appuvin biramaanda nilanadukkam

அப்புவின் பிரம்மாண்ட நிலநடுக்கம்

அப்புவின் பாட்டினால் பூமி அதிர்ந்ததா? அல்லது நிலநடுக்கத்தினாலா? நகைச்சுவை கலந்த தகவல்களுடன் கூடிய இந்தக் கதையைப் படியுங்கள், நிலநடுக்கத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

- S. Jayaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

"இது பாடுவதில் விருப்பமுடைய அசுரனான பே அசுராவின் கதை" என்று அப்பு கதையைத் தொடங்கினான்.

தீதாவும் பியாவும் கதையைக் கேட்க அப்புவின் அருகில் வந்தார்கள்.

"பே அசுராவுக்குப் பாடுவது பிடிக்கும், ஆனால் அவனோடிருந்த மற்ற அசுரர்கள் அவன் குரலை வெறுத்தார்கள். எனவே, அவன் பாடினால் யாருக்கும் கேட்காதபடி ஒரு மலை உச்சிக்கு அவனை அனுப்பிவைத்தார்கள்" என்றான் அப்பு.

அப்பு தீதாவின் பெரிய கட்டிலை உயரமான மலையாக பாவித்து அதன்மீது ஏறிக்கொண்டான், பயமுறுத்துகின்ற அசுரக் குரலில் பாடத் தொடங்கினான்.

"சாஆஆஆ..." பே அசுரா பாட ஆரம்பித்தான்.

"ரீஇஇஇஇஇ..." அவன் குரல் ஓங்கத் தொடங்கியது.

சூரியனின் கதிர்களே பயந்து ஒளியைக் குறைத்துக்கொண்டன.

"காஆஆஆஆ..." அவன் உரக்கக் கத்தினான்.

பே அசுரா இப்பொழுது ஆனந்தமாக உணர்ந்தான். எனவே பாட்டோடு கொஞ்சம் கதக் நடனம் ஆடவும் தீர்மானித்தான்.

"தா தின் தின் தா... தா தின் தின் தா," என்று தாளக்கட்டுக்குச் சரியாகக் கால்களைத் தரையில் பதித்துச் சுழன்று ஆடினான்.

இன்னும் ஆனந்தம்  அதிகமாக, "மாஆஅஆ… பாஆஆ..." என்று கூடவே பாடினான்.

அதுவரை நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்த மலை பயத்தில் திடுக்கிட்டு எழுந்தது. அசுரனின் பாட்டும் ஆட்டமும் மலையை நடுங்கவைத்தது.

டமால்! பாறைகள் விழுந்தன.

தடாஆஆல்! விழுந்த பாறைகளால் பூமி அதிர்ந்தது.

"பாறைகள் விழுந்ததால் என்ன ஆயிற்று தெரியுமா?" அப்பு தன் ரசிகர்களிடம் கேட்டான். தீதா குறும்புப் புன்னகையுடன் தலையை அசைத்தார்.

"என்ன ஆயிற்று என்று நானே சொல்கிறேன்," என்று தொடர்ந்தான் அப்பு. "பூமி குலுங்கியது! மலையே அதிர்ந்தது, எல்லாமே அசையத் தொடங்கியது. பிரமாண்டமான அசுரன் பே அசுராவே, இப்படியும் அப்படியும் ஆடினான்!"

அப்பு தரையில் உருண்டு "உலகம் இப்படி ஆடியது" என்றான். பிறகு, இன்னும் கொஞ்சம் உருண்டுவிட்டு, "இப்படி எதிர்ப்பக்கமாகவும் ஆடியது" என்றான்.

அந்த நேரம் பார்த்து பூமி உண்மையிலேயே அசையத் தொடங்கியது! பே அசுரா கதையில் மலை அதிர்ந்தது போலக் கட்டில் அசைந்தது.

"அப்பு, பாட்டை நிறுத்து! மலையை நீ பயமுறுத்துகிறாய்" என்று பியா கூச்சலிட்டாள்.

"நான் எதுவும் செய்யவில்லை” என்றான் அப்பு, “இந்த அறை நிஜமாகவே அசைகிறது."

தீதா, அப்பு மற்றும் பியாவிடம் பேச்சு மூச்சில்லை. போலுகூடக்  குரைக்கவில்லை.

பிறகு, இன்னொரு பெரிய அசைவு.

"தரை அதிர்கிறது!" அப்பு கத்தினான்.

"எல்லாம் பே அசுராவால்தான்!" பியா அழுதாள்.

"இல்லை, இல்லை, இது நிலநடுக்கம்" தீதா அமைதியாகச் சொன்னார்.

"வெளியே ஓட இப்பொழுது நேரமில்லை. சீக்கிரம், கட்டிலுக்கு அடியில் பதுங்குங்கள்," என்றார் தீதா.

எல்லாரும் தீதாவின் உயரமான கட்டிலுக்கு அடியில் சென்றார்கள், கட்டில் கால்களைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தார்கள். பூமியோ தொடர்ந்து அதிர்ந்தது.

கடகடகட... அலமாரியில் இருந்த பொம்மைகள் உருண்டு கீழே விழுந்தன.

சலக்... சலக்... கூஜாவிலிருந்த தண்ணீர் தளும்பி எல்லா பக்கமும் தெறித்தது.

"ஊ... ஆ... ஆ!" அப்பு தரை அதிர்வதை உணர்ந்து கத்தினான்.

"அவ்... ஊ!" என்று முனகியது போலு.

அப்புவுக்கு வயிற்றில் பே அசுரா உதைப்பதைப் போன்ற உணர்வு.

ஒரு வழியாக, அதிர்வது நின்றது. நிலம் திரும்ப அதிர்கிறதா என்று இரண்டு நிமிடம் காத்திருந்து பார்த்தார் தீதா. இப்போது பூமி நிலையாக இருந்தது. நடுக்கம் நின்றுவிட்டது!

கட்டில் அடியிலிருந்து தவழ்ந்து அனைவரும் வெளியே வந்தார்கள். "நாம் இப்பொழுது வெளியே செல்லலாம்," என்று தீதா சொன்னார்.

"அப்பொழுதே வெளியே ஓடிப்போயிருக்க வேண்டாமா?" என்று அப்பு கேட்டான்.

"வெளியே செல்லும் வழி அருகில் இருந்தால் அப்படிச் செய்யலாம்," என்றார் தீதா. "நீ ஒரு வலுவான கட்டிடத்தில், அதுவும் மாடியில் இருந்தால், படுக்கையின் அடியிலோ ஒரு வலுவான மேஜையின் கீழோ சென்றுவிடலாம். பின், அவை உங்களிடமிருந்து நகராதபடி இறுகப் பிடித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் இருக்கும் அறையில் அப்படி எதுவும் இல்லையென்றால், அறையின் ஒரு மூலைக்குச் சென்றுவிடலாம். ஜன்னல்கள், கதவுகள் மற்றும் கீழே விழக்கூடிய மின்விசிறிகள், மின் விளக்குகள் இவற்றிலிருந்து தள்ளியிருக்க வேண்டும்."

அப்பு, தீதா, பியா மற்றும் போலு வீட்டை விட்டு வெளியே சென்றார்கள். சில பூந்தொட்டிகள் கீழே விழுந்து நொறுங்கியிருந்தன. வீட்டின் வெளிப்புறச் சுவரில் ஒரு விரிசல் விழுந்திருந்தது.

மக்கள் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். மீண்டும் வீட்டுக்குள்ளே செல்வது பாதுகாப்பானதா?

அப்பு கீழே விழுந்த செடி ஒன்றைக் கையில் எடுத்தான். தன் கையைப் பூமியின்மீது வைத்தான்.

"பே அசுரா அடுத்தமுறை மெல்லப் பாடுவான்," என்று பூமிக்கு உறுதி அளித்தான்.

உண்மையில் பே அசுரா பாடியதால்தான் பூமி அதிர்ந்ததா?

இல்லை, நிலநடுக்கம் என்பது பூமி உருவான நாளிலிருந்தே, அதுவும் மிக ஆரம்ப காலத்திலிருந்தே நடைபெறும் ஒரு விஷயம்.

நம்மால் பார்க்கக்கூடிய பூமியின் மேல் பகுதிக்குப் புவிப்படலவோடு என்று பெயர். அதற்குக் கீழே இருக்கும் அடுத்த அடுக்கின் பெயர் மூடகம். அதன் பின் இருப்பது உள் மற்றும் வெளி மையபாகம். புவிப்படலவோடு என்பது மூடகம்மீது சறுக்கிச் செல்லும் புவியத்தட்டுகளால் ஆனது. அவை ஒன்றின் மீது ஒன்று உராய்ந்தபடி மிக மெதுவாக நகரும்.

சில நேரங்களில் இந்த அடுக்குகள் ஒன்றுக்கொன்று சிக்கிக்கொள்ளும். அப்போது அவை ஒன்றின்மீது ஒன்று சறுக்கிக்கொண்டு செல்லமுடியாது. இதனால் அழுத்தம் அதிகரிக்கும். பிறகு திடீரென்று இந்த அடுக்குகள் நகரும்பொழுது, பெரும் சக்தி அலைகள் வெளிப்படும். இந்த அலைகள் தரையில் பயணம்செய்யும்பொழுது அதிர்வுகளை உண்டாக்கி, நிலநடுக்கத்தை ஏற்படுத்துகின்றன!

எந்த இடத்திலிருந்து அடுக்குகள் விலகிச் செல்கின்றனவோ அது மையம் என்று அழைக்கப்படும். இந்த மையத்திற்கு மேலே உள்ள பூமியின் பகுதியை நிலநடுக்க நடுவம் என்பார்கள்.

பூமியின் அடுக்குகள்

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அடுக்குகள் இடப்பக்கம் உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளன.

1. புவிப்படலவோடு (கிரஸ்ட்)

2. மூடகம் (மாண்டல்)

3. மைய பாகம்

நிலநடுக்கத்தை அளவிடுவதற்கு உதவும் அளவுகோல் ரிக்டர் அளவுகோல் என்று அழைக்கப்படும். இந்த அளவுகோலில் 1-3 (சிறிய, மிகக் குறைந்த சேதம்), 4-6  (மிதமான சேதம்), 7-10 (மிகத் தீவிரமான சேதம்). நிலநடுக்கத்தின் அளவைக் கணக்கிட உதவும் கருவியின் பெயர் ஸீஸ்மோகிராஃப் (இது படத்தில் 4 என்று குறிக்கப்பட்டுள்ளது).

இந்தியா மற்றும் உலகில் எங்கெல்லாம் நிலநடுக்கங்கள் ஏற்படலாம்?

புவியத்தட்டுகள் பூமியின் அடியில் உலகம் முழுக்கப் பரவியுள்ளன மற்றும் இவை விஞ்ஞானிகளால் வரைபடமாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் அதிகமாக நிலநடுக்கம் ஏற்படக்கூடிய இடங்கள் காஷ்மீர், இமய மலையின் மத்திய மற்றும் மையப்பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள், பிஹாரின் சில பகுதிகள் மற்றும் கட்ச் பாலைவனப்பகுதி. டெல்லி, ஜம்மு மற்றும் காஷ்மீர், மஹாராஷ்டிரா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்படும். இங்கே நிலநடுக்கங்கள் அதிகமாக நடப்பதற்குக் காரணம், இந்திய பூமிப் பரப்பு நகர்ந்து ஆசிய நிலப்பரப்பைத் தள்ளுவதுதான்.

நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படும் பகுதிகளை உச்சபட்ச நிலஅதிர்வுப் பகுதி என்பார்கள் (இது பக்கம் 21இல் காட்டப்பட்டுள்ளது).

உலகில் மிக மோசமான நில நடுக்கங்களால் தாக்கப்பட்ட மற்ற சில இடங்கள், ஜப்பான், இந்தோனேஷியா, இத்தாலி, துருக்கி, சிலி, மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா, கலிஃபோர்னியா பிரதேசங்கள்.

{வரைபடம் அளவு அடிப்படையிலானதல்ல, காட்சிப்பூர்வமாகக் காண்பிப்பதற்குமட்டுமே}

நீங்கள் நிலநடுக்கத்தில் சிக்கிக் கொண்டால் என்ன செய்யவேண்டும்?

1. பதற்றமடையாதீர்கள்.

2. நீங்கள் ஒரு கட்டிடத்தினுள், அதுவும் ஓர் உயரமான அல்லது மிக உறுதியான கட்டிடத்தில் இருந்தால், ஒரு கட்டிலின் கீழோ ஒரு வலுவான மேஜையின் கீழோ அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பதுங்கியிருங்கள். சுவற்றிலிருந்து கழன்று உங்கள் மேல் விழக்கூடிய பொருட்களிலிருந்து விலகியிருங்கள். கதவு மிக உறுதியாக இல்லை என்றால் அதன் அருகில் செல்லாதீர்கள்.

3. நீங்கள் ஒரு பழைய, வலுவில்லாத கட்டிடத்தினுள்ளோ, வெளியே செல்லும் வழியின் அருகிலோ இருந்தால், உடனே அமைதியாக வெளியேறுங்கள்.

4. நிலநடுக்கத்தின்போது நீங்கள் வெளியே இருந்தால், கட்டடங்கள். சுவர்கள், சாலை விளக்குகள் இவற்றிலிருந்து விலகி, ஒரு திறந்த வெளியில் நில்லுங்கள்.

5. ஒரு சரிவான மலையருகே சிக்கிக்கொண்டால், மலையின் ஓரப்பகுதியிலிருந்து விலகி நில்லுங்கள். நிலச்சரிவு மற்றும் உருண்டு வரும் பாறைகளிலிருந்து இது உங்களைப் பாதுகாக்கும்.