சிருவும் அண்ணனும் எப்போதும் சேர்ந்தேதான் விளையாடுவார்கள். அவர்கள் படிக்கட்டுகளுக்குக் கீழே உள்ள குகைகளை ஆராய்ந்துகொண்டும் வீட்டின் பின்னாலுள்ள மாமரத்தில் இருக்கும் வேற்றுகிரகவாசிகளுடன் சண்டை போட்டுக்கொண்டும் இருப்பார்கள்.
அண்ணன் எப்போதும் சிருவை சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பான்.
“மங்காசுரா செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்திருக்கிறாள். அவள் உன் வீட்டை அழிக்க வந்திருக்கிறாள்! ஹா ஹா!” என்பான்.
“அப்படியா! நான் மங்காசுராவைப் பிடித்து விழுங்கிவிடுவேன். ஹாஹாஹா!” என்பாள் சிரு.
ஆனால் சிருவும் அண்ணனும் சேர்ந்து விளையாடி நீண்டகாலம் ஆகிவிட்டது. அண்ணனுக்கு இப்போதெல்லாம் யாரோடும் விளையாடவே பிடிப்பதில்லை!
“ஏன் உனக்கு விளையாடவே பிடிப்பதில்லை?” என்று அண்ணனிடம் கத்தினாள் சிரு.
“எனக்குத் தெரியவில்லை. என் முதுகிலேறி அமர்ந்திருக்கும் இந்தப் பெரிய அரக்கனிடம் மாட்டிக்கொண்டிருக்கிறேன்!”
அந்த அரக்கனுக்கு டுக்டுக் எனப் பெயரிட்டாள் சிரு.
டுக்டுக் மோசமானவனாகவும் எரிச்சலானவனாகவும் இருக்கவேண்டும். அவன், அண்ணனின் சிரிப்பையே விழுங்கிவிட்டது போல சிருவுக்குத் தோன்றியது.
டுக்டுக் எப்போதும் அண்ணனுடனே இருக்கிறான். “உன் அரக்கனைப் போகச்சொல். அவனை எனக்குப் பிடிக்கவே இல்லை” என சிரு அண்ணனிடம் சொன்னாள்.
சமயங்களில் டுக்டுக் ஒரு லாரியைவிடவும் பெரியவனாக இருந்தான். அந்த நாட்களில் அண்ணன் எல்லாவற்றின் மேலும் கோபப்படுவான். உணவைக்கூட கோபமாகவே சாப்பிடுவான்.
அண்ணனை எப்படி சரிசெய்வது என தனக்குத் தெரியுமென்று அம்மா நினைத்தார். “நீ வெளியே நடந்து போய்விட்டுவா. சுத்தமான காற்று உன் மேலே பட்டால் நல்லது” என்பார்.
சில நாட்களில் டுக்டுக், அண்ணனை நன்றாக பிடித்துக்கொள்வது போலிருந்தது. அப்போதெல்லாம் அண்ணனை படுக்கையிலிருந்து எழுந்திருக்கக்கூட அவன் விடுவதில்லை.
அப்பா அண்ணனிடம் அவனது மனநிலையை பற்றி கேட்டுக் கொண்டேயிருப்பார். அதை எப்படி சரிசெய்ய வேண்டும் என்றும் சொல்வார்.
“என்ன ஆயிற்று? ஏன் சாப்பிடாமல் இருக்கிறாய்? நன்றாக சாப்பிட்டாலே உன் பிரச்சினைகள் எல்லாம் ஓடிவிடும்” என்பார்.
சிலநாட்களில் டுக்டுக் மிகவும் சிறியவனாகி பட்டத்தைப் போல இங்கும் அங்கும் மிதந்துகொண்டிருப்பான். அப்போதெல்லாம் அண்ணன் படுக்கையைவிட்டு எழுந்துவந்து சிருவுடன் விளையாடுவான். ஆனாலும் சீக்கிரமே சோர்வாகிவிடுவான்.
பாட்டியும் தாத்தாவும் அண்ணனின் பிரச்சினையைப் பற்றி பேசினார்கள்.
“அட! இந்தக் காலத்துக் குழந்தைகளும் உங்கள் பிரச்சினைகளும்! அந்தக் காலத்தில் நாங்களெல்லாம் எவ்வளவு வலுவாக இருந்தோம், தெரியுமா!” என்றார் பாட்டி.
“உனது கவனம் ஓரிடத்தில் இல்லை, அவ்வளவுதான்” என்றார் தாத்தா.
“எல்லாம் உன் தலைக்குள்தான் இருக்கிறது. நீ மனது வைத்தால் அதிலிருந்து வெளியே வந்துவிடலாம்” என்றே எல்லோரும் கூறினர். “நான் முயற்சிக்கிறேன். ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை” என அண்ணன் சொன்னான்.
அண்ணனது கவனத்தை திசைதிருப்ப முயன்றாள் சிரு.
“இந்தப் புத்தகத்தைப் பார். படங்களெல்லாம் எவ்வளவு அழகாக இருக்கின்றன, இல்லையா?” என்று கேட்டாள்.
“சுமாராக இருக்கிறது, சிரு” என்றான்.
“அண்ணா! இந்தப் புது ரயில் வண்டி எப்படி இருக்கிறது?”
“ம்ம்ம்ம், நன்றாக இருக்கிறது.”
“மங்காசுரா வந்துவிட்டாள். ஓடு அண்ணா!” என சிரு கத்திப் பார்த்தாள்.
“இப்போது வேண்டாம் சிரு. நான் விளையாட விரும்பவில்லை” என்றான்.
டுக்டுக்தான் அண்ணனை சோகமாகவும் கோபமாகவும் வைத்திருக்கிறான் என சிரு யோசித்தாள்.
டுக்டுக்கை நோக்கி ஒரு தலையணையை எறிந்தாள். “ஓடிப்போ கொடூர அரக்கனே! என் அண்ணனை விட்டுப் போ. அவனது சிரிப்பைத் திருப்பிக்கொடு” எனக் கோபமாகக் கத்தினாள்.
அன்று அண்ணனுக்கு பிறந்தநாள். சிரு அண்ணனுக்காக கேக் செய்திருந்தாள்.
“நன்றி சிரு” என அண்ணன் சிரித்தான்.
’அண்ணனின் சிரிப்பே இப்போதெல்லாம் மாறிவிட்டது’ என சிரு வருந்தினாள்.
சிரு அண்ணனின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். “உன்னுடைய புதிய நண்பன்தான் உன்னை மகிழ்ச்சியாக இருக்கவிடாமல் செய்கிறானா?” என்று கேட்டாள்.
அண்ணன் தலையசைத்தான்.
“நான் மகிழ்ச்சியாக இருக்கத்தான் முயல்கிறேன். ஆனால், பெரும்பாலான நாட்களில் அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என அண்ணன் சொன்னான்.
“உன்னுடைய நண்பன் இன்னும் எவ்வளவு நாட்கள் உன்னோடு இருக்கப் போகிறான்?” என சிரு கேட்டாள்.
“எனக்குத் தெரியாது” என்றான் அண்ணன்.
“பரவாயில்லை. உன்னால் எப்போது முடியுமோ நாம் அப்போது விளையாடலாம்” என சிரு சொன்னாள்.
அண்ணன் பழையமாதிரி சிரித்தான். டுக்டுக் கொஞ்சம் சிறியதானது.
அண்ணனுக்கு டாக்டர் ஆன்ட்டியும் உதவிக்கொண்டிருந்தார்.
டுக்டுக் இன்னும் அண்ணனோடுதான் இருக்கிறான். எப்போதாவது சிலநாட்களில் பெரியதாக இருப்பான். அந்த நாட்கள் கழியும்வரை சிரு காத்திருப்பாள். மிச்ச நாட்களில் மிகவும் சிறியதாக இருப்பான். அப்போதெல்லாம் அண்ணன் சிருவுடன் விளையாடினான்.
டுக்டுக் - மனச்சோர்வு கை முறிந்தாலோ அல்லது இருமல் வந்தாலோ நாம் குணமாவதற்காக மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். மற்ற உறுப்புகளைப்போல மூளையும் பாதிப்படையக் கூடும். அப்போது குணப்படுத்த உதவிகள் தேவைப்படும். சில சமயங்களில் நாம் சோகமாக இருப்போம். அழுவோம், யாரிடமும் பேசமாட்டோம், கோபம் வரும். சிறிது நேரம் கழித்து வழக்கம் போல இருப்போம். சோகமாக இருப்பது இயல்பானதுதான். சிலர் வெகுநேரம் சோகமாக இருப்பார்கள். நமது மூளை சிந்திக்கவும் செயல்படவும் உணரவும் உதவுகிறது. நாம் சோகமாக இருந்தால் நமது நடவடிக்கையையும் அது மாற்றிவிடும். அது நம்மை சிடுசிடுப்பாக ஆக்கும். நம்மால் எதையும் செய்யமுடியாது. நாம் யாருக்கும் தேவையில்லாதவர்கள் என்கிற எண்ணம் நமக்கு வரும். சிலருக்கு ஒரு பெரிய அரக்கன் தன் மீது அமர்ந்திருப்பது போலவும் அவன் நம்மைப்பற்றி நாமே மோசமாக நினைக்க வைப்பது போலவும் தோன்றும். சிலருக்கு அந்த அரக்கன் நம்மை விட்டு எப்போதும் போகவே மாட்டான் எனத் தோன்றும். அந்த அரக்கனின் பெயர்தான் மனச்சோர்வு. யாராவது, ஒரு காரணமும் இல்லாமல் சோகமாக இருப்பதைப் பார்த்தால் அவர்களிடம் பேசுங்கள். உங்களால் அவர்களது பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், அவர்கள் கஷ்டப்படுவது புரிவதாகவும் அவர்களுக்கு உதவ விரும்புவதாகவும் சொல்லுங்கள். ஒருவேளை, உங்களுக்கு அந்த மாதிரி தோன்றினால் உங்கள் நண்பர்களிடமோ குடும்பத்தினரிடமோ சொல்லுங்கள். மனநல மருத்துவர் அல்லது மனநல ஆலோசகரிடம் பேசுவதும் உதவும்.