அனுவிற்கு அப்பாவைப்பற்றிய பல விஷயங்கள் பிடிக்கும்.
அவர் செய்யும் பிரகாசமான காகித விளக்குகள், கரகரப்பான வெங்காயப் பக்கோடாக்கள், அழகான காகித ஆமைகள் எல்லாமே பிடிக்கும். அவர் மாடிப்படியில் குதூகலமாகத் துள்ளி ஏறுவார், மாமாவுடன் விளையாட்டாகப் பயில்வான் சண்டை போடுவார். விருந்தினர்கள் வந்தால் அவர்களை எப்போதும் சிரிக்க வைப்பார். அனுவிற்கு அப்பாவைப்பற்றி இந்த எல்லா விஷயங்களும் பிடிக்கும்.
ஆனால், அனுவுக்கு மிகவும் பிடித்தது என்ன தெரியுமா? அப்பாவின் மீசை!
காலையில் அப்பா சவரம் செய்யும்போது அனு அவரை உற்று கவனிப்பாள். இரண்டு விரல்களுக்கிடையே கத்தரிக்கோலைப் பிடித்துக்கொண்டு வெட்டு, வெட்டுன்று வெட்டி மீசையை ஒழுங்குப் படுத்திக்கொள்வார். கொஞ்சம் இடது பக்கம் கொஞ்சம் வலது பக்கம்... ”ஐயோ, அப்பா! முடியாது, முடியாது! உங்கள் மீசையைக் குறைக்காதீங்க! அப்புறம், உங்க கூட பேச மாட்டேன்!”
அப்பா குளித்துவிட்டு வந்ததும், அனு ஒரு குட்டி சீப்பை எடுத்து அவரது மீசையை அழகாக சீவிவிடுவாள். பின், மீசையை இரண்டு பக்கமும் பிடித்து முறுக்கிவிடுவாள். அப்போதுதான் அப்பாவின் மீசை விரைப்பாக, பெருமையாக தெரியும். ”முடிஞ்சிடுச்சு! கலையாம பாத்துக்கணும், சரியா?” என்று மிரட்டுவாள்.
அப்பா நல்ல சட்டையும் தலைப்பாகையும் போட்டுக்கொண்டு, இடுப்புப்பட்டியில் வாள் மாட்டிக்கொண்டு, ஒரு பெரிய குதிரையில் ஏறிச் சென்றால் எவ்வளவு அற்புதமாக இருப்பார் என்று நினைத்தாள் அனு. மூக்குக்கண்ணாடி போட்ட படைவீரர் மாதிரி...
உண்மையில், அனுவிற்கு மீசை வைத்திருப்பவர்கள் எல்லாரையும் பிடிக்கும். அவள் தோழி டூட்டீயின் அப்பா போல. டூட்டீயின் நிஜப்பெயர் ஸ்ம்ரூட்டி.
அவருக்கு அடர்த்தியான மீசை! ஒரு பெரிய குண்டுச் சீப்பு வேண்டும் அவரது மீசையை சீவுவதற்கு. டூட்டீயின் அப்பா நன்றாக டென்னிஸ் விளையாடுவார். ஆனால் உண்மையில், அவர் ஒரு மல்யுத்த வீரராக இருக்க வேண்டும். ஒரு அடுக்குத் தலைப்பாகை அணிந்துகொண்டு, பெரிய தடியை தோளில் வைத்துக்கொண்டாரானால் அற்புதமாக இருப்பார்!
சாஹிலின் அப்பாவிற்குப் பென்சில் போல் மெல்லிய மீசை.
அவர் எப்படி அதை அவ்வளவு மெலிசாக செதுக்கிக் கொள்கிறார் என்று வியக்கிறாள் அனு. அவர் ஒரு உயரமானக் கருப்புத் தொப்பி அணிந்துகொண்டு, நீண்ட கருப்பு அங்கி மற்றும் கருப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டால், தொலைக்காட்சியில் திருடர்களைப் பிடிக்கும் துப்பறிவாளர் போல இருப்பார்!
ஆனால், பக்கத்து வீட்டுத் தாத்தாவுடைய மீசைதான் எல்லாவற்றையும்விட மிகச் சிறந்தது! ஒரு பெரிய வெள்ளை மேகம் வானத்திலிருந்து கீழே வந்து அவரது மூக்கிற்குக் கீழ் வாழ்வது போல! அவரது வாய் மேகத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது.மேகம் வழிமறைக்கும்போது எப்படி தாத்தாவால் சாப்பிட முடியும்? என்று கவலைப்படுகிறாள் அனு.
தன் மூக்கிற்குக் கீழ் ஏன் மீசை வளரவில்லை என்று வியந்தாள் அனு. ஒவ்வொரு நாள் காலையிலும் சோப்பை ஈரமாக்கி, நிறைய நுரையை உண்டாக்கி பல வகையான மீசைகளை வைத்துப் பார்ப்பாள். ”என் மீசைதான் மிகச் சிறந்தது” என்பாள். ”தூய வெள்ளையாகவும், மிக மென்மையாகவும் இருக்கிறது! எவ்வளவு நன்றாக இருக்கிறது, இல்லையா?” என்று மகிழ்ச்சியுடன் கேட்கிறாள் அனு.