b r ambedkar oru vaazhnaal vaasagarin kathai

பி. ஆர். அம்பேத்கர்: ஒரு வாழ்நாள் வாசகரின் கதை

பி.ஆர். அம்பேத்கரின் கதை இது. ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை’ என்று அறியப்படும் அவர், ‘பாபாசாகேப்’ (மதிப்புமிக்க தந்தை) என்று பாசத்துடன் அழைக்கப்படுகிறார். அவர் ஒரு தீர்க்கதரிசி, பொருளியலாளர், சமூகச் சீர்த்திருத்தவாதி. இவை மட்டுமின்றி, அவர் ஒரு சிறந்த வாசகர். வாசித்தல் மீது அவர் கொண்டிருந்த காதல், அவருடைய வாழ்நாள் பயணத்துக்கு எப்படி உந்துசக்தியாகத் திகழ்ந்தது என்பதை இந்த நூல் கூறுகிறது.

- Adhi Valliappan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

1891 ஏப்ரல் 14இல் பிறந்தார் இந்தியாவின் சிறந்த புதல்வர். அவர் பெயர் என்ன தெரியுமா? பீமராவ் ராம்ஜி அம்பேத்கர். உண்மையை உரக்கவும் தெளிவாகவும் பேசுவதற்காக அவர் புத்தகங்களை வாசித்தார்.

தீண்டத்தகாதோர் எனக் கருதப்பட்ட மகர் சாதியில் பிறந்ததால், அவர் வகுப்பறைக்கு வெளியே அமரவைக்கப்பட்டார். ஆனால் அறிவுக்கூர்மை, பரந்த பார்வையுடன் வேகமாக வளர்ந்தார். விரைவிலேயே சிறந்த மாணவராகப் போகிறார் அவர்.

பள்ளியில் நெருங்கிய நண்பர்கள் அவருக்கில்லை, புத்தகங்கள் அவருக்கு நல்ல நண்பர்கள் ஆகின. தவறான விதிமுறைகளை எதிர்த்து நிற்க அவை கற்றுக்கொடுத்தன. மக்களின் உரிமைகள், பாதுகாப்புக்காக அவர் துணிந்து நின்றார்.

பள்ளி முடிந்தபின் பூங்காவிலே தனிமையில் அமர்ந்து புத்தகங்களை வாசித்தபோது, அவரது எண்ணம் இப்படிச் சுழலும்: “ஒரு நாள், புத்தகங்களுக்காக ஒரு இல்லம் அமைப்பேன். அங்கே எழுத்தாலும் பேச்சாலும் அறிவு வளர்ச்சி பெறும்”.

1907ஆம் ஆண்டு பிறந்தது. பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்த முதல் தலித்தாக ஆனார் அம்பேத்கர். தங்கள் பிரகாசமான புதல்வனை மகர் சமூகம் திரண்டுவந்து வாழ்த்தியது. தங்களுக்காகப் பேசும் ஒருவன் கிடைத்துவிட்டான் என்பது அவர்களுக்குப் புரிந்தது.

படித்தல், வாசித்தல், கற்றுக்கொள்ளுதலே அவருடைய பெருங்காதல் ஆகின. பலனாக பரோடா மாகாண நிதிநல்கை அவரைத் தேடி வந்தது. இளங்கலைப் பட்டம் படிக்கத் தயாரானார். படிப்பில் அக்கறை மிகுந்தவரானார், புத்தகங்களே அவரை மாமேதையாக்கின.

பம்பாய் எல்ஃபின்ஸ்டோன் கல்லூரியில் இளங்கலை மாணவர் ஆன பிறகு வகுப்புகள் முடிந்த பின்னரும்கூட, விடாமல் அவர் படித்துக்கொண்டிருந்தார். நிலத்தில் ஓடும் ஆறுகள் அனைத்தும் கடைசியில் கடலில் சங்கமிப்பதுபோல், தன்னால் முடிந்த வழிகளில் எல்லாம் புத்தகங்களுக்குள் அவர் மூழ்கிப்போனார்.

பதினேழு வயதைத் தொட்டபோது ஷேக்ஸ்பியர் எழுதிய ‘அரசன் லியர்’ என்கிற நாடகத்தைத் தழுவி எழுதினார். அதில் இலக்கியத்துடன் தன் வாழ்க்கையை அவர் தொடர்புபடுத்தியிருந்த விதம் கண்கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது.

இளங்கலைத் தேர்வுகளில் அவர் தேறியது, ஒடுக்கப்பட்டோரின் மனஉறுதியை அதிகரித்தது. அனைத்துத் தடைகளையும் தாண்டி ஓடும் ஓட்டப்பந்தய வீரர் போல், முழு விடுதலையைப் பெற தான் மேலும் படிக்க வேண்டுமென நினைத்தார்.

படிப்பு, தகுதி, திறமையின் அடிப்படையில் முதுகலைப் படிப்பும், முனைவர் பட்டமும் பெற நிதிநல்கைக்கு அவர் விண்ணப்பித்தார். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர அவருக்கு அழைப்பு வந்திருந்தது. 1913 ஜூலை 12 அன்று நியூயார்க் மாகாணத்தில் அவர் அடியெடுத்து வைத்தார்.

ஓர் கனவு நனவானதைப் போலிருந்தது. அமெரிக்க மண்ணில் கால்பதித்த முதல் தலித் மாணவர் அவர். அங்கே அவர் சுதந்திரமாக உணர்ந்தார். மசகு எண்ணெயிட்ட இயந்திரம் சிறப்பாக வேலை செய்யுமே அதுபோல், கொலம்பியா பல்கலைக்கழக நூலகத்தைப் பார்த்தபோது, தன் உயிர்த்துடிப்பு திரும்பியதைப் போல் உணர்ந்தார்.

ஒவ்வொரு நாளும் 18 மணி நேரம் புத்தகக் கடலில் மூழ்கி எழுந்தார். கண்களைக்கூடச் சிமிட்ட மறந்து நூலகத்தில் அவர் சிந்தித்துக்கொண்டிருந்தார். மக்களை அழுத்திக்கொண்டுள்ள கட்டுகளை அறுத்து வாழ்க்கையில் சுதந்திரமாகப் பறக்கச் செய்வதற்கும், சாதி அமைப்பு எனும் முள்வேலியைத் தகர்ப்பதற்கும் புதுமை பூக்கச் செய்வதற்குமான வழி அவருக்குப் புரிந்தது.

முதுகலை, முனைவர் படிப்புகளை அவர் முடித்தார். வழக்கமான காலக்கெடுவுக்கு முன்னதாகவே இந்தப் படிப்புகளை அவர் முடித்திருந்தார்.

அவருடைய வாழ்க்கையின் பிரகாசமான புள்ளி அது. வெறுமனே படிப்பது, கற்றலின் நோக்கமல்ல என்பது புரிந்தது. மனித குல விடுதலைக்காக முழு ஆற்றலுடன் உழைப்பதே, கற்றலின் நோக்கம் என்பதை அவர் உணர்ந்துகொண்டார்.

முனைவர் பீமராவ் ராம்ஜி அம்பேத்கர், உலகின் புகழ்பெற்ற வாசகர்களில் ஒருவர். அவருடைய நூலகத்தில் 50,000க்கும் மேற்பட்ட புத்தகங்களை சேகரித்துவைத்திருந்தார். வழக்கமாக வசிப்பதற்காகவே மக்கள் வீடுகளைக் கட்டுவார்கள். ஆனால், ‘பாபாசாகேப்’ (மதிப்புமிக்க தந்தை) என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட அம்பேத்கரோ, தன்னுடைய புத்தகங்களுக்காக, அவற்றை வாசிப்பதற்காக ஒரு வீட்டையே கட்டினார். ‘ராஜகிரகம்’ என்று அந்த வீட்டுக்குப் பெயரிட்டார். சிந்தனையாளர் புத்தர், பருவமழைக் காலத்தில் அதிகமும் தங்கியிருந்த இடம், புகழ்பெற்ற பல போதனைகளை வழங்கியிருந்த இடம்தான் ராஜகிரகம்.

இளமைக் காலத்தில் பொது இடங்களிலும், பள்ளியிலும் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அம்பேத்கர் போராட வேண்டியிருந்தது. அவற்றுக்கு எதிராகக் கையில் புத்தகத்தை ஏந்தியும் இதயத்தில் கனிவுடனும் அவர் போராடினார். இன்றைக்கும்கூட தகுதியின் அடிப்படையில் பார்த்தால், இந்தியாவில் அதிகம் படித்த நபர் அவர்தான். அனைத்துக் குழந்தைகளும் வளர்ந்து எதிர்கால சமூகத்தில் குடிநபர்களாக ஆகும்போது சுதந்திரமான, சமத்துவமான, சகோதரத்துவத்துடன் கூடிய வாழ்க்கையைப் பெறுவதற்கான சிந்தனைகளை அவர் வெளிப்படுத்தினார். அவருடைய கருத்துகளையும் புத்தகங்களையும் வாசிக்கும்போது பகுத்தறிவு கொண்ட, தர்க்கரீதியான, உணர்வுமிகுந்த மனிதர்களாகவும் குடிநபர்களாகவும் நாம் மாறிவிடுவோம்.