அம்மா பாட்டியைப் பார்க்கப் போயிருந்தார்.
தாராவும் மினியும் அம்மாவுக்காகக் காத்திருந்தார்கள்.
‘இம்முறை அம்மா நமக்காக என்ன கொண்டுவருவார்?’ என்று அவர்கள் ஆவலோடு இருந்தனர்.
தெரு முழுவதும் தண்ணீர் பெருகி
ஓடியது. தாராவும் மினியும்
தங்கள் காகிதப் படகுகளை
மிதக்கவிடத் தொடங்கினர்.
பாம்! பாம்! ஒரு டாக்ஸி தெருமுனையில் வந்து நின்றது. அம்மா வந்துவிட்டார்!
“உங்களுக்கு இந்தப் படகு எப்போது கிடைத்தது?” என்று அம்மா கேட்டார். “தெரு முழுவதும் தண்ணீர் பெருகி ஓடியபோது!” என்றாள் மினி.
“தெருவில் ஏன் தண்ணீர் பெருகி ஓடியது?”
என்று அம்மா கேட்டார்.
“ஏனென்றால் நம் வீட்டில் தண்ணீருக்குப்
போதுமான இடம் இல்லை!” என்றாள் தாரா.
“நீங்கள் ஏன் வாளிகளை எடுத்துத் தண்ணீரைப் பிடிக்கவில்லை?” என்று அம்மா கேட்டார்.
“எங்களால் எப்படிப் பிடிக்க முடியும்? தண்ணீர், குழாயிலிருந்து பீறிட்டு அடித்ததே!” என்றாள் மினி.
“அது தெறித்துத் தரையைக் கழுவி விட்டபடி ஓடியது!” என்று தாராவும் சேர்ந்துகொண்டாள்.
“குழாய்...? அது எப்படி உடைந்தது?” என்று
கேட்டார் அம்மா.
“விரிசல்!” என்றாள் மினி.
“அப்பா குழாயைச் சரிசெய்வதற்காக
அதை அடித்தபோது!” என்றாள் தாரா.
“தண்ணீர் படியில் விழுந்தடித்து ஓடியது!”
என்றாள் தாரா.
“அது வீட்டிலிருந்து வெளியே ஓடி
தெருவையும் வெள்ளமாக்கிவிட்டது!”
அம்மா வீட்டுக்குள் ஓடினார். வேகமாக குளியலறையைத் திறந்துகொண்டு உள்ளே சென்றார். வீடு முழுவதும் தண்ணீர் விழுந்தோடும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது.
அம்மா தனது கருவிப்பெட்டியைத்(Tool Kit) திறந்தார்.
அதனுள் ஒரு சுத்தியல், குறடு, டேப், சில ஸ்க்ரூட்ரைவர்கள் போன்ற பல பொருட்கள் இருந்தன.
அம்மாவுக்கு எதைப் பயன்படுத்தவேண்டும் என்று தெரிந்திருந்தது.
அவர் குழாயை முடுக்கித் திருப்பினார். அடித்து வளைத்தார்.
முடிவாக, தண்ணீர் விழும் ஓசை நின்று அங்கே அமைதி நிலவியது.
தாராவும் மினியும், “எங்களுக்கு என்ன கொண்டுவந்தீர்கள்?”என்று கேட்டனர்.
அம்மா அவர்களுக்காக கருவிப் பெட்டிகளைக் கொண்டுவந்திருந்தார்.
“இவை உங்களுடையதைப் போலவே இருக்கின்றன, அம்மா!” என்றாள் மினி.
“இதை வைத்து நாங்கள் என்ன செய்யலாம்?” என்று கேட்டாள் தாரா.
“என்ன வேண்டுமானாலும் செய்யலாம்!” என்று அம்மா புன்னகைத்தார்.
“உங்கள் மிதிவண்டிகளைச் சரிசெய்யலாம், ராக்கெட் செய்து ஏவலாம் அல்லது… தண்ணீர் விழுந்தோடி தெருவை வெள்ளக்காடாக்குவதைத் தடுத்து நிறுத்தலாம்!” என்றார்.