அப்படி நடித்தால்தானே புரட்சி இயக்கத்தைப் பற்றிய உளவுகளைச் சேகரித்து சர்க்காருக்குச் சொல்ல முடியும்?"
"தாரிணியைச் சர்க்காருக்காக ஒற்று வேலை செய்கிறவள் என்றும் பொய்க் குற்றம் சாட்டுகிறவள் என்றுமா சொல்லுகிறீர்கள்? ஐயோ! இது என்ன உலகம்?"
இப்படி ராகவனுடைய வாய் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனுடைய மனம், 'தாரிணியைப் பற்றிய உண்மை அப்படி இருந்தாலும் இருக்கலாமோ' என்று எண்ணியது. 'இல்லாவிட்டால் அவ்வளவு பெரிய சர்க்கார் பதவியில் உள்ளவர்களிடம் அவளுக்கு எப்படி அத்தனை செல்வாக்கு இருக்க முடியும்? அவர்களுடன் அவ்வளவு சர்வ சுலபமாக எப்படிக் கலந்து பழக முடியும்?' என்னும் ஐயங்கள் உதித்தன.
"இது என்ன உலகம்?" என்ற ராகவனுடைய கேள்விக்குப் பதிலாகப் பாமா, "இது மிக மோசமான உலகம். பொய்யும் சூதும் மோசமும் தந்திரமும் நிறைந்த உலகம். இந்த உலகத்தில் உங்களைப் போன்ற சாதுக்கள் சிலரும் இருக்கிறார்கள். போகட்டும்; தங்கள் மனைவியின் விஷயம் என்னதான் ஆயிற்று? அதைப் பற்றி ஏதாவது தகவல் தெரிந்ததா?"
"ஒன்றும் தெரியவில்லை. இதில் ஒரு துயரகரமான தமாஷ் சேர்ந்திருக்கிறது. நேற்று ராத்திரி நான் உங்களிடம் கூடச் சொன்னேனே? இனிமேல் என் வாழ்க்கையையே புதிய முறையில் தொடங்குவது என்றும் சீதாவுடன் மனம் ஒத்த இல்லறம் நடத்துவது என்றும் தீர்மானித்திருந்தேன். அவ்விதம் தீர்மானித்துக்கொண்டு வீட்டுக்குப் போய்ப் பார்த்தால், அவளைக் காணவே காணோம்! இதற்கு என்ன சொல்வது?" என்றான் சௌந்தரராகவன்.
"அற்ப மானிடர்களாகிய நம்முடைய உத்தேசத்துக்கெல்லாம் மேலாக விதி என்று ஒன்று இருக்கிறதல்லவா? அந்த விதி ஜயித்து விட்டது!" என்றாள் தாமா.
"நான் அப்படி விதியின் மேல் பழியைப் போடமாட்டேன். சாதுவாகிய சௌந்தரராகவனின் நல்ல உத்தேசத்தை ஒரு பெண்ணின் துர்மதி ஜயித்து விட்டது என்று சொல்வேன்" என்றாள் பாமா.
"நீ கொஞ்சம் வாயை மூடிக் கொண்டிரு! தெரிகிறதா?" என்று தாமா அதட்டிவிட்டு, "ஏன் ஸார்! சீதாவைப் பற்றி ஒன்றுமே தகவல் இல்லையென்றா சொல்கிறீர்கள்? கைது செய்யப்பட்ட சூரியாவிடமிருந்து விவரம் ஒன்றும் கிடைக்கவில்லையா? போலீஸ் இன்ஸ்பெக்டர் உங்களுக்குத் தெரிந்த சிநேகிதர் ஆயிற்றே?" என்று கேட்டாள்.
"தெரிந்த சிநேகிதர் தான்! முன்னொரு சமயம் எனக்குப் பெரிய உதவி செய்திருக்கிறார். இப்பொழுதும் அவரையே நம்பிக்கொண்டிருக்கிறேன். இந்த ஊரிலே சூரியாவின் விசாரணை பகிரங்கமாக நடந்தால் என் மானம் போய்விடும், நாகபுரிக்கு அனுப்பிவிடுங்கள் என்று கேட்டதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். என் பேரில் அந்தரங்க விசாரணை நடந்தால் என் பக்கம் பேசுவதாகவும் சொல்லியிருக்கிறார். ஆனால் சீதாவைப் பற்றி ஒன்றும் அவரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சூரியாவின் மண்டையில் பட்ட அடியினால் அவன் இன்னும் நல்ல அறிவு வராமல் கிடக்கிறான். மயக்கத்தில் பேசுகிறபோது, 'சீதா! சீதா!' 'ஆபத்து வந்து விட்டது!' 'பிடித்து விட்டார்கள்!' என்று உளறுகிறான். அவன் ஏறியிருந்த டாக்ஸி டிரைவரிடம் என்னை அழைத்துப் போய் என் முன்னிலையில் விசாரித்தார். அவன் கூறிய விவரம் விசித்திரமாயிருக்கிறது. ஷாஜஹானாபாத் வெள்ளி வீதியில் ஒரு வாலிபனும் ஒரு பெண்ணும் வண்டியில் ஏறிக் கொண்டார்களாம். ஜந்தர் மந்தர் சாலைக்கு வந்ததும் அந்தப் பெண் வண்டியிலிருந்து இறங்கி நடந்தாளாம். கொஞ்ச தூரம் போவதற்குள் இன்னொரு கார் வந்து அவள் பக்கத்தில் நின்றதாம். அந்தப் பெண்ணைப் பலவந்தமாக ஏற்றிக் கொண்டு கார் விரைவாகச் சென்றதாம். சூரியா சொன்னதின் பேரில் இந்த டாக்ஸி டிரைவரும் பின்தொடர்ந்து வண்டியை விட்டானாம். ஆனால் யமுனைப் பாலத்தில் அந்த வண்டி போனபிறகு இந்த டாக்ஸியை நிறுத்தி விட்டார்களாம். உடனே போலீஸ் வண்டி வந்து பிடித்துக் கொண்டது என்று சொல்கிறான். அவன் சொல்லும் சில அடையாளங்களிலிருந்து பலவந்தமாகப் பிடித்துக் கொண்டு போகப்பட்டவள் சீதாவாயிருக்கலாம் என்று எண்ண இடம் இருக்கிறது. ஆனால் இந்தப் புது டில்லியில் 1943-ம் வருஷத்தில் இப்படியெல்லாம் நடக்குமா என்று எண்ணும்போது நம்பிக்கைப்படவில்லை. மேலும் சீதாவை அப்படி யார் எதற்காகப் பிடித்துக்கொண்டு போக வேண்டும்? இதையெல்லாம் நினைக்க நினைக்கத் தலை சுற்றுகிறது!" என்றான் ராகவன்.
"ஆமாம்; முன்னால் போன வண்டியைப் பற்றித் தகவல் கண்டுபிடிக்கப் போலீஸார் முயற்சி எதுவும் செய்யவில்லையா?" என்று பாமா கேட்டாள்.
"செய்தார்கள். நாலாபுறமும் தந்தி கொடுத்து டெலிபோன் செய்து குறிப்பிட்ட வண்டி வந்தால் நிறுத்தும்படி சொல்லியிருந்தார்கள். டாக்ஸி டிரைவர் முன்னால் சென்ற காரின் நம்பர் கொடுத்திருந்தான். அந்தக் கார் இங்கிருந்து நூறாவது மைலில் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் அதில் பெண் ஒருவரும் இல்லை என்று தகவல் வந்திருக்கிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்று காலையில் என்னை டெலிபோனில் கூப்பிட்டுச் சொன்னார்!"
"ஆகவே உங்கள் மனைவி சீதா போனவள் போனவள் தான்! மிஸ்டர் ராகவன்! உங்களுக்கு என் மனமார்ந்த அனுதாபம்!" என்றாள் பாமா.
"எனக்கு இவரிடம் கொஞ்சம் கூட அனுதாபம் இல்லை. ஊரெல்லாம் பேசிக் கொண்டிருந்த விஷயத்தை இவர் அறிந்து கொள்ளாமல் கண்கள் திறந்திருந்தும் குருடராயிருந்தார் அல்லவா? இவருக்கு இது நன்றாய் வேணும்!" என்றாள் தாமா.
"எது விஷயத்தில் நான் குருடனாய்ப் போனேன்? ஊரெல்லாம் என்ன பேசிக்கொண்டார்கள்?" என்று கேட்டான் ராகவன்.
"அதை வேறு விண்டு சொல்ல வேண்டுமா? நீங்கள் சீதாவை இத்தனை நாள் வீட்டில் வைத்துக் கொண்டிருந்ததே பிசகு என்று சொன்னார்கள். இப்போது அவளே ஒரேயடியாகத் தொலைந்து போய்விட்டாள்! அதற்காக வருத்தப்படுவானேன்? உண்மையில் சந்தோஷப்பட வேண்டும்!"
தாமா எதைக் குறிப்பிடுகிறாள் என்பதை ராகவன் தெரிந்து கொண்டு, சற்று நேரம் தலை குனிந்து மௌனமாக இருந்தான்.
"எப்படியோ என் வாழ்க்கை பாழாகிவிட்டது. இத்தனை நாள் ஆபீஸ் வேலை இருந்தது; அதுவும் போய்விட்டது. இனி மேல் வாழ்க்கையில் என்ன இருக்கிறது?"
"ஏன் இல்லை! மதராஸில் அழகான சமர்த்துக் குழந்தை இருக்கிறது. குழந்தையை அழைத்து வைத்துக் கொண்டு நீங்கள் நிம்மதியா இருப்பதை யார் தடுப்பார்கள்!"
ராகவனுடைய கண்களில் நீர் ததும்பியது. "குழந்தையை அழைத்து வந்தால்; முதலில், 'அம்மா எங்கே?' என்று கேட்பாளே? அதற்கு என்ன சொல்வது? மேலும் குழந்தையை அழைத்து வந்தால் யார் பார்த்துக் கொள்வார்கள்!" என்றான்.
"அதில் என்ன கஷ்டம்? குழந்தையை அழைத்து வருவதற்குள்ளே வீட்டில் இன்னொரு தாயாரைத் தயார் செய்து விட வேண்டும்! வீட்டுக்கு எஜமானியாச்சு! குழந்தைக்குத் தாயார் ஆச்சு! வேலையைப் பற்றிக் கவலையும் வேண்டியதில்லை. இந்த வேலை போய்விட்டால் அப்பா கட்டாயம் இதைவிடப் பெரிய சம்பளம் உள்ள உத்தியோகம் வாங்கித் தருவார்!"
ராகவன் வீட்டுக்குத் திரும்பிச் சென்றபோது, 'இன்னொரு தாயார் தயாரிப்பது பற்றித் தாமா சொன்னதின் கருத்து என்னவாயிருக்கும் என்று யோசித்துக்கொண்டே போனான். ஒருவாறு புரிந்தது. ஆனால் அவனுடைய மனம் அதைப்பற்றி நினைக்கவும் இடம் கொடுக்கவில்லை.
வீட்டை அடைந்ததும் வேலைக்காரர்கள் முகங்களில் சோகக்களையுடன் நிற்பதைப் பார்க்கச் சகியாமல் உள்ளே போனான். ஒவ்வொரு அறையாக வளையவந்தான்; அங்குமிங்கும் நடனமாடினான். ஒவ்வொரு அறையும் ஒவ்வொரு மூலையும் ஒவ்வொரு சாமானும் படமும் சீதாவின் ஞாபகத்தைக் கொண்டு வந்தன. அந்த வீட்டுக்கு வந்த புதிதில் அன்பும் அருமையுமாக வாழ்ந்த நாட்களின் சம்பவங்கள் ஞாபகம் வந்து அவன் உள்ளத்தை உருக்கின. பிற்காலத்தில் அவர்களுக்குள் நடந்த சண்டைகளும் நினைவு வந்தன. சண்டைகளை நினைத்தபோதெல்லாம் குற்றம் தன் பேரில்தான் என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் இனிப் பச்சாதாபப்பட்டு என்ன பிரயோசனம்? போனவள் இனித் திரும்பி வரப் போகிறாளா? அல்லது அவள் இருந்த இடத்தில் இன்னொரு ஸ்தீரியை கொண்டு வந்து வைக்கத்தான் தனக்கு மனம் வருமா?
தன் வாழ்க்கையைப் புதுவிதமாகத் தொடங்கிச் சண்டை சச்சரவு இல்லாமல் பழைய நாட்களைப் போல் இல்வாழ்க்கை நடத்த வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு வீடு வந்த தினத்தில் அல்லவா இப்படி நடந்து விட்டது? தன்னுடைய நல்ல உத்தேசம் இவ்வாறு வீணாகிவிட்டதே?
யோசித்துப் பார்க்கப் பார்க்க, சீதா தன்னிடம் வெறுப்புக் கொண்டு தான் வீட்டை விட்டு ஓடிப்போயிருக்க வேண்டும் என்று ராகவனுக்கு நிச்சயமாய்த் தோன்றியது. தன்னுடைய கொடுமை பொறுக்க முடியாமலே தான் போய்விட்டாள். எங்கே போயிருப்பாள்? ஒருவேளை யமுனையில் விழுந்து உயிரை விட்டிருப்பாளோ? அல்லது குழந்தையைப் பார்ப்பதற்காகச் சென்னைக்கு ரயில் ஏறிப் போயிருப்பாளோ? அப்படியானால், சீக்கிரத்தில் தனக்குத் தகவல் தெரிந்து போய்விடும்.
சூரியா கைதியானதற்கும் சீதா காணாமற் போனதற்கும் உண்மையில் ஏதேனும் சம்மந்தம் இருக்குமா! ஒருநாளும் இருக்க முடியாது. காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதைத் தான். தாமாவும் பாமாவும் சூரியா - சீதா இவர்களின் பேரில் கெட்ட எண்ணம் உண்டாகும்படியாக ஜாடை ஜாடையாகப் பேசியதையெல்லாம் எண்ணிப் பார்த்து, அந்தப் பேச்சுக்களில் ஏதேனும் உண்மை இருக்க முடியுமா என்று சிந்தித்துப் பார்த்தான். ஒரு நாளும் இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தான்.
சில சமயம் தானும் சீதாவின் மனம் நோகும்படி சூரியாவைப் பற்றிப் பேசியதுண்டுதான். அதற்கெல்லாம் காரணம் சீதாவின் நடத்தையைப் பற்றித் தனக்கு ஏற்பட்ட சந்தேகம் அல்ல. அப்படிப்பட்ட கேவலமான சந்தேகம் லவலேசமும் தனக்கு எந்த நாளிலும் ஏற்பட்டதில்லை. சூரியாவின் பேரில் தனக்கு ஏற்பட்ட ஆத்திரத்துக்கெல்லாம் உண்மையான காரணம் என்ன? அவனைப் பற்றிப் போலீஸுக்குத் தகவல் கொடுக்கும்படியாக அவ்வளவு நீசத்தனமான காரியம் தான் செய்யப் புகுந்ததின் உண்மைக் காரணம் என்ன? தன்னுடைய இருதய அந்தரங்கத்தை நன்கு சோதனை செய்து பார்த்து ராகவன் அந்த உண்மையைக் கண்டுபிடித்தான். தாரிணிக்கும் சூரியாவுக்கும் ஏற்பட்டிருந்த சிநேகந்தான் தன்னுடைய ஆத்திரத்துக்கெல்லாம் காரணம். அதனால் ஏற்பட்ட குரோதத்தைச் சீதாவின் பேரில் காட்டி அவளுடைய வாழ்க்கையை நரகமாகச் செய்ததினாலேயே இந்த விபத்துக்குத் தான் ஆளாக நேர்ந்தது.
முதல் நாள் மாலையில் நடந்த பார்ட்டியில் தாரிணி தன்னைக் கெஞ்சி வேண்டிக் கொண்டதெல்லாம் ஞாபகம் வந்தது. சீதாவை மதராஸில் கொண்டுபோய் விட்டுப் பம்பாய்க்கு வரும்படியும் வந்தால் தன் பிறப்பைக் குறித்த ஓர் அந்தரங்கத்தை வெளியிடுவதாகவும் தாரிணி சொன்னாள். அந்த ரகசியம் என்னவாயிருக்கும்?
தாமாவும் பாமாவும் தாரிணியைச் சர்க்காரின் உளவுக்காரி என்று சொன்னது சுத்த அபத்தம். அது ஒருநாளும் உண்மையாயிராது. அந்தச் சகோதரிகள் வெகு பொல்லாதவர்கள். யார் பேரிலாவது குறை சொல்லுவது தான் அவர்களுடைய தொழில். அவர்களுடைய சகவாசம் உதவவே உதவாது. இந்தச் சமயத்தில் தனக்கு ஆறுதல் சொல்லக் கூடியவளும் உதவி செய்யக் கூடியவளும் தாரிணி தான்.
தாரிணியை எப்படியாவது சந்தித்து அவளிடம் ஆலோசனை கேட்க வேண்டும். சீதா போய்விட்டதைப் பற்றி அவளிடம் உடனே சொல்லி விட வேண்டும்.
இன்னும் இரண்டு நாள் நேற்றைக்குப் பார்ட்டி கொடுத்த உத்தியோகஸ்தர் வீட்டிலே இருப்பேன் என்று சொன்னால் அல்லவா? அங்கே அவளைக் கூப்பிட்டுப் பார்க்கலாம்.
டெலிபோனை எடுத்து ராகவன் விசாரித்தான். மேற்படி உத்தியோகஸ்தர் வீட்டில் தாரிணி இல்லையென்று பதில் வந்தது.
அந்த நிமிஷத்தில் ராகவனுக்குத் தன்னுடைய வருங்கால வாழ்க்கையெல்லாம் சூனியமாகத் தோன்றியது.
சீதாவுக்கு உணர்வு வந்தபோது பட்சிகளின் கானம் கலகலவென்று அவள் செவியில் கேட்டுக் கொண்டிருந்தது. இடையிடையே இலைகள் அசைந்தாடும் போது உண்டாகும் சலசலப்புச் சத்தமும் கேட்டது. இவற்றுடன் கண்ணனுடைய இடையில் அணிந்த மணிச் சதங்கைகள் குலுங்குவது போன்ற 'கிண்கிணி'ச் சத்தம் சில சமயம் கலந்து கொண்டிருந்தது. வேறு நினைவேயில்லாமல் அந்த இனிய சப்தங்களை அனுபவித்துக் கொண்டிருந்தாள். மூடியிருந்த கண்ணிமைகளைத் திறப்பதற்கு மனம் வரவில்லை.
கடிகாரத்தில் மணி அடிக்கும் சத்தம் அவளை அந்த இன்பமயமான நாத உலகத்திலிருந்து பூவுலகத்துக்குக் கொண்டு வந்தது. மணி ஆறு அடித்தது. உடனே அவளுடைய கண் இமைகள் திறந்தன. சுற்றும் முற்றும் மேலும் கீழும் அவள் கண்ட காட்சி அவளைத் திகைப்படையச் செய்தது. தந்தத்தைப் போல வெண்மையும் பளபளப்பும் கொண்ட சலவைக் கல் சுவர்கள் நாலுபுறமும் அவளைச் சூழ்ந்திருந்தன. கீழ்த் தரையும் சலவைக் கல் பதித்தது தான். ஆனால் அதில் பெரும் பகுதியை சித்திர விசித்திரமான இரத்தினக் கம்பளம் மூடியிருந்தது. மேலே இருந்து கண்ணாடிக் குஞ்சலங்களுடன் கூடிய விதவிதமான வேலைப்பாடு அமைந்த 'குளோப்' விளக்குகள் தொங்கிக் கொண்டிருந்தன. பளிங்குச் சாளரங்களின் வழியாகச் சில சமயம் உள்ளே புகுந்த இனிய காலை நேரத்துக் காற்று அந்த விளக்குகளை ஆட்டிவிட்டபோது கண்ணாடிக் குஞ்சலங்கள் ஒன்றோடொன்று மோதிக் கிண்கிணிச் சத்தத்தை உண்டாக்கின.
அத்தகைய அறையின் மத்தியில் சப்ரமஞ்சக் கட்டிலில் பட்டு மெத்தை மேல் வெல்வெட் தலையணைகளுக்கிடையில் தான் படுத்திருந்ததைச் சீதா அறிந்தாள். சிறிது நேரம் திகைப்பாயிருந்தது. முதல் நாள் இரவு நடந்த சம்பவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக நினைவு வந்து, நிகழ்ச்சிகள் எல்லாம் உண்மை தான் என்பதை நிரூபித்துக் கொண்டு அவளுடைய முகத்தில் அடிபட்ட இடத்தில் 'விண் விண்' என்று இலேசான வலி உணர்ச்சி இருந்து கொண்டிருந்தது. ஆகையால் அந்தச் சம்பவங்கள் எல்லாம் உண்மையே தான்! தன்னைச் சில வடக்கத்தி மனிதர்கள் பலவந்தமாகக் காரில் ஏற்றிக்கொண்டு வந்ததும், சூரியா இன்னொரு காரில் தன்னைத் தொடர்ந்து வந்ததும், சூரியாவின் வண்டி யமுனைப் பாலத்தின் முனையில் தடுத்து நிறுத்தப்பட்டதும் உண்மை தான். வழியில் ஒரு ஊரில் தான் பசிக்கிறது என்று சொன்னதும், தனக்காகப் பூரி, மிட்டாய், பால் வாங்கிக் கொண்டு வந்ததும் உண்மை தான். பாலைச் சாப்பிட்ட பிறகு அதில் மயக்க மருந்து கலந்திருக்குமோ என்ற சந்தேகம் உண்டானதும் வேறு வண்டிக்கு மாற்றப்பட்டதும் அதில் ஒரு ஸ்திரீ தனக்குத் துணையாக ஏறியதுங்கூட உண்மையாகத் தான் இருக்க வேண்டும். அந்தப் பிரயாணம் இந்த அரண்மனையில் வந்து முடிவடைந்திருக்கிறது. ஆம்; இது யாரோ ஒரு மகாராஜாவின் அரண்மனை என்பதில் சந்தேகம் இல்லை. பலகணியின் வழியாகப் பார்த்தபோது வெளியிலே அழகான பூங்காவனம் தோன்றியது. செடிகளும், கொடிகளும், மரங்களும் பூத்துக் குலுங்கிய அந்தப் பூம்பொழிலில் ஆங்காங்கு பளிங்குக் கல் தடாகங்களும் தடாகங்களின் மத்தியில் முத்துத் துளிகளை வீசி விசிறிய நீர்ப் பொழிவுகளும் தோன்றின. பூங்காவனத்துக்கு அப்பால் அடுக்கடுக்கான மாட கூடங்களுடனும் கலசங்கள் ஸ்தூபிகளுடனும் மாளிகைகள் தென்பட்டன.
ஆம்; அது மாமன்னர் வாழும் அரண்மனைத் தான். ஆனால் எந்த மன்னருடைய அரண்மனை? எதற்காகத் தன்னை இந்த அரண்மனைக்குப் பலாத்காரமாகப் பிடித்து வந்திருக்கிறார்கள்!
சுதேச சமஸ்தானங்களின் மகாராஜாக்கள் அந்தக் காலத்திலே கூடச் செய்யும் அக்கிரமமான காரியங்களைப் பற்றிச் சீதா எத்தனையோ கேள்விப்பட்டுத்தானிருந்தாள். பம்பாய் நகரில் மலபார் குன்றில் நடந்த பயங்கரமான கொலையைப் பற்றி அவளுக்குத் தெரியாதா என்ன? எல்லாம் தெரிந்த விஷயம் தான். அப்படி யாரேனும் ஒரு மகாராஜா தன் பேரில் மோகம் கொண்டு தன்னை இங்கே கொண்டுவரச் செய்திருப்பானோ? அவ்விதமானால் எந்த விதத்தில் தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக் கொள்ளுவது என்று சிந்தனை செய்தாள். பற்பல முறைகளைப் பற்றி யோசித்தாள். தப்பித்துக் கொள்ளப் பெரு முயற்சி செய்து பார்க்க வேண்டும்; முடியாமற் போனால் தற்கொலை செய்து கொள்ள வழி தேட வேண்டும். எந்த முறையைக் கைக்கொள்வதாயிருந்தாலும் ஆரம்பத்தில் நயமாகவும் நல்லதனமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
இந்தச் சமயத்தில் சமீபத்தில் காலடிச் சத்தம் கேட்கவே சீதா பீதியடைந்து படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். அந்த அறையின் கதவு இலேசாகத் திறக்கப்பட்டபோது அவளுடைய நெஞ்சத்தின் கதவும் படபடவென்று அடித்துக் கொண்டது.
ஆனால் உள்ளே வந்தவள் ஒரு சாதாரண தாதிப் பெண் என்று பார்த்தவுடனே தெரிந்தது. வந்தவள் ஹிந்தி பாஷையில் மரியாதையாகவும் இனிமையாகவும் பேசினாள். பக்கத்து அறையில் முகம் கழுவிக் கொள்ளலாம் என்றும் காலைச் சிற்றுண்டி தயாராயிருக்கிறதென்றும் அவள் சொன்னதாகச் சீதா தெரிந்து கொண்டாள். அவளைப் பல கேள்விகள் கேட்கச் சீதா விரும்பினாள்; ஆனால் பேசுவதற்கு நா எழவில்லை; துணிவும் ஏற்படவில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி முகம் கழுவிக் கொள்ளச் சென்றாள்.
காலைச் சிற்றுண்டி அருந்திய பிற்பாடு தூக்க மருந்தினால் ஏற்பட்ட மயக்கம் முழுதும் தெளியவில்லை. மறுபடியும் படுக்கையில் படுத்தாள். அரைத் தூக்கமும் அரை விழிப்புமாய் இருந்த சமயத்தில் இரண்டு மூன்று குரல்கள் பேசிக்கொண்டே வருவது கேட்டது. குரல்களில் ஸ்திரீயின் குரல் ஒன்றும் இருந்தது. அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பித் தூங்குவது போலப் பாசாங்கு செய்து அசையாமலிருந்தாள். வந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். பேசியதெல்லாம் சீதாவுக்கு விளங்கவில்லை, ஆயினும் "மகாராஜா," "மகாராணி" என்னும் சொற்கள் நன்கு விளங்கின. "தூக்க மருந்தின் சக்தி இன்னும் இருக்கிறது!" என்று ஒரு குரல் கூறியது. அந்தக் குரல் முதல் நாள் இரவு தன்னை மோட்டாரில் ஏற்றி அழைத்து வந்தவனின் குரல் என்று சீதா அறிந்து கொண்டாள். "இவள் என் சகோதரிதானா? நிச்சயமா?" "சந்தேகமில்லை. ராஜ மாதாவின் கட்டளையை அப்படியே நிறைவேற்றி விட்டேன்!" என்றது இன்னொரு குரல். முதிர்ந்த மாதரசி ஒருத்தியின் குரல், "இந்தப் பெண் இந்த அரண்மனையில் உன்னைப்போலவே வளர்ந்திருக்க வேண்டியவள். விதியானது அவளை இத்தனை காலமும் பிரித்து வைத்திருந்தது" என்று கூறியது. இதைக் கேட்ட சீதாவின் உடம்பு சிலிர்த்தது; உள்ளம் பரவசம் அடைந்தது. ஆயினும் அப்போது கண் விழித்து எழுந்திருக்க அவளுக்கு மனம் வரவில்லை. ஒருவேளை இதெல்லாம் கனவோ, என்னமோ? கண்ணை விழித்தால் ஒருவேளை மறைந்து விடுமோ என்னமோ?.. இத்தகைய நெஞ்சக் கலக்கத்தில் மூடிய கண்ணைத் திறவாமல் இருந்தாள் சீதா.
சில நிமிஷத்துக்கெல்லாம் அந்த மூதாட்டியின் குரல் "கொஞ்ச நேரத்துக்குப் பிறகு வரலாம்!" என்று சொல்லியது, இத்துடன், வந்திருந்தவர்கள் திரும்பச் சென்றார்கள். அவர்கள் கொஞ்ச தூரம் போவதற்கு அவகாசம் கொடுத்த பிறகு சீதா விழித்துப் பலகணி வழியாகப் பார்த்தாள். கும்பலாகச் சென்றவர்களில் ராஜ மாதா யார் என்றும் ராஜ குமாரர் யார் என்றும் ஊகித்துத் தெரிந்து கொள்வதில் கஷ்டம் ஒன்றும் ஏற்படவில்லை.
தூக்கம் நன்றாகக் கலைந்துவிட்டது; படுத்திருக்க முடியவில்லை. எழுந்து வெளியே வந்தாள். தான் படுத்திருந்த இடம் அரண்மனைப் பூங்காவனத்தின் மத்தியில் இருந்த மாளிகை என்று தெரிந்தது. பூந்தோட்டத்தைச் சுற்றி நாலுபுறத்திலும் இதை விடப் பெரிய பெரிய மாட மாளிகைகள் காணப்பட்டன. மாளிகைகளுக்கு மத்தியில் தோன்றிய இடைவெளி வழியாகப் பார்த்தால் தூரத்தில் நீல நிறத்து ஏரி நீர் படர்ந்திருந்தது.
இது எந்த ஊர் அரண்மனை? எந்த ராஜாவின் சிங்கார மாளிகை? யார் வளர்த்த பூந்தோட்டம்?
இந்த மகிமையான ராஜரீகச் செல்வங்களில் எல்லாம் தனக்கும் உரிமை உண்டா? விதி வசத்தினால் இத்தனை காலமும் பிரிந்திருக்க நேரிட்டதா? ராஜ குலத்திலே பிறந்த ராஜகுமாரியான நான் விதியின் விளையாட்டினால் ஏழைக் குடும்பத்தில் வளர்ந்து எளிய வாழ்க்கை நடத்தி எல்லையில்லாத கஷ்டங்களையெல்லாம் அனுபவிக்கும்படி நேரிட்டதா? அந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் இப்போது உண்மையிலேயே முடிவு வந்துவிட்டதா?
அந்த மூதாட்டி யார்? தன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற அன்னைதானா. பெரிய தாயார் அல்லது சிறிய தாயார் உறவு பூண்டவளா! அந்த அழகிய ராஜகுமாரன் தன்னுடன் பிறந்த சகோதரனா?... ஆகா! இதெல்லாம் உண்மையாயிருக்க முடியுமா? சிறு வயதில் தான் கண்ட கற்பனைக் கனவுகள், கட்டிய ஆகாசக் கோட்டைகள், மனோராஜ்யங்கள் - எல்லாவற்றையும் விட இப்போது நடந்திருப்பது அதிசயமா இருக்கிறதே?
அதிசயந்தான்! உலகத்தில் இந்த நாளிலும் எத்தனையோ அதிசயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த அதிசயங்களில் ஒன்று தன் வாழ்க்கையிலும் நடந்து விட்டிருக்கிறது. தான் ராஜகுலத்தில் பிறந்த ராஜகுமாரி என்பது உண்மை தான். இல்லாவிட்டால் தன்னை இங்கே கொண்டு வருவதற்கு இவ்வளவு பிரயத்தனம் ஏன் செய்திருக்க வேண்டும்? அந்த மூதாட்டியும் ராஜகுமாரனும் பேசியதிலிருந்து அது நிச்சயம் என்று ஏற்படுகிறது.
இந்த விஷயம் எல்லாம் அவருக்குத் தெரியும்போது அவருடைய மனதின் நிலை எப்படியிருக்கும்? ராஜ வம்சத்தில் பிறந்த ராஜகுமாரியைத் தான் மணந்துகொள்ளும் பாக்கியம் கிடைத்தது பற்றிப் பெருமை கொள்வாரா? தன்னை இத்தனை காலமும் இவ்வளவு கொடூரமாக நடத்தியது பற்றி வருத்தப்படுவாரா? இதற்குப் பிறகும் அவரையே கணவர் என்றும் கடவுள் என்றும் கருதித் தான் நடந்துகொள்ளப் போவது குறித்து மகிழ்ச்சியடைவாரா? இனிமேலாவது தன்னை அவமதித்து அலட்சியமாய் நடத்தாமல் அன்புடன் போற்றி அருமையாக வைத்துக் கொள்வாரா? நியாயமாகப் பார்த்தால் தன்னிடம் அவர் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டும்! தனக்கு இழைத்த அநீதிகளுக்காகவும் கொடுமைகளுக்காகவும் வருந்திப் பச்சாதாபப்பட வேண்டும். இனிமேல் அப்படியெல்லாம் நடந்து கொள்ளுவதில்லையென்று உறுதிமொழியும் கொடுக்க வேண்டும். ஆனால் அப்படி மன்னிப்புக் கோர வேண்டும் என்று தான் வற்புறுத்தப் போவதில்லை. அந்த மாதிரியெல்லாம் அவரை அவமானப்படுத்தத் தனக்கு ஒரு நாளும் மனம் வராது. அவர் ஏதாவது சொல்ல ஆரம்பித்தால் உடனே நிறுத்த அவருடைய வாயைத் தன்னுடைய கையினால் பொத்தி, "வேண்டாம்! வேண்டாம்!" என்று சொல்ல வேண்டும். எப்படி இருந்தாலும் அவர் தன்னுடைய கணவர் அல்லவா? ஏழையும் அனாதையுமாயிருந்த தன்னை ஆசைப்பட்டு மணந்த மணவாளர் அல்லவா? செல்வத்திலே பிறந்து செல்வத்திலே வளர்ந்த லலிதாவை வேண்டாம் என்று சொல்லித் தன்னை விரும்பிக் கலியாணம் செய்துகொண்ட பிராணநாதர் அல்லவா? அவர்.
லலிதாவுக்கு இதெல்லாம் தெரியும்போது என்ன நினைப்பாள்? சந்தோஷப்படுவாளா? அசூயைப்படுவாளா? தன் அருமைத் தோழிக்கு இத்தகைய அதிர்ஷ்டம் கிடைத்தது பற்றிச் சந்தோஷப்படத்தான் செய்வாள். ஆயினும் மனதிற்குள்ளே கொஞ்சம் அசூயையும் இல்லாமற் போகாது. கல்யாணத்துக்கென்று காலணாச் செலவு செய்ய நாதியற்று இரவல் மணப்பந்தலில் மாலையிட்ட அனாதைச் சீதா ஒரு பெரிய சமஸ்தானத்தின் ராஜ குடும்பத்தில் பிறந்த ராஜகுமாரி என்று தெரிந்தால் கொஞ்சமாவது அசூயை உண்டாகாமல் இருக்குமா? மனுஷர்களுக்குச் சாதாரணமாக உள்ள பொறாமை லலிதாவுக்கு மட்டும் எப்படி இல்லாமற் போகும்?
அதெல்லாம் இருக்கட்டும், இப்போது இவர்களிடம் தான் எப்படி நடந்து கொள்வது? தன் விஷயத்தில் இவர்களுடைய உத்தேசம் என்னவாக இருக்கும்? எதற்காக இவ்வளவு மர்மமாகவும் பலவந்தமாகவும் தன்னைப் பிடித்துக் கொண்டு வரச் செய்திருக்கிறார்கள்? இவர்களிடம் கொஞ்சம் கண்டிப்பாகவும் ஜாக்கிரதையாகவும் பேச வேண்டும். தன்னை இங்கே கொண்டு வருவதற்கு அவர்கள் கையாண்ட முறையைத் தான் விரும்பவில்லையென்று காட்டி விட வேண்டும். மேலே அவர்கள் என்ன சொன்னாலும் சுலபத்தில் இணங்கிவிடக் கூடாது. அவர்களுடைய நோக்கம் இன்னதென்று தெரிந்துகொண்டு அதற்குத் தக்கபடி யோசித்துப் பதில் சொல்ல வேண்டும். அடாடா! இந்த மாதிரி சமயத்தில் சூரியாவின் உதவியும் யோசனையும் தனக்குக் கிடைக்குமானால் எவ்வளவு நலமாயிருக்கும்? ஐயோ! பாவம்! சூரியா இப்போது எங்கே எந்த நிலையில் இருக்கிறானோ? ஒருவேளை இன்னமும் என்னைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறானோ? அல்லது போலீஸார் அவனைப் பிடித்துக் கொண்டு விட்டார்களோ என்னமோ!
இந்த அரண்மனையில் தன்னுடைய நிலைமை இன்னதென்று தெரிந்ததும் முதற்காரியமாகச் சூரியாவைப் பற்றி விசாரிக்க வேண்டும். விசாரித்து அவனுக்கு வேண்டிய உதவி செய்ய வேண்டும். பார்க்கப் போனால் அவனைத் தவிர தன்னிடம் உண்மையான அபிமானம் உள்ளவர்கள் வேறு யார்? அவனைப் போல் தனக்காகக் கஷ்ட நஷ்டங்களையெல்லாம் அனுபவிக்கத் தயங்காதவர்கள் வேறு யார்?
இவ்வாறெல்லாம் சிந்தனை செய்த வண்ணம் சீதா அந்த அழகிய அரண்மனை உத்தியான வனத்தில் உலாவித் திரிந்தாள். ஆங்காங்கு நின்று செடிகளில் பூத்துக் குலுங்கிய புஷ்பக் கொத்துக்களிலிருந்து ஒவ்வொன்றைப் பறித்து முகர்ந்தாள். மரக் கிளையின் மீது அமர்ந்து கீதமிசைத்த பட்சிகளை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றாள். நடந்து அலுத்துக் கால்களும் வலி எடுத்த பிறகு அந்தப் பூங்காவனத்தில் போட்டிருந்த சலவைக் கல் மேடை ஒன்றின் மீது உட்கார்ந்தாள். அவளுடைய உள்ளத்தின் கற்பனா சக்தி விசுவரூபம் எடுத்துப் பூமியையும் வானத்தையும் அளாவிக் கொண்டு நின்றது. அவளுடைய சித்தம் மரங்களின் உச்சி மீது உலாவி வானத்துப் பறவைகளுடன் குலாவி மேக மண்டலங்களில் திரிந்து இன்ப ஒளிக் கடலில் நீந்தி விளையாடியது. காலக் கணக்கெல்லாம் குழப்பமடைந்து, ஒரு நிமிஷ நேரம் நூறு வருஷமாக நீடித்தது. ஆயிரம் வருஷம் அரை நிமிஷமாய்ப் பறந்தது. எத்தனை எத்தனையோ மனோராஜ்யங்கள் எழுந்து உடனே சிதைந்து விழுந்தன. மின்னல் நேரத்தில் ஆகாச வெளியில் அற்புதமான கோட்டைகள் தோன்றின. அதே வேகத்தில் அவை மறைந்தன. அன்பும் ஆசையும் இன்பமும் துன்பமும் குரோதமும் குதூகலமும் அலை அலையாகவும் மலை மலையாகவும் கொந்தளித்து மேலெழுந்து நொடிப்பொழுதில் அடங்கின.
அவர்கள் மறுபடியும் வந்தார்கள் ராஜமாதா, ராஜகுமாரர், அவர்களுடன் அந்தரங்கப் பணியாள் - மூவரும் வந்தார்கள்.
சீதா அவர்களை ஏறிட்டுப் பார்த்தாள். கண் கொட்டாத ஆவலுடன் மூவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.
ராஜமாதாவின் முகத்தில் புன்னகை மலர்ந்திருந்தது.
"மகளே! உன்னைச் சிங்கார மாளிகையில் தேடிவிட்டு வருகிறோம். அதற்குள் தோட்டத்தைச் சுற்ற ஆரம்பித்து விட்டாயா? மிகவும் சந்தோஷம். இந்த அரண்மனைத் தோட்டத்திலே உலாவ உனக்குப் பூரண உரிமை உண்டு. இந்த அரண்மனையிலேயே வசிப்பதற்கும் உனக்குப் பாத்தியதை உண்டு. இதையெல்லாம் கேட்க உனக்கு வியப்பாயிருக்கிறதா?" என்று ராஜமாதா கேட்டாள்.
சீதா மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. எத்தனையோ கேள்விகள் கேட்க அவளுடைய உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. ஆனால் பேச முடியாதபடி உணர்ச்சி அவளுடைய தொண்டையை அடைத்தது. மேலும் ராஜமாதாவிடம் ஹிந்தி பாஷையில் பேசுவதற்கு வேண்டிய சக்தி தன்னிடம் இருக்கிறதா என்பது பற்றிச் சந்தேகம் உதித்தது. டில்லியில் வசித்த காலத்தில் வேலைக்காரர்களுடன் பேசிப் பழகியதனால் ஏற்பட்ட ஹிந்தி பாஷை ஞானம் இந்த மகத்தான சந்தர்ப்பத்துக்குப் போதுமானது.
"மகளே, ஏன் பேசாமலிருக்கிறாய்? நாங்கள் உனக்கு அன்னியர்கள் அல்ல. நான் உன்னுடைய சிறிய தாயார்; இவன் உன்னுடைய சகோதரன். காலம் செய்த கோலத்தினால் இத்தனை நாளும் நீ வேறு எங்கேயோ வசிக்க நேரிட்டது" என்றாள்.
சீதாவுக்கு ஒரே பிரமிப்பாயிருந்தது வியப்பும் மகிழ்ச்சியும் போட்டியிட்டுக் கூத்தாடின. தான் எண்ணிய எண்ணமெல்லாம் உண்மைதான்; கனவுமல்ல, கருணையுமல்ல. ஏழைச் சீதா உண்மையில் ராஜ குலத்தில் பிறந்த ராஜகுமாரி! அற்புதம் என்றால் இதுவல்லவா அற்புதம்? அதிர்ஷ்டம் என்றால் இதைப் போன்ற அதிர்ஷ்டம் வேறு என்ன உண்டு.
"மகளே! இன்னும் நீ பேசவில்லை. ஒருவேளை உன்னை இங்கே கொண்டு வந்த முறை உனக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது! அதனால் கோபமாய் இருக்கிறாயாக்கும்! ஆனால் உனக்கு நான் பல தடவை சொல்லி அனுப்பியும் எங்களிடம் வரச் சம்மதிக்கவில்லை. ஆகையினால் தான் உன்னைக் கட்டாயப்படுத்தி அழைத்து வருவது அவசியமாயிற்று. நீயே யோசித்துப் பார்! உன் சகோதரனுக்குச் சீக்கிரத்தில் மகுடாபிஷேகம் நடக்கப் போகிறது. அதற்கு முன்னால் இந்தக் குடும்பத்தில் உனக்குச் செய்யப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் செய்துவிட வேண்டுமென்று இவன் பிடிவாதம் பிடித்தான். அப்படியானால் உன்னைப் பலவந்தமாகக் கொண்டு வருவதைத் தவிர வேறு வழி என்ன?" என்றாள் ராஜமாதா.
இந்தச் சமயத்தில் ராஜகுமாரரும் சம்பாஷணையிலே சேர்ந்து கொண்டார்:- "சகோதரி! அம்மா சொல்வது சரிதான். தங்களைப் பலவந்தமாக இங்கே கொண்டு வரச் செய்ததற்குக் காரணம் என் ஆவலே. பிரயாணத்தின் போது ஏதாவது கஷ்டம் ஏற்பட்டிருந்தால் அதற்காக மன்னிக்க வேண்டும். மேலும் தாங்கள் இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் பெரு முயற்சி செய்து வருகிறீர்கள் என்று அறிவேன். அதற்குக் குந்தகம் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. உண்மையில் எனக்கே இந்தச் சமஸ்தானத்து ராஜாவாக முடிசூட்டிக் கொள்வதில் விருப்பமில்லை. வெள்ளைக்காரர்களைத் துரத்தியடித்துவிட்டு இந்தியாவின் சுதந்திரத்தை நிலை நாட்ட வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது. அதற்கு இந்த யுத்த சமயத்தைக் காட்டிலும் நல்ல சமயம் கிடைப்பது அரிது. ஆனாலும் என் தாயாரின் வற்புறுத்தலுக்காகவே இந்த ராஜ்யப் பொறுப்பை ஒப்புக் கொள்ளப் போகிறேன். தாங்கள் என்னுடன் இருந்து ஒத்தாசை செய்ய வேண்டும் சகோதரியே! ஒத்தாசை செய்வீர்களா?"
சீதாவுக்குக் கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்ட மாதிரி இருந்தது. இது என்ன கூத்து? இவர்கள் என்னென்னமோ சொல்கிறார்களே? ஒருவேளை இவர்கள் பேசுகிற ஹிந்தி பாஷை சரியாகப் புரியாததினால் இப்படியெல்லாம் நமக்குத் தோன்றுகிறதோ?
இதற்கு மேல் சும்மா இருக்கக் கூடாதென்று தீர்மானித்து, "நான் ஒரு அபலை ஸ்திரீ; என்னால் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? மேலும் என்னுடைய புருஷரிடம் கேட்க வேண்டாமா? என்னுடைய பதிக்குத் தெரியாமல் என்னை நீங்கள் கொண்டு வந்ததே பிசகு!" என்றாள்.
இந்த வார்த்தைகளைக் கேட்ட ராஜமாதாவும் ராஜகுமாரரும் மலை சரிந்து தலையில் விழுந்தவர்களைப்போல் பிரமித்துப் போய் நின்றார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்; பிறகு சற்று விலகி நின்ற மூன்றாவது ஆளின் முகத்தையும் பார்த்தார்கள்.
"நன்றாய்ப் படித்திருக்கிறாள் என்று நீர் சொன்னீரே? இந்த மாதிரிக் கொச்சையான ஹிந்தி பேசுகிறாளே?" என்று ராஜமாதா கேட்டாள்.
"கணவனைப் பற்றிப் பேசுகிறாளே? கல்யாணம் ஆகியிருக்கிறதா, என்ன?" என்று ராஜகுமாரர் கேட்டார்.
மூன்றாவது ஆசாமி திகைத்த முகத்துடன் சீதாவைப் பார்த்து, "உங்களுக்கு கலியாணம் ஆகியிருக்கிறதா?" என்று கேட்டான்.
"ஏன் ஆகவில்லை? ரொம்ப காலத்துக்கு முன்பே ஆகிவிட்டது! குழந்தை கூட இருக்கிறது!" என்றாள் சீதா.
ராஜகுமாரர், "இதென்ன அதிசயம்? அம்மணி தாங்கள் யார்? எந்த ஊர்?" என்று கேட்டார்.
சீதாவுக்கு எதனாலோ கோபம் அதிகமாகிக் கொண்டிருந்தது.
"நான் யார் என்று தெரியாமலா என்னைப் பிடித்துக் கொண்டுவரச் செய்தீர்கள்?" என்றாள்.
"அம்மணி! தயவு செய்து சொல்லுங்கள் தங்கள் பெயர் என்ன? தங்களுடைய பெற்றோர்களின் பெயர் என்ன?" என்று ராஜகுமாரர் கேட்டார்.
"தாராளமாகச் சொல்கிறேன். என் பெயர் சீதா! என் தந்தை பெயர் துரைசாமி ஐயர். என் தாயாரின் பெயர் ராஜாம்மாள், என் கணவன் பெயர் சௌந்தரராகவன். என் மாமியாரின் பெயர் காமாட்சி அம்மாள். என் அருமை மாமனாரின் பெயர் பத்மலோசன சாஸ்திரிகள். இன்னும் யார் யாருடைய பெயர் உங்களுக்குத் தெரியவேண்டும்?"
"போதும், அம்மணி! போதும்! கியான்தாஸ்! இது என்ன மூடத்தனம்? இது என்ன அசம்பாவிதம்! இந்தத் தவறு எப்படி நேர்ந்தது?" என்று ராஜகுமாரர் பணியாள் மீது எரிந்து விழுந்தார்.
கியான்தாஸ் தன் சட்டைப் பையிலுள்ள புகைப்படத்தை எடுத்து சீதாவுடன் ஒப்பிட்டு இரண்டு மூன்று தடவை உற்றுப் பார்த்தான்.
"தவறு நேர்ந்துவிட்டது! ஐயோ! தவறு நேர்ந்து விட்டது. இந்தப் பெண்ணும் அவள் மாதிரியே இருக்கிறாள். ஆனால் அவள் அல்ல! அடடா! எவ்வளவு பெரிய தவறு நேர்ந்து விட்டது? இப்போது என்ன செய்வது?" என்று கியான்தாஸ் கூடச் சேர்ந்து அங்கலாய்த்தான்.
சீதாவைப் பார்த்து ராஜமாதா, "பெண்ணே! உண்மையாகச் சொல்லிவிடு! உன்னுடைய பெயர் தாரிணி இல்லையா?" என்று கேட்டாள்.
அந்த ஒரே கேள்வியின் மூலம் சீதாவுக்குச் சகல விவரங்களும் தெரிந்துவிட்டன. அவளுடைய ஆகாசக் கோட்டைகளும் மனோராஜ்ய மாளிகைகளும் இடிந்து தகர்ந்து பொடிப் பொடியாகிக் காற்றிலே பறந்து மண்ணிலே விழுந்து மண்ணோடு மண்ணாகி மறைந்து தொலைந்து போயின!
ஆகா! இந்த முழு மூடர்கள் தன்னைத் தாரிணி என்று தவறாக எண்ணி இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள். இத்தனை நேரம் அது தெரியாமல் நாமும் ஏமாந்து ஏதேதோ கோட்டை கட்டி கொண்டிருந்தோமே?
ஆசாபங்கத்தினாலும் அசூயையினாலும் ஆங்காரத்தினாலும் சீதாவின் உள்ளம் எரிமலையாகியது. எரிமலை கக்கும் தீயின் கொழுந்தைப்போல் வார்த்தைகள் சீறிக்கொண்டு வந்தன.
"நான் தாரிணி இல்லை; நான் உங்கள் தூர்த்த ராஜ குலத்தில் பிறந்தவளும் இல்லை. தளுக்கினாலும் குலுக்கினாலும் மூடப் புருஷர்களை மயங்க வைக்கும் மாயக்காரியும் அல்ல. நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஏழைப் பெண். தாலி கட்டிய புருஷனோடு மானமாய் ஜீவனம் செய்து வந்தேன். உங்களுடைய முழு மூடத்தனத்தில் இந்த மாதிரி என்னை அலங்கோலப்படுத்தி விட்டீர்கள். இனி என்னுடைய கதி என்ன?" என்று சீதா அலறினாள்.
"பெண்ணே! வீணாகக் கத்தாதே! நடந்தது நடந்து விட்டது. நீ இருந்த இடத்தில் உன்னைத் திருப்பிக் கொண்டு போய் விட்டுவிடச் சொல்கிறேன்?" என்றாள் ராஜமாதா.
"உங்களுக்கு என்ன? திருப்பிக் கொண்டு போய் விடுகிறேன் என்று சுலபமாய் சொல்லிவிடுகிறீர்கள். இப்படித் தெறிகெட்டு எங்கேயோ போய்விட்டுத் திரும்பி வந்தவளை அவர் திருப்பிச் சேர்த்துக் கொள்ள வேண்டாமா? நீங்கள் மகா பாவிகள்! இரக்கமற்ற சுயநலப் பிண்டங்கள்! உங்களுடைய வம்சம் அடியோடு நாசமாகிப் பூண்டற்றுப் போகும்..."
அதற்கு மேல் அங்கே நிற்க விரும்பாமல் ராஜமாதாவும் ராஜகுமாரரும் விரைந்து சென்றார்கள். போகும்போதே அவர்கள் அந்த மூன்றாவது ஆளை ஏதோ பலமாகக் கண்டித்துக் கொண்டு போக அந்த ஆள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டும் சமாதானம் சொல்லிக்கொண்டும் போனான்.
அவர்கள் கண்ணுக்கு மறைந்ததும் சீதா விம்மி அழத் தொடங்கினாள். இதயத்தின் அடிவாரத்தில் வெகு காலமாக மறைந்து கிடந்த துக்கம் பொங்கிப் பீறிக்கொண்டு வந்தது. கொதிக்கின்ற கண்ணீர் தாரை தாரையாகப் பெருகி கன்னத்தைச் சுட்டது. பழைய காலத்துக் காவியங்களிலே வரும் கற்புக்கரசிகளைப் போலச் சீதாவுக்கு மட்டும் சக்தியிருந்தால் அந்த மூன்று பேரையும் அந்த க்ஷணமே சுட்டு எரித்துச் சாம்பலாக்கி இருப்பாள். தண்டனை அளிக்கும் அதிகாரம் உடைய அரசியாயிருந்தால் தாரிணியைச் சுண்ணாம்புக் காளவாயில் போடும்படி கட்டளையிட்டிருப்பாள்.
ஆகா! எங்கே போனாலும் அந்தப் பாதகியல்லவா தன்னுடைய சத்துருவாக வந்து சேருகிறாள்? தன்னுடைய ஆசைகளைப் பங்கமுறச் செய்து தன்னுடைய வாழ்க்கையைப் பாழாக்குவதற்கென்றே தாரிணி பிறந்தவள் போலும்! அடி! மோகன உருவம் கொண்ட பயங்கர ராட்சஸியே! கலிகால சூர்ப்பணகை என்றால் உனக்கல்லவா தகும்? உன்னை மானபங்கம் செய்து புத்தி புகட்ட எந்த வீர புருஷனாவது முன் வரமாட்டானா? சூரியாவிடம் சொன்னால் அவனாவது செய்யமாட்டானா? அப்படி யாரும் உன்னைப் பழிவாங்க முன் வராவிட்டால் அடுத்த முறை உன்னைப் பார்க்கும்போது நானே விஷம் கொடுத்துக் கொன்றுவிடுகிறேன், பார்!
அவமானத்துக்கும் ஏமாற்றத்துக்கும் உள்ளான சீதாவின் மனதில் இது போன்ற பயங்கர எண்ணங்கள் குடிகொண்டன!
ஆக்ரா ரயில்வே ஸ்டேஷன் அமளி துமளி பட்டுக்கொண்டிருந்தது. வருகிற ரயில்களும் போகிற ரயில்களும் ஏகச் சத்தமிட்டன. பிரயாணிகளின் கூட்டம் சொல்லி முடியாது. ரயில்களிலும் சரி, ரயில்வே பிளாட்பாரத்திலும் சரி, காலி இடம் என்பதே கிடையாது. பிரயாணிகளில் பாதிப் பேர் ஆங்கில சோல்ஜர்களும் இந்தியச் சிப்பாய்களுமாவர். அப்போது உலக மகாயுத்தம் மிக நெருக்கடியை அடைந்திருந்த சமயம் அல்லவா? மாஜி சேனாதிபதி வேவல் இந்தியாவின் வைஸ்ராய் பதவியை வகித்து வந்தார். அது வரையில் அவர் சென்றிருந்த போர்க்களங்களிலெல்லாம் பிரிட்டிஷ் படைகள் பின்வாங்க வேண்டி நேர்ந்தது. அந்த அபகீர்த்தியைப் போக்கிக்கொள்ள விரும்பிய வேவல் துரை என்ன வந்தாலும் இந்தியாவிலிருந்து பின்வாங்குவதில்லையென்று தீர்மானித்துப் பிரமாத ராணுவ முஸ்தீப்புகளைச் செய்து வந்தார். ஆகவே இந்தியாவின் ரயில்கள் எல்லாம் அந்த 1943-ம் வருஷம் பிற்பகுதியில் சிப்பாய்கள் மயமாயிருந்தன. ஸ்டேஷன் பிளாட்பாரங்களில் பெரிய பெரிய பீரங்கி குண்டுகளும் அவற்றின் கூடுகளும் கும்பலாக அடுக்கப்பட்டுக் கிடந்தன!
பல ரயில் பாதைகள் சந்திக்கும் பெரிய ஜங்ஷன் ஆக்ரா; ஆதலால் அங்கே இடைவிடாமல் ரயில்கள் வந்தவண்ணமும் போனவண்ணமுமாக இருந்தன.
இரண்டாவது வகுப்புப் பிரயாணிகளுக்குரிய வெயிட்டிங் ரூமில் ஒரு மூலையில் சீதா உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு அருகில் ஒரு சிறிய டிரங்குப் பெட்டி இருந்தது. அதன் மேல் கையை ஊன்றிச் சாய்ந்துகொண்டிருந்தாள். அவளுடைய மனம் எங்கெல்லாமோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது.
ஐந்து வருஷத்துக்கு முன்னால் அதே ஆக்ராவுக்குச் சீதா தன் கணவருடனும் சூரியாவுடனும் வந்திருந்தாள். கோட்டையிலிருந்த அரண்மனைகளையும் தாஜ்மகாலையும் பார்த்துப் பரவசமடைந்தாள். பற்பல இன்பக் கனவுகள் கண்டாள்.
அந்தக் கனவுகளையெல்லாம் விட அதிசயமான நிகழ்ச்சி நேற்று நடந்தது. சில மணி நேரம் அவள் தன்னை அரண்மனையில் வாழ்வதற்குரிய அரசகுமாரி என்று எண்ணிப் பெருமித ஆனந்தம் அடைந்திருந்தாள். ஆனால் அந்தப் பெருமித ஆனந்தம் ஒரு நொடியில், ஒரு வார்த்தையில், தகர்ந்து போய்விட்டது. அவள் வெறும் சீதாதான் என்றும் சாதாரண மனுஷி தான் என்றும் ஏற்பட்டது. அவளை அவ்விதம் மதிமயங்கச் செய்வதற்குக் காரணமாயிருந்தவர்கள் ஆக்ரா ஸ்டேஷனில் அவளைக் கொண்டு வந்து விட்டுவிட்டு, டில்லிக்கு ஒரு இரண்டாம் வகுப்பு டிக்கெட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டு, மாயமாய் மறைந்து விட்டார்கள். ஆம், வெறும் டிக்கட் மட்டும் கொடுத்துவிட்டுப் போகவில்லை. அந்தச் சிறு டிரங்குப் பெட்டியையும் கொடுத்துவிட்டுப் போனார்கள். அவளுக்கு ஏற்பட்ட கஷ்டத்துக்குப் பரிகாரமாக அதில் ஏதோ பரிசுப் பொருள் இருக்கிறதாம். ராணி அம்மாளின் பரிசு இங்கே யாருக்கு வேணும்? வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல் வைத்துவிட்டுப் போய் விட்டார்கள்.
பெட்டியைத் திறந்து அதற்குள் என்ன இருக்கிறது என்று கூடச் சீதா பார்க்கவில்லை.
சீதாவின் உள்ளம் அவளுடைய வருங்கால வாழ்வில் ஈடுபட்டிருந்தது. அவளிடம் டில்லிக்கு டிக்கட் இருப்பது உண்மை தான். டில்லிக்குப் போகும் வண்டியும் சீக்கிரத்தில் வந்துவிடும். ஆனால் டில்லிக்குப் போய் என்ன செய்வது? அவருடைய முகத்தில் எப்படி விழிப்பது? "இரண்டு நாளாய் எங்கே போயிருந்தாய்?" என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? ஏற்கெனவே காரணமில்லாமல் தன் மீது எரிந்து விழுந்து கொண்டிருந்தவர், இப்போது தன்னை அடியோடு நிராகரித்து விடலாம் அல்லவா? சூரியாவோடு சேர்ந்து ஏதோ சதி செய்ததாக எண்ணிக் கொண்டிருக்கலாம் அல்லவா? அப்படி எண்ணிக் கொண்டிருந்தால் தன்னை எப்படி அவர் திரும்ப ஏற்றுக் கொள்வார்! நடந்த சம்பவங்களை எல்லாம் சொன்னால் உண்மையென்று நம்புவாரா; கட்டுக்கதை என்று சொல்லமாட்டாரா? எல்லாவற்றையும் அனுபவித்த தனக்கே நடந்ததை நம்புவது கஷ்டமாயிருக்கிறதே! அவர் எப்படி நம்புவார்? அவரை விட்டுப் போய்விடுவது என்று முன்னால் உத்தேசித்திருந்தபடி செய்துவிட்டால் என்ன? அப்படியானால் எங்கே போவது? சென்னைப் பட்டணத்தில் வஸந்தி இருக்கிறாள். ஆனால் அங்கே போய் மாமனார் மாமியார் முகத்தில் எப்படி விழிக்கிறது? திடீரென்று தனியாக வந்ததற்கு என்ன காரணம் சொல்லுகிறது? அதைக்காட்டிலும் சூரியா சொன்னபடி கல்கத்தாவுக்குப் போவது நல்லது... கல்கத்தாவில் லலிதாவின் சிநேகிதி இருக்கிறாள் அல்லவா? அவள் வீட்டுக்குப் போய் அங்கிருந்தபடி யோசித்து முதலில் சென்னைக்குக் கடிதம் எழுத வேண்டும். அங்குள்ள நிலைமையைத் தெரிந்து கொண்டு போவதுதான் உசிதமாயிருக்கும். ஆனால் பிற்பாடு தான் மதராஸுக்கு எதற்காகப் போக வேண்டும்? கல்கத்தாவில் சுதந்திரமாய் வாழ்வதற்கு ஒரு வேலை தேடிக் கொள்வதுதான் சரி. எத்தனையோ ஸ்திரீகள் இந்தக் காலத்தில் உத்தியோகம் பார்த்துக் கொண்டு சுதந்திரமாய் இருக்கிறார்கள். அதுபோல் தானும் ஜீவனத்துக்கு ஒரு வேலை தேடிக் கொண்ட பிறகு வஸந்திக்குக் கடிதம் எழுதி வரவழைத்துக் கொண்டால் என்ன!....
அவ்விதம் சீதாவின் உள்ளம் டில்லிக்கும், சென்னைக்கும், கல்கத்தாவுக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கையில், அந்த வெயிட்டிங் ரூம் வாசலில் நின்று கொண்டிருந்த ஒரு முகம் சட்டென்று அவள் கண்ணில் பட்டுக் கருத்தைக் கவர்ந்தது. அப்படிப் பார்த்தவர் ஒரு முகமதியர். சுமார் ஐம்பது வயதுள்ள மனிதர். அவரை எப்போதோ பார்த்திருந்த ஞாபகம் சீதாவுக்கு வந்தது. அதனால் ஒருவிதப் பயம் உண்டாயிற்று. தன்னை அவர் உற்றுப் பார்க்கிறார் என்று தெரிந்ததும் பீதி அதிகமாயிற்று. முன்னால் இவரை எங்கே பார்த்திருக்கிறோம் என்ற யோசனை முற்றியது. தலைவலி எடுக்கும் வரை யோசித்த பிறகு சட்டென்று ஞாபகம் வரவும் செய்தது. கையில் ரத்தம் தோய்ந்த கத்தியுடன் ரஸியாபேகம் என்னும் ஸ்திரீ ஒரு நாள் இரவு ஒருவருக்கும் தெரியாமல் வீட்டில் புகுந்து ஸ்நான அறையில் தண்ணீர்க் குழாயைத் திறந்து விட்டிருந்தாள் அல்லவா? அந்தப் பயங்கரமான இரவில், தான் படுத்துத் தூக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தபோது, பலகணிக்கு வெளியேயிருந்து ஒரு முகம் தன்னையும் தாரிணியையும் உற்றுப் பார்த்ததல்லவா? அந்த மாதிரியல்லவா இருக்கிறது இந்த சாயபுவின் முகம்? ஒருவேளை அவனேதானா? அப்படியானால் எதற்காக இங்கே வந்திருக்கிறான்? தன்னை எதற்காக வெறித்துப் பார்க்கிறான்?
ஆக்ரா மிகவும் பொல்லாத ஊர் என்று சீதா அடிக்கடி கேள்விப் பட்டிருந்தாள். பாதுகாப்பில்லாமல் அஜாக்கிரதையாயுள்ள ஸ்திரீகளைப் பிடித்துக் கொண்டுபோய் விற்றுவிடக் கூடிய பாதகர்கள் அந்த ஊரில் உண்டு என்றும் கேள்விப்பட்டிருந்தாள். இதற்கு முன்னால் தனக்கு நேர்ந்த கஷ்டமெல்லாம் போதாது என்று இன்னமும் கஷ்டம் ஏதேனும் காத்திருக்கிறதோ? ஆனால் இது இரயில்வே ஸ்டேஷன் இரவும் பகலும் ஆயிரக்கணக்கான ஜனங்கள் நடமாடிக் கொண்டிருக்கும் பொது ஸ்தலம். இங்கே தன்னை யார் என்ன செய்ய முடியும்? எதற்காகப் பயப்பட வேண்டும்? ஸ்திரீகள் தனியாகப் பிரயாணம் செய்வதற்குப் பயந்திருந்த காலம் போய்விட்டது. இப்போது எத்தனையோ பெண்கள் தன்னந்தனியாகப் பிரயாணம் செய்கிறார்கள். மதராஸிலிருந்து டில்லிக்கும் பம்பாயிலிருந்து கல்கத்தாவுக்கும் தனக்குத் தெரிந்த குடித்தன ஸ்திரீகள் எத்தனையோ பேர் போயிருக்கிறார்கள்? பின்னே எதற்காக பயப்படவேண்டும்?
பயப்படக் காரணம் இல்லை தான். ஆனாலும் கல்கத்தாவுக்கோ மதராஸுக்கோ போவதைக் காட்டிலும் கிட்டத்திலுள்ள டில்லிக்குப் போவதே நல்லது. தனக்கு நேர்ந்த அனுபவங்களை இவர் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சொல்லி விட வேண்டும். சூரியாவின் கதி என்ன ஆயிற்று என்பதையாவது தெரிந்து கொள்ள வேண்டாமா?....
ஏதோ ஒரு ரயில் ராட்சத கர்ஜனை செய்துகொண்டு ஸ்டேஷன் பிளாட்பாரத்திற்குள் வந்தது. "டில்லி ரயில் வந்து விட்டது!" என்று சொல்லிக்கொண்டு வெயிட்டிங் ரூமில் இருந்தவர்களில் சிலர் எழுந்து போனார்கள். சீதாவும் அவசரமாக எழுந்து டிரங்குப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள். வாசற்படிக்கருகில் நின்ற சாயபுவைப் பார்க்கக் கூடாது என்ற உறுதியினால் வேறு பக்கம் பார்த்துக் கொண்டு சென்றாள். ஆனால் அந்த சாயபுவின் செக்கச் சிவந்த உற்றுப் பார்க்கும் கண்கள் தன் பேரில் பதிந்திருக்கின்றன என்று அவளுடைய உள்ளுணர்ச்சி அறிவித்தது.
டில்லி ரயில் இது என்று தெரிந்து கொண்டதும், இரண்டாம் வகுப்பு வண்டிகளில் பெண்கள் வண்டியைத் தேடிப் பிடித்தாள். ஆனால் அந்த வண்டிகளில் பெண்களின் கூட்டம் ஏற்கெனவே அதிகமாயிருந்தது. புதிதாக ஏறப் பார்த்த சீதாவுக்கு அந்த ஸ்திரீகள் இடங்கொடுக்க மறுத்தார்கள். கதவை உட்புறம் தாளிட்டுக் கொண்டு திறக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். பிறகு சீதா அதிகக் கூட்டமில்லாத வேறொரு இரண்டாம் வகுப்பு வண்டியைத் தேடிப் போனாள். முக்கியமாக, சோல்ஜர்களும் சிப்பாய்களும் இல்லாத வண்டியைத் தேடினாள். அத்தகைய கடகடத்த ஓட்டை உடைசல் வண்டி ஒன்று தென்பட்டது. அதில் அதிக ஜனங்கள் இல்லை என்பதைப் பார்த்து விட்டு ஏறினாள். ஏறி உட்கார்ந்ததும் அதே வண்டியில் ஏற்கனவே அந்த முகம்மதியர் ஏறியிருப்பது தெரிந்து திடுக்கிட்டாள். ஐயோ! இது என்ன? போயும் போயும் இதில் ஏறினோமே? யாரைப் பார்க்க வேண்டாம் என்று நினைத்தோமோ, அந்த மனிதன் இங்கு உட்கார்ந்திருக்கிறானே? இறங்கி வேறு வண்டி பார்க்கலாமா? இறங்கி ஏறுவதற்கு நேரம் இருக்கிறதோ, என்னமோ, தெரியவில்லையே?
இப்படிச் சீதா தத்தளித்துக் கொண்டிருக்கையில் இரண்டு மனிதர்கள் அந்த வண்டியண்டை வந்து நின்றார்கள். ஒருவன் இன்னொருவனுக்குச் சீதாவைச் சுட்டிக் காட்டினான்.
இரண்டாவது மனிதன் சீதாவை உற்றுப் பார்த்துவிட்டு "அம்மா! உன் பக்கத்தில் இருக்கிற பெட்டி உன்னுடையதா!" என்று கேட்டான்.
"என்னுடையது தான்; எதற்காகக் கேட்கிறாய்?" என்றாள் சீதா. அவளுக்கு ஒரு பக்கம் கோபம் வந்தது; இன்னொரு பக்கம் ஏதோ அபாயம் வரப்போகிறது என்ற உணர்ச்சியினால் மனம் பதைபதைத்தது.
"உன்னுடையதா? நிச்சயந்தானா?"
"நிச்சயந்தான்!"
"அப்படியானால் ரயிலைவிட்டுக் கீழே இறங்கு!" என்றான் அந்த மனிதன். உடனே ஒரு விசிலை எடுத்து ஊதினான்; இரண்டு ரயில்வே போலீஸார்கள் வந்து நின்றார்கள்.
"உம்; இறங்கு!" என்று அதிகாரத் தொனியில் கட்டளையிட்டான்.
இச்சமயத்தில் ஒரு ரயில்வே உத்தியோகஸ்தர் அந்தப் பக்கம் வந்தார். சீதா, "ஸார்!" என்று அவரை அழைத்து, "இவர்கள் என்னைத் தொந்தரவு செய்கிறார்கள்; நீங்கள் உதவி செய்ய வேண்டும்!" என்றாள்.
அவர் போலீஸ்காரர்களைப் பார்த்து "என்ன சமாசாரம்!" என்று விசாரித்தார். சாதாரண உடுப்பில் இருந்த போலீஸ்காரன், "இந்த அம்மாள் இவருடைய பெட்டியைத் திருடியிருக்கிறாள், திருடியதோடு தன்னுடையது என்று சாதிக்கிறாள்!" என்றான்.
ரயில்வே உத்தியோகஸ்தர் சீதாவைப் பார்த்து, "இவர்கள் உன் பேரில் குற்றம் சாட்டுகிறார்கள். அம்மா! ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் அதோ பக்கத்தில் தான் இருக்கிறது! நீ அங்கே போய் இன்ஸ்பெக்டரிடம் உண்மையைச் சொல்லு! உனக்குக் கெடுதல் ஒன்றும் வராது! இவர்கள் சாட்டும் குற்றம் பொய் என்றால் இன்ஸ்பெக்டர் உன்னை விட்டு விடுவார். அடுத்த வண்டியில் நானே உன்னை ஏற்றி விடுகிறேன்!" என்றார். போகும் போது அவர், "இந்தக் காலத்தில் யாரையும் நம்புவதற்கில்லை. பார்வைக்குப் பரம சாதுவாய்த் தோன்றுகிறார்கள். ஆனால் காரியம் நேர் விரோதமாயிருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே போனார்.
வேறு வழியில்லையென்று கண்டு சீதா வண்டியைவிட்டுக் கீழே இறங்கினாள். வெளிப்படையாகத் துணிச்சல் காட்டி, "வாருங்கள்! உங்கள் இன்ஸ்பெக்டரிடமே சொல்கிறேன்; இந்த அநியாயத்துக்குப் பரிகாரம் கேட்கிறேன்!" என்றாள். முன்னும் பின்னும் போலீஸ் புடைசூழச் சென்றபோது சீதாவின் உள்ளம் பதைபதைத்தது. பயத்தினால் அவளுடைய கால்கள் தள்ளாடித் தத்தளித்தன. ஆனாலும் அவள் மனதில் ஒரு சிறு ஆறுதலும் தோன்றியது. நல்லவேளை! அந்தக் கொள்ளிக்கண் சாயபு இருந்த வண்டியிலிருந்து இறங்கித் தப்பித்துக் கொண்டோ மல்லவா?
போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் உண்மையைச் சொன்னால் இந்த அதிகப் பிரசங்கிகள் தன்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டியதாகும். அடுத்த வண்டியில் ஏறிக் கொண்டால் போகிறது.
சாயபுவிடமிருந்து தப்பினோம் என்ற சந்தோஷமானது சீதாவைத் திரும்பிப் பார்த்து அதை உறுதி செய்து கொள்ளும்படி தூண்டியது; சீதா திரும்பிப் பார்த்தாள்.
ஆகா! இது என்ன! ஆபத்து இன்னமும் தன்னை விட்டபாடாக இல்லையே? அந்தச் சாயபுவும் ரயிலிலிருந்து இறங்கிச் சற்றுத் தூரத்தில் தொடர்ந்து வருகிறானே? ஐயோ! எதற்காக அவன் வருகிறான்? தன்னை என்ன செய்வதற்காக வருகிறான்?
மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் சீதா திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டுக் கைதிக் கூண்டில் நின்றாள். அவளுடைய சித்தம் தன் சுவாதீனத்தை இழந்து பிரமை கொள்ளும் நிலைக்கு வந்திருந்தது.
அரண்மனைச் சிங்கார வனத்தில் நடந்த சம்பவங்களைக் காட்டிலும் நேற்றிலிருந்து நடந்த சம்பவங்கள் அவளுடைய சுயபுத்தியைக் கொண்டு நம்ப முடியாதனவாயிருந்தன.
முந்தாநாள் அவள் புராதனமான ராஜ குலத்தில் பிறந்த அரசிளங்குமரி தான் என்று கொஞ்ச நேரம் எண்ணிப் பெருமிதம் கொண்டிருந்தாள்.
இன்றைக்கு அவள் ரயில்வே ஸ்டேஷனில் பெட்டி திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நிறுத்தப்பட்டிருந்தாள்.
விசாரணை நடந்து கொண்டிருந்தது. பிராஸிகியூஷன் தரப்பில் மூன்று நபர்கள் சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சி சொல்லி விட்டார்கள்.
மூன்று சாட்சிகளில் ஒருவன் அப்பெட்டியின் சொந்தக்காரன் என்று தன்னைச் சொல்லிக் கொண்டான்.
ஆக்ரா ஜங்ஷன் பிளாட்பாரத்தில் இருந்த ஒரு பெஞ்சியில் தான் பெட்டியுடன் உட்கார்ந்திருந்ததாகவும், தாகம் எடுத்து ஒரு கப் 'சாய்' குடிப்பதற்குப் போயிருந்ததாகவும், திரும்பி வந்து பார்க்கும்போது பெட்டியைக் காணோம் என்றும், அப்புறம் டெல்லி ரயிலில் அந்த அம்மாள் பெட்டியுடன் உட்கார்ந்திருந்ததைக் கண்டுபிடித்ததாகவும் அவன் சொன்னான். இந்தப் பெரும் பொய்யனுடைய பெயர் லாலா சத்தியப் பிரகாஷ் குப்தா என்று தெரிந்தபோது சீதா தன் பயங்கர நிலைமையிலும் புன்னகை செய்யாமலிருக்க முடியவில்லை.
இன்னொரு சாட்சி மேற்படி லாலா சத்தியப் பிரகாஷினால் அழைத்து வரப்பட்ட போலீஸ் சேவகன். சத்தியப் பிரகாஷ் புகார் செய்ததின் பேரில் குற்றவாளி ஸ்திரீயை ரயிலிலிருந்து பெட்டி சகிதமாக இறக்கி ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போனதாக அவன் சாட்சி கூறினான்.
அடுத்தபடியாக மேற்படி போலீஸ் ஸ்டேஷனில் அச்சமயம் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சாட்சியம் கூறினார். "இந்த அம்மாள் பெட்டி திருடியிருப்பாள் என்பதை முதலில் நான் நம்பவில்லை. ஆனால் சத்தியப் பிரகாஷ் வற்புறுத்திச் சொன்னதின் பேரில் இந்த ஸ்திரீயிடம் 'பெட்டி உன்னுடையது தானே; அப்படியானால் அதில் என்ன சாமான்கள் இருக்கின்றன?' என்று கேட்டேன். இந்த ஸ்திரீ பதில் ஒன்றும் சொல்லாமல் திகைத்து நின்றாள். ஆனால் சத்தியப் பிரகாஷ் குப்தா பெட்டியில் இருக்கும் சாமான்களுக்கு ஜாபிதா கொடுத்தான். சாவியும் அவனிடம் தான் இருந்தது. திறந்து பார்த்தால் அவன் சொன்ன சாமான்கள் எல்லாம் இருந்தன. இந்த அம்மாள் தன்னைப் பற்றி வேறு தகவல்களும் சரியாகக் கொடுக்கவில்லை. விலாசம் சொல்லக் கூட மறுத்து விட்டாள். ஆகையால் என்னுடைய முதல் எண்ணத்தை மாற்றிக் கொண்டு வழக்குப் பதிவு செய்தேன்" என்று இன்ஸ்பெக்டர் சாட்சி சொன்னார்.
இதையெல்லாம் சீதா கேட்டுக்கொண்டிருந்தாள். அந்த இன்ஸ்பெக்டர் கூறியதெல்லாம் உண்மை தான். பெட்டியில் என்ன இருந்தது என்பது தனக்கு உண்மையில் தெரியாது; ஆகையால் சொல்ல முடியாமல் திகைக்க நேர்ந்தது. தன்னுடைய சொந்த விலாசத்தைக் கொடுக்கவும் அவளுக்கு இஷ்டமில்லை. இந்த அவமானம் வேறே அவருக்கு வரவேண்டுமா என்றுதான் சொல்லவில்லை. தான் குற்றமற்றவள்; நிரபராதி இதை எப்படியும் நிரூபித்து விடலாம். நிரூபித்து விடுதலை பெறுவது நிச்சயம். பின் எதற்காகத் தன் கணவரை இந்த வெட்கக்கேட்டில் சம்பந்தப்படுத்த வேண்டும்?
ஆனால் எப்படி நிரூபிப்பது? தான் குற்றமற்றவள் என்பதை எவ்விதம் நிரூபிப்பது? அதற்கு வழி எவ்வளவு யோசித்தும் புலப்படவில்லை. தன்னுடைய கதையை யார் நம்புவார்கள்?
அந்தக் கோர்ட்டிலிருந்த வயோதிகரான வக்கீல் ஒருவர் சீதாவின் பேரில் கருணை கொண்டு அவளுடைய கட்சியை எடுத்துப் பேசுவதற்கு ஒப்புக்கொண்டார். தம்மிடம் உண்மையைச் சொல்லும்படி சீதாவைக் கேட்டார். சீதா உண்மையில் நடந்ததையெல்லாம் சொன்னாள். ஆனால் அவர் ஒரேயடியாகத் தலையசைத்தார். "கதை ஜோடிக்கும் சாமர்த்தியம் உன்னிடம் அபாரமாயிருக்கிறது. எழுதும் சக்தியும் இருந்தால் பிரபல ஆசிரியை ஆகலாம். ஆனால் கோர்ட்டில் இந்தக் கதையை யாரும் நம்ப மாட்டார்கள். நீ உண்மையைச் சொல்ல மறுக்கிறாய்! நான் என்ன செய்யட்டும்? முடிந்த வரையில் முயன்று பார்க்கிறேன்" என்றார். அவ்வாறே அவரால் முடிந்த வரையில் முதல் மூன்று சாட்சிகளையும் குறுக்குவிசாரணை செய்து பார்த்தார். ஆனால் ஒன்றும் பயன் தரவில்லை. குற்றவாளிக்குச் சாதகமாக அந்தச் சாட்சிகளின் வாய் மொழியிலிருந்து எதுவும் வெளியாகவில்லை.
முதல் மூன்று சாட்சிகளின் விசாரணை முடிந்து விட்டது. பிராஸிகியூஷன் தரப்பில் இன்னும் ஒரே ஒரு சாட்சி பாக்கி இருந்தது.
ஆனால் மாஜிஸ்ட்ரேட் அவசரப்பட்டார் "இன்னும் எதற்காகச் சாட்சியம்? கேஸ் தெளிவாக இருகிறதே" என்று சொன்னார்.
பிராஸிகியூஷன் தரப்பில் கேஸ் நடத்திய போலீஸ் வக்கீல் "கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேண்டும். நாலாவது சாட்சி திருட்டைக் கண்ணால் பார்த்த சாட்சி" என்றார்.
உடனே, அந்த கிராதக சாயபு சாட்சிக் கூண்டிற்கு வந்து நின்றான்.
சீதாவின் பயமெல்லாம் உண்மையாகி விட்டது. "இவன் எதற்காகத் தொடர்ந்து வருகிறான்?" என்று முதல் நாள் இரவு சீதா கேட்டுக் கொண்ட கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டது. தன் குடியைக் கெடுப்பதற்குத்தான்; பொய் சாட்சி சொல்லித் தன்னைத் திருடி என்று நிரூபிப்பதற்குத்தான்! அடப்பாவி! உனக்கு நான் என்ன தீங்கு செய்தேன்! நீ யார் என்பது கூட எனக்குத் தெரியாதே! எதிர்பாராத எத்தனையோ கஷ்டங்களுக்கு உள்ளான இந்த துர்ப்பாக்கியசாலியின் தலையில் இப்படிக் கடைசியாகப் பெரிய கல்லைத் தூக்கிப்போட்டுக் கொல்லப் பார்க்கிறாயே?
அந்தக் கிராதக சாயபு, "சர்வ வல்லமையுள்ள ஆண்டவன் சாட்சியாக உண்மையே சொல்லுவேன்" என்று சத்தியப்பிரமாணம் செய்தார். பிறகு போலீஸ் தரப்பு வக்கீலின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார். இரண்டாவது மூன்றாவது கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்கள் கோர்ட்டில் பெரும் கிளர்ச்சியை உண்டாக்கி விட்டன.
"இந்த ஸ்திரீ பெட்டியைத் திருடி எடுத்துச் சென்றதை நீர் கண்ணால் பார்த்தீர் அல்லவா?"
"இல்லை; நான் பார்க்கவில்லை."
"ஓகோ! இது என்ன? நீர் பார்க்கவில்லையென்றால், பின்னே இவள் திருடினாள் என்பது உனக்கு எப்படித் தெரியும்? அப்படி அனுமானிப்பதற்கு வேறு காரணம் உண்டா?"
"இல்லை; அப்படி அனுமானிப்பதற்கு எவ்விதமான காரணமும் இல்லை! இந்த அம்மாள் பெட்டியைத் திருடவில்லை என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும்!"
தன் காதில் விழுவது உண்மைதானா என்று சீதா அதிசயித்தாள்.
லாலா சத்தியப் பிரகாஷ் குப்தாவின் முகம் வெளுத்தது.
போலீஸ்காரர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்.
மாஜிஸ்ட்ரேட் கவனமாகக் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கினார்.
சீதாவின் கட்சி பேசிய வக்கீலின் முகம் பிரகாசம் அடைந்து மலர்ந்தது.
போலீஸ் வக்கீல் போலீஸ் அதிகாரியுடன் ஏதோ பேசி விட்டு, "இந்தச் சாட்சி விரோதமாய்த் திரும்பிவிட்டபடியால் விசாரணையை நிறுத்திக் கொள்கிறேன்" என்றார்.
குற்றவாளி தரப்பு வக்கீல் குதித்து எழுந்து, "நான் சில கேள்விகள் கேட்கக் கோர்ட்டார் அனுமதி கொடுக்க வேண்டும்" என்றார்.
மாஜிஸ்ட்ரேட்டுக்கும் உண்மையை அறியும் ஆர்வம் ஏற்பட்டிருந்தது. கேள்வி கேட்க அனுமதித்தார்.
"ஜனாப்! இந்த ஸ்திரீ திருடவில்லை என்று நிச்சயமாய்த் தெரியும் என்று சொன்னீரே, நிச்சயமாய் எப்படித் தெரியும்?"
"உண்மையில் பெட்டியைத் திருடியது யார் என்று எனக்கு நிச்சயமாய்த் தெரியும். அதனால் தான் இந்த அம்மாள் திருடவில்லை என்று நிச்சயமாய்ச் சொன்னேன்."
கோர்ட்டில் பரபரப்பு அதிகமாயிற்று. கசுமுசுவென்று பேசும் சத்தம் எழுந்து உடனே அடங்கிவிட்டது.
"உண்மையில் பெட்டியைத் திருடியது யார்?" என்று வக்கீல் கேட்டார்.
முகம்மதியர் பதில் சொல்லத் தயங்கினார்.
"சத்தியப் பிரகாஷ் குப்தாவா?"
"இல்லை!"
"பின்னே யார்?"
"நான் தான்!"
"என்ன? நன்றாய்ச் சொல்லும். கோர்ட்டாரின் பக்கம் பார்த்துச் சத்தியமாய்ச் சொல்லும்."
"பெட்டியைத் திருடியவன் நான் தான். பெட்டியை எடுத்துப் போய் நான் முதலில் ஒரு வண்டியில் ஏறிக்கொண்டேன். அதே வண்டியில் பிற்பாடு அந்த அம்மாள் வந்து ஏறினாள். நான் திருடி வந்த பெட்டிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்..."
இந்தச் சமயத்தில் போலீஸ் வக்கீல் மேற்படி சாட்சியத்தை ஆட்சேபிக்க எழுந்தார். மாஜிஸ்ட்ரேட் அவரை உட்காரும்படி உத்தரவிட்டார்.
"போலீஸாரிடம் நேற்று இரவு நீர் எழுதி வைத்த வாக்குமூலத்தில் இந்த அம்மாள் திருடியதைக் கண்ணால் பார்த்ததாக எழுதி வைத்தீர் அல்லவா? அது ஏன்?"
"சத்தியப் பிரகாஷ் குப்தா அவ்விதம் சொல்லும்படி கேட்டுக் கொண்டான். சொன்னால் ஐநூறு ரூபாய் தருவதாகவும் ஒப்புக் கொண்டான்."
"பின் எதனால் இப்போது மாறி உண்மையைச் சொன்னீர்?"
"இந்த சாட்சிக் கூண்டில் ஏறி அல்லாவின் பெயரால் பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு பொய் சொல்ல மனந்துணியவில்லை. அந்த அம்மாளுக்குச் செய்த அநீதிக்குப் பரிகாரமாக உண்மையைச் சொன்னேன்".
"ஆனால் இந்த ஸ்திரீ பெட்டி தன்னுடையது என்று போலீசாரிடம் சொன்னாளே, அது ஏன்?"
"இந்த அம்மாள் போலீஸாரிடம் என்ன சொன்னாளோ, எனக்கு அது தெரியாது. இந்த அம்மாளைப் பார்த்தாலே ஒரு மாதிரி பிரமை பிடித்திருக்கிறது என்று தெரிகிறது. பிரமையில் ஏதாவது சொல்லியிருக்கலாம்."
சீதாவின் வக்கீல் சுருக்கமாகத் தம்முடைய வாதத்தைச் சில வார்த்தைகளில் முடித்துக் கொண்டார்.
மாஜிஸ்ட்ரேட்டு வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டு, சீதாவின் கட்சி பேசிய வக்கீலைப் பார்த்து, "இந்த ஸ்திரீயின் பாதுகாப்புக்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும். இவள் யார் எந்த ஊர் என்பதைக் கண்டுபிடித்து இவளுடைய சொந்தக்கார மனுஷர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும். அது வரையில் இந்த நகரிலுள்ள அனாதை ஆசிரமத்திலாவது வேறு தகுந்த ஸ்தாபனத்திலாவது இவளை விட்டுவைப்பது நல்லது" என்றார்.
"ஆகட்டும்" என்றார் வக்கீல்.
முதிய பிராயத்தவரும் உத்தமருமான அந்த வக்கில் சீதாவுக்குச் சித்தப்பிரமை இல்லையென்றும், பல காரணங்களினால் மனம் குழம்பியிருந்தாலும் தன்னுடைய நிலைமையைப் பற்றி யுக்தாயுக்தம் பார்த்துத் தீர்மானிக்கும் தெளிந்த அறிவு அவளிடம் இருக்கிறது என்றும் விரைவிலேயே அறிந்தார். அன்று பிற்பகலில் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துப் போய் உணவு அருந்துவித்தார். இரவில் ஆக்ரா ஸ்டேஷனுக்கு அழைத்துப் போனார். வழியில் அவர் "ஆமா! சாட்சி சொன்ன சாயபுவை உனக்கு முன்னமே தெரியுமா?" என்று கேட்டார்.
"தெரியாது; அவர் எங்கே இப்போது? நான் பார்த்து நன்றி கூறவேண்டும்!" என்றாள்.
"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், மகளே! நான் ஒரு விஷயம் சொல்லுகிறேன், கேட்கிறாயா?"
"அவசியம் கேட்கிறேன், ஐயா! அவ்வளவு நன்றியாவது தங்களிடம் எனக்கு இருக்க வேண்டாமா?"
"நல்லது கேள்! கடவுளின் அருள் உன்னை இன்று காப்பாற்றியது. அந்த முகம்மதியனின் சாட்சியம் தான் உன்னுடைய விடுதலைக்குக் காரணமாயிருந்தது என்பது உண்மை தான். ஆனால் அவனை யோக்கியன் என்று நான் கருதவில்லை. ஏதோ ஒரு நோக்கம் வைத்துக் கொண்டுதான் அவன், தான் திருடியதாகச் சொல்லி உன்னை விடுதலை செய்திருக்கிறான். நீ சர்வ ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். இதைக்காட்டிலும் பெரிய ஆபத்து உனக்கு வரக்கூடும்."
"இன்றைக்கு என்னைக் காப்பாற்றிய கருணாமூர்த்தியான கடவுள் இனியும் காப்பாற்ற மாட்டாரா?"
"காப்பாற்றுவார்; காப்பாற்றட்டும். ஆனால் நாமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அந்தச் சாயபு பெட்டி திருடவில்லை என்பது நிச்சயம். உனக்கு யாரோ பெட்டியைக் கொடுத்ததாகச் சொன்னாயே, அதை நான் நம்புகிறேன். பின் எதற்காக அந்த முகம்மதியன் திருட்டுக் குற்றத்துக்குத் தன்னை ஆளாக்கிக் கொண்டு உன்னை விடுதலை செய்விக்கிறான்?"
"ஐயா! அந்த முகம்மதியர் இப்போது எங்கே? ஒருவேளை அவரைக் கைது செய்து விடுவார்களோ?"
"ஒருவேளை என்ன? திருட்டுக் குற்றத்தைக் கோர்ட்டில் ஒப்புக்கொண்ட ஆசாமியைச் சும்மா விட்டுவிடுவார்களா!"
"ஐயா! அவரைத் தாங்கள் பார்த்து ஏதாவது உதவி செய்ய வேண்டும் உங்களுக்குப் புண்ணியம் உண்டு."
"என்னால் ஆனதைச் செய்கிறேன். சற்றுமுன்னால் அவனைப் போய்ப் பார்த்துவிட்டுத்தான் வந்தேன். அவன் தன்னைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. உன்னைப் பற்றியே பேசினான். உன்னை எப்படியாவது பத்திரமாய் டில்லிக்கு அனுப்பிவிட வேண்டுமாம். அங்கே உள்ளவர்கள் உன்னைக் கவனித்துக் கொள்வார்களாம். மகளே! என்னுடைய புத்திமதியைக் கேட்பாயா?"
"சொல்லுங்கள், ஐயா!"
"என் அபிப்பிராயத்தில், நீ இப்போது டில்லிக்கே போகக் கூடாது. அங்கே யாரோ உன்னை ஏதோ செய்யக் காத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். வேறு எங்கேயாவது போவது நல்லது; நீ மதராஸ்காரிதானே? மதராஸுக்கே போகலாமே?"
"இல்லை ஐயா! மதராஸுக்கு இப்போது போக நான் இஷ்டப்படவில்லை."
"டில்லிக்குத்தான் போகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால்..."
"இல்லை; டில்லிக்கு போகவும் எனக்குப் பயமாய்த்தானிருக்கிறது. கல்கத்தாவில் எனக்கு ரொம்ப வேண்டிய சிநேகிதர்கள் இருக்கிறார்கள். ஆகையால் கல்கத்தா போகலாம் என்று பார்க்கிறேன் டிக்கெட்டுக்குத்தான் பணம் வேண்டும்."
"அதைப்பற்றி நீ கவலைப்படாதே! நான் டிக்கட் வாங்கிக் கொடுக்கிறேன். யாராவது தெரிந்தவர்கள் கல்கத்தா போனாலும் போவார்கள். அவர்களிடம் உன்னை ஒப்புவித்து அனுப்பி வைக்கிறேன் சரிதானே?"
"அப்படியே ஆகட்டும்; எனக்கு நல்ல காலம் பிறக்கும் போது நீங்கள் கொடுக்கும் பணத்தைத் திருப்பி அனுப்பி விடுகிறேன்."
"பணத்தைப் பற்றி யார் கேட்டார்கள்? சௌக்கியமாகப் போய்ச் சேர்ந்தால் எனக்குப் பரம திருப்தி!" என்றார் வக்கீல்.
உலகத்து மாநகரங்களுள்ளே நவயௌவன சௌந்தரியம் பெற்று விளங்குவது கல்கத்தா நகரம். அந்த நகர சுந்தரியின் வனப்புமிக்க தோள்களின் மேலே மிதந்து அசைந்தாடிக் கொண்டிருந்த நீலப் பட்டு உத்தரீயத்தைப் போல் இனிய புனல் ததும்பிய ஏரி ஒய்யாரமாக நீண்டு நெளிந்து கிடந்தது. நீல உத்தரீயத்தின் ஓரங்களில் அமைந்த பச்சை வர்ணக் கரையைப் போல ஏரிக்கரையோரமாகப் பசும்புல் படர்ந்திருந்தது. ஏரியின் நடுவே மரகதச் சோலைகள் செழித்து வளர்ந்திருந்த தீவு சித்திரக் கலைஞனுடைய கற்பனைச் சித்திரமோ என்று சொல்லும்படி விளங்கியது.
ஏரி நீரில் ஆங்காங்கு சில வெண்ணிறப் பறவைகளும் உல்லாசப் படகுகளும் மிதந்து கொண்டிருந்தன. ஏரியின் மத்தியில் இருந்த சோலைத் தீவிலிருந்து புள்ளினங்கள் கோஷ்டி கானமாகப் பாடிய நாத கீதங்கள் இளங் காற்றில் மிதந்து வந்து நாலாபுறமும் இசை இன்பத்தைப் பரப்பின. உல்லாசத்துக்குரிய மாலை வேளையில் ஏரிக்கரை ஓரத்துப் பசும்புல் தரையில் ஆங்காங்கு ஆடவரும் பெண்டிரும் கும்பலாகக் காணப்பட்டனர். சிலர் ஏகாந்தமாகப் புல் தரையில் சாய்ந்து கொண்டு பகற் கனவு கண்டு கவிதை புனைந்து கொண்டிருந்தனர். சிலர் கூட்டமாக உட்கார்ந்து காரசாரமான வாதப் பிரதிவாதங்கள் செய்து கொண்டிருந்தார்கள். வயது முதிர்ந்த தம்பதிகள் அளாவிளாவிப் பேசி மகிழ்ந்தனர். இளமையின் இன்பத்தில் திளைத்த காதலர்களும் புதுமணம் புரிந்த தம்பதிகளும் வாய்ப் பேச்சுக்கு அவசியத்தைக் காணாது கண்களோடு கண்களும் இதயத்தோடு இதயமும் பேசும்படி விட்டுக் களிப்படைந்தனர்.
அதோ, அந்த இளம் தம்பதிகள் யார்? நமக்குத் தெரிந்தவர்களைப் போலத் தோன்றுகிறார்களே?... ஆம்; தெரிந்தவர்கள்தான். தேவபட்டணம் தாமோதரம் பிள்ளையின் குமாரன் அமரநாதனும் அவனுடைய மனைவி சித்திராவுந்தான்.
"இந்தக் கல்கத்தா ஏரிக்கரையின் அழகு திருச்செந்தூர்க் கடற்கரைக்குக் கூட வராது!" என்றாள் சித்ரா.
"உனக்கு இன்னமும் இந்த வங்க நாட்டு மோகம் விடவில்லை போலிருக்கிறது. எனக்கு இந்த ஏரிக் காட்சி இப்போதெல்லாம் அவ்வளவாக இன்பம் அளிக்கவில்லை. இதைப் பார்க்கும்போது துக்கந்தான் உண்டாகிறது. வங்க மாதா தன் அருமை மக்களின் பரிதாப நிலையை எண்ணிச் சொரிந்த கண்ணீர் இந்த ஏரியில் நிறைந்து ததும்புவதாக எனக்குத் தோன்றுகிறது" என்றான் அமரநாத்.
"ஒரு சமயம் இந்த ஏரியைப் பற்றி நீங்கள் வேறு விதமாக வர்ணித்தது எனக்கு நினைவிருக்கிறது. 'பங்கிம் சந்தருடைய நாவல்களையும் ரவீந்திரரின் கவிதைகளையும் படித்துவிட்டு வங்க மாதா பொழிந்த ஆனந்தக் கண்ணீர் இந்த ஏரியில் நிறைந்து ததும்பிக் கொண்டிருந்தது!' என்று சொன்னீர்கள். அந்தப் பரவசமெல்லாம் இப்போது எங்கே போயிற்று?"
"அதையெல்லாம் இந்த பயங்கரமான பஞ்சம் அடித்துக் கொண்டு போய்விட்டது. மூன்று மாதமாகத் தினம் தினம் சாலையின் இரு பக்கங்களிலும் பட்டினியால் செத்துக் கிடப்பவர்களின் பிரேதங்களைப் பார்த்துக் கொண்டிருந்த பிறகு, கதையாவது கவிதையாவது காவியமாவது என்று தோன்றுகிறது. சுத்தப் பைத்தியக்காரத்தனம்; அதனால் தான் காந்தி மகாத்மா சொன்னார்: 'மக்கள் பசியால் வாடும் நாட்டில் கலை என்ன, கவிதை என்ன, பாடல் என்ன?' என்றார். 'இராட்டையின் ரீங்காரமே இனிமையிலும் இனிமையான சங்கீதம்!' என்றார். மகாத்மாவுக்கும் டாகூருக்கும் இதைப்பற்றி ஒரு சமயம் பலத்த விவாதம் நடந்தது. நான் அப்போது டாகூரின் கட்சிதான் சரி என்று எண்ணினேன். இந்த மூன்று மாதத்துப் பயங்கரங்களைப் பார்த்த பிறகு, பதினாயிரக்கணக்கான ஜனங்கள் பசிக்குச் சோறின்றித் தெரு வீதிகளில் விழுந்து செத்து மடிவதைப் பார்த்த பிறகு, மகாத்மா சொல்வதுதான் சரியென்று எண்ணுகிறேன்."
"இந்த வங்க நாட்டு ஜனங்கள் இவ்வளவு தேச பக்தியும் கடவுள் பக்தியும் உள்ளவர்களாயிற்றே! கடவுள் எதற்காக இவர்களை இப்படிச் சோதிக்கிறாரோ, தெரியவில்லையே!" என்று சித்ரா பரிதபித்துக் கூறினாள்.
"வங்காளிகள் நல்லவர்கள் தான்! ஆனால் இவர்களிடம் பெரிய துர்க்குணம் ஒன்றும் இருக்கிறது. குறுகிய மாகாணப் பற்று அதிகம் உள்ளவர்கள். இவர்களுக்கு 'வங்காளிகள் தேவ ஜாதிகள்; மற்ற நாட்டார் எல்லாரும் நீச்ச ஜாதிகள்' என்று எண்ணம். மதராஸியையோ பம்பாய்க்காரனையோ கண்டால் இவர்களுக்குப் பிடிப்பதில்லை. இவர்கள் மட்டும் லாகூர் வரைக்கும் சென்று உத்தியோகம் பார்ப்பார்கள். ஆனால் மற்ற மாகாணத்தார் இங்கே வந்து பிழைப்பது இவர்களுக்குப் பிடிப்பதில்லை. அந்தக் கெட்ட குணத்துக்காகத் தான் கடவுள் இவர்களை இப்படித் தண்டித்திருக்கிறார்!" என்றான் அமரநாத்.
"கடவுளை அவ்வளவு கொடுமையானவராக ஆக்கி விடுகிறீர்களே? கிருஷ்ண சைதன்யரும் ராமகிருஷ்ண பரமஹம்ஸரும் விவேகானந்தரும் அவதரித்த நாட்டின் மக்களைக் கடவுள் அவ்வளவு கருணையில்லாமல் தண்டிப்பாரா? சுரேந்திரநாதரும் தேசபந்துவும் சுபாஷ் போஸும் பிறந்த நாட்டின் மக்கள் கொஞ்சம் மாகாணப்பற்று உள்ளவர்களாயிருந்தால்தான் என்ன?"
"பின்னே, நீ என்ன காரணம் சொல்லுகிறாய்? வங்காளிகள் எதற்காக இவ்வளவு பயங்கரமான கஷ்டத்துக்கு உள்ளாக வேண்டும்?"
"எல்லாம் மனிதர்கள் செய்கிற காரியந்தான். பணத்தாசை பிடித்த பேய்கள், விளைந்த தானியத்தையெல்லாம் வாங்கி முடக்கி விட்டால் பஞ்சம் வராமல் என்ன பண்ணும்?"
"அந்தக் கொடிய மனிதர்களையும் கடவுள்தானே சிருஷ்டித்தார்? 'எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறார்' என்று நம்முடைய வேத சாஸ்திர புராணங்கள் எல்லாம் சொல்லுகின்றனவே! ஆகையால் மனிதன் செய்தாலும் அதன் பொறுப்பு கடவுளின் தலையிலேதானே விழும்?"
"உங்களோடு விவாதம் செய்ய முடியாது. நீங்கள் இந்தக் கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து இப்படி நாஸ்திகராகப் போய் விட்டீர்கள்! நான் உங்களோடு பேசத் தயாராயில்லை!" என்றாள் சித்ரா.
"போகட்டும்; கம்யூனிஸ்டுகளால் இந்த ஒரு நன்மையாவது நிச்சயம் இருக்கிறது. அவர்களுடைய சகவாசத்தினால் ஒரு பெண்மணியின் வாயை மூடி மௌனமாகச் செய்ய என்னால் முடிந்ததல்லவா?" என்று கேலி செய்தான் அமரநாத்.
"வீண் ஆசை! அந்த மாதிரி எண்ணி நீங்கள் கர்வங்கொள்ள வேண்டாம். வங்க நாட்டுக்கு இந்தக் கொடும் பஞ்சத்தை அனுப்பியவர் கடவுளாக இருந்தால், அதனாலும் ஏதோ ஒரு நன்மை ஏற்படும் என்பது நிச்சயம். இந்த வங்காளத்தில் பஞ்சம் வருவது இது முதல் தடவையல்ல, முன்னேயும் வந்திருக்கிறது. 'ஆனந்த மடம்' கதையில் வங்க நாட்டில் அப்போது பரவியிருந்த பயங்கரமான பஞ்சத்தைப் பற்றிப் பங்கிம் சந்திரர் எப்படி வர்ணித்திருக்கிறார் என்று ஞாபகம் இருக்கிறதா? அந்தப் பஞ்சத்தின் காரணமாக ஒரு பெரும் புரட்சி தோன்றியது. மகேந்திரன், கல்யாணி, ஜீவானந்தன், சாந்தி, பவானந்தன், ஸத்தியானந்தர் முதலிய சுதந்திர வீரர்கள் உதயமானார்கள். 'வந்தேமாதரம்' என்னும் மகா மந்திரமும் ஏற்பட்டது. இப்போது இந்தப் பஞ்சத்தின் காரணமாகவும் ஒரு பெரும் புரட்சி ஏற்படப் போகிறது. குமுறிக் கொண்டிருக்கும் எரிமலை வெடிக்கப் போகிறது. அந்த எரிமலை பொழியும் நெருப்பில் பிரிட்டிஷ் ஆட்சி எரிந்து பொசுங்கி விடப் போகிறது. இந்திய தேசம் சுதந்திரம் அடையப் போகிறது."
"இந்தியா சுதந்திரம் அடையட்டும்; நான் வேண்டாம் என்று சொல்லவில்லை; குறுக்கே நின்று தடுக்கவும் இல்லை. ஆனால் எனக்கென்னமோ சந்தேகந்தான். பஞ்சத்தில் அடிப்பட்ட ஜனங்கள் புரட்சி செய்வார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. பசியினாலும் பஞ்சத்தினாலும் பிரஞ்சு புரட்சி ஏற்பட்டது என்று சொல்கிறார்கள். ஒருவேளை அரை வயிறு பட்டினியாயிருப்பவர்கள் புரட்சி செய்யலாம். முழுதும் பட்டினி கிடப்பவர்கள் அடியோடு சக்தியை இழந்து சோர்ந்து விடுகிறார்கள்; அல்லது செத்தே போய்விடுகிறார்கள். செத்துப் போனவர்கள் எப்படிப் புரட்சி செய்ய முடியும்? நீயே பார், சித்ரா! இந்த வங்காளப் பஞ்சத்தில் ஐம்பது லட்சம் பேர் செத்து போயிருக்கிறார்கள். இவர்களில் கால்வாசிப் பேர், ஒரு பத்து லட்சம் பேர், சுதந்திரத்துக்காக உயிரை விடத் துணிந்திருந்தால் இந்தியா சுதந்திரம் பெற்றிருக்கும். அவ்வளவு கூட வேண்டாம்; ஒரு லட்சம் பேர் உயிரை விடத் துணிந்து கிளம்பியிருந்தாலே போதும். ஆனால் வீதி ஓரங்களில் விழுந்து செத்தாலும் சாவார்களேயன்றி நாட்டின் விடுதலைக்காக உயிரைக் கொடுக்க முன்வர மாட்டார்கள்...."
"ஏன் வரமாட்டார்கள்? பேஷாக முன் வருவார்கள். ஜனங்களை நடத்திச் செல்லத் தகுந்த தலைவர்கள் இல்லாத தோஷந்தான். சுபாஷ் பாபு மட்டும் இச்சமயம் இங்கேயிருந்தால் கட்டாயம் புரட்சி ஏற்பட்டிருக்கும். சுபாஷ் பாபு இப்போது மலாய் நாட்டில் சேர்த்து வரும் சைனியத்தில் இந்திய வீரர்கள் ஏராளமாய்ச் சேருகிறார்களோ, இல்லையோ? உயிரைக் கொடுக்கத் துணிந்துதானே அவர்கள் சேருகிறார்கள்? ஆகா! தலைவர் என்றால் சுபாஷ் பாபுவைப் போல் இருக்க வேண்டும்."
"சுபாஷ் பாபுவின் பேரில் உன்னுடைய மோகம் இன்னும் போகவில்லை. சுபாஷ் பாபு வெற்றியடைந்தால் என்ன நடக்கும் தெரியுமா? இந்தியாவில் இங்கிலீஷ்காரர்களின் ஆட்சிக்குப் பதிலாக வங்காளிகள் ஆட்சி ஏற்படும்!" என்றான் அமரநாத்.
"ஏற்பட்டால் என்ன? அன்னியர்களாகிய இங்கிலீஷ்காரர்களின் கீழ் அடிமைகளாயிருப்பதைக் காட்டிலும் வங்காளிகளின் ஆட்சியில் நாம் இருந்தால் என்ன?"
"இருந்தால் என்ன? ஒன்றுமில்லை விஷயம் என்னவென்று உனக்குச் சொன்னேன்! அவ்வளவுதான். பங்கிம் சந்திர சட்டர்ஜி தான் ஆனந்த மடம் எழுதியிருக்கிறாரே? அதில் யாரைத் தூக்கி வைத்து எழுதியிருக்கிறார்? வங்க மாதாவின் புதல்வர்களைத் தான்! 'வந்தே மாதரம்' கீதத்தில் ஏழு கோடி மக்கள் என்றுதான் சொல்லியிருக்கிறார். அதை முப்பது கோடி என்று பின்னால் மாற்றினார்கள். எப்படியும் வங்காளிகளிடம் இந்த துர்க்குணம் இருக்கத்தான் இருக்கிறது. அதன் பலனைப் பார், சித்ரா! வங்காளம் இப்போது முஸ்லீம் லீக் மந்திரிகளின் ஆட்சியில் இருக்கிறது. முஸ்லிம் லீகர்களும் வங்காளிகள் தான்! ஆனால் எப்பேர்ப்பட்ட வங்காளிகள்!"
"டாக்டர் டாகூரும் வங்காளி தான். அவரைப் பாருங்களேன்! உலகமெல்லாம் ஒன்று. மனித ஜாதியெல்லாம் ஒரே ஜாதி என்று சொல்லவில்லையா? நீங்கள் வங்காளிகளைப் பற்றிக் குறை சொல்வது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அதுவும் இந்த நாட்டில் நாம் தொழில் நடத்திப் பணம் சம்பாதித்துக் கொண்டே இந்த நாட்டு மக்களைப் பற்றிக் குறை சொல்லலாமா? போதும், புறப்படலாம்! ஹாவ்ராவுக்குப் போக வேண்டும் என்கிறீர்களே!" - இவ்வாறு சொல்லிக் கொண்டே சித்ரா எழுந்தாள்.
"நான் இங்கே அதிக நாள் இருப்பதாக உத்தேசமில்லை சித்ரா! சீக்கிரம் தமிழ்நாட்டுக்குப் போய்விட விரும்புகிறேன்" என்று சொல்லிக் கொண்டு அமரநாத்தும் எழுந்தான்.
"அதெல்லாம் முடியாது! நீங்கள் போவதாயிருந்தால் தனியாகப் போக வேண்டியதுதான். உங்கள் நாட்டில் குடிகொண்டிருக்கும் சிறுமைப் புத்தியும் சின்னச் செயல்களும் எனக்குக் கொஞ்சம் பிடிக்கவில்லை. ஒருவரையொருவர் நிந்திப்பதே தமிழ் நாட்டாருக்கு வேலை. ஒரு ஸ்திரீயும் புருஷனும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் போதும், உடனே நூறு சந்தேகங்களைக் கற்பித்து அவதூறு பேச ஆரம்பித்து விடுவார்கள்!"
"வங்காளிகளிடம் இந்தக் குணம் கிடையாது என்று நினைக்கிறாய், சித்ரா! உனக்குத் தெரிந்த இலட்சணம் அவ்வளவுதான்!"
"எனக்குத் தெரிந்திருக்கிற அளவே போதும், பிறத்தியாரிடம் என்ன துர்க்குணம் இருக்கிறது என்று தோண்டிப் பார்த்துத் தெரிந்து கொள்ள எனக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை!"
இவ்வாறு முடிவில்லாத விவாதம் செய்துகொண்டே அந்த அன்யோன்ய தம்பதிகள் மோட்டார் வண்டி நிறுத்தியிருந்த இடத்துக்குச் சென்று வண்டியில் ஏறிக் கொண்டார்கள்.
அமரநாத்தும் சித்ராவும் கல்கத்தாவில் ஜாலீகஞ்ச் என்னும் பகுதியின் ஒரு அழகான பங்களாவில் வசித்தார்கள். முன்னேயெல்லாம் அவர்கள் அடிக்கடி ஏரிக்கரைக்குக் காற்று வாங்க வருவதுண்டு. பஞ்சத்தில் அடிப்பட்ட ஜனங்கள் கல்கத்தாவிற்கு வரத் தொடங்கிய நாளிலிருந்து அவர்கள் அதிகமாக வெளிக் கிளம்பவில்லை. தெருக்களில் பஞ்சத்தில் அடிப்பட்டுச் செத்துக் கிடந்தவர்களின் பிரேதங்களைப் பார்த்துக் கொண்டு போக அவர்களுக்குச் சகிக்கவில்லை. அதோடு பஞ்ச நிவாரண வேலையில் ஈடுபட்டிருந்த ஸ்தாபனம் ஒன்றில் சேர்ந்து சித்ராவும் தொண்டு செய்து கொண்டிருந்தாள். பர்மாவிலிருந்து வந்த அகதி ஸ்திரீகளுக்கும் குழந்தைகளுக்கும் உதவி புரிவதற்கென்று அந்த ஸ்தாபனம் முதலில் ஏற்பட்டது. அவ்வேலை ஒருவாறு முடிந்ததும் பஞ்சம் வந்து விட்டது. பஞ்சத்தில் அடிப்பட்டு மெலிந்தும் குற்றுயிராகவும் வந்த அனாதை ஸ்திரீகளுக்கும் குழந்தைகளுக்கும் இந்த ஸ்தாபனம் தொண்டு செய்து வந்தது.
இப்போது சில நாளாக அப்பஞ்ச நிவாரண வேலை குறைந்திருந்தபடியால் மூன்று மாதத்திற்குப் பிறகு அமரநாத்தும் சித்ராவும் கொஞ்சம் ஏரிக் காற்று வாங்கிவிட்டு ஹாவ்ரா நண்பர்களையும் பார்த்து வரலாம் என்று புறப்பட்டிருந்தார்கள். ஹாவ்ரா ஸ்டேஷனுக்குக் கொஞ்ச தூரத்துக்கருகில் பெரிய பெரிய வியாபாரக் கம்பெனிகள் தொழில் நடத்திய வீதிகள் இருந்தன. அந்த விசாலமான வீதிகளில் நெருங்கியிருந்த ஜனக்கூட்டத்தையும் மோட்டார் முதலிய வாகனங்களின் நெருக்கத்தையும் சொல்லி முடியாது. மாலை நேரங்களில் நிமிஷத்துக்கு ஒரு கஜ தூரம் வீதம் ஊர்ந்து கொண்டுதான் அந்தப் பகுதிகளில் மோட்டார் செல்லவேண்டும்.
"பஞ்சத்தில் அத்தனை லட்சம் பேர் செத்துப் போனார்கள். இத்தனை லட்சம் பேர் செத்துப் போனார்கள் என்று சொல்லுகிறார்களே! அவ்வளவு பேர் செத்துப் போன பிற்பாடும் இங்கே இத்தனை கூட்டமாக இருக்கிறதே?" என்றான் அமரநாத்.
"இருந்து விட்டுப் போகட்டும்; நீங்கள் யார் பேரிலாவது வண்டியை ஏற்றி ஜனத்தொகையைக் குறைக்கும் கைங்கரியத்தைச் செய்ய வேண்டாம்!" என்றாள் சித்ரா.
"இந்த வீதியில் யார் பேரிலாவது வண்டியை ஏற்றினால் அவன் அநேகமாக அரிசியை முடக்கிய கறுப்பு மார்க்கெட் முதலாளியாக இருப்பான். அவனைக் கொன்றால் தேசத்துக்குப் பெரிய சேவை செய்தவனாவேன்!" என்று சொன்னான் அமரநாத்.
மாலைப் பொழுது இரவாக மாறிக் கொண்டிருந்தது. சாலை ஓரத்துக் கம்பங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டன. ஆனால் விளக்குகள் எல்லாவற்றுக்கும் ஏ.ஆர்.பி. கூண்டுகள் போட்டிருந்தபடியாக தீபங்கள் பிரகாசமாக எரியவில்லை.
"இந்த ஜப்பான் யுத்தம் வந்தாலும் வந்தது; கல்கத்தாவின் சோபையே போய்விட்டது! முன்னேயெல்லாம் இந்த இடத்தில் எப்படிப் பிரகாசமான விளக்குப் போட்டு ஜகஜ்ஜோதியாக இருக்கும்!" என்றாள் சித்ரா.
இப்படி அவள் சொல்லி வாயை மூடினாளோ இல்லையோ, எட்டுத் திக்கும் திடுக்கிடும்படியாகப் படார், படார் என்று சத்தம் கேட்டது. உடனே ஏ.ஆர்.பி. ஸைரன் உடம்பு சிலிர்க்கும்படி சோக சத்தத்துடன் ஊளையிடத் தொடங்கியது. ஜப்பான் விமானம் வந்து குண்டு போடுகிறதென்றும், ஏ.ஆர்.பி. ஸைரன் முன் எச்சரிக்கை செய்வதற்குப் பதிலாகப் பின் எச்சரிக்கை செய்கிறதென்றும் அமரநாத்தும் சித்ராவும் தெரிந்து கொண்டார்கள். இது அவர்களுக்குப் புதிய அனுபவமாதலால் அவர்களுடைய உடம்பு நடுங்கிற்று. நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. சித்ரா அமரநாத்தின் தோள்களைப் பிடித்துக் கொண்டாள். அமரநாத் சாலையோரத்தில் வண்டியை நிறுத்தினான். வீதியில் எள் விழவும் இடமில்லாதபடி நெருங்கி நின்று கொண்டிருந்த ஜனங்கள் நாலாபுறமும் சிதறி ஓடி மறைந்தார்கள். வண்டிகள் மட்டும் அப்படி அப்படியே சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தன.
குண்டுகளின் சத்தம் ஓய்ந்தது ஐந்து நிமிஷம் ஆயிற்று. 'சரி; இவ்வளவுதான் போலிருக்கிறது; இனிமேல் போகலாம்' என்ற எண்ணம் அவர்கள் மனதிலே தோன்றியது. அடுத்த கணத்தில், ஆகா! இது என்ன அதிசயமான வெளிச்சம்! ஆயிரம் கோடி சூரியன் பூமியை நோக்கி விரைந்து வருவது போன்ற வெளிச்சம்! உடனே அந்த அதிசயமான வெளிச்சம் மங்குகிறது! - ஒரு பெரிய சத்தம் - அண்டங்கள் வெடித்து விழுவது போன்ற பயங்கரமான சத்தம் கேட்கிறது. காது செவிடாகி விட்டதென்றே தோன்றுகிறது. மோட்டார் கிடுகிடுவென்று நடுங்குகிறது. மோட்டாரின் கண்ணாடிக் கதவுகள் சடசடவென்று விரிந்து உடைகின்றன. சுற்றுப்புறமெங்கும் மக்கள் ஓலமிடும் பயங்கரமான சத்தம் எழுகின்றது.
பயங்கரம் இத்துடன் முடிந்து போய்விடவில்லை. சற்றுத் தூரத்தில் ஒரு பெரும் புகைத் திரள் குப்குப் என்று கிளம்பிப் பரவி வானை மறைக்கிறது புகைத் திரளுக்கு மத்தியிலிருந்து ஒரு செந்தீப் பிழம்பு வானை நோக்கி ஜுவாலை விட்டுக்கொண்டு மேலே மேலே போய் வானத்தையே மூடிவிடும் போல் தோன்றுகிறது.
இத்தனை நேரமும் அமரநாத்தைச் சித்ரா கெட்டியாகப் பிடித்துக் கொண்டபடியிருந்தாள். இப்போது வாயைத் திறந்து நடுநடுங்கிய மெல்லிய குரலில், "ஐயோ! இது என்ன இவ்வளவு பெரிய நெருப்பு எங்கிருந்து கிளம்புகிறது?" என்றாள்.
"எனக்கும் இப்போதுதான் தெரிகிறது; டி.என்.டி. வெடி மருந்துக் கிடங்கில் தீப் பிடித்திருக்க வேண்டும். அதுதான் இவ்வளவு பெரிய சத்தம் கேட்டது!" என்றான் அமரநாத்.
"உலகத்துக்கு கேடுகாலம் வந்து விட்டது; சந்தேகம் இல்லை" என்றாள் சித்ரா.
"உலகத்துக்கு ஏதோ கேடுகாலம் முன்னமே வந்துவிட்டது; இப்போதுதான் கல்கத்தாவுக்குக் கேடு வந்திருக்கிறது!" என்றான் அமரநாத்.
"நாம் சிவனே என்று மதராஸுக்கு போய் விடலாம். கல்கத்தாவில் இத்தனை நாள் இருந்தது போதும்!" என்றாள் சித்ரா.
"முதலில் இன்று ராத்திரி வீடு போய்ச் சேரலாம் நாளைக்கு மதராஸுக்குப் போவது பற்றி யோசிக்கலாம்" என்றான் அமரநாத்.
"வண்டியைத் திருப்பி வீட்டுக்கு விடுங்கள்! ஹாவ்ராவுக்கு இன்றைக்கு வேண்டாம்!" என்றாள்.
"கொஞ்சம் என் கை நடுக்கம் நிற்கட்டும். அதற்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன். ஹாவ்ராவுக்குப் போக நினைத்தாலும் இன்றைக்கு முடியாது!" என்றான் அமரநாத்.
அமரநாத் கூறியது உண்மை என்பதை எதிரிலே தோன்றிய காட்சிகளும் சுற்றுப்புறமெங்கும் கேட்ட சத்தங்களும் உறுதிப்படுத்தின. முதலில் கிளம்பிய பெரும் நெருப்பு மேலும் மேலும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதற்குச் சமீபத்தில் அங்குமிங்கும் இன்னும் சிற்சில சிறிய தீப்பிழம்புகள் தோன்றலாயின. திரள் திரளாகக் கரிய புகை கிளம்பிச் சுழன்று பரவி வானவெளியையெல்லாம் மூடியது.
தீப்பிடித்த இடங்களை நோக்கி ஜனங்கள் பலர் பயங்கரமான ஊளைச் சத்தங்களை இட்டுக் கொண்டு விரைந்து ஓடினார்கள். நாலாபக்கங்களிலிருந்தும் டாண் டாண் டாண் என்று மிக்க வேகமான மணி அடித்துக் கொண்டு நெருப்பு அணைக்கும் என்ஜின்கள் பறந்து ஓடி வந்து கொண்டிருந்தன. சிறிது நேரம் ஆங்காங்கே ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்த மோட்டார் வண்டிகள் திடீரென்று ஏக காலத்தில் புறப்பட யத்தனித்தபோது அவற்றின் ஹாரன்கள் எழுப்பிய சத்தங்கள், மகா கோரமாகக் காது செவிடுபடக் கேட்டன. வானை மூடியிருந்த புகைத் திரள் காற்றின் வேகத்தினால் கொஞ்சம் விலகிக் கொடுத்துத் தீயின் வெளிச்சம் கட்டிடங்களில் மேலே விழும்படி செய்த போது, சாலையின் இருபுறமும் இருந்த நாலு மெத்தை ஐந்து மெத்தைக் கட்டிடங்களின் மேல்தளங்களில் ஜனங்கள் நிழல் உருவங்களாக நின்று பார்த்துக் கொண்டிருந்த காட்சி, பயங்கரமான யமலோகக் காட்சியை நினைவூட்டியது.
சித்ரா அதையெல்லாம் பார்க்கச் சகியாமல் கண்களை மூடிக் கொண்டாள். பிறகு கேட்கச் சகியாமல் காதுகளைப் பொத்திக் கொண்டாள். "வண்டியைத் திருப்பி ஓட்டப் போகிறீர்களா, இல்லையா!" என்றாள்.
"ஓட்டுகிறேன்! நீயும் கொஞ்சம் ஜாக்கிரதையாக முன்னாலும் பக்கங்களிலும் பார்த்துக் கொண்டு வா" என்றான் அமரநாத்.
கார் திரும்பிப் புறப்பட்டு அந்த வீதியைத் தாண்டி அடுத்த வீதியில் நுழைந்தது. அங்கே கொஞ்ச தூரத்துக்கு அப்பால் ஒரு பெரிய ஜனக் கூட்டம் அருகில் நெருங்கிப் பார்த்தபோது ஒரு மார்வாரியின் கடைக்குள் ஜனங்கள் புகுந்து கிடைத்த சாமான்களைச் சுருட்டிக் கொண்டு ஓடுவதாகத் தெரியவந்தது.
கூட்டத்தின் மத்தியில் சில போலீஸ்காரர்களும் காணப்பட்டார்கள். ஜனங்கள் கடையில் புகுந்து சூறையாடுவதை அந்தப் போலீஸ்காரர்கள் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
ஜனக் கூட்டத்தின் ஓரம் வரையில் அமரநாத் காரைக் கொண்டு வந்து விட்டுப் பிறகு சிறிது தயங்கினான். மறுபடியும் காரைத் திருப்பி விடலாமா என்று நினைத்தான். திரும்பிப் போவதற்கு வேறு நல்ல வழி கிடையாது ரொம்பவும் சுற்றி அலைய வேண்டும்.
மேலும் இந்தக் காலிக் கூட்டத்துக்குப் பயந்து திரும்பிப் போவதா? - வீதி ஓரமாகக் கூட்டத்திற்குள்ளே அமரநாத் காரை விட்டான். கூட்டத்தில் சிலர் காரின் மேல்தட்டைத் தட்டினார்கள்; சிலர் கதவைத் தட்டினார்கள். சிலர் பின்னால் நின்று வண்டியைப் பிடித்து இழுத்து நிறுத்தப் பார்த்தார்கள். சிலர் 'ஆய் ஊய்' என்று கத்தினார்கள். 'மாரோ! மாரோ!' என்று ஒரு குரல் கேட்டது. அமரநாத் கதிகலக்கத்துடன்தான் வண்டியை ஓட்டினான். நல்ல வேளையாக அபாயம் ஒன்றும் நேரவில்லை. கூட்டத்தைத் தாண்டியதும் வேகமாக வண்டியை விட்டான்.
"சித்ரா! பார்த்தாயல்லவா இலட்சணத்தை! எங்கேயோ குண்டு வெடித்தது! எங்கேயோ தீப்பிடித்தது! இங்கே கடையிலே புகுந்து காலிகள் கொள்ளையடிக்கிறார்கள்! இந்த இலட்சணத்தில் இந்தியாவுக்குச் சுயராஜ்யம் வேண்டுமாம், சுயராஜ்யம்! உருப்பட்டாற் போலத்தான்!" என்றான் அமரநாத்.
இப்படி அமரநாத் சொல்லிக் கொண்டிருக்கும் போது காரின் மேல் ஒரு கல் விழுந்தது. ஓடும் வண்டியில் விழுந்தபடியால் வெடி குண்டு வெடித்தது போலச் சத்தம் கேட்டது.
"நான் சொன்னது சரியாகப் போய்விட்டதல்லவா? இந்தக் கல் என் பேரிலோ எதிர்க் கண்ணாடியின் பேரிலோ விழுந்திருந்தால் என்ன கதி ஆகியிருக்கும்?" என்றான் அமரநாத்.
"நான்தான் சொல்லிவிட்டேனே? இந்தக் கல்கத்தாவிலே இருந்ததும் போதும்; சம்பாதித்ததும் போதும். நாளைக்கே ஊருக்குப் புறப்படலாம்; உள்ளதைக் கொண்டு நிம்மதியாக இருக்கலாம்."
"ஊருக்குப் போனால் நிம்மதி வந்துவிடுமா? அங்கேயும் இந்த மாதிரியான ஜனங்கள் தானே இருப்பார்கள்? இங்கே செய்வதைப்போல் அங்கேயும் செய்ய மாட்டார்களா?"
"நம்ம பக்கத்து ஜனங்கள் ஒரு நாளும் இந்த மாதிரி மிருகப் பிராயமாக நடந்துகொள்ள மாட்டார்கள்!" என்று தீர்மானமாகக் கூறினாள் சித்ரா.
கொஞ்ச தூரம் போனதும் ஒரு மோட்டார் பஸ் சாலை ஓரத்தில் பக்கவாட்டில் விழுந்து தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதைக் கண்டார்கள்.
"பஸ்ஸில் எப்படித் தீப்பிடிக்கும்?" என்றாள் சித்ரா.
"தானாகப் பிடித்திராது! யாரோ காலிகள் தீ வைத்திருக்கிறார்கள்!" என்றான் அமரநாத்.
"எதற்காக?"
"எதற்காக என்று கேட்டால் என்ன சொல்லுவது? காலிகளுடைய காரியங்களுக்குக் காரணம் சொல்ல முடியுமா? கொள்ளை, கொலை, தீ வைத்தல் ஆகிய காரியங்களிலேயே அவர்களுக்கு ஆனந்தம்! நிஷ்காம்ய கர்மமாகவே செய்வார்கள்!"
வண்டி இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் சாலை ஓரத்தில் ஓர் உருவம் விழுந்து கிடப்பது தெரிந்தது. அது பெண் உருவமாகவும் காணப்பட்டது. அதன் பக்கத்தில் ஒரு பையன் குனிந்து நின்று கொண்டிருந்தான்.
"நிறுத்துங்கள்! வண்டியை நிறுத்துங்கள்!" என்று சித்ரா கூறினாள்.
வண்டி நின்றது. அதைப் பார்த்ததும் பெண் உருவத்தின் பக்கத்தில் நின்ற பையன் விழுந்தடித்து ஓடினான்.
"அந்தப் பையன் என்ன செய்து கொண்டிருந்தான்?" என்று சித்ரா கேட்டாள்.
"கையிலிருந்த வளையலைக் கழற்றிக் கொண்டிருந்தான். நம்மைப் பார்த்ததும் ஓடினான்! சித்ரா! கொஞ்ச நாளாகக் கல்கத்தா சாலைகளில் பிரேதங்களைக் காண்பதில்லையென்று குறைப்பட்டாயல்லவா? இதோ உன் குறை தீர்ந்து விட்டது?"
"ஏதாவது கன்னாபின்னாவென்று சொல்லாதீர்கள்! நான் பிரேதத்தைக் காணவில்லையென்று குறைப்பட்டேனாக்கும்! ஒருவேளை இன்னும் உயிர் இருக்கிறதோ, என்னமோ? இறங்கிப் பார்க்கலாம் வாருங்கள்" என்றாள் சித்ரா.
இருவரும் இறங்கி அந்த உருவத்தின் அருகில் போனார்கள். "அடாடா! மதராஸ் பக்கத்துப் பெண் போல அல்லவா இருக்கிறது? வயதும் அதிகமிராது; சிறு பெண்!" என்றாள் சித்ரா.
"மதராஸ் பெண் என்பதற்காக யமன் விட்டுவிடுவானா, என்ன? பார்த்தாகிவிட்டது! வா, போகலாம்" என்றான் அமரநாத்.
"செத்துப் போய் விட்டதாக அவ்வளவு நிச்சயமாய் ஏன் சொல்ல வேண்டும்? உயிர் இருக்கிறதா என்று பாருங்கள்!"
"நீயே பார்! உனக்குத் தான் இந்த மாதிரிக் காரியங்களில் அனுபவம் அதிகம்!" என்றான் அமரநாத்.
கீழே கிடந்த பெண்ணின் மூக்கின் அருகே சித்ரா விரலை வைத்துப் பார்த்தாள். மூச்சு இலேசாக வந்து கொண்டிருந்தது. மார்பில் கை வைத்துப் பார்த்தாள். மார்பு அடித்துக் கொண்டிருந்தது என்பதும் நன்கு தெரிந்தது.
"நிச்சயமாக உயிர் இருக்கிறது! சீக்கிரம் பிடியுங்கள்!" என்று சொல்லிச் சித்ரா அந்தப் பிரக்ஞையற்ற பெண்ணின் தலையின் கீழ் கையைக் கொடுத்துத் தூக்கினாள்.
"ஏன் மரம் மாதிரி நிற்கிறீர்கள்! சீக்கிரம் காலின் பக்கம் பிடித்துத் தூக்குங்கள்" என்றாள்.
"யாரோ தெருவில் கிடக்கிறவளுக்காக நான் 'மரம்' என்று வசவு வாங்க வேண்டியிருக்கிறது! அவளுடைய காலையும் பிடித்துத் தொலைக்க வேண்டியிருகிறது!" என்று சொல்லிக் கொண்டே அமரநாத் அந்தப் பெண்ணின் காலைப் பிடித்துத் தூக்கினான். இருவருமாகக் கொண்டு வந்து காரின் பின் ஸீட்டில் போட்டார்கள்.
"விடுங்கள்! சீக்கிரம் காரை விடுங்கள்! ஒரு உயிரைக் காப்பாற்றுங்கள்!" என்றாள் சித்ரா.
வண்டி கிளம்பிப் போகத் தொடங்கியதும், "எங்கே விடுகிறது! காரை எங்கே விடுகிறது?" என்று அமரநாத் கேட்டான்.
"வீட்டுக்குத் தான் விடவேண்டும்! வேறு எங்கே?"
"அப்படியானால் நான் வண்டியை நிறுத்தி வெளியில் எடுத்து எறிந்து விடுவேன். வீட்டுக்குக் கொண்டு போகவே கூடாது. யாரோ? என்ன சங்கடமோ? நம் வீட்டில் செத்து வைத்தால் என்ன செய்கிறது?" என்றான் அமரநாத்.
"உங்களைப் போல் இரக்கமற்ற மனிதரை நான் பார்த்ததே கிடையாது. அப்படியானால், அனாதை விடுதிக்கு விடுங்கள்! சீக்கிரம் போனால் சரி!" என்றாள் சித்ரா.
அமரநாத் அதிவேகமாகக் காரை விட்டுக்கொண்டு சென்றான். பிரக்ஞையற்றுக் கிடந்த பெண்ணின் முகத்தில் வேகமாகக் காற்றுப் பட்டதினாலேயே அவளுக்கு உயிரும் உணர்வும் வரத் தொடங்கின. அனாதை ஆசிரமத்திற்குக் கொண்டுபோய்ச் சிறிது நேரம் ஆரம்ப சிகிச்சை செய்ததும் நன்றாக உயிர் வந்துவிட்டது. இனி அபாயம் இல்லையென்று தெரிந்து கொண்டு அமரநாத்தும் சித்ராவும் வீடு போய்ச் சேர்ந்தார்கள்.
காலை நேரத்தில் அரைமணி நேரம் சடசடவென்று பெய்த மழையினால் கல்கத்தாவின் வீதிகள் சுத்தமாக விளங்கின. ஓரங்களில் வளர்ந்திருந்த செழுமையான மரங்களிலிருந்து மழைத் துளிகள் முத்து முத்தாகச் சொட்டிக் கொண்டிருந்தன. பட்சிகள் சிறகுகளை அடித்து மழைத் துளிகளை உதறிக் கொண்டிருந்தன. மேல் மாடியின் பலகணி மாடத்தில் உட்கார்ந்து சித்ரா அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கணவன் அமரநாத் ஆபீஸுக்கு போவதற்காக உடுப்புத் தரித்துக் கொண்டிருந்தான்.
"இன்றைக்கு சீக்கிரம் ஆபீஸிலிருந்து வந்து விடுவீர்களா? மழை பெய்திருக்கிறபடியால் ஏரிக்கரை இன்று ரொம்ப சுகமாயிருக்கும். சீக்கிரம் வந்தால் போகலாம்!" என்றாள் சித்ரா.
"சரிதான், சரிதான்! அன்றைக்கு ஒரு நாள் ஏரிக்கரைக்குப் போனது போதாதா? அன்றிலிருந்து ஏரி என்றாலே எனக்குப் பயமாயிருக்கிறது. திரும்பி வரும்போது பஞ்சத்தில் அடிப்பட்ட இன்னும் ஒரு பெண்மணி யாரையாவது காப்பாற்ற வேண்டி நேரிட்டால்? அதைக் காட்டிலும் ஏதாவது நல்ல சினிமாவுக்குப் போய்விட்டு வந்தாலும் வரலாம். 'அன்னா கரினா' வந்திருக்கிறதாம்!..."
"புருஷர்களுடைய காரியமே விசித்திரமாயிருக்கிறது. நாடகத்திலும் சினிமாவிலும் யாராவது ஒரு அனாதைப் பெண் வீதியிலே கிடந்தால் அதைப் பார்த்து உருகிப் போய்விடுகிறார்கள். நிஜ வாழ்க்கையில் அந்த மாதிரி ஒரு பெண் கிடந்தால், அந்தப் பக்கமே பார்க்காமல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள்..."
"அது உண்மைதான்; யார் இல்லை என்கிறார்கள்? அதற்குக் காரணம் இருக்கிறது. சினிமாவில் ஒரு பெண் தெருவில் கிடந்தாள் என்றால், அவள் சாமான்யப் பெண்ணாயிருப்பாளா? ஒரு கிரேடா கார்போ, அல்லது நார்வா ஷியரர் அல்லது கண்ணன் பாலா அவ்விதம் விழுந்து கிடப்பாள். பார்க்கிறவர்களுடைய மனம் கட்டாயம் உருகத்தான் செய்யும்.."
"கொஞ்சம் நில்லுங்கள், மிஸ்டர்! அன்றைக்குத் தாங்கள் பெரிய மனது செய்து காரிலே தூக்கிப் போட்டுக்கொண்டு போய்க் காப்பாற்றினீர்களே, அந்தப் பெண் உங்கள் கிரேடா கார்போ அல்லது உங்கள் கண்ணன் பாலாவுக்கு எந்த விதத்திலும் குறைந்தவள் அல்ல! நான் ஒன்று சொல்கிறேன், கேளுங்கள்! இன்று சாயங்காலம் சீக்கிரம் ஆபீஸிலிருந்து வந்து விடுங்கள்! இரண்டு பேருமாகப் போய் அந்தப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு ஏரிக்கரைக்குப் போவோம். கல்கத்தா நகரத்தைச் சுற்றிக்காட்டுவதாக அவளிடம் சொல்லியிருக்கிறேன். அவளும் வருவதாக ஒத்துக் கொண்டிருக்கிறாள்" என்றாள் சித்ரா.
"முடியவே முடியாது! அந்த மாதிரி நீ சொல்வதாயிருந்தால் நான் ஆபீஸிலிருந்து இராத்திரி பத்து மணிக்குத்தான் திரும்பி வருவேன். நம்முடைய திருநெல்வேலிப் பக்கங்களில் 'விருதுப்பட்டிக்குப் போகிற சனியனை விலைக்கு வாங்கினாற்போல்' என்பார்கள். அம்மாதிரியல்லவா இருக்கிறது நீ சொல்லுகிற காரியம்?"
"ஊர் பேர் தெரியாத ஒரு அனாதைப் பெண்ணிடம் உங்களுக்கு என்னத்திற்காக இவ்வளவு கொடூரம்?" என்று கேட்டாள் சித்ரா.
"ஊர் பேர் தெரியாததினால்தான் நாம் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். அவள் யோக்யமான ஸ்திரீயாயிருக்கும் பட்சத்தில் ஊர் பேர் சொல்வதற்கு ஏன் தயங்க வேண்டும்? இன்னும் சொல்லாமல்தானே இருக்கிறாள்" என்றான் அமரநாத்.
"அதனால் என்ன? எத்தனையோ காரணம் இருக்கலாம். ரொம்பவும் துக்கப்பட்டவளாகத் தெரிகிறது. அவளுடைய யோக்யதையைப் பற்றி எந்த கோர்ட்டில் வேண்டுமானாலும் நான் சத்தியம் செய்யத் தயாராயிருக்கிறேன். அனாதை விடுதியின் தலைவி சௌதாரிணி அம்மாள் இந்தப் பெண்ணைப் பற்றிச் சொல்லுகிற புகழ்ச்சிக்கு அளவேயில்லை. தினம் ஐம்பது அனாதைக் குழந்தைகளுக்குக் குளிப்பாட்டி விடுகிறாளாம்! அலுக்காமல் சலிக்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறாளாம். அவள் இங்கேயே இருந்துவிட்டால் எவ்வளவோ தனக்கு உதவியாயிருக்கும் என்று சௌதாரிணி அம்மாள் சொல்லுகிறாள்."
"அவ்வளவு நல்ல பெண்ணாயிருக்கும் பட்சத்தில் ஊர், பேர் சொல்ல எதற்காக மறுக்க வேண்டும்?" என்று அமரநாத் மீண்டும் வற்புறுத்திக் கேட்டான்.
"யார் கண்டது, அவளுடைய கணவன் உங்களைப் போன்ற கொடூர குணம் உள்ளவனாயிருக்கலாம்! இவளை அடித்துத் துரத்தியிருக்கலாம்! அதைச் சொல்லிக் கொள்ள அவள் வெட்கப்படலாம்!"
"சரி, சரி! உன்னை நான் ஒரு நாளைக்கு வீட்டை விட்டு அடித்துத் துரத்துகிறேனா, இல்லையா, பார்!" என்றான் அமரநாத்.
"நீங்கள் அப்படிச் செய்தால் நான் இந்தச் சாதுப் பெண்ணைப் போல் வாயை மூடிக்கொண்டிருப்பேன் என்று நினைக்க வேண்டாம்! என்னை அடித்துத் துரத்திய அருமைக் கணவர் யார் என்பதை ஊரெல்லாம் பறையடித்து விடுவேன்!" என்றாள் சித்ரா.
இந்தச் சமயத்தில் வேலைக்காரப் பையன் அன்றைய தபால்களைக் கொண்டு வந்து கொடுத்தான். அமரநாத் முதலில் தபால்களைப் புரட்டிப் பார்த்து, "ஸ்ரீமதி சித்ரா தேவிக்கு ஒரு கடிதம் இருக்கிறது. லலிதா தேவி எழுதியதாகத் தோன்றுகிறது!" என்று சொல்லிக் கொண்டே ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்தான். பிறகு தன் தபால்களைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினான்.
சித்ரா தனக்கு வந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு தன்னுடைய அறைக்குப் படிப்பதற்குப் போனாள். ஐந்து நிமிஷத்துக்கெல்லாம், "கேட்டீர்களா கதையை?" என்று கூவிக் கொண்டே ஓடிவந்தாள்.
அமரநாத் நிமிர்ந்து சித்ராவைப் பார்த்துவிட்டு, "கதை பரபரப்புள்ள மர்மம் நிறைந்த திடுக்கிடும் கதையாக இருக்கும் போலிருக்கிறதே? அப்படிப்பட்ட கதையை யார் எழுதியிருக்கிறது? லலிதாவா?" என்றான்.
"ஆமாம்; லலிதாவேதான். ஆனால் இதில் அவள் எழுதியிருப்பது வெறும் கதையல்ல, கதையைக் காட்டிலும் திடுக்கிடச் செய்யும் உண்மைச் சம்பவம். இதைப் படித்து பாருங்கள்!" என்று கடிதத்தை நீட்டினாள்.
"அதெல்லாம் முடியாது! உனக்கு வந்த கடிதத்தை நான் படிக்க மாட்டேன். அப்புறம் எனக்கு வரும் கடிதங்களை நீ படிக்க வேண்டும் என்பாய். ஏதாவது விசேஷ சமாசாரம் இருந்தால் வாயினால் சொல்லி விடு!" என்றான் அமரநாத்.
"உங்கள் மாதிரி பிடிவாதம் உள்ள மனுஷரை நான் பார்த்ததே கிடையாது. போனால் போகட்டும்! நான் சொல்லுவதையாவது கேளுங்கள். லலிதாவின் அண்ணன் சூரியா, டில்லியில் போலீஸாரிடமிருந்து தப்பி ஓடப் பார்த்தானாம். போலீஸார் அவனைச் சூழ்ந்து கொள்ளவே துப்பாக்கியால் சுட்டானாம். ஆனால் போலீஸ்காரர்கள் அவனைப் பிடித்து விட்டார்களாம். அதனால் பலத்த காயம் பட்டு ஆபத்தான நிலைமையில் இருக்கிறானாம். இதைப்பற்றி லலிதா ரொம்பவும் வருத்தப்பட்டு எழுதியிருக்கிறாள். அவளுடைய அப்பாவும் அம்மாவும் ரொம்ப வருத்தப்படுகிறார்களாம். வருத்தம் இராதா, பின்னே? இது போதாதற்கு இன்னொரு பெரிய விபத்து அவர்களுக்கு! அதுவும் டில்லி சமாசாரந்தான். சீதாவைத் திடீரென்று ஒரு நாள் காணோமாம்! எவ்விதத் தகவலும் சொல்லாமல் மாயமாய் மறைந்து போய்விட்டாளாம். சூரியா பிடிபட்டதும் சீதா காணாமல் போனதும் ஒரே நாளில் நடந்ததாம். சீதாவின் கணவன் லலிதாவின் தகப்பனாருக்கு அதைப்பற்றி எழுதி இருக்கிறானாம். ஒருவேளை தேவப்பட்டணத்துக்கோ ராஜம்பேட்டைக்கோ வந்து சேர்ந்தால் தனக்கு உடனே தகவல் தெரிவிக்கும்படி எழுதியிருக்கிறானாம்! சூரியாவுக்கு நேர்ந்த விபத்தைக் காட்டிலும் சீதாவைப் பற்றிய செய்திதான் லலிதாவை அதிகமாகத் துன்பப்படுத்தியிருக்கிறது. அதைப்பற்றி ரொம்பவும் புலம்பியிருக்கிறாள்!"
இதைக் கேட்டுக் கொண்டு வந்த அமரநாத் நடுவில் பெரும் யோசனையில் ஆழ்ந்து விட்டான். திடீரென்று குதித்து எழுந்து, "சித்ரா! நாலு நாளைக்கு முன்பு டில்லி சமாசாரம் ஒன்று பத்திரிகையில் வந்ததே; உனக்குப் படித்ததாக ஞாபகம் இருக்கிறதா?" என்று சொல்லிக் கொண்டே தினசரிப் பத்திரிகைகள் அடுக்கி வைத்திருந்த மூலைக்குப் போய் அங்கிருந்த பத்திரிகைகளைப் புரட்டத் தொடங்கினான். சில நிமிஷ நேரத்துக்குள் அவன் தேடிய பத்திரிகைச் செய்தி அகப்பட்டு விட்டது.
"ஆகா! இதோ அந்தச் செய்தி இருக்கிறது! கேள், சித்ரா!" என்று செய்தியைப் படித்தான்.
"நாலு நாளைக்கு முன் சூரியநாராயணன் என்னும் புரட்சிக்காரன் போலீஸாரால் கைது செய்யப்பட்ட செய்தி இந்தப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்ட போது மேற்படி புரட்சிக்காரன் போலீஸாரை எதிர்த்ததன் காரணமாகப் பலமாக அடிக்கப்பட்டுக் காயம் அடைந்தான். இது காரணமாக அவனை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காகச் சேர்த்துப் போலீஸ் காவலும் போட்டிருந்தார்கள். நேற்றிரவு ஆஸ்பத்திரியிலிருந்து அவன் தப்பித்துக் கொண்டு போய்விட்டதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. போலீஸ் காவலை மீறி அவன் எப்படித் தப்பித்துக் கொண்டு போனான் என்பது பெரிய மர்மமாயிருக்கிறது. இரகசிய போலீஸார் தீவிரமாகப் புலன்விசாரித்துக் கொண்டிருப்பதாய் அறிகிறோம் நிற்க, சூரிய நாராயணன் கைது செய்யப்பட்ட அன்று மறைந்துவிட்ட புரட்சிக்காரி இன்னும் அகப்படவில்லையென்று தெரிகிறது. அவள் மிகவும் சாமர்த்தியசாலி என்றும், புது டில்லியில் இரண்டு பெயர்கள் வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்தியதாகவும், பெரிய பெரிய உத்தியோக வர்க்கக் குழாங்களில் பழகி வந்ததாகவும் தெரிய வருகின்றன. இந்தப் புரட்சிக்காரியைப் பற்றியும் இரகசிய போலீஸார் புலன்விசாரித்து வருகிறார்களாம்."
மேற்கண்ட செய்தியை மிகப் பரபரப்புடன் படித்து முடித்த அமரநாத், "இதைப் பற்றி என்ன நினைக்கிறாய் சித்ரா! 'சூரிய நாராயணன்' என்ற பெயரைப் பத்திரிகையில் படித்தபோது சூரியாவின் ஞாபகமே எனக்கு வரவில்லை. ஆனால் இது நம்முடைய சூரியாவாகத்தான் இருக்கவேண்டும். அவனுடைய சாமர்த்தியத்தை என்னவென்று சொல்லுவது? இத்தனை நாள் போலீஸுக்கு டிமிக்குக் கொடுத்து வந்தது பெரிதல்ல; மறுபடியும் ஆஸ்பத்திரியிலிருந்து போலீஸ் காவலை மீறித் தப்பித்துக் கொள்வது என்றால் சாமான்யமா? அதிலும், உடம்பெல்லாம் காயம்பட்டுக் கிடக்கும் நிலையில் - என்ன பேசாமல் நிற்கிறாய், சித்ரா! சூரியாவின் காரியம் உனக்கு அதிசயமாயில்லையா?" என்றான்.
"உங்கள் சூரியாவின் பெருமை இருக்கட்டும். நான் வேறொரு விஷயத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன் - மாயமாய் மறைந்த சீதாவைப் பற்றித்தான்! - ஸார்! தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள். இன்றைக்கு ஆபீஸுக்கு லீவு போட்டு விடுங்கள். டெலிபோனில் கூப்பிட்டுச் சொல்லி விடுங்கள். இரண்டு பேரும் பஞ்ச நிவாரண விடுதிக்குப் போய் விட்டு வரலாம்! இப்பொழுதே புறப்பட்டுப் போக வேண்டும்?" என்றாள் சித்ரா.
"பஞ்ச நிவாரண விடுதிக்கு இப்போது என்னத்திற்கு? எதற்காக நான் லீவு எடுக்க வேண்டும்?" என்று அமரநாத் கேட்டான்.
"உங்களுக்கு இன்னும் தெரியவில்லையா? அன்றைக்கு நாம் வீதி ஓரத்தில் கிடந்தவளை எடுத்துக்கொண்டு வந்து அனாதை விடுதியில் சேர்த்தோமே? அவளைப் பற்றி ஒரு சந்தேகம் உண்டாகிறது."
"ஒருவேளை அவள் சீதாவாக இருக்கலாம் என்று சொல்லுகிறாயாக்கும். லட்சணமாகத்தான் இருகிறது? டில்லி எங்கே? கல்கத்தா எங்கே? அங்கேயிருந்து இங்கே எதற்காக அவள் வரவேண்டும்? அவளுடைய கணவன் எழுதியிருப்பது போலத் தேவப்பட்டணம் அல்லது ராஜம்பேட்டைக்குப் போயிருந்தாலும் அர்த்தம் உண்டு!" என்றான் அமரநாத்.
"ரொம்பப் புத்திசாலிதான்! சீதா புரட்சிக்காரி என்பதை மறந்துவிட்டுப் பேசுகிறீர்கள்! ராஜம்பேட்டை அல்லது தேவபட்டணத்துக்குப் போனால் போலீஸாருக்கு நோட்டீசு கொடுத்ததுபோல் ஆகாதா? கல்கத்தா தான் தலைமறைவாயிருக்கச் சரியான இடம் என்று வந்திருக்கிறாள். வந்த இடத்தில், பாவம் ஏதோ ஆபத்து நேர்ந்திருக்கிறது. அது இருக்கட்டும். ஏன் ஸார்; நீங்கள் தான் முன்னே சீதாவைப் பார்த்திருக்கிறீர்களே? உங்களுக்கு அவளை அடையாளம் கண்டுபிடித்துச் சொல்ல முடியுமே?"
"கல்யாணத்தின் போது ஒரே ஒரு தடவை பார்த்தது தானே! அதுவும் பத்து வருஷத்துக்கு முன்னால்! எப்படி ஞாபகம் இருக்கும்? மேலும் அன்று இராத்திரி காரில் தூக்கிப்போட்டுக் கொண்டு வந்தபோது அவள் முகத்தையே நான் பார்க்கவில்லை. இருட்டாகவும் இருந்தது, எப்படி அடையாளம் சொல்வது?"
"இப்போது வந்து நன்றாய்ப் பாருங்கள். பார்த்து அந்தப் பெண் சீதாதானா என்று கண்டுபிடித்துச் சொல்லுங்கள்!"
"எனக்கு என்ன அதைப் பற்றிக் கவலை? சீதாவாயிருந்தால் என்ன? யாராயிருந்தால் என்ன? நீயே கேட்டுத் தெரிந்துகொள். உன்னை அனாதை விடுதியில் கொண்டு போய் விட்டுவிட்டு நான் ஆபீஸுக்குப் போய்ச் சேர்கிறேன்" என்றான் அமரநாத்.
இரண்டு பேரும் காரில் ஏறிக்கொண்டு அனாதை விடுதிக்குச் சென்றார்கள். அமரநாத் சொன்னபடியே சித்ராவை அங்கே இறக்கி விட்டுவிட்டு, தான் ஆபீஸுக்குப் போனான்.
அன்று சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரமாகவே அமரநாதன் ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்தான். அனாதை விடுதியிலிருந்து சித்ரா திரும்பி வந்திருப்பாளா அல்லது நான் போய் அழைத்து வரவேண்டுமா என்று சிந்தித்துக் கொண்டே வீட்டு வாசலில் காரை நிறுத்தினான். ஒருவேளை திரும்பி வந்திருந்தால் அந்த ஸ்திரீயைப் பற்றிய விவரம் ஏதாவது தெரிந்து கொண்டு வந்திருப்பாளா என்றும் எண்ணமிட்டான்.
வீட்டு வாசலில் வந்து கார் நின்ற மறுநிமிடமே சித்ரா வாசற் பக்கம் வந்தாள். அவள் முகம் குதூகலத்தினால் மலர்ந்திருந்தது.
"சித்ரா! சித்ரா! முழுகிப் போய் விடாதே! மெதுவாகக் கரையேறிவிடு! நான் வேணுமானால் கைகொடுத்துத் தூக்கி விடட்டுமா?" என்று அமரநாத் கேட்டான்.
"என்ன இப்படித் திருவாய் மலர்ந்து திரு உளறல் உளறுகிறீர்கள்?" என்று கேட்டாள் சித்ரா.
"நான் ஒன்றும் உளறவில்லை உன்னைப் பார்த்தால் ஆனந்தக் கடலில் முழுகித் தத்தளிப்பவளைப் போலத் தோன்றியது. கைதூக்கிக் கரை சேர்க்கலாம் என்று பார்த்தேன்!" என்றான் அமரநாத்.
"ஆனந்தத்துக்குக் காரணம் இருக்கிறது!" என்றாள் சித்ரா.
"பின்னே இல்லாமல் இருக்குமா? அந்தப் பெண் இன்னவள் என்று கண்டுபிடித்து விட்டாயாக்கும்!"
"ஆமாம்! நான் சொன்னதுதான் உண்மை என்று ஆயிற்று. இருக்கவே இருக்காது என்று நீங்கள் சாதித்தீர்களே?"
"உன்னுடைய வாக்குப் பொய்த்துப் போகுமா என்ன? தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுது அழுகிறவள் பெய்யெனப் பெய்யும் மழை என்று திருவள்ளுவரே சொல்லி இருக்கிறார்! அப்படியிருக்க உன் வாக்குப் பலித்ததற்குக் கேட்பானேன்?"
இருவரும் வீட்டின் முன்புறத்து ஹாலுக்குள் நுழைந்தார்கள். அங்கே சோபாவில் ஒரு பெண் உட்கார்ந்து ஒரு கடிதத்தைப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அமரநாத் திடுக்கிட்டான்.
அவர்கள் வருவதைப் பார்த்ததும் அந்தப் பெண் எழுந்து அவசரமாய் அருகிலிருந்த மச்சுப்படியில் ஏறி மேலே சென்றாள்.
அவள் மறைந்ததும், "சித்ரா! இவள்தான் சீதாவா! இன்னார் என்று கண்டுபிடித்ததோடல்லாமல் இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிட்டாயா?" என்றான் அமரநாத்.
"ஆமாம்; நான் ஒரு காரியத்தில் முனைந்தால் அதை முடிக்காமல் வந்துவிடுவேனா?" என்றாள் சித்ரா.
"அதைப்பற்றிக் கேட்பானேன்? நீ ஒரு காரியத்திலும் முனையாமல் இருக்க வேண்டுமே என்றல்லவா நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்! இப்போது பார்! இந்த சனியனை இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிட்டாய்!"
"தயவு செய்து தங்கள் திருவாயை மூடிக்கொள்ளுங்கள்."
"தேவி மன்னிக்க வேண்டும்; இந்த தேவலோகத்துக்குப் பெண்ணரசியைத் தேடிப் பிடித்து அழைத்து கொண்டு வந்திருக்கிறீர்களே! என்ன நோக்கத்துடன்? அதைத் தயவு செய்து தெரிவித்து அருள வேண்டும்."
"நோக்கம் என்ன வந்தது? இது என்ன கேள்வி? நம்ம பக்கத்துப் பெண், உங்கள் அருமைச் சிநேகிதர் சூரியாவின் அத்தங்காள். அவளை அனாதை விடுதியிலேயே விட்டு வருகிறதா?"
"விட்டு விட்டு வந்தால் என்ன? அன்றியும், இவள்தான் சீதா என்பது என்ன நிச்சயம்?"
"நிச்சயந்தான்; என்னுடைய ஊகம் பிசகாய்ப் போகுமா? இவளே ஒப்புக்கொண்டு விட்டாள்."
"இத்தனை நாள், - ஒரு வாரமாக, ஊர் பேர் சொல்லாதவள் இன்றைக்கு எதனால் திடீர் என்று ஒப்புக்கொண்டாள்?"
"அதற்கு ஒரு யுக்தி செய்தேன்."
"அது என்ன அதிசய யுக்தி என்பதை அடியேன் அமரநாதன் தெரிந்து கொள்ளலாமா?"
"ஆகா! பேஷாய்த் தெரிந்து கொள்ளலாம். அமரநாதன் தெரிந்து கொள்ள முடியாத இரகசியம் சித்ராவிடம் என்ன இருக்க முடியும்? தாங்கள் என்னை அனாதைப் பஞ்ச நிவாரண விடுதியில் விட்டுவிட்டுப் போனீர்கள் அல்லவா? உடனே போய்ச் சீதாவிடம் பேசிப் பார்த்தேன். வழக்கம் போலவே அவள் முகம் கொடுத்துப் பேசவில்லை. குழந்தைகளுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் நின்ற சௌதாரிணி அம்மாளிடம் நான் சென்று பேசினேன். பேச்சின் மத்தியில் சீதாவின் காது கேட்கும்படியாகச் சூரியாவைப் பற்றிய செய்தியைச் சொன்னேன். சூரியா என்ற வார்த்தை காதில் விழுந்ததும் சீதா திடுக்கிட்டதைப் பார்த்துக்கொண்டேன். சற்று நேரத்துக்கெல்லாம் சீதா என்னைத் தேடிக் கொண்டு வந்தாள். தலைவி அம்மாளிடம் என்ன சொன்னேன் என்று கேட்டாள். அவளிடமும் சூரியாவைப் பற்றிய செய்தியைத் திருப்பிச் சொன்னேன். அவளுடைய முகபாவத்தை கவனித்துக் கொண்டே சொன்னேன். கடைசியாக, 'இதைப்பற்றி உனக்கென்ன இவ்வளவு ஆவல்? நீ யார்?' என்று கேட்டேன். அப்போதும் சொல்லாமல் சும்மா இருந்தாள். 'என்னிடம் ஏன் மறைக்கிறாய்? நீதானே சீதா?' என்று நான் சட்டென்று கேட்டதும் அவளுக்கு ஆச்சரியமாய்ப் போய்விட்டது. பிறகு எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டு விட்டாள். அதன் பேரில்தான் வீட்டுக்கு வரும்படி கூப்பிட்டேன். முதலில் வருவதற்கு மறுத்தாள். அனாதை விடுதியில் குழந்தைகளுக்குப் பணிவிடை செய்வது தனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது என்று சொன்னாள். நாங்கள் எல்லாரும் வாரத்துக்கு இரண்டு நாள் முறை போட்டுக்கொண்டு சேவை செய்வது போல் அவளும் செய்யலாம் என்று சொல்லி வற்புறுத்தி நம் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தேன். எப்படி என்னுடைய யுக்தி?"
"கேட்பானேன்? நியாயமாக இந்திய சர்க்காரின் சி.ஐ.டி. இலாகாவில் நீ உத்தியோகம் பார்க்க வேண்டும். உன்னைப் போன்ற சாமர்த்தியசாலிகள் தற்போது அந்த இலாகாவில் இல்லாதபடியால் யு.ஜி.க்களைப் பிடிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள்!"
"யு.ஜி.க்கள் என்றால் என்ன?"
"யு.ஜி. என்றால் தெரியாதா? 'அண்டர் கிரௌண்ட்' என்று அர்த்தம். அதாவது பூமிக்கு அடியில் இருப்பவர்கள். போலீஸாரிடம் அகப்படாமல் மறைந்திருந்து புரட்சி வேலை செய்பவர்களுக்கு அந்தப் பட்டம் இப்போது வழங்கி வருகிறது. இந்தச் சாலைக்கு அடுத்த சாலையின் முனையில் சில போலீஸாரும் சி.ஐ.டி.காரர்களும் நின்று கொண்டிருப்பதை நான் வரும்போது பார்த்தேன். அவர்கள் யாரோ ஒரு யு.ஜி.யைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்."
"அப்படியா? ஒருவேளை.." என்று ஆரம்பித்த சித்ரா சட்டென்று நிறுத்தினாள்.
"ஒருவேளை என்ன?"
"ஒன்றுமில்லை; நீங்கள் வந்து அந்தப் பெண்ணைப் பார்த்துப் பேசுகிறீர்களா? அவள் இங்கே வருவதற்கே ரொம்பவும் தயங்கினாள். இந்த வீட்டு ஆண் பிள்ளை என்ன சொல்லுவாரோ என்னமோ என்று முணுமுணுத்தாள். 'அதெல்லாம் இந்த வீட்டில் ஆண்பிள்ளை ஒருவரும் இல்லை. ஒரு ஹஸ்பெண்டு தான் இருக்கிறார்!' என்று சமாதானம் சொல்லி அழைத்துக்கொண்டு வந்தேன். நீங்கள் அதைக் கொஞ்சம் உறுதிப்படுத்தினால் நல்லது. மேலே போகலாம் சற்று வருகிறீர்களா?"
"வேண்டாம், வேண்டாம்! அந்த அம்மாள் தான் என்னைக் கண்டதும் வாரிச் சுருட்டிக்கொண்டு மேலே போய்விட்டாளே! அவளை எதற்காக இப்போது தொந்தரவு செய்ய வேண்டும்?" என்றான் அமரநாத்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை; நான் வேண்டுமானால் மேலே போய்க் கேட்டுக்கொண்டு வருகிறேன்!" என்று சொல்லிக் கொண்டே சித்ரா மச்சுப் படிகளில் குதித்தேறிச் சென்றாள்.
அங்கே சீதாவிடம் போய்ச் சித்ரா தன் புருஷனை அழைத்து வரட்டுமா என்று கேட்டதும், "வேண்டாம், சித்ரா! இப்போது வேண்டாம்! நாளைக்கு ஆகட்டும்!" என்றாள் சீதா.
சித்ரா ஏமாற்றத்துடன், "ஏன் இப்படிச் சொல்கிறாய்" என்று கேட்டாள்.
"இன்றைக்கு மனது சரியாக இல்லை. லலிதாவின் கடிதத்தைப் படிப்பதற்காகக் கொடுத்தாய் அல்லவா? அதைப் படித்தபோது பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்தன. அதனால் மனது நிம்மதியை இழந்திருக்கிறது. உன்னுடைய கணவரிடம் நாளைக்குப் பேசுகிறேன்!" என்றாள் சீதா.
இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே கீழ்த் தட்டில் தடதடவென்று மனிதர்கள் பிரவேசிக்கும் சத்தம் கேட்டது. கால் பூட்ஸுகளின் சத்தம் அதிகமாயிருந்தது. இப்படித் தடபுடலாய் வருகிறவர்கள் யாராயிருக்கும் என்ற எண்ணத்துடன் சித்ரா மச்சுப் படிகளில் இறங்கி வந்தாள். பாதிப் படிகள் இறங்கியதும் கீழே போலீஸ்காரர்களும் சி.ஐ.டி.காரர்களுமாய் வந்து நிற்பதைப் பார்த்தாள். சித்ராவின் தலை கிறுகிறுவென்று சுழன்றது. மச்சுப்படிகளின் விளிம்புச் சட்டத்தைப் பிடித்துக் கொண்டு சமாளித்தாள்.
வந்திருந்தவர்களில் தலைவர் என்று காணப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அமரநாத்திடம் பின்வருமாறு சொல்லிக் கொண்டிருந்தார்:- "இந்த யு.ஜி. பெண்பிள்ளை மிகக் கெட்டிக்காரி; ஒரே ஆசாமி. சீதா என்றும் தாரிணி என்றும் இரண்டு பெயர்கள் வைத்துக்கொண்டு புது டில்லிப் போலீஸை ஏமாற்றி வந்திருக்கிறாள். இப்போதுதான் பாருங்களேன். அனாதை விடுதிக்கு நாங்கள் வரப்போகிறோம், என்று தெரிந்து கொண்டு அரைமணிக்கு முன்னால் உங்கள் மனைவியை ஏமாற்றி இவ்விடத்துக்கு அழைத்து வரச் செய்திருக்கிறாள்! நீங்கள் வரவேண்டும் என்று தான் இத்தனை நேரமும் தெரு முனையில் காத்துக்கொண்டிருந்தோம்."
இதற்கு அமரநாதன், "இன்ஸ்பெக்டர்! நீங்கள் ஏதோ ஒரு பெரிய தவறு செய்கிறீர்கள். இந்த ஸ்திரீ யு.ஜி. அல்ல; புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவளும் அல்ல!" என்றான்.
"உங்களுக்கு எப்படித் தெரியும் மிஸ்டர் அமரநாத்! எங்களிடம் வேண்டிய அத்தாட்சிகள் இருக்கின்றன. போட்டோப் படம் கூட இருக்கிறது!" என்றார் இன்ஸ்பெக்டர்.
பின்னர் காரியங்கள் வெகு துரிதமாக நடந்தன. அமரநாத் மேலே ஏறி வந்து மச்சுப் படியில் பாதி வழியில் நின்ற சித்ராவிடம் விஷயத்தைச் சொன்னான். அவள் ரொம்ப அங்கலாய்த்தாள் "இந்த அக்ரமத்தை நீங்கள் தடுக்க முடியாதா, உங்களுடைய செல்வாக்கு எங்கே போயிற்று? இந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் உங்களுக்கும் சினேகமாயிற்றே!" என்றாள்.
"போலீஸ்காரர்கள் விஷயம் உனக்குத் தெரியாது. அவர்களுக்கு 'டியூடி' என்று வந்து விட்டால் சிநேகிதர்களுமில்லை; பந்துக்களும் இல்லை. ஈவிரக்கம் கிடையாது. 'லாமிஸராப்ளே' கதையில் வருகிற போலீஸ்காரனை நினைவிருக்கிறதல்லவா? அந்த மாதிரிதான் அநேகமாக எல்லாப் போலீஸ்காரர்களும்! நம்மைச் சேர்த்துப் பிடிக்காமல் விடுகிறார்களே, அதுவே பெரிது. இப்போது உன் சிநேகிதியை அனுப்பி வைக்க வேண்டியதுதான். பின்னால் கூடுமான முயற்சியெல்லாம் செய்து பார்ப்போம். 'ஹேபியஸ் காப்பஸ்' வழக்கு வேண்டுமானாலும் நடத்துவோம்", என்றான் அமரநாத்.
சித்ரா கண்ணுங் கண்ணீருமாய் மேலே ஓடிப் போய்ச் சீதாவிடம் விஷயத்தைச் சொன்னாள்.
முதலில் விஷயம் அவ்வளவு தெளிவாக விளங்கவில்லை சீதாவுக்கு. நன்றாகப் புரியும்படி தெரிந்து கொண்டதும் சீதாவின் உள்ளத்திலிருந்து ஒரு பெரிய பாரம் நீங்கியது போலிருந்தது. என்ன செய்வது, எங்கே போவது என்கிற சங்கடமான பிரச்னைகள் எல்லாம் இனிமேல் இல்லை! கடவுளே பார்த்துத் தான் தனக்கு இத்தகைய சகாயத்தை அனுப்பியிருக்கிறார்? சிறைச்சாலைக்குள் போய் நிம்மதியாயிருக்கலாம். படிப்பும் அந்தஸ்தும் வாய்ந்த எத்தனையோ பெண்மணிகள் இப்போது சிறைச்சாலைகளில் பாதுகாப்புக் கைதிகளாயிருக்கிறார்கள் நாம் இருப்பதற்கு என்ன வந்தது?
குழந்தை வசந்தியை இப்போதைக்குப் பார்க்க முடியாது. அதுவும் ஒரு நல்லதற்குத்தான். குழந்தையைப் பார்த்து என்னத்தைச் சொல்வது! அப்பாவைப் பற்றிக் கேட்டால் என்ன பதில் கூறுவது? பேத்தியைப் பாட்டி நன்றாய்ப் பார்த்துக் கொள்வாள். கண்ணும் கருத்துமாக வளர்ப்பாள். அதுவே போதும். எப்படியாவது குழந்தை சௌக்கியமாய் இருந்தால் சரி. நல்ல காலம் பிறந்து கடவுள் கூட்டி வைக்கும்போது பார்த்துக் கொள்ளலாம்.
கொஞ்சம் கூடத் தயக்கமில்லாமல் சீதா கீழே இறங்கி வந்து போலீஸாரிடம் தன்னை ஒப்புக் கொடுத்தாள்.
போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அமரநாத், சீதா உயர் குடும்பப் பெண் என்றும், அவளை மரியாதையாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். போலீஸ் இன்ஸ்பெக்டர் அதற்கிணங்கி வாக்குக் கொடுத்தார்.
சீதா வீட்டைவிட்டுப் புறப்படும் தறுவாயில் சித்ரா கண்ணும் கண்ணீருமாக அவளைக் கட்டித் தழுவிக்கொண்டு, "சீதா! கவலைப்படாதே! நான் இவரைக் கொண்டு 'ஹேபியஸ் கார்பஸ்' வழக்குப் போடச் சொல்லி உன்னை விடுதலை செய்கிறேன். சீக்கிரம் திரும்பி வந்துவிடுவாய்!" என்றாள்.
"அப்படியெல்லாம் ஒன்றும் செய்ய வேண்டாம், சித்ரா! கடவுளே பார்த்து எனக்கு இந்தச் சகாயத்தைச் செய்திருக்கிறார். நீ என்னைப் பற்றிக் கவலைப் படாமலிரு!" என்றாள் சீதா.