arakkan paplu

அரக்கன் பப்லு

பப்லு ஒரு வித்தியாசமான அரக்கன். அவன் எவரிடமும் சண்டை போடமாட்டான்; எவரையும் பயமுறுத்தமாட்டான். ஆனால், அவனுடைய கிராம மக்கள் அபாயத்தில் மாட்டிக்கொண்டபோது, அவன் தன் வலிமையால் அவர்களைக் காக்கிறான்.

- Rajam Anand

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பப்லு என்ற ஒன்பது வயது அரக்கனின் கதை இது. பப்லு மற்ற அரக்கர்களிடமிருந்து மிகவும் வித்தியாசமானவன். மற்றவர்களுக்குச் சண்டை போடப் பிடிக்கும்; ஆனால் பப்லுவுக்குச் சண்டையே பிடிக்காது. அவனுடைய வகுப்பில் பிற மாணவர்கள் டைனோசர்களின் காதுகளைத் திருகியும், புலிகளின் வால்களை இழுத்தும் பொழுதைக் கழித்தபோது, பப்லு தன் நண்பர்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தினான்.

பப்லுவின் தாய் அவனைப்பற்றி மிகவும் கவலைப்பட்டார். ஒரு நாள் இரவில் அவள் பப்லுவை எழுப்பி, "மகனே, நீ நம்முடைய இனத்தவருடன் ஒருபோதும் சந்தோஷமாக இருக்கமுடியாது" என்றார், நான் உன்னைச் சாதாரண மனிதர்கள் வாழும் ஒரு கிராமத்துக்குக் கூட்டிக்கொண்டு போகிறேன். "நீ அங்கே கிராமத் தலைவர் ராகவனுடன் தங்கலாம்."

கிராமத்தை நெருங்கும்போது, பப்லுவின் தாய் பப்லுவை கண்களை மூடிக்கொள்ளும்படி சொன்னார். அவன் மீண்டும் கண்களைத் திறந்தபோது அவனுக்கு மயக்கமே வந்துவிடும்போலிருந்தது. காரணம், அவனும் அவனது தாயும் தங்களது உருவத்தில் பத்தில் ஒரு பங்காகச் சுருங்கிப்போயிருந்தார்கள். பப்லுவின் தாய் அவனை ராகவனிடம் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.

பப்லு விரைவில் அந்தக் கிராமத்துச் சிறுவர், சிறுமிகளுடைய நண்பனாகிவிட்டான்.

ஒரு நாள் ராகவன் மிகுந்த கவலையுடன் வீட்டுக்குத் திரும்பினார். ‘அங்கார் என்ற ஓர் இரக்கமற்ற கொள்ளைக்காரன் நமது கிராமத்தின் ஒரே வழியையும் அடைத்துவிட்டான் ’ என்றார். இனிமேல் நாம் நமது வயலுக்குப் போகமுடியாது; ‘எல்லாரும் பட்டினிதான்.’

இதன›க்கேட்ட பப்லு ராகவனுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று எண்ணினான்.

ஆனால் என்ன செய்வது? திடீரென்று பப்லுவுக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. காட்டைவிட்டுப் போகுமுன் பப்லுவின் தாய் மறுபடியும் அவன் அரக்க உருவம் எடுக்க உதவும் மந்திர வார்த்தைகளை அவனிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தார். அந்த அரக்க உருவம் அங்காரைத் துரத்த உதவும் என்று பப்லு எண்ணினான்.

ஆனால், அந்த மந்திரம் எது? பப்லு தலைகீழாக நின்று பார்த்தும், தன்னுடைய காதுகளையே முறுக்கிப் பார்த்தும் அவனுக்கு அந்த மந்திரம் ஞாபகத்துக்கு வரவில்லை.

அப்போது பப்லுவுக்கு ஒரு மெல்லிய மழலைச் சத்தம் கேட்டது. பப்லு அண்ணா, "என்னுடன் விளையாடு, ப்லீத்."

இரண்டே வயதான சோனியின் குரல் அது. பப்லு அவளது நெருங்கிய தோழன். உடனே, அவன் அவளை வாரி எடுத்து உயரே தூக்கிப் போட்டுப் பிடித்தான். சோனி சந்தோஷத்துடன் மழலையில் பாட ஆரம்பித்தாள்.

"பப்லு அண்ணா, பப்லு அண்ணா தூக்கிப் போத்து சீக்கிரம் பிதி, பப்லு அண்ணா, பப்லு அண்ணா உன் மந்திர வித்தையைக் காத்து."

பப்லு திகைத்துப்போனான். இந்தச் சொற்களும் மெட்டும் அவனுக்கு மிகவும் தெரிந்ததுபோல் தோன்றியது. அவன் வேகமாக உள்ளே சென்று ஒரு நீல நிறக் கல்லை எடுத்துவந்தான்.

அவனுக்குத் தாய் சொன்னது நினைவுக்கு வந்துவிட்டது, மகனே, அந்தக் கல்லை மேலே தூக்கிப் போட்டு. "உன்னை மேலே தூக்கிப் போடுவேன், சீக்கிரம் உன்னைப் பிடிப்பேன், எனது மந்திர வித்தையை மறக்காதே என்று சொல்லு."

அந்த வார்த்தைகளைச் சொல்லி, தன்னுடைய கையில் இருந்த கல்லை மேலே தூக்கிப்போட்டதும், பப்லு தான் ஒரு பலூனைப்போலப் பெரிதாவதை உணர்ந்தான்.

திடீரென்று ’டர் டர்’ என அவனது பைஜாமாவும் குர்த்தாவும் கிழிய ஆரம்பித்தன. அவன் தன்னை மறைத்துக்கொள்ளாவிட்டால், நூறு மடங்கு சிறிய உடையில் கிராம மக்கள் நடுவில் நின்றுகொண்டிருந்திருப்பான்.

சிறிய கந்தல் துணிகளைக் கொண்டு தன் மானத்தைக் காக்க வேண்டியிருந்திருக்கும்.டர் டர் என அவனது உடை மேலும் கிழியக் கிழிய அவன் காட்டுக்குள் வேகமாக ஓடினான். செடி, கொடிகள் அடர்ந்த ஓர் இடத்தில் மண்டியிட்டு அமர்ந்துகொண்டான்.

மந்திர வார்த்தைகளில் சிலவற்றை அவன் மறந்ததால் வந்த பிரச்னை இது! அவனுடைய உடல் வளர்ந்தது. ஆனால், அதற்கு தகுந்தவாறு அவனுடைய உடை வளரவில்லை!

இப்போது என்ன செய்வது? அவன் அரக்க உருவம் எடுத்தும்கூட நினைத்ததைச் செய்ய இயலவில்லை. பிறந்த நாள் உடையில், அதாவது உடையே இல்லாமல் அவன் எப்படி வெளியே போவான்? உடனடியாக அவனது அளவுக்கு எப்படித் துணிகள் கிடைக்கும்?

அப்போது அங்கே ஒரு குரல் கேட்டது. அவன் குனிந்து பார்த்தான். ராகவன் நின்றுகொண்டிருந்தார். பப்லு, நீ பெரியதாக மாறியதாகவும், உடனே எங்கோ ஓடிவிட்டதாகவும் சோனி கூறினாள். "அந்த வினோதத்தைக் கேட்டதும் உனக்கு என்ன ஆயிற்று என்று பார்க்க வந்தேன்."

"என் அம்மா சொல்லிக்கொடுத்த மந்திரத்தால் நான் அரக்கனாக மாறிவிட்டேன்" என்றான் பப்லு, இப்போது, "அங்காரையும் அவனுடைய ஆள்களையும் என்னால் விரட்ட இயலும்."

"மிக்க மகிழ்ச்சி. பின்னே நீ எதற்காக இன்னும் காத்துக்கொண்டிருக்கிறாய்?"

நான் வளர்ந்த அளவுக்கு என்னுடைய உடைகள் வளரவில்லை. "நான் ஏறக்குறைய எதுவும் அணியாமல் இருக்கிறேன்" என்றான் பப்லு. "இனிமேல் நான் எப்படி வெளியே தலை காட்டுவது?"

"ராகவன் சிறிது யோசனை செய்துவிட்டு, சரி, எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடு" என்றார். "இன்று இரவுக்குள் உனக்கு ஏற்ற உடைகளைத் தயார் செய்துவிடுகிறேன்!"

ராகவன் ஊரில் இருந்த எல்லாத் தையல்காரர்களையும் வரச்சொன்னார். மொத்தம் இருபத்தொரு தையல்காரர்கள் ஒரு நொடியில் வந்துவிட்டார்கள். ராகவன் அவர்களிடம் நடந்ததைக் கூறினார், பப்லுவுக்கு ஒரு பெரிய பைஜாமாவும் குர்த்தாவும் உடனடியாகத் தைத்துக்கொடுக்கும்படி கூறினார்.

"பப்லுவின் உடை தயாரிப்பு வேலை" மடமடவென்று துவங்கியது. அளவு எடுப்பதற்காக அவனுடைய கால், கை, முதுகு எங்கும் தையல்காரர்கள் ஊர்ந்துபோனது மிகவும் வேடிக்கையாக இருந்தது. கிராம மக்கள் அனைவரும் தங்களால் முடிந்த துணிகளைக் கொடுத்தனர். சோனிகூட அவளது பொம்மையின் சால்வையைக் கொடுத்தாள்!

ஏழு மணி நேரத்தில் உடை தயாரானது. பப்லு சந்தோஷமாகச் சத்தமிட்டபடி எழுந்து நின்றான். பெரிய உருவத்தோடு, வண்ணமயமான உடைகளை அணிந்து அவன் எழுந்தபோது, கைதட்டல் வானைப் பிளந்தது.

நள்ளிரவு நேரமானதால், அங்காரும் அவனது ஆள்களும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தார்கள். இரண்டு கொள்ளையர்கள் மட்டும் காவல் காத்துக்கொண்டிருந்தனர். திடீரென்று ஏதோ சத்தம் கேட்டதால் அங்கார் எழுந்துகொண்டான். தன் வாளை எடுத்துக்கொண்டு கூடாரத்துக்கு வெளியே வந்தான்.

மற்ற கொள்ளையர்களும் வாள்களையும் வில்லையும் ஏந்திக்கொண்டு தங்கள் இடத்தைவிட்டு வெளியே வந்தனர்.

‘உய்’ என்றொரு சத்தம். அது மேலும் மேலும் வளர்ந்து அருகிலும் வர ஆரம்பித்தது. ‘உய், உய்’!

அங்கார் சுற்றிலும் பார்த்தபோது, எங்கும் புழுதிப் படலம். மரங்கள் வேகமாக அசைந்தன. சத்தம் மெதுவாகக் காதைத் துளைக்க ஆரம்பித்தது.

அங்கார், தான் காற்றால் இழுக்கப்படுவதுபோல் உணர்ந்தான். கை, கால்களை நீட்டித் தரையைப் பற்றிக்கொள்ள அவன் எடுத்த முயற்சியெல்லாம் வீண். அவன் ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்தான்;

அவனது உதவியாளன் ஜர்நைல் இடப்புறம் காணச்

சகிக்காத டைனோசரைப்போல் பறந்துகொண்டிருந்தான். அவனது வலப்புறம் சிறந்த வாள் வீச்சாளனான தல்வார் தனது பறக்கும் வாளைப் பிடிக்க உயரே பறந்துகொண்டிருந்தான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு ‘ப்ளக்’ என்று ஏதோ தண்ணீரில் விழுகின்ற சப்தம்! உண்மையாகவே அவர்கள் கிராமத்தின் அருகிலிருந்த நதியில் விழுந்திருந்தார்கள்.

அவர்கள் தட்டுத் தடுமாறிக் கரை சேர்ந்தபோது, ஒரு பெரிய நிழல் அவர்கள்மீது விழுந்தது.

இரவின் அமைதியில் அது ‘போக்கிரி, அங்கார்’ என்று கத்துவது எங்கும் எதிரொலித்தது. அங்கார் பயத்தில் பேசத் தடுமாறினான்.

அவன் ஜிலேபி திருடியதற்காக அவனுடைய அப்பா அடித்தபோது பயந்ததுதான். அதன்பிறகு அவன் வாழ்நாளில் பயந்ததே கிடையாது. இன்று, மறுபடியும் அதேமாதிரி பயம்!

"இந்த முறை நான் உங்களை லேசாகதான் உதைத்தேன்" என்றது அந்தக் குரல் மறுபடியும் உன்னையோ, உனது ஆள்களையோ இந்த கிராமத்தின் அருகில் பார்த்தால் நடப்பதே வேறு. உங்கள் கை, "கால்களை முறித்துவிடுவேன்."

புரிந்தது மஹாராஜா. இனிமேல் நாங்கள் இந்தக் "கிராமத்துப் பக்கமே தலை காட்டமாட்டோம்."

நன்றாக ஞாபகம் இருக்கட்டும், கிராமத்தின் அருகே வந்தீர்கள் என்று கேள்விப்பட்டால்கூட, "உங்களை மசித்து மீன்களுக்கு இரையாகப் போட்டுவிடுவேன்."

கண்டிப்பாக வரமாட்டோம் மஹாராஜா. ஆனால், தயவுசெய்து நீங்கள் யார் என்றுமட்டும் சொல்லுங்கள். "நான் உங்களை இங்கே பார்த்ததே இல்லை."

"நான் இந்தக் கிராமத்தின் ரட்சகன்," என்று சொன்னான் பப்லு. சில வினாடிகள் கழித்து, ஆழமான குரலில், ‘நான்தான் அரக்கன் பப்லு’ என்று சொன்னான். பின் கிராமத்தை நோக்கி நடந்தான்.

இரவோடு இரவாக ஓடிப்போன அங்காரும் அவனது ஆள்களும் அதன்பிறகு அங்கே வரவேயில்லை.ஆகவே, பப்லு மறுபடியும் தனது சிறிய உருவத்துக்கு மாறிவிட்டான். ஆனால், இப்போதெல்லாம் ஒருவரும் அவனை ‘பப்லு’ என்று அழைப்பதில்லை. எல்லாரும் அவனை ‘அரக்கன் பப்லு’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள்; குட்டிப்பெண் சோனுகூட அப்படிதான் கூப்பிடுகிறாள்.