anuradhavin bihu nadanam

அனுராதாவின் பிஹு நடனம்

அசாமில் பிஹு விழா நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனுராதா தயாராகிக் கொண்டிருக்கிறாள். ஆனால் ஒரு சிறிய பிரச்சினை -- மழை நிற்கவே மாட்டேனென்கிறது. பிஹுவுக்கு அனுராதாவால் தன் நண்பர்களோடு வெளியே சென்று நடனமாட முடியுமா?

- Livingson Remi

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இவள்தான் அனுராதா. நம் அன்பு அனுராதா அசாமில் வசிக்கிறாள். அங்கே பிஹு விழா சீக்கிரமே வரப்போகிறது. ஆனால், அனுராதாவால் காத்திருக்க முடியவில்லை! சட்-சட்டென்று மாறும் வானிலையைப் போல அவளும் அவசரத்தில் இருக்கிறாள்.

அனுராதா கபாவ் ஃபூல் என்று அழைக்கப்படும் காட்டு வெள்ளை ஆர்கிட் பூக்களை சேகரிக்கத் தொடங்குகிறாள்.

“இதை என் தலையில் சூடிக் கொள்வேன்.”

பர்ஹாம்துரி செடியின் மொட்டுகளைத் தேய்த்து உதடுகளை சிவப்பு நிறமாக்குகிறாள்.

பக்கத்து வீட்டு ரிமா அத்தையிடம் மேகேலா-சடோர் என்னும் பட்டுத்துணியை கடன் வாங்குகிறாள். சுமன் அக்கா அவளுக்கு ஒரு ஜோடி கம்காரஸும் (பட்டையான தங்க வளையல்) ஒரு கல்பட்டாவும் (தங்க அட்டிகை) கொடுக்கிறார்.

ஆனால்... அது டோல் இல்லை, இடி இடிக்கிறது. காற்று பலமாக வீசுகிறது, மழை கொட்டுகிறது. அனுராதா சோகத்தில் மூழ்குகிறாள்.

டம் டம் டம் டம் டம் டமா டம் அனுராதா டோல் அடிக்கும் சத்தம் கேட்டு வெளியே ஓடுகிறாள்.

தாத்தா அவளிடம், “என் செல்ல அனுராதா! ஏன் சோகமாக இருக்கிறாய்?” என்று கேட்கிறார். “தாத்தா! இந்த மழை நிற்பது மாதிரித் தெரியவில்லை” என்கிறாள் அனுராதா.

“என் செல்ல மைனாக் குஞ்சே! இந்தப் பருவத்தில் பெரும் காற்றும் மழையும் அடிக்கத்தான் செய்யும்.”

“அதற்காக பிஹுவின்போது வீட்டிற்குள் சும்மா உட்கார்ந்திருப்பதா? முடியவே முடியாது.

அப்படி நடக்க விட மாட்டேன்! தயவுசெய்து ஏதாவது செய்யுங்கள், தாத்தா.”

அனுவின் காதில் மெதுவாக, “இந்த பலமான காற்றை 'போர்டொய்சிலா' என்பார்கள். போர்டொய்சிலா போக வேண்டுமென்றால், வெளியே இருக்கும் பீரா (உயரம் குறைந்த மர நாற்காலி) மீது சீப்பையும் கண்ணாடியையும் வைக்க வேண்டும்” என்கிறார் தாத்தா.

தாத்தா சொல்வது சரியா என்று வீட்டில் உள்ள எல்லோரிடமும் கேட்கிறாள் அனு.

“ஆமாம், ஆமாம். உண்மைதான்” என்கிறார் பாட்டி. “ஆனால் பழுத்த சிவப்பு மிளகாயை மூங்கில் குச்சியில் சொருகி திறந்த வெளியில் நட வேண்டும். அப்போது, மழை நின்றதும் சூரியன் வேகமாக வெளியே வரும்.”

அப்பா சிரித்துக் கொண்டே, “இப்போது கடவுள் மட்டும்தான் உனக்கு உதவ முடியும், அனுராதா” என்கிறார்.

உடனே அம்மா சொல்கிறார், “வெற்றிலையும் பாக்கும் காணிக்கையாகக் கொடுத்து மழைக் கடவுள் வருணனை மகிழ்வித்தால் மழை நிற்கும்.” அனுராதாவிற்கு எந்த பதிலும் திருப்தியளிக்கவில்லை.

அனுராதா ஒரு பெரிய கொச்சு (சேப்பங்கிழங்கு) இலையால் தலையை மூடிக்கொள்கிறாள். தனது நண்பர்களான பிட்டூ, கங்கன், மணி, ஹிமானி மற்றும் ரன்ஜுனை சந்திக்க வெளியே செல்கிறாள்.

தனது நண்பர்களிடம் தான் தெரிந்துகொண்ட

அனைத்தையும் சொல்கிறாள். “மழையும் காற்றும்

இயற்கையானவை, அதைப் போல்தான் நம்

பிஹுவும். இந்த யோசனைகள் எதுவும் வேலை

செய்யாவிட்டாலும், நாம் மழையில் பிஹூ நடனம்

ஆடுவோம்” என்று அவளது நண்பர்கள்

கூறுகிறார்கள்.

அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினார்கள்.

அவர்கள் சீப்பையும் கண்ணாடியையும் ஒரு பீரா மீது வைக்கிறார்கள். மழை நிற்கவில்லை.

சிவப்பு மிளகாய் சொருகிய ஒரு மூங்கில் குச்சியை நடுகிறார்கள். மழை நிற்கவில்லை.

வருணனை திருப்திப்படுத்த வெற்றிலையும் பாக்கும் வைக்கிறார்கள். மழை பெய்து கொண்டே இருக்கிறது. அனுராதா மழைநீர் தேங்கிய குட்டையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

மெதுவாக மேகங்கள் விலகத் தொடங்குகின்றன. காற்றின் வேகம் குறைகிறது. இறுதியாக, மழை நின்று சூரியன் வானத்தில் எட்டிப் பார்க்கிறது.

அனுராதாவின் முகத்தில் புன்னகை துளிர்க்கிறது. வேக வேகமாக தன் பிஹு ஆடைகளை அணிகிறாள். அனுராதா தனது நண்பர்களுடன் பிஹுவை மகிழ்ச்சியுடன் நடனமாடிக் கொண்டாடுகிறாள். டோலும் பெப்பாவும் (ஒருவகை கொம்பு இசைக்குழல்) அவர்களது நடனத்திற்கு தாளம் சேர்க்கின்றன.