Anukirakaa

அநுக்கிரகா

நா. பார்த்தசாரதி இந்த பேரை கேட்டவுடன் நமது நினைவுக்கு வருவது, குறிஞ்சிமலர் நாவல் தான். குறுஞ்சிமலர் வாசகர்களை சென்றடைந்த அளவிட்கு அநுக்கிரகா சென்றடையவில்லை என்றே கூறவேண்டும், அதட்கு காரணம் இந்த நாவல் அரசியலை பற்றி பேசுவது கூட இருக்கலாம்.

- நா. பார்த்தசாரதி

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

பொருளடக்கம்

அத்தியாயம் - 1

சைக்கிள் கடை பொன்னுரங்கம் உறுப்பினர் அட்டையைக் கொண்டு வந்து கொடுத்த போது அநுக்ரகா தோட்டத்தில் டென்னிஸ் ஆடிக் கொண்டிருந்தாள்.

பச்சைப் பாய் விரித்தாற்போல ஒரு சீராகக் கத்திரித்து விடப்பட்டிருந்த தோட்டத்துப் புல்வெளியில் பிரம்பு நாற்காலியில் அமர்ந்து ‘இந்து’வில் மூழ்கியிருந்த முத்தையா தான் முதலில் அவனிடமிருந்து அதை வாங்கிக் கொண்டார். அவருக்குள் மகிழ்ச்சி பிடிபடாது துள்ளியது.

பொன்னுரங்கம் அவருக்கெதிரே உட்காரவில்லை. நின்றுகொண்டே பேசினான்: “அந்தச் செயலாளர் மாம்பழக் கண்ணனோடதான் கொஞ்சம் பேஜாராப் போச்சு சார்! ‘இது ஏம்பா? இத்தினி பெரிய ஃபேமிலியிலேர்ந்து நம்ப கட்சியிலே வந்து மெம்பராவுறாங்க? ஆச்சரியமாயிருக்குதே?’ன்னு பிடிச்சுக்கிட்டான். மெம்பர்ஷிப் அப்ளிகேஷனோடு இரண்டு பச்சை நோட்டைச் செருகி நீட்டினேன். அப்பாலே ஏன் கண்டுக்கிறான்? கப்சிப்னு ஆயிட்டான்.”

“அப்போ அநு மெம்பராகச் சேர்ந்ததைப் பத்தி அவங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்குதுன்னு சொல்லு.”

“கண்டிப்பா இருக்குங்க. சந்தேகம் மட்டுமில்லே, என்னமோ ஏதோன்னு பயப்படவும் செய்யறாங்க.”

முத்தையா இவ்வளவில் அவனோடு பேசுவதை நிறுத்திக் கொண்டு, “அநு! இங்கே வா. பொன்னுரங்கம் வந்திருக்கான், பாரு,” என்று டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்த மகளைக் கூப்பிட்டார்.

உடனே விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு பெண்ணை விடை கொடுத்து அனுப்பிவிட்டுத் தந்தையருகே வந்தால் அநுக்ரகா. அவள் டென்னிஸ் உடையுடன் வந்தது முத்தையாவுக்கு உள்ளூர அவ்வளவாக ரசிக்கவில்லை. செல்லமாகக் கண்டித்தார்.

“உள்ளே போய் ஸாரி மாத்திக்கிட்டு வாம்மா! இன்னம் லண்டன்லே இருக்கிறதாகவே நினைப்பாம்மா உனக்கு? இப்படி டென்னிஸ் உடையிலேயும், ஸ்விம்மிங் சூட்லேயும் நின்னுட்டிருந்தால் இங்கே பாலிட்டிக்ஸ்ல புகுந்து ஒண்ணும் பண்ணிக்க முடியாது. ஃபிலிம் லயன்ல வேணா இந்த மாதிரி டிரெஸ்லே ஷைன் பண்ணலாம்.”

“ஐயாம் ஸாரி டாட்!” புடவையை மாற்றிக் கொண்டு வர டென்னிஸ் மட்டையுடன் உள்ளே போனாள் அநுக்ரகா.

திரும்ப வந்து அவள் தன்னிடமும் எங்கே ஆங்கிலத்திலேயே பேசிவிடப் போகிறாளோ என்று முன்னெச்சரிக்கையான ஒருவகைப் பயம் பொன்னுரங்கத்தைப் பிடித்துக் கொண்டது. வாயைத் திறந்தாலே ஆங்கிலத்தைத் தவிர வேறெதுவும் வராத இந்த வெள்ளைக்கார நாசூக்குடன் இவள் எப்படிக் குப்பனும் சுப்பனும் நிறைந்த ம.மு.க. (மக்கள் முன்னேற்றக் கட்சி)வில் இடம் பிடித்து முன்னேறப் போகிறாள் என்று தயக்கமாகக் கூட இருந்தது அவனுக்கு. முத்தையாவோ அடித்துச் சொன்னார்:

“என்ன செலவானாலும் பரவாயில்லேப்பா! எனக்கு இது ஒரு சவால்னே வச்சுக்க! நம்ப அநுவைப் பாலிடிக்ஸ்ல மேலே கொண்டாந்தே ஆகணும்! இங்கிலாந்திலே படிச்சவளாச்சே, சரியாத் தமிழ் பேச வருமோ, வராதோன்னெல்லாம் கவலைப்படாதே. யாராச்சும் புலவருங்களை ஏற்பாடு பண்ணிக் கத்துக் கொடுத்திடலாம். சுளுவா எல்லாம் வந்துடும்ப்பா.”

“கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த வார்த்தையும் நிக்காதும்பாங்களே, ஐயா!”

“அதெல்லாம் ஹைதர் காலத்துப் பழமொழியப்பா. இப்ப செல்லுபடி ஆகாது. அநுவுக்குக் குறிப்பறிஞ்சு பழகற குணம் அதிகம். இது இது இப்படி இப்படின்னு ஜாடை காமிச்சாலே புரிஞ்சுக்குவாள். அவளோட முகராசிக்கு அவள் தப்பாத் தமிழ் பேசினாலும் கூட ஜனங்க கைதட்டிக் கொண்டாடப் போறாங்க, பாரு.”

“நீங்க சொல்றதெல்லாம் சரிதாங்க. ஆனா... இதுலே...”

“ஆனாலாவது போனாலாவது? ஜமாய்க்கப் போறாள். பார்த்துக்கிட்டே இரு.”

“நீங்க சொல்றதெல்லாம் சரிதாங்க. ஆனா அந்தக் கனிவண்ணன் ரொம்பப் பொல்லாத ஆளாச்சே.”

“அவன் பொல்லாதவனா இருந்தா அது அவனோட. இன்னம் எண்ணி ஆறே மாசத்திலே என் மகள் அவனை ஓரங்கட்டி நிறுத்தறாளா இல்லியா பாரு.”

முத்தையாவின் கோபத்துக்குக் காரணம் இருப்பது பொன்னுரங்கத்துக்குப் புரிந்தது. பரம்பரைப் பெரிய மனிதரான முத்தையாவை முந்தா நாள் அரசியல்வாதியான கனிவண்ணன் அவமானப்படுத்தி விட்டதுதான் இந்தக் கோபத்துக்குக் காரணம். கேவலம் ஒரு சின்ன விஷயத்துக்காக அவன் அவரிடம் அப்படி நடந்து கொண்டிருக்க வேண்டாம் என்றே பொன்னுரங்கத்துக்குக் கூடத் தோன்றியது.

ஆவாரம்பட்டு முத்தையாவின் பங்களாவை ஒட்டி இருந்த காலியான புறம்போக்கு நிலத்தில் ‘பார்க்’ ஒன்று அமைக்கும் திட்டம் இருந்தது. ‘பார்க் அவசியமில்லை, பூங்காவுக்குப் பதில் வீடற்றோருக்கு வீட்டு வசதி செய்து கொடுக்கப் பயன்படுத்தலாம்’ என்றும் ஒரு சாரார் அபிப்பிராயப்பட்டனர். இப்படி அவர்கள் பூங்காவா, வீட்டு வசதியா என்று முடிவு செய்யுமுன்பே புறம்போக்கு நிலத்தில் தாறுமாறாகக் குடிசைகள் முளைத்துக் கிளம்ப ஆரம்பித்தன. முத்தையா வீட்டுக் காம்பவுண்டுச் சுவரில் சாத்தினாற் போலவே பலர் குடிசைகள் போட ஆரம்பித்தனர். சுகாதாரம் கெட்டு அரண்மனையாக விளங்கிய முத்தையாவின் பங்களாவைச் சுற்றிக் கொசு, சாக்கடை எல்லாம் தேங்கி நாற ஆரம்பித்தது. ‘ஆவாரம்பட்டு ஹவுஸ்’ மதில் சுவர் ஓரங்கள் திறந்த வெளிக் கழிப்பிடங்களாக ஆயின.

முத்தையா நகர அதிகாரிகளுக்கும் மற்றவர்களுக்கும் கடிதம் மேல் கடிதம் எழுதிப் போட்டும் பயனில்லை. “தொகுதி எம்.எல்.ஏ.யைப் பார்த்து ஒரு வார்த்தை சொல்லுங்க. உடனே நடக்கும்” என்று சிலர் சொல்லவே முத்தையா அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வான கனிவண்ணனைப் பார்ப்பதா வேண்டாமா என்று தயங்கினார்.

குடிசைகளைக் காலி செய்துவிட்டுப் பூங்கா அமைக்கும் பணியைத் தொடங்குவதைத் துரிதப்படுத்தும்படி எம்.எல்.ஏ.யை முடுக்கி விடலாம் என்றுதான் முன்னாள் ஆவாரம்பட்டு ஜமீன்தார் திவான் பகதூர் சர்.முத்தையா பி.ஏ.பி.எல். அவனைச் சந்திக்கச் சென்றார். அவர் நிலைக்கு, கூப்பிட்டனுப்பினாலே வரக்கூடிய அவனை அவர் தேடிப் போனார்.

மரியாதையும், பண்பாடும் பரம்பரைப் பெருந்தன்மையும் உள்ள முத்தையாவுக்குக் கனிவண்ணன் வீட்டில் அதிர்ச்சிதான் காத்திருந்தது. சந்தையிலோ, கருவாட்டுக் கடையிலோ இருக்கிற மாதிரி அங்கே கூட்டம். நிற்கக் கூட இடம் இல்லை. உட்காருவதைப் பற்றி எண்ணியும் பார்க்க முடியாது.

ஆவாரம்பட்டு ஜமீன் திவான் பகதூர் சர்.வி.டி.முத்தையா என்று அச்சிடப்பட்ட விசிட்டிங் கார்டைக் கொடுத்து அனுப்பினார். அப்படியும் பயனில்லை. மூன்று நாள் இப்படியே நடந்தது. நாலாவது நாள் வெளியே புறப்படும் எண்ணத்தோடு அறையிலிருந்து காருக்கு வந்த எம்.எல்.ஏ.யிடம் “ஐயாம் வி.டி.முத்தையா” என்று தாமே முன்சென்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“இப்போ அவசரமாகப் போய்க்கிட்டிருக்கேன். நாளை ராத்திரி ஒன்பது மணிக்குப் பார்ட்டி ஆபீசுக்கு வாங்க, பார்க்கலாம்” என்று கூறிவிட்டு அவர் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்காமல் பொறுமையின்றிக் காரில் போய் ஏறிக் கொண்டான் எம்.எல்.ஏ.

முத்தையாவுக்கு அவமானப்பட்டுவிட்ட உணர்ச்சி. யுத்த காலத்தில் சில ஆண்டுகள் லண்டனில் இருந்த போது குறித்த நேரத்தில் குறித்தபடி சென்று சர்ச்சிலைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். மிகவும் முயன்று இண்டர்வியூ நேரம் கேட்டுப் பெற்றுப் பக்கிங்ஹாம் பாலஸ் சென்று அரசியைக் கூட இரண்டு நிமிடம் சந்தித்திருக்கிறார்; கையுறையாக மலர்ச் செண்டும் அளித்திருக்கிறார்.

இன்று சுதந்திரம் பெற்ற சொந்த நாட்டில் தன்னுடைய தொகுதி எம்.எல்.ஏ.யை வேலை மெனக்கிட்டு நாலு நாள் காத்திருந்தும் பார்த்துப் பேசத் திண்டாடும் நிலை அந்த முதியவருக்கு எரிச்சலூட்டியது. பொறுமையை இழக்காமல் அவனைத் தேடி அவர் மறுநாள் இரவு போன போது கூடச் சந்திக்க முடியவில்லை. பத்தாயிரம் ரூபாய் ரொக்கத்தோடு வந்தால் அந்தப் பிரச்சினையைக் கவனிக்கலாம் என்று உதவியாளன் ஒருவன் மூலம் அவருக்குச் சொல்லி அனுப்பப்பட்டது.

பொறுமை இழந்த வி.டி.முத்தையா விசுவரூபம் எடுத்தார். விரக்தியிலும், தன்னைவிட எல்லா வகையிலும் தாழ்ந்த ஒருவனிடம் அவமானப்பட்டுவிட்ட ஆத்திரத்திலும் சீறினார். கனிவண்ணனைப் போன்ற அரசியல் மலிவுப் பதிப்புப் பேர்வழிகளை ஆயிரம் பேரானாலும் விலைக்கு வாங்கிப் போடுகிற வசதியுள்ள அவர், இப்போது அவனை விலைக்கு வாங்குவதை விடப் பழி வாங்கித் தீர்த்து விடுவதையே விரும்பினார். அது அவரால் முடியும் என்றே தோன்றியது.

அவனை விலைக்கு வாங்குவதானாலும், பழிவாங்குவதானாலும் இரண்டிற்குமே செலவாகும். சொல்லப் போனால் விலைக்கு வாங்குவதை விடப் பழிவாங்குவதற்கு இன்னும் அதிகம் செலவாகக் கூடும். அப்படி ஆனாலும் பரவாயில்லை. கனிவண்ணனைப் பழிவாங்கியே தீருவது என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டிருந்தார் அந்தப் பரம்பரைப் பணக்காரர்.

கிட்டத்தட்ட எண்பதை நெருங்கும் தன் வயது, குடும்பம், பணம் எதையுமே லட்சியம் செய்யாமல் அவன் தன்னை அவமானப் படுத்திவிட்ட வடு அவருள் ஆறவே இல்லை. முத்தையா யோசித்தார். தன் வயதுக்கு இனிமேல் தான் அவனை எதிர்த்து அரசியலில் இறங்கி ஈடுபட்டுப் பழிவாங்குவது என்பது சாத்தியமில்லை. அது பொருத்தமாகவும் இருக்காது. ஒரே மகள் அநுக்ரகா, முந்தா நாள் வரை ஆக்ஸ்ஃபோர்டில் தங்கிப் படித்தவள். அல்ட்ரா மாடர்ன் பழக்க வழக்கங்களும் ஆக்ஸ்ஃபோர்டு உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலமும், தமிழக - இந்தியப் பட்டிதொட்டி அரசியலுக்குத் தோதுபடுமா என்றும் சந்தேகமாக இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லை. முத்தையாவின் மூத்த தாரத்துக்கு இரண்டு பையன்கள். இருவரும் அவரோடு இல்லை. கருத்து வேறுபட்டுத் தங்களுக்குச் சேர வேண்டியதைப் பிரித்துக் கொண்டு போய் விட்டார்கள். ஐம்பது வயதில் கொச்சியிலிருந்து ஒரு மலையாளப் பெண்ணை இரண்டாம் தாரமாகக் கட்டிக் கொண்டார். அவளிடம் பிறந்த ஒரே பெண் தான் அநுக்ரகா. மூன்று வயதிலேயே தாயை இழந்துவிட்ட அநுக்ரகா, அவள் தாயைக் கொண்டிருந்தாள். நல்ல அழகு. சொக்கத் தங்க நிறம். துறுதுறுவென்று வண்டுகளாய்க் கண்கள். சுருண்டு கருகருவென்று அடர்ந்த கூந்தல். பிரியமாக வளர்த்துக் கான்வெண்ட் கல்வி அளித்து, மேற்படிப்பை ஆக்ஸ்ஃபோர்டில் படிக்க அனுப்பி வைத்தார். ‘அநுக்ரகா’ என்று அவளுக்குப் பெயர் வைத்ததே அவளுடைய அம்மாதான். ‘நல்லதை அருளித் தீயதை விலக்கி அநுக்ரகா’ எனப் பெயராம். முத்தையா இந்தப் பெயர் ஒரு மாதிரி இருக்கிறதே என்ற போது அவர் மனைவி இதற்கு அளித்த விளக்கம் இது. “உங்களுக்கு முழுப் பெயரும் வாயிலே நுழையலேன்னா ‘அநு’ன்னு சுருக்கிக் கூப்பிட்டுக் கொள்ளுங்களேன்” என்றாள் அவள். அநுக்ரகா பிறந்து பெயரிடும் போது இந்த விவாதம் அவர்களுக்குள் நடந்தது.

“சமஸ்கிரத மயமாகப் பெயரிடுவது மலையாளிகளோடு கூடப் பிறந்த பழக்கம்” என்று அப்போது அவர் அவளைக் கிண்டல் கூடச் செய்திருக்கிறார்.

அவள் பெயரோ சமஸ்கிருத மயம். வாயைத் திறந்தால் ஆங்கில வாடை. இந்த லட்சணத்தில் இவளை அரசியலில் நுழைத்துக் கனிவண்ணன் போன்ற பேட்டை ரவுடி + அரசியல்வாதிக்குப் போட்டியாக ஈடுபடுத்துவது எப்படி என்று மலைத்தார் முத்தையா. கடைசியில் அதற்கும் ஒரு வழி புலப்படவே செய்தது.

முள்ளை முள்ளாலேயே எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். கனிவண்ணனின் வளர்ச்சியால் ம.மு.க.வில் பாதிக்கப்பட்ட மற்றொருவர் இருக்க வேண்டும் என்ற அநுமானத்தோடு தேடிக் கண்டுபிடித்த போது தான் சைக்கிள் கடை பொன்னுரங்கம் அகப்பட்டார். மகள் அநுக்ரகாவைப் பொன்னுரங்கத்துக்கு அறிமுகப்படுத்தி, “இவளை உங்க ம.மு.க.வில் எப்படியாவது மெம்பராக்கிடணும்” என்று ஒரேயடியாய் முத்தையா வேண்டிக் கொண்டபோது, பொன்னுரங்கம் மிரண்டான். மலைத்தான்.

அத்தியாயம் - 2

கடைசியில் முத்தையாவுக்குத்தான் வெற்றி. கனிவண்ணனிடம் பொன்னுரங்கத்திற்கு உள்ள விரோதத்தைப் பயன்படுத்தி எப்படியோ சம்மதிக்க வைத்தார் அவர்.

“நீ எவ்வளவோ பாடுபட்டு இந்த ஏரியாவிலே கட்சியை வளர்த்தே. அடி வாங்கி உதை வாங்கிக் கைக்காசைச் செலவழித்து நீ எல்லாத்தையும் பண்ணினாப் பிரயோசனம் கிடைக்கிற சமயத்திலே கனிவண்ணன் வந்து பிடிச்சுக்கிட்டான்.”

“கனிவண்ணன் மட்டுமில்லீங்க. மாம்பழக் கண்ணன் கதை என்னவாம்? பஜார்லே மிளகாமண்டி வச்சிருந்தவன். அதைக் கூடக் கவனிக்காமல் பிஸினஸைத் தம்பி கையிலே விட்டுட்டு இங்கே வந்து செயலாளர் பதவியைப் பிடிச்சுக்கிட்டான்.”

“ஏம்பா பொன்னுரங்கம், கனிவண்ணன், மாம்பழக் கண்ணன் இதெல்லாம் என்னப்பா பேரு? கனிவே இல்லாதவனைக் கனிவண்ணன்னு கூப்பிடறீங்க? கசப்பே உருவானவனை மாம்பழக் கண்ணன்கிறீங்க?”

“சும்மா ஒரு பப்ளிஸிட்டிக்காகப் போஸ்டர்லே போடறதுக்கு மஜாவா இருக்கும்னு இவங்களா வச்சுக்கிட்ட பேருங்க; சுடலைமுத்துங்கிற பேரைக் கனிவண்ணன்னு மாத்திக்கிட்டான். மாடசாமிங்கிற பேரு மாம்பழக்கண்ணன் ஆயிடிச்சு.”

“கனி, பழம்னெல்லாம் ரசமான பேரை வச்சிக்கிட்டுத் தான் ரசாபாசமா நடந்துக்கிறாங்கன்னு சொல்லு!”

“அதுனாலதான் நான் பேரை மாத்திக்கலீங்க. அப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டேன். நம்ம பாப்பா பேரு கொஞ்சம் வாயிலே நுழையாத மாதிரி இருக்குதுங்க. மெம்பர்ஷிப் அட்டை வாங்கறதுக்கு முன்னாடியே மாத்திட்ட நல்லதுங்க. எங்க மாதிரிப் பார்ட்டிகளிலே பேர் தான் ரொம்ப முக்கியங்க.”

“அரசியல் - அநுக்ரகா - ஆதரவு - எல்லாத்திலேயும் ‘அ’ தானே வருதுப்பா! இந்தப் பேரே போதும், சுருக்கிக் கூப்பிடணும்னா ‘அநு’ன்னு நான் கூப்பிடற மாதிரிக் கூப்பிட்டுக்கலாமே?”

“இல்லீங்க... வந்து...!”

“என்னப்பா இது? வந்தாவது போயாவது? அவள் முகராசிக்கே எல்லாம் நடக்கும்பா. பேரை மாத்தி ஒண்ணும் நடக்க வேண்டாம்.”

“மானா. கானாவே மெம்பர்ஷிப் பத்திக் கேட்டப்போ ‘என்னப்பா பேர் ஒரு தினுசா இருக்கே?’ன்னு சொன்னாருங்க.”

“அது யாருப்பா மானா, கானா?”

“அதாங்க செயலாளர் மாம்பழக்கண்ணன்.”

“இந்தப்பேர் அவம்மா வெச்சது! அவள் இப்போ உயிரோட இல்லை. நான் பண்ணின பாவம் அல்பாயுசாப் போயிட்டாள். அவள் வச்சிட்டுப்போன பேரை மாத்த வேண்டாம்னு பார்க்கிறேன். அதாவது ‘செண்டிமெண்டல் ரீஸன்’ செண்டிமெண்டல்னா உணர்ச்சிமயமானதுன்னு வச்சுக்கயேன்.”

“சரிங்க. அவங்ககிட்டே சொல்லிப் பார்க்கிறேன், அவங்க கேப்பாங்களோ, மாட்டாங்களோ, எதுக்கும் ஒரு பேரை யோசிச்சு வச்சுக்குங்க.”

“அநுக்ரகாங்கிற பேரோட அர்த்தம் வர்ற மாதிரி இருக்கணும்பா. அது முக்கியம். வேற அர்த்தம் வர்ற மாதிரிப் பேரு எனக்குப் பிடிக்காது.”

“அர்த்தம் கிர்த்தம்லாம் நமக்குத் தெரியலீங்க. புலவர் ஒருத்தர் இயக்கப் பேச்சாளரா இருக்காருங்க. அவரை இட்டாந்தாக் கச்சிதமாக பேர் சொல்லிடுவாருங்க.”

“யாருப்பா அது?”

“கடும்பனூர் இடும்பனார்.”

“அவர் பேரே வாயிலே நுழையற மாதிரி இல்லியேப்பா?”

“குழந்தைகளுக்கு மேடைகளிலே பேர் வைக்கிறதுக்கே எங்க தலைவர் அவரைத்தான் கன்ஸல்ட் பண்ற வழக்கம்.”

“சரி கூட்டிக்கிட்டு வா, பார்க்கலாம்.”

பொன்னுரங்கம் சைக்கிளில் போய்ப் புலவரைக் கூட்டிக் கொண்டு வந்தான். அரும்பு மீசையும் கடுகடுப்பான முகமும், குண்டு குண்டு கண்களுமாகத் தரையைப் பெருக்குகிற மாதிரித் தாழ உடுத்திய அரை வேஷ்டியும், மல் ஜிப்பாவும், தோளில் துண்டுமாக ஒரு மத்திய வயது மனிதர் வந்து, “வணக்கங்க”, என்று எதிரே நின்றார்.

“எங்கே வேலை பார்க்கிறீங்க?”

“ஆர்.டி.எஸ். மேனிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியர்.”

“உம்மாலே பொதுக் கூட்டங்களுக்கும் போய்க்கிட்டு ஸ்கூல் வேலையையும் எப்படிப் பார்க்க முடியுது?”

“பகலில் பள்ளி, இரவில் இயக்கம் ஐயா!”

“சரி! அநுக்ரகாங்கிறதுக்கு வாயிலே நுழையற மாதிரி ஒரு தமிழ்ப் பேரைச் சொல்லும்.”

“அவ் வடமொழிப் பெயருக்குத் ‘தீமைகளை விலக்கி நன்மைகளை அருளும் ஆற்றல்’ என்று பொருள் ஐயா!”

“நீர் சொல்றது ஒரு முழு நீள வாக்கியம். பேருங்கிறது ஒரு வார்த்தை ரெண்டு வார்த்தையிலே இருக்கணும்! வாக்கியமா இருக்கக்கூடாது.”

“அருட்செல்வி அல்லது அன்புச்செல்வின்னு வச்சிடலாங்க.”

“யாரோ ஒரு சாமியார்ப் பொம்பளைன்னு நினைச்சிட போறாங்க.”

“அப்போ உங்களுக்குப் பிடிக்கிற பேர் எப்படி அமையணும்னு நீங்களாவது ஒரு கோடி காட்டுங்களேன்?”

“அநுக்ரகாங்கிற பேர் காலஞ்சென்ற என் மனைவி வைத்தது. அதுதான் எனக்குப் பிடிக்குது. பொன்னுரங்கம் தான் அதை மாத்தியாகணும்கிறான்.”

“மாத்த வேண்டாங்க. அதையே தமிழாக்கி ‘அநுக்கிரகா’ன்னு கூப்பிடுங்களேன்?”

“ஒரு ‘கி’ போட்டாப் போதுமா?”

“இலக்கணப்படி போதும்.”

“சரி, இடும்பனூர் கடும்பனாரே!”

“பிழை! பிழை! என் பெயர் கடும்பனூர் இடும்பனார்.”

முத்தையா சிரித்தபடியே பொன்னுரங்கம் ஜாடை காட்டியதைப் புரிந்து கொண்டு ஒரு கவரில் ஐம்பது ரூபாயைச் செருகிப் புலவரிடம் நீட்டினார்.

“எதுக்குங்க இதெல்லாம்?”

“அட! சும்மா இருக்கட்டும். வச்சிக்குங்க!”

புலவர் கவரை வாங்கிக் கொண்டு, வணக்கத்தோடு விடைபெற்றார். “தமிழ்லே பேசக் கத்துக் கொடுக்கவும், இந்த ஆளையே ஏற்பாடு பண்ணிடு பொன்னுரங்கம். இவரை மாதிரி முரண்டு பண்ணாமே வளைஞ்சு கொடுக்கிற ஆள்தான் நமக்குத் தேவை.”

பொன்னுரங்கமும் சரி என்றான். அரசியல் பிரவேசத்துக்காக அநுக்கிரகாவின் பெயரை மாற்றுவதில்லை என்றும், அவசியமானால் மாம்பழக்கண்ணனுக்கும் ஏதாவது ‘சம்திங்’ கொடுத்து உறுப்பினர் ஆகிவிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

“புலவரு சொல்ற அர்த்தத்தைப் பார்த்தா இந்தப் பேரே அரசியலுக்குப் படு பொருத்தமாக இருக்கும் போலத் தெரியுதேப்பா! ‘தீமைகளை விலக்கி நன்மைகளை அருளும் சக்தி’ன்னு அநுக்கிராவிற்கு அர்த்தம் சொல்றாரு. அரசியல்லே இப்போ இருக்கிற தீமைகளை விலக்கிப் புதிய நன்மைகளை அருளப் போகிறவள்னு இதற்கே விளக்கம் சொல்லிக்கலாம்” என்று வி.டி.முத்தையா கூறிய வியாக்கியானம் சைக்கிள் கடைப் பொன்னுரங்கத்திற்குப் புரியவில்லை. ஆனாலும் பெரிதாக அதெல்லாம் புரிந்துவிட்டதைப் போலத் தலையை ஆட்டி வைத்தான். அவரிடம் பணம் வாங்கிக் கொண்டு அவன் கட்சி அலுவலகத்துக்குச் சென்று, மாம்பழக்கண்ணனுக்கு இருநூறு ரூபாய் லஞ்சமும் அநுக்கிரகாவின் உறுப்பினர் விண்ணப்பக் கட்டணத்துக்காக ரூபாய் இரண்டும் கொடுத்து உறுப்பினராக்கியதும், உறுப்பினர் அட்டையை உடனே எழுதி வாங்கி வந்ததும் நடந்து முடிந்த அதிசயங்கள்.

டென்னிஸ் உடையிலிருந்து புடவைக்கு மாறிய அநுக்கிரகா தன் தந்தையின் முன்னிலையிலே பொன்னுரங்கத்திடமிருந்து உறுப்பினர் அட்டையை வாங்கிக் கொண்டு, “வெரி கைண்ட் ஆஃப் யூ பொன்னுரங்கம்” என்ற போது, சர்.வி.டி. முத்தையா குறுக்கிட்டு “நன்றின்னு தமிழ்லே சொல்லணும் அநு. பொன்னுரங்கத்திட்டே போய் இங்கிலீஷ்லே சொன்னா எப்படி?” என்று மகளைப் பிரியமாகக் கண்டித்தார்.

அவளும் உடனே, “நன்றி, பொன்னுரங்கம்” என்று தன்னைத் திருத்திக் கொண்டு சொன்னாள். முத்தையா திருப்திப்பட்டார். அடுத்தவாரமே நெல்லுப் பேட்டை மண்டி மைதானத்தில் நடக்க இருக்கும் ஒரு பொதுக்கூட்டத்தில் அவள் மேடை ஏறிப் பேச வேண்டியிருக்கும் என்று பொன்னுரங்கம் கூறிய போது அநுக்கிரகாவுக்குப் பயமும் பதற்றமும் ஏற்பட்டன.

அதைக் கவனித்த முத்தையா, “ஒண்ணும் பயப்படாதே அநு! ஸ்மார்ட்டா இலட்சணமா ஒரு சின்னப் பொண்ணு மேடையேறிச் சுமாராப் பேசினாக்கூட ஆடியன்ஸ் பொறுத்துப்பாங்க. என்னை மாதிரி ஒருத்தன் பிரமாதமாகப் பேசினாலும் சாதிக்க முடியாததை நீ ரெண்டு சிரிப்பிலேயே சாதிச்சுக்கலாம்,” என்று அவளுக்கு ஆறுதல் கூறினார்.

அத்தியாயம் - 3

முதல் தரமான அறிவாளிகளை விடச் சுமாரான அறிவும் முதல் தரமான அழகுமுள்ள பெண்கள் அரசியலில் பிரகாசிக்க முடியும் என்று முதலிலேயே சரியாக எடை போட்டது முத்தையா தான்.

பொன்னுரங்கம்போல் கன்னங்கள் வற்றிப் பள்ளம் விழுந்த வறட்சிப் பேர்வழிகளையும், மாம்பழக்கண்ணன், கனிவண்ணன் போல் உடலில் இடுப்பும், கழுத்தும் எங்கிருக்கின்றன என்றே தெரியாத மிதப்பான செழித்த புள்ளிகளையுமே பார்த்துப் பார்த்துச் சலித்துப் போயிருக்கும் மக்களுக்கு, பளீரென்று டிம்பிள் கபாடியா புடவையைக் கட்டிக் கொண்டு மேடை ஏறினாற் போன்று ஓர் இளம் பெண் மின்னல் மேடை ஏறினால் அதிகமாக ரசிக்கும் என்றார் அவர். பொன்னுரங்கம் ஓரளவு அவரது கருத்தை ஒப்புக் கொண்டாலும் வேறு சில ஆட்சேபணைகளையும் தெரிவித்தான்.

“நீங்க சொல்றதெல்லாம் சரிதான். இருந்தாலும் அழகாகவும் இளமையாகவும் இருக்கிறவங்களைப் பத்திச் சுலபமா அவதூறுகளைக் கிளப்பி விட்டுடலாம். அதுவும் அவங்க பொம்பளைங்களா வேற இருந்துட்டாங்களோ அது இன்னும் சுலபம்.”

“கனிவண்ணன் அப்படி செய்யக்கூடிய ஆள்தானா?”

“கனிவண்ணன் மட்டும் இல்லீங்க! எந்த அரசியல்வாதியுமே இதுக்கெல்லாம் விதிவிலக்கு இல்லேன்னு சொல்லலாம்.”

“முடிஞ்சதைப் பண்ணிப் பார்க்கட்டுமே; சமாளிக்கலாம். சும்மாவா விட்டுடப் போறோம்?”

“சமாளிக்கத்தான் போறோம். ஆனா உங்களுக்கு இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சுக்கறது நல்லதில்லையா? அதான் சொல்றேன்.”

“பணச் செலவைப் பத்திக் கவலைப்படாதே பொன்னுரங்கம்! இதிலே என்ன செலவானாலும் அந்தப் பயல் கனிவண்ணனைப் பத்தி ஈவு இரக்கமே காட்டாமே தொலைச்சுப்புடணும் தொலைச்சு. என்னை மாதிரி ஒரு பரம்பரைப் பெரிய மனுஷனை - லண்டன் ரிட்டர்ன்ட் ஆளை மூணு நாள் வாசல்லே காக்கப் போட்டு அவமானப் படுத்தினதுக்கு அவனைப் பழிவாங்கியே ஆகணும்.”

“செஞ்சுடலாங்க, ஆனாக் கொஞ்சம் நாளாவும். அதுக்கு உங்களுக்குத்தான் பொறுமை வேணும்.”

“இதோ பாரு, பொன்னுரங்கம்! இப்போ எனக்கு வயது எண்பது. அவனைக் கீழே இறக்கிட்டு அநுவை எம்.எல்.ஏ. ஆக்கிப் பார்க்காமே நான் சாகப் போறதில்லே.”

“செலவு மட்டும் கொஞ்சம் தாராளமாகப் பண்ணினீங்கன்னா, எம்.எல்.ஏ. மட்டுமென்ன, அம்மாவை மந்திரியாகவே ஆக்கிடலாம்.”

முத்தையாவுக்கு அவன் உறுதிமொழி இதமாய் இருந்தது. இப்படி ஓர் ஆள் கட்டு இருந்தாலொழிய கட்சியில் தன்னை மேலே எழவிடாமல் ஒடுக்கிய கனிவண்ணனைப் பழிவாங்கப் பொன்னுரங்கத்தினாலும் முடியாது. தங்கள் கட்சி அரசியலுக்கு மிகவும் அதிகத் தகுதிகளாக - வேண்டாத - படிப்பு, நகரிக மெருகு, ஆக்ஸ்போர்டு ஆங்கிலம், எல்லாமே இருந்தும் தயங்காமல் அநுக்கிரகாவை அவன் கட்சியில் சேர்த்துவிட்டது இதற்காகத்தான். மாம்பழக் கண்ணனும் கனிவண்ணனும் சந்தேகப்பட விடாமல்தான் இதைப் பொன்னுரங்கம் செய்திருந்தான். ஆனாலும் அவர்கள் சந்தேகப்பட்டார்கள். தங்களுக்குள் இரகசியக் குரலில் பேசிக் கொள்ளவும் செய்தார்கள்.

“இன்னாப்பா! நம்ம பொன்னுப் பய கட்சிக்காக எங்கிருந்தோ ஒரு வெள்ளைக் கோழி புடிச்சாந்திருக்கான்?” என்று தங்கள் பரிபாஷையில், கனிவண்ணன் மாம்பழக் கண்ணனிடம் கேட்க, மாம்பழக் கண்ணன், “வெள்ளைக் கோழி மட்டும் இல்லேப்பா! படு ஷோக்கான பொட்டைக் கோழி வேறே”, என்று கண் சிமிட்டிச் சிரித்தபடி பதில் கூறியிருந்தான். இப்படி அவர்கள் பேசிக் கொண்ட போது, பொன்னுரங்கமும் கட்சி அலுவலகத்தில் இருந்தான். ஆனால் மறுக்கவோ, எதிர்த்துப் பேசவோ முயலவில்லை. அவர்கள் இம்மாதிரி விஷயங்களை இப்படித்தான் பேசிக் கொள்வார்கள். அவர்களை மாற்ற முடியாது என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். தன்னை வெறும் தொண்டனாகவே விட்டு விட்டு மாம்பழக் கண்ணனும், கனிவண்ணனும் மட்டும் முன்னேறி விட்டது பற்றிப் பொன்னுரங்கத்தினுள் நீண்ட நாளாகப் புகைந்து கொண்டிருந்த புகைச்சல் இப்போது விசுவரூபம் எடுத்திருந்தது. பழி தீர்ப்பவனுக்கே உரிய தற்காலிகமான அடக்க ஒடுக்கத்தோடு அவன் காத்திருந்தான். கொடிகள், தோரணங்கள் கட்டும் அடி மட்டத்துக் கட்சித் தொண்டனாக வாழ்க்கையைத் தொடங்கிய அவன், இன்னும் அப்படியே இருக்கக், கனிவண்ணன் நாலு வீடு, இரண்டு சின்ன வீடு, கையில் இலட்சக் கணக்கிலே ரொக்கம் என்று பூதாகாரமாக வளர்ந்து விட்டான். மாம்பழக் கண்ணனுக்குச் சாராயக் கடை, கள்ளுக்கடை ஏஜென்ஸியில் பணம் வெள்ளமாக ஓடியது. பண பலமும், ஆள் பலமும் இல்லாமல் தான் அவர்களை எதிர்க்கப் பயந்து இதுவரை பொன்னுரங்கம் பேசாமல் இருந்தான். இப்போது அந்த இரண்டு பலமும் முத்தையா வடிவில் அவனுக்குக் கிடைத்திருந்தன.

ஆனால் பண பலமும், ஆள் பலமும் முத்தையாவாலும், அநுக்கிரகாவினாலும் கிடைத்தும் ஆரம்ப காலத்தில் சில சிக்கல்களையும், தர்ம சங்கடங்களையும் அவனால் தவிர்க்க முடியவில்லை.

மிகவும் படித்த யுவதியான நாகரிக அநுக்கிரகாவினால் அவனுடைய கட்சி நடைமுறைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. கட்சியின் ஊழியர்கள் அவளைக் கண்டதும் மிரண்டே போனார்கள். அவளோ ஆங்கிலத்தில் பேசி அவர்களை மேலும் மிரளச் செய்தாள்.

“இவரு சாமிக்கண்ணு! நம்ப கட்சியோட பதினேழாவது வட்டத்துக்குத் தலைவர்!” என்று பரட்டைத் தலை ஆளை அநுக்கிரகாவுக்குப் பொன்னுரங்கம் அறிமுகப்படுத்தினால் “ஹலோ!” என்றோ, “நைஸ் டு மீட் சாமிக்கண்ணு,” என்றோதான் அவள் பதிலுக்குக் கையை நீட்டினாள்.

ஓர் இளம் பெண் கூச்சமில்லாமல் கைகுலுக்க முன்வருவது இங்கிலாந்திலும், பம்பாயிலும் சகஜமாக இருக்கலாம். ஆனால் சென்னையில் - அதுவும் ம.மு.க. போன்ற ஒரு கட்சியின் அடி மட்டத்துத் தொண்டர்கள் மத்தியில் சகஜமாய் இல்லை. மருண்டு பயந்து ஒதுங்கினார்கள். பொன்னுரங்கம் இதற்காக ஆவாரம்பட்டு ஹவுஸ் ஏ.சி. அறையில் முத்தையா முன்னிலையில் அநுக்கிரகாவுக்கு ஒரு ஸ்பெஷல் கிளாஸே நடத்தினான். ‘டூஸ் அண்ட் டோண்ட்ஸ்’ பற்றி அநு அவனிடம் ஒரு பாடமே படித்தாள்.

“யாராவது ஒரு தொண்டனை அல்லது கட்சி ஊழியனை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தினால் நீங்க உடனே அந்தத் தொண்டனையோ ஊழியனையோ பார்த்து முகமலர்ச்சியோடவும், புன்னகையோடவும், ‘வணக்கம், தலைவரே’ன்னு சொல்லணும்.”

“அதெப்படி? பார்க்கிற ஆளெல்லாம் தலைவராயிடுவாங்களா?”

“அது அப்படித்தான்! தொண்டருங்களைக் குஷியா வச்சுக்க அது தான் ஈஜியான வழி. முன்னெல்லாம் காந்தி, நேரு போன்ற பெரிய தலைவருங்களைத்தான் ‘தலைவரே’ன்னு சொன்னாங்க. இப்போ நெலைமை தொண்டருங்க இல்லாட்டித் தலைவரே இல்லே. அதுனாலே தலைவருங்க தொண்டருங்களைப் பார்த்துப் பேசறப்போ, ‘வணக்கம் தலைவரே’ன்னு சொல்லணும். மறந்துகூட இங்கிலீஷ்ல தஸ் புஸ்ஸுன்னு பேசப்படாது.”

“சரிங்க தலைவரே!”

“ஏதேது? உடனே புடிச்சிக்கிட்டீங்களே?”

அநுக்கிரகா சிரித்தாள். தந்தையார் அகமகிழ்ந்தார்.

“நெல்லுப்பேட்டை மண்டி மைதானத்திலே அம்மா பேசிடறீங்களா? அல்லது சும்மா முன்னிலைன்னு மட்டும் போட்டுப் போஸ்டர் அடிச்சிடட்டுமா?”

இதைக் கேட்டு அநுக்கிரகாவிற்கு ஒன்றும் புரியவில்லை. முத்தையாதான் முதலில் பொன்னுரங்கத்திடம் சந்தேகம் கேட்டார்: “முன்னிலைன்னா என்னப்பா?”

“முன்னாலே உட்கார்ந்து கடைசி வரை கேட்கணும். பேசற பேச்சாளருங்க எல்லாம் முன்னிலை வகிக்கிறவரு பேரைச் சொல்லி ரெண்டு வார்த்தை புகழுவாங்க. கூட்டச் செலவை ஏத்துக்கணும்.”

“கூட்டத்துக்குத் தலைவருங்கறவர் தானே முன்னிலைங்கறது?”

“இல்லீங்க. தலைவர் வேறே, முன்னிலை வகிக்கிறவர் வேறே. பல பேருக்கு வாய்ப்பளிக்க அப்பப்போ இப்படிப் புதுப் புதுப் பேருங்களைக் கண்டுபிடிச்சுப் போடுவோம்.”

“அப்போது கூட்டத்தின் பிற்பகுதியில் இறுதிவரை பொறுமையாக உட்கார்ந்து கேட்கிற மாதிரி யாரையாவது ஒருத்தரைப் பின்னிலைன்னும் போடலாமேப்பா?”

“முன்னிலைக்காரர் தான் கடைசி வரை இருந்து கேட்கணுங்க.”

“தண்டனைன்னு சொல்லு.”

“அப்படி நினைக்க மாட்டாங்க. கடைசிப் பேச்சாளர், நன்றி சொல்லுகிறவர் வரை அத்தனை பேரும் தன் பேரைச் சொல்லிப் புகழுவாங்கங்கிற குஷியிலே முன்னிலைப் பிரமுகர் ராத்திரி பன்னிரண்டு ஒரு மணிவரை பொறுமையா கூட உட்கார்ந்திருப்பாங்க! கூட்டச் செலவையும் ஒப்புத்துப்பாங்க.”

“பன்னண்டு மணி, ஒரு மணியா? இதென்னப்பா சுத்த ஸெகண்ட் ஷோ அரசியலா இருக்கு?”

“ஸெகண்ட் ஷோ மட்டுமில்லே! எலெக்‌ஷன் டயம்னா மூணு மணி நாலு மணி கூட ஆகுமுங்க. வெளக்கு வைக்கிறப்பத் தொடங்கின கூட்டம் முடியிறப்பக் கோழி கூவிடும்.”

“ஐயையோ, பயங்கரம்!” அலறியே விட்டாள் அநுக்கிரகா.

“முன்னிலை வேண்டாம்ப்பா? அது யாராச்சும் பேசத் தெரியாத ஆளைப் போட்டுக்க. நெல்லுப் பேட்டை மைதான இராசியான எடம். மொத மொதலா அங்கே அநுவைப் பேசவே விட்டுறலாம்” என்றார் முத்தையா.

“ஆளுயரப் போஸ்டர் அம்மா படத்தோட போட்டுறலாங்களா?”

“அதெல்லாம் மாமூல் எப்பிடியோ அப்பிடிப் பண்ணிக்க.”

“எந்த லயன்லே பேசறதுங்கிறதுக்காகப் புலவரை வரச் சொல்லட்டுங்களா?”

“செய்யி! இப்போ போஸ்டர் போட என்ன செலவாகும்?”

“இருநூறு போஸ்டர் போதும்னு நெனைக்கிறேன். போஸ்டருக்கு பத்து ரூபா. ரெண்டாயிரம் இருந்தா முடிச்சுடலாம்.”

உடனே முத்தையா பொன்னுரங்கத்திடம் இரண்டாயிரம் ரூபாய் எடுத்துக் கொடுத்தார். அநுக்கிரகாவின் ‘நெகடிவ்’ கிடைக்கிற ஸ்டுடியோ விலாசத்தையும் குறித்துக் கொடுத்தார்.

அநுவின் ம.மு.க. அரசியல் பிரவேசம் பற்றி...

அத்தியாயம் - 4

முத்தையா எதிர்காலக் கனவுகளில் திளைத்து மகிழ்ச்சியாயிருந்தாலும் லேடீஸ் கிளப்பில் அநுவை அவள் சிநேகிதிகள் துளைத்தெடுத்துவிட்டார்கள். இத்தனைக்கும் அவள் அந்த லேடீஸ் கிளப்பின் துணைத் தலைவியாக வேறு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாள். அவள் கட்சியில் சேர்ந்தது சிலருக்குப் பிடிக்கவில்லை. புருவங்கள் நெரிந்தன.

அந்த மாதர் சங்கத் தலைவியாக இருந்த லேடி ரங்கநாதம் என்ற அம்மையார் நகரத்திலேயே பெரிய அரிஸ்டாகிரட் குடும்பத்தின் தலைவி. பெரிய கன்ஸர்வேடிவ் நபர். அவள் அநுவைக் கண்டித்தாள்:

“உன்னைப் போல டீஸண்ட் ஃபேமிலியிலே வந்தவளுக்கு இதெல்லாம் லாயக்காக இருக்காது அநு! யார் உனக்கு ‘இல் அட்வைஸ்’ பண்ணினாங்க...? அரசியல் சாக்கடையிலே போய்க் காலை விட்டுருக்கியே பெண்ணே?”

“சாக்கடையையும் என்னிக்காவது யாராவது இறங்கித் துணிந்து சுத்தம் பண்ணித்தானே ஆகணும்?”

“அது என்னாலேயும் உன்னாலேயும் முடியற காரியமில்லே. எத்தனை பேர் எத்தனை தரம் சுத்தம் பண்ண முயற்சி செஞ்சாலும் சாக்கடை சாக்கடையாத்தான் இருக்கும் அநு!”

“அப்பிடி எல்லாருமே விட்டுட்டா எப்பிடி? யாராவது துணிஞ்சுதானே ஆகணும்?”

“அது நம்ம வேலை இல்லே அநு!”

“அதனோட கொசுக்கள், நாற்றம், கிருமிகள் எல்லாம் நம்மையும் பாதிக்கிற போது நாம மட்டும் அதைக் கண்டுக்காமே மூக்கையும் கண்களையும் மூடிக்கிட்டு ‘அது நம்ம வேலை இல்லே’ன்னு போயிட்டா எப்படி அம்மா? சாக்கடையையும் என்னிக்காவது யாராவது இறங்கித் துணிந்து சுத்தம் பண்ணித்தானே ஆகணும்?”

“உன்னை மாதிரி ஆக்ஸ்ஃபோர்டிலே படிச்ச ஆவாரம் பட்டு ஹவுஸ் பெண் அதற்குத் தேவையில்லை என்பது என் அபிப்பிராயம்.”

“நாமே ஒதுங்கினா அவங்களும் ஒதுங்கிடுவாங்க. ஒதுங்கக் கூடாதுங்கிறது என் அபிப்பிராயம்.”

“ஒதுங்காமே நெருங்கினாலும் உன்னாலே அங்கே எதுவும் பண்ண முடியாது.”

“நான் அப்பிடி நெனைக்கலே.”

“உன்னோட ம.மு.க. அரசியல் பிரவேசம் இங்கே மாதர் சங்கத்திலே கூட உன்னைப் பாதிக்கும். எல்லாரும் ஒரு தினுசாப் பார்ப்பாங்க.”

“ஐ காண்ட் ஹெல்ப் இட்.”

“சீக்கிரமே உன்னைப் பிரஸிடெண்ட் ஆக்கிட்டு நான் வயசாச்சேன்னு ஒதுங்கிக்க நெனைச்சேன் அநு! இப்ப அது முடியாது போல இருக்கு.”

இதைக் கேட்டு அநு யோசனையில் ஆழ்ந்தாள். தன் தந்தையின் விருப்பத்துக்கு இணங்கத் தான் அரசியலில் ஈடுபட நேர்ந்ததை அந்த அம்மாளிடம் சொன்னால் அவள் தந்தையிடமே நேரில் போய் இதுபற்றி விசாரிப்பாள். வயதான காலத்தில் தந்தைக்கு வீணாகக் கோபம் வரும். அதெல்லாம் வேண்டாமென்று நினைத்ததால் உண்மைக் காரணத்தை அவள் யாரிடமும் சொல்ல விரும்பவில்லை. சில சமயங்களில் தன் அரசியல் பிரவேசம் அநுவுக்கே கூட எரிச்சலாகத்தான் இருந்தது. அழுக்குச் சட்டையும் இடுப்பில் கைலியும் சீவாத பரட்டைத் தலையுமாக வருகிற ஆட்களிடம், “வணக்கம் தலைவரே!” என்று பல்லை இளித்துக் கொண்டு நிற்பதை விட நுனி நாக்கால் ஆங்கிலம் பேசும் நாகரிக சமூகத்திடம் பழகுவதும் நாசூக்காக வாழ்வதும் எத்தனையோ மடங்கு மேலான காரியம் தான். கடும்பனூர் இடும்பனாரையும் சைக்கிள் கடைப் பொன்னுரங்கத்தையும் கட்டி மாரடிக்க வேண்டிய அவசியம் நாகரிக வாழ்வில் இல்லை. பலரைக் கவரச் சிரிப்பையும், பணத்தையும் சிக்கனமாகச் செலவழித்தாலே அங்கு போதும். ம.மு.க.விலோ தான் படித்தவள் என்ற ஒரு காம்ப்ளெக்ஸிலிருந்து விடுபடவும் அந்தக் காம்ப்ளெக்ஸ் மற்றவர்களைப் பாதித்து விடாமல் இருக்கவும் பயந்து பயந்து நிறையச் சிரித்து நிறையக் கீழிறங்கி விட்டுக் கொடுத்து நிறையப் பணம் செலவழித்துப் பாடுபட வேண்டியிருந்தது. அப்பாவோ அவள் ம.மு.க.வில் மேலே வரவேண்டுமென்பதற்காகப் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தார்.

தமிழ்ப் புலவர் கடும்பனூர் இடும்பனாரிடம் மேடைப் பேச்சுக்கு அவசியமான பாடங்களைத் தினசரி டியூஷன் படிக்க வேண்டியிருந்தது. அவர் ஒவ்வொரு விவரமாகச் சொன்னார்:

“முதல்லே மேடையிலேயும் கீழேயும் உள்ள முக்கியமானவங்க அத்தை பேரையும் அவங்க பெயரை மரியாதையாச் சொல்லி விளிக்கணும்.”

“மரியாதையாச் சொல்லி விளிக்கிறதுன்னா எப்படி?”

“கூட்டத்திற்குத் தலைமை ஏற்றிருக்கும் அண்ணன் பொன்னுரங்கம் அவர்களே! முன்னிலை ஏற்றிருக்கும் மரியாதைக்குரிய மரியரத்தினம் அவர்களே, வட்டச் செயல்வீரர் வடிவேல் அவர்களே! எனது சதையின் சதையாக விளங்கும் சகோதர சகோதரிகளே...”

“சதையின் சதையாக - நரம்பின் நரம்பாக - தோலின் தோலாக - இதெல்லாம் என்னங்க ஒரே மட்டன் ஷாப் லாங்வேஜா இருக்கே... டீஸண்டா ஏதாவது சொல்லுங்களேன்.”

“டீஸண்ட் கீஸெண்ட்டெல்லாம் சரிபட்டு வராதுங்க... பேச்சிலே அங்கங்கே தந்தி விலாசம் மாதிரி முத்திரையைப் பதிச்சாத்தான் மக்கள் கை தட்டுவாங்க.”

“முத்திரையைப் பதிக்கறதுன்னா...?”

“தியாகராஜ கீர்த்தனைங்கள்ளே அவரு பேரு முத்திரையா வருமில்லே. அதுமாதிரி, டக்னு ஜனங்களுக்குத் தந்தி பாஷையிலே சொல்றாப்பல ‘சதையின் சதையான’ன்னு ஒரு லயன் குடுத்தீங்கன்னாத்தான் உடனே கை தட்டுவாங்க.”

“அப்பிடியா? என்னை மாதிரிப் படிச்ச ஆட்கள் அந்தவிதமாப் பேசினா நல்லா இருக்குமா?”

“நீங்க அப்பிடிப் பேசாட்டித்தான் நல்லா இருக்காது! ஜனங்களும் உங்களை நம்ப இயக்கத்தோட சேர்த்து அடையாளமாப் புரிஞ்சுக்க மாட்டாங்க.”

“அதாவது எப்படி யாரை எந்த வரிசையிலே விளிச்சாலும் கடைசியிலே மக்களை விளிக்கிறப்ப, ‘சதையின் சதையான மக்களே’ன்னு மக்களோட சதையைப் பிடிச்சு இழுத்தாகணும்கிறீங்க.”

“கரெக்ட்! ரொம்ப நல்லா புரிஞ்சுக்கிட்டிங்க. சொற்பொழிவைத் தொடங்குறதுக்கு முந்தி மக்களை அப்பிடி அடைமொழி குடுத்து ஆரம்பிக்கணும்” - அவளுடைய கிண்டலைப் புரிந்து கொள்ளாமல் விளக்கிக் கொண்டிருந்தார் புலவர்.

“முடிக்கிறப்ப எப்படி முடிக்கணும்?”

“குறிப்பாக் கூட்ட ஏற்பாடு செய்து பேச வாய்ப்பளித்தவர்களுக்கும் கேட்ட மக்களுக்கும் நன்றி சொல்லி முடிச்சாப் போதும்.”

“அப்ப சரி! நான் மானேஜ் பண்ணிக்கறேன்” என்று புலவரை விடைகொடுத்து அனுப்பத் தயாரானாள் அநுக்கிரகா. புலவர் விடவில்லை.

“ஆரம்பிக்கிறது, முடிக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டீங்க! நடுவிலே என்ன பேசறதுன்னு கேட்டுக்கலியே?”

“அது ம.மு.க. பாலிஸி புரோபகண்டா பிரசுரத்தைப் பார்த்து நான் தயார் பண்ணிக்கிறேன்.”

“அதெல்லாம் நெல்லுப்பேட்டை மைதானத்திலே எடுபடாதும்மா! பாலிஸியைச் சொல்றதுன்னு வந்துட்டா ரொம்பச் சங்கடம். அது நமக்கும் புரியாது. மக்களுக்கும் பிடிக்காது.”

“பின்னே எதைத்தான் பேசறதாம்?”

“நெல்லுப்பேட்டை வட்டாரத்திலே நம்ம அரசியல் எதிரிங்க யார் யாரோ அவங்களை எல்லாம் புகுந்து விளாசணும்! அப்பத்தான் ஜனம் தங்கி நின்னு கேட்கும்.”

“அது எப்படிப் புகுந்து விளாசறது? திட்டறதா?”

“திட்டறதாகவும் இருக்கப்படாது! திட்டற மாதிரியும் இருக்கப்படாது. ரொம்பத் திட்டிட்டோமோ என்று நமக்கே சந்தேகம் வரும்போது, ‘அரசியல் ரீதியாக விமர்சித்தாலும் தனிப்பட்ட முறையில் எனக்கு அவர் மேல் மரியாதை உண்டு’ன்னு ஒரு லயனை ஊடாலே விட்டுக்கணும்.”

“எப்பிடி? எப்பிடி? இன்னொரு தரம் சொல்லுங்க. மனசுலே ஆகலே.”

புலவர் ரிபீட் செய்தார்.

அநுக்கிரகாவிற்கு அந்த அரசியல் கட்சி நடைமுறைகள் மிகவும் வேடிக்கையாக இருந்தன. திட்டுவதிலும் திட்டும்போதான தற்காப்பு ஏற்பாடுகளுக்கும் புலவர் சொல்லிக் கொடுத்த வழிகள் பிரமாதமாகவும், பக்காவாகவும் இருந்தன. இவ்வளவு அற்புதமான மேடைப் போர் முறைகளை அவள் இதுவரை எங்கும் கேள்விப்பட்டது கூட இல்லை. எல்லாம் அநுபவக் களஞ்சியங்களாகவே இருந்தன.

“கூட்டம் களை கட்டலேன்னாலோ எதிரிகளைச் சண்டைக்கு இழுக்கணும்னாலோ நம்ம ஆளுங்களை விட்டு நாமே கலாட்டா, கல்லெறிக்கு ‘செட் அப்’ பண்ணணும்.. அதும் மூலமா ஒரு விளம்பரம் கிடைக்கும். இல்லாட்டி எதிரிங்களைத் தாக்க நமக்குச் சாக்குப் போக்கு இல்லாமப் போயிடும்! அவங்க நம்மைத் தாக்கற மாதிரி ஒரு போக்கை நாமே உண்டாக்கிட்டு அப்புறம் அவங்களை வகையா ஒரு பிடிபிடிக்கணும்.”

“அப்போ ஊர்வலம் சென்ற பாதையில் எதிரிகள் கல்லெறிந்தால் கலவரம் மூண்டதுன்னு வர்ற நியூஸெல்லாம் கூட இப்படித்தானா?”

“ஒரு கல்லெறியும் இல்லாமே, ஒரு எதிர்ப்பும் இல்லாம நம்ம ஊர்வலம் அமைதியா நடந்திச்சுன்னா பத்திரிகைக்காரனுவ அதைப் பெரிசு பண்ணாம விட்டுடுவாங்க. பத்திரிகைக்காரங்க பெரிசு பண்ணணுங்கிறதுக்காக நாமே கல்லெறிய ஆள் செட் அப் பண்ணி நம்ம எதிரிங்க எறிஞ்சது போலக் கிளப்பி விடறதுதான். அரசியல்லே சகஜம்தான் இதெல்லாம். இப்படி ஒண்ணு நடக்காட்டி, ‘கட்சிக் கண்மணிகள் அமைதியையும் கண்ணியத்தையும் கட்டிக்காத்து இயக்கத்தின் நற்பெயரைப் போற்றிப் பேணிட வேண்டுகிறேன்’ அப்படின்னு தலைவருக்கு அறிக்கை விட வாய்ப்பே இல்லாமப் போயிடும்.”

“ஆக தலைவர், ‘அடிக்கிறாப்பல அடி! நான் அழறாப்பல அழறேன்’கிற பாணியிலே அறிக்கை விடுவாருங்கிறீங்க?”

“தங்கச்சி, இதெல்லாம் போகப் போக நீங்களே தெரிஞ்சுக்குவீங்க.”

அநுக்கிரகா புலவருக்கு விடைகொடுத்து அனுப்பினாள். சர்.வி.டி.முத்தையா புலவருக்கு விடை கொடுக்கும் போது ஞாபகமாகக் கவரில் ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்றைப் போட்டுத் தந்து வழியனுப்பினார். அது மாமூல்.

“அவ்வப்போது வந்து போயிட்டிருங்க, புலவரே! அநுவுக்கு நீங்க தான் மேடை ஆசான் மாதிரி” - என்றார் முத்தையா.

“தினசர் வரச்சொன்னாலும் நான் தயாருங்க.”

ரூபாய் ஐம்பது பற்றிய ஞாபகத்தில் எங்கே தினசரி வந்துவிடப் போகிறாரோ என்று பயந்து பதறி, “அதெல்லாம் வேண்டாம்! உங்களுக்கும் வேற வேலை இருக்கும். வாரத்துக்கு ஒரு நாள் ரெண்டு நாள் வாங்க, போறும். ரொம்ப உங்களைச் சிரமப்படுத்தக் கூடாது பாருங்க” என்று அவசர அவசரமாகக் குறுக்கிட்டுத் தடுத்தார் முத்தையா.

அத்தியாயம் - 5

மாபெரும் போஸ்டர்கள், தட்டி விளம்பரங்கள், பேனர்கள், அலங்கார வளைவுகள் போன்ற தடபுடல்களுடனே ம.மு.க. வினரின் மாபெரும் ஏற்பாடாகிய நெல்லுப்பேட்டை மைதானப் பொதுக்கூட்டத்துக்கு இரண்டு நாள் முன்னாலேயிருந்து ஏகப்பட்ட அரசியல் பொருளாதாரப் புள்ளிவிவரங்களைத் திரட்டி மனப்பாடம் செய்து, நிலைக்கண்ணாடி முன் நின்று பலமுறை திரும்பத் திரும்பப் பேசிப் பார்த்துக் கொண்டாள் அநுக்கிரகா.

என்ன புடவை கட்டிக் கொண்டு போவது? எப்படிச் சிங்காரித்துக் கொள்வது? என்றெல்லாம் திரும்பத் திரும்ப அக்கறை எடுத்துக் கொண்டு யோசித்தாள். கூட்டத்துக்கு வருகிற மக்களையும் கட்சி உறுப்பினர்களையும் ‘இம்ப்ரெஸ்’ செய்ய வேண்டுமே என்பது தான் இப்போது அவள் கவலையாக இருந்தது. ஏற்கெனவே அவளுடைய படத்துடன் மூலைக்கு மூலை ஆளுயரச் சுவரொட்டிகளை ஒட்டி விளம்பரம் செய்து விட்டார்கள். நன்றாகப் பிரசாரமும் செய்யப்பட்டிருந்தது.

ஊர் முழுவதும் ஒரே பேச்சு. அநுக்கிரகா ம.மு.க. மேடையில் ம.மு.க. உறுப்பினராகிப் பேசும் கன்னிப் பேச்சே அதுதான். “அநுக்கிரகா ம.மு.க.விலே சேர்ந்தாச்சு, தெரியுமா? ‘ஆவாரம் பட்டு ஹவுஸ்’ பாலிடிக்ஸ்ல தீவிரமா இறங்கப் போகுது” என்று எங்கும் பரபரப்பாகி இருந்தது. ஊரிலேயே ஹாட் நியூஸ் இதுதான்.

அன்று காலையில் கோயிலில் போய் விசேஷ அர்ச்சனை வேறு செய்து விட்டு வந்தார் முத்தையா. கூட்டத்திற்குக் கட்டிக் கொண்டு போக வேண்டிய புடவையைத் தேர்ந்தெடுக்கவே அநுக்கிரகாவும், முத்தையாவும் அரைநாள் செலவழித்தார்கள். ஷிஃபான், ஜார்ஜெட், வாயில் புடவைகளை முதல் ரவுண்டிலேயே நிராகரித்தார் முத்தையா.

“அழகா ஆரணி, காஞ்சிபுரம், கொள்ளேகாலம்னு கைத்தறிப் பட்டுப் புடவையைக் கட்டிக்கோ. கைத்தறியிலேதான் ‘லோகல் டச்’ கிடைக்கும். கைத்தறிக்கும் ம.மு.க. கொள்கைக்கும் கூட நெருக்கம் அதிகம்” - என்றார் முத்தையா.

பளீரென்று கையகலச் சரிகைக் கரை போட்ட சிவப்புக் காஞ்சீபுரம் பட்டுப் புடவை ஒன்றை அவரே தேர்ந்தெடுத்தும் கொடுத்தார். அநுக்கிரகாவுக்கு அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை.

“இது ரொம்பப் பளீர்னு இருக்குப்பா! இத்தனை பெரிய ஜரிகைக் கரை இல்லாம ஸிம்ப்பிளா ஒண்ணை எடுங்க” - என்றாள் அவள்.

“பளீர்னுதான் இருக்கணும் அம்மா! உனக்கொண்ணும் தெரியாது. பளீர்னு இருந்தாத்தான் கூட்டத்துக்கு எடுக்கும்.” திரும்பத் திரும்ப இப்படி முத்தையா வற்புறுத்தவே வேறு வழியில்லாமல், அவள் அந்தச் சிவப்புப் பட்டுப் புடவையையே கட்டிக் கொள்ள இசைந்தாள்.

மாலை நான்கு மணி சுமாருக்கு ஏதோ வேலையாகத் தன்னைத் தேடி வந்த பொன்னுரங்கத்தை விசாரித்த போது அவன் அந்தச் சிவப்புப் பட்டுப் புடவை கூடவே கூடாது என்றான். “பப்ளிக் மத்தியிலே பிரமாதமா வைர நகை, சரிகைக்கரை போட்ட பட்டுப் புடவைன்னு கட்டிக்கக் கூடாது. சிம்பிளா போய் நிற்கணும்னு தலைவர் அடிக்கடி சொல்லுவாரு. இல்லாட்டி ‘மேட்டுக்குடி மக்கள்’னு கெட்ட பேராயிடும். சிம்பிளா ஏதாச்சும் கரை போட்ட ஒரு வெள்ளைச் சேலையைக் கட்டிக்கிட்டாப் போதுங்க. இல்லாட்டா நம்ம பணத்தையும் பவிஷையும் காட்டிப் பகட்டறோம்னு கெட்ட பேராயிடும்” - என்றான் பொன்னுரங்கம். அநுக்கிரகாவுக்கும் பொன்னுரங்கம் சொல்லியதுதான் சரி என்று பட்டாலும் அப்பாவுக்குப் பயந்து தயங்கினாள்.

“இந்தா பொன்னுரங்கம்! முதல்லே உன் வாயில் பெனாயிலை ஊத்திக் கழுவு! என் மக இன்னும் கல்யாணமாகாத கன்னிப் பொண்ணு. அதுக்குள்ளே வெள்ளைச் சேலை கட்டச் சொல்றியே! துக்கிரிப் பய பேச்சுப் பேசாதே!” என்று முத்தையா அவன் கூறியதை ‘ஸெண்டிமெண்டலாக’ எடுத்துக் கொண்டு கூப்பாடு போட ஆரம்பித்து விட்டார். பொன்னுரங்கம் நடுங்கிப் போனான்.

நடுக்கத்தோடு நடுக்கமாக உடனே பொன்னுரங்கம் காலில் விழாத குறையாக அவரைக் கெஞ்சி மன்னிப்புக் கேட்டான். “தப்பா ஒண்ணும் சொல்லிடலீங்க! நெல்லுப்பேட்டை மைதானம் மாதிரிப் பாமர மக்கள் நெறைஞ்ச பகுதியிலே கையகல ஜரிகைக் கரை போட்ட பட்டுப் புடவையைக் கட்டிக்கிட்டு மேடை ஏறினீங்கன்னா ஒரு தினுசாப்படும்! ஏற்கெனவே ‘இந்த மாதிரிப் பெரிய வசதியான குடும்பத்துலேருந்து எங்க கட்சிக்குள்ளே சேர்றவங்களைப் பத்திக் கட்சி ஊழியர்கள் மத்தியிலே பலமான அபிப்பிராய பேதம் இருக்கு. வெறும் வாயை மெல்றவங்களுக்கு அவல் கிடைச்ச மாதிரி ஆயிடுமோன்னுதான் சொல்றேன்.”

“இருக்கலாம்ப்பா! ஆனா அதுக்காக நாங்க பரதேசி வேஷம் போட முடியாது! உங்க மாம்பழக் கண்ணனும் கனிவண்ணனும் ஏழையின்னா சொல்றே? உங்க கட்சியிலே இல்லாத பணக்காரனா வெளியிலே இருக்கான்? எளிமைங்கற பேரிலே பஞ்சப் பரதேசி வேஷத்தோட என் மகள் மேடை ஏற முடியாது. முடிஞ்ச வரை டீஸஸ்டா உடுத்திக்கிட்டு வைரத்தோடு போட்டுக்கிட்டுத்தான் வருவா” - என்று அடித்துப் பேசினார் முத்தையா.

தான் கூறுவதன் உள்ளர்த்தத்தை அவர் புரிந்து கொள்ளாததை உணர்ந்து பேசாமல் விட்டுவிட்டான் பொன்னுரங்கம். நியாயத்தைச் சொல்லப் போகத் தன்னையே தப்பாகப் புரிந்து கொள்கிறாரே என்று அவர் மேல் வருத்தமாயிருந்தது அவனுக்கு. இந்தக் காலத்தில் எல்லாக் குடும்பப் பெண்களும் சிறுகரை போட்ட வெள்ளை வாயில் புடவையை சகஜமாகக் கட்டிக் கொள்வதைப் பார்த்துத்தான் வித்தியாசமில்லாமல் அவளுக்கும் அந்த யோசனையைச் சொன்னான் பொன்னுரங்கம். வெள்ளைச் சேலை யோசனையை அநுக்கிரகா தப்பாக எடுத்துக் கொள்ளவில்லையானாலும் முத்தையா பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டு அவனைச் சாடித் தீர்த்து விட்டார். ஏண்டா யோசனை சொன்னோம் என்றாகிவிட்டது பொன்னுரங்கத்துக்கு. அன்று முழுவதும் அவரைப் பார்க்கவே பயப்பட்டான் அவன்.

கடைசியில் முத்தையாவையும் விரோதித்துக் கொள்ளாமல், பொன்னுரங்கத்தையும் விரோதித்துக் கொள்ளாமல் அதிகம் ஜரிகை இல்லாத ஒரு பட்டுப் புடவையைக் கட்டிக் கொண்டு கூட்டத்துக்குச் சென்றாள் அநுக்கிரகா.

அந்த மைதானத்தின் மூலையில் யாருக்கும் தெரியாமல் காரை நிறுத்திக் கொண்டு காருக்குள் இருந்தபடியே மகளின் பேச்சைக் கேட்கப் போவதாக முத்தையா சொல்லியிருந்தார். மகளை ஏ.சி. செய்த மெர்ஸிடீஸ் பென்சில் அனுப்பி வைத்துவிட்டுத் தாம் ஒரு சாதாரண பியட்டில் பின் தொடர்ந்தார் முத்தையா. பொன்னுரங்கத்தையும் மகளோடு கூடப் போகச் செய்திருந்தார். பொன்னுரங்கத்துக்குக் கப்பல் போல ஏ.ஸி. செய்த பெரிய காரில் நெல்லுப்பேட்டை மைதானத்தில் போய் இறங்க வேண்டியதைச் சகித்துக் கொள்வது கூட இயலாத காரியமாயிருந்தது. கூச்சமும் பயமும் கொண்டான் அவன். அந்தக் கட்சியில் தலைவர் ஒருத்தர் தான் ஏ.சி. காரில் வருவார். மற்றவர்களும் அதுமாதிரி வருவது அவருக்குப் பிடிக்காது. அதை எல்லாம் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திணறினான் பொன்னுரங்கம். அவனுக்குச் சங்கடமாய் இருந்தது.

“சொன்னாலும் உங்கப்பாவுக்குப் புரிய மாட்டேங்குது. எடுத்த எடுப்பிலேயே இந்த ஆடம்பரமெல்லாம் கூடாது. ஏழையோ இல்லையோ ஏழை வேஷம் போடறதும் ஏழைக்காகப் பரிந்து பேசறதும் இன்னிக்கு அரசியல்லே முக்கியம். இல்லாட்டி, ‘மேட்டுக் குடி’ன்னு சொல்லியே எழுந்திருக்க முடியாதபடி கீழே அமுக்கி விட்டுடுவாங்கம்மா.”

“என்ன செய்யணும்ன்றீங்க தலைவரே இப்போ?”

“இங்கேயே காரைக் கொஞ்சம் தள்ளி நிறுத்திட்டு மைதானத்துக்கு நடந்தே போயிறலாம்! யாரும் பார்க்க மாட்டாங்க. மேடை பக்கத்திலேதான்.”

“இத்தினி நேரம் ஏ.சி.யிலே வந்துட்டு திடீர்னு கீழே இறங்கி நடந்தேன்னா வேர்த்து விறுவிறுத்து என் மேக்கப் எல்லாம் கலைஞ்சு போயிடுமே!”

“நீங்க மேக்கப்பிலேயே குறியா இருக்கீங்க. நாளைக்கி எலக்‌ஷன்லே நின்னு ஜெயிக்கணுமேன்னு கவலையில்லே உங்களுக்கு.”

“மேக்கப்புக்கும் எலெக்‌ஷனுக்கும் என்ன சம்பந்தம் தலைவரே?”

“உப்பரிகைவாசி - ஏ.சி. ரூம் அரசியல் பண்றவங்கன்னு பேராயிட்டுதோ, அப்புறம் இந்த ஜனங்ககிட்ட ஓட்டு வாங்கறது படு கஷ்டம் அம்மா. கனிவண்ணனை எதிர்த்து நீங்க நிற்காமே - நம்ம கட்சி டிக்கெட்டிலே கனிவண்ணனே உங்களை ப்ரப்போஸ் பண்ணி நின்னாக் கூட ஸ்லம் ஓட்டு விழணுமே? இந்தத் தொகுதியிலே மட்டும் அறுபது ஸ்லம்ஸ் இருக்கும்மா...”

“சில பெரிய நகரங்களைத் தவிர்த்துப் பார்த்தால், இந்தியாவே ஒரு பெரிய ஸ்லம்தான் தலைவரே!”

“முதல்லே இப்படிப் பேசறதை நிறுத்துங்க. இதுதான் மேட்டுக்குடி மனப்பான்மைங்கிறது.”

“சரி, பேசலே. பின்னாடியே அப்பா நம்மை ஃபாலோ பண்றாரு. நான் இறங்கி நடந்தா அவரு கூப்பாடு போடுவாரு. ஹி மே நாட் லைக் இட்.”

“பார்த்தீங்களா, பார்த்தீங்களா? மறுபடி இங்கிலீஷ்லே பூந்துட்டீங்களே? கூட்டத்திலேயும் ஏதோ ஞாபகத்திலே இங்கிலீஷ்லே பேசிடாதீங்க. முதல்லேயே பேரை ரிப்பேராக்கிடுவாங்க. நான் இங்கே எறங்கிக்கறேன். நீங்க மட்டும் வேணா மைதானத்து வரை கார்ல போயி இறங்கிக்குங்க. எனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லே.”

சொல்லிக் கொண்டே டிரைவரிடம் சொல்லிக் கீழே இறங்கிக் கொண்டான் பொன்னுரங்கம். அவனுடைய முன் ஜாக்கிரதையும் பயமும் சிறுபிள்ளைத்தனமாக அவளுக்குத் தோன்றின. வசதிகளைத் தேடிக் குவிக்கவே அரசியலில் இறங்கியிருக்கும் இவர்கள் வசதிகளையும் பணத்தையும் பண சௌகரியங்களையும் வெறுப்பது போலவும், இருபத்து நாலு மணி நேரமும், ஏழைகளுக்காகவே உயிர் வாழ்வது போலவும் நடிப்பது மிக மிக வேடிக்கையாக இருந்தது. எல்லாத் தரப்பு அரசியல்வாதிகளுமே இப்படி ஒரு ‘பாவனா சோஷியலிசத்தைப்’ பழகியிருந்தார்கள். பழக்கியிருந்தார்கள்.

ஆனால் பாமர ஜனங்கள் என்னவோ இன்னும் ரயிலில் வருகிறவனை விட விமானத்தில் பறந்து வருகிறவனைத் தான் அதிகம் மதித்தார்கள். வெறும் காரில் வந்து இறங்குகிறவனை விட ஏ.சி. காரில் வந்து இறங்குகிறவனை அதிக மதிப்போடு அண்ணாந்து பார்த்தார்கள். அதுதான் பிரத்யட்சமாகவும், நிதரிசனமாகவும் இருந்தது. ஆனால் பொன்னுரங்கம் மட்டும் கனிவண்ணனையும் மாம்பழக் கண்ணனையும் நினைத்துப் பயந்து நடுங்கினான். அவர்கள் தன்னை ஆவாரம்பட்டுப் பண மூட்டையின் அடிவருடி என்று கூறி விடுவார்களோ என்பதாகப் பயந்து செத்துக் கொண்டிருந்தான். கூட்டம் நடக்கிற இடத்துக்கு முன் கூட்டியே போய் அநுக்கிரகாவுக்கு வாழ்த்தொலி, கைதட்டல், விசில் முழக்கம் எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்தான் பொன்னுரங்கம். ‘அண்ணி அநுக்கிரகா!’ என்று ஒருவன் குரல் எழுப்பவும், ‘வாழ்க! வாழ்க!’ என்று பல குரல் ஒலிகள் தொடர்ந்து ஓய்ந்தன. அவள் கூட்டத்தை நோக்கிக் கைகூப்பி முகமலர்ந்து வணக்கம் சொன்னாள். மேடையைச் சுற்றியிருந்தவர்களின் பலவிதமான குரல்களை அங்கிருந்து அவளே கேட்க முடிந்தது.

“பாருய்யா! லண்டன்லே படிச்ச பொண்ணு, நம்ப தலைவரு மேலே பிரியப்பட்டுப் புச்சா வந்து கட்சியிலே சேர்ந்திருக்கு.”

“சும்மா சினிமா ஷ்டாருங்க கணக்கா அப்பிடியே ஜொலிக்குதுப்பா.”

“அத்தினி மேல் நாடெல்லாம் போயிப் பெரிய படிப்புப் படிச்சிருந்தும் என்ன பணிவு, என்ன பண்பு பாருப்பா! மேடையேறினதும் சனத்தை மதிச்சுக் கும்புடறாங்க, பாரு.”

“இந்தப் பொண்ணு முகத்திலே நல்ல களை. சிரிச்சாலே போதும், பேச்சு வேற எதுக்குங்கிறேன்.” இவையெல்லாம் காதில் விழுந்து அநுக்கிரகாவைப் பெருமிதமாக உணர வைத்தன.

நிமிர்ந்து உட்கார்ந்தாள் அவள். திடீரென்று மூக்குச் சளி ஒழுகிச் சலைவாய் வடியும் ஒரு குழந்தையை யாரோ அவளிடம் கொண்டு வந்து நீட்டி, “ஒரு பேர் சூட்டுங்க அண்ணி!” - என்றார்கள்.

அவள் தயங்கினாள். உடனே பொன்னுரங்கம் ஓடி வந்து அவள் காதருகே முணுமுணுத்தான்: “குழந்தையைச் சிரிச்ச முகத்தோட வாங்கி மைக்கிலே போயி நின்னு ‘தமிழ்ச் செல்வி’ன்னு பேர் சூட்டுங்க. எல்லாரும் கைத்தட்டுவாங்க.”

அத்தியாயம் - 6

நல்லவேளை, பொன்னுரங்கம் உரிய நேரத்தில் அநுக்கிரகாவை எச்சரித்திருந்தான். இல்லை என்றால் மூக்குச்சளி ஒழுகுகிற அந்த அழுக்குக் குழந்தையைக் கைகளால் வாங்கவே கூசி, ‘நான்ஸென்ஸ்! வொய் ஷுட் ஐ?’ - என்று பொரிந்து தள்ளியிருப்பாள். அவளுடைய பெரிய பலவீனம், பல ஆண்டு ஆங்கிலப் பள்ளிப் படிப்பும் இங்கிலாந்து வாசமும் சேர்ந்து, இன்னமும் கூட உணர்ச்சிகரமான நேரங்களில் ஆங்கிலமே பேச வந்தது. பலவற்றிற்குச் சட்டென்று தமிழ்ச் சொற்களே கிடைக்காமல் திண்டாடினாள் அவள். பல சமயங்களில் இப்படி நேர்ந்தது. புலவரும் பொன்னுரங்கமும் அவள் தந்தையும் அரும்பாடுபட்டு அவ்வப்போது அவளை உஷார்ப்படுத்தித் தமிழுக்குக் கொண்டு வந்தார்கள். தமிழில் பேசும்படி ஞாபகப்படுத்தினார்கள்.

“ஐயாம் அஃப்ரைட் டு ஸே” போன்ற டிபிகல் இங்கிலீஷ் பிரயோகங்களும், எதற்கெடுத்தாலும் ‘ப்ளீஸ்’ போடுகிற, ‘குட் யூ ப்ளீஸ்’ ‘வுட் யூ ப்ளீஸ்’ போன்றும் பிரயோகித்தே பழக்கப்பட்ட அவளுக்குக் கையெழுத்துக் கூடப் போட வராத கைநாட்டுப் பேர்வழிகளே அதிகம் நிறைந்த ம.மு.க.வில் பழகுவது தர்மசங்கடமாக இருந்தது. செயற்கையாக ஒட்டிக் கொள்ள முயல வேண்டியிருந்தது.

’ப்ளீஸ்’ இணைக்காமல் வெறும் ‘குட் யூ’ ‘கேன் யூ’ மாதிரி மொட்டையாக ஆரம்பித்தாலே ‘குட் யூ ப்ளீஸ்’ என்று திருத்துவதோடு, ‘ப்ளீஸ் கரெக்ட் யுவர் இங்கிலீஷ்’ என்று டெலிஃபோன் ஆப்பரேட்டர்களே ஆங்கிலத்தைத் திருத்தக்கூடிய மொழி நாகரிகம் செழித்த பிரிட்டனில் இருந்துவிட்டு, பழகிவிட்டு, நாகரிகங்களும், இங்கிதங்களும் கிராம் என்ன விலை என்று கேட்கிற மனிதர்கள் மத்தியில் வந்து இங்கே பழகுவது சிரமமாகத்தான் இருந்தது. அவள் ம.மு.க.வில் சேர்வதற்கு முன்பு வரை பழகிய இடங்களும் பழகிய மனிதர்களும் அவளது ‘ஆவாரம் பட்டு ஹவுஸ்’ தரத்துக்கு உயர்ந்த ஜமீன், மிட்டா, மிராசுகளும், பழைய சமஸ்தானங்களைச் சேர்ந்தவர்களுமாக இருந்ததால், தொடர்ந்து இங்கிலாந்தின் சூழலே இங்கும் கிடைத்தது. சமஸ்தானங்கள் தொலைந்து போயும் பழைய பாவனைகளுடனேயே ‘கிளப்’ மீட்டிங்குகளிலும், பார்ட்டிகளிலும், ‘மீட் மிஸ்டர் ராஜ்குமார் - கொட்டாபுரம் பிரின்ஸ்’ என்றும், ‘மீட் மிஸ் அநுக்கிரகா - ஆவாரம் பட்டு யுவராணி’ என்றுமெல்லாம் பழைய ‘ஸ்நாபெரி’யுடன் அறிமுகங்கள் செய்து கொண்டிருந்த இடங்களில் பழகும் போது அவளால் இயல்பாகவே பழக முடிந்தது. ஆண்கள், பெண்கள் எல்லாருடனும் சகஜமாகப் பழக முடிந்தது. ம.மு.க. சூழலில் பழகும் போதுதான் செயற்கையாக அவள் நடிக்க வேண்டியிருந்தது. வார்த்தைகள் மறந்து போய்த் தமிழுக்குப் பதில் ஆங்கிலம் வந்தது. தமிழிலேயே எழுதப் படிக்கத் தெரியாத பொன்னுரங்கத்திடம் போய் ஆக்ஸ்ஃபோர்டு இங்கிலீஷில் பேசினால், அவன் பயந்து ஓடாமல் என்ன செய்வான்? ‘ஹவ் ஆர் யூ மிஸ்டர் பொன்னுரங்கம்?’ என்றோ, ‘ஹவ் டூ யூ டூ மிஸ்டர் பொன்னுரங்கம்?’ என்றோ வாய் நுனி வரை வந்து விடுகிற விசாரிப்பைத் தமிழாக்கி அப்புறம் ம.மு.க.வாகக் கொச்சைப்படுத்தி, “இன்னா தலைவரே! சௌக்கியமா?” என்று விசாரிக்க வேண்டியிருந்தது. ஒருமுறை ஓர் எதிர்பாராத இடத்தில் பொன்னுரங்கத்தைச் சந்திக்க நேர்ந்து தன் நினைவே இல்லாதவளாக அவனிடம் போய், “ஹலோ! வாட் ஏ ப்ளஸெண்ட் சர்ப்ரைஸ்?” என்று ஆரம்பித்த போது, அவன் மிரண்டு, “இன்னான்றீங்க இப்போ?” என்று பதிலுக்குக் கேட்ட பின்புதான், அநுக்கிரகாவுக்குச் சுய உணர்வு வந்து உறைத்தது. மொழி, மேனர்ஸ், பழக்கம் - இவைகளில் வேறு வேறான உலகங்களில் அவள் பழக வேண்டியிருந்தது. அதில் தடுமாற்றங்கள், குழப்பங்கள் நேர்ந்தன. இரண்டு குதிரைகளின் மேல் ஒரே சமயத்தில் சவாரி செய்வது போலிருந்தது. இருந்தும் முத்தையா உற்சாகமூட்டினார். தைரியப்படுத்தினார். அதனால் எப்படியோ சமாளித்தாள்.

ஒரு நாள் ம.மு.க. பார்ட்டி ஆபீஸுக்கு ஜீன்ஸ் பனியனுடன் கிளம்பிவிட்ட அவளைத் தடுத்து நிறுத்தி, “அநு, இதெல்லாம் சினிமாவிலே பார்த்தா ரசிப்பாங்க, விசிலடிச்சு வியப்பாங்க. வாழ்க்கையிலே ஒத்துக்க மாட்டாங்க. ஒரே வார்த்தையிலே, ராங்கி பிடிச்சவ, திமிர்க்காரின்னுடுவாங்க. ஜீன்ஸோட போவாதே” என்றார் முத்தையா. ஆரம்பத்தில் இப்படி நிறையத் தவறுகளைச் செய்தாள் அவள். பின்னால் வரவரச் சுதாரித்துக் கொண்டாள். இந்தியாவும், தமிழ்நாடும் அவளுக்கு மெல்ல மெல்லப் புரிய ஆரம்பித்தன.

‘இன்றிருக்கும் மொழி சம்பந்தமான விரோதங்கள் பலதரப்பட்டவை. ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும், பிரதேச மொழிகள் மட்டுமே தெரிந்தவர்களுக்கும் நடுவிலுள்ள விரோதம்; ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும், எந்த மொழியுமே சரியாகத் தெரியாதவர்களுக்கும் நடுவில் உள்ள விரோதம்; இந்தி தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் நடுவேயுள்ள விரோதம்; இப்படி விரோதங்களின் பட்டியல் மட்டுமே இருந்ததே ஒழியச் சிநேகிதங்களின் பட்டியலே இல்லாதது துரதிர்ஷ்டமாயிருந்தது. அரசியலில் ஈடுபடுமுன் அநுக்கிரகாவுக்கு முத்தையா இதை விளக்கினார். அவர் விளக்காமல் மீதம் விட்டிருந்தவற்றைப் பொன்னுரங்கம், புலவர் கடும்பனூர் இடும்பனார் போன்றவர்களிடமிருந்து தெரிந்து கொண்டிருந்தாள். தமிழ் தெரிந்திருந்தாலும், தெரியாவிட்டாலும் பரவாயில்லை, ‘நான் தமிழன், தமிழச்சி - என் இரத்தம் தமிழ் இரத்தம் - சதை தமிழ்ச் சதை - நரம்பு தமிழ் நரம்பு - எலும்பு தமிழ் எலும்பு’ என்று பேசியே தமிழ்நாட்டில் காலம் தள்ளிவிடலாம் என்பது புரிந்திருந்தது. அநுக்கிரகா போன்ற தமிழே படிக்காத பெண்ணுக்கு இந்த நிலைமை மிகவும் உதவியாகவும், அநுசரணையாகவும் இருந்தது. அவளுடைய அந்த நெல்லுப்பேட்டை மண்டி மைதானத்துப் பிரசங்கத்துக்கு ஆரம்பம், முடிவு முதலிய பாணிகளைப் புலவரிடம் கேட்டுக் கொண்டு நடுவே பேச வேண்டியதைத் தானே பார்த்துக் கொள்வதாகச் சொல்லியிருந்தாள் அவள். ஆனாலும், புலவரோ, பொன்னுரங்கமோ, முத்தையாவோ அவளைக் கண்ணைக் கட்டி நடுக்காட்டில் விட்ட மாதிரி அப்படித் தனியே விட்டுவிடத் தயாராகயில்லை. ஒரு கூட்டுத் தயாரிப்பாகக் கலந்து பேசிப் புலவருடைய கையெழுத்தில் ஒரு முழு நீளப் பேச்சைத் திட்டவட்டமாக அவளிடம் எழுதிக் கொடுத்திருந்தனர். தற்செயலாகப் புரட்டிப் பார்த்து அதில் ஒரிரு வார்த்தைகளைத் தவிர மற்றவை தன் வாயில் நுழைய முடியாத அளவு கடுமையாகவும், பல்லை உடைப்பனவையாகவும் இருப்பதைப் பார்த்துப் பயந்தாள் அநுக்கிரகா.

“சீவக சிந்தாமணிச் சிங்கமே, சீறி எழு! சிறுத்தையே, பொறுத்தது போதும்! பொங்கி எழு! புறநானூற்றுப் புலியே, புறப்படு! அகநானூற்று யானையே, மதம் கொள்!” என்கிற பாணியில் ஆரம்பமாயிற்று புலவர் அவளுக்குத் தயாரித்திருந்த பிரசங்கம். அநுக்கிரகா புலவரைக் கேட்டாள்:

“அது சரி, நாம இதை மக்களுக்காக மக்கள் முன்னாலே பேசப் போறோமா, அல்லது சிங்கம், புலி, சிறுத்தை, யானைகளுக்காக ஏதாவது ஜூவிலே போய்ப் பேசப் போறோமா? உங்க பேச்சிலே ஒரு இடத்திலேயாவது, ‘மக்களே!’ ‘ஆண்களே!’ ‘பெண்களே!’ன்னு கூப்பிட மாதிரி வரலீங்களே?”

“மக்களையே சிங்கம், புலின்னு வர்ணிக்கிறோம். அதான் அர்த்தம்.”

“இந்த நாட்டிலே இன்னிக்கு மக்கள் யாரும் சிங்கம், புலி மாதிரி இருக்கிறதாத் தெரியலீங்களே. கழுதை மாதிரியில்லே பொறுமையா இருக்காங்க? சுமக்கறாங்க...?”

அநுக்கிரகாவின் இந்தக் கேள்விக்குப் புலவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். அவள் அத்துடன் அவரை விட்டு விடவில்லை. மேலும் விடாமல் துளைத்தாள்.

“அனிமல் லைஃப் பத்தி எனக்குக் கொஞ்சம் தெரியும் புலவரே. சில புத்தகங்கள் படிச்சிருக்கேன். கிர் ஃபாரஸ்ட் லயன், ஹிமாலயன் டைகர், ராயல் பெங்கால் டைகர், ஆப்ரிகன் ஸஃபாரின்னு எல்லாம்தான் அதிலே வருமே ஒழிய, ‘புறநானூற்றுப் புலி’ன்னு ஒரு வெரைட்டியை நான் கேள்விப்பட்டது இல்லியே? அது என்னங்க அது? கொஞ்சம் விளக்கித்தான் சொல்லுங்களேன் எனக்கு.”

விவரம் புரியாமல் தான் அவள் இப்படிக் கேட்கிறாள். ஆனால் புலவருக்கு அவள் தன்னைக் கிண்டல் செய்கிறாளோ என்று தோன்றியது. “தமிழ்லே இந்த மாதிரி எல்லாம் ஆவேசமாப் பேசினாத்தான் ரசிப்பாங்க. ஆக்ரோஷமா இருக்கும். கைத்தட்டல் வாங்கலாம்.”

“பேசற சப்ஜெக்ட் என்னன்னு தெரியாமல், சிங்கமே, புலியே, கழுதையே, கரடியேன்னு மணிக்கணக்கா முழங்கினா எப்படி?”

“சப்ஜெக்டைப் பத்தி யாரு கவலைப்படறாங்க? சும்மாப் பூப் பூவா வாண வேடிக்கை கணக்கா வார்த்தைகளை அள்ளி விட்டுட்டு ஜால வித்தை பண்ணினா, மூணு மணி நேரம் கூடக் கேப்பாங்க.”

இப்படிக் கூட்டம் கேட்க வரும் தமிழ் மக்களைப் பற்றிப் புலவர் கூறிய ‘கான்ஸெப்ட்’ அநுக்கிரகாவிற்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாயிருந்தது. அதனால் புலவரிடம் அதைப்பற்றி அவளும் மேற்கொண்டு விவாதிக்கவில்லை. புலவரும் பேசாமலே விட்டுவிட்டார். ஒன்றை மட்டும் வற்புறுத்தினார்.

“தந்தி விலாசம் மாதிரி சுருக்னு நம்ம கட்சிக்காரன் அடையாளம் புரிஞ்சுக்கிற எடம் ‘சதையின் சதையான தமிழ்ப் பெருமக்களே!’ என்பதுதான். தொடங்கறப்பவும், முடிக்கிறப்பவும் அதை எப்பிடியும் கொண்டாந்துடணும்.” என்றார் புலவர் இடும்பனார்.

நெல்லுப்பேட்டை மைதானத்துக் கூட்டத்துக்குப் புறப்படும்போது எதற்கும் கையோடு இருக்கட்டும் என்று புலவர் எழுதிக் கொடுத்திருந்த கத்தையை எடுத்து வைத்திருந்தாள் அநுக்கிரகா. வேறு வழியில்லாமல் எதுவும் தோன்றாமல் போனால், அதிலிருந்து கொஞ்சம் படித்து விடலாம் என்று எண்ணினாள். கடைசி பட்சமாகத்தான் அந்த நினைப்பு அவளுக்கு இருந்தது. அது அவளுக்கு முதல் மேடை அநுபவம்.

அநுக்கிரகாவுக்கு முன்பாகப் பேசிய ஒவ்வொரு பேச்சாளனும் அவளுக்கு முன்பின் அறிமுகமே இல்லாத புது நபர்களாயிருந்தும் அவளை வானளாவப் புகழ்ந்தார்கள். வார்த்தைகள் பைசாவுக்குப் பத்து சதவிகிதம் என்று தாராளமாக வந்தன.

“அழகே உருவாக, அடக்கமே வடிவாக மேடையில் அமர்ந்திருக்கும் அண்ணி அநுக்கிரகா அவர்களே!” - என்றும்,

“ஆக்ஸ்போர்டிலே ஆங்கிலத்தை கற்று அறிவு பல பெற்ற அண்ணியார் சேரத் தேர்ந்தெடுத்த இயக்கம், எம் தலைவன் ஏந்திய இயக்கமே!” - என்றும்,

“மரியாதை மிகு அநுக்கிரகா அண்ணியாரின் பொன்னான திருவடிகளை வணங்கி, என் பேச்சைத் தொடங்குகிறேன்,” - என்றும் விதவிதமாகப் பேச்சுக்கள் அமைந்திருந்தன. கேட்ட வார்த்தைகளின் கனம் தாங்காமல் அவளுக்குத் தலை கனப்பது போலிருந்தது. அது தலைக்கனமா, தலைவலியா என்று இனம் புரியாததாயும் இருந்தது. ஓர் இளைஞன் சற்று அதிகமாகவே சென்று, “அன்னை அநுக்கிரகா தேவி அவர்கள் முன்பு பேசக் கிடைத்த இந்த வாய்ப்புக்காக உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்,” - என்று இன்னும் திருமணம் கூட ஆகாத அவளை, அவளே வெட்கப்பட்டுக் கூசும்படி அன்னைப் பட்டமும் தேவிப் பட்டமும் கொடுத்து விளித்தான்.

கொஞ்சம் எடுப்பான அழகான யார் வந்து நாற்காலியைப் போட்டுக் கொண்டு மேடையில் அமர்ந்தாலும், உடனே அவர்கள் தலைமையை ஏற்று வணங்கி, அடிபணிந்து விட அவர்கள் தயாராயிருந்தார்கள். அவர்களிடையே தன்னைப் போல, அழகும், வசதியும் உள்ள ஒருத்தி தலைவியாக உயர்வது மிக மிகச் சுலபம் என்று அநுக்கிரகாவுக்கே புரிந்தது. வைக்கோல் அள்ளிப் போடுவது போலவும், சாணம் வாரிக் கொட்டுவது போலவும் வார்த்தைகளை மேடையில் வாரிப் போட்டார்களே ஒழிய, அங்கு யாரும் எதற்காகவும் வார்த்தைகளின் அர்த்தம் பற்றியோ கனபரிமாணம் பற்றியோ கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. முதல் தடவையாக இப்போதுதான் மேடையேறியுள்ள அவளை மேதை என்கிறார்கள். உளறிக் கொட்டிய மற்றொரு பேச்சாளனை நாவேந்தர் நாராயணனார் என்றார்கள். கடுகை மலையாக்கினார்கள். மலையைக் கடுகாக்கினார்கள். மிகைப்படுத்தலும், குறை கூறலும், பயங்கரமான அளவு எல்லை கடந்து போய் இருந்தன. தங்கள் புகழ், தங்களைச் சார்ந்தவர்களின் புகழ் அல்லது, ப்ளஸ் பாயிண்டுகள் கடுகாக இருந்தாலும் மலையாக்கப்பட்டன. தங்கள் எதிரிகள் தங்களைப் பற்றிக் கூறும் குறை விமரிசனங்கள் மலையாக இருந்தாலும் கடுகாக்கப்பட்டன. எதிரிகளின் கடுகத்தனை குறைகளை மலையாக்கி விவரிக்கத் தயங்காத கட்சிகள் தங்களது மலையத்தனை குறைகளைக் கடுகுபோல் சுருக்கிக் கொண்டு திருப்திப்பட்டன.

ஒரு ம.மு.க. உறுப்பினர் என்ற முறையில் அல்லாமல் சாதாரணமாகவே அவளுக்கு இது புரிந்தது. ஒவ்வோர் அரசியல் கட்சியும் தன்னையும் தனக்கு வேண்டியவர்களையும் பாதுகாத்து, தன் எதிரிகளைக் கண்மூடித்தனமாகக் கண்டித்தது. தனக்கு வேண்டியவர்களின் மாபாதகங்களைக் கூட மறைக்கவும் மறக்கவும் உதவியது. தன்னெதிரிகளின் சிறு தவறுகளைக் கூடப் பூதக் கண்ணாடி கொண்டு பெரிதாகப் பார்க்க முயன்றது. அநுக்கிரகா அந்த மேடையில் அமர்ந்திருந்த போது, இதை மிகவும் நன்றாகவே கண்டு உணர்ந்தாள்.

அத்தியாயம் - 7

கூட்டம் அலை மோதியது. நெல்லுப்பேட்டை மைதானத்தில் எள் தூவினால் கீழே தரையில் விழ இடைவெளி இல்லை. மரங்கள், கட்டிடங்களின் மாடிகள், சுவர்களில் கூட ஏறி நின்று கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. என்ன பேச வேண்டும் என்ன வரிசையில் பேசவேண்டும் என்று நினைக்க நினைக்க மறந்தன. நினைத்த வேகத்தை விட அதிகச் சுருக்கில் அவை மறந்தது கண்டு அநுக்கிரகா பதறினாள். சுதந்திரத்திற்குப் பிறகு பிள்ளையார் சுழி போட்ட பாமர மக்களின் கட்சியாகிய ம.மு.க. வில் பரம்பரை சமஸ்தானாதிபதி போன்ற ஆவாரம்பட்டு ஹவுஸ் கோடீஸ்வரர் சர் வி.டி.முத்தையாவின் ஒரே மகள் அத்தனை தூரம் மேல்நாட்டில் போய்ப் படித்தவள் ஏன் சேர்ந்திருக்கிறாள், என்ன பேசப் போகிறாளோ, எப்படி பேசப் போகிறாளோ, எதில் பேசப் போகிறாளோ, தமிழிலா, ஆங்கிலத்திலா என்றெல்லாம் ஆவலோடு காண வந்த கூட்டம் பயங்கரமாகக் கூடியிருந்தது.

நேரம் ஆக ஆக அவளுக்கு எல்லாமே மறப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. எதுவுமே நினைவு வரவில்லை. பொன்னுரங்கத்தைக் கூப்பிட்டு அவன் காதோடு காதாக, “சீக்கிரமா என்னைப் பேசவிட்டால் என்ன? எனக்கு எல்லாமே மறந்து விடும் போல இருக்குத் தலைவரே,” என்று முடுக்கினாள்.

அவனோ நிர்தாட்சண்யமாக மறுத்தான். “சிறப்புப் பேச்சாளர்னாக் கடைசியிலேதாம்மா பேசணும். அப்பத்தான் ஒரு ‘சுகிர்’ இருக்கும்,” என்றான். மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு மணிக்கணக்கில் மேடையில் உட்கார்ந்திருப்பது அவளுக்குப் புது அனுபவமாய் இருந்தது. யாரோ தொடர்ந்து தன் தலைமேல் குப்பைக் கூளத்தை இடைவிடாமல் வாரிக் கொட்டுவதைச் சிரித்த முகத்தோடு சகித்துக் கொள்ள நிர்ப்பந்தப் படுத்தப்பட்டு உட்கார்ந்திருப்பது போல் அவள் இருக்க நேர்ந்தது.

மேடையேறிப் பேசுவதுதான் அலுப்பூட்டுகிற காரியம் என்று நேற்றுவரை அவள் நினைத்திருந்தாள். கேட்பது பேசுவதை விடப் பல மடங்கு அலுப்பூட்டுகிற காரியம் என்று இன்று இப்போதுதான் முதன் முதலாக அவளுக்குப் புரிந்தது. கடைசியாக முத்தாய்ப்புப் பேச்சுப் பேசும் சிறப்புப் பேச்சாளர்கள் பலர் மூளை குழம்பிப் போய் ஜன்னி கண்டவன் மாதிரி உளறுவதற்கு உண்மையான காரணமே அவர்கள் முந்தி முப்பது பேச்சாளரைக் கேட்க நேரிடுவதுதானோ என்று கூட அவளுக்கு இப்போது தோன்றியது. சில கெட்டுக்காரச் சிறப்புப் பேச்சாளர்கள் தாங்கள் பேசுகிற நேரம் வரை கூட்டத்துக்கே வராமல், சரியாக ஒரு நிமிடத்துக்கு முன் காரில் வந்து இறங்குவதற்குக் காரணம் இருப்பது இப்போது அவளுக்குப் புரிகிற மாதிரி இருந்தது.

ஆனால் எடுத்த எடுப்பிலேயே அவள் அப்படிச் செய்ய முடியாது. ‘ராங்கிக்காரி’ என்று கெட்ட பேராகிவிடும். திணறிப் போய் வேர்க்க விறுக்க மேக்கப் கலைந்து வறட்சியோடு மேடையில் உட்கார்ந்திருந்தாள்.

கடைசியில் ஒன்பது மணிக்கு மேல் பொன்னுரங்கம் அவளைப் பேச அழைத்ததான்.

“அழகுத் தென்றலாக, அறிவுப் புயலாக, இயக்க இடிமுழக்கமாக அண்ணியார் இப்போது பேசுவார்கள்,” என்று அவன் அறிவித்ததும் கைகால் பதற, நாக்கு உள்ளேயே பசை போட்டு ஒட்டினாற் போல் ஒட்டிக் கொள்ள எப்படியோ சமாளித்து எழுந்திருந்து மைக் முன் வந்து நின்றாள். ஒரே கரகோஷம், பட்டாஸ் ஒலி முழக்கம். விசில் ஒலிகள். ஒரே சமயத்தில் தென்றல், புயல், இடி முழக்கம் ஆகிய மூன்று நிலைகளிலும் எப்படிப் பேசுவதென்று கையும் ஓடவில்லை. எப்படியோ சுதாரித்துச் “சதையின் சதையான...” என்று அவள் தொடங்கியதுமே மைக்குக்கும் அவளுக்கும் இடையே ஒருத்தன் தலையை நீட்டி, ”ஆறாவது வட்டம் அம்மிக் குப்பம் ம.மு.க. சார்பில் அண்ணியாரவர்களுக்கு இந்த ரூபாய் நோட்டுக்களை மாலையாக அணிவிக்கிறேன்” என்று புத்தம் புது ஐந்து ரூபாய் நோட்டுக்களாலான மாலையை அவள் கழுத்தில் போட வந்தான். அவள் தற்காப்போடு தடுத்து அதைக் கைகளாலேயே வாங்கிக் கொண்டாள். மறுபடி அவள் மைக்கைப் பற்றி, “என் அருமைச் சதையின் சதையான...” என்று தொண்டையின் சக்தியை எல்லாம் திரட்டிக் கொண்டு ஆரம்பித்த போது, “மாலைக்குப் பதிலாக அண்ணியாருக்கு இந்த இரண்டு ரூபாயை அளிக்கிறேன்,” என்று ஒரு கிழவர் ஊடே புகுந்து விட்டார். அப்புறம் கைத்தறித் துண்டு போடுகிறவர்களின் பட்டாளம். மறுபடி மாலைக்குப் பதிலாக ரூபாய் நோட்டு அளிக்கிறவர்களின் வரிசை. அதில் ஒரு வேடிக்கை அநுக்கிரகாவுக்குத் தாத்தாவாக வேண்டிய வயதானவர் கூட அவளை ‘அண்ணியார்’ என்று தான் மேடையில் அழைத்தார். ஓர் அரை மணி நேரம் மாலை, துண்டு, ரூபாய் நோட்டுப் பேர்வழிகள் அவளைப் பேசவே விடாமல் ‘டிரில்’ வாங்கிவிட்டார்கள். அவளுக்கு இந்தக் களேபரத்தில் எல்லாமே மறந்து போய்விட்டது.

கூட்டமோ அமைதியாக அவள் பேச்சைக் கேட்க எதிர்பார்த்துக் காத்திருந்தது. போர்க்களத்தில் எல்லா ஆயுதங்களையும் இழந்த நிராயுதபாணிபோல், ‘இன்று போய் நாளை வா,’ என்று யாராவது கருணை காட்ட வேண்டிய நிலையிலிருந்த அவளுக்குக் கையில் இருந்த ஒரே சிறு துரும்பு இடும்பனார் எழுதிக் கொடுத்திருந்த கத்தை தான். மூச்சைப் பிடித்துக் கொண்டு உரத்த குரலில் தப்பும் தவறுமாகத் தட்டுத் தடுமாறி திக்கித் திணறி அதைப் படித்துப் பார்க்க ஆரம்பித்தாள். அவள் எதிர்பார்த்துப் பயந்தது போல் கூட்டம் கேலியிலோ, பரிகாசத்திலோ இறங்கவில்லை. ஊசி விழுந்தால் கூட ஓசை கேட்கிற மௌனத்தோடு செவிமடுத்தது. நடுநடுவே மேடையிலிருந்து பொன்னுரங்கமே முதல் கைத்தட்டலைத் தொடங்கிக் கொடுத்துக் கூட்டத்தையும் கைத்தட்ட வைத்தான். மேடை சூட்சுமங்கள் அவனுக்கு அத்துபடி ஆகியிருந்தன.

“லண்டன்ல படிச்ச பொண்ணு இன்னா ஷோக்காத் தமிழ் பேசுது பார்த்தியா?”

“பிரமாதம்ப்பா, கொன்னுட்டாங்க போ.”

“இனிமே இவுங்கதான் நம்ம பேடையிலே ஷ்டார் ஸ்பீக்கர்.”

சீவகசிந்தாமணி சிங்கம், புறநானூற்றுப் புலி, அகநானூற்று யானை எல்லாவற்றுக்குமே ஓரொரு கைத்தட்டல் எழுந்து ஓய்ந்தது.

வைகை எக்ஸ்பிரஸ் ஸ்பீடில் படு வேகமாகப் படித்ததில் இடும்பனார் எழுதிக் கொடுத்திருந்த கத்தை இருபது நிமிஷம் தான் வந்தது. ஆனாலும் கூட்டம் அவளது பேச்சைக் கொண்டாடவே செய்தது. “சதையின் சதையான தமிழ்ப் பெருமக்களுக்கு அன்பு வணக்கமும் ஆழமான நன்றியும் கூறி முடிக்கிறேன்” என்று அவள் பேச்சை முடித்த போது, கடலலைபோல் எழுந்த கரகோஷம் ஓய ஐந்து நிமிடங்களுக்கு மேலே ஆயிற்று.

அவளுக்கே அது ஆச்சரியமாக இருந்தது. தனக்கும் புரியாமல், கேட்கிறவர்களுக்கும் புரியாமல் புலவர் கடும்பனூர் இடும்பனார் வார்த்தைகளைக் கொண்டு செய்திருந்த வாணவேடிக்கை மக்களிடம் இத்தனை அமோகமான வரவேற்பைப் பெற்றதைப் பார்த்து வியந்தாள். ஏதாவது கடமுடவென்று ஓசை வருகிறாற் போல் மேடையிலே சத்தம் போட்டால் கூட இந்த அப்பாவி மக்களுக்கு அதுவே போதுமோ என்று கூடத் தோன்றியது. இத்தனைக்கும் புலவர் எழுதிக் கொடுத்திருந்ததை அவள் தப்புத் தப்பாகத்தான் உளறிக் குழறி வாசித்திருந்தாள். மேடையிலே விழுந்த ரூபாய் நோட்டு மாலையையும் மாலைக்குப் பதிலாகக் கிடைத்த ரூபாய்களையும் அவளிடம் பத்திரமாகக் கேட்டு வாங்கிக் கொண்ட பொன்னுரங்கம், அவளுக்கு மட்டுமே கேட்கும் தணிந்த குரலில், “அடுத்த கூட்டத்துக்கு வேணுமில்லே? நீங்க பாட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போயிட்டா எப்படி?” என்று சிரித்தபடியே கேட்டான்.

எல்லாம் அப்பாவின் பணத்தில் பொன்னுரங்கத்தின் ஏற்பாடுதான் என்பது அவளுக்கு அப்போது புரிந்தது.

“ஒரு பத்திருபது ஊழியருங்க கூட்டம் முடிஞ்சதும் சாப்பிட வருவாங்க, ஏற்பாடு பண்ணிடுங்க” என்று பொன்னுரங்கம் முத்தையாவிடம் முன்கூட்டியே சொல்லியிருந்தான்.

“நாங்க சைவமாச்சேப்பா? உன் ஆளுங்க எப்படி? இட்லி, வடை போதுமா?”

“போதாதுங்க. ஸ்பெசலா முனியாண்டி விலாஸ்ல சொல்லி வச்சிடுங்க.”

“ஒவ்வொரு கூட்டத்துக்கும் இதெல்லாம் பண்ணணுமா?”

“கட்டாயம் பண்ணணும்! இல்லாட்டிக் கொடி கட்ட, மேடை போட, தோரணம் தொங்கவிட, பட்டாஸ் வெடிக்க ஆள் அம்புட மாட்டான். கூட்டம் முடிஞ்சு பிரியாணி போட்டாத்தான் வருவாங்க.”

“சரி! கைத்தறித் துண்டு, மாலை, ரூபாய் நோட்டு, போஸ்டர், மைக் செட் செலவு மாதிரிப் பிரியாணி செலவுன்னு ஒரு தொகை பட்ஜெட்டிலே ஒதுக்கிட வேண்டியதுதான்” என்று சிரித்தபடியே அதற்கு இசைந்திருந்தார் முத்தையா.

சும்மா ஒரு பத்து இருபது பேர் என்று பொன்னுரங்கம் ஒரு வார்த்தைக்குச் சொல்லியிருந்தானேயொழிய, கூட்டம் முடிந்ததும், லாரிகளிலும், டிராக்டர்களிலும் இருநூறு பேருக்கு மேல் ஆவாரம்பட்டு ஹவுஸில் மொய்த்து விட்டார்கள். அத்தனை பேருக்கும் பிரியாணி சாப்பாடு போட்டு அனுப்ப இரவு ஒரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அதில் ரிங்லீடர்கள் மாதிரி இருந்த சில அடியாட்களுக்கு போகிற செலவுக்கு ரொக்கமும் தரவேண்டியிருந்தது. முதல் கூட்டமான நெல்லுப்பேட்டை மைதானக் கூட்டத்துக்கு கிட்டத்தட்ட ஐயாயிரம் ரூபாய்க்கு மேலே செலவாகிவிட்டது, முத்தையாவுக்கு.

எல்லோரும் போன பின், முத்தையாவும் பொன்னுரங்கமும் தனியான போது, “என்னப்பா, வீட்டைச் சுத்தி ஒரே சேரியும் கக்கூஸுமா ஆக்கிட்டாங்களேங்கிற எரிச்சல்லே அநுவை அரசியலில் இறக்கினா உன் ஆளுங்க வீட்டையே ஸ்லம் ஆக்கிடுவாங்க போலிருக்கே?” என்றார் முத்தையா.

“பொறுத்தார் பூமியாள்வார்னு பழமொழி இருக்குங்க.”

“பழமொழி சரி! நடைமுறையிலே பூமியை ஆள்றதுக்கு முன்னாடியே செலவழிச்சுச் செலவழிச்சுத் திவாலாயிடும் போலத் தோணுதே!”

“பின்னே எப்படிக் கனிவண்னனைக் கீழே இறக்கிட்டு அநு அம்மாவை இந்தத் தொகுதி எம்.எல்.ஏ. ஆக்குறது? இப்போ வேணும்னாப் போய்ப் பாருங்க. கனிவண்ணன் வீட்டிலே ஒரு லாரிலோடு ஜனம் சாப்பிட்டுக் கைகழுவிக்கிட்டிருக்கும்! இன்னிக்குப் பாலிடிக்ஸ்லே இதெல்லாம் மாமூலாயிடிச்சுங்க. வேற வழியே இல்லே. சம்பாதிக்கணும்னா முதல்லே விட்டுப் பிடிச்சுத்தான் ஆவணும்.”

“சரி, தொலையட்டும், அடுத்த கூட்டம் எங்கே செட்டப் பண்றே? எனக்கு இது ஒரு ‘பிரஸ்டிஜ் இஷ்யூ’ வாயிடிச்சு. அந்தப் பயல் கனிவண்ணனைக் கீழே இறக்கி அநுவை அரசியலுக்குக் கொண்டார்றதே நம்ம வீட்டைச் சுத்தி வளைச்சுப் போட்டிருக்கிற குடிசைகளை நீக்கி ‘ஆவாரம்பட்டு ஹவுஸை’ப் பழைய அரண்மனை நிலைமைக்கு உயர்த்தறதுக்குத்தான்.”

“கண்டிப்பா செஞ்சுடலாங்க. நானாச்சு. அநு அம்மாவை எம்.எல்.ஏ. ஆக்கறதோட நான் விட்டுடப் போறதில்லை. வீட்டு வசதி மந்திரியாகவே பண்றேன் பாருங்க. அப்புறம் உங்க பிரச்சினை சுளுவாத் தீர்ந்துடுங்க.”

“உங்கக் கட்சியிலே எத்தனையோ சீனியர் ஆளுங்களெல்லாம் இருக்கிறப்போ அநு எப்படி மந்திரி ஆக முடியும்?”

“நிச்சயமா முடியுங்க. எப்படியும் மந்திரி சபையிலே பொம்பளைக்கின்னு ஒரு இடம் தலைவர் ஒதுக்கி வச்சிருப்பார். அதுவும் கொஞ்சம் படிச்ச பொம்பளையா வேணும்னு பார்ப்பார்.”

“வேற படிச்ச பொம்பளைங்க உங்க கட்சியிலே இல்லியாப்பா?”

“ரெண்டொருத்தர் இருக்காங்க. ஆனா அநு அம்மா அளவு அதிகம் படிச்சிருக்க மாட்டாங்க. நாமே அவங்களை ஏதாச்சும் கொடுத்துக் கண்ணைக் கட்டிட்டம்னா அவங்க வாயாலேயே அநு அம்மா பேரை மந்திரி பதவிக்குப் பிரப்போஸ் பண்றாப்ல செஞ்சு காரியத்தை முடிச்சுடலாம்.”

முத்தையாவுக்கு இதைக் கேட்க மகிழ்ச்சியாயிருந்தது.

அத்தியாயம் - 8

அநுவின் இரண்டாவது கூட்டம் படுகொலைக்குப்பம் மாரியம்மன் தேரடித் திடலில் ஏற்பாடாயிற்று. முத்தையாவிடம் வழக்கத்தை விட மேலும் அதிகமாக ஆயிரம் ரூபாய் பணம் தேவை என்று வற்புறுத்திக் கேட்டான் பொன்னுரங்கம். முத்தையா தயங்கினார்.

“என்னப்பா இது, நெல்லுப்பேட்டை மைதானத்துக்கே அவ்வளவுதான் ஆச்சு! படுகொலைக்குப்பத்துக்கு மட்டும் எதுக்காகக் கூட ஆயிரம் ரூபாய் கேட்கிறே?”

“தேவைப்படும்னு தான் கேட்கிறேன். இது ரௌடி ஏரியா. இங்கே கனிவண்ணன் கோஷ்டி ஆளுங்க அதிகம். அநு அம்மா கூட்டத்தைக் கலைக்கணும்னே கனிவண்ணன் கூட்டத்திலே கலாட்டாப் பண்றதுக்கு செட் அப் பண்ணுவான்.”

“ஒரே கட்சி மேடையிலே கூடவா அதைப் பண்ணுவாங்க?”

“சில கட்சிங்களிலே அந்தக் கட்சிக்குள்ளாற இருக்கிற கோஷ்டிங்களே எதிர்க்கட்சிகளை விடப் பயங்கரமா இருப்பாங்க. ம.மு.க.விலேயும் அப்படித்தான். அநு அம்மா நம்ம கோஷ்டி. கனிவண்ணன் எதிர் கோஷ்டி.”

“உங்க தலைவரு இதையெல்லாம் விசாரிச்சு ராசி பண்ணி வைக்க மாட்டாரா?”

“மாட்டாருங்க. எத்தினி கோஷ்டி இருக்குதோ அத்தனை தூரம் நல்லதுன்னு நினைப்பார். ‘அப்பத்தான் தங்கிட்டேப் பயப்படுவாங்க. கோஷ்டிங்களே இல்லாமே தங்களுக்குள்ளே அவங்கவங்க ஒத்துமையா இருந்துட்டா அப்புறம் மேலிடத்தை மதிச்சுப் பயப்பட மாட்டாங்க’ன்னு தலைவருங்களே கோஷ்டிங்களை வளர்த்துப்பாங்க.”

“ரொம்ப வேடிக்கையாவில்லே இருக்கு நீ சொல்றது?”

“நிஜங்க.”

“நிஜம் தான்! ஆனா ரொம்பக் கசப்பா இருக்கேப்பா?”

“எல்லாப் பார்ட்டீஸ்லேயும் இப்படித்தாங்க! தலைவருங்க வசதிக்காகவே கட்சிக்குள்ளே கோஷ்டிங்க இருக்கு. ஒத்துமைங்கிறதைச் சும்மா ஒரு கோஷத்துக்காக வச்சிருப்பாங்க! கட்சிக்குள்ளே ரொம்ப மோசமான கோஷ்டிப் பூசல் நிலவறப்போ, ‘பூசல்களைத் தவிர்த்து ஒற்றுமையைக் கட்டிக் காப்போம்’னு அறிக்கை விட ஒரு வாக்கியம் வேணுமில்லே. அப்போதான் ஒத்துமை ஞாபகம் வரும்.”

“சரி! வியாக்கியானம் இருக்கட்டும். படுகொலைக் குப்பத்தைப் பத்தியில்லே பேச ஆரம்பிச்சோம்? அங்கே ரௌடி கோஷ்டி இருக்கிறதுக்கும் நீ அதிகப்படி ஆயிரம் ரூபாய் கேட்கிறதுக்கும் என்ன சம்பந்தம்? அதைச் சொல்லுப்பா.”

“சம்பந்தம் இருக்குதுங்க. அந்தக் கனிவண்ணன் கோஷ்டி நம்ப கூட்டத்திலே கலாட்டா எதுவும் பண்ணாமே நாமே ஒரு நூறு ரௌடிங்களுக்கு சாராயத்தை ஊத்திக் கூட்டத்திலே நடு நடுவே நிறுத்தி வைக்கணுமுங்க.”

“நிறுத்தி வச்சா?”

“கனிவண்ணன் கோஷ்டி ரௌடிங்களை இவங்க கவனிச்சுப்பாங்க. திமிறிப் போய் அவங்க ஏதாச்சும் ஏடா கூடமாப் பண்ணினாங்கன்னா நம்ம ஆளுங்க ஓசை படாமல் அவங்க எலும்பை நொறுக்கிடுவாங்க.”

“அத்தினி ரிஸ்க் எடுத்துக்கிட்டு அந்த ஏரியாவிலே ஏம்பா கூட்டம் போடறே? வேற எங்கியாச்சும் போடேன்.”

“அத்தனையும் வோட்டுங்க. கனிவண்ணனோட கோட்டைன்னு பேர் வாங்கின ஏரியா அது. எப்படியும் நம்ம தொகுதியிலே இருக்கே? அந்த ஓட்டையெல்லாம் விட்டுடலாமா? எலக்சனை மைண்டுலே வச்சுட்டுத் தானே நான் ஏரியாவாரியாகப் பிரிச்சுக் கூட்டங்களை செட் அப் பண்ணிக்கிட்டு வாரேன். அதைப் புரிஞ்சுக்கலீங்களே நீங்க?”

முத்தையா மறு பேச்சுப் பேசாமல் இரும்புப் பெட்டியைத் திறந்து பணத்தை எண்ணிக் கொண்டு வந்து பொன்னுரங்கத்திடம் நீட்டினார். சுளைசுளையாக நூறு ரூபாய் நோட்டுகள் கைமாறின. “வரவர அரசியல் பண்றது ரொம்பக் காஸ்ட்லியாப் போச்சுப்பா.”

“கவலைப்படாதீங்க. விடறதை எல்லாம் வட்டியும் முதலுமாகத் திருப்பி எடுத்துடலாம்.”

உடனே முத்தையா அவனைக் கையெடுத்துக் கும்பிட்டு விட்டு, “இதோ பாரு பொன்னுரங்கம், இன்னொரு வாட்டி அப்படிப் பேசாதே! வாயை டெட்டால் போட்டுக் கழுவு! எனக்கு அப்படிப் பணம் பண்ணியாகணும்னு ஒண்ணும் மொடை இல்லே. ஏதோ ஆண்டவன் போதுமானதைக் கொடுத்திருக்கான். இருக்கிறவரை தாராளமாகச் செலவழிக்கலாம். செலவழிச்சதை வட்டியும் முதலுமாகத் திருப்பி எடுக்கணும் என்றெல்லாம் என்கிட்டே பேசாதே. அப்புறம் எனக்குக் கெட்ட கோபம் வரும்.”

“நீங்க சொல்றப்பவெல்லாம் டெட்டாலோ, பினாயிலோ போட்டுக் கழுவணும்னா நாமே ஒரு ஃபாக்டரி வச்சாத்தான் முடியும்.”

“ஒரு ஃபாக்டரியும் வைக்க வேணாம். போய்க் காரியத்தைக் கவனி.”

பொன்னுரங்கம் பணத்தோடு அவரிடம் விடைபெற்றுக் கொண்டு படுகொலைக் குப்பம் மீட்டிங்குக்காகப் போஸ்டர் அடிக்கப் போனான். அந்தப் போஸ்டரில் ‘அறிவுச் செல்வி அநுக்கிரகா’ என்று ஓர் அடைமொழியையும் சேர்த்துப் போட்டுவிட்டான். கைநாட்டுப் பேர்வழியான கனிவண்ணனே ‘கருத்துச் சிற்பி கனிவண்ணன்’ என்று போடும் போது உண்மையிலேயே பெரும் படிப்பாளியான அநுக்கிரகாவுக்கு ஏன் அறிவுச் செல்வி என்று போடக் கூடாது?’ என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டு தான் இதைச் செய்திருந்தான். கூட்டத்திற்கான ஏற்பாடுகள் பிரமாதமாக நடந்தன. படுகொலைக்குப்பத்தில் அநுக்கிரகாவை ரோஜா மலர்கள் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்க அங்கங்கே ஏற்பாடுகள் ஜரூராகச் செய்யப்பட்டன. சுவர்களில் எழுதப்பட்டன, தோரணங்கள் கட்டப்பட்டன.

எதிர் கோஷ்டி கனிவண்ணனின் தரப்பு ஆட்கள் மெல்ல அவன் காதுக்குத் தகவலை எட்டவிட்டார்கள். நெல்லுப்பேட்டை மைதானத்தில் பொன்னுரங்கம் அநுக்கிரகாவுக்காகக் கூட்டம் ஏற்பாடு செய்ததும், அதில் அவள் பேசியதும், பெருவாரியாகக் கூட்டம் கூடியதும் கூடக் கனிவண்ணனுக்கு வித்தியாசமாகவோ தப்பாகவோ படவில்லை. தன் பேட்டையின் மூலஸ்தானமும் தனக்கு மிகவும் வேண்டிய ஊழியர்களும், தொண்டர்களும் இருக்குமிடமான படுகொலைக்குப்பத்தையே தேடி வந்து தேரடி மைதானத்தில் கூட்டம் போட்டுப் பேசுவது தன்னையே வம்புக்கு இழுப்பது போல் அவனுக்குத் தோன்றியது. பொன்னுரங்கம் திட்டமிட்டுத் தனது சட்டமன்றத் தொகுதியில் ஒவ்வோர் இடமாக அநுக்கிரகாவின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் போகிறான் என்றும் அடுத்து வரும் தேர்தலில் தன் இடத்துக்கு அநுக்கிரகாவே சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு நிற்கக் கூடும் என்றும் பராபரியாகக் கனிவண்ணன் காதுக்குத் தகவல்கள் எட்ட ஆரம்பித்திருந்தன. அவன் உஷாரானான். கூட்டம் நடக்க விடாமல் செய்ய முயன்றான். முடியவில்லை. அமோகமாக கூட்டம் நடந்து முடிந்தது. அத்தனை ஏற்பாடுகள்.

ம.மு.க. செயல் வீரர்களாலும் தனக்கு மிகவும் வேண்டியவர்களாலும் நடத்தப்படும் ‘மறவன் குரல்’ என்னும் வார ஏட்டில் ஓர் எச்சரிக்கைக் கட்டுரை எழுதச் செய்தான்.

‘தூங்கும் புலியை இடறாதே, தொல்லைகளை விலைக்கு வாங்காதே’ என்பது தலைப்பு. ‘புண்ணுக்குப் புனுகு பூசும் பொன்னுரங்கங்களின் பாச்சா பலிக்காது’, என்று ஆரம்பித்து, முத்தையாவின் மலையாள இரண்டாந்தாரத்துக்குப் பிறந்த மூன்றாந்தரமான பெண் அநுக்கிரகா என்றும் அரசியலில் அவளது நான்காந்தரமான முயற்சிகள் ம.மு.க.வின் பேரைக் கெடுத்து விடும் என்று கட்டுரை எச்சரித்தது. ‘பேரோ வடமொழி, பேசுவதோ ஆங்கிலம், தமிழர் இயக்கத்திலே இங்கென்ன வேலை அந்தச் சிங்காரப் பைங்கிளிக்கு?’ என்றெல்லாம் காணப்பட்டன. முத்தையாவைப் பற்றியும் கிண்டல் வாசகங்கள் கட்டுரையில் காணப்பட்டன. அவரைப் பற்றி வருகிற இடங்களில் ‘மிட்டா மிராசுகளின் பட்டா வாரிசான பரம்பரை’ என்றும் ‘கோடீஸ்வரக் கோமாளி’ என்றும் ‘முடிச்சவிழ்க்கும் முத்தையா’ என்றும் சாடியிருந்தது.

படுகொலைக்குப்பம் கூட்டம் நடப்பதற்கு ஒரு வாரம் இருக்கும் போது மறவன் குரலில் இந்தக் கட்டுரை வெளியாகி இருந்தது. கட்டுரை வெளியிட்டவர்களே கவனமாகச் சிரத்தை எடுத்துக் கொண்டு அவருக்குத் தெரிவதற்காகப் பிரதியை அனுப்பியிருந்தார்கள். பொன்னுரங்கத்துக்கும் பிரதி அனுப்பப்பட்டு வந்திருந்தது. அவன் இதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. துடைத்தெறிந்தாற் போல மூலையில் தூக்கி எறிந்துவிட்டுப் பேசாமல் இருந்தான். கண்டு கொள்ளவே இல்லை.

முத்தையா நாசூக்கான பணக்காரராகையினால் பொன்னுரங்கம் அளவு தோல் தடித்திருக்கவில்லை. நாலு பேர் படிக்கிற இந்த மூன்றாந்தரப் பத்திரிகையைப் பார்த்ததும் மிரண்டு போனார். உடனே பொன்னுரங்கத்தைக் கூப்பிட்டனுப்பினார்.

“என்னப்பா இது? இப்படிக் கன்னாபின்னாவென்று எழுதறானுங்க?”

“கிடக்கிறான் விட்டுத் தள்ளுங்க. சூரியனைப் பார்த்து நாய் குரைக்கிறது.”

“அதெப்படி விட்டுட முடியும்? வக்கீலைப் பார்த்து என்னமாச்சும் பண்ணியாகணும். முடிச்சவிழ்க்கும் முத்தையாங்கிறானே, நான் யார்கிட்டேப்பா முடிச்சவுத்தேன்?”

“இவன் சர்டிபிகேட் கொடுத்துதானா உங்களுக்கு நல்ல பேர் வரணும்?”

“இல்லை தான். ஆனாலும் இவனுக்கு ஏதாவது பாடம் கற்பிச்சே ஆகணும், பொன்னுரங்கம்!”

“கற்பிக்கலாமுங்க. ஆனா இப்போ அதுக்கு ஒண்ணும் அவசரம் இல்லே. எலெக்சன் நெருங்கி வர்றப்போ இது மாதிரி வம்புகளுக்குப் பதிலடி கொடுக்க நமக்கும் ஒரு கச்சடாப் பேப்பர் இதுமாதிரி வேணுங்க. அப்பப் பார்த்துக்கலாம்.”

“எலெக்சனுக்கே இன்னும் எட்டு மாசம் தானேப்பா இருக்கு? இப்பவே ஸ்டார்ட் பண்ணி விட்டுடு. அவன் திட்டறதுக்குப் பதில் நாமும் எதினாச்சும் திட்டிடலாம்.”

“அப்படியா சொல்றீங்க?”

“ஆமாம். சட்டுப்புட்டுனு தொடங்கிடலாம். அவன் பாட்டுக்குத் திட்டி எழுதிக்கிட்டே இருக்கிறப்போ நாம் பதில் சொல்லாமல் இருந்தால் எப்படி? முதல்லே ஒரு பேரைப் பார். பேர் வீரமா இருந்தாத்தான் இதுமாதிரிப் பத்திரிகை எல்லாம் எடுக்கும்.”

“புலவரைக் கூப்பிட்டுக் கேட்கலாங்க.”

புலவருக்குச் சொல்லி அனுப்பப்பட்டது. புலவர் வந்தார். மறவன் குரலை எடுத்துக் காட்டி விவரம் சொன்னார்கள். அவர் உடனே தயாராகிச் செயல் பட்டார்.

சிறிது நேரம் சிந்தித்த உடனே ‘சுடு சரம், நெருப்புக் கணை, அக்கினி அம்பு’ என்று தயாராக மனத்தில் எண்ணி எடுத்து அடுக்கி வைத்திருந்தது போல் மூன்று பெயர்களைச் சொன்னார் புலவர். உடனே பிரஸ் ரிஜிஸ்தருக்கு டெக்ளரேஷன் எழுதிப் போட்டாயிற்று. டெல்லி போய் டெக்ளரேஷனைத் துரிதப்படுத்தவும் ஒருத்தரை அனுப்ப ஏற்பாடு செய்தாயிற்று.

மறு வாரமே பெயர் கிடைத்து விட்டது. ‘சுடு சரம்’ என்று பெயர் பொருத்தமாக வாய்த்தாயிற்று.

கிரௌன் ஒன்றுக்கு எட்டுப் பக்க வீதம் இரண்டு ஃபாரம் பதினாறு பக்கம் வெளியிட முடிவு செய்து சகல செலவுக்காக மாதம் ஏழாயிரம் ரூபாய் செலவழிக்க முத்தையா ஒப்புக் கொண்டார்.

யாரை எடிட்டராகப் போடுவது என்ற பிரச்சினை எழுந்தது.

“அநுக்கிரகாவையே போட்டுடலாமே?” என்றார் முத்தையா. உடனே அதை விரைந்து மறுத்தான் பொன்னுரங்கம்.

“கூடவே கூடாதுங்க. இந்த மாதிரிக் கச்சடா விவகாரத்திலே எல்லாம் உங்க பேரோ, பாப்பா பேரோ வரவே கூடாதுங்க. நாளைக்குக் கோர்ட்டு கீர்ட்டுன்னு இழுத்தடிப்பான். அதெல்லாம் உங்களுக்கு வேணாம். நம்ம கையிலே விட்டுடுங்க. நான் பார்த்துக்கறேன். மாசா மாசம் பணத்தை எண்ணி வையுங்க. நாய் மாதிரி நாங்க வேலை செய்யறோம்.”

யோசித்ததில் அவருக்கு அவன் சொல்வதுதான் சரி என்று பட்டது. அப்படியே விட்டு விட்டார்.

‘கழிசடையாகிவிட்ட கனிவண்ணனே!’ என்று சுடுசரம் முதல் இதழ் முதல் பக்கத் தலைப்பிலேயே ஒரு பிடி பிடித்திருந்தது முத்தையாவுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

படுகொலைக்குப்பம் கூட்டம் பிரமாதமாக நடந்தது. கனிவண்ணனின் கையாட்களையும் சேர்த்துப் பேரம் பேசிச் சாராயத்தையும் பணத்தையும் செலவழித்து முதலிலேயே விலைக்கு வாங்கியிருந்தான் பொன்னுரங்கம். அதனால் ஒரு சிறு சலசலப்புக் கூட இல்லாமல் நிகழ்ச்சி அமைந்தது. வழக்கம் போல் குழந்தைக்குப் பெயர், ரூபாய் நோட்டு மாலை, மாலைக்குப் பதில் பணம், பதினேழாவது வட்டம் சார்பில் கைத்தறித் துண்டு எல்லாம் ஜமாய்த்து விட்டார்கள்.

ஆனால் அநுக்கிரகா தான் ஏமாற்றி விட்டாள். புலவர் எழுதிக் கொடுத்த பேச்சை படிக்காமல் தானே ஏதோ சுயமாகப் பேசுகிறேன் என்று கிளம்பி, பொருளாதாரம், இறக்குமதி ஏற்றுமதி திட்டம் என்று விளக்கெண்ணெய் விவகாரங்களைப் பேசி போரடித்து விட்டாள். படுகொலைக்குப்பம் மக்களுக்குப் புரிந்த லோகல் தகராறுகளை விளாசியிருந்தால் பிரமாதமாக அமைந்திருக்கும். புலவரும் கடுமையான வசைமொழி நடையில் லோகல் தகராறுகளைத்தான் எழுதிக் கொடுத்திருந்தார். அவள் தான் அவற்றை விட்டுவிட்டுப் பொருளாதாரத்தில் புகுந்து ஜனங்களை ஏமாற்றியிருந்தாள். ஆனால் பயந்துமிரண்டு கொட்டாவி விட்டுக் கொண்டே மக்கள் அதையும் கேட்டார்கள். ‘சதையின் சதையான தமிழ்ப் பெருங்குடி மக்களே!’ என வந்த இரண்டு இடங்களிலும் கைதட்டி விசிலடித்து விட்டார்கள். அது மட்டும் தான் அன்று அவள் பேசியதில் அவர்களுக்குப் புரிந்தது.

ஆனால் பொன்னுரங்கம் கூட்டம் முடிந்து வீடு திரும்பியதுமே அநுக்கிரகாவைக் கடுமையாக எச்சரித்தான்.

“இனிமே இதுமாதிரி வேற எங்கேயாவது நம்ம பார்ட்டி மேடைங்களிலே வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம், திட்டம், ஏற்றுமதி இறக்குமதி அது இதுன்னு இன்னொரு வாட்டி பேசினீங்களோ உங்களைக் கட்சி மேடையிலே ஏத்தறதையே நிறுத்திப்புடுவேன்.”

“உண்மையிலே அதெல்லாம் தானே ஒரு அரசியல் பேச்சாளர் சீரியஸாகச் சிந்தித்துப் பேச வேண்டிய விஷயங்கள்?”

“யாரு வேண்டாம்னாங்க? எலெக்சன்லே ஜெயிச்சிட்டு அப்பாலே போயி எது வேணாப் பேசுங்க. ஜெயிக்கிற வரை ஜனங்க புரிஞ்சுக்கிற மாதிரி எதினாச்சும் பேசுங்களேன்.”

அநுக்கிரகாவுக்கு இந்த அரசியல் அதிர்ச்சியளிக்கும் ஒரு வேடிக்கையாக இருந்தது. ‘தண்டமே! முண்டமே! தறுதலையே...’ என்று திட்டுவதுதான் அரசியல் என்றான் பொன்னுரங்கம். ஜனநாயகம், சோஷலிஸம், பொருளாதாரம் பற்றி எல்லாம் பேசவே கூடாது என்றார்கள். அது ஜனங்களுக்குப் புரியாது, பிடிக்காது என்றும் சொன்னார்கள். புரியாது என்பது உண்மையா? அல்லது புரியக்கூடாது என்பது உண்மையா? பிடிக்காது என்பது நிஜமா? பிடிக்கக் கூடாது என்பது நிஜமா? அவள் சிந்தித்தாள். தனக்குள் தான். வெளியே சொல்லவுமில்லை. விவாதிக்கவும் இல்லை. தந்தையிடம் மட்டும் ஒரே ஒரு முறை இதைப் பற்றிக் குறைபட்டுக் கொண்டு பேசிப் பார்த்தாள்.

“அவங்க எதைப் பேசச் சொல்றாங்களோ அதைப் பேசிட்டுப் போயேன்? நமக்கு வேண்டியது ஓட்டு. எம்.எல்.ஏ. சீட். அப்புறம் முடிஞ்சா மந்திரிப் பதவி,” என்றார் அவர். அவளால் மேற்கொண்டு அவரிடம் பேச முடியவில்லை.

இப்படி இதைக் கேட்ட பின்பு அவரிடமும் விவாதிப்பதை விட்டு விட்டாள். பேட்டைவாரியாகக் கூட்டங்கள் போட்டுப் பேசினாள். லோகல் பிரச்சினைகளைப் பேசி எங்கெங்கே எது எது ஓட்டுப் பிடித்துக் கொடுக்குமோ அதைப் பற்றி மட்டும் அலசிச் சமாளித்தாள். கைதட்டல், மலர் மாலை, ரூபாய் நோட்டு ஆரம், மாலைக்குப் பதிலாக ரெண்டு ரூபாய் எல்லாம் மாமூலாக எல்லாக் கூட்டத்திலும் நடந்தன. தமிழ்ச்செல்வி, தமிழ்ப் பூங்கொடி, தமிழ்ப் பொன்னி என்ற மூன்றே பெயர்களை அறுபது கூட்டங்களில் என்பது குழந்தைகளுக்குப் பெயர் வைத்தாயிற்று. இதே ரீதியில் போனால் அந்தத் தொகுதியின் அடுத்த தலைமுறை ஓட்டர் லிஸ்டில் மூன்றே மூன்று பெண் பெயர்கள் தான் திரும்பத் திரும்ப மாற்றி மாற்றி அச்சிடப்பட்டிருக்கும். அந்த அளவிற்கு அவளும் மற்றவர்களும் இதே பெயர்களை மேடைகளில் குழந்தைகளுக்குச் சூட்டினார்கள். சில சமயங்களில் பொன்னுரங்கத்தின் ஏற்பாட்டால் பெயர் வைக்கப்பட்ட குழந்தைகளே திரும்பத் திரும்ப மேடையில் நீட்டப்படுகின்றனவோ என்ற சந்தேகமும் உள்ளூற அவளுக்கு இருந்தது.

அத்தியாயம் - 9

எலெக்‌ஷனுக்கு இன்னும் இரண்டே இரண்டு மாதங்கள் தான் இருக்கின்றன என்கிற சமயத்தில் திடீரென்று பொன்னுரங்கம் பதற்றமாகவும், பரபரப்போடும் ஆவாரம்பட்டு ஹவுஸைத் தேடி வந்தான். முத்தையாவையும் அநுக்கிராகாவையும் சந்தித்தான்.

“பேட்டை பேட்டையாக நம்ப ஆளுங்களை எதிர்த்தரப்பு ஆளுங்க பூந்து அடிக்கிறாங்க. இந்த வன்முறையை நிறுத்தக் கோரி வர்ற ஞாயிற்றுக்கிழமை நெல்லுப்பேட்டை மைதானத்திலே உண்ணாவிரதம் இருக்கணும்.”

“சரி, செஞ்சிடலாம்... அதுக்கு என்ன ஏற்பாடு?”

“நம்ம பாப்பா தான் உண்ணாவிரதத்துக்குத் தலைமை ஏற்குது!”

“சரி, ஏற்கலாம். எத்தினி நாள் உண்ணாவிரதம்?”

“நீங்க ஒண்ணு; காலையிலே 8 மணியிலேர்ந்து மாலை 6 மணி வரை. வெறும் பத்து மணி நேர உண்ணாவிரதத்துக்கே ஆளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கு. நீங்க என்னடான்னா எத்தினி நாள்னு வேற கேட்டு வயித்தெரிச்சலைக் கெளப்பறீங்க...?”

“இன்னிக்கு இந்தத் தேசத்திலே காலைல எட்டு மணிக்கு அரை வயிற்றுக் கஞ்சி குடிக்கிற எத்தினியோ பேரு மறுபடி ராத்திரி எட்டு மணிக்குத்தான் கால் வயிற்றுக்குச் சாப்பிட முடியுது. பன்னிரண்டு மணி நேரப் பட்டினியையே அவங்க உண்ணாவிரதம்னு சொல்லிக்கிறதில்லே. நீங்க என்னடான்னா வெறும் பத்து மணி நேரப் பட்டினியை உண்ணாவிரதம்னு போஸ்டர் போடப் போறீங்க.”

“ஆமாம். போடப் போறோம். அதுக்கு என்ன? அது தான் அரசியல்.”

“ஜமாய்ச்சுத் தள்ளுங்க... அறிவுச் செல்வி அநுக்கிரகா தலைமையில் வன்முறையைக் கண்டித்து உண்ணாவிரதம். போஸ்டர் போட்டுடு. இன்னா செலவாகும்? சொல்லு.”

“போஸ்டர் மட்டும் இல்லே சார்! வேற சிலதும் செலவிருக்கு.”

“என்னன்னு தான் சொல்லேன்.”

“கனிவண்ணன் ஆளுங்க, கல் எறிவாங்க... சாணி அடிப்பாங்க... மாடு பன்னிங்களை அவுத்து விட்டுக் கலாட்டா பண்ணுவாங்க!”

“அமைதியா உட்கார்ந்து உண்ணாவிரதம் இருக்கிறவங்களையா அப்படி எல்லாம் கஷ்டப்படுத்துவாங்க?”

“எதிரி கோஷ்டியாச்சே, அதனாலே கலாட்டா பண்ணி ‘உண்ணாவிரதம் இருந்தவர்கள் கல்லெறிக்குப் பயந்து ஓட்டமெடுத்தனர்’னு நியூஸ் வர்ற மாதிரிப் பண்ணிடுவாங்க சார்.”

“சரி. அதை எப்படிச் சமாளிக்கப் போறே நீ?”

“அதைத்தானே இப்போ சொல்லிக்கிட்டிருக்கேன். நாம நம் தரப்பிலே உண்ணாவிரதத்துக்கு உட்கார்த்தரவங்களையே பக்கா ரௌடிங்களாப் பார்த்து உட்கார விட்டோமானால் கவலையே இல்லை.”

“என்னப்பா இது? வன்முறையை எதிர்த்து உண்ணாவிரதம்ங்கிறே? அதுக்கு வன்முறை ஆட்களை உட்கார வைக்கணும்னு சொல்றே. ஒரே குழப்பமா இருக்கே?”

“குழப்பமாவது ஒண்ணாவது! அதெல்லாம் எதுவுமே இல்லீங்க. எதிரிங்க கலாட்டா பண்ண வந்தால் நாமும் பதிலுக்குத் தயாராயிருக்கணும்னுதான்.”

“இப்படிச் செய்யறதுக்குப் பதிலா நீ உண்ணாவிரதத்துக்குள்ளே உட்கார வைக்கப் போற இதே நூறு இருநூறு ஆளுங்களுக்குத் தண்ணி ஊத்திப் பிரியாணி வாங்கிக் கொடுத்து நேரே போய் நம்ம எதிரிங்களை உதைங்கடான்னு சொல்லி ஏவி விட்டுடலாமே?”

“கூடாதுங்க. அப்படிச் செஞ்சா நாம எதிர்பார்க்கிற பப்ளிஸிடி கிடைக்காதுங்க. கலாட்டா பண்ணப் போறோம்னு போஸ்டர் போட்டுக்கிட முடியாது. வன்முறையை எதிர்த்து அநுக்கிரகா தலைமையில் உண்ணாவிரதம்னு போஸ்டர் போடலாம். அதாலே தான் இப்படித் தோது பண்ணியிருக்கேன்.”

“சரி, செய்! உனக்குப் பணத்தை வாரி இறைச்சிக்கிட்டு இப்படி ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கணும். இல்லாட்டித் தூக்கம் வராது.”

“கொஞ்சம் நமக்குள்ள ரகசியமா இருக்கிற மாதிரி நீங்க காதும் காதும் வச்ச மாதிரி இதுக்கு நம்ம பங்களாவிலேயே ஒரு உதவி செய்யணும்.”

“என்ன செய்யணும்?”

“உண்ணாவிரதத்துக்கு உணவு சப்ளை பண்ணணும்.”

“என்னது? உண்ணாவிரதத்துக்கு உணவா! வேடிக்கையாய் இருக்கே? விளையாடறியா நீ?”

“நிஜமாத்தாங்க. பட்டினியோட எவனும் உண்ணாவிரதத்துக்கு வரத் தயாராக இல்லீங்க. அதுவும் நான் சொல்ற மாதிரி எதிரிங்க தாக்க வந்தா சமாளிக்கிற பலத்தோட ஆளுங்க கிடைக்கணும்னா, கஷ்டப்பட வேண்டியிருக்கு. காலைலே அஞ்சு மணிக்கே இருட்டோட இருட்டா ரெண்டு அவிச்ச முட்டை, ஆறு இட்லி, காப்பி போட்டப்புறம் தான் சாப்பிட்டுட்டுத் தெம்பா உண்ணாவிரத மேடையிலே வந்து உட்காருவாங்க. அம்பது ரூபாவும் ராத்திரி சிக்கன் பிரியாணியோட விருந்தும் போடணும்.”

“இதுக்குப் பேர்தான் உண்ணாவிரதமா? பரிதாபம்!”

“பின்னென்ன? காந்தியும், விநோபாவுமா பாழ் போறாங்க. கூலிக்குப் பிடிச்சிக்கிட்டு வரவனை எல்லாம் காந்தி மாதிரி பட்டினி கிடக்கச் சொல்ல முடியுங்களா?”

“ஒண்ணு மீதம் விடாமல் எல்லாப் பெரிய விஷயங்களையுமே அசிங்கப்படுத்திடுவீங்க போலிருக்கேப்பா?”

“என்னா செய்யறதுங்க? கால தேச வர்த்தமானம் அப்படி ஆயிடிச்சுங்களே?”

“சர், பணம் என்ன வேணும்னு சொல்லுப்பா.”

“ஒரு மூவாயிரம் இருந்தா சமாளிச்சிடலாம். சாப்பாட்டு வகையறாச் செலவு உங்க பக்கம். நீங்க பார்த்துக்கிடணும்.”

முத்தையாவுக்கு எரிச்சலாய் இருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

‘இன்னும் ஏழே ஏழு வாரம். ஒண்ணே முக்கால் மாசம் தான். எலெக்‌ஷன் முடிஞ்சு அநு எம்.எல்.ஏ ஆன மறுநாளே இந்தப் பொன்னுரங்கம் மாதிரி ஆளுங்களை வீட்டிலே படி ஏறக்கூட விடக்கூடாது. இவங்ககிட்டே மட்டும் மாட்டினோமோ பிளாக்மெயில் பண்ணியே பணம் பறிச்சிடுவாங்க. இனிமே இவங்க சங்காத்தமே ஆகாது’ என்று அப்போது வைராக்கியமாக நினைத்துக் கொண்டார்.

தன் மகள் எம்.எல்.ஏ. ஆனாலும், மந்திரியானாலும் ஆவாரம்பட்டு ஹவுஸைச் சுற்றியுள்ள குடிசைகளும், சாக்கடைகளும், குப்பைமேடுகளும் அகன்று பூக்களும், மரங்களுமாக ஒரு பசுஞ்சோலை உருவாகிச் சுத்தமான காற்றும் கண்ணுக்கு இரம்மியமான சூழலும் கிடைக்கப் போவதை எண்ணினார் அவர்.

ஒரு வகையில் பார்த்தால் இதெல்லாம் வெறும் பைத்தியக்காரத்தனமான ஆசைகளாகவும், கனவுகளாகவும் அவருக்கே தோன்றின.

இப்படி மகளை அரசியலில் இறக்கி விட்டுவிட்டு அவள் எம்.எல்.ஏ. ஆவாள், மந்திரி ஆவாள் என்ற நைப்பாசையில் போஸ்டருக்கும், பிரியாணிக்கும் இலட்ச இலட்சமாய்ப் பணத்தை வாரி இறைத்துக் கொண்டு சீரழிவதை விட அன்றைக்கே அந்தக் கனிவண்ணன் எம்.எல்.ஏ. கிட்டே லஞ்சமாகக் கேட்ட பத்தாயிரம் ரூபாயை மூச்சு விடாமல் ஒரு கவருக்குள் போட்டு அவனிடம் நீட்டியிருந்தால் ஆவாரம்பட்டு ஹவுஸைச் சுற்றி இப்போது ஒரு பூங்கா சிரித்துக் கொண்டிருக்கும். பத்தாயிரம் ரூபாய் பிரச்சினையாய் இருக்கவில்லை. அவன் தன்னைக் காக்கப் போட்டதும், நிறுத்தி வைத்துப் பேசியதும், அவமானப்படுத்தியதும்தான் அவருள் அவனைப் பழிவாங்கும் எண்ணத்தை வளர்த்து முறுக்கேற்றியிருந்தன. இன்னும் அந்த முறுக்குத் தளராமல் தான் உள்ளுக்குள்ளே இருந்தது. பரம்பரை வீராப்பும், தடங்கலற்ற பணவசதியும், நினைத்தது எதுவானாலும் அதை எப்படியும் செய்து முடிக்க வேண்டும் என்ற அவரது நாட்பட்ட முரண்டும் முத்தையாவை அநுவின் அரசியல் பிரவேசத்துக்காக நிறையச் செலவழிக்கச் செய்திருந்தன.

முதலில் அநுக்கிரகா கூட ஒரு மாதிரி தயக்கம் காட்டினாள். அரைவேக்காட்டு ஆட்களையும், ஞான சூனியங்களையும் ‘வணக்கம் தலைவரே!’ என்று விளிக்க வேண்டிய அவமானம் தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது. ம.மு.க.வில் அவளுக்கு இருந்த அறிவுக் கூர்மைக்கும் ஐ.க்யூ. லெவலுக்கும் குறைவான ஆட்களே நிரம்பியிருந்தனர். புத்தியுள்ளவன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்படவே இல்லை. மந்தங்களும், மரமண்டைகளும், துதிபாடிகளும், அடிவருடிகளும், விசிலடிப்பவர்களும், கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களும் நிறைந்த ம.மு.க.வில் தனது சுயநலத்திற்காகத் தன்னைத் தந்தை பிடித்துத் தள்ளிவிட்டாரே என்று ஆரம்பத்தில் எரிச்சலாய் இருந்தாலும், புகழ், வாழ்க கோஷம், மாலை மரியாதை, ஆரத்தி சுற்றும் பெண்கள், கைதட்டும் ஜனங்கள் எல்லோருமாகச் சேர்ந்து - எல்லாமாகச் சேர்ந்து அவளுக்கு அதில் ருசி ஏற்படுத்தியிருந்தார்கள். இப்போதெல்லாம் பொதுக் கூட்டம் இல்லாமல், கூட்டத்தைப் பார்க்காமல், கைதட்டலைக் கேட்காமல் அவளால் வீட்டில் முடங்கிக் கிடக்க முடியவில்லை. சாயங்காலம் ஆனால் ‘பொன்னுரங்கம் எங்கே?’ என்று கேட்க ஆரம்பித்தாள். அவன் வருவதற்கு நேரமானால் காரை அனுப்பி டிரைவரிடம் அவனைக் கூட்டிக் கொண்டு வருமாறு கூறியனுப்பினாள்.

முத்தையாவே, “நீ எங்கும் போக வேண்டாம் வீட்டோடு இரு, போதும்” என்று கூறினால் கூட இனிமேல் அவள் கேட்க மாட்டாள் போலிருந்தது. பொன்னுரங்கத்தின் மேலும், ம.மு.க. ஆட்கள் மேலும் முத்தையாவுக்குத்தான் வெறுப்பும், சலிப்பும், தட்டினவே ஒழிய, அநுக்கிரகாவுக்குப் பிடிமானமும், பற்றும் அதிகமாகிக் கொண்டிருந்தன.

கனிவண்ணனைத் திட்டுகிறேன் பேர்வழியே என்று சுடுசரம் என்ற பத்திரிகைக்காக மாதம் தவறாமல் முத்தையாவிடம் பயங்கரமாகப் பணத்தைக் கறந்தார்கள் பொன்னுரங்கமும், கடும்பனூர் இடும்பனாரும். அதில் ஒவ்வொரு தரமும் முதல் பக்கத்திலிருந்து பதினாறாம் பக்கம் வரை ஐந்தாறு இடங்களிலாவது அநுக்கிரகாவின் புகைப்படத்தைப் பிரசுரித்தார்கள். அறிவுச் செல்லி அநுக்கிரகா, வருங்கால வழிகாட்டி, எதிர்காலத் தலைவி என்றெல்லாம் எழுதி அவளைப் புல்லரிக்க வைத்தனர். ஒரு முறை மனித ரத்தத்தை ருசிப் பார்த்த புலி போல், மேடைப் புகழை ருசி பார்த்த அநுக்கிரகாவும் ஆகியிருந்தாள். அவளால் இப்போது அதை விட முடியவில்லை.

“வணக்கங்க அம்மா! எத்தினி நேரமானாலும் நீங்க பேசறதைக் கேட்கத்தான் காத்திக்கிட்டிருக்கோம்” என்று கைகூப்பும் இளைய முதிய பெண்களும், பயபக்தியோடு அவளை வரவேற்கும் கட்சி ஊழியர்களும் அவளை அவற்றிலிருந்து மீளாமல் அழுந்திப் போகும்படி செய்திருந்தனர்.

நெல்லுப்பேட்டை மைதானத்தில் அவள் உண்ணாவிரதம் இருந்த தினத்தன்று மாலையில் உண்ணாவிரதம் முடிந்ததும் சில வயதான பெண்மணிகள் அவளுக்கு திருஷ்டி கழித்துச் சுற்றிப் போட்டனர்.

அத்தியாயம் - 10

முதலில் புரியாமல் இருந்த, பிடிக்காமல் இருந்த பல விஷயங்களைப் போகப் போக அநுக்கிரகா புரிந்து கொள்ள ஆரம்பித்தாள். விரும்பவும் பிரியப்படவும் கற்றுக் கொண்டாள். ஒரு நாள் பொன்னுரங்கமும் மற்றோர் ம.மு.க. ஊழியரும் வந்து ஒரு திருமணத்துக்குத் தலைமை வகித்து நடத்திக் கொடுக்க வேண்டும் என்று அநுக்கிரகாவிடம் கேட்டார்கள். அவளுக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. தனகே திருமண வயது தான். ஒன்றிரண்டு அதிகம் கூட ஆகியிருக்கலாம். திருமணமாகாத தான் போய் இன்னொரு திருமணத்திற்கு எப்படித் தலைமை தாங்கி என்ன பேசுவது, எதைப் பேசுவது என்று கூசித் தயங்கினாள். பயமாகக் கூட இருந்தது. அவளைத் தனியே கூப்பிட்டுக் கொண்டு போய்ப் பொன்னுரங்கம் சொன்னான்:

“கட்சித் தொண்டரு. ஆசையோட தேடி வந்து நீங்கதான் தலைமை வகிக்கணும்னு கேட்கிறாரு. மாட்டேன்னு சொல்லி அவரை ஏமாத்திடாதீங்க. ஒப்புக்குங்க. ஜனங்களைச் சந்திக்கிற எந்த வாய்ப்பையும் ஒரு அரசியல்வாதி இழந்து விடக் கூடாது. அது கல்யாணமோ, கருமாதியோ, காதணி விழாவோ, மஞ்சக் குளியோ எதுவானாலும் போய் முன்னால் நின்னுடணும்.”

“சரி, தலைவரே! நீங்க சொல்றதை ஒப்புக்கறேன். வயசானவளா இருந்தாலாவது ‘மணமக்களுக்கு ஆசீர்வாதம்’னு வாழ்த்திட்டு உட்காரலாம். என்னை மாதிரி ஒரு சின்னப் பொண்ணு இன்னொரு சின்னப் பொண்ணோட கல்யாணத்திலே என்ன பண்ண முடியும்?”

“என்ன பண்ண முடியாது? எல்லாம் பண்ண முடியும். சரின்னு சொல்லுங்க. அவன் போய் மத்த ஏற்பாடுகளைக் கவனிக்கட்டும்.”

பொன்னுரங்கத்தின் வற்புறுத்தல் பொறுக்க முடியாமல் அவள் சம்மதித்தாள். திருமணத்துக்கு அழைக்க வந்தவன் மகிழ்ச்சியோடு புறப்பட்டுப் போனான். அவன் தலை மறைந்ததும் அவள் பொன்னுரங்கத்தைக் கேட்டாள்:

“தலைமை வகிச்சுத் திருமணத்தை நடத்திக் கொடுக்கிறதுன்னா நான் என்ன செய்யணும்?”

“ஒண்ணும் பிரமாதமில்லே, ரெண்டு மாலைங்களை எடுத்து மணமக்கள் கையிலே கொடுத்து மாலை மாத்திக்கச் சொல்லணும். அப்பாலே தாலியைத் தருவாங்க. அதைப் பலர் முன்னிலையிலே நீங்க தாம்பாளத்திலே வச்சு நீட்டினா மணமகன் எடுத்துக் கட்டுவார். அப்புறம் மணமக்களை வாழ்த்தி நீங்களும் மத்தவங்களும் பேசணும்! அது ரெண்டு மூணு மணிக்கூறு நீளும்.”

“ரெண்டு மூணு மணி நேரமா? அவ்வளவு நேரம் பேச என்ன இருக்கு? மணமக்களை வாழ்த்திட்டு உட்கார வேண்டியதுதானே?”

“அதான் இல்லே. சும்மா மணமக்களை ஜாடையா நாலு வார்த்தை வாழ்த்திட்டு, நம்ம அரசியல் எதிரிங்களைச் சாட வேண்டியதுதான். தண்ணிப் பஞ்சம் முதல் அரிசிப் பிரச்சினை வரை எதை வேணும்னாலும் பேசுங்க.”

“கல்யாண வீட்டிலே கூடவா?”

“கல்யாண வீடோ, இரங்கல் கூட்டமோ, எதிலேயும் கிடைக்கிற வாய்ப்பை விட்டுடக் கூடாது.”

குறிப்பிட்ட தினத்தற்கு ராகுகாலத்தில் கல்யாணம் நடப்பது போல நேரம் குறித்திருந்தது. அநுக்கிரகா முன்னாலேயே கல்யாண மண்டபத்துக்குப் போய் விட்டாள். மணமேடைக்குப் பின்னால் போய் அந்தக் குடும்பத் தலைவரோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று போனவள் அங்கே அம்மி மிதித்து அருந்ததி பார்த்துப் பசு வேளையில் திருமணம் நடந்து கொண்டிருந்தது கண்டு வியப்படைந்தாள். அவளுக்கும் அது பிடித்திருந்தது.

“அடடே! வாங்கம்மா. கொஞ்சம் பொறுத்துக்குங்க. இதெல்லாம் டத்தோட நல்ல வேளையிலே முடிஞ்சிடணும். அப்பாலே கல்யாணப் பெண்ணையும், புள்ளையையும் மேடைக்கு அனுப்பிடறோம்,” என்றார்கள் அந்தக் குடும்பத்துப் பெண்கள்.

எல்லா இடங்களிலுமே பதறாமல் நிதானமாகத் தாங்கள் நினைத்ததை நினைத்தபடி செய்து கொள்ளும் சாமர்த்தியம் இந்நாட்டின் படிக்காத பெண்களுக்குக் கூட இருப்பதை அவள் கண்டாள்.

“இது பாட்டுக்கு ஒரு தமாஷுக்கு நடக்குதுங்க. அசல் திருமண நிகழ்ச்சி இனிமே மேடையிலே அம்மா தலைமையிலேதான்,” என்று ஆண்கள் அவளிடம் வந்து கையைப் பிசைந்து அசடு வழிந்தார்கள்; பதறினார்கள்.

பெண்களோ பயப்படாமல் தயங்காமல் அவள் கைகளிலும் அட்சதையைக் கொடுத்து அவளை முகூர்த்த வேளையில் தாலி கட்டும் போது முறையாக வாழ்த்தும்படி செய்து விட்டார்கள். ‘தாலியைத் தான் இங்கேயே திரை மறைவில் சாஸ்திரோக்தமாகக் கட்டி விட்டார்களே, இனிமேல் மேடையிலே தான் எதை மணமக்கள் கையில் கொடுப்பது?’ என்ற தயக்கத்தோடும் சந்தேகத்தோடும் அங்கிருந்த பழுத்த சுமங்கலியான ஒரு மூதாட்டியைத் தனியே கூப்பிட்டு விசாரித்தாள் அநுக்கிரகா. அந்தம்மாள் சிரித்துக் கொண்டே, “கவலைப்படாதீங்க. அதுக்குன்னே தனியாக் கவரிங்லே இன்னொரு தாலி வாங்கி வச்சிருக்கோம். மாப்பிள்ளைக்குக் கட்டிவிடுகிற வேலை கூட இல்லே. செயின்லேயே தாலியை இணைச்சு ரெடியா இருக்கு,” என்றாள்.

பொன் மணம், கவரிங் கல்யாணம் என்று ஒரே மேடையிலே பின்னும் முன்னுமாக இரண்டு நடப்பது வேடிக்கையாக இருந்தது. அவள் அங்கே இரண்டு மூன்று மணி நேரம் தங்க வேண்டியிருந்தது. அந்த மணமேடை வாழ்த்துரையில் தான் ‘இளஞ்சோழன்’ என்கிற ம.மு.க. கவிஞர் ஒருவர் மணமக்களை அவள் தலைமையில் வாழ்த்திப் பேசும் போது, “அடுத்த தேர்தலில் அநுக்கிரகா அண்ணியார் தான் நமது தொகுதியில் சட்டமன்றத்துக்குப் போட்டியிட வேண்டும். தொகுதியைச் சேர்ந்த கட்சிக் கண்மணிகள் வீட்டுத் திருமணத்துக்குக் கூட வர இயலாதவர்களை இனி நாம் நம் தொகுதிக்குள் நுழையவே விடக்கூடாது. அண்ணியாரைப் பாருங்கள்! அழகுக்கு அழகு! அறிவுக்கு அறிவு! ஆக்ஸ்ஃபோர்டில் ஆங்கிலம் படித்த அண்ணியார் இன்று நம் பட்டி தொட்டி மக்களிடம் கூடப் பரிவுடன் பழகுகிறார் என்றால் அதுதானே பண்பாடு,” என்று முழங்கினான். புகழ்மாலை பாடினான். வியந்துரைத்தான்.

அநுக்கிரகா எம்.எல்.ஏ. ஆவது பற்றி முதன் முதலாக மேடையில் பிரஸ்தாபித்தது இந்த இளஞ்சோழன் தான். அன்று அந்தத் திருமண வாழ்த்துரையில் அதன் பின் பேசிய அனைவரும் மணமக்களை விட்டு விட்டார்கள். அநுக்கிரகா எம்.எல்.ஏ. ஆக வேண்டிய அவசியம் பற்றியே பேசித் தீர்த்தார்கள். “சரித்திரம் படைக்கும் நம் தங்கத் தலைவி, சங்கத் தமிழ்ச் செல்வி, சாதனை அரசிதான் நமது அடுத்த சட்டமன்ற உறுப்பினர். கல்யாண வீட்டில் வைத்து இந்த நல்ல செய்தியை உங்களுக்குச் சொல்வதில் உண்மையிலேயே நான் உவகை மிகக் கொள்கிறேன்,” என்று பொன்னுரங்கமும் முத்தாய்ப்பு வைத்தது போல் பேசினான். நேரம் காலம், சுபம் அசுபத்தில் நம்பிக்கை இல்லை என்று ஒரு சமயம் பேசினார்கள். அடுத்த கணமே, ‘கல்யாண வீட்டிலே வைத்து இந்தச் சுப சமாசாரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். இது பலிக்கும்,’ என்று சொன்னார்கள். இதெல்லாம் அநுக்கிரகாவுக்குப் புதுமையாகவும், வேடிக்கையாகவும் இருந்தன. மேடையில் இருந்தபடியே இவற்றை ரசித்தாள். அவளை விட வயதானவர்கள் போல் தோன்றிய மணமகளும், மணமகனும் அவள் காலில் விழுந்து கும்பிட்ட போது அவளுக்குக் கூச்சமாய் இருந்தது.

வாழ்த்து மடல் படிக்கிறேன் பேர்வழி என்று ஒரு விடலைப் பையன் மைக்கைப் பிடித்துக் கொண்டு அறு அறு என்று அறுத்தான்.

“வாழ்க்கை என்னும் பாலைவனத்தில் பூத்த பன்னீர்ப் பூக்களே! சந்தர்ப்பவாதம் என்னும் சுறா மீனுக்குப் பலியாகிவிடாமல் உங்கள் வாழ்க்கைத் தோணியை முன்னே செலுத்துங்கள்...”

- என்று மணமக்களைப் பாலைவனத்தில் வறுத்து அலைகடலில் புரட்டி இன்னும் என்னென்னவெல்லாமோ செய்து சிரமப்படுத்தினான். அவனது வாழ்த்து மடல் முழுவதும் அரை கிராம் அரிசியில் வேக வைத்த பொங்கலுக்குள் ஆறு டன் முந்திரிப் பருப்பும், கிஸ்மிஸும் கொட்டிய மாதிரி அதிக அளவு உருவக உவமைகள் திணிக்கப்பட்டிருந்தன. அளவு கடந்த உவமை உருவக ஈரத்தில் வார்த்தைகள், அவற்றின் மதிப்பு, அர்த்தம் எல்லாமே அழுகி உருக்குலைந்து போயிருந்தன. ம.மு.க. மேடைகளில் பெரும்பாலோர் அப்படித்தான் பேசினார்கள். ஏடுகளிலும் அதே பாணியில் தான் எழுதினார்கள்.

ஆஸ்தானப் புலவர் கடும்பனூர் இடும்பனார் எவ்வளவோ முயன்று கற்பித்தும் அநுக்கிரகாவுக்கு மட்டும் அடைமொழிகளையும் உவமை உருவகங்களையும் ஓவராகத் தாளித்துக் கொட்டும் அந்த நடை கைகூடி வரவில்லை, பிடிக்கவும் இல்லை.

உருவக உவமைகளும், சொல் அடுக்கு வார்த்தை அலங்காரங்களும் இல்லாவிட்டால் மக்கள் முன்னேற்றக் கட்சியில் ரொம்பப் பேச்சாளர்களும் எழுதுபவர்களும் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போய் விடுவார்களோ என்று கூட அவளுக்குப் பயமாக இருந்தது. சாதாரணமாகச் சுற்றி வளைக்காமல் எதையும் அவளுக்குச் சொல்ல வரவில்லை.

‘இப்போது மணமக்களைப் பெரியவர்கள் வாழ்த்திப் பேசுவார்கள்,’ என்பதைக் கூட “பட்டுட்டுத்திப் பரிமள கந்தங்கள் பூசிய புன்னகையும் பொன்னகையுமாய்ச் சிட்டுப் போல் இங்கே அமர்ந்திருக்கும் சிங்கார மணமக்களைப் பட்டறிவுமிக்க மூத்தோர் முதியோரும் - பெரியோர் சான்றோரும் வாயார வாழ்த்தி வனப்புறப் பேசி அறிவுரைகள் வழங்கிச் சொற்பொழிவாற்றிச் சிறப்பிப்பார்கள்,” என்றே நீட்டி முழக்கினார்கள்.

அடைமொழிகளின் அதிகக் கனத்தால் அவை சார்ந்து நிற்கும் வார்த்தைகளின் முதுகு முறிந்து போகிற மொழி நடை எப்படியோ ஒரு தொற்று நோயாக இவர்களிடையே பரவியிருந்தது. அநுக்கிரகா இதைச் சகித்துக் கொண்டாளே ஒழிய ஏற்றுக் கொள்ளவில்லை. உள்ளூர நகைத்தபடி மேலுக்குச் சில சமயங்களில் தானும் அதே போல் பேசி நடித்தாள். பலரும் பலவிதமாக எழுதவும், பேசவும் உரிமை பெறுவது ஜனநாயகம். எல்லோரும் ஒரே விதமாகப் பேசவும் எழுதவும் நிர்ப்பந்திக்கப் படுவதுதான் சர்வாதிகாரம் என்றால் அத்தகைய சர்வாதிகாரம் ம.மு.க.வில் இருந்தது. ‘சதையின் சதையான தமிழ்ப் பெருங்குடி மக்களே!’ என்று அவள் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று பொன்னுரங்கம் வற்புறுத்தினான். கல்யாண வீட்டு வாழ்த்துரைகளில் கூடச் சதை, இரத்தம், எல்லாமே தாராளமாகப் புழங்கின. கைகளைத் தட்டி ஆர்ப்பரித்தார்கள்.

கவிஞர் இளஞ்சோழன் அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. கனிவண்ணன் திருமணத்திற்கு வராததைக் கண்டித்தும் அடுத்த எம்.எல்.ஏ. வாக அநுக்கிரகா தான் வரவேண்டும் என்பதை ஆதரித்தும் பேசியதால் அடுத்த நாளே இந்தச் செய்தி கனிவண்ணனின் வகையறாவுக்கு எட்டியது. அவர்கள் உடனே ‘மறவன் குரலில்’ இளஞ்சோழனையும், அநுக்கிரகாவையும் ஒரே சமயத்தில் மட்டந்தட்டுகிற மாதிரி ஒரு கட்டுரை வெளியிட்டு விட்டார்கள். அநுக்கிரகா திருமணமாகாத அழகிய இளம்பெண். இளஞ்சோழன் திருமணமான இளம் கவிஞன். இவர்களுக்குள் காதல் அரும்புகிறது என்பது போல் ஒரு கிசுகிசு வெளியிட்டுச் சேற்றை வாரி இறைத்தது மறவன் குரல். கல்யாணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான இளஞ்சோழன் மீது அவதூறு சொல்லி இளஞ்சோழனைப் பார்த்தாலே அநுக்கிரகாவுக்கு வெறுப்பு வரும்படி பண்ணி, இனிமேல் தான் அநுக்கிரகாவைப் புகழ்ந்து பேசினால் அதற்கு விபரீத அர்த்தம் கற்பிப்பார்கள் என்று இளஞ்சோழனையும் நடுங்க வைப்பது தான் இந்தக் கிசுகிசுவின் நோக்கமாக இருந்தது. அது ஓரளவு பலிக்கவும் செய்தது.

அத்தியாயம் - 11

மறவன் குரலில் அநுக்கிரகாவையும் இளஞ்சோழனையும் பற்றி ஒரு மாதிரிக் கட்டுரை வெளிவந்த உடனே பொன்னுரங்கத்தைக் கூப்பிட்டனுப்பினார் முத்தையா. உடம்பில் கம்பளிப் பூச்சியோ மரவட்டையோ ஊர்ந்து விட்டாற் போன்ற அருவருப்பை உணர்ந்தார் அவர்.

“எதை வேணாப் பொறுத்துப்பேன். ஆனா இந்த மாதிரிக் கேரக்டர் அஸாஸிநேஷனை மட்டும் என்னால தாங்கிக்க முடியாது பொன்னுரங்கம். எங்க வம்சத்திலே இந்த மாதிரி ஒரு பொம்பளை அவனோட போனா, இவனோட போனான்னு கிடையாது. இந்த ஃபேமிலி லேடீஸ் நெருப்புன்னா நெருப்பா இருக்கறவங்க.”

“சும்மா அந்த பேப்பர்காரன் பண்ற வம்பைப் பார்த்து ஆத்திரப்படாதீங்க. எந்தத் தப்புத்தண்டாவும் நடந்துடலே. அந்தப் பையனும் ரொம்ப நல்ல மாதிரி. அவனுக்குக் கண்ணாலம் முடிஞ்சி ரெண்டு பசங்கக்கூட இருக்கு. நம்ப பாப்பா கிட்ட ரொம்ப மரியாதை உள்ள பையன். அவன் பண்ணின ஒரே தப்பு மணவிழாச் சொற்பொழிவிலே, இந்தத் தொகுதியோட சிட்டிங் எம்.எல்.ஏ. கனிவண்ணனைத் தாக்கி, எதிர்காலத்திலே - நம்ம பாப்பா பேரைச் சொல்லி அதுதான் இங்கே சட்டசபைக்கு நிற்கணும்னு ஓப்பனாப் பேசினானே, அதுதான். அதிலே வந்த ஆத்திரத்திலேதான் மறவன் குரல் இப்படித் தாறு மாறா எழுதுது. நாம பதிலுக்கு நம்ம சரத்திலே ஒரு பிடி பிடிச்சோம்னா தானாக் ‘கப் சிப்னு’ மூடிக்குவானுக.”

“சுடு சரத்திலே என்னான்னு எழுதப் போறே பொன்னுரங்கம்?”

“அதான்... அவன் சொல்றதை மறுத்து எழுதணும்.”

“சேத்திலே சகதியிலே கல்லை விட்டெறிஞ்சா நம்ம மூஞ்சியிலியும் தெறிக்கும்னு தெரியுமா?”

“தெரியுங்க...”

“அப்ப ஒண்ணு செய். இந்த விஷயத்துக்குப் பதிலே சொல்லாமே கனிவண்ணனைப் பத்தி அவனோட லஞ்ச லாவண்ய - ஒழுக்கக் கேடுகளை ஒரு புடிபுடி.”

“சரிங்க... அது நல்ல ஐடியா தான்.”

“அதோட இன்னொரு விசயம்.”

“என்னங்க...?”

“இன்னும் கொஞ்ச நாளைக்கு அதாவது எலெக்‌ஷன் முடிஞ்சி அநு ஜெயிக்கிறவரை அந்த இளஞ்சோழனை அநு பேசற மேடைப் பக்கமே அண்ட விடாதே. கொஞ்சம் ஓரம் கட்டி ஒதுக்கிவை.”

“நாம வலுவிலே அப்பிடிப் பண்ணினா இல்லாத குத்தத்தை ஒத்துக்கிற மாதிரி ஆயிடாதுங்களா? வெறும் வாயை மெல்றவங்களுக்கு அவல் கிடைச்சாப்ல ஆயிடுமே?”

“ஆகாது! நான் சொல்றபடி செய். மறக்கறதுக்கு டயம் கொடுத்தா ஜனங்க எதையும் மறந்துடுவாங்க. அதுக்கு டயம் கொடு.”

முத்தையா சொன்னபடியே செய்யப் பொன்னுரங்கம் ஒப்புக் கொண்டான். அடுத்த வாரச் சுடுசரத்திலேயே கனிவண்ணனுக்கு ஆறு ‘சின்ன வீடுகள்’ இருப்பதாகவும் அவன் லஞ்சம் வாங்கியே பல கோடி சேர்த்திருப்பதாக ‘மக்கள் பேசுகிறார்கள்’ என்றும் நெருப்பு நடைக் கட்டுரை ஒன்று வந்தது. அவசியமானால் தொடரும் என்றும் கடைசியில் போட்டிருந்தது. அது பயனளித்தது. மறவன் குரலில் அநுக்கிரகாவைப் பற்றிய கட்டுரையின் சுருதி உடனே மாறியது. இறங்கித் தணிந்தது.

‘குட்டி சமஸ்தானத்து இளவரசியால் குடிசைவாசிகளுக்கு ஆபத்து! அநுக்கிரகா இங்கு எம்.எல்.ஏ. ஆனால் ஆவாரம்பட்டு ஹவுஸைச் சுற்றியுள்ள குடிசைகள் உடனே அகற்றப்பட்டு அந்த இடம் ஆவாரம்பட்டு அரண்மனையோடு சேர்க்கப்பட்டு விடும் என்றும், ஆவாரம்பட்டு ஜமீன்தார் திவான் பகதூர் சர்.வி.டி.முத்தையாவுக்குக் குடிசைகள், குப்பங்கள் என்றாலே பிடிக்காது என்றும் ஆக்ஸ்போர்டிலே படித்த அவர் மகளுக்கும் ‘ஸ்லம்களை’ ஒழிப்பதுதான் லட்சியம்’ என்றும் பிரசாரத்தில் இறங்கியது. தொகுதியில் உள்ள அத்தனை குடிசைப் பகுதிகளிலும் அநுக்கிரகாவுக்கு ஒரு வோட்டுக் கூட விழாமல் பண்ணிவிட வேண்டும் என்று கனிவண்ணன் முயன்றான்.

இருவரும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு முன்பே பிரசாரத்தில் இறங்கியிருந்தார்கள். ஒருவர் வாய்ப்பை இன்னொருவர் தடுக்க முயல்வது தெரிந்தது. ஒரே கட்சியைச் சேர்ந்த இருவர் இப்படி இரு கோஷ்டிகளாகிச் சேற்றை வாரி ஒருவர் மேல் மற்றவர் இறைப்பதைக் கட்சித் தலைமையும் கண்டு கொள்ளாமல் இருந்தது.

ம.மு.கட்சி டிக்கெட் யாருக்குக் கிடைக்கும் என்பதும் புதிராக இருந்தன. தேர்தல் நெருங்க நெருங்க இது சூடு பிடித்தது. முத்தையா பயந்தார். பொன்னுரங்கம் பரபரப்பின்றி இருந்தான்.

“ஒண்ணும் பயப்படாதீங்க. இந்த வாட்டி கனிவண்ணனுக்கு நம்ம கட்சி டிக்கெட் கிடைக்காது. பாப்பாவுக்குத் தான் கிடைக்கப் போகுது.”

“அது சரிப்பா! டிக்கெட் கிடைச்சா மட்டும் போதுமா? வோட்டு வாங்கி ஜெயிச்சுக் காட்டணுமே? அவன் விடாமே என்னைப் பற்றியும் அநுக்கிரகாவைப் பற்றியும் ஏழைங்களோட எதிரி, குடிசைகளைத் தொலைக்கும் பண முதலைகள்னு பிரசாரம் பண்ணிக்கிட்டே இருக்கானே?”

“அந்தக் கதை எல்லாம் எடுபடாது... ஆனா எலெக்‌ஷன் முடிகிறவரை நீங்க மட்டும் கொஞ்சம் கவனமா நடந்துக்கணுங்க.”

“எதிலே கவனமா நடந்துக்கணும்கிறே பொன்னுரங்கம்?”

“சொன்னாக் கோவிச்சுக்க மாட்டீங்களே?”

“சொல்லு! எதுக்கு இவ்வளவு பெரிய பீடிகை?”

“உங்க பங்களாவைச் சுத்தி இருக்கிற குடிசைங்க, குடிசை வாசிங்ககிட்ட எல்லாம் நீங்க கொஞ்சம் பழகணுங்க.”

இதை எதிர்பாராத முத்தையா அதிர்ந்து போனார். அவருக்குக் கோபம் கூட வந்தது. “பார்க் ஏற்படுத்தித் தருவதற்காக மாநகராட்சி ஒதுக்கியிருந்த புறம்போக்கு நெலத்தை ஆக்கிரமிச்சுக்கிட்டுக் கள்ளச்சாராயம் காய்ச்சற ஆளுங்ககிட்ட எப்படிக் கனிவா இருக்கிறது? என் வீட்டுக் காம்ப்பவுண்ட் சுவரோரம் பூராக் கக்கூசாவும், சாக்க்டையாவும் ஆக்கிப்பிட்டாங்க. காம்பவுண்ட் சுவத்திலே எல்லாம் கோமணம் கோமணமாக் கட்சிக்கொடி கட்டியிருக்காங்க. வர்ற பாதை எல்லாம் படுத்துத் தூங்கறாங்க. குடிச்சிட்டு இடுப்புத் துணி விலகினது தெரியாம விழுந்து புரள்றாங்க. இதெல்லாம் எப்பிடிப்பா பொறுத்துக்கிறது? நான் அநுவை அரசியல்லே இறக்கினதே இந்த அசிங்கத்தைச் சரிபண்ணத்தானே?”

“எல்லாம் சரிங்க. ஆனா இப்ப வேணாம். எலெக்‌ஷன் முடியட்டும். ‘ஸீட்’டை ஜெயிச்சுக்கிட்டு அரை ‘அவர்லே’ இந்த அசிங்கத்தை எல்லாம் மூலையில் தூக்கிக் கடாசிறலாம்.”

“எனக்கு வேஷம் போடத் தெரியாது. தப்பைத் தப்புன்னு பார்த்து நினைச்சுப் பேசிக் கண்டிக்கணும்கிறவன் நான்.”

“கொஞ்சநாள் பொறுத்துக்குங்க. இல்லாட்டி மறுபடி கனிவண்ணன் ஜெயிச்சு வந்துருவான்.”

வேண்டா வெறுப்பாகச் சம்மதித்தார் அவர்.

“நீங்க குடிசைகளைப் பத்தி நினைக்கிறதை எல்லாம் உங்க பாஷையிலே உங்களுக்கு இருக்கிற ஆத்திரம் ஆத்தாமையோட அப்பிடியே வெளியே சொன்னீங்களோ அநுவுக்கு எலெக்‌ஷன்ல ‘டெபாசிட்’ கூடத் திரும்பக் கிடைக்காது” என்று மீண்டும் வற்புறுத்தி அவரை எச்சரித்து விட்டுப் போனான் பொன்னுரங்கம்.

முத்தையாவுக்குக் கையாலாகாத கோபம் உள்ளேயே குமுறியது. தாங்கள் பணக்காரர்கள் என்கிற தாழ்வு மனப்பான்மையாலேயே நியாயங்களைப் பேசாத பணக்காரர்களும், தாங்கள் ஏழைகள் என்பதாலேயே தாங்கள் பேசுகிற அநியாயங்கள் கூட எடுபடும் என்ற உயர்வு மனப்பான்மையிலுள்ள ஏழைகளும் உள்ளவரை இந்நாட்டில் வெறும் ஏழை பணக்காரர்களும் அவர்களிடையிலான பிரச்சினைகளும், அரசியல்களும் இடைத் தரகர்களும் அரசியல்வாதிகளும் தான் இருப்பார்கள். நல்ல மனிதர்கள் இருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. பேதமும் பொறாமையுற்ற மனித சமூக மேம்பாட்டுக்கு உதவுகிற எந்த ஏற்பாடும் இன்று இங்கு இல்லையோ என்று கூட முத்தையாவுக்குப் பயமாயிருந்தது. ‘பாப்பு லிஸ்ட்’ போக்கினால் உண்டாகியுள்ள எக்ஸிமா போலப் படைபடையாக அரிக்கிற ‘பாவனா சோஷலிசம்’ வந்தால் தான் இதற்கெல்லாம் விடிவு பிறக்கும். ஆனால் எல்லா ஏற்பாடுகளும் அசல் சமத்துவம் வந்து விடாமல் கண்ணும் கருத்துமாகத் தடுத்துக் கவனித்துக் கொண்டிருந்தன.

அநுவைத் தனியே அழைத்துப் பொன்னுரங்கம் வந்து சொல்லிவிட்டுப் போன பிரச்சினையைப் பிரஸ்தாபித்த முத்தையா, மகளின் அபிப்பிராயம் என்னவென்றும் கேட்டார். பொன்னுரங்கம் சொன்னதுதான் சரி என்றாள் அநு.

“நான் உன்னை இவ்வளவு பணம் செலவழிச்சு அரசியல்லே ஈடுபடச் சொன்னது எதுக்குன்னு தெரியுமில்லே?”

“தெரியும். ஆனா இத்தனை தூரம் முன்னேறினப்புறம் தோத்துப் போயிடறது முடியாத காரியம், தேர்தல்லே ஜெயிக்க நியாயம் மட்டும் போதாது, சாமர்த்தியம் வேணும்.”

“பணக்காரன் சொல்கிறான்கிறதாலே ஒரு பக்கம் நியாயம் அநியாயமாய் திரிந்து தோன்றக் கூடாது. ஏழை சொல்கிறான்கிறதாலே அநியாயம் நியாயமாத் திரிந்தும் நியாயம் அநியாயமாய்த் திரிந்தும் தோன்றக்கூடாது.”

“உங்க கான்ஸெப்ட், ஃபிலாஸஃபி எல்லாம் பிரமாதம் தான் அப்பா! இருந்தாலும் எலெக்‌ஷன் முடிகிறவரை இதெல்லாம் நாம பேச வேண்டாம். அப்புறம் பார்த்துக்கலாம்.”

“பணக்காரன்னா அயோக்கியனாகவும் தான் இருக்கணும்! ஏழைன்னா அவன் யோக்கியனாகவும் ஹீரோவாகவும் தான் இருக்கணும்கிற கொச்சையான குழந்தைத்தனமான தமிழ் சினிமா ‘கான்ஸெப்ட்’டைத் தான் நீயும் நம்பறியா?”

“நான் நம்பறேனோ இல்லியா, இப்போ அந்தச் சர்ச்சை எல்லாம் வேண்டாம். எலெக்‌ஷன் முடியட்டும்.”

“நல்லவவா இருக்கிற பணக்காரங்களும், கெட்டவனா இருக்கிற ஏழையும் கூட உண்டுங்கிறதை ஒப்புக் கொள்ள நமக்குத் தெம்பு இல்லை. அதனாலே அப்படிக் கதை எழுத, படம் எடுக்க, நாடகம் போட, பேசப் பயப்படறோம்.”

“தேர்தல் முடிஞ்சப்புறம் இதைப் பற்றி விரிவா விமர்சிக்கலாம்!” என்று அநுக்கிரகா தகப்பனாரிடம் விடைபெற்றுக் கொண்டாள். முத்தையாவுக்கு மனத்தில் வேதனையாயிருந்தாலும் பொறுமையைக் கடைப்பிடித்தார்.

அன்று மாலையே நல்ல செய்தி கிடைத்தது. கட்சி மேலிடம் கூட அந்த முறை அந்தத் தொகுதியில் அநுக்கிரகாவையே சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு நிறுத்துவது என்று முடிவு செய்து விட்டதாம். அதனால் ஏமாற்றமடைந்த கனிவண்ணன் கட்சியிலிருந்து விலகி அதே தொகுதியில் சுயேச்சையாக நிற்கப் போகிற தகவலும் மாலைச் செய்தித்தாள்களில் வெளியாகியிருந்தன. கனிவண்ணனைத் தவிர வேறு வேறு தரப்புக்களிலிருந்து இன்னும் எத்தனை பேர் போட்டியிடுவார்கள் என்று தெரியாமலிருந்தது. அதிகப் போட்டி இருக்கும் என்றார்கள்.

அத்தியாயம் - 12

வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி நாளும் முடிந்த பின் பார்த்தால் அந்தத் தொகுதியில் அநுக்கிரகாவையும் சேர்த்து மொத்தம் நாற்பத்திரண்டு பேர் வேட்பாளராக அபேட்சை மனு கொடுத்திருந்தார்கள். போட்டியிலிருந்து வாபஸ் பெற இன்னும் சில நாட்கள் அவகாசம் தரப்பட்டிருந்தது.

அநுக்கிரகாவும் கனிவண்ணனும் தவிர, நாற்பது பேர் அத்தொகுதியின் பல்வேறு சாதிகள், இனங்கள், மதங்களின் சார்பில் நிறுத்தப்பட்டவர்களாகத் தோன்றினர்.

அதில் முக்கால்வாசிப் பேர் முக்கிய வேட்பாளராகிய அநுக்கிரகாவோ, கனிவண்ணனோ கூப்பிட்டுப் பேசி ஏதாவது பணம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு, அப்படிப் பணம் தந்தவர்களுக்கு ஆதரவாக ஓர் அறிக்கையை விட்டு விட்டு வேட்பு மனுவை வாபஸ் பெறத் தயாராயிருந்தார்கள். அப்படித் தூது சொல்லியும் அனுப்பினார்கள். பேரமும் பேசினார்கள்.

ஆனால் இதிலும் முத்தையாவுக்குப் பல அந்தரங்கமான சந்தேகங்கள் இருந்தன. தன் மகள் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அதனால் பேர பேசிப் பணம் பறிக்க வசதியாயிருக்கும் என்று கனிவண்ணனே அவ்வளவு பேரையும் டம்மி வேட்பாளராக நிறுத்தியிருக்கலாம். அல்லது பரம இரகசியமாகப் பொன்னுரங்கமே கூட அதைச் செய்திருக்கலாம். வசதியுள்ள குடும்பத்திலிருந்து ஒருத்தர் அரசியலிலோ தேர்தலிலோ குதித்து விட்டால் எப்படிப் பிய்த்துப் பிடுங்கி விடுவார்கள் என்பதை இப்போது அவர் அனுபவபூர்வமாகவே புரிந்து கொண்டிருந்தார். முள்ளில் விழுந்து விட்ட மேல் வேட்டியை முள்ளும் குத்தாமல் வேட்டியும் கிழியாமல் எப்படியாவது திரும்ப எடுத்தால் போதும் என்ற நிலையில் தான் இப்போது முத்தையா இருந்தார். செலவில் அவர் ஒன்றும் கஞ்சன் இல்லை. தாராளமான செலவாளி. தமிழ்நாட்டில் இன்னும் எத்தனையோ ஊர்களில் தர்ம சத்திரங்கள், கோவில்களில் அறக்கட்டளைகள் என்று அந்த ஆவாரம் பட்டு சமஸ்தானத்தின் பேரில் நடந்து வந்தன. வள்ளல் தன்மை ஆவாரம்பட்டு ஹவுஸின் தனித்தன்மை என்றாலும் எவனாவது தன்னை ஏய்த்துப் பணம் பறிப்பதை மட்டும் அவர் விரும்பமாட்டார்.

இந்த நாற்பத்திரண்டு வேட்பாளர்களின் விஷயத்திலும் ஏமாற்றிப் பணம் பறிக்கிற முயற்சியையே அவர் கண்டிருந்தார். கடைசியாக மகளின் வெற்றிக்காக அவரும் விட்டுக் கொடுத்துச் செலவழிக்க வேண்டியதாயிற்று. பொன்னுரங்கம் வந்து வாதாடினான்:

“வீணா ஓட்டுச் சிதறிப் போய்க் காரியம் கெட்டுப் போயிடக் கூடாதுங்க. கனிவண்ணனோட ஸ்ட்ரெயிட் காண்டெஸ்ட் ஆக இருந்தால் தான், நம்ம பாப்பாவுக்கு வெற்றி வாய்ப்பு நிச்சயம். நாப்பத்திரண்டு அபேட்சகருங்களில் நாற்பது பேர் தலைக்கு ஆயிரம் ரெண்டாயிரம்னு ஓட்டைப் பிரிச்சுப் புட்டாங்கன்னா, என்ன ஆகும்னே சொல்ல முடியாது.”

“இதே மாதிரி கனிவண்ணனும் நினைச்சுப் பயப்படணுமே? அவன் எந்தத் தைரியத்திலே மெதப்பா இருக்கான்?”

“இப்படிப் பலபேரை நிறுத்தி ஓட்டுக்களைத் தாறுமாறாப் பிரிச்சு, அதுலே தானே ஜெயிச்சுடலாம்கிற மெதப்பாக் கூட இருக்கும்.”

“அப்போ டம்மி கேன்டிடேட்ஸுங்கள்ளாமே கனிவண்ணன் சொல்லி நிற்க வச்சதுன்னா சொல்றே பொன்னுரங்கம்?”

“அவன் அப்பிடி எல்லாம் செய்யக் கூடிய ஆளுதாங்க.”

“சரி, இப்போ என்ன செய்யணும்கிறே?”

“பணத்தைக் கொடுத்துப் ‘போய் ஒழியுங்கடா’ன்னா வாபஸ் வாங்கிடுவாங்க.”

“இன்னும் எத்தினி நாள் இருக்கு வாபஸ் வாங்க?”

“ரெண்டு நாள் தாங்க இருக்கு! அதுக்குள்ளார முடிக்கணும்.”

அடுத்த இரு தினங்களில் ஐந்நூறு முதல் ஐம்பதாயிரம் வரை செலவழித்து, முப்பத்தெட்டுப் பேரை வாபஸ் வாங்க வைத்தார்கள். குறைந்த பட்சத் தொகை ஐந்நூறு. அதிக பட்சத் தொகை ஐம்பதாயிரம். நடுப்பட்டவை பல. இந்த வகையில் சுளையாக ஐந்து லட்சம் செலவாகி விட்டது முத்தையாவுக்கு. இரண்டே இரண்டு பேரிடம் மட்டும் முடியவில்லை. ஏராளமாகப் பேராசைப்பட்டுக் கேட்டார்கள். என்ன ஆனாலும் பரவாயில்லை என்று துணிந்து அவர்களை நிராகரித்தார் முத்தையா. ஆக, அநுக்கிரகாவை எதிர்த்துக் கனிவண்ணனும், வேறு இருவரும் சேர்த்துப் போட்டியிட்டனர்.

கனிவண்ணன் தான் அப்போதைய எம்.எல்.ஏ. என்ற முறையில் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள அரும்பாடுபட்டுப் பிரசாரம் செய்தான். மற்றவர்கள் இருவரும் எதுவுமே செய்யவில்லை. உண்மையான கடும் போட்டி என்பது அநுக்கிரகாவுக்கும், கனிவண்ணனுக்கும் நடுவில் தான் இருந்தது. அவர்கள் இருவரும் தான் தீவிரப் பிரசாரத்தில் இறங்கி ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார்கள். இருவருடைய பிரசார முறையிலும் வித்தியாசம் இருந்தது. கனிவண்ணன் தோற்று விடுவோமோ என்ற பீதியோடும் பரபரப்போடும் அநுக்கிரகாவை மேட்டுக்குடி என்றும் ஏழை எளியவர்களின் பிரச்சினைகளே புரியாத மேல்தட்டு வாசி என்றும் தாறுமாறாகப் பேசினான். கொஞ்சம் ஓவராகக் கூட இருந்தது.

அந்தத் தொகுதியிலுள்ள அறுபது குடிசைப் பகுதிகளிலும் “அநுக்கிரகா வந்தால் குடிசைகளையெல்லாம் காலி செய்து ஏழை எளிய மக்களை நடுத் தெருவில் அநாதைகளாக நிறுத்தி விடுவாள்” - என்ற பிரசாரம் முடுக்கி விடப்பட்டது.

ஆனால் அநுக்கிரகாவோ பொன்னுரங்கமோ கனிவண்ணனைத் தாக்கி எதுவும் பேசாமல் ‘தாங்கள் வென்றால் அந்தத் தொகுதி மக்களுக்கு என்னென்ன நன்மைகளைச் செய்ய முடியும்’ என்பதை மட்டுமே விவரித்தார்கள். “இதுவரை உங்களை இந்த வசிதிக் குறைவான குடிசைகளிலேயே வைத்து விட்டு உங்கள் பிரதிநிதிகளாகித் தாங்கள் மட்டும் மாட மாளிகைகளைக் கட்டிக் கொண்டு வாழ்பவர்களைப் போல் அல்லாமல் குடிசைகள் உள்ள பகுதிகளில் சுகாதார வசதி குடிநீர் வசதி சாலைகளோடு கூடிய அடுக்குமாடி வீடுகளைக் கட்டிக் கொண்டு அவற்றை அங்கு முன்பு இருந்த மக்களுக்கே தவணை முறையில் பணம் கட்டி உரிமையாக்கிக் கொள்ளும்படி தரப்போகிறோம். அடுத்த ஐந்தாண்டுக் காலத்தில் அனைத்து ஸ்லம்களும் இப்படி அடுக்கு மாடி வீடுகளாகக் கட்டப்பட்டு உங்களுக்குக் கிடைக்க அநுக்கிரகாவையே தேர்ந்தெடுங்கள்.”

பெருவாரியான பெண்கள் நிறைந்த அந்தத் தொகுதியில் இந்தப் பெருவாரியான பெண்கள் பிரசாரம் நன்றாக எடுபட்டு மக்கள் மனத்தில் பதிந்தது. கனிவண்ணன் பேரையே கூறாமல், “ஆம். குடிசைகளை அகற்றத்தான் போகிறோம். உங்களைத் தெருவில் நிறுத்துவதற்காக அல்ல. மழைக்கு ஒழுகாத வெய்யிலுக்கு வெப்பம் காயாத அழகிய அடுக்கு மாடி வீடுகளைக் கட்டி, மீண்டும் உங்களுக்கே தருவதற்காகத்தான்” - என்ற பாணியில் எதிர் தரப்பினரின் பொய்ப் பிரசாரத்தை அநு சார்பினர் நாசுக்காக மறுத்தார்கள்.

கனிவண்ணன் அதுவரை எம்.எல்.ஏ. ஆக இருந்து அந்தத் தொகுதிக்கு எதுவுமே நன்மை செய்யாததாலும், குடிசைப் பகுதிகளுக்குள் எட்டியே பார்க்காததாலும், ஒரு சாதாரண அச்சாபீஸ் பைண்டராக வாழ்ந்த அவன் இன்று உறுப்பினரானதும் மாடி வீடு கட்டிப் பல லட்சம் சேர்த்து வாழ்கிற டாம்பீகத்தைப் பார்த்தும் அத்தொகுதி மக்களே வெறுப்படைந்திருந்தாலும் அவனது அடாவடிப் பிரசாரம் எடுபடவில்லை.

தன்னோடு உடன் வரும் நூற்றுக்கணக்கான ம.மு.க. பெண் ஊழியர்களுடன் ஒவ்வொரு குடிசைப் பகுதியாக நடந்தே போய் அவர்கள் குறைகளைக் கேட்டறிந்தாள் அநுக்கிரகா. அத்தனை பெரிய பரம்பரையில் வந்த புகழ் பெற்ற பணக்காரக் குடும்பத்துப் பெண் ஒரு பவிஷும் பாராமல் தங்களைத் தேடி வந்து வோட்டுக் கேட்டது வாக்காளர்களுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

அது தவிரக் கனிவண்ணன் ‘சீ சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்ற பாணியில் கட்சி டிக்கெட் தனக்கு இல்லை என்று ஆன பின் கட்சியிலிருந்து விலகிச் சுயேச்சையாகப் போட்டியிட்டுக் கட்சியையும், கட்சி வேட்பாளராகிய அநுக்கிரகாவையும் தாக்கியது பலருக்குப் பிடிக்கவில்லை. தனக்கு டிக்கெட் கொடுத்தவரை நல்ல கட்சி, வேறொருத்திக்கு டிக்கெட் கொடுத்ததும் மோசமான கட்சி ஆகிவிட்டது என்ற அணுகுமுறை மக்களுக்குக் கனிவண்ணன் மேல் வெறுப்பை அதிகமாக்கியது. தேர்தல் நாள் நெருங்க நெருங்க, எங்கும் பிரசாரம் தூள் பறந்தது. வன்முறைகள் அதிகமாயின.

ஆவாரம்பட்டு முத்தையா பங்களா சத்திரம், சாவடி மாதிரி ஆகிவிட்டது. போஸ்டர்கள், பசை, வராந்தாவிலும் வாசற்பகுதியிலும் தோட்டத்திலும் தாறுமாறாகக் கூட்டம். தினம் மூன்று வேளையும் நூறு இருநூறு பேருக்குச் சாப்பாடு என்று தடபுடல் பட்டது. முத்தையா பொறுமையே உருவாக இருந்தார். சுவரிலோ வாஷ் பேஸினிலோ ஒரு சின்ன அழுக்கைப் பார்த்தால் கூட ஆகாசத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிற அவர் வீடு முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள், பசை நாற்றம், கஞ்சி வாடை, லித்தோ சுவரொட்டிகளின் அச்சு வாடை எல்லாவற்றையும் சகித்துக் கொண்டார்.

தேர்தல் செலவுகள் கற்பனை செய்ததையும் மீறி இருந்தன. இரண்டு மூன்று பெரிய ஃபிக்ஸட் டெபாஸிட் தொகைகளை எடுத்துக் காலி செய்தும் போதவில்லை. பொன்னுரங்கம் ஏதாவதொரு செலவைக் காட்டித் தினசரி பணம் கறந்து கொண்டேயிருந்தான்.

“கனிவண்ணன் பத்தாயிரம் வோட்டு வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வுறான். பந்தயம் வேணாக் கட்டிக்கலாம்” என்றான் பொன்னுரங்கம். தளரத் தளர முத்தையாவை இப்படி உற்சாகப்படுத்துவது அவன் வழக்கமாகி இருந்தது. அவரும் உடனே புது உற்சாகத்தோடு அவன் கேட்கிற செலவுகளுக்குப் பணம் கொடுத்தார். ஒரு நிமிஷம் உற்சாகம். அடுத்த நிமிஷமே யாராவது கிளப்புகிற ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் தோற்று விடுவோமோ என்ற தளர்ச்சி என்பதாக மாறி நாட்கள் கூடிக் கொண்டிருந்தன. கனிவண்ணனும் தோல்வி பயத்தில் ஏதாவது உளறிக் கொட்டித் தாறுமாறாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.

திடீரென்று ஒரு மர்மமான - அச்சிட்ட அச்சகத்தின் பெயரே போடப்படாத துண்டுப் பிரசுரம் தொகுதி முழுவதும் பரப்பப்பட்டது.

முத்தையா இருபது ஆண்டுகளுக்கு முன் சூட்டும் டையுமாக லண்டனிலிருந்து திரும்பிய போது ‘குடிசைகள் நகரின் சுகாதாரத்தை எப்படிக் கெடுக்கின்றன?’ என்பது பற்றி நகரின் ஆங்கில தினசரி ஒன்றின் ஆசிரியர் கடிதப் பகுதியில் எழுதியிருந்தார். அந்தப் பழைய கடிதத்திலிருந்து நடுவாக நாலு வாக்கியத்தைத் தமிழ் ஆக்கி, “குடிசைகளும் சாக்கடைகளும் நகரின் புற்றுநோய்ப் பகுதிகள். அவற்றை உடனே அகற்றி நகரின் நுரையீரல்களைக் காப்பாற்றுங்கள் - இப்படிக்கு சர். வி.டி.முத்தையா - அநுக்கிரகாவின் தந்தை” என்று விஷமத்தனமாக ஒரு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. அதே கடிதத்தில் அதற்கு அடுத்த வாக்கியம், ‘நகரின் குடிசைப் பகுதிகளில் உலக பாங்க் உதவியுடன் சுகாதார வசதியுள்ள வீடுகளை மலிவாகக் கட்டி அவற்றை ஏழை எளியவர்களுக்குத் தவணை முறையில் வழங்கும் ‘ஹவுஸிங் ஸ்கீம்’ ஒன்றை அரசு போட்டுச் செயல்பட வேண்டும்’ - என்றும் முத்தையா எழுதி இருந்தார். பிரசுரத்தில் அந்த வாக்கியத்தை இருட்டடிப்புச் செய்து அவரைக் குடிசைவாசிகளின் பரம வைரியாகச் சித்தரிக்க முயன்றிருந்தார்கள். வேண்டுமென்றே முத்தையாவின் சூட்டு கோட்டு டையுடன் பழைய போட்டோவையும் எங்கோ தேடிப்பிடித்துப் பிரசுரத்தில் அச்சிட்டிருந்தார்கள்.

அத்தியாயம் - 13

வேண்டுமென்றே ஜனங்களை ‘மிஸ்லீட்’ பண்ணுகிற விதத்தில் எந்தத் தேதியில் - எந்த ஆண்டில் எதற்காகச் சொல்லியது என்ற பின்னணி எதுவும் புரியவிடாமல் மொட்டையாக முத்தையாவின் மேல்நாட்டுத் தோற்றத்தோடு ‘குடிசைகளை அகற்றுங்கள்’ என்று மட்டுமே அச்சிட்ட பிரசுரத்தை மறுத்து வேறு முழு விவரப் பிரசுரம் அச்சிட்டு வழங்க அவகாசமே இல்லாமல் அது வெளியிடப்பட்டிருந்தது. அதை மறுத்துவிட விரும்பினார் முத்தையா.

அது கனிவண்ணனின் வேலைதான் என்று எல்லோருக்கும் புரிந்தது. ஆனால் யார் பிரசுரித்தது, எங்கே அச்சிட்டுப் பிரசுரித்தது என்ற விவரமெல்லாம் அதில் இல்லை. அச்சகங்களுக்கு விடுமுறையான ஒரு நாளில் அவசர அவசரமாகத் தயார் செய்து வெளியிடப் பட்டிருந்தது இது.

பார்த்தார் முத்தையா, மூடியிருந்த ஓர் அச்சகத்தை அதிகப் பணமும் ஓவர் டைம் கூலியும் கொடுத்துத் திறந்து வேலை செய்ய வைத்து, இரவோடிரவாகப் பதில் துண்டுப் பிரசுரம் அச்சிட்டு எல்லா மூலைகளிலும் பரப்பி விட்டார். ‘அநுக்கிரகாவின் அப்பா அன்று இதையும் தான் சொன்னார். இன்று அநுக்கிரகாவும் இதையே சொல்கிறார்,’ என்று போட்டுக் குடிசைகளுக்குப் பதிலாக மலிவு விலையில் வீடு கட்ட உலக வங்கி உதவி பெற்றுத் தீட்ட வேண்டும் என்பதையும் இணைத்து முழு விவரம் வெளியிட்டு மக்களின் சந்தேகத்தையும் போக்கினார். ‘அப்படி ஒரு திட்டம் தீட்டிய அநுக்கிரகாவைச் சட்டமன்ற உறுப்பினராக்குங்கள்?’ என்ற வேண்டுகோளுடன் துண்டுப் பிரசுரத்தைப் போல் பத்து மடங்கு எண்ணிக்கையில் அதிகமாக இந்த மறுப்புப் பிரசுரம் வெளியாகிப் பரவிய காரணத்தால் மூலை முடுக்கெல்லாம் உண்மைத் தகவலைத் தெரிவிக்க முடிந்தது.

நிதானமும் கன்ஸர்வேடிவ் மனப்பான்மை உள்ளவருமான முத்தையாவுக்குக் கூட ஒரு தவிர்க்க முடியாத தேர்தல் வெறி வந்திருந்தது. தோற்று விடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்விலும் ஜெயித்து விட வேண்டும் என்ற நம்பிக்கையிலும் மூண்ட வெறியாய் இருந்தது இது. வீடே எலெக்‌ஷன் ஆபீஸாக மாறியிருந்தும் இந்த வெறி தான் அவரைச் சகித்துக் கொள்ள வைத்திருந்தது. கடைசி நாளுக்கு முந்திய நாள் பொன்னுரங்கம் வந்து, “அவங்க தரப்பிலே எவர்சில்வர் பாத்திரமும் கொடுத்து ஓட்டுக் கேட்கிறாங்க! நாமும் எதினாச்சும் பண்ணியாகணும். உடனே பத்தாயிரம் கைத்தறிப் புடவை வேணும்,” என்றான்.

முத்தையா கோபமாகக் கேட்டார். “உடனே பத்தாயிரம் புடவைகளுக்கு எங்கேப்பா போறது?”

“அதெல்லாம் கவலையை விடுங்க. இங்கே கோடௌன் தெருவிலே கைத்தறிச் சேலை ஸ்டாக்கிஸ்ட் ஒருத்தர் இருக்கார். இப்போ... ஃபோன் பண்ணினாப் பதினைஞ்சு நிமிஷத்துக்குள்ளார லாரியிலே கொண்டாந்து வீட்டு வாசல்லே இறக்கிடுவாங்க.”

“பணம் என்ன ஆகும்? விலை விவரம் எதுவும் பேசிக்க வேணாம்?”

“பேசிக்கலாம். ஐம்பது - அறுபது ரூபாயிலே நல்ல புடவையாகக் கிடைக்குங்க. தோதாப் பேசிச் சல்லிசாகக் கொடுப்பார். கிரடிட்டிலே வாங்கிக்கலாம். எலெக்சன் முடிஞ்சப்புறம் பணம் செட்டில் பண்ணிப்போம்.”

“பத்தாயிரம் புடவையை வச்சு எத்தினி வோட்டைப் பிடிக்க முடியும்? நம்பிக்கையாக ஓட்டுப் போடறவங்க கையிலே புடவை போய்ச் சேருமா? அல்லது புடவையை வாங்கிட்டு ஏமாத்திடுவாங்களா? நடுவே வேற யாராவது புடைவைங்களை அமுக்கி, மறுபடி கடையிலே கொண்டு போய் வித்துப் பணம் பண்ணிடப் போறாங்க, ஜாக்கிரதை.”

“அதெல்லாம் யாருங் ‘ராங்’ பண்ண மாட்டாங்க சார்! அஞ்சு ஓட்டுக்கு உறுதி சொல்லி, சத்தியம் பண்ணிக் கொடுக்கிறவங்க கையிலே தான் ஒரு புடவையே போகும்.”

“சத்தியமா? இதுக்கா?”

“ஆமாங்க! வழக்கத்திலே உள்ள விஷயந்தாங்க. யாரும் மாட்டேங்கறதில்லே.”

“அப்போ இப்ப ஒரு சத்தியத்துக்கு விலை அம்பது ரூபாய் பெறுமானம் உள்ள ஒரு புடைவைன்னு சொல்லு.”

“சில இடங்களிலே புடவை. வேற சில இடங்களிலே எவர்சில்வர் பாத்திரம்.”

“நம்ம ஜனநாயகத்தோட விலை புடவையும், எவர்சில்வர் பாத்திரமுமுன்னு சொல்லு.”

“கிண்டல் பண்ணாதீங்க.”

“சரி, பண்ணலே. புடவைக்கு ஃபோன் போடு. பேசி முடிச்சிடலாம்.” பொன்னுரங்கம் கைத்தறி ஸ்டாக்கிஸ்டுக்குப் போன் பண்ணி முத்தையாவிடம் கொடுத்தான். ஆவாரம் பட்டு ஹவுஸ் வி.டி.முத்தையா என்றவுடனே பயபக்தியோடு, “சரிங்க! உடனே அனுப்பறேன்,” என்று இசைந்தார் ஸ்டாக்கிஸ்டு.

பொன்னுரங்கமும் அவரும் பேசியபடி தோட்டத்தில் உலாவினர்.

“ஓட்டுப் போட்டிட்டு வர்ற ஜனங்களுக்கு வடை பாயாசத்தோடு சாப்பாடு போடணும்.”

“சாப்பிட வர்றவங்க நமக்குத்தான் ஓட்டுப் போட்டிட்டு வர்றாங்கன்னு எப்படித் தெரியும்?”

“எலெக்‌ஷன் போலிங் பூத்திலேர்ந்து நூறு கெஜம் தள்ளி உட்கார்ந்திருக்கிற நம்ம ஆளுங்க வாக்காளர் பூத்துக்குப் போறப்போ சொல்ற வார்த்தையை நம்பி ஒரு சீட்டுக் கொடுத்து அனுப்புவாங்க. அந்தச் சீட்டோட யாரு வர்றாங்களோ அவங்களுக்குச் சாப்பாடு போட்டுடலாம். தேடி வந்து சாப்பிட்டுட்டுப் போவாங்க.”

பொதுத் தேர்தல், ஜனநாயக முறைகள் எல்லாம் அரைவேக்காடுகளிடமும், இடைத் தரகர்களிடமும் சிக்கி எவ்வளவு கொச்சையாக வேண்டுமோ அவ்வளவு கொச்சையாகி இருந்தன. ஆவாரம்பட்டு சமஸ்தானம் இப்போது இல்லை. ஆனால் அதைப் போல பத்து சமஸ்தானங்களும், சொத்தும், ஐஸ்வரியமும் இருந்தால் கூட ஒரு எம்.எல்.ஏ. பதவிக்குச் செலவழிக்கக் காணாது போலிருந்தது. அதிக லாபமில்லாத அல்பமான ஒரு சிறு நன்மையையும் வீம்பையும் கருதிக் கணக்கு வழக்குப் பாராமல் செலவழித்துக் கொண்டிருந்தார் முத்தையா. தேர்தல் தினத்தன்று தெருக்களில் பூத்களில் எலெக்‌ஷன் ஏஜெண்டாகப் போகிறவர்களுக்கும் மற்றப் பணியாளர்களுக்கும் தினப்படி சாப்பாடு முதலிய செலவுகள் இருந்தன. நூறு கார்கள், இருபது வேன்கள், ஆறு லாரிகள் தேர்தல் வேலைக்காக ஓடிக் கொண்டிருந்தன. பெட்ரோல், டீஸல் தண்ணீராகச் செலவழிந்து கொண்டிருந்தன. தேர்தல் நாளுக்கு முன் தினம் பிரசாரம், கோஷம், கூப்பாடுகள் அடங்கியிருந்தன. பகல் மூன்று மணிக்கு அவரது நண்பரான காப்பி எஸ்டேட் அதிபர் ஒருவர் அவரைப் பார்க்க வந்திருந்தார். தெரியாத் தனமாக மகளை அரசியலில் இறங்கச் செய்துவிட்டுத் தேர்தல் செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுவது பற்றி முத்தையா அந்த நண்பரிடம் வருத்தப்பட்டுக் கொண்டார். அலுத்துக் கொண்டார்.

அவர் சொன்ன காரணங்களையும், விவரங்களையும் கேட்டுவிட்டு எஸ்டேட் அதிபர் சிரித்துக் கொண்டார்.

“இந்தப் பங்களாவைச் சுத்தி இருக்கிற அசுத்தங்களைப் போக்கி நீங்க விரும்பற மாதிரி பண்ணணும்கிறதுக்காக வீணுக்கு இவ்வளவு செலவழிச்சிருக்க வேண்டாம். இதை வித்துட்டு பெஸண்ட் நகர்லே அம்பது கிரவுண்ட் கடல் ஓரமா வாங்கிக் கட்டித் தோட்டமும் துரவுமாகப் பிரமாதமாக வீடு கட்டியிருக்கலாம்.”

“செய்யலாம்! ஆனால் இந்தப் பங்களாவோட எனக்கு இருக்கிற சென்டிமென்ட்டல் ‘அட்டாச்மெண்ட்’ ரொம்பப் பெரிசு. இதோட சென்ட்ரல் ஹால்லே என்னோட கிராண்ஃபாதர் வைஸ்ராய், கவர்னர்னு எத்தனையோ பெரிய பெரிய துரைமார்களுக்கும், பிரபுக்களுக்கும் விருந்து கொடுத்திருக்கார். இந்தியாவின் பெரிய பெரிய சமஸ்தானாதிபதிகள்ளாம் இந்த வீட்டு டைனிங் ஹால்லே உட்கார்ந்து சாப்பிட்டிருக்காங்க. வாஷ் பேஸின்களிலேர்ந்து, பாத்ரூம் ‘டப்’ வரை லண்டனிலிருந்து வந்த சாமான்கள். இதிலே இருக்கிற ‘சாஸ்டலியர்ஸ்’ மட்டும் இன்னிக்கு வெறும் ஆண்டிக் விலை மட்டும் போட்டால் கூடப் பதினைந்து லட்ச ரூபாய் பெறும்.”

“எல்லாம் சரி மிஸ்டர் முத்தையா. சென்டிமெண்ட்ஸுக்கும் ஒரு மதிப்பு இருக்கு. அதையும் மீறி அதுக்காகச் செலவழிக்கிறதிலே அர்த்தம் இல்லே. தவிர இன்னிக்கு முதலீடு இல்லாமல் வெறும் கையோட பாலிடிக்ஸ்லே இறங்கற ஒருத்தனுக்குத்தான் அது கோடி கோடியாத் திருப்பித் தரும். உங்களுக்கும் எனக்கும் அது ஒரு ஒயிட் எலிஃபெண்ட்தானே ஒழிய, வரவு இல்லை. நம்ம கௌரவம், பண்பாடு எல்லாம் அதிலே போய்க் கை நீட்டி வாங்கிச் சம்பாதிக்க நம்மை அனுமதிக்காது. நம்மாலே வாங்கவும் முடியாது. கொடுத்தே பழக்கப்பட்டவங்க வாங்க ஆரம்பிக்கிறது கஷ்டம். வாங்கியே பழக்கப்பட்டவங்க கொடுக்கிறதும் கஷ்டம். ஆம் ஐ ரைட் மிஸ்டர் முத்தையா?”

முத்தையா யோசனையில் ஆழ்ந்தார். பின்பு சிறிது நேரத்துக்கு அப்புறம் மறுபடி சொன்னார். “என் டாட்டர் எம்.எல்.ஏ.யா ஜெயிச்சா உடனே மந்திரியா வரச் சான்ஸ் இருக்கு. அதுக்கு அப்புறமாவது என் பிரச்சினைகள் தீரும்னு நினைக்கிறேன்.”

“யார் கண்டார்கள்? உங்கள் பிரச்சினைகள் தீருவதற்குப் பதில் மோசமாகலாம். அதிகமாகவும் செய்யலாம்.”

“ஏன்? எதனாலே அப்படிச் சொல்றீங்க? எனக்கு விளங்கலையே?”

“போகப் போக விளங்கும். அப்பப் புரிஞ்சுக்குவீங்க. பொதுவிலே ஆஸ் திங்க்ஸ் ஸ்டாண்ட் டுடே. உங்க மகளை எதிர்க்கிறான்னு சொன்னீங்களே, யாரோ கனிவண்ணனோ மணிவண்ணனோ அவனை மாதிரி ஆளுங்களுக்குத்தான் பாலிடிக்ஸ் பே பண்ணும். நமக்கெல்லாம் அது நஷ்டக் கணக்காகவும், லயபிலிட்டியாகவும்தான் இருக்கும் மிஸ்டர் முத்தையா.”

“அப்படியா? லெட் அஸ் வெய்ட் அண்ட் ஸீ!”

நண்பர் காப்பி சிற்றுண்டி அருந்தி விடைபெற்றுக் கொண்டு சென்ற பின் நெடு நேரமாகியும் முத்தையா அவர் கூறியவற்றைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார். இரவில் கூட நெடு நேரம் வரை உறக்கம் வராமல் இந்தச் சிந்தனை அவரை பாதித்தது. மறுநாள் விடிந்தால் பொதுத் தேர்தல். பல இடங்களில் சுற்றி அலைந்து விட்டு ஊழியர்களையும் தேர்தல் அலுவலகங்களையும் நேரில் போய்க் கவனித்த பின் அநுக்கிரகா வீடு திரும்புகையில் இரவு இரண்டு மணி. அலைந்து திரிந்து வாடிக் கருகி இருந்தாள். அவருக்கே அனுதாபமாகவும் பரிதாபமாகவும் இருந்தது அவளைப் பார்க்கும் போது. சிட்டுக் குருவியாகவும் பச்சைக் கிளியாகவும் இருந்தவளை இப்படி ஆக்கிய பாவத்துக்குத் தானே பொறுப்பாளி என்று கூட அவருக்குத் தோன்றியது. அவருக்கு அன்றிரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.

சரியாகக் காலை நான்கு மணிக்கு அநுக்கிரகாவின் அறையில் மறுபடி விளக்கு எரிந்தது. நீராடி உடை மாற்றிக் கொண்டு தயாரானாள் அவள். சமையற்காரனை எழுப்பி அவளுக்கு பிரட் டோஸ்ட்டும், காப்பியும் தயாரிக்கச் சொன்னார் முத்தையா.

“நீங்க ஏம்பா எழுந்திருந்து சிரமப்படறீங்க? நான் பார்த்துக்க மாட்டேனா?” என்றாள் அநுக்கிரகா.

“தூக்கம் வரலேம்மா.”

கொஞ்சம் கார்ன்ஃப்ளேக் பால் கரைசலும் இரண்டு ஸ்லைஸ் ரொட்டியும் காப்பியும் சாப்பிட்டுவிட்டு அவள் புறப்பட்ட போது, “ஹாவ் த பெஸ்ட்,” என்று வாழ்த்தி வாசலில் கார் வரை போய் வழியனுப்பி விட்டு வந்தார் முத்தையா.

அவர் மனம் சஞ்சலமாய் இருந்தது. ‘பாலிடிக்ஸ் நம்ம மாதிரி ஆளுங்களுக்கு லயபிலிட்டி அல்லது நஷ்டக் கணக்குத்தான்’ என்று நண்பர் சொல்லிவிட்டுப் போன வாக்கியத்தைச் சுற்றியே செக்கு மாடு மாதிரி மனம் சுழன்றது. மகள் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று குலதெய்வத்தை வேண்டிக் கொண்டார். அநுக்கிரகா வெற்றி பெற்று மந்திரியானால் வந்து கல்யாண உற்சவம் நடத்துவதாக ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்து கொண்டு மனத்தில் தியானித்தார். நண்பர் ஏன் அன்றைக்குப் பார்த்துத் தேடி வந்து துக்கிரி மாதிரி அப்படிச் சொல்லிவிட்டுப் போனார் என்று எண்ணி எண்ணித் தவித்தது அவர் உள்ளம். அந்த நண்பர் வந்த போது அநுக்கிரகா வீட்டில் இல்லை. அவர் வந்து பேசிவிட்டுப் போனதெல்லாம் பற்றி மகளிடம் அவர் எதுவும் கூற விரும்பவில்லை.

அத்தியாயம் - 14

பரபரப்பான தேர்தல் நாள் விடிந்து, நிமிஷமாய் நிகழ்ந்து ஓடி விட்டது. வாக்குப் பதிவு விறுவிறுப்பாக இருந்தது. அநுக்கிரகாவையும், கனிவண்ணனையும் தவிர மற்ற இரண்டு வேட்பாளர்களும் - ஒரு போலிங் பூத்துக்கும் ஏஜெண்ட் கூட நியமிக்கவில்லை.

மாலைப் பத்திரிகைகளில், அந்தத் தொகுதியில் பெண் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்திருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தைப் படித்த போது, முத்தையாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பொன்னுரங்கமும், “நம்ம வெற்றி நிச்சயமுங்க” என்றான்.

போர் முடிந்து, ஓய்ந்த களம் போல, தெருக்களும், தெருச் சுவர்களும் வெறிச்சோடிக் கிடக்க ஆரம்பித்தன.

அந்த அமைதி ஒரு நாள் தான். அடுத்த நாள் மாலை தேர்தல் முடிவுகள் வர ஆரம்பித்ததனால் பத்திரிகை அலுவலகங்கள், ஸ்டால்கள், வானொலிப் பெட்டிகள் முன்பு கூட்டம் மொய்த்தது.

விடிய விடிய வானொலி, டெலிவிஷன் முன் மக்கள் காத்துக் கிடக்க ஆரம்பித்தனர்.

முத்தையாவைப் பொன்னுரங்கம் எச்சரித்தான்.

“நாம ஜாக்கிரதையாக இருக்கணும்! தோற்கிறதை விட ஜெயிக்கிறதிலே அதிக ஆபத்து இருக்கு. அடிபட்ட பாம்பு கொத்த வர்ற மாதிரிப் படமெடுத்துப் பாயற சுபாவம் கனிவண்ணன் பயலுக்கு. அதனாலே ஜெயிக்கிற கனிவண்ணனை விடத் தோற்கிற கனிவண்ணன் அபாயமானவன்கிறதை மறந்துடாதீங்க.”

“என்ன பண்ணிடுவான்? தலையையா சீவிட முடியும்?”

“எதுக்கும் நம்ம ஆளுங்க நூறு பேரை இன்னிக்கு இங்கேயே தங்கச் சொல்லி, முன் ஜாக்கிரதையா ஒழுங்கு பண்ணியிருக்கேன்! தோட்டத்திலேயும், வராண்டாவிலேயுமா மறைஞ்சு படுத்திருக்காங்க. கிளப்பிவிட்டு அனுப்பிடாதீங்க. தனியா நாம் சமாளிக்க முடியாது.”

“ரிஸல்ட் எப்பத் தெரியும்?”

“அநேகமாகப் பத்து பதினொரு மணிக்குள்ளே நம்ம தொகுதி ரிஸல்ட் வந்துடும். ஆனா அவன் உடனே ‘டெக்ளேர்’ பண்ண ஒத்துக்க மாட்டான். தோத்தா ரீ கவுண்ட் கேட்டு உயிரை வாங்குவான்.”

“ரீ கவுண்ட் கேட்டால் பணம் கட்டணுமே?”

“கட்டணும். கட்டுவான். ரீ கவுண்ட் ஆகிற டயத்துக்குள்ளே வெளியிலே தன் அடியாளுங்களுக்கு சிக்னல் அனுப்பிடுவான். இங்கே அடி உதை சோடாப் புட்டி வீச்சு கல்லெறின்னு கிளம்பிடுவாங்க...”

“எப்பிடிச் சொல்றே?”

“பதினைஞ்சு வருஷமா ஒரே கட்சியிலே பழகியிருக்கமே; கனிவண்ணன் என்ன பண்ணுவான்னு எனக்குத் தெரியாம வேற யாருக்குங்க தெரியும்?”

“அவனே ஜெயிச்சுட்டான்னு ஒரு பேச்சுக்கு வச்சுப்போம்! அப்ப என்ன நடக்கும்?”

“கழுத்திலே மாலை போட்டுக்கிட்டு, அடியாளுங்க புடை சூழ ஜீப்ல அர்த்த ராத்திரியிலே, ஊர்கோலம் விடுவான். சாராயக் கடைக்கும் பிரியாணிக் கடைக்கும் பணம் செலவழியும். ஆனா இந்த வாட்டி அவன் ஜெயிக்க முடியாது. நான் சேலன்ஜ் பண்றேங்க.”

“எதை வச்சு அத்தினி உறுதியாச் சொல்றே பொன்னுரங்கம்?”

“ஜனங்க நாடித் துடிப்பு எனக்குத் தெரியுமுங்க. இதே ஊர்ல, இதே பேட்டையிலே எத்தினி எலெக்‌ஷன் பாத்திருக்கேன்?”

“சரி, நம்ம அநு ஜெயிச்சு, அது பொறுக்காம சோடாப்புட்டி வீச்சு, கல்லெறின்னு கனிவண்ணன் இறங்குவான்னா, நாம இப்பவே போலீஸ்ல ஒரு பாதுகாப்புக் கேட்க வேணாமா?”

“கேளுங்க. ஆனா எலெக்‌ஷன் ரிஸல்ட் நேரத்திலே அவங்க இப்பிடி அப்பிடிச் சாயாம இருப்பாங்க. ரொம்பக் கண்டுக்க மாட்டாங்க. அவசியமும் இல்லே. நம்ம ஏற்பாடே பக்காவாச் செய்திருக்கேனுங்க. வாங்க காமிக்கிறேன்.”

பொன்னுரங்கத்தைப் பின் தொடர்ந்தார் முத்தையா. கூட்டத்தின் ஒரு பகுதியில், சோடாப் புட்டிகள், கல் குவியல்களோடு ஆட்கள் தயாராயிருந்தனர். இன்னொரு மரத்தினடியில் சிலம்புக் கழிகள், சவுக்குக் கட்டைகள், சைக்கிள் செயின்களுடன் ஆட்கள்.

“என்னப்பா இது? என் வீட்டிலே எனக்குத் தெரியாம இத்தினி பாதுகாப்பு ஏற்பாடு செய்து வச்சிருக்கே?”

“பாம்பின் கால் பாம்பறியும்னு பழமொழிங்க. தோத்த விரக்தியிலேயும் கசப்பிலேயும் அந்தப் பயல் புயலாக் கிளம்பிடுவான். பார்த்துக்கிட்டே இருங்க. ரிஸல்ட் டிக்ளேர் ஆனதும் தெரியும்.”

இப்படிப் பொன்னுரங்கம் அவரிடம் விவரித்துக் கொண்டிருந்த போது, இரவு மணி ஒன்பதரை இருக்கும். பத்தேகால் மணி சுமாருக்கு அவரும் பொன்னுரங்கமும் முன் ஹாலில் டி.வி. எதிரே அமர்ந்து ஸ்பெஷல் புலட்டீன் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது, விர் விர்ரென்று சரமாரியாகக் கற்கள் வந்து விழ ஆரம்பித்தன. பதிலுக்கு உள்ளே இருந்தும் தாக்குதல்களை ஆரம்பித்தார்கள். சோடா புட்டிகள் உள்ளே வந்து வெடித்து உடையும் சத்தம் கர்ண கடூரமாயிருந்தது.

“தோத்துட்டான், அதான் இதெல்லாம். நம்ம அநு அம்மா ஜெயிச்சுட்டாங்க. இப்ப டி.வி.யில வரும் பாருங்க.”

பொன்னுரங்கம் சொல்லி முடிக்குமுன், தொலைக்காட்சி அறிவிப்பில் அவர்களது அந்தத் தொகுதியின் பெயரைக் குறிப்பிட்டு, “சற்று முன் கிடைத்த தகவலின்படி, அநுக்கிரகா - கனிவண்ணனை விடப் பதினாலாயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முந்திக் கொண்டிருக்கிறார்” - என்று டி.வி. அறிவிப்பாளர் அறிவிக்கவும் சரியாயிருந்தது.

“எப்படீப்பா இத்தனை சரியாக் கணிச்சுச் சொன்னே? ஆச்சரியமா இருக்கே?” என்று முத்தையா வயதையும் மீறிச் சிறு குழந்தை போல் உற்சாகத்தில் துள்ளினார்.

“அடுத்த புலட்டீன்ல வெற்றிச் செய்தியே வந்துடும், பாருங்க. கொஞ்சம் இங்கேயே இருங்க. நான் தோட்டத்திலே போயி ஆளுங்களைப் பார்த்துப் பதில் தாக்குதலுக்கு இன்ஸ்டக்‌ஷன்லாம் குடுத்துட்டு வரேன்,” என்று புறப்பட்டுப் போனான் பொன்னுரங்கம்.

தோட்டத்திலிருந்து, “டாய்! ராங் பண்ணாதே தொலைச்சிடுவோம் தொலைச்சு” என்று யாரையோ பதிலுக்கு மிரட்டும் குரல்கள் அவருக்குக் கேட்டன. வோட்டு எண்ணும் இடத்திலிருந்து அநு எப்படி வீடு திரும்பப் போகிறாள் என்ற கவலையும், பயமும் இப்போது அவரைப் பிடித்துக் கொண்டன. ரௌடிகளும், முட்டாள்களும் நிறைந்த சூழலில், அரசியல் தோல்விகளை விட வெற்றிகள் தான் அதிகக் கஷ்டங்களை உண்டாக்கும் என்பது வினாடியில் அவருக்குப் புரிய ஆரம்பித்தது. மோசமான ரௌடி ஒருத்தனை எதிர்த்து முதல் தரமான சாது ஒருத்தன் ஜெயிப்பது எத்தனை அபாயகரமான பின் விளைவுகளையெல்லாம் உண்டாக்கும் என்றெண்ணிய போது குலை நடுங்கியது. ஏதோ பண வசதி, ஆள் கட்டு, பொன்னுரங்கம் போன்ற அனுபவக்காரரின் பக்க பலம் எல்லாம் இருப்பதனால் தான் தம்மாலேயே சமாளிக்க முடிகிறதென்று அவருக்குப் பட்டது.

தோட்டத்தில் பட்டாசு வெடிக்கிற சப்தமும் கூடவே கேட்டது. பொன்னுரங்கம் சிரித்தபடியே திரும்பி வந்தான். “ஒரு செட் ஆளுங்க கலாட்டா பண்ணணும்னு தேடி வந்தாங்க. ஆனா, இங்கே நாம் எல்லாம் எதிர்பார்த்துத் தயாராப் பதிலுக்கு ‘செட் அப்’ பண்ணி வச்சிருந்ததாலே மிரண்டு ஓடிட்டாங்க.”

“அது சரி, பொன்னுரங்கம். வழியெல்லாம் இப்பிடி மோசமாவே இருக்கே, வோட்டு எண்ற இடத்திலேயிருந்து அநு பத்திரமா வீடு திரும்பணுமே? அதுக்கு என்ன ஏற்பாடு? எனக்குக் கவலையா இருக்குப்பா.”

“ரெண்டு லாரி நெறைய நம்ம ஆட்களும் பாதுகாப்புப் பட்டாளமும் அங்கே இருக்காங்க. வெற்றி அறிவிப்பு வந்ததும் மாலை மரியாதை, பட்டாசு வாண வேடிக்கையோட முன்னே ஒரு லாரி, பின்னே ஒரு லாரி சகிதம் திறந்த ஜீப்ல அநு வீட்டுக்கு ஊர்வலமா வரும். ஆரத்தி சுத்திக் காட்டி வரவேற்க ரெடியாகுங்க.”

“இந்த மாதிரி டென்ஷன் நிலைமையிலே ஊர்வலம் வாண வேடிக்கை எல்லாம் எதுக்குப்பா? தோத்தவன் வயித்தெரிச்சலை மேலும் கிளறி விடவா?”

“அதெல்லாம் வேணுங்க. உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. சும்மா இருங்க.”

“அநுவுக்கு ஆபத்து எதுவும் வந்துடக் கூடாதேன்னு தான்...”

“ஆபத்தாவது, ஒண்ணாவது? கிட்ட வந்தான்னா நம்ம ஆளுங்க எலும்பைப் பார்ட் பார்ட்டா கழட்டி வச்சுடுவானுங்க. அதெல்லாம் வேண்டிய ஏற்பாடு பண்ணியிருக்கேன். இங்கே தான் நம்ம வீட்லே அதிக கலாட்டா நடக்கும். சுத்தி ஒரே ஸ்லம் பாருங்க. அதனாலேதான் வோட்டு எண்ற இடத்திலே நம்ம ஆளுங்களை ஏற்பாடு பண்ணிட்டு உங்களுக்குத் துணையா இருக்கணும்னு நான் நம்ம ஆளுங்களோட இங்கே வந்துட்டேன்.”

அவனுடைய முன் யோசனையும், முன் ஜாக்கிரதையும் முத்தையாவுக்கு வியப்பளித்தன. இரவு பதினொன்றரை மணி டி.வி. ஸ்பெஷல் புலட்டீனில் அநுக்கிரகாவின் வெற்றி அறிவிக்கப்பட்டது. பதினேழாயிரத்துச் சொச்சம் வோட்டு வித்தியாசத்தில் அவள் கனிவண்ணனைத் தோல்வியுறச் செய்திருந்தாள். தயாராக வாங்கி வைத்திருந்த சாக்லேட், ஸ்வீட் பொட்டலங்களைப் பிரித்து, டிரேயில் குவித்து முதலில் பொன்னுரங்கத்திற்கும், அங்கிருந்த மற்றவர்களுக்கும் கொடுக்கச் செய்தார் முத்தையா.

“உங்க வயசுக்கு இப்பிடித் தூக்கம் விழிக்கிறது ஒத்துக்குங்களா? நீங்க வேணும்னா போய்ப் படுங்க. எல்லாம் நான் பார்த்துக்கறேன். பாப்பா வீடு திரும்ப எப்பிடியும் மூணு மணி ஆயிடுமுங்க. தொகுதி பூரா ஜீப்பில போயி ஒரு சுத்துச் சுத்திட்டு ஊர்கோலமா வர்றத்துக்கு ஏற்பாடுங்க.”

“அதெல்லாம் எதுக்குப்பா? எவனாவது கல்லெறி, சோடாப் புட்டின்னு கிளம்பப் போறான்?”

“தொடுவானா? நம்ப செயல் வீரர்கள் கூட இருக்காங்க.”

அவன் பதில் கூறிய தெம்பைப் பார்த்த முத்தையா கவலை விட்டார். சில வினாடிகளில் அவர் வீட்டு வாசலில் முதலில் கொஞ்சம் கலாட்டா கூப்பாடு, கல்லெறி ரகளைகளும், அவை ஓய்ந்த பின் அப்புறம் பட்டாசு வாண வேடிக்கைகளும் தடபுடல் பட்டன.

அத்தியாயம் - 15

வெற்றி ஊர்வலம் முடிந்து அநுக்கிரகா வீடு திரும்பும் போது காலை மணி நான்கு. மகளை நெஞ்சாரத் தழுவி வரவேற்றார் முத்தையா.

“உடனே போய்ப் படும்மா. ரொம்பக் களைச்சுப் போயிருக்கே. கொஞ்சம் தூங்கு. விடிஞ்சதும் மத்ததைப் பேசிக்கலாம். பொன்னுரங்கம் அன்னிக்கு உறுப்பினர் அட்டையைக் கொடுத்த நல்ல வேளை தான்... நீ ஜெயிச்சாச்சு. அவனுக்கு உன் கையாலே ஸ்வீட் குடு” என்றார்.

அவள் இரண்டு கைகளாலும் சாக்லேட்டை வாரித் தாராளமாக வனிடம் கொடுத்தாள்.

பொன்னுரங்கம், “அம்மா எப்பவும் இப்படியே எதையும் கைநிறைய எடுத்துக் குடுக்கிற மாதிரி மகராசியா இருக்கணுங்க” என்று அதை இரு கைகளாலும் வாங்கிக் கொண்டான்.

முத்தையா அநுவைப் பின் தொடர்ந்து, அவள் காதருகே சென்று, தணிந்த குரலில், “தூக்கம் வரலேன்னா கொஞ்சம் பிராந்தியைக் குடிச்சிட்டுத் தூங்கும்மா. உடம்பு அசதிக்கு இதமா இருக்கும். தூக்கமும் உடனே வரும்” என்றார்.

“நான் பார்த்துக்கறேன் அப்பா. குட் நைட்” என்று அவள் படுக்கப் போன போது, குட் மார்னிங் ஆகியிருந்தது. அவரும் சிறிது கண்ணயரலாம் என்று தமது படுக்கையறைக்குச் சென்றார்.

விடிந்து ஆறு ஆறரை மணிக்குப் பொன்னுரங்கம் காலிங் பெல்லை அமுக்கி முத்தையாவை எழுப்பினான். நைட் உடையில் தூக்கக் கிறக்கத்தோடு தள்ளாடி வந்த அவரிடம் “மத்தவங்க போய்ப் பார்க்கிறத்துக்கு முந்தி நாம தலைவரைப் போய்ப் பார்த்து மாலை போட்டுறணுங்க. பாப்பாவை எழுப்பிக் குளிச்சு டிரெஸ் பண்ணிக்கிட்டு ரெடியாகச் சொல்லுங்க” என்றான் பொன்னுரங்கம். அவன் கையில் பூக் கடையிலிருந்து விசேஷமாகச் சொல்லி வரவழைக்கப்பட்ட ஆளுயர ரோஜாப்பூ மாலை நீட்டாக இலையில் வாடாதபடி பேக் செய்யப்பட்டுத் தயாராக இருந்தது.

அநுக்கிரகாவை எழுப்பி, விஷயத்தைச் சொல்லி தயாராகுமாறு முத்தையா துரிதப்படுத்தினார். மறுபடி ஹாலுக்கு அவர் வந்த போது, செய்தித் தாள்களோடு உட்கார்ந்திருந்தான் பொன்னுரங்கம்.

“போனவாட்டி நூத்தி அறுபது ஸீட்தான் பிடிச்சாரு. இந்த வாட்டி நூத்தி எழுபத்திநாலு ஸீட்ல ஜெயிச்சாச்சு. தலைவர் ரொம்ப மஜாவா இருப்பாரு. பிரமாத மெஜாரிட்டிங்க.”

“பலே! பலே! எல்லாம் நம்ம அநு கட்சியிலே சேர்ந்த அதிர்ஷ்டம் தான் பொன்னுரங்கம்.”

“ம.மு.க. சரித்திரத்திலேயே இப்பதாங்க அதிக ஸீட் பிடிச்சிருக்கோம்.”

“பல தொகுதிங்கள்ளே எதிர்த்தவங்களுக்கு, டெபாஸிட்டே போயிடிச்சுப் போலிருக்கேப்பா?”

“பின்னென்ன? பாறையிலே மோதினா என்ன ஆகும்?” என்றவன் இன்னும் அவர் இரவு உடையிலேயே இருப்பதைப் பார்த்து, “என்னங்க? நீங்களும் கிளம்புங்க. தலைவருக்குப் பாப்பா மாலை போடறப்ப நீங்க கூட இருக்கணும். நான் ஒரு காரணத்தோடத்தான் சொல்றேன்” என்றான் பொன்னுரங்கம்.

“நான் எதுக்குப்பா? நீயும் பாப்பாவும் போயிட்டு வாங்க, போதும்.”

“அதெல்லாம் முடியாது. நீங்க வந்தே ஆகணும்.”

“நான் வந்து என்ன செய்யப் போறேன்?”

“நீங்க வாங்க, சொல்றேன்.”

“சரி, நீ இவ்வளவு வற்புறுத்தறப்ப நான் எப்படி மாட்டேன்றது?”

முத்தையாவும் தயாரானார். மூவரும் ம.மு.க. கட்சிக் கொடி கட்டிய காரில் தலைவர் வீட்டுக்குப் போனார்கள். அங்கே திருவிழாக் கூட்டம். ஜெயித்த எம்.எல்.ஏ.க்கள் நிறைய பேர் மாலையோடு வந்து காத்திருந்தார்கள். பொன்னுரங்கம் க்ளூ கொடுத்தான்.

“முதல் மாலை நம்மளுதா இருக்கணும்! நீங்க எதையும் கண்டுக்காதீங்க. பாப்பாவும் நீங்களும் முன்னாடி நடங்க. நான் பின்னாடி மாலையோடு வரேன். காக்க ஆரம்பிச்சோம்னா காக்க விட்டே கொன்னுடுவாங்க. தாய்க் குலம்னால் தலைவருக்குக் கோவம் வராது. யார் தடுத்தாலும் கேட்காமத் துணிஞ்சு உள்ளார பூந்துடுங்க. பாப்பா மாதிரிப் பொண்ணைப் பார்த்தா தலைவரே முக மலர்ந்து போவாரு.”

அவன் யோசனைப்படியே பலரும் உள்ளே போகப் பயந்து வெளியே காத்திருந்த போது, அநுக்கிரகாவும், அவரும் துணிந்து தலைவரின் ஏ.சி. அறையில் நுழைந்தனர். பொன்னுரங்கம் மாலையோடு பின் தொடர்ந்தான்.

அந்தப் பரபரப்பான அரசியல் சூழலிலும், தமிழ்த் தினசரியின் சினிமாப் பகுதியில் ‘குளு குளு ஊட்டியில் கொய்யாக்காய் குப்புசாமி ஜல்சா’ தலைப்பில் மூழ்கியிருந்த தலைவரை ‘வணக்கங்க’ என்ற அநுக்கிரகாவின் குயில் குரல் சுகமாகக் கலைத்துக் கவனத்தை ஈர்த்தது. கொய்யாக்காய்க் குப்புசாமி ஒரு பிரபல காமெடியன். தலைவருக்குப் பிடித்தவர்.

“வாம்மா! பிரமாதமான ஓட்டு வித்தியாசத்திலே ஜெயிச்சிருக்கே. மகிழ்ச்சி,” என்று முகமலர்ந்த தலைவருக்குப் பொன்னுரங்கம் பிரித்துத் தந்த மாலையை அவள் அணிவிக்க முயல, “உன்னை மாதிரிப் பொண்ணு கழுத்திலே மாலை போடறது தமிழ்ப் பண்பு இல்லை,” என்று தடுத்துக் கையிலேயே வாங்கிக் கொண்டார் தலைவர்.

முத்தையாவை பற்றிச் சொன்னான் பொன்னுரங்கம்.

“என்னப்பா இது, இவரைத் தெரியாமலா? அந்த நாளிலே ஜஸ்டிஸ் பார்ட்டியிலே பெரிய புள்ளியாச்சே?”

முத்தையா அகமகிழ்ந்தார். பூரித்தார். “உங்க தலைமையிலே தொண்டு செய்கிற வாய்ப்பு என் மகளுக்குக் கிடைச்சது என் பாக்கியம்.”

பொன்னுரங்கம் கைகட்டி, வாய்ப் பொத்தி, மரியாதையாக மெல்ல ஆரம்பித்தான்: “நம்ம பார்ட்டி சார்பிலே ஜெயிச்சிருக்கிற தாய்க்குலத்திலேயே இவங்க தான் அதிகம் படிச்சவங்க. இள வயசுக்காரங்க, ஆக்ஸ்ஃபோர்டிலே படிச்சவங்க.”

“அதிகம் படிச்சவங்க மட்டுமில்லே. ரொம்ப அழகானதும் இவங்கதாம்ப்பா” என்று சொல்லித் தலைவர் புன்னகை பூத்தார். அநுக்கிரகாவுக்கு முகம் லேசாகச் சிவந்தது. அழகிய முகத்தில் புன்னகை இழையோடியது. தலைவராக அவர்களுக்கு விடை கொடுத்துக் கிளம்பச் சொல்லாவிட்டாலும், வெளியே நிறையப் பேர் காத்திருக்கிறார்களே என்ற உறுத்தலில் அவர்கள் மூவரும் எழுந்து வணங்கி விடைபெற்றார்கள். தலைவர் அவர்களுக்கு விடை கொடுத்துவிட்டு மறுபடியும் கொய்யாக்காய்க் குப்புசாமி செய்தியில் மூழ்கினார்.

வெளியே காத்திருந்தவர்கள் அநுக்கிரகாவையும், முத்தையாவையும், பொன்னுரங்கத்தையும் பொறாமையோடு பார்த்தனர்.

“இந்தக் கட்சியிலே பொம்பளைன்னு வந்தா, அவங்களுக்கு எதுவும் உடனே முடியுதுப்பா” என்று அவர்கள் காதில் விழுகிறாற் போலவே ஒருவன் முணுமுணுத்தான். திரும்பிக் காரில் போகும் போது, “நல்ல சகுனம் தெரியுதுங்க, நம்ம பாப்பா மந்திரி ஆகிறது நிச்சயங்க,” என்று உறுதியான குரலில் சொன்னான் பொன்னுரங்கம்.

“எதை வச்சுச் சொல்றே? மந்திரி பதவியைப் பற்றித் தலைவர் எதுவும் சொல்லலியேப்பா?”

“நான் இவங்க தான் நம்ம பார்ட்டியோட பொம்பிளை எம்.எல்.ஏ.க்களிலேயே அதிகம் படிச்சவங்கன்னு சொன்னப்பா அவரு உடனே, ‘அதிகம் படிச்சவங்க மட்டுமில்லே! ரொம்ப அழகானதும் இவங்கதாம்ப்பா’ன்னு சிரிச்சிக்கிட்டே ஒரு போடு போட்டாரு பாருங்க. அங்கே தான் இருக்கு சூட்சுமம்! பாப்பாவை அவருக்கு ரொம்பவும் பிடிச்சுப் போச்சு.”

“என்னைக் கூட ஞாபகம் வச்சிருக்காரேப்பா! ஜஸ்டிஸ் பார்ட்டியிலே முக்கியப் புள்ளியா இருந்தீங்கன்னு கரெக்டா கண்டுபிடிச்சிட்டாரே?”

“நல்ல ஞாபக சக்திங்க. எதையும் மறக்க மாட்டாரு.”

அநுக்கிரகா மட்டும் எதுவும் பேசாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.

“நீங்க என்னம்மா யோசிக்கிறீங்க? தைரியமா இருங்க. மந்திரிப் பதவி உங்களுக்குத்தான்.”

“ஸ்டேட் முழுவதும் ஜெயிச்சவங்க லிஸ்ட்டைப் பார்த்தா, மொத்தம் என்னையும் சேர்த்து ஆறு லேடி மெம்பர்ஸ். அதிலே ரெண்டு பேர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவங்க. மத்த நாலு பேர்ல பார்ட்டியிலே என்னை விட மத்த மூணு பேர் ரொம்ப நாளா இருக்கிறவங்க. சீனியர் மெம்பர்ஸ் - மூணுவாட்டி எம்.எல்.ஏ.யாத் தொடர்ந்து இருந்தவங்க.”

“அதனாலே?”

“அவங்க மந்திரியாறதுக்குத்தான் பிரைட் சான்ஸஸ் இருக்கு.”

“பந்தயம் போடறீங்களா? நீங்கதான் மந்திரியாவுறீங்க.”

“கஷ்டம்! நமக்கிருக்கிற ஆசையில் நீங்களாச் சொல்றீங்க தலைவரே!”

“பார்த்துட்டே இருங்க! நான் சொன்னதை நிரூபிச்சுக் காண்பிக்கிறேன். நடக்குதா இல்லியா பாருங்க.”

பொன்னுரங்கம் உறுதியாகச் சொன்னான். முத்தையாவும் அநுக்கிரகாவும் அதை நம்பவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள், பார்ட்டியின் சீனியர் எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் போது தன்னை மந்திரியாக்கத் தலைவர் துணிவார் என அநுக்கிரகா நம்பவில்லை.

அத்தியாயம் - 16

தலைவருக்கு மாலையணிவித்து விட்டு வீடு திரும்பியதும் பொன்னுரங்கம் முத்தையாவையும் உடன் வைத்துக் கொண்டு டெலிஃபோன் அருகில் போய் உட்கார்ந்தான். முத்தையா ஓர் அரசியல் குருநாதரின் அருகில் அமரும் குட்டி சீடனைப் போல் அவனருகே கவனித்தபடி இருந்தார்.

“எம்.எல்.ஏ. அநுக்கிரகா வீட்டிலிருந்து பொன்னுரங்கம் பேசறேன். காலையில முதல் ஆளா அம்மாதான் தலைவரைப் போய்ப் பார்த்து மாலை போட்டாங்க. தலைவரிட்ட பிரியமாப் பேசிக்கிட்டிருந்தாங்க. இன்னிக்கு மத்தியானம் ஹோட்டல் ரோஸ் கார்டன்ஸ்லே அம்மா பத்திரிகைக்காரங்களுக்கு ஒரு லஞ்ச் அரேஞ்ச் பண்ணியிருக்காங்க. அவசியம் வந்துடுங்க. ஏதாச்சும் நியூஸ் உண்டான்னு தானே கேட்கறீங்க? உண்டு. நிச்சயமாப் பெரிய நியூஸே இருக்கு. பிரஸ் கான்பரன்ஸுக்கு வந்துடுங்க. அங்கே சொல்றேன் என்று எல்லாப் பத்திரிகைகளுக்கும் செய்தி ஸ்தாபனங்களுக்கும் ஃபோன் பண்ணி முடித்த பின் முத்தையா பக்கம் திரும்பி, “ரோஸ் கார்டன்ஸ் ஹோட்டல் ஏ.சி. டீலக்ஸ் - கான்பரன்ஸ் ரூமிலே ஒரு அம்பது லஞ்சுக்குச் சொல்லிடுங்க,” என்றான் பொன்னுரங்கம்.

மறுபேச்சுப் பேசாமல் முத்தையா ஹோட்டல் ரோஸ் கார்டன்ஸ் நம்பரைச் சுழற்றினார். பேசி முடித்தார். பிரஸ் மீட் - லஞ்ச் - ஏற்பாடாயிற்று.

“சோத்தைப் போட்டு மத்தியானம் ரெண்டு மணிக்குச் சொல்லி அனுப்பிட்டோம்னா சாயங்காலம் எல்லாப் பேப்பரிலேயும் வந்துடும். முதல் பக்கத்திலேயே போட்டுருவாங்க.”

“எதைப் போடுவாங்க? கொஞ்சம் புரியறாப்பல தான் சொல்லேன் பொன்னுரங்கம்.”

“பார்த்துட்டே இருங்க! என்ன மாதிரி மாயாஜாலம்லாம் நடக்குதுன்னு?” அப்போது பொன்னுரங்கம் படு உற்சாகமாக இருந்தான். பகலில் ரோஸ் கார்டன்ஸ் விருந்து முடிந்ததும், “இனிமே நீங்க இங்கே இருக்கப்படாது. நீங்களும், பாப்பாவும் நைஸாக் கழட்டிக்குங்க. நான் பார்த்துக்கறேன்,” என்று அவர் காதருகே பொன்னுரங்கம் முணுமுணுத்தான். இருவரும் அப்படியே செய்தார்கள். “வாங்க! நியூஸ் சொல்றேன்,” என்று பத்திரிகைக்காரர்களோடு தனியே போனான் பொன்னுரங்கம்.

மாலைச் செய்தித்தாள்களில் எல்லாம் அநுக்கிரகா கட்சி தலைவருக்கு முதல் மாலை அணிவித்ததாகவும், அரை மணி நேரத்துக்கு மேல் பல விஷயங்கள் குறித்துத் தன் தந்தையோடு அவரிடம் அந்தரங்கமான முறையிலே பேசிக் கொண்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

‘இவர்களது இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆக்ஸ்ஃபோர்டு பட்டதாரியும், புகழ் பெற்ற ஆவாரம் பட்டு ஹவுஸ் பெண்மணியுமான அநுக்கிரகா புதிய மந்திரி சபையில் வீட்டு வசதி அமைச்சராகப் பதவி ஏற்கக் கூடும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிகிறது’ - என்ற கடைசிப் பாரா எல்லாச் செய்தித் தாள்களிலும் தடித்த எழுத்துக்களில் பிரசுரமாகி இருந்தது.

வெற்றிச் சிரிப்புடனும் மாலைப் பத்திரிகைகளுடனும், முத்தையாவையும், அநுக்கிரகாவையும் சந்திக்க வந்தான் பொன்னுரங்கம். இருவரும் சந்தேகத்தோடு அவனை வினவினர் :

“அதெப்படி? இவங்களா முடிவு பண்ணிட்டாங்களா என்ன? ‘ஹவுஸிங் மினிஸ்டர்’னு போர்ட்ஃபோலியோ கூட ஹேஷ்யத்திலேயே போட்டிருக்காங்களே?”

“என்ன போட்டிருக்காங்களோ அது நான் சொல்லி போடச் சொன்னதுதான். அரசியல்லே இது ஒரு உத்தி. நாம நினைக்கிறதை - ஆசைப்படறதை - எல்லாருமே நம்பத் தகுந்த வட்டாரங்களிலே பேசற மாதிரி பேப்பர்லே வர்ற மாதிரிப் பண்ணிடணும். அப்புறம் அதை யாரும் மறுக்க மாட்டாங்க. பயப்படுவாங்க. அதுவே உண்மை போல ஆயிடும்.”

“இருக்கலாம். ஆனா, என்னை விட சீனியரா ரெண்டு மூணு வாட்டியா எம்.எல்.ஏ. பதவி வகிச்சவங்கள்லாம் இருக்கிறப்போ என்னை மந்திரியாக விட்டிருவாங்களா?”

“விடறாங்களா இல்லையான்னுதான் பாருங்களேன்? இன்னும் மூணு நாளிலே இதே நியூஸ் பேப்பருங்களிலே, அநுக்கிரகாதான் பெண்கள் சார்பில் அமைச்சராகணும்னு மற்ற அஞ்சு பெண் எம்.எல்.ஏ.க்களுமே அவங்களா அறிக்கை விட்டுத் தலைவரை வேண்டிக்கப் போறாங்க.”

“அது எப்படி சாத்தியம் பொன்னுரங்கம்?”

“ஒரு காரையும், கொஞ்சம் பணத்தையும் எங்கிட்டக் குடுத்துப் பாருங்க. ரெண்டே நாளிலே முடிச்சுக் காட்றேன்.”

முத்தையா காரையும் அவன் கேட்ட பணத்தையும் கொடுத்தார். ராசிபுரம் முத்தம்மாள், மருக்கொழுந்துப் பேட்டை மங்கையர்க்கரசி, கோவாலனூர்க் கண்ணம்மாள், பிச்சாண்டிபுரம் மாரியம்மாள், கள்ளப்பள்ளம் காமாட்சி ஆகிய ஐந்து பெண் எம்.எல்.ஏ.க்களையும் சந்திக்கப் புறப்பட்டான் பொன்னுரங்கம்.

“பெரிய பெரிய கொம்பன்லாம் வெளியே மாலையோட காத்திருக்கிறப்ப, நம்ம தலைவரு முந்தா நாள் கட்சியிலே சேர்ந்த இந்த அநுக்கிரகாவைத் தான் முதல்லே மாலை போட வரச் சொல்லி உள்ள கூப்பிட்டாரு. இவங்க சேர்ந்த வேளை தான் கட்சி சட்டசபையில இத்தினி அறுதிப் பெரும்பான்மையா வந்திருக்குன்னு தலைவர் நினைக்கிறது தான் காரணம். மத்தவங்களை அரை செகண்ட் ஆனாலே, ‘டயமில்லே, புறப்படுங்க. அப்புறம் பார்க்கலாம்’னு கையைக் கூப்பி, வெளியே தலையைப் பிடிச்சுத் தள்ளாத குறையாகத் துரத்தி விடற தலைவர், இந்த அநுக்கிரகா கிட்டவும், அவங்க ஃபாதர் சர்.வி.டி. முத்தையா கிட்டவும் அரை மணிக்கு மேல உட்கார்த்தி வச்சிப் பேசிக்கிட்டிருந்தாருன்னா பார்த்துக்கங்களேன். இவங்க தான் அடுத்த ஹவுஸிங் மினிஸ்டர். முன்னாடி நீங்களே வேண்டிக்கிட்ட மாதிரிப் பண்ணினா, மத்தப் பெண் எம்.எல்.ஏ.க்களான உங்களுக்கும் மரியாதை. அவங்களுக்கும் மரியாதை. தலைவரும் தன் மனக்குறிப்பறிஞ்சு நீங்க நடந்துக்கிட்டீங்கன்னு உங்களுக்கு வேற ஏதாச்சும் கமிட்டித் தலைமை - வாரியத் தலைமைன்னு மத்தப் பதவிகளைக் கொடுப்பாரு. தலைவர் மனசு புரிஞ்சு தான் நான் இதைத் தயாரிச்சுக்கிட்டு வந்திருக்கேன். உங்க கிட்ட கையெழுத்துக்காக வந்திருக்கேன்,” என்று சவிஸ்தாரமாக எடுத்துக் கூறி தயாராக எழுதி வைத்திருந்த காகிதத்தில் கையெழுத்துக்கு நீட்டினான் பொன்னுரங்கம். ஐந்து பெண் எம்.எல்.ஏ.க்களில் யாருமே தட்டிச் சொல்லவில்லை. உடனே கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டார்கள்.

“ஆமாம். நீங்க சொன்னதெல்லாம் ஏற்கெனவே பேப்பர்லே பார்த்தோம். தலைவர் அவங்களைத்தான் முதல்லே பார்த்தாருன்னாங்க. மந்திரியாப் போடலாம்னு கூடப் பேப்பர்லியே போட்டிருந்தான்” என்று கூடச் சிலர் ஒத்து பாடினார்கள். பொன்னுரங்கத்தின் முயற்சி முழு வெற்றி அளித்தது. “கொஞ்சம் இருங்க! பார்ட்டி ஹெட் குவார்ட்டஸுக்கு ஒரு எஸ்.டி.டி. போட்டு மாம்பழக் கண்ணன் சார் கிட்ட ஒரு வார்த்தை கேட்டிட்டுக் கையெழுத்துப் போடறேன்,” என்று கொஞ்சம் டபாய்த்த கள்ளப்பள்ளம் காமாட்சியை, “மாம்பழம் அனுப்பித்தானே நானே கிளம்பி வந்திருக்கிறேன். போன் போட்டா உங்களைத் தான் கோபிச்சுக்குவாரு,” என்று சவடாலாக அடித்துச் சமாளித்தான் பொன்னுரங்கம். அப்புறம் போன் பேசுகிற அளவு துணிவு அவளுக்கு எங்கிருந்து வரும்? உடனே அவன் காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டாள்.

பொன்னுரங்கம் தனது கையெழுத்து வேட்டைத் திக் விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சென்னை திரும்பினான். அறிக்கை, போட்டோஸ்டெட் பிரதி எடுக்கப்பட்டது. பிரஸ்மீட் இரவு டின்னருடன் ஏற்பாடாயிற்று. மறுபடியும் ரோஸ் கார்டன்ஸ் ஹோட்டல் விருந்து நடந்தது. மறுநாள் காலைப் பத்திரிகைகளில் ‘பெண்கள் சார்பில் அநுக்கிரகாவுக்கே மந்திரி பதவி தரப்பட வேண்டும். ம.மு.க. பெண் எம்.எல்.ஏ.க்களின் ஏகோபித்த அறிக்கை. கட்சி தலைவருக்கு வேண்டுகோள்’ - என்று செய்திகள் தடபுடலாகப் பிரசுரமாயின. முத்தையாவுக்கு ஒரே ஆச்சரியம். “உன்னை என்னமோ ஏதோன்னு நினைச்சேன். நீதாம்பா ரியல் கிங் மேக்கர்” என்று அவனை வியந்தார். தேர்தலில் வென்றதும், அதிகாலையிலேயே தலைவரை முதலில் பார்த்து மாலை போட வைத்தது தொடங்கி, அவன் செயல்பட்ட வேகத்தையும், விவேகத்தையும் பார்த்து வக்கீலான முத்தையாவே அயர்ந்து போனார். ‘சீஸண்டு பாலிட்டீஷியன்’ என்பார்களே அப்படி ஆகியிருந்தான் சைக்கிள் கடைப் பொன்னுரங்கம்.

சர்.வி.டி. முத்தையாவுக்கு எல்லாமே கனவு போல் தோன்றியது. அநுக்கிரகா எம்.எல்.ஏ. ஆகி மந்திரியும் ஆகப் போகிறாள். அதுவும் அவருக்கு மிகவும் பயன்படக் கூடிய ஹவுஸிங் மந்திரியாகவே ஆகப் போகிறாள். கனிவண்ணனைப் பழி வாங்கியாயிற்று. அரண்மனை போன்ற ஆவாரம் பட்டு ஹவுஸ் மாளிகையைச் சுற்றி முளைத்திருக்கும் குடிசைகள் அகன்று தென்றல் வீசும் சிங்காரப் பூங்காவாக உருவாகப் போகிறது. முத்தையா பொன்னுரங்கத்தைக் கேட்டார்:

“ஏம்பா பொன்னுரங்கம்? இது எப்படிப்பா? ஹவுஸிங் மினிஸ்டர்னு நீயா நியூஸ் குடுக்கற? அதை உங்க தலைவரோ, கட்சி ஆளுங்களோ சந்தேகப்பட்டுத் தட்டிக் கேட்க மாட்டாங்களா?”

“தலைவர் விருப்பம் அதுதானோ என்னவோன்னு தொண்டருங்க கேட்கவே மாட்டாங்க. கட்சித் தொண்டருங்க விருப்பம் இதுதானோ என்னமோன்னு தலைவரும் கேட்காம விட்டுடுவாரு. எங்க கட்சியிலே தலைவரைப் பார்க்கிறதே குதிரைக் கொம்பு! மீறிப் பார்த்தாலும் சாமி கும்புடற மாதிரிக் காலைத் தொட்டு விழுந்து கும்பிட்டுட்டு ஓடியாந்துடுவாங்க. பேசவோ, கேள்வி கேட்கவோ, விவாதிக்கவோ முடியாது. தலைவர் பக்கத்திலே சமதையா உட்கார்ந்து, ‘அவங்களை ஏன் எம்.எல்.ஏ. ஆக்கினீங்க? இவங்களை எப்பிடி மந்திரியாக்கலாம்?’ என்றெல்லாம் தட்டிக் கேட்க யாருமே கிடையாது. அதனாலேதான் என்னாலே சுளுவா இதெல்லாம் பண்ண முடிஞ்சது.”

பொன்னுரங்கத்தின் அனுபவ ஞானத்தை வியந்தார் முத்தையா. அவனே மேலும் கூறினான். “இதெல்லாம் பண்ணியும் கூடப் பிரயோசனமில்லே! கைக்கெட்டினது வாய்க்கு எட்டாமப் போகவும் நேரிட்டுறலாம். எப்படித் தெரியுமா?” அவன் இப்படிக் கேட்டதும் துணுக்கென்றது அவருக்கு.

அத்தியாயம் - 17

ஆவலோடும் பரபரப்போடும் அவர் பொன்னுரங்கத்தைக் கேட்டார்: “எதனாலே கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமற் போனாலும் போகலாம்ன்னு சொல்றே?”

“காரணம் இருக்குங்க. கனிவண்ணனும் ம.மு.க.விலே என்னை மாதிரியே ஒரு கிங் மேக்கர்! அவன் ஏதாச்சும் இடைஞ்சல் பண்ணிக்கிட்டே இருப்பான். உங்க மகளைக் கட்சியிலே சேராமத் தடுக்கப் பார்த்தாங்க. முடியலே. எம்.எல்.ஏ. டிக்கெட் கிடைக்காமத் தடுக்கப் பார்த்தாங்க. அதுவும் முடியலே. எலக்சன்ல ஜெயிக்க விடாமப் பண்ணிடலாம்னு பார்த்தாங்க. பலிக்கலே, ஜெயிச்சாச்சு. மந்திரிப் பதவியும் கிடைக்கப் போகுது. அதுவும் வீட்டு வசதி மந்திரி பதவியே கிடைக்கப் போறது அவங்க எரிச்சலை இன்னும் அதிகமாக்கும்.”

“எரிச்சல் அதிகமாகி என்ன செய்ய முடியும்? தோத்துச் செல்லாக் காசாத் தேஞ்சு போனப்புறம் செய்ய என்ன இருக்கு?”

“அங்கே தான் ராங் பண்றீங்க. அதாவது தப்புக் கணக்கு போடறீங்க. நான் முன்னாடியே உங்களுக்குப் பல தடவை சொல்லியிருக்கேன். ஜெயிக்கிற கனிவண்ணனை விடத் தோற்கிற கனிவண்ணன் அபாயகரமான ஆள்னு.”

“ஆமாம், சொல்லியிருக்கே. எனக்கும் நெனைவிருக்கு. ஆனா, இனிமே அவன் நம்மை என்ன பண்ணிட முடியும்?” என்று அநுக்கிரகாவே கேட்டாள்.

“முடியுங்க! உங்க வீட்டைச் சுற்றி இருக்கிற குடிசைங்களுக்கு அவனே ஆளைத் தூண்டி விட்டு ராத்திரியோட ராத்திரியா நெருப்பு வச்சிட்டு, நீங்க தான் நெருப்பு வைக்க ஏற்பாடு பண்ணினீங்கன்னு துஷ்பிரசாரத்தைக் கிளப்பி, ‘குடிசைகளை அகற்றுவோம் என்று அன்று சொன்னார்கள், இன்று ஜெயித்ததும் செய்து காட்டுகிறார்கள். ஏழை எளியவர்கள் வீட்டுக்குத் தீ வைத்து அழிக்கும் இவர்கள் தான் நாளைய வீட்டு வசதி மந்திரியாம். வீடுகள் பிழைக்குமா? குடிசைகள் தப்புமா? குப்பங்கள் வாழுமா? பரிதாபம்! பரிதாபம்’ - என்று போஸ்டர் போட்டு உங்கள் சான்ஸைக் கனிவண்ணன் முனைந்தால் கெடுக்க முடியும். அது தான் பயமாக இருக்கிறது. எதற்கும் பயப்படாத நானே அவனுக்குப் பயப்படறேன். கனிவண்ணனைக் கட்சியிலேர்ந்து தூக்கினப்புறம் மாம்பழம் கூட நமக்குப் பயப்படுகிறான். வாலாட்டறது இல்லே. ஆனா, கனிவண்ணன் வெளியில் போயிட்டதாலே என்மேலே, அவனைத் தோற்கடிச்ச உங்க மேலே எல்லாம் பயங்கரமான கோபத்தோட இருக்கான். எதுவும் பண்ணுவான். எப்படியும் உங்க சான்ஸைக் கெடுக்கப் பார்ப்பான்.”

“இப்படியெல்லாம் கூட வக்கிரமாகச் செய்வாங்களா? உன் கற்பனையா?”

“கற்பனையாவது கத்திரிக்காயாவது? கனிவண்ணனைத் தெரிஞ்சவங்களுக்குத்தான் இது புரியும். நிச்சயமா இப்பிடியெல்லாம் நடக்கும். ஆனா, இதை முந்திக்கிட்டு முறியடிக்க ஒரு வழி இருக்கு.”

“என்ன வழி அது?”

“உங்க வீட்டைச் சுத்தி இருக்கிற ஸ்லம் உட்பட எல்லாம் குடிசைப் பகுதிகளிலேயும் நாமே நம்ம ஆளுங்களையும், தொண்டருங்களையும் விட்டு ராப்பகலா அசம்பாவிதம் எதுவும் நடக்காம ரோந்து சுத்தணும். ‘தோல்வி விரக்தியில், தோற்றுப் போனவர்கள் - அவர்களுக்கு நீங்கள் ஓட்டுப் போடவில்லையே என்ற ஏமாற்றத்தில் எந்த விநாடியும் உங்க குடிசைகளுக்கு நெர்ப்பு மூட்டலாம். ஜாக்கிரதையாகவும் எச்சரிக்கையாகவும் இருங்க. நாங்களும், தொண்டர்களும் உங்களுக்கு உதவிடக் காத்திருக்கிறோம். இப்படிக்கு உங்கள் அன்பைப் பெற்று உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. அநுக்கிரகா’ என்று கையொப்பமிட்டு ஒரு லட்சம் துண்டுப் பிரசுரம் அச்சிட்டு முன்கூட்டியே நாம் குடிசைப் பகுதிகளில் வினியோகித்து விட வேண்டும்.”

“பிரமாதமான ஐடியா பொன்னுரங்கம்! உடனே ஏழுமலையான் பவர் பிரஸ்ஸுக்குப் போன் போடு. ஏற்பாடு பண்ணிடலாம்” என்றார் முத்தையா. பொன்னுரங்கத்தின் புத்திக் கூர்மைக்கு ஈடாக எதுவுமே இருக்க முடியாது என்று அவருக்கு அப்போது தோன்றியது.

‘தோல்வியில் துவண்டோர் துயர் பல புரியக்கூடும்! வெற்றி விளைந்த நல் முத்துக்களே பொறுப்பீர்!’ - என்று தலைப்பிட்டுப் புலவர் எழுதிய துண்டுப் பிரசுரம் அவசர அவசரமாக அச்சிடப்பட்டு, லாரிகள், டிராக்டர்கள், ஜீப்கள் மூலமாக அத்தனை குடிசைப் பகுதிகளிலும் பரப்பப் பட்டு விட்டன. துண்டுப் பிரசுரத்தில் கைகூப்பி வேண்டுவது போன்ற அநுக்கிரகாவின் புகைப்படமும் அச்சிடப்பட்டிருந்தது. தொண்டர் படையும், கட்சி ஊழியர்களும், பொன்னுரங்கத்தின் அடியாட்களும், சைக்கிள் செயின், சவுக்குக் கட்டை, சோடாப்புட்டி சகிதம் குடிசைப் பகுதிகள் முழுவதும் இரவு பகல் பாராமல் ரோந்து சுற்றிப் பாதுகாத்தனர்.

கனிவண்ணன் சதித் திட்டத்தில் இடி விழுந்தது. அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. குடிசைப் பகுதிகள் பத்திரமாகப் பிழைத்தன. அநுக்கிரகாவும், குடிசைப் பகுதிகளுக்கு ஜீப்பில் போய் அடிக்கடி அவர்கள் குறைகளை விசாரித்துச் சரி செய்து வந்தாள். குடிசைகளை அழித்து விடுவாள் என்று சொல்லியே அவள் எதிரிகள் அவளைப் பற்றிப் பிரசாரம் செய்ததால் வேறு வழியின்றி அவள் குடிசைப் பகுதிகளைச் சுற்றிச் சுற்றியே மலர்ந்த முகமும் கூப்பிய கைகளுமாக வலம்வர வேண்டியிருந்தது. மூக்குச் சளி ஒழுகிச் சலைவாய் வடியும் குழந்தைகளை இரு கைகளாலும் வாரி எடுத்து அணைத்து, ‘தமிழ்ச் செல்வி’ என்று பெயர் சூட்ட வேண்டியிருந்தது.

அடுத்து பத்து நாட்களுக்குப் பின் கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட இருபது கேபினட் ரேங்க் அமைச்சர்களில் அநுக்கிரகாவும் ஒருத்தியாயிருந்தாள். வீட்டு வசதி, தாழ்த்தப்பட்டோர் நலன், சமூக நலம் ஆகிய மூன்று துறைகளுக்கும் மந்திரியாக அவள் பதவி ஏற்றிருந்தாள்.

கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாணம் முடிந்ததும் கட்சித் தலைவரைத் தனியே சந்தித்த போது அவர் அவளுக்குச் சில அறிவுரைகளை கூறினார். அவளுக்கு மட்டுமே பிரத்தியேகமான அறிவுரைகள் அது:

“நான் சொல்றதைத் தப்பா நினைக்காமச் சரியாப் புரிஞ்சிக்கணும் அம்மா நீ! உங்க ஃபாதரோட சமஸ்தான அரண்மனையான, ஆவாரம்பட்டு ஹவுஸிலே இனிமே நீ தங்கியிருக்கக் கூடாது. அமைச்சர்களுக்கான வீடுகளிலே ஒண்ணை உனக்கும் ‘அலாட்’ பண்ணச் சொல்றேன். நீ உடனே அங்கே குடியேறிடணும். உன்னோட ‘சோஷலிஸ்டிக் இமேஜ்’ வளரணும்னா ‘மிட்டா மிராசுகளும், அரண்மனைவாசிகளும் மந்திரியாகும் மகத்துவம் பாரீர்’னு இன்னிக்குக் காலம்பற மறவன் குரல்லே உன்னைப் பத்தி எழுதியிருக்கிற மாதிரி இனிமே யாரும் எழுதாமப் பார்த்துக்கணும். ஏழைங்க குடிசைகளை அடுக்கு மாடி வீடாக்கி அளித்தல் மாதிரி முற்போக்குத் திட்டங்களை நிறைவேற்ற நீ வேகமாகச் செயல்பட்டு ஏழைகளின் மேலும், குடிசை வாசிகள் மேலும், உன்னிடம் தோற்றுப் போன கனிவண்ணனை விட உனக்குத்தான் அதிக அக்கறை உண்டுங்கிறதை அவசர அவசரமாக நிரூபிக்கணும். நீ ஆவாரம்பட்டு சமஸ்தானத்து உரிமையாளர் சர்.வி.டி. முத்தையாவோட அருமைப் பொண்ணுங்கிறதைப் பாமர ஜனங்கள் மறக்கிற மாதிரி இனிமே நடந்துக்கணும். இல்லாட்டி மிட்டா மிராசுன்னே புலம்பிக்கிட்டிருப்பாங்க. அவங்களை மறக்கடிக்கறாப்பல சமூக நலம், ஸ்லம் கிளியரன்ஸ், தாழ்த்தப்பட்டோர் நலம்னு நீயாக ஓடியாடி அலைஞ்சு பாடுபடணும்மா! உன் பேரை நிஜமாக்குகிற மாதிரி ஏழை பாழைக்கு அநுக்கிரகம் பண்ணணும்.”

“நிச்சயமாப் பாடுபடுவேன். என்னை நம்புங்க. உலக பாங்க் உதவியோடு நிறைய அடுக்கு மாடி வீடுகளைக் கட்டித் தவணை முறையில் ஏழைகள் பணம் கட்டி விட்டு அடைகிறாற் போல வழி செய்வேன்! உங்க அறிவுரையை மறக்க மாட்டேன்.”

“ரொம்பக் கரெக்ட்! நீ பாடுபடறதைப் பார்த்து, ‘ஏழைகளின் ரட்சகி’ன்னு மத்தவங்க கொண்டாடணும்! அநுக்கிரகம் செய்கிற இவளுக்கு அநுக்கிரகான்னு பெயர் வச்சது எத்தினி பொருத்தம்னு ஜனங்க கொண்டாடணும்.”

அன்று மாலை அநுக்கிரகா தன் தந்தையிடம் சிறிது நேரம் தனியாகப் பேச வேண்டும் என்றாள். அவள் கேட்ட தினுசைப் பார்த்து முத்தையாவே சந்தேகப்பட்டார். என்னவோ, ஏதோ என்று தயங்கவும் செய்தார்.

“நீ மினிஸ்டராயாச்சு! நம்ம தோட்டத்திலே போலீஸ் சென்ட்ரி கூடாரம் போட இடம் ஒதுக்கச் சொல்லணும். இங்க வர்ற வழி எல்லாம் ஒரே குப்பையும், குடிசையும், சாக்கடையும், கக்கூஸுமா அசிங்கப்படுத்தியிருக்காங்க. உன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அதை எல்லாம் கிளியர் பண்ணிச் சுத்தமாக்கணும். ஒரு மினிஸ்டரோட வீடு - அதுவும் ஹவுஸிங் மினிஸ்டரோட வீடு சாக்கடையும் கொசுவுமா இப்பிடி இருக்கக் கூடாது.” பேசிக் கோண்டே அவளோடு தனியறைக்கு நடந்தார் அவர். ஏ.சி. செய்த அந்த அறையில் அப்போது தந்தையும் மகளும் மட்டுமே இருந்தனர். வேறு ஈ, கொசு கூட கிடையாது.

மெல்ல அநுக்கிரகா தொண்டையைக் கனைத்து இருமிக் கொண்டு தொடங்கினாள்:

“இனிமே இப்படி ஐம்பது ஏக்கர் நிலத்தில் தோட்டமும் துரவுமா இருக்கிற இந்த ஆடம்பர அரண்மனையிலே நான் உங்களோட சேர்ந்து வசிச்சா நல்லா இருக்காது. ரொம்ப ஆடம்பரமாத் தோணும். அரண்மனைவாசின்னு எதிர்க்கட்சிகள் என்னைக் கிண்டல் பண்ணும்னு சீப் மினிஸ்டரே அபிப்பிராயப்படறாரு. நான் நாளையிலிருந்து கவர்ன்மெண்ட் எனக்கு அலாட் பண்ற வீட்டுக்குத் தனியாக் குடி போகப் போறேன்! நீங்க தப்பா நெனைச்சுக்கக் கூடாது. வழக்கம் போல டிரைவர், சமையலாள், தோட்டக்காரங்க, வேலையாட்கள் எல்லாம் இங்கேயே இருப்பாங்க. உங்களைக் கவனிச்சுப்பாங்க. இந்த அரண்மனைக் கார் கூட எனக்கு வேண்டாம். அரசாங்கக் கார், ஃபோன் எல்லாம் கிடைச்சுரும்.”

முத்தையாவுக்கு ஒரே அதிர்ச்சி. என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை அவருக்கு. அவள் மந்திரியாகி அந்த வீட்டில் தங்கப் போவதானால், அந்த வசதிகளும் அந்த வீட்டின் சூழலும், அந்த வீட்டுக்கான சுற்றுபுற வசதிகளும் பெருகும் என்று கனவு கண்டு கொண்டிருந்த அவருக்கு அது எதிரிடையாக இருந்தது.

“இப்படி இந்த வீட்டிலே நான் இருக்கிறவரை ஜனங்க என்னை உங்களோட மகளாகவும் ஆவாரம்பட்டு சமஸ்தான இளைய வாரிசாகவும் தான் நினைப்பாங்க. அது எங்க கட்சியோட ‘சோஷலிஸ்டிக் இமேஜைப்’ பாதிக்கும்.”

“ஜெயிச்சா திருப்பதிக்கு வந்து கல்யாண உத்சவம் பண்றோம்னு பிரார்த்தனை பண்ணிக்கிட்டோமே, நினைவிருக்கா?”

“அதை என் சார்பிலே நீங்களே போய்ப் பண்ணிட்டு வந்துடுங்கப்பா. நானே வந்தால் ‘பெண் மந்திரி திருப்பதியில் சாமி கும்பிட்டார்னு’ பேப்பர்ல போடுவாங்க. ஒரு மாதிரி இருக்கும். நல்லா இருக்காது. தவிர எனக்கு உடனடியா நெறைய வேலை இருக்கு. சிடியிலே ஸ்லம் இருக்கிற ஏரியாக்களிலே எல்லாம் புறம்போக்கு நிலங்களையும் தனியார் நிலங்களையும் நியாய விலையில் அரசே எடுத்துக் கொள்ள அதிகாரம் வழங்கும் அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்து உலக பாங்க் உதவியுடன் ஏழைகளுக்காக நிறைய அடுக்கு மாடி வீடுகள் கட்டப் போறோம். முதல்வர் உடனடியா அதைக் கவனிக்கச் சொல்றாரு.”

முத்தையாவுக்கு எலெக்‌ஷன் சமயத்தில் தன்னைச் சந்திக்க வந்துவிட்டுத் துக்கிரி மாதிரி என்னமோ சொல்லிச் சென்ற அந்த எஸ்டேட் அதிபர் நினைவு வந்தார் இப்போது.

“என்னப்பா, பதில் சொல்லாம இருக்கீங்க? என் மேலே கோபமா? என்ன யோசிக்கிறீங்க?”

அவர் அவளுக்குப் பதில் சொல்ல வாயைத் திறக்கு முன் வெளியே இருந்து யாரோ உள்ளே வர அனுமதி கேட்டுக் காலிங் பெல்லை அழுத்தினார்கள். அவர் கதவைத் திறந்தார். பொன்னுரங்கம் மலர்ச் செண்டுடன் உள்ளே நுழைந்தான். “மகிழ்ச்சி அம்மா! என் பாராட்டுக்கள். அமைச்சராயிட்டீங்க... இந்த ஏழையையும் ஞாபகம் வச்சிக்குங்க... மறந்துடாதீங்க”என்று சிரித்தபடி மலர்ச் செண்டை அநுக்கிரகாவிடம் நீட்டினான் அவன். முத்தையாவும் அநுக்கிரகாவும் இருந்த முகபாவத்தைப் பார்த்து, “என்னங்க, நான் போயிட்டு அப்புறம் வேணா வரேன். ஏதோ குடும்ப விஷயம் பேசிக்கிட்டு இருந்தீங்க போலிருக்கு” என்றான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. நீயும் இரு. இது உனக்கும் தெரிய வேண்டிய விவகாரம் தான் பொன்னுரங்கம்” என்றார் முத்தையா.

“என்ன விசயங்க...”

அநுக்கிரகா சுருக்கமாக மறுபடி விஷயத்தை விவரித்தாள். பொன்னுரங்கம் அவளுடன் ஒத்துப் பாடினான்.

“இதிலே பாப்பா செய்யிறதுதாங்க சரி! தலைவர் நாலும் யோசித்துத்தான் இந்த அறிவுரையைச் சொல்லியிருப்பாரு. இந்த வீட்டிலே மந்திரிங்கிற முறையிலே பாப்பா இருந்தா - அரமணைவாசி அரமணைவாசின்னு இதைச் சொல்லியே ஃபியூச்சர் இல்லாம ஒடுக்கிடுவாங்க. இங்கே போக வர வழியும் நல்லா இல்லே. வழியை ஒழுங்கு பண்ணினால் குடிசைவாசிங்க கூப்பாடு போடுவாங்க. ஒழுங்கு பண்ணாட்டி மந்திரிங்கிற முறையிலே பாப்பாவைத் தேடி வர்றவங்களுக்கு இடைஞ்சலா இருக்கும்.”

அத்தியாயம் - 18

பொன்னுரங்கமும் கை விட்டுவிடவே முத்தையா கதி நிராதரவாயிற்று. மறுநாளே அநுக்கிரகா அரசு அலாட் செய்திருந்த வீட்டுக்குக் கிளம்பி விட்டாள். சரிகைப் புடவைகள், பட்டுப் புடவைகள், நகை நட்டு எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. வேண்டாமென்று சொல்லி விட்டாள். எளிய கைத்தறிப் புடவையையே கட்டப் போவதாகக் கூறினாள். அவளுடைய மாற்றம் முத்தையாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆவாரம்பட்டு ஹவுஸின் முகப்பைத் தவிர மூன்று பக்கமும் காம்பவுண்டுச் சுவரில் சாத்திய மாதிரி இருந்த குடிசைகளை எந்தத் தொந்தரவும் செய்யாமல் தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என்று அநுக்கிரகாவும், பொன்னுரங்கமும் முத்தையாவிடம் மன்றாடி வேண்டிக் கொண்டார்கள். அது மந்திரி வீடாகி விட்டதால் இனிமேல் தங்கள் குடிசைகள் எந்த நிமிஷமும் காலி செய்யப்படலாம் என்று பயந்து செத்துக் கொண்டிருந்த குடிசைவாசிகள் அநுக்கிரகா வேறு அரசாங்க வீட்டிற்குக் குடிபோகப் போகிறாள் என்று தெரிந்ததும் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டனர். பயம் தவிர்த்தனர். ஆபத்தில்லை என உணர்ந்தனர்.

ஆவாரம்பட்டு அரண்மனையின் முன் பக்க மைதானமும் சாலையும் மட்டும் கொஞ்சம் ஒழுங்காக இருந்தன. மதில் சுவரில் குடிசை போட்டிருந்த சிலர் சுவரேறிக் குதித்துப் பங்களா தோட்டத்துத் தென்னை மரங்களில் தேங்காய் திருடினார்கள். வேறு பல சில்லறைத் திருட்டுக்களும் நடந்தன. இதற்கெல்லாம் விடிவு தேடிப் போய் அங்கே பட்ட அவமானத்தில் தான் மகளை அரசியல்வாதியாக்கினார் முத்தையா. மகளோ தானும் வெகுஜன உணர்வு என்ற வெள்ளத்தில் மூழ்கி விட்டாள். எதிர் நிச்சலிட அவளுக்கும் துணிவில்லை.

நிதானமாக முத்தையா கணக்குப் பார்த்தார். அநுக்கிரகாவை அரசியலில் உறுப்பினராக்கிய முதல் நாளிலிருந்து மந்திரியாகும் முன் ரோஸ் கார்டன்ஸ் ஓட்டலில் பத்திரிகைக்காரங்களுக்கு விருந்து கொடுத்த செலவு வரை இருபத்து நாலு லட்சத்து மூவாயிரத்து எழுநூறு ரூபாய் அறுபது காசுகள் செலவாகியிருந்தன. ‘இந்தப் பெண்ணை ஏழைகளின் ரட்சகியாக உயர்த்தி விடுவதற்கு இருபத்து நாலு லட்சம் செலவழித்த நான், அன்றே கனிவண்ணனுக்கு வெறும் பிச்சைக்காசான பத்தாயிரம் ரூபாயைத் தூக்கி எறிந்து இந்தக் குடிசைகளைக் காலி செய்து விட்டு, முயன்றிருந்தால் சுற்றியிருந்த புறம்போக்கு நிலங்களையும் ஜாரி பண்ணிக் கொண்டு இருந்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் சொந்தப் பெண்ணை அரசியலில் இறக்கிவிட்ட என் புத்தியைச் செருப்பால் அடிக்கணும். தீர்க்க தரிசனம் போல் அந்த எஸ்டேட் ஓனர் அன்றைக்கு, ‘இன்னிக்கு எந்த முதலீடும் இல்லாமே வெறுங்கையோட பாலிடிக்ஸ்ல இறங்கற ஒருத்தனுக்குத்தான் அது கோடி கோடியாய்த் திருப்பித் தருது. உங்களை மாதிரியும், என்னை மாதிரியும் வசதியா இருக்கிறவங்களுக்கு அது ‘ஒயிட் எலிஃபண்ட்’. நமக்கெல்லாம் அது நஷ்டக் கணக்காவும் லயபிலிட்டியாகவும் தான் இருக்கும். ஆம் ஐ ரைட்... மிஸ்டர் முத்தையா’ என்று கேட்டது சத்திய வாசகம் போல் இன்று நினைவுக்கு வந்தது அவருக்கு.

ஒரு வைராக்கியத்தில் அன்றிலிருந்து மகளைச் சந்திப்பதை - அவளது அரசாங்க வீட்டுக்குப் போவதை - பேசுவதை எல்லாமே நிறுத்திவிட்டார் அவர். முரண்டு தான். ஆனால் வைராக்கியமாகத் தொடர்ந்தது.

இப்படி இத்தனை தண்டச் செலவுகள் ஆன பின்பும் இன்னும் கூட அறுபது எழுபது லட்சத்துக்குச் சொத்து மீதி இருந்தது. சாவதற்கு முன் மிருகங்களுக்கு உதவும் ‘ப்ளூ க்ராஸ்’ நிறுவனத்திற்கு அவ்வளவு சொத்தையும் எழுதி வைத்து விடலாமா என்று கூட எண்ணினார் அவர். ‘மேன் இஸ் ஆன் அன்கிரேட்ஃபுல் எனிமல். எனிமல்ஸ் ஆர் க்ரேட்ஃபுல் தென் மேன்’ என்று விரக்தியாக நினைத்தார். மீனைப் பிடிப்பதற்காகத் தூண்டிலைப் போட்டுத் தூண்டிலே மூழ்கிப் போய் கை நழுவி விட்ட நிலையாயிருந்தது அவருடையது. தன் மகளைப் போல் படித்த பெண்ணே இந்த வேஷம் கட்டியாடும் அரசியலில் ஒரு நடிகையாகிப் போனது அவர் மனத்தை மிகவும் பாதித்திருந்தது. பொது இடங்களில் மகளைப் பார்த்தால் கூட அவர் பேசுவதில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

மெல்ல மெல்ல இது வெளியே தெரிந்த விரோதமும் ஆகிவிட்டது. ஆவாரம்பட்டு ஜமீன் தாராகிய கோடீசுவரர் தனக்கு விரோதியாகி விட்டார் என்பது கூட அநுக்கிரகாவுக்கு இன்று ஒரு ப்ளஸ் பாயிண்டாகி விட்டது. மகளின் சோஷலிஸ முற்போக்குக் கொள்கைகள் பிடிக்காததால் அவளோடு பேசுவதை நிறுத்தி விட்டார் என்ற விவரம் அவளது இமேஜை வளர்க்கவே உதவியது.

“ஃபாதர் ரொம்பக் கன்ஸர்வேடிவ். ஃப்யூடல் சொஸைட்டியிலே வளர்ந்து உருவானவர். அதனால எனக்கும் அவருக்கும் ஒத்து வரலே. ஒருத்தருக்கொருத்தர் இப்போ பேச்சு வார்த்தை கிடையாது,” என்றாள் அவள்.

இந்தச் சண்டை பிரபலமாக வெளியே தெரிந்ததால் ஆவாரம்பட்டு ஹவுஸின் முன்புறம் மைதானத்தில் மேலும் பத்திருபது குடிசைகள் சாலையோரமாகப் புதிதாய் முளைத்தன. அதற்கு ‘அநுக்கிரகா நகர்’ என்று பெரிதாகப் பெயரும் எழுதிப் போட்டிருந்தார்கள். ‘முத்தையா மாளிகையைச் சுற்றி எங்கே எப்படி எத்தனை குடிசை போட்டாலும் யாரும் தட்டிக் கேட்க மாட்டார்கள். முத்தையாவுக்கு எந்த அரசியல் செல்வாக்கும் இல்லை’ - என்று பரவலாக ஓர் அபிப்பிராயம் ஏற்பட்டு விட்டதால் பங்களாவிற்குள் நுழையக் குறுகலாக ஒரு வழி - ஒரு சிறிய கார் போவதற்குக் கூடச் சிரமமான வழி மட்டும் விட்டு விட்டு மற்ற எல்லா இடங்களிலும் கெராவ் செய்தாற் போல் குடிசைகள் போட்டுவிட்டார்கள். ஆவாரம்பட்டு மாளிகை தோட்டம் துரவு உள்ளிட்ட பகுதி குடிசைகளின் நடுவே சிறையுண்டது போல் சிக்கியது.

முத்தையாவும் சோர்ந்து விடவில்லை. வயது எண்பத்திரண்டானாலும் பிடிவாதம் தளராமல், ‘என் வீட்டுக்குள் நுழையப் பாதை இல்லை. உபயோகிக்கச் சுகாதார வசதிகள் இல்லை! ஆகவே கார்ப்பரேஷன் வரியைத் தான் இனிமேல் கட்ட முடியாது’ என்று கோர்ட்டில் வழக்குப் போட்டார்.

உணர்ச்சி வசப்பட்டு அந்தக் கேஸைப் பற்றி எங்கோ சொற்பொழிவில் தன்னைக் கிண்டல் செய்து பேசிய அமைச்சர் அநுக்கிரகாவுக்கும் ‘சப்ஜூடிஸ்’ என்று ஒரு நோட்டீஸ் அனுப்பினார். தாட்சண்யமே காட்டவில்லை.

முதல் கேஸில் அவருக்குச் சாதகமாக ஹைகோர்ட்டில் தீர்ப்பாயிற்று. அவரது ஆவாரம்பட்டு ஹவுஸிற்கான சாலை, அப்ரோச் ரோடு, பெட்டர்மெண்ட் வசதிகள், சுகாதார ஏற்பாடுகளை ஒழுங்காகச் செய்து குடிசைகளை அகற்றித் தராவிட்டால் மாநகராட்சி அவரிடம் வரி வசூலிக்க முடியாது என்ற கோர்ட் தீர்ப்பைக் கிண்டல் செய்தும் குடிசைகளை அகற்றியே தீரும் பிடிவாதமான போக்கைக் கண்டித்தும் எங்கோ பேசிவிட்டுத் தான் அநுக்கிரகா வம்பில் மாட்டிக் கொண்டாள். சப்ஜூடிஸ் ஆயிற்று.

சர்.வி.டி. முத்தையாவுக்கு ஆதரவாகக் கிடைத்த தீர்ப்பை எதிர்த்து மாநகராட்சி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. கனிவண்ணனுக்கு பயந்து தன்னைக் குடிசைவாசிகளின் ரட்சகி என்று காட்டிக் கொள்ளும் சீப் பாப்புலாரிட்டிக்காக மகள் போடும் ஏழை ஆதரவு வேஷம் அவருள் சிரிப்பை வரவழைத்தது. வோட்டுக்காகவும், தேர்தலை நினைத்துமே செயல்படுகிறவர்கள் நீடித்த சமூக நியாயங்களை பற்றிக் கவலைப்படுவதே இல்லை என்பதுதான் அவரது குற்றச்சாட்டு. அந்தக் குற்றம் தம் மகளிடமே இருந்தாலும் விடத் தயாராயில்லை அவர்.

இந்தச் சமயம் பார்த்து, ‘குடிசை வாழ்வோர் நல்வாழ்வுக்காக எந்தப் புறம்போக்கு நிலம் அல்லது உபரி நிலம், பட்டா நிலம் ஆனாலும், நியாயமான விலை கொடுத்து அதை அரசு எடுத்துக் கொண்டு அடுக்கு மாடி வீடுகள் கட்ட அந்நிலத்தைப் பயன்படுத்தலாம்’ என்ற அவசரச் சட்டம் திடீரென்று கொண்டு வரப்பட்டது. ஓர் இரவில் கவர்னர் உத்தரவாக அது வந்தது.

அத்தியாயம் - 19

நீதிமன்றத் தீர்ப்பு மேலும் தனக்குச் சாதகமாகித் தான் எங்கே குடிசைகளைப் பிரித்துப் போட்டுவிடக் கூடுமோ என்ற பயத்தில் தன் மகளும் அரசும் தனக்காகவே அந்த அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தார்களோ என்று முத்தையாவுக்குத் தோன்றியது.

வரப்போகிற அடுத்த தேர்தலிலும் அந்தத் தொகுதியிலுள்ள அறுபதுக்கும் மேற்பட்ட குடிசைப் பகுதிகளின் ஓட்டுக்களைக் கவரவே அநுக்கிரகா இந்தத் தந்திரம் செய்வதை அவர் புரிந்து கொண்டார்.

பொன்னுரங்கமும், தன் மகள் அநுக்கிரகாவும் தன்னை ஏமாற்றிவிட்ட விரக்தியில் கடுங்கோபம் அடைந்த முத்தையா, ஆவாரம்பட்டு ஹவுஸ் முகப்பில், ‘அரசியல்வாதிகளும், பிச்சைக்காரர்களும், பெரு வியாதியஸ்தர்களும் கண்டிப்பாக உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்று ஜாக்கிரதை என்னும் தலைப்போடு ஒரு போர்டு எழுதி மாட்டியிருந்தார்.

அநுக்கிரகா மந்திரியாகி அந்த வீட்டை விட்டு வெளியேறி அரசு இல்லத்திற்குப் போன தினத்தன்று ஆத்திரத்தோடு அந்த போர்டை அவர் மாட்டியதைத் தோட்டக்காரனும் டிரைவரும் மற்ற ஊழியர்களும் பார்த்திருந்தனர். யாராவது தெரிந்தவர்கள், உறவினர்கள், “அநு எப்பிடி இருக்கா? எப்போ கல்யாணம்?” என்பது போலவோ வேறு விதமாகவோ அவரிடம் குசலம் விசாரித்தால், “யாரைக் கேட்கிறீங்க? அநுக்கிரகாங்கிற பேரிலே எனக்கு ஒரு மகள் இருந்தாள். ஆக்ஸ்போர்டிலே படித்தாள். படிச்சா... இப்போ அதே பேரிலே ஒரு சீப் பாலிட்டீஷியன் தான் இருக்கான்னும் மட்டும் தெரியும்” - என்பதாக வெட்டினாற் போல் பதில் சொன்னார். ஒரு சாதாரண லாபத்துக்காக ஏழை வேஷம் போடு அரசியல்வாதிகள் அத்தனை பேர் மேலும் கோபம் கோபமாக வந்தது அவருக்கு. செய்து கொண்ட பிரார்த்தனைப்படி தான் மட்டும் திருப்பதி போய்க் கல்யாண உற்சவத்தை நடத்திவிட்டு வந்தார் அவர். வாக்குறுதியைச் சுலபமாக மறந்து கைவிடுகிற அரசியல்வாதிகளின் பழக்கப்படி ஏழுமலையானுக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மகள் மறந்துவிட்டது அவருக்கு விநோதமாகப் படவில்லை.

தெரிந்த பலர், முத்தையா ஸினிக் ஆகிவிட்டார் என்றார்கள். வேறு சிலர் என்றைக்குமே அவர் ஒரு மாதிரி ‘எக்ஸெண்ட்ரிக்’ தான் என்றார்கள். அநுக்கிரகா அமைச்சரான நாலாவது மாதமோ என்னவோ பொன்னுரங்கமும், புலவர் கடும்பனூர் இடும்பனாரும் ஏதோ ஆண்டு விழா என்று வசூல் நோட்டு இரசீதுப் புத்தக சகிதம் அவரைத் தேடி வந்தார்கள். உள்ளே வந்துவிட்ட அவர்களை “தயவு செய்து கொஞ்சம் எங்கூட வர்ரீங்களா?” என்று எழுப்பி வாசல் கேட் வரை அழைத்துச் சென்று, “பாருங்க! நல்லாப் பார்த்துக்குங்க,” - என்று அங்கே முகப்பில் எழுதி மாட்டியிருந்த, ‘அரசியல்வாதிகளும், பிச்சைக்காரர்களும், பெரு வியாதியஸ்தர்களும் கண்டிப்பாக உள்ளே நுழையக் கூடாது,’ என்ற போர்டைக் காண்பித்து விட்டுத் திரும்பிப் பாராமல் உள்ளே போய் விட்டார்.

“என்னய்யாது? இந்த முத்தையாவுக்குப் புத்தி கித்தி பிசகிப் பைத்தியம் பிடிச்சிருக்கா?” - என்று பொன்னுரங்கம் புலவரிடம் கேட்டான்.

புலவர் சிரித்தார். “மகள் மந்திரியானதிலிருந்தே இப்படி ஆயிட்டாருன்றாங்க,” என்றார் புலவர்.

வீட்டில் குடும்பப் படங்கள் மாட்டியிருந்த இடத்தில் அநுக்கிரகாவின் பழைய பெரிய படத்துக்குக் கீழே பிரியமுள்ள மகள் அநுக்கிரகா - தோற்றம் என்று அவள் பிறந்த தேதியையும் - தலைமறைவு என்று அவள் எம்.எல்.ஏ. ஆன தேதியையும் எழுதி வைத்திருந்தார். எலெக்‌ஷன் சமயத்தில் எடுத்த அநுக்கிரகாவின் மற்றொரு படத்திற்குக் கீழே நம்பத்தகாத அரசியல்வாதி அநுக்கிரகா - தோற்றம் - எம்.எல்.ஏ. ஆன நாள். மறைவு - இன்னும் மறையவில்லை - என்றும் எழுதியிருந்தார். இதையெல்லாம் ஆவாரம்பட்டு ஹவுஸ் ஊழியர்களே வேடிக்கையாகவும், விநோதமாகவும் நோக்கினார்கள். அவருக்குச் சித்தப் பிரமையோ என்று கூடச் சந்தேகப்பட்டார்கள். ஆனால் உண்மையில் அவர் மிகவும் தெளிவாயிருந்தார். பிடிவாதமாயிருந்தார். வைராக்கியமாயிருந்தார். வாய்க்கு வாய் சொன்னார்: “இன்றைய இந்தியாவில் ஏழைகளும் பணக்காரர்களும் அவர்களை வைத்து அவர்களால் அவர்களுக்காகப் பிரச்சினைகளும் அரசியலும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். நல்ல மனிதர்கள் இல்லை. அரசியலுக்கு ஏழையும், பணக்காரனும் தேவைப்படலாம். ஆனால் சமூக மேம்பாட்டுக்கு நல்ல மனிதர்கள் மட்டுமே தேவை. மனிதர்களை உருவாக்கும் அரசியலும் அரசியல்வாதிகளும் இன்று இங்கே துரதிருஷ்டவசமாக இல்லை. ஏழைகளை ஏழைகளாகவே வைத்து அரசியல் பண்ணக் கிளம்புகிறவர்களும் பணக்காரர்களைக் கொடியவர்களாகக் காட்டியே பணக்காரர்களையும் மிரட்டி அரசியல் நடத்துகிற கூட்டத்தினருமே இங்கு இருக்கிறார்கள். இது கூடாது” - என்றார்.

ஆனால் அவர் சொன்னதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. வயதாகி விட்டதால் உளறுகிறார் என்றார்கள். புத்தி தடுமாறிவிட்டது என்றும் கூறினார்கள். “இந்த வயசு காலத்திலே எதுக்குக் கோட்டை கொத்தளம் மாதிரி அத்தனை பெரிய வீட்டிலே தனியாக் கெடந்து சாகறாரு? பேசாம மகளோட போய் மாண்புமிகு அமைச்சரின் தந்தைங்கிற மரியாதையோட அங்கே இருக்கலாமே?”

“ஈவன் அட் திஸ் ஏஜ் ஹி இஸ் டூ இண்டிபெண்டன்ட்! தட் ஈஸ் த ரியல் பிராப்ளம் வித் ஹிம்.”

“ரொம்ப முரண்டுக்காரக் கிழவன் ஐயா.”

இப்படி அவரைப் பற்றிப் பலர் வாயில் பலவிதமான பேச்சுக்கள் கிளம்பின. அநுக்கிரகாவைக் குறை கூறியும் சிலர் கண்டித்தனர். “இவ்வளவெல்லாம் பண்ணி வளர்த்து ஆளாக்கின தகப்பனை தனியே அவள் தவிக்கவிட்டது பாவம் தான்” - என்றார்கள் சிலர்.

ஆனால் அநுக்கிரகா மட்டும் மனசு கலங்கவோ, உணர்ச்சிவசப்படவோ, சலனப்படவோ செய்யாமல் இருந்தாள். தந்தையிடமிருந்து விலகியும் ஒதுங்கியும் வேறுபட்டுமே இருந்தாள்.

ஆனால் ஒரே ஒரு நாள் மட்டும் அவளாலேயே தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அமைச்சர் என்ற முறையில் இல்லாவிட்டாலும் அவரது மகள் என்ற முறையில் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகவாவது அப்பாவை நேரில் ஒரு நிமிஷம் பார்த்து ஆறுதல் கூறிவிட்டு வர எண்ணினாள் அவள். அரசாங்கங்கள், ஆளும் கட்சிகள், எஸ்டாபிளிஷ்மெண்டுகளின் பயங்கர விமர்சகரும், எதிரியுமாகிய அவரை அமைச்சராகிய தான் சென்று பகிரங்கமாகப் பார்ப்பதால் எதுவும் பாதகம் நேர்ந்து தன் பதவிக்கும் கட்சிக்கும் கெட்ட பெயர் வந்து விடக் கூடாதே என்று பயந்து கட்சி தலைவரிடம் சொல்லித் தன் தந்தையைச் சந்திக்க அனுமதி பெற்றுக் கொண்டாள். “எதற்கு இந்தச் சந்திப்பு இப்போது?” என்றார் அவர்.

அநுக்கிரகா தெளிவாக மறுமொழி கூறினாள்: “நம்ம அவசரச் சட்டத்தின்படி ஸ்லம் கிளியரன்ஸ் திட்டத்தின் கீழ் உலக பாங்க் உதவியோடு அடுக்குமாடி வீடு கட்டும் திட்டத்துக்காக, ‘ஆவாரம்பட்டு ஹவுஸ்’ முழுக்கவும் எடுத்துக்கிட்டு அந்த ஏரியாவிலே அரசு நிர்ணயிச்ச விலையைக் காம்பென்சேஷனாய்க் கொடுத்துடறோம். அந்த ஒரு காம்பவுண்டிலே மட்டும் முப்பது அடுக்கு மாடி வீடுகள் கட்டலாம். அது சம்பந்தமான நோட்டீஸ் இன்னிக்கு செக்‌ஷன்ல கையெழுத்தாகி அவருக்குப் போகிறது. அவர் என் தந்தை. ஆனாலும் நிர்த்தாட்சண்யமாக அவருடைய சொத்தைத்தான் முதல்லே ‘அக்வேர்’ செய்ய உத்தரவு போட்டிருக்கிறேன். எனினும் தனிப்பட்ட முறையில் அதே வீட்டில் பிறந்து வளர்ந்த அவரது மகள் என்ற முறையில் அவரை நேரில் பார்த்துச் சமாதானம் சொல்ல வேண்டியது என் கடமைன்னு நினைக்கிறேன்.”

“ஒரு பிரைவேட் விஸிட்டாக் காதும் காதும் வச்சாப்பிலே போயிட்டு வந்துடறது தப்பில்லே! ஆனா அரசு முறையிலே அமைச்சர்ங்கிற ஹோதாவில போவாதிங்க,” என்று அட்வைஸ் செய்தார் முதல்வர்.

அவளும் அப்படியே செய்வதாகக் கூறி விடைபெற்றாள்.

அத்தியாயம் - 20

ஃபோன் செய்து அப்பாவிடம் தான் வரப்போவதைச் சொல்லிவிட்டு போவதா அல்லது திடுதிப்பென்று போய் நிற்பதா என்று அநுக்கிரகா யோசித்தாள். போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்குத் தகவல் சொல்லி அவர்களிடம் விட்டால் அரை நொடியில் எல்லா ஏற்பாடுகளும் செக்யூரிட்டி வசதிகளும் செய்து முடித்து, “மினிஸ்டர் வராங்க,” என்று தகவலும் சொல்லிவிடுவார்கள். அதிகார பூர்வமான விசிட்டாயிருந்தால் அப்படிச் செய்யலாம். ஆனால் இதுவோ பிரைவேட் விசிட். இதுவரை அமைச்சரான பின் அவரிடமிருந்து பிரிந்து வந்த பிறகு அவள் அந்த வீட்டுக்குப் போய்த் தந்தையைப் பார்க்கவே இல்லை. முதல் தடவையாகப் போகிறாள். ‘நிர்த்தாட்சண்யமாகச் சொத்து ஒன்றை பிடுங்குவதுதான் பிடுங்குகிறோம். பின்னால் தன்னைத் திட்டாமல் முதலில் பார்த்து ரெண்டு வார்த்தை சமாதானம் சொல்லிவிட்டு வந்துவிடலாம்’ - என்று தான் அவள் ஆவாரம்பட்டு ஹவுஸுக்குப் போக விரும்பினாள். பிரிந்து அரசாங்க வீட்டுக்கு வந்த நாளிலிருந்து ஃபோனில் கூட அவள் அவரிடம் பேசியதில்லை. இப்போது திடீரென்று பேசினால் அவர் வம்பு பண்ணுவார். அல்லது பேசாமல் ஃபோனை வைத்துவிடுவார். அதனால் முன் தகவல் எதுவும் கூறாமல் அரசாங்கக் காரையும் விடுத்துத் தெரிந்த சிநேகிதி ஒருத்தியின் காரை இரவல் வாங்கி, தானே ஸெல்ஃப் டிரைவிங் செய்து கொண்டு இருட்டிய பின்பு போய்ப் பார்த்துவிட்டு வருவது என்று தீர்மானித்துக் கொண்டாள் அநுக்கிரகா. டிரைவர் என்று யாரையாவது அழைத்துப் போவதன் மூலம் வீண் வம்பும் வதந்தியும் தான் பரவும். அவள் அரசியல் எதிரிகளுக்குத் தெரிந்தால், ‘தந்தையின் நிலத்தை அக்வேர் செய்யும் வகையில் அதிகமான காம்பென்சேஷன் தரச் செய்து உதவவும் யோசனை கூறவும் தான் அவரைக் காணச் சென்றாள்,’ என்று கூடப் பரப்பி விடுவார்கள். அதற்கு அஞ்சியே இரவில் செல்ல முடிவு செய்திருந்தாள். கடமை, மந்திரிப் பதவி, கட்சியின் ஏழை எளியோருக்கு உதவும் சோஷலிஸத் திட்டங்கள் எல்லாவற்றையும் மீறி அநுக்கிரகாவின் உள் மனம் அவளைக் கடுமையாகக் குத்திக் காட்டியது.

இருக்கிற மாளிகையைச் சுற்றி நுழையவும் வழியின்றிக் குடிசை போட்டதைச் சரி செய்யவே அவளை அவர் அரசியலில் இரங்கச் செய்தார். அவளோ சந்தர்ப்ப நிர்ப்பந்தங்களின் கைதியாகி அவரது ‘செண்டிமெண்டல் அட்டாச்மெண்ட்’ நிறைந்த அந்த ஒரு வீட்டையும் எடுத்துக் கொண்டு காம்பன்சேஷன் தர உத்தரவிட்டு விட்டாள். குதிரை கீழே தள்ளிக் குழியும் பறித்த கதையாகிவிட்டது. தான் இதைச் செய்யாவிட்டால் தந்தையின் சொத்தைக் காப்பாற்றவே இதைச் செய்யாமலிருந்ததாக எதிர்க் கட்சிகள் தன்னைக் குறை கூறும். ‘சேரிட்டி பிகின்ஸ் அட் ஹோம்’ என்கிற பாணியில் முதலில் தன் தந்தையின் இடத்தையே குடிசைகளை வீடாக மாற்றும் திட்டத்துக்காக எடுத்துக் கொண்டு நஷ்ட ஈட்டுத் தொகை தர உத்தரவிட்டிருந்தாள் அவள்.

‘வேறு வழியில்லை! என்னை மன்னியுங்கள்,’ - என்று அப்பாவிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்துவிட வேண்டும் என்று அவள் தானே காரை ஓட்டிக் கொண்டு, அவரைக் காணக் கிளம்பின போது இரவு ஒன்பதே கால் மணி.

ஆவாரம்பட்டு ஹவுஸ் முகப்பிலும் இப்போது பல குடிசைகள் வந்திருந்தன. அந்த குடிசைகளின் முன்புறம் தெருவிளக்கு ஒளியில், ‘அநுக்கிரகா நகர்’ என்ற போர்டு எழுதியிருப்பதையும் அவள் காரிலிருந்தபடியே பார்த்தாள். அநுக்கிரகா நகர், முதலமைச்சர் நகர் என்று பெயர்களை வைப்பதில் ஒரு தந்திரம் இருந்தது. பேர்களுக்கு அஞ்சி யாரும் வந்து குடிசைகளைக் காலி செய்யச் சொல்ல மாட்டார்கள். அந்தக் குடிசைப் பகுதிகளுக்குப் பாதுகாப்பாக அமையும் தலைவர்களின் பெயர்களையே பார்த்து வைத்தார்கள். ஆவாரம்பட்டு ஹவுஸ் உள்ளே செல்லும் சாலையிலேயே குறுகலான இடைவெளியுள்ள பகுதிதான் மீதமிருந்தது. இராத்திரி நேரமாதலால் ரோட்டிலேயே பாய் விரித்து ஆட்கள் வேறு படுத்திருந்தார்கள். ஆட்கள் மேல் ஏறி விடாமல் காரை மிகவும் மயிரிழையில் செலுத்திக் கவனமாக ஓட்ட வேண்டியிருந்தது. ஏறக்குறைய குடிசைகளால் தர்ணா செய்யப்பட்ட மாதிரி நடுவே சிக்கி இருந்தது ஆவாரம்பட்டு ஹவுஸ். இங்கே கிடந்து இவ்வளவு சிரமப்படுவதற்குப் பதில் கவர்ன்மெண்ட் அக்யுஸிஷனுக்கு இசைந்து காம்பன்சேஷனை வாங்கிக் கொண்டு அதை விற்றுவிட்டு அப்பாவே முந்திக் கொண்டு வேறிடத்தில் குடி போய்விடலாம். கேட்க மாட்டார். அப்பாவுக்கு இது பிரஸ்டிஜ் விஷயம். ‘செண்டிமெண்டல் அட்டாச்மெண்ட்’ உள்ள வீடு. இதை லேசில் விட இசையமாட்டார்.

அவர் ஹார்ன் ஒலியெழுப்ப, கேட்டுக்கு அப்பாலிலிருந்து தோட்டக்கார முனியன் வந்து ஆவாரம்பட்டு ஹவுஸின் பிரதான வாசலைத் திறந்தான். எட்டிப் பார்த்துப் புரிந்து கொண்டவனாய், “யாரு? சின்னம்மாங்களா? வாங்கம்மா வாங்க... நல்லாருக்கீங்களா?” - என்று வரவேற்றான் முனியன்.

“அப்பா எங்கே முனியா?”

“உள்ளே ஹால்லே இருக்காரு.”

“எப்படி இருக்காரு?”

“இருக்காரும்மா! யாருட்டவும் ரொம்பப் பேசறதில்லே...”

அவள் ஹாலுக்குள் நுழைந்த போது ஒரு சோபாவில் சாய்ந்து இன்னொரு சோபாவில் இரு கால்களையும் நெடுங்குத்தாகத் தூக்கி நீட்டியபடி மேலே சீலிங்கில் தேக்குப் பலகை இழைத்து வார்னிஷ் பூசிய விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவள் உள்ளே நுழைந்ததைக் கவனிக்கவில்லை. அவரது கவனத்தை அவளால் ஈர்க்கவும் முடியவில்லை. கண்கள் என்னவோ நிலை குத்தினாற் போல அலங்கார வேலைப்பாடுகளும், சாண்ட்லியர்களும் நிறைந்த அம்மாளிகையின் விட்டத்திலேயே இருந்தன.

“உள்ளே வரலாமா அப்பா?”

பதில் இல்லை. மறுப்பும் இல்லை. அங்கிருந்த தனது படங்களில் தோற்ற மறைவு எழுதியிருந்ததை அவளே பார்த்தாள்.

“அநு வந்திருக்கேன்ப்பா...”

வா, என்றோ வரவேற்கும் சாயலிலோ எதுவும் நிகழவில்லை.

“என் மேலே உங்களுக்கு ரொம்பக் கோபம் போலிருக்கு.”

இதற்கும் அவரிடமிருந்து பதில் இல்லை.

“என்னை நீங்க பெரிய மனசு பண்ணி மன்னிக்கணும்! ஐயாம் வெறி ஸாரி டாட். கட்சிக் கொள்கைக்கு நான் கட்டுப்பட வேண்டும். ஐயாம் எ பிரிஸனர் ஆஃப் சர்கம்ஸ்டன்சஸ், இட் வாஸ் அவர் காபினெட் டெஸிஷன்.”

இப்போது முதல் முதலாக வாய் திறந்தார் அவர்.

“பீட்டரைக் கொள்ளையடித்துப் பாலுக்குக் கொடுத்ததாக ஒரு பழமொழி உண்டு.”

“குடிசைப் பகுதி ஒழிப்புக்காக நாங்க நிலம் கையகப்படுத்திக் கொள்ளணுமே?”

“யூ காண்ட்! நான் கோர்ட்டிலே வழக்குப் போடுவேன். சேலன்ஞ் பண்ணுவேன்.”

“அதுக்கு ஆர்டனன்ஸ் போட்டிருக்கோம்ப்பா... சேலஞ்ச் பண்ண முடியாது.”

“நான் சேலஞ்ச் பண்றேன். ஜெயிக்கிறேன். நீங்கள்ளாம் கவர்மெண்டா நடத்தறீங்க? சும்மா ஓட்டுப் பிடிக்கிற ஸ்டண்டுக்காக என்னென்னமோ பண்றீங்க! அதுக்குப் பேரு அவசரச் சட்டம். தெருவிலே நிற்கிறவனைக் கோபுரத்துக்கு உயர்த்த ஒரு சட்டம். கோபுரத்திலே இருக்கிறவனைக் குப்புறப் பிடிச்சுத் தள்ள ஒரு அவசரச் சட்டம்.”

“நான் மந்திரிங்கிற முறையிலே இப்போ இங்கே வரலே அப்பா! உங்க மகள் அநுக்கிரகாவாத்தான் வந்திருக்கேன்.”

அதுவரை அசையாமல் படுத்திருந்த முத்தையா தலையைத் திருப்பி நிமிர்ந்து உறுத்தலாய் அவளைப் பார்த்தார். அப்பப்பா! அவளால் அந்தக் கடுமையையும் சூட்டையும் தாங்கவே முடியவில்லை. நெற்றிக் கண்ணையும் சேர்த்துத் திறந்து மூன்று கண்களாலும் அவர் அவளைப் பார்ப்பது போல இருந்தது. இன்னும் அவர் அவளை மரியாதையாகவோ பிரியமாகவோ உட்காரச் சொல்லிக் கூட உபசரிக்கவில்லை. வந்த போதிருந்த அதே கடுமை, அதே சூடு, அதே பாராமுகம், அதே வெறுப்பு, அதே இறுக்கம்.

“என்ன சொன்னே இப்போ?”

“மந்திரியா வரலே, உங்க மகளா வந்திருக்கேன்னு சொன்னேன்.”

“என் மகளா? அப்பிடி யாரும் இப்போ எனக்கு இல்லியே? தேர்தலுக்கு முன்னாடி வரை ‘அநு’ன்னு செல்லமா எனக்கு ஒரு பெண் இருந்தா. அப்புறம் ஒரு எம்.எல்.ஏ. - அநுக்கிரகாங்கிற எம்.எல்.ஏ. - கழுத்து நெறையப் பலிகாடவுக்குப் போட்ட மாதிரி மாலையோட அர்த்த ராத்திரியில் இங்கே ஊர்வலமா வந்தாள். அதுக்கப்புறம் மாண்புமிகு அமைச்சர் அநுக்கிரகான்னு ஒருத்தி இருக்காள்... என் மகள் அநு போயி ரொம்ப நாளாச்சே?”

“இப்படிப் பேசறது உங்களுக்கே நல்லா இருக்கா அப்பா? இங்கே சுவரிலே மாட்டியிருக்கிற படத்துக்குக் கீழே எல்லாம் தோற்றம் - மறைவுன்னு கூட எழுதிப் போட்டிருக்கீங்க! யாராவது மூணாவது மனுசங்க பார்த்தா என்ன நினைப்பாங்க?”

“என் மகள் போயிட்டதாக நினைப்பாங்க.”

“உங்களுக்குப் புத்தி சுவாதீனம் இல்லாமப் போச்சா என்ன?”

“அப்படித்தான் ஊர்ல பேசிக்கிறாங்க. நீயும் நினைக்கிறே! உண்மையிலே புத்தியே எனக்கு இப்பத்தான் தெளிவாகி இருக்கு.”

“தப்பா நினைக்காதீங்கப்பா! ஏழைகளுக்காகப் பல அடுக்கு மாடி வீடுகளைக் கட்டறது எங்க தேர்தல் ‘மானிஃபெஸ்டோவில’ நாங்களே சொல்லியிருக்கிற விஷயம்.”

“தேர்தல் மானிஃபெஸ்டோவில சொல்லியிருக்கிற எல்லாத்தையுமே செய்துடுவீங்களா?”

“எதைச் செய்யலேன்னு சுட்டிக் காட்டுங்க. உடனே செய்யறோம்.”

“ரூபாய்க்கு நாலு கிலோ அரிசி அனைவருக்கும் - சம வாய்ப்புன்னெல்லாம் போட்டிருக்கீங்களே, அதெல்லாம் செஞ்சீங்களா? சம வாய்ப்புன்னா என்ன அர்த்தம்? கொஞ்சம் நீதான் சொல்லேன். தெரிஞ்சுக்கிறேன்.”

“ஏழை பணக்காரன்கிற வித்தியாசமின்றி எல்லாருக்கும் நன்மை செய்யறது.”

“எங்கே அப்பிடிச் செய்யறீங்க...? அப்பன் பணத்திலே இருபத்தைஞ்சு லட்சம் தண்ணியாச் செலவழிச்சு எம்.எல்.ஏ. ஆகி மந்திரியாகி அப்புறம் அந்த அப்பனையே நடுத் தெருவிலே கொண்டாந்து நிறுத்தறதுதான் வித்தியாசமின்றிச் சமவாய்ப்பு அளிக்கிறதாக்கும்?”

“இங்கே நான் ஒரு சமஸ்தானாதிபதியின் மகள், மேட்டுக் குடியைச் சேர்ந்தவள், குடிசைவாசிகளுக்கு நன்மை செய்ய மாட்டேன்னு முன்கூட்டியே பிரச்சாரம் பலமாக நடந்திரிச்சுங்கிறதாலே இந்த ஆவாரம்பட்டு ஹவுஸை ‘அக்வேர்’ பண்ணி அதன் மூலம் நான் ‘ஏழை பங்காளி’ன்னு மக்களுக்கு நிரூபிக்கணும்னு எங்க தலைவர் அபிப்பிராயப்படறார்.”

“அதை நீ செயல்படுத்தினியாக்கும்?”

“ஆமாம்... செஞ்சு தொலைக்க வேண்டியதாப் போச்சு... வேற வழி?... உங்க மகள்ங்கிற முறையில நீங்க என்னை மன்னிக்கணும். கவர்மெண்ட் குடுக்கிற காம்பன்சேஷன்லே வேற வீடு கட்டிக்கலாம். அல்லது எங்கூட வந்து இருக்கலாம்.”

“நெவர்! நெவர்! இந்த வீட்டை விட்டு நான் வெளியேர்றதா இல்லை. சேலன்ஜ் பண்ணுவேன். ரிட் போடுவேன். ஸ்டே வாங்குவேன். தகராறு பண்ணி மீதி உள்ள சொத்தைப் பூரா இதுக்காகவே செலவழிச்சு இதிலேயே செத்தாலும் சாவேனே ஒழிய - வெளியேறுகிற பேச்சே இல்லை.”

“இந்த வயசு காலத்திலே அடம்பிடிக்கிறீங்களே, காலம் மாறுகிறது. உங்க எண்ணத்தை மாத்திக்குங்க.”

“இதிலே உன்னை மாதிரி ஓட்டுத் திருடங்களான அரசியல்வாதிகளோட அட்வைஸ் எனக்குத் தேவை இல்லே.”

“அப்போ எனக்கு உங்க முடிவான பதில் தான் என்ன?”

உடனே முத்தையா துள்ளி எழுந்தார். படுக்கை அருகே இருந்த ‘டார்ச்’சைக் கையில் எடுத்துக் கொண்டார்.

“எங்கூட வா... பதில் சொல்றேன்.”

அவள் அவரைப் பின் தொடர்ந்தாள்.

வாசல் கேட் அருகே வந்ததும் டார்ச் ஒளியைப் பாய்ச்சி, “இதுதான் என் பதில்! நல்லாப் பார்த்துக்கோ” - என்றார்.

அவள் பார்த்தாள். ‘அரசியல்வாதிகளும், பிச்சைக்காரர்களும், பெரு வியாதியஸ்தர்களும் கண்டிப்பாக இந்தப் பங்களாவிற்குள் நுழையக் கூடாது.’

அவள் படித்து முடித்து அவரை நோக்கித் திரும்பியதும், “ஐ ஸே கெட் அவுட்... ப்ளீஸ் கெட் அவுட்” - என்று நிர்த்தாட்சண்யமாக அவளிடம் சொன்னார் முத்தையா.