appa ezhuppum sapthangal

அப்பா எழுப்பும் சத்தங்கள்

என் அப்பா எழுப்பும் சத்தங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவற்றைக் கேட்கலாம் வருகிறீர்களா?

- Irulneeki Ganesan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அதோ, அங்கே ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கிறார், தெரிகிறதா? அவர்தான் என் அப்பா!

என்னைப் போலவே, நீங்களும் அவரை நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டுமா? அதற்கு உங்கள் கண்களைவிடக் காதுகளையே அதிகம் நம்பவேண்டும். என் அப்பாவையும், அவர் எழுப்பும் ஓசைகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

ஹூஹ்-ஹ்ஹ-ஹூஹ்-ஹ்ஹ

அப்பா தூங்கும்போது சத்தமின்றி சுவாசிப்பார். இலைகளின் இடையே செல்லும் காற்றைப் போல. கைகளை வாய்மீது கிண்ணம் போலக் குவித்து, மென்மையாக ஊதி நானும் அதே ஓசையை எழுப்புவேன். ஹோஓ-ஹாஆ-ஹோஓ-ஹாஆ .

ஆனால் சிலசமயம், அப்பா இடி இடிப்பதைப் போல பெரிதாகக் குறட்டை விடுவார். பன்றியைப் போல மூக்கால் உறுமிக்கொண்டே, குதிரையைப் போல உதடுகளைப் படபடவென்று அடித்து நானும் அப்பாவைப் போல குறட்டை விடுவேன். கொர்ர்ர்-துபுதுபுதுப் கொர்ர்-தபார்-துபுதுபுதுப்.

ஹோஓ-ஹாஆ-ஹோஓ-ஹாஆ

கொர்ர்-தபார்-துபுதுபுதுப்கொர்ர்-தபார்-துபுதுபுதுப்

அப்பா தூங்கி எழுந்ததும் கைகளையும் கால்களையும் சொறிந்துகொள்வார். காகிதத்தைக் கிழித்து நானும் அதே ஓசையை எழுப்புவேன். பரக்-பரக்-பரக்-பரக்.

அப்பா எழுந்து நிற்கும்போது, அவரது கால் மூட்டுகள் சடவு முறிக்கும். காற்றில் படபடக்கும் துணியைப் போல. விரல்களால் சொடக்கு முறித்து நானும் அதே ஓசையை எழுப்புவேன். பட்-பட்-பட்-பட்.

பரக்-பரக்-பரக்-பரக்

பரக்-பரக்-பரக்-பரக்

பட்-பட்-பட்-பட்

அப்பா சாப்பிடும்போது வாயை மூடாமல் சத்தமாக மென்று தின்பார். மழையில் சேறான மண்ணை மிதித்து நானும் அதே ஓசையை எழுப்புவேன். கொளக்-பளக்-சளக்-பளக்.

அப்பா கடுக்முடுக்கென்று எதையாவது சாப்பிடும்போது, உடைந்து நொறுங்கும் சத்தம் வரும். சருகுகளையும் குச்சிகளையும் மிதித்து நானும் அதே ஓசையை எழுப்புவேன். கறுக்-முறுக்-கடக்-முடக்.

கொளக்-பளக்-சளக்-பளக்

கொளக்-பளக்-சளக்-பளக்

கறுக்-முறுக்

கடக்-முடக்

அப்பா தண்ணீர் குடிக்கும்போது, அவர் தொண்டைக் குழி மேலும் கீழும் போகும். இது ஒரு கமுக்கமான சத்தம். குளத்தில் நீச்சலடிக்கும்போது, காதில் தண்ணீர் புகுந்து அடைத்துக்கொள்ளும். அப்போது எல்லா சத்தங்களும் அப்பா தண்ணீர் குடிக்கும் சத்தம் போலவே கேட்கும். களுக்-குளுக்-களுக்.

களுக்

குளுக்

களுக்

மதிய உணவுக்குப் பிறகு அப்பா ஏப்பம் விடுவார். அப்படியென்றால், சாப்பாடு நன்றாக இருந்ததென்று அர்த்தம். இந்த ஏப்பம் மலையில் திக்கித்திணறி ஏறும் லாரிகளின் சத்தத்தைப் போல இருக்கும். ஏஏஏவ்வ்வ்வ்வ்வ்!

அப்பா பின்புறமாய் ஏப்பம் விட்டால் வயிற்றுக்கு சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தம். ஆனால், இந்தச் சத்தம் சங்கீதம் போல ஒலிக்கும். கன்னங்களைப் பிடித்து இழுத்தபடி வாயை மூடிக்கொண்டே ஊதி நானும் அதே ஓசையை எழுப்புவேன்.பியூஊஊன்ன்ன்ன்க்!

ஏஏஏவ்வ்வ்வ்வ்வ் !

பியூஊஊன்ன்ன்ன்க்!

அப்பாவின் மூக்கு விசிலடித்தால் அவருக்கு சளி பிடித்திருக்கிறது என்று அர்த்தம். சிலசமயம் தனது மூக்கைச் சுத்தம் செய்வதற்காக பெரிதாக சிந்துவார். நாற்காலியை தரையோடு தேய்த்து இழுத்தால் இதே சத்தம்தான் வரும். ஸுர்ஸுர்ஸுர்ஸுர்!

அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டால் அவரது மூக்கு முற்றிலுமாக அடைத்துக்கொள்ளும். அப்புறம் அவர் வாயால்தான் மூச்சுவிட வேண்டும். வேகமாக ஓடுகையில் எனக்கு மூச்சிரைப்பதைப் போல் அவருக்கும் மூச்சிரைக்கும். ஹஹ்ஹுஹ்ஹா.

ஸுர்ஸுர்ஸுர்ஸுர்

ஹஹ்ஹுஹ்ஹா!

அப்பா பெரிதாக சத்தம் போட்டுச் சிரித்தால் நான்கு வீடுகள் தாண்டியும் கேட்கும். அப்பாவைப் போல சிரிக்க, நான் பசி கொண்ட புலிக்குரங்கு போல கர்ஜிக்க வேண்டும். ஹோஹ்ஹோஹோஹோஹோ!

ஹோஹ்ஹோஹோஹோஹோ!

எனக்கு மிகவும் பிடித்தமான ஓசையை அப்பாவால் தனியாக எழுப்ப முடியாது. அதற்கு நானும் அவருடன் இருக்க வேண்டும். நான் தூங்கப்போகும் முன் என் நெற்றியில் ஈரம் படர அழுத்தமாக அவர் கொடுக்கும் முத்தத்தின் ஓசைதான் அது. ம்ம்ம்ம்மாஆஆஆஆ!

ம்ம்ம்ம்மாஆஆஆஆ!

காதுகள் எப்படி ஒலியைக் கேட்கின்றன?

ஒலி அலைகள் செவிக்குழாய் வழியாகப் பயணித்து செவிப்பறையை அடையும். செவிப்பறை இந்த ஒலி அலைகளின் அதிர்வுகளை நடுச்செவி வழியாக உட்செவிக்கு அனுப்பும். உட்செவி நத்தை வடிவம் கொண்டது, இதை காக்லியா என்று அழைப்பார்கள். ஒலி அலைகள் இறுதியாக இந்த காக்லியாவை அடையும். இதில் ஒலியை உணரக்கூடிய ஆயிரக்கணக்கான சிறிய மயிரிழை செல்கள் உள்ளன.

சில நேரங்களில் காக்லியாவின் உள்ளிருக்கும் மயிரிழை செல்கள் சேதமடைந்துவிடும். அப்போது நம்மால் சரியாகக் கேட்க முடியாது. இது வயதாகும்போதோ, காயமேற்படும்போதோ, நோயுறும்போதோ நிகழலாம். அப்படி நடக்கும்போது நன்றாகக் கேட்க உதவும் சிறிய மின்னணுக் கருவிதான் காதுகேட்கும் கருவி.

உட் செவி

புறச் செவி

நடுச் செவி

செவிக்குழாய்

செவிப்பறை

காதுகேட்கும் கருவி எப்படி வேலை செய்கிறது? காதுகேட்கும் கருவியைக் காதின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ பொருத்திக்கொள்ளலாம். ஒலியைப் பெரிதாக்க அந்தக் கருவியில் மூன்று பாகங்கள் உள்ளன: ஒலிவாங்கி(Mic), ஒலிபெருக்கி(Amplifier) மற்றும் ஒலிபரப்பி(Speaker).

1. ஒலிவாங்கி வழியாக ஒலி உள்ளே வரும்.

2. ஒலிவாங்கி அதனை ஒலிபெருக்கியிடம் அனுப்பும். ஒலிபெருக்கி அதன் ஆற்றலைக் கூட்டி சத்தத்தை அதிகரிக்கும்.

3. பெருக்கப்பட்ட ஒலிகள் ஒலிபரப்பி வழியாக காதுக்குள் அனுப்பப்படும்.

காதுகேட்கும் கருவியால் பயனடையக்கூடிய யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? அவர்களை அருகாமையிலிருக்கும் காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லுங்கள்.

ஒலிவாங்கி

ஒலிபரப்பி

ஒலி கட்டுப்படுத்தி

ஒலிபெருக்கி

மின்கலம்

செவி அச்சு

செவிப் பிடி