anaya s thumb

அநாயாவின் கட்டைவிரல்

அநாயாவிற்கு அவளது கட்டைவிரல் ரொம்ப பிடிக்கும். மிருகக்காட்சி சாலைக்குப் போனபோது அங்கிருந்த குட்டி விலங்குகளுக்கு என்ன பிடிக்கும் என்று அவள் அறிந்து கொண்டாள்.

- Abhinav Banerjee

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இந்த உலகத்தில் அநாயாவிற்கு ரொம்ப பிடித்த  விஷயம் அவளுடைய கட்டைவிரல். உருளையான, கெட்டியான, எச்சிலில் ஊறிய கட்டைவிரலை வாயில் போட்டுக்கொள்ளும்போது  இன்னும் அதிகமாகப் பிடிக்கும். எப்போதுமே அவளது  கட்டைவிரல் அவள் வாயில் இருக்கும் - படுக்கும்போது விரலை சூப்புவாள். வகுப்பறையில் சூப்புவாள்.  ஊஞ்சலில் ஆடும்போது சூப்புவாள். எல்லா நேரமும்   சூப்பிக்கொண்டே இருப்பாள்.

அவளது பெற்றோருக்கோ இந்தப் பழக்கம் பிடிக்கவே பிடிக்காது. ‘உன் கட்டைவிரல் நாறுகிறது; சூப்புவதை நிறுத்து; விரலை சூப்பாதே!’ என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

இன்றைக்கு அநாயா மிருகக்காட்சி சாலையில் இருக்கிறாள். அவள் அம்மாவும் அப்பாவும் அவளது கட்டைவிரலைப் பார்க்கவில்லை. மிருகக்காட்சி சாலையில் இருக்கும் பல்வேறு விலங்குகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அநாயா ஒரு யானையைப் பார்த்தாள். அதோ ஒரு யானைக்குட்டி!அது தன் அம்மாவுடன் தண்ணீரை வாரி இறைத்துக் கொண்டிருக்கவில்லை; அப்பாவுடன் சேர்ந்து பிளிறவில்லை. தன் நண்பர்களுடன் சேர்ந்து வாழைப்பழங்களைத் தின்று கொண்டிருக்கவில்லை.பின்னே என்ன செய்து கொண்டிருக்கிறது? தன் துதிக்கையை சூப்பிக்கொண்டிருக்கிறது! ‘சக், சக்!’

கொஞ்ச தூரத்தில் சில மான்கள் இருந்தன. அதில் ஒரு குட்டி மானைப் பார்த்தாள் அநாயா.அது தன் அம்மாவுடன் புல்லை மேய்ந்து கொண்டிருக்கவில்லை; தன் அப்பாவைப் போல மற்ற விலங்குகளைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை; தன் சிநேகிதர்களுடன் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கவில்லை. பின்னே அது என்ன செய்து கொண்டிருக்கிறது? அதனுடைய கால் குளம்பை சூப்பிக் கொண்டிருந்தது! ‘சக்,சக்!’

அடுத்து குரங்குகள் கூப்பிட்டன. அங்கு ஒரு குட்டிக் குரங்கு  இருந்தது. அநாயா பார்த்தபோது  அது தன் அம்மாவுடன் ஒட்டிக் கொண்டு இல்லை. தன்அப்பாவுடன் கோமாளி விளையாட்டுவிளையாடிக்கொண்டு இல்லை. சிநேகிதர்களுடன் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிக்கொண்டு இல்லை. பின்னே என்ன செய்து கொண்டிருந்தது? அது தன் கட்டைவிரலை சூப்பிக் கொண்டிருந்தது! ‘சக், சக்!’

அநாயா ஒரு நீர்யானையைப் பார்த்தாள். அதன் குட்டி தன் அம்மாவைப் போல வாயைத் திறந்து கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கவில்லை. தன் அப்பாவைப்போல ‘குர்,குர்’ என்று உறுமிக் கொண்டிருக்கவில்லை. தன் நண்பர்களுடன் நீந்திக் கொண்டிருக்க வில்லை. பின்னே என்ன செய்து கொண்டிருந்தது? தன் உதடுகளை சூப்பிக் கொண்டிருந்தது! ‘சக், சக்!’

புலிகள் உறுமியபடியே அநாயாவை வரவேற்றன. அதோ ஒரு குட்டிப் புலி! அது தன் அம்மாவுடன் சேர்ந்து  குட்டித் தூக்கம் போடவில்லை. அப்பாவுடன் சேர்ந்து ஈக்களை தன் வாலால் விரட்டிக் கொண்டிருக்கவில்லை. தன் நண்பர்களுடன் சேர்ந்து பதுங்கிக் கொண்டிருக்கவில்லை. பின்னே புலிக்குட்டி என்ன செய்து கொண்டிருந்தது? தன் வாலை வாயில் போட்டு சூப்பிக் கொண்டிருந்தது.

அநாயா ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு இந்த குட்டி விலங்குகள் ஏன் வேடிக்கை, விளையாட்டுக்களை மறந்துவிட்டன என்று யோசித்தாள்.  தன்னைச் சுற்றியிருந்தவர்களைப் பார்த்தாள். ஒரு சின்னப்பையன் தன் அப்பாவின் தோள்மேல் ஏறிக்கொண்டு கையை அசைத்துக் கொண்டிருந்தான். இன்னொரு பையன் பஞ்சு மிட்டாயையும், ஜூஸ் கேனையும் எடுத்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தான்.

ஒரு பெண் கேமராவை வைத்துக் கொண்டு 'க்ளிக், க்ளிக்' என்று போட்டோக்கள் எடுத்துக் கொண்டிருந்தாள். ஒரு குழந்தை கையில் கிலுகிலுப்பையை வைத்துக் கொண்டு ஆட்டிக் கொண்டிருந்தது. எல்லாக் குழந்தைகளும் குதிப்பும், கும்மாளமுமாக இருந்தனர். அநாயா தன்னைக் குனிந்துப் பார்த்தாள். அவளுடைய கை மடங்கி இருந்தது. அவளுடைய கட்டைவிரல் வாய்க்குள் இருந்தது. இந்தக் கட்டைவிரலை வேறு எதற்காவது சிறப்பாகப்  பயன்படுத்த முடியுமா?

அநாயா தன் கட்டைவிரலைவாயிலிருந்து  எடுத்தாள். ஓடிப் போய் தன் அம்மா அப்பாவின் நடுவில் போய் நின்றாள். அவர்கள் இருவருடைய கைகளையும் பிடித்துக் கொண்டாள்.‘ஒண்ணு – ரெண்டு –மூணு!’ என்று எண்ணியபடியே மேலே எழும்பினாள்.காற்றில் ஊஞ்சலாட ஆரம்பித்தாள்.

'உய்ய்ய்!'

அவள் செய்வதை மேலிருந்து பார்த்தக் கொண்டிருந்த  குரங்குக் குட்டியும் அவளைப் போலவே செய்தது!