arunum marmamaaligaiyum

அருணும் மர்மமாளிகையும்

அருணும் அருணாச்சலமும் ஒரு பாழடைந்த மர்ம மாளிகைக்குள் சிக்கிக் கொண்டார்கள்! அவர்கள் வெளியேற ஒரே வழி, ஒரு மின்னணுச் சுற்றை அமைப்பதுதான். ஆனால், அவர்கள் அதை எப்படிச் செய்வார்கள்?

- Ramki J

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அந்தப் பாழடைந்த மாளிகைக்குள் இருந்த சிலையை அருண் கவனமாக ஆராய்ந்தான். சிலையின் நெற்றியில் இருந்த பிரகாசமான ரத்தினத்தைப் பிடுங்கி எடுத்தான். அவனது வளர்ப்புப் பிராணியான அருணாச்சலம் எனும் அரணை ஒரு தூணில் உட்கார்ந்திருந்தது.

கடகடகடகட! தூண்கள் ஆட ஆரம்பித்தன. ரடரடரடரட! சுவர்கள் நடுங்கின. கராக்க்! தரை விரிசல் விட்டது. தடால் என்று அவனுக்குப் பின்னால் இருந்த கதவு மூடிக்கொண்டது.

“என்ன துணிச்சல் உனக்கு! என் பொட்டை ஏன் எடுத்தாய்? அதை என்னிடம் திருப்பிக் கொடு” என்று அந்த சிலை மிரட்டியது.

பயத்தில், அருணுடைய கையும் காலும் சேமியா போல பலமிழந்துவிட்டன. ரத்தினம் கை நழுவி விழுந்து சிதறியது.

“அந்த ரத்தினத்தில் இருந்து வந்த ஒளிதான் கதவைத் திறந்து வைத்திருந்தது” என்றது சிலை. “அது பழையபடி பெரிதாக வளர, பல வருடங்களாகும். இப்போதைக்கு உன்னால் இங்கிருந்து போகவே முடியாது.”

சிதறிக் கிடந்த ரத்தினத்தை பீதியோடு பார்த்த அருண், “நிச்சயம் வேறு வழி இருந்தாக வேண்டும்” என்றான்.

“இன்னொரு வழி இருக்கிறது, ஆனால் நீ விரைவாக செயல்பட வேண்டும்” என்று கூறிய சிலை மெளனமானது.

“என்ன வழி? சொல்லு!” என்று அருண் சிலையின் மார்பில் குத்தினான். அதில் நூற்றாண்டுகளாகப் படிந்திருந்த தூசி எழும்பி காற்றில் கரைந்தது.

“இங்கே பார் அருணாச்சலம். ஒரு குறிப்பு இருக்கிறது. கதவு திறக்க வேண்டுமென்றால், சுற்றை முழுவதுமாக முடிக்க வேண்டும் என்று இதில் சொல்கிறது. நமக்குத் தேவையான பொருட்கள்:

சுற்றுவழிக்கு மின்னாற்றல் அளிக்க மின்சாரப் பிராணியின் தலைமுடி. மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த மின் தடையங்களாக முடி கிளிப்.வெளிச்சம் வழங்குவதற்காக மேல்தளத்திலிருக்கும் ரத்தினம் ஒன்று. எல்லாவற்றையும் இணைத்துக்கட்டுவதற்காக கம்பிப்பறவையின் இறகுகள்.

இந்த மின்சாரப் பிராணி எப்படி இருக்குமென வியப்பாக இருக்கிறது. குட்டியாக புசுபுசுவென்று இருக்குமென்று தோன்றுகிறது!”

திடீரென்று பின்னாலிருந்து ஒரு உறுமல் சத்தம் கேட்டது. மின்சாரப் பிராணிதான் அது. கோபத்தில் வெளுத்து நீல நிறத்தில் இருந்தது. அது குட்டியாகவும் இல்லை, புசுபுசுவென்றும் இல்லை.

“நல்ல நாய், செல்ல நாய்!” என்று அருண் உளறினான். பின் சட்டென்று அதன் புருவத்திலிருந்து ஒரு முடியைப் பிடுங்கினான்.

“ரார் ரார் ரார் ரார் ரார் ரார் ரார்!” மின்சாரப் பிராணி உறுமியபடி அவர்கள் மேல் பாயத் தயாரானது. “காப்பாத்துங்க!” அருண் கத்தினான்.

எங்கிருந்தோ மூன்று பெண்கள் தோன்றி அந்த மின்சாரப் பிராணியின் மூக்கில் தட்டினார்கள். “ஆர்ப்... ஆர்ப்!” மின்சாரப் பிராணி வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடியது.

“மிக்க நன்றி. நீங்கள் ஏன் ரொம்ப உயரமாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டான் அருண். அவர்கள் மூவரும் சிரித்தனர். “அட! நீ ஏன் இவ்வளவு குள்ளமாக இருக்கிறாய்?” “எனக்கு நேரமில்லை.” அருண் கண்களை உருட்டியபடி, “நான் தடையங்களை கண்டுபிடிக்க வேண்டும்” என்றான். மறுபடியும் அப்பெண்கள் சிரித்தார்கள். ”நாங்கள்தான் தடையங்கள்.” “ஓ!” அருண் புன்னகைத்தான். “நீங்கள் தலையில் போட்டிருக்கும் கிளிப்புகள் கிடைக்குமா?” “உனக்கு எட்டினால், எடுத்துக்கொள்.”

அருண் எம்பிக் குதித்துப் பார்த்தான். ஆனாலும், அவர்களுடைய தலையை அவனுக்கு எட்டவில்லை. ”உங்களை ரொம்ப உயரம் என்றதற்கு மன்னித்து விடுங்கள்”என்றான் அருண். அந்தப் பெண்கள் சிரித்துக்கொண்டே தங்கள் கிளிப்புகளைக் கொடுத்தார்கள். அவன் நன்றி சொல்லிவிட்டு “அதுதான் மேல்தளமா?” என்று கேட்டான்.

“ஆமாம்! ஆனால், நீ அங்கே போகக் கூடாது” என்று அந்தப் பெண்கள் கவலையோடு சொன்னார்கள். “அங்கே இருக்கும் கம்பிப் பறவை யார் வந்தாலும் கொத்திவிடும்.”

”என்னது பறவையா?” என்று சிரித்தான் அருண். “ஒரு சின்னப் பறவையைப் பார்த்து நான் பயந்துவிட மாட்டேன்.”

அருணும் அருணாச்சலமும் மேலே ஏறி, கம்பிப் பறவையின் கூட்டிடம் சென்றனர். அதன் கூட்டைச் சுற்றி ரத்தினங்கள் ஜொலித்தன. அருண் ஒரு ரத்தினத்தை எடுத்தான். அப்போது கூட்டின் விளிம்புக்குச் சென்ற கம்பிப் பறவையின் குஞ்சைக் காப்பாற்ற முயன்றதில் ரத்தினத்தைக் கீழே போட்டுவிட்டான்.

“கா… கா!” தாய்ப்பறவை சரேலென்று பாய்ந்து, அருணிண் தோளைப் பிடித்துத் தூக்கியது.

“என்னைக் கீழே விடு” அருண் கத்தினான். அதன் இறகுகளைக் கொத்தாக அழுத்திப் பிடித்து, “நான் உதவிதான் செய்தேன்” என்றான். கம்பிப் பறவை அவனைக் கீழே போட்டது.

“ரத்தினத்தைத் தவற விட்டுவிட்டோமே. இப்போது என்ன செய்வது!” என்றான் அருண்.

“கிளிக்... கிளிக்... கிளிக்…” அருணாச்சலம் இளித்தது. அதன் வாயில் ஒரு ரத்தினம் மின்னியது. அருணும் அருணாச்சலமும் அந்த மேல்தளத்தைக் கடந்து, அந்த மூன்று பெண்களைக் கடந்து, மின்சாரப் பிராணியையும் தாண்டி ஓடினார்கள்.

இறுதியில் அந்த சிலைக்கு முன்னால் போய் நின்றார்கள். அருண், அந்த ரத்தினத்தை சிலையின் நெஞ்சில் பொருத்தினான்.

மின்தடையமான கிளிப்பை ஆபரணத்தின் கீழே சொருகினான்.

கம்பிப் பறவையின் சிறகிலிருந்து இரண்டு கம்பிகளைப் பிரித்தெடுத்தான்.

அவற்றில் ஒன்றை ஆபரணத்தின் அடியிலும் மற்றொன்றை கிளிப்பிற்கு அருகிலும் பொருத்தினான். “ஏன் இன்னும் வெளிச்சம் வரவில்லை?”

அருண் யோசிக்க, சட்டென்று அவனுக்கு எல்லாமே நினைவுக்கு வந்தது. மின்சாரப் பிராணியின் முடியை வைத்து இணையாமல் இருந்த கம்பிகளை இணைத்தான்..

பளிச்! அதைப் போல் ஒரு பிரகாசமான வெளிச்சத்தை அருண் பார்த்ததேயில்லை. அந்த மாளிகையின் கதவு திறந்து கொண்டது.

“நாம் முடித்துவிட்டோம், அருணாச்சலம்! சிலை நம்மைப் பாராட்டிப் பரிசளிக்க போகிறது.”

“வெளியே போ!”சிலை கர்ஜித்தது.

அருணும் அருணாச்சலமும் அங்கிருந்து ஒரே தாவலில் கதவுக்கு வெளியே ஓடினார்கள்.

கடகடகடகட! தூண்கள் எல்லாம் ஆட ஆரம்பித்தன. ரடரடரடரட! சுவர்கள் நடுங்கின. கர்ர்ர்ர்ராக்க்க்! மாளிகை நொறுங்கி தரைமட்டமானது.

“நடந்ததைச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள், இல்லையா அருணாச்சலம்? நம்மிடம் ஒரு ரத்தினம் கூட இல்லை!” என்றான் அருண்.

“கிளிக்... கிளிக்... கிளிக்…” அருணாச்சலம் இளித்தது. அதன் வாயில் இருந்த ரத்தினம் பளிச்சிட்டது.

மின்னணுச் சுற்று என்றால் என்ன?

மின்னணுச் சுற்று என்பது மின்சாரம் பாய்வதற்கான ஒரு சுற்றுவழி. இதில் மின்கலம், மின்தடையங்கள், ஒளி உமிழ் இருமுனையங்கள் ஆகிய மின்னணு சாதனங்கள் கம்பிகளால் இணைக்கப் பட்டிருக்கும். மின்னணுச் சுற்றுகள் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்காக அமைக்கப்படும். எடுத்துக்காட்டாக, ஒரு ஒளி உமிழ் இருமுனைய மின்னணுச் சுற்றின் பணி ஒளி உமிழ் இருமுனையங்களை ஒளிரச் செய்வதாக இருக்கும்,

ஒளி உமிழ் மின்னணுச் சுற்று ஒன்றை நீங்களே வடிவமைக்கத் தேவையானவை:

1. ஒளி உமிழ் இருமுனையம் (LED - Light Emitting Diode) இது, மின்சாரம் செலுத்தப்படும்போது ஒளியை உமிழக்கூடிய ஒரு மின்னணு சாதனம்.

2. மின்தடையம் (Resistor) மின்னோட்டத்தை மட்டுப்படுத்த/ குறைக்க பயன்படுத்தப்படும் ஒரு மின்னணு சாதனம்.

3. இரண்டு மின்கம்பிகள் மின்கம்பி என்பது நெகிழி போர்த்திய ஓர் உலோகச் சுருள். இது மின்சாரத்தை செலுத்தவும் பெறவும் உதவும்.

4. 9 வோல்ட் மின்கலம் ஒன்று இது சுற்றுக்கான மின்சாரத்தை வழங்கும் சாதனம்.

5 மின்னணுவியல் பலகை(Bread Board) இது சுற்றுவழிகளை கட்டமைக்க உதவும் அடிப்பலகை.

உங்கள் மின்னணுச் சுற்றை நீங்களே அமைக்கலாம் குறிப்பு: இந்தச் சோதனையைச் செய்யும்போது ஒரு பெரியவரோ அல்லது ஆசிரியரோ அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

நிலை 1

ஒளி உமிழ் இருமுனையம் ஒன்றை பலகையில் பொருத்துங்கள்.

நிலை 2

ஒளிஉமிழ் இருமுனையத்தின் நீளமான காலருகே மின்தடையத்தை இணையுங்கள்.

நிலை 3

ஒரு கம்பியை ஒளிஉமிழ் இருமுனையத்தின் குட்டைக் காலுக்குக் கீழேயும் மற்றொரு கம்பியை மின்தடையத்தின் வலப்புறத்திலும் இணையுங்கள்

நிலை 4

ஒளிஉமிழ் இருமுனையத்தின் குட்டைக் காலுக்குக் கீழே நுழைத்த கம்பியின் மறு முனையை மின்கலத்தின் எதிர் மின்வாயுடன்(-) இணையுங்கள்.

நிலை 5

மின்தடையத்தின் அருகே நுழைத்த கம்பியின் மறு முனையை மின்கலத்தின் நேர் மின்வாயுடன்(+) இணையுங்கள்.

நிலை 6

இருமுனையம் ஒளிரும்போது நீங்கள் உங்கள் மின்னணுச் சுற்றை வெற்றிகரமாக அமைத்து விட்டீர்கள்!