1960-க்கும் 75-க்கும் இடைப்பட்ட காலத்தில் சமஸ்தானங்களாக முன்பு இருந்த பழைமையான ஊர்கள், பழைமையான குடும்பங்கள் பிரதேசங்களைக் கவனித்த போது இந்தக் கதை என் மனதில் உருவாகத் தொடங்கியது. ‘கற்சுவர்கள்’ என்ற தலைப்பை ‘ஸிம்பாலிக்’ ஆகக் கொடுத்திருக்கின்றேன். முதலில் இதை ஒரு சிறுகதையாக எழுதினேன். கதைக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
ராஜமான்யம், சமஸ்தான அந்தஸ்து, எல்லாம் பறி போன பிறகு ‘அரச குடும்பம்’ - என்ற அர்த்தமில்லாத - ஆனால் வெறும் வழக்கமாகிப் போய்விட்ட ஒரு பழைய பெயரை வைத்துக் கொண்டு இப்படிக் குடும்பங்கள் பெரிய கால வழுவாகச் (Anachronism) சிரமப்பட்டிருக்கின்றன.
பழைய பணச் செழிப்பான காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட பழக்க வழக்கங்களைப் புதிய பண நெருக்கடிக் காலத்தில் விட முடியாமல் திணறிய சமஸ்தானங்கள், குதிரைப் பந்தயம், குடி, சூதாட்டம், பெண்கள் நட்புக்காகச் சொத்துக்களைப் படிப்படியாக விற்ற சமஸ்தானங்கள், கிடைத்த ராஜமான்யத் தொகையில் எஸ்டேட்டுகள் வாங்கியும், சினிமாப் படம் எடுத்தும், தொழில் நிறுவனங்கள் தொடங்கியும், ரேஸ் குதிரைகள் வளர்த்தும் புதிதாகப் பிழைக்கக் கற்றுக் கொண்ட கெட்டிக்காரச் சமஸ்தானங்கள், என்று விதம் விதமான சமஸ்தானங்களையும் அவற்றை ஆண்ட குடும்பங்களையும் பல ஆண்டுகளாகக் கூர்ந்து நோக்கியிருக்கிறேன். அழகான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆனால் மூடி தொலைந்து போன ஒரு பழைய காலி ஒயின் பாட்டிலைப் போல் இப்படிச் சமஸ்தானங்கள் - இன்று எனக்குத் தோன்றின. காலி பாட்டிலுக்குப் - பெருங்காய டப்பாவுக்குப் பழம் பெருமைதான் மீதமிருக்கும். ஒவ்வொரு சமஸ்தானத்திலும் முன்பு சேர்ந்துவிட்ட பலதுறை வேலை ஆட்களை இன்று கணக்குத் தீர்த்து அனுப்புகிற போது எத்தனையோ மனவுணர்ச்சிப் பிரச்னைகள், ஸெண்டிமெண்டுகள் எல்லாம் ஏற்பட்டிருக்கின்றன. ஊதாரித்தனங்களையும், ஊழல் மயமான செலவினங்களையும் விடவும் முடியாமல், வைத்துக் கொள்ளவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்திருக்கிறார்கள் சமஸ்தானமாக இருந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்த நாவலில் மேற்படி பிரச்னைகள் அனைத்தையும் இணைத்துக் கதாபாத்திரங்கள் வருகிறார்கள். கதை நிகழ்கிறது. டம்பத்துக்கும் ஜம்பங்களுக்கும் ஊழலுக்கும், ஊதாரித்தனத்துக்கும் இருப்பிடமான ஒரு பழந் தலைமுறைக் கதாபாத்திரமும் வருகிறது. பரந்த நல்லெண்ணமும் முற்போக்குச் சிந்தனையும் உள்ள புதிய தலைமுறைக் கதாபாத்திரமும் வருகிறது. சமஸ்தானமாக இருந்த குடும்பங்களிலேயே ‘ஜெனரேஷன் கேப்’ எப்படி எல்லாம் இருந்தது என்பதைக் காண்பிக்கிற நிகழ்ச்சிகள் கதையில் இடம் பெறுகின்றன.
கதையின் தொடக்கத்திலேயே இறந்து போகிற பெரிய ராஜா தாம் செய்துவிட்டுச் சென்ற செயல்கள் மூலமாகக் கதை முடிவு வரை ஒரு கதாபாத்திரமாக நினைவுக்கு வருகிறார். ஒரு தலைமுறையில் அழிவும் மற்றொரு தலைமுறையின் ஆரம்பமும் நாவலில் வருகிறது. மனப்பான்மை மாறுதல்கள் கதாபாத்திரங்கள் மூலமாகவே புலப்படுத்தப்பட்டுள்ளன. மனப்பான்மை முரண்டுகளையும் கதாபாத்திரங்களே காட்டுகிறார்கள்.
ஒவ்வொரு சமஸ்தானமும் ஒரு பெரிய ‘எஸ்டாபிளிஷ்மெண்ட்’ ஆக இருந்திருக்கிறது. ‘எஸ்டாபிளிஷ்மெண்ட்’ - அழியும் போது - அல்லது சிதறும் போது ஏற்படும் குழப்பங்கள் - மனிதர்கள் சம்பந்தமான பிரச்னைகள், புலம்பல்கள், கழிவிரக்கங்கள் எல்லாம் இந்தக் கதையில் வருகின்றன.
இந்நாவல் புதிய இந்திய சமூக அமைப்பில் - ராஜமான்ய ஒழிப்பு அவசியமே என்று நியாயப்படுத்தும் ஒரு கதையை வழங்குகிறது. ஒரு கதையோடு சேர்த்து நிரூபணமாகிற தத்துவங்கள் வலுப்படும் என்பது உறுதி. சமஸ்தான ஒழிப்பு, ராஜமான்ய நிறுத்தம் ஆகிய கடந்த பத்துப் பதினைந்தாண்டுக்காலப் பிரச்னைகள் - முற்போக்கான சமூக அமைப்புக்குத் தேவையான விதத்தில் இதில் பார்க்கப்படுகிறது என்பதுதான் முக்கியம். கதையில் வரும் ‘பீமநாதபுரம் சமஸ்தானம்’ - இதை விளக்குவதற்கான ஒரு கற்பனைக் களமே.
இதை முதலில் நாவலாக வேண்டி வெளியிட்ட மலேயா தமிழ் நேசன் தினசரியின் வாரப் பதிப்பிற்கும் இப்போது சிறந்த முறையில் புத்தக வடிவில் வெளியிடும் சென்னை தமிழ்ப் புத்தகாலயத்தாருக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நா.பார்த்தசாரதி தீபம், 21-9-76
அப்போது இரவு ஒன்பது மணிக்கு மேல் இராது. அந்தக் கல்லூரி விடுதி லவுஞ்சில் ஒரே கலகலப்பு.
“என்னடீ! எல்லோரும் படிக்கிறீர்களா அல்லது ஊர் வம்பு பேசி அரட்டை அடிச்சிக்கிட்டிருக்கீங்களா? ‘எக்ஸாம்’ நெருங்கி வருது, ஞாபகமில்லையா?” மாடி... வராந்தாவின் கோடியில் வார்டன் மாலதி சந்திரசேகரனின் குரலைக் கேட்டதும் ஹாஸ்டல் லவுஞ்சில் கூட்டமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த மாணவிகள் பட்டுப் பூச்சிகள் கலைவது போல் கலைந்து பரபரப்பாக அவரவர்கள் அறைக்குள் விரைந்தனர். மாலைத் தினசரிகளும், சினிமா இதழ்களும், வாரப் பத்திரிகைகளும் அவசர அவசரமாக மறைக்கப்பட்டன. அரட்டையும் கிண்டலும், சிரிப்பும் ஓய்ந்து அங்கே ஒரு ஸீரியஸ்நெஸ் வந்தது.
பாடப்புத்தகங்களும், வகுப்பு நோட்டுப் புத்தகங்களும் தேடப்பட்டுப் பிரித்து மேஜை மேல் வைக்கப்பட்டன. ரேடியோ ஒலி கேட்டுக் கொண்டிருந்த அறைகளில் பட்டென்று ஆஃப் செய்யப்படும் ஓசை வந்தது. சிலர் வார்டன் அம்மாளுக்குக் காது கேட்க வேண்டும் என்பதற்காக இரைந்து சத்தம் போட்டே படிக்கத் தொடங்கினார்கள். அதுவரை இருண்டிருந்த அறைகளில் கூட பளீரென்று விளக்கு வெளிச்சம் பாய்ந்தது. வராந்தா வெறிச்சோடியது.
செயற்கையாக ஏற்றப்பட்ட இந்தச் சுறுசுறுப்பும் தீவிரமும் எல்லாம் பத்து நிமிஷம் கூட நீடிக்கவில்லை. வார்டன் அம்மாள் மாடியில் இருந்து படியிறங்கிக் கீழே உள்ள விடுதியின் பிற்பகுதிகளையும் எதிர்புறம் இருந்த நியூ ஹாஸ்டல் பகுதியையும், கண்காணிப்பதற்காகச் சென்ற போது மறுபடியும் மேலே மாடி வராந்தா லவுஞ்சில் பெண்கள் கூட்டம் கூடியது. ஒரு பெண் கையிலிருந்த மாலைத் தினசரியைப் படிக்கலானாள்:
“ஏய் பத்மா! உனக்காகத்தான் படிக்கிறேன் கேளு! ஒரு நாடகக் கம்பெனிக்கு மாலை நேரங்களில் மட்டும் நடிக்கக் கூடிய நடிகைகள் தேவையாம். பாலன் நாடகக் குழு, சென்னை. புதுமுகங்கள் தேவை. எங்களுடைய நாடகக் குழுவின் சமூக, சரித்திர - புராண நாடகங்களில் கதாநாயகி வேஷம் முதல் உப பாத்திரங்கள் வரை வேஷம் ஏற்று நடிக்கப் பெண்கள் தேவை. படிப்புக்கு இடையூறு இல்லாமல் மாலை நேரங்களிலே நடித்துப் பணம் சம்பாதிக்கலாம். புகைப்படத்துடன் விண்ணப்பிக்கவும். கல்லூரி மாணவிகளாயிருந்தால் விசேஷ சலுகையுடன் அவர்களின் விண்ணப்பங்கள் கவனிக்கப்படும்.
உடனே அங்கே கூடியிருந்தவர்களில் ஒருத்தியைத் தவிர மற்றப் பெண்கள் எல்லோரும் தினசரிப் பேப்பரைக் கையில் வைத்து வாசித்துக் கொண்டிருந்தவளைச் சூழ்ந்து மொய்த்தார்கள். அவர்கள் மூலைக்கு ஒருவராக இழுத்த இழுப்பில் பேப்பர் ஒவ்வொருவர் கைக்கும் கொஞ்சமாகக் கிழிந்து துண்டு துண்டாகப் போய்விடும் போலிருந்தது. அந்த நேரத்திலும் பேப்பரைச் சுற்றிச் சூழ்ந்திருந்தவர்களில் ஒருத்தி,
“அதோ சுமதியைப் பாருடீ! எதையோ பறி கொடுத்தவளைப் போல உட்கார்ந்திருக்கா” என்று, விலகி அமைதியாக உட்கார்ந்திருந்தவளைச் சுட்டிக் காட்டி மற்றவர்களிடம் கூறத் தவறவில்லை. உடனே அவர்களில் ஒருத்தி சுமதி என்கிற அந்தப் பெண்ணருகே ஓடிச் சென்று,
“என்னடி சுமதீ? ஏன் என்னவோ போலிருக்கே? தலைவலியா?” என்று ஆதரவாகக் கேட்டாள். “ஒண்ணுமில்லே. எனக்குத் தூக்கம் வருது! நான் ரூமுக்குப் போறேன்” என்று உடனே எழுந்து போய்விட்டாள் சுமதி என்று அழைக்கப்பட்ட அழகான அந்தப் பெண்.
அவளுடைய ரூம் மேட், சொந்த சகோதரனின் திருமணத்துக்காக மூன்று நாள் லீவு எடுத்துக் கொண்டு கோவை போயிருந்ததனால் அறையில் அவள் மட்டுமே தனியாக இருந்தாள். அதற்காக அவள் பயப்படவில்லை. அதை அவள் விரும்பினாள் என்று கூடச் சொல்லலாம். தனிமை, கனவு காணும் வசதியைத் தருவது போல் வேறெதுவும் தருவதில்லை. அறைக்குச் சென்ற சுமதி பாத்ரூமுக்குள் போய் விளக்கைப் போட்டுக் கொண்டு வாஷ்பேஸினுக்கு மேலிருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். சிநேகிதிகள் எல்லாம் அடிக்கடிச் சொல்லி வியக்கும் தன் அழகைப் பற்றிய பெருமிதத்தைத் தனக்கே உறுதிப்படுத்திக் கொள்வது போல் கண்ணாடியில் அவள் முகம் களை கொஞ்சியது.
தன் முகத்தைத் தானே நேருக்கு நேர் கண்ணாடியில் பார்த்துப் பெருமைப்பட்டுக் கொண்டவள், உடன் நிகழ்ச்சியாகச் சற்று முன் மாலைத் தினசரியிலிருந்து தோழிகள் படித்த விளம்பரத்தையும் நினைவு கூர்ந்தாள். ஏனோ அவளே மறக்க முயன்றும் அந்த விளம்பரம் அவளுக்குத் திரும்பத் திரும்ப நினைவு வந்து கொண்டிருந்தது. தூங்குவதற்கு முன் வழக்கம் போல் ஃபிரஷ்ஷை எடுத்துப் பற்பசையை அளவாக அதன் மேல் வழிய விட்டுத் தேய்த்த போது கண்ணாடியில் தெரிந்த முல்லை அரும்பு போன்ற பற்கள் அவளைக் கர்வப்பட வைத்தன. அவளுடைய முக விலாசத்துக்கும், புன்னகைக்கும் யாருமே சுலபமாக மயங்கி வசப்பட்டு விடுவார்கள் என்று தோழிகள் எல்லாம் தங்களுக்குள்ளும் சில வேளைகளில் அவள் காது கேட்கவுமே பேசிக் கொண்டார்கள். இளமையாகவும் கவர்ச்சியாகவும் இருந்த சிலர் புதிய இந்தி சினிமா நட்சத்திரங்களோடு அவளை ஒப்பிட்டுப் பரிகாசம் செய்த தோழிகளும் உண்டு.
எல்லாரிடமும் கடுவன் பூனையாக நடந்து கொள்ளும் ஹாஸ்டல் வார்டன் மாலதி அம்மாள் கூட அவளிடம் சிரித்துக் குழைந்து பேசுவாள். இதைப் போல் பலவற்றை நேரில் பார்த்தும் கேள்விப்பட்டும் தான் அவளுடைய முகராசியைப் பற்றித் தோழிகள் பேசிக் கொள்ளத் தொடங்கியிருந்தனர். சென்ற ஆண்டின் இறுதியில் கல்லூரி விடுதி நாள் கொண்டாட்டத்தின் போது முழுவதும் மாணவிகளே நடித்த ‘சகுந்தலை’ நாடகம் நிகழ்ந்த போது பிரதம விருந்தினராகப் பிரபல நடிகர் ஒருவர் வந்திருந்தார். சுமதி தான் சகுந்தலையாக நடித்திருந்தாள். நாடக முடிவில் அந்த நடிகர் நாடகத்தைப் பாராட்டிப் பேசும் போது, “சகுந்தலையாக நடித்த குமாரி சுமதி காவியத்தில் காளிதாசன் படைத்த சகுந்தலையை விட அழகாயிருக்கிறார். அவருடைய தோற்றத்தையும் நடிப்பையும், எவ்வளவு பாராட்டினாலும் தகும்” என்று சிறிது தாராளமாகவே அவளைப் பாராட்டிப் பேசியிருந்தார்.
இவை எல்லாம் சேர்ந்து அவளுள் ஒரு கனவையே உருவாக்கியிருந்தன. தான் நடித்துப் புகழ் பெறப் பிறந்தவள் என்ற எண்ணம் அவளுள் உறுதிப்படத் தொடங்கியிருந்தது. கர்வம் அவளை மற்ற மாணவிகளிலிருந்து தனியே பிரித்தது. எல்லாரும் கலகலப்பாகப் பேசும்போது அவள் அவர்களோடு சகஜமாகப் பேசாமலிருப்பதும் எல்லாரும் மௌனமாக எதிலாவது ஈடுபட்டிருக்கும் போது அவள் கலகலப்பாகப் பேசி அனைவர் கவனத்தையும் கவர்வதுமாகத் தனக்குத் தானே ஒரு புது இயல்பையே உருவாக்கிக் கொண்டிருந்தாள். அவள் தான், மற்ற பெண்களை விட அழகானவள், உயர்ந்தவள் என்று தனக்குத் தானே வலிந்து ஓர் அந்தஸ்தைப் புரிந்து கொண்டதன் காரணமாக ஏற்பட்ட இனிய ஆணவம் - அது தொடர்பாக அவளைப் பல கனவுகள் காண வைத்திருந்தது.
அந்தப் பெண்கள் கல்லூரியின் விடுதி நாள் கொண்டாட்ட நாடகத்தில் சுமதியின் நடிப்பைப் பாராட்டி பிரபல நடிகர் பேசிய பேச்சு வேறு ‘நடிகர் பாராட்டிய மாணவி’ என்ற தலைப்பில் ஒரு பிரபல வாரப் பத்திரிகையில் துணுக்காக அவள் படத்துடன் அச்சாகிவிட்டது. அதனால் அவள் மகிழ்ச்சி பல மடங்காகி இருந்தது. கர்வத்தைக் கூடச் சுமதி புது மாதிரியாகக் கொண்டாடினாள். பலர், கர்வம் வந்தால் அடக்கத்தையே இழந்து விடுவார்கள். அவளோ கர்வத்தினால் தன்னிடம் புதுப் புது அடக்கங்களை வளர்த்துக் கொண்டிருந்தாள். ஒவ்வோர் அடக்கமும் அவளை உள்ளூர அடங்காப் பிடாரி ஆக்கிக் கொண்டிருந்தன. ஒவ்வோர் பணிவும் அவள் மனத்தைப் பணியவிடாமல் செய்து கொண்டிருந்தன. எல்லாரைக் காட்டிலும் எல்லா விதங்களிலும் தன்னை உயர்ந்தவளாகப் பாவித்துக் கொள்ளத் தொடங்கினாள் அவள். அதை அடிப்படையாக வைத்தே அவளுடைய கற்பனைகள் வளர்ந்திருந்தன. கனவுகள் பெருகித் தொடர்ந்து கொண்டிருந்தன.
தன்னையும் தன் அழகையும் விடுதி நாள் விழாவில் பாராட்டிப் பேசிய அந்தப் பிரபல நடிகருக்கு ஃபோன் செய்து பேசுவதற்குக் கூட இரண்டொரு தடவை அவள் முயன்று, அது முடியாமல் போயிருக்கிறது. அப்புறம் நேரிலேயே தேடிப் போயும் அது அவள் நினைத்தபடி நடக்கவில்லை.
“எப்படியாவது எதிலாவது எனக்கு நடிப்பதற்கு ஒரு சான்ஸ் வாங்கிக் கொடுங்கள்” என்று அந்த நடிகரிடம் கேட்பதற்காகத்தான் கூச்சத்தையும் பயத்தையும் விட்டு விட்டு அவள் அந்த நடிகரைத் தேடி நேரில் போனாள். ஆனால் அவரைச் சந்திப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமாயில்லை. சில சினிமாப் பத்திரிகைகளில் ‘எப்படி நடித்து முன்னுக்கு வந்தேன்?’ என்ற தலைப்பின் கீழ்ப் பெரிய நடிகைகள் எழுதிய தொடர் கட்டுரைகளை படித்திருந்தாள். அதில் அவர்கள் முன்னுக்கு வர எப்படி எப்படி சிரமப்பட வேண்டியிருந்தது, எதை எதை இழக்க வேண்டியிருந்தது என்றெல்லாம் தெரிந்திருந்தது. அதனால் சுமதிக்கும் இலைமறை காயாகச் சில விஷயங்கள் புரிந்திருந்தன.
எப்படியோ படிப்பில் மெல்ல அக்கறை போய், நடிக்க வேண்டும், புகழ் பெற வேண்டும். பல லட்சம் இளைஞர்கள் தன்னை எண்ணி ஏங்கித் தவிக்கச் செய்ய வேண்டும் என்பதில் அவளுக்கு ஆசை வந்து விட்டது. ஒரு நிலையில் அது ஏக்கமாகவும் மாறிவிட்டது.
சுமதி குளியலறையிலிருந்து வெளியே வந்து அறைக்குள் அமர்ந்து கைக்குக் கிடைத்த ஒரு சினிமாப் பத்திரிகையை எடுத்துப் புரட்டினாள். அவளுக்கு ஏக்கப் பெருமூச்சு வந்தது.
கையில் எடுத்துப் பிரித்த பத்திரிகையில் “எனக்கு வரும் இரசிகர் கடிதங்களுக்குப் பதில் போடவும் ஆட்டோ கிராப் போடவுமே நேரம் இருப்பதில்லை. அதற்காக மாதம் ஐநூறு ரூபாய் சம்பளத்தில் இரண்டு காரியதரிசிகளையே தனியாக நியமித்து விட்டேன்” என்று ஓர் இளம் நடிகை பேட்டியில் சொல்லியிருந்தது அவள் பிரித்த பக்கத்தில் வந்திருந்தது.
சுமதியின் கனத்த நெஞ்சகங்கள் மேலெழுந்து விம்மித் தணிந்தன. ‘நான் இவ்வளவு பிரபலமாகும் போது எனக்கு வரும் கடிதங்களைக் கவனித்துப் பதில் போட வேண்டியிருக்கும்’ என்று தனக்குத் தானே சொல்லி - அப்படிச் செயற்கையாகச் சொல்லிக் கொள்வதில் கிடைக்கும் கற்பனைச் சந்தோஷத்தில் பூரித்தாள் அவள். பத்திரிகையில் வந்திருந்த அந்த நடிகையின் அழகையும் தன் அழகையும் ஒப்பிட்டு, தான் பல மடங்கு மேலானவள் என்று முடிவு செய்து கொண்டாள் அவள். சமீபகாலமாக இப்படி எல்லாம் பைத்தியக்காரத்தனமாக ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் ஓர் இயல்பு அவளுக்கு வந்திருந்தது. ஹாஸ்டல் விழாவின் போது அவளை வானளாவத் தூக்கி வைத்துப் புகழ்ந்துவிட்டுப் போன அந்தப் பிரபல நடிகர் அவளுள் இந்த இயல்பை வளர்த்து விட்டுப் போயிருந்தார்.
பல ஏக்கப் பெருமூச்சுகளுக்குப் பின் மேஜை மேலிருந்த அலாரம் டைம்பீஸில் மணி பார்த்தாள் சுமதி. மணி பத்தரை. சில அறைகளில் விளக்கொளி... சில அறைகளில் படிக்கும் முணுமுணுப்பு சப்தம், தவிர ஹாஸ்டல் வராந்தாவும், லவுஞ்சும் ஆளரவமற்று அமைதியாயிருந்தன. மாணவிகளில் ஒவ்வொருத்தியும் ஒரு கேரக்டர். சின்ன வயசிலிருந்து இரைந்து படித்தே பழக்கமுள்ள சிலருக்கு வாய்விட்டுப் படித்தால் தான் படித்தது போலிருக்கும். ‘ரெண்டோண் ரெண்டு’ என்று வாய்ப்பாடு மனப்பாடம் பண்ணிய ஆரம்பப்பள்ளி நாட்களின் பழக்கமே கல்லூரி விடுதிக்கு வந்த நாளிலும் சில பெண்களிடம் நீடித்தது. லவுஞ்சிலுள்ள மேஜையில் தான் மாலைத் தினசரிகளும் பேப்பர்களும் கிடக்கும் என்பது சுமதிக்கு நன்றாகத் தெரியும்.
மாணவிகளில் பலர் ‘மாலைப் பேப்பர் வாங்கப் போகிறேன்’ என்று விடுதியை விட்டு வெளியேறியதைத் தடுக்கவும், விடுதி கேட்டில் காவல் காக்கும் வாட்ச்மேன், பியூன் மூலம் காசு கொடுத்துப் பேப்பர் வாங்கச் சொல்லி அதனால் மூளும் தகராறுகளைத் தவிர்க்கவும் வார்டன் அம்மாள் விடுதி லவுஞ்சிலேயே காலை, மாலைப் பேப்பர்களை மாணவிகள் படிப்பதற்கு நேரம் வரையறுக்கப்பட்டிருந்தது. பேப்பர்களை யாரும் அறைகளுக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்ற நிபந்தனையும், எல்லா நேரமும் படிப்பை விட்டுவிட்டு அங்கேயே சுற்றக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தன.
அங்கு சிறிது நேரத்திற்கு முன் சக மாணவிகள் கூட்டமாகக் கூடி அந்தப் ‘புதுமுகம் தேவை’ என்ற விளம்பரத்தைப் படித்த போது அதில் தனக்கு அக்கறையே இல்லாதது போல் ஒதுங்கி விலகி உட்கார்ந்திருந்த சுமதி இப்போது பூனை போல் ஓசைப்படாமல் அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தால். வார்டனின் விதியையும் மீறி அங்கே லவுஞ்சில் கிடந்த அந்தத் தினசரியை மங்கலான வெளிச்சத்திலும் தவறாமல் அடையாளம் கண்டு எடுத்துக் கொண்டு அறைக்குத் திரும்பச் சென்று கதவைத் தாழிட்டாள். தான் வெளியே சென்றது, பேப்பரை லவுஞ்சிலிருந்து எடுத்தது, அறைக்குத் திரும்பியது எதுவும் யாராலும் பார்க்கப் படவில்லை என்று உறுதி செய்து கொண்டு அறையின் விளக்கைப் போட்டாள். பின்பு நிதானமாக அந்தத் தினசரியில் அந்தப் பக்கத்தைத் தேடிப் பிடித்துப் ‘புது முகங்கள் தேவை’ என்ற விளம்பரத்தைப் படிக்கத் தொடங்கினாள்.
வெளியே பலருக்கு முன், உண்ணக் கூச்சப்பட்ட மிகவும் பிடித்தமான தின்பண்டம் ஒன்றை இரகசியமாக அறைக்கு வாங்கி வந்து விரும்பிய அளவு விரும்பிய விதத்தில் ருசித்துச் சாப்பிடுவது போல் அப்போது அவள் இருந்தாள். அந்த விளம்பரத்தை ஒவ்வொரு வாக்கியமாக ஒருமுறை, இருமுறை, மும்முறை, ஏன்? திரும்பத் திரும்ப அலுப்புத் தட்டும் வரை படித்தாள் அவள்.
‘கல்லூரி மாணவிகளாயிருந்தால் அவர்களின் விண்ணப்பங்கள் விசேஷ சலுகையுடன் கவனிக்கப்படும்’ என்ற ஒரு வாக்கியத்தை அப்படியே அடிக்கோடிட்டுப் பார்க்க வேண்டும் போலிருந்தது. விளம்பரத்தின் கீழே இருந்த விலாசத்தைப் பார்த்தாள். ஒரு தபால் பெட்டி எண்ணும், ஆற்காடு ரோடு, கோடம்பாக்கம் - என்ற விவரமும் மட்டுமே இருந்தன. விளம்பரத்தின் மேற்பகுதியில் டெலிபோன் எண் கொடுக்கப்பட்டிருந்தது. அதைத் தவிரக் கதவு எண் எதுவும் இல்லை.
சுமதி தன்னுடைய விண்ணப்பத்தை எழுதத் தொடங்கும் போது இரவு பதினொரு மணி ஐந்து நிமிஷம் ஆகி இருந்தது. செயலை மிஞ்சிய அதிகமான ஆர்வம் யாருக்கு எப்போது எதில் இருந்தாலும் அதை ஒழுங்காகச் செய்ய முடியாது. ஆர்வம் தணிந்து சமனப்பட்டுச் செயலுக்கான நிதானம் வருகிற வரை எல்லாமே தாறுமாறாகவும் தான் முடியும். சுமதியும் அந்த நிலையில் தான் அப்போது இருந்தாள். அவளால் முதலில் நாலைந்து தாள்களை மாற்றி மாற்றி எழுதிக் கிழித்துப் போடத்தான் முடிந்தது. எதுவுமே சரியாக வரவில்லை, என்பது அதை எழுதி முடித்த பின்பே தெரிந்தது. விண்ணப்பத்தோடு தன் புகைப்படம் ஒன்றையும் இணைத்தாள் அவள். கடைசியாகப் பன்னிரண்டேகால் மணிக்கு ஒரு விண்ணப்பத்தை முழுமையாக எழுதி முடித்தாள் அவள். தன்னுடைய கல்லூரி ஹாஸ்டல் நாள் விழாவில் தான் சகுந்தலையாக நடித்ததைப் பிரபல நடிகர் பாராட்டியதையும் அவள் அந்த விண்ணப்பத்தில் குறித்திருந்தாள். அதைப் பற்றித் தன் படத்துடன் வாரப் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்த துணுக்கின் ‘கட்டிங்’கையும் விண்ணப்பத்தோடு இணைத்திருந்தாள். பின்பு ஞாபகமாக வராந்த லவுஞ்சிலிருந்து எடுத்துக் கொண்டு வந்திருந்த தினசரிகளை அங்கேயே திருப்பிக் கொண்டு போய்ப் போட்டு விட்டு வந்தாள்.
எழுதிய விண்ணப்பத்தை உறையிலிட்டு விலாசம் எழுதி வைத்த பின்பும் சுமதிக்கு உறக்கம் வரவில்லை. விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் படுத்து நெடுநேரம் இப்படியும் அப்படியுமாகப் புரண்டு கொண்டிருந்தாள். எதிர்காலத்தைப் பற்றி அவளாகத் தனக்குத் தானே கற்பித்துக் கொண்ட சுகங்களும் சந்தோஷங்களும் மனத்தில் புரண்டன. நடிப்புலகின் சக்கரவர்த்தியாக விளங்கும் ஒரு பெரிய நடிகரே தன்னைத் தாராளமாகப் பாராட்டி, அப்படிப் பாராட்டியது பகிரங்கமாகப் பிரபல பத்திரிகையிலும் வெளிவந்து, தன் விண்ணப்பத்தில் தான் அதைக் குறிப்பிட்டிருப்பது நிச்சயமாக அந்த விண்ணப்பத்துக்கு ஒரு மதிப்பையும், கனத்தையும் அளிக்கும் என்று அவளுக்கே ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.
எப்போது விடியும்? விடிந்ததும் தன் கைகளாலேயே ஸ்டாம்பு வாங்கி ஒட்டி அதைத் தபாலில் சேர்க்கப் போகிறோம் என்பதே அப்போது அவளுடைய ஒரே நினைவாக இருந்தது. வேறு நினைவுகள் எதுவுமே மனத்தில் தங்கவில்லை.
எவ்வளவு முயன்றும் தூக்கம் வராமற் போகவே பெட்டியைத் திறந்து பல்வேறு சமயங்களில் பிடித்த தன் புகைப்படங்கள் அடங்கிய இரண்டு மூன்று ஆல்பங்களை எடுத்து மேசை விளக்கின் சுகமான உள் அடங்கிய வெளிச்சத்தில் திருட்டுத்தனமான மகிழ்ச்சியோடு ஒவ்வொன்றாகப் பார்க்கத் தொடங்கினாள். தன் அழகையும், கவர்ச்சியையும், எவரையும் நிச்சயமாகத் திரும்பிப் பார்க்க வைக்கும் தன் உடற்செழிப்பையும், தானே இன்னொரு முறை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள விரும்பினாற் போல் அவள் அந்தப் படங்களை இரசித்தாள். அந்தரங்கமான தாழ்வு மனப்பான்மை அப்போது அந்த ஊர்ஜிதத்தை விரும்பியது.
கோடை விடுமுறையின் போது கொடைக்கானலில் ‘போனிரைட்’ - குதிரை சவாரிக்காக அரை டிராயர் பனியனோடு கோர்ட்டில் எடுத்த படம், இண்டர் காலேஜியேட் டிபேட்டின் போது வேறு கல்லூரி மாணவர்களோடு அவர்களே விரும்பிக் கேட்டதற்கு இணங்கி எடுத்துக் கொண்ட படம், என்.ஸி.ஸி. உடையில் சிப்பாயைப் போல் எடுத்துக் கொண்ட படம், எல்லாம் ஆல்பத்தில் இருந்தன. நகரின் வேறு கல்லூரி ஒன்றில் முன்பு நடந்த இண்டர் காலேஜியேட் டிபேட்டின் முடிவில்,
“மிஸ் சுமதி! ப்ளீஸ், உங்களோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள எங்கள் மாணவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்?” என்று அந்தக் கல்லூரி மாணவர் யூனியனின் தலைவன் வந்து கெஞ்சியது அவளுக்கு ஞாபகம் வந்தது. வெளியிடங்களுக்குப் போகிற போது கைக் கடிகாரத்தில் நேரம் கேட்கிற சாக்கில், ஏதாவது விசாரிக்கிற சாக்கில் தன்னோடு எப்படியாவது இரண்டு நிமிஷம் பேசிவிடத் தவிக்கும் பலரை அவள் கண்டிருக்கிறாள். அவளுக்கு அப்படி ஓர் எழில் கொஞ்சும் தோற்றம். களைசொட்டும் முகம். கவின் நிறைந்த அங்கங்கள். கையிலிருக்கும் மணிபர்சில் தொகையை எண்ணிப் பார்ப்பது போல் தன்னுடைய பிளஸ் பாயிண்டுகளை ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்துக் கொண்டாள் சுமதி.
எங்கோ கோழி கூவியது. ஹாஸ்டல் மரங்களில் விடிவதற்கு முன்னறிகுறியான பல்வேறு பறவைகளின் ஒலிக்கிளர்ச்சி ஆரம்பமாகியிருந்தது. காற்று, குளிர்ந்து வீசத் தொடங்கியிருந்தது. இருள் மெதுவாகக் கரைந்து போய்க் கொண்டிருந்தது.
எழுந்து பல் விளக்கி மெஸ்ஸில் போய்க் காபி சாப்பிட்டுவிட்டுத் திரும்பும் போதே மூன்றாவது அறை மோகனாவிடம் தபால் தலைகள் கேட்டு வாங்கி ஒட்டிக் காம்பஸுக்குள் இருந்த தபால் பெட்டியில் அந்தக் கவரைப் போட்டுவிட்டாள் சுமதி. அந்தக் கல்லூரி விடுதி எல்லையில் இருந்த தபால் பெட்டியில் முதல் கிளியரன்ஸ் காலை 8.35க்கு என்று எழுதியிருந்தது. உள்ளூரில் அந்தக் கடிதம் பிற்பகல் டெலிவரியிலேயே விலாசதாரருக்குக் கிடைத்துவிடும் என்றும் உறுதி செய்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தாள் சுமதி. நினைவு என்னவோ அதைப் பற்றியே சதாகாலமும் இருந்தது. அங்கிருந்து அவர்கள் தனக்குப் பதில் எழுதித் தன்னை வரச் சொல்லுவது போலவும், ‘இவ்வளவு பெரிய நட்சத்திர நடிகரே உங்களைப் பாராட்டியிருப்பதை அறிந்து பெருதும் மகிழ்ச்சி அடைகிறோம். நீங்கள் உடனே நமது அலுவலகத்திற்கு வந்து சந்திக்க வேண்டுகிறோம்’ என்று அவர்களிடமிருந்து பதில் வருவதாகவும் தானே எண்ணிப் பார்த்துக் கொண்டாள் அவள். கற்பனை என்பது மனித மனத்துக்கு எந்தச் செலவுமின்றித் தானே கிடைக்கிற போதைப் பொருள். மனத்தைக் தட்டிவிட்டால் எதையும் உள்ளே செலுத்தாமலே கற்பனைப் போதை அங்கே உருவாகிவிடும். அந்த போதை அவளுள்ளும் அன்றைக்கு உருவாகியிருந்தது.
கற்பனை என்பது நிஜமில்லை. ஆனால் நிஜங்களும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை அல்ல. இன்றைய கற்பனைகள் நாளைய நிஜங்களாகலாம்! நாளைய கற்பனைகள் நாளை மறுநாள் நிஜங்களாகலாம். ஆகாமலேயும் போய்விடலாம். ஆனால் அப்படி ஆகாமல் போகுமென்று பயந்தோ தயங்கியோ வாழ்வில் யாரும் எந்தக் கற்பனைகளையும் செய்து கொள்ளாமல் இருப்பதில்லை. கற்பனைகள் தாராளமாகச் செய்யப்படுகின்றன.
மாணவி சுமதியின் கற்பனைகள் நாட்கணக்கில் நீடித்தன. மறுநாளைக்கு மறுநாள் காலை முதல் தபாலில் அவளுக்கு ஓர் கனமான உறை வந்தது. உறையின் மேல் அனுப்புகிறவர் முகவரி இருக்கவேண்டிய இடத்தில் ‘சொப்பன உலகம் நாடகக் குழுவினர் - தபால் பெட்டி எண்... கோடம்பாக்கம் சென்னை-26’ என்று அழகாக அச்சிட்டிருந்தது. பெறுகிறவர் முகவரியில் புது டைப்ரைட்டரில் அடித்தாற் போன்று முனை முறியாத தெளிவான எழுத்துக்களில் மிஸ். கே.சுமதி... என்று தொடங்கி அவளுடைய கல்லூரி விடுதி முகவரி டைப் அடிக்கப்பட்டிருந்தது. விளம்பரத்திலிருந்த பாலன் நாடகக் குழு என்ற பெயரும் சொப்பன உலகம் என்ற புதுப்பெயரும் வேறுபட்டன.
ஆவலால் படபடக்கும் மனமும், மகிழ்ச்சியின் மிகுதியான எதிர்பார்த்தலால் நடுங்கும் கைகளுமாகச் சுமதி அந்த உறையைப் பிரிக்கத் தொடங்கினாள். உறைக்குள் நிறைய அச்சிட்ட தாள்களும், விண்ணப்ப பாரம் போன்ற ஒரு நீளத்தாளும் கடிதமும் இருந்தன. முதலில் அவள் கடிதத்தைத் தனியே எடுத்துப் படிக்க ஆரம்பித்தாள்.
அந்தக் கவர் தன் கைக்குக் கிடைத்த வேளையைக் கொண்டாட வேண்டும் போலிருந்தது சுமதிக்கு. கடிதம் அழகான தமிழ்க் கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது.
‘எங்கள் விளம்பரத்தைக் கண்ணுற்றுத் தாங்கள் ஆர்வத்தோடு எழுதிய கடிதம் கிடைத்தது. தங்களைப் போலவே நாள் தவறாமல் நடிக்க விரும்பும் பல்லாயிரக்கணக்கான இளம் பெண்களின் கடிதங்கள் எங்கள் காரியாலயத்தில் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்தப் பல்லாயிரம் பேர்களிலிருந்து எங்களுக்குத் தேவையான சில நல்ல புதுமுகங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பதுதான் இப்போது எங்கள் கவலையாயிருக்கிறது. எனினும் தங்கள் இண்டர்வ்யூவுக்கென ஒரு நாளைக் குறித்திருக்கிறோம். குறித்த நாளில் நேரத்தில் இங்கு வந்து சேருங்கள். அதற்கு முன்பே எங்களுக்குக் கிடைக்கும்படி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து உரிய தொகையோடு அனுப்பி வையுங்கள்.’
அந்தக் கடிதத்தின் கீழ் உள்ள கையெழுத்திலிருந்த பெயரைத் தெளிவாகப் படிக்க முடியவில்லை. கிறுக்கிக் கோடிழுத்திருந்தது. ரொம்பப் பெரிய மனிதர் ஒருவர் செக்கின் கீழே போட்ட கையெழுத்துப் போலவோ, நாள்பட்ட கம்பவுண்டர் எழுதிய ப்ரிஸ்கிரிப்ஷன் போலவோ அந்தக் கையெழுத்துப் புரியாமல் இருந்தது. புரியாமல் இருந்தது என்பதை விட புரியாமல் இருக்க வேண்டும் என்றே போடப்பட்டது போலத் தோன்றியது.
ஆர்வத்திலும், பதற்றத்திலும் அவளுக்குப் புலப்படாமல் இருந்த ஒரு முரண்பாடு சற்று நிதானம் அடைந்த பின்பே விளங்கியது. மாலைத் தினசரியில் தான் பார்த்த விளம்பரத்திற்கும், இப்போது அனுப்பப்பட்டிருக்கும் விவரத்தாள்களில் உள்ள பெயருக்கும் உள்ள வேறுபாட்டை இப்போது அவள் சிந்தித்தாள். விளம்பரத்தில் ‘பாலன் நாடகக் குழு’ என்று அச்சிட்டிருந்தார்கள். இப்போது தபாலில் கிடைத்திருக்கிற தாள்களில் எல்லாம் ‘சொப்பன உலகம்’ நாடகக் குழு என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘இதில் எது உண்மையான பெயர் என்று தெரியவில்லையே? எதற்காக இப்படி இரண்டு பெயர்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று யோசித்தாள் சுமதி. பிரபல நடிகர் ஒருவர் தன்னைப் புகழ்ந்தது பற்றிய பத்திரிகைக் கட்டிங்கை இணைத்து அனுப்பியிருந்தும், எல்லாருக்கும் எழுதுவது போல் சாதாரணப் பதிலைத் தனக்கும் அவர் எழுதியிருந்ததை அவள் விரும்பவில்லை. இன்னும் சொல்லப் போனால் அந்தப் பதில் கடிதத்தை அவர்கள் ஒரு சுற்றறிக்கை போல எல்லாருக்கும் பொதுவாகவே தயாரித்திருந்தார்கள் என்று தோன்றியது. அதில், கூடியவரை தங்களைப் பற்றிய சுய விளம்பரத்தைச் செய்து கொண்டிருப்பது நன்றாகத் தெரிந்தது.
விண்ணப்பத்தாள் போல் தெரிந்த நீண்ட ஃபாரத்தைப் பிரித்துப் பார்த்தாள். பெயர், உயரம், எடை, இடையளவு, மார்பளவு, வயது, மொழி, பேசத் தெரிந்த பிற மொழிகள், படிப்பு என்பவை பற்றிய கட்டங்கள் பூர்த்தி செய்வதற்கென்று காலியாக விடப்பட்டிருந்தன. மோட்டார் ஓட்டத் தெரியுமா, சைக்கிள் விடுவதற்குப் பழக்கம் உண்டா, நடனம் ஆடத் தெரியுமா, தெரியுமானால் என்னென்ன வகை நடனங்கள் தெரியும் என்றெல்லாம் வேறு கேள்விகள் இருந்தன.
அந்த விண்ணப்பத் தாளின் அடியில் தடித்த எழுத்துக்களில் அடிக்கோடிட்டு அச்சிடப்பட்டிருந்த வாக்கியம் சுமதியின் கவனத்தைக் கவர்ந்தது.
விண்ணப்பத்தாளுடன் ரூபாய் 100 மணியார்டர் செய்துவிட்டு எம்.ஓ. ரசீதை மறக்காமல் இணைத்து அனுப்பக் கோருகிறோம் என்று அச்சிட்டிருந்த நிபந்தனை புதிதாக இருந்தது. ‘நடிப்பதற்குப் புது முகங்கள் தேவை’ - என்று மாலைத் தினசரிகளில் அவர்கள் செய்திருந்த விளம்பரத்தில் இப்படி ஒரு நிபந்தனை இல்லை என்பது சுமதிக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. விண்ணப்பங்கள் அனுப்பும் போது திடீரென்று நூறு ரூபாய் நிபந்தனை போடப்பட்டிருந்தது. இப்படிப் பல்லாயிரம் பேர்களிடம் நூறு ரூபாய் வீதம் வசூல் செய்தால் லட்சக்கணக்கில் சேர்ந்துவிடும் என்பதும் தெரிந்தது. உடனே நூறு ரூபாய்க்கு எங்கே போவது என்று சுமதி மலைத்தாள். மாதக் கடைசியில் ரூபாய் நூறு கைமாற்றுத் தர அங்கு யாரும் அகப்பட மாட்டார்கள் என்பதையும் அவள் அறிவாள். மாத ஆரம்பமாயிருந்தால் அந்த ஹாஸ்டல் எல்லைக்குள் யாரிடமாவது நூறு ரூபாய் கடன் வாங்குவது என்பது அவளுக்குப் பெரிய விஷயமாயிராது.
கஞ்சத்தனமானவள், கறாரானவள் என்று பெயர் பெற்ற வார்டன் மாலதி சந்திரசேகரனிடமே அவளால் கடன் வாங்கிவிட முடியும். ஆனால் இப்போது மாதக் கடைசி என்பதால் வார்டனிடமும் கையில் பணம் எதுவும் இராது.
கோடி அறையில் இருக்கும் பானுமதியிடம் கேட்டால் ஒருவேளை கிடைக்கலாம். பானுமதி கோவையைச் சேர்ந்த ஒரு பெரிய மில் அதிபரின் மகள். அவளிடம் மாதத்தில் எந்த வாரத்திலும் பணத்தட்டுப்பாடு இருக்காது. சினிமாவுக்கு, காபி ஹவுஸுக்கு, கடற்கரைக்குப் போனாலும் கூடவே நாலு தோழிகளுக்கும் செலவழித்துக் கூப்பிட்டுக் கொண்டு போகக் கூடியவள் பானுமதி. ஆனால் அவளுக்கும் சுமதிக்கும் போன வாரம் ஒரு சின்ன மனஸ்தாபம். ஒருவருக்கொருவர் பார்த்தால் பேசிக் கொள்ளப் பழகத் தடையில்லாத மனஸ்தாபம் தான் என்றாலும் இப்போது அவளிடம் போயா கடன் கேட்பது? என்று தயக்கமாகத்தான் இருந்தது.
ஊரில் அம்மாவுக்குக் கடிதம் எழுதலாமா என்று பார்த்தால் பணம் எதற்கென்று சரியான காரணம் தெரிவிக்காமல் எழுதிக் கேட்க முடியாது. மார்வாடி கடையில் கழுத்தில் உள்ள செயினைக் கொண்டு போய் அடகு வைக்கலாமா என்று நினைத்துப் பார்த்தாள். ‘விண்ணப்பத்தை அனுப்புகிற தினத்தன்றே பணத்தை மணியார்டர் செய்யாமல் அப்புறம் நேரே இன்னொரு நாள் வரும்போது கொண்டு வந்து கட்டிவிடுகிறேன் என்று அவர்களுக்கு ஃபோன் பண்ணிப் பார்த்தால் கேட்காமலா போய்விடப் போகிறார்கள்?’ - என்றும் ஒரு யோசனை தோன்றியது. ஃபோனில் வேண்டுகோள் விடுத்து அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்று தோன்றவில்லையானாலும் ஃபோன் செய்து பார்ப்பது என்ற முடிவுக்கு வந்தாள் அவள். அந்தக் கடிதத்திலிருந்த டெலிபோன் எண்ணைத் தனியே குறித்து எடுத்துக் கொண்டு, ஃபோனுக்காகக் கீழே படியிறங்கினாள் சுமதி.
சிவசக்தி மகளிர் கல்லூரியின் விடுதி அறைகளில் உள்ளவர்களுக்காகப் பொதுவில் ஒரே ஒரு டெலிபோன் மட்டும் இருந்தது. அதுவும் பொது உபயோகத்திற்கான டெலிபோன் ‘பூத்’களில் உள்ளது போல் காசு போட்டுப் பேசுகிற வகையைச் சேர்ந்தது. முதலில் எல்லா விடுதி அறைகளுக்கும் நடு மையமான பகுதியில் மூன்று பூத்கள் வைத்திருந்தார்கள். எப்போது பார்த்தாலும் படிக்கிற மாணவிகளின் கூட்டம் அந்த பூத்களையே மொய்த்துக் கொண்டிருக்கவே, அதைத் தவிர்க்கக் கருதி, மறு ஆண்டில் ஃபோன்களை இரண்டாகக் குறைத்தார்கள். அப்போதும் ஃபோனைச் சுற்றிக் கூட்டம் போடும் மாணவிகளின் எண்ணிக்கை குறையாமல் இருக்கவே, கடைசியில் ஒரே ஒரு டெலிபோனை மட்டும் பூத்தை நீக்கி விட்டுத் திறந்த நிலையில் வராந்தாவில் வைத்து விட்டார்கள்.
சுற்றிலும் கண்ணாடி அடைப்பு வைத்து இரகசிய மாகப் பேசுவதற்குப் பூத் அமைத்து, வசதி செய்து கொடுத்தால் தான் நிறையப் பேச வருவார்கள். அந்த வசதிகளைக் குறைத்துவிட்டு, ஃபோனை வராந்தாவில் வைத்து விட்டாலே முக்கால்வாசி மாணவிகள் பேசுவதைக் குறைத்துக் கொண்டு விடுவார்கள் என்று யோசனை செய்து பிரின்ஸிபால் அம்மாள் இந்த முடிவுக்கு வந்திருந்தாள். டெலிபோனைச் சுற்றி இருந்த கண்ணாடி அடைப்புக்கள், தடுப்பு மரச்சுவர், கூண்டு எல்லாவற்றையும் நீக்கிவிட்டு, வராந்தாவில் சுவரை ஒட்டினாற்போலக் காசு போடுகிற பெட்டி, டெலிபோன் கருவி எல்லாவற்றையும் பொருத்திய பின்பும் கூடக் கூட்டம் என்னவோ குறையவே இல்லை. அவ்வளவு பேருக்கும் சேர்த்து ஒரே டெலிபோன் என்று ஆகி யிருந்ததனால், கூட்டம் முன்னை விடப் பெருகியிருந்தது. திறந்த வெளியில், வராந்தாவில் ‘பிரைவஸி’ இல்லாமல் பேச நேருகிறதே என்பதாலும் மாணவிகள் கவலைப்பட வில்லை. எப்படியோ பேசிச் சமாளித்துக் கொள்ளப் பழகியிருந்தார்கள். டெலிபோன் பேசுவதற்காகச் சுமதி படியிறங்கி வந்தபோதும் ஃபோனடியில் இரண்டு மூன்று மாணவிகள் கூடி நின்று கொண்டிருந்தனர். எவ்வளவோ அசெளகரியங்கள் இருந்தும், மாணவிகளின் ஃபோன் பேசுகிற ஆர்வமோ, ஃபோனுக்காகக் காத்து நிற்கிற ஆர்வமோ ஒரு சிறிதும் குறைந்ததாகத் தெரியவில்லை. காத்திருக்க வேண்டும் என்பதோ, டயல் செய்து விட்டுப் பத்துக்காசு நாணயங்களாகத் தயாராய் மாற்றி வைத்திருந்து சிலவற்றை எண்ணிப் போடவேண்டு மென்பதோ ஒரு சிறிதும் பாதித்திருக்கவில்லை.
ஃபோனருகே காத்திருந்த மாணவிகள் பேசிவிட்டுப் போகட்டும் என்று சுமதி ஒதுங்கி நின்றுகொண்டாள். சிறிது முன் படித்த கடிதத்திலிருந்து குறித்துக் கொண்டு வந்திருந்த ஃபோன் நம்பர், கையில் பத்திரமாக இருந்தது. தான் அந்த எண்ணுக்கு ஃபோன் செய்யும்போது அங்கே பக்கத்தில் யாரும் நின்று ஒட்டுக் கேட்க நேரக் கூடாது என்பதில் சுமதி முன்னெச்சரிக்கை கொண்டிருந்தாள்.
“ஹாய் சுமதி! என்னது? டெலிபோனுக்காக வெயிட் பண்றியா?” என்று விசாரித்துக் கொண்டே அங்கே வந்தாள் ஒரு விடுதித் தோழி.
“ஆமாம்! ஒரே கூட்டமாயிருக்கே. மத்தவங்கள்லாம் பேசிட்டுப் போகட்டும்னு இருக்கேன்.”
“ஏன்? வேறு யாரும் கேட்கக் கூடாதா... ரகசிய ஃபோனா? யாராவது பாய் ஃபிரண்டா? அல்லது...”
“இரகசியமாப் பேசணும்னாலே அது பாய் பிரண் டோடதான் இருக்கணும்னு, என்ன விதி? வேற யாரோடவும் இரகசியமாகப் பேசறதுக்கு விஷயமே இருக்காதா?” என்று சிறிதுகூடத் தயங்காமல் உடனே பதிலுக்குக் கேட்டுவிட்டாள் சுமதி.
“நான் உன்னோட மோதத் தயாராயில்லே டீ அம்மா! இப்போ உன் மூட் சரியில்லை போலிருக்கு.”
சொல்லிவிட்டு மெதுவாகச் சுமதியிடமிருந்து நழுவினாள் அந்த மாணவி. பத்து நிமிடம் காத்திருந்த பின் சுமதிக்கு ஃபோன் கிடைத்தது.
தன்னுடைய ஆவலை அதிகம் கவர்ந்திருக்கிற - தன் மனம் அதிகமாக எதிர்பார்க்கிற ஓர் இடத்துக்கு ஃபோன் பேசுகிறபோது ஏற்படும் படபடப்பு இப்போது அவளுக்கு ஏற்பட்டிருந்தது. ஃபோன் பேசுகிற இடத்தில் அவளருகே யாரும் இல்லை என்றாலும் சிறிது தொலைவில் சற்றுமுன் அவளுடன் வந்து பேசியவளும் வேறொருத்தியும் நின்று உரையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த இருவரில் ஒருத்தி தன் பக்கமாகக் கையைச் சுட்டிக்காட்டி மற்றவளிடம் பேசிக் கொண்டிருக்கவே சுமதியின் கவனம் அவர்கள் பக்கமும் திரும்பி லயித்தது.
ஃபோனில் நம்பர் கிடைத்து எதிர்த் தரப்பில் யாருடைய குரலாவது கேட்ட பின் பெட்டியில் போடுவதற்காகப் பத்துக்காசு நாணயங்கள் சுமதியிடம் தயாராயிருந்தன. எங்கேஜ்டு ஒலிதான் முதலில் வந்தது. சிறிது காத்திருந்து மறுபடி ஃபோன் செய்தபோது அந்த நம்பரில் மணி அடித்தது ஆறுதலாயிருந்தது. யாரோ ஃபோனை எடுத்து ‘ஹலோ’ என்றார்கள். பத்துக்காசு நாணயங்களைப் போட்டாள் சுமதி.
“பாலன் நாடகக் குழுதானே?”
“இல்லீங்களே. நீங்க யார் பேசறது? முதல்லே அதைச் சொல்லுங்க...”
“சொப்பன உலகம் நாடகக்குழு ஆபீஸா?” என்று அதன் மற்றொரு பெயரைக் குறிப்பிட்டு இரண்டாவது முறையாக விசாரித்தாள் சுமதி. மறுபடியும் பழைய மாதிரியே பதில் வந்தது.
“நீங்க யாருன்னு சொல்லுங்க முதல்லே.” சுமதி தான் யாரென்பதைச் சுருக்கமாக விவரித்தாள்.
“ஓ! அந்த விஷயமா? கொஞ்சம் லயன்லே இருங்க. ஆளைக் கூப்பிடறேன்” என்பதாக எதிர்ப்புறமிருந்து ஒரு தினுசாகப் பதில் வந்தது.
சுமதி அவசர அவசரமாகக் கையிலிருந்த தாளிலிருந்து நம்பரை மறுபடி சரிபார்த்துக்கொண்டாள். அதே நம்பர்தான், சந்தேகமில்லை. ஃபோனை எடுத்தவன் பேசிய விதத்திலிருந்து அந்த டெலிஃபோன் நாடகக் குழுவிற்குச் சொந்தமானது இல்லையோ என்று எண்ணத் தோன்றியது. வீட்டில் ஒண்டுக் குடித்தனம் இருக்கிற மாதிரி ஒரே டெலிபோன் நம்பரில் பலர் ஒண்டுக் குடித்தனம் இருப்பது என்பது சென்னை போன்ற பெரிய நகரத்தில் சகஜம்தான். புது முகங்களுக்காக விளம்பரம் செய்துள்ள அந்தக் கம்பெனியும், இந்த டெலிஃபோன் நம்பரில் ஒண்டுக்குடித்தனம் இருக்கிறதோ என்னவோ என்று ஊகிக்க முயன்று ஃபோனில் காத்திருந்தாள் சுமதி.
சிறிது தொலைவில் அந்த இரு மாணவிகளும் கலைந்து போகாமல் இன்னும் பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் இன்னும் தன்னைப் பற்றித்தான்பேசிக் கொள்கிறார்களோ என்ற அவள் மனம் குறுகுறுத்தது. பேச்சு முடிந்து அவர்களோ, அல்லது வேறு யாராவது மாணவிகளோ டெலிஃபோனுக்கு அருகே வந்துவிடக் கூடாதே என்று வேறு சுமதியின் நெஞ்சம் பரபரப்பு அடைந்தது.
அப்பாடா! நல்லவேளையாக டெலிஃபோனை எதிர்ப்புறம் யாரோ மீண்டும் எடுத்துக் குரல் கொடுத் தார்கள்.
“பாலன் நாடகக் குழு என்கிற சொப்பன உலகம் கம்பெனியிலிருந்து யாரையாவது பேசச் சொல் கிறீர்களா?”
“நான் அதனோட மேனேஜர்தான்ம்மா பேசறேன்.”
“நீங்க பேப்பர்ல விளம்பரம் பண்ணியிருந்தீங்களே. அது சம்பந்தமா.”
“ஆமாம்! மேலே சொல்லுங்க...”
சுமதி, தான் அவர்களுக்கு விண்ணப்பம் அனுப்பியது, தன் பெயர், முகவரி எல்லாவற்றையும் சொல்லி விட்டுத் தனக்கு அவர்கள் அனுப்பிய பதில் பற்றியும் குறிப்பிட்டாள்.
“ஃபாரத்தை எழுதி அனுப்பறதோட நூறு ரூபாய் எம்.ஒ. பண்ணிடுங்க. அப்புறம் ‘இன்டர்வ்யூ’ டேட் எழுதறோம்.”
“இப்போ எனக்குக் கொஞ்சம் பணக் கஷ்டம். அதனாலே ஃபாரத்தை மட்டும் அனுப்பிவிட்டு, அப்புறம் நேரே வர்ரப்போ பணம் கொடுத்துலாம்னு பார்க் கிறேன்.”
“நாங்க அப்படி ஒத்துக்கறதில்லேம்மா. எம்.ஓ. ரசீதை சேர்த்து அனுப்பியிருக்கிற அப்ளிகேஷன்ஸை மட்டுந்தான் கவனிப்போம். அவங்களுக்குத்தான் நேரே வரச் சொல்லி ‘இன்டர்வ்யூ’க்கு எழுதுவோம்.”
“எனக்கு மட்டும் நீங்க கொஞ்சம் உதவி பண்ணப் பிடாதா? நான் கல்லூரியிலே படித்துக்கொண்டிருக்கிற மாணவி.”
“கொஞ்சம் லயன்ல இருங்க. கேட்டுச் சொல்றேன்” என்று ஃபோனை வைத்துவிட்டு, யாரிடமோ கேட்கப் போனான் அவன்.
சுமதி சில விநாடிகள் காத்திருந்தாள். இப்போது ஃபோனருகே இன்னும் சில பெண்கள் வந்து விட்டார்கள். தான் இனிமேல் பேச வேண்டியவற்றை அவர்களுக்குச் சந்தேகம் ஏற்படாத வகையில் பேசி முடிக்க வேண்டும் என்பதைத் தன் மனத்திற்குள் எச்சரித்துக் கொண்டாள் சுமதி. மீண்டும் ஃபோன் எடுக்கப்படும் ஓசை கேட்டது. “நாங்க அதிலே போட்டிருக்கிற தேதிக்கு முன்னே பின்னே இரண்டு மூணுநாள் ஆனாலும் பரவாயில்லை. நீங்க எப்படியும் பணத்தை அனுப்பிச்சிடுங்க. அப்புறம்தான் உங்களை வரச்சொல்லி நாங்க எழுதுவோம்” என்று கூறிவிட்டு அவளுடைய பதிலை எதிர்பாராமலே ஃபோனை வைத்துவிட்டான் அந்த ஆள்.
“என்னடி சுமதி? இன்னும் ஃபோனை வைக்க மனசு வரலியா?” என்று கேட்டுக் கொண்டே சக மாணவி ஒருத்தி அருகே வந்தாள். சுமதி ஃபோனைக் கொக்கியில் தொங்கவிட்டாள். தன்னோடு கலகலப்பாகப் பேச முயன்ற மற்ற மாணவிகளை எவ்வளவு அவசரமாகத் தவிர்க்க முடியுமோ அவ்வளவு அவசரமாகத் தவிர்த்துவிட்டு, உடனே அறைக்குத் திரும்பினாள் அவள். நூறு ரூபாய்ப் பணத்தை எதிர்பார்த்துத் தயங்குவதன் காரணமாகத் தன் வாழ்வின் எதிர்காலத்தையே பொன்மயமாக மாற்றிவிடப் போகிற ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விடுவதா? என்று யோசித்தாள் அவள்.
கை வளைகளையோ, கழுத்துச் சங்கிலியையோ எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் மார்வாடிக் கடைக்குப் போய்விட்டு வந்தால்தான் காரியம் முடியும் என்று தோன்றியது அவளுக்கு.
திடீரென்று தன் கழுத்தில் சங்கிலியையோ, கைகளில் வளைகளையோ காணாவிட்டால் சக மாணவி களில் யாராவது அவைகளைப் பற்றி விசாரிப்பார்களே என்றும் தயக்கமாயிருந்தது.
அன்று வகுப்புகளுக்குக்கூட அவள் செல்லவில்லை. ‘தலைவலி’ என்று தோழிகளிடம் சொல்லி அனுப்பி விட்டாள். வகுப்பு, கல்லூரி, பாடம், படிப்பு எதுவுமே அவள் நினைவில் அப்போது இல்லை. எப்படியாவது எங்கேயிருந்தாவது தொடங்கி சினிமா ஸ்டாராகிவிட வேண்டும் என்ற வெறிதான் மூண்டிருந்தது. எல்லாப் பத்திரிகைகளிலும், தெருச்சுவர்களிலும் தன் உருவத்தைக் காணப் போகிற எதிர்காலம் பற்றி அவள் இப்போதே கனவுகளில் மிதக்கத் தொடங்கியிருந்தாள்.
தான் மார்வாடிக் கடையில் போய் அடகு வைத்துப் பணம் வாங்கி அது பிரின்ஸிபால் அம்மாளுக்கோ வார்ட னுக்கோ தெரிய வந்தால் தன்னைக் கல்லூரியிலிருந்தே நீக்கி விடுவார்களோ என்றும் பயமாக இருந்தது. இறுதியில் பயம், தயக்கம், கூச்சம் எல்லாவற்றையும் ஆசை வெற்றி கொண்டது. எப்படியாவது பணத்தைப் பெற்று எம்.ஓ. செய்து விண்ணப்பத்தாளுடன் இணைத்து அனுப்புவது என்று முடிவு செய்துவிட்டாள் அவள். கடைசியாக மார்வாடிக் கடைக்குப் போவதைத் தவிரவும் இன்னொரு வழி மீதமிருப்பது தெரிந்தது. முன் பொரு நாள் மேரி தன்னைத் தேடிவந்து கூறிய விஷயம் சுமதிக்கு இப்போது நினைவு வந்தது. செயிண்ட் தாமஸ் மவுண்ட் பகுதியில் குடியிருக்கும் மேரி சுமதியின் சக மாணவி. ஆங்கிலோ இந்தியப் பெண்மணியான அவள் படு துணிச்சல்காரி. சுமதியின் உடல் அழகைப்பற்றி அவளே கூச்சம் அடையும்படி அடிக்கடி அவளிடம் நேருக்கு நேர் புகழ்ந்திருக்கிறாள் மேரி. அந்த மேரியை இப்போது சந்தித்துப் பேசினால் என்னவென்று தோன்றியது சுமதிக்கு. ‘டேஸ்காலரான மேரி’ அப்போது வகுப்புக்குப் போயிருப்பாள் என்றும், முதல் பீரியடு முடிந்ததும் அவளைப் பார்த்துத் தன் அறைக்கே அழைத்து வந்து தனியாக அவளிடம் பேசிக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்தாள் சுமதி.
மனத்தில் ஒன்றின்மேல் ஆசை அளவற்றுப் பெருகும்போது காரண காரியங்களைப் பற்றிச் சிந்திக்கத் தோன்றாது. சாத்திய அசாத்தியங்களைப் பற்றிச் சிந்திக்கத் தோன்றாது. நியாய அநியாயங்களைப் பற்றிச் சிந்திக்க தோன்றாது. எதை விரும்புகிறோமோ அதுவே சாத்தியமென்று தோன்றும். எதன் மேல் ஆசைப் படுகிறோமோ அதுவே நியாயமென்று தோன்றும். அது மட்டுமே சரியென்றுகூடத் தோன்றும்.
சுமதியும் அன்று அப்படித்தான் இருந்தாள். வகுப்புக்களுக்குப் போவதில் அவளுக்கு நாட்டமில்லை. பாடங்களிலோ, படிப்பிலோ அவளுக்குக் கவனமில்லை. எப்படியாவது உடனே நூறு ரூபாய் சம்பாதிக்க வேண்டும். அந்த நூறு ரூபாயை மணியார்டர் செய்து அதன் ரசீதை உடன் இணைத்து, நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் அந்த நாடகக் குழு வுக்கு விண்ணப்பத்தை அனுப்பியாக வேண்டும். அல்லது நேரிலேயே விண்ணப்பத்தை எழுதி எடுத்துக்கொண்டு போயாவது பணத்தையும் கட்டிவிட வேண்டும்.
விடுதி அறைகளுக்கான கடிதங்களைப் பட்டுவாடா செய்யும் வேலைக்காரி வராந்தாவில் தென்பட்டாள்.
“லெட்டர் ஏதாவது இருக்கா மங்கம்மா?”
“உங்க ரூமுக்கு இல்லே.”
“இங்கே வா... உன்னாலே ஒரு காரியம் ஆகணும்...”
மங்கம்மா அறைக்குள் வந்ததும் மேரியை முதல் பீரியடு முடிந்து மணியடித்ததும் தன்னுடைய அறைக்கு வரச்சொல்லி வேண்டி ஒரு சிறு துண்டுத் தாளில் அவளிடம் எழுதிக் கொடுத்து அனுப்பினாள் சுமதி.
முதல் பீரியடு முடிந்து எப்போது மேரி வரப்போகிறாள் என்று அவள் வருகிற நேரத்துக்காகக் காத்திருக்க வேண்டியதாயிற்று. இன்று தான் கூப்பிட்டுச் சொல்லியனுப்புகிற இதே மேரி சில வாரங்களுக்கு முன் தன் அறையைத் தேடி வந்தபோது தான் அவளை உதாசீனப் படுத்தி அனுப்பியது சுமதிக்கு நினைவு வந்தது. அன்று, தான் அவளிடம் நடந்து கொண்டதை நினைத்தால் இப்போது வருத்தமாகக்கூட இருந்தது. ஆனால் மேரி என்னவோ இவள் உதாசீனப்படுத்தியதைக்கூட அவ்வளவு ஸீரியஸ்ஸாக அன்று எடுத்துக் கொள்ளவில்லை.
‘சரி சரி! இப்போது இப்படித்தான் சொல்வாய். என்றாவது ஒரு நாள் நீயும் என் வழிக்கு வந்துதான் ஆக வேண்டும்?’ என்று சொல்வது போல் சிரித்துக் கொண்டே போய்விட்டாள் மேரி.
மேரி ஒரு தினுசானவள் என்பது கல்லூரியில் எல்லாருக்கும் தெரியும். நேரடியாகத் தெரியாதவர்களுக்கு இலைமறை காயாக அது தெரியும். மலேசியாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும், மொரீசியஸிலிருந்தும் அந்தக் கல்லூரியில் வந்து தங்கிப் படிக்கும் பல பெண்கள் மேரியின் தோழிகள். அந்த வெளிநாட்டுப் பெண்களுக்குப் பணத் தட்டுப்பாடு வரும் போது, பகுதி நேர வேலைகளில் இங்கேயே சம்பாதிக்கும் வழிகளை மேரி தேடிக் கொடுத்தாள். அவள் தேடிக் கொடுக்கிற வேலைகள் எப்படிப்பட்டவை என்பதைப் பற்றி வதந்திகளும், கேலிகளும், அபாண்டங்களுமாக நிறையப் பேச்சுக்கள் இருந்தன. ஆனாலும் அந்த வெளிநாட்டு மாணவிகளில் பலர் தொடர்ந்து மேரியிடம் விசுவாசமாகவும், பிரியமாகவும்தான் இருந்து வந்தனர்.
வெளிநாட்டு மாணவிகளைத் தவிர உள்நாட்டு மாணவிகளுக்குள்ளேயும் அழகிய தோற்றத்தை உடைய பலருக்கு மேரி அவ்வப்போது வலை விரித்துப் பார்த்தது உண்டு. பிடித்ததும் உண்டு.
சுமதி ஒருநாள் கிண்டலும் குத்தலும், எகத்தாளமும் இயைந்து தொனிக்கிற குரலில், “இங்கே பல மாணவிகளுக்கு நீதான் முதலாளியாமே...? பார்ட் டைம் ஜாப் எல்லாம் தேடித் தருகிறாயாமே?” என்று அவளிடம் கேட்டு வைத்தாள். சுமதி இப்படிக் கேட்டபோது சிரித்துக் கொண்டே போய்விட்ட மேரி அன்று மாலையிலேயே நேரே விடுதியில் அவள் அறையைத் தேடிக் கொண்டு வந்துவிட்டாள். அவள் தேடி வந்ததைப் பார்த்துச் சுமதிக்கு ஆத்திரமே வந்துவிட்டது.
“நீ தேடி வந்திருக்கிறதைப் பார்த்தாலே மத்தவங்க என்னைத் தப்பா நினைப்பாங்க. நீ தயவு செய்து உடனே இங்கேயிருந்து போயிடணும்” என்றாள் சுமதி.
“போகமாட்டேன். நீ என்ன செய்வே?”
“ப்ளீஸ். கெட் அவுட்.”
“நீ என்னைப்பத்தி அனாவசியமாத் தப்பாப் புரிஞ்சிக்கிட்டிருக்கே சுமதி! நான் பலருக்கு உதவுகிறவள், யதார்த்தமாக இருப்பவள்.”
“போதுமே! இந்தக் காலேஜிலே வந்து படிக்கிற ஃபாரின் ஸ்டுடண்ட்ஸ்லே முக்கால்வாசிப் பேரைக் கெட்ட வழியிலே சம்பாதிக்கப் பழக்கினதே நீ தானே?”
“உனக்கு யாரோ தப்பா என்னைப் பத்திச் சொல்லியிருக்காங்க... லெட்மீ எக்ஸ்ப்ளெய்ன் ஃபர்ஸ்ட்”
“நீ சொல்லவே வேண்டாம். எல்லாம் எனக்குத் தெரியும்.”
“என்ன தெரியும்? சொல்லேன்.”
“பல அழகான பெண்களை நீ அடிக்கடி சினிமாவுக்கோ டிராமாவுக்கோ, ஷாப்பிங்குக்கோ அழைச்சுக் கிட்டுப் போற மாதிரி செயிண்ட்தாமஸ் மவுண்டிலே உங்க வீட்டுக்குப் பக்கத்திலே எங்கேயோ எதுக்கோ அழைச்சிக்கிட்டுப் போறே...?”
“ஆமாம் ! அழைச்சிட்டுப் போறேன். எங்க வீட்டுக்குப் பக்கத்திலே ஃபேர்லேண்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப்னு பணக்கார இண்டஸ்ட்ரியலிஸ்ட்டுகள் எல்லாம் சேர்ந்து ஒரு க்ளப் நடத்தறாங்க. அங்கே மாலை வேளைகளிலே டிரிங்க்ஸ் பார்ட்டி நடக்கிறது உண்டு. அந்த பார்ட்டீஸ்லே குட் லுக்கிங் ஸ்மார்ட் கேர்ள்ஸ் ஸெர்வ் பண்ணினா சம்பாதிக்கலாம். ஃபாரின் கேர்ள்ஸ் மட்டுமில்லே சுமதி, உன்னைப்போல் அழகான நம்மூர்ப் பெண்கள் சில பேர் கூட அங்கே வராங்க. ஒரு டேபிள்லே ரெண்டு ரவுண்டு ஸெர்வ் பண்றதுக்குள்ளே முழு நூறு ரூபாய் நோட்டை டிப்ஸா வீசி எறியற பணக்காரன் கூட அங்கே இருக்கான்.”
“நீ நடத்தற பிராத்தலுக்கு இப்படி ஒரு விளக்கமா?”
“சுமதி ! டோண்ட் ஸே லைக் தட். பெண்கள் ஏர் ஹோஸ்டஸா இருக்கறதைப் பற்றி நீ என்ன நினைக்கிறே?”
“அதிலே என்ன தப்பு?”
“அப்போ இதிலேதான் என்ன தப்பு? ஏர்ஹோஸ்டஸும் பிரயாணிகளைப் பார்த்துச் சிரித்து மினுக்கித் தளுக்கி அவர்களுக்கு டிரிங்ஸ் எல்லாம் பரிமாற வேண்டியிருக்கு. அதே காரியத்தைத்தான் இங்கே எங்க ஃபேர்லாண்ட்ஸ் ரெக்ரியேஷன் ‘க்ளப்’லியும் பெண்கள் செய்யறாங்க...”
“நீயும் உன் ரெக்ரியேஷன் கிளப்பும் எக்கேடு கெட்டாவது தொலையுங்க. உடன் நீ இங்கேருந்து போயிடு...”
மேரி சிரித்துக் கொண்டே போய்விட்டாள். அவள் சிரித்துக்கொண்டு போவதைப் பார்த்து ஆங்கிலோ இந்தியப் பெண்களுக்கு ரோஷமே இருக்காது போலிருக்கே என்று நினைத்துக் கொண்டாள் சுமதி. கல்லூரியில் நிறையப் பெண்கள் மேரியின் வலையில் விழுந்திருப்பது சுமதிக்குத் தெரிந்திருந்தது. ஏதோ ‘ஏர் ஹோஸ்டஸ் உபசரிப்பதுபோல்’ என்று ஒப்புக்குச் சொல்கிறாளே ஒழிய அவளோடு செயிண்ட்தாமஸ் மவுண்ட்டுக்குப் போய்ச் சம்பாதிக்கிற பெண்கள் தட்டுக் கெட்டுச் சீரழிந்திருப்பார்கள் என்றே சுமதி நினைத்தாள்.
அதே சுமதிதான் இன்று மேரியைத் தன் அறைக்குக் கூப்பிட்டனுப்பியிருந்தாள். மேரி வருகிறவரை சுமதியின் மனத்தில் ஒரே போராட்டமாயிருந்தது. ஒரே குழப்பமாகவும் இருந்தது. ஏர்ஹோஸ்டஸாயிருக்கிறது, எப்படியோ அப்படித்தான் இதுவும் என்று அன்றைக்கு மேரி கூறிய சொற்கள் இன்று திரும்பத் திரும்பச் சுமதியின் செவிகளில் ஒலித்தன. அவளைச் சமாதானப்படுத்தவும் முயன்றன.
காலை பதினொரு மணிக்கு “மே ஐ கம்இன்?” என்ற முதல் கேள்வியோடும், “கேன் ஐ டு எனிதிங் ஃபார் யூ சுமதி?” என்ற அதையடுத்த இரண்டாவது கேள்வியுட னும் மேரி சுமதியின் அறைக்குள் நுழைந்தாள்.
“மேரீ! அன்னிக்கு நான் பேசினதை எல்லாம் நீ மறந்து என்னை மன்னிச்சுடணும்.”
“லெட் அஸ் ஃபர்கெட் த பாஸ்ட்! இப்போ நீ கூப்பிட்ட காரியம் பற்றிப் பேசுவோம் சுமதி. பழசெல்லாம் எதுக்கு?”
“முதல்லே நீ உட்காரு மேரீ! இன்னும் நின்னுக்கிட்டே இருக்கியே! மெஸ்ஸிலேருந்து காபி, டீ ஏதாவது குடிக்கக் கொண்டாரச் சொல்லட்டுமா?”
“ஒண்ணும் வேண்டாம். நீ கூப்பிட்ட காரியம் என்னன்னு சொல்லு சுமதி.”
சுமதிக்கு அதை எப்படி ஆரம்பித்து எப்படிச் சொல்லுவதென்று தெரியவில்லை. எடுத்தெறிந்து பேசித் துரத்தியவளையே மறுபடி வலியக் கூப்பிட்டுக் கொண்டு வந்து, நீ சொன்ன காரியத்துக்கு நான் தயார் என்று கூறுவது எப்படி என்று கூச்சமாகவும் தயக்கமாகவும் இருந்தது. ஆனால் மேரியிடம் அதைச் சொல்லியும் ஆகவேண்டும்.
“கூச்சப்படாம எங்கிட்டச் சொல்லு சுமதி. நான் என்ன செய்யனும்? பீ பிஃராங் வித் மி.”
“எனக்கு ஒரு நூறு ரூபாய் அவசரமா வேணும்.” அப்பாடா! விஷயத்தை ஒரு மாதிரி எப்படியோ மேரியிடம் சொல்லிவிட்ட திருப்தி சுமதிக்கு ஏற்பட்டது.
‘அப்படியானால் நீ இன்றே ஃபேர்லாண்ட்ஸ் ரிக்ரியேஷன் கிளப்புக்கு வரத் தயாரா?’ என்று மேரி உடனே தன்னைத் திருப்பிக் கேட்கக்கூடும் என்று சுமதி எதிர்பார்த்தாள். ஆனால் மேரி மறுபேச்சுப் பேசாமல் தன் கையிலிருந்த சிறு டம்பப் பையைத் திறந்து புத்தம் புதிதாகப் பத்துப் பத்து ரூபாய் நோட்டுக்களை எண்ணி உடனே சுமதியிடம் நீட்டினாள். எந்த நிபந்தனையு மின்றியே நீட்டினாள்.
இவ்வளவு விரைந்து அவளிடமிருந்து பணம் கிடைக் கும் என்பதை எதிர்பார்த்திராத சுமதி அதை வாங்குவதற்குத் தயங்கினாள். மேரி பணத்தை மேஜைமேல் வைத்து அது காற்றில் பறந்துவிடாமல் அருகிலிருந்த ஒரு புத்தகத்தையும் அதன் பாதிப்பகுதி மறைகிறாற்போல் ‘வெயிட்’ ஆக மேலே எடுத்து வைத்தாள்.
அப்போது உடனே சுமதியின் மனக்கண்ணில் பிரமையாக ஒரு தோற்றம் உருவாகித் தோன்றியது. செயிண்ட் தாமஸ் மவுண்டில் ஒரு பெரிய தோட்டத்தோடு கூடிய ஓட்டடுக்கு வீட்டில் அகன்ற நடுக்கூடத்தில் தொந்தியும் தொப்பையுமாக அமர்ந்து சிகரெட்டை ஊதித் தள்ளிக் கொண்டே சீட்டாடும் ஒரு கோஷ்டிக்குமுன் மேரி தன்னை அழைத்துக் கொண்டு போய் நிறுத்தி ஒரு டிரேயையும் தன் கையில் கொடுத்துப் “போ சுமதி! இதமாக நடந்துக்கோ. எல்லாம் ரிச் பீப்பிள்” என்று அவர்களை நோக்கித் தன்னை துரத்துவதுபோல் தோன்றியது. ஆனால் அது தானாகக் கற்பித் துக் கொண்டது என்பதை அடுத்தகணமே சுமதி உணர முடிந்தது. மேரி பணத்தை எடுத்து வைத்துவிட்டு, “எனி திங் எல்ஸ்...? நான் கிளாசுக்குப் போகணும் நேரமாச்சி...” என்று கிளம்பத் தயாராகி விட்டாள்.
“இந்தப் பணத்தை நான்...” என்று சுமதி ஏதோ ஆரம்பித்தாள். அவள் அதை முடிக்கவிடாமல்,
“ஒன்றும் அவசரமில்லை சுமதி! மெல்லப் பார்த்துக் கொள்ளலாம்” என்ற தானே வாக்கியத்தை வேறுவிதமாகச் சொல்லி முடித்துவிட்டாள் மேரி.
“இரு மேரி நான் கூட ஸெகண்ட் அவர் கிளாஸுக்கு வரலாம்னு நினைக்கிறேன். ஃபேஸை வாஷ் பண்ணிண்டு வரேன்.”
“உன் ஃபேஸுக்கு என்னடி சுமதி ! இப்படியே வந்தால்கூட ‘கிளியோபாட்ரா’ மாதிரி இருப்பே.” மேரியின் கவனம் தன் உடல் அழகிலேயே இன்னும் இருப்பது சுமதிக்குப் புரிந்தது.
“மலேசியாவிலிருந்து படிக்க வந்திருக்கிறாளே உன் ஃபிரண்டு ஷீலா; அவளை விடவா என்னை அழகுன்னு சொல்றே?”
-ஏதோ உள்ளர்த்தம் வைத்துக் கொண்டுதான் சுமதி இப்படிக் கேட்டாள்.
"ஷீலா மட்டுமென்ன? உன்னைவிட அழகானவள் இந்தக் காலேஜிலேயே வேறு யாரும் கிடையாது.டி சுமதி” என்று அதே பாணியில் ஓர் உள்ளர்த்தம் பொதிந்த பதிலை மேரியும் அப்போது சுமதிக்குச் சொன்னாள். மேரியின் அங்கீகாரம் சுமதிக்குப் புரிந்தது. சுமதியின் இசைவு மேரிக்கும் ஒருவிதமாகப் புரிந்தது.
மேரியின் நிதானமும், பொறுமையும் சுமதிக்கு வியப்பூட்டின. நிபந்தனைகளோ நிர்ப்பந்தங்களோ இல்லாமலே அவள் தன்னிடம் பணத்தைக் கொடுத்து விட்டுப் போனது நம்ப முடியாததாயிருந்தது.
‘அடி சுமதி நீதானே அன்றொரு நாள் என்னிடம் வீறாப்புப் பேசினே? நீ அப்படி வீறாப்புப் பேசினாப்பவே என் வழிக்கு வராமல் போகமாட்டேன்னு எனக்குத் தெரியும். இப்போ பண முடை வந்ததும் நீ தானாகவே என் வழிக்கு வந்துட்டே’ - என்று பணத்தைக் கொடுப்பதற்கு முன்பாகவோ, பணத்தைக் கொடுத்த பின்போ அவள் சொல்லிக் காட்டிவிடுவாள் என்று சுமதி பயந்தாள். மேரி அவள் பலத்தைப் பொய்யாக்கி விட்டாள். ஆனாலும் மேரியின் நிதானத்தைப் பற்றிய சந்தேகம் இன்னும் சுமதிக்கு இருந்தது.
மேரி பணம் கொடுத்துவிட்டுப் போன தினத்துக்கு மறுநாள் காலை, முதல் வேலையாக அதை மணியார்டர் செய்து எம்.ஒ. ரசீதைப் பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டாள் சுமதி. சுமதி தனக்கு உடல்நலமில்லை என்ற பெயரில் மறு நாளும் வகுப்புகளுக்கு மட்டம் போட்டு விட்டாள். விண்ணப்பத்தாளைப் பூர்த்தி செய்துகொண்டு பணத்தோடு நேரில் போகலாமென்றுதான் முதலில் அவள் நினைத்திருந்தாள். ஆனால், அன்று ஃபோன் செய்து பேசியபோது எம்.ஓ. ரசீதையும் விண்ணப்பத்தையும் அனுப்பினாலே போதுமானது - பின்பு நாங்கள் இன்டர்வ்யூவுக்குக் கூப்பிடும்போது வந்தால் போதும் - என்று நாடகக் குழுவைச் சேர்ந்த அவர்கள் சொல்லிய விதம் நேரில் வர வேண்டாம் என்பது போலிருந்தது. ஆகவேதான் போகும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு, முதலில் எம்.ஓ. செய்திருந்தாள் அவள்.
நாடகக் கம்பெனியின் அச்சிட்ட விண்ணப்பத்தில் ‘இடையளவு’, ‘மார்பளவு’ எல்லாம் கேட்டிருந்தார்கள். கல்லூரி வாயிலில் இருந்த ஒரு தையற் கடையில் வேலைக்காரி மூலம் ஒரு ரூபாய் கொடுத்து ஓர் இஞ்ச் டேப்பை அரைமணி இரவல் வாங்கி வந்து, பாத்ரூம் கதவைத் தாழிட்டுக்கொண்டு தனக்குத்தானே சுமதி அந்த அளவைகளைப் பார்த்தாள். விண்ணப்பத்தை ஒரு விதமாகப் பூர்த்தி செய்து எம்.ஓ. ரசீதையும் இணைத்து அனுப்பினாள். பகல் இரண்டு மணிக்குள் அந்த வேலை முடிந்துவிட்டது.
பிற்பகல் தபாலில் மதுரையிலிருந்து அம்மா எழுதிய கடிதம் கிடைத்தது.
அன்புள்ள சுமதிக்கு அநேக ஆசிகள். உன்னிட மிருந்து கடிதம் வந்து நாளாகிவிட்டது. ஏறக்குறைய நீ கடிதம் எழுதி ஒரு மாதத்துக்கும் மேலாகி இருக்கும் என்ற நினைக்கிறேன். போன மாதம் அனுப்பியதுபோல் அடுத்த மாதம் முதல் தேதி உனக்கு நான் பணம் அனுப்ப முடியும் என்று தோன்றவில்லை. நம் வீட்டில் குடியிருந்தவர்கள் செங்கோட்டைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிக் காலி செய்து கொண்டு போய்விட்டார்கள். இனி மேல் வாடகைப் பணம் வராது என்பதோடு அவர் களிடம் வாங்கியிருந்த இரண்டு மாச அட்வான்ஸ் பணத்தை நான் சிரமப்பட்டு மேனேஜ் செய்து திருப்பிக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. புதிதாக யார் வாடகைக்கு வருவார்கள், எப்போது வருவார்கள் என்று தெரியவில்லை. வந்தால்தான் உறுதி.
எனக்கு ஸ்கூலில் சம்பளம் போட்டதும் முதல் வாரத்தில் ஏதோ முடிந்ததை அனுப்புகிறேன். இந்த மாதம் அதை வைத்து நீ அட்ஜஸ்ட் செய்துகொள். குடியிருந்தவர்களுக்கு அட்வான்ஸ் திருப்பிக் கொடுக்கவே பக்கத்தில் கைமாற்று வாங்க வேண்டியதாய்ப் போயிற்று. அதை வேறு திருப்பிக் கொடுக்க வேண்டும். இன்னும் சினிமாப் பத்திரிகைகளில் உன்னுடைய கேள்வி - பதில்களையும் ஆசிரியருக்குக் கடிதங்களையும் படிப்பதாகப் பக்கத்து வீட்டு சரசு சொல்லுகிறாள். உருப்படியாகப் படித்து முன்னேறப் பார். என்னருகே இந்த ஊரிலேயே இருந்து படித்தால் நானே உனக்குச் செல்லம் கொடுத்து உன்னைக் குட்டிச் சுவராக்கி விடுவேனோ என்ற பயந்துதான் மெட்ராசுக்கு அனுப்பினேன். இந்த வயசில் மறுபடி பரீட்சைக்குப் படித்து ‘ஸெகண்டரிகிரேட்’ வாத்தியார் வேலை போதாதென்ற ‘தமிழ்ப் பண்டிட்’ ஆவதற்கு வித்வான் பாஸ் பண்ணி, இப்போதுதான் நாலு மாதமாகத் தமிழ்ப் பண்டிட் வேலை போட்டு பி.டி. கிரேடு சம்பளம் எனக்குத் தருகிறார்கள். உன் ஒருத்திக்காகத்தான் நான் இந்த சிரமம் எல்லாம் படுகிறேன் என்பதாவது உனக்கு நினைவிருக்கிறதா? உங்கப்பா இருந்திருந்தால் நான் இவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்காது. அவர் போனப்புறம் வாழ்க்கையே வெறுத்துப்போன எனக்கு நீதான் நம்பிக்கையாயிருக்கே. நீ சொல்ற எதையும் நான் தட்டிச் சொல்றதில்லை. போன வருஷம் கோடை விடுமுறைக்குக் கொடைக்கானல் போகணும்னே. மறு பேச்சுப் பேசாமல் கூட்டிக் கொண்டு போனேன். இருபது நாள் தங்கினோம். ஆயிரம் ரூபாய்வரை செலவு ஆச்சு. உன் திருப்திக்காக இதெல்லாம் நான் செய்வது போல் என் திருப்திக்காக நீ நன்றாகப் படிக்கணும். பரீட்சையில் டிஸ்டிங்ஷன் வாங்கணும். உன்னைப்பற்றி நான் எப்படி எப்படியோ கனவு கண்டு கொண்டிருக்கிறேன் சுமதி! நீ ஐ.ஏ.எஸ். பாஸ் பண்ணி பெரிய பெரிய உத்தியோகம் எல்லாம் பார்க்கப் போகிறாய் என்றும் நிறைய பேரும் புகழும் சம்பாதிக்கப் போகிறாய் என்றும் நான் நம்புவது வீண் போகக்கூடாது சுமதி!
ஹாஸ்டல் வார்டன் அம்மாள் அனுமதி கொடுத்தால் கூட நீ இரண்டு வாரத்திற்கு ஒரு சினிமாவுக்கு மேல் பார்க்கக் கூடாது. கண்ட கழிசடைச் சினிமா மேகஸீனை எல்லாம் படிக் காதே. அதில் எதிலாவது தாறுமாறான கேள்விகள், ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுதி உன் பேர் அச்சில் வருவதைப் பார்க்கும் அற்ப சந்தோஷத்தை இனியாவது விட்டு விடு. அது உன் படிப்பைக் குட்டிச் சுவராக்கிவிடும். இந்த மாதம் நான் குறைவாகப் பணம் அனுப்புவதற்காக வருத்தப் படாதே. அடுத்த மாதம் எதை மிச்சம் பிடித்தாவது வழக்கம்போல் அனுப்பி விடுவேன்.
இப்படிக்கு அன்புடன் உன் அம்மா பெரியநாயகி.
கடிதத்தைப் படித்ததும் சுமதியின் மனத்தில் உறுத்திய முதல் விஷயம் அம்மா குறைவாகப் பணம் அனுப்பப் போகிறாள் என்பதுதான். மேரியின் பணத்தை உடனடியாகத் திருப்பிக் கொடுக்க முடியாது என்பது உறுதியாயிற்று. இரண்டாவதாக அந்தக் கடிதத்தில் அவளுக்குப் பிடிக்காத விஷயம் சினிமாவைப் பற்றி அம்மா அறுத்திருந்த அறுவை. புலவர் பரீட்சைகளைப் பிரைவேட்டாக எழுதிப் பாஸ் செய்து அம்மா தமிழ்ப் பண்டிட் ஆனாலும் ஆனாள், அவள் கடிதங்கள் எல்லாம் ஒரே உபதேச காண்டங்களாகவே வந்து சேருகின்றன. வெறும் ஸெகண்டரி கிரேட் டீச்சராக இருந்தபோது அம்மா இவ்வளவு துாரம் உபதேசம் செய்யமாட்டாள். தமிழ் பண்டிட் ஆனவுடன் அம்மா நிறைய உபதேசம் செய்வதற்குக் கற்றுக் கொண்டு விட்டாளோ என்றெண்ணித் தனக்குத்தானே சிரித்துக் கொண்டு சுமதி கடிதத்தை மடித்து மேஜை மேலிருந்த கல்லூரிக் காலண்டரில் சொருகினாள்.
அறை வாசலில் நிழல் தட்டியது. சுமதி திரும்பினாள். மேரி நின்று கொண்டிருந்தாள். சிரித்தபடியே, “இங்கிலீஸ் லெக்சரர் லீவாம். ஈவினிங் கிளாஸ் இல்லே. உன்னைப் பார்க்கலாம்னு வந்தேன்” என்றாள்.
“உள்ளே வாயேன்! ஏன் வாசல்லேயே நிற்கிறே?”
மேரி உள்ளே வந்தாள்.
“இன்னிக்கும் நீ காலேஜுக்கு லீவா சுமதி?”
“வேலை இருந்தது. வரலே... வந்துதான் என்ன வெட்டி முறிக்கப் போகிறோம். கிளாஸுக்கு வரதைவிட ரூம்லே இருந்து நோட்ஸை ஒழுங்காப் படிச்சால்கூட போதும்...”
“நேற்று உனக்கு உதவ முடிஞ்சதிலே எனக்கு ரொம்பத் திருப்தி சுமதி! பை தி பை. தப்பா நெனைச் சுக்காதே, இப்பக்கூட எங்கிட்டப் பணம் இருக்கு... உனக்கு ஏதாவது தேவையிருந்தால் தரேன்...”
சுமதிக்குத் தேவை எதுவும் இல்லை. ஆனால் பணம் குறைவாக அனுப்பப் போகிறேன் என்ற அம்மாவின் முன்னெச்சரிக்கைக் கடிதம் பயமுறுத்தியது. என்ன நினைத் தாளோ தெரியவில்லை மேரியின் தயவை அப்போதே பயன்படுத்திக் கொள்ள விரும்பியவள் போல், “இருந்தால் இன்னும் ஒரு ஐம்பது ரூபாய் கெர்டேன் மேரி! நூற்றைம்பதாகக் கணக்கு வைத்துக் கொள்ளலாம்” என்றாள் சுமதி.
“கணக்கு என்னடீ கணக்கு ! உனக்கு நான் கணக்குப் பார்த்துத்தான் கொடுக்கணுமா? ஐயாம் நாட் எ மணி லெண்டர். ஜஸ்ட் யுவர் கிளாஸ் மேட், டேக் திஸ்.”
இப்போது மேரி நீட்டியது ஒரு முழு நூறு ரூபாய் நோட்டு. சுமதி தயங்கினாள். ஆனால் ஒரு கணம்தான். புதுமுகங்கள் தேடும் நாடகக் குழுவினர் தன்னை இண்டர்வ்யூவுக்குக் கூப்பிட்டு எழுதினால் அன்று போகவர டாக்ஸி செலவு முதலியவற்றுக்காக மறுபடி மேரியிடமே கடனுக்காக நிற்கவேண்டாம்? இப்போதே அவளிடம் நூறாக வாங்கிக்கொள்வதில் என்ன தவறு? என்ற மறு பரிசீலனையும் மனத்தில் தோன்றவே அடுத்த கணம் அந்த நூறு ரூபாய் நோட்டையே தயக்கமின்றி அவளிடமிருந்து வாங்கிக் கொண்டாள் சுமதி.
“மொத்தம் இருநூறு ஆகிறது. மேரி.”
“கவுண்ட் பண்ணாதே சுமதி ! அது பிடிக்கலே. இருநூறு என்ன? உனக்காக ரெண்டாயிரம் கூட ஆகட்டுமே. நான் தரேன்.”
“மேரி. ரியலி ஐயம் கிரேட்ஃபுல் டு யு. அண்ட் ஐ நெவர்...”
அருகே வந்து மேரி அவள் வாயைப் பொத்தினாள்.
‘நேரத்தை வீணாக்காதே. ‘ஜெர்ரிலுயி’ படம் ஒண்ணு ‘ஃபேமிலி ஜுவல்ஸ்’னு மாட்னிஷோ இருக்கு. வார்டனிட்ட பெர்மிஷனுக்குச் சொல்லிவிட்டு வா சுமதி ! போகலாம்.”
“படத்துக்கா போகணும்கிற?”
“ஆமாம்! வா போகலாம்?...”
அன்றென்னவோ சுமதிக்கு எங்காவது வெளியே போய்ச் சுற்றிவிட்டு வரவேண்டும் போலிருந்தது. அன்றைய மனநிலை விடுபட்டாற்போல எங்காவது சுற்றத் தோன்றியது. உடை மாற்றிக்கொண்டு மேரியோடு புறப்பட்டுவிட்டாள். வார்டனிடம் அவளுக்குள்ள முகராசியினாலும், பகல் காட்சி என்பதனாலும் சுலபமாகவே அனுமதியை வாங்கிக் கொண்டு கீழே படியிறங்கி ஏற்கெனவே ப்ளே கிரவுண்டில் போய்க் காத்திருந்த மேரியோடு சேர்ந்து சுமதி போனபோது மறுபடி மேலே மாடியில் வராந்தாவிலிருந்து வார்டன் அம்மாளின் குரல், “சுமதி, உன்னைத்தானே ஒரு நிமிஷம் இப்படி வந்திட்டுப் போயேன்...” என்று இரைந்து கூப்பிடவே திரும்ப நிமிர்ந்து பார்த்த சுமதி, “இரு மேரி! போய் என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன்” என்று சொல்லி விட்டு மறுபடி மேலே படியேறிப்போனாள். அவள் மேலே போவதற்குள் வராந்தாவில் நின்ற வார்டன் தன் அறைக்குள் போயிருந்ததனால் இவளும் திரும்ப அறைக்கே சென்றாள்.
“ஆமாம்! இப்போ யாரோட சினிமாவுக்குப் போறே?”
“ஏன்?”
“மேரியோடையா?”
கேள்வி ஒரு தினுசாக ஒலிக்கவே உடனே தற்காப்பு உணர்வையடைந்த சுமதி பொய் சொல்லத் துணிந்தாள். “இல்லே. கிரவுண்டிலே நின்னுண்டிருந்தா அவ. நான் போறபோது சும்மா எங்கூடப் பேசிண்டே வெளியிலே அவளும் புறப்பட்டுட்டா... அவ எங்கூட வரலே”
“அப்படியானால் சரி... போ...” வார்டன் ஏன் இப்படிக் கூப்பிட்டுக் கேட்கிறாள் என்பது சுமதிக்குப் புரியவில்லை. மேரியோடு யார் யார் மாலை வேளைகளில் வெளியே புறப்பட்டுப் போகிறார்களோ அவர்களை எல்லாம் வார்டன் தீவிரமாகக் கண்காணிக்கிறாள் என்று அர்த்தமா? அல்லது தற்செயலாகத்தான் வார்டன் தன்னை திரும்ப மேலே அழைத்து இதை விசாரித்தாளா என்று புரிந்து கொள்ள முடியாமல் சுமதி மனம் குழம்பினாள். கீழே இறங்கிப் போய் மேரியோடு சேர்ந்து கொண்டு மறுபடி அவள் நடந்தபோது, மேரியே வார்டன் அம்மாளைப் பற்றி ஆரம்பித்தாள். “சுமதி, பீ கேர் ஃபுல்! வார்டன் அம்மாள் பெரிய ராட்சஸி! சில இன்னொஸண்ட் கேர்ள்ஸை ராத்திரிலே கையை அமுக்கி விடு. காலை அமுக்கிவிடுன்னு தன் ரூமுக்கு வரவழைச்சுக் குட்டிச் சுவராக்கியிருக்கா... நீயும் ஏமாந்திடாதே...”
“நிஜமாவா மேரி...?"
“நிஜமில்லையா பின்னே? நீ இந்தக் காலேஜிலே யாரை வேணாக் கேட்டுப் பாரேன்.”
பேசிக்கொண்டே அவர்கள் இருவரும் கல்லூரிக் காம்பவுண்டைக் கடந்து வெளியே டாக்ஸி ஸ்டாண்டும் அருகேயே பஸ் ஸ்டாப்பும் உள்ள பிரதான சாலையோரத்துக்கு வந்திருந்தார்கள். பஸ் ஸ்டாப் அருகே சில மாணவிகள் பஸ்ஸுக்காகக் காத்திருந்தனர். சுமதியும் விரைந்து பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தபோது,
“பஸ் வேண்டாம் சுமதி ! இப்பவே நேரமாச்சு. டாக்சியிலேயே போயிடலாம் வா!” என்று கூறித் தடுத்தபடி ஒரு டாக்சியையும் கையசைத்து வரவழைத்து விட்டாள் மேரி.
மேரியையும், சுமதியையும் பார்த்ததும் டாக்சிக்காரன் சிரித்துக்கொண்டே மீட்டரைப் போட்டான். அவன் ஏன் சிரிக்கிறான் என்பது சுமதிக்குப் புரியவில்லை. ஒரு வேளை அவன் மேரிக்கு முன்பே தெரிந்தவனாக இருக்கவேண்டும் என்று சுமதி நினைத்துக் கொண்டாள். டாக்சியில் ஏறி மேரி அருகே அமர்ந்து கொண்டு பக்கத்தில் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த மாணவிகளைப் பார்த்த போது அவர்களும் தங்கள் பக்கமாகப் பார்த்துச் சிரித்தாற் போல் நிற்கவே சுமதியின் உள்மனம் என்னவோ குறுகுறுத்தது. டாக்சிக்காரனும் சிரிக்கிறான். அருகே நிற்கிற மாணவிகளும் சிரிக்கிறார்கள்? யாருக்காகச் சிரிக்கிறார்கள்? எதற்காகச் சிரிக்கிறார்கள்? இவர்களெல்லாம் ஏன் சிரிக்கிறார்கள்? கேள்விகள் பெரிதாக அவள் மனத்தில் எழுந்தன. அதற்கான பதில்தான் அவளுக்கு உடனே புரியவில்லை. மர்மமாயிருந்தது.
டாக்சியில் போகும்போது சுமதி மேரியிடம் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. தியேட்டர் வாசலில் போய் இறங்கும்போது, “பரங்கிமலை போகணும்னா நானே நீங்க படம் முடிஞ்சி வர்றவரை வெயிட் பண்றேம்மா” என்று டாக்சி டிரைவர் தானாகவே திடீரென்று அப்போது வலியவந்து மேரியிடம் கேட்டபோது சுமதியின் சந்தேகம் இன்னும் அதிகமாயிற்று. அந்த டாக்சி டிரைவருக்கு மட்டுமல்லாமல் எந்த டாக்சி டிரைவருக்கும் மேரியை நன்றாகத் தெரிந்திருக்கும் என்று தோன்றியது. “வேண்டாம்! நீ போகலாம்” என்று சிறிது கடுமையாகவே அவனுக்குப் பதில் சொல்லி மீட்டர் பார்த்துப் பணம் கொடுத்தாள் மேரி. கீழே இறங்கி நின்று தியேட்டர் முகப்பிலிருந்து பெரிய பெரிய படங்களையும் சுவரொட்டிகளையும் பார்த்த சுமதி,
“ஏய் மேரீ! நீ சொன்ன படமில்லேடீ. ஏதோ ‘மை கெய்ஷா’ன்னில்லே போர்டிலே போட்டிருக்கான்...” என்று கேட்டாள்.
“ஐயாம் வெரி ஸாரி சுமதி ! நான் சரியாப் பார்க்கலே, நேத்தி வரை ‘தியேட்டர் புரோக்ராம்’ஸிலே அந்தப் படம் தான் போட்டிருந்தான். இன்னிக்கு சேஞ்ஜ் ஆகியிருக்கும் போலேருக்கு. பரவாயில்லை, இதுவும் நல்ல படம்தான்; பார்க்கலாம் வா?”
சுமதிக்கு ஆட்சேபணை இல்லை. மேரி அதிகச் செலவையும் பொருட்படுத்தாமல் ‘பால்கனி’க்கு இரண்டு டிக்கெட் வாங்கினாள். மேரியின் ஊதாரித்தனமான செலவுகள் சுமதிக்கு ஆச்சரியத்தை உண்டாக்கின. பஸ்ஸுக்குப் பதில் டாக்சியில் வந்ததும், டாக்சிக்காரனுக்கு மீட்டரில் ஆனதற்குமேல் ஒரு ரூபாய் போட்டுக் கொடுத்ததும், அதிக விலையுள்ள பால்கனி டிக்கட்கள் வாங்கியதும் அதிகப்படியான காரியங்களாகச் சுமதிக்குத் தோன்றியது. “நீ ரொம்பத்தான் அதிகமாகச் செலவழிக்கிறே மேரி.”
“செலவா பெரிய விஷயம்; உன்னைப்போல ஒரு ஃபிரண்டு கூட வர்றப்போ எத்தனை ஆயிரம் வேணும்னாச் செலவழிக்கலாம்டீ சுமதி...”
இருவரும் உள்ளே நுழைந்து பால்கனியில் தங்களுக்குரிய இருக்கைகளில் அமர்ந்தார்கள். ஏற்கனவே விளக்குகள் அணைக்கப்பட்டு ஸ்லைடுகள் காண்பிக்கப்பட்டு முடிந்து, இந்தியன் நியூஸ் ரெவ்யூ ஆரம்பமாகி ஓடிக் கொண்டிருந்தது. இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் யாரோ ஆண்பிள்ளைகள் உட்கார்ந்திருந்தார்கள். நடுவாக மேரிக்கும் சுமதிக்கும் இடம் கிடைத்திருந்தது. நியூஸ் ரீல் முழுவதும் ஓடியபின் படம் ஆரம்பமாகியது.
படம் ஜப்பானிய தேவதாசிகள் எனப்படும் கெய்ஷாப் பெண்களைப் பற்றியது. ஆண்களை உபசரித்து, மயக்கிக் கவர்வதையே ஒரு கலையாகப் பாவித்து வளர்த்து வரும் அழகிய இளம் கெய்ஷாப் பெண்களைப் பற்றியது கதை. படம் ஒடிக்கொண்டிருக்கும்போது மேரி ஆங்கிலத்திலும் தமிழிலுமாக மாற்றி மாற்றிச் சுமதிக்கு விளக்கங்கள் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“நம்ம நாட்டிலேதான் இதை எல்லாம் தப்பாக நினைக்கிறோம். ஒரு பெண் அழகாகவும் இளமையாகவும் இருந்துவிட்டால் அவள் யாரோடும் பழகக்கூடாது என்றும், யாரையும் உபசரிக்கக்கூடாது என்றும் தடுத்து விடுகிறோம். ஜப்பானிய கெய்ஷாக்கள் அழகு என்பது ஆண் மகனின் கண்கள் அனுபவிப்பதற்கே என்று நினைக்கிறார்கள். உபசரிக்கிறார்கள். ஆண்களை மயக்குகிறார்கள். சம்பாதிக்கிறார்கள். நம் இந்தியாவில் கோடிக்கணக்கில் வரவு செலவு செய்யும் ஒரு கம்பெனி மானேஜிங் டைரக்டர் என்ன சம்பாதிக்கிறாரோ அதை ஜப்பானில் ஒரு கெய்ஷா சம்பாதித்து விடுகிறாள் சுமதி!” - தயக்கத்தோடுதான் மேரியின் இந்த விளக்கங்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் மெல்ல மெல்லத் தன்னை ‘பிரெயின் வாஷ்’ செய்கிறாளோ என்று முதலில் சுமதி சந்தேகப்பட்டாலும் பின்னால் அந்தச் சந்தேகம் மாறி மறந்து, படத்தில் வருகிற நிகழ்ச்சிகளுக்கும் மேரி சொல்லுகிற கருத்துக்களுக்கும் ஒற்றுமை இருக்கவே, அதைச் சுமதியால் ஊன்றிக் கேட்க முடிந்தது.
“கெய்ஷா கேர்ள்ஸ் ஆஃப் ஜப்பான் என்று என் கிட்ட ஒரு புஸ்தகம் இருக்கு. அதை உனக்கு வேணும்னாப் படிக்கத் தரேன் சுமதி!”
அது ஒரு ஹாலிவுட் டைரக்டருக்கும் ஜப்பானிய கெய்ஷாவுக்கும் ஏற்படுகிற உறவு பற்றிய படம். கெய்ஷாப் பெண் அந்த ஹாலிவுட் டைரக்டரின் உடற் களைப்புத் தீர கைகால்களை இதமாகப் பிடித்து விடுகிறாள். டீ தயாரித்துக் கொடுக்கிறாள். அழகிய சிறிய தங்கப் பதுமை போன்ற அந்த ஜப்பானிய கெய்ஷாப் பெண் நிற்பது, நடப்பது, சிரிப்பது, பேசுவது எல்லாமே காவியமாய் இருந்தன. கெய்ஷா அழகுப் பதுமையாய் இயங்கினாள், மயக்கினாள்.
இடைவேளை வந்தது. தியேட்டரில் விளக்குகள் எரிந்தன. விளக்கொளியில் அக்கம் பக்கத்து சோபாக்களில் இருந்தவர்களில் பலர் ஒரே சமயத்தில் மேரியை நோக்கி, “ஹலோ!” என்ற விளித்தனர். மேரி அவர்களை எல்லாம் திடீரென்று சந்தித்ததில் தான் வியப்படைந்தவள் போல் காட்டிக் கொண்டாள். தன்னோடு கூட இருந்த சுமதியை அவர்களுக்கெல்லாம், “மீட் மிஸ் சுமதி!” - என்று தொடங்கி உற்சாகமாக அறிமுகப்படுத்தி வைத்தாள். மேரியால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களில் அனைவருமே ஆண்கள்தாம். இருபத்தெட்டு வயது முதல் நாற்பது வயது வரை பலவிதமானவர்கள் அவர்களில் இருந்தனர். ஹிப்பித் தலையர்கள், ஒட்ட வெட்டிய கிராப்புடன் ஸ்மார்ட்டாக இருந்தவர்கள், உருவி எடுத்தது போல் பேண்ட் ஷு, டை, கோட் எல்லாம் அணிந்த பிளாஸ்டிக் முகமுடைய மனிதர்களைப் போல் சுத்தமாயிருந்தவர்கள் எல்லாரும் தென்பட்டார்கள். எல்லாரையும் மேரிக்குத் தெரிந்திருந்தது. அவர்களை எல்லாம் மேரி தனக்கு அறிமுகப் படுத்திய போது, அவர்கள் தன்னை நோக்கி ஓவராகச் சிரித்தது, முகம் மலர்ந்தது எல்லாம் சுமதிக்குப் பிடிக்கவில்லை. ஏதோ காணாததைக் கண்டதுபோல் சிலர் சுமதியிடம் நேருக்கு நேராகவே அவள் அழகை வியந்து சொல்லத் தொடங்கினார்கள். அந்த ஆண்களின் பேச்சு, தோரணை பாவனைகள் எல்லாவற்றையும் பார்த்துச் சுமதி கொஞ்சம் ரிஸர்வ்டு ஆகவே நடந்துகொண்டாள். அவளுக்கு அச்சமாயிருந்தது. “பீ சீர்ஃபுல் மைடியர்...” என்று அவளைத் தோளில் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்துவதற்கு முயன்றாள் மேரி. அவளைச் சூழ்ந்திருந்த ஆண்களில் சிலர், “வெளியிலே போய் ஏதாவது டிரிங்க்ஸ் சாப்பிடலாம் வாங்க” என்றார்கள்.
“லெட் அஸ் ஸெலபரேட் திஸ் நைஸ் மீட்டிங்” என்று சுமதியின் பக்கமாகக் கையை நீட்டிச் சுட்டிக் காட்டிச் சிரித்தான் ஓர் இளைஞன். சுமதி மெல்லத் தப்பித்துக் கொள்ள முயன்றாள்.
“எனக்கு டிரிங்ஸ் எதுவும் வேண்டாம்! நான் இங்கேயே ‘ஸீட்’லே இருக்கேன். நீங்கள்ளாம் போயிட்டு வாங்க...”
“நோ... நோ... வாட் இஸ் திஸ்...? உனக்கு மேனர்ஸ் கூடவா புரியாது சுமதி? இவங்க உன்னைச் சந்திச்சதை ஸெலபரேட் பண்ணத்தான்னு கூப்பிடறாங்க. நீ என்னடான்னா..? இவங்கள்ளாம் யாருன்னு நினைச்சே நீ...? சும்மா தெருவிலே போற ஆளுங்க இல்லே. எல்லோரும் பெரிய மனுஷங்களாக்கும். இவர் க்வீன் அண்ட் கம்பெனி சேர்மன். அவர் எமரால்ட் பெயிண்ட்ஸ் பி.ஆர்.ஒ. இன்னொருத்தர் பெரிய டயர் மெர்ச்சென்ட். எல்லாரும் அநேகமா ஃபோர் ஃபிகர்ஸ்ல ஸாலரி வாங்கிறவங்களாக்கும்.” மேரி சுமதியின் காதருகே இதை மெதுவாகச் சொல்லி வற்புறுத்தினாள். அதற்குள் சுமதி மறுக்கிறாளோ என்று சந்தேகப்படத் தொடங்கிவிட்ட அவர்களில் ஒருவர்,
“மிஸ் சுமதி மட்டும் நம்மோடு இப்ப வரலேன்னா நாங்கள்லாம் இங்கேயே ‘தர்ணா’ப் பண்ணிடுவோம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
அதற்குமேல் அந்தச் சூழ்நிலையில் எதிர்நீச்சலிடும் சக்தியைச் சுமதி இழந்தாள். மேலுக்குச் சிரித்தாற்போல் இருக்க முயன்றபடி உள்ளூற வேதனையோடு அவர்களுடன் சென்றாள். தியேட்டரின் மாடியிலேயே வராந்தாவில் இருந்த காஃபி பாரில் எல்லோருக்குமாகக் கோகோ கோலா ஆர்டர் செய்யப்பட்டது. ஆண்கள் அவரவர்கள் பிராண்ட் சிகரெட்டை வாங்கிப் புகைத்துக் கொண்டே உரையாடலானார்கள். இடைவேளை முடிந்து உள்ளே விளம்பர ஸ்லைடுகள் காண்பிக்கத் தொடங்கியிருந்தார்கள். ஸ்லைடுகள் முடிந்து படம் தொடங்குகிற நேரம் வரும்வரை அவர்கள் எல்லாரும் வெளியேதான் பேசிக்கொண்டிருந்தார்கள். மேரி ஒவ்வொருவரையும் தனித் தனியே சில விநாடிகள் அந்த லவுஞ்சிலேயே ஒரு மூலைக்கு அழைத்துச் சென்று ஏதோ பேசிவிட்டு வந்தாள். அப்படி அவள் அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தபோது அவளால் அழைத்துச் செல்லப்பட்ட ஆளைத் தவிர மற்றவர்கள் சுமதியைச் சூழ்ந்துகொண்டு சம்பந்தா சம்பந்தமில்லாமல் அவளிடம் சிரித்துப் பேசலாயினர். சுமதியும் அவர்களிடமிருந்து முகத்தை முறித்துக் கொண்டு தப்பிப்போய் உள்ளே சென்று அமர முடியாதபடி சுற்றி வளைத்துக் கொண்டு நின்றுவிட்டார்கள். அவர்கள் அந்த நிலையில் அப்போது தனக்குத் தெரிந்தவர்களோ சக மாணவிகளோ யாராவது தன்னைப் பார்த்தால் என்ன நினைத்துக் கொண்டு போவார்கள் என்றெண்ணிய போது சுமதிக்கு மனம் கூசத்தான் செய்தது. எதற்கோ எங்கேயோ தொடங்கித் தான் எங்கேயோ வரக்கூடாத இடத்துக்கு வழி தப்பி வந்து விட்டதாகத் தோன்றியது அவளுக்கு. மேரி அந்தத் தியேட்டரில் இடைவேளையில் அவர்களை எல்லாம் சந்தித்தது தற்செயலாக இருக்கும் போலவும் பட்டது. முன்பே திட்டமிட்டது போலவும் பட்டது. எது உண்மையாயிருக்கும் என்று முடிவு செய்ய இயலவில்லை.
இடைவேளை முடிந்து மீண்டும் படம் தொடங்கிய போது மறுபடி மேரியின் குரல் சுமதியின் காதருகே வழக்கமான கீதோபதேசத்தைத் தொடங்கிவிட்டது.
“நம்ம தேசத்திலேதான் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய, இளமையின் அழகை எல்லாம் என்றைக்கோ புருஷன் என்று பெயர் சொல்லிக்கொண்டு தன்னிடம் வரப்போகிற எவனோ ஓர் ஊர் பேர் தெரியாத ஆண் பிள்ளைக்காக மட்டுமே என்று பணம் சேர்த்து வைக்கும் அநுபவிக்கத் தெரியாத கஞ்சப்பயலைப் போலச் சேர்த்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறாள். மற்ற ஊரில் எல்லாம் ஃப்ரீமார்ஷியல் லைஃப், எக்ஸ்ட்ரா மார்ஷியல் லைஃப், டேட்டிங் எல்லா சுதந்திரமும் பெண்களுக்குக் கிடைக்கிறது.”
சுமதி பதிலே சொல்லவில்லை. மேரியும் நிறுத்தவில்லை.
“அட்தி ஸேம் டைம்... ஓர் ஆண் தான் தாலி கட்டப் போகிற ஒரு பெண் எதிர்ப்படுகிறவரை அப்படி விரதம் காத்துக் கற்போடு பொறுத்திருக்கிறானா என்றால் இல்லை. ஆண் மட்டும் திருமணத்துக்கு முன்னால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பெண்தான் சுத்தமாயிருக்கணுமாக்கும்? இதுதான் இந்தியப் பண்பாடு என்கிறார்கள். என்ன பண்பாடோ இது?”
இதைக் கேட்டுச் சுமதி பதில் சொல்லாததோடு சற்றே எரிச்சலடைந்தாள். மேரி தன்னைக் குழப்பி மூளைச் சலவை செய்ய முயலுகிறாளோ என்ற எச்சரிக்கையும் ஜாக்கிரதை உணர்வும் மீண்டும் சுமதிக்குத் தோன்றியது.
“மேரி! ப்ளிஸ் லெட் மீ ஸீ த பிக்சர் ஃபர்ஸ்ட். அப்புறம் நாளைக்கு இதெல்லாம் விவாதிக்கலாமே?” என்று துணிந்து குறுக்கிட்டு மேரியின் வாயை அடைத்தாள் சுமதி. இல்லாவிட்டால் அப்போது மேரி ஓய்ந்தே இருக்கமாட்டாள் என்று தோன்றியது.
படம் ஒருவிதமாக முடிந்தது. மேரியும் அவள் சிநேகிதர்களும் சுமதியும் கும்பலாகத் தியேட்டருக்கு வெளியே சேர்ந்து வந்தார்கள். மேரி இப்போது டாக்ஸி தேட வில்லை. அவள் தியேட்டரில் சந்தித்த சிநேகிதர்களில் நடுத்தர வயதை உடைய ஒருவர் ஒரு புத்தம் புது மெர்ஸிடீஸ் பென்ஸ் காரைக் கொண்டு வந்து நிறுத்தி அவர்கள் இருவரையும் அதில் ஏறிக் கொள்ளச் சொன்னார்.
“நீ வேணும்னாப் போ மேரீ! நான் ஒரு ஆட்டோவில் ஹாஸ்டலுக்குப் போய்க்கிறேன்” என்று சுமதி ஒதுங்கிக் கொள்ள முயன்றாள்.
“உன்னை ஒண்ணும் நான் கடிச்சு முழுங்கிட மாட்டேன் சுமதி! ஏறிக்கோ, ஹாஸ்டல் வாசல்லே டிராப் பண்ணிட்டு அப்புறம் நாங்க போறோம்” என்றாள் மேரி.
சுமதி மேலும் தயங்கவே அந்தக் காரின் உரிமை யாளரே, “ஏறிக்கோம்மா! உன்னை ஹாஸ்டல்லே டிராப் பண்றேன், பயப்படாதே” என்று கெஞ்சினார்.
சுமதி மேலும் அவர்களிடம் மன்றாடிக் கொண்டு நிற்காமல், காரில் ஏறி முன் ஸீட்டில் மேரியின் அருகே அமராமல் பின் ஸீட்டில் தனியே அமர்ந்து கொண்டாள். கார் ஓசையின்றி வழுக்கிக் கொண்டு விரைந்தது.
தியேட்டர் வாசலில் புறப்பட்ட கார் அங்கிருந்து நேரே ‘ஸ்பென்ஸர்’ காம்பவுண்டுக்குள் புகுந்து நின்றது. அதுவரை மேரியும் அந்தக் காரைச் செலுத்தி வந்த வர்த்தகப் பிரமுகரும் தங்களுக்குள் ஆங்கிலத்தில் ஏதேதோ பேசிக்கொண்டு வந்தார்கள். சுமதியை அவர்கள் பின் ஸீட்டில் தனியே விட்டுவிட்டதனால், அவளைத் தங்கள் உரையாடலுக்கு இழுக்கவும் இல்லை. அவளும், அதில் கவனம் செலுத்தத் தயாராக இல்லை. ஏதோ அருவருப்படைந்த மனநிலையில் அப்போது இருந்தாள் சுமதி. அவர்கள் தன்னோடு பேசாமல் தன்னைப் பின் ஸீட்டில் தனியே விட்டுவிட்டதே அப்போது அவளுக்கு இதமாகவும் ஆறுதலாகவும் சுலபமாகவும் கூட இருந்தது.
ஸ்பென்ஸரில் போய்க் கார் நின்றதும், “நீங்க வண்டிலே இருங்க. பெர்மிட்டை எங்கிட்டக் குடுங்க. நான் போய் வாங்கிட்டு வந்துடறேன்” என்றாள் மேரி.
“நோ நோ, நீ இங்கேயே இரு. ஐ வில் கலெக்ட் மை ஸெல்ஃப்” என்று அந்தப் பிரமுகரே இறங்கிப் போனார்.
‘பெர்மிட் ஹோல்டர்ஸ் கவுண்ட்டர்’ என்ற பகு தியை நோக்கி அவர் நடப்பதைக் காரிலிருந்தபடியே சுமதி கவனித்தாள். மேரி காரில் முன்புறம் அமர்ந்திருந்தும் பின் ஸிட்டிலிருந்த சுமதியிடம் எதுவுமே பேசவில்லை. சுமதியும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். மேரி பேசுவதாகக் காணோம். பொறுமை இழந்த சுமதி “நயன் ஃபார்ட்டி ஃபை வோட ஹாஸ்டல் எண்ட் கேட் க்ளோஸ் பண்ணிடுவாங்க. நீ முதல்ல என்னை டிராப் பண்ணிட்டு அப்புறம் வேற எங்கே வேணும்னாப்போ மேரி! அதான் நான் அப்பவே ஆட்டோவிலே போறேன்னேன்” என்ற சிறிது கடுமையான குரலிலேயே சீறுவதுபோல் பேசினாள்.
“ஒரு பத்து நிமிஷம் பொறுத்துக்கோ. உன்னைப் பத்திரமாகக் கொண்டு போய் டிராப் பண்ணிடறோம்டீ. ஹாஸ்டல் வார்டன் அம்மாளே எத்தினியோ நாள் டாக்சி வரவழைச்சு ராத்திரிப் பதினொரு மணிக்குப் புறப்பட்டு எங்கெங்கோ சுத்திட்டு மூணு மணிக்குத் திரும்பி வரா. நீ என்னடான்னா ஹாஸ்டலைப்பத்தி ஒரேயடியா நடுங்கறே?”
“யார் எப்படியிருந்தா நமக்கென்ன மேரி? நாம நம்மளவிலே ஒழுங்கா இருப்போமே. அதில் என்ன தப்பு?”
“ஆகா, தாராளமா ஒழுங்கா இரு. உன்னை யார் வேண்டாம்னாங்க.”
மேரி அப்போது சுமதியை நோக்கிப் பேசிய குரலும் சூடேறித்தான் இருந்தது. பெர்மிட் ஹோல்டர்ஸ் கவுண்டரைத் தேடிப்போனவர் மேலே அழகாக ‘விஸ்கி’ என்ற அச்சிட்டிருந்த அட்டைப் பெட்டியுடன் திரும்பி வந்து காரைக் கிளப்பிப் புறப்பட்டார். சொன்னபடி மேரி முதலில் சுமதியை ஹாஸ்டல் முகப்பில் டிராப் செய்துவிட்டுத்தான் போனாள். மேரியின் சிநிநேகிதரும் அவளும் காரிலிருந்தபடியே சுமதிக்கு ‘குட்நைட்’ சொன்னார்கள். அப்போதிருந்த மனக்குழப்பத்தில் அவர்களிடம் பதிலுக்கு ‘குட்நைட்’ சொல்லக் கூடத் தோன்றாமல் ஹாஸ்டல் எண்ட்ரீ கேட்டை நோக்கிச் சுமதி ஒட்டமும் நடையுமாக விரைந்தாள்.
அறைக்குப் போய் முகம் கழுவிக்கொண்டு அவள் போவதற்குள் மெஸ் மூடிவிட்டார்கள். மெஸ்ஸில் சொல்லி விட்டுப் போயிருந்தாலாவது ஏதாவது எடுத்து வைத்திருப்பார்கள். சினிமாவுக்கு ப் புறப்படுகிற அவசரத்தில் மெஸ்ஸில் சொல்லவும் மறந்து போயிற்று. வெளியிலேயும் எதுவும் சாப்பிடவில்லை. இடைவேளையின் போது தியேட்டரில் கோகோ-கோலா சாப்பிட்டது தான், அதனால் பசி அதிகமாயிருந்தது.
மறுபடி கேட்வரை நடந்துபோய் கூர்க்காவிடம் சொல்லி பிஸ்கட் பொட்டலம், ரொட்டி ஏதாவது வாங்கிவரச் சொல்லலாம் என்ற தோன்றியது. மறுபடி படியிறங்கிக் கீழே போவதை வார்டனாவது வேறு யாராவது பார்த்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் அந்த எண்ணத்தையும் அடக்கிக் கொண்டு சுமதி பேசாமலிருந்துவிட்டாள். அன்றிரவு அவள் முழுப் பட்டினி கிடக்க வேண்டியதாகி விட்டது.
மாலையில நடந்த சம்பவங்கள் வேறு அவள் மனத்தை போதுமான அளவு குழப்பம் அடையச் செய்திருந்தன. தற்செயலாகச் செய்வது போல் மேரி எல்லாவற்றையுமே திட்டமிட்டுச் செய்கிறாளோ என்ற சந்தேகம் சுமதியின் மனத்தில் வலுப்பட்டுக் கொண்டிந்தது. காலேஜில் படிக்கிற வயதில் ஓர் இளம் பெண்ணுக்கு இத்தனை பணக்கார வர்த்தகர்களின் சிநேகிதம், கார்ச் சவாரி இதெல்லாம் சகஜமான முறையில் எப்படி சாத்தியம் என்பதைச் சுமதியும் யோசித்துப் பார்த்தாள். அவளுக்கு அது நேரடியாகப் புரியவில்லை. அதில் ஏதோ இடறுகிறாற்போல் இருந்தது. அது புரியவும் புரிந்தது. புரியாதது போலவும் இருந்தது. ‘லிக்கர் பெர்மிட்’ உள்ள நடுத்தர வயது சிநேகிதருக்கு, “நீங்க வண்டிலேயே இருங்க, பெர்மிட்டை எங்கிட்டக் குடுங்க, நான் நிமிஷமா வாங்கி யாந்துடறேன்” என்று அவள் பதில் சொல்லிவிட்டுச் சிரித்த காட்சி சுமதிக்குக் கண்களிலிருந்து இன்னும் மறையவில்லை.
மறுநாள் மேரியை வரவழைத்து அவளிடம் நேருக்கு நேர் கண்டித்துப் பேசிவிடவேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டாள் சுமதி. மேரியிடம் எந்தவிதமான ஒளிவு மறைவுமில்லாமல், “அடி மேரீ! உன்னிடம் இன்ன செலவுக்காக நான் இருநூறு ரூபாய் கடன் வாங்கினேன். அதை ஐம்பது ரூபாயாக நாலு மாதத்திலே திருப்பிக் கொடுத்துடுவேன். அவசியமானால் அதுக்கு வட்டிகூட வாங்கிக்கோ” என்று கறாராகச் சொல்லிவிட வேண்டும் என்றுகூட நினைத்தாள். கழுத்து நுனிவரை அன்றைய அனுபவங்கள் கசப்பாயிருந்தது அவளுக்கு. மேரியின் ஆண்பிள்ளைச் சிநேகிதர்கள் என்று அவள் தியேட்டரில் அறிமுகப்படுத்திய ஆட்கள் எல்லாமே தத்தாரிகளாக இருந்தார்கள். அவர்களில் ஒருத்தன் தனக்கு, கோகோ கோலா வேண்டாம் என்கிறபோது, “ஐ ஆல்வேஸ் ஹேட் ஸாஃப்ட் ட்ரிங்க்ஸ்” என்ற சொல்லி விட்டுச் சுமதியின் பக்கமாகப் பார்த்துக் கண்ணடித்தான். உடனே இன்னொருத்தன், “வயிறு சரியில்லேன்னா ஸோடா வேணும்னா சாப்பிடேன்” என்றான். அதைக் கேட்டு மறுபடியும் அந்த ஆள் சுமதியைப் பார்த்து முன்பு போலவே கண்ணடித்தபடி “ஐ நெவர் டேக் ப்ளெயின் ஸோடா” என்றான். இப்படி ஒரு கும்பலுக்கு ‘கோ - பிட்வின்’ ஆக மேரி பயன்படுகிறாள் என்பதை நம்ப முடியாமல் இருந்தது. அந்தக் கும்பலில் ஒருத்தன் தியேட்டர் இருட்டில் இடைவேளைக்குப் பின்பக்கத்திலிருந்த மற்றொருவனிடம் “டேய்! இந்த வாட்டி மேரி அறிமுகப்படுத்தின புதுமுகத்துக்கு நூற்றுக்கு நூறு மார்க் போடலாம்டா! சரியான வாளிப்புத்தான்” என்று சுமதிக்கும் காதில் விழும்படியாகவே சொல்லிக் கொண் டிருந்தான். சுமதி மெல்ல மெல்ல உஷாராகிவிட்டாள். ஒரு சபலத்தினால் மேரியிடம் கைநீட்டிப் பணம் வாங்கிவிட்டாலும் இப்போது சுமதியின் மனதில் தற்காப்பு உணர்ச்சியே மேலெழுந்து நின்றது. மேரியைப் பற்றிப் பயமாகவும் இருந்தது.
மறுநாள் காலை வகுப்புக்கள் தொடங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே மேரி கல்லூரிக்கு வந்துவிட் டாள். அவளே சுமதியின் அறைக்குத் தேடி வந்தாள். முதல் நாள் சுமதிக்கு மிகவும் சிரமம் கொடுத்துவிட்ட தாகச் சொல்லித் தானாகவே வலிந்து முதலில் மன்னிப்பும் கேட்டுக் கொண்டாள். சுமதி சிறிது நேரம் தயங்கியபின் ஒரு சிறிதும் ஒளிவு மறைவின்றி எல்லா விவரங்களையும் மேரியிடம் சொல்லி அவள் கடனாகத் தந்த பணத்தை நாலு தவணையில் ஐம்பது ரூபாயாகத் தந்து விடுவதாய்த் தெரிவித்தபோது மேரி “வாட் எஃ பூலிஷ் கேர்ள் யூ ஆர். பேப்பர்ல வந்த விளம்பரத்தைப் பார்த்தா நூறு ரூபாய் எம்.ஒ. பண்ணினே?” என்று பதிலுக்கு வினவினாள்.
“அதிலே என்ன தப்பு? நடிப்பிலே முன்னுக்கு வந்து பேரும் புகழும் சம்பாதிக்கணும்னு எனக்கு ஆசை. பணத்தைக் கட்டி அப்ளை பண்ணியிருக்கேன்.”
இதைக் கேட்டு மேரி பதில் சொல்லாமல் சிரித்தாள். பின்பு சிறிது நேரம் கழித்து,“இதெல்லாம் பணம் கட்டி அப்ளைப் பண்ணி சான்ஸ் வர்ர விஷயமில்லே; உண்மையிலேயே நீ ஸ்டாராகணும்னு இண்ட்ரெஸ்ட் இருந்தால் என்னோட புறப்பட்டு வா. எங்க வீட்டுக்குப் பக்கத்திலே இருக்கிற ஃபேர்லாண்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப்புக்கு தினம் சாயங்காலம் நாலஞ்சு பெரிய புரொடியூஸர்ஸ் வர்ராங்க ரெண்டு மூணு புகழ்பெற்ற டைரக்டர்ஸ் கூட வர்ராங்க. நான் அவங்ககிட்ட உன்னை இன்ட்ரொடியூஸ் பண்ணி சான்ஸ் வாங்கித் தரேன். அது ஒண்ணும் கஷ்டமில்லே, என்னாலே சுலபமா முடியும். அதைச் செய் சுமதி”
சுமதி ஃபேர்லாண்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப்புக்கு வருகிற தயாரிப்பாளர்கள், டைரக்டர்களின் பெயர்களைத் தெரிவிக்குமாறு மேரியிடம் கேட்டாள். மேரி சிறிதும் தயங்காமல் உடனே பெயர்களை அடுக்கி விவரித்தாள். எல்லாமே புகழ் பெற்ற பெரிய பெயர்களாகவே இருந்தன. சந்தேகமே இல்லை. அவர்களில் ஒருவர் மனம் வைத்தால் கூடத் தான் நிச்சயமாக ஸ்டாராகிவிட முடியும் என்று சுமதிக்குத் தோன்றியது. சுமதியின் மனத்தைப் பற்றி மறுபடியும் சபலம் வலை விரித்தது. எதிலிருந்து தப்புவதற்காக அவள் மேரியிடம் எல்லாவற்றையும் சொல்லி விவரித்து மாதம் ஐம்பது ரூபாய் வீதம் நாலு மாதத்தில் அவள் கடனைத் தீர்த்துவிடுவதாகச் சொல்லியிருந்தாளோ அதிலேயே மீண்டும் வகையாகச் சிக்கினாள் அவள். அன்று மாலையே மேரியோடு பரங்கிமலைக்கு வர இணங்கினாள் சுமதி.
“ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் மேரீ! உன்னோட சேர்ந்து போனால் வார்டன் கோபித்துக் கொள்கிறாள். நீ முதலிலேயே போயி ஜெமினி சர்க்கிள் கிட்ட இரு. நான் பின்னாடி வந்து உன்னோட சேர்ந்துக்கிறேன். போயிட்டு வந்துடலாம். எட்டரை மணிக்குள்ளே நான் ஹாஸ்டலுக்குத் திரும்பிடணும். சினிமாவிலேயிருந்து திரும்பி மெஸ்ஸிலே சாப்பாடு கிடைக்காமே நேற்று ராத்திரியே நான் பட்டினி கிடக்கும்படி ஆச்சு. இன்னிக்கும் அப்படி ஆயிடக்கூடாது.”
“எட்டரை மணி எதுக்குடி ? நீ ஏழு மணிக்கே அங்கேயிருந்து திரும்பிடலாம். அதற்கு நான் பொறுப்பு சுமதி?”
அன்று மாலை மறுபடி வார்டனிடம் தியாகராய நகரில் உறவுக்காரப் பாட்டி ஒருத்தி சாகக் கிடப்பதா கவும், அவளை உடனே பார்த்தாக வேண்டும் என்பதாகவும் பொய் சொல்லி இரண்டுமணி நேரம் வெளியே போய்வர அனுமதி பெற்றாள் சுமதி. சொல்லிவைத்த படியே ஜெமினி சர்க்கிளில் மேரி டாக்ஸியோடு காத்திருந்தாள்.
இருபது நிமிஷத்தில் பரங்கிமலைப் பகுதியில் விசாலமான தோட்டத்தோடு கூடிய ஓர் ஓட்டடுக்கு வீட்டுக்குள் டாக்சி போய் நின்றது. அந்தத் தோட்டத் திலேயே ஒரு பகுதியில் கீற்றுக் கொட்டகை போல் ஒரு பெரிய ஷெட் இருந்தது. அந்த ஷெட்டின் முகப்பில் ‘ஃபேர்லாண்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப்’ என்று போர்டு தொங்கியது. வெளியே ஐந்தாறு பெரிய கார்கள் நின்றன. சுமதியை இரண்டு நிமிஷம் வெளியே நிற்கச் சொல்லி வேண்டிக் கொண்டபின் முதலில் தான் மட்டும் உள்ளே சென்றாள் மேரி. ஐந்து நிமிஷம் கழித்து மறுபடி வெளியே வந்து, “வா சுமதி!” என்று அவளையும் உள்ளே அழைத்துச் சென்றாள். மேரியுடன் சுமதி படபடக்கும் நெஞ் சுடன் சிரமப்பட்டுத் தடுமாறாமல் நடந்து உள்ளே சென்றாள். வெளிப் பார்வைக்கு ஷெட் போலத் தெரிந்தாலும் உட்புறம் நன்கு டெகரேட் செய்யப்பட்டிருந்தது அந்த இடம்.
உள்ளே மதுக் கோப்பைகளும், பாட்டில்களும், சோடாக்களும் நிறைந்த டேபிளைச் சுற்றி நாலைந்து பேர் அலங்கோலமாக அமர்ந்திருந்தனர். சிலர் கால்களை மேஜை மேல் கூடத் தூக்கிப்போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தனர்.
“இவர்தான் குபேரா பிக்சர்ஸ் குப்புசாமி, அவர் அன்புமணி சினிடோன், அந்த பக்கம் இருக்கிறது ஆராவமுதன் கம்பெனி” என்ற அந்த நிலையிலேயே அவர்களைச் சுமதிக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கினாள் மேரி. அவர்களில் ஒருத்தர் மட்டும் தலைநிமிர்ந்து “இது தான் நீ சொன்ன அந்தப் புதுப் பொண்ணா?” என்று மேரியை நோக்கிக் கொச்சையாக நாக்குழற வினவினார்.
அந்தச் சூழ்நிலை பொறுக்காமல் சுமதிக்கு குமட் டிக் கொண்டு வந்தது. மேரி அவளை வற்புறுத்தி அங்கே ஒரு நாற்காலியில் பிடித்துத் தள்ளி உட்கார வைத்து விட்டுப் போய்விட்டாள்.
அங்கே அக்கம்பக்கத்தில் சில மேஜைகளில் ஒரு தினுசாகத் தெரிந்த பெண்கள் சிலர் ஆண்களோடு சிரித்துப் பேசிக் கும்மாளம் அடித்தபடி சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். விளையாடும்போதே அந்தப் பெண்கள் வரம்பு மீறி ஆண்களைத் தொடுவதும், ஆண்கள் அவர்களைத் தொடுவதும் நிகழ்ந்து கொண்டிருந்தன. சிரிப்பொலியும், எக்காளமிடும் குரல்களும், அரட்டைச் சொற்களுமாக அங்கே சுற்றிலும் கேட்டுக் கொண்டி ருந்தன. மது, சிகரெட் புகை நெடி வேறு. மேரி அவளை உள்ளே கொண்டு வந்து விட்டுப் போனவள்தான், அப்புறம் திரும்பவில்லை, சுமதி மருண்டு போய்ச் சுற்றும் முற்றும் பார்த்தாள். எல்லாக் கண்களும் அவளையே நோக்கி வெறித்தபடி இருந்தன.
அதற்குள் அவள் எந்த நாற்காலியில் அமர்ந்திருந் தாளோ அந்த நாற்காலிக்குரிய மேஜையைச் சுற்றி வேறு நாற்காலிகளில் அமர்ந்த ஆண்களில் ஒருவர், “கமான் டார்லிங் ! ஆட்டத்தைத் தொடங்கலாமா?” என்று சீட்டுக்கட்டை கலைக்கத் தொடங்கியிருந்தார்.
சுமதிக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண் டது. பதில் சொல்லலாம் என்றால் தொண்டைக் குழியை ஏதோ அடைத்துக் கொள்வது போல் இருந்தது. வாய் விட்டுப் பேச வரவில்லை.
அடுத்த கணமே சுற்றி இருப்பவர்கள் என்ன நினைத் துக் கொண்டாலும் பரவாயில்லை என்று தட்டுத் தடுமாறி எழுந்திருந்து ஓட்டமும் நடையும் கலந்த ஓர் அவசரத்தில் அங்கிருந்து வெளியேறினாள் சுமதி. அவளுடைய நல்ல காலமோ என்னவோ வெளியே அப்போதுதான் யாரோ ஒருவர் டாக்சியில் வந்து இறங்கி மீட்டரில் தொகை கணக்குப் பார்த்து அதை ‘டிஸ்போஸ்’ செய்து கொண்டிருந்தார். வெளியே ஓடிவந்த சுமதி பின்புறம் கட்டிடத்தின் ஏதோ ஒரு ஜன்னல் வழியாக மேரியின் குரல் தன்னை இரைந்து கத்திக் கூப்பிடுவதையும் பொருட்படுத்தாமல் டாக்சிக் கதவைத் திறந்து அதற்குள் ஏறிக் கதவைப் படிரென்று அடைத்துக் கொண்டாள்.
டாக்சி டிரைவர் மீட்டரைத் தூக்கி மறுபடி சாய்த்து விட்டு, வண்டிக்குள் ஏறி அமர்ந்து கொண்டு, “எங்கே போகணும்மா” என்று கேட்டுக் கொண்டே ஸ்டார்ட் செய்தான். நல்லவேளை, அவன் மறுக்கவில்லை.
வேகமாகப் படபடத்து அடித்துக் கொள்ளும் நெஞ்சுடன் தன்னுடைய கல்லூரி விடுதி இருந்த சாலையின் பெயரைச் சொன்னாள் சுமதி. தன் குரல் என்னவோ மாதிரி இருப்பதை அவள்தானே அப்போது உணர்ந்தாள்.
“மேலே ஒரு ரூபாய் போட்டுக் குடுத்துடும்மா” என்றான் டாக்சி டிரைவர். அவள் பதில் சொல்ல வில்லை. அந்த மவுனத்தை அவளுடைய சம்மதமாக அவன் எடுத்துக் கொண்டான். டாக்சி விரைந்து ஓடத் தொடங்கியது.
டாக்ஸி சிறிது தொலைவு விரைந்து பின் பிரதான சாலையில் திரும்பிக் கிண்டி தொழிற்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோதுதான் சுமதிக்குத் தான் செய்தது சரியா தவறா என்பது போன்ற கேள்வியே மனத்தில் எழுந்தது.
‘சினிமாவில் நடிக்கச் சான்ஸ் வாங்கித் தருகிறேன் என்று தன்னை எங்கேயோ இழுத்துவந்து சீரழிப்பதற்கு மேரி முயல்கிறாள்’ என்று ஒரு கணமும் ‘மேரியின் மேல் என்ன தவறு? அவள் நாலைந்து தயாரிப்பாளர்களுக்கு என்னை அறிமுகப்படுத்துவதற்குள்ளேயே நான் பயந்து போய் என்னவோ ஏதோ என்ற நினைத்துக்கொண்டு ஓடிவந்து விட்டால் அது மேரியின் தவறா?’ என்று மற்றொரு கணமும் மாறி மாறித் தோன்றியது. சுமதியின் மனத்தில் தான் பதற்றத்தின் காரணமாக அவசரப்பட்டு விட்டோமோ என்று கூட இப்போது அவளுக்குத் தோன்றலாயிற்று. அந்த ஆட்களிடம் சீட்டு விளையாட ஆரம்பித்து அவர்கள் கையைக் காலைப் பிடித்து இழுப்பதற்கு முன்னர் வெளியே தப்பி ஓடிவந்தது நல்லதுதான் என்பது போலவும் ஓரொரு சமயம் தோன்றியது. பல விதமாக நினைத்தாள் அவள். சிந்தனை தறிகெட்டு ஓடியது.
டாக்ஸியை ஹாஸ்டல் மெயின் கேட்டுக்கு வெளியிலேயே நிறுத்திவிட்டு விடுதி அறைக்கு நடந்து போய்ப் பணம் எடுத்துக்கொண்டு திரும்பி வந்து மீட்டர்படியும் அதற்குமேல் ஒரு ரூபாயும் கொடுத்தாள் சுமதி. அன்றிரவு பலவிதமான சிந்தனைகளால் சுமதிக்கு நெடுநேரம் உறக்கம் வரவில்லை. பயமும், திகைப்பும், குழப்பமும் அவளைப் பிடித்துக் கொண்டிருந்தன.
மறுநாள் காலையில் மேரி வகுப்புக்கு வரவில்லை. சுமதி அரை நாள் லீவு கேட்டு வாங்கியபின் யாரிடமும் சொல்லாமல் மெயின்ரோட்டுக்கு வந்து பஸ் ஏறிக் கோடம்பாக்கம் சென்றாள். அவள் கைப் பையில் புது முகங்களை நடிக்க வைப்பதாக விளம்பரப்படுத்திய பாலன் நாடகக் குழுவின் கடிதம் இருந்தது. வெளியூரில் பெற்றோர் உள்ள மாணவிகளுக்குக் கார்டியன் என்று யாராவது உள்ளூர் உறவினரைப் போட்டுக் கொண்டு அவர் கையெழுத்திருந்தால் லீவு, வெளியே போக அனுமதி எல்லாம் வாங்கி விடலாம். சுமதிக்குச் சென்னையில் ஓர் அத்தையைத் தவிர உறவினர் என்று யாரும் அதிகம் இல்லாததால் வார்டன் மாலதி சந்திரசேகரனே கார்டியனாக இருந்தாள். ஆகவே அனுமதிகள் மிகச் சுலபமாகக் கிடைத்தன.
தான் பணம் எம்.ஓ. செய்து நடிப்பதற்கு மனுப்போட்ட திட்டத்தை விட்டுவிட்டு மேரியின் மூலம் முயன்றதால் தானே இந்த வம்பெல்லாம் வந்தது? தாம் எம்.ஓ. செய்து விண்ணப்பித்த இடத்திலேயே போய்க் கேட்டுவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டு சுமதி ஒர் ஆவேச வெறியுடன் புறப்பட்டிருந்தாள். நடந்தே போனால் மதிப்பார்களோ, மதிக்கமாட்டார்களோ, அது எப்படிப்பட்ட இடமோ என்று தயங்கி வடபழனி பஸ் ஸ்டாண்டு வரை பஸ்சில் போய் அங்கே இறங்கி ஒரு டாக்ஸி வைத்துக் கொண்டு போனாள் சுமதி. அந்த இடம் வடபழனியிலிருந்து மிகவும் பக்கத்தில்தான் இருந் தது. டாக்சியை ‘வெயிட்டிங்’கில் வைத்துக் கொண்டே விசாரித்தாள் அவள். அந்தக் கட்டிடத்தில் பாத்ரும் அளவு சிறியதாயிருந்த ஒர் அறையைச் சுட்டிக் காட்டி “நேத்து வரை யாரோ இருந்தாங்கம்மா. நேத்துச் சாயங் காலமாத்தான் வாடகை கணக்கைத் தீர்த்துக் காலி பண்ணினாங்க” என்றார் கட்டிடச் சொந்தக்காரர். சுமதி விவரங்களைச் சொல்லி விசாரித்தாள்.
“தினம் நூறு நூறு ரூபாய் மணியார்டரா ஆயிரம் இரண்டாயிரம்னு பத்துப் பன்னிரண்டு நாளா வந்திச்சு. வாங்கினாங்க. பணமெல்லாம் வந்ததும் காலி பண்ணிட் டாங்க...” என்று கர்மயோகியைப் போல் பட்டுக் கொள்ளாமல் பதில் சொன்னார் கட்டிடச் சொந்தக் காரர். சுமதி மேலும் எதற்கோ தயங்கி நின்றபோது,
“எங்களுக்கு வாடகை ஒழுங்காகக் குடுக்குறாங்களா இல்லையான்னுதான் நாங்க பார்ப்போமே ஒழிய டெனன்ட்ஸ் என்ன மாதிரி பிஸினஸ் பண்றாங்கன்னு பார்க்கிறது எங்க வேலையில்லை. உங்களை மாதிரி விவரந் தெரிஞ்சவங்க இப்படி விளம்பரத்தை எல்லாம் நம்பிப் பணம் அனுப்பலாமா?” என்று கேட்டார் அவர். சுமதி தொடர்ந்தாள்.
“அவங்களுக்கு டெலிஃபோன் கூட இருந்திச்சே?”
“டெலி ஃபோனாவது ஒண்ணாவது? எங்க டெலிஃபோன் நம்பரை அவங்க லெட்டர் ஹெட்லே அச்சடிச்சுக்கிட்டாங்க, அவ்வளவுதான்.”
சுமதி ஏமாற்றத்தோடு போஸ்ட் ஆபீசுக்குப் போய்த் தபால் பெட்டி எண்ணைச் சொல்லி விசாரித்தாள். அவர்கள் சற்றுமுன் அவள் போய்த் தேடிட்டு வந்த அதே விலாசத்தை அவளிடம் குறித்துக் கொடுத்தார்கள். பொறுப்பான பதில் எங்கிருந்தும் யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை. மணியார்டர் ரசீதை வைத்து நடவடிக்கை எடுக்கலாம் என்றாலும் மணியார்டர் ரசீதையும் தந்திரமாக விண்ணப்பத்தோடு இணைத்து அனுப்பச் சொல்லியிருந்தார்கள் அவர்கள்.
பத்து இருபது ரூபாய் டாக்ஸிக்குச் செலவானது தான் மிச்சம். கெட்ட சொப்பனம் கண்டதுபோல் அதை மறந்துவிட முயன்றாள் சுமதி. ஆனால் மறக்கவும் முடியவில்லை. ஏமாந்து விட்டோம் என்பது ஞாபகம் இருந்தது. ‘பணம் கொடுத்து மயக்கி அழைத்துச் சென்று சினிமாவில் சேர்த்து விடுகிறேன்’ என்று சொல்லும் மேரி ஒரு புறமும், பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டவர்கள் மற்றொரு புறமும் சுமதியின் மனத்தைக் குழப்பினர். இரண்டு நாள் கழித்து மேரி அவளைக் கல்லூரியில் சந்தித்தபோது அவளுடைய செயலுக்காக மிகவும் வருத்தப்பட்டாள். “ரெண்டு பெரிய மனுஷாளுக்கு இண் ரொட்டியூஸ் பண்றப்பவே பயந்துகிட்டு ஓடியாந்துட்டா அப்புறம் நீ எப்படி ஸ்டார் ஆறது?”
சுமதி இதற்குப் பதில் சொல்லவில்லை, மேரியும் அவள் மேல் நம்பிக்கை இழந்து அவளை விட்டுவிடத் தயாரில்லை. சுமதிக்கு அட்வைஸ் செய்தாள்.
“நீ ரொம்ப சேஞ்ஜ் ஆகணும். அடுத்தவங்களை நம்பணும். ஸோஷியலா இருக்கப் பழகணும். இப்போ இருக்கிற இந்தியன் ஸொஸைட்டி ஓரளவுக்குப் ‘பெர்மிஸிவ்’ ஆக இருக்கா விட்டாலும் நீயே கட்டுப்பெட்டியா நடந்துக்கிறியே? இந்த மடிசஞ்சித் தனமெலாம் போனாத் தான் நீ முன்னுக்கு வரலாம்.”
மேரிக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல் “முதல் இன்ஸ்டால்மெண்ட் ஐம்பது ரூபா ஃபர்ஸ்ட் வீக் தரேன் மேரீ!” என்று ஆரம்பித்த சுமதியைத் தடுத்து,
“ஏன் பணம் பணம்னு அதையே ஞாபகப்படுத்திக் கிட்டிருக்கே? எனக்கொண்ணும் பணத்துக்கு அவசரமில்லேடீ சுமதி ! உன் ஃபிரண்ட்ஷிப்தான் பெரிசு. பணம் பெரிசில்லே” என்று மேரி அப்போதும் பணத்தைப் பொருட்படுத்தாமல்தான் பேசினாள்.
ஒருவாரம் கழித்து ஒருநாள் அதிகாலையில் சுமதிக்கு ஒரு ஃபோன் வந்தது. வார்டன் அறையில் உள்ள டெலிஃ போனில்தான் கூப்பிட்டிருந்தார்கள். போய்ப் பேசினால் எதிர்ப்புறம் அம்மாவின் குரலைக் கேட்டு சுமதிக்கு ஆச்சரியமாகப் போயிற்று. அம்மா சொன்னாள்.
“நாங்க ஒரு நாலஞ்சு டீச்சர்ஸ் எங்க ஸ்கூல் கேர்ள்ஸை மெட்ராஸ், மைசூர் எல்லாம் எக்ஸ்கர்ஷன் சுத்திக் காட்ட அழைச்சிட்டு வந்திருக்கோம். திடீர்னு நானும் புறப்பட்டேன். உனக்கு முன் தகவல் எழுத முடியலே. நீ எப்படி இருக்கே...? நாங்க மத்தியானம் பெங்களூர் புறப்படனும், இப்போ பதினொரு மணிக்குள்ள நான் அங்கே வரேன், நீ எங்கேயும் வெளியிலே புறப்பட்டுப் போயிடாதே?”
“நீங்கள்ளாம் எங்கேம்மா தங்கியிருக்கிங்க?”
“இங்கே சிந்தாதிரிப் பேட்டையிலே ஏதோ ஒரு ஸ்கூல்லே தங்கியிருக்கோம்.”
“நான் வேணா அங்கே வந்து பார்க்கட்டுமா அம்மா?”
“வேண்டாம் ! நானே வரேன். வார்டன் அம்மாளையும் பார்த்தாப்பில இருக்கும். நீ அங்கேயே இரு.”
“சரி வா; நான் ரூம்லியே இருக்கேன்” என்ற சொல்லி ஃபோனை வைத்தாள் சுமதி.
காலை ஒன்பதரை மணி சுமாருக்குத் தன் அறையில் ஏதோ படித்துக் கொண்டிருந்தாள் சுமதி. வார்டன் கூப்பிடுவதாக வேலைக்காரி வந்து சொன்னாள். சுமதி உடனே அறைக் கதவைப் பூட்டிக் கொண்டு வார்டனின் இடத்துக்குச் சென்றாள்.
அங்கே வார்டனின் நாற்காலி காலியாயிருந்தது. எதிர்ப்புறம் வரிசையாகப் போடப்பட்டிருந்த பார்வையாளர் நாற்காலிகள் ஒன்றில் அம்மா உட்கார்ந்து ஏதோ கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். சுமதியைப் பார்த்ததும் அம்மா கடிதத்தை மடித்துத் தன் கைப் பையில் வைத்துக் கொண்டுவிட்டாள்.
“என்னம்மா? நீ நேரே ரூமுக்கு வராமே இங்கே வந்து உட்கார்ந்து.”
“வார்டனைப் பார்த்தேன். அப்படியே உனக்கும் இங்கே இருந்தே சொல்லி அனுப்பினேன்.”
“அறைக்கு வாம்மா போகலாம். இங்கே பேசுவானேன்?”
“இங்கேதாண்டி பேசணும்! இரு வார்டனும் வந்துடட்டும். எனக்கு இன்னிக்கு ரெண்டிலே ஒண்ணு தெரிஞ்சாகனும். நீ தொடர்ந்து படிக்கப் போறியா. அல்லது இப்படித்தான் உருப்படாமப் போகப் போறியா?” திடீரென்று அம்மாவின் குரல் கடுமையாக மாறியது. அவள் தன் கைப் பையிலிருந்து அந்தத் தடித்த உறையை எடுத்துப் பிரித்துக் கடிதத்தைச் சுமதியிடம் காட்டினாள். அது பாலன் நாடகக் குழுவுக்கு சுமதி எழுதிய கடிதம். உறையில் விலாசதார் இல்லை என்ற சிவப்புமை அடித்த கோடோடு கல்லூரி விடுதிக்கே அக்கடிதம் திருப்பி அனுப்பப்பட்டிருந்தது.
“என்னடி இதெல்லாம்?”
சுமதி தலைகுனிந்தாள். தாய்க்கு அவள் பதில் சொல்ல முடியவில்லை. தான் வகையாக மாட்டிக் கொண்டு விட்டோமென்று அவளுக்கே தெரிந்தது.
“உன்னைப் படிக்கணும்னு மெட்ராஸுக்கு அனுப்பினேனா? இப்படி உருப்படாமப் போறதுக்காக அனுப்பினேனாடி? ஏண்டி இப்படிப் புத்தி கெட்டுப் போச்சு உனக்கு?”
சுமதியிடமிருந்து மெளனம்தான் நீடித்தது. வார்டன் அறையை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அம்மாவின் குரல் தணிவதாக இல்லை. தொடர்ந்து சூடேறிக் கொண்டே இருந்தது. வார்டன் முன்னாலேயே அம்மா இப்படி ஆரம்பித்துவிட்டாளே என்று கூசினாள் சுமதி. கடிதத்தை வார்டன்தான் அம்மாவிடம் கொடுத்தி ருப்பாள் என்பது நினைவு வரவே வார்டனும் தன்னைக் கை விட்டு விட்டதைச் சுமதி உணர்ந்தாள். அவள் கண்களில் நீர் அரும்பியது.
அம்மா, சுமதியை மிகவும் கடுமையாகக் கண்டித்து எச்சரித்து விட்டுப் போனாள். ‘சுமதி விஷயத்தில் எந்த விதிகளையும் தளர்த்தவோ தாராளமாக நடந்து கொள்ளவோ கூடாது’ என்று வார்டன் அம்மாளிடமும் சொன்னாள். “இன்னொரு தடவை இப்படி ஏதாவது தத்துப்பித்தென்று பண்ணினாயோ படித்துக் கிழித்தது போதுமென்று காலேஜை நிறுத்திவிட்டு வீட்டோடு வாசலோடு பாத்திரம் தேய்த்துக் கோலம் போட்டுக் கொண்டு கிடக்கட்டுமென்று கொண்டு போய்த் தள்ளி விடுவேன்” என்ற சுமதியிடம் கடுமையாக எச்சரித்தி ருந்தாள் அம்மா.
அம்மா புறப்பட்டுப் போன பின்பு வார்டன் அம்மாள், “சுமதி! நீ என்னைத் தப்பாக நினைச்சுக்காதே! இதெல்லாம் உன் நன்மைக்காகத்தான். நீ தட்டுக் கெட்டுச் சீரழிந்து விடக் கூடாதேன்னுதான் இந்தக் கண்டிப் பெல்லாம்” என்று அருகே வந்து நின்ற கொண்டு ஆதரவாகத் தலையைக் கோதி விட்டபடி சுமதியிடம் சொன்னாள்.
இதற்கு மறுநாளிலிருந்து விரக்தியும் ஏமாற்றமும் தான் நினைத்தபடி நடக்காமல் போனதும் சுமதியைச் சோர்ந்து போகச் செய்திருந்தன. அவள் படிப்பிலும் வகுப்புக்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கினாள். ஊரிலிருந்து திரும்பி வந்த சுமதியின் ரூம்மேட், “என்னடீ சுமதி! ஏன் என்னவோ போல இருக்கே? எதையோ பறிகொடுத்த மாதிரி உட்கார்ந்திருக்கியே?” என்று விசாரித்தாள்.
“ஒண்ணுமில்லே. நான் எப்பவும் போலத்தானே இருக்கேன்” என்று சொல்லிச் சுமதி சமாளிக்க முயன்றா லும் அவள் குரல் தெம்பாக இல்லை. தொடர்ந்து பல நாட்கள் சுமதி எங்கும் வெளியே செல்லவில்லை. ஹாஸ்டல் எல்லைக்குள்ளேயே அவளுடைய நாட்கள் கழிந்தன. தன் அழகையும், கவர்ச்சியையும் பற்றி அவளுக்குத் தற்காலிகமாக ஏற்பட்டிருந்த பெருமிதமும், கர்வமும் சிறிது மறந்திருந்தன. தான் சினிமாவில் நடித்துப் புகழ் பெறுவதற்காகவே பிறந்தவள் என்ற இறுமாப்பு உணர்ச்சியும் உள்ளூர ஒடுங்கிப் போயிருந்தது. மேரியை எதிரே காண நேரும்போதெல்லாம் இவள் பயந்து ஒதுங்குவதும் மேரி சிரித்துக் கொண்டே போவதும் வழக்கமாகி இருந்தன. அந்த வழக்கத்தை மீறி, “என்னடி சுமதீ? எப்படி இருக்கே?” என்று மேரியாகவே வலிய விசாரித்தபடி அருகே வந்த நேரங்களில் கூட சுமதி முகத்தைத் திருப்பிக் கொண்டு போயிருக்கிறாள். சில நாட்கள் இப்படி நடந்தது.
ஆனால் சுமதி இப்படி எல்லாம் வித்தியாசமாக நடந்து கொண்டும் கூட மேரி அவளிடம் தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கவே இல்லை. இது சுமதிக்கு வியப்பை அளித்தது. பெண், சினிமாக் கம்பெனிக்கு நூறு ரூபாய் பணம் அனுப்பித் தண்டச் செலவு செய்தாள் என்பது தெரிந்ததுமே சுமதியின் அம்மா மிகமிகக் கருமித் தனமாகப் பணம் அனுப்ப ஆரம்பித்தாள். மெஸ்ஸுக்குக் கட்டியது போகச் சோப்பு, சீப்பு, பவுடர் வாங்கக்கூடப் போதாமல் இருந்தது. இந்த லட்சணத்தில் மேரியின் கடனைத் திருப்பிக் கொடுப்பதைப் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட முடியாமல் இருந்தது.
மாதக்கணக்கில் ஓடிவிட்ட பின்னும் மேரியின் கடன் அப்படியேதான் இருந்தது. மேரியும் கேட்கவில்லை. சுமதியும் கொடுக்க முடியவில்லை. ஆனால் வகுப்புக்களில் மைதானத்தில், மாடிப் படிகளில் ஏறுகையில், இறங்குகையில் சந்திக்கும் போது அவள் சுமதியிடம் சுமுகமாகப் பேசுவதும், செளக்கியம் விசாரிப்பதும் மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தன. சுமதி பாராமுக மாக நடந்து கொண்டால் கூட, மேரி சுமுகமாகவே இருந்தாள். சுமுகமாகவே சிரித்துப் பேசிப் பழகுகிறாள்.
அவளிடம் வாங்கிய இருநூறு ரூபாயைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்பது சுமதியின் மனத்தில் இன்னும் உறுத்திக் கொண்டுதான் இருந்தது. கல்லூரியில் படித்துக் கொண்டே ஓய்வு நேரத்தில் எப்படிச் சம்பாதிப்பது என்பது அவளுக்குப் புரியவில்லை. பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதிப் பார்த்தாள். எல்லாம் சுவரில் அடித்த பந்துபோல் திரும்பி வந்தன. ஒரு பெரிய கவர்ச்சி வாரப் பத்திரிகையின் ஆசிரியர் மட்டும் அழகிய பெண்கள் தாங்கள் எழுதிய கதைகளோடு நேரில் வந்து தம்மைப் ‘ப்ளிஸ்’ செய்தால் கதைகளைப் பிரசுரித்துத் தாராளமாகப் பணம் கொடுப்பதாகச் சொன்னார்கள். அவரை ‘ப்ளீஸ்’ செய்வது எப்படி என்பதை விசாரித்தால் அது மேரியின் ‘ஃபேர்லாண்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப்பை’ விட மோசமாக இருந்தது. பல பெரிய குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்கள்கூட அந்தப் பத்திரிகாசிரியரின் தயவுக்காக அப்படி எல்லாம் செய்வதாகக் கேள்விப் பட்டபோது சுமதியால் நம்பமுடியாமல் இருந்தது. அதே சமயத்தில் அவற்றைப் பொய் என்றும் அவளால் தள்ளிவிட முடியவில்லை.
சுமதியின் அம்மாவோ ஒவ்வொரு செலவாகக் குறைக்கச் சொல்லி எழுதிக் கொண்டிருந்தாள். படிக்கிற காலத்தில் படிக்கிற வயதில் தலைக்கு வாசனைத் தைலம் இல்லாவிட்டால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. வெறும் தேங்காய் எண்ணை பூசி வாரிக்கொள் போதும், பவுடர் வேண்டாம். பவுடருக்கு ஆகிற செலவு அனாவசியம் என்று ஒவ்வொன்றாகக் குறைக்கச் சொல்லி அம்மா எழுதிய கடிதங்களில் எல்லாம் மகளுக்கான உபதேசப் பட்டியல் இருந்தது. சிக்கன விளக்கவுரை இருந்தது.
சுமதி ஏற்கெனவே நவநாகரிகப் பொருட்களின் மேல் அளவற்ற ஆசைகள் நிறைந்தவள். விலையுயர்ந்த சோப்பு, விலையுயர்ந்த ஹேர் ஆயில் என்று உபயோகிக்க விரும்புகிறவள். அம்மா அவளைச் சிக்கனப்படுத்த சிக்கனப்படுத்த அவள் பேராசைகள் உள்ளூர வளர்ந்தன. அடி பட்ட நாகம் படத்தை மேலே மேலே உயர்த்திச் சீறுவது போல் அவளுடைய ஆசைகளும், சபலங்களும் மேலெழுந்தன. மற்றவர்களுக்கிடையே ஒரு மகாராணிபோல் உலாவர வேண்டுமென்று அவள் விரும்பினாள். தாயின் கட்டுப்பெட்டித் தனத்தை அவள் வெறுத்தாள். விலையுயர்ந்த சேலை, பிளவுஸ் பீஸ் இவைகளை எல்லாம் அவள் விரும்பினாள். தன்னைப் பிறருக்கு எடுப்பாகக் காண்பிக்கும் ஆடை அலங்காரம் அழகு சாதனங் கள் இவற்றை எல்லாம் அவள் தேடித் தவித்து வாங்குவதும், சேகரிப்பதும் வழக்கமாகி இருந்தன. பீச் ஸ்டே ஷன் அருகே பர்மா பஜாரில், சிங்கப்பூரிலிருந்து வருகிற மிகமிகக் கவர்ச்சியான பிரேஸியர்கள் விற்கப்படுவதாக ஒரு நிநேகிதி தெரிவித்தபோது அவளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு அந்தக் கடைக்குப் போய் ஒரு ஜோடி பிரேஸியர்ஸ் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள் சுமதி.
“இயற்கையாகவே நீ நல்ல வளர்த்தி! உனக்கு இதெல்லாம் எதுக்குடி” என்ற அந்த சிநேகிதி கூடச் சுமதி யை அப்போது கேலி செய்திருந்தாள். அப்புறம் சுமதி அதை அணிந்து வந்த தினத்தன்று “அழகுக்கு அழகு செய்வதுபோல் இது உனக்கு எடுப்பா இருக்குடீ சுமதி!” என்று அதே சிநேகிதி அவளைப் புகழ்ந்தும் இருக்கிறாள். அம்மாவும் வார்டனும் சேர்ந்து சதி செய்து இப்போது அந்தக் கனவுகளை எல்லாம் பாழாக்கி விட்டாற்போலத் தோன்றியது. அவர்கள் இருவர் மேலும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது சுமதிக்கு. தன் வழியில் அவர்கள் முட்டுக்கட்டைகளாய்க் குறுக்கே நிற்பதாக உணர்ந்தாள் அவள்.
நீண்ட நாட்களுக்குப்பின் ரூம்மேட் அவளை அன்று காலை வெளியே அழைத்தாள். அன்று கல்லூரிக்கு விடுமுறை நாள். யூனிவர்சிட்டி லைப்ரரியில் ஒரு வேலையாகச் சேப்பாக்கம் வரை போய்விட்டு வரலாம் என்று, அறையில் உடன் வசிக்கும் விமலா வற்புறுத்தியும் கூடச் சுமதி மறுத்தாள். விமலா அவளை விடவில்லை. மேலும் வற்புறுத்தினாள்.
“தனியாகப் போயிட்டு வர்ரதுக்குப் போராடிக்கும்டி சும்மா எங்கூட வா. வார்டன் ஒண்ணும் சொல்லமாட்டா. ஸ்டடீஸ் சம்பந்தமாத்தான் நாம யூனிவர்சிட்டி லைப்ரரிக்குப் போறோம். கேட்ட உடனே பெர்மிஷன் கிடைக்கும்.”
“நான் ஒண்ணும் வரலை. சலவைக்குப் போன ஸாரி ஒண்ணும் திரும்பி வரலே. கட்டிண்டு வெளியிலே போறத்துக்கு எங்கிட்ட நல்ல ஸாரிகூட எதுவும் இல்லேடி விமலா...”
“நான் தரேண்டி அருமையான ஸாரி, புறப்படு. ஸாரி மட்டுமில்லே. ஹேர் ஆயில், சோப்பு, எது வேணும்னாலும் நான் தரேன். உனக்கு வேண்டிய மட்டும் எடுத்துக்கோ உன்கில்லாததாடி?”
விமலா இதைச் சொல்லியபோது தன்னைக் குத்திக் காட்டிக் கிண்டல் செய்கிறாளோ என்று சுமதிக்கு முதலில் அவள்மேல் கோபம்தான் வந்தது. ஹேர் ஆயில் வாசனைப் பவுடர் இதெல்லாம் வேண்டாம் என்று அம்மா தனக்கு எழுதிய கடிதத்தைத் தான் எங்காவது அசந்து மறந்து வைத்துவிட்டுப் போயிருந்தபோது, விமலா எடுத்துப் படித்துப் பார்த்திருப்பாளோ என்று கூடச் சுமதிக்குச் சந்தேகமாயிருந்தது. ஒன்று, அவள் அந்தக் கடிதத்தைப் படித்திருக்க வேண்டும். அல்லது தன்னுடைய ஹேர் ஆயில், ஸ்நோ, பவுடர் இவை எல்லாம் தீர்ந்தபின் தான் புதியவற்றை வாங்காமலே இருப்பதைப் பார்த்து விமலாவாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
எப்படி இருந்தாலும் விமலா அதைச் சொல்லிய விதம் கிண்டலாகவோ, கேலியாகவோ இல்லை. அவள் இரண்டாவது முறையாகவும், அதே விஷயத்தைச் சொல்லிய விதம் உண்மையாகவே சுமதி தன்கூட வருவதை விரும்பும் தொனியில்தான் இருந்தது. விமலாவின் தாராளமான முகஸ்துதி சுமதியை அவள் வசப் படுத்தியது. “உனக்கு எதுக்குடி பவுடர், ஹேர் ஆயில் எல்லாம்? நீ எந்த ஸாரி கட்டிண்டாலும் அழகாயிருக்கப் போறே. நீ கட்டிக்கிற ஸாரிக்குத்தான் உன்னாலே அழகு. ஸாரியாலே உனக்கு என்ன அழகு?”
சுமதி அன்று விமலாவோடு யூனிவர்சிட்டி லைப்ர்ரிக் குப் புறப்பட்டாள். மாதக் கணக்கில் எங்குமே வெளியே போகாத சுமதி அன்று புறப்பட்டிருந்தாள் என்பதால் வார்டன் அனுமதி மறுக்கவில்லை. பகல் நேரத்தில் விமலாவும் துணைக்கு வர அவள் போகிறாள் என்பதாலும் வார்டன் அம்மாளுக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை. போகட்டும் என்று விட்டுவிட்டாள்.
சுமதியும் விமலாவும் ஹாஸ்டல் மெஸ்ஸில் பகலுணவை முடித்துக் கொண்டு புறப்பட்டிருந்தார்கள். இருவரும் விடுதியை விட்டுக் கிளம்பி மெயின் ரோட்டுக்கு வந்து பஸ் நிறுத்தத்தில் நின்றபோதுதான், விமலாவுக்குத் தான் ‘மணிபர்ஸ்’ எடுத்துவர மறந்துவிட்டது ஞாபகம் வந்தது.
“சுமதி! நீ இங்கேயே நில்லுடி! நான் பர்ஸை மறந்து அறையிலேயே வச்சிட்டு வந்துட்டேன். ஒரு நிமிஷத்திலே ஒடிப்போயி எடுத்திண்டு வந்துடறேன்” என்றாள் விமலா.
“எல்லாச் செலவுமா அஞ்சு ரூபாய்க்கு மேலே போகாதுன்னா நீ திரும்ப ரூமுக்குப் போகவேண்டாம். எங்கிட்டேய இருக்குடி விமலா சமாளிச்சுக்கலாம். வா” என்று சுமதி சொல்லியும் விமலா கேட்கவில்லை.
“பரவாயில்லேடீ! நான் ரூமுக்கே போய் எடுத்துண்டு வந்துடறேன். கையிலே கொஞ்சம் பணம் வச்சிண்டு வெளியிலே புறப்படறதுதான் நல்லது” என்று சொல்லிக் கொண்டே அறைக்குத் திரும்ப நடக்கத் தொடங்கி விட் டாள் விமலா. விமலா போனபின் அவள் தலை கல்லூரிக் காம்பவுண்டுக்குள் மறைந்ததுமே பஸ் நிறுத்தத்தில் சுற்றும் முற்றும் நின்றவர்களைக் கவனித்தாள் சுமதி. அந்தப் பஸ் நிறுத்தம் வம்புக்கும் கலகத்துக்கும் பெயர் பெற்றது. பெண்கள் கல்லூரிக்கு அருகில் இருந்ததினால் வம்பு செய்யும் மாணவர்களின் குழு ஒன்று அங்கு நிரந்தரமாக இருக்கும். அன்று விடுமுறை நாளானதால் மாணவர்களின் கூட்டம் எதையும் காணோம். ஆனால் வேறு ஆட்கள் இருந்தார்கள். அவளருகே இடுப்பில் லுங்கியும், கழுத்தில் கட்டிய கலர்க் கைக்குட்டையுமாகத் தலை சீவாத பரட்டைத் தலை ஆண்கள் இருவர் பஸ்ஸுக்காக நின்று கொண்டிருந்தனர். இருவரும் தன் பக்கமே வைத்த கண் வாங்காமல் பார்ப்பதைக் கண்டு சுமதி முகத்தை சுளித்தாள். அவசரமாகத் தன் பார்வையை அவர்கள் பக்கமிருந்து அவள் மீட்டுவிட்டாலும் அவர்களுடைய பார்வையும் கவனமும் அவள் மேலிருந்து விலகவில்லை. அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.
சொல்லி வைத்தாற்போல ஒரே சமயத்தில் அவர்கள் இருவருமே அவளருகே நெருங்கி வந்தனர்.
“என்னம்மா அதுக்குள்ளார மறந்துட்டியா? அன்னக்கி ஹோட்டல் குபேராவிலிருந்து நான்தானேம்மா இட்டாந்தேன்” தணிந்த குரலில் அந்த இருவரில் ஒருவன் சுமதியை நோக்கி ஏதோ சொன்னான். சுமதி பதில் சொல்லவில்லை.
ரவுடிகளைப் போலவும், காலிப் பயல்களைப் போலவும் தோற்றமளித்த அவர்களிடம் தனக்கென்ன பேச்சு வந்தது என்று வாயை இறுகப் பொத்திக் கொண்டு பேசாமலிருந்தாள் அவள்.
“என்னம்மா அதுக்குள்ளார மறந்துட்டியா? அல்லது மறந்துட்டாப்ல நடிக்கிறியா? செயிண்ட் தாமஸ் மவுண்ட் சட்டைக்காரிச்சி ஒருத்தி - அதுகூட இங்கேதாம்மா படிக்குது. அந்தப் பொண்ணுசுட நீ வரமாட்டே? கபாலியை அதுக்குள்ளார மறந்தா போச்சு?”
“நீங்க ரெண்டு பேரும் யாரு? எனக்கு உங்க ரெண்டு பேரையும் தெரியாதுப்பா. ஆனா நீங்க ஏதோ ரொம்பத் தெரிஞ்சமாதிரிப் பேசறீங்க. வேற யாரோன்னு தவறாகப் புரிஞ்சிகிட்டுப் பேசறதாத் தெரியுது. நான் உங்களை இதுக்கு முன்னாடிப் பார்த்ததே கிடையாது...” என்று சுமதி கண்டிப்பான குரலில் இரைந்ததும் அவர்கள் இருவரில் ஒருவன், “சர்த்தான் விடுடா புதிசா வேஷம் போடுது. பெரிய பத்தினித் தங்கமாட்டம் பேசுது” என்றான்.
சுமதிக்கு ஆத்திரம் மூண்டது.
“வாயை அடக்கிப் பேசு! போலீஸ்லே பிடிச்சுக் குடுக்கணுமா?”
அவள் இப்படிக் கேட்டுக் கொண்டிருக்கும்போது விமலா திரும்பி வந்துவிட்டாள். அந்த இரு ரவுடிகளும் கூட மெல்ல மெல்ல ஒதுங்கிவிட்டனர். விமலாவும் பக்கத்தில் வந்து சேர்ந்துவிட்டாள்.
“என்னடி சுமதி ஏதாவது தகராறா? யார் அந்த ஆட்கள்? வரவர நம்ம காலேஜ் பஸ் ஸ்டாப் பெரிய வம்புபிடித்த இடமாப்போச்சு. எத்தனையோ தடவை பிரின்ஸிபால் கிட்டவும், வார்டன் கிட்டவும், கம்ப்ளெயிண்ட் பண்ணி அவங்க போலீஸ் கமிஷனருக்குப் புகார் எழுதி இங்கே இந்த பஸ் ஸ்டாப் கிட்ட ஒரு போலீஸ்காரன் காவல் நிற்கறதுக்கு ஏற்பாடு பண்ணினாங்க. இன்னிக்கு வீவு நாளோ இல்லையோ அதனாலே அந்தப் போலீஸ் பாராவைக் கூடக் காணோம். ஏதாவது பெரிய தகராறு ஆனால் வார்டன் ரூமுக்குப் போய் ஃபோன் பண்ணிட்டுப் போகலாம் வர்ரயா?” என்று விமலா கேட்டவுடன், “அதெல்லாம் ஒண்ணு மில்லேடி காலிப்பசங்க கிட்டவந்து நின்னு யாரிட்டவோ பேசற மாதிரி ஜாடைமாடையா ஏதோ உளறினாங்க. கொஞ்ச நாழி பொறுத்துப் பார்த்தேன், முடியலே. காது கொடுத்துக் கேட்க முடியாதபடி எல்லை மீறிப் போச்சு, அப்புறம் பதிலுக்கு நாலு வார்த்தை விட்டேன், வாயை மூடிண்டு போனாங்க” என்ற சிரித்தபடியே விமலாவுக்கு மறு மொழி கூறினாள் சுமதி.
“பேசினால்கூடப் புரியாது தடியங்களுக்கு, காலிலே இருக்கிறதைக் கழற்றி செமத்தியா நாலு வாங்கு வாங்கியி ருக்கனும், அப்பத்தான் புரியும்.”
பஸ் வந்தது. இருவரும் ஏறிப் புறப்பட்டனர். விமலாவோடு சகஜமாகச் சிரித்துப் பேசிக்கொண்டு சென்றாலும் சுமதியின் மனம் என்னவோ பஸ் நிறுத்தத்தில் சந்தித்த அந்த இரு தரகர்களையும் சுற்றியே இருந்தது. மேரி அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்த வேறு யாரோ ஒரு பெண் என்று தன்னைத் தப்பாகப் புரிந்துகொண்டு அவர்கள் தன்னிடம் வந்து பேசியிருப்பதைச் சுமதி தெரிந்துகொண்டாள்.
யூனிவர்சிட்டி லைப்ரரியில் வேலை முடிந்து எதிரே கடற்கரை மெரீனா கேண்டீனில் தேநீர் அருந்தச் சென்ற போது கூடச் சுமதியின் சிந்தனை எங்கோ இருந்தது. விமலா எதையோ பாட சம்பந்தமாக விவரித்துக் கொண்டு வந்தாள். சுமதி போலியாக அதைக் கேட்பது போல நடித்துக் கொண்டு சென்றாள். அவள் மனம் பஸ் நிறுத்தத்தில் சந்தித்த அந்த ஆட்கள் - அவர்கள் பேசிய பேச்சு எல்லாவற்றையும் பற்றியே சுற்றிச் சுற்றி வந்தது. அவர் தன்னை மேரியோடு சேர்த்துப் பார்த்திருப்பது புரிந்து கொண்டிருப்பது பற்றியும் சுமதி நினைத்தாள்.
“புறப்பட்டு வந்ததிலிருந்து உன் யோசனை எங்கேயோ இருக்குடி, நான் எதையோ சொல்றேன். நீ பராக்குப் பார்த்துக்கொண்டே கேட்கிறே? அந்த ஆட்கள் உன்னை ஏதாவது பயமுறுத்தினாங்களா? உள்ளத்தை சொல்லுடி, போனதும் முதல் வேலையா வார்டன் கிட்டச் சொல்லிப் போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கலாம்” என்று விமலாவே மறுபடி துணிந்து கேட்ட போதுதான்,
“பயமுறுத்தறதாவது ஒண்ணாவது? ஆளைப்பாரு ஆளை. என்னைப் பயமுறுத்தறதுக்கு அவன் தாத்தா வந்தாலும் ஆகாது” என்று தெம்பாக விமலாவுக்கு மறுமொழி கூறினாள் சுமதி.
யூனிவர்ஸிடி லைப்ரரிக்குப் போய்விட்டு வந்த மூன்றாம் நாளோ நான்காம் நாளோ, வகுப்பில் லெக்சரர் வருவதற்கு முன்பாக எல்லாப் பெண்களும் ஒரு பெண் புதிதாக கட்டிக் கொண்டு வந்திருந்த மிகமிக அழகான பாம்பே வாயில் புடைவையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சிடையே ஒரு தோழி,
“இந்த மாதிரிப் புடவை நம்ம சுமதிக்குப் பிரமாதமா மேட்ச் ஆகும். இதை அவள் கட்டிண்டா அப்சரஸ் மாதிரி இருப்பா” என்ற சுமதியைச் சுட்டிக் காட்டிச் சொன்னாள். அப்போது அருகே அமர்ந்திருந்த மேரி, “எக்ஸாக்ட்லி” என்று வியந்தாள். உடனே மற்றொருத்தி குத்தலாகக் கேட்டாள்:
“இதுக்கென்னடி அர்த்தம்? சுமதிக்குத்தான் இந்த ஸாரி மேட்ச் ஆகும்னா இவளுக்கு மேட்ச் ஆகலேங்கறிங்களா?”
நல்லவேளை! இதற்குள்ளாக லெக்சரர் அம்மாள் வகுப்புக்குள் நுழைந்து விடவே இந்தச் சர்ச்சை ஒய்ந்துவிட்டது.
மறுநாள் காலை வகுப்புக்களும், கல்லூரியும் தொடங்குவதற்கு ஓர் அரை மணி நேரம் முன்னதாகவே மேரி, சுமதியின் அறைக்குத் தேடி வந்தாள். அவள் கையில் ஒரு பெரிய காகிதப் பொட்டலம் இருந்தது. அறைக்குள் நுழைந்த மேரி சுமதிக்கு முன்னாலேயே அதைப் பிரித்துக் காட்டினாள். முதல் நாள் வகுப்பில் யாரோ ஒருத்தி கட்டிக் கொண்டு வந்திருந்த அதே பாம்பே வாயில் புடவை மேரியின் கையில் இருந்தது.
“எடுத்துக்கொள்! உனக்காகத்தான் நேற்று மாலையே பிராட்வேயில் ஷோ ரூமுக்கே தேடிப் போய் இதை வாங்கிக் கொண்டு வந்தேன். சுமதி!”
நல்ல வேளையாக அறையில் உடன் வசிக்கும் விமலா அப்போது வெளியே போயிருந்தாள்.
“என்னைக் கேட்காமல் என் சம்மதமில்லாமல் நீ இதை எப்படி எனக்கு வாங்கிக் கொண்டு வரலாம் மேரி?”
“இது உனக்குப் பிடிக்கும் என்று எனக்குத் தெரிந்து வாங்கி வந்தேன். நீ மறுக்கமாட்டாய் என்று நம்புகிறேன் சுமதி.”
“மறுத்துவிட்டால் என்னடி செய்வே?”
“உன் பிரியமுள்ள சிநேகிதியை நீ அப்படி எல்லாம் சோதனை செய்யமாட்டாய் என்று எனக்குத் தெரியும் சுமதி!”
“ஸாரி ரொம்ப நல்லாத்தான் இருக்கு. ஆனால் நீ என்னை மேலே மேலே கடனாளியாக்கறே மேரீ?”
“சும்மா வாயை மூடு! கடனாவது, ஒண்ணாவது? கிஃப்ட் எல்லாம் கடன் ஆகாது. நான் இதை இங்கே கொண்டாரப்பவே கிஃப்ட்னுதானே சொன்னேன்.”
சுமதி மேரியைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தாள். அந்தப் புடவையையும் அன்றே கட்டிக் கொண்டுதான் வகுப்புக்குப் போனாள். எல்லாரும் அவளைப் பாராட் டினார்கள். அந்தப் புடவையில் அவள் பிரமாதமாகத் தெரிவதாய்க் கொண்டாடினர்.
மேரி தனக்கு அதை வாங்கிக் கொடுத்ததாகச் சுமதியும் யாரிடமும் சொல்லவில்லை. சுமதிக்குத் தான் இதை வாங்கி அளித்ததாக மேரியும் யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை.
நாலைந்து நாட்களுக்குப் பின் ஒரு சனிக்கிழமை காலையில் சுமதிக்கு ஃபோன் வந்தது. அபூர்வமாகத் தனக்கு ஃபோன் செய்வது யார் என்ற திகைப்புடன் போய் ஃபோனை எடுத்தாள் சுமதி. எதிர்ப்புறம் மேரி தான் பேசினாள்.
“சுமதி நீ அதிர்ஷ்டக்காரி! ஒரு கோல்டன் ஆப்பர்ச்சூனிட்டி வந்திருக்கு. அன்னிக்கு நீ சந்திச்ச புரொட்யூஸர்ஸிலே ஒருத்தர் இன்னிக்குக் காலை 10 மணிக்கு உன்னை மேக்-அப் டெஸ்ட்டுக்கே வரச் சொல்றாரு. தரணி ஸ்டுடியோவில் 3ஆம் நம்பர் ஃப்ளோருக்கு வரணும். அங்கே அதே புரொட்யூஸரோட வேறொரு படம் தயாராயிக்கிட்டிருக்கு. வரயா, இல்லையா? வரதும் வராததும் உன் இஷ்டம். நான் ஒண்ணும் உன்னை வற்புறுத்த மாட்டேன்.”
“நான்தான் அன்னிக்குப் பாதியிலேயே ஓடி வந்துட்டேனே? அங்கே யாரிட்டவும் நான் சரியாப் பேசக்கூட இல்லே - அவங்க யாரும் என்னைக் கவனிச்சுப் பார்த்திருக்கக் கூட முடியாதேடீ?”
“அதெல்லாம் நீயா நினைக்கிறே சுமதீ? அவங்க எல்லாரும் உன்னை நல்லாக் கவனிச்சுப் பார்த்திருக்காங்க. இன்னிக்கு வரச் சொல்லிக் கூப்பிடறாரே, இவரு ரொம்ப இம்ப்ரஸ் ஆகித்தான் ஒரு கேள்வியோ விசாரணையோ, இல்லாமே நேரே ‘மேக்-அப் டெஸ்ட்’டுக்கே உன்னை வரச் சொல்றாரு.”
“மேக்-அப் டெஸ்ட்டுன்னா எப்படி வரணும்? என்னென்ன செய்வாங்க...”
“ஒண்ணும் கடிச்சு முழுங்கிடமாட்டாங்க. சும்மா பயப்படாமே வாடி சுமதி!”
“நீ அன்னிக்கு வாங்கிக் குடுத்தியே அந்த வாயில் லாரியைக் கட்டிண்டு வரட்டுமா மேரி?”
“நைஸ் ஐடியா! அதையே கட்டிக்கிட்டு வா சுமதி! அவசியம்னா இங்கே வந்ததும் இவங்க வேறே மேக்-அப் போட்டுக் காமிராவுக்கு முன்னே நிறுத்திப் பாப்பாங்க... கரெக்ட்டாப் பத்து மணிக்கு வந்துடு. முன்னாடி வந்தால் தப்பில்லே ஆனா லேட்டா மட்டும் வராதே.”
இந்த அழைப்பு சுமதிக்கு உள்ளுறப் பெருமகிழ்ச்சி யைத்தான் அளித்திருந்தது. அன்று விடுமுறை நாளாகையினால் பாட சம்பந்தமாக ஏதோ படிப்பதற்காக யூனிவர்ஸிடி லைப்ரரிக்குப் போக வேண்டும் என்று அறைத் தோழி விமலா சொல்லிக் கொண்டிருந்தாள். அவளோடு சேர்ந்து யூனிவர்ஸிடி லைப்ரரிக்குப் போகவேண்டும் என்ற அனுமதி கேட்டால் வார்டன் உடனே வெளியே போக அனுமதித்து விடுவாள். விடுதியிலிருந்து வெளியேறி மெயின் ரோட்டுக்கு வந்ததும் விமலாவிடம் சொல்லி விட்டுத் தரணி ஸ்டுடியோவுக்கு ஒரு டாக்சியில் பறக்க வேண்டும் என்று திட்டமிட்டு முடிவு செய்துகொண்டாள் சுமதி. விமலாவிடம் ஸ்டுடியோவில் மேக்-அப் டெஸ்டுக்குப் போவதாகச் சொல்லாமல் வேறெதாவது பொய் சொல்லிக்கொள்ள வேண்டும் என்றும் நினைத் துக் கொண்டாள்.
நினைத்தபடியே செய்வதில் எந்தத் தடையும் இல்லை. வாரம் தவறாமல் லீவு நாட்களில் சுமதியும், விமலாவும் புத்தகங்கள் படிக்க யூனிவர்ஸிடி லைப்ரரிக்குப் போவது பற்றிய மகிழ்ச்சியுடன் வார்டன் அம்மாள் அனுமதி கொடுத்தாள். அனுமதி பெற்று விடுதி காம்பவுண்டுக்கு வெளியே வந்தவுடன் முதல் வேலையாக, “அடி விமலா! நீ தப்பாக நினைத்துக் கொள்ளாதே. தி.நகரில் எங்க உறவுக்காரங்க வீட்டுக்கு ஒரு முக்கிய வேலையா நான் போயாகனும், நீ பன்னிரண்டரை மணிவரை லைப்ரரியிலேயே இரு. நான் தி.நகரிலிருந்து நேரே அங்கேயே வந்து விடுகிறேன். அப்புறம் ரெண்டு பேருமே சேர்ந்து திரும்பி வந்துடலாம். ஒருவேளை பன்னிரண்டரை மணிக்குள்ளே நான் அங்கே திரும்பி வரலேன்னா நீ எனக்காக வெயிட் பண்ணவேண்டாம்” என்றாள்.
விமலா அதற்குச் சம்மதித்தாள். அவளைப் பஸ் நிறுத்தத்தில் விட்டு விட்டு அருகிலிருந்த டாக்ஸி ஸ்டாண்டிற்கு விரைந்தாள் சுமதி. ஒன்பதே முக்கால் மணிக்கே மேரி ஸ்டுடியோவில் வந்து காத்துக் கொண்டிருப்பதாகச் சுமதியிடம் டெலிஃபோனில் சொல்லியிருந்தாள். டாக்ஸி ஸ்டாண்டில் அவளுக்கு இன்னோர் ஆச்சரியம் காத்திருந்தது. அன்றொரு நாள் மேரியையும் அவளையும் சினிமாத் தியேட்டருக்குச் சவாரி கொண்டு போய் விட்ட அதே டாக்ஸி டிரைவர் வண்டியோடு இருந்தான். அவன் சுமதியைப் பார்த்ததும், “என்னம்மா? செயிண்ட் தாமஸ் மவுண்ட்டுக்கா?” என்று கேட்டுக் கொண்டே மீட்டரை போட்டது அவளுக்குப் பிடிக்க வில்லை.
“இல்லை! கோடம்பாக்கம் தரணி ஸ்டுடியோவுக்குப் போ. அவசரம்! ஏம்ப்பா எப்ப வண்டியிலே ஏறினாலும் செயிண்ட் தாமஸ் மவுண்ட்டுக்கான்னு கேட்டா என்ன அர்த்தம்?”
“தப்பா நினைச்சுக்காதீங்கம்மா! அந்தச் சட்டைக் காரிச்சிப் பொண்ணோட சிநேகிதிங்கள்ளாம் அங்கே தான் அடிக்கடி போவாங்க. அதான் கேட்டேன்.”
டாக்ஸி விரைந்தது. தரணி ஸ்டுடியோ வாசலில் கூர்க்கா டாக்ஸியைத் தடுத்து நிறுத்திவிட்டான். யாரைப் பார்க்க வேண்டும் என்ற அவன் விசாரித்தபோது சுமதி ஒரு கணம் தயங்கியபின் மேரி தன்னிடம் ஃபோனில் சொல்லியிருந்த அந்தத் தயாரிப்பாளரின் பெயரைச் சொன்னாள். சுமதியை ஏற இறங்கப் பார்த்துவிட்டு டாக்ஸியை உள்ளே செல்ல அனுமதித்தான் கூர்க்கா. உட்புறம் ஸ்டுடியோ பகுதிகளுக்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் ‘டாக்ஸிகள் இங்கேயே நின்றுவிட வேண்டும். அதற்கு அப்பால் செல்லக்கூடாது’ என்று பெரிதாக ஒரு போர்டு இருந்தது. அந்த இடத்திலேயே டாக்ஸியை நிறுத்திவிட்டு மீட்டரில் வாடகை கணக்குப் பார்த்துப் பணம் கொடுத்து அனுப்பினாள் சுமதி.
தோட்டப் பகுதியைக் கடந்து உள்ளே சென்ற சுமதிக்குப் பெரிய பெரிய ஆஸ்பெஸ்டாஸ் ஷெட்டுகளாக வரிசையாய் இருந்த ஃப்ளோர்களைக் கண்டுபிடிப்பதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. மூன்றாவது ஃப்ளோர் முகப்பில் காலை ஒன்பதே முக்கால் மணியிலிருந்தே சுமதிக்காகக் காத்துக் கொண்டிருப்பதாய்ச் சொல்லிய மேரியைத்தான் அங்கே காணவில்லை. சிறிது நேரம் மேரியை எதிர்பார்த்து மூன்றாவது ஃப்ளோர் முகப்பிலேயே நின்ற கொண்டிருந்தாள் சுமதி. மேரி தட்டுப் படாமற்போகவே, உட்புறமிருந்து காபி பிளாஸ்க் குடன் வெளியே வந்த ஒரு காக்கி அரை டிராயர் அணிந்த பையனிடம் தான் தேடி வந்திருந்த தயாரிப் பாளரின் பெயரைச் சொல்லி விசாரித்தாள் சுமதி.
“உள்ளாற ஷூட்டிங் நடக்குதுங்க. நீங்க இங்கேயே இருங்க. நான் அவர் கையிலே சொல்றேன்” என்று சொல்லி விட்டுச் சுமதி உட்காருவதற்காக ஒரு மடக்கு நாற்காலியை விரித்துப் போட்டுவிட்டுப் போனான் பையன்.
அவளை அவன் உட்காரச் செய்து விட்டுப்போன இடம் அந்த மூன்றாவது ஃப்ளோரின் மேக்-அப் அனெக்ஸுக்கு முகப்பாக இருந்தது. ரோஸ் நிறம் கன்றிய பவுடர்ப்பூச்சு முகமும் கீறினாற் போன்ற கரும்புருவமும் மேக்கப் உடையலங்காரமுமாக யார் யாரோ வந்தார்கள், போனார்கள்.
உள்ளே ஏதோ ‘குரூப் டான்ஸ்’ காட்சி படமாக்கப் பட்டுக் கொண்டிருந்ததோ என்னவோ கும்பலாக ஒரு பத்துப் பன்னிரண்டு துணை நடிகைகள் படிப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த ஃப்ளோரிலிருந்து சிரிப்பும் கும்மாளமுமாக மேக்-அப் அனெக்ஸுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் சிறிது பின்தங்கி நடந்து வந்த உடற்கட்டுள்ள ஒரு பெண்ணின் தோளில் கை போட்டபடி இரட்டை நாடி சரீரமுள்ள ஒரு குட்டை மனிதர் தென்பட்டார். அந்த மனிதர்தான் மேரி சொல்லிய புரொட்யூலராக இருக்க வேண்டும் என்று சுமதி புரிந்து கொண்டாள்.
சுமதி அன்று ஃபேர்லாண்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப்புக்குப் போயிருந்த போது இந்த மனிதரைச் சுட்டிக் காட்டி மேரி அறிமுகப்படுத்தியிருந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. அதற்குள் அந்த மனிதரே சுமதியைப் பார்த்து விட்டு, “ஹலோ. நீ எப்பம்மா வந்தே? மேரி ஃபோன் பண்ணிச் சொல்லிச்சு. அதாலே, வரமுடியலியாம். நீ மேக்-அப் டெஸ்ட்டுக்கு வருவேன்னு சொல்லிச்சு. ஒரு பத்து நிமிஷம் பொறுத்துக்கோ. இந்த ஃப்ளோர்ல படிப்பிடிப்பு முடிஞ்சிடும். ஆளுங்கள்ளாம் போயிடுவாங்க. காமிராமேனிட்டச் சொல்லி வச்சிருக்கேன். உள்ளே கூட்டம் குறைஞ்சதும் உனக்கு மேக்-அப் போடச் சொல்றேன்” என்று உற்சாகமாகச் சொன்னார். அவர் நின்று கொண்டிருந்த பிரதேசத்தைச் சுற்றி அவர் உடலிலிருந்து விலையுயர்ந்த வாசனைகள் கமகமவென்று கிளர்ந்து கொண்டிருந்தன.
“எனக்கு ஒண்ணும் அவசரமில்லே! மெல்ல ஆகட்டும்” என்றாள் சுமதி.
“அது சரியம்மா! அன்னிக்கு ஏன் கிளப்பிலே எங்களை எல்லாம் பார்த்ததும் ஏதோ பேயையோ, பிசாசையோ பார்த்துட்ட மாதிரிப் பயந்துக்கிட்டு ஓடினே?”
இதற்குச் சுமதி பதில் சொல்லவில்லை. நாணித் தலை குனிந்தபடியே சும்மா இருந்துவிட்டாள்.
“சரி! உன் மனசைச் சங்கடப்படுத்தறதா இருந்தா நான் அதைப் பத்திக் கேட்கலே. அதை மறந்துடலாம். இப்போ என்ன குடிக்கிறே? காபியா, போர்ன்விடாவா, இல்லே கூலா ஏதாவது?”
இதற்கும் அவள் உடனே பதில் சொல்லவில்லை. ஆனால் அவராகவே கையைத் தட்டி, “டேய் யார்ரா புரொடக்ஷன் பாய்! ரெண்டு கோகோ கோலா வாங்கிட்டு வா, சொல்றேன். ஜல்தி போ. ஜில்னு இருக்கணும்” என்று ஆர்டர் போட்டார்.
சுமதி முதலில் பார்த்த அந்தக் காக்கி அரை டிராயர்ப் பையன் ஓடி வந்தான்.
“தோ வந்துட்டேன் சார்” என்று ஓடினான் அவன்.
சிறிது நேரத்தில் எக்ஸ்ட்ராக்கள் ஒரு வேனில் அடைத்துக் கொண்டு கிளம்பினார்கள். பெரிய நடிகர் நடிகைகள் காரில் கிளம்பினார்கள். “நீ வாம்மா; போகலாம்” என்று சுமதியை மேக்-அப் அனெக்ஸுக்குள் அழைத்துச் சென்றார் தயாரிப்பாளர். அனெக்ஸ் அறை ஏ.சி. செய்யப்பட்டிருந்தது. உள்ளே மேக்-அப் மேனும், அவனுடைய உதவியாளனும் மட்டுமே இருந்தார்கள்.
தயாரிப்பாளர் கொஞ்சம் தாராளமாகவே உரிமை கொண்டாடி, “இதோ இந்தச் சேருக்கு வாம்மா! இது தான் ரொம்ப ராசியான சேர். இப்பப் பிரமாதமா ஜொலிக்கிறாளே குமுதகுமாரி, அவ முத முதலா இந்த நாற்காலிலே உட்கார்ந்துதான் மேக்-அப் போட்டுகிட்டா. தெரியுமா?” என்று சுமதியின் தோளைத் தொட்டுக் கூப்பிட்டார். அவருடைய கையை எடுத்து உதறினால் எங்கே கோல்டன் ஆப்பர்ச்சூனிட்டி போய் விடுமோ என்ற பயத்தில் சுமதி அப்போது அதைச் சகித்துக் கொண்டாள்.
“இந்தாப்பா!... புருவத்தைக் கத்திரிச்சுப்பிடாதே. இவ காலேஜிலே படிக்கிற பொண்ணு. இப்போதைக்குச் சும்மா அய் பிராமினன்ஸ் வர்ற மாதிரி ஏதாச்சும் அட்ஜஸ்ட் பண்ணிக்க” என்று சுமதிக்காக அவரே அக்கறை எடுத்துக் கொண்டு மேக்-அப் மேனை எச்சரித்தார்.
மேக்-அப் மேன் தன் தலையை - முகத்தை மோவாயை - தோள் பட்டையை எல்லாம் தாராளமாகத் தொட்டபோது கூடச் சுமதிக்குக் கூச்சமாகத்தான் இருந்தது. ஆனால் அந்தக் கூச்சங்களை அவளே உதற முயன்று தன் மனத்தைத் தேற்றிக் கொண்டாள். தன்னைத் தைரியப் படுத்திக் கொண்டாள். வேற்று ஆடவர் தொடக் கூசும் மனத்தையும் உடலையும் வைத்துக் கொண்டு சினிமாவில் சோபிக்க முடியாது என்பது சுமதிக்கு நன்றாகப் புரிந்துதான் இருந்தது.
மேக்-அப் முடிந்ததும் அவரே அவளை உள்ளே ஃப்ளோருக்கு அழைத்துச் சென்றார். அழைத்துச் செல்லும் போதும் தோளைத் தழுவினாற் போல் நெருங்கியே நடந்து வந்தார் அவர். உள்ளே ஃப்ளோரில் காமிராமேன், உதவிக் காமிராமேன் இரண்டு மூன்று லைட்பாய்ஸ் எல்லோரும் இருந்தனர். இவர்கள் அங்கே நுழையவும் புரொடக்ஷன் பாயும் இரண்டு கோகோ கோலா பாட்டில்களோடு கூடிய டிரேயுடன் உள்ளே வந்தான்.
சுமதியைத் தாராளமாகத் தொட்டு முகத்தைத் திருப்பி இடுப்பை சரிசெய்து, கைகளை ஒழுங்கு பண்ணிக் காமிராவுக்கு முன் நிற்க வைத்தார் தயாரிப்பாளர்.
அப்புறம் காமிராமேனும், தன் பங்குக்கு என்னென்ன விதமாகத் தொட முடியுமோ அத்தனை விதமாகவும் தொட்டாயிற்று.
“ஓ.கே. ரெடி...” என்று கூறியபடி ஒரு கோகோ கோலா பாட்டிலை எடுத்து உறிஞ்சிக் கொண்டே சிறிது ஒதுங்கி நின்றார், தயாரிப்பாளர்.
சுமதி சிரித்த முகமாக இருக்க முயன்றாள். விளக்கு கள் பளிச்சிட்டன. அனைந்தன. மறுபடியும் பளிச்சிட்டன. நடுவே, “இந்தாம்மா! ரொம்பக் களைப்பா இருக்கும்! குடி” என்று மற்றொரு கோகோ கோலா பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினார் தயாரிப்பாளர்.
“இப்ப வேண்டாம்! முடிஞ்சதும் எடுத்துக்கறேன்” என்று கூறியபடி அவர் நீட்டிய பாட்டிலை எடுத்து மறுபடி டிரேயிலேயே வைத்தாள் சுமதி. முகபாவங்களை மாற்றச் சொல்லி இரண்டு மூன்று முறை படங்களைப் பிடித்தபின் “உனக்கு நல்ல காமிரா ஃபேஸ் இருக்கும்மா” என்றார் தயாரிப்பாளர். காமிராமேன் ஒன்றுமே சொல்லவில்லை. அவளும், தயாரிப்பாளரும் ஃப்ளோருக்குள்ளிருந்து வெளியேறு முன்பாகத் திடீரென்று மேரியும் அங்கே வந்து சேர்ந்தாள். “ஹாய் சுமதி: பிரமாதம்” என்றாள் மேரி. சுமதியும் அவளை நோக்கி, “தாங்க்ஸ் மேரி! உன் காம்ப்ளிமெண்ட்ஸை விட வேறென்ன பெரிசு?” என்று சிறிது தாராளமாகவே அப்போது அவளைப் பாராட்டி வைத்தாள்.
மேரியைக் கண்டதுமே அந்தத் தயாரிப்பாளர் படு உற்சாகம் அடைந்தவராகக் காணப்பட்டார்.
“ஏய் மேரீ! உன் நிநேகிதிக்குக் கொஞ்சம் அநாவசி மான கூச்சமும் பயமும், வீண் தயக்கமும் இருக்கு. அதெல்லாம் போயிட்டா இவ பிரமாதமா ஷைன் பண்ணுவா, இவளை அடிச்சுக்க எந்த முன்னணி ஹீரோயினாலேயும் முடியாது. நல்ல களையான முகம், அருமையான நிறம். கலர்ப் படத்திலே போட்டால் சும்மா லட்டு மாதிரி இருப்பா...”
அவருடைய புகழ்ச்சி அதிகமாக மிகைப்படுத்தி விரசமாகப் புகழ்கிற பாஷையில் ஒரு தினுசாகப் போய்க் கொண்டிருப்பது சுமதிக்குப் புரிந்தது. ஆனாலும் சர்வ வல்லமை வாய்ந்த ஒரு புரொட்யூஸரை எப்படி எதிர்த் துப் பேசுவது? அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டாள். அவர் தன்னைத் தொடுவது - தொட்டதை எல்லாம் பொறுத்துக் கொண்டாள். அபிப்ராயங்களுக்கு எல்லாம் தலையாட்டினாள். அவர் தன் பக்கம் திரும்பிய போதெல்லாம் கூழைச் சிரிப்புச் சிரித்தாள். மயக்குவது போல் பார்த்தாள்.
“அடி சுமதீ! உன்னுடைய யோக காலம்தான் நீ சாரோட கையாலே அறிமுகம் ஆயிருக்கே. நம்ம குபேரா பிலிம்ஸ் சார் இராசிக்கார மனுஷனாக்கும். இவர் காமிராவுக்கு முன்னாலே கொண்டு வந்து நிறுத்தின எந்தப் பெண்ணும் சோடை போனதில்லே. அவங்கள்ளாம் இன்னிக்கு லட்ச லட்சமாச் சம்பாதிக்கிறாங்க” என்றாள் மேரி.
“சும்மாவா பின்னே? பேரே குபேரா பிலிம்ஸ்னு வச்சிருக்காரே?” என்று சுமதியும் மேரியோட சேர்ந்து கொண்டு அந்தத் தயாரிப்பாளரை உச்சி குளிரச் செய்தாள்.
“மேரீ! இன்னிக்கி இனிமே நம்ம கம்பெனி கால்ஷீட் எதுவும் இல்லே. நான் ஃப்ரீ, எங்கே போகலாம்னு சொல்லு, மகாபலிபுரம் டயமண்ட் பீச் ஹோட்டலுக்குப் போகலாமா? அல்லது வேறு எங்காவது போகலாமா? நீதான் சொல்லணும்? சுமதிக்கு எது பிடிக்கும்னு உனக்குத்தான் தெரியும். முதல்லே நம்ம புரொடக்ஷன் ஆபீஸுக்குப் போவோம். அங்கே டான்ஸ் மாஸ்டர் ரவிகுமார் வந்து காத்துக்கிட்டிருப்பாரு...”
“டான்ஸ் மாஸ்டரை இப்போ, இன்னிக்கு அவசியம் பார்த்தாகணுமா சார்?”
“ஆமாம் மேரி! நம்ம கம்பெனியோட அடுத்த தயாரிப்பிலே ஹீரோயினே ஒரு டான்ஸ்காரிதான். அந்த ரோலுக்குத் தயாராகணும். இப்பவே உன்னோட தோழி சுமதிதான் அதுக்குத் தயாராகணும். இந்த டான்ஸ் இருக்கே, அது கடுகுமாதிரி. சமையல்லே எதைத் தயாரிச்சாலும் கடைசியிலே கொஞ்சம் தாளிச்சிட்டாப் பிரமாதமா வாசனை வரும். அதுமாதிரிச் சினிமா, டிராமா சங்கீதம் எல்லாத்துக்கும் கொஞ்சம் டான்ஸைத் தாளிக்கணும் இந்தக் காலத்திலே! என்னா நான் சொல்றது?” என்று மேரியிடம் கூறிக் கொண்டே சுமதியின் பக்கம் திரும்பிக் கண்களைச் சிமிட்டினார் குபேரா பிலிம்ஸ் அதிபர். அந்தக் கண்சிமிட்டல் மிகவும் ‘சீப்’ எடிஷனாக இருந்தது.
“ரொம்ப நைஸ் ஐடியா. அதைப் பிரமாதமாகச் சொல்றீங்க. கடுகு உவமை இருக்கே அது டாப்” என்றாள் சுமதி. தயாரிப்பாளருக்குத் தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது. சுமதியை மாதிரி அந்நியமான இளம்பெண் ஒருத்தி திடீரென்று தன்னைப் புகழ ஆரம்பித்தது, அவருக்குப் போதையூட்டியது. வெறியூட்டியது.
காரில் மேரியையும், சுமதியையும் அழைத்துக் கொண்டு ஹபிபுல்லா ரோடில் இருந்த தன் புரொடக்ஷன் ஆபீசுக்குச் சென்றார் தயாரிப்பாளர். காரில் போகிறபோது சுமதி மேரியிடம் தான் ஒரு மணிக்குள் யூனிவர்ஸிடி லைப்ரரிக்கு வருவதாக விமலாவிடம் காலையில் சொல்லி அனுப்பியிருந்ததைச் சொன்னாள்.
“சரிதான்... நீ போகாட்டாப் பரவாயில்லே. உன்னாலே வரமுடியலேன்னு விமலா புரிஞ்சிப்பா. இன்னிக்கு இந்த ஆளை விட்டுவிடாதே. ஆள் நல்ல மூட்லே இருக்கான்” என்று சுமதியின் காதைக் கடிக்கிறாற் போல நெருக்கமாக மெல்லிய குரலில் சொன்னாள் மேரி.
முன் ஸீட்டில் டிரைவர் அருகே அமர்ந்திருந்த தயாரிப்பாளர், “என்னது? ரெண்டு பேருமா எனக்குத் தெரியாம ஏதோ ரகசியம் பேசிக்கிறீங்க?” என்ற சிரித்துக் கொண்டே திரும்பிக் கேட்டார்.
மேரி சொன்ன வாக்கியம் கேட்பதற்கு என்னவோ போலிருந்தது சுமதிக்கு, ‘இந்த ஆளை விட்டு விடாதே. ஆள் நல்ல மூட்லே இருக்கான்’ என்ற மேரி எதை நினைவூட்டுகிறாள் என்பது சுமதிக்குப் புரியவில்லை. அந்தச் சொற்களும் அதை அவள் வெளியிட்ட விதமும் மிகவும் கொச்சையாக இருந்தன, குழப்பமாகவும் தோன்றின.
கார் அபிபுல்லா ரோடில் முன்புறம் விசாலமான தோட்டத்தோடு கூடிய ஒரு பங்களா கேட்டுக்குள் புகுந்து நின்றது. பங்களா முகப்பில் குபேரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று ஒரு போர்டும் இருந்தது.
உள்ளேயிருந்து ஒரு பையன் ஓடி வந்து கார்க் கதவைத் திறந்துவிட்டான்.
“வாங்க! உள்ளே போகலாம்” என்று மேரியையும், சுமதியையும் அழைத்தார் அவர்.
“டேய் பையா ரூம்லே ஏ.ஸி.யைப் போட்டு வச்சிருக்கியா? மறந்துட்டியா?” என்று படியேறிக் கொண்டே கேட்டார் தயாரிப்பாளர்.
“நீங்க ஃபோன்ல சொன்னப்பவே போட்டு வச்சிட்டேன் சார்!” என்று பையனிடமிருந்த பதில் வந்தது.
தயாரிப்பாளரை முதலில் படியேறிப் போகவிட்டு விட்டுப் பின்னால் சிறிது தயங்கி நின்ற சுமதி, மேரியிடம், “இவர் பேரு என்னடி? புரொட்யூஸர் புரொட்யூஸர்னே எத்தினி தரம்தான் சொல்றது?” என்று கேட்டவுடன், “பேரு கன்னையா! ஆனால் பேரைச் சொல்லிடாதே, புரொட்யூஸர் சார் என்ன சொல்றீங்க? புரொட்யூஸ்ர் சார் தூங்கறாரா? புரொட்யூஸர் சார் வந்தாச்சான்னு இந்த மாதிரியே கேட்டுக்கோ, அதுதான் பெரிய மரியாதைன்னு இந்த ஸினி பீப்பிள் நினைப்பாங்க” என்ற மேரி அவளுக்குப் பதில் சொன்னாள்.
அந்த ஏ.ஸி. ரூமில் டேபிள், சேர் அலுவலகச் சாமான்கள், படுப்பதற்கு மெத்தை தலையணையோடு கூடிய பெரிய கட்டில், சோபாக்கள் எல்லாமே இருந்தன. சுமதி மேரியின் காதருகே கேட்டாள்:
“என்ன டீது இங்கே ஆபீஸ் ரூம் லேயே படுக்கையையும் போட்டு வச்சிருக்காரு?”
“சினிமாக்காரங்களுக்கு ஆபீஸ், படுக்கை அறை எல்லாமே ஒண்ணுதான்! இன்னும் நல்லாச் சொல்லணும்னாப் படுக்கையறையிலேதான் பல ஆபீஸ் விஷயங்கள் கூடஸெட்டில் ஆகும்” என்று சொல்லி விட்டபின் இத்தனை பட்டவர்த்தனமாக அதை ஏன் சுமதியிடம் சொன்னோம் என்று சிறிது தயங்கியவளாக நாக்கைக் கடித்துக் கொண்டாள் மேரி.
சுமதி இதற்குப் பதில் சொல்லவில்லை. குனிந்த தலை நிமிராமல் உட்கார்ந்திருந்தாள். அதற்குள் உள்ளே அந்த ஏ.ஸி. ரூமிலேயே இருந்த அட்டாச்டு பாத்ரூமுக்குப் போயிருந்த தயாரிப்பானர் தொண்டையைச் செருமிக் கனைத்தபடியே திரும்பி வந்து சேர்ந்தார். மணியை அமுக்கி பையனைக் கூப்பிட்டபடி, குரலை சிறிது குறும்புத்தனமாகத் தணித்து, “என்ன மேரீ, சுமதிக்குப் பிராந்தியா? விஸ்கியா” என்றார். சுமதி துணுக்குற்றாள்.
“ரெண்டுமே இல்லே அவளுக்கு எதுவுமே பழக்கம் கிடையாது” என்று மேரி இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. ஒரு விநாடி பொறுத்து, “அதெல்லாம் இனிமே நீங்கதான் பழக்கித்தரணும். உங்க கைதான் ராசியான கை” என்று சொல்லி வைத்தாள். சுமதிக்கு அது விரசமாகப் பட்டது. மேரி மிகவும் வெளிப்படையாகவே கீழிறங்கி வந்து பேசத் தொடங்கி விட்டாளோ என்று சந்தேகமாயிருந்தது. சென்னையைப் போன்ற ஒரு நவநாகரிக ஊரில் ஆண் தரகர்களைவிடப் பெண் தரகர்கள் மோசமானவர்களாகவும் மட்டமானவர்களாகவும் இருப்பார்கள் போலிருந்தது. ஆனாலும் மேரியை ஏறிட்டுக் கோபமாக உறுத்துப் பார்க்க முடியாதபடி சுமதியை ஏதோ தடுத்தது. அவளால் மேரியைக் கண்டிக்க முடியவில்லை. கோபிக்க முடியவில்லை. எதிர்த்து விரோதித்துக் கொள்ளவும் இயலவில்லை.
தயாரிப்பாளர் பிரிஜ் டோரைத் திறந்து பாட்டில்களையும் கிளாஸ்களையும் மேஜை மேலே வைக்கத் தொடங்கினார். சுமதி மெல்லக் குறுக்கிட்டு, “யாரோ டான்ஸ் மாஸ்டரைப் பார்க்கணும்னிங்களே?” என்று கேட்டு வைத்தாள். அதுதான் சமயமென்று “இவள் மாடியிலே டான்ஸ் மாஸ்டரைப் பார்த்துப் பேசிக்கிட்டிருக்கட்டுமே பையனோட அனுப்பி வச்சிடலாமா?” என்று மேரி தயாரிப்பாளரை நோக்கிச் சிரித்துக் கொண்டே கேட்டாள்.
“ஏன் சுமதிக்கு எதுவும் வேண்டாமா?” என்று தயாரிப்பாளர் மேஜை மேலிருந்த கிளாஸ்களைக் காட்டி மறுபடியும் கேட்டார். மேரி வேண்டாம் என்பதுபோல் தலையை அசைத்தாள். தயாரிப்பாளர் மறுபடியும் மேஜை மேலிருந்த மின்சார மணிக்கான பொத்தானை அமுக்கினார். பையன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான்.
“டேய்! இவங்களை மாடியிலே டான்ஸ் மாஸ்டரிட்டக் கொண்டு போய்விடு” என்று சுமதியைக் காட்டித் தயாரிப்பாளர் பையனுக்கு உத்தரவு போட்டார்.
பையன் பின்தொடரச் சுமதி எழுந்து சென்றாள். மாடிக்குப் படி ஏறுகிற வழியில் ரவிகுமார்-டான்ஸ் மாஸ்டர் என்று பெயர் எழுதி அவரைச் சந்திக்கும் நேரமும் எழுதப்பட்டிருந்தது.
டான்ஸ் மாஸ்டரைச் சுற்றி நாலைந்து இளம் பெண்கள் இருந்தார்கள். பைஜாமா, ஜிப்பா அணிந்த பாகவதர் கிராப்புடன் கையில் வைர மோதிரமும், பற்களில் வெற்றிலைக் காவியும் மின்ன அவன் உற்சாகமாக இருந்தான். சுமதியை அழைத்துச் சென்ற பையன், “புரொட்யூஸர் சார் அனுப்பிச்சாருங்க” என்று சுமதியைச் சுட்டிக் காட்டினான். அப்புறம் சுமதி பக்கமாகத் திரும்பி “உள்ளே போங்கம்மா” என்று அவளுக்கு உள்ளே போக விலகி விழி விட்டான்.
“பலே! பலே! டான்ஸுக்குன்னே செதுக்கி வச்சாப்ல உடம்பு, வாம்மா வா...” என்று அவளுடைய உடல் வனப்பைப் பாராட்டியபடியே வரவேற்றான் டான்ஸ் மாஸ்டர்.
சுமதி அவனை வணங்கிவிட்டு, நடு ஹாலில் விரித்திருந்த ஜமுக்காளத்தில் நின்றாள். “நீ தலையை ஒயிலாகச் சாய்த்துக் கும்பிடறதே டான்ஸ் மாதிரி இருக்கும்மா...”
சுமதி புன்னகை பூத்தாள்.
“உன் பேர் என்னம்மா?”
“சுமதி.”
“பலே! பலே! பேரும் பிரமாதம்தான்.”
சுமதி ஜமுக்காளத்தில் உட்காருவதா நின்று கொண்டே இருப்பதா என்பது தெரியாமல் தயங்கிய போது, “எங்கே இப்போ நான் அபிநயம் பிடிக்கிற மாதிரி நீயும் பிடி பார்க்கலாம். இன்னும் பாடம்லாம் நிறைய இருக்கு. இது சும்மனாச்சும் ஒரு டெஸ்ட்டுக்குத்தான்” என்றான் டான்ஸ் மாஸ்டர். சுமதி அவன் செய்த மாதிரியே செய்து நின்றாள். அவன் அருகே வந்து அவள் நின்ற பாணியைத் திருத்துவது போல் மோவாய், இடுப்பு, தோள் பட்டையை எல்லாம் தொட்டு, ‘இப்படி இல்லேம்மா. இன்னும் கொஞ்சம் இடுப்பு வளையணும். முகபாவம் மாறணும்’-ஏதேதோ சொன்னான். வேறு பெண்கள் முன்னிலையில் அவன் தன்னைத் தொட்டது என்னவோ போலிருந்தது. ஆனால் அந்த வேறு பெண்கள் அதையெல்லாம் பெரிதாகப் பொருட்படுத்தாதது போலக் குஷாலாய்ச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அதில் துடுக்குக்காரியாகத் தோன்றிய பெண் ஒருத்தி ஏதோ ஹாஸ்யமாகச் சொல்வதுபோல், “மாஸ்டருக்குப் புது கிராக்கி வந்தாச்சு. இனிமே நம்மை எல்லாம் கவனிக்கவா போறாரு?” என்று கூட இரைந்து சொன்னாள். தயாரிப்பாளருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. தயாரிப்பாளரின் அலுவலக மாடியில் டான்ஸ்மாஸ்டரே தனியே ஸ்கூல் நடத்துகிறார் என்பது புரிந்தது. ஆனால் அது உண்மையில் டான்ஸ் ஸ்கூல்தானா, அல்லது அந்தப் பெயரில் அங்கு வேறு ஏதாவது இரகசியமாக நடந்து கொண்டிருக் கிறதா என்பது சுமதிக்குச் சந்தேகமாகவே இருந்தது. சூழ்நிலைகள் அப்படி இருந்தன. டான்ஸ் மாஸ்டர் சுமதியை லேசில் விடவில்லை. என்னென்னவோ சம்பந்தமுள்ளதையும், சம்பந்தமில்லாததையும் செய்யச் சொல்லி வேர்க்க விறுவிறுக்க கஸ்ரத் எடுத்தது போல ஆகியபின் “உனக்கு டான்ஸ் ஜோரா வரும் தங்கம்” என்று செல்லப் பெயர் கொண்டாடிச் சொன்னான். சிறிது பொறுத்து, “நீ நாளையிலேருந்து வந்துடும்மா! உனக்கு மாச ஃபீஸ் நூத்தம்பது போட்டுக்கறேன்” என்றான் டான்ஸ் மாஸ்டர்.
“சரி வரேன் மாஸ்டர் சார்” என்று அவனிடம் சொல்லிக் கொண்டு கீழே படியிறங்கி வந்தாள் சுமதி. ஏ.ஸி. அறை வாசலில் உட்கார எதுவும் இல்லை. சரி உள்ளேதான் போகலாமா என்று எண்ணிக் கதவைத் திறந்த சுமதி திறந்த கதவுக்கு உள்ளே பார்த்த காட்சி உடனே கதவை மூடிவிட்டுப் பின் வாங்கும்படி இருந்தது. மேரியும், தயாரிப்பாளரும் மேஜையருகே உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்த்து சுமதி கதவைத் திறந்திருந்தாள். ஆனால் அவர்கள் இருவரும் கட்டிலில் படுக்கையில் இருந்தார்கள். சுமதி மறுபடி கதவைத் திறக்க முடியவில்லை. வெளியிலேயே அவள் தயங்கி நின்று கொண்டிருந்தாள்.
பித்துப் பிடித்தவள் போல் எவ்வளவு நேரம் அந்த அறை வாயிலில் நின்றோம் என்பது சுமதிக்கே நினைவில்லை. மற்றவர்களுக்குக் கூசுகிற பல விஷயங்கள் சினிமா உலகில் உள்ளவர்களுக்கு மரத்துப் போயிருப்பது தெரிந்தது. மறுபடி மாடிக்கே படியேறிப் போய் டான்ஸ் மாஸ்டரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கலாமே என்று மேலே நிமிர்ந்து பார்த்தால் மாடி முகப்புக் கதவும் அடைத்திருந்தது. படியேறிச் சென்று கதவைத் தட்டுவதற்கு அவளுக்குப் பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது. அந்த வீட்டில் எந்தக் கதவுக்குப் பின்னால் என்ன இருக்குமோ என்ற கூச்சம் இன்னும் இருக்கத்தான் செய்தது. ஆனால் படிப்படியாகச் சுமதியின் மனம் பேதலித்துக் குழம்பியது. கூச்சம் போய்ச் சலிப்பு வந்தது.
‘இவர்களெல்லாம் இப்படி இருக்கிறார்களே’ என்ற ஆத்திரம் வருவதைவிட ‘இப்படி இருப்பதுதான் வாழ்க்கை போலிருக்கிறது’ என்ற சலிப்பு மட்டுமே வரத் தொடங்கியிருந்தது. மேரி எவ்வளவோ தந்திரமாகவும் பொறுமையாகவும் தனக்கு வலை விரித்திருந்தாலும், அவள் வலைதான் விரித்திருக்கிறாள் என்ற சுமதிக்குப் புரிந்ததே ஒழிய உறைக்கவில்லை.
‘இன்னிக்கு இந்த ஆளை விட்டுடாதே! ஆள் நல்ல ‘மூட்’லே இருக்கான்’ என்று அரைமணி நேரத்திற்கு முன் மேரி தன்னிடம் சொல்லியிருந்தாளே அந்த வாக்கியம் சுமதியின் செவிகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது. அதையும், அது போன்ற வாக்கியங்களையும் சகித்து ஜீரணித்துக் கொள்கிற அளவு தன் மூளை சலவையாகி விட்டதோ என்று கூட அவள் நினைத்தாள். தொடர்ந்து தவறுகளாகப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நாளடைவில் எது சரி எது தவறு என்ற கூடக் கண்டுபிடிக்கும் உணர்வு போய்விடும். தொடர்ந்து பாவங்களாகவே கண்டுகொண்டிருப்பவர்களுக்குப் புண்ணியத்தைப் பற்றிய உணர்வு மரத்துப் போய்விடும். மேரி தன்னுடைய தந்திரத்தாலும் கெட்டிக்காரத்தனத்தினாலும் சுமதியை மெல்ல மெல்ல அந்த நிலைக்கு ஆக்கிவிட்டிருந்தாள். குழப்பிவிட்டிருந்தாள்.
“நிற்கிறீங்களேம்மா. உட்காருங்க” என்று பையன் ஒரு மடக்கு நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வந்து பிரித்துப் போட்டான். சுமதி உட்கார்ந்து கொண்டாள். அன்று செயிண்ட் தாமஸ் மவுண்ட்டில் செய்தது போல் அருவருப்படைந்து ஓடுகிற சக்தி இப்போது சுமதியிடமே இல்லை. இந்த அளவிற்குத் தன் உணர்வுகள் பதிந்து போய்விட்டனவே என்ற ரோஷம் கூட இப்போது அவளுக்கு வரவில்லை.
சிறிது நேரத்தில் ஒன்றுமே நடக்காதது போல் சகஜமாகப் புத்தம் புதிய நூறு ரூபாய் நோட்டுக்களை எண்ணியபடி மேரி அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். சுமதியைக் கண்டதும், “என்னடி நீ இங்கேயா உட்கார்ந்துக்கிட்டிருக்கே? மாடியிலே போய் டான்ஸ் மாஸ்டரைச் சந்திக்கலியா?” என்ற கேட்டபடி ரூபாய் நோட்டுக்களை அப்படியே ‘பிளவுஸ்’க்குள் திணித்துக் கொண்டாள் மேரி.
கையிலிருந்த டம்பப் பையை விட்டு விட்டுப் பிளவுஸுக்குள் பணத்தை அவள் திணித்துக் கொண்டது சுமதிக்கு ஒரு வித்தியாசமான பழக்கமாகத் தெரிந்தது.
“டான்ஸ் மாஸ்டரைப் பார்த்துட்டு வந்தாச்சு” என்றாள் சுமதி. ஒரு நிமிஷம் பொறுத்து, “நாளையிலே யிருந்து டான்ஸ் கிளாஸுக்கு வரச் சொன்னாரு. மாச ஃபீஸ் நூத்தைம்பது ரூபாய்னும் சொன்னாரு” என்றும் சேர்த்துச் சொன்னாள். “பணத்தைப் பத்திக் கவலைப்படாதே! நான் இருக்கேன். யூ கோ எஹெட்” என்று சொல்லிச் சுமதியின் முதுகில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்தாள் மேரி. “கன்னையா தூங்கிட்டாரு. நாளைக்குச் செம்பரம்பாக்கம் ஏரியிலே ஏதோ ‘அவுட்டோர்’ ஷூட்டிங் இருக்காம். அதுக்கு உன்னையும் வரச்சொல்லி எங்கிட்ட முன்பணம் கொடுத்திட்டாரு. அவர் கார்லியே போயி உன்னை ஹாஸ்டல் வாசல்லே ‘டிராப்’ பண்ணிட்டு இப்ப நான் போறேன்” என்று சுமதியிடம் சொல்லிவிட்டு வாசற்பக்கம் நின்ற பையனைக் கைதட்டிக் கூப்பிட்டு மேரி காருக்குச் சொன்னாள்.
கார் ஸ்டார்ட் ஆகிற சத்தம் கேட்ட சுவட்டோடு முகப்பில் கொண்டு வந்து தயாராக நிறுத்தப்பட்டது.
இருவரும் காரில் ஏறி அமர்ந்ததுமே பிளவுஸில் கையை விட்டுப் பணத்தை எடுத்த மேரி மூன்று நூறு ரூபாய் நோட்டுக்களைச் சுமதியிடம் கொடுத்தாள்.
“உங்கிட்டவே இருக்கட்டுமே! நான்தான் உனக்கு நிறையத் தரணுமே” என்று அதை வாங்கிக் கொள்ளத் தயங்கினாள் சுமதி.
“நோ நோ! அதெல்லாம் அப்புறம் தா. வாங்கிக்கறேன். இப்ப இதை ரெஃப்யூஸ் பண்ணாதே. முதல் முதலா நீ சம்பாதிக்கிற பணம் இது” என்று சிரித்தபடியே சுமதியின் கைகளில் திணிக்காத குறையாக அதை வைத்து அழுத்தினாள் மேரி. சுமதி வாங்கிக் கொண் டாள். மறுக்கும் சக்தியும், தடுக்கும் சக்தியும் இப்போது அவளை அறவே கைவிட்டிருந்தன. எதையும் அவளால் வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. எதற்கும் அவளால் முடியாது என்ற மறுக்க முடியவில்லை. அவள் மேரியின் கைப்பாவை போலாகி இருந்தாள். அவள் கொடுத்த பணத்தை எங்கே வைத்துக் கொள்வதென்று சுமதி திணறியபோது மேரியே அதை மறுபடி வாங்கி, “நமக்கு இதுதான் பத்திரமான இடம்டி!” என்று அதைச் சுமதியின் பிளவுசுக்குள் திணித்து விட்டாள். அதையும் சுமதியால் தடுக்க முடியவில்லை. தடுக்க முடியாததோடு அதற்கு இசைகிறேன் என்பதன் அடையாளமாக, “ஏதோ அவுட்டோர் ஷூட்டிங்னியே. நாளை எத்தனை மணிக்கு, எங்கே வரணும்? இப்பவே அதைச் சொல்லிடு” என்று மேரியை அவளே வினாவவும் செய்தாள்.
“எங்கேயும் வரவேண்டாம். நீ பாட்டுக்கு ஹாஸ்டல் காம்பவுண்டுக்கு வெளியிலே வந்து பஸ் ஸ்டாப்பிலேயோ டாக்ஸி ஸ்டாண்டிலேயோ காலை எட்டரை மணிக்கு நில்லு. இதே வண்டி வந்து உன்னைப் பிக்-அப் பண்ணிக்கும்” என்றாள் மேரி.
“எட்டரை மணிக்கு அவ்வளவு காலங்கார்த்தாலே எனக்கு வார்டனிட்டப் பெர்மிஷன் கிடைக்கிறது கஷ்டமாச்சேடி?”
“நாளைக்கு ஒரு நாள் மட்டும் எப்படியாவது ‘மானேஜ்’ பண்ணிக்கோ சுமதி! அதுக்கப்புறம் பெர்மனென்ட்டா உனக்கு நான் ஒரு வழி சொல்லித் தரேன். யாரிட்டவும் பெர்மிஷனே இல்லாம நீ வெளியே வரலாம்.”
அது என்ன வழி என்று அறிந்து கொள்ளச் சுமதிக்கு ஆவலாக இருந்தும் அப்போது மேரியை உடனே அதைச் சொல்லும்படி அவள் வற்புறுத்தவில்லை.
சுமதியின் அதிர்ஷ்டம் அவள் ஹாஸ்டல் வாசல் பஸ் ஸ்டாப் அருகே காரிலிருந்து இறங்கவும், விமலா யூனிவர்ஸிடி லைப்ரரியிலிருந்து பஸ்சில் திரும்பி வந்து இறங்கவும் சரியாக இருந்தது. இருவரும் சேர்ந்தே ஹாஸ்டலுக்குள் சென்றார்கள். அறைக்குள் சென்றதும் ஸாரி மாற்றும்போது பிளவுவிலிருந்து முந்நூறு ரூபாயை வெளியே எடுத்தாள் சுமதி. விமலா பார்த்திருக்கமாட்டாள் என்ற நினைப்பில் ரூபாய் நோட்டுக்களை எடுத்த சுமதி பக்கத்திலேயே நின்று தன்னைப் போல் ஸாரி மாற்றிக் கொண்டிருந்த விமலா அதை பார்த்ததும் சுமதி அர்த்தமின்றிச் சிரித்துக் கொண்டாள். மழுப்பலான ஒரு சிரிப்பாயிருந்தது அது.
“என்னடி சுமதி! போன இடத்திலே இத்தனை பெரிய வரும்படியா?” விமலா சாதாரணமாகத்தான் இப்படிக் கேட்டாள். குத்தலாகவோ வேறு உள்ளர்த்தம் வைத்தோ அவள் சுமதியை இப்படிக் கேட்கவில்லை. முதல் நாள் கூடப் பணப் பற்றாக்குறை பற்றி வருத்தப் பட்டுக் கொண்ட சுமதியிடம் திடீரென்று மூன்று நூறு ரூபாய் நோட்டுக்களைப் பார்த்தவுடன் சுபாவமாகக் கேட்பதற்கு வாயில் வந்த வார்த்தைகளைச் சிறிதும் தணிக்கை செய்து பேசத் தோன்றாமல் அப்படியே மனதில் தோன்றியபடி கேட்டிருந்தாள் விமலா.
சுமதிக்கு அந்தக் கேள்வி என்னவோ போலிருந்தது. ‘இத்தனை பெரிய வரும்படியா?’ என்ற அவள் வார்த்தைகள் மிகவும் குத்தலாக அவளுக்குத் தோன்றின. ஆனால் அதற்காக விமலாவிடம் அவள் எரிந்து விழவில்லை. பொறுத்துக் கொண்டாள்.
மறுநாள் காலையிலும் விமலாவிடம் சொல்லி அவ ளையும் அழைத்துக் கொண்டு வெளியே போவது போல் தான் வெளியேற முடிந்திருந்தது. முதல்நாள் சொல்லியிருந்தபடி சரியாக எட்டே கால் மணிக்கு ஹாஸ்டல் வாசலில் இருந்த பஸ் ஸ்டாண்டிற்குக் கார் வந்துவிட்டது. கல்லூரிக்கு அன்று விடுமுறை நாள்தான். மாலையில் நேரங்கழித்து திரும்பினால்கூடப் பரவாயில்லை. ஆனால் சொல்லியிருந்தபடி காரில் மேரி வரவில்லை. நேரேயே தயாரிப்பாளரோடு போய் விட்டதாக டிரைவர் கூறினான்.
பூந்தமல்லி ஹைரோடில் ஒரு பெரிய ஹோட்டல் வாசலில் டிரைவர் காரை நிறுத்தி, “கொஞ்சம் இருங்கம்மா! அவுட்டோருக்கான டிஃபன், காபி எல்லாத்துக்கும் இங்கேதான் சொல்லியிருக்காங்க. டிக்கியிலே ஏத்திக்கிட்டு வந்துடறேன்” என்றான்.
சுமதி காரிலேயே உட்கார்ந்திருந்தாள். அரை மணி தாமதாமாயிற்று. எல்லாம் ஏற்றி முடிந்ததும் கார் மறுபடி புறப்பட்டது.
படப்பிடிப்பிற்குக் குறிப்பிட்டிருந்த லொகேஷனுக்குப் போனதும் முதலிலேயே போய்த் தயாரிப்பாளர், மேரி மற்ற நடிகர் நடிகைகள், எல்லாரும் அங்கே தயாராகக் காத்திருப்பதைப் பார்த்தாள் சுமதி.
“ரொம்பப் பெரிய வி.ஐ.பி. நட்சத்திரம்தான் கால்ஷீட்லே கடைசியா வந்து சேரும். இன்னிக்கு நம்ம சுமதி தான் லேட்டா வந்திருக்கு. அதனாலே அவதான் வி.ஐ.பி” என்று தமாஷ் பண்ணினார் தயாரிப்பாளர்.
“நீங்க சொன்னாலும் சொல்லலேன்னாலும் அவ நிச்சயமா ஒரு நாள் வி.ஐ.பி. ஆகப்போறவதான் புரொட்யூஸர் சார்” என்று மேரி சேர்ந்து கொண்டு சொன்னாள்.
இன்னும் சாதாரணமாக வருகிற வெயில் வெளிச்சம் கூட வரவில்லை. வானம் மந்தாரம் போட்டு மூடியிருந்தது. அந்த இடம் வேறு மரக்கூட்டங்கள் அடர்ந்த தோட்டம் போல இருந்தது. “முதல்லே ஜமுக்காளத்தை விரிங்க. டிஃபன் சூடு ஆறிப்போறதுக்கு முன்னாடி சாப்பிட்டுடலாம். மத்ததை அப்புறம் கவனிக்கலாம்” என்று தயாரிப்பாளர் உத்தரவு போட்டார்.
புல் தரையில் ஜமுக்காளம் விரிக்கப்பட்டது. முக்கியமானவர்கள் எல்லாம் வந்து உட்கார்ந்தார்கள். எங்கேயோ பராக்குப் பார்த்தாற்போல் நின்ற சுமதியைப் போய்க் கையைப் பிடித்து இழுத்து வந்து தயாரிப்பாளருக்கும் தனக்கும் நடுவே உட்கார்த்திக் கொண்டாள் மேரி.
“டேய்! நம்ம எதிர்கால ஹீரோயினுக்குக் கூட ஒரு வடை வை” என்பதுபோல் இடையிடையே சுமதியை விசேஷமாகக் கவனித்து உபசரித்துக் கொண்டிருந்தார் தயாரிப்பாளர்.
ஜமுக்காளத்தில் உட்கார்ந்திருந்தவர்களிடையே பஞ்சவர்ணக்கிளி போல் தனித்துத் தெரிந்தாள் சுமதி. ஒரே அரட்டையும் சிரிப்புமாக இருந்தது. தொழிலாளிகளும் உப நடிகர், நடிகைகளும் சற்று விலகி ஒரு மரத் தடியில் தனியே சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சில பெண்கள் அடிக்கடி தன் பக்கம் கையை நீட்டிப் பேசும் போதெல்லாம் சுமதிக்கு என்னவோ ஓர் உணர்வு மனத்தில் குறுகுறுத்தது. தயாரிப்பாளர் அத்தனை பெரிய கூட்டத்தில் தன்னை மட்டும் விசேஷமாகக் கவனித்தது பலருக்கும் பிடிக்கவில்லை என்று சுமதிக்கே கூட ஜாடைமாடையாகத் தெரிந்தது. வந்த காரியமாகிய ‘அவுட்டோர் ஷூட்டிங்’ பற்றிப் பதினொரு மணிவரை யாருமே கவலைப்படவில்லை. டிபன் சாப்பிட்டு முடிந்ததும் பத்துப் பன்னிரண்டு நாலைந்து ரக சிகரெட் பெட்டிகள், வெற்றிலை - அசோகா, சுண்ணாம்பு என்று அடுத்த அயிட்டங்கள் பிரித்து வைக்கப் பட்டன.
“மேரி! இந்தா நீயும் பிடி” என்ற தயாரிப்பாளர் உற்சாகமாகக் கூறியபடி மேரியிடம் சிகரெட்டையும் தீப்பெட்டியையும் நீட்டிய போது மேரி கூட ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு புகையைக் இழுத்து ஊதி விட்டாள். தயாரிப்பாளர் வேடிக்கையாக ஒரு தடவை மேரியின் முகத்துக்குக் குறிவைத்துப் புகையை ஊதினார். அடுத்த தடவை சுமதியின் முகத்துக்குக் குறிவைத்துப் புகையை ஊதினார். சுமதி சிரித்தாள்.
“இப்போ உனக்கு என்ன வேஷம்னாப் பிரபல குந்தளகுமாரி ஏரியிலே விழறதா ஒரு காட்சி. அவளுக்கு உடம்புக்கு சுகமில்லை. அதுனாலே லாங்ஷாட்டிலே உனக்கு ‘டுப்’ போட்டு அவ காட்சியை எடுத்துடலாம்னு இருக்கேன்.”
சுமதிக்கு ஒன்றும் புரியவில்லை. டுப் போட்டு எடுக்கிறது என்றால் என்ன என்பதைத் தயாரிப்பாளரும், மேரியும் அவளுக்கு விளக்கிச் சொல்லத் தொடங்கினார்கள். சுமதிக்கும் மெல்ல மெல்ல அது புரியத் தொடங்கியது. பன்னிரண்டு மணியளவில் வெயிலும் அங்கே ஓரளவு வந்திருந்தது.
தயாரிப்பாளர் கன்னையாவும் மேரியும்தான், காட்சி எப்படிப் படமாக்கப்பெற இருக்கிறது என்பதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்களே ஒழிய டைரக்டர் உதவி டைரக்டர் என்ற பெயரில் வந்திருந்த இருவரும் வாயைத் திறக்கவே இல்லை. தயாரிப்பாளர் பேசிக் கொண்டிருக்கும்போது குறுக்கே வாயைத் திறந்தால் உத்தியோகம் போய்விடும் என்கிற பயத்திலோ என்னவோ அவர்கள் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்து விட்டார்கள்.
தன்னை அந்த வெளிப்புறக் காட்சிப் படிப்பிடிப்பிற்கு வரச் சொல்லி விட்டதற்காக ஏதோ பேருக்கு நடிக்கச் சொல்வதாகச் சுமதிக்குத் தோன்றியதே ஒழிய அது அவ்வளவு முக்கியமானதாகப் படவில்லை. வந்திருந்த யூனிட் முழுவதும் ஏதோ பிக்னிக் புறப்பட்டு வந்த மாதிரி நடந்து கொண்டார்களே ஒழியப் படம் பிடிக்க வந்த மாதிரித் தெரியவில்லை. பணம் பாழாயிற்று. வீண் அரட்டையும் வம்புமாக நேரம் கழிந்து கொண்டிருந்தது. “இந்தாப்பா! பகல் சாப்பாட்டு மெனுவிலே மொறு மொறுன்னு ஒரு மசால் வடையையும் சேர்த்துக்கோ, மறந்துடாதே” என்று தயாரிப்பாளர் மிகவும் அக்கறையாகச் சொன்னார்.
“இந்த அவுட்டோர் உனக்குன்னே ஏற்பாடு பண்ணினதுடி சுமதி” என்று சுமதியின் காதருகே சொன்னாள் மேரி.
“தெண்டச் செலவு. முகம் கூடத் தெரிய வழியில்லாத ஒரு ‘டூப்’ காட்சிக்காக இவ்வளவு செலவழிக் கணுமா மேரி?” என்று சுமதி வெடுக்கென்று கேட்டுவிட்டாள்.
“உன்னைப் போல ஒரு பெண்ணுக்காக நம்ம புரொட்யூஸர் எவ்வளவு வேணும்னாச் செலவழிப்பார் சுமதி?”
மேரி எதற்காக இப்படிச் சொல்கிறாள் என்று சுமதி யோசிக்கத் தொடங்கினாள். அவள் சொன்ன வாக்கியம் சரியாகச் சுருதி சேரவில்லை. அதில் சுருதி பேதம் இருந்தது. அதற்கேற்றாற் போலத் தயாரிப்பாளரும் குட்டி போட்ட பூனையைப் போலச் சுமதியையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தார்.
“சுமதிக்கு எது வேணும்னாலும் கூச்சப்படாம எங்கிட்டக் கேட்கணும். பகல் சாப்பாட்டோட ஏதாச்சும் ஒரு ஸ்வீட்டுக்குச் சொல்லட்டுமா? வேறே ஏதாவது ஜூஸ் கீஸ் வேணுமா?” என்றெல்லாம் அருகே வந்து மிகவும் கனிவாக விசாரித்துக் கொண்டிருந்தார்.
பகல் ஒன்றரை மணிக்குள் சுமதி தண்ணிரில் குதித்துக் கரையில் ஒதுங்குகிற காட்சியை எடுத்துவிட முயன்றார்கள் அவர்கள். இருமுறை முயன்றும் ஷாட் ஓ.கே. ஆகவில்லை. காரணம், தண்ணிரில் குதிப்பதில் சுமதிக்கு இருந்த பயம்தான். என்னதான் லாங்-ஷாட்டாக எடுத்தாலும் கதைக்கு ஏற்ப வாழ்க்கையை வெறுத்தவள் ஒருத்தி தண்ணிரில் குதிப்பது போலக் குதிக்காமல் தயங்கித் தயங்கிப் பயந்து கொண்டே குதித்தாள் அவள். இந்த மாதிரிக் குதித்ததனால் அவளுக்கே முழங்காலில் இலேசாகக் காயம்கூடப் பட்டுவிட்டது. முதல் ஷாட்டின் போது அவள் பயப்பட்டாள் என்பதற்காக இரண்டாவது ‘ஷாட்’டின்போது தண்ணிரில் ஆழம் குறைவான இடமாகப் பார்த்துக் குதிக்கச் சொன்னார்கள். முதல் ஷாட்டில் அவள் பயந்து குதிக்காமலே இருந்துவிட்டாள். இரண்டாவது ஷாட்டில் குதித்துக் காயம் பட்டுவிட்டது. முதலில் குதிப்பதையும் பின்பு கரையில் ஒதுங்கி எழுந்திருப்பதையும், தந்திரமாக எடுத்துவிட முயன்றார்கள்; முடியவில்லை.
அதற்குள்ளேயே பகல் உணவு நேரம் வந்துவிட்டது. நடிக்க வேண்டும்; நடிக்க வேண்டும் என்று ஆசை ஒரு பக்கம் இருந்தாலும் நடிப்பது எவ்வளவு சிரமமான காரியம் என்று சுமதிக்கு அப்போதுதான் புரிந்தது. நடிப்பதற்கு மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் வாட்ட சாட்டமாகவும் இருந்தால் மட்டும் போதுமென்று அவள் இதுவரை நினைத்திருந்த நினைப்பு மெல்ல மெல்ல மனத்திற்குள்ளேயே கரைந்து அமுங்கிப்போய்விட்டது. ‘காமிராவுக்கும், சுற்றி நிற்பவர்களுக்கும், பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் பயப்படாமல் அநாயாசமாக ஒரு சின்னக் காட்சியில் ‘லாங்-ஷாட்டில்’ நடிப்பதுகூட இவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே’, என்று அவள் இப்போது உணர்ந்தாள்.
“பரவாயில்லை! வாம்மா. சாப்பாட்டுக்கு அப்புறம் பார்க்கலாம். முடிஞ்சா உனக்கே இன்னொரு ‘டூப்’ போட்டுக்கலாம், என்று அயராமல் சொல்லியபடி அருகே வந்து சுமதியைத் தோளில் தட்டிக் கொடுத்தார் தயாரிப்பாளர். ஒரு சின்ன ‘டூப்’ காட்சியைக் கூட ஒரே ஷாட்டில் கச்சிதமாகச் செய்து கொடுக்க முடியவில்லையே என்று கூச்சமாகவும், வெட்கமாகவும் இருந்தது சுமதிக்கு.
“இந்தாப்பா! உங்களைத் தானே? இங்கே அக்கம் பக்கத்துக் கிராமத்திலே யாராவது மீனவர் கம்யூனிட்டிப் பொண்ணுங்க இருந்தால் கூட்டிக்கிட்டு வாங்க. தண்ணிரிலே குதிக்கிற காட்சிக்கு அவங்களிலே யாராவது ஒருத்தரைப் பயன்படுத்திக்கிட்டு அப்புறம் கரையிலே ஒதுங்கறப்போ முதுகு மட்டும் தெரியறமாதிரி சுமதியை ஒரு ஷாட் எடுத்துக்கலாம்” என்ற தயாரிப்பாளரே சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு யோசனை கூறினார்.
“பெரிய நடிகருக்கோ, நடிகைக்கோ தான் ‘டூப்’போடுவாங்க. ஆனா நம்ம புரொட்யூஸர் சார் குந்தளகுமாரிக்கு உன்னை ‘டூப்’ போட்டுட்டு உனக்கே இன்னொரு ‘டூப்’ போடப் போறாரு. உம்மேலே உள்ள பிரியத்திலேதான் இதெல்லாம் செய்யறாரு” என்றாள் மேரி.
தண்ணிரில் பயப்படாமல் சகஜமாகக் குதிக்கத்தக்கக் கூடிய ஒரு துணிச்சல்காரியான மீனவப் பெண்ணைத் தேடி ஆட்கள் பறந்தார்கள். அரைமணி நேரத்தில் அப்படிப் பட்ட பெண்மணி ஒருத்தியையும் கண்டுபிடித்து அழைத்து வந்துவிட்டார்கள். ஒரு மேட்டிலிருந்து அவளைத் தண்ணிரில் குதிக்கச் சொல்லி லாங் ‘ஷாட்’டில் எடுத்துக் கொண்டார்கள். கச்சிதமாக ஒரே ஷாட்டில் அது முடிந்து விட்டது.
தயாரிப்பாளர் அந்த மீனவப் பெண்ணுக்கு இருபத்தைந்து ரூபாய் கொடுத்தார்.
“என்னங்க. இது? அம்பது ரூபாயாச்சும் கொடுங்க” என்றாள் அந்த மீனவப் பெண்.
“சினிமாவிலே உன் மூஞ்சியைக் காமிக்கிறதுக்காக நீ எனக்குக் குடுக்கணும் அம்பது ரூபா” என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் தயாரிப்பாளர். தண்ணிரில் குதிக்கிற காட்சியை எடுத்து முடித்ததும் கரையருகே கதாநாயகி ஒதுக்கப்பட்டுத் தட்டுத் தடுமாறி எழுந்திருப்பது போல ஒரு காட்சி எடுக்கப்படவேண்டும். அந்தக் காட்சிக்காகச் சுமதி திறந்த முதுகுடன் தண்ணிரருகே குப்புறக் கிடக்க வேண்டும். திறந்த முதுகுடன் கிடப்பது பற்றி ஒரு சர்ச்சை மூண்டது.
“இந்த இடத்தில் திறந்த முதுகு அநாவசியம்” என்றார் ஒருவர்.
“சென் ஸாரில் வெட்டிடு வாங்க” என்றார் மற்றொருவர்.
“அதெல்லாம் வெட்டாமே நான் பார்த்துக்கிறேன். வேணும்னா வெறும் முதுகு வேண்டாம், ‘ப்ரா’வோட முதுகுப் பக்க வார் மட்டும் இருக்கட்டுமே” என்றார் தயாரிப்பாளர்.
அதற்குச் சம்மதமா இல்லையா என்று சுமதியை யாருமே கேட்கவில்லை. சுமதிக்கும் அதற்கு ஆட்சேபணை இல்லைதான். ஆனால் ஒரு சிறிய தயக்கம் இருந்தது. படம் வெளிவந்த பின் அதில் தான் இந்தக் கோலத்தில் தோன்றுவதை யாராவது பார்த்து மதுரையில் அம்மாவிடம் போய் இதுபற்றிப் ப்ரஸ்தாபித்தால் வீண் சண்டை வருமே என்றுதான் தயங்கினாள். தன் சந்தேகத்தை மெதுவாக மேரியின் காதருகே நெருங்கிச் சொன்னாள் அவள்.
“உன் சந்தேகம் அனாவசியமானது டீ. சுமதி ! படத்திலே உன் முகமே வராது. முதுகும் ‘ப்ரா’பட்டையும் தான் தெரியும்” என்று மேரி அவளுடைய சந்தேகத்தைத் தீர்த்து வைத்தாள்.
தண்ணிரில் நனைந்த புடவையும் வெயில் வெளிச்சத்தில் தங்கப்பாளமாக மின்னும் அழகிய சதைச் செழிப்புள்ள முதுகுமாகச் சுமதி தண்ணிர் கரையருகே குப்புறச் சாய்ந்தாற் போலப் படுத்துக் கொண்டாள். காமிரா ஆட்கள் எல்லாம் ரெடியாயிருந்தனர்.
“இந்த ஒரு ஸீனாலேயே படம் பணத்தைக் குவிக்கணும். முதுகு மட்டுமில்லே; அதுக்குக் கீழேயும் கொஞ் சம் ‘புரொஜெக்ட்’டிவ்வா எடுங்க” என்ற தயாரிப்பாளர் காமிராமேனிடம் சொல்லிக் கொண்டிருந்தது சுமதிக்குக் கேட்காமல் போகவில்லை. நன்றாகக் காதில் விழுந்தது.
“டூப் போட்டதே நல்லதாப் போச்சு. குந்தளகுமாரி யோட முதுகு இப்படிப் பசு வெண்ணெய் மாதிரித் தளதளன்னு இருக்காது. மூங்கில் மொறம் கணக்கா இருக்கும். நெல்லுக்கூடக் காயப் போடலாம். அத்தனை பெரிசு. இவ சும்மா லட்டு மாதிரி இருக்கா.” இதுவும் தயாரிப்பாளர்தான். அடிக்கடி சுமதியை ‘லட்டு’ என்றார் அவர்.
மறுபடியும் யாரோ குறுக்கிட்டார்கள். “சார்! தண்ணீரிலே ஹீரோயின் குதிச்சுக் கரையிலே ஒதுங்கறத்துக்குள்ளே இப்படிச் சேலை கீலை எல்லாம் ஒதுங்கி ரவிக்கை காணாமப் போயி வெறும் முதுகு மட்டும் ‘ப்ரா’ பட்டையோட தெரியறாப்பில ஆயிடுச்சிங்கறத நம்பவே முடியாது சார். கொஞ்சம் யோசனைப் பண்ணிச் செய்யுங்க.”
“அட, இவன் யார்ராவன்? படம் பார்க்க வர்ரவன் கண்ணுக்குக் குளுமையா ரெண்டு காட்சியைச் சேர்க்கலாம்னா என்னென்னமோ தர்க்கமெல்லாம் பண்ணிக் கிட்டிருக்கான். நீ சும்மா இரு அய்யா, டைரக்டர் சார்! நீங்க ஷாட்டை ஓ.கே. பண்ணுங்க” என்றார் தயாரிப்பாளர்.
“இல்லீங்க! இது ஒரு சோகமான கட்டம். இதுலே போயி ‘செக்ஸ்’ஸை நுழைச்சோம்னாக் கதையிலே சுருதி பேதம் தட்டும்.”
“தட்டட்டும், பரவாயில்லே. நீ உன் வேலையை பார்த்துக்கிட்டுப் போ...” காட்சி தயாரிப்பாளர் விரும்பியபடியே கதாநாயகி குப்புறச் சாய்ந்து படுத்த நிலையில் முதுகும், இடுப்புக்கு அப்பாலும் தூக்கலாகத் தெரிகிறாற் போலவே எடுத்து முடிக்கப்பட்டது.
“பப்ளிஸிட்டிக்காரன் கிட்டச் சொல்லிப் போடணும். இந்த ஸீன்தான் முதல் வால்போஸ்டர். குந்தளகுமாரியோட மூஞ்சியை காமிக்கறதைவிட நம்ம சுமதி யோட முதுகைக் காமிக்கிறத்துக்கு எவ்வளவோ பப்ளிஸிட்டி ‘வேல்யூ’ அதிகமாக இருக்கும்னேன்” என்று தமக்குத்தாமே சொல்லி மெச்சிக் கொண்டார் தயாரிப்பாளர்.
படப்பிடிப்பு முடிந்த பின்னும் நீண்ட நேரம்வரை தான் அதற்கு எப்படிச் சம்மதித்தோம் என்று சுமதிக்கு தன்னையே நம்ப முடியாமல் இருந்தது. படத்தில் முகம் தெரியாது என்பதால் ஆறுதலாகவும் இருந்தது. தயாரிப்பாளர் கொடுத்ததாக மேலும் இருநூறு ரூபாயைச் சுமதியிடம் கொடுத்தாள் மேரி.
“இந்தப் படத்தை நல்லா வந்திருக்கா இல்லியான்னு எப்போ நான் பார்க்கலாம்?” என்று சுமதி மேரியை கேட்டாள்.
“அடுத்த வாரக் கடைசியிலே தரணி ஸ்டூடியே ரிக்கார்டிங் தியேட்டரில் ரஷ் போட்டுக் காட்டுவாங்க, அப்போ உன்னையும் கூப்பிடுவாங்க, வந்து பாரு” என்றாள் மேரி.
அவுட்டோர் ஷூட்டிங் முடிந்த தினத்தன்று மாலை கல்லூரி விடுதி வாயில் வரை தயாரிப்பாளரின் காரிலேயே சுமதியைக் கொண்டு வந்து ‘டிராப்’ பண்ணினாள் மேரி. சுமதிக்கு ஒரு சந்தேகமும் பயமும் இருந்தது. அதனால்தான் அவள் அந்தப் படத்தில் ரஷ்களை பார்க்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தாள். தான் மாட்டிக் கொண்டு விட்டோமோ என்ற பதற்றம் சுமதிக்கு உள்ளூற இருந்தது; மிகவும் தந்திரமாகவும் வஞ்சகமாகவும் தயாரிப்பாளரும் காமிராமேனும் தன்னை ஏமாற்றி விட்டார்களோ என்று அவள் சந்தேகப்பட்டாள். அந்த வாரக் கடைசியில் மேரியோடு தரணி ஸ்டூடியோ ரிக்கார்டிங் தியேட்டரில் போய் ரஷ் பார்த்த போது சுமதிக்கு அவளுடைய முந்திய சந்தேகங்கள் உறுதிப்பட்டன. அவள் பதறி மனம் குழம்பித் தவித்தாள்.
உறுதிகள் மெலிந்து சந்தர்ப்பங்களுக்கு ஒத்துப் போவது என்னும் பலவீனமும், தளர்ச்சியும் தன்னிடம் எப்போது ஆரம்பமாயின என்பது சுமதிக்கே புரியாததாக இருந்தது. சினிமா ஆசை என்ற ஒரே கோணத்தில் உயரப் பறப்பதற்காக வேறு பல உயரங்களிலிருந்து தான் கீழே விழுந்து விட்டோமே என்பதாக உணர்ந்தாள் அவள். மானக்கேடான விஷயங்களைப் பொறுத்து ஏற்பட வேண்டிய கூச்சமோ, ரோஷமோ, ஆத்திரமோ இப்போதெல்லாம் தன்னிடம் ஏற்படுவதே இல்லை என்பது அவளுக்கே புரிந்து தான் இருந்தது. மேரி படிப்படியாக தன்னை ஜெயித்து விட்டாள் என்பதைச் சுமதி உணர்ந்தாள்.
வெளிப்புறக் காட்சிப் படப்பிடிப்புக்குப் போய் விட்டு வந்த மறுநாள் சுமதியிடம் ரொக்கமாக ஐநூறு ரூபாய் இருந்தது. பகல் இடைவேளையின் போது மேரியை வற்புறுத்தித் தன் அறைக்கு அழைத்து வந்து அவளிடம் கைமாற்றாக வாங்கியிருந்த தொகையைத் திருப்பிக் கொடுத்தாள் சுமதி. “இப்ப ஒண்ணும் அவசரல்லேடீ...! ஸ்டார் ஆகியிருக்கே. உனக்கு நிறையச் செலவுகள் இருக்கும், வச்சுக்கோ” என்று அதை வாங்கிக் கொள்ளாமலே மேரி சுமதியிடம் மறுபடி திருப்பிக் கொடுத்துவிட்டாள்.
அதற்குப்பின் தரணி ஸ்டுடியோவில் ரஷ்களை போட்டுப் பார்த்த தினத்தன்று சுமதி மேரியோடுதான் அங்கே போயிருந்தாள். அன்றும் எப்படியாவது மேரியிடம் கடன் பட்டதை அடைத்துவிட முயன்றாள் சுமதி.
“உனக்கு வேறு நினைவே இருக்காதா சுமதி? எப்ப ப் பார்த்தாலும் கடன் கடன்னே சும்மா அனத்திக்கிட்டிருக்கே - ஃபர்கெட் இட் அட் ஒன்ஸ். நான் உனக்குக் கடனே கொடுக்கலேன்னு வச்சுக்க, கிஃப்டாத்தான் கொடுத்திருக்கேன்” என்று அப்போதும் சுமதியின் வாயை அடைத்துவிட்டாள் மேரி.
வெளிப்புற காட்சியில் எடுத்த ரஷ்களைப் போட்டுப் பார்த்தபோது, முகமே தெரியாமல் முதுகு மட்டும் தெரியும் படியாக எடுத்தது தவிர, அதற்கு முன்னும் பின்னுமாகச் சில முக்கால் நிர்வாணப் படங்களை முகமும் தெரியும் படியாகவே அந்தக் காமிராமேன் தந்திரமாகவும் சாமர்த்தியமாகவும் எடுத்திருப்பது தெரிந்தது. காமிராமேன் தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரில் எடுத்ததா, அல்லது தயாரிப்பாளரே சொல்லி எடுக்கச் செய்ததா என்பது தெரியவில்லை. எப்படி இருந்தாலும் சுமதி அந்தப் படங்களைப் பற்றி மிகவும் பயந்தாள். எவ்வாறாவது அவர்களிடம் சொல்லி அந்த ‘நெகடிவ்’களை அழித்துவிடச் செய்ய வேண்டும் என்ற நினைத்தாள்.
சுமதி தன் சந்தேகத்தையும், பயத்தையும் மேரியிட ம் தெரிவித்தபோது “அப்படியெல்லாம் தப்பாக எதுவு ம் செய்து விடமாட்டார்கள். பயப்படாதே” என்றாள் அவள். மேரியிடம் அவள் கடனைக் கொடுத்துவிட்டு க் கணக்குத் தீர்த்து முடித்துவிடவேண்டும் என்றுதான் சுமதி வைராக்கியமாக இருந்தாள். ஆனால் அந்த வைராக்கியம் எடுபடவில்லை. மேரியை நேரில் பார்த்ததும் அவளுடைய உறுதிகள் எல்லாம் கரைந்தே போய்விட்டன.
“சீக்கிரமே இன்னொரு அவுட்டோர் ஷூட்டிங்குக்காகக் காஷ்மீருக்கே உன்னைக் கூட்டிக் கிட்டுப் போகணும்னு கன்னையா சொல்றாரு. இங்கேருந்து டில்லிக்குப் ப்ளேன்ல போயி ஒருநாள் தங்கியபின் அங்கிருந்து அப்புறம் காஷ்மீருக்குப் பறக்கணும்; நானும் கூட வந்தாலும் வருவேன்.”
“ஏண்டி மேரீ! நாம ரெண்டு பேரும் காலேஜிலே படிக்கிறோம்கிறதே உனக்கு நினைவில்லையா? காஷ்மீர், கன்னியாகுமரின்னு இப்பிடியே போய்க்கிட்டிருந்தாப் படிப்பு என்னடி ஆகிறது ?”
“ஹாங்... பெரிய படிப்பு இது...? ஸ்டாராகி லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கப் போறவளுக்குப் படிப்பைப் பத்தி என்னடி கவலை? படிச்சவள்ளாம் ஸ்டாராயிட முடியுமா?” என்று மேரி அலட்சியமாகப் பதில் சொல்லி விட்டாள். சுமதியால் அப்போது அவளை மறுத்து ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஆனாலும் அவள் மனம் என்னவோ பதறத்தான் செய்தது.
காமிராவுக்குமுன் முகத்தைக் காட்டுகிற ஆசையும், ஸ்டாராகிற பித்துமாகச் சேர்ந்து சுமதியை அறவே படிப்பில் நாட்டமில்லாதவளாகச் செய்துவிட்டன. அந்த வார இறுதியில் அம்மா மதுரையிலிருந்து சுமதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாள்.
‘என் பக்கத்திலிருந்து இங்கே உள்ளூரிலேயே படிக்க விட்டால் செல்லம் கொடுத்து நானே உன்னைக் கெட்டுப் போகச் செய்து விடுவேனோ என்று பயந்தேன். செலவானாலும் பரவாயில்லை என்று உன்னைச் சென்னைக்கு அனுப்பிய காரணமே அதுதான். இதை நீ நன்கு புரிந்து கொண்டு சிரத்தையாகப் பாடுபட்டுப் படிக்க வேண்டும். அடிக்கடி சினிமாவுக்குப் போகாதே. சினிமாப் பத்திரிகைகளைக் கூடப் படிக்காதே. கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்து. முதல் வகுப்பில் தேர்ச்சி பெறப் பார்?’ என்று மாற்றி மாற்றி அறிவுரைகள் அந்தக் கடிதத்தில் இடம் பெற்றிருந்தன. புதிதாக ஒன்றுமில்லை. வழக்கமான உபதேசம்தான்.
ஆனால் அடுத்த வார இறுதியிலேயே சினிமாத் தயாரிப்பாளர் கன்னையா “வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிக்காக காஷ்மீர் போகலாமா?” என்று சுமதியைக் கேட்டபோது அவளால் மாட்டேன் என்ற சொல்ல முடியவில்லை. மேரிதான் வந்து கூப்பிட்டாள். சுமதிக்கு முழுச் சம்மதம் என்றாலும்,
“காலேஜிலே என்னடி சாக்குச் சொல்லி லீவு கேட்கிறது?” என்று மேரியிடம் பதிலுக்கு வினவினாள் அவள்.
“இங்கே உள்ளூர்லே யாருக்காவது உடம்பு சுகமில்லேன்னு சாக்குப் போக்குச் சொன்னால் பத்து நாள் லீவு வாங்க முடியாது. துணிஞ்சு மதுரையிலே உங்கம்மாவுக்கே உடம்பு செளகரியமில்லேன்னு ஒரு லீவு லெட்டர் எழுதி நீட்டு. வார்டனோ, பிரின்சிபால் அம்மாளோ தட்டிச் சொல்ல முடியாது” என்று மேரியே ஒரு யோசனை சொல்லிக் கொடுத்தாள்.
மேரி சொல்லிக் கொடுத்தபடியே லீவு லெட்டர் எழுதி லீவும் கொடுத்து விட்டார்கள்; ஆனால் வார்டன் மாலதி சந்திரசேகரன் சுமதியைக் கூப்பிட்டு எச்சரித்தாள்;
“சுமதீ! நீ எப்போ தேடினாலும் ரூமிலேயே இருக்கிற தில்லே. சதா எங்கேயாவது சுத்திக்கிட்டிருக்கே படிப்பிலே நாட்டம் இருக்கிறதாவே தெரியலே. பத்து நாள் லீவு குடுத்திருக்கோம்கிறதுக்காகப் பத்து நாளுமே வராமல் இருக்கணும்னு அவசியம் இல்லே. அம்மாவுக்கு உடம்பு சரியானதும் உடனே புறப்பட்டு வந்துடனும் நீ, வேணும்னா நான்கூட, உங்கம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதறேன்.”
“நீங்க ஒண்ணும் எழுத வேண்டாம் ! நானே அம்மாவுக்கு உடம்பு சரியானதும் அதிக நாள் தங்காமப் புறப்பட்டு வந்துடறேன்” என்று வார்டனிடம் உறுதி சொன்னாள் சுமதி.
காஷ்மீரில் எடுக்கப் போகிற படப்பிடிப்பில் தனக்கு என்ன வேலை இருக்கிறது என்ற தெரிந்து கொள்வதற்காகச் சுமதி மேரியை ஆனமட்டும் கேட்டுப் பார்த்தாள்.
“வேலை எல்லாம் அங்கே புறப்பட்டுப் போனால் தானே வரும். ஒரு யூனிட்டா எல்லாரும் புறப்பட்டுப் போறாங்க - கன்னையா நம்மையும் கூப்பிடறாரு. அலுங்காம ப்ளேன்ல போகப்போறோம்” என்று பதில் சொல்லி பூசி மெழுகி விட்டாள் மேரி.
அம்மாவுக்கு உடல் நலமில்லை என்று பொய் சொல்லி விட்டுக் காஷ்மீர் புறப்பட்டுப் போவது சுமதியின் மனத்தை உறுத்தினாலும் ஆசை தான் வென்றது. பெரிய பெரிய நடிகர்கள், நடிகைகள், டெக்னீஷியன்கள் எல்லாம் கூட வருகிறார்கள் என்பதால் அவர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைக்கலாம் என்ற நம் பிக்கை வேறு தூண்டியது. சுமதி காஷ்மீர் போவதற்கு முன் பல மாலை வேளைகளில் டான்ஸ் கிளாஸுக்கு வேறு போய் வந்தாள். அவள் நடனம் கற்கும்போது தயாரிப்பாளர் கன்னையாவே கூட இருந்து அவளை அக்கறையாகக் கவனித்துக் கொண்டார்.
“மாஸ்டர்! இவளுக்கு எல்லா டான்ஸும் கத்துக் குடுத்துடுங்க. பரத நாட்டியம், மணிபுரி, கதக், காபரே எல்லாம் தெரிஞ்சாத்தான் சினி ஃபீல்டிலே உபயோகமா இருக்கும்” என்று கன்னையா டான்ஸ் மாஸ்டரிடம் சொல்லி வைத்தார்.
“கொஞ்சங் கூடக் கவலைப்படாதீங்க புரொட்யூஸர் சார். இவளுக்கு எதைக் கத்துக் குடுத்தாலும் பிரமாதமா வரும்! ஜமாய்ச்சுப்பிடலாம்” என்றார் மாஸ்டர்.
காஷ்மீர் புறப்படுவதற்கு முந்தியதினம் பட்டுப் புடவைகள் செலக்ஷனுக்காகத் தயாரிப்பாளர் ஜவுளிக்கடைக்கு போகப் போவதாகவும், சுமதியும் வரவேண்டும் என்றும் மேரி வந்து கூப்பிட்டாள். சுமதியால் மறுக்கமுடியவில்லை. பாண்டிபஜாரில் உள்ள ஒரு பெரிய ஜவுளிக்கடையில் போய் பட்டுப்புடவை வாங்கினார்கள் அவர்கள். வேறு யாரும் வரவில்லை. மேரி, தயாரிப்பாளர் கன்னையா, சுமதி மூவரும் மட்டுமே போயிருந்தனர். சுமதிக்காக அரை டஜன் பட்டுப் புடவைகள் வேறுவேறு நிறங்களில் வேறுவேறு டிசைன்களில் எடுத்தார் தயாரிப்பாளர்.
கடையில் எல்லாம் முடிந்து வெளியே வரும்போது ஒர் அசம்பாவிதம் நடந்துவிட்டது. இவர்கள் வெளியே வருகிற நேரத்துக்கு வார்டன் மாலதி சந்திரசேகரன் புடவை வாங்குவதற்காகவோ, என்னவோ அதே கடைக் குள் நுழைந்தாள். சுமதி அவளைப் பார்த்தது போலவே அவளும் சுமதியை பார்த்துவிட்டாள். ஆனால் இருவரும் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாதது மட்டுமில்லை, முகமலர்ச்சி கூடப் பரஸ்பரம் காட்டிக் கொள்ளவில்லை.
இதற்கிடையில் சில சினிமாப் பத்திரிகைகளில் அவள் பயந்தது போலவே படங்களும், செய்தியும் பிரசுரமாகிவிட்டன.
‘தயாரிப்பாளர் கன்னையா கண்டுபிடித்த புதுமுகம்’ என்ற தலைப்பில் முந்திய வெளிப்புறக் காட்சியில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் எல்லாம் மாற்றி மாற்றி ஒவ்வொரு பத்திரிகையிலும் பிரசுரமாகிவிடவே, எதையும் இரகசியமாக வைத்துக்கொள்ள முடியாது என்பது சுமதிக்குப் புரிந்துவிட்டது. அவள் பயந்த மாதிரியே அரை நிர்வாண, முக்கால் நிர்வாணப் படங்களே கூடச் சில பத்திரிகைகளில் பிரசுரமாகிவிட்டன. பத்திரிகைக்காரர் களுக்கு அவள் கல்லூரியில் படிக்கிறாள் என்பதைப்பற்றி என்ன கவலை? உடனே இல்லாவிட்டாலும் நாளடை வில் ஊரில் அம்மாவின் கவனத்திற்கும் இங்கே வார்டனின் கவனத்திற்கும் அவை தப்பமாட்டா என்பது அவளுக்குப் புரிந்தது.
காஷ்மீர் போவதற்காக டெல்லிக்கு விமானம் ஏறிய தினத்தன்று இந்தப் பயமே அவள் மனத்தில் நிறைந்திருந்தது. முதலில் வரவில்லை என்ற சொல்லிக் கொண்டிருந்த மேரியும் அவர்களோடு புறப்பட்டிருந்தாள்.
வரிசைக்கு மூன்று ஸீட்கள் வீதம் இருந்த ‘ஜெட்’ விமானத்தில் நடுவாகச் சுமதியை உட்காரச் செய்து இருபுறங்களில் மேரியும், தயாரிப்பாளர் கன்னையாவும் அமர்ந்து கொண்டார்கள். தயாரிப்பாளரும், மேரியும் மிக உற்சாகமாக இருந்தார்கள். ஆனால் சுமதி எவ்வளவோ முயன்றும் அவளால் அவ்வளவு உற்சாகமாக இருக்க முடியவில்லை. விமானம் மேலே மேலே பறப்பதனால் ஏற்படுகிற மகிழ்ச்சி கூட அவளை மாற்றிவிட வில்லை. தான் பொய் சொல்லி வார்டனையும், அம்மாவையும் ஏமாற்றிவிட்டுப் புறப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வே சுமதிக்குக் குடைந்தது. பக்கத்தில் இருந்தவர்களோடு அவள் சகஜமாகப் பேசவும் கூட முடியவில்லை.
காஷ்மீர் வந்த பின்புதான் தனக்கும், மேரிக்கும் அங்கு எந்த வேலையும் இல்லை என்பது சுமதிக்கு மெல்ல மெல்லப் புரிந்தது. தயாரிப்பாளர் கன்னையாவும் அவரோடு வந்திருந்த வேறு சிலரையும் ‘குஷி’ப்படுத்தவே தாங்கள் அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்பது ஜாடைமாடையாகத் தெரிந்தது. ஸ்ரீநகரில் ஒரு பிரபல ஹோட்டலில் மொத்தமாகப் பல அறைகள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. சென்னையிலிருந்த ஒரு டிராவல் ஏஜண்டு மூலமாக அவர்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தாங்க முடியாத குளிர் இருந்ததனால் உல்லன் உடைகளுக்காக வேறு நிறையச் செலவழித்தார் தயாரிப்பாளர்.
ஸ்ரீநகருக்கு அருகிலிருந்த ஓர் ஏரியிலும், ஷாலிமார் கார்டன்ஸ் என்னும் மொகல் தோட்டத்திலும் படப்பிடிப்பு நடக்க இருந்தது. இந்த இரண்டு காட்சிகளுக்குமாகவே ஏராளமான தொகையைச் செலவிட்டுக் கொண்டிருந்தார் தயாரிப்பாளர். பணம் தண்ணிராகச் செலவழிந்தது என்றே சொல்லலாம். “பல படங்களிலே, லாபம் வந்த பிளாக்மணி கையிலே நிறைய இருக்கு. அதை எல்லாம் இப்படி அவுட்டோர்னு காஷ்மீருக்கோ, சிம்லாவுக்கோ வந்து செலவழிக்கிறாங்க. அது புரியாமல் நீயும் நானும் வீணாக் கவலைப்பட்டுப் பிரயோசனமில்லே” என்றாள் மேரி.
ஒருநாள் மாலை ஸ்ரீநகரில் ஹோட்டல் அறையில் உட்கார்ந்து சுமதியும், மேரியும் பேசிக் கொண்டிருந்தார்கள். சென்னையிலிருந்து புறப்படுவதற்கு முன் பாண்டி பஜார் பட்டு ஜவுளிக்கடையில் புடவைகள் தேர்ந்தெடுத்து விட்டு வெளியேறிய போது தங்கள் ஹாஸ்டல் வார்டன் மாலதி சந்திரசேகரனைச் சந்திக்க நேர்ந்தது பற்றிக் கவலை தெரிவித்தாள் சுமதி.
“எனக்குப் பயமாயிருக்குடி மேரீ, ஏற்கெனவே வார்டன் என்னைப் பத்தி எங்கம்மாவுக்கு எழுதி வம்பு பண்ணியிருக்கா. இப்பவோ அம்மாவுக்கு உடம்பு சுகமில்லேன்னு பொய் சொல்லியே லீவு கேட்டிருக்கோம். வார்டன் எங்க அம்மாவுக்கே லெட்டர் கிட்டர் எழுதி வச்சு எல்லாக் குட்டும் உடைஞ்சிடப் போகுது.”
“வந்த இடத்திலே சந்தோஷமா இருக்கிறதை விட்டுட்டு இதையெல்லாம் ஏன் நினைக்கிறடி சுமதி! மாலதி சந்திரசேகரன் பெரிய இவளோ? அவ யோக்கியதை எனக்குத் தெரியும். ஏதாவது வம்பு பண்ணினாளோ அவ வண்டவாளத்தைத் தண்டவாளம் ஏத்திப்புடுவேன். எங்கிட்டே அவ வாலாட்ட முடியாது.”
“சரி! அது போகட்டும்; எழுதிக் குடுத்த லீவு முடி யறத்துக்குள்ளேயாவது இங்கேயிருந்து ஊர் திரும்பிடுவோமோ இல்லியா? அதையாவது சொல்லுடி மேரி.”
“ஏண்டி பறக்கிறே? சொந்தத்திலே செலவழிச்சிக் கிட்டு நாம எப்பத்தான் காஷ்மீருக்கு வரப்போறோம்? ஏதோ மகராஜன் கன்னையா தயவுலே வந்திருக்கோம். கூட ரெண்டு நாள்தான் இருப்போமே?” என்றாள் மேரி. சுமதிக்கு மட்டும் பயமாகவே இருந்தது. ஊரில் என்னென்ன பேசிக் கொள்வார்களோ, என்னென்ன நடக்குமோ என்றெல்லாம் தயக்கம் இருந்தது; மனமும் குழம்பியது.
காஷ்மீர் என்ற பூலோக சுவர்க்கத்தின் அனுபவங்களும், அழகும் மனத்துக்கு மிகவும் பிடித்திருந்தாலும் நடு நடுவே வார்டனும், அம்மாவும் ஞாபகம் வந்து சுமதியைப் பயமுறுத்தினார்கள்.
காஷ்மீரச் சாலைகளில் எல்லாம் குடையை மடக்கிக் கவிழ்த்தது போன்ற உயரமான பச்சை மரங்களும், குங்குமப் பூ வயல்களும், ஏரிகளும், மலைச்சிகரங்களுமாக அந்தப் பிரதேசம் எழில் களஞ்சியமாக இருந்தது. ஏரிகளில் மிதக்கும் படகு வீடுகளில் ஒன்றில் தங்குவதற்குக் கன்னையா ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.
“யூனிட்டிலே இருக்கிற அத்தினி பேருக்கும் படகுவீடு ஏற்பாடு பண்றதுன்னா நான் போண்டியாயிடுவேன். நீயும், நானும், மேரியும் மட்டும் ரெண்டு நாள் படகு வீட்டிலே தங்கலாம்” - என்றார் தயாரிப்பாளர். ஹோட்டலில் தங்கும் போதே ஒரு விஷயம் சுமதிக்கு புரியாத புதிராயிருந்தது. தயாரிப்பாளர் தனியாக ஒரு லக்சுரி அறையில் தங்கியிருந்தார். அதே வரிசையில் இருவர் தங்க முடிந்த ஓர் அறையில் சுமதியும், மேரியும் தங்கியிருந்தார்கள். மற்றவர்கள் வேறு வேறு அறைகளில் தங்கியிருந்தார்கள். பகலிலும் நள்ளிரவிலும் திடீரென்று மேரி சுமதியைத் தனியே விட்டு விட்டுத் தயாரிப் பாளரின் அறைக்குப் போய் விடுவாள். சில இரவுகளில் சுமதியைத் தனியே விட்டுச் சென்றவள் விடிகாலையில் தான் மறுபடி அறைக்கே திரும்பியிருக்கிறாள். அப்படி இரவுகளில் எல்லாம் பயத்தினாலும், புது ஊரில் புது இடத்தில் தனியாகவும் படுத்திருக்கிறோமே என்ற தனிமை உணர்வினாலும் உறக்கமே வராமல் சுமதி தவித்தது உண்டு.
அந்த யூனிட்டைச் சேர்ந்த பலர் சுமதியையும், மேரியையும் பார்க்கும் போதெல்லாம் நமுட்டு விஷமமாகச் சிரித்துக் கொள்ளுவதும் தங்களுக்குள் ‘குசுகுசு’ வென்று காதைக் கடிப்பது போல் இரகசியம் பேசிக் கொள்ளுவதும் வழக்கமாயிருந்தன. ஆனால் பணம் வரவு செலவுக்காக உடன் வந்திருந்த ‘புரொடக்ஷன் இன் சார்ஜ்’ ஆள் மட்டும் சுமதி - மேரி விஷயத்தில் மிகவும் தாராளமாகவே நடந்து கொண்டார். அவர்கள் கேட்டது எதையும் அவர் மறுக்காமல் வாங்கிக் கொடுத்தார். அடிக் கடி அறையைத் தேடி வந்து “கூச்சப்படாமல் உங்களுக்கு எது வேணும்னாலும் எங்கிட்டச் சொல்லுங்கம்மா! உங்க ரெண்டு பேருக்கும் ஒரு குறையும் வைக்கப்பிடாதுன்னு ஐயாவே சொல்லியிருக்காரு” என்று புரொடக்ஷன் மானேஜர் சொல்லிக் கொண்டிருந்தான்.
ஊர் திரும்புவதற்குச் சில நாட்கள். இருக்கும்போது அழகான டீலக்ஸ் படகு வீடு ஒன்றைத் தேர்ந்தெடுத்து மேரியோடும் சுமதியோடும் அதில் தங்கினார் தயாரிப்பாளர் கன்னையா. யூனிட்டைச் சேர்ந்த மற்றவர்கள் எல்லாரும் முதலில் தங்கியிருந்த ஹோட்டலிலேயே இருந்தார்கள். ஏரி வாசம் மனோரம்யமாகத்தான் இருந்தது. மேஜை அலங்கரிப்புக்கான பூக்கள் விற்பவர்களும், பழங் கள், காய்கறிகள் விற்பவர்களும் படகுகளிலேயே ஏரியில் வந்து விற்பனை செய்தார்கள். பக்கவாட்டில் கருநீல நிறம் கப்பிய மலைமுகடுகளும், நெடிது நெடிதாக வளர்ந்த சினார் மரங்களும், கண்ணாடியைப் பதித்தாற்போன்ற நீர்ப்பரப்பும் வனப்பும் மிக்க சூழ்நிலைகளாக இருந்தன.
பொழுது போவது மட்டும் கடினமாக இருந்தது. சுடச் சுடத் தேநீர் அருந்திய வண்ணமாக இருந்தார்கள் அவர்கள். கன்னையாவும், மேரியும் வற்புறுத்தியது பொறுக்க முடியாமல் படகு வீட்டில் அவர்களோடு அமர்ந்து சீட்டாடினாள் சுமதி. சீட்டாடுவது சலித்தபின் வேறொரு திறந்த படகில் ஏரியைச் சுற்றிவரலாம் எனறார் கனனையா.
அவர்கள் படகில் ஏரியைச் சுற்றப் புறப்பட்டார்கள்.
“அழகிலும் நிறத்திலும் இந்தக் காஷ்மீரத்துப் பெண்கள் பிரமாதமாயிருக்கிறார்கள். எப்படித்தான் இவர்களுக்கு இவ்வளவு தளதளப்பு வருகிறதோ?” என்று காஷ்மீரத்துப் பெண்களைப் பற்றி ஆரம்பித்தார் கன்னையா. உடனே மேரி குறுக்கிட்டு, “நீங்க சும்மா சொல்றீங்க. நம்ம சுமதியை விடவா அவங்க அழகாயிருக் காங்க? எங்கே? இப்படி ஒரு தடவை இவளைத் திரும்பிப் பார்த்தப்புறம் அபிப்பிராயம் சொல்லுங்க பார்க்கலாம்?” என்றாள்.
கன்னையா சுமதியை ஏறிட்டுப் பார்த்தார். அப்போது கிளிப்பச்சை நிற உல்லன் சால்வை போர்த்தியிருந்த சுமதி பச்சைக்கிளி போலிருந்தாள்.
“நீ சொல்றது சரிதான் மேரீ! என்னோட முந்தின அபிப்பிராயத்தை வாபஸ் வாங்கிக்கறேன். நம்ம சுமதிக்கு யாரும் ஈடாக முடியாது.”
படகிலிருந்து திரும்பியதும் கன்னையாவும், மேரியும் குடித்தார்கள். சுமதியை வற்புறுத்தினார்கள்.
“இந்தக் குளிருக்கு ரொம்ப நல்லதும்மா! உடம்புக்குச் சூடா இதமா இருக்கும். கொஞ்சம் ட்ரை பண்ணு” என் றார் தயாரிப்பாளர்.
“ஒரு சின்ன ‘பெக்’ மட்டும்தான். உடம்பைக் கத கதப்பா வச்சுக்கும். எல்லாப் பெரிய நடிகைங்களும் குடிக்கிறாங்க. நீயும் நாளைக்கி ஸ்டாராகப் போறே. இத்தனை கூச்சம் இருந்தா எப்படி? ஸ்டார் ஆனப்புறம் எத்தினியோ வெட் பார்ட்டிங்களுக்கு எல்லாம் அட்டெண்ட் பண்ண வேண்டியிருக்குமே?”
சுமதிக்கு அந்த வாடையே குமட்டியது. “தயவு செய்து என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க... எனக்கு ஒரு கோகோ கோலா மட்டும் போதும்” என்றாள் சுமதி. தயாரிப்பாளர் மேரியை நோக்கி ஏதோ கண் ஜாடை காட்டினார். மேரி உள்ளே போய்க் கண்ணாடி டம்ளரில் ‘கோகோ கோலா’வை ஊற்றி எடுத்து வந்தாள். சுமதி அதை எடுத்துப் பருகத் தொடங்கியபோது அந்த வாசனை அவளுக்குப் புதிதாயிருந்தது. அது அவளுக்குப் பழக்கமான கோகோ கோலா போல இல்லை. சிறிது கசந்தது. சிறிது குமட்டியது. என்னவோ செய்தது.
“இந்தா இதைச் சாப்பிடு! ஒண்ணும் பண்ணாது” என்று ஒரு பிளேட் நிறைய பொன்நிற உருளைக் கிழங்கு வறுவலை எடுத்து நீட்டினாள் மேரி. சுமதி நாலு வறுவல் துணுக்குகளை எடுத்து மெல்லத் தொடங்கினாள். குமட்டல் சிறிது நின்றது. மீண்டும் கன்னையாவும், மேரியுமாக வற்புறுத்தி அவளை இன்னொரு கிளாஸ் பருகச் செய்தனர். அதையும் பருகிய பின் சுமதிக்குத் தடுமாறியது. எழுந்து நின்றாலே கால்கள் தள்ளாடின.
அதற்குப் பின்பு நடந்தவை அவளுடைய சுய நினைவுக்கு அப்பாற்பட்டவையாயிருந்தன.
மறுபடி அவள் கண் விழித்தபோது தயாரிப்பாளரின் இரட்டை கட்டிலடங்கிய படுக்கையில் தான் இருந்ததை உணர்ந்தாள்.
உடம்பெல்லாம் அடித்துப் போட்டதுபோல் வலித்தது. மேரியைக் காணவில்லை. தயாரிப்பாளர் கன்னையா உறங்கிக் கொண்டிருந்தார். அவருடைய குறட் டை ஒலி கர்ண கடூரமாக இருந்தது.
சுமதி விக்கி விக்கி அழுதாள். அந்த இருளில் அந்த அறையில் தான் எதை இழந்திருக்கிறோம் என்று நினைத்த போது சுமதிக்குப் பகீரென்றது. கட்டிலோரமாகக் கீழே விழுந்திருந்த ‘ப்ரா’வை எடுத்து அணிந்து கொண்டு பிளவுஸையும் போட்டுக் கொண்டு மேலே உல்லன் ஸ்வெட்டரையும் மாட்டியபோது ஓர் இயந்திரம் போல்தான் அவள் இயங்கினாள். தான் மிகச் சுலபமாக மோசம் போய் விட்டோம் என்று அவளுக்குப் புரிந்தது. அப்படியே படகு வீட்டின் கதவைத் திறந்து கொண்டு ஏரியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டுவிடலாமா என்றுகூட அவள் அப்போது எண்ணினாள். அவளுடைய கதறலும் அழுகையும் கூடத் தயாரிப்பாளர் கன்னையாவை எழுப்பி விடவில்லை. வேட்டையாடிய மிருகத்தின் இறைச்சியைத் தின்று விட்டுத் தூங்கும் வேடனைப் போல் கன்னையா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். படகு வீட்டின் மரச் சுவரில் தலையை முட்டி மோதிக் கொண்டு கதறி அழுதாள் சுமதி. சத்தம் கேட்டோ தற்செயலாகவோ மேரி கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். கதவு உட்புறம் தாழிடப்பட்டிருக்கவில்லை. மேரியை அப்படியே பாய்ந்து கழுத்தை நெரித்துக் கொன்றுவிட வேண்டும் போலிருந்தது சுமதிக்கு. ஆனால் அப்படிச் செய்யவும் முடியாமல் பிரமை பிடித்தவள்போல் நின்றுவிட்டாள் அவள். மேரியோ, “ஒண்ணும் கவலைப்படாதே! யாருக்கும் தெரியாது. எல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்று சுமதியிடம் ஒரு சிறிதும் பதறாமல் சொன்னாள்.
சுமதியால் நடந்து விட்டதை மறுபடி நினைத்துப் பார்க்கக் கூட முடியாமல் இருந்தது. தான் இழந்தது எத்தனை பெரிய விஷயம் என்பது ஞாபகம் வருகிற போதெல்லாம் அவள் உடல் நடுங்கியது. தன் மேல் தானே அறுவறுப்பு அடைந்தாள் அவள். தன்னைச் சமாதானப் படுத்த வந்த மேரியின் மேல் எரிந்து விழுந்தாள் சுமதி. சப்தம் கேட்டுக் கன்னையாவும் படுக்கையிலிருந்து உறக்கம் கலைந்து எழுந்திருந்து வந்தார். ஹிஸ்டீரியா வந்தது போல மேரியின் மேலும் கன்னையா மேலும் சீறிப் பாய்ந்து அறையவும், கைகளை மடக்கிக் கொண்டு முஷ்டியால் குத்தவும் தொடங்கினாள் அவள். உள்ளே கலவரம் கேட்டு கேர் டேக்கர் போல அந்தப் படகு வீட்டைக் கவனித்துக் கொண்டிருந்த ஓர் காஷ்மீர் ஆள் தலையை நீட்டி எட்டிப் பார்த்தான். மேரி விரைந்து சென்று அவனைப் போகச் சொல்லி ஆங்கிலத்தில் வேண்டிக் கதவைத் தாழிட்டுக் கொண்டு வந்தாள். முதலில் சுமதியைத் தடுக்கவோ பதிலுக்குத் தாக்கவோ செய்யாமல் தன்மேல் அவளுக்கு ஏற்பட்ட ரவுத்திரத்தை அப்படியே அனுமதித்தாள் மேரி. கன்னையா தாங்கமாட்டார் என்பதனால் அவரை மட்டும் படுக்கை அறைக்குள் போய் உள்ளே தாழிட்டுக் கொள்ளும்படி ஜாடை காட்டினாள். அவரும் அப்படியே செய்து தப்பினார்.
சுமதியின் கோப வெறியும் ஆத்திரமும் தணிந்தபின் மேரி மெதுவாக அவளைச் சமாதானப்படுத்த ஆரம்பித்தாள். “உன்னை லட்ச லட்சமாகச் சம்பாதிக்கிற கதாநாயகியா ஆக்கப் போறாரு. புகழேணியின் உச்சிக்குக்கொண்டு போகப்போறாரு. நீயே யோசனை பண்ணிப்பாரு. அவரிட்ட இப்படி நடந்துக்கலாமா? இங்கே நடந்தது யாருக்குத் தெரியும்? யார் உன்னைத் தப்பா நினைக்கப் போறாங்க? படிச்சவளான நீயே இப்படிப் பட்டிக்காட்டுப் பொண் மாதிரியா நடந்துக்கிறது? ஒண்ணும் ஆகாது! நீயே கலவரப்படுத்தி ஊரைக் கூட்டி ஒப்பாரி வச்சு எல்லாருக்கும் உன்மேலே சந்தேகம் வர்ர மாதிரிப் பண்ணிப்பிடப் போறே. ரெண்டு பில்ஸ் தரேன். முழுங்கிட்டுத் தண்ணியைக் குடிச்சுட்டு நடந்ததை மறந்துடு. வீண் வம்பு பண்ணி அடம்பிடிச்சேன்னா நீயா எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லேன்னு சொன்ன கதையா ஆயிடும்” என்று பாதி நயமாகவும், பாதி மிரட்டலாகவும் சொன்னாள் மேரி. சற்று நிதானப்பட்டவுடன் வெளியூரில் தான் அநாதரவாக இருப்பது சுமதிக்குப் புரிந்தது. அழுது கதறி ஆகாத்தியம் பண்ணுவதனால் தானே தன் நிலைமையை வெளிப்படுத்திக் கொண்டதாய் ஆகிவிடும் என்ற பயமும் தற்காப்பு உணர்வும் வேறு அவளுக்கு ஏற்பட்டன. தன் ஆத்திரத்தையும் கோபத்தையும் பார்த்து அவர்கள் பதிலுக்குப் பழிவாங்க முற்பட்டுவிட்டால் புது ஊரில் புது இடத்தில் புது மனிதர்களுக்கிடையே தன் நிலை எவ்வளவு நிராதரவாகப் போய்விடும் என்ற எண்ணிய போது சுமதிக்குப் பயமாயிருந்தது. அவள் சுதாரித்துக் கொண்டு விட்டாள்.
சுமதியின் ஆத்திரத்தையும், கோபத்தையும், அரு வருப்பையும் தணிப்பதற்கு மேரி மேற்கொண்ட உபாயங்கள் பயனளித்தன. பேரும், புகழும், பணமுமாக வாழும் பல நட்சத்திரங்கள் அதற்காக எப்படி எப்படி எதை எதை இழந்திருக்கிறார்கள் என்றெல்லாம சுமதியிடம் விவரித்து அதெல்லாம் அங்கே சினிமா உலகில் சர்வசகஜம் என்பது போல் பலவற்றைச் சொல்லத் தொடங்கினாள் மேரி. வெளி உலகில் குணக்குன்றுகள் என்ற பெயரெடுத்த சில பெரிய குடும்பத்துப் பெண்கள் தனியே விரும்பியும் விரும்பாமலும் செய்த அந்தரங்கத் தவறுகளையும், அவற்றைப் பற்றிக் கவலைப்படாமலே அவர்கள் மேற்கொண்டு செல்வாக்காக வாழ்வதையும் கூடச் சுமதியிடம் பொறுமையாக விவரித்தாள். ‘இது ஒன்றும் இந்தக் காலத்தில் பெரிய தவறில்லை. இப்படி ஆகாமல் சினிமாவில் பேரும் புகழும் பணமும் பெற்ற பெண்ணே கிடையாது’ - என்பதுபோல் பொறுமையாகப் பல பேருடைய உதாரணங்களைக் கதையாகச் சொன்னாள். இந்த மாதிரி விஷயங்களைச் சமாளிப்பதில் மேரிக்கு இயல்பாக இருந்த சாதுரியமும் அப்போது பயன்பட்டது - சுமதி அடங்கி வழிக்கு வரலானாள்.
சுமதியை மெல்ல மெல்ல நடந்ததை ஜீரணித்துக் கொள்வதற்குத் தயாராக்கி விட்டாள் மேரி. அடிமேல் அடி வைத்த பின் அம்மியும் நகரத்தான் செய்தது.
“ஊருக்குத் திரும்பியதும் உன்னைக் கதாநாயகியாக அறிவிக்கும் புதுப் படத்தின் முழுப் பக்க விளம்பரம் உன்னுடைய உருவத்தோடு எல்லாப் பெரிய தினசரிகளிலும் வெளிவரும்” - என்று சுமதியிடம் கன்னையாவும், மேரியும் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். காஷ்மீர் ஹேண்டிகிராஃப்ட்ஸ் எம்போரியம், பட்டுப் புடவைக்கடை எல்லாவற்றிற்கும் சுமதியை அழைத்துச் சென்று ஃப்ளாங் செக் கொடுத்ததுபோல அவளுக்கு வேண்டியதை எல்லாம் வாங்கிக் கொள்ளச் சொல்லி வற்புறுத்தியும் அங்கே இங்கே அழைத்துச் சென்றும் அடுத்தநாள் மாலைக்குள் அவர்கள் அவளைச் சரிக்கட்டி விட்டார்கள்.
தனது மாறுதலான நிலைமை, யூனிட்டைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் தெரியும்படி நடந்து கொள்வதுதான் தன்னை அதிகம் காட்டிக் கொடுத்துவிடும் என்று எண்ணிச் சுபாவமாகவும், கலகலப்பாகவும் எல்லாரிடமும் பழகினாள் சுமதி. அவளே சமாளிக்கத் தயாராகி யிருந்தாள்.
காஷ்மீரில் அவுட்டோர். ஷூட்டிங் நடந்து முடிந்து டில்லி திரும்பியதும் அங்கே இரண்டு நாள் தங்கினார்கள் அவர்கள். அந்த இரண்டு நாளில் சுமதியை யாரிடத்தில் அறிமுகப்படுத்தினாலும் ‘எங்கள் புதுப் படத்தின் கதாநாயகி’ என்று கன்னையா அறிமுகப்படுத்தினார். மேரியும், கன்னையாவும், முக்கியமாகத் தாங்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் சுமதியையும் உடனழைத்துச் சென்றனர். அவளைத் தனியே விடவே இல்லை.
அவர்கள் சென்னைக்கு விமானத்தில் திரும்பிய நேரம் இரவு ஏழு மணிக்கு மேலிருந்ததனால்-மீனம் பாக்கம் விமான நிலையத்திலிருந்து சுமதி நேரே ஹாஸ்டலுக்குச் செல்வதா, அல்லது மேரி வீட்டிலாவது கன்னையா வீட்டிலாவது அன்றிரவு தங்கிவிட்டு அப்புறம் மறுநாள் காலை ஹாஸ்டலுக்கு மதுரையிலிருந்து இரயிலில் வந்து இறங்கியவளைப் போலச் செல்வதா என்ற யோசித்தார்கள்.
“என்னோடு வா! காலையில் டாக்ஸியில் அனுப்பி விடுகிறேன்” என்றாள் மேரி. சுமதியும் சம்மதித்தாள். கன்னையாவோடு போய் அவருடைய புரொடக்ஷன் அலுவலகத்தில் இரவு உணவை முடித்துக் கொண்ட பின்பு தான் அவர்கள் இருவரும் செயிண்ட் தாமஸ் மவுண்டுக்குக் காரில் புறப்பட்டுச் சென்றார்கள்.
மேரி வீட்டில் அன்றிரவு சுமதிக்கு உறக்கம் வரவில்லை. மனத்தில் பல நிகழ்ச்சிகள் உறுத்திக் கொண்டிருந்தன. அரிதாகவும், பெரிதாகவும் போற்றிக் காத்த கன்னிமையை இழந்து விட்டோம் என்பது எல்லா ஆறுதல்களுக்கும் பின்பு கூட ஒரு மறவாத் துயரமாக நினைவு வரத்தான் செய்தது. படுக்கையில் தூங்குவது போல் பாசாங்கு செய்து புரண்டு கொண்டிருந்தாள் அவள். இரவு ஒரு மணிக்கோ ஒன்றரை மணிக்கோ யாரோ மெதுவாக வந்து மேரியை எழுப்பினார்கள்.
சுமதி கண்களை இறுக மூடிக்கொண்டு அயர்ந்து துரங்குவதுபோல நடித்து விட்டாள். மேரியை எழுப்பிய ஆண் குரல், “ஒரு பார்ட்டி வந்திருக்காரு” என்றதும் அவள் எழுந்து சென்றுவிட்டு ஒரு மணி நேரம் கழித்துத் திரும்பி வந்ததும் சுமதிக்கு நன்கு தெரியும். ஆனால் விடிந்தபோது அதெல்லாம் தனக்குத் தெரிந்ததாக அவள் மேரியிடம் காண்பித்துக் கொள்ளவில்லை.
காலைச் சிற்றுண்டி காபிக்குப் பின்பு சுமதியை ஒரு டாக்ஸியில் அவளுடைய பெட்டி முதலிய பயணச் சாமான்களோடு கல்லூரி விடுதிக்கு அனுப்பி வைத்தாள்.
“ஒண்ணும் பயப்படாதே! உனக்கு இனிமே அந்தக் காலேஜில் படிச்சுப் பிரமாதமா எதுவும் ஆகப் போறதில்லே. நாளைக்கே நீ பெரிய ஹீரோயினா ஜொலிக்கப் போறே. வார்டன் எதாவது கேட்டாள்னா முழிச்சிக்கிட்டு நிற்காதே. தைரியமா ஃபேஸ் பண்ணு” என்று டாக்சி புறப்படுவதற்கு முன்னால் சுமதிக்கு ஒர் அறிவுரையும் சொல்லியனுப்பி இருந்தாள் மேரி. எதற்காக அப்படி அவள் சொல்லியனுப்பினாளென்று சுமதிக்குப் புரியவே இல்லை.
மதுரையில் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று பொய் சொல்லி லீவு கேட்டுக்கொண்டு காஷ்மீர் போயிருந்தாலும் செம்பரம்பாக்கம் அவுட்டோர் விஷயம் பத்திரிகைகளில் பிரசுரமானதும், வேறு சில சந்தேகங்களும் வார்டனைக் குழப்பிச் சந்தேகப்பட வைத்திருக்கலாம் என்று நினைத்தாள் சுமதி. ‘தான் காஷ்மீர் போனது கூடப் பரம ரகசியமில்லை. சில சினிமாப் பத்திரிகையில் செய்தியாக வந்திருக்கக்கூடும்’ என்றே அவளுக்குத் தோன்றியது. டாக்சியில் விடுதிக்குச் செல்லும்போது சுமதி இதை எல்லாம் யோசித்தாள். பெட்டியையும் பிற சாமான்களையும் தூக்கிச் செல்ல முடியாது என்பதால் ஹாஸ்டல் கேட் அருகே டாக்ஸியை நிறுத்திக்கொண்டு அங்கு நின்ற வாட்ச்மேனை உதவிக்கு அழைத்தாள். அவன் தயங்கித் தயங்கி வந்தான். “வார்டன் அம்மா நீ வந்தால் வந்ததும் உடனே ஹாஸ்டல் நோட்டிஸ் போர்டைப் பார்க்கச் சொல்லிச்சும்மா. அதைப் பார்த்துப் போட்டு அப்பாலே ரூம்லே வந்து அந்தம்மாளைப் பார்ப்பியாம்” என்றான் வாட்ச்மேன்.
சுமதிக்குத் ‘திக்’கென்றது. ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அவள் மாடிப்படியில் சாமான்களை வைத்துவிட்டு ஆர்வத்தாலும், பதற்றத்தாலும் விரைந்து அடித்துக் கொள்ளும் நெஞ்சுடனே வார்டன் அறையை ஒட்டியிருந்த ஹாஸ்டல் நோட்டீஸ் போர்டைப் பார்த்தாள். பொய் சொல்லி லிவு பெற்றுக் கொண்டு கண்டபடி ஊர் சுற்றுகிற காரணத்துக்காக அவளை கல்லூரியிலிருந்தும் ஹாஸ்டலிலிருந்தும் ‘சஸ்பெண்ட்’ செய்திருப்பதாக வார்டன் அறிவித்திருந்தாள்.
அப்போது வார்டன் அறைக்குள்ளே இருப்பதாகத் தெரியவே சுமதி தயங்கியபடியே அந்த அறைக்குள் நுழைந்தாள். வார்டன் அவள் உள்ளே நுழைவதைத் தலை நிமிர்ந்து பார்த்தும்கூட ‘வா’ என்றோ ‘இங்கே ஏன் வந் தாய்?’ என்றோ கேட்கவே இல்லை. மறுபடி குனிந்து வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டாள். சுமதியின் நெஞ்சை உறுத்தியது அந்த அலட்சியம்.
சுமதியாக ஏதோ சொல்ல ஆரம்பித்தபோது, “சுமதி! யூ கெனாட் மேக் மீ எ ஃபூல்...” என்று சீறியபடியே சிவப்புப் பென்ஸிலால் கட்டம் கட்டி மார்க் செய்யப்பட்ட ஒரு கத்தை நியூஸ்பேப்பர் கிளிப்பிங்ஸை எடுத்து மேஜை மேல் போட்டாள் வார்டன் மாலதி சந்திரசேகரன். அந்த நியூஸ் பேப்பர் கட்டிங்ஸ் எல்லாவற்றிலும் அவள் செம்பரம்பாக்கம் வெளிப்புறப் படப் பிடிப்புக் காட்சிகளில் கலந்துகொண்டது முதல் காஷ்மீர் புறப்படுகிற யூனிட்டோடு புறப்பட்டுச் சென்றதுவரை படங்களோடு செய்திகள் பிரசுரமாயிருந்தன. தன்னுடைய பொய், பச்சையாகக் கையும் களவுமாகக் கண்டு பிடிக்கப்பட்டுவிடவே சுமதி எதுவும் சொல்ல முடியாமல் கண்கலங்கி நின்றாள். “உங்க மதரோட கூட மதுரைக்கு நான் ட்ரங்க் ஃபோனில் பேசியாச்சு. இந்த ‘வீக் எண்டிலே’ உங்க மதர் இங்க வரா. நோட்டீஸ் போர்டிலே நீ பார்த்தது பழசு. லேடஸ்ட்டா நானும் பிரின்சிபாலும் உன்னை ‘டிஸ் மிஸ்’ பண்ணிக் காலேஜிலிருந்து அனுப்பிடறதுன்னு முடிவு பண்ணியாச்சு...”
சுமதிக்கு ஏதோ கெஞ்சிக் கதற வேண்டும் என்று தோன்றியது. ஆனால் வார்த்தைகள் எதுவும் வரவில்லை; நெடுமரம்போல் சும்மா நின்றாள் சுமதி.
“ஒரு படிக்கிற பொண்ணுக்கு இத்தனை சூதுவாது, பொய் எல்லாம் இருந்தா எப்பிடி உருப்படப்போறே நீ? உங்கம்மா என்னாடான்னா நீ பிரமாதமாப் படிச்சுக் கிழிச்சு டிஸ்டிங்க்ஷனோட பாஸ் பண்ணப் போறதா சொப்பனம் கண்டுண்டிருக்கா! நீயானால் கண்ட கண்ட சினிமாக் காலிப் பசங்களோடல்லாம் ஊர் சுத்திண்டி ருக்கே. இதென்ன காலேஜ்னு நினைச்சியா? இல்லே சத்திரம், சாவடின்னு நினைச்சியா?”
“இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க வார்டன்! ஏதோ தெரியாத்தனமா...”
“சும்மாக் கதை அளக்காதேடீ! தெரியாத்தனமாவது ஒண்ணாவது?... தெரிஞ்சு விரும்பி ஆசைப்பட்டு வேணும்னுதானேடீ நீ இதெல்லாம் பண்ணியிருக்கே?”
“...”
“ஐ டோண்ட் வாண்ட் டு ஸீ யுவர் டர்ட்டி ஃபேஸ்... கெட் அவுட், ஐ ஸே கெட் அவுட்.”
சுமதிக்கும் திடீரென்று ஆத்திரமும் ரோஷமும் வந்திருக்க வேண்டும். அவள் வார்டனின் அறையிலிருந்து வெளியேறிக் கீழே வராந்தாவிலிருந்து காசு போட்டுப் பேசும் ஃபோனில் போய் மேரியோடு பேசினாள். நடந்ததைச் சொன்னாள்.
“அப்படியா சங்கதி? நீ ஒண்ணும் அலட்டிக்காதே, மறுபடியும் ஒரு டாக்ஸி வச்சுக்கிட்டு நேரே இங்கே வா. அல்லது புரொட்யூஸர் கன்னையா வீட்டிலே போய் இரு. நான் அங்கே வந்துடறேன்” என்றாள் மேரி.
சுமதி ஹாஸ்டல் வாட்ச்மேனிடம் ஒரு ரூபாயைக் கையில் திணித்து மறுபடி அவன் உதவியுடனேயே பெட்டி சாமான்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். வாசலிலேயே டாக்ஸி ஸ்டாண்டு இருந்ததனால் அவள் வந்து இறங்கிய அதே டாக்ஸியே அங்கு இன்னும் நின்றிருந்தது. டாக்ஸியில் ஏறிக்கொண்டு தி.நகரிலிருந்த கன்னையாவின் புரொடக்ஷன் அலுவலக வீட்டுக்கே டாக்ஸியை விடச் சொன்னாள் சுமதி.
அவள் போனபோது கன்னையா தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. பெட்டி சாமான்களை வராந்தாவில் இறக்கி வைக்க அங்கே இருந்த புரொடக்ஷன் அலு வலகப் பையன் உதவி செய்தான். கன்னையாவின் ஏ.ஸி. அறையிலிருந்து யாரோ ஒர் இளம் எக்ஸ்ட்ரா நடிகை அவசர அவசரமாக வெளியேறுவதை அந்தப் பதற்றமான மன நிலையிலும் சுமதி கவனிக்கத் தவறவில்லை. நல்ல வேளையாக ஃபோன் வெளியில் இருந்தது. அங்கிருந்தே மறுபடி மேரிக்கு ஃபோன் செய்தாள் சுமதி. மேரி உடனே வருவதாகப் பதில் சொன்னாள். சுமதியின் மனத்தில் என்னவோ அந்தக் கணமே தன்னுடைய கல்லூரி வாழ்க்கை முடிந்து விட்டதாகவும் சினிமா உலகின் ஒளிமிக்க புதிய ஜொலிப்பு வாழ்க்கை ஆரம்பமாவதாகவும் தோன்றியது. அவள் கனவுகளில் மூழ்கியபடியே அப்படி நினைத்தாள். கன்னையா துக்கம் விழித்துச் சோம்பல் முறித்தபடி அறையிலிருந்து வெளியே வந்தார்.
அந்த அதிகாலையில் வீட்டு வராந்தாவில் சுமதியைப் பெட்டி சாமான்களோடு பார்த்தபோது தயா ரிப்பாளர் கன்னையா ஒன்றும் ஆச்சரியப்பட்டதாகக் காண்பித்துக் கொள்ளவில்லை.
“வாம்மா! காபி சாப்பிடறியா?” என்று சுபாவமாக வரவேற்றார். அவர் கேட்காமல் அவளாகவே கல்லூரி விடுதியில் நடந்ததை எல்லாம் அவரிடம் சுருக்கமாகச் சொல்லத் தொடங்கினாள்.
“நீ எதுக்கும் கவலைப்பட வேண்டாம்மா! நான் இருக்கறப்ப உனக்கென்ன கவலை? பெட்டி சாமன்களை உள்ளாரக் கொண்டு போய் வை. மேரியும் இப்ப வந்துடுவா” என்று இதமாகவும் ஆறுதலாகவும் மறுமொழி கூறினார் கன்னையா. காபி வரவழைத்து அவரே ஆற்றிக் கொடுத்துப் பருகச் செய்தார்.
“இனிமே உனக்கெதுக்கும்மா காலேஜுப் படிப்பு? நீ ஸ்டாராகி ஜொலிக்கிறதுக்குன்னே பிறந்தவ. உனக்கி ருக்கிற முகவெட்டு இங்கே எந்த சீனியர் ஹீரோயினுக்கு இருக்குது?”
இப்படி ஏதாவது யாராவது இதமாகச் சொல்ல மாட்டார்களா என்றுதான் சுமதியின் மனமும் அன்று ஏங்கிக் கொண்டிருந்தது. வார்டனின் கடுமையான வார்த்தைகளுக்கும் உதாசீனத்திற்கும் பிறகு இங்கிதமாக வருடிக் கொடுப்பது போன்ற கன்னையாவின் சொற்கள் அவளைக் கவர்ந்தன. அவளுக்கு மன ஆறுதலை அளித்தன.
அதே வீட்டில் தம்முடைய ஏ.சி. அறைக்குப் பின்னால் பக்கவாட்டில் வாசல் உள்ள ஓர் அறையைச் சுமதியின் உபயோகத்துக்காகத் திறந்து விட்டார் கன்னையா. சிறிது நேரத்திற்கெல்லாம் மேரியும் வந்து சேர்ந்து விட்டாள். அவள் நடந்த விவரங்களைச் சுமதியிடம் கேட்டுக் கொண்டு வார்டனைக் கன்னா பின்னா வென்று ஏசினாள்.
“இந்த மாலதி சந்திரசேகரன் பெரிய பத்தினியோ? எனக்குத் தெரியும் அவ கதை எல்லாம். சொன்னால் ஊர் நாறும்” - என்றாள் மேரி. "நீ அங்கே போகவே வேண்டாம்! அடுத்த வாரத்திலேருந்து புதுப்பட வேலைகள் ஆரம்பமாயிடும். இங்கே இருந்து டான்ஸ் மட்டும் கொஞ்சம் சீக்கிரம் கத்துக்கப் பாரு.”
“அதுவரை இங்கேயே தங்கிக்கட்டுமா? அல்லது உன்கூட செயிண்ட் தாமஸ் மவுண்டுக்கு வந்துடட் டுமா?”
“ஏன் இங்கேயே இரேன்! அதெல்லாம் கன்னையா ராஜ போகமாகக் கவனிச்சிப்பாரு. கவலைப்படாதே” என்று சொல்லிக் கண்களைச் சிமிட்டினாள் மேரி.
சுமதி அந்தத் தயாரிப்பு அலுவலக வீட்டிலேயே தங்கினாள். அவளுடைய உதவிக்காக ஒர் ஆயாக் கிழவியை வேலைக்கு அமர்த்தினார் தயாரிப்பாளர் கன்னையா.
டான்ஸ் கற்றுக் கொள்வது துரிதப்படுத்தப்பட்டது. அவள் அந்த வீட்டிற்குக் குடிவந்த மறுநாள் தரணி ஸ்டுடியோ சென்று சில ‘ஸ்டில்ஸ்’ பத்திரிகை விளம்பரத்திற்காக எடுத்தார்கள்.
அந்த வார இறுதியில் கல்லூரி விடுதிக்கு வந்து பார்த்து விட்டு அங்கே வார்டன் தன்னிடமிருந்த பத்திரிகைக் கட்டிங்ஸில் இருந்து விலாசமும் சொல்லியதால் தேடிக் கண்டு பிடித்தோ என்னவோ சுமதியின் தாய் நேரே கன்னையாவின் தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தாள். அவள் தேடி வந்தபோது மாடியில் டான்ஸ் மாஸ்டரிடம் நாட்டியம் கற்றுக் கொண்டிருந்தாள் அவள். கால்களில் சதங்கை கட்டிப் பரத நாட்டியத்துக் கேற்ற வகையில் உடையணிந்து மாஸ்டர் சொல்லியபடி ஆடிக் கொண்டிருந்தவள், திடீரென்று வாசல் முகப்பில் அம்மா வந்து நின்றதைப் பார்த்ததும் ஒன்றுமே தோன்றாமல் திகைத்துப் போய் விட்டாள்.
“ஏன் நிறுத்திப்புட்டே? யாரு வந்திருக்காங்க?” என்று வினவியபடி மாஸ்டர் திரும்பிப் பார்த்தான்.
“ஏன் தான் இப்படிச் சீரழியறத்துக்குத் தலையெடுத்தியோ தெரியவில்லையே? மானம், வெட்கம், ரோஷம் எல்லாத்தையும் உதிர்த்து விட்டுப் புறப்பட்டிருக்கியாடீ?” சரமாரியாக வசைமாரியோடு உள்ளே பிரவேசித்தாள் சுமதியின் அம்மா.
“மாஸ்டர்! நீங்க கொஞ்சம் இருங்க. அது எங்கம்மா, ஊரிலிருந்து தேடி வந்திருக்கு. சமாதானமா சொல்லிப் பேசி என் அறையிலே உட்காரவச்சிட்டு வந்திடறேன்” என்று வெளியேறினாள் சுமதி. கூட இருந்த கன்னையா நைசாக நழுவி மாடி வராந்தாப் பக்கம் போய்விட்டார்.
“நீ ஏனம்மா இங்கே வந்தே? டெலிஃபோன் நம்பரைக் கண்டுபிடிச்சு ஃபோன் பண்ணியிருந்தா நானே உன்னைத் தேடி வந்திருப்பேனே?”
“ஏண்டி? நான் இங்கே வந்து பார்த்தால் உன் வண்டவாளம்லாம் தெரிஞ்சு போகுமேன்னு பயப்படிறியா? ஏற்கெனவே வார்டனும் உன் ரூம் மேட் விமலாவும் எல்லாம் சொல்லிட்டாங்க, ஹாஸ்டல்லே உன் அறையிலிருந்த சாமான்களை ஒழிச்சுக் கொண்டு போய்ச் சொந்தக்காரங்க வீட்டிலே போட்டாச்சு. பிரின்ஸ்பாலோ, வார்டன் அம்மாளோ உன்னை மன்னிக்கவோ அந்தக் காலேஜிலே மறுபடி சேர்த்துக்கவோ தயாரில்லே. அவங்களைப் பொறுத்தவரை உன்னைக் கைகழுவி விட்டாங்க...”
“ஏனம்மா கத்தறே கொஞ்சம் கூட நாகரிகமில்லாமே...”
“ஆமாண்டி! நீ கத்துக் குடுத்து இனிமேல்தான் நாகரிகத்தை எல்லாம் நான் தெரிஞ்சுக்கணும். சொல்லுவேடி சொல்லுவே! நீ ஏன் சொல்லமாட்டே? இதுவும் சொல்லுவே, இன்னமும் சொல்லுவே? ‘உங்க பொண் உங்களுக்கு உடம்பு செளகரியமில்லேன்னு பத்து நாள் லீவு எடுத்துக்கிட்டுப் போனாள். அது பற்றி எனக்குச் சந்தேகமா இருக்கு. அங்கே வந்திருக்காளா, இல்லியா?’ன்னு வார்டன் மதுரைக்கு ஃபோன் பண்ணிக் கேட்டப்பவே எனக்குப் பகீர்ன்னுது. உன்னைப் பெத்த வயித்துலே பெரண்டையை வச்சுத்தான் கட்டிக்கணும்.” - அருகே வந்து அம்மாவை மேலே பேச விடாமல் வாயைப் பொத்தினாள் சுமதி. தர தரவென்று அம்மா கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு கன்னையா தனக்கு ஒழித்து விட்டிருந்த தனி அறையை உட்புறம் தாழிட்டுக் கொண்டாள். அப்புறம் நிதானமாக ஒரு சிறிதும் பதறாமல் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க எதிரே நின்ற அம்மாவைப் பார்த்து,
“எதுக்கும்மா இப்படி கத்தித் தொலைக்கறே? இப்போ என்ன குடிமுழுகிப் போச்சு?” என்று கேட்டாள் சுமதி. அம்மாவோ உணர்ச்சிக் கொந்தளிப்பின் விளிம் பில் இருந்தாள்.
“என்ன குடிமுழுகிப் போச்சுன்னாடீ கேட்கிறே? குடிமுழுகறதுக்கு இன்னும் என்னடீ மீதமிருக்கு? நீ கேக்கறதைப் பார்த்து எனக்கு வயிறு பத்தி எரியறதேடீ? கூத்தாடிச்சியாப் போறதுக்குத் தலையெடுத்துப் படிப்பை உதறிப்பிட்டு வந்தயேடீ பாவி! உங்கப்பா மட்டும் இப்ப உசிரோட இருந்தார்னா உன் கழுத்தைத் திருகிக் கொன்னுடுவார்.”
“ஏன்? முடிஞ்சா நீயே இப்ப அதைச் செய்யேன் அம்மா? யாராவது கொன்னுட்டாத்தான் எனக்கும் நிம்மதி” - இதைச் சொல்லும்போது சுமதியின் கண்களில் நீர் மல்கியது. சுமதி அழுவதைப் பார்த்துத் தாயின் மனம் சிறிது இளகியது. அதனால் தாயின் குரலில் வெறுப் பின் கடுமை மாறிச் சிறிது பாசமும் கனிவும் வந்தன.
“எப்பிடிடீ இதுக்கெல்லாம் துணிஞ்சே, மான அவ மானமும் கூட உறைக்கலியாடி உனக்கு? உன்னைப் படிக் கிறதுக்கு மெட்ராஸ் அனுப்பினேனா, இல்லே இப்படிக் கண்ட தடிப் பசங்களோட சினிமா டான்ஸ்னு ஊர் சுத்தறதுக்கு அனுப்பினேனாடி? முன்னே பின்னே தெரியாத மனுஷங்களோட பத்து நாள் காஷ்மீர் போறது, பதினைஞ்சு நாள் கன்னியாகுமரி போறதுன்னு புறப்படறத்துக்கு முன்னாடி உடம்பு கூசலியாடீ உனக்கு.”
பதில் சொல்லாமல் சுமதி மேலும் பெரிதாக விசும்பி அழுதாள். உடம்பு கூசாமல் அப்படிப் புறப்பட்டுப் போனதால் தான் எதை இழந்தாளோ அதை அம்மாவிடம் சொல்வதற்கும் வாய் வரவில்லை அவளுக்கு. ஆனால் அம்மா கேட்ட கேள்வியில் காஷ்மீரில் நடந்தது நினைவு வந்து கோவென்று கதறி அழுதபடி தாயின் நெஞ்சில் சாய்ந்தாள் அவள். பெண்ணின் அழுகையைத் தாய் வேறு விதமாகப் புரிந்துகொண்டாள். தான் கேட்டதெல்லாம் உறைத்துப் பெண் மனம் மாறி அழுகிறாள் என்று எண்ணிக் கொண்டு, “என்னவோ உன் கெட்ட வேளை இதுவரை பண்ணின தப்பெல்லாம் பண்ணியாச்சு. இனி மேலாவது நீ மனசு திருந்தணும்டி. நீ படிச்சுக்கூட எனக்கு ஒண்ணும் ஆகவேண்டியதில்லே. குடும்பப் பேரைக் கெடுத்துச் சீரழிஞ்சு போய் நடுத் தெருவிலே நிற்கும்படி ஆயிடப்படாது. பேசாமல் என்னோட புறப்பட்டு மதுரைக்கு வந்துடு. வீட்டிலே இருந்து படிக்க முடிஞ்சது போறும். உனக்குப் பிரியம்னா அடுத்த வருஷம் மதுரையிலேயே எந்த லேடீஸ் காலேஜிலியாவது சேரலாம். இல்லேன்னா அதுகூட வேண்டாம்” - என்று ஒரளவு சகஜமான குரலில் ஆரம்பித்தாள் சுமதியின் அம்மா. சுமதி இன்னும் அழுகையை நிறுத்தவில்லை. எந்தக் களங்கம் வந்துவிடக் கூடாது என்றும், வரவில்லை என்றும் நம்பி அம்மா தன்னிடம் பேசிக் கொண்டிருக் கிறாளோ அந்தக் களங்கத்தையே தான் சுமந்து கொண்டிருப்பதை உணர்ந்தபோது எதுவும் செய்ய முடியவில்லை. பெண்ணின் அழுகை அதிகமாக அதிகமாகத் தாயின் கனிவும் அதிகமாகியது. தன்னைத் தழுவினாற் போல நெஞ்சில் சாய்ந்திருந்த மகளின் தலையை ஆதரவாக வருடியபடி அறிவுரைகளைக் கூறலானாள் தாய்.
“இது யார் வீடு? எனக்கு இந்த இடமே பார்க்க சகிக்கலையேடீ? ஹாஸ்டலை விட்டுப் படிப்பை விட்டு மானத்தை விட்டு எப்படிடீ இங்கே எல்லாம் வரத் துணிஞ்சே!”
“எப்படியோ வந்தாச்சும்மா! இனிமே மீளவும் முடியாது போலேருக்கு” - என்று அழுகைக்கிடையே சுமதி சொன்னாள். “ஏண்டி முடியாது? நான் கையோட உன்னைக் கூட்டிண்டு போகலாம்னுதான் வந்திருக்கேன். எவனாவது குறுக்கே நின்னா வக்கீலை வச்சுக்கூடப் பார்த்துடறேன் ஒரு கை” என்று சீறினாள் சுமதியின் தாய்.
அப்போது தாழிட்டிருந்த அந்த அறையின் கதவை வெளிப்புறம் யாரோ பலமாகத் தட்டினார்கள். “நீ இருடீ நான் திறக்கிறேன்” என்று கதவைத் திறக்க முன்னேறிய தன் தாயைத் சுமதியே தடுத்தாள். தானே கண்களைத் துடைத்துக்கொண்டு அழுதது தெரியாதபடி முகத்தைச் சகஜமாக மாற்றிக் கொள்ள முயன்றபடி சுமதியே கதவைத் திறக்கச் சென்றாள். கதவைத் திறக்குமுன் சுமதியின் மனத்தில் பல உணர்வுகள் குழம்பின. தான் வேறு எதற்கோ அழுததைத் தவறாகப் புரிந்துகொண்டு அம்மா தன்னை ஊருக்கு இழுத்துக் கொண்டு போக முயலுவதை எப்படித் தடுத்து நிறுத்துவது என்று தீவிரமாக அப்போது அவன் உள்மனம் யோசிக்கத் தொடங்கியிருந்தது.
கதவைத் திறந்தால் வெளியே மேரியும், தயாரிப்பாளர் கன்னையாவும், டான்ஸ் மாஸ்டரும் பதற்றத்தோடு நின்று கொண்டிருந்தார்கள்.
“என்னது? எதுக்குத் கதவை உள்ளே தாழ்ப்பாள் போடணும்?” என்று கன்னையா கேட்டார்.
“சும்மா எங்களுக்குள்ளே ஒரு பிரைவேட் கான்வர்சேஷன். அவ்வளவுதான்” என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்ல முயன்றாள் சுமதி. கன்னையாவின் முகத்தில் பதற்றம் தெரிந்தது.
“உள்ளே அழுகைக் குரல் கேட்டிச்சு, ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிற மாதிரிப் பட்டதாலே சந் தேகப்பட்டுக் கதவை நான்தான் தட்டச் சொன்னேன்” என்றாள் மேரி.
“நீங்க மூணுபேரும் கொஞ்சம் அங்கேயே இருங்க. நானே எங்கம்மாவைச் சமாதானப்படுத்திட்டு அப்புறம் உங்களை எல்லாம் கூப்பிடறேன்” என்றாள் சுமதி. அவள் சொன்னதை அவர்கள் கேட்டார்கள். அதன்படியே விலகிச் சென்றார்கள்.
சுமதி மறுபடி கதவைத் தாழிட்டுக் கொண்டு உள்ளே வந்தாள். அம்மா அவளைக் கேட்டாள்.
“யாருடி இவங்கள்ளாம்? யாரோ ஒரு சட்டைக் காரிச்சிதான் உன்னை முழுக்க முழுக்கக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிட்டான்னு வார்டன் அம்மாள் சொன்னாளே. அவ இவதானா? கெட்ட சகவாசம் மனுஷாளை எவ்வளவு கெடுக்கும்னு சொல்லவே முடியாது! உன்னை நான் மெட்ராஸுக்குப் படிக்க அனுப்பினதே தப்பு. என் புத்தியைச் செருப்பாலே அடிச்சிக்கணும்டீ” என்று அம்மா மறுபடியும் இராமாயணத்தை ஆரம்பித்து விட்டாள். எப்படி அவள் வாயை அடைப்பதென்று சுமதிக்குப் புரியவில்லை.
“ஏன்ம்மா இப்படி ஒரேயடியாகக் கத்தறே? கத்தி இரைஞ்சு ஊரைக்கூட்டறதிலே உனக்கென்னம்மா லாபம்? கேட்கிறதை நிதானமாகத்தான் கேளேன்.”
“நின்னு நிதானமா விசாரிக்கிற மாதிரிக் காரியத்தையாடீ நீ பண்ணியிருக்கே?”
“பெரிசா நான் எதையும் பண்ணிடலே. காலேஜை விட்டுட்டேன். சினிமாவிலே சேர்ந்திருக்கேன். இந்த வருஷக் கடைசிக்குள்ளேயே லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கிறேனா இல்லையா பாரேன்.”
“பேரை எல்லாம் கெடுத்துண்டதுக்குப் பின்னே என்ன சம்பாதிச்சுத்தான் என்ன பிரயோசனம்டீ?”
“நாய் வித்த காசு குரைக்காது அம்மா! நீ தமிழ்ப் பண்டிட்டா வேலை பார்த்து ஒரு வருஷத்திலே சம்பாதிக்கிறதை நான் ஒரு மணி நேரத்தில் சம்பாதிப்பேன் அம்மா!”
“போறுமே நீ பேசறதும், லட்சணமும், அசடு வழியறது. இப்போ நான் சொல்றதைக் கேட்கப் போறியா இல்லியா!”
இந்தக் கேள்விக்குச் சுமதி உடனே மறுமொழி சொல்லி விடவில்லை. அவளும் சரி, அவளுடைய தாயும் சரி உணர்ச்சிக் கொந்தளிப்புக்களும் பதற்றமும் அடங்கிய நிலையில் காணப்பட்டார்கள். அப்போது சுமதிக்குச் சினிமா உலகில் ஜொலிக்கப் போகிற ஆசை உள் மனத்தை உடும்புப் பிடியாகப் பிடித்திருந்தது. அம்மா மட்டுமில்லை, செத்துப்போன அப்பாவே வந்து எதிரே நின்று மிரட்டினால் கூட சினிமாவில் நடித்துப் புகழும் பணமும் சம்பாதிக்கும் ஆசையைச் சுமதி விட்டுவிடத் தயாராயில்லை. அதற்காக எவ்வளவோ பெரியவற்றை எல்லாம் இழந்தான பின் இனி அதை அடையாமல் விட்டுவிட்டுப் பாதி வழியில் அம்மாவுக்கு அடங்கிய சாதுப் பெண்ணாகத் திரும்பிப் போய்விட அவள் தயாராயில்லை. அதே சமயம் கன்னையா, மேரி, டான்ஸ் மாஸ்டர் எல்லாரும் காண எல்லார் முன்னிலையிலும் தன்னைத் தேடி வந்திருக்கும் தாயோடு இரசாபாசமாகி விடுகிற எல்லைக்குக் கூப்பாடு உண்டாகும்படி சண்டை போடவும் தயாராயில்லை அவள்.
தன் அறைக்கு வேலைக்காரியாகத் தயாரிப்பாளர் கன்னையா நியமித்திருந்த ஆயாவைக் கூப்பிட்டு, “நல்ல காபியா வாங்கிண்டு வா! அம்மாவுக்குக் குடுக்கலாம்” என்று அவளை ஓட்டலுக்கு அனுப்பிவிட்டு அம்மா பக்கம் திரும்பி, “நீ இந்தத் தடவை எங்கேம்மா தங்கியிருக்கே!” என்று நிதானமாக விசாரித்தாள் சுமதி.
“தங்கறது எங்கேடீ? என்னை நிம்மதியா ஒரு எடத்திலே தங்கவா விட்டே நீ? வந்ததிலிருந்து நாயா அலையறேன். உன்னைப் பெத்ததுக்குக் கை மேலே கண்ட பலன் அதுதான்.”
“பார்த்தியா பார்த்தியா? மறுபடியும் என்னையே திட்டறியே அம்மா? உனக்குப் பெண்ணாப் பிறந்தது இப்படி நான் உங்கிட்டவே திட்டுக் கேட்கிறத்துக்குத் தானா?” என்று கேட்டு மறுபடியும் அழத் தொடங்கினாள் சுமதி. அப்போது ஓரளவு அவள் தன் தாயைச் சரிப்படுத்துவதற்கான திட்டத்துடனும் தந்திரத்துடனும் நடிக்கத் தொடங்கியிருந்தாள். காபி வந்தது. அம்மாவுக்குச் சுமதியே ஆற்றிக் கொடுத்துப் பருக வைத்தாள்.
உணர்ச்சிக் கொந்தளிப்புக்களும் ஸெண்டி மெண்ட்ஸும் உள்ள பழைய தலைமுறைப் பெண்ணைச் சில வேளைகளில் இரண்டு மூன்று சொட்டுக் கண்ணிரைச் சிந்தியே வழிக்குக் கொண்டு வந்துவிடலாம். தாங்கள் அழக்கூடிய சுபாவமுள்ள சில மூத்த பெண்கள் தங்களுக்கு முன் நிற்பவர்கள் அழுதுவிட்டால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. பதறிப் போவார்கள். தன் அம்மாவும் அந்த ரகத்தைச் சேர்ந்தவள்தான் என்பது சுமதிக்குப் புரிந்திருந்தது. சுமதி அப்போதிருந்தே நடிக்கத் தொடங்கிவிட்டாள்.
“சொல்லும்மா! இங்கே டி.நகர்லே யோகாம்பாள் அத்தை வீட்டிலே தானேம்மா தங்கியிருக்கே?”
“ஆமாண்டீ! எனக்கு வேறே போக்கிடம் ஏது? சொல்லு. ஒரேயடியாச் சுடுகாட்டுக்குத்தான் இனிமேப் போகணும். இருந்து இப்படி அவஸ்தைப் படறதை விடப் போயிடறது எத்தனையோ மேல்.”
“ஏனம்மா இப்படியெல்லாம் சொல்லி என் மனசைக் கஷ்டப்படுத்தறே? நானே நொந்து போயிருக்கேன். நீயும் எங்கிட்ட இப்படிப் பேசினா என்னால தாங்க முடியாது.”
“சரிடீ பேசலே! ஆனா நீ இப்ப உடனே நான் சொல்றதைக் கேட்கணும். எனக்கு இந்த இடமே பிடிக்கலை. இங்கே நீயும் நானும் தனியாப் பேசிக்கிறதுக்குக் கூடப் பிரைவஸி இல்லே. தடித்தடியா ஆம்பிளைங்க வந்து கதவைத் தட்றாங்க. எங்கூட யோகாம்பா அத்தை வீட்டுக்கு வா. அங்கே பேசி முடிவு பண்ணிக்குவம். எனக்கு இன்னிக்கு ஒருநாள்தான் காஷூவல் லீவு மீதமிருக்கு; நாளைக்கிக் காலம் பரப் பள்ளிக்கூடம் போகலேன்னா லாஸ்-ஆஃப் பேயிலேதான் லீவு போடணும்.”
“அப்போ நீ இன்னிக்குச் சாயங்காலமே ஊருக்குப் போறியா அம்மா?”
“நான் மட்டும் போறதா உத்தேசம் இல்லேடீ! உன்னையும் கூட்டிண்டுதான் போகப்போறேன். யோகாம்பாள் அத்தையும் அதைத்தான் சொல்றா. ஜாதகப்படி இப்போ உனக்கு ரொம்ப மோசமான தசை! நீ தனியா இங்கே இருக்கிறது நல்லதில்லே சுமதி.”
“சரி! அதை அப்புறமா யோசிக்கலாம்! இப்ப நீ என்ன சொல்றே அம்மா? நான் உங்கூட உடனே புறப் பட்டு யோகாம்பா அத்தை வீட்டுக்கு வரணும்னுதானே? வரேன். அடுத்து நான் ஹீரோயினா நடிக்கப் போற படத்திலே டான்ஸ் ஆடணும்கிறதுக்காக ஏகப்பட்ட பணச் செலவிலே இங்கே இந்த மாஸ்டரை எனக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்கச் சொல்லி நியமிச்சிருக்காங்க. இதோ பேப்பர்லாம் பாரு! என் படத் தோட முழு முழுப்பக்கம் விளம்பரம்கூட பண்ணியாச்சு. இந்த விளம்பரத்தில் எல்லாம் என்ன போட்டிருக்குன்னு நீயே உன் கண்ணாலே பாரும்மா. புத்தம் புதிய அழகு மலரான ஓர் இளம் கல்லூரி மாணவியையே கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறோம்னு கொட்டை எழுத்திலே போட்டிருக்காங்களா இல்லியா பாரு? இவ்வளவு விளம் பரத்துக்குமாக் கால் லட்ச ரூபாய்க்கு மேலே செலவாகி இருக்குங்கறாங்க.”
“ஆனா என்னடி? நீதான் இந்தப் படத்திலே நடிக்கணும்னு எந்த சாஸ்திரத்திலே சொல்லியிருக்கு? வேற யாராவது ஒரு கல்லூரி மாணவியைப் போட்டுப் படத்தை எடுத்துக்கட்டுமே?”
“அதெப்படிம்மா சாத்தியம்? இத்தனை பெரிசா என்னோட ஸ்டில்ஸைப் போட்டு அதுக்குக் கீழேதானே ‘கல்லூரி மாணவியை அறிமுகப்படுத்தறோம்’னு எழுதியி ருக்காங்க...”
சுமதி இதைச் சொல்லுகிறவரை அவள் எடுத்து நீட்டிய தினசரிப் பேப்பர்களைப் பாராமுகமாக இருந்த அவளுடைய தாய் இப்போது அவற்றை ஒவ்வொன்றாகக் கூர்ந்து பார்த்தாள். பெண்ணின் அழகான பெரிய பெரிய புகைப்படங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அந்தப் படங்கள் எதற்காக என்ன நோக்கத்தோடு எப்படி வெளியிடப்பட்டிருந்தன என்பதைக் கண்டு எரிச்சலாகவும் துயரமாகவும் இருந்தது.
“பெத்த தாயைக் கூடக் கலந்து பேசிக்கணும்னு தோன்றாமே இத்தனை பெரிய காரியத்துக்கு எப்படிடீ தைரியம் வந்தது உனக்கு? இப்போ உன்னை ஏமாத்திக் கடத்திக்கிட்டுப் போயிட்டதாக இந்தப் புரொட்யூலர் மேலே நான் கேஸ் போட்டா என்னடி பண்ணுவே?”
“அப்படி ஒரு கேஸ் நீ போடவே முடியாதும்மா! நான் மேஜரான பொண்ணு. இன்னும் உன் முந்தானைக் குள்ளே ஒழிஞ்சிண்டிருக்கிற பழைய சின்னக் குழந்தை ‘சுமி’ இல்லே, எனக்கு வயசாச்சு...” இதை விளையாட் டாகத் தான் அவள் சொன்னாலும் இந்தச் சொற்கள் அப்போது அவளுடைய தாயை வாயடைக்கச் செய்து விட்டன. தாய் யோசனையில் ஆழ்ந்துவிட்டாள்.
சுமதி கன்னையாவிடமும், மேரியிடமும் போய் அன்று மாலைவரை தாயுடன் வெளியே உறவினர்கள் வீட்டுக்குப் போய்வர அனுமதி கேட்டாள். முதலில் அவர்கள் ஏனோ தயங்கினார்கள். மேரியை நோக்கிக் கன்னையா ஏதோ ஜாடை பண்ணினார். உடனே மேரி, “சுமதீ! இங்கே வா. ஒரு நிமிஷம் தனியா உங்கிட்டக் கொஞ்சம் பேசணும்” என்று சுமதியை அறையின் ஒரு மூலைக்குக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போனாள். சுமதி ஒன்றும் புரியாமலும் மனத்தில் மேரி தன்னிடம் என்ன கேட்கப் போகிறாள் என்ற அனுமானம் கூட இல்லாமலும் அவளோடு சென்றாள். அறை மூலைக்குப் போனதும் பேசத் தொடங்கு முன் அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டு குரலை மிகவும் சன்னமாகத் தாழ்த்தி, “காஷ்மீர்லே நடந்ததை யெல்லாம் உன் மதர்கிட்டச் சொல்லியிருப்பியோன்னு கன்னையா பயப்படறாரு, நீ கெட்டிக்காரப் பொண்ணு. அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன்னு நான் அவருக்கு உறுதி சொல்லியிருக்கேன். நீ சொல்லியிருக்க மாட்டியே?...” என்று கேட்டாள் மேரி.
அதைக் கேட்டுச் சுமதிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அவளால் இதற்குப் பதில் சொல்லவே முடியவில்லை. ஞாபகப்படுத்தப்பட்ட விஷயம் எதுவோ அதனால் திக்பிரமை பிடித்துப்போய் அப்படியே நின்று விட்டாள் அவள்.
“என்னடி? சொல்லிட்டியா!”
வார்த்தைகளால் பதில் சொல்லும் சக்தியைச் சுமதி இழந்துவிட்டிருந்தாள். ஆனால் மேரி அதே கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்கவே பதில் சொல்லாவிட்டால் அவள் விடமாட்டாள் என்று படவே, ‘சொல்லவில்லை’ என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் அசைத்தாள். உடனே மேரி தயாரிப்பாளர் கன்னையாவை நோக்கி “அவ ஒண்ணும் அதெல்லாம் சொல்லலியாம்! எதுக்கும் நாளைக்குக் காலையிலே காண்ட்ராக்ட் எழுதிக்கலாம்! ரெண்டு தரப்புக்குமே அதுதான் நல்லது” என்று அந்த மூலையிலிருந்தே இரைந்து சொன்னாள். அவள் அதுவரை அதைச் சொல்லவில்லை என்பதில் நிம்மதியும் அதற்கு மேலும் எப்போதாவது சொல்லிவிடக் கூடாதே என்பதில் எச்சரிக்கையும் அடைந்தார்கள் அவர்கள். அவள் கேட்டபடியே அன்று மாலைவரை தாயோடு வெளியே போய்வர அவளை அனுமதித்தார்கள். ஆனால் தங்கள் கம்பெனிக் காரிலேயே போய் வருமாறு தனக்கு மிகவும் நம்பிக்கையான டிரைவரைப் போட்டு அனுப்பினார் கன்னையா. “சுமதியை இரயிலேறிப் போக விடக்கூடாது. அவள் தாயுடன் ஊருக்குப் போகிறாள் என்பதுபோல் தெரிந்தால் உடனே எனக்கு எங்கேயி ருந்தாவது ஃபோனிலே சொல்லு” என்று டிரைவரிடம் இரகசியமாகச் சொல்லியியிருந்தார் கன்னையா.
கன்னையாவின் காரில்தான் சுமதியும் அவள் தாயும் யோகாம்பாள் அத்தை வீட்டுக்குப் போனார்கள். யோகாம்பாள் அத்தை வீடு மகாலட்சுமி தெருவில் இருந்தது.
அங்கே போனதுமே அத்தையும் அம்மாவுமாகப் பேசி, “இவ ஜாதகப்படி ஒரு பரிகாரம் பண்ணனும். இங்கே பக்கத்திலே மந்திரிக்கிறது பார்வை பார்க்கிறதுலே கெட்டிக்காரரான வேளார் ஒருத்தர் இருக்கார். அவரை வரச் சொல்லி மந்திரிக்கலாம்” என்று முடிவு செய்து வேளாரை வரவழைத்து விட்டார்கள். சுமதியால் அதைத் தடுக்க முடியவில்லை. வேளார் பச்சைத் தண்ணீரை மண் குடத்தில் நிரப்பிப் பயறு, பழம், வெற்றிலை வைத்து வேப்பிலையைத் தண்ணிரில் தோய்த்துச் சுமதியைத் தலைவிரி கோலமாக உட்கார வைத்து மந்திரிக்கத் தொடங்கினார்.
“குழந்தை தூர தேசத்திலே போயி இருந்தப்பப் பயந்துக்கிட்டிருக்கு, சரியாயிடும்” என்று சொல்லி மடியிலிருந்து திருநீற்றுப் பையை எடுத்துச் சுமதியின் நெற்றியில் வேளார் தானே விபூதி பூசினார்.
“காஷ்மீர் போனாளோ இல்லியோ? அதைத்தான் சொல்றாரு. அங்கே பயந்துண்டிருக்கா” - என்று அம்மா தானாகவே ஆரம்பித்தாள்.
சுமதிக்குக் கண்களில் நீர் மாலை மாலையாக வடிந்தது. “பயப்படாதேம்மா! எல்லாம் ரெண்டு நாளிலேயே சரியாயிடும்” என்றார் வேளார். சுமதிக்கோ மேலும் அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது.
யோகாம்பாள் அத்தை வீட்டில் தனக்குப் பார்வை பார்த்து மந்திரிப்பது என்ற பெயரில் நடந்த எல்லாக் காரியங்களையும் அளவு மீறிய நிதானத்துடன் பொறுத்துக் கொண்டாள் சுமதி. அவளுடைய பொறுமையும் மெளனமும் அவள் அம்மாவுக்கே ஆச்சரியத்தை அளித்தன.
மந்திரிப்பதற்கு வந்திருந்த வேளாருக்குப் பத்து ரூபாய் தட்சிணையும், வெற்றிலை பாக்கும் பழமும் வைத்துக் கொடுத்து அனுப்பிவிட்டு அம்மா ஊருக்குத் திரும்பு வது பற்றிய பேச்சை மெதுவாக ஆரம்பித்த போதுதான் சுமதி உடனே பதில் சொல்ல வாய் திறந்தாள்.
“நான் இனிமேல் எந்தக் காலேஜிலேயும் எந்த ஊர்லேயும் படிக்கிறதா உத்தேசம் கிடையாது அம்மா! அப்படி ஒரு எண்ணம் உனக்கு இருந்தா அதை இப்பவே நீ மறந்துடு.”
“இப்போ எங்கூட ஊருக்காவது வருவியோ இல்லியோ? நீ படிக்காட்டாக் கூடப் பரவாயில்லே.”
“அதுவும் உடனே சாத்தியப்படாது அம்மா! நான் கதாநாயகியா நடிக்கப் போற சினிமாவுக்காக நாளைக்குக் காண்ட்ராக்ட் ஃபாரம் கையெழுத்தாகும். இங்கேயே இருந்து சீக்கிரமாகப் படத்தை முடிச்சுக் கொடுத்து நான் நல்ல பேரெடுக்கணும்.”
“உனக்கு நான் பெரிசா - சினிமாலே நடிக்கிறது பெரிசா?”
“இப்படியெல்லாம் கேட்டால் நான் பதில் சொல்றது கஷ்டம் அம்மா.”
இந்தச் சமயத்தில் யோகாம்பாள் அத்தையையும் சாட்சிக்கு இழுத்தாள் சுமதியின் தாய். ஆனால் சுமதி பிடிவாதமாக ஊருக்கு வர மறுத்து விட்டாள். யோகாம்பாள் அத்தையின் கணவர் குறுக்கிட்டுச் சுமதிக்கும் அவள் தாய்க்கும் இடையே சமாதானப்படுத்தி வைத்தார்.
“அவ ஒண்ணும் பச்சைக் குழந்தை இல்லே! நீங்க ஊருக்குப் புறப்பட்டுப் போங்கோ. நாங்க பார்த்துக்கறோம். அவ இங்கேயே தங்கிண்டு நடிக்கிறதுக்காக ஸ்டூடியோவுக்குப் போகவேண்டிய நேரத்துக்கு மட்டும் போயிட்டு வரட்டும். மத்தவேளையிலே வீட்டோட இருக்கட்டும், ஒண்ணும் பயப்படாதீங்கோ!”
சுமதிக்கு இந்த யோசனையும் அவ்வளவாகப் பிடிக்கவில்லைதான். ஆனால் தாயிடமிருந்து தப்ப இதற்காவது இசைவதைத் தவிர வேறு வழி இல்லை என்று தோன்றியது அவளுக்கு. அத்தை வீட்டில் இருக்க சுமதி விரும்பவில்லை. ஆனால் வேறு வழி இல்லை. இணங்க வேண்டி யிருந்தது.
“மாமா சொல்ற இந்த யோசனையை ரெண்டு பேரும் ஒத்துக்கலாம். நான் இங்கேயே தங்கிண்டு நடிக்கப் போயிட்டு வரேன்” என்றாள் சுமதி. அம்மா இதற்கு முழு மனத்தோடு இசைந்த மாதிரிப் பதில் சொல்ல வில்லை. “எப்படியோ உனக்குத் தோணினதைப் பண்ணு” என்று சொல்லிக் கொண்டே தான் இரயிலுக்குக் கிளம்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளத் தொடங்கினாள் அவள்.
“கொஞ்சம் விட்டுப் பிடியுங்கோ. ரொம்பத்தான் விரட்டினிங் கன்னா இந்தக் காலத்துப் பெண்கள் தாங்காது. அதான் கொஞ்சநாள் இங்கே இருக்கட்டும். நாங்க பார்த்துக்கறோம்னு சொன்னேனே? நான் சொல்றதைக் கேளுங்கோ” என்று யோகாம்பாள் அத்தையின் கணவர் மீண்டும் குறுக்கிட்டுச் சொல்லவே சுமதியின் தாய் கொஞ்சம் அடங்கினாள்.
இரவு எட்டுமணிக்கு சுமதியின் அம்மாவுக்கு மதுரை போக இரயில் இருந்தது. அங்கேயே சுமதியும் அவள் அம்மாவோடு உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்றாள் யோகாம்பாள் அத்தை. சுமதி மறுக்கவில்லை. சாப்பிட்டாள். சாப்பிடும்போது அம்மா சுமதியிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவள் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. இரயிலுக்குப் புறப்படும்போது, “கம்பெனிக் காரிலேயே உன்னை ஸ்டேஷன்லே கொண்டு போய் விட்டுடறேன் அம்மா” என்று சுமதியாக முன்வந்து பேசியபோது அம்மா நேரடியாகச் சுமதியிடம் பதில் சொல்லாமல் யோகாம்பாள் அத்தையின் பையனைக் கூப்பிட்டு, “நீ கொஞ்சம் எங்கூடத் தெரு முனைவரை வந்து ஒரு ஆட்டோ ரிக்ஷாப் பார்த்துக் குடு அப்பா, உனக்குப் புண்ணியமாப் போறது” என்று அவனைக் கூட அழைத்துக் கொண்டு போய்விட்டாள். வேண்டுமென்றே அம்மா சுமதியிடம் போய் வருகிறேன் என்று சொல்லிக் கொள்ளவில்லை! சுமதியின் அருகே நின்றவர்களிடம் கூடச் சொல்லி விடைபெற்றுக் கொண்டாள். ஆனால் சுமதியிடம் மட்டும் சொல்லவில்லை.
“இதென்ன சின்னக் குழந்தை முரண்டு மாதிரி...? குழந்தைகிட்ட ஒரு வார்த்தை சொல்லிண்டு போங்கோ!” என்று அத்தையும் அத்தை கணவரும் கெஞ்சியதுகூடச் சுமதியின் தாயை அசைக்கவில்லை.
“தான் செய்யறதை எல்லாம் அவ எங்கிட்டச் சொல்லிண்டுதானா செய்திருக்கா? நம் மக்கிட்ட எதையும் சொல்லிக்காதவாளுக்கு நாம என்ன சொல்றது?” என்று படியிறங்குகிற போது சுமதியின் அம்மாவிடமிருந்து இதற்குப் பதில் வந்தது. சுமதிக்குக் கண்களில் மெல்ல மெல்ல நீர் சுரந்தது. அம்மா சொல்லிக் கொள்ளாமலே ஊருக்குப் போகிறாளே என்பதனால் மட்டும் அல்ல, தாயிடம் கூடச் சொல்லி விட முடியாத களங்கம் தன்னிடம் ஏற்பட்டு விட்டதையும் தனக்கு மிகவும் வேண்டியவர்களிடமே அந்நியமாகி விட்டாற்போல் மனத்தால்தான் விலகி நிற்கும் தன் நிலைமையையும் எண்ணியபோது அவளுக்கு அழுகை வந்தது. பத்து நிமிஷத்துக்கெல்லாம் அம்மாவை ‘ஆட்டோ’வில் ஏற்றி விட்டு வரச் சென்ற பையன் திரும்பி வந்து சேர்ந்தான்.
“மாமியை ஆட்டோ பேசி எக்மோருக்கு ஏத்தியனுப்பியாச்சு” என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான் பையன். அதுதான் சமயமென்று “நான் புறப்படறேன் மாமா” என்று சுமதி கிளம்பத் தயாரான போது, “கம்பெனி வண்டியைக் காலம்பர வரச் சொல்லித் திருப்பி அனுப்பி நீ இங்கேயே படுத்துக் கோம்மா” என்று குறுக்கிட்டார் யோகாம்பாள் அத்தை யின் கணவர்.
“நாளைக்கு நான் நிச்சயமா இங்கே வந்துடறேன் மாமா என்மேல சந்தேகப்படாதீங்கோ. ஆனா இன்னிக்கு ஒரு மாற்றுப் புடவைகூடக் கையிலே எடுக்காமே நான் வந்திருக்கேன். என் பெட்டி படுக்கை சாமான்களெல்லாம் அங்கே இருக்கு. தனி வீடு மாதிரி ஒதுக்குப்புறமான போர்ஷன்லே நம்பிக்கையான வேலைக்காரி ஒருத்தியின் துணையுடன்தான் நான் இருக்கேன். சொல்லாமக் கொள்ளாம இப்பிடி வந்த இடத்திலே தங்கிட்டா அந்தப் புரொட்யூஸர் நான் சினிமாவிலே நடிக்கிறதுக்குப் பயந்து ஓடிப்போயிட்டேனு நினைச்சாலும் நினைப்பாரு. பாவம் என்னை நம்பிப் பத்திரிகைகள்ளே கூட நிறைய முழுப் பக்க விளம்பரம்லாம் பண்ணிட்டார். என்னை என் மனசு கோணாமல் ரொம்ப கெளரவமாக நடத்த வேணும்கிறத்துக்காகத் தான் புரொட்யூஸர் காரையும் டிரைவரையும் எங்கூட அனுப்பிச்சிருக்கார். அந்த மரியா தையை நான் காப்பாத்திக்கணுமா இல்லியா? நீங்களே சொல்லுங்கோ மாமா...”
அவருக்கும் அவள் சொல்வது நியாயமென்றே பட்டது. “சரி போயிட்டு வா, ஆனா நாளைக்காவது அவங்க மனசு கோணாமே விஷயத்தைச் சொல்லிட்டுச் சாமான்களை எல்லாம் எடுத்துண்டு இங்கே வந்துடு” என்று அந்த மாமா விடை கொடுத்தார். அத்தையிடமும், குழந்தைகளிடமும் கூடச் சொல்லிக் கொண்டு விடை பெற்று வெளியே தெருவுக்கு வந்து காரில் ஏறிக் கொண்டாள் சுமதி. மறுபடி கம்பெனிக்குத் திரும்பிய போது மேரியும் கன்னையாவும் வெளியே தோட்டத்துப் ‘புல்வெளி’யில் நாற்காலிகளைப் போட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சுமதி காரில் இருந்து இறங்கி வருவதைப் பார்த்ததும், “சுமதி! அப்புறம் உள்ளே போகலாம். இங்கே வா. இப்படி உட்காரு, உங்கிட்டக் கொஞ்சம் பேசணும்” என்று மேரியே அவளைக் கூப்பிட்டாள்.
“ஏன் மேரி அவசரப்படுத்தறே? உள்ளே போறதுன்னாப் போயிட்டு முகம் கிகம் கழுவிகிட்டு வரட்டுமே?” என்று கன்னையா குறுக்கிட்டுச் சொன்னார்.
“பரவாயில்லை... இப்பவே வரேன்” என்று சுமதி அப்போதே வந்துவிட்டாள். மேரியும் கன்னையாவும் அமர்ந்திருந்தது தவிர, மூன்றாவதாக ஒரு நாற்காலியும் அங்கே இருந்தது. அதை அருகே இழுத்துப் போட்டுக் கொண்டு சுமதி மேரியின் பக்கம் உட்கார்ந்தாள். மேரி தான். முதலில் பேச்சைத் தொடங்கினாள்.
“என்ன ? உங்கம்மா இன்னும் இருக்காளா? ஊருக்குப் போயாச்சா?”
“போயாச்சு. கொஞ்ச நாழிக்கு முன்னேதான் புறப்பட்டுப் போறா. நானும் கூடவே ஊருக்கு வந்தாகணும்னு சொன்னா. படத்துலே நடிக்கிறேன்னு வாக்குக் குடுத்தாச்சு நடிச்சிட்டுத்தான் வரமுடியும்னு சொல்லிட்டேன்.”
“பரவாயில்லியே. சபாஷ்! அப்படித்தான் தைரியமா ஃபேஸ் பண்ணனும்” என்றார் கன்னையா, மேரி ஒரு தாளைச் சுமதியிடம் நீட்டினாள்.
“இதோ இதுதான் நீயும் நம்ம புரொட்யூஸர் சாரும் பண்ணிக்கப்போற காண்ட்ராக்டோட ட்ராஃப்ட். ஒரு தடவை படிச்சுத்தான் பாரேன். நீ படிச்சு ஓ.கே. பண்ணினப்புறம்தான் இதை நான் டைப் பண்ணக் கொடுக்கணும்.” கன்னையா சொல்லலானார். “எந்தப் புரொட்யூஸரும் இப்பிடி எடுத்த எடுப்பிலே ஒரு காலேஜ் கேர்ளை அப்பிடியே ஸ்டிரெயிட்டா காண்ட்ராக்ட் போட்டு ஹீரோயினாப் போடறத்துக்குத் துணியமாட்டான் அம்மா! உனக்காகவும் உன்னோட தங்கமான குணத்துக்காகவும் மேரி சொல்றாளேங்கிறத்துக்காகவும் நான்தான் துணிஞ்சு இதை செய்றேன்ம்மா.”
சுமதி அதை வாங்கிப் படிக்க ஆரம்பித்தாள். சுமதிக்கு மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்தில் கன்னையா வின் படங்களில் நடிப்பதற்கு ஐந்து வருட காலத்துக்கு அந்த ஒப்பந்தம் எழுதப்பட்டிருந்தது. படம் எடுக்கப் பட்டாலும் எடுக்கப்படாவிட்டாலும் அந்தச் சம்பளம் தரப்படும் என்றும், இந்த ஒப்பந்தகால அளவிற்குள் கம்பெனி அனுமதிபெற்று அவள் வேறு வெளியார் தயாரிப்புக்களில் நடிக்க நேரிட்டால் அந்த நடிப்புக்கான வருமானம் முழுவதும் கன்னையாவைச் சேரும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. சாட்சிக் கையெழுத்துக்களை மேரியும் டான்ஸ் மாஸ்டரும் போடுவார்கள் என்று கன்னையா சொன்னார். சுமதிக்கு அந்த ஒப்பந்தத்தில் கோளாறுகள் எதுவும் இருப்பதாக மேலோட்டமாய்ப் பார்த்ததில் தெரியவில்லை.
“டைப் பண்ணச் சொல்லிடுங்க. நாளைக்குக் காலம்பர வடபழநி கோயிலுக்குப் போய் அர்ச்சனை பண்ணிட்டு வந்து நான் இதிலே கையெழுத்துப் போட்டுத் தந்துடறேன்” என்றாள் சுமதி.
“கோவிலுக்குத்தானே? நானே உன்னைக் கார்லே இட்டுக்கினு போறேன்மா, புரொட்யூஸர்ங்கிற முறை யிலே நீ நல்லா நடிச்சுப் பேர் வாங்கணும்னு நானும் சாமியைக் கும்பிடணுமே? இல்லியா?”
சுமதி கன்னையாவைப் பார்த்துச் செயற்கையாக முகம் மலருவதற்கும், சிரிப்பதற்கும் முயன்றாள். சிரிப்பு வரவில்லை முகமும் மலரவில்லை.
“சாரிட்ட விசுவாசமா நடந்துக்கோ. நீ அமோகமா முன்னுக்கு வருவே, அதிலே சந்தேகமே இல்லே” என்றாள் மேரி. கன்னையாவும் சுமதியும் மறுநாள் காலை வடபழனி கோவிலுக்குப் போய்விட்டு வந்ததும் ஒப்பந்தம் பரஸ்பரம் கையெழுத்தாயிற்று. தயாரிப்பாளர் கன்னையா அட்வான்ஸ் என்று ஒரு மூவாயிரம் ரூபாய்க்குச் செக் எழுதிச் சுமதியிடம் கொடுத்தார். இந்த ஒப்பந்தம் நடந்த மூன்றாவது நாளோ, நான்காவது நாளோ புதுப்படத்துக்குப் பூஜை போட்டார்கள். மறுநாளே புதுப்படத்துக்காக, ஒரு காபரே காட்சியில் இரவு நடனக்காரியாக அவள் நடிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். அந்தக் காட்சிக்கான கால்ஷீட் இரவு பத்தரை மணிக்குப் போடப்பட்டிருந்தது. சுமதிக்கு உடலின் இரு பகுதியும் ஏதோ பெரிய இறக்கைகள் வைத்துக் கட்டி முக்கால் நிர்வாணமாக ஒரு தோற்றத்தில் இரவு விடுதியில் அவள் நடனமாடி வருவதாக ஒரு காட்சியாக அது வர்ணித்துச் சொல்லப்பட்டது.
ஆனால் என்ன காரணத்தாலோ அந்தக் காட்சியை ஒரு டிரிங்ஸ் பார்ட்டியாக நடத்தினார் கன்னையா. மேரியின் செயிண்ட் தாமஸ் மவுண்ட் ரெக்ரியேஷன் கிளப்பிலும் அன்றொரு நாள் ‘மைகெய்ஷா’ சினிமா விலும் பார்த்த பல பிரமுகர்களை இந்தக் ‘காபரே’ காட்சி ஷூட்டிங்கின் போதும் சுமதி அங்கே பார்த்தாள். அந்த முக்கால் நிர்வாணக் காட்சியில் அப்படிப் பலருக்கு முன் நிற்கவே அவள் கூசினாள். கன்னையாவோ அந்தத் தோற்றத்தோடு அவள் நிற்கையிலேயே பல பிரபலஸ்தர் களை அவள் அருகே அழைத்து வந்து அவளுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். சுமதிக்குச் சந்தேகம் ஏற்பட்டது. தன்னுடைய நிர்வாணத்தை அறிமுகப்படுத்தவே அவர்களை எல்லாம் கன்னையா தன்னருகே அப்படி இழுத்து வந்து விசேஷமாக அறிமுகப்படுத்துவது போல நடிக்கிறாரோ என்று சுமதிக்குத் தோன்றியது. அன்று செம்பரம்பாக்கத்தில் எடுத்த ‘அவுட்டோர்’ காட்சி தொடங்கி ஒவ்வொன்றாகச் சிந்தித்தால் தொடர்ந்து கன்னையாவும், மேரியும் தன்னை முக்கால் நிர்வாண உடம்புடனேயே காமிராவுக்கு முன்னால் நிறுத்துவதை அவள் சம்சயிக்கத் தொடங்கினாள். ஆனால் அதிலிருந்து தப்ப அவளுக்கு வழி தெரியவில்லை. மேரியோ அவளுடைய அப்போதைய மன நிலை புரியாமல், “கூச்சப்படாதே சுமதி! கூச்சப்பட்டால் நடிக்க முடியாது” என்று சுமதியை உற்சாகப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு அடிக்கடி அவளருகே வந்து சொல்லிக் கொண்டிருந்தாள். சுமதிக்கு மனமும் உடலும் பதறின. காமிராமேன், டைரக்டர், ஸ்வுண்ட் என்ஜீனியர் எல்லாரையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஃப்ளோரில் படப்பிடிப்பு என்று பேர் பண்ணினாலும் கன்னையா தன்னை நிர்வாணமாக நிறுத்தி நகரின் ஆஷாட பூதிகளுக்கு உண்மையாகவே ஒரு ‘காபரே’க் காட்சியை நல்கித் தலைக்கு ஐநூறு, ஆயிரம் என்று அவர்களிடம் பணம் வசூல் பண்ணிக் கொண்டிருக்கிறாரோ என்று கூட அவள் சந்தேகப்படத் தொடங்கினாள்.
‘வெள்ளம் தலைக்கு மேலே போயாச்சு! இனிமேல் ஜான் போனாலென்ன? முழம் போனாலென்ன?’ என்று அவளுக்கே உள்ளூர ஒரு மன ஆறுதலும் ஏற்பட்டு அவள் ரோஷ உணர்ச்சியை அமுக்கவும் தொடங்கி யிருந்தது. பத்தே நிமிஷத்தில் எடுக்க முடிந்த அந்தக் காபரேக் காட்சியை நள்ளிரவு பன்னிரண்டு மணிவரை நீடிக்கவிட்டார் கன்னையா. நேரம் ஆக ஆகச் சுமதிக்கு அந்த உடையில் அப்படிப் பலர் நடுவே நிற்பது பழகி விட்டாற் போலிருந்தது. திரும்பத் திரும்பப் பிரமுகர்களோடு அவளருகே வந்து அவளை அலுக்காமல் சலிக்காமல் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார்கள் கன்னையாவும் மேரியும். தரகர்கள் கிராக்கியை வாடிக்கையாளர்களுக்குக் காட்டுவதுபோல் அது பிசகாமல் நடந்து கொண்டிருந்தது.
அவர்கள் தன்னைக் கதாநாயகியாகப் போட்டு எடுக்கப் போகிற படம் என்ன, தன்னோடு, அதில் வேறு யார், யார் நடிக்கிறார்கள். அதன் படப்பிடிப்பு முறையாக எப்போது தொடங்கும், எப்போது முடியும் எதுவுமே சுமதிக்குத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படவில்லை. சில மாலை வேளைகளில் யோகாம்பாள் அத்தை வீட்டுக்குச் சென்று இரவு அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் காலைதான் தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்தாள் அவள். வேறு சில மாலை வேளைகளில் தயாரிப்பு அலுவலகத்திலேயே யாரோடாவது நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்துவிட்டு இரவு அங்கேயே தங்கிவிடவும் செய்திருக்கிறாள். எதிலும் அவள் கண்டிப்பாக இருந்து கொள்ள முடியவில்லை. முடியவுமில்லை... யோகாம்பாள் அத்தை வீட்டில் வாக்குக் கொடுத்தபடி தினம் இரவு அங்கே தங்கப் போகவும் இல்லை. போகாமலும் இல்லை.
கன்னையாவின் தயாரிப்பு அலுவலகத்துக்கு அருகே இருந்த பாங்கு கிளை ஒன்றில் சுமதியின் பெயருக்கு ஒரு கணக்குத் திறந்து வைக்கப்பட்டது. தனக்குத் தரப்பட்ட முதல் செக்கை அந்தக் கணக்கில் போட்டாள் அவள். தொடர்பாகவும் திட்டமிட்டும் படப்பிடிப்பு நடக்கவில்லை என்றாலும் அவ்வப்போது அன்று எடுக்கப்பட்ட நடனக் காட்சியைப் போலத் துண்டு துண்டாகச் சுமதியை வைத்து எதையாவது எடுத்தார்கள். அதில் சுமதியை மட்டுமே நடிக்கச் செய்தார்கள். அந்தக் காட்சிக்குப் பலர் பார்வையாளர்களாக அழைக்கப் பட்டார்கள். பலருக்குச் சுமதியும், சுமதிக்குப் பலரும் அறிமுகப் படுத்தப்பட்டார்கள். நிறையப் பெரிய மனிதர்கள், தொழிலதிபர்கள் வீட்டுக்கெல்லாம் சுமதியைக் கப்பல் போன்ற சவர்லெட் காரில் ஒரு வேலையுமின்றி உடனழைத்துக் கொண்டு போய்விட்டு வந்தார் கன்னையா.
காஷ்மீரிலிருந்து திரும்பிய இருபதாவது நாளோ முப்பதாவது நாளோ சுமதிக்கு வழக்கமான லேடி டாக்டர் ஒருத்தியிடம் அழைத்துச் சென்று ஊசி போட்டு மாத்திரைகள் சில வாங்கிக் கொடுத்தாள் மேரி. அதையடுத்து வீட்டில் உட்காரவேண்டிய நாட்களில் தவறாமல் உட்கார்ந்த பின்புதான் சுமதிக்குப் பயம் போய் நிம்மதி வந்தது.
“சுமதி! நீ எதுக்கும் பயப்பட வேண்டியதில்லை. இந்த லேடி டாக்டர் எங்களுக்கு ரொம்ப வேண்டியவ. யாரிட்டவும் எதையும் சொல்லமாட்டா. ஒரு தடவை இங்கே மேலே டான்ஸ் படிக்க வந்த பொண் ஒருத்திக்கு ரெண்டு மாசமோ மூணு மாசமோ கர்ப்பமே ஆயிடுச்சு. டான்ஸ் மாஸ்டர் கையைப் பிசைஞ்சுக்கிட்டு நின்னான். அந்தப் பொண்ணு ‘கிணத்துலே குதிச்சுச் சாகப் போறேன்னு’ அழுதது; இந்த லேடி டாக்டரிட்டக் கூட்டிக்கிட்டுப் போய்த்தான் சரிப்படுத்தினேன்” என்று மேரி கூறினாள். அவள் தன்னைத் தைரியப்படுத்து கிறாளா அல்லது மேலும் மேலும் தாராளமாகத் தான் கெட்டுப் போவதற்குத் தூண்டுகிறாளா என்பது புரியாமல் சுமதி மருண்டாள்.
தயாரிப்பாளர் கன்னையாவைப் பொறுத்தவரை சுமதியிடம் மிக மிகத் தாராளமாக நடந்து கொண்டார். ஒருநாள் அவள் ஏதோ ஜவுளிக் கடைக்குப் போக வேண்டும் என்றாள். அந்த ஜவுளிக் கடை கூப்பிடு தூரத்தில் தான் இருந்தது. பாண்டி பஜாருக்கு அவள் இருந்த அபிபுல்லா ரோடிலிருந்து நடந்தே கூடப் போய்விட்டு வந்துவிடலாம். கன்னையாவிடம் போய்க் கடைக்குப் போகப் போவதைச் சொன்னதும், “என்னம்மா நீ இன்னும் விவரந்தெரியாத பொண்ணாயிருக்கே, உன்னை மாதிரிப் பத்துப் பத்திரிகையிலே படம் எல்லாம் வெளி வந்து பிரபலமான ஸ்டார் ஒருத்தி அனாதை மாதிரித் தெருவிலே நடந்து போறது நல்லாவா இருக்கும்? நீ அப்பிடி எல்லாம் போகப்பிடாது, அது உனக்கும் மரியாதை இல்லே. உன்னை வச்சுப் படம் எடுக்கிற எனக்கும் மரியாதை இல்லே. இங்கே இருக்கிறதுக்குள்ளே பெரிய சவர்லெட் வண்டியிலே உன்னைக் கடையிலே கொண்டு போய் விட்டுக் கூட்டிக்கிட்டு வர்ரேன்” என்றார்.
“நீங்க எதுக்குங்க வீணா அலையணும்? நானே போயிட்டு வந்துடறேன்” என்றாள் அவள்.
“சரி வேண்டாம்னா நான் வரலே. டிரைவரைக் கூப்பிட்டுச் சொல்லிடறேன். நீ போயிட்டு வா. வேணுங்கறதை வாங்கிக்கோ. பணம் ஏதாச்சும் வேணுமா? இந்தா! எதுக்கும் கையோட வச்சுக்கோ இருக்கட்டும்” என்று ஓர் ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவளிடம் எடுத்துக் கொடுத்தார் கன்னையா.
“பணம் வேண்டாங்க. ஏற்கெனவே நீங்க கொடுத்த ‘செக்கை’ மாத்திக் கொஞ்சம் பணம் எடுத்து வச்சிருக்கேன். அது போறும்னு நினைக்கிறேன்” என்று மறுத்தாள் சுமதி. கன்னையா விடவில்லை.
“அட அது இருந்தா இருக்கட்டுமே அம்மா! இதையும் கூட வச்சுக்க” என்று அவள் வலது கையைப் பிடித்து இழுத்து அதில் நூறு ரூபாய் நோட்டுக்களைத் திணித்தார் அவர். முதுகில் ஒரு செல்லப் பிராணியைத் தட்டிக் கொடுப்பதுபோல் அவளைத் தட்டிக் கொடுத்தார்.
பாண்டி பஜாரில் இருந்த ஒரு பெரிய பட்டு ஜவுளிக் கடைக்குப் போனாள் அவள். கன்னையாவின் டிரைவர் கடை வாசலில் கப்பல் போன்ற அந்த நீளமான சவர்லெட்டை நிறுத்திக் கீழே இறங்கிப் பின் ஸீட்டில் அமர்ந்திருந்த சுமதி இறங்குவதற்காகக் கதவையும் திறந்துவிட்டான். சுமதி கீழே இறங்கவும் அவளுடைய பழைய கல்லூரித் தோழிகள் ரூம்மேட் விமலா உட்பட நாலைந்து பேர் “ஹாய்! சுமதி” என்று வந்து அவளைச் சூழ்ந்து கொள்ளவும் சரியாயிருந்தது. சுமதி தற்செயலாக அவர்களை அங்கே சந்தித்தாள்.
“இது உன் காராடி?” என்று கேட்டாள் விமலா. “அப்பிடித்தான் வச்சுக்கோயேன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் சுமதி. வேண்டுமென்றேதான் அவளுக்கு அப்படிப் பதில் சொன்னாள் சுமதி.
“உன் சினிமா விளம்பரம் எல்லா டெய்லிஸ்லேயும் முழு முழுப்பக்கம் வந்ததே, அந்தப் படம் எப்படீ ரிலீஸாறது? நாங்கள்ளாம் ரொம்ப ஆவலோட காத்திண்டிருக்கோம்டீ?” என்றாள் மற்றொரு தோழி. “ஐயாம் வெரி வெரி ப்ரெளட் ஆஃப் யூ சுமதி” என்றாள் வேறொரு சிநேகிதி. வேறொரு தோழி சுமதியிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டாள்.
“நீ காலேஜ் படிப்பைப் பாதியிலே விட்டுட்டுச் சினிமாவுக்கு ஓடினது தப்புன்னு விமலா அபிப்ராயப் பட்டா. நான் அப்படி நினைக்கலேடீ சுமதி! நீ காலேஜிலே படிச்சிண்டே கிடந்தேன்னா இன்னும் ஏழு தலைமுறையானால் கூட இப்படி ஒரு சவர்லே இம்பாலாவிலே வந்து ‘ஜம்’னு இறங்க முடியாது. நீ செய்ததுதான் சரி! நம்மைத் தேடி வர்ர அதிர்ஷ்டத்தை நாம காலாலே எட்டி உதைக்கப் பிடாது” என்று சுமதிக்கு அவள் செய்தது சரிதான் என்று நற்சான்றிதழ் கொடுத்தாள் ஒரு சிநேகிதி. சுற்றி நிற்கிற அனைவர் கண்களும் அப்போது தன்னைப் பொறாமையோடு நோக்குவதைச் சுமதி புரிந்து கொண்டாள். சுமதிக்கு உள்ளூரக் கவர்வமாகக் கூட இருந்தது.
“எல்லாரும் வாங்கடி! துணியை செலக்ட் பண்ணி எடுத்திட்டு எங்கேயாவது போய்க் காபி குடிக்கலாம்” என்று தோழிகள் அனைவரையும் தன்கூட அழைத்தாள் சுமதி.
“ஹே. ஆளைப்பாரு. வெறும் காபியோட எங்களை ஏமாத்திடலாம்னு பார்க்காதே. நீ பெரிய ஸ்டாரா யிட்டே உன் ஸ்டேட்டஸுக்கு தகுந்த மாதிரி எங்களுக்கு ஏதாவது பண்ணனும்டீ. எல்லாரையும் இப்பவே தாஜ்கோரமேண்டலுக்குக் கூட்டிண்டு போடி” என்றாள் துடிக்குக்காரியான தோழி.
“நீங்கள்ளாம் வர்ரதா இருந்தா எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லேடீ. தாஜ்கோரமண்டல், சவேரா, இண்டர்நேஷனல் எங்கே கூப்பிட்டாலும் நான் வரத் தயார்” என்று இணங்கினாள் சுமதி. தன்னுடைய உள்மனத்தின் வேதனைக்குத் தற்காலிகமான மாற்றாகப் பயன்படும் அந்தத் தோழியர் கூட்டத்துக்காக அவள் பணம் செலவழிவதைப் பற்றிக்கூட கவலைப்படவில்லை. அவளுக்கு அவர்களுடைய கம்பெனி அப்போது இதமான உணர்வைக் கொடுத்தது. தோழிகள் அவளைச் சூழ்ந்துகொண்டு மொய்த்தனர். அத்தனை தோழிகளோடும் கூட்டமாக ஜவுளிக்கடைக்குள் நுழைவது பெருமையாகக்கூட இருந்தது. பத்திரிகைகளில் அவள் படத்தைப் பார்த்திருந்த கடை ஊழியர்கள் சிலர் தங்களுக்குள், “டேய்! இவதான் புதுமுகம் சுமதிடா” என்று தணிந்த குரலில் தன் பெயரைச் சொல்லித் தங்களுக்குள் முணுமுணுத்தது கூட அவளுடைய கர்வத்தை வளர்ப்பதாயிருந்தது. ஒர் ஊழியன் ஒரு வாரத்துக்கு முந்திய தினசரி ஒன்றை எடுத்து நீட்டி அதில் முதல் பக்கத்திலேயே கவர்ச்சிப் படமாக வெளியாகியிருந்த அவளது முக்கால் நிர்வாண நடனப் படத்தை இன்னொருவனிடம் சுட்டிக் காட்டி அவளைப் பற்றிச் சொல்லிக் கொண் டிருந்ததை அவளே ஒரக்கண்ணால் கவனித்துக் கொண்டே கவனிக்காதது போல் கடைக்குள்ளே போனாள். அதுவும் அவளுக்குப் பெருமையாகவே இருந்தது.
“வாங்கம்மா, புரொட்யூலர் கன்னையாகூட நீங்க வந்துக்கிட்டிருக்கீங்கன்னு இப்பத்தான் ஃபோன் பண்ணிச் சொன்னாரு” என்று அந்த ஜவுளிக்கடையின் முதலாளியே எழுந்திருந்து வந்து கைகூப்பி எதிர் கொண்டு தன்னை வரவேற்றபோது சுமதிக்குப் பெருமித உணர்வு ஏற்பட்டது. கன்னையாவின் செயல் அவளை உயர்த்துகிற வகையிலேயே அவள் மனத்தில் புரிந்தது. தோழிகள் முன்னிலையில் அந்தச் சவர்லெட் இம்பாலா சவாரி, உபசாரம், வரவேற்பு எல்லாம் அவளுக்கு மிகவும் பிடித்தி ருந்தன. பெண் என்பவள் இங்கிதமான உபசாரங்களாலும், முகமன் வார்த்தைகளாலும் எந்தக் காலத்திலும் ஏமாற்றப்பட முடிந்தவள் என்ற கருத்துக்கு நிதரிசனமான உதாரணமாக அப்போது சுமதி இருந்தாள். ‘ஒவ்வொரு பெண்ணும் ஆசை மயமானவள், சபலங்கள் நிறைந்தவள். புகழுக்கு வசப்படுகிறவள், உபசாரங்களில் சிக்கிக் கொள்கிறவள்’ - என்று கன்னையா அனுபவம் மூலம் தெரிந்து வைத்திருந்த அளவுகோல் சரியாகவே இருந்தது. சுமதியும் அவள் தோழிகளுமாகப் புடவை ஸெலக்ட் செய்கிற காட்சியைப் பக்கத்து ஸ்டுடியோக்காரரை வரவழைத்து நாலைந்து புகைப்படங்கள்கூட எடுத்துக் கொண்டார் அந்த கடை முதலாளி. “நாளைக்கு ஏதாவது பேப்பர்லே விளம்பரம் பண்றப்போ இன்ன ஸ்டார் எங்க வாடிக்கைக்காரங்கன்னு போடறப்ப, இந்தப் படத்தையும் போடலாம் பாருங்க” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் கடைக்காரர். அவர்களுக்கு எல்லாம் குளிர்பானம் வரவழைத்துக் கொடுத்து உபசரித்ததோடு மிகவும் மரியாதையாக வாசலில் கார்க் கதவுவரை வந்த வழியனுப்பினார் அவர். தோழிகள் எல்லோரையும் ஏற்றிக் கொண்டு அவர்களோடு நேரே நுங்கம்பாக்கம் ஹை ரோட்டிலிருந்த தாஜ் கோரமண்டல் ஹோட்டலுக்குச் சென்றாள் சுமதி. திடீரென்று “இந்த ஹோட்டல் ஏன் இன்கம் டாக்ஸ் ஆபீஸுக்கு எதிரே இருக்குன்னு யாருக்காவது தெரியுமா?” என்று தோழிகளைக் கேட்டாள் சுமதி.
“தெரியாது! நீதான் சொல்லேன்” என்றார்கள் தோழிகள்.
“இன்கம் டாக்ஸ் கட்டினப்புறமும் யாரிட்ட லட்ச லட்சமா மீந்திருக்கோ அவங்க இங்கே வந்தால்தான் கட்டுபடியாகும். அதனாலேதான் இன்கம் டாக்ஸ் ஆபீசுக்கு எதிர்த்தாப்லேயே கட்டிப்பிட்டாங்க” என்று சுமதி ஒரு ஜோக் அடித்ததும் தோழிகள் எல்லாம் கலகல வென்று சிரித்தார்கள். அந்த ஜோக்கைப் பாராட்டவும் செய்தார்கள்.
“எப்படியோ நீ இங்கே வர்ர தகுதி உள்ளவள்னு தெரிஞ்சுக்கிட்டதுலே நாங்க சந்தோஷப் படறோம்டீ சுமதி!’ என்று விமலா மட்டும் சுமதி சொன்னதை வைத்தே இடக்காக அவளுக்கு மறுமொழி கூறினாள்.
தாஜ்கோரமண்டலில் சாப்பிட்டு முடிக்க இரண்டு மணி நேரம் ஆயிற்று. பில் எண்ணுாறு ரூபாய் ஆகி விட்டது. சுமதியிடம் கன்னையா கொடுத்த பணம் இருந்ததால் அவள் தாராளமாகச் செலவழித்தாள். பில்லைத் தோழிகளிடம் காட்டிவிட்டு, “இப்போ சொல்லுங்கடீ! நான் இதுக்குள்ளே நுழையறப்போ இது ஏன் இன்கம் டாக்ஸ் ஆபீசுக்கு முன்னாடி இருக்குன்னு ஜோக் அடிச்சேனே அது எத்தனை பொருத்தம்?” என்று சிரித்தபடியே தோழிகளை வினவினாள் சுமதி.
ஹோட்டலிலிருந்து வெளியேறியதும் தோழிகளை ஹாஸ்டல் வாசலில் கொண்டுபோய் டிராப் செய்தாள் சுமதி.
“ஏண்டி! வார்டனைப் பார்த்துவிட்டுப் போறியா? நீ ‘சவர்லே’யிலிருந்து இறங்கியதை அவள் பார்க்கட்டும்” - என்றாள் விமலா.
“வொய் ஷுட் ஐ?” என்று முகத்தைச் சுளித்தாள் சுமதி. அவள் தயாரிப்பு அலுவலகத்துக்குத் திரும்பியதும் வாசலிலேயே உலாவிக் கொண்டிருந்த கன்னையாவிடம், “கொஞ்சம் மன்னிச்சிக்குங்க. நேரமாயிடிச்சு, என் ஃபிரண்ட்ஸுங்க சில பேர் வழியிலேயே பார்த்துட்டாங்க” என்றாள்.
“நோ நோ! மன்னிக்கறதாவது ஒண்ணாவது? இந்தக் கார் உன்னோடதும்மா! உன் சொந்தக்கார் உன் சொந்த வீடுன்னு இதை எல்லாம் நீ நினைச்சால்தான் எனக்குத் திருப்தி” என்றார் கன்னையா. அவருடைய அந்த அளவு கடந்த பிரியம் எதற்கு ஏன் என்பதை அவள் யோசித்துக் கொண்டிருந்தாள். அந்த யோசனை முடியுமுன் அன்றிரவே அது புரிந்தது.
தோழிகளை தாஜ்கோரமண்டலுக்கு அழைத்துச் சென்று உபசரித்துவிட்டுத் திரும்பிய தினத்தன்று இரவு சுமதி தயாரிப்பாளர் அலுவலகத்தில் தங்குவதாக இல்லை. மகாலெட்சுமி தெருவிலுள்ள யோகாம்பாள் அத்தை வீட்டுக்குப் போய்விடுவதாகத்தான் இருந்தாள். ஆனால் கன்னையாதான் அவளைத் தடுத்தார். மேரியும் வற்புறுத்தினாள். “கொஞ்ச நேரத்திலே என்னோட ஃபைனான்ஷியர் ஒருத்தன் இந்திக்காரன் இங்கே வரான். ஒரு சின்ன லிக்கர் பார்ட்டி இருக்கு. நீயும் மேரியும்கூட அதுக்கு இருக்கணும். வர்ரவன் நான் கேட்கிறப்போ எல்லாம் லட்சம் லட்சமா எனக்குக் கடன் கொடுக்கிறவன். நீங்கள்ளாம் கூட இருந்து சுமுகமாப் பழகினிங்கன்னா அவன் ரொம்ப சந்தோஷப்படுவான். கொஞ்சம் தயவு பண்ணனும்” என்றார் கன்னையா. சுமதியால் அதைத் தட்டிச் சொல்ல முடியவில்லை. கன்னையாவே கெஞ்சிக் குழைந்துதான் அவளிடம் அதைக் கேட்டிருந்தார்.
கல்லூரியில் முதன் முதலாக மேரி கொஞ்சம் கொஞ்சமாக அவளை எப்படி கடன்பட வைத்து வசப் படுத்தினாளோ அப்படியே அதே முறையில் கன்னையாவும் அவளை மெல்ல நன்றிக் கடன்பட வைத்து வசப் படுத்தி விட்டார். அவளால் எதையும் முகத்தை முறித்தது போல மறுக்க முடியவில்லை, கன்னையா அவளை அடிமைபோல் ஆண்டார். அந்த இந்திக்காரனோடும் கன்னையாவோடும் மேரியோடும் சேர்ந்து அவளும் குடிக்க வேண்டியாதாயிற்று. கார்ச் சவாரியைப் பணப் பகட்டைத் தன்மீது அவசர அவசரமாகத் திணிக்கப் பட்ட நட்சத்திர அந்தஸ்தை - எதையும் இப்போதும் இனிமேலும் சுமதி இழக்கத் தயாராயில்லை. அவற்றை எல்லாம் பகிரங்கமாக இழக்காமல் இருப்பதற்காக வேறு சில விஷயங்களை ரகசியமாகவாவது இழக்கவும் அவள் தயாராகிவிட்டாள். ஒரு சினிமாத் தயாரிப்பாளரின் பெரிய காரில் ஜவுளிக் கடை வாசலில் போய் இறங்கியபோது அன்று பகலில் முன்பு தன் கூடப் படித்த கல்லூரி மாணவிகளும், கடைக்காரரும் காண்பித்த மரியாதை அவளுக்கு நினைவு வந்ததது. சுமதி பல விஷயங்களை விட்டுக் கொடுக்கவும், அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும் புரிந்து கொண்டு விட்டாள். அவள் மாறுதல்கள் கன்னையாவுக்கும் ஓரளவு புரிந்துவிட்டி ருந்தன.
பாதிப் பார்ட்டியிலேயே மேரியும், கன்னையாவும் ஒருவர் பின் ஒருவராக நழுவி விட்டார்கள்; அந்த சிந்தி ஃபைனான்ஷியரும், சுமதியும் மட்டுமே தனியாக விடப்பட்டார்கள். அந்தப் பணக்காரர் வந்ததும் அவரை அறிமுகப்படுத்துகிறபோதே, “சுமதி! இவருதான் நீ ஹீரோயினா நடிக்கப்போற படத்துக்கு ஃபைனான்ஸ் பண்றவரு, உன்னோட ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்துவிட்டு ரொம்ப சந்தோஷப்பட்டாரு. அன்னிக்கு முதல் கால்ஷீட், அதான் அந்தக் காபரே ஸீன் எடுத்தமே, அப்பக் கூட வந்து உன்னைப் பார்த்திருக்காரு. நீதான் இன்னிக்கு இவரை எண்டர்டெயின் பண்ணனும். அன்னிக்கே உன் அழகைப் பார்த்து, ‘சார்மிகர்லின்’னு திரும்பத் திரும்ப எங்கிட்டப் புகழ்ந்துக் கிட்டிருந்தாரு” என்று சுற்றி வளைக்காமல் சுமதியிடம் நேராகவே கூறிவிட்டார் கன்னையா. சுமதிக்கும் அவர் என்ன கூறுகிறாரென்று புரிந்துவிட்டது.
மேரியும் கன்னையாவும் - சுமதியையும் அந்தப் பணக்காரனையும் ஏ.ஸி. ரூமில் தனியே விட்டுவிட்டு வெளியேறிய போது இரவு பதினொன்றரை மணி. அந்த சிந்திக்காரன் சுமதியிடம் ஆங்கிலத்தில் பேசினான். எங் கெங்கெல்லாம் ‘எஸ்’ என்ற எழுத்தை உச்சரிக்க வேண்டுமோ அங்கெல்லாம ‘எஜ்’ என்று அதை உச்சரித்தான். ‘ஸோதட்’ என்பதற்குப் பதில் ‘ஜோதட்’ என்றும், ‘கர்வ்ஸ்’ என்பதற்குப் பதில் ‘கர்வ்ஜ்’ என்றும் அவன் பேசியது கேட்க வேடிக்கையாயிருந்தது.
கன்னையா தனக்கு அறிமுகப்படுத்திய பெண்கள் எல்லோரினும் சுமதிதான் அழகானவள் என்று நற்சான்று வழங்கியபடியே அவளைத் தொட்டுத் தனது காமச் சேஷ்டைகளை ஆரம்பித்தான் அவன். சுமதிக்கு இதயம் மரத்துப் போயிருந்தது. உடம்பு மட்டுமே ஒரு மிஷின் மாதிரி இயங்கியது. ஓரளவு குடித்துச் சுயநினைவு தடுமாறியிருந்தாலும் முதலில் தான் காஷ்மீரில் கன்னையா விடம் இழந்ததை இன்று மற்றொருவனிடம் இழக்கிறோம் என்று மெல்லியதாக ஒரு மனத்தைப் பிசையும் ஞாபகம் உள்ளுற இழையோடத்தான் செய்தது. அதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
அன்று நள்ளிரவு இரண்டரை மணிக்கு அந்த இந்திக் காரன் போனபின் சுமதி படுக்கையில் தளர்ந்து அயர்ந்து கிடந்தாள். மூன்று மணிக்கோ மூன்றரை மணிக்கோ கன்னையா தன்னருகே வந்து படுத்தது கூட அவளுக்குத் தெரியாது. நடுவே ஒரு முறை ஏதோ கைகள் தன்னை இறுகத் தழுவிய போது கூட இருளில் இந்தி பைனான்ஸியர் இன்னும் போகவில்லை போலிருக்கிறது என்று தான் அவள் நினைத்தாள். பாதி அசதி - பாதி போதையில் இருந்த அவள் ஏதோ ஒரு ஞாபகப் பிசகில் அந்த இந்திக்காரனையே திரும்பவும் எண்டர்டெயின் செய்வதாக நினைத்துக் கொண்டு கன்னையாவை எண்டர் டெயின் செய்திருந்தாள். விடிந்த பின்புதான் அவளுக்கே அது தெரிந்தது. காலை எட்டரை மணிவரை அவளால் எழுந்திருக்கவே முடியவில்லை. உடலில் ஒரே அயர்ச்சி, வலி. அடித்துப் போட்ட மாதிரித் தூங்கினாள். எட்டரை மணிக்கு அவளைத் தொட்டு எழுப்பிக் கன்னையாவே பிளாஸ்கிலிருந்து காபியை ஊற்றிக் கொடுத்தார். டி.பன் எத்தனை மணிக்கு வேணும் என்று ஒரு ‘வெயிட்டர்’ கேட்பதுபோல அவளிடம் மரியாதையாகக் கேட்டார்.
“நம்ம போஜ்வானிக்கு ஒரே குஷி! உன்னை மாதிரிப் பொம்பளை உலகத்திலேயே கிடையாதுங்கிறான். போறப்போ இந்த கவரை உங்கிட்டக் கொடுக்கச் சொல்லிட்டுப் போனான். அவன் இரண்டரை மணிக்குப் போனப்புறம் உனக்குத் துணையா இருக்கட்டும்னு நான் இங்கே வந்து படுத்துக்கிட்டேன்.”
உடனே சுமதி அந்தக் கவரை வாங்கிப் பிரித்தாள். அதில் புத்தம் புது நூறு ரூபாய் நோட்டுகளாக நிறைய இருந்தன. அவற்றை அவள் எண்ணவில்லை. ஒரு பார்வையில் ஆயிரத்துக்கும் மேலாக இருக்கும் என்று தோன்றியது.
“பாத்ரூம்லே நல்ல வெந்நீர் ரெடியாயிருக்கு. வெந்நீர்லே குளி! உடம்புக்கு இதமா இருக்கும். பாத் ‘டப்’லே ஸெண்டெட் ஹாட்வாட்டர் உனக்காக ரொப்பியிருக்கேன். இந்த ஸெண்ட் கூட நம்ம ஃபைனான்ஷியர் போஜ்வானி ஹாங்காங்கிலிருந்து கொண்டாந்ததுதான்” என்றார் கன்னையா. சுமதி பதிலே சொல்லவில்லை. ஃபோன் மணி அடித்தது. கன்னையா எடுத்தார் “உனக்குத் தான் சுமதி ! யாரோ யோகாம்பாள் அத்தை வீட்டிலே இருந்து கூப்பிடறாங்களாம்” என்று சொல்லி ஃபோனை அவளிடம் நீட்டினார் கன்னையா. சுமதி ஃபோனை வாங்கினாள்.
“மன்னிச்சுக்குங்கோ மாமா! திடீர்னு இங்கே ராத்திரியும் ஷூட்டிங் இருக்குன்னுட்டாங்க வர முடியலே. நான் இப்போ கொஞ்ச நாழியிலே முடிஞ்சா அங்கே வரேன்” என்று ஃபோனில் பதில் சொன்னாள் சுமதி. ஃபோனை வைத்ததும், “மேரி இருக்காளா, வீட்டுக்குப் போயிட்டாளா?” என்று அவள் கன்னை யாவைக் கேட்டாள்.
“அவ ராத்திரியே வீட்டுக்குப் போயிட்டா சுமதி! அங்கே கிளப் ஆளுங்கள்ளாம் வந்திருப்பாங்களே.... வேணா இப்ப ஃபோன்ல அவளைக் கூப்பிட்டுக் குடுக்கட்டுமா?”
“வேண்டாம்! குளிச்சிட்டு வந்தப்புறம் நானே அவகிட்டப் பேசிக்கிறேன். அவசரம் ஒண்னுமில்லே.” நாளடைவில் சுமதி பலவற்றை ஜீரணித்துக் கொள்ளப் பழகிவிட்டாள் என்பது கன்னையாவுக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் தன்னோடு கலகலப்பாகச் சிரித்துப் பேசிப் பழகாமல் அவள் உள்ளேயே வேகிறாள் என்பது ஒரளவு அவரை வருத்துகிற விஷயமாகவும் இருந்தது. அதனால் அவர் வேறு சில தந்திரங்களை மேற் கொண்டார். சுமதி தனியாக இருக்கும்போது அவளுக்கு வேறு மனப்பான்மைகள் தலையெடுத்து ரோஷம் வந்து விடக் கூடாது என்பதற்காக அவள் வேறு வேறு பெருமிதங்களை அடையும்படி செய்தார் அவர். பத்திரிகைக்காரர்களைத் தாமே ஏற்பாடு செய்து அவளைப் பேட்டி காணவும் அவள் படங்களைப் பிரசுரித்துப் புகழவும் வகை பண்ணினார். யாரோ ஒரு மூன்றாந்தரச் சினிமாப் பத்திரிகைகாரனைக் கூப்பிட்டுச் சுமதியின் வாழ்க்கை வரலாற்றை அவளிடமே கேட்டு எழுதி வெளியிடச் செய்தார். எல்லாத் தினசரிகளிலும் சினிமாப் பகுதி வெளிவருகிற தினத்தன்று எப்படியும் சுமதியின் கவர்ச்சிப் படம் ஒன்று தவறாமல் வெளிவருமாறு செய்து கொண்டிருந்தார். தன்னுடைய கைப்பாவையாக அவள் பயன்பட வேண்டுமென்பதற்காக அவளைப் புகழேணியின் உச்சிக்குத் தூக்கிவிடத் தான் ஏற்பாடுகள் செய்வதாக அவளே அறியும்படி நடந்து கொண்டார். ‘நீ என்னிடம் வந்திராவிட்டால் இந்தப் பணமும் பவிஷும், பகட்டும் புகழும் உனக்கு வருகிற விதத்தில் வேறு யாராலும் செய்திருக்க முடியாது?’ என்று நிர்ப்பந்தமாக அவளுக்கு அறிவுறுத்துவதுபோல நடந்துகொண்டார் அவர். இன்னொருபுறம் மேரியின் மூலமாகப் பெர்மி எலிவ் ஸொஸைட்டி பற்றிய ஆங்கில நூல்கள், நாவல்கள் ஆகியவற்றைச் சுமதிக்கு நிறையப் படிக்கக் கொடுத்தும், பேசியும், கற்பு, புனிதம் பற்றிய அவள் மனநிலைகளைக் கரைத்துவிடவும் முயன்றார். சுமதியை மிகச் சில மாதங்களிலேயே குடிப்பதற்கும் போதை தரும் எல்.எஸ்.டி., மார்ஜுவானா மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவும் சகஜமாகப் பழக்கிவிட்டார். பணத்தாலும் செளகரியங்களாலும், அவளைக் குளிப்பாட்டினார். சலிப்பின்றி அதைச் செய்தார். கன்னையா தாமே முயன்று நகரின் மிகப் பெரிய குழந்தைகள் கான்வென்ட் ஒன்றின் விழாவில் ஒரு பெண் மந்திரியின் தலைமையில் பரிசளிப்பதற்குச் சுமதியை அழைக்கச் செய்தார். அந்த மந்திரியம்மையாரும் சுமதியைப் புகழ்ந்து நாலு வார்த்தைகள் சொல்லிவிட்டு அப்புறம் அவள் பரிசளிப்பது பற்றிக் கூட்டத்தில் அறிவித்தார். அந்த விழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்களில் முதல் வரிசையிலேயே சுமதி முன்பு படித்த சிவசக்தி மகளிர் கல்லூரியின் பிரின்ஸிபால் அம்மாள், வார்டன் மாலதி சந்திரசேகரன் எல்லாரும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எதிரேயே தான் மேடையில் வி.ஐ.பி.யாக அமர்ந்திருப்பதில் சுமதிக்கு கர்வமாகக்கூட இருந்தது. பரிசளிப்பு விழா முடிந்ததும் சுமதியின் சார்பில் அந்தக் கான்வென்டிற்கு ஆயிரம் ரூபாய் நன்கொடையாகத் தருவதாக அங்கேயே அந்தக் கூட்டத்திலேயே மந்திரி அம்மாளைவிட்டு அனெளன்ஸ் செய்யவைத்தார் கன்னையா. தானே கூப்பிட்டுக் கொண்டு வந்திருந்த புகைப்படக்காரனைக் கொண்டு சுமதி குழந்தைகளுக்குப் பரிசளிக்கும் காட்சியையும், மந்திரி அம்மாளின் அருகே அழகு மயிலாக அமர்ந்திருக்கும் காட்சியையும், பல படங்கள் பிடித்துக்கொள்ளச் செய்தார். மறுநாள் காலையே பத்திரிகைகளில் அந்தப் படங் களையும் சுமதியின் தாராள மனப்பான்மையையும் பற்றிப் பிரசுரிக்கச் செய்தார்.
சுமதி புகழாலோ, பூரிப்பாலோ அல்லது கன்னையாவோடு, மேரியோடு சேர்ந்து குடிக்கப் பழகியதாலோ சிறிது சதை போட்டுப் பருத்தாள். கொடி போலிருந்த அவள் மொழுமொழுவென்று ஆகி அழகாக உப்பியிருந்தாள். கன்னையா விளம்பரம் செய்த அவள் கதாநாயகியாக நடிக்கிற படம்தான் இன்னும் தயாராகவில்லை. அதன் விளம்பரங்கள்தான் புதுப்புது விதத்தில் வந்து கொண்டிருந்தன. கன்னையாவின் பண உதவியாளர்களில் பலர் சுமதி அவரிடம் இருக்கிறாள் என்பதாலேயே அவரை மாலை வேளைகளில் அடிக்கடி சந்திக்க வரத் தொடங்கினார்கள். அவருக்கு வேண்டியமட்டும் கடன் தரத் தயங்கிய சிலர் இப்போது எவ்வளவு வேண்டுமானாலும் தரத் தயாராக இருந்தார்கள். சுமதி அவருடைய சக்தி வாய்ந்த முதலீடாக மாறியிருந்தாள். நடுநடுவே வேறு கம்பெனிகளின் படங்களின் சிறுசிறு வேடங்களில் அவளை நடிக்கவிடக் கன்னையா தயங்கவில்லை... ஆனால் எல்லாமே குளியலறைக் காட்சியாகவோ இரவு விடுதி நடனமாகவோதான் இருந்தன. முதலில் தான் எப்படி அறிமுகப் படுத்தப்பட்டாளோ அப்படியே ஒவ்வொரு தயாரிப்பாளரும் தன் உடல் வளப்பத்தையே காட்டும் காட்சிகளைத் தனக்குத் தருவது சுமதிக்குப் புரிந்துவிட்டது. படிப்படியாக மெல்லமெல்ல யோகாம்பாள் அத்தை வீட்டுக்குப் போவதைச் சுமதி விட்டு விட்டாள். அவர்களும் நாலைந்து முறை கேட்டுப் பார்த்து எச்சரித்துப் பார்த்துவிட்டு ‘நமக்கென்ன வந்தது? எக்கேடு கெட்டு வேண்டுமானால் போகட்டும்’ என்று அவளைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டுவிட்டார்கள்.
அந்தச் சமயத்தில் ஒருநாள் சுமதியின் பேருக்கு ஒரு ரிஜிஸ்தர் தபால் மதுரையிலிருந்து வந்தது. கடிதத்தை அவளுடைய அம்மாதான் அனுப்பியிருந்தாள். நோட்டீஸோ என்று முதலில் சுமதி சந்தேகப்பட்டாள். அப் புறம் எதுவாயிருந்தாலும், ‘வாங்கித்தான் பார்க்கலாமே?’ என்று துணிந்து கையொப்பமிட்டு அதை வாங்கிப் பிரித்த போது அது ஒரு நீண்ட கடிதமாக இருந்தது. ஏதோ கட்டுரைக்குத் தலைப்புப் போடுவதுபோல் ஒரு தாயின் கடைசி எச்சரிக்கை என்று அதற்குத் தலைப்பே போட்டிருந்தாள் அம்மா. இதுதான் அநேகமாய் நான் உனக்கு எழுதுகிற கடைசிக் கடிதமாக இருக்கும் என்ற முதல் வாக்கியத்தோடுதான் அம்மாவின் கடிதமே ஆரம்பமாகியது. அம்மாவின் அந்த நீண்ட கடிதத்தைப் படிக்கத் தொடங்கியபோது சுமதியின் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்ளத் தொடங்கியது.
அன்புள்ளவளாக இருந்த...க்கு உன்னைப் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்குக் கூட உனக்கும் எனக்கும் இடையே இனி எந்த நெருக்கமும், பாசமும் இருப்பதாக இப்போது நான் நினைக்கவில்லை. எனக்குக் கட்டுப்படாத - என் வார்த்தைகளைக் கேட்கத் தயாராயில்லாத ஒரு பெண்ணுக்கு நான் கடிதம் எழுதுவதற்குக் கூடக் கடமைப் பட்டிருக்கவில்லை. ஆனால் சொல்ல வேண்டியதைக் கடைசியாகச் சொல்லித் தீர்த்து விடுவது நல்லதென்றுதான் இதை எழுதுகிறேன். அப்புறம் உனக்குத் தலை முழுகிவிடலாம்.
அங்கே யோகாம்பாள் அத்தை வீட்டிலிருந்து நேற்றுக் கடிதம் எழுதியிருந்தார்கள். ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி நீ அவர்கள் வீட்டில் தங்கிக் கொண்டு படப்பிடிப்புக்குப் போய் வருவது என்ற நிபந்தனையை மீறி விட்டாய் என்றும், இரவில் கூட அவர்கள் வீட்டுக்குத் தங்க வருவதில்லை என்றும் எழுதியிருக்கிறார்கள். உன்னைப் பற்றி அவர்கள் ஜாடைமாடையாக எழுதி யிருப்பதை எல்லாம் படித்தால் எனக்கு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருக்கிறது. உன்னைப் போல் ஓர் அடங்காப் பிடாரியை - ஊர் சுற்றியை - ஓடு காலியைப் பெண்ணாகப் பெற்றதற்காக நான்தான் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாக வேண்டும். என்னை விசாரிக்கிற நாலு பேருக்கு இனிமேல் நான் மானமாகப் பதில் எதுவும் சொல்ல முடியாது. நீ என் பெயர், குடும்பப் பெயர் எல்லாவற்றையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிவிட்டாய் உன்னால் எனக்கு ஏற்பட்டுவிட்ட தலைக்குனிவு இனிமேல் நான் செத்தால் கூடத் தீராது போலிருக்கிறது. சாவும் வரும் வழியாயில்லை.
மென்மையான பெண் என்பவள் அனிச்சமலரைப் போல் வேற்று மனிதர்களின் வெப்பமான மூச்சுக் காற்றால் மோந்துப் பார்க்கப்படுகிற போதே வாடி விடக் கூடியவள். பிறர் முகம் திரிந்து நோக்கும் அளவுக்கு வாடி விடக் கூடிய ஒரு பெண் பிறகு திருந்தவோ, தேரவோ, மலரவோ முடியாது. மலர்வதற்கு முன்பே வாடுவதற்கு நீயாக முடிவு செய்துகொண்டுவிட்டால் நாங்கள் எப்படி அதைத் தடுக்க முடியும்? அரும்பாக இருந்தாலாவது மீண்டும் மலரலாம் என்ற நம்பிக்கை உண்டு. வாடி விட்டால் பின்பு மலர்ச்சியைப் பற்றிக் கனவு கூடக் காண முடியாது. பெண் மென்மையானவளாக இருக்கலாம். அது தவறு இல்லை. ஆனால் பலவீனமானவளாக இருக்கக் கூடாது. மென்மையான உடலும், திண்மையான உள்ளமும் உள்ளவளாகப் பெண் இருக்கவேண்டும். பலவீனமான உடம்பும், பலவீனமான மனமும் கூடவே கூடாது. சபலமும் புகழ்வெறியும் ஆசைகளும் ஒரு பெண்ணைச் சீரழிக்கப் போதுமானவை.
இன்று நீ திருத்தி மீட்டுக் கொண்டு வர முடியாத நரகத்தில் வீழ்ந்து விட்டாய். உன்னைப் பற்றி இனி மேல் நானோ பிறரோ நினைப்பது கூடப் பாவம். வாடாமல் மொட்டாக இருந்தாலாவது இனி மலர்ச்சி வரும் என்ற எதிர்கால நம்பிக்கை உண்டு. வாடிவிட்ட மொட்டுக்கு அந்த நம்பிக்கையும் இருக்க முடியாது. வாடாதது மலரும், வாடியது கருகும், கருகுவது மறுபடி மலர முடியாது. இதுதான் உலக நியதி.
உன்னைச் சென்னைக்கு அனுப்பிப் படிக்க வைத்த போது நான் என்னென்னவோ சொப்பனங்கள் கண் டேன். நீ டாக்டராக, வக்கீலாக, புரொபஸராக, ஐ.ஏ.ஸ், அதிகாரியாக எப்படி எப்படி எல்லாமோ வருவாய் என்று எண்ணினேன். கடைசியில் நீ சாக்கடையில் போய்க் குதித்துவிட்டாய். உன் உடம்பெல்லாம் சேறாகி விட்டது.
இனி உன்னை நினைப்பதை விட மறப்பது தான் நல்லது. கண்ட பத்திரிகைகளில் உன்னுடைய அரை நிர்வாணப் படங்களையும், முக்கால் நிர்வாணப் படங்களையும் பார்த்துப் பலர் என்னிடம் விசாரிக்கிறார்கள். என்னிடம் படிக்கிற பெண்களே அவற்றைப் பார்த்துக் கேலி செய்கிறார்கள். என்னோடு பணிபுரியும் சில மூத்த ஆசிரியைகள், “என்னடீ உன் பொண்ணை இப்படித் தாறுமாறாகப் போக விட்டுட்டே! நீ ஏன் கண்டிக்கக் கூடாது?” என்று கேட்கிறார்கள். நான் கண்டித்து நீ அடங்க மாட்டாய் என்று சொன்னால் ஒருவேளை அதை அவர்கள் நம்புவதற்கு மறுக்கலாம். யார் யார் தலையில் எப்படி எப்படி எழுதியிருக்கிறதோ அப்படித் தான் நடக்கும். எழுதினதை மாத்தி எழுத முடியப் போறதில்லை. என்னுடைய இந்தக் கடிதம் உனக்கு கோப மூட்டலாம். இதை நீ கிழித்துக் கூடப்போட்டுவிடு வாய். ஆனால் இந்தக் கடிதத்தில் நான் எழுதியிருக்கும் விஷயங்களை என்றாவது ஒருநாள் நீயாகவே மறுபடி நினைவு கூர்வதற்கு நேரிடும் என்பது நிச்சயம். அப்போதுதான் நான் சொல்கிற நியாயங்கள் உனக்குப் புரியும். அதுவரை அவை உனக்குப் புரிவது சிரமம்.
இப்படிக்கு உனக்குத் தாயாக நேர்ந்த துர்ப்பாக்கியவதி.
கடிதத்தில் எழுதியிருந்த சில வாக்கியங்களால் அம்மா சுமதியின் மனத்தை ஒரு கலக்குக் கலக்கியிருந் தாள் என்றாலும் சுமதி அதை மறக்க முடிந்தது. அந்தக் கடிதத்தை அவள் படித்துக் கொண்டிருந்தபோது ஏ.ஸி. அறையில் மேரியும், தயாரிப்பாளர் கன்னையாவும் குடித்துக் கொண்டிருந்தார்கள். சுமதி டெலிபோனில் ஏ.ஸி. அறையைக் கூப்பிட்டு ‘வரலாமா?’ என்று கேட்டாள். அவர்கள் வரச் சொன்னார்கள்.
“ஓ. எஸ். வித் பிளஷர். யூஆர் ஆல்வேஸ் வெல்கம்” என்றாள் மேரி. அன்று முதன் முதலாகத் தானே விரும்பி அவர்களோடு சேர்ந்து குடிப்பதற்குச் சென்றாள் சுமதி. அவளுக்கு அப்போது அம்மாவை மறக்க வேண்டி யிருந்தது. அம்மாவின் கடிதத்தை மறக்க வேண்டியிருந்தது. கடந்த காலத்தை மறந்து கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று மிதக்க எதன் உதவியாவது தேவைப்பட்டது. முன்பெல்லாம் பிறர் வற்புறுத்தலுக்காக அவள் குடித்தாள். இன்று இப்போது இந்த விநாடியிலோ சுமதி தனக்காகவே குடிக்கத் தொடங்கியிருந்தாள். அவள் மிதமிஞ்சிப் போவதைப் பார்த்து மேரிக்கும், கன்னையாவுக்கும் பயமாயிருந்தது.
அம்மா, மகள் வாடிச் சருகாகிறாளே என்று வருந்தினாள். மகளோ கருகிச் சாம்பலாகிவிடவே முடிவு செய்துகொண்டு விட்டாற்போல் தீவிரமாகவும், வேகமாகவும், கெட்டுப் போகத் தொடங்கினாள். கன்னையா அவளைக் கதாநாயகியாகப் போட்டு எடுக்க வேண்டிய படம் என்ன ஆயிற்று என்பதை அவளும் மறந்துவிட்டாள். கன்னையாவும் மறந்துவிட்டார். சுமதி கன்னையாவுக்கும் மேரிக்கும் வேறு விதங்களில் பயன்படத் தொடங்கினாள். ஒரு சமயம் ஒரு பெரிய மில் முதலாளியின் மனைவியிடம் சுமதிக்கு முற்றிலும் புதுமையான அனுபவம் ஏற் பட்டது. சுமதி ஒரு புத்தகத்தில் அதைப் படித்திருந்தாள். லெஸ்பியன் ஸெக்ஸ் வகையைச் சேர்ந்த ஓர் அம்மாளை முதன் முதலாகத் தன்னருகே கண்டாள் அவள். எருமை மாடு மாதிரிப் பெருத்துக் கொழுத்திருந்த அந்த அம்மாள் ஒரு வேட்டை நாயின் வெறியோடு சுமதியைக் கசக்கிப் பிழிந்துவிட்டாள்.
“அந்த அம்மாளுக்கு ஆம்பிளைங்கன்னாலே பயம், ஆம்பிளைங்களே ஆகாது” என்றாள் மேரி. ஆம்பிளைங்க ஆபத்தான ஆளுங்க. விஷயத்தை வெளியிலே சொல்லிடு வாங்கன்னு மேரியிடம் ஒரு தடவை தன்னைப் பற்றி அந்த அம்மாளே சொல்லியிருந்தாள். மேரியும் சுமதி யிடம் அந்த அம்மாளைப் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லியிருந்தாள்.
“இந்தம்மா பொம்பிளையாத் தேடறா இந்தம்மாளோட ஹஸ்பெண்ட் ஆம்பிளையாத் தேடறாரு. பிரிட்டன்லே ஒரே இனத்தைச் சேர்ந்தவங்க தனி யிடத்திலே சந்திக்கிறது சட்டபூர்வமாயிட்டது. வேறே சில ஊர்களிலே அப்படி ஒரே இனக் கலியாணத்தைக்கூட அங்கீகரிக்கிறாங்க இங்கே முடியாது; கூடாது.”
“சமூகத்திலே தனி மனிதர்களிடத்தில் பணம் அளவுக்கு அதிகமாகச் சேர்ந்தால் இப்படித் தாறு மாறுகள்தான் அதிகமாகும் என்பதை நம்ம நாட்டிலுள்ள பணத்திமிர் பிடித்த ஆணும் நிரூபிக்கிறான். பெண்ணும் நிரூபிக்கிறாள். பணம்தான் இதுக்கெல்லாம் காரணம்டீ, மேரி!' என்றாள் சுமதி.
“பணம் இல்லாட்டா எதுதான் நடக்கும் பணத் தேவை இல்லேன்னா நீயும் நானும் இப்படி எல்லாம் ஏன் ஆகப் போறோம்? எங்கப்பா ரெயில் என்ஜின் டிரைவர். எனக்குப் பத்து வயசானப்பவே செத்துப் போயிட்டாரு. அம்மாவும் நானும் மூணு தம்பிகளும் பிழைக்க வேண்டியிருந்தது. இப்படி ஆகவேண்டி வந்தது. உங்கப்பாவும் சின்ன வயசிலே போயிட்டார்னு நீ சொன்னே. உங்கம்மா தமிழ்ப் பண்டிட். நீயும் இப்போது இப்படி ஆயாச்சு. வறுமையுடன் தவிப்பவர்களைப் பணத்தோடு தவிப்பவர்கள் சந்திக்கும் போதெல்லாம் தான் இப்படி ‘ஸோஷியல் கிரைம்ஸ்’ நிறைய நடக்குது.”
“ஆனால் இதெல்லாம் டு மச்! நம்ம நாட்டின் பெருமைக்கே இழுக்கு.”
-
சுமதியின் விவாதங்களை மேரி ஏற்கவில்லை. “இப்படி எல்லாம் பேசினால் பணம் சம்பாதிக்க முடியாது. கண்ணை மூடிட்டுத் தப்புப் பண்ணினால் தான் இங்கே பணம் சம்பாதிக்கலாம்” என்றாள் மேரி. “நாம கண்ணைத் திறந்துண்டே தான் தப்புப் பண்றோமே?” என்று சுமதி இதற்குப் பதில் சொன்னாள். அவளுக்கு மேரியின் விரக்தியும் கசப்பு உணர்ச்சியும் புரிந்தன. அவர்கள் இருவரும் இதற்கு முன்பெல்லாம் தங்களுக்குள் எப்போதும் இப்படிப் பேசிக் கொண்டதே இல்லை. வரவர இருவருமே தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வது வழக்கமாகி இருந்தது.
கன்னையா தயாரிப்பாளரா அல்லது பெரும் பணக்காரர்களுக்கும் ஆஷாடபூதிகளுக்கும் ஏற்பாடு செய்து தருபவரா என்ற விஷயம் இப்போது சந்தேகத்துக்கு இட மில்லாமல் நிரூபணமாகிவிட்டது. வருஷம் ஒன்று விளையாட்டுப் போல ஓடிவிட்டது. சுமதியின் பாங்க் கணக்கில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தை எட்டுகிறாற் போலப் பணம் சேர்ந்துவிட்டது. தயங்கித் தயங்கி அவளிடம் ஒரு சமயம் கன்னையாவே அதைக் கடனாகக் கேட்டார்.
“பாங்கிலே தர்றதைவிட இரண்டு மடங்கு ‘இண்ட்ரெஸ்ட்’ தர்றத்துக்கு நான் தயார்” என்றார்.
“அதுக்கென்ன? தர்றேன். எங்கிட்ட இருந்தா என்ன? உங்ககிட்ட இருந்தா என்ன? உடனடியா இப்போ எனக்கு ஒண்ணும் செலவு இல்லே.”
“ஒரு புரோநோட் வேணும்னா எழுதிக்கலாம். புரோ நோட்டுலே உனக்கு நம்பிக்கை இல்லேன்னா டாகு மெண்ட் வேணா ரெஜிஸ்தர் பண்ணிக்கலாம். ஆனா ஒன்லி எ மேட்டர் ஆஃப் ட்வண்டி டேஸ்; இருபது நாளைக்கி ஒரு நோட்டான்னு கேக்காதே. பண விஷயம் பாரு” என்றார் கன்னையா.
“நான் செக் எழுதித் தரேன், எடுத்துக்குங்க. நோட்டும் வேண்டாம். வட்டியும் வேண்டாம். நீங்க முடியறப்போ திருப்பிக் கொடுங்க போதும்.”
“நான் உன் செக்கை எடுத்துக்கிட்டுப் பேங்குக்குப் போனா அது நல்லா இராது சுமதி! எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருக்கு. நீயே தயவுசெய்து செல்ஃப் போட்டு எடுத்துக் குடுத்துடேன்” என்று கெஞ்சுகிறாற் போன்ற குரலில் குழைந்து நெளிந்து கேட்டார் கன்னையா.
“இதென்ன பெரிய விஷயம், தந்தால் போகுது! வாங்கிக்குங்களேன்” என்று சுமதி சம்மதித்து விட்டாள். அடுத்த நாள் காலையிலேயே பணம் எடுத்துக் கொடுக்கவும் செய்தாள்.
இரண்டு நாள் கழித்து மேலும் ஒரு பெரிய தொகை கேட்டார் கன்னையா. கடைசியில் சுமதியின் கணக்கில் ஒரு பத்து ரூபாய் மட்டுமே மீத மிருக்கிற அளவு பணம் குறைந்துவிட்டது. மற்றதைக் கன்னையா படிப்படியாக வாங்கிக் கொண்டு விட்டிருந்தார்.
ஆனால் சுமதிக்கு அதனால் பணக் கஷ்டம் எதுவும் வந்து விடவில்லை. முன்புபோல் அவளை ராஜ போகத்தில் வைத்துக் கொண்டார் கன்னையா. நடுவே அவள் ஒருநாள் யோகாம்பாள் அத்தையின் வீட்டுப் பக்கமாகக் காரில் போக நேர்ந்தபோது அத்தையைப் பார்க்கலாம் என்று காரை நிறுத்தச் சொல்லி இறங்கிப் போனாள். வாசலில் அத்தையின் கணவர் எதிர்ப்பட்டவர் வழியை மறிப்பது போல் குறுக்கே எதிரில் நின்று கொண்டு “இங்கே எல்லாம் நீ இனிமே வராதே சுமதி! இது கெளரவமான ஃபேமிலி. உன்னாலே எங்க பேர் கெட்டுப் போகணும்கிறது தான் உன் ஆசையா? தயவு செய்து போயிடு, இங்கே யாரையும் நீ பார்க்க வேணாம். உன்னைப் பார்க்கலேன்னு இங்கே யாரும் தவிச்சுக் கிடக்கலே” என்று முகத்திலடித்தாற்போலச் சொல்லி விட்டார். சுமதிக்கு என்னவோ போல் அவமானமாக இருந்தது. வீடு திரும்பியதும் அவளே கன்னையாவைக் கேட்டு நிறையக் குடித்தாள். தன்னை மறக்க முயன்றாள். நடுநடுவே குமுறிக் குமுறி அழுதாள். கன்னையாவுக்கு அவள் நிலை புரியாத புதிராக இருந்தது.
அன்றைய நிகழ்ச்சிக்குப் பின் யோகாம்பாள் அத்தை வீட்டுக்கு இனிமேல் போகக்கூடாது என்று சுமதியின் உள்ளத்திற்குள் ஒரு வைராக்கியம் பிறந்தது. தன் தாய் தன்னை அதிகமாகத் திட்டிய போதெல்லாம், ‘ரொம்பத்தான் திட்டாதீங்கோ. இந்தக் காலத்துக் குழந்தைகளைக் கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும்’ என்றெல்லாம் நிதானமாகப் பேசிய யோகாம்பாள் அத்தையின் கணவரா இப்போது தன்னை இவ்வளவு எடுத்தெறிந்து பேசினார் என்று சுமதியாலேயே நம்ப முடியாமல் இருந்தது. தாயும் உறவினர்களும் தன்னை வெறுத்து அவமானப்படுத்தியதன் விளைவு தன்னை வெறுக்காத கன்னையா, மேரி போன்றவர்கள் மேல் அவள் நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அவர்கள் சொன்னதை எல்லாம் அவள் கேட்டாள். ஒரு விரக்தியில் நல்லது கெட்டது பிரித்துணரும் சக்தியே அவளிடமிருந்து போய் விட்டிருந்தது. கன்னையா இழுத்த இழுப்புக்கு அவள் தங்கக் கம்பியாக வளைந்தாள். அவர் சொன்னதை எல்லாம் தட்டாமல் தயங்காமல் செய்தாள். பரந்த இந்த உலகில், அவரும் மேரியும்தான் தன்னைப் பாதுகாப்பவர்கள் என்ற உணர்வுகூட அவளுக்கு ஏற்பட்டுவிட்டது. மேரியும் கன்னையாவும் கற்பித்த வாழ்க்கை அவளுக்குப் பழகிவிட்டது. மேலும் சில மாதங்கள் சுலபமாக ஓடிவிட்டன. கவலை இன்றியும் ஓடி விட்டன.
“நான் வாங்கின. அந்தப் பணத்தை முழுக்க அப்படியே அடுத்த வாரம் மறுபடி உன் அக்கெளண்டிலே டெபாசிட் பண்ணிடறேன் சுமதி! உனக்கு நான் எவ் வளவோ கடமைப்பட்டிருக்கேன். நீதான் சமயத்திலே கை கொடுத்துக் காப்பாத்தினே” என்று கன்னையாவே ஒருநாள் ஞாபகமாக அவளிட்ம் வாங்கியிருந்த கடன் பற்றிப் பிரஸ்தாபித்தார். சுமதி அதைப் பெரிதுபடுத்த வில்லை. “எங்கே ஓடிடப் போகுது மெல்லக் குடுங்க. அத்தனையும் நீங்க சம்பாதிச்சுக் குடுத்த பணம் தானே? உங்ககிட்ட இருந்தா என்ன? எங்கிட்ட இருந்தா என்ன?” என்று சுமதி கன்னையாவுக்கு மிகவும் ஆறுதலாகப் பதில் சொன்னாள். நாளடைவில் சுமதியிடம் கன்னையா கடன் வாங்கியிருக்கிறார் என்பது எப்படியோ மேரிக்குத் தெரிந்து அவள் ஒருநாள் சுமதியைக் கடிந்து கொண் டாள். படத் தயாரிப்புத் தொழிலைக் கன்னையா அறவே விட்டுவிட்டாற் போல ஒதுங்கியிருந்தார். மாடியில் குடியிருந்த டான்ஸ் மாஸ்டரைக் கூடக் காலி செய்யச் சொல்லி அனுப்பிவிட்டார். சுமதியின் டான்ஸ் பாடங்கள் அரைகுறையாக நின்றன.
டான்ஸ் மாஸ்டர் போனதும் சுமதியைக் கூப்பிட்டு, “சுமதி? நீ வேணும்னாக் கீழே காலி பண்ணிட்டு மாடிக்கு வந்துடறியா? மாடியிலே ஏ.ஸி. போட்டுத் தந்துடறேன்” என்று கன்னையா கேட்டபோது சுமதி கீழேயே இருக்க விரும்புவதாகச் சொல்லி விட்டாள். அடுத்த நாளே மாடிக்கு டிஸ்டம்பர் பூசி ஒழுங்குபடுத்தினார்கள். மாடியில் ஒரே ஹாலாக இருந்த பகுதிகள் இரண்டு மூன்று அறைகளாகத் தடுக்கப்பட்டன. மாடிப் படியேறுகிற பகுதியில் வெளிப் பக்கத்திலிருந்தும் உட்பக்கத்திலிருந்தும் திறக்கவும், பூட்டவும், முடிந்த மாதிரி ஒர் இரும்புக் கம்பி வெளிக் கதவு வேறு புதிதாகப் போடப்பட்டது.
ஒருவாரம் கழித்து ஒருநாள் பிற்பகல் முடிந்து இருட்டுவதற்குச் சிறிது நேரம் இருக்கும்போது நாலைந்து தெலுங்குப் பெண்களோடு காரில் வந்து இறங்கினார் கன்னையா. சுமதி தான் வசித்துக் கொண்டிருந்த போர்ஷனில் இருந்து தற்செயலாக முன்பக்கம் வந்தவள் இந்தக் காட்சியைப் பார்த்தாள். கன்னையாவே ஓடிவந்து, “இனிமே இவங்கதான் இங்கே டான்ஸ் ஸ்கூல் நடத்தப் போறாங்க. பழைய ஆளு ஆம்பிளையா இருந்து தொலைச்சதாலே ரொம்பப் பொண்ணுங்க டான்ஸ் படிக்க நினைச்சாக் கூடப் பயந்து கூச்சப்பட்டாங்க, அதான் பொம்பிளைங்களாகக் கொண்டாந்துட்டேன். இவங்க குச்சுப்புடி டான்ஸ்லே எக்ஸ்பர்ட். இங்கே நிறைய ஆந்திராக்காரர்களும் இருக்காங்க. அவங்க வீட்டுப் பெண்ணுங்கள்ளாம் படிக்க வரும். இந்த பொண்ணுங்க ரொம்ப நல்ல மாதிரி” என்று சுமதியிடம் தானே வலிந்து முந்திக் கொண்டு விவரங்களைச் சொன்னார். சுமதி இதற்குப் பதில் எதுவும் கூறவில்லை. ஆனால் அவர் சொன்னதை முழுமையாக அவள் நம்பவும் இல்லை. ஏதோ அவசரம் அவசரமாக இட்டுக் கட்டிச் சொன்னது மாதிரி பட்டது. அதற்கு அடுத்த நாள் கன்னையாவின் வேலைக்காரப் பையனை எதற்காகவோ கூப்பிட்டபோது அவனிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள் சுமதி. “நீங்க கேட்டா டான்ஸ் கத்துக் குடுக்க வந்திருக்காங்கன்னு ஐயா உங்ககிட்டேச் சொல்லச் சொல்லியிருக்கு” என்றான் அவன். தமிழ் தெளி வாகப் பேச வராத மலையாளத்துப் பையனாகிய அவன் உள்ளதை அப்படியே வாய் உளறிப் போய்ச் சொல்லி விட்டான். சுமதி இரண்டாவது முறையாக அவனை அழுத்திக் கேட்டதற்கு அவன் சிரித்துக் கொண்டே பேசாமல் போய்விட்டான். சுமதிக்குச் சந்தேகம் தட்டியது. இது மாதிரி விஷயங்களில் பெண்மைக்குள்ள மோப்ப சக்தி அவளுக்கு அப்போது உதவியது.
அன்று பிற்பகலில் மேரி வந்தாள். கன்னையாவும், மேரியும் சேர்ந்தே மாடிக்குப் போய் அந்த ஆந்திர அழகிகளைப் பார்த்துப் பேசிவிட்டு வந்தனர். கன்னையாவின் புரொடக்ஷன் ஆபீஸின் வெளிவாசல் அருகே, இங்கே கைதேர்ந்த பெண் ஆசிரியைகள் குச்சிப் புடி நடனம் கற்பிக்கிறார்கள் என்ற புதிய விளம்பரப் பலகை வேறு வைக்கப்பட்டுச் சந்தனம் குங்குமம் தெளிக்கப்பட்டுப் பூச்சரம் சூட்டப்பட்டது. சுமதிக்கு என்ன வென்று ஒரளவு புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகவே புரிந்தது. அந்த ஆந்திர அழகிகள் வந்திருப்பது தங்கியிருப்பது எதுவும் நல்லதற்கில்லை, என்பதை அவள் உணர்ந்தாள்.
சுமதி மேரியைத் தனியாகத் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள். அவளிடமே இதுபற்றிக் கேட்டாள்.
“என்னடீ மேரி? இந்தத் தெலுங்குப் பொம்பளைங்கள்ளாம் யாரு? இவங்களைக் கன்னையா எதுக்காக இங்கே கொண்டு வந்து அடைச்சு வச்சிருக்காரு? கேட்டால் குச்சிப்புடி அது இதுன்னு புளுகறாரு? என்னடி இதெல்லாம்?”
“அவங்களுக்குள் ஆயிரம் இருக்கும்? அதெல்லாம் உனக்கு எதுக்குடி தெரியணும்? உன் பாட்டைப் பார்த்துக்கிட்டு நீ சும்மா இரு போதும்” என்று தான் மேரி சுமதியிடம் அப்போது பதில் சொன்னாளே ஒழிய கன்னையாவை விட்டுக் கொடுத்து எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் பொறுத்து முன்னும் பின்னும் தொடர் பில்லாமல் “உன் ‘லோனை’ அவரிட்டச் சீக்கிரம் திருப்பி வாங்கிடு அதிலே மெத்தனம் வேண்டாம். ஒரு பிடிப்புமில்லாம ஆளை நம்பி வாய் வார்த்தையை நம்பி லட்ச ரூபாய் கடன் கொடுக்கிற அதிசயத்தை நான் இப்பத் தாண்டி சுமதி கேள்விப்படறேன்” என்று மீண்டும் இரண்டாவது முறையாக சுமதியை எச்சரித்தாள் மேரி. முன்பெல்லாம் மேரி இப்படி எச்சரிக்கும்போது வழக்கமாகச் சொல்லுகிற ‘எங்கேடீ போகுது பணம்?’ என்ற வார்த்தைகளைத் தன்னாலேயே இப்போது சொல்ல முடியவில்லை என்பதைச் சுமதி உணர்ந்தாள். அவள் உள்ளுணர்வு விழிப்படைந்திருந்தது.
இந்த அதிர்ச்சி போதாதென்று வேறோர் அதிர்ச்சியும் சுமதிக்கு அன்று ஏற்பட்டது.
மேரியின் இரகசிய ஏற்பாட்டின் படியும், அறிவுரையின் படியும் தன் உடல்நிலை குறித்து மாதவிடாய்க் காலம் தப்பிவிடாமல் பேணுவது குறித்தும் சுமதி அருகிலேயே ஒருலேடி டாக்டரிடம் ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள்.
“இங்கே வந்தாச்சு! இனிமேத் தாறுமாறா யார் யாரோடவோ எப்பிடி எப்பிடியோ இருக்கறாப்பல ஆயிடும். லேடி டாக்டரைத் தவறாமப் பார்த்துக்கோ. இல்லாட்டி வயிறும் புள்ளையுமா நிற்பே. ஜாக்கிரதை” என்று கொஞ்சம் பச்சையாகவே மேரி ஒருநாள் அவளை இது விஷயமாக எச்சரித்திருந்தாள். கன்னையா வீட்டிலிருந்து மூன்று வீடு தள்ளியிருந்த ஒரு லேடி டாக்டரிடம் கூப்பிட்டுக் கொண்டு போய் மேரியும், கன்னையாவுமே சுமதியை அந்த டாக்டரம்மாவுக்கு அறிமுகப் படுத்தியிருந்தார்கள். சுமதியும் இரவுகளையும், பகல்களையும், நிகழ்ச்சிகளையும் ஞாபகம் வைத்திருந்து அந்த டாக்டரம்மாவைச் சந்தித்து ஊசிகள் போட்டுக் கொண்டு மாத்திரைகளை விழுங்கிச் சமாளித்துக் கொண்டிருந்தாள். மாடியில் ‘குச்சிப்புடி’ என்கிற பெயரில் ஆந்திர அழகிகள் குடியேறிய பின் அவள் டாக்டரம்மாவிடம் போகவேண்டிய முதல் முறை நாளன்று டாக்டரம்மா மேற்படிப்புக்காகப் பிரிட்டனுக்குப் புறப் பட்டுப் போய் விட்டாளென்று தெரிந்தது. அன்று போட வேண்டிய இன்ஜெக்ஷனையும் போட்டுக் கொள்ள முடியவில்லை. ‘மெடிக்கல் செக்-அப்பையும் செய்து கொள்ள முடியவில்லை. வேறு டாக்டர்களிடம் போகலாம் என்றால் இந்த மாதிரி இரகசிய விஷயங்களுக்கு யாரை நம்பிப் போவது என்பது சுமதிக்குப் புரியவில்லை. கன்னையாவைப் போய்க் கேட்கலாம் என்றால் மாடியில் ஆந்திர அழகிகள் வந்த நாளிலிருந்து சுமதிக்கும் அவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு ஒருத்தருக் கொருத்தர் பேச்சு வார்த்தை நின்று போயிருந்தது. இரண்டொரு தடவைகள் கன்னையா வலிந்து தாமாகப் பேச முன்வந்தபோது கூடச் சுமதி முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டாள். ஆகவே அவரிடம் போய் லேடி டாக்டர் ஏற்பாடு செய்து தரச் சொல்லிக் கேட்கச் சுமதிக்கு விரும்பவில்லை.
சுமதி உடனே மேரிக்கு ஃபோன் செய்தாள். மேரி மாலையில் வந்து டாக்ஸியில் லஸ் சர்ச் ரோடில் யாரோ ஒரு டாக்டரம்மாவிடம் சுமதியை அழைத்துச் சென்றாள். அந்த லேடி டாக்டர் மிகவும் கறாராக இருந்தாள். மிஸ் சுமதி, என்று மேரி பேர் சொல்லி இருந்ததனால், “இது மாதிரி இன்ஜெக்ஷன்களைக் கலியாணமாகாத பெண்களுக்கு நான் போட்றதில்லேம்மா! தப்புப் பண்றவங்களுக்கு நாங்க ஒத்தாசையா இருக்க முடியாது. தயவு செய்து இது விஷயமா நீங்கள்ளாம் இனிமே என்னைத் தேடி வரப்பிடாது” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.
“எல்லா டாக்டர்களும் இதுக்கு ஒத்துவர மாட்டாங்க. சிலபேர்தான் ஒத்து வருவாங்க. அந்தச் சில பேருக்கும் நிறையப் பணம் குடுக்கணும். ஆம்பிளை டாக்டரா இருந்து அந்த டாக்டர் ஆசைக்காரனா இருந்தா அவனோட ஆசையையும் பூர்த்திசெய்ய வேண்டியிருக்கும். அதுக்காகத்தான் நானும் கன்னையாவும் ரொம்பப் பாடுபட்டு அந்த மாம்பலம் லேடி டாக்டரைப் பிடிச்சு வச்சிருந்தோம். அவ மேற்படிப்புக்கு யூ.கே. போயிட்டா. போகணும்னு ரொம்ப நாளாச் சொல்லிக் கிட்டிருந்தா” என்று அதிலுள்ள சிரமங்களை மேரி விவரித்தாள். மறுபடி சுமதியும், மேரியும் திருவல்லிக் கேணியில் இன்னொரு டாக்டரம்மாவைப் பார்க்கச் சென்றார்கள்.
இந்த டாக்டரம்மாள் எல்லாப் பேஷண்டுகளையும் பார்த்து முடித்து அனுப்பிய பின் தனியானதும் இவர்கள் இருவரும் உள்ளே சென்றார்கள். எந்த முன் நிபந்தனையும் போடாமல் அந்த டாக்டரம்மாள் சுமதியைப் பரிசோதித்தாள்.
ஆனால் பரிசோதனை முடிந்ததும் மருந்துச் சீட்டு எழுதிக் கொண்டே, “உங்க ஹஸ்பெண்ட் என்னம்மா வேலை பார்க்கிறாரு?” என்று கேட்ட டாக்டரம்மாளுக்குப் பதில் சொல்ல முடியாமல் சுமதி பரக்கப் பரக்க விழித்தாள்.
டாக்டரம்மாள் எழுதுவதை நிறுத்தி விட்டுச் சுமதியை நிமிர்ந்து பார்த்து மறுபடியும் தன்னுடைய அதே பழைய கேள்வியைக் கேட்டாள்.
"... நாட் யெட் மேரீட்” என்று சுமதி தயங்கித் தயங்கி ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிய மறுமொழியைக் கேட்டு அந்த டாக்டரம்மாள் திகைத்துப் போய் இவள் முகத்தையே இமையாமல் பார்த்தாள்.
“நாட் மேரீட்? தென் ஹெள...” என்று எதையோ கேட்க ஆரம்பித்து உதட்டைக் கடித்துக் கொண்டு பாதியிலேயே நிறுத்தினாள் டாக்டரம்மாள். சிறிது நேரம் கழித்து, “கர்மம்! கர்மம்! நீங்கள்ளாம் ஏம்மா இங்கே என்னைத் தேடிவந்து கழுத்தறுக்கிறீங்க! என் பேரைக் கெடுக்கிறதுக்கா? போம்மா போ! கோடம்பாக்கத்திலே சினிமா எக்ஸ்ட்ராக்களுக்கு வைத்தியம் பண்ற டாக்டரம்மாக்கள் யாராவது இருப்பாங்க. ஐயாம் நாட் ஸோ சீப். அங்கே போய் யாரையாவது பாரும்மா” என்று பாதி எழுதியிருந்த ப்ரிஸ்கிரிப்ஷனை அப்படியே கிழித்துக் கீழே இருந்த குப்பைத் தொட்டியில் எறிந்தாள் அந்த டாக்டரம்மாள். சுமதிக்கு உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டிவிட்டது.
“இது கெளரவமானவங்க வர்ர டிஸ்பென்ஸ்ரி! இங்கெல்லாம் இனிமே நீ வராதே. இப்ப நீ வந்ததை நான் இரகசியமாக வச்சுக்கிறேன். யாரிட்டவும் சொல்லலே. ஆனா நீ இங்கே இனிமே வரப்பிடாது” என்ற கண்டிப்பான குரலில் மறுபடியும் சொன்னாள் அந்த டாக்டரம்மாள். சுமதிக்கு முகத்தில் அடித்தாற் போலிருந்தது அந்தப் பதில்.
திருவல்லிக்கேணி டாக்டரம்மாள் வீட்டிலிருந்து திரும்பும்போது சுமதியும் மேரியும் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் கோபித்துக் கொண்டவர்கள் நிர்ப்பந்தமாக ஒருவருக்கருகே மற்றவர் உட்கார நேர்ந்தது போல் அவர்கள் அப்போது உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். எதுவும் பேசவில்லை என்றாலும், அவளும் உள்ளூரக் கவலையிலாழ்ந்திருப்பதை அவள் முகமே காட்டியது. சுமதியோ கண்களில் நீர் வடிய வீற்றிருந்தாள். நடுவே ஒரே ஒருமுறை மட்டும் மேரி சுமதியின் தோளில் தட்டி “வேண்டாம் அழாதே! எல்லாம் சரிப்படுத்திக்கலாம்” என்று ஆறுதலாகச் சொன்னாள். சுமதி கோபத்தோடு அப்போது மேரியின் கையைத் தன் தோளிலிருந்து நீக்கி வெடுக்கென்று உதறினாள்.
வீடு வந்ததும் இறங்கி ஓடிப் போய்த் தன் அறைக்குள் நுழைந்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டாள் சுமதி. மேரி எவ்வளவோ தட்டிப் பார்த்தும் சுமதி கதவைத் திறக்கவில்லை. மேரிக்குச் சந்தேகமும் பயமும் ஏற்பட்டுவிட்டன. இம்மாதிரி மனநிலையில் பெண்கள் என்னென்ன பயித்தியக்காரத்தனங்களைச் செய்வார்கள் என்று சிந்தித்துப் பதறினாள் மேரி. அறைக்குள் தூக்கு மாட்டிக் கொள் வாளோ, மண்ணெண்ணையை ஊற்றி நெருப்பு வைத்துக் கொள்வாளோ, தூக்க மாத்திரைகளை அளவுக்கதிகமாக அள்ளி விழுங்கிவிடுவாளோ என்றெல்லாம் எண்ணி மேரி மனம் பதைத்தாள். சுமதியை எப்படிக் கதவு திறக்கச் செய்வது என்று மேரிக்குப் புரியவில்லை. சுமதியோ வெறுப்பும் பிடிவாதமுமாக உள்ளே இருந்தாள். “இன்னும் ரெண்டு நிமிஷத்திலேயே நீ கதவைத் திறக்கலேன்னா நான் போலீசுக்கோ ஃபயர் சர்வீசுக்கோ ஃபோன் பண்ண வேண்டியிருக்கும். வேறே வழி இல்லை” என்று வெளிப்புறமிருந்தே சாவித் துவாரத்தின் அருகே வாயை வைத்து இரைந்து கத்தினாள் மேரி. உடனே பயந்து போய்ச் சுமதி கதவைத் திறந்துவிட்டாள். உள்ளே துழைந்து மேரியிடம், “பாவி! கடைசியிலே என்னை வயிறும் பிள்ளையுமா நடுத்தெருவிலே நிறுத்தியாச்சு உனக்கு இப்போ திருப்திதானே? போதுமோ இல்லியோ?” என்று கூப்பாடு போட்டுத் தலையிலும் வயிற்றிலுமாக மாறிமாறி அடித்துக்கொள்ளத் தொடங்கினாள் சுமதி. மேரிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. “வேணாம்! சொன்னாக் கேளு சுமதி! கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டி வம்பு பண்ணாதே. வீணா நீயே உன் பேரைக் கெடுத்துக்கப்போறே. இதைச் சரிப்படுத்த எப்பிடியும் நான் ‘ஹெல்ப்’ பண்றேன். என்னை நம்பு” என்றாள் மேரி.
“உன்னை நம்பி நம்பித் தானேடீ இந்தக் கதிக்கு வந்தேன்” என்று பதிலுக்குக் கூப்பாடு போட்டாள் சுமதி. அப்போது மாடிப்படியருகே யாரோ மடமடவென்று படியில் உருளுகிற ஓசையும் வேலைக்காரப் பையனின் கூப்பாடும் கேட்டன. சுமதியின் கவனமும், மேரியின் கவனமும் திசை திரும்பின.
சுமதியும், மேரியும் அறையிலிருந்து வெளியேறி வந்து பார்த்தால் கன்னையா மாடிப்படியிலிருந்து உருண்டு விழுந்திருந்தார். “உள்ளே நீங்க ரெண்டுபேரும் சத்தம் போட்டுக்கிறதைக் கேட்டு மாடியிலேருந்து ஓடி வந்தாரு. வேஷ்டி தடுக்கிப் படியிலே விழுந்துட்டாரு” என்றான் வேலைக்காரப் பையன். சுமதியும் மேரியும் அருகில் நெருங்கிப் பார்த்தபோது சும்மா வேஷ்டி தடுக்கி மட்டும் அவர் விழவில்லை. நன்றாகக் குடித்திருந்தார் என்றும் தெரிந்தது. மாடியிலிருந்த தெலுங்குக் காரிகளின் சகவாசத்தில் சில நாட்களாக அவர் மூழ்கியிருந்ததில் சுமதிக்கு அவர்மேலே ஒரு வெறுப்பு. ஆனாலும் இப்படிச் சமயத்தில் அவரை விட்டுக் கொடுக்க முடியவில்லை.
கீழே விழுந்த கன்னையாவுக்கு முழங்கால் பட்டை பிசகிவிட்டது. எழுந்திருக்க முடியவில்லை. உடனே மேரி பையனைக் கூப்பிட்டு, “காரை எடுக்கச் சொல்லுப்பா, உடனே டாக்டரிட்டக் கூட்டிக்கிட்டுப் போயாகணும்!” என்றாள். பையன் டிரைவரிடம் காரை எடுக்கச் சொல்லி அவசரப்படுத்தினான். எழுந்திருக்க முடியாமல் தரையில் வேஷ்டி அவிழ விழுந்து கிடந்த கன்னையாவின் இடுப்பில் வேஷ்டியை இறுக்கிக் கட்டிவிட்டுப் ‘பெல்ட்' டும் போட்ட பின் மேரி ஒரு பக்கமும், சுமதி ஒரு பக்க மும் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று காரில் ஏற்றினார்கள். காரின் முன் ஸீட்டைக் கழற்றி இன்னும் சிறிது முன்னுக்கு நகர்த்திய பின்னர் பின் பக்கத்து இருக்கையில் இடவசதியை அதிகமாக்கிக் கொண்டுதான் கன்னையாவைக் காரில் கிடத்துவதற்கு முடிந்தது. வலது முழங்காலில் சிறிது ‘ஃபிராக்சர்’ இருக்குமோ என்று தோன்றியது.
அந்தக் காலை நிமிர்த்தவே முடியவில்லை. “கீழே சத்தம் கேட்டால்தான் என்ன? நீங்க ஏன் இப்பிடிப் பதறிப் போய்த் தலைகால் புரியாமலே படியிலே இறங்கறீங்க? அதுவும் இந்த மாதிரி நிலைமையிலே ஒவ்வொரு படியும் ரெண்டு படியாகக் கண்ணுக்குத் தெரியுமே?” என்று மேரி அவரைக் கடிந்து கொண்டாள்.
“நம்ம கையிலே என்ன இருக்கு? அது நடக்க வேண்டிய நேரத்துக்கு நடந்துதானே தீரும்? நாம் தடுத்து நிறுத்தினா மட்டும் விதி நின்னுடுமா?” என்று கஷ்டகால வேதாந்தம் பேசினார் கன்னையா.
மாம்பலத்திலேயே ஒரு பிரபலமான பிரைவேட் நர்விங்ஹோமில் சேர்ந்து கன்னையா சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டது. படுக்கையில் படுக்க வைத்து எலும்பு பிசகிய காலை ஊஞ்சல் மாதிரி கட்டித் தொங்க விட்டுவிட்டார்கள். பதினைந்து நாள்வரை படுக்கையை விட்டு அசையக்கூடாது என்று டாக்டர் கடுமையாக உத்தரவு போட்டுவிட்டார்.
தந்தி மூலம் அறிவிக்கப்பட்டுச் சேலத்திலிருந்து கன்னையாவின் மனைவி மக்கள் புறப்பட்டு வந்தார்கள். வீட்டில் அவர்களும் வந்து தங்கவே சுமதிக்கு அங்கே தொடர்ந்து இருக்கப் பிடிக்கவில்லை. கன்னையாவின் குடும்பத்தினர் வந்து தங்கியபின் மேரி அங்கு வருவதைக் குறைத்துக் கொண்டுவிட்டாள். மாடியிலிருந்த குச்சுப் புடிப் பெண்கள் ஒருவாரம் ஊருக்குப் போய்விட்டுத் திரும்புவதாகச் சென்றவர்கள் திரும்பியே வரவில்லை. சில வேளைகளில் வெறிச்சோடிக் கிடக்கும் அந்தப் பெரிய வீட்டில் சுமதி மட்டுமே தனியாக இருக்க நேர்ந்தது. அந்த மாதிரித் தனியான நேரங்களில் கார்களிலும், டாக்ஸிகளிலும், ஸ்கூட்டரிலுமாகத் தேடி வந்த ஆண் களையும், அவர்கள் கேட்ட கேள்விகளையும் வைத்துச் சுமதி ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டாள். நாட்டியப் பள்ளிக்கூடம், குச்சுப்புடி கலாசாலை என்ற பெயர்களை வைத்துக் கொண்டு கன்னையா நடத்தியவை எல்லாம் விபச்சார விடுதிகளே என்பது மெல்ல மெல்லப் புரிந்தது. தன்னுடைய இந்த விடுதிகளுக்கு அழகிய பெண்களை இழுப்பதற்கும் கவர்வதற்கும் ஒரு வியாஜ்யம்தான் சினிமாத் தயாரிப்பே ஒழிய உண்மையில் அவர் சினிமாத் தயாரிப்பாளர் இல்லை என்பது போலவும் புரிந்தது. முன்பே இலைமறை காயாகத் தெரிந்திருந்த இந்த விவரம் இப்போது உள்ளங்கை நெல்லிக்கனி போல் சுமதிக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. கன்னையா ஆஸ்பத்திரியில் போய்ப் படுத்தபின் சுமதிக்குப் பணமுடை பயங்கரமாக ஆரம்பமாயிற்று.
கணக்கிலுள்ள பத்து ரூபாய் மீதத்தில் மினிமம் டெபாஸிட்டாக இருக்க வேண்டிய ஐந்து ரூபாயை விட்டு விட்டு மீதி ஐந்து ரூபாயை எடுத்துச் செலவழிக்க வேண்டிய அளவு அவள் கை வறண்டது. கார் எல்லாம் கன்னையா குடும்பத்தினரின் உபயோகத்துக்குப் போய் விட்டதனால் அவள் வெளியே போகவர டாக்ஸி தேட வேண்டியிருந்தது. மேரிக்கு ஃபோன் செய்தால் அவள் வேளாங்கண்ணி போயிருப்பதாகவும், திரும்பி வரப் பத்து நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் தெரிவித்தார்கள்.
பெரும்பாலும் மாலை வேளைகளில் கன்னையாவின் குடும்பத்தினர் அவரைச் சந்திக்க மருத்துவமனை போய் விடுவார்கள். வீட்டில் சுமதி மட்டுமே இருப்பாள். பணக் கஷ்டம் அதிகமானபின் மாலை வேளைகளில் தேடிவருகிற இரண்டொரு பணக்கார ஆண்களைச் சிரித்துப் பேசி உள்ளே அழைத்து அவர்களுடைய உடற் பசியைப் பூர்த்தி செய்து பணம் சம்பாதிக்க முனையும் அளவுக்குச் சுமதிக்குக் கட்டாயமான நிலைமைகள் ஏற்பட்டன. கன்னையா முன்பு நடத்தியதை இப்போது அரைகுறைத் துணிச்சலுடன் அவளே நடத்தத் தொடங்கினாள். நடுநடுவே அவளுக்கும் கன்னையாவின் குடும்பத்தினருக்கும் மோதல்கள் ஏற்பட்டன. ஒருநாள் காலை சுமதி ஏ.சி. ரூமில் ஏதோ படிப்பதற்காக வாரப் பத்திரிகைகள் எடுக்கப் போனபோது, அவள் காது கேட்கும்படியாகவே வேலைக்காரப் பையனிடம் சொல்லுவது போல்,
“இதென்னப்பாது? வீடா, சத்திரமா? கண்ட கண்ட ஆளுங்கள்ளாம் திறந்த வீட்டிலே நாய் நொழையற மாதிரி நொழைஞ்சுடறாங்க. கேள்வி முறையே இல்லியா?” என்று கன்னையாவின் மனைவி கூப்பாடு போட்டாள். வேலைக்காரப் பையன் இதற்குப் பதில் சொல்லவில்லை. சுமதி உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட்டாள். சிறிது நேரம் கழித்து வேலைக்காரப் பையனே சுமதி குடியிருந்த பகுதிக்கு அவளைத் தேடி வந்தான். ஆறுதலாகச் சுமதியிடம் பேசிப் பார்த்தான்.
“இந்தப் பொம்பிளை கூப்பாடு போடறதை நீங்க ஒண்ணும் மனசிலே வச்சிக்காதீங்கம்மா. ஐயா உங்களைக் கைவிட மாட்டாரு. நேத்துக்கூட எங்கிட்ட உங்களைப் பத்தி விசாரிச்சாரு ‘எங்கேடா சுமதியைக் காணோமே’ன்னு அன்பாகக் கேட்டாரு” என்று அவன் கூறியதால் சுமதிக்கு எந்த நிம்மதியும் புதிதாக ஏற்பட்டுவிடவில்லை. கவலைகளே அதிகமாயின. ‘தன் வாழ்க்கை அழுகிக் குழம்பி விட்டதோ?’ என்று சுமதி மறுகிய இந்த நாட்களில் ஒரு தினத்தன்று தாயின் கடைசிக் கடிதத்தைப் பெட்டியிலிருந்து மறுபடி எடுத்துப் படித்தாள். அவளுக்கு முன்பு கசந்த அதிலிருந்து இன்று ஏதோ சிறிது ஆறுதல் கிடைத்தாற் போலிருந்தது.
ஏதோ ஒர் ஆசையில் என்றோ, எப்படியோ, திசை தவறிய தன் வாழ்க்கை மிகக் குறுகிய காலத்திலேயே திருத்திக் கொள்ள முடியாத அதல பாதாளத்தில் வீழ்ந்திருப்பதை இன்று இந்தத் தனிமையில் சுமதி உணர்ந்தாள். தன்னையறியாமலேயே தான் வந்து சேர்ந்து விட்ட சேற்றுக் குட்டையை- சாக்கடையை நினைத்தபோது அவள் உடம்பு பதறியது. அந்தத் தனிமை அவளைக் கொன்றது. மேரி ஊரில் இல்லை. யோகாம்பாள் அத்தை வீட்டிலோ உள்ளே நுழையக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். கன்னையாவோ ஆஸ்பத்திரியில் படுக் கையை விட்டு இந்தப் பக்கம் அந்தப் பக்கம் அசைய முடியாமல் கிடந்தார். ஒரு நிலையில் யாரிடமும் சொல் லாமல் கொள்ளாமல் ஊருக்குப் புறப்பட்டுப் போய் அம்மா காலடியில் விழுந்து விடலாமா என்றுகூட அவ ளுக்குத் தோன்றியது. ஆனால் அதுவும் முடியவில்லை.
எல்லா டாக்டர்களும் கைவிட்ட தினத்தன்று, “நான் ஆச்சுடி! யாரிட்டவாவது அழச்சுக்கிட்டுப் போய்க் காட்டி எப்படியாவது சரிப்படுத்திடறேன்” என்று வாக்குக் கொடுத்திருந்த மேரி சொல்லாமல் கொள்ளாமல் வேளாங்கண்ணிக்குப் புறப்பட்டுப் போய்விட்டாள். கன்னையாவின் குடும்பத்தினர் வந்து தங்கிய பின் ஊரிலிருந்தே வேலைக்காரியைக் கூப்பிட்டுக் கொண்டு வந்திருந்ததால் சுமதிக்கு ஆதரவாயிருந்த ‘ஆயாவை’ அவளிடம் கேட்காமலே வேலையைவிட்டு நிறுத்தி விட்டிருந்தார்கள். வேலைக்காரப் பையன்கூட முக்கால்வாசி நேரம் ஆஸ்பத்திரி, மருந்துக்கடை என்று அவர்கள் வேலையாக அலையத் தொடங்கியதால் சுமதிக்கு ஏனென்று கேட்க ஆளில்லாமல் போய்விட்டது. காபி போட்டுக் கொள்வதிலிருந்து சமையல் செய்வது, பாத்திரம் கழுவிக் கவிழ்ப்பது வரை எல்லா வேலைகளும் சுமதியே செய்துகொள்ள வேண்டியிருந்தது. இந்த நிலைமையும், கையில் பண வறட்சியும் சேர்ந்து பரம ஏழையாகத் தன்னைப் பற்றித் தானே நினைக்கச் செய்ததால் சுமதிக்கு ஒருவகைத் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. தான் ஏமாந்து விட்டோம் என்பதை அவள் முழுமையாக உணரத் தலைப்பட்டாள். கன்னையாவைப் பார்த்து அவர் தன்னிடம் கடனாக வாங்கியிருந்த பணத் தைத் திருப்பிக் கேட்கவேண்டும் என்று நினைத்தாள் சுமதி. கையில் பணம் இருந்தாலாவது பணத்தைச் செல வழித்து எந்த டாக்டரிடமாவது முயன்று வயிற்றிலிருப்பது வளர்ந்துவிடாமல் கரைத்து விடலாம். பணமும் இல்லாமற் போகவே அவளுக்குத் தவிப்பாக இருந்தது. மறுநாள் காலை ஆஸ்பத்திரியில் போய்க் கன்னை யாவைப் பார்த்துப் பணம் கேட்கத் திட்டமிட்டுக் கொண்டுதான் அன்றிரவு படுக்கைக்குச் சென்றாள் அவள். படுக்கச் செல்லும்போது இரவு மணி ஒன்பதரை. வீடு ‘ஹோ’ என்று தனிமையில் வெறிச்சோடிக் கிடந்தது. கன்னையாவின் குடும்பத்தினர் வேலைக்காரப் பையனையும் துணைக்கு அழைத்துக்கொண்டு இரவு இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்குப் போயிருந்தார்கள். சுமதி மட்டும்தான் வீட்டில் தனியாக இருந்தாள். பயமாகக்கூட இருந்தது அவளுக்கு. வாசலில் கூர்க்கா காவலுக்கு இருந்தான்.
வெளியே காம்பவுண்டு கேட்டை உட்பக்கமாகப் பூட்டிக்கொண்டு பங்களாவின் பிரதான வாசலையும் தாழிட்டுக்கொண்டு சாவிக்கொத்தில் உள்ள பத்திருபது சாவிகளில் கன்னையாவின் அந்தரங்க அறைச் சாவியைத் தேடிக் கண்டுபிடித்து அந்த அறையைத் திறந்தாள் அவள். எதற்காகச் சந்தேகப்பட்டு அந்த அறையை அவள் திறந்தாளோ அந்தச் சந்தேகங்கள் மெய் தானென்று தெரிந்தன. அந்த அறையில் சிறிய புரொஜெக்டர் ஒன்றும், சுவரில் தொங்கவிடக்கூடிய ஸ்கிரீன் ஒன்றும், பிலிம் சுருள்கள் அடங்கிய டப்பாக்களும் இருந்தன. எல்லாம் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தன. இரவு அகால நேரங்களில் விநியோகஸ் தர்களையும், பல பெரிய மனிதர்களையும் கன்னையா இரகசியமாக அந்த அறைக்குள் அழைத்துச் சென்று ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் கழித்து மறுபடி வெளியே வருவதைச் சுமதியே சில நாட்கள் கவனித்திருக்கிறாள்.
புரொஜெக்டரில் தயாராக இருந்த பிலிம் சுருளை விளக்கை அணைத்துவிட்டு ஒட்டிப்பார்த்தாள் அவள். படப்பிடிப்பு என்ற பெயரில் தன்னை ஏமாற்றி எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களும், பிற நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட ப்ளூ பிலிம்களும் அதில் இருந்தது. லிஸ்ட் செய்யப்படாத நம்பரையுடைய அந்த டெலிபோனில் திடீரென்று மணி அடிக்கவே அதைத் தான் அப்போது எடுத்துப் பேசுவதா விட்டுவிடுவதா என்று சுமதி தயங்கினாள். யார் எதற்காக அப்போது அங்கே ஃபோன் பண்ணுகிறார்கள் என்று அறிய ஆவலாகவும் இருந்தது. சிறிது நேரத்து மனப் போராட்டத்தின் பின் ஆவல்தான் வென்றது.
டெலிஃபோனை எடுத்தாள். “நான்தான் கோயம்புத்துரர் மில் ஒனர் ஆர்.எம்.ஜி. பேசறேன். உடனே அங்கே வரட்டுமா?”
சுமதி முதலில் பதில் சொல்லத் தயங்கினாள். அப்புறம் துணிந்து பதில் சொன்னாள்.
“கன்னையா இல்லீங்க. நான் சுமதி பேசறேன்.”
“எனக்குக் கன்னையா ஒண்ணும் வேணாம். நீதான்ம்மா வேணும். நீதானே அன்னிக்குத் தரணி ஸ்டுடியோவிலே ‘காபரே’ ஆடினே? உனக்காகத்தான் நான் கன்னையாவுக்கே ஃபோன் பண்ணினேன்? நீயே பேசிட்டே. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி. இதோ நான் இப்பவே வர்ரேன். என்னோட கார்லே மியூசிகல் ஹார்ன் பொருத்தியிருக்கேன். உங்க வீட்டு வாசல்லே வந்து ஹார்ன் கொடுத்ததுமே நீ தெரிஞ்சிக்கலாம்.”
சுமதி அவருக்குப் பதில் சொல்வதற்கு முன் அவர் ஃபோனை வைத்துவிட்டார். கன்னையாவின் ரகசிய அறையும் ப்ளூ பிலிம்களும் லிஸ்ட் செய்யப்படாத ஃபோன் நம்பரும் எதற்கு என்று இப்போது சுமதிக்கு மெல்ல மெல்லப் புரிந்தன. உண்மைகள் பட்டவர்த் தனமாகத் தெரிந்தன.
அவசர அவசரமாக அந்த அறையைப் பூட்டிவிட்டுப் பங்களா முகப்புக்கு வந்தாள் அவள். பத்து நிமிஷத்தில் கேட் அருகே மியூசிகல் ஹார்ன் ஒலித்தது. கூர்க்கா கேட்டைத் திறந்துவிட்டான். பெரிய படகுக் கார் சர்ரென்று சீறிக் கொண்டு உள்ளே நுழைந்தது. சுமதி பங்களா முகப் பிலிருந்து படியிறங்கி வந்து அவரை எதிர் கொண்டாள். “வா போகலாம்! உடனே என் கூடப் புறப்படு. ஹோட்டல்லியே எல்லாம் சொல்லி வச்சிருக்கேன். சரின்னுட்டாங்க” என்றார் அவர்.
“இங்கே வீட்டிலே யாரும் இல்லியே!”
“தெரியும்! கன்னையாவைக் காலம்பர ஆஸ்பத்திரிலேயே போய்ப் பார்த்தேன். நீ கிடைப்பேன்னு அவன் தான் சொன்னான். இங்கே கன்னையா குடும்பத்து ஆளுங்களெல்லாம் தங்கியிருப்பாங்களே. அதனாலே இங்கே வேணாம். ஹோட்டலுக்கே போயிடுவோமே?”
“இப்ப யாரும் இங்கே இல்லே, கன்னையா வீட்டு ஆளுங்களெல்லாம் லெகன்ட் ஷோ சினிமாவுக்குப் போயிருக்காங்க, வர்ரதுக்கு ரெண்டு மணி ஆகும்.”
“வேணாம், நாம ரெண்டுபேரும் நேரம் போறது தெரியாம ஏ.ஸி. ரூமிலே இருந்துடுவோம். திடீர்னு சினிமாவுக்குப் போனவங்க அவங்க பாட்டுக்கு வந்து கதவைத் தட்டுவாங்க நல்லா இருக்காது. ஹோட்டல்னாக் கேள்வி முறை இல்லே. நைட் வாட்ச்மேன் முதல் ரூம்பாய்ஸ் வரை அங்கே எல்லாருக்குமாப் பணத்தை வாரி இறைச்சிருக்கேன்.”
“நான் வெளியிடத்துக்கு ரொம்பப் போறதில்லே.”
“எனக்காக வாயேன். நான் மணி விஷயத்தில் தாராளமாக நடந்துக்குவேன். எனக்குக் கணக்குப் பார்த்துக் கொடுக்கத் தெரியாது.”
சுமதி உடை மாற்றி அலங்கரித்துக் கொண்டு சாவிக் கொத்தைக் கூர்க்காவிடம் கொடுத்தபின் அவரோடு காரில் புறப்பட்டாள். காரை அவரே ஒட்டிக்கொண்டு வந்திருந்தார். “நான் எப்பவுமே இது மாதிரி வர்ரப்ப டிரைவரை கூட்டிக்கிட்டு வர்ரதில்லே. அஞ்சு ரூபாய்க் காசை விட்டெறிஞ்சு ‘சினிமாவுக்குப் போடா’ன்னு அனுப்பிச்சுடுவேன்” என்றார் அவர். சுமதி முன் சீட்டில் அவர் அருகே அமர்ந்திருந்தாள். நடுநடுவே இடது கையால் இடுப்பிலும் தோள்பட்டையிலும் சேட்டைகள் செய்தார் அவர். அவள் அதைத் தடுக்கவில்லை. அவரும் கிள்ளல் தடவல்களை நிறுத்தவில்லை.
ஹோட்டலிலும் அவருக்குத் தடை எதுவும் இருக்கவில்லை. எல்லாரும் சலாம் வைத்து உள்ளே போகவிட்டு விட்டார்கள்.
நடு இரவு ஒரு மணிக்கு அவர் அயர்ந்து தூங்கிவிட்டார். அவள் அரை குறைத் தூக்கத்தில் இருந்தாள். ஓட்டல் அறைக் கதவை யாரோ ஓங்கித் தட்டினார்கள். திறப்பதா வேண்டாமா என்று அவள் தயங்கினாள். மீண்டும் மீண்டும் மிகவும் பலமாகத் கதவு தட்டப்படவே அவளுக்குப் பயமாக இருந்தது. அதே சமயம் அறைக்குள்ளே ஃபோன் மணியும் அடித்தது. அவள் ஃபோனை எடுத்தாள். ரிஸப்ஷனிலிருந்து யாரோ மணி என்பவன் பேசினான். சுமதிக்குக் கை கால்கள் பதறின. “சார் மன்னிக்கணும்! திடீர்னு எதிர்பாராத விதமாப் போலீஸ் ரெயிட்னு வந்துட்டாங்க. அங்கே உங்க அறைப் பக்கமாகத்தான் வராங்க” என்று அவன் கூறுகிறவரை, அவள் தன்னை யாரென்று காட்டிக் கொள்ளவில்லை. நடுவே “ஐயையோ, இப்போ என்ன செய்யிறது?” என்று அவள் குரல் கொடுக்கவே எதிர்ப்புறம் பேசியவன் சுதாரித்துக் கொண்டு, “உடனே அவரை எழுப்பி ஃபோனைக் குடும்மா. அவசரம்” என்று விரட்டினான். அவள் அவரை எழுப்பி ஃபோனைக் கொடுத்தாள். ஃபோனில் பேசிய அவர் உடனே உட்புறமிருந்தே பக்கத்து அறைக்குப் போக முடிந்தது போலிருந்த ஒரு கதவை திறக்கலானார். இன்னும் வெளியே கதவு தட்டப்படுவது நிற்கவில்லை. அவள் கேட்டாள்: “என்ன செய்யப் போறீங்க? நானும் உங்ககூட வந்துடட்டுமா?”
“வேண்டாம்! நான் இந்த வழியா வெளியே போய் அவங்களைச் சரிப்படுத்தி அனுப்பிச்சிட்டு வந்துடறேன். நீ பேசாம இங்கே உள்ளேயே இரு” என்றார் அவர்.
அடுத்த அறைக்குள் சென்ற அவர் அங்கேயிருந்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டுவிட்டார். சுமதி இருந்த அறையைத் தட்டியவர்கள் பொறுமை இழந்து கதவையே உடைத்து விடுவதுபோலத் தட்டுதலை மிகுதி யாக்கி இருந்தார்கள். வேறு வழியின்றிச் சுமதி கதவைத் திறந்தாள். ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும், இரண்டு கான்ஸ்டபிள்களும் இருந்தனர். என்ன செய்வதென்றே அவளுக்குப் புரியவில்லை. பயந்து போய்ப் பரக்கப் பரக்க விழித்தாள் அவள். கையும் காலும் ஓடவில்லை. மில் முதலாளியைப் பற்றி அவள் சொல்லியதை அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அவள் மட்டுமே வகையாக மாட்டிக் கொண்டாள். விபசாரக் குற்றம் சாட்டப்பட்டாள். கண்ணிர் சிந்தினாள். கதறி அழுதாள்.
அவளை ஜீப்பில் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள். போகிறபோதே அந்த எஸ்.ஐ. அவளிடம் ஜீப்புக்குள் இருட்டில் சேட்டைகள் செய்யத் தொடங்கினான். திமிறியவளை மிரட்டினான். சேட்டைகளைத் தொடர்ந்தான்.
ஸ்டேஷனில் ஒர் அறையில் அவளை அடைத்தார்கள். நள்ளிரவு இரண்டரை மணிக்கு இன்னும் யாரோ இரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்களுடன் முதலில் அவளை அரெஸ்ட் செய்த இன்ஸ்பெக்டர் லாக்-அப் அறைக்கு வந்தார். மூவரும் நன்றாகக் குடித்திருப்பது தெரிந்தது. திடீரென்று லாக்-அப் அறை விளக்கு அணைக்கப்பட்டது. மூவரும் அவள்மேல் பாய்ந்தனர். அவளுடைய புடவை பல இடங்களில் கிழிந்தது. ஜாக்கெட் அறுபட்டது. கதறலும் அழுகையுமாக வெடித்த அவளது கூப்பாடுகள் எடுபடவில்லை. கர்சீப்பை வாயில் திணித்தார்கள். மூன்று வேட்டை நாய்கள் விழுந்து கடித்தபின் ஒரு மெல்லிய முயல்குட்டி எப்படி இருக்குமோ அப்படி இப்போது இருந்தாள் அவள். மலையி லிருந்து கீழே உருட்டி விட்டாற்போல் அவள் உடம்பு வலித்தது. சில இடங்களில் கடிப்பட்ட காயம் இரத்தக் கசிவு! கால் கைகள் கோடாரியால் பிளந்த மாதிரி வலித்தன. மூன்று முரடர்களுடைய வெறிக்கு அடுத்தடுத்துப் பலியான அவள் ஏறக்குறையப் பாதி செத்துப் போயிருந்தாள். முழுவதும் செத்துவிட்டால் பழி தங்கள் மேல் வந்து விழுந்து விடுமோ என்ற பயத்தில் வழக்கு எதுவுமே பதிவு செய்யாமலே அவளை ஜீப்பில் தூக்கிப் போட்டு எடுத்துக் கொண்டு போய் ராயப்பேட்டை நெடுஞ்சாலையும், எட்வர்ட் எலியர்ட்ஸ் ரோடும் சந்திக்கிற முனையில் ஓர் ஓரமாகப் போட்டுவிட்டார்கள். கிழிந்த ஜாக்கெட், நிலைகுலைந்து தாறுமாறான புடவை தலைவிரி கோலத்துடன் தன் நினைவின்றி அவள் அங்கே அனாதையாகக் கிடந்தாள். எவ்வளவு நேரம் அப்படிக் கிடந்தோம் என்று அவளுக்கே சுய நினைவில்லை.
விடியுமுன் அதிகாலை நாலு நாலரை மணிக்கு குளிர்ந்த காற்று மேலே பட்டுப் பிரக்ஞை வந்து அவள் எழுந்து தட்டுத் தடுமாறி நின்ற போது தான் தான் நாற் சந்தியில் இருப்பது புரிந்தது. உண்மையிலேயே இன்று தான் சந்தியில் நிற்பதை அவள் உணர்ந்தாள்.
சுமதிக்கு எங்கே போவதென்றும் தெரியவில்லை. என்ன செய்வதென்றும் தெரியவில்லை. உலகத்தின் எல்லா வாயிற் கதவுகளும் தனக்கு அடைக்கப்பட்டு விட்டதுபோல அவளுக்குத் தோன்றியது.
மேற்குப் பக்கமாகப் போனால் அவளுக்குப் பழக்கமான அந்தக் கல்லூரியும், அதன் விடுதியும் இருந்தன. கிழக்குப் பக்கமாகப் போனால் எல்லையற்ற கடல் இருந்தது. தெற்கே போனால் மயிலாப்பூர்க் குளமும் கோயிலும் இருந்தன. வடக்கே போனால் மவுண்ட் ரோடும், மதுரைக்குப் போக எழும்பூர் ரயில் நிலையமும் நகரின் இதயமான பகுதிகளும் இருந்தன. சாலையின் நடுவேயிருந்த ‘சிக்னலில்’ இயக்கம் இல்லை. அதை இரவுக்காக ஆஃப் செய்திருந்ததால் எந்தப் பக்கத்தில் போகலாம் எந்தப் பக்கத்தில் போகக் கூடாது என்று அது வழிகள் எதையும் சுட்டிக் காண்பிக்கவில்லை.
“மலர்வதற்கு முன்பே வெம்பி வாடிவிடும் மலர்களுக்கு அப்புறம் மலர்ச்சி என்பதே இல்லை. பெண் அனிச்ச மலரைப் போன்றவள். அவள் சிறிது வாடினாலும் கருகி அழிந்து விடுவாள்” என்று அம்மா முன்பு தனக்கு எழுதியிருந்த பழைய எச்சரிக்கை கடிதத்தின் நிஜமான அர்த்தம் இப்போது அநாதையாய் இப்படி நடுத்தெருவில் நிற்கும் போது தான் சுமதிக்குப் பட்டவர்த்தனமாகப் புரிந்தது. ஆனால் திருத்த முடியாத எல்லைக்கு, மலர முடியாத எல்லைக்கு இன்று அவள் வாடிப் போயிருந்தாள். அது அவளுக்கு விளங்கியது. இந்த அவலக் கதாநாயகி சுமதி இனி எங்கே போவது? என்ன செய்வது? அது அவளுக்கும் தெரியவில்லை. உங்களுக்கும் புரியவில்லை. இப்போது அவள் எதிரே இருந்த ஸிக்னலில் எந்த வழியும் அவளுக்குக் கிடைக்கவில்லை. ஓர் இராப்பிச்சைக்காரி போல் தனியாக நாற்சந்தியில் அலங்கோலமாக இன்றைக்கு இந்த வேளையில் நிற்கிறாள் அவள்.
இனி அவளுக்குச் சாகவும் துணிவில்லை. வாழவும் துணிவில்லை. அவளுடைய கதை மேற்கொண்டு தொடரவும் வழி இல்லை. முடியவும் வழியில்லை என்றுதான் இப்படிக் கதைகள் முடிந்திருக்கின்றன? இம்மாதிரிக் கதைகள் ஒருபோதும் முடிவதும் இல்லை. முற்றுவதும் இல்லை.
விடிவதற்கு இன்னும் சில மணி நேரம் தான் இருக்கலாம். ஆனால் இனி விடிவு என்று ஒன்று வரும் என்ற பிரக்ஞையே அவளுக்கு இல்லை.
இருள் போக இன்னும் சில நாழிகைகள் இருக்கலாம். ஆனால் ஒளி வரும் என்ற நம்பிக்கையே அவளுக்கு இல்லை. மீண்டும் மலர முடியாதபடி கருகிவிட்ட ஒரு மெல்லிய பூவுக்கு விடிந்தால் என்ன விடியாமலே இருந்தால்தான் என்ன? இரண்டுமே ஒன்றுதான்.