Baarkavi Laabam Tharugiraal

பார்கவி லாபம் தருகிறாள்

தொழில் தர்மமும், நேர்த்தியும், அந்தத் தொழிலுக்கே உண்டான சில நுணுக்கங்களையும் பின்பற்றினால், எப்படிப்பட்ட நஷ்டத்திலிருக்கும் தொழிலையும் லாபம் கொழிக்கச் செய்யலாம். இழுத்து மூடுமளவு நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சிவவடிவேலுவின் ஹோட்டல் பார்கவியை நஷ்டத்திலிருந்து மீட்க சந்திரஜித் குப்தா என்ற பிசினஸ் மருத்துவர் டெல்லியிலிருந்து குருபுரத்திற்கு வருகிறார். அனைவரின் கூட்டு முயற்சியால் பார்கவி நஷ்டத்திலிருந்து மீட்கப்பட்டு லாபம் தரும் ஹோட்டலாக மாறுவதே இக்கதை.

- நா. பார்த்தசாரதி

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

பொருளடக்கம்

அத்தியாயம் - 1

பையன்கள் மேல் சிவவடிவேலுவுக்கு நம்பிக்கை இல்லை. அவருடைய அணுகுமுறைகள் பையன்களுக்கு அறவே பிடிக்கவில்லை. இருவருக்குமிடையே தகாறு முற்றி, மூத்தவன் தனியே போய்விட்டான். மூத்த மகன் தான் இப்படி என்றால் இளையவன் பாகவதர் தலையும் கிருதாவும் வைத்துக் கொண்டு பட்டி மண்டபம், கவியரங்கம் என்று அலைந்து கொண்டிருந்தான். மகள் சாது. வாயில் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். மகன்கள், மகள், மனைவி யாரையும் பெரியவர் நம்பவில்லை. பெரியவரை அவர்களும் நம்பவில்லை. ஒரு கூடை செங்கல்லும் பிடாரி என்பார் அவர்.

இதன் விளைவு? கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்து தொடங்கிய தொழில் முழுகிவிடும் போலிருந்தது. தொட்டதெல்லாம் நஷ்டப்பட்டது. ஆடிட்டர் எச்சரிக்கை செய்தார்:

“இதை இப்படியே விடக்கூடாது. நஷ்டம் பயங்கரமாக இருக்கிறது. திவாலாகி விடும். வாங்கின கடனுக்கும் முதலீட்டுக்கும் வட்டிக் கூடக் கட்ட முடியாமே இதை நடத்தறதிலே பிரயோசனமில்லே. ஏதாவது நடவடிக்கை உடனே எடுத்தாகணும்.”

பெரியவர் சிவவடிவேலுவுக்குக் கண்களைக் கட்டி நடுக்காட்டில் கொண்டு போய் விட்ட மாதிரி இருந்தது. விவசாயம், எஸ்டேட் நிர்வாகம் எல்லாம் அவருடைய குடும்பத்துக்குப் பரம்பரையாகப் பழக்கமானவை. ஹோட்டல் நிர்வாகம் புதிது. அந்த நிர்வாகத்துக்கு அவரும் அவருக்கு அந்த நிர்வாகமும் புரிபடவில்லை. முன்னே போனால் இழுத்தது. பின்னே போனால் உதைத்தது. சரிப்பட்டு வரவில்லை.

அவர் மகன்களில் மூத்தவன் தண்டபாணி அவரோடு கோபித்துச் சண்டை போட்டுக் கொண்டு தனியே போய் டில்லியில் உத்தியோகம் பார்க்கிறான். இளையவன் குமரேசன் பகல் எல்லாம் வீட்டில் படுத்துத் தூங்கிவிட்டு மாலையில் பட்டு மண்டபம், கவியரங்கம் என்று அலைந்து விட்டு அகாலத்தில் புத்தம் புதுக் கைத்தறித் துண்டுகளும், கசங்கிய மாலையும், இருபது முப்பது என்று கவரில் வைத்துக் கொடுக்கப்படும் அழுக்கு ரூபாய் நோட்டுக்களுமாக வீடு திரும்புகிறான். ஓட்டல் நிர்வாகத்துக்கு அவர்களால் ஒருவிதமான ஒத்தாசையுமில்லை. எதிலும் சந்தேகமும், அவநம்பிக்கையும் உள்ள அவரை நெருங்கவே அஞ்சினார்கள் அவர்கள் அவர் ஒரு தனித் தீவாக ஒதுக்கி விடப்பட்டிருந்தார்.

விவசாய சமூகத்திலிருந்து தொழில் சமூகத்துக்கு மாறிய காலகட்டத்தில் உச்சவரம்பு காரணமாக அதிக நிலங்களை விற்று வந்த பணத்தில் இருந்தும் மேற்கொண்டு கடனாக வாங்கிய தொகையிலிருந்தும் ஒருவழியாக ஓட்டல் பார்கவி போர்டிங் அண்ட் லாட்ஜிங்கைக் கட்டி முடித்துத் திறந்தும் ஆயிற்று. திறந்த பின்புதான் பிரசினைகளே ஆரம்பமாயின. நஷ்டமும் ஆரம்பமாயிற்று.

ஓட்டல் பார்கவி போன்ற ஒரு பெரிய ஓட்டலைத் தாங்கும் அளவிற்கு ஜமீன் குருபுரம் பெரிய ஊரும் இல்லை. ஆனால் அதன் கேந்திரத்தன்மை காரணமாக ஓர் ஓட்டலுக்கு அவசியமும் தேவையும் இருந்தன.

நாட்டில் அந்த வேளையில் உச்சவரம்புச் சட்டம் வர இருந்ததாலும் ஆடிட்டர் யோசனை சொன்னதாலும் தான் சிவ வடிவேலு இந்த முடிவை எடுத்தார். ஓட்டல் கட்டினார்.

ஜமீன் குருபுரத்திற்கு அருகே ஒரு மலைத் தொடரில் வரப் பிரசாதியான ஆஞ்சநேயர் கோயில் ஒன்று இருந்தது. அடிவாரத்தில் இருந்த பெரிய ஊரான குருபுரத்துக்கு வந்துதான் அங்கே செல்ல முடியும். மலையடிவாரத்திலிருந்து வளைந்து நெளிந்து சுற்றிச் சுற்றி மலை மேல் ஏறும் ‘காட்செக்‌ஷன்’ சாலையில் முப்பது கிலோமீட்டர் பயணம் செய்துதான் ஆஞ்சநேயரைத் தரிசிக்க முடியும். மலை மேல் தங்க வசதிகள் எதுவும் கிடையாது. குருபுரத்தில் வந்து தங்கித்தான் போயாக வேண்டியிருந்தது. மிளகாய், காய்கறி, நெல், ஏலக்காய் ஆகிய மொத்த வியாபாரத்துக்கான மண்டிகள் பல இருந்ததனால் கொள்முதலுக்காகத் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் அடிக்கடி வந்து போனார்கள். அவர்களுக்கும் ஒரு நல்ல ஓட்டல் தேவையாயிருந்தது. ஊரைச் சுற்றிலும் முந்திரிக் காடு. மலை மேல் ஏலம், கிராம்பு, ஜாதிக்காய், தேயிலை, காப்பி என்று வாசனைப் பொருள்களும் ஏற்றுமதி அயிட்டங்களும் விளைந்தன. பணப் புழக்கம் உள்ள பிரதேசமாகத்தான் இருந்தது.

பெரியவர் சிவவடிவேலுவுக்கும் மலை மேல் எஸ்டேட் இருந்தது. எஸ்டேட்டை அப்படியே வைத்துக் கொண்டு நிலங்களில் சட்டத்திற்கு அதிகமாக இருந்ததை விற்று, மேற்கொண்டு கடனும் வாங்கித்தான் ஓட்டல் பார்கவியைக் கட்டியிருந்தார். கொஞ்சம் தாராளமாகவே செலவழித்துக் கட்டி விட்டார்.

ஆனால், ‘போர்டிங்’ வகையிலும் நஷ்டம், ‘லாட்ஜிங்’ வகையிலும் நஷ்டம். என்ன செய்வதென்று புரியவில்லை. ஒரு விரக்தியில், கிடைத்த விலையை வாங்கிக் கொண்டு ‘பார்கவி’யை விற்று விடலாம் என்று கூட முடிவு செய்தார். மதுரையிலோ, கோவையிலோ, இப்படி ஓர் ஓட்டல் விலைக்கு வருகிறது என்றால் போட்டி போட்டுக் கொண்டு நான் முந்தி நீ முந்தி என்று வாங்க முன் வருவார்கள். குருபுரத்தில் அப்படி யாரும் வரவில்லை. நஷ்டத்தில் நடக்கிறது என்று வேறு பேராகி விட்டதால் பயந்து ஒதுங்கினார்கள். அருகில் வரவே அஞ்சினார்கள். அவரே தொடர்ந்து நடத்தியாக வேண்டி வந்தது.

இந்தப் பிரச்சினைக்குத் தானாகவும் தீர்வு காண முடியாமல், பிள்ளைகளுடைய ஒத்தாசையும் கிடைக்காமல் திண்டாடினார் சிவவடிவேலு. ஆடிட்டரிடம் போய் அழுது புலம்பாத குறையாக மன்றாடினார்.

“இந்த மாதிரி என்னன்னு புரியாமே நஷ்டத்திலே நடக்கிற தொழில்களைச் சரிப்படுத்தற வேலையைச் செய்யறதுக்கே டெல்லியிலே ஒருத்தர் இருக்கார். ‘சந்திரஜித் குப்தா’ன்னு பேர். சார்ட்டட் அக்கௌண்டெண்ட் மட்டுமில்லை. ஹாவர்டு யூனிவர்சிடியிலே எம்.பி.ஏ. பண்ணியிருக்கார். ‘பிஸினஸ் கிளினிக்’னு வச்சிருக்கார். தன்னையும் ‘பிஸினஸ் டாக்டர்’னு சொல்லுகிறார். தொழில் நிர்வாகத்திலே ‘ஸிக் இண்டஸ்ட்ரி ரெஸ்க்யூ மெத்தட்ஸ்’ (நோய்வாய்ப்பட்ட தொழில்களை மீட்கும் முறைகள்) என்று தனிப் பிரிவை மட்டும் ஆராய்ச்சி பண்ணிப் படிச்சிட்டு வந்திருக்கார். அவரு வந்து பார்த்து யோசனைகள் சொன்னப்புறம் எத்தனையோ நஷ்டப்பட்ட தொழில்கள் மீண்டும் லாபம் அடைஞ்சிருக்கு, பதினைஞ்சு நாள் அல்லது அதிகமாகப் போனால் ஒரு மாசம் நம்ம கூடவே தங்கினார்னா எங்கே கோளார்னு கண்டுபிடிச்சிடுவார். அவரை வரவழைக்கலாமா?” ஆடிட்டர் கேட்டார்.

ஆடிட்டர் சொன்ன விஷயம் கொஞ்சம் புதுமையாகவும் புரியாததாகவும் இருக்கவே சிவவடிவேலு யோசித்தார். வருகிறவர் எவ்வளவு செலவு வைப்பாரோ, என்ன கேட்பாரோ என்று எண்ணித் தயங்கினார்.

“ஆடிட்டர் சார்! எனக்கு என்னமோ இதெல்லாம் அவசியம்தானான்னு சந்தேகமா இருக்கு. ஆனால் நீங்க சொல்றப்போ நான் தட்டிச் சொல்ல முடியாது. பல வருஷமா எங்க குடும்ப வரவு செலவு உங்களுக்கு நல்லாத் தெரியும். நீங்க எது சொன்னாலும் அது என் நன்மைக்காகத்தான் இருக்கும்னு ஒப்புக்கறேன். ரொம்பச் செலவு இழுத்து விட்டுடாமப் பார்த்துக்குங்க. சிக்கனமா இருந்து லாபம் சம்பாதிக்க வழி என்னன்னு ஒருத்தனைக் கூப்பிட்டு யோசனைக் கேட்கப் போய் அதைக் கண்டுபிடிக்க அவனும் நாமுமாக ஊதாரிச் செலவு பண்ணின கதையா ஆயிடக் கூடாது” என்று கவலைப்பட்டார் சிவவடிவேலு.

“அப்படி எல்லாம் ஒண்ணும் ஆகாது. கவலைப் படாதீங்க. நான் இன்னிக்கே குப்தாவுக்கு லெட்டர் எழுதிடறேன். சீக்கிரமா அவனை வரவழைச்சிடலாம்” என்றார் ஆடிட்டர்.

அத்தியாயம் - 2

பிஸினஸ் டாக்டர் சந்திரஜித் குப்தாவுக்குச் சிவவடி வேலுவின் ஆடிட்டர் கடிதம் எழுதினார். மூன்றே நாட்களில் குப்தாவிடமிருந்து பதில் வந்துவிட்டது. சாதகமான பதில் தான்.

தான் அப்போது பம்பாயில் ஒரு ஸிக் இன்டஸ்ட்ரி அதாவது நொடித்து நோய்வாய்ப்பட்ட தொழிலைச் சரி செய்ய ஆப்ஸர்வேஷனுக்காகப் போய்க் கொண்டிருப்பதாகவும் இந்த மாதம் முழுவதும் அது சம்பந்தமாகச் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்றும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தான் குருபுரம் வர முடியும் என்றும் குப்தா பதில் எழுதியிருந்தான். தன்னோடு தன் மனைவியும் வரக்கூடும் என்று அவன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான். விமானப் பயண டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்யவும் கேட்டுக் கொண்டிருந்தான்.

“விமானத்திலேயா? ரொம்பச் செலவு ஆகுங்களே?” என்று இழுத்தார் சிவவடிவேலு.

சிவவடிவேலுவின் வெகுளித்தனத்தை ஆடிட்டர் வியந்தார். “வேற வழியே இல்லை. முழுக்க இரயில் பிரயாணமே பண்ணினால் பிரயாணத்திலேயே எட்டு ஒன்பது நாள் ஆகி விடும். குப்தா ரொம்ப பிஸி மேன். இன்னிக்குக் காலையிலே கல்கத்தா, மத்தியானம் அஹமதாபாத், மறுநாள் பம்பாய், அடுத்த நாள் டில்லின்னு அலையறவன். அவனோட வேலை அப்படி, நாம நேரே போய் அழைச்சிட்டு வரணும்” என்று ஆடிட்டர் வற்புறுத்தினார்.

“நாம எதுக்குப் போகணுங்க? மதுரையிலேர்ந்து அந்த ஆளையே ஒரு டாக்ஸி பிடிச்சுக் குருபுரம் வரச் சொல்லிறலாம். அல்லது என் டாட்டர் பார்கவி மதுரையிலே ஹாஸ்டல்லே தங்கிக் காலேஜ்லே படிக்குது. அது போய் அவங்களை ஏர் போர்ட்டிலே சந்திச்சு ஒரு டாக்ஸி பேசி இங்கே அனுப்பிடலாமே? இங்கேயிருந்து நாம போற ஒரு டிரிப் பெட்ரோலும், டயர் தேய்மானமுமாவது மிச்சம் ஆகுமே? இப்போ இருக்கிற நஷ்டத்திலே அதையாவது மிச்சப் படுத்தலாமே?”

ஆடிட்டருக்கு அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை. கல்ச்சர், மேனர்ஸ் இவற்றையெல்லாம் பற்றிச் சிவவடி வேலுவுக்கு எப்படிப் புரிய வைப்பதென்று தெரியாமல் ஆடிட்டர் அனந்த் திணறினர். “நீங்க அப்படிச் செய்வது நல்லா இருக்காதுங்க. நம்ம வேலையா டில்லியிலிருந்து வருகிற ஒரு விருந்தினரை நாமே போய் அழைச்சிட்டு வர்றதுதான் முறை.”

“அப்படி நீங்க நினைக்கிறதா இருந்தால் சரி. நான் என்ன சொல்றதுக்கு இருக்கு?” என்று வேண்டா வெறுப்பாக இணங்கினர் சிவவடிவேலு.

ஆனால் குப்தாவும் அவன் மனைவியும் மதுரை வருவதற்கு நான்கு நாட்கள் முன்னதாகவே அவர் மகள் சூட்கேஸும் கையுமாகக் குருபுரத்துக்கு வந்து சேர்ந்தாள். ஏதோ போராட்டம் காரணமாகக் கல்லூரியையும் ஹாஸ்டலையும் இரண்டு வாரங்களுக்கு இழுத்து முடிவிட்டார்களாம்!

“இப்போ அதுவும் நல்லதுதான். மிஸஸ் குப்தாவுக்கு உதவியாக இவளை இருக்கச் சொல்லிடலாம்” என்றார் ஆடிட்டர்.

துணைக்கும் உபசரணைக்கும் ஓர் ஆள் தேவைப்படுகிற அளவு இருந்தால், மிஸஸ் குப்தா இன்னும் என்னென்ன செலவு வைக்கப் போகிறாளோ என்று செலவைப் பற்றி எண்ணிக் கவலைப்படத் தொடங்கினர் சிவவடிவேலு, நடுவில் கல்லூரி மூடப்பட்டு மகள் ஊர் வந்ததில் அவருக்கு ஏகப்பட்ட வருத்தம். ‘போராட்டம் கீராட்டம் என்று அடிக்கடி படிப்புப் பாழாகிறதே?’ என்று கவலைப் பட்டார் அவர்.

குருபுரம் மிராசுதார் சிவவடிவேலு அதிகப் படிப்பறிவு இல்லாத ஒரு நாட்டுப்புறப் பணக்காரர். தழும்பேறிய கன்ஸர்வேடிவ் மனப்பான்மையும் கஞ்சத்தனமும் உள்ளவர். எதையும் துணிந்து செய்யாதவர். தயங்கித் தயங்கி அடி எடுத்து வைப்பவர். பத்துக் காசு செலவழிப்பதற்கு ஐம்பது ரூபாய் பெறுமானமுள்ள கவலையைப் படுகிறவர்.

தந்தையின் முதலீட்டில் அவரோட கூட இருந்து தொழில் நடத்தாமல் மூத்த மகன் தண்டபாணி, தனியே உத்தியோகத்துக்குப் புறப்பட்டுப் போனது இதனால்தான் என்பது ஆடிட்டருக்கே நன்றாகத் தெரியும்.

இப்படி ஒரு குடும்பத்தில் பிறந்தும், இரண்டாவது பிள்ளை குமரேசன், ‘முதலாளித்துவத்தின் முதுகெலும்பை முறித்து’ - என்று பட்டி மன்றங்களில் முழங்கிக் கொண்டிருந் தான். பெண் ‘பார்கவி’ மட்டும் சாதுவாய் அப்பாவுக்கு அடங்கிய குழந்தையாகக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந் தாள். சிவவடிவேலுவுக்குப் பார்கவி செல்லப் பெண். அதனால் தான் தாம் கட்டிய ஓட்டலுக்குப் ‘பார்கவி' என்றே பெயர் சூட்டியிருந்தார். “குடும்ப நிர்வாகம், சொத்து, எஸ்டேட் நிர்வாகம் இவைகளைப் பையன்களிடம் பிரித்து விட்டு விட்டு நிம்மதியாக மனைவியோடு காசி, இராமேஸ்வரம் என்று க்ஷேத்ராடனம் சென்று வாருங்கள்! உங்கள் மனசு நிம்மதியா யிருக்கும்,” என்று ஆடிட்டர் அனந்த் பல முறை இதமாக எடுத்துச் சொல்லியும் சிவவடிவேலு அதைக் காது கொடுத்துக் கேட்டதே இல்லை. எல்லாவற்றையும் தாமே கட்டிக் கொண்டு அழுதார். சுமைகளைத் தாங்கினார்.

“இந்நாளில் உங்களுடைய அணுகுமுறைகள் கிழடுதட்டிப் போனவை. ‘ஆண்டே!’ என்று விவசாயக் கூலி வாசற்படிக்குக் கீழே பத்தடி விலகி நின்று கை கூப்பிய காலத்துப் பண்ணையார் மனப்பான்மையோடு இன்று தொழிலை ஆள முடியாது. நிறைய விட்டுக் கொடுத்துப் பழகும் தோழமை இன்று வேண்டும்,” என்று சொற்பொழிவுகளில் பேசுவது போலவே அவரிடமும் இளைய மகன் குமரேசன் ஒருநாள் உணர்ச்சி வசப்பட்டுப் பேசியிருந்தான்.

“உன்னை மகனாகப் பெத்த குற்றத்துக்காக நீ இந்த வீட்டிலே இருக்கிறதைச் சகிச்சுக்கறேன். ஆனால் நீ என்னை மாத்தமுடியாது” என்று சிவவடிவேலு கறாராக அவனுக்குப் பதில் சொல்லியிருந்தார்.

இப்படி மூத்த மகன், இளைய மகன் இருவருமே இரண்டு வேறு கோணங்களில் நவீனமான சிந்தனைகள் உள்ளவர்களாக இருந்தும் அவர்களை நம்பி எதையும் கொடுக்காத காரணத்தாலேயே அவர்களுடைய சிந்தனை துருப்பிடித்துப் போகும்படி செய்துவிட்டார் சிவவடிவேலு. மூத்தவன் விழித்துக் கொண்டான். அந்த வீட்டிலேயே இருந்து சீரழியாமல் தனக்குப் பிடித்த ஓர் அழகிய படித்த ஏழைப் பெண்ணைத் தேடிக் கல்யாணம் பண்ணிக் கொண்டு டில்லியில் போய் உத்தியோகம் பார்த்தான். அவனது திருமணம் கூட அவரது விருப்பத்துக்கு மாறாகத்தான் நடந்தது. சின்னவன் தூங்குவதற்கு மட்டும் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தான். மகள் பார்கவிக்கும் அவருக்கும் சண்டையோ வாக்குவாதமோ ஏற்படாததற்குக் காரணம் அவள் அப்பாவை எதிர்த்துப் பேசுவதில்லை. கடைக்குட்டியானதால் அவளிடம் அவருக்குப் பிரியமும் அதிகம், பாசமும் நிறைய இருந்தது.

குடும்ப ஆடிட்டர் அனந்த் அந்தக் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமாக வேண்டியவர், என்றாலும் சிவவடிவேலுவைப் பற்றி அவருக்கும் உள்ளூர விமரிசனங்கள் உண்டு. பட்டும் படாமலும்தான் இருப்பார். ஆனால் ஒட்டல் பார்கவி விஷயத்தில் அவரால் அப்படி இருந்துவிட மூடியவில்லை. காரணம், அது அவர் கூறிய யோசனைப்படி கட்டப்பட்டது.

ஆடிட்டர் அனந்த், சிவவடிவேலு, அவர் மகள் மூவரும் மதுரை விமான நிலையத்தின் அரைவல் லவுன்ஜில் குப்தாவையும் திருமதி குப்தாவையும் வரவேற்கக் காத்திருந்தார்கள். விமானம் தரையிறங்க இன்னும் அரைமணி நேரம் இருந்தது. ஆடிட்டர் வற்புறுத்தியதால் வாங்கப்பட்ட இரண்டு மல்லிகை மாலைகள் தயாராயிருந்தன.

“மாலை எல்லாம் எதுக்கு? நாம நஷ்டத்திலே சிரமப்பட்டுகிட்டிருக்கோம்னு வர்றவனுக்குப் புரியட்டுமே? மாலை கீலைன்னு தடபுடலாப் பண்ணிட்டம்னு செழிப்பா இருக்கோம்னு நினைச்சுடப் போறாங்க” என்றார் சிவவடிவேலு.

ஆடிட்டர் இதைக் கேட்டுச் சிரித்தார். சிவவடிவேலுவின் தழும்பேறிப்போன கட்டுப்பெட்டித்தனத்தைப் போக்கவே முடியாது போலிருந்தது.

“கஷ்ட நஷ்டங்கள் வேறே. கர்டஸி வேறே. நாம நஷ்டப் படறோம்கிறதுக்காக இருபத்து நாலு மணி நேரமும் அழுது கிட்டே இருக்கணும்னு அவசியம் இல்லே. நாமும் சந்தோஷ மாயிருக்கணும், அடுத்தவங்களையும் சத்தோஷப்படுத்தணும்” என்றார் ஆடிட்டர். இப்படி ஒவ்வொன்றிலும் சிவவடிவேலுவை ஒழுங்குபடுத்தித் தயாராக்க வேண்டியிருந்தது.

அத்தியாயம் - 3

ஆறடி உயரத்துக்கு வாட்ட சாட்டமாய்க் கம்பீரமாகத் தோற்றமளித்த குப்தாவைப் பார்த்ததும் சிவவடிவேலுவுக்கு ஒருவகைத் தாழ்வு மனப்பான்மையே உண்டாகி விட்டது. அவன் மனைவி பச்சைக் கிளி போல் அழகாயிருந்தாள். பஞ்சாபிப் பெண்கள் போல குர்த்தா - சூரிதார் அணிந்திருந்தாள். இருவருமே சிரிக்கச் சிரிக்கப் பேசினார்கள். கலகலப்பாகப் பழகினார்கள். புதியவர்கள், அன்னியர்கள் - வேற்று மொழி வேற்றுப் பிரதேசக்காரர்கள் என்ற சங்கோசங்களையும் தற்செயலாகக் கடப்பதுபோல் இயல்பாகத் தவிர்த்து விட்டுப் பழகினார்கள். ஆடிட்டரும், அவர் மகளும் அத்தனை வேகமாக இல்லாவிட்டாலும் சிறிது நேரத்திலேயே அந்த மெல்லிய உணர்ச்சிக் கோடுகளைத் தாண்டிவிட்டுச் சுபாவமாகக் குப்தாவுடனும் திருமதி குப்தாவுடனும் பழகத் தொடங்கி விட்டார்கள். கிணற்றுத் தவளையாகவே இருந்து விட்ட சிவவடிவேலு தான் திணறினர். சிரமப்பட்டார். ஒட்டாமல் கஷ்டப்பட்டார். ஒதுங்கி ஒதுங்கி நின்றார்.

ஒரு பட்டிக்காட்டான் யானையைப் பார்த்தது போல அந்தப் புதியவர்களை மருள மருளப் பார்த்தார். மதுரையிலி ருந்து குருபுரத்திற்குப் புறப்படுமுன் எங்காவது அவர்களுக்குக் காப்பி சிற்றுண்டி அருந்த ஏற்பாடு செய்ய வேண்டுமென்றார் ஆடிட்டர்.

“அதுக்கென்ன? நம்ம கான்சா மேட்டுத் தெரு ராயர் தண்ணீர்ப் பந்தலிலே பிரமாதமா இட்லி, வெண்பொங்கல் ஆமவடை எல்லாம் கிடைக்கும்” என்றார் சிவவடிவேலு.

இதைக் கேட்டு ஆடிட்டருக்குச் சிரிப்பு வந்தது. ராயர் தண்ணீர்ப் பந்தல் என்பது நவீன ஓட்டல் நாகரிகம் பரவு வதற்கு முன் காலத்து மதுரையில் ஏற்பட்டிருந்த ஒரு பத்துக் கடை. அங்கே உட்கார டேபிள் நாற்காலி கிடையாது. நின்றபடியே இலையைக் கையில் ஏந்தி ராயரிடம் வாங்கிச் சாப்பிட்டு விட்டுப் பணம் கொடுத்துவிட்டு வரவேண்டும். எல்லாமே ராயர்தான்.

குப்தாவுக்குத் தாம் கடிதம் எழுதி வரவழைத்திருந்ததால் அவனுடைய செளகரியங்களைக் கவனிக்கும் பொறுப்புத் தமக்கு இருப்பதாக ஆடிட்டர் எண்ணினார். சிவவடிவேலு ஹில்டன் ஓபராய்க்குச் சமமாக வர்ணித்த அந்த ராயர் தண்ணீர்ப் பந்தலுக்கு அவரது மகன் குமரேசன் போன்றவர்கள் சூட்டியிருந்த செல்லப் பெயர் ‘கையேந்தி பவன்’ என்பது.

குருபுரம் மிராசுதார் சிவவடிவேலுவின் ‘நோய்கள்’ என்னென்ன என்று ஆடிட்டர் அனந்துக்கே நன்றாகத் தெரியும் என்றாலும் தம்மைப் போல் பல ஆண்டுகளாக அவரோடு நெருங்கிப் பழகுகிற ஒருவரால் அவரை மாற்ற முடியாது என்பதால்தான் பிஸினஸ் டாக்டர் என்ற பெரிய பெயரெடுத்த ஆள் ஒருவரை டில்லியிலிருந்து வரவழைத்திருந்தார். நில உச்சவரம்பிலிருந்து சொத்துக்களையும் பணத்தையும் காப்பாற் றிக் கொள்ள அவசர அவசரமாக ஓட்டல் ‘பார்கவி’யை நவீனமாகக் கட்டி விட்டார். ஆனால், அதில் நவீனமான ஏற்பாடுகள் அறவே இல்லை. நாட்டுப்புறத் தன்மையே, அதிகமாக இருந்தது அங்கே.

ஜமீன் குருபுரம் செங்கழுநீர் விநாயகர் கோயில் தெருவில் இருக்கும் ‘ஆதிகாலத்து அசல் சைவாள் போஜன சாலை’ என்ற அழுக்கடைந்த போர்டுடன் கூடிய - காலையில் வெந்நீர்ப் பழையதும், வடுமாங்காய் ஊறுகாயும், மாலையில் இடியாப்பமும் தேங்காய்ப் பாலும் கிடைக்கிற ஒன்றாக ஓட்டல் பார்கவி இருக்க முடியாது. கூடாது என்பது ஆடிட்டரின் திடமான கருத்து. சிவவடிவேலுவின் பிள்ளைகளும் ஆடிட்டரைப் போலவே நினைத்தார்கள். ஆனால் சிவவடிவேலு மட்டும் பழையபடியே இருந்தார். ‘பார்கவி’யில் பயங்கர நஷ்டம் வந்தது. தாம் படு சிக்கனமாக எல்லாக் காரியங்களையும் பார்த்துப் பார்த்துச் செய்தும் எப்படி நஷ்டம் வருகிறது என்று அவருக்குப் புரியவில்லை.

நஷ்டத்தின் காரணம் புரியாமல் குழம்பினார் சிவ வடிவேலு.

அங்கேயே சாப்பாடும் தங்க இடமும் கொடுத்து மாதம் பத்துப் பதினைந்து ரூபாய் ரொக்கச் சம்பளத்தில் தான் பரிமாறுகிறவர்கள், மேஜை துடைக்கிறவர்கள் அமர்த்தியிருந்தார். மலையடிவாரத்து ஊராகையினால் விறகும், கரியும் படு மலிவாகக் கிடைத்தன. அதனால் ‘காஸ்’ அடுப்புச் செலவே இல்லை. தங்குகிறவர்களைத் தவிர ரெஸ்டாரெண்ட்டில் வந்து சாப்பிடுகிறவர்களுக்குப் பில் கூடக் கிடையாது. ரெண்டு ரூபாய் இருபது காசு, என்று ஏலம் போடுகிற குரலில் பரிமாறுகிற பையன்களே சொல்லி விடுவார்கள். ஸ்டேஷனரி அச்சிடுதல் செலவுகளே குறைவு.

ஓட்டல் பார்கவியின் ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் அவரே முன்னின்று கவனித்ததால் ரொம்பச் சிக்கனமாகவே எல்லாம் நடந்தது.

தம்மிடம் வேலை பார்த்த பழைய விவசாயிகள் வசிக்கும் பட்டி தொட்டிகளிலிருந்து அதிகம் படிப்பு வராமல் வீட்டோடு தங்கிப் போன பையன்களை மூன்று வேளைச் சாப்பாடு, கையில் ரொக்கம் என்று பேசி மிக மிகக் குறைந்த சம்பளத்துக்கு ரூம் பாய்ஸ் ஆகவும், சர்வர்களாகவும் நியமித்திருக்கும் தைரியத்தில் மாதா மாதம் சுளையாக லாபம் எதிர்பார்த்தார் அவர். ஆனால் லாபம் வராததோடு நஷ்டம் வந்தது.

அங்கே நகர்ப்புறங்களில் த்ரீ ஸ்டார், ஃபைவ் ஸ்டார் என்று ஒட்டல்களுக்கு ஸ்டார் வேல்யூ அளித்து நடத்துகிறவர்கள் பணத்தை வாரி இறைக்கும் ஓட்டல்கள் கூட லாபத்தை அள்ளித் தருகையில் தாம் சிக்கனமாகவே நடத்தும் ஓட்டல் ஏன் லாபம் தரவில்லை என்பது அவருக்குப் புரியாத புதிராகவே இருந்தது. குழம்பினார். இராப்பகல் தூக்கமின்றித் தவித்தார்.

அவரோடு முதலிலேயே கருத்து வேறுபாடு கொண்டு ஒதுங்கி விட்டதால் மகன்கள் இதில் அவருக்கு உதவ முன் வரவில்லை. மகள் படிக்கிற வயதில் இதையெல்லாம் பற்றிக் கவலைப்பட முடியாது. செல்லப் பெண்ணாய் அப்பாவிடம் நல்ல பேர் வாங்கினாள்.

ஆடிட்டர் அனந்துதான் சிவவடிவேலுவின் ஃப்ரெண்டு ஃபிலாஸபர், கைடு ஆக மீதியிருந்தார். ஆனால் அவர் சொல்வதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஏற்கவும் சிவவடிவேலு தயாராயில்லை. ஆடிட்டர் கூறுவதையே சிவவடிவேலு கேட்டு நடக்கத் தயாராயிருப்பார் என்று தெரிந்திருந்தால் டில்லியிலிருந்து ‘வியாபார வைத்தியர்’ அல்லது தொழில் நலிவுச் சிகிச்சை நிபுணரான குப்தாவையும் அவன் மனைவியையும் இத்தனை அரும்பாடுபட்டு வரவழைத்து இருக்க வேண்டியதில்லை. நிறையப் பணச்செலவு வைத்து பாஷையும் பழக்க வழக்கமும் புரியாத வெளி ஆள் ஒருவனை வரவழைத்துத் தான் சிவவடிவேலுவுக்குச் சிகிச்சையளித்தாக வேண்டும் போலிருந்தது. நாட்டு வைத்தியமும், கை மருந்துகளும் அவரைக் குணப்படுத்தப் போதாதென்று ஆடிட்டர் விமானத் தில் ‘மருந்தை’ வரவழைத்திருந்தார். டில்லியிலிருந்து வரவழைத்திருந்தார்.

பாண்டியனில் முதலில் ஃப்ரூட் ஜூஸ், அப்புறம் ஆரஞ்சு மர்மலேட், கார்ன் ப்ளேக் மில்க், பிரட் டோஸ்ட், ஸ்கிராம்பிள்டு எக், காப்பி என்று குப்தாவும், மிஸஸ் குப்தாவும் ஆர்டர் செய்தார்கள். ஆடிட்டரும் அதே அயிட்டங்களைச் சொன்னார். பார்கவி மசால் தோசையும் காப்பியும் என்றாள். சிவவடிவேலு வெறும் காப்பி மட்டும் போதும் என்று தம்மைச் சிக்கனமாக நிறுத்திக் கொண்டார். பில்லைப் பற்றிய பயம் அவருக்கு.

மொத்தமாக பில் சர்வீஸ் சார்ஜ் உட்பட 167 ரூபாய் எழுபது காசு வந்தது. ஐந்து ரூபாய் டிப்ஸ் கொடுத்தார் ஆடிட்டர். பில்லை ஆடிட்டர்தான் கொடுத்திருந்தார் என்றாலும் பின்னால் மொத்தச் செலவுக் கணக்கையும் சிவவடிவேலுதான் ஏற்க வேண்டியிருக்கும்.

“என்ன மிஸ்டர் அனந்த்? மிஸ்டர் சிவவடிவேலு ஏன் வெறும் காப்பியோடு நிறுத்திக் கொண்டார்? அவருக்குப் பசி இல்லையா?” என்று குப்தா ஆங்கிலத்தில் ஆடிட்டரைக் கேட்க, ஆடிட்டர் ஒரு கணம் தயங்கி யோசித்து, “ஹி இஸ் ஆல்வேஸ் எ புவர் ஈட்டர்...” என்று சமாளித்தார். வேறு என்ன சொல்வது?

ஆனால் அதே சமயத்தில் மிஸஸ் குப்தா தணிந்த குரலில் பார்கவியைச் செல்லமாகக் கடிந்து கொண்டாள். நீ எக், ஃபிஷ் எல்லாம் சாப்பிடணும் அம்மா! இருபது வயசுக்கு மேல் என்கிறாய்! ஆரோக்கியமான வளர்ச்சியே இல்லையே. எலும்பும் தோலுமாகச் சோனிப் பெண்ணாய்க் காட்சியளிக்கிறாயே? இதே பதினெட்டு இருபது வயசில் வடக்கே ஒரு பஞ்சாபிப் பெண் பளபளவென்று அரபிக் குதிரை மரதிரி வாளிப்பாய் மின்னிக் கொண்டிருப்பாள். நாலைந்து வாலிபப் பையன்கள் அவள் பின்னால் பைத்தியமாய்ச் சுற்றிக் கொண்டிருப்பான்கள். நீ என்னடா என்றால்... நோயாளிப் பெண் மாதிரி இருக்கிருயே?” என்று கூறிக் கண்களைச் சிமிட்டினாள். மேலும் கிண்டலில் இறங்கினாள். “உங்கப்பா பார்கவின்னு பேர் வச்ச நீயும் ஆரோக்கியமாயில்லே, உன்னைப் போலவே பார்கவின்னு பேர் வைக்கப்பட்ட ஓட்டலும் ஆரோக்கியமா இல்லை. ரெண்டையுமே சரிப்படுத்தியாகணும்.”

பார்கவியின் முகம் சிவந்து அவள் வெட்கப்பட்டாள்.

இந்தக் குப்தாவும் இவன் மனைவியும் எப்படி பார்த்த மறு வினாடி சொந்த மனிதர்களிடம் பழகுகிற மாதிரி அன்னியர்களிடம் பழகி ஒட்டிக் கொண்டு உறவாட முடிகிறது என்ற வியப்பிலிருந்து சிவவடிவேலுவால் இன்னும் மீளவே முடியவில்லை.

அவர்கள் பாண்டியனில் சிற்றுண்டி காப்பியை முடித்துக் கொண்டு காரில் குருபுரம் புறப்பட்டார்கள். பிரயாணத்தின் போதே அந்த ஊர் சுற்றுப்புறம் விவசாய நிலைமை பற்றி எல்லாம் ஆடிட்டர் குப்தாவுக்கு விவரித்துக் கொண்டு வந்தார். சிவவடிவேலு எப்போது எந்த நிர்ப்பந்தம் காரணமாக நிலங்களை விற்று ஓட்டலில் முதலீடு செய்ய நேர்ந்தது என்பதையும் விவரமாகக் கூறினார்.

“எங்கு பார்த்தாலும் பச்சப்பசேல் என்றிருக்கிறது. இயற்கை அழகும் ஓசை ஒலிகளற்ற, நாய்ஸ் பொல்யூஷன் இல்லாத அமைதியும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. இந்த மாதிரிச் சூழ்நிலையில் மலையடிவாரத்தில் ஓர் ஓட்டல் இருந்தால் அது ஸ்விட்ஜர்லாந்தில் தங்கின மாதிரிச் சுகமளிக்கக் கூடிய விஷயம். ‘ஹாலிடே ரிஸார்ட்’ என்று இப்படி இடங்கள் ஐரோப்பாவில் பிரமாதப்படுகின்றன. ஹனிமூன் வருகிற இளம் தம்பதிகள் வரலாம். ‘வீக் எண்ட்’ டை என்ஜாய் பண்ண வருகிறவர்கள் இந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கலாம், சினிமா வில் கிராமாந்தர - ரூரல் அவுட்டோருக்காக - லொகேஷன் தேடி வருகிறவர்கள் இங்கே வரலாம். எவ்வளவோ வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. அப்படி இருந்தும் உங்கள் கிளையண்ட் சிவவடிவேலு இங்கு ஒரு நவீன ஓட்டலை நஷ்டத்தில் நடத்துவது வேடிக்கைத்தான். நீங்கன் மட்டும் ஒத்துழைத்தால் எல்லாம் ஸ்டெரைட் பண்ணிவிடுவேன்” என்று உறுதியாகச் சொன்னான் குப்தா.

அவன் ஆங்கிலத்தில் கூறிய இந்த விவரங்களை அருகே இருந்த சிவவடிவேலுவுக்குத் தமிழில் சவிஸ்தாரமாக மொழி பெயர்த்துச் சொன்னார் ஆடிட்டர். உடனே சரிப்படுத்தக் குப்தா ஏதாவது மந்திரவாதியா என்ன என்று ஆச்சரியப் பட்டார் சிவவடிவேலு.

அத்தியாயம் - 4

குருபுரத்திற்குள் நுழைந்ததும் கார் நேரே சிவவடிவேலுவின் பங்களாவிற்குள் போயிற்று.

ஆடிட்டர் அனந்த், “இங்கேதான் நீங்கள் இருவரும் தங்கப் போகிறீர்கள். இது மிஸ்டர் சிவவடிவேலுவின் பங்களா... அவருடைய மகள் பார்கவி உங்கள் தேவைகளைக் கவனித்துக் கொள்வாள்” என்று குப்தாவிடம் சொன்னார்.

குப்தா அதை ஏற்கவில்லை. உடனே மறுத்து விட்டான்.

“நோ... நோ... நான் இங்கே தங்கறதிலே அர்த்தமே இல்லை. ஆன் த ஸ்பாட் ஸ்டடி பண்ணனும்னா நான் ஓட்டில் பார்கவியிலேயே தங்கியாகணும்” என்றான் அவன்.

ஓட்டல் பார்கவியில் அவனுக்கு வேண்டிய செளகரியங்களும் உபசரணையும் கிடைக்குமா என்று யோசித்துத் தயங்கினார் ஆடிட்டர்.

பார்கவியில் அங்கே மானேஜர் முதல் மேஜை துடைக்கிறவன் வரை யாருக்கும் ஆங்கிலமோ இந்தியோ சுட்டுப் போட்டாலும் ஒரு வார்த்தை கூட வராது.

இதற்கிடையே திருமதி சிவவடிவேலு, “வாங்க ஐயா! வாங்கம்மா” என்று எதிர்கொண்டு இருவரையும் வர வேற்றாள்.

“மிஸ்டர் குப்தா ஷி இஸ் மிஸஸ் சிவவடிவேலு. இவள் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் நல்வரவு கூறுகிறாள்,” என்று குப்தாவிடம் கூறினார் ஆடிட்டர்.

சந்திரஜித் குப்தாவும் திருமதி குப்தாவும், ‘நமஸ்தேஜீ’ என்று அந்தம்மாளைக் கைகூப்பி வணங்கினர்.

உடன் வந்த பார்கவி மாடியில் அவர்களுக்கான விருந்தினர் அறையைத் தயார்ப் படுத்துவதற்குப் போயிருந்தாள். ஆடிட்டருக்குத் தர்மசங்கடமாயிருந்தது. திருமதி சிவவடிவேலுவுடன் அவர்களை விட்டு விட்டுப் போகலாமென்றால் மூவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் உட்கார்ந்திருக்க வேண்டும். சிவவடிவேலுவிடம் விட்டுச் செல்வதென்றாலும் அதே கதிதான். தானோ, பார்கவியோ குப்தா தம்பதிகளுடன் கட்டாயமாக உடன் இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை இப்போது ஆடிட்டர் உணர்ந்தார். பார்கவியைக் கூப்பிட்டு அவள், அவளுடைய அம்மா, குப்தா தம்பதிகள் நால்வரையும் வீட்டு முன் ஹாலில் உட்கார வைத்துவிட்டு சிவவடிவேலுவை அழைத்துக் கொண்டு பங்களா முகப்பில் இருந்த தோட்டத்துக்கு ஆடிட்டர் வந்தார்.

“அவன் இங்கே தங்க மாட்டானாம். பார்கவியிலே தங்கினால்தான் அதன் பிரச்சினைகளை ஸ்டடி பண்ண முடியுமாம்.”

“அடி ஆத்தாடி! அங்கே சரிப்பட்டு வராதே. இங்கே தங்கிக்கிட்டுப் போய்க் கவனிக்கட்டுமே?”

“இல்லே! அவன் அப்படிச் செய்ய ஒத்துக்க மாட்டான்னு தோணுது. அங்கேயே மாடியில் நல்ல டபிள் பெட் ரூம் பார்த்து ஒண்ணு குடுத்துடுங்க.”

சிவவடிவேலு கையைப் பிசைந்தார். அவர் முகத்தில் பதற்றம் தெரிந்தது. வியர்த்தது.

“அப்ப ஒண்ணு செய்யலாம். இவங்க இங்கயே கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கட்டும். அதுக்குள்ள நாம ரெண்டு பேரும் போயி ஒரு ரூமை ஒழுங்கு பண்ணிட்டு வந்திருவோம்" என்றார் சிவவடிவேலு.

அவர் பதறுவதிலிருந்து பார்கவியில் குப்தா தங்குவதற்கு ஏற்ற தரத்தில் ரூம்கள் எதுவும் இராது என்று புரிந்தது. திறப்பு விழாவுக்குப் பின் ஆடிட்டர் இரண்டு வஷருங்களாக அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை. சிவவடிவேலு கொடுத்த கணக்கு வழக்கு விவரங்கள் சிட்டைகள், டேபுக், லெட்ஜர்களிலிருந்து பேலன்ஷீட் போட்டுக் கொடுத்ததோடு சரி.

ஆனால் இப்போது போய்ப் பார்த்தால் உண்மை நிலை பரிதாபமாயிருந்தது. வாஷ்பேசின் உடைந்து போய்ச் சில ரூம்கள், கண்ணாடி உடைந்து சில ரூம்கள். லெட்ரீன் பீங்கான் உடைந்து சில ரூம்கள். ஜன்னல் கொக்கி உடைந்து சில ரூம்கள் என்று தாறுமாறாகி இருந்தன.

வெளியூர் ஆட்கள் அதிகம் வராததாலும் அக்கம் பக்கத்துக் கிராமத்து ஆட்கள் தங்கியதாலும் அறைகளை நாற அடித்திருந்தார்கள். சுவரெல்லாம் ஒரே குங்குமக் கறை. மூலைகளில் தாம்பூலம் போட்டுத் துப்பிய வெற்றிலைச் சாற்றுக் கறை, ஒட்டடையும் நூலாம்படையும் காடு மண்டியிருந்தன. அறைக்குள் புகை படிந்திருந்தன. இருந்தும் எப்படியோ சிரமப்பட்டு மலைத் தொடரைக் காண்கிற மாதிரி வியூ இருந்த ஒரு காற்றோட்டமான அறையைச் சுத்தம் செய்து ஒழுங்கு படுத்திக் குப்தாத் தம்பதியினருக்குத் தயார்ப்படுத்தினர்கள்.

மிராசுதார் சிவவடிவேலுவுக்குச் சொந்தமாக இருந்த ஓர் ஐம்பது ஏக்கர் தென்னந் தோப்பில் நடுவாக அந்த ஓட்டல் கட்டப்பட்டிருந்தது. ஊரிலிருந்து கொஞ்சம் ஒதுக்குப்புறமாக இருந்தது. இயற்கையழகு கொஞ்சும் இடமாக இருந்ததால் ஓர் ஓட்டலுக்கு ஐடியலான லட்சணங்கள் கொண்டிருந்தும் சரியாக மெயிண்டெயின் பண்ணாமல் கெட்டிருந்தது, சீரழிந்து போயிருந்தது.

இப்படி இங்கே குப்தா தம்பதிகளுக்கு அறையைச் சுத்தம் செய்து தயாராக்க வேண்டியிருந்ததால் அவர்கள் நீராடி உடை மாற்றிப் பகலுணவை முடிக்கச் சிவவடிவேலுவின் பங்களாவிலேயே தற்காலிகமாகத் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. குப்தா தயக்கத்துக்கும் ஆட்சேபணைக்கும் பின்பே தற்காலிகமாக அதற்கு இணங்கினான்.

“மிஸ்டர் குப்தா! இன்று பிற்பகலில் நீங்கள் விரும்பு கிறபடி ஓட்டல் பார்கவியிலேயே தங்கிக் கொள்ளலாம். வீடு தேடி வந்தவர்களை ஒருவேளை சாப்பிடச் சொல்லாமல் அனுப்ப முடியாது என்று திருமதி சிவவடிவேலு பிடிவாதம் பிடிக்கிறாள். அந்தம்மாளுடைய வேண்டுகோளுக்காகவாவது நீங்கள் இன்று பிற்பகல் வரை இங்கே வீட்டில் தங்கியாக வேண்டியது அவசியம்” என்று மன்றாடி ஆடிட்டர் குப்தாவைச் சம்மதிக்க வைக்க வேண்டியதாயிற்று.

“மரணப்படுக்கையில் சாகக் கிடக்கிற ஒரு நோயாளிக்கு வைத்தியம் செய்ய வருகிற டாக்டர் நடுவழியில் தங்கவோ ஓய்வு எடுக்கவோ, உபசரணைகளை ஏற்கவோ முடியாது. நோயாளியை எவ்வளவு விரைந்து காப்பாற்ற முடியுமோ அவ்வளவு விரைந்து காப்பாற்றுவதே அவரது முதல் வேலையாக இருக்க வேண்டும். எனக்கும் அது பொருந்தும். எனது நோயாளியை நான் முதலில் அட்டெண்ட் செய்து தீரவேண்டும். மற்றதெல்லாம் அப்புறம்தான்” என்று கறாராக வாதித்தான் குப்தா. ஆடிட்டிருக்கும் அவன் சொல்வது நியாய மென்றே பட்டது.

ஆனால் குப்தா வைத்தியம் செய்ய வேண்டிய நோயாளி ஓட்டல் பார்கவியா, அல்லது மிஸ்டர் சிவவடிவேலுவா என்பதைத்தான் ஆடிட்டரால் தீர்மானமாகத் தெரிந்து கொள்ள முடியாமல் இருந்தது.

ஓட்டல் பார்கவி என்ற தாவர ஜங்கம சொத்துக்கு மருந்து கொடுத்து வைத்தியம் செய்ய முடியாது. சிவவடிவேலுவோ மருந்து சாப்பிட மறுத்து அடம் பிடிக்கும் முரட்டுக் குழந்தை போன்றவர். என்ன செய்வது?

குப்தா எவ்வளவுக்கெவ்வளவு ஓட்டில் பார்கவியின் ஆரோக்கியக் குறைவைப் பற்றிக் கவலைப்பட்டானோ, அவ்வளவுக்கவ்வளவு திருமதி குப்தா குமாரி பார்கவியின் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்பட்டாள். அவளுக்குச் சிவவடிவேலுவின் மகள் பார்கவியை மிகவும் பிடித்து விட்டது.

“இந்த வயசிலே நீ இப்படி நோயாளித் தோற்றத்தோடு முடங்கிக் கிடக்கக் கூடாதடி பெண்ணே! புள்ளிமான் போல் உற்சாகமாகத் துள்ளித் திரிய வேண்டும். பாலோடு காட்லிவர் ஆயில் கலந்து சாப்பிடு. சிக்கன் எஸென்ஸ் அல்லது சூப் எடுத்துக் கொள். எக்ஸர்ஸைஸ் பண்ணு ஸ்லிம்மா இருக்கணும். அதோட அழகா லட்சணமாவும் இருக்கணும். நாலு பேரோட கலகலப்பா சிரிச்சுப் பேசப் பழகணும். தலைக்கு ‘எக்’ ஷாம்பு யூஸ் பண்ணு. இன்ன சோப்பு ஃபேர் காம்ப்ளெக்ஷன் தரும்,” என்றெல்லாம் சொந்தப் பெண்ணுக்குச் சொல்வது போல் சொல்லிக் கொண்டிருந்தாள் திருமதி குப்தா. பார்கவிக்கு அவளையும் அவளுக்கு பார்கவியையும் ரொம்பவும் பிடித்துப் போயிற்று.

குப்தாவும், திருமதி குப்தாவும் ஒட்டலுக்குப் போய்த் தங்கிய பின்பும் பார்கவி பெரும் நேரத்தைத் திருமதி குப்தாவுடனேயே செலவழித்தாள். இரவில் தூங்கும் நேரத் துக்கு மட்டும்தான் வீட்டுக்கு வந்தாள் அவள்.

பார்கவி மலைமேலிருந்த ஆஞ்சநேயர் கோவிலுக்குத் திருமதி குப்தாவை ஒருநாள் அழைத்துச் செல்ல விரும்பினாள். ஆஞ்சநேயர் டெம்பிள், அனுமார் டெம்பிள் என்று சொல்லிப் பார்த்தும் அது என்ன கோவில் என்று குப்தாவின் மனைவிக்குப் புரியவே இல்லை. அப்புறம் இந்தியில் அதை எப்படிச் சொல்வதென்று ஆடிட்டர் மாமாவைக் கேட்டாள்.

“இந்தியிலே ‘பஜ்ரங்பலின்’னா ஆஞ்சநேயர். பஜ்ரங்பலி மந்திர்னு சொல்லு, புரியும்” என்றார் ஆடிட்டர்.

குப்தா கருமமே கண்ணாக, வந்த வேலையில் மூழ்கி விட்டான். குப்தாவோடு கூட ஆடிட்டர் இருந்தார். தேவையான போது சிவவடிவேலுவையும் உடன் வைத்துக் கொண்டார்கள். மற்ற வேளைகளில் அவரைத் தவிர்த்தார்கள். வந்த முதல் ஐந்து நாள் ஆப்ஸர்வேஷனுக்காகச் செலவழித்தான் குப்தா. நல்ல கூட்ட நேரத்தில் ரெஸ்டாரெண்டில் போய் உட்கார்ந்து கவனித்தான். பரிமாறும் பையன்களில் சிலர் வேட்டியை மடித்துக் கட்டியிருந்தனர். வேறு சிலர் இடுப்பில் கைலியும் பனியனுமாகப் பரிமாறினர். தலையைச் சொறிந்தனர். மூக்கு நோண்டினர். உண்ணும் பிளேட்டுகளில் பண்டங்களை ‘ணங்’கென்று ஓசையெழ வைத்தனர். கொண்டு வந்து வைக்கிற வேகத்தில் தண்ணீர், காப்பி எல்லாம் கஸ்டமருடைய வேட்டி சட்டையில் தெறித்து விடும் போலிருந்தது சில சமயங்களில்.

விலை அதிகமான இரண்டு ஸ்வீட், ஒரு மசாலா தோசை காப்பி ஐஸ்க்ரீம் இத்தனையும் சாப்பிட்ட ஒரு கஸ்டமரின் பில் ஒன்றரை ரூபாய் என்று அவருக்குப் பரிமாறிய சர்வர் குரல் கொடுத்தான். போகிற போக்கில் அந்தக் கஸ்டமர் டிப்ஸ் போல் சர்வரிடம் ஒரு முழு ஒரு ரூபாய்த் தாளைக் கொடுத்து விட்டுப் போவதைக் குப்தா கவனித்தான். விலை விவரங்களை விசாரித்து அந்தக் கஸ்டமர் சாப்பிட்டதற்கு உண்மையில் என்ன பில் ஆகுமென்று பார்த்தால் கிட்டத்தட்ட ஆறு ரூபாய்க்கு மேல் ஆயிற்று. சர்வருக்கு ஒரு ரூபாய் லஞ்சம் கொடுத்ததால் மொத்தம் ரெண்டரை ருபாயில் அந்தக் கஸ்டமர் சகலத்தையும் முடித்துக் கொள்ள முடிந்தது.

ஓட்டல் பார்கவி ஸ்டோர் கீப்பர் - சரக்கு மாஸ்டரிடம் சாமான்கள் கொடுக்கும் போது ஒருநாள் கவனித்துக் குறித்துக் கொண்டான் குப்தா. பாதாம் கீருக்காக ஓர் எடையளவு பாதாம் பருப்புத் தரப்பட்டது. பகலில் தன் அறையிலிருந்து குப்தாவே ஒரு பாதாம் கீர் வரவழைத்துச் சாப்பிட்ட போது நிலக்கடலைப் பருப்பை அரைத்துக் கேஸரிப் பவுடரால் நிறமூட்டப்பட்டுக் குளிரப் பண்ணிய கீராக இருந்தது அது. ஸ்டோர் கீப்பரும் உடந்தை என்று புரிந்தது.

அங்கே சரக்கு மாஸ்டருக்கு என்ன சம்பளம் என்று விசாரித்ததில் மிகவும் குறைவாக இருந்தது. ஆடிட்டருடன் குப்தா மெல்ல மெல்லத் துப்பறிந்ததில் எந்த மளிகைக் கடை ‘பார்கவி’க்கு மளிகைச் சாமான்கள் சப்ளை செய்ததோ அதே கடைக்குப் பாதாம் பருப்பு திரும்பிப் போவது தெரிந்தது. சரக்கு மாஸ்டருக்கு நிலக்கடலைப் பருப்பையும் அந்தக் கடையே வழங்கி வந்தது. மளிகைக் கடைக்காரர் தனியே ஒரு தொகை ரகசியச் சம்பளமாகச் சரக்கு மாஸ்டருக்கும் ஸ்டோர் கீப்பருக்கும் கொடுத்து வந்ததையும் கண்டு பிடித்தார்கள். துப்புத் துலங்கியது.

பார்கவி லாட்ஜில் செக்ஷனை நிர்வகித்து வந்த கரும்பாயிரம் என்ற ஆள், தங்க வருகிற ஆட்களிடம் எல்லாம் கடுகடுப்பாகப் பேசினான். ரிஜிஸ்தர் - பில் - ரசீது இல்லாமலே அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்து குருபுரத்துக்கு செகண்ட் ஷோ சினிமா பார்க்க வந்து இரவே ஊர் திரும்ப முடியாமல் அதிகாலை முதல் பஸ்ஸுக்கு ஊர் திரும்புகிற பலரிடம் ஐந்து, பத்து என்று ரொக்கம் வாங்கிக் கொண்டு அறைகளில தங்க விட்டான். அவனுடைய சம்பளமும் மிக மிகக் குறைவு என்பதைக் குப்தா கவனித்தான். ஆப்ஸர்வேஷன் முடிகிறவரை இதையெல்லாம் பரம ரகசியமாக வைத்துக் கொள்ளும்படி குப்தா ஆடிட்டரிடம் கேட்டுக் கொண்டிருந்தான். சிவவடிவேலுக்குக் கூட அவர்கள் எதையும் சொல்லவில்லை.

அத்தியாயம் - 5

ஹோட்டல் பார்கவியின் போர்டிங் லாட்ஜிங் நடவடிக்கைகளை ‘ஆப்ஸர்வ்’ செய்ததோடு விடாமல் ஆடிட்டரிடம் சில வருடக் கணக்கு விவரங்கள், பாலன்ஸ் வீட் எல்லாவற்றையும் வாங்கிப் பார்த்தான் குப்தா. துருவித் துருவிப் பார்த்தான்.

அங்கே ஹோட்டல் பார்கவி ஆரம்பித்தது முதல் ஒன்றரை வருடத்திலேயே மின்விசிறிகள், ஹீட்டர்கள் முதலிய எலெக்ட்ரானிக் சாமான்கள் ரிப்பேர் வகையில் நம்ப முடியாத செலவுத் தொகைக்குப் பில்கள், ரசீதுகள் இருந்தன. புதிய மின்விசிறிகள், புதிய வாட்டர் ஹீட்டர்களில் முதல் வருடமே ரிப்பேர் ஆக வாய்ப்பில்லை. ஆனால் ரிப்பேர் பில்கள் ரசீதுகள் சரியாயிருந்தன.

ரிப்பேர் பில்கள் ரசீதுகளில் ஒரே குறிப்பிட்ட எலெக்ட்ரிகல் சப்ளையர் பெயர் இருந்தது. எப்படி எப்படியோ உளவறிந்ததில் அந்தக் கம்பெனி வெறும் பில்கள் ரசீதுகள் மட்டுமே கொடுத்து ஹோட்டல் பார்கவி மானேஜருடன் தொகையைப் பங்கிட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. இந்த வகையில் பயங்கர மோசடி இருந்தது.

தம் சொந்த மகன்களைக் கூட நம்ம மறுத்த சிவவடிவேலு விசுவாசமான ஆட்கள் என்று நம்பிக் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு வைத்திருந்த அதிகப் படிப்பில்லாத ஆட்கள் புகுந்து விளையாடியிருந்தனர்.

“சிவவடிவேலு நிலங்கரைகளைக் கவனித்து வந்த தமக்குப் பழக்கமான விவசாயக் குடும்பத்து ஆட்களை நம்பி எல்லாம் விட்டிருக்கிறார். அவருடைய குருட்டுக் கணக்கு தெய்வ பக்தியுள்ள அதிகப் படிப்பில்லாத, நடுத்தரக் குடும்பத்து ஆட்கள் தப்புத் தண்டாவுக்குப் போக மாட்டார்கள் என்பது, அந்த நம்பிக்கையிலேயே ஏமாந்து விட்டார். சரியான முறையில் அவர் கணிக்கவில்லை” என்றார் ஆடிட்டர்.

உடனே குப்தா, சிவவடிவேலுவின் மூத்த மகனைப் பற்றி விசாரித்தான்.

“தண்டபாணி - தங்கமான பையன். நல்ல சுறுசுறுப்பு. பி.காம். படிச்சு ஃபர்ஸ்ட் கிளாஸ் பாஸ் பண்ணினான். இவரோட பிசுநாறித்தனங்கள் பிடிக்காமல் காதல் கல்யாணம் பண்ணிக் கொண்டு டில்லியில் போய் உத்தியோகம் பார்க்கிறான்,” என்று ஆடிட்டர் கூறியவுடன், “மற்றொரு பையனைப் பற்றியும் சொல்லுங்கள்,” என்று குப்தா ஆவலாக விசாரித்தான். ஆடிட்டர் குமரேசனைப் பற்றியும் அவனுக்குச் சொன்னார்.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டுக் குப்தா கூறலானான். “ஹோட்டல் தொழில், விவசாயம் மாதிரி இல்லே. இப்ப விதைச்சோம். நாளை அறுப்போம்னு முடிச்சிடக் கூடியதும் இல்லை. விவசாயத்திலே எப்பவாவதுதான் களை எடுக்கணும். இதுலேயோ தினசரி களை எடுத்துக்கிட்டே இருக்கணும். இல்லேன்னா புதர் மண்டிப் போயிடும். சிவவடிவேலு தம்முடைய கஞ்சத்தனத்தினாலே குறைஞ்ச சம்பளத்துக்கு ஆள் தேடறதா நெனைச்சுக்கிட்டுக் கிம்பளம் பண்ணிக்கிற ஆளா உள்ளே விட்டிருக்கார். இதே ஆட்களை வச்சிக்கிட்டு இனிமே இந்த ஓட்டலை உருப்படியா வளர்க்க முடியும்னு எனக்குத் தோணலை. என்னதான் இனிமேல் சம்பளத்தைக் கூடக் கொடுத்தாலும் கிம்பளம் பண்ற வழிகள் இவங்களுக்குப் பழக்கமாயிட்டதாலே இனிமே இவங்க அதிகச் சம்பளம் கிடைச்சாலும் அந்தப் பழைய கிம்பளப் பழக்கத்தைக் கைவிட மாட்டாங்க. சம்பளத்தையும் அதிகமாகக் கொடுத்து இதே ஆளுங்களே வச்சுக்கிறது ரெட்டை நஷ்டம் ஆயிடும்?”

“என்னதான் செய்யலாம்? ஒரு வழி தெரிஞ்சாகணுமே இப்போ.”

“ஓட்டலைக் குளோஸ் பண்ணணும்.”

“அதுக்காகவா இத்தனை சிரமப்பட்டு டில்லியிலிருந்து உங்களைக் கூப்பிட்டோம்? இந்த யோசனையை நானே சிவ வடிவேலுவுக்குச் சொல்லியிருப்பேனே?”

“சொல்லி முடிக்கிறதுக்குள்ளேயே அவசரப்படறீங்களே மிஸ்டர் அனந்த். முழுக்கக் கேளுங்க, குளோஷர் நோட்டீஸ் ஒட்டி இப்போ இருக்கிற ஆட்களை முழுக்கக் கணக்குத் தீர்த்து அனுப்பிடணும். முதல்லே அதைச் செய்தாகணும்.”

“அப்புறம்...”

“ரெண்டு மூணு மாசம் சீரமைப்புப் பணிகளைச் செய்து முடிச்சு மறுபடியும் புது ஆட்களை நல்ல சம்பளத்திலே வேலைக்கு வைத்தபின் திறக்கணும். அதுக்குள்ளே ஹோட்டில் லுக், தரம், சர்வீஸ் வசதிகள் எல்லாத்தையும் முதல்தரமா மாத்தி ‘ரென்னவேட்’ பண்ணிடணும்.”

“மூணு மாசம் கழிச்சுத் திறக்கறப்போ இதிலேயே நாலஞ்சு வம்புக்கார ஆளுங்க டிஸ்பியூட் கிளப்பினாங்கன்னா என்ன செய்யறது மிஸ்டர் குப்தா?”

“புதுசாத் தொடங்கறப்போ எல்லாத்தையுமே புதுசாப் பண்ணிடணும். பேரைக் கூட ‘ஓட்டல் நியூ பார்கவி’ன்னு மாத்திடனும்.”

“சிவவடிவேலு சென்டிமெண்டல் பேர்வழியாச்சே பேரை மாத்தச் சம்மதிப்பாரோ இல்லையோ? எத்தனையோ யோசனை பண்ணி அவரோட ஆஸ்தான ஜோசியரைக் கலந்து பேசி வச்ச பேர் இது.”

“எனக்கும் ‘நியூமராலஜி’ கொஞ்சம் தெரியும் மிஸ்டர் அனந்த். ‘ஹோட்டல் பார்கவி’ என்பது (Hotel Bargavi) 12 எழுத்து. ‘ஹோட்டல் நியூ பார்கவி’ என்பது 15 எழுத்து, பன்னிரண்டைக் கூட்டினால் மூன்று; பதினைந்தைக் கூட்டினால் ஆறு. இரண்டும் ஒரே மாதிரி வகுபடுகிற நம்பர்தான். முதலில் இருந்த பேரைப் போலத்தான் இதுவும். சிவவடிவேலுவோ அவரோட ஜோஸ்யரோ இந்தப் புதுப் பெயரை ஆட்சேபிக்க மாட்டாங்க” என்றான் குப்தா.

அவன் வெறும் பிஸினஸ் டாக்டராக மட்டும் இல்லை. சராசரி மனிதர்களின் பொதுவான பலவீனங்களை எதிர்பார்த்து அதை ரெடிமேடாகச் சந்தித்து உடனே சரிப்படுத்தும் பொது அறிவு அவனுக்கு இருந்தது. சிவவடிவேலுவின் நியூமராலஜிக்கும் சேர்ந்து இடம் வைத்தே புதுப் பெயரைத் தேர்ந்தெடுத்திருந்தான் அவன்.

“சும்மா ஒரு ‘நியூ’ வை நடுவிலே நுழைக்கச் சட்டரீதியாகப் புது ஹோட்டல்னு பேர் பண்றதுக்காக மட்டும் இல்லே மிஸ்டர் அனந்த். புதுப் பார்கவியிலே எல்லாமே அப்டு டேட்டாக இருக்கிறதோட ஏற்பாடுகள் எல்லாம் ஃபூல்ப்ருஃபா பக்காவாவும் புதுசாகவும் இருக்கணும். டாக்ஸ் கட்டினாலும் பரவாயில்லே! பில் போடணும். ஒரு சர்வர் கிச்சன்லேர்ந்து எடுத்திட்டு வர்ற அயிட்டங்களைக் குறித்துக் கொள்ளக் கிச்சன் வாசல்லேயே பில் போடற ஆள் உட்காரணும், ராத்திரி ஓட்டலை மூடறபோது இந்தக் கிச்சன்கேட் பில் ஆள் கொடுக்கிற கணக்கும் கேஷ் டேபிள் ரெவின்யூவும் சரியாக இருக்கணும், இல்லாட்டி ரெஸ்டாரண்ட் உருப்படாது.”

“அதாவது ஒரு சர்வர் கிச்சன்லேயிருந்து எடுத்துட்டு போகிற பண்டங்களை ஆர்டர் மாதிரி இந்தக் கிச்சின் கேட் பில் மேக்கர் கிட்டச் சொல்லி எடுத்துட்டுப் போகணும். அப்புறம் அந்த பில் மேக்கரே எடுத்துப் போன பண்டங்களுக்குத் தக்கபடி பில்லைப் போட்டுச் சர்வர் மூலம் கஸ்டமர் டேபிளுக்கு அனுப்புவார். இல்லையா? அதாவது ஒரு புது உத்தியோகம் கிரியேட் பண்றீங்க?”

“பார்கவிக்கு வேண்டுமானால் இது புதுசா இருக்கலாம். பம்பாய், டில்லி, கல்கத்தா, சென்னையில் ஏற்கனவே பல பெரிய ஹோட்டல்களில் இது நடைமுறையிலே இருக்கு. பைதி பை, இன்னென்றும் முக்கியம். இப்ப உங்க சிவவடிவேலு சர்வருங்களா வச்சிருக்கிற ஆளுங்க எல்லாம் ஒண்ணு ஆஸ்பத்திரியிலே டைப்பாய்டிலே கிடந்து பிழைச்சு வந்தவங்க மாதிரி இருக்காங்க. சர்வருங்க ரிஸப்டிவ்வா இருக்கணும். கத்தாமல் இரையாமல் மெதுவா கனிவாப் பேசணும். கஸ்டமரை விரட்டக்கூடாது. டேபிள் மேனர்ஸ் தெரியணும், தண்ணீரையோ, காப்பியையோ, டிபன் பிளேட்டையோ கஸ்டமருக்கு முன்னலே வைக்கிறபோது ஒரு நைஸிட்டி - இங்கிதம் வேணும். மேஜையை உடைக்கிற மாதிரி டொக்குன்னு வைக்கப்படாது. இங்கே இருக்கிற சர்வர்கள் கராத்தேயிலே செங்கல் உடைக்கிற மாதிரி டேபிள்லே பிளேட்டை வைக்கிறதை நானே பார்த்தாயிற்று. பரிமாறுகிறவர்கள் பார்க்கச் சுத்தமாக இருக்கணும். சாப்பிட வருகிறவர்கள் கஸ்டமர்கள் கண் காண மூக்கை நோண்டறது, தலையைச் சொறியறது. காது குடையறது இதெல்லாம் பண்ணிட்டு அப்புறம் அதே கையாலே காப்பி கொண்டாந்து கொடுக்கிறதுன்னு வந்தால் எவருக்குச் சாப்பிட மனசு வரும்? மூணு நாள் தாடியும் இடுப்பிலே லுங்கியும் மார்பில் முண்டா பனியனுமாக ஆஃப் டிராயரிலே ஆடு வெட்டற ஆள் மாதிரிச் சில சர்வர்களை இங்கே பார்த்தேன். அப்படி ஆளுங்க வர்ற கஸ்டமர்சைக் குறைச்சிடுவாங்க. வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கிட்டு உள் அண்டர்வேரும், புஸுபுஸூவென்று மயிரடர்ந்த முழங்காலும் தெரிகிற மாதிரிச் சில பேர் பரிமாறுகிறாங்க. ஃபேமிலியோட வர்ற ஒரு கஸ்டமர் இந்த மாதிரி ஆளுங்களைப் பார்த்தா அடுத்த தடவை இந்த ஹோட்டலுக்கு வரவே மாட்டார். ஐரோப்பாவிலே பல ரெஸ்ட்டாரெண்டுகளிலே பேசுகிற சத்தமே அடுத்த டேபிளுக்குக் கேட்காது. பரிமாறியது போதும், மேலும் வேண்டும் என்பதை எல்லாம் கூடக் கஸ்டமருடைய சைகையிலேயே புரிஞ்சுப்பாங்க. ஃபோர்க்கையும், கத்தியையும் இணைகோடு மாதிரி பிளேட்டிலே வச்சா இன்னும் சாப்பிட ஏதோ மீதமிருக்கிறது என்றும் சேர்த்து வைத்துவிட்டால் முடித்தாயிற்று என்றும் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். இங்கேயோ ஹோட்டல் முழுவதும் ஒரு போர்க்களம் போலக் கூப்பாடு மயமாயிருக்கிறது.”

“இதையெல்லாம் சரிப்படுத்த உங்க சிகிச்சை என்னன்னு சொல்லுங்க, மிஸ்டர் குப்தா! நோய்களையே விவரிச்சிட்டுப் போனால் எப்படி? சரிப்படுத்தறது எப்படின்னு சொல்லுங்க.”

“பொறுங்க சார்! இதை முதல்லே நாம கலந்து பேசி முடிவு பண்ணிட்டு அப்புறம் உங்க சிவவடிவேலுவுக்குச் சொல்லணும். நேரடியாச் சொன்னால் அதிர்ச்சி தாங்காது. அதனால முதல்லே உங்ககிட்டே கொஞ்சம் விவரமாகவே சொல்றேன் மிஸ்டர் அனந்த்!”

“நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரி. சிவவடிவேலுவுக்கு இதெல்லாம் புரியறதே கஷ்டம். முதல்லே நாம பேசி முடிவு பண்ணி அப்புறம் அவருக்குப் பக்குவமா எல்லாம் சொல்லணும், நீங்க மேலே சொல்லுங்க, கேரி ஆன். ப்ளீஸ்!”

“நீட்நெஸ் - சுத்தம். இதுக்காகச் சர்வருங்களுக்கு நாமே வொயிட் ஃபுல் பாண்ட்டும் சட்டையும் சீருடையாகத் தைத்துக் கொடுத்துவிட வேண்டும். செலவானாலும் பரவாயில்லே. செலவாகுமேன்னு பயந்தால் லாபம் சம்பாதிக்க முடியாது. ஹோட்டல் தொழிலிலேயும் சினிமாத் தயாரிப்புத் தொழிலிலேயும் எவ்வளவுக்கு எவ்வளவு தாராளமாகச் செலவழிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு லாபம் எதிர்பார்க்கலாம். சிக்கனமாகச் செலவழிச்சா லாபமும் சிக்கனமாகத்தான் இருக்கும். “இஃப் யூ வான்ட் டு கெய்ன் மோர், யூ ஹாவ் டு லூஸ் மோர்,” என்பது தான் புதிய யுகத்தின் பிஸினெஸ் கான்ஸெப்ட். கேட்டரிங் டிப்ளமா உள்ளவங்களாகப் பார்த்து வேலைக்கு எடுக்கணும். சம்பளம் கூட ஆகுமேன்னு பார்த்தால் முடியாது. ஹோட்டல் இண்டீரியர் டெகரேஷன் எக்ஸ்பெர்ட் ஒருத்தரை நானே டில்லியிலிருந்து அனுப்பறேன்.”

“புதிதாக மணி இன்வால்வ்மெண்ட் இருக்குமானால் சிவவடிவேலு தயங்குவார். ஏற்கெனவே கடன் இருக்கிறது.”

“துணிந்து இறங்கப் பயப்படுகிறவன் வியாபாரம் பண்ண முடியாது, ரிஸ்க் எடுத்துக் கொள்ளத் தயங்குகிறவன் பிஸினஸுக்கு லாயக்கில்லை. என் சிகிச்சை முறைகளை ஏற்றுச் செயல்பட்டால் ஒரு வருஷத்திலேயே பயங்கர லாபம் பார்க்கலாம். அதோடு இன்னெரு விஷயம். சிவவடிவேலுவின் இரண்டாவது மகனைப் பற்றிய விவரங்கள் எனக்குத் தேவை. அவன் ஏதாவது இதில் நமக்கு உதவ முடியுமா என்று பார்க்க வேண்டும்.”

“பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து முடித்துவிட்டு மேடைகளில் தமிழில் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருக்கிறான். முற்போக்குவாதி. தந்தையோடு அறவே ஒத்துப் போகாது.”

“கொயட் இண்ட்ரெஸ்டிங். அவனை நான் சந்திக்க வேண்டுமே?” என்றான் குப்தா.

குமரேசனை இவர் சந்தித்து என்ன ஆகப் போகிறது என்று ஆடிட்டர் தயங்கினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனை அழைத்து வருவதாகக் கூறிவிட்டுக் கிளம்பினார்.

அத்தியாயம் - 6

குமரேசனைக் குருபுரம் முத்தமிழ் மன்ற மேடையில் பட்டிமன்றப் பேச்சின் நடுவே போய்ப் பிடித்தார் ஆடிட்டர் அனந்த். மனித வாழ்க்கைக்கு முக்கியம் பொருளா அருளா என்ற பட்டிமன்றத்தை அரை மணி நேரம் உட்கார்ந்து பொறுமையோடு கேட்பது பொருள்தான் முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டு விட்ட ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டெண்டுக் குச் சிரமமாகத்தான் இருந்தது. அருள்தான் முக்கியம் என்று பேசிய முதல் பேச்சாளனை எதிர்த்துப் பொருள் தான் முக்கியம் என்று வற்புறுத்திய பின் குமரேசனைச் சந்தித்து அழைத்தார் ஆடிட்டர். அவன் தயங்கினான்.

“எதுக்கு இவ்வளவு அவசரம்? பொதுவாகப் பட்டி மன்றங்களில் தீர்ப்பு வழங்குவதற்கு முன் நான் கிளம்பிப் போகிற வழக்கமில்லையே?”

“அட ரொம்ப அவசர விஷயம் அப்பா! தீர்ப்பை நாளைக்குக் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம் இப்போ என் கூடப் புறப்படு! சொல்றேன்.”

தட்டிச் சொல்ல முடியாமற் போகவே முத்தமிழ் மன்றச் செயலாளரிடம் போய் விடை பெற்றுத் தனக்குச் சேர வேண்டிய தொகையைப் பெற்றுக் கொண்டு வந்து சேர்ந் தான் குமரேசன்.

“அந்த டில்லி பிஸினஸ் டாக்டர் உன்னைப் பார்க்கணும்னாருப்பா!” என்று காரைச் செலுத்திக் கொண்டே அருகில் அமர்ந்திருந்த குமரேசனிடம் தெரிவித்தார் ஆடிட்டர்.

“இதுக்கா கூப்பிட்டீங்க? எங்கப்பா காலம் வரை அவர் சொத்திலோ வியாபாரங்கள், தொழில்களிலோ எங்கண்ணனோ, நானோ தலையிட மாட்டோம்னு நீங்களே அந்த ஆளுக்குச் சொல்லியிருக்கலாமே, சார்?”

“எதுக்குன்னு தெரியலே. ஆனால் அவர் உன்னைப் பார்த்தே ஆகணும்கிறார்.”

“எதுக்கு வீண் வேலை? எங்கப்பா காலம்வரை கொக்குக்கு ஒண்ணே மதின்னு பழைய மிட்டா மிராசு மனப்பான்மையிலேயே எதையாச்சும் சும்மா பண்ணிட்டிருப்பார். நீங்க ஒருத்தருதான் வேலை மெனக்கெட்டு அவரைக் கட்டி மாரடிக்கிறீங்க! அவரை நம்பி இந்த மனுஷனை வேற டில்லியிருந்து வரவழைச்சிருக்கீங்க! இந்த ஆளு சொல்ற எதையும் அவர் கேட்கப் போவதில்லை. ஹோட்டல் பழைய குருடி கதவைத் திறடின்னு நஷ்டத்திலே தான் நடக்கப் போவுது.”

“இப்ப என்கிட்டே சொல்ற இதையே அந்த டில்லி ஆசாமிகிட்டேயும் சொல்லேன். உண்மை நிலை என்னென்னாவது அந்த ஆளுக்குப் புரியட்டும்!”

“இதை நான் வந்துதான் அவர்கிட்டே சொல்லணுமா என்ன? நீங்களே இதுக்குள்ளே சொல்லியிருக்கணுமே?”

“என்ன இருத்தாலும் நான் மூணாவது மனுஷன்தானே அப்பா!”

“நீங்களாவது மூணாவது மனுஷனாவது? நீங்கதானே எங்கப்பாவுக்கு ஃபிரெண்டு, ஃபிலாசபர், கைடு எல்லாம்?”

“உங்கப்பா செய்கிற தப்புக்கெல்லாம் நான்தான் காரணம்னு குத்திக் காட்டறியா?”

“நான் அப்படிச் சொல்லவில்லை, இவர்தான் என்னோட நண்பர், நல்லாசிரியர், வழிகாட்டி என்று எல்லோரிடமும் உங்களைக் கையைக் காண்பிச்சிட்டுப் பண்ற தப்பை எல்லாம் எங்கப்பா அவராகவே பண்றாருங்கிறேன்.”

இதைக் கேட்டு ஆடிட்டர் சிரித்துக் கொண்டார். இவனுக்கு இருக்கிற வாய்ச் சவடாலுக்குச் சிவவடிவேலு மட்டும் சுதந்திரம் கொடுத்து உரிமையுடன் ஹோட்டல் நிர்வாகத்தைக் கவனிக்க விட்டால் பிரமாதமாயிருக்கும் என்று தோன்றியது.

பிஸினஸ் டாக்டர் குப்தாவுக்கும் குமரேசனுக்கும் அறிமுகம் செய்துவிட்டு ஆடிட்டர் ஒதுங்கி அமர்ந்து கொண் டார். குப்தா ஜோவியலாகப் பேச்சைத் தொடங்கினான்.

குமரேசனும் குஷியாக உரையாடினான். ‘கேட்டரிங்’ டிப்ளமா வாங்கின டிஸண்டான ஆட்களை வேலைக்குப் போட்டால் ஹோட்டலைப் பிரமாதமாக நடித்த முடியும் என்று குப்தா சொன்னதும் குமரேசன் வேறு ஒரு ஐடியாவை கொடுத்தான்.

“நீங்க சொல்றதை விடப் பிரமாதமான ஐடியா என்கிட்டே இருக்கு, மிஸ்டர் குப்தா! இங்கிருந்து மலை வழியா காட் செக்ஷன் ரோட்டிலே போனால் நூத்திப் பன்னிரண்டு மைல்லே கேரளா பார்டர் வந்துடும். சமீபத்திலேதான் அந்த ரோட்டை ஹைவேஸ்காரங்க புதுசாப் போட்டிருக்காங்க, கோட்டயத்திலே போய் முடியுது அந்த ரோடு, கோட்டயத்திலே எனக்குத் தெரிஞ்ச 15 முதல் 30 வயது வரையிலான அழகிய இளம் பெண்களுக்கு மட்டும் கேட்டரிங் பயிற்சி கொடுத்து அனுப்பும் ஒரு பிரைவேட் இன்ஸ்டிடியூட் இருக்கு. அப்படிப் பெண்களே சர்வ் பண்ற மாதிரி ரெஸ்டாரெண்ட் ஒண்ணு கொச்சீன்லே பிரமாதமாக நடக்குது. உள்ளே உட்கார இடம் கிடைக்கலே! இங்கே எங்க ஃபாதர் கிட்டே சொன்னால் அடிக்க வருவார்.”

“மார்வலஸ் ஐடியா!” என்று துள்ளிக் குதிக்காத குறையாக உற்சாக மேலிட்டுக் கூவினான் குப்தா. “எங்கே அதைப் பத்தி இன்னும் கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்க” என்று குமரேசனை மேலும் உற்சாகப்படுத்தித் தூண்டினான் குப்தா.

“கவர்ச்சிக்காக இதை நான் சொல்றேன்னு நினைக்காதீங்க. பரிமாறல், டேபிள் டெகரேஷன், இதமாகப் பேசுவது இதிலெல்லாம் பெண்கள் மென்மையாக நடந்துக்கறாங்க. ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாகத் தொழில்கள் செய்ய வேண்டும் என்ற பெண் விடுதலைக் கவிஞரின் இலட்சியத்தையே இங்கு நான் எதிரொலிக்கிறேன். பெண்கள் அதுவும் அழகிய இளம் பெண்கள் வறுமையால் சிரமப்படும் மாநிலம் கேரளா. இந்த ஏற்பாடு பயனளிக்கும். சிலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். ஆண்கள் வேறு கடின வேலைக்குத் தங்கள் நேரத்தைச் செலவிடலாம்.”

“நம்ம நியூ பார்கவியில் முதல்லே அறிமுகப்படுத்த வேண்டிய திட்டம் இது ஆடிட்டிர் சார், மறந்து விடாமல் இப்பவே குறிச்சு வச்சுக்குங்க” என்று ஆடிட்டரை நோக்கி வியந்து கூவினான் குப்தா. உடனே குமரேசனிடம் அக்கறையாக, “மிஸ்டர் குமரேசன்! கேட்டரிங் வகையில் அழகிய இளம் பெண்களுக்குப் பயிற்சி கொடுத்துத் தயாரிக்கும் அந்த இன்ஸ்டிட்யூட்டின் முகவரியையும் கொச்சினில் ஏதோ ஹோட்டல் அப்படிப் பெண்களே பரிமாறுகிற விதத்தில் வெற்றிகரமாக நடப்பதாய்க் கூறினீர்களே அந்த ஹோட்டலின் முகவரியையும் தயவு பண்ணி எனக்குக் குறித்துத் தர வேண்டும்” என்றும் கேட்டான் குப்தா.

“விலாசம் தருவது இருக்கட்டும். ‘நியூ பார்கவி’ என்று என்னமோ சொன்னிங்களே? என்னது அது? எங்கப்பா எதைத் தொடங்கினாலும் அது நிச்சயமா நியூவா இருக்க முடியாது. அவர் தொடங்கறப்பவே அது ஓல்டாயிடும். அத்தனை கைவிசேஷம் அவருக்கு. அவர் கையாலே தொடங்கினப்புறம் பார்கவி எப்படி ‘நியூவா’ இருக்க முடியும்?”

“பார்கவி நியூவாகப் போகிறாள் மிஸ்டர் குமரேசன். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.”

“சும்மா கனவு காண்கிறீர்கள்! எங்கப்பா இருக்கிற வரை அது நடக்காது. எங்கப்பா செல்லமா வளர்க்கிற ‘பார்கவிகள்’ இருவர். இருவருமே உற்சாகமாக இல்லை. ஒன்று இந்த ஓட்டல் மற்றொன்று என் தங்கை பார்கவி, அவரது செல்லப் பெண்.”

“இல்லை மிஸ்டர் குமரேசன். நீங்கள், உங்கள் சகோதரர் தண்டபாணி எல்லோருடைய ஒத்துழைப்பையும் கொண்டு நானும் ஆடிட்டரும் சேர்ந்து இரண்டு பார்கவிகளையுமே ஆரோக்கியமாக்கப் போகிறோம்.”

“மிஸ்டர் குப்தா இங்கே எங்கப்பா வேலைக்கு வச்சிருக்கிற ஆட்களைப் பார்த்த பிறகுமா உங்களுக்கு இந்த நம்பிக்கை? களத்து மேடுகளிலும் வயல் வரப்புகளிலும் எங்கப்பாவோடு காரியஸ்தனாய்ச் சுற்றிக் கொண்டிருந்த கறும்பாயிரம் அந்த நாளிலேயே விவசாயக் கூலிகளுக்குத் தர வேண்டிய அஞ்சு பத்துலே கமிஷன் அடிக்கிறவன். அப்பாவைக் கண்டால் மட்டும் எழுந்து நின்னு கைகட்டி வாய் பொத்தி, ‘முதலாளி சொல்றபடி செய்யறேனுங்க’ என்று குழைகிறவன். அவனை நம்பி போர்டிங்கை விட்டிருக்கிறார். வெளி வேஷமான பணிவும் பயபக்தியும் இருந்தாலே அவன் யோக்கியன் என்று கணித்து விடுகிறவர் எங்கப்பா. இவர் கிட்டே கல்யாணம் கார்த்திக்குத் தவசிப்பிள்ளையாயிருந்த இசக்கிமுத்துவைச் சரக்கு மாஸ்டராகவும் ஒரு ரிடையர்டு சப்ரிஜிஸ்திரார் ஆபீஸ் கிளார்க்கை ஸ்டோர் கீப்பராகவும் - அவங்க குறைஞ்ச சம்பளத்துக்கு ஒப்புக்கிட்டாங்கன்னு - நியமிச்சிருக்கார். உண்ணி மாதிரியும் அட்டை மாதிரியும் பார்கவியின் லாபத்தை இவங்க உறிஞ்சிட்டிருக்காங்க. சர்வர், ரூம் பாய்ஸ்னு இவரோட பழைய நிலங்கரைகளில் காத்திட்டிருந்தவனையும் களை எடுத்திட்டிருந்தவனையும் காவல் காத்துக்கிட்டு இருந்த வனையும் குறைஞ்ச சம்பளத்துக்குப் போட்டிருக்கார். நவீன மானேஜ்மெண்ட் கான்ஸெப்ட்டே இவருக்குப் புரியாது. புரிய வைக்கவும் முடியாது. பார்கவிங்கிற இந்த நோயாளியை உங்ககிட்டே காண்பிக்க ஒப்புக்கிட்டதே எங்கப்பாவைப் பொறுத்தவரை பெரிய புரட்சிதான்!”

“நீங்க சொல்றது எதையும் நான் மறுக்கலே மிஸ்டர் குமரேசன்! இது உங்க குடும்பச் சொத்து. உங்கப்பா உங்க காலத்துக்குப் பின் நாளைக்கு உங்களுக்கும் உங்க உடன் பிறந்தவர்களுக்கும் வர வேண்டியது. இன்னிக்கு இதிலே இவ்வளவு ஊழல் இருக்குன்னு நான் வந்து கண்டுபிடிக்கிற துக்கு முன்னுடியே தெரிஞ்சிட்டிருக்கிற நீங்க சும்மா இப்படி ஒதுங்கி இருக்கலாமா?”

“சும்மா இருக்காமே வேற என்னதான் செய்யணும்கிறீங்க? எங்கப்பாவுக்கு அவரை விமர்சிக்கிறதோ எதிர்த்துப் பேசி விவாதிக்கிறதோ அறவே பிடிக்காது. நானும் எங்கண்ணனும் எதிர்த்துப் பேசிப் பேசிச் சோம்பேறி, உருப்படாதவன்னு அவர்கிட்டே வசவு வாங்கினதுதான் மிச்சம். எதிர்த்துப் பேசாமல் அப்பாவைப் புகழ்ந்து செல்லப் பெண் ஆகிவிட்டாள் தங்கை. அவரை முகஸ்துதி பண்ணிக் கை கட்டி வாய் பொத்தி நின்னவனெல்லாம் ஊழியன்கிற பேரைப் பெற்றுச் சுரண்டிக் கொட்டிக்கிறான்கள்.”

“அப்போ இதை எல்லாம் சரிப்படுத்த என்னதான் வழி?”

“வழி இருக்கு! ஆனால் அது நடைமுறையிலே சாத்தியமா இல்லையான்னுதான் எனக்குப் புரியலே. இன்னிக்கு நான் ஒரு வார்த்தை ஃபோன் பண்ணிக் கிரீன் ஸிக்னல் கொடுத்தா எங்கண்ணன் டில்லியிலேர்ந்து இங்கே வரத் தயாராக இருக்கான். ஆனால் இவருக்கும் அவனுக்கும் ஒத்துக்காது.”

“உங்க யோசனைகளைத் தாராளமாக எங்கிட்டே சொல்லுங்க, குமரேசன்! இத்தனை தூரம் வேலை மெனக்கெட்டுப் புறப்பட்டு வந்து தங்கி நான் நோயாளியைக் காப்பாற்றாமல் திரும்பிப் போனால் எப்படி?”

“இப்ப இருக்கிற ஸெட் - லைஃப்பைக் கம்ப்ளீட்டா மாத்தணும்! முழுக்க முழுக்கப் புது ரத்தத்தைப் புகுத்தணும். மூணு மாசச் சம்பளத்தைக் கையிலே கொடுத்தாவது பார்கவி யிலே இப்போ வேலை பார்க்கிற அத்தனை பேரையும் வெளியிலே அனுப்பணும். இதிலே தயவு தாட்சண்யமே கூடாது! ஒருத்தனை மீதம் வைத்துக் கொண்டால் கூட ஒரு குடம் பாலில் துளி விஷம் மாதிரி ஆகிப் போயிடும். இவங்க எல்லோருமே சம்பளத்துக்குச் சம்பளமும் வாங்கிக்கிட்டுக் கிளம்பமும் பண்றவங்க. ஹோட்டல் தொழிலுக்குப் பரிச்சயமான டீஸண்ட் ஆட்களை நல்ல சம்பளத்திலே நியமிக்கணும். ஆனால் இந்த மறுபரிசீலனை, விமரிசனங்கள் மாறுதல்களுக்கு எங்கப்பா ஒருக்காலும் சம்மதிக்க மாட்டார் மிஸ்டர் குப்தா.”

அத்தியாயம் - 7

ஆடிட்டர் அனந்துக்கே கூடக் குமரேசனின் விளக் கங்கள் ஆச்சரியத்தை அளித்தன. சிவவடிவேலு இவனைப் போய்ச் சோம்பேறி, ஊர் சுற்றி என்கிறாரே என்று அவர் மேல் கோபம் வந்தது. ஆடிட்டரே நேரடியாகப் பேச்சில் குறுக்கிட்டு, “சுற்றிச் சுற்றிச் செக்கு மாடு மாதிரி ஒரே இடத்திலே வந்து நின்னுடறியேப்பா இதிலேர்ந்து மீள என்ன வழி?” என்று குமரேசனைக் கேட்டார்.

குமரேசன் சிரித்தான். பின்பு பதில் சொன்னான். வழி கண்டுபிடிக்க மருந்து சொல்லறக்குத்தான் குப்தா சார் வந்திருக்காரே...”

“நான் நோயைக் கண்டுபிடிச்சாச்சு; மருந்தையும் தீர்மானம் பண்ணியாச்சு. ஒரு பெரிய ஆச்சரியம் என்னோட கண்டுபிடிப்பும், உங்களோட ஆப்ஸர்வேஷனும் ஏறக்குறைய ஒத்து வருது; அதனாலே உங்க முழு யோசனையையும் கேட்டுடலாம்னு பார்க்கிறேன், மிஸ்டர் குமரேசன்! நீங்க பிஸினஸ் மேனேஜ்மெண்ட் படிக்கலேன்னாலும் நடைமுறை ஞானத்திலேயே கரெக்டாச் சொல்றீங்க. ரைட் பெர்ஸன்ஸ் ஃபார் ரைட் ஜாப். ராங் பெர்ஸனல் ஃபார் ராங் ஜாப் என்று இரண்டு தலைப்புக்களில் என்ன வருமோ அதை இதுவரை அழகாகச் சொல்லிட்டீங்க” என்று குப்தாவே குமரேசனைப் புகழ்ந்தான்.

குமரேசன் தயங்கித் தயங்கிப் பெரிய பீடிகையோடு ஆரம்பித்தான். “இதோ இந்த ஆடிட்டர் சார் இருக்கார்! எங்கப்பாவுக்கு ரொம்ப வேண்டியவர். நான் சொல்றதை அவரும் நீங்களும் நல்ல ஸென்ஸிலே எடுத்துக்கணும். இப்பவே சொத்தைக் கைப்பற்ற ஆசைப்படறேன்னு சீப் மோடிவ் கற்பிச்சு என் நோக்கத்தைத் தப்பாப் புரிஞ்சுக்கக் கூடாது.”

“ரிஸர்வேஷன் எதுவும் வேண்டாம். நினைக்கிறதை அப்படியே சொல்லுங்க. எனக்கு அதுதான் வேணும்.”

“முரண்டுக்கிறது மோசமான குணம். முரண்டோட அறியாமையும் சேர்ந்துட்டாக் கேட்கவே வேண்டாம். அது வைக்கோல் போரில் நெருப்பிப் பொறி விழுகிற மாதிரி, எங்கப்பா கிட்டே இது ரெண்டுமே கணிசமா இருக்குது. ‘கொண்டது விடாமை’ என்கிற குணம் மனுஷனுக்கு இருக்கக் கூடாது. குரங்கு முதலை மாதிரிக் கவ்விப் பிடிக்கிற விலங்குகள் கொண்டதை விடாமல் பறிக்கலாம். ஆனால் மனுஷனுக்கு அது கூடாது. விலங்குக் குணம் மனுஷன் கிட்டே இருந்தால் அது ஆபத்தா முடியும். அறிவு வளர வளரப் பழசை விடணும். புதுசை ஏத்துக்கணும். பழசை விடறதுக்கும் புதுசை ஏற்றுக் கொள்வதற்கும் எங்கப்பா துணியமாட்டார். இதுனாலேதான் இப்ப எங்க ஃபேமிலியே கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்குது. இத்தனை வசதியிருந்தும் எங்கண்ணன் டில்லியிலே வாடகை வீட்டிலே குடியிருந்து இன்னொருத்தன் கீழே கைகட்டிச் சேவகம் பண்ணிட்டிருக்கான். நான் பட்டி மன்றம் பேசிக் கைச் செலவுக்குப் பத்து நூறு சம்பாதிக்கிறேன். எங்கம்மா ஒடுங்கிப் போயாச்சு, தங்கச்சி ரத்த சோகை பிடிச்ச மாதிரி வளர்ச்சியில்லாமல் இருக்கிறாள்.”

“நீங்களும் எங்களோட ஒத்துழைச்சால் எல்லாத்தையுமே ஆரோக்கியமா மாத்திக்க முடியும். மாத்தியாகணும். உங்கப்பாவே சாசுவதமாக உலகத்திலே இருக்கப் போறதில்லே. இன்னும் அஞ்சு வருஷமோ பத்து வருஷமோ இருந்தாலே பெரிய காரியம்.”

“ஆனால் அந்த அஞ்சு வருஷம் பத்து வருஷத்துக்குள்ளே எல்லாமே திவாலாகிப் போயிரும். கரும்பாயிரம் வகையறாக்கள் கூழைக் கும்பிடு போட்டே எங்கப்பாவைச் சுரண்டித் தின்னுடப் போறாங்க.”

“ஆறே மாசத்திலே ஒழுங்கு படுத்தலாம்! கவலைப்படாதீங்க குமரேசன்.”

“பவர் ஆஃப் அட்டர்னி வாங்கிக்கிட்டு எங்கப்பாவை ஆறு மாசம் ஃபாரின் டூரோ க்ஷேத்திராடனமோ அனுப்பிச்சாத் தான் நீங்க நினைக்கிற சீர்திருத்தங்களை எல்லாம் பண்ண முடியும். அவரைப் பக்கத்திலே வைச்சுகிட்டு எதையுமே பண்ண முடியும்னு எனக்குத் தோணலே. ரொம்பக் கஷ்டப்படும்.”

“ஏன் அப்படிச் சொல்றீங்க! உங்க ஃபாதர் எந்த வகையிலே இடைஞ்சலா இருப்பார்?”

“ஓடவும் விடமாட்டார், நிற்கவும் விடமாட்டார்! கரும்பாயிரத்தை டிஸ்மிஸ் பண்ணிக் கணக்குத் தீர்த்து அனுப்பிச்சீங்கன்னா அவன் நேரே ஓடிப்போய் ‘முதலாளி நீங்க தான் என்னைக் காப்பாத்தணும்’ன்னு அப்பா கால்லே நெடுஞ்சாண் கிடையாக விழுந்துவிடுவான். அப்பாவுக்கு ஒரு விக்னஸ். காலிலே விழுந்துட்டால் மனசு இளகிடும். அவனைக் கைவிடமாட்டார், இப்படிக் கால்லே விழுந்தே காக்காய்ப் பிடிக்கிற ஆளாகத்தான் அவர் இங்கே வச்சிருக்கார். அத்தனை பேரும் கால்லே விழுந்து மறுபடியும் வேலையிலே நுழைஞ்சிடுவாங்க. அதனாலே ‘ஆபரேஷன் நியூ பார்கவி’ கவுண்ட்டவுனுக்கு முன்னே அப்பாவை அப்புறப்படுத்தியாகணும்.”

வெளிநாட்டுக்குப் போகச் சொல்லிப் பாஸ்போர்ட் விசா எடுத்துக் கொடுந்து அனுப்பலாமா? அல்லது காசி ராமேஸ்வரம்னு க்ஷேத்ராடனம் அனுப்பலாமா?”

“ரெண்டுமே சுலபமில்லை சார். அப்பா ஊறின கிணத்துத் தவளை. சுலபத்திலே குருபுரத்தை விட்டு வெளியேறச் சம்மதிக்க மாட்டார். வெளியிலே போனலும் உடனே மூச்சுத் திணறிப் போய்க் காற்றைச் சுவாசிக்கவே பிடிக்காமல் மறுபடி கிணற்றுக்குள்ளேயே துள்ளிக் குதித்து விடுகிற சுபாவம் அவருக்கு. அதனாலே அவருக்குச் சந்தேகம் வராதபடியும் அவரை உடனே திரும்பவிடாத படியும் கவனிக்க அம்மாவையும் கூடவே அனுப்பி வைக்கணும். உள்நாட்டிலேயே க்ஷேத்ராடனம்னு அனுப்பினால் அவர் பாதியிலேயே டக்குனு திரும்பி வந்துடற அபாயம் இருக்கு. ரிஸ்க்தான். அட்லாண்டிக் ஓஷன் வழியாகப் புறப்பட்டு பசிபிக் வழியாகச் சுற்றிக் கொண்டு உலகம் பூராவும் வலம் வருகிற ஒரு ‘ரவுண்ட் த வோர்ல்ட் ட்ரிப்’ கப்பல்லே அவரையும் அம்மாவையும் சேர்ந்து அனுப்பணும்.”

இதைக் கேட்டுக் குப்தாவும் ஆடிட்டரும் வயிறு வெடிக்கச் சிரித்து ஓய்வதற்குச் சில நிமிடங்கள் ஆகின.

“சிரிக்காதீக்க. நான் விளையாட்டுக்குச் சொல்லலே, சீரியஸாகவே சொல்றேன். அப்பாவுக்குப் பயமும் சந்தேகமும் அவநம்பிககையும் அதிகம். யாரையும் எதையும், நம்ப மாட்டார். அதே சமயத்தில் தான் நம்பறவங்க மோசமானவங்க ளான்னு பார்க்காமெ தொடர்ந்து நம்பிக்கொண்டே இருப்பார். மாறுதலும் வளர்ச்சியும் உடனிகழ்ச்சியான விஷயங்கள். வளர்ச்சியின்றி மாறுதலும் மாறுதலின்றி வளர்ச்சியும் கிடையாதுங்கிறதை எங்கப்பா ஒப்புக்க மாட்டார். அதுதான் பிரச்னை. அதனாலே மாறுதலை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சிக்கு முதற்கட்டமாக நீங்க செய்யணுங்கிற மாறுதலுக்கு அவர் பெரிய முட்டுக்கட்டையாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.”

“அவரை இங்கேயே வைத்துக் கொண்டு ‘ஆபரேஷன் நியு பார்கவி’ முடியாதுங்கிறீங்க?”

“ஐ யம் ஹண்ட்ரெட் பர்ஸெண்ட் ஷ்யூர் எபௌட் இட்.”

“அப்போ வெளிநாட்டுப் பயண யோசனைதான் சரியான காரியம்.”

“ரொம்ப சரி, அந்த யோசனையை அவர்கிட்டே யார் சொல்லறதுங்கிறதுதான் இப்ப கேள்வி, பூனைக்கு யார் மணியைக் கட்டி விடறது? யார் கட்டி விட்டால் பூனை மணியைக் கட்டிக் கொள்ளும் என்பதெல்லாம் தான் பிரச்சினை.”

“அந்த விஷயத்தை நாங்க பார்த்துக்கறோம். மிஸ்டர் குமரேசன். ஆறு மாசமோ, ஒரு வருஷமோ அவரை வெளிநாட்டுக்குக் கப்பலேத்தி அனுப்பிடறது எங்க பொறுப்பு.”

“அது அத்தனை சுலபமில்லை மிஸ்டர் குப்தா! அப்பாவோட பிறவிக் குணங்களில் ஒன்று கஞ்சத்தனம். ‘இந்த வயசுக்கு மேலே நாங்க உலகத்தைச் சுற்றிப் பார்த்து என்ன ஆகப் போகிறது? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். வீண் செலவு’ன்னுடுவார்.”

“பின்னே என்னதான் வழி அவர் இங்கேயே கூட இருந்தால் ஒண்ணுமே மாறுதல் செய்ய முடியாதுங்கறீங்க. வெளியே புறப்பட்டுப் போகவும் சம்மதிக்க மாட்டார்ன்னு சொல்றீங்க. ஆபரேஷன் நியூ பார்கவியை எப்படி லாஞ்ச் பண்றது?”

“அப்பாவே சம்மதிச்சு வெளிநாடு கிளம்ப ஒரே ஒரு வழி தான் இருக்கு, அதுக்கு மட்டும் அவர் கட்டுப்படுவார்.”

“என்ன?” என்று குப்தா ஆடிட்டர் இருவருமே ஏக காலத்தில் குமரேசனை ஆவலோடு கேட்டனர். எப்படியாவது பிரச்சினை தீர்ந்தால் போதும் என்றிருந்தது அவர்களுக்கு.

“இதற்காக அவருடைய ஆஸ்தான ஜோசியர் கடுக்கையூர் கண்ணபிரானை அணுகி அவர் மூலமாக இந்த வெளிநாட்டுப் பயண யோசனை அப்பாவுக்குப் போகணும். குப்தாவோ ஆடிட்டரோ நானோ அண்ணனோ இதிலே சம்பந்தப்பட்டிருக்கோம்னாக் கூட அவர் சந்தேகப்படுவார். ஸ்பாண்டேனியஸா ஜோசியரே தேடிவந்து பேசிக்கிட்டிருக்கிறாப்போல இந்த ஃபாரின் ட்ரிப்பைப் பற்றி யோசனை சொல்லணும்.”

“அந்த ஜோஸியர் எப்படிப்பட்டவர்? ஒத்துவரக்கூடிய ஆளா? உங்கப்பா மாதிரி முரண்டு பிடிக்கறவரா? அது தெரியணுமே?” குப்தா கடுக்கையூர் பற்றி உடனே விசாரித்தான்,

“கடுக்கையூராருக்கு எங்கப்பா பத்து ரூபாய் குடுப்பாரு, நாம் நூறு ரூபாய் குடுத்தா சொன்னபடி கேட்டுட்டுப் போறாரு.”

“ஆனா அவருக்குக் கூட நிஜமான காரணம் தெரியப் படாது. பின்னலே வம்பு! அதுனாலே தினுசாச் சொல்லணும். வாழ்நாள் பூராவும் இந்தக் கிராமத்திலேயே கிடந்து உழல் கிறார். கொஞ்சம் வசதியா அவரை உலகம் சுத்திப் பார்க்க ஏற்பாடு பண்ணனும்னு நினைக்கிறோம். செலவுக்குப் பயந்து மாட்டேம்பாரு. அவர் நன்மைக்காக நீங்கதான் அதை வற்புறுத்திச் சொல்லிப் பிரயாணத்துக்கு அவரைச் சம்மதிக்க வைக்கணும்னு கடுக்கையூரார்கிட்ட நம்ம அப்ரோச் இருக் கணும்,” என்றார் ஆடிட்டர்.

“இல்லாட்டா அநாவசியமா ஃபேமிலி மேட்டர்ஸ் வெளியிலே வதந்தியாகி நாறிப் போகும்.”

“மெல்ல அந்த ஜோசியரை இங்கே வரவழையுங்க. நான் ஏதோ பார்க்கணும்னு சொன்னதாக் கூட்டிட்டு வாங்க. கொஞ்சம் தாராளமாகக் கவனிக்கிறேன். அப்புறம் அவரிடம் சிவவடிவேலு மேட்டரை ஆரம்பிப்போம்” என்றான் குப்தா.

ஜோசியரை அழைத்து வருகிற பொறுப்பைக் குமரேசனிடமும் ஆடிட்டரிடமும் விட்டான் குப்தா.

ஆடிட்டரும் குமரேசனும் உடனே குருபுரம் மிராசுதார் சிவவடிவேலுவின் ஆஸ்தான ஜோசியரான கடுக்கையூர்க் கண்ணபிரானைத் தேடிக்கொண்டு அவருடைய வடக்குத் தெரு ஜோதிஷ கலாநிலையத்துக்கு விரைந்தனர்.

அத்தியாயம் - 8

மாணவர்கள் போராட்டம் இப்படி அப்படி என்று ஒரு வழிக்கு வராமல் இழுபடவே ‘பார்கவி’யின் கல்லூரி மேலும் பதினைந்து நாளைக்குத் திறக்கப்பட மாட்டாது போலிருந்தது. பார்கவி அது பற்றிக் கவலைப்படவில்லை. மிஸஸ் குப்தாவைக் காரில் மலைக்கு அழைத்துச் செல்வது, ஆஞ்சநேயர் தரிசனம், ஏலக்காய் எஸ்டேட்டைச் சுற்றிக் காண்பிப்பது, அருவிக்கு நீராட அழைத்துச் செல்வது, குருபுரத்தைச் சுற்றியுள்ள இயற்கை அழகுமிக்க இடங்களுக்குப் பிக்னிக் கூட்டிப் போவது என்று பார்கவியின் நாட்கள் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் கழிந்தன.

ஒரு நாள் திருமதி குப்தா தான் யாரிடமோ கேள்விப்பட்டிருக்கிற ஒரு விஷயத்தைப் பார்கவியிடம் நாசூக்காகச் சிரித்தபடி வினவினாள்.

“நீ மலை மேலிருக்கிற ஆஞ்சநேயர் கோவிலுக்கு அடிக்கடி போவதுண்டா பார்கவி?”

“ஆமாம் அக்கா. ஏன் கேட்கிறீங்க?”

“கன்னிப் பெண்கள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு - அதாவது பஜ்ரங்பலி மந்திருக்குப் போய் அடிக்கடி சுற்றினால் சீக்கிரம் கல்யாணம் ஆகும்னு இங்கே தெற்கே ஒரு நம்பிக்கை உண்டுங்கிறாங்களே...?”

பார்கவியின் முகம் குங்குமமாய்ச் சிவந்தது.

“என்னடி, நான் கேட்கிறேன். நீ பாட்டுக்குப் பதிலே சொல்லாமல் இருக்கிறாய்?”

“நீங்க என்னைக் கேலி பண்றீங்க அக்கா.”

“கேலி ஒண்ணும் இல்லேடி! சும்மா ஒரு அகடெமிக் இண்ட்ரெஸ்டிலேதான் கேட்டேன்.”

“ஆமாம். அப்படி ஒரு நம்பிக்கை உண்டு. ஆனா நான் அந்தக் கோவிலுக்கு அடிக்கடி போகிறதுக்குக் காரணம் அது இல்லே அக்கா. இந்த மலை ஆஞ்சநேயர்தான் எங்களுக்குக் குலதெய்வம்.”

“பஜ்ரங்பலியே ஒரு கட்டைப் பிரம்மசாரி! ஒரு கட்டைப் பிரம்மசாரியைப் போய் ஆண் பிள்ளைக்காக ஏங்கும் கன்னிப் பெண்கள் சுத்தறதிலேயும் வேண்டிக்கிறதிலேயும் என்ன அர்த்தம் இருக்க முடியும்? வேடிக்கையான பிரர்த்தனையாகத் தான் இருக்கிறது.”

“பின்னென்ன? கல்யாணமாகாமே ஏங்கறவங்க கட்டை பிரம்மச்சாரியைச் சுற்றாமல் கிழவனையா சுத்திகிட்டிருப்பாங்க?”

“அடி கள்ளி! கேட்டயேடி ஒரு கேள்வி செஞ்சுரி அடிச்ச மாதிரி! ஒண்ணுந் தெரியாதவள் மாதிரி இருந்துக்கிட்டு.... என்னென்ன பேசறேடி நீ?”

இப்படித் திருமதி குப்தா வகையாகப் பார்கவியை மடக்கியபோது அவள் தலை குனிந்தாள்.

“அதுக்கில்லே அக்கா. கல்யாணமாகாத கன்னிப் பெண்களின் ஏக்கம் கல்யாணமாகி இந்தப் பக்கம் ஒண்ணும் அந்தப் பக்கம் ஒண்ணுமா ரெண்டு ரெண்டா வள்ளி - தேவானை, ருக்மிணி - சத்தியபாமான்னு நிறுத்தி வச்சுக்கிட்டு ஜாலியா இருக்கிற முருகன், கிருஷ்ணனுக்கு எல்லாம் தெரிய நியாயமில்லே, கல்யாணமே ஆகாத அனுமாருக்குத்தான் அது அனுபவரீதியாகத் தெரிஞ்சுருக்கும்னு நினைச்சோ என்னவோ, கன்னிப் பெண்கள் அனுமார் கோவிலைச் சுத்தறது அனுமார் படத்திலே வால் பக்கமாய்க் குங்குமப் பொட்டு வைக்கறதுன்னெல்லாம் பழக்கமா இருக்கு.”

“நான் கேட்டது அகடெமிக் க்வஸ்சன்! நீ சொல்றது அனுபவபூர்வமான பதில்டி பார்கவி,” என்று கண்களைச் சிமிட்டினாள் மிஸஸ் குப்தா. இயற்கையிலேயே படு அழகான மிஸஸ் குப்தா கண்களைச் சிமிட்டும்போது மேலும் அழகா யிருந்தாள். அவளோடு பழக ஆரம்பித்த பின் பார்கவி எவ்வளவோ மாறியிருந்தாள். வெறும் மரப்பாச்சி மாதிரி, இருந்த அவளை உயிர்த் துடிப்புள்ளவளாக மாற்றியிருந்தாள் திருமதி குப்தா. அவளிடம் அப்படியே வசியப்பட்டுப் போயிருந்தாள் பார்கவி.

“பார்கவி! உனக்கும் எனக்கும் நிறைய ஒத்துமை இருக்குடி! உங்கப்பாவும் ஓட்டல் வச்சிருக்கார். எங்கப்பாவும் ஓட்டல் வச்சிருக்கார். எங்கே தெரியுமா? சிம்லாவிலே, எங்க வீட்டுக்காரருக்குச் சொந்த ஊர் லக்னோ. இவரை நான் கல்யாணம் பண்ணிக் கொண்டதே ஒரு சுவாரஸ்யமான கதை. இப்போ உங்கப்பாவோட ஓட்டல் இருக்கிற மாதிரி எங்கப்பா வோட சிம்லா ஓட்டல் நஷ்டத்திலே முழுகிப் போயிருந்தது. எங்கப்பாவுக்கு மெயின் பிஸினஸ் ஆப்பிள் வியாபாரம். சிம்லாவிலேயும் சுற்றுப்புறத்திலேயும் மனாலியிலேயுமா நாலைந்து பெரிய ஆப்பிள் அர்ச்சார்ட்ஸ் சொந்தமா இருக்கு. ஆப்பிள்ல நிறையச் சம்பாதிச்சு, சிம்லாவிலே ஒரு பழைய ஓட்டலை விலைக்கு வாங்கினார். அவரோட போறாத காலம் ஓட்டல் நடத்தத் தெரியாம ரொம்ப நஷ்டப்பட்டார். அப்பத்தான் இவர் அமெரிக்காவிலே எம்.பி.ஏ. முடிச்சிட்டு வந்து லக்னோவில இந்த மாதிரி நவீன பிராக்டீஸ் எடுபடாதுன்னு டெல்லியிலே கன்னாட் பிளேஸில் ஒரு மாடி அறையை வாடகைக்குப் பிடிச்சு ‘பிஸினஸ் டாக்டர்’னு போர்டு மாட்டியிருந்தார். ‘பிஸினஸ் டாக்டர்’னா என்னன்னே புரியாமே ரொம்பப் பேர் தலைவலின்னும் வயித்து வலின்னும் இவரைத் தேடி வந்து அறு அறுன்னு அறுத்துக்கிட்டிருந்த சமயத்திலே எங்கப்பாவுக்கு யாரோ விவரம் சொல்லி இவரைக் கூப்பிட்டால் ஓட்டலை லாபத்துக்குக் கொண்டு வந்துடுவார்னாங்க. என் தம்பி அஜீத்தை டெல்லிக்கு அனுப்பி இவரை உடனே கையோட சிம்லாவுக்கு அழைத்து வரச் செய்தோம். அப்போ பிப்ரவரி மாசம். மார்ச், ஏப்ரல். மே, ஜூன், ஜூலை சிம்லாவிலே கோடை சீசன். அந்த சீசன் டயத்துக்கு முன்னாடியே ஓட்டலை ஒழுங்கு பண்ணிக்கணும்னுதான் இவரை பிப்ரவரியிலே அங்கே வரவழைச்சோம். இவரைச் சந்திச்சதிலேருந்து எனக்கும் இவருக்கும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு.”

“லவ்வா அக்கா?”

“அப்படித்தான்னு வச்சுக்கயேன்.”

“உம்... சுவாரஸ்யமா இருக்கு. மேலே தொடர்ந்து சொல்லுங்க அக்கா!”

“அப்புறம் அந்த சீஸன் முழுக்க சிம்லாவிலேயே எங்க வீட்டு மாடியிலேயே தங்கினார். இவர் கூறிய யோசனைகளின்படி அப்பாவும், என் தம்பி அஜீத்தும் ஓட்டலை நடத்தினதில் அந்த சீஸன் முடிவிலேயே லாபம் தெரிஞ்சுது. இவர் டில்லி புறப்படத் தயாரானார்.”

“அப்புறம்...?”

“கேளுடீ! சுவாரஸ்யமான திருப்பம் இப்பத்தான் வரப் போறது. அப்பாவுக்கும் என் தம்பிக்கும் இவரை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ரெண்டு சாதிக்காய்ப் பெட்டி நிறைய ‘ஏ’ கிரேடு கோல்டன் டெலிஷியஸ் ஆப்பிளை எடுத்து வச்சுத் தொகை போடாத கையெழுத்துப் போட்டு ஒரு ‘செக்’ லீஃபை நீட்டி ‘நீங்க விரும்புற தொகையைப் போட்டுக்கலாம்’னாங்க. இவர் புன்புறுவல் பூத்தார். ‘நான் இதிலே எதைப் பூர்த்தி பண்ணினாலும் குடுப்பிங்களா’ன்னு எங்கப்பாவைப் பார்த்துக் கேட்டார். ‘நிச்சயமாகக் குடுப்பேன்’ என்றார் எங்கப்பா. உடனே இவர் பேனாவைத் திறந்து செக்கிலே காலியாயிருந்த இடத்திலே, ‘சுஷ்மாவை எனக்குக் கல்யாணம் செய்து கொடுக்கவும்’ என்று சிரித்துக் கொண்டே என் பெயரை எழுதி எங்கப்பாவிடம் நீட்டினார்.”

இந்த இடத்தில் பார்கவி தமிழ் சினிமா ரசிகைபோல் உற்சாக மேலிட்டுக் கரகோஷம் செய்தாள். சில நிமிஷங் களுக்கு நிற்காமல் தொடர்ந்தது அவள் கைதட்டல்.

“அவசரப்படாதே! கேள்... எங்கப்பா உடனே அதுக்குச் சம்மதிக்கலே. ‘இரண்டு நாள் தங்குங்கள்! என் முடிவைச் சொல்கிறேன்’ என்று அமுத்தலாக இவருக்குப் பதில் சொல்லி விடவே எனக்குக் கவலையாய்ப் போயிற்று. தம்பி அஜீத்தை லக்னோவுக்கு அனுப்பி இவருடைய பூர்வோத்தரங்களை விசாரித்த அப்பா இவரே பெரிய கோடீசுவரன் வீட்டுப் பிள்ளை என்று தெரிந்ததும் பயந்துவிட்டார்.

“மிஸ்டர் குப்தா நான் பரம ஏழை! உங்க பெற்றோர் என்னோட மகளை நீங்கக் கட்டிக்கச் சம்மதிப்பாங்களா?” என்று இவரை எங்கப்பா கேட்டார்.

“என் பெற்றோர் நான் சொல்றதைக் கேட்பாங்க. எனக்குப் பிடித்த பெண்ணை நான் மணந்து கொள்வதை அவர்கள் விரும்புவார்கள்” என்றார் இவர். அப்புறம் அடுத்த வாரமே எங்க கல்யாணம் நடந்ததடி பார்கவி!”

“ஏதோ இந்தி சினிமா பார்கிற மாதிரி இருக்கே அக்கா” என்று சுஷ்மா குப்தாவைக் கிண்டல் செய்தாள் பார்கவி. உடனே கேட்டாள். “உங்கப்பாவோட சிம்லா ஓட்டல் இப்போ எப்படி இருக்கு அக்கா?”

“இப்போ அது அப்பா நிர்வாகத்திலே இல்லேடி! அவர் ஆப்பிள் தோட்டங்களோடு நின்றுவிட்டார். என் தம்பி அஜீத் ஓட்டலைப் பிரமாதமா நடத்தறான். இன்னிக்குத் தேதியிலே சிம்லாவிலே முதல்தரமான ஓட்டல் அதுதான்.”

“அப்போ உங்க கணவர் சிகிச்சையிலே எங்க ஓட்டலும் பிழைச்சுடும்னு சொல்லுங்க அக்கா!”

“ஒரே ஒரு வித்தியாசம்! எங்கப்பா என் தம்பிக்குச் சின்ன வயசாச்சேன்னு தயங்காமே பிஸினஸ் டாக்டர் கூறியபடி ஓட்டல் நிர்வாகத்தை அவனிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக் கொண்டார். என் தம்பி அஜீத்தும் கடினமா உழைச்சு லாபம் பார்த்து இன்னிக்கு நைநிடால்லே இன்னொரு ஓட்டலையும் கட்டிக்கொண்டிருக்கிறான். நைநிடால் ஓட்டலைத் திறந்து லாபம் காட்டுகிற வரை அவனுடைய திருமணத்தைக் கூட ஒத்திப் போட்டிருக்கிறான் என்றால் பார்த்துக்கொள்! உங்கப்பாவும் தன் பிள்ளைகளுக்குச் சுதந்திரம் அளித்து ஓட்டலை வளர்க்கச் சொல்லணும்னு என் கணவர் அபிப்பிராயப்படுகிறார் பார்கவி.”

“எங்கப்பாவா...?” என்று இழுத்து வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்தினாள் பார்கவி.

“என்னடி மழுப்பறே? உங்கப்பா செய்ய மாட்டாரா? ஓட்டல் தொழில், சினிமாத் தொழில் இதெல்லாம் இளமையும், சுறுசுறுப்பும் உற்சாகமும் மேலும் மேலும் ஒன்றை அழகுப் படுத்திப் பயனடைய வேண்டும் என்கிற முனைப்பும் உள்ளவர்கள் மட்டுமே செய்ய முடிந்தவை. ஸினிக்காகவும் வறட்சியாகவும் கஞ்சத்தனமாகவும் இருக்கிறவர்கள் ஓடியாடி உற்சாகமாக உழைக்க இயலாத முதியவர்கள் ஆகியோருக்கு இந்தத் தொழிலை வளப்படுத்த வாய்ப்புக் குறைவு.”

“நீங்க சொல்றதை நான் மறுக்கலே அக்கா! எங்க குடும்ப நிலைமை வேற. மூத்த அண்ணன் அப்பாவோட போக்குப் பிடிக்காம சண்டை போட்டுகிட்டுப் போயிடிச்சி. சின்ன அண்ணனுக்கும் அப்பாவுக்கும் ஒத்து வரலே! ஆடிட்டர் சொன்னார்னு இந்த ரெண்டுங் கெட்டான் ஊர்ல இருக்கிற முதலோடு கடனே ஒடனை வாங்கிப் போட்டு என் பேர்ல இந்த ஓட்டலை அப்பா கட்டிப்பிட்டாரு. இது சரியா நடக்கலே.”

“இந்த ஊருக்கு என்னடி குறை? சிம்லா விட இது பெரிய ஊருடி! அங்கேயாவது சீஸன் மாசங்களிலேதான் ஓட்டலுக்கு மவுஸ். இங்கே பன்னிரெண்டு மாசமும் ஜனப் புழக்கம் இருக்கு. நடத்தற விதமா நடத்தினா எல்லாம் சரியா ஆகும். உங்கப்பாதான் மனசு வைக்கணும்” என்றாள் சுஷ்மா குப்தா. அப்பாவின் செல்லப் பெண்ணான பார்கவியே இப்போது தன் தந்தையின் அணுகுமுறைகளை மனசுக்குள் விமரிசிக்க முற்பட்டாள்.

அத்தியாயம் - 9

ஆடிட்டர் அனந்தும், குமரேசனும் ஜோதிஷ கலாரத்னம் கடுக்கையூர்க் கண்ணபிரானைச் சந்திக்கக் கிளம் பினபோது குமரேசன் பாதி வழியிலேயே கத்திரித்துக் கொள்ள முயன்றான்.

“ஆடிட்டர் சார். இந்த ஆள் குப்தா மோஸ்ட் மாடர்ன் அவுட்லுக் உள்ளவன். ஒரு ஸிக் இன்டஸ்ட்ரிக்குச் சிகிச்சை அளிக்கிற சகல கெட்டிக்காரத்தனமும் அணுகுமுறையும் இந்தக் குப்தாகிட்ட இருக்கு. அதிலே சந்தேகமே இல்லே, ஆனால் இங்கே நோய்வாய்ப் பட்டிருப்பது தொழில் அல்ல. தொழிலை நடத்தும் நபரே நோய்வாய்ப் பட்டிருக்கிறார். தொழிலுக்கு வைத்தியம் பண்ணத்தான் இந்தக் குப்தாவாலே முடியும். எங்கப்பாவுக்கு வைத்தியம் பண்ணறது ரொம்பச் சிரமமான காரியம். அது இவனையே நோய் வாய்ப்படச் செய்துவிடுமோ என்று பயமாயிருக்கு எனக்கு. பாவம், ஏராளமான தன்னம்பிக்கைகளுடன் இவனும் இவன் இளம் மனைவியும் இந்த ரெண்டும்கெட்டான் ஊரிலே வந்து சிரமப்படுகிறார்களே என்று பரிதாபமாயிருக்கு. இந்த வம்பிலே என்னை வேறு மாட்டி விடுகிறீர்களே? நான் எதற்கு? நீங்களே ஜோசியரைப் பார்த்துப் பேசக் கூடாதா?”

“அட நீ ஒண்ணு. என் கூட வாப்பா. தைரியத்தை விட்டுடாதே, எப்படியும் உங்கப்பாகிட்ட இருந்து தொழில்களை மீட்டுக் காப்பாத்தியாகணும்ப்பா, அதுவும் இந்த ஓட்டல் ஐடியா நான் கொடுத்தது. அதுனாலே இதை நான் ஒழுங்கு பண்ணியாகணும்.”

“அப்படியானா அப்பாவை ஃபாரின் டிரிப் அனுப்பறது மட்டும் போதாது. அண்ணன் தண்டபாணியை வரவழைக் கணும், தனியா என்னாலே மட்டும் முடியாது. சொத்துக்கும் கடனுக்கும் வாரிசு நாங்க மூணு பேரும். செய்யற எந்த மாறுதலையும் மூணு பேரும் அறியச் செய்யணும், பார்கவியைக் கூடச் சேர்த்துத் தான் சொல்றேன்.”

“எல்லாம் எனக்குத் தெரியும்ப்பா, வா, முதல்லே ஜோஸ்யர் கிட்டே அவர் மூலமா அப்பாவைத் தள்ளி விட வழி பார்க்கலாம், மற்றதை எல்லாம் அப்புறம் பேசிப்போம்.”

அவர் இத்தனை பேசிய பின்பு தான் குமரேசன் பொறுமையாக அவருடன் செல்ல இணங்கிச் சென்றான். அவர்கள் போன போது ஜோசியர் பூஜையில் இருந்தார். காத்திருக்க வேண்டியதாயிற்று. பூஜை முடிந்து அவர் வந்ததும் ஆடிட்டர்தான் ஆரம்பித்தார். குப்தாவைப் பற்றிச் சொன்னார். உடனே ஜோஸியரே முந்திக் கொண்டு, “அடேடே அவர்தானா? நேற்று சிவவடிவேலுவே பிரச்னம் மாதிரிக் கேட்க வந்திருந்தார். ‘குப்தான்னு யாரோ பிஸினஸ் வைத்தியராம். ஆடிட்டர் கூப்பிட்டு வந்து தங்கியிருக்காரு. வந்தன்னிக்குக் காலம்பரப் பலகாரச் செலவே நூற்று எழுபது ரூபா ஆயிடுச்சு! அவன் என்னமாச்சும் பண்ணி உருப்படியா ஓட்டல் லாபத்துக்கு வருமான்னு சோழியை உருட்டிப் பார்த்துச் சொல்லும் ஒய்’ன்னு என்னைக் கேட்டாரு. சோழி போட்டுப் பார்த்தேன். பிரமாதமா வந்திச்சு. ‘செலவைப்பத்தி யோசிக்காதேயும். இந்தப் பிஸினஸ் வைத்தியர் சொல்ற யோசனைப்படி நடந்தா பார்கவியில் பொன் கொழிக்கும்'ன்னு சொல்லியனுப்பி வச்சேன்,” என்றார் ஜோசியர். ஒளிவு மறைவின்றி நடந்ததைச் சொல்லிவிட்டார் அவர்.

“இப்போ அந்தக் குப்தாவே உம்மகிட்டி அவன் சொந்த விஷயமா ஏதோ கேட்கணும்கிறான்,” என்றார் ஆடிட்டர்.

“பேஷா... நானே வரட்டுமா? அவனை இங்கே அழைச்சுக்கிட்டு வர்றீங்களா?” என்று முக மலர்ந்தார் ஜோஸியர்; பழம் நழுவிப் பாலில் விழுந்தது.

“கார் கொண்டாந்திருக்கோம். அங்கேயே போகலாம் வாங்க” என்றான் குமரேசன். பஞ்சாங்கப் புத்தகங்களையும் சில சுவடிகளையும் சோழிகள் அடங்கிய பட்டுப் பையையும் எடுத்துக் கொண்டு ஜோஸியர் அவர்களோடு உடனே புறப் படத் தயாரானார்,

குப்தா ஜோஸியரை எழுந்து நின்று பிரமாதமாகக் கும்பிட்டு வரவேற்றான். தொழில் ரீதியாகப் பயன்படுவதற்காக ஜோஸியர் கொஞ்சம் இந்தி கற்று வைத்திருந்தார். குப்தா ஜோஸியரிடம் இந்தியில் பேசினான். ஜோசியரும் அவனிடம் இந்தியில் பேசினார். ஒரு மணிநேரம் தனக்கு ஏதோ ஜோஸியம் பார்ப்பது போல் பாவனை பண்ணி அவரை ஆழம் பார்த்தான் குப்தா. அப்புறம் நூற்று ஒரு ரூபாய் தட்சணை கொடுத்தான். ஜோசியர் முகம் மலர்ந்தது. வாயெல்லாம் பல்லாகச் சிரித்தார், அதுதான் சமயம் என்று ஆடிட்டிர் குமரேசன், குப்தா மூவருமாக ஜோசியரை மெல்ல வழிக்குக் கொண்டு வரப் பார்த்தார்கள், ஆடிட்டர்தான் ஆரம்பித்தார்.

“ஜோசியரே! உம்மாலே ஒரு நல்ல காரியம் ஆகணும்...”

“என்ன? உடனே சொல்லுங்க ஆடிட்டர் சார்! இப்பவே செய்துடலாம்” என்று அபார உற்சாகத்தோடு பதில் வந்தது ஜோசியரிடமிருந்து...

“ஒண்னுமில்லே! நம்ம சிவவடிவேலு இருக்காரே, அவர் வசதியிலே நாலுலே ஒரு பங்கு வசதி கூட இல்லாத வடக்குத் தெரு மொஹிதீன் பாய், தெற்குத் தெரு பாக்குத்துாள் வியாபாரி பரமசிவம் இவங்கள்லாம் பேப்பர்லே ‘பான் வாயேஜ்’னு விளம்பரம் போட்டு அமெரிக்கா, ஐரோப்பான்னு போயிட்டு வந்துட்டாங்க. இவரு இவ்வளவு பெரிய பணக்காரரா இருந்து என்ன பிரயோசனம்? ஆடிட்டர்ங்கிற முறையில ‘ஒரு ஃபாரின் ட்ரிப் போயிட்டு வாங்க... உங்க மதிப்பு ஊர்லே அதிகமாகும்’னு தினம் சொல்லிப் பார்க்கிறேன். அசைய மாட்டேங்கறாரு. சாகறதுக்குள்ளவாவது அவரை ஒரு ஃபாரின் ட்ரிப் அனுப்பணும்னு பிரியப்படறோம்.”

“பேஷா இதிலே கஷ்டமென்ன? கரும்பு தின்னக் கூலியா? போங்கன்னு சொன்னால் போக வேண்டியதுதானே?”

“போக மாட்டேங்கறாரே! குரு ஸ்தானத்திலே இருக்கிற நீங்க சொல்றபடி சொன்னாக் கேட்டாலும் கேட்பார்ன்னு நினைக்கிறேன்.”

“அவரோட ஆடிட்டரா இருக்கிற நீங்க சொல்லியே கேட்காதவர் நான் சொல்லியா கேட்கப் போறாரு?” என்று மெல்லப் பின்வாங்கினார் ஜோசியர்.

“அப்படிச் சொல்லாதீங்க ஜோசியரே! நீங்க சொல்ற விதமாச் சொன்னாக் கேட்பார்னு தோணுது.”

“எப்படிச் சொல்லணும்கிறீங்க?”

“அது உங்களாலே முடியும். ஒரு நல்ல காரியத்தை எப்படி வற்புறுத்திச் சொல்றதுன்னு ஜோசியத்திலே ஆயிரம் இடம் இருக்கு.”

“சொல்லலாம். ஆனால் பொய்யாயிடப் படாதேன்னு பார்க்கிறேன்.”

“நல்ல காரியத்துக்காகச் சிவவடிவேலுவோட புகழுக்காக அவரோட ஜோசியராகிய நீங்க ஒரு பொய் சொன்னால் கூடத் தப்பில்லேங்கிறது எங்க அபிப்ராயம் ஜோசியரே” என்று கூறியபடி ஒரு தட்டில் தயாராக வைத்திருந்த வெற்றிலே பாக்குப் பழத்துக்கு நடுவே இன்னும் ஒரு நூறு ரூபாய்த் தாளேச் செருகி எடுத்து நீட்டினார் ஆடிட்டர்.

“எந்த மாதிரி அவர் ஒப்புக் கொள்ற விதமாச் சொல்ல முடியும்னுதான் யோசிக்கிறேன்,” என்றபடியே தட்டை வாங்கிக் கொண்டார் ஜோசியர்,

“அதெல்லாம் உங்க இஷ்டத்துக்கு விட்டுடறோம். வர்ற முதல் தேதி அவரும் ஆச்சியும் ஃபாரின் போறாங்க. உங்களைத் தான் நம்பியிருக்கோம்.”

“உங்க நம்பிக்கை வீண் போகாமல் நான் பார்த்து முடிச்சுக் கொடுக்கிறேன்.”

‘எப்படிச் செய்யப் போகிறீர், என்ன சொல்லப் போகிறீர்?’ என்று கடுக்கையூராரை அவர்கள் துருவித் துருவிக் கேட்கவில்லை. அவர் இஷ்டப்படி விட்டுவிட்டார்கள்.

“சிவவடிவேலு சார் சில முக்கிய விஷயங்களிலே என்னோட யோசனையைக் கேட்டுக் கிரக சஞ்சாரம் தசாபுத்தி களோட போக்கைத் தெரிஞ்சுக்காமே எதையும் பண்ணமாட் டார். இதுக்கு முன்னலேயேகூட ரெண்டொரு தரம் எங்க ஆடிட்டர் ஃபாரின் டிரிப் ஃபாரின் டிரிப்னு என்னை உயிரை, எடுக்கிறாரே? ஜாதகம் என்ன சொல்லுது? கிரகங்கள் எப்படி இருக்குன்னெல்லாம் என்னைக் கன்ஸல்ட் பண்ணியிருக்கார். நான் அப்பல்லாம் கூட அவரை ஒரேயடியா டிஸ்கரேஜ் பண்ணிடல. ‘சமயம் வரும், நானே உங்களுக்குச் சொல் றேன்’னுதான் தள்ளிப் போட்டிருக்கேன். ஒண்ணே ஒண்ணு தான் யோசனை பண்ணுவார். பணம் செலவாகுமேன்னு நினைப்பார். இந்த எழுபது வயசிலே ஃபாரின் போய் என்ன ஆகணும்னு சலிச்சிப்பார். அதுக்கு வழி எங்கிட்டே இருக்கு. நான் பார்த்துக்கிறேன்,” என்றார் ஜோசியர்.

குமரேசன் ரொம்ப ஜாக்கிரதையாயிருந்தான், அப்பா வுடைய வெளிநாட்டுப் பயணம் பற்றித் தான் எதுவும் பேசி விடாமல் தவிர்த்தான். ஏனென்றால் எங்காவது தப்பித் தவறிப் பேச்சுவாக்கில் வாய் தவறிக்கூட ஜோசியர், உங்க செகண்ட் சன் குமரேசன் கூட நீங்க வெளிநாடு போகணும்னு ஆசைப் பட்டுச் சொல்றான்னு பிரஸ்தாபித்துவிட நேர்ந்தால் அப்பா சந்தேகப்படுவார். போகவே மாட்டார், அதற்குப் பயந்து ஜோசியரைத் தூண்டுவதை எல்லாம் ஆடிட்டரே செய்து கொள்ளட்டும் என்று விட்டிருந்தான் குமரேசன்.

“காரியத்தை முடித்து நல்ல வார்த்தை சொல்லுங்கள்! உங்களை விசேஷமாகக் கவனிக்கிறேன், என்னோட ‘கிளையண்ட்’ களிலேயே பரம்பரைப் பெரிய மனுஷன் - அதிகப் பணக்காரர் சிவவடிவேலுன்னு பேரு. அவர் இன்னும் ஒரு ஃபாரின் ட்ரிப் கூடப் போகலேன்னு நான் வெட்கப்பட வேண்டியிருக்கு, முந்தாநாள் பணம் பண்ணின புதுப் பணக்காரன் லாட்ரி டிக்கெட் வாங்கி லட்சாதிபதியானவன்லாம் மறு நாளே சிங்கப்பூர், ஜப்பான்னு பறக்கிறான். இத்தனை பெரிய மனுஷன் சாகறதுக்கு முன்னே பிளேன் ஏறி நாலு நாடு பார்த்தார்னு இல்லாமே போயிடிப் படாது.”

“கவலைப்படாதேயும்! நீர் நினைக்குறது நடக்கும்” என்று ஆடிட்டருக்கு உறுதியளித்தார். ஜோசியர் கடுக்கை யூரார்.

மறுநாள் மாலையே அந்த அதிசயம் நடந்தது. பார்கவியின் நோய்களை டயக்னைஸ் பண்ணி முடிந்ததும் தாங்களே அவரைக் கூப்பிடுவதாகவும் அதற்குமுன் அவர் அனாவசியமாகத் தன்னையோ ஆடிட்டரையோ பார்க்க வரவேண்டாம் என்று குப்தா சிவவடிவேலுக்குச் சொல்லி வைத்திருந்தான். அதனால் அந்தப் பக்கம் வராமலே வீட்டில் இருந்த சிவவடிவேலு மறுநாள் சாயங்காலம் ஆடிட்டரைத் தேடிக் கொண்டு பார்கவிக்கு வந்தார். கவலையாகக் காணப்பட்டார்.

“ஆடிட்டர் சார், ஒரு முக்கியமான விஷயம். உங்ககிட்ட கன்ஸ்ல்ட் பண்ணலாம்னு வந்தேன்.”

“என்ன சொல்லுங்க?”

“நீங்க ஃபாரின் டிரிப் ஃபாரின் டிரிப்னு வற்புறுத்திட்டிருந்தீங்களே. அதுக்கு இப்போ நேரம் வந்திருக்கு. இப்போ இருக்கிற கஷ்டநஷ்டம் பணமுடை எல்லாத்தையும் பார்க்கறப்போ தயக்கமாகவும் இருக்கு.”

“கஷ்ட நஷ்டம் என்னிக்கும் இருக்கத்தான் இருக்கும். அலை ஓய்ந்து கடல்லே நீராடுறதுங்கிறது நடக்கிற காரியம் இல்லே. அலை பாட்டுக்கு இருக்கும். நாம குளிச்சுத்தான் ஆகணும்.”

“இது பண விஷயம். இப்ப இருக்கிற நஷ்டத்திலே... கட்டுப்படியாகணுமே?”

“அதெல்லால் எங்கிட்ட விட்டுடுங்க, ஒரு டிராவல் ஏஜெண்ட் குரூப் குரூப்பா அவனே ஏற்பாடு பணிக் கூடவே அழைச்சிட்டுப் போறான். நம்ம தமிழாளுதான், பாஷைப் பிரச்சினை இல்லை. ஓட்டல் அகாமடேஷனும் அவனே பண்ணிடுவான். ‘மாதவி டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்’னு பேர். பிராமாதமாகவே பண்றார்” என்றார் ஆடிட்டர்.

அத்தியாயம் - 10

சிவவடிவேலு. ஆச்சியும் தாணுமாகப் பயணம் புறப்பட வேண்டும் என்று வந்தபோது ஆடிட்டருக்கு உடனே அந்த ஜோதிட கலாரத்தினம் கடுக்கையூர் கண்ணபிரானைச் சந்தித்து கனகாபிஷேகம் செய்துவிட வேண்டும் போலிருந்தது. கோல்டு கண்ட்ரோல் ஆக்ட் - தங்க விலை ஏற்றம் எல்லாம் தடுத்திரா விட்டால் அதைச் செய்தே இருப்பார்.

“தனியாப் போகப்படாதாம்! தம்பதி சமேதராப் போகணும்னு ஜோசியர் சொல்றாரு.”

“பலே! ஹனி மூன் மூன் - அதாவது ஸெகண்ட் ‘ஹனி மூன்’ மாதிரிப் போயிட்டு வாங்க....”

“எனக்கு மனசே இல்லே! ஆனா எதையுமே வற்புறுத்தாத ஜோசியர் இதை வற்புறுத்தறாரு. இங்கே என்ன டான்ன திருப்பதி மொட்டை மாதிரி எல்லாமே பாதியிலே நிக்கிது. இந்தப் பிஸினஸ் வையத்தியரை வேறு வரவழைச் சிட்டோம். ஆனா ஜோசியர் நான் திரும்பி வரப்போ எல்லாமே அமோகமா இருக்கும்கிறாரு.”

“ஒண்ணும் கவலைப் படாதீங்க; இந்தக் குப்தாவை நான் பார்த்துக்கிறேன். நீங்க திரும்பி வரப்போ ஓட்டல் பார்கவி புதுச இருக்கும். அபார லாபத்திலே நடக்கும்.”

“அதுதான் எப்டீன்னு புரியலே. எள் புள்ளைங்க ரெண்டுமே தறுதலை, ஆச்சி என்கூட வந்துடுது. நீங்களும் பார்கவியுமாய்ப் பார்த்து எதினாச்சும் பண்ணினாத்தான் உண்டு.”

“ஓட்டல், மத்ததுலே ஏதாவது சேஞ்சேஸ் பண்ணணும்னு உங்க கையெழுத்தைத் தேடி அலையணும், அதுனால் பார்கவி பேருக்குப் ‘பவர் ஆஃப் அட்டர்னி’ குடுத்துட்டுப் போயிடுங்க! நாங்க அவசியமானதைப் பண்ணிக்கிறோம்.”

“பார்கவிக்குக் குடுக்கலாமா? அல்லது கரும்பாயிரம் பயல் விசுவாசமானவன், மானேஜர்ங்கிற முறையிலே அவனுக்கு டெம்பரவரியாப் பவர் குடுத்து எழுதித் தந்திட்டுப் போகட்டுமா?”

“அதெல்லாம் வேண்டாங்க! ஆயிரமிருந்தாலும், உங்க பொண்ணு பேரிலேயே எழுதிக் குடுத்திட்டுப் போறதுதான் நல்லது. அப்படியே செய்யுங்க.”

“எனக்கு ஒண்ணும் தெரியாது. நீங்களே அதெல்லாம் எப்படி எப்படிப் பண்ணனுமோ அப்படிப் பண்ணிடுங்க. புறப்படறது உறுதியானதும் கையெழுத்துப் போட்டுக் குடுத்துடறேன்.”

ஆடிட்டர் அனந்துக்குத் தன் செவிகளையே நம்ப முடியவில்லை. எதற்கும் ஆயிரம் யோசனைகள் பண்ணி இரண்டாயிரம் முறைகள் தயங்கக் கூடிய சிவவடிவேலுவா இப்படிச் சொல்கிறார் என்பதை நம்பவே முடியாமல் இருந்தது. ஜோசியர், என்ன சொக்குப் பொடி போட்டு மயக்கி அவரைச் சம்மதிக்க வைத்தார் என்று மர்மமாயிருந்தது. ஒரு பைசா செலவுக்கு முன் இருநூறு முறைகள் யோசித்துத் தயங்கும் கஞ்ச மகாப் பிரபுவை எப்படி இந்த மாதிரித் துணிய வைத்தார் என்பது பெரிய ஆச்சரியமாயிருந்தது, அவரால் நம்பவே முடியவில்லை.

பத்து வருஷங்களாகத் தான் திரும்பத் திரும்ப வற்புறுத்தியும் வெளியே கிளம்ப மறுத்த ஒரு நாள்பட்ட பழைய கிணற்றுத் தவளையை இவர் எப்படிச் சரிப்படுத்தி வெளியே கிளப்பினார் என்று வியந்தார் ஆடிட்டர். ஜோசியரின் சாதுரியத்தைக் கொண்டாடினார்.

இதைக் குப்தாவிடம் தெரிவித்தபோது அவன் உடனே ரூம்பாயைக் கூப்பிட்டு, எக்லேர் சாக்லேட் வாங்கிவரச் செய்து ஆடிட்டர், தன் மனைவி சுஷ்மா, உடனிருந்த பார்கவி, குமரேசன் எல்லோருக்குமே வழங்கினான்.

“ஆபரேஷன் நியூ பார்கவிக்கு முக்கியமான இடைஞ்சல் கிளியராகிவிட்டது. நாம் முதலில் நினைத்ததுபோல் சிவவடிவேலு கப்பலில் போகமாட்டார் போலிருக்கிறது. அதனால் ஒரு வருஷமோ பத்து மாசமோ அவகாசம் கிடைக்காது. அங்கங்கே அதிக நாட்கள் தங்கச் செய்து அவரது பிரயாண ஷெட்யூலைத் தயாரித்தால்கூட அட்லாண்டிக் ரூட்டில் கிளம்பி மறுபடி ஹவாய், ஹோனலுலு, ஜப்பான், ஹாங்காங். பாங்காக், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மலேஷியா, சிங்கப்பூர் வழியாகப் பசிபிக் ரூட்டில் திரும்ப ஆறு மாதத்துக்குள்தான் ஆகும்! அதுக்கு மேலே இழுக்க முடியாது.”

“ஆறு மாதம் போதும்! அதுக்குள்ளே இந்த உலகத்தையே மாத்திப்பிடலாம்,” என்றான் குப்தா.

“உலகத்தை மாத்திடறது சுலபம்! ஆன எங்கப்பா பண்ணியிருக்கிற குழப்பங்களை மாத்தறது உலகத்தை மாத் தறதைவிடக் கஷ்டம்,” என்றான் குமரேசன். அவனால் இன்னும் முழுசாக நம்ப முடியவில்லை.

“அட நீ சும்மா இருப்பா! ஒரே பெஸிமிஸ்டா இருக்கியே? உங்கப்பாவே மாறிக்கிட்டிருக்காரு. அவரே மாறுகிறப்போ அவர் பண்ணியிருக்கிற ஏற்பாடுகளை மாத்தறதா கஷ்டம்? நம்ம முயற்சியிலே, மலையையே புரட்டியாச்சு. அதாவது உங்கப்பாவையே ஆச்சியோடு ஃபாரின் ட்ரிப் போகத் துணியற அளவு மாத்திப் பிட்டோம். இனிமே மத்ததை மாத்தறது சுலபம்தான்.”

“ஆச்சியோட போறாரா? மழைதான் கொட்டப் போவுது. எச்சிக் கையாலே காக்காய் ஓட்ட மாட்டாரு. நூறு ரூபாய் முழு நோட்டா இருந்தா அதை மாத்தினால் எங்கே செலவழிஞ்சு போகுமோன்னு மாத்தமாட்டாரு. பத்து ரூபாய், ஐந்து ரூபாய் - அவ்வளவு ஏன் முழு ஒரு ரூபாய் நோட்டைக் கூட மாத்தினாச் செலவழிஞ்சிடுமேன்னு பயந்தே மாத்தமாட்டாரு. ஒரு ரூபாய்க்குக் கீழே சில்லறையா இருக்கிறதைத் தான் துணிஞ்சு செலவழிப்பாரு. அவரு மதுரைக்குப் போனால்தான் கான்சாமேட்டுத் தெருக் கையேந்தி பவனுக்குப் போற இரகசியமே இதுதான்! அந்த ஒரு தண்ணீர்ப் பந்தல்லேதான் ரெண்டு இட்லி ஒரு வடை ஒரு சுக்குக் காபி - மொத்த பில் தொண்ணுாற்றைந்து காசு வரும்! அப்படிப்பட்டி மனுஷன் இப்போ தானும் ஆச்சியுமா ஃபாரின் டிரிப் போகப் போறார்னால் பெரிய விஷயம். ஆஃப் சீஸன் கன்செஷன் ஏர் டிக்கெட்லே போனால் கூட ரெண்டு டிக்கெட் எழுபதினாயிரம் வரை ஆகும். அப்புறம் செலவுக்கு ஃபாரின் எக்சேஞ்ச் வேற லட்ச ரூபாய்க்கு மேலே ஆயிரும். ஒரு ரூபாயை மாத்தி அதைச் சில்லறையாக்கி விடத் தயங்கற அப்பா இப்போ ஒரு லட்சத்தை மாத்தப் பேறார்! என்னமோ புரட்சிதான் பண்றீங்க ஆடிட்டர் சார்!”

“கிரெடிட் கோஸ் டு கடுக்கையூர்! எல்லாம் அவர் பண்ணின மாயம்தான் அப்பா!” என்றார் ஆடிட்டர். குமரேசன் ஆடிட்டரிடமும் பிஸினஸ் டாக்டரிடமும் மகிழ்ச்சியோடு கை குலுக்கினான். இப்ப அக்டோபர் மாசம் சார்! உலக வரலாற்றிலே எது எதையோ அக்டோபர் புரட்சி, நவம்பர் புரட்சின்னெல்லாம் சொல்றாங்க. உண்மையிலே இதுதான் சார் குருபுரத்தைப் பொறுத்தவரை அக்டோபர்ப் புரட்சி. அடுத்த மாசம் அதாவது நவம்பர் ஒண்ணாந் தேதி எங்கப்பா ஃபாரின் புறப்படறாரே அதுதான் நவம்பர்ப் புரட்சி!”

“குமரேசன், சரியான புரட்சிப் பேர்வழிதான்! எப்பவும் புரட்சியிலேயே இருக்கான் பாருங்க,” என்று சொல்லிச் சிரித்தார் ஆடிட்டர்.

“ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி! மாகாளி பார்கவியில் கடைக்கண் வைத்தாள்,” என்று பட்டி மன்றங் களில் பேசுவது போல் பாரதியார் பாட்டைக் கொஞ்சம் மாற்றிப் பாடிக் காட்டினான் குமரேசன்.

“குமரேசா! உன் டில்லி அண்ணனுக்கு உடனே நான் சொன்னதாக ஒரு கடிதம் எழுது. அவனைப் பதினைந்து நாள் லிவு போட்டுவிட்டு மனைவியோடு இங்கே புறப்பட்டு வரச் சொல்லு.”

“அவசரப்பட்டு அண்ணனை வரவழைத்தால் ஆபத்து சார்! அண்ணனைப் பார்த்ததுமே அப்பாவுக்கு எரிச்சல் கிளம்பி ஃபாரின் டிரிப்பையே கான்சல் பண்ணிடப் போறார்.”

“நெவர்: எக்காரணத்தினாலும் இந்த டிரிப் கான்ஸல் ஆகாது. ஜோசியர் ஸ்ட்ராங்கா என்னமோ பண்ணியிருக்கார்.”

“ஒரு புரட்சி ஜோசியராலே நிகழ்ந்திருக்கிறது என்றால் அது முதல் தடவையாக இப்போதுதான் உலக வரலாற்றிலேயே இந்தக் குருபுரத்திலே நடந்திருக்கிறது சார்!”

“அட, நீ என்னப்பா இன்னமும் பட்டிமன்றத்திலேயும் கருத்தரங்கத்திலேயும் பேசற மாதிரியே உலக வரலாறு, புரட்சி அது இதுன்னு என்னென்னமோ பேசிட்டிருக்கே? உங்கண்ணனை வரவழைச்சு உருப்படியாச் சொத்துக்களைக் காப்பாத்தியாகணும். இல்லாட்டி சரக்கு மாஸ்டரும், கரும்பாயிரமுமே உங்களை சைபராக்கிப்பிடுவாங்க...”

“அதெல்லாம் நடக்காது சார்! கசக்கிப் பிழிகிற வேகத்திலே கரும்பாயிரத்தைத் துரும்பாயிரமாப் பீஸ் பீஸ் ஆக்கிப் போட்டுருவேன்.”

“கடைசி நிமிஷத்திலே பணம் அதிகம் செலவாகும் அது இதுன்னு சாக்குப் போக்குச் சொல்லி நிறுத்திடப் போறாரு! நீங்களே டிராவல் அரேன்ஜ்மெண்ட்ஸைப் பண்ணுங்க. நீங்களே டிராவல் ஏஜென்ட் மூலமா பாஸ்போர்ட் ஏற்பாடும் கவனிச்சுக்குங்க” என்று குப்தா மீண்டும் ஆடிட்டரை எச்சரித்தான். ஆடிட்டர் மறுநாள் சிவவடிவேலு, திருமதி சிவவடிவேலுவிடம் உரிய பாரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பாஸ்போர்ட் விசா வகையறாவுக்காக ஒரு டஜன் போட்டோக்களையும் பிரிண்ட் போட்டு எடுத்துக் கொண்டு சென்னை புறப்பட்டார்.

சிவவடிவேலு புறப்படுகிற தினத்தன்று எல்லா முக்கிய தினசரிகளிலும், ‘உலக நாடுகளில் ஓட்டல் தொழிலின் நுணுக்கங்களை அறிந்துவர ஓட்டல் பார்கவி அதிபர் துணைவியுடன் பயணம்’ என்று சிவவடிவேலு தம்பதியர் படத்துடன் விளம்பரம் வரவேண்டும் என்று ஆடிட்டர் தயாரித்து எடுத்துக் கொண்டார். அந்த விளம்பர டிராஃப்ட்டைப் படித்துப் புன்னகை புரிந்த குமரேசன், “உலக நாடுகளிலே அங்கங்கே உருப்படியா நடக்கிற ஓட்டல்களைக் கெடுக்காமல் எங்கப்பா திரும்பி வந்தாலே புண்ணியம் சார்” என்றான்.

“ரொம்பத்தான் கிண்டல் பண்ணாதே! விளம்பரம்னு கொடுக்கறப்ப வேற எப்படிப்பா குடுக்கிறது?” என்று ஆடிட்டர் அவனைக் கடித்து கொண்டார். எதற்கும் சென்னை புறப்படு முன்னால் இவ்வளவு தூரம் காரியத்தை இசைவாக்கிக் கொடுத்த ஜோசியரை நேரில் பார்த்துவிட்டு வந்துவிடலாமே என்று மேலும் ஒரு முழுப் பச்சை நோட்டுடன் ஜோசியரைப் பார்க்கக் கிளம்பினார் ஆடிட்டர் அனந்த்.

“என்னய்யா மந்திரம் போட்டீர்? மனுஷன் பொட்டிப் பாம்பாய் அடங்கிப் போய்த் தானே பரம சாதுவா எங்கிட்டத் தேடி வந்து, ‘நீங்க பல தடவை சொன்ன யோசனையை இப்ப நான் ஏத்துக்கிறேன். நானும் ஆச்சியும் ஃபாரின் ட்ரிப் போறோம். அரேன்ஜ் பண்ணிடுங்க’ன்னு கூலாச் சொல்லிட்டாரே? எப்பிடி ஐயா இது முடிஞ்சுது?” என்று ஜோசியரைப் பார்த்ததுமே ஆவல் தாங்காமல் கேட்டார் ஆடிட்டர்.

“அது பரம ரகசியம் வேண்டாம். விட்டுடுங்க!” என்று நழுவினார் ஜோசியர். ஆடிட்டரின் ஆவலை இது அதிக மாக்கியது.

அத்தியாயம் - 11

“பரவாயில்லை! நான் வேறு யாரிட்டவும் சொல்ல மாட்டேன். எனக்குத் தெரியாத எந்த ரகசியமும் மிஸ்டர் சிவவடிவேலு குடும்பத்திலே கிடையாது. நான் வேறு யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் கூடப் பண்ணத் தயாராயிருக்கேன்,” என்று கூறியபடியே சட்டைப் பையிலிருந்து நூறு ரூபாய் நோட்டை உருவினார் ஆடிட்டர்.

“உங்க வேண்டுகோளுக்காகச் சில நல்லதை எதிர்பார்த்து ஒரு பொய் சொல்லியிருக்கேன். வேற யாரிடமும் சொல்றதில்லேன்னு சத்தியம் பண்ணித்தான் சிவவடிவேலுவே இதைத் தெரிஞ்சுக்கிட்டிருக்கார்.”

“நானும் அதே மாதிரித் தெரிஞ்சுக்கறேன்.”

“நீங்க தெரிஞ்சுக்கிறது தப்பில்லே. சொல்லப்போனா நீங்க விரும்புறதாலேதான் நானே இதைப் பண்ணியிருக்கேன்” என்று இழுத்தபடியே போய் வாயிற் கதவைத் தாழிட்டுவிட்டு வந்தார் ஜோசியர். பின்பு குரலை மெல்லத் தணித்து ரகசியம் பேசுவதற்கேற்ற லோ கியரில் போட்டு. “நவம்பர் முதல் தேதியிலிருந்து ஒரு ஆறு மாச காலம் நீங்க உங்க பார்யா ளோட கடல் கடந்து தூர தேசத்திலே பிரயாணம் பண்றது நல்லது. ஏன்னா அந்தக் கால கட்டத்திலே சொந்த க்ஷேத்திரம் - சொந்த தேசம் எங்கே நீங்க இருந்தாலும் ‘அபிமிருத்யு பயம்’ உங்களுக்கு நிச்சயமா இருக்கு! தூர தேசம் போய்ப் பரிகாரமா அங்கே பிரயாணம் பண்ணினாத் தான் தப்பிக்கலாம். நிச்சயமா இதை நீங்க கேட்டே ஆகணும். தொண்ணுறு வயசு வரை தீர்க்காயுசா இருக்கப் போறீங்க ஆனா இந்த அபமிருத்யு கண்டத்தை மட்டும் நீங்க தாண்டிட்டாக் கவலை இல்லேன்னேன். சிவவடிவேலு ஆடிப் போய் விட்டார். நல்லாப் பார்த்துச் சொல்லுங்கன்னு வற்புறுத்தினார். ‘நல்லாப் பார்த்துத்தான் சொல்றேன். உங்க உப்பைத் தின்னு வளர்ந்திருக்கிறேன். நீங்க தீர்க்காயுசா இருந்தால் தான் நான் க்ஷேமமா இருக்க முடியும்’னு என் கண்ணைத் துடைத்துக் கொண்டேன். சிவவடிவேலு மறுபேச்சுப் பேசாமல் ஒப்புக் கொண்டுவிட்டார்” என்றார் ஜோசியர்.

சந்தேகத்தைத் தெளிவு செய்துகொள்ளும் பொருட்டு “அபமிருத்யு பயம்னா என்ன ஜோசியரே?” என்பதாகக் கேட்டார் ஆடிட்டர்.

“அதாவது துர்மரண பயம்! சிவவடிவேலு புரிந்து கொண்டு விட்டார். அவருக்கு ஜோஸ்யத்திலே அபார நம்பிக்கை. நில உச்சவரம்பு காரணமாகப் பூமியை வித்து ஓட்டல் கட்டலாம்னு நீங்க யோசனை சொல்லி விட்டாலும் அப்பவே எங்கிட்ட வந்துதான் ‘சரிப்படுமா’ன்னு பிரசினம் கேட்டார். ‘முதல்லே சிரமப் பட்டாலும் பின்னலே போகப் போக இந்த ஓட்டல் தங்கச் சுரங்கமாப் பணத்தை அள்ளித் தரும்’னு பச்சைக் கொடி நான்தான் காமிச்சேன் அப்போ.”

“சரி, அதுக்கும் சேர்த்து வச்சுக்கும்” என்று மேலும் ஒரு நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்தார் ஆடிட்டர்.

“நீங்க க்ஷேமமா இருக்கணும்.”

“இனிமேல்தான் உம்ம ஆசீர்வாதம் பலிக்கணும். இது வரைக் கஷ்டம்தான்” என்று சிரித்தார் ஆடிட்டர்.

“தயவு செய்து இந்த விஷயம் நமக்குள்ளே இருக்கட்டும். ‘அபமிருத்யு பயம்’னு சொல்றதுக்கு எனக்கே பிடிக்கலை. என்னமோ போல இருந்தது. மனுஷன் கருமி கஞ்சன், இது மாதிரிச் சொல்லிப் பயமுறுத்தினாலொழியக் கிளம்ப மாட்டார்னு பட்டது. சொல்லிட்டேன். எதுக்குமே பயப்படாத சிவவடிவேலு, மரணம்னு சொன்னதும் அப்படியே வெலவெலத்துப் போயி உடனே பிரயாணத்துக்குச் சம்மதிச்சுட்டார். உங்க வேண்டுகோளைத் தட்ட முடியாமல் இந்தப் பாபத்தைப் பண்ணும்படி ஆயிட்டது மிஸ்டர் அனந்த்.”

“இதிலே ஒரு பாபமும் இல்லை. ஜோசியரே! நெருப்புன்னு சொன்னாலே வாய் வெந்தா போயிடப் போறது? சிவவடிவேலு தீர்க்காயுசா இருப்பார். அவரோட வாரிசுகளும் தீர்க்காயுசா இருக்க நாம் பாடுபடறோம். அவ்வளவுதான்.”

ஜோசியருக்கு ரகசியத்தைப் பாதுகாப்பதாக மீண்டும் வாக்களித்த பின் அவரிடம் விடை பெற்றார் அனந்ந். அதன் பின் ஏற்பாடுகள் ஜெட் வேகத்தில் நடந்தன. பார்கவி பேருக்குப் பவர் பத்திரம் முதல் தேவையான கையெழுத்துக்கள் பெறப்பட்டன. வேஷ்டி முழுக்கைச் சட்டை தவிர வேறு உடுப்புக்களே அணிந்து பழக்கப்படாத சிவவடிவேலுவுக்கு ஒரு சூட் கோட் தைக்க அளவு எடுக்கப்பட்டது. ஆறுமாத காலம் பயணம் என்பதால் இரண்டு ஸெட் சூட்டும் கோட்டும் தைத்துக் கொள்ளச் சொல்லிக் குப்தா யோசனை சொன்னான். தையல் கூலி உள்பட முதல் தரமான உல்லனில் இரண்டு செட் சூட் கோட் தைக்க மூவாயிரம் முதல் மூவாயிரத்து ஐந்நூறு வரை செலவாகும் என்றவுடன் சிவவடிவேலு மறுபடி தொட்டாற் சுருங்கி ஆகிப் பின்வாங்கினார்.

“ஒரு நாள் கூத்துக்குத் தலை சிரைத்த கதையாயில்ல இருக்குடி! ஆறு மாச நாடகத்துக்காக மூவாயிரம் நாலாயிர ரூபாய்க்குக் குழாய் தைக்கணுமா? ஒரு புண்ணாக்கும் வேணாம்; நான் ரெண்டு கம்பளிப் போர்வையை எடுத்துகிட்டுப் போயிட்டு வர்றேன்” என்றார் அவர்.

இதைக்கேட்டு ஆடிட்டருக்கு அழுவதா சிரிப்பதா என்று ஆகிவிட்டது.

“உங்க ஸ்டேட்டஸ்க்கு அப்படி எல்லாம் பண்ணக் கூடாது. கம்பளியும் வேஷ்டியுமாப் போனிங்கன்னாத் தேயிலைத் தோட்டத்துக் கங்காணி மாதிரி இருக்கும். அதெல்லாம் கூடாது. நீட்டா கோட்டும் சூட்டும் போட்டு டை கட்டி விட்டு நான் மேக்அப் பண்ணி அனுப்பறேன். அசல் குருபுரம் சமஸ்தானத்துக் குட்டி சமஸ்தானாதிபதி மாதிரி நீங்க போய் இறங்கணும்! அந்தக் குளிர்லே வேஷ்டி சட்டை எல்லாம் தாங்காது. உங்க வயசையும் யோசனை பண்ணிப் பாருங்க” என்று குப்தா அவரைக் கெஞ்சினான். ஆடிட்ரும் வற்புறுத்தினார்.

“சரி! தைச்சுத் தொலைக்கலாம்” என்று வேண்டா வெறுப்பாகத்தான் டைலருக்கு அளவு கொடுத்தார் சிவவடிவேலு. இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் அவரை மன்றாடி ஜாக்கி போட்டுத் தூக்கி நிறுத்தித் தயார்ப்படுத்த வேண்டியிருந்தது.

“இந்தாங்க ஆடிட்டர் சார்! கார்டமம் எக்ஸ்போர்ட் மார்க்கெட் விலை டல்லாயிருக்கிறாப்புலத் தெரியுது. பார்கவி பாட்டுக்கு அவசரப்பட்டுடப் போவுது. பிரைஸ் தூக்கலா இருக்கிறப்ப கோடெளன்லே இருக்கிற ஏலக்காயை வெளியில விடுங்க. கவனம்’’ என்று ஆடிட்டரை எச்சரித்தார். கடைசி நிமிஷம் வரை இப்படித் தொணதொணப்பு நீடித்தது.

“பிஸினஸ் லைத்தியரு என்ன சீர்த்திருத்தம் வேணும்னாப் பண்ணட்டும். கரும்பாயிரத்தைக் கலந்து பேசிப் பண்ணுங்க. ரொம்ப நன்றி விசுவாசமுள்ளவன். அவன் எனக்குத் துரோகம் நினைக்க மாட்டான். அவன் இல்லாமே ஓட்டல் பார்கவி இல்லே,” என்றார். அவர்களுக்குப் பகீரென்றது.

வலது காதில் வில்வப் பூ, கழுத்தில் ருத்ராட்சம், முகத்தில் ஒரு சந்தனக் கீற்று, அதன் மேல் விபூதி, அதற்கும் மேல் ரெட்டைக் குங்குமப் பொட்டு, பருத்த சரீரம் - இத்யாதி லட்சணங்களுடன் கரும்பாயிரத்தை நினைத்தபோதே ஒரு நவீன ஓட்டல் மானேஜராகத் தெரியவில்லை. குப்தாவுக்கு ஒரே எரிச்சல். கிராமக் கணக்குப் பிள்ளையின் தோற்றம் அல்லது மிராசுதார் வீட்டுக் காரியஸ்தரின் அமைப்புள்ள ஒரு ருத்ராட்சப் பூனையை எப்படி ஒரு மாடர்ன் ஓட்டலில் நிர்வாகியாக அனுமதிப்பது?

சிவவடிவேலு கிளம்புகிற வரை அவர்கள் மூச்சு விடவில்லை. எல்லாரும் சிவவடிவேலு தம்பதிகளை மதுரை விமான நிலையத்திலேயே வழியனுப்பி வைத்தார்கள். ஆடிட்டர் அனந்த் மட்டும் பம்பாய் வரை போய்விட்டு வந்தார்.

சிவவடிவேலு தம்பதிகள் புறப்பட்டுச் சென்ற மறுதினம் டில்லியிலிருந்து அவருடைய மூத்த மகன் தண்டபாணியும் அவன் மனைவியும் குருபுரம் வந்து சேர்ந்தார்கள்.

அதற்கு மறுநாள் பார்க்கவியின் மெயின் கேட் இழுத்துப் பூட்டப்பட்டுப் பார்கவியின் கையெழுத்துடன் குளோஸர் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

முதல் நாள் இரவு எல்லாருக்கும் சட்டிப்படி கணக்குத் தீர்க்கப்பட்டது, கரும்பாயிரமும், சரக்கு மாஸ்டரும் மட்டும் கொஞ்சம் முரண்டினார்கள். குப்தாவும், குமரேசனும் அவர்களை அழைத்து, “நீங்கள் ரெண்டு பேரும் இங்கே செய்திருக்கிற கையாடல்கள், ஊழல்கள் பற்றி ஆதாரபூர்வமா நிரூபிக்க முடியும். மரியாதையா ஒதுங்கிக்குங்க! இல்லாட்டி கோர்ட்டிலே சந்திக்க வேண்டியிருக்கும்” என்று மிரட்டிய பின்பே இருவரும் வழிக்கு வந்தனர்.

ஆபரேஷன் ‘நியூ பார்கவி’ ஸ்மூத் ஆகத் தொடங்கியது. எல்லா விவரங்களையும் விவரித்து மூத்தவன் தண்டபாணியைக் கன்வின்ஸ் செய்ததும் அவன் மேலும் ஆறு மாத லீவுக்கு அப்ளை பண்ணினான். இவர்களோடு தங்கி ஒத்துழைக்க இணங்கினான்.

குப்தா பம்பாயிலிருந்தும் டில்லியிலிருந்தும் இண்டீரியர் டெகரேஷனுக்குச் சிலரை வரவழைத்தான். இதற்கிடையே சிம்லாவிலிருந்து குப்தாவின் மாமனாருக்கு உடல்நலமில்லை என்று தந்தி வரவே மிஸஸ் குப்தா அங்கு விரைய வேண்டி நேர்ந்தது.

“ஐயையோ அக்கா! நீங்க இல்லாமே இங்கே எனக்குப் போரடிக்கும். நானும் உங்க கூட சிம்லாவுக்கு வரட்டுமா?” என்று முரண்டு பிடிக்கும் சிறுகுழந்தைபோல் சுஷ்மாவைக் கெஞ்சினாள் பார்கவி.

“எனக்கு ரெட்டைச் சந்தோஷம் பார்கவி! நீ உங்க அண்ணன்கள் கிட்டே ஒரு வார்த்தை கேட்டுக்கோ. அப்புறம் ரெண்டு பேருக்குமா பிளேன் டிக்கெட் எடுத்துடலாம். சண்டிகர் வரை பிளேன்லே போயிட்டோம்னா, அங்கே வந்து கூட்டிக் கொண்டு போக அஜீத் கார் அனுப்பியிருப்பான். அவனுக்கு டெலக்ஸ் அனுப்பிடலாம். ஆப்பிள் தோட்டம் பழங்களாய்க் குலுங்கும் சீசன் இது. அதெல்லாம் சுத்திப் பார்க்கலாம் இப்போ...” என்றாள் சுஷ்மா. குப்தாவிடம் சொல்லிப் பார்கவியின் சகோதரர்களிடம் அவளை அழைத்துப் போக அனுமதி பெறுமாறு சுஷ்மாவே ஏற்பாடு செய்தாள். பார்கவியும் இரண்டு அண்ணன்களிடமும் கேட்டாள். அவர்கள் சம்மதித்தார்கள்.

“இதுவரை அப்பா உன்னை அடைச்சு வைச்சுப் பாழாக்கிட்டாரு. அங்கே இங்கே போயி நாலு மனுஷாளோடப் பழகினால் தான் உலகம் புரியும்,” என்று சொல்லவே செய் தான் குமரேசன்.

“போயிட்டு வாம்மா! நீ மிஸஸ் குப்தாவோட போறது உங்க சொந்த அக்காவோடு போகிற மாதிரி. நீ திரும்பி வர்றப்ப இந்தப் பார்கவியும் புதுசா இருக்கும். நீயும் புதுசா ஃபிரஷ்ஷா சிம்லா ஆப்பிள் மாதிரி வரணும்” என்றார் ஆடிட்டர். ஓட்டல் பார்கவி சம்பந்தமாகச் சில செக் லீஃப்கள், ரிகார்டுகளில் கையெழுத்து வாங்கிக் கொண்டார். மறுநாள் சுஷ்மாவும் பார்கவியும் சிம்லா புறப்பட்டனர்.

பிஸினஸ் டாக்டர் குப்தாவும், ஆடிட்டரும், சிவவடிவேலு மகன்களும் ஓட்டல் பார்கவியை - ஓட்டல் நியூ பார்கவியாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருந்த சமயத்தில் வெளியேறிய கரும்பாயிரம் வகையறாக்கள் பல வதந்திகளைக் கிளப்பி விட்டனர். சேற்றை வாரி இறைத்தனர்.

சிவவடிவேலுவை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு ஆடிட்டர், குப்தா இருவரும் எதோ குழப்பம் பண்ணுவதாகவும், ஓட்டலை விற்கப் போவதாகவும், அசைவ ஓட்டலாக மாற்றப் போவதாகவும் பல்வேறு வதந்திகளைப் பரப்பினார்கள். குருபுரம் போன்ற ஓர் இரண்டுங் கெட்டான் ஊரில் வதந்திகள் தானகவே வளரும். அதைப் பொருட்படுத்தாமல் பார்கவி மாறுதல் பெற்றுக் கொண்டிருந்தாள். ஆபரேஷன் நியூ பார்கவிக்குப் பதினாறு லட்சம் மேற்கொண்டு முதலீடு தேவைப் பட்டது. பாங்கு ஓ.டி. லிமிட் ஏற்கனவே தாண்டியிருந்தது. கடனும் இருந்தது. சிவவடிவேலுவின் இருப்பில் அவர் வெளிநாடு போகும் செலவுக்கு எடுத்தது போக மூன்று லட்சமே இருந்தது.

அத்தியாயம் - 12

வேலைகளைத் தொடங்கி இருந்தாலும் பணப்பிரசின இப்போது தயங்க வைத்தது.

“என்ன ஆடிட்டர் சார், வேற ஏதாவது ரிஸோர்சஸ் உண்டா?” என்றான் குப்தா.

“கோடெளன்ல ஏலக்காய் இருக்கு. மார்க்கெட் நிலவரம் சரியில்லே. விலை ஏறினால் அஞ்சு அஞ்சரை லட்சத்துக்குப் போகும். பணம் ரியலைஸ் ஆக நாள் பிடிக்கும்.”

“என்னோட பெர்ஸனல் சேவிங்க்ஸ் வகையில் ஒன்றரை லட்சம் இருக்கு” என்றான் மூத்தவன் தண்டபாணி.

குப்தா அலுத்துக் கொண்டான். “இதெல்லாம் போதாது. எடுத்த காரியம் வேகமா முடியணும். உங்கப்பா திரும்பறதுக்குள்ள மாறுதல் பண்ணி ஓட்டல் திறந்து நடந்தாகணும்.”

“பிரைவேட் லோன் ட்ரை பண்ணலாமா? உள்ளூர்லியே பார்ப்போம்,” என்றான் குமரேசன்.

“அது கிடைக்காதுப்பா! பில்டிங் மேலே ஏற்கெனவே கடன் இருக்கு. உங்கப்பாவும் ஊர்ல இல்லே. இந்த ஊர் பணக்காரங்க எல்லாமே பயந்தாங் கொள்ளிகள், தரமாட் டாங்க,” என்று ஆடிட்டர் அதையும் மறுத்துவிட்டார்.

“வெயிட் எ மினிட் எனக்கு ஒரு ஐடியாத் தோணுது. முயற்சி பண்ணிப் பார்க்கலாம். அநேகமாகப் பலிக்கும்... எதுக்கும் லெட் அஸ் டேக் எ சான்ஸ்,” என்று சிம்லாவில் தன் மைத்துனன் அஜீத்துக்கு ஒரு டெலக்ஸ் அடித்தான் குப்தா.

குப்தாவின் அதிர்ஷ்டம் அவன் மனைவியும் அப்போது சிம்லாவில் இருந்ததால் அஜீத் அவளைக் கேட்டானே என்னவோ அன்று இரவே மறு டெலக்ஸில் இவன் கேட்ட பதினைந்து லட்சத்தை அரேஞ்ச் பண்ண முடியும் என்று பதில் வந்துவிட்டது.

“நீங்க வெறும் பிஸினஸ் டாக்டர் மட்டுமில்லை மிஸ்டர் குப்தா. உண்மையிலேயே பரோபகாரி!” என்று ஆடிட்டரும் சிவவடிவேலுவின் பிள்ளைகளும் அவனைப் புகழ்ந்து நன்றி சொன்னார்கள். அவன் மிகவும் அடக்கமாக அவர்களுக்குப் பதில் கூறினான். “பொதுவாக நான் இந்த அளவு உரிமை எடுத்துக் கொண்டு என்னை ஈடுபடுத்திக் கொள்கிற வழக்கம் இல்லை. நோயைக் கண்டுபிடித்து ப்ரிஸ்கிரிப்ஷன் எழுதிக் கொடுத்துவிட்டு விலகிக் கொள்வேன். ஆனால் இதுவரை நான் சிகிச்சை செய்த சிக் இண்டஸ்ட்ரியிலேயே இது புதுமாதிரி யானது. இதிலே யூனிட்டை விட யூனிட்டின் உரிமையாளர் தான் நோயாளியாயிருந்தார். அதனாலே எனக்கு இது ஒரு சேலஞ்ச் ஆயிடிச்சு. ஆகவே அதிகமா இண்ட்ரெஸ்ட் எடுத்துக் கிட்டேன். நானும் என் மனைவியும் இந்தக் குடும்பத்து மேலே கொஞ்சம் அதிகப் பாசம் வச்சுட்டோம். லாபம் வர ஆரம்பிச்சதும் என் மைத்துனனோட இந்த லோனை ஒரு நியாயமான வட்டியோடத் திருப்பித் தந்துடுவீங்கன்னு நம்பறேன்.”

“ஒரு லோன் டாகுமெண்ட் வேணா ரிஜிஸ்தர் பண்ணிப்போம்.”

“வேண்டாம்! ஓரல் எக்ரிமெண்ட் போதும். நான் உங்களை நம்பறேன். ஜெண்டில்மேன் எக்ரிமெண்ட்டை நம்பற மாதிரி நான் பத்திரத்தைக் கூட நம்பறதில்லே...”

குப்தா ரொம்பப் பெரிய மனிதனாக அவர்களுக்குத் தோற்றமளித்தான். பிராப்ளத்தைக் கண்டுபிடித்து, சிகிச்சை முறையையும் மருந்துகளையும் கூறிவிட்டுத் தன் ஃபீஸுக்காகக் கையை நீட்டும் பிஸினஸ் டாக்டராக மட்டும் அவன் இல்லை. அவனுக்கு மனிதாபிமானம் இருப்பது தெரிந்தது.

புதிய திட்டத்தை நிறைவேற்ற ஒரு கால எல்லையை அதிகபட்ச லிமிட் என்று அறுபது நாள் போட்டுக் கொடுத்தான் குப்தா. அவ்வளவு நாட்கள் தான் குருபுரத்திலேயே இருக்க முடியாது என்றும் தனக்கு வேறு நோய்வாய்ப்பட்ட தொழில்களிலிருந்தும் அவசர அழைப்பு இருக்கிறது என்றும் இரண்டு மூன்று முறை பம்பாய், அஹமதாபாத், கான்பூர் என்று நடுநடுவே போய்விட்டு வந்தான் குப்தா. மைத்துனரிடமிருந்து பணத்தை வரவழைத்துக் கொடுத்து மாறுதல்கள் வளர்ச்சிக்கான ப்ளு பிரிண்ட்டையும் கையில் தந்து டைம் ஷெட்யூலையும் அளித்து ஆடிட்டர், சிவவடிவேலுவின் மகன்களை வேலையில் ஈடுபடுத்தினான் குப்தா.

இதன் நடுவே திடீரென்று ஒரு நாள் சென்னையிலுள்ள மாதவி டூர்ஸ் அண்ட் டிராவல்ஸிலிருந்து ஆடிட்டர் அனந்துக்கு ஒரு ஃபோன் வந்தது. சிவவடிவேலு தம்பதிகள் செளக்கியமாக இருப்பதாகத் தகவல் சொல்லிவிட்டு “யாரோ கரும்பாயிரம்னு ஒரு ஆள் உங்க ஊரிலே இருந்து வந்து ஒரு லெட்டரைக் கொடுத்து, இது ரொம்ப முக்கியம். இதை உடனே முதலாளிக்கு அனுப்புங்கன்னு வற்புறுத்தறாரு என்ன செய்யறது? இதை அனுப்பலாம் என்றால் நியூயார்க் அல்லது லண்டனில் எங்களுக்கு ஒரு காண்டாக்ட் அட்ரஸ் இருக்கு. அங்கே அனுப்பி மிஸ்டர் சிவவடிவேலுவிடம் கொடுக்கச் சொல்ல முடியும்! என்ன சொல்றீங்களோ அப்படியே செய்யலாம்,” என்றார்கள்.

“அதெல்லாம் அவருக்கு அனுப்பவேண்டாம். என்னைத் தவிர யார் எது சொன்னலும் நீங்கள் கேட்க வேண்டுமென்ப தில்லை” என்று ஆடிட்டர் மாதவி டூர்ஸ் ஆட்களுக்குக் கண்டிப்பாகப் பதில் சொல்லிவிட்டார்.

பதவி பறிக்கப்பட்ட கரும்பாயிரத்தின் சூழ்ச்சி அவர்களுக்குப் புரிந்தது. கடிதத்தை வாங்கி வைத்துக்கொண்டு சிவவடிவேலுவுக்கு அனுப்புவதாகச் சொல்லி விடும்படியும் அப்புறம் அதை ரகசியமாகத் தனக்கு அனுப்பி விடும்படியும் டிராவல் ஏஜன்ஸிக்குத் தகவல் சொல்லிச் சமாளித்தார் அனந்த். ஆடிட்டர் மூலம் நிறையப் பிரயாண ஏற்பாடுகள் நடப்பதால் மாதவி டிராவல்ஸ் அவருக்குக் கட்டுப்பட்ட ஒரு நிறுவனமாக இருந்தது. அதனால்தான் கரும்பாயிரம் கடிதத்தோடு போய் அணுகியபோது கூட அதை அப்படியே சிவவடிவேலுவுக்கு அனுப்பி விடாமல் ஆடிட்டரைக் கலந்து பேசினார்கள்.

இரண்டு மூன்று நாள் கழித்துப் பாரிஸிலிருந்து சிவ வடிவேலுவின் கையெழுத்தோடு பிக்சர் போஸ்ட் கார்டுகள் ஆடிட்டர், குப்தா, பார்கவி ஆகியவர்கள் பெயருக்கு வந்தன. ஆடிட்டருடைய கார்டிலேயே ஒரு வரி ‘கரும்பாயிரத்துக்கு அன்பைச் சொல்லவும்’ என்று இருந்தது. காசிக்குப் போயும் கர்மம் தீரவில்லை என்பதுபோல் பாரிசில் போயும் அவர் கரும்பாயிரத்தை மறக்கவில்லை என்று தோன்றியது. சிவவடி வேலு சூட்டுக் கோட்டோடு ஆச்சியோடும் மற்றச் சுற்றுலாப் பயணிகளுடனும் எப்படியெப்படி வளைய வருவார் என்று கற்பனையில் மூழ்கினார் ஆடிட்டர்.

ஓர் ஆடிட்டோரியம், முழுக்க முழுக்கப் பெண்களே செர்வ் பண்ணும் ‘சுபமங்களம்’ என்கிற ஏ.சி. ரெஸ்டாரெண்ட். மெருகேறிய புது அறைகள், அதில் நான்கு ஏ.சி. சூட், தனி, வாசலுடன் ஒரு ஐஸ்கிரீம் பார்லர். எல்லாம் டெகரேஷன் முடிந்து தயாராகிவிட்டன.

குப்தா இம்முறை குமரேசனையும் தண்டபாணியையும் முன்னெச்சரிக்கை செய்தார்; “தண்டபாணி பர்ச்சேஸ். ஸ்டோர் ரூம். கேஷ் இன்ஃப்ளோ இது மூணுக்கும் நீங்க பொறுப்பு. லாட்ஜிங் முழுக்கவும் அவுட்டோர் கேட்டரிங்கும் குமரேசன் பொறுப்பில இருக்கும்,” என்றார்.

அந்த வாரம் குப்தாவும் குமரேசனும் காரில் கோட்டயம் புறப்பட்டார்கள். கேட்டரிங் பயிற்சி பெறும் பெண்களில் சிலரைப் பார்கவிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. முதலில் நேரே கொச்சிக்குப் போய்த் தங்கி, அதே இன்ஸ்டிடியூட்டில் தயாரான பெண்களே பரிமாறும் ஓட்டலைப் பார்வையிட்டார்கள்.

குமரேசன் சொன்னது போல் அங்கே கூட்டம் பொங்கி வழிந்தது. அதே சமயம் கெளரவமாகவும் இருந்தது. அந்த ஓட்டல் உரிமையாளரைக் குப்தாவும் குமரேசனும் சந்தித்து, “இப்படி முழு அளவில் பெண்களே பரிமாறுபவர்களாக - இருப்பதில் பிரசினை உண்டா? அவரது அனுபவம் எப்படி?” என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு விசாரித்தார்கள். அவரது பதில் ஆச்சரியப்படி வைத்தது.

“எங்களைப் பொறுத்தவரை ஒரு பிரசினையும் இல்லை. சொல்லப் போனா எங்கள் கேரள கலாசாரப்படி முண்டும் சோளியும் அணிந்து, தாவணி கூட இல்லாமல் தான் இவங்க பரிமாறுகிறாங்க. எங்க கஸ்டமர்ஸ் டீஸன்டா நடந்துக்கிறாங்க. கேரளத்துக்கு வெளியிலே இருந்து வர்ற அந்நியப் பிரதேசத்துக் கஸ்டமர்ஸ்தான் கொஞ்சம் இண்டீஸண்டா வெறிச்சுப் பார்க்கிறாங்க! எங்க ஓட்டல் மேனேஜ்மெண்ட்டைப் பொறுத்த வரை இவங்களுக்குத் தனி வீடு எடுத்துக் கொடுத்துத் தங்க வச்சிருக்கோம். எங்க சொந்தத் தங்கைகள் மாதிரி கவனிச்சிக்கிறோம்.”

“இதை மத்தவங்க தப்பா நெனைக்கிறாங்களா, பேசறாங்களா?”

“அப்படி நினைக்கிறதுக்கும் பேசறதுக்கும் இதிலே என்ன தப்பு இருக்கு? விமானங்களிலே ஏர் ஹோஸ்டஸ் பெண்கள் அழகாக டிரஸ் பண்ணிக்கிட்டுச் சிரிச்சுப் பேசிப் பிரயாணிங்களுக்குச் சிற்றுண்டி, உணவு பரிமாறலியா? அது மாதிரிதானே? ஐரோப்பாவிலே எத்தனை ரெஸ்டாரெண்ட்ஸ்லே பெண்களே பரிமாறுகிறார்கள்? இதிலே என்ன தப்பு? தப்புன்னு நினைக்கிற, மனப்பான்மைதான் தப்பு.”

குப்தாவுக்கும் குமரேசனுக்கும் அவருடைய பதில் சுபாவமாகவும் திருப்தியாகவும் இருந்தது. பல விஷயங்களில் எந்தக் கோளாறும் இல்லை. அதைப் பார்க்கிறவர்களின் பார்வையில்தான் கோளாறு, உருவாகிறது என்று தோன்றி யது. இத்தகைய பெண்களில் சிலர் சில ஆண்டுகள் இப்படி வேலை பார்த்தபின் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தப் போய்விடுவதாகவும் அந்த ரெஸ்டாரெண்டின் அதிபரே கூறினார். சிலர் விஷயத்தில் கஸ்டமர்களில் இருந்தே கெளரவமான கணவர்கள் கிடைத்துக் காதல் கல்யாணம் ஆகியிருப்பதாகவும் அவர் கூறினார். கல்யாணமான பின்னும் வேலையில் தொடர்கிற சில பெண்களையும் அவரே கூப்பிட்டு அறிமுகப்படுத்தினார். குருபுரம் போன்ற ஓர் ஊரில் இதை ஒரு சீப் டெக்னிக் என்றும் வியாபார உத்தி என்றும் யாராவது புரளி கிளப்பி விட்டு விடக்கூடாதே என்று அவர்கள் யோசிக்க வேண்டியிருந்தது.

“துணிந்து செய்யுங்கள்! உங்கள் ஊரில் இது இன்னும் வெற்றியளிக்கும். பேசுகிறவர்கள் பேசிப் பேசி ஓய்ந்து போவார்கள். ஆனால் நீங்கள் நாணயமாக நடந்து, கொண்டால் எதுவும் கேடு வராது” என்றார் கொச்சியில் அந்த ரெஸ்டாரெண்ட்டை நடத்தியவர்.

பெண்களே செர்வ் செய்யும் ‘சுபமங்களம்’ ஏ.சி. ரெஸ்டாரெண்டுக்கு ஏற்பாடு செய்யும் உறுதியுடன் அந்தக் கொச்சி ஓட்டல் அதிபரிடம் ஒரு சிபாரிசுக் கடிதமும் வாங்கிக் கொண்டு கோட்டயம் புறப்பட்டார்கள் அவர்கள்!

கோட்டயத்தில் இந்த இன்ஸ்டிடியூட்டின் முதல்வர் குஞ்சம்மணியம்மா அவர்களே மிகவும் மரியாதையாக வரவேற்றார். அன்பாகப் பேசினார்.

இவர்கள் நடத்தப் போகும் ரெஸ்டாரெண்டின் தரம், ஊர், இவர்களால் தரமுடிந்த சம்பள விகிதம் எல்லாம் தெரிந்தால் கேட்டரிங் டிப்ளமா வாங்கித் தயாராக இருக்கும் பெண்களை அழைப்பதாகவும் “அவர்களில் உங்களுக்குப் பிடித்தவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்” என்றும் கூறினார்.

அத்தியாயம் - 13

குமரேசன் நினைத்தது போல் அந்தப் பயிற்சி நிறுவனத்திலிருந்து பெண்களை வேலைக்கு அழைத்துச் செல்லுவது அவ்வளவு சுலபமாயில்லை. கொச்சி ரெஸ்டாரெண்ட் அதிபர் சிபாரிசுக் கடிதம் தந்ததனுலும் குப்தா, குமரேசன் இருவருடைய பழகும் முறைகளாலும்தான் ஓரளவு மரியாதையான வரவேற்பு கிடைத்தது. கூலிக்குச் சித்தாள் பிடிப்பது போல ஆட்களை அவர்களிடமிருந்து அமர்த்த முடியாதென்று தெளிவாகப் புரிந்தது. இவர்களும் அப்படி அமர்த்த விரும்பவில்லை.

குஞ்சம்மணியம்மா சொன்னாள்:

“எங்ககிட்ட இங்கே டிரெயினிங் பெற்று டிப்ளமா வாங்கின சில பெண்கள் ஏர் ஹோஸ்டஸ் ஆக இருக்கிறார்கள். நீங்கள் ஒரு கோரிக்கை லெட்டர் எழுதிக் கொடுத்தால் எங்கள் ஸ்தாபனத்தின் இன்ஸ்பெக்ஷன் ஆட்கள் வந்து உடனே உங்கள் ரெஸ்ட்டாரெண்டை இன்ஸ்பெக்ட் செய்து எங்கள் பெண்களை அங்கே வேலை பார்க்க அனுப்பலாமா என்று எங்களுக்கு ஒப்பீனியன் அனுப்புவார்கள். அதன் பிறகு தான் பெண்களை அனுப்புவோம். இதெல்லாம் ஜஸ்ட் ஃபார்மாலிட்டிஸ். நீங்க தப்பா நினைக்கப்படாது. சில வாரங்களுக்கு முன்னே யாரோ கோயம்புத்தூப் பக்கத்திலேர்ந்து வந்து ரொம்பக் கொச்சையா எப்படி எங்களை அணுகறதுன்னு கூடத் தெரியாமே, ‘பொண்ணுங்க வேணும்’னு கேட்டாங்க. வந்த விதம் கேட்ட தினுசு எதுவுமே டீசண்டா இல்லே! விலாசம் கேட்டோம் மூங்கில் முறிச்சான்பாளையம்னு ஒரு அட்ரஸ் குடுத்தார். அங்கே எங்க இன்ஸ்பெக்ஷன் டீமை அனுப்பிப் பார்த்தா அவர் குடுத்த அட்ரஸ் ஒரு சாராயக் கடையாயிருந்தது.”

“அடப் பாவமே! நீங்க ஜாக்கிரதையாத்தான் இருக் கணும்,” என்றான் குமரேசன்.

அது ஒரு சமூக சேவை நிறுவனமாக இருப்பதையும் கறாரான விதிமுறைகள் இருப்பதையும் புரிந்து கொண்டிருந்த காரணத்தால் குமரேசனும் குப்தாவும் சிணுங்காமல் பல பாரங்களைப் பூர்த்தி செய்து பல நிபந்தனைகளில் கையொப்பமிட்டு அந்த இன்ஸ்டிட்டியூட்டின் இன்ஸ்பெக்ஷன் டீம் பார்கவிக்கு வந்து போகச் செலவுத் தொகையையும் கூட முன்பணமாகக் கட்டி விட்டார்கள். இவர்கள் இருவரும் வந்த விதம் அறிமுகக் கடிதம், பழகிய தினுசு, எல்லாவற்றையும் பார்த்த பின்பே இன்ஸ்டிட்யூட்காரர்கள் நம்பிக்கை கொண்டனர்.

அதற்கு அப்புறம்தான் குஞ்சம்மணியம்மா இவர்களுக்கு டிப்ளமா வாங்கி வேலைக்கு வரத் தயாராயிருக்கும் பெண்களை அறிமுகப்படுத்தினாள்.

“நீங்க தனியா ஒரு செலக்ஷன் என்று சிரமப்பட வேண்டியதில்லை. பொதுவா நாங்க இங்கே படிக்க செலக்ட் பண்ற போதே ‘ஆப்டிடியூட் டெஸ்ட்’னு வச்சுடறோம். இலட்சண மாயிருக்கிற - கடிந்து பேசாத - நன்றாகப் பழகக்கூடிய பெண்களாகத்தான் எடுக்கிறோம். மலையாளம் தவிர வேற மொழிகளையும் கத்துக்கொடுக்கிறோம். ஒரு ஜாப் செக்யூரிட்டிக்காகவும் இதிலே படிக்க வர்றவங்களுக்கு ஒரு நம்பிக்கை வரணும்கிறதுக்காகவும் மினிமம் ‘எதிர்பார்க்கிற ஸ்கேல் ஆஃப் பே’ என ஒன்று நாங்களே குறிப்பிடுவது வழக்கம்.”

“நியாயம்தான். படிச்சு கேட்டரிங் டிப்ளமாவும் வாங்கினப்புறம் ஒரு டீஸண்ட் ஸாலரியை எதிர்பார்க்கறது தப்பில்லையே?”

எல்லாம் சுமுகமாக முடிந்தது. அவர்கள் இருவரும் குருபுரம் திரும்பிய மறுநாளே ஸ்டடி டீம் வந்து ஓ.கே. பண்ணியது.

ஏற்கெனவே குப்தாவும், குமரேசனும் பார்த்துத் தேர்ந்தெடுத்திருந்த பெண்களின் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

கோட்டயம் இன்ஸ்டிட்யூட்டின் அனுமதியுடன் பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றான் குப்தா.

“எதுக்கு? அந்த மூங்கில் முறிச்சான் பாளையத்து ஆளு ‘பொண்ணுங்க வோணும்’னு ஏதோ பிராத்தலுக்கு ஆள் சேர்க்கிற மாதிரிக் கேட்டதைப் பத்தியே அவங்க ரொம்ப வருத்தப்பட்டாங்க. நாம பாட்டுக்குப் பெண்களின் போட்டோவைப் போட்டு ஓட்டலுக்குப் பணம் சேர்க்கிற கொச்சையான முயற்சியிலே இறங்கறமோன்னு தப்பா நெனச் சுடப் போருங்க சார்,” என்று குமரேசன் ஆட்சேபணை கிளப் பினான்.

“இதா பாரு குமரேசன்! ப்ளெயினா - சிம்ப்பிளா ஸ்டிரெயிட் ஃபார்வர்டா மனசிலே நெனைக்கிறதைச் சொல்றது தப்பில்லே. ஆஷாடபூதித்தனம் தான் தப்பு. யேர்னிங் மோர் மணி இஸ் ஆல்ஸோ பார்ட் ஆஃப் அவர் எய்ம். யூ காண்ட் டினை தட். அதே சமயம் இந்தப் பெண்களை இங்கே பார்கவி ஏ. சி. ரூம்லே அலங்காரம் பண்ணி நிறுத்தி வைச்சு அர்ச்சனை பண்ணிக் காலைலேயும் மாலையிலேயும் உங்க பக்கத்து ஓட்டல்களிலே வழக்கமாப் பண்ற மாதிரி சூடம் சாம்பிராணி கொளுத்திக் கும்பிடறதுக்காக இங்கே நாம சம்பளம் குடுத்துக் கூப்பிடலை.”

“அதுக்காக இவங்க போட்டோவைப் பேப்பர்லே போட்டு ‘இது மாதிரிப் பலான பொண்ணுங்கள்ளாம் இருக்கு! எங்க ஓட்டல்லே வந்து சாப்பிடுங்க...’ன்னு கூப்பிடறது நல்லா இருக்குமா?”

“நீதான் இப்போ அந்த மூங்கில் முறிச்சான்பாளையத்து ஆள் பேசின மாதிரிப் பேசறே குமரேசன்! ஒரு கெட்டிக்கார மனுஷன் உபயோகப்படுத்தற லாங்வேஜோட தரத்தை வச்சு எதையும் டீஸன்டாப் பண்ணிட முடியும். கெட்டிக்காரத் தனம் இல்லாதவன் அதையே இன்டீஸென்டாகவும் பண்ணிட முடியும். இப்ப நான் பேப்பர்ல குடுக்கப் போற மாதிரி விளம்பரத்தை எழுதித் தர்றேன். பார்த்திட்டு அப்புறம் பேசு.”

குப்தா டிராஃப்டை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்தான்.

“நாட் ஜஸ்ட் ஒன் நியூ பார்கவி; ஃபைவ் யங் ப்யூட்டி ஃபுல், ஸ்மார்ட் பார்கவிஸ் (ஃப்ரம் கோட்டயம் விமன்ஸ் கேட்டரிங் டெக்னலஜி இன்ஸ்டிட்யூட்) ஆர் வெயிட்டிங் அண்ட் எக்ஸ்பெக்டிங் - கஸ்டமர்ஸ் லைக் யூ அட் ஓட்டல் நியூ பார்கவி.”

“இந்த வாசகங்களுக்கு மேலே அவங்க அஞ்சு பேர் படத்தையும் அதுக்கும் மேலே விளம்பரத்தோட டாப்லே ஓட்டல் நியூ பார்கவி முகப்பையும் சுபமங்களம் ஏ.சி. ரெஸ்டாரெண்ட் முகப்பையும் போட்டுடறோம்.”

குமரேசன் குப்தாவின் சாமர்த்தியத்தைக் கண்டு வியந்தான். விளம்பரம் நாசூக்காகவும் கவர்ச்சியாகவும் எழுதப் பட்டிருந்தது. அதே சமயம் இன்ஸ்டிட்யூட்டின் பெயரும் வந்தது.

சும்மா ஒரு வம்புக்காக அவன் குப்தாவைக் கிண்டல் செய்தான். “மிஸஸ் குப்தா வேற பக்கத்திலே இல்லே. சிம்லாவுக்குப் போயிருக்காங்க, அந்த கேட்டரிங் பொண்ணுங்க கிட்ட ரொம்பத்தான் மயங்கிப் போயிருக்கீங்கன்னு தெரியுது. நீங்க பாட்டுக்கு யங், ஸ்மார்ட் ப்யூட்டிஃபுல்னு ஒரே அடைமொழியா அவங்க மேலே தூவியிருக்கீங்களே?”

“டெல்லிங் ட்ரூத்! ஐ யாம் நாட் எக்ஸாஜெரேட்டிங் எ சிங்கிள் வேர்ட்! சுஷ்மா இப்போ ஊர்ல இருந்தா அவகிட்டவே தைரியமா நான் சொல்வேன் ‘உன்னைவிட இந்தக் குட்டிகள் ஸ்மார்ட் யங், ப்யூட்டிஃபுல்’னு.”

“அப்பிடியா? இதை ஒரு வார்த்தை விடாமே அண்ணிக்கு எழுதிப் போட்டேன்னா இந்தக் குளிர்லியும் சிம்லாவே பத்திக் கிட்டு எரியும் மிஸ்டர் குப்தா.”

“அதெல்லாம் சும்மா கதைப்பா! சினிமா டயலாக்லே வேணா வரும். ஷீ நோஸ் மீ ஃபுல்லி வெல் அண்ட் ஐ நோ ஹெர் ஃபுல்லி வெல்; எங்களுக்குள்ளே இது மாதிரி சீப் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கை எந்த மூணுவது மனுஷனும் உண்டாக்கிட முடியாது” என்று உறுதியாகக் கூறினான் குப்தா.

குமரேசன் குப்தா எழுதிக் கொடுத்த அந்த விளம்பரத்தைத் தமிழில் மொழி பெயர்த்தான்.

“இப்போது நியூ பார்கவியே ஓர் ஆழகிய இளம்பெண் போல் பொலிகிருள். அங்கே மேலும் ஐந்து அழகிய சுறுசுறுப்பான இளம் பெண்கள் (கோட்டயம் பெண்கள் - பரிமாறும் தொழில் துணுக்கக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர்கள்) உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிருர்கள். முழுக்க முழுக்கப் பெண்களே பரிமாறும், முதல் ஏ. சி. ரெஸ்டாரெண்ட்! வருக! வந்து புதிய மகிழ்ச்சியும் அனுபவமும் பெறுக!”

இதை வாங்கிப் படித்துவிட்டுக் குமரேசனின் அண்ணன் தண்டபாணி. “சுறுசுறுப்புக்கும் இளமைக்கும் நடுவிலே ‘லக்ஷ்மிகரமான அல்லது மங்களகரமான’ன்னு இன்னொரு வார்த்தையை நுழைத்து விடு. இட்வில் ஆட் ரெஸ்பெக்டபிலிடி” என்றான்.

உடனே அங்கிருந்த ஆடிட்டர் “சபாஷ் தண்டபாணி! என்ன இருந்தாலும் மேரீட் மேன், பொறுப்பா, கெளரவமா யோசனை சொல்றான் பாரு! என்ன நுணுக்கமா ஒரு வார்த்தையை நடுவிலே போடறான்! குமரேசன் ஆயிரமிருந்தாலும் விடலைப் பையன்தான்! அழகு, இளமை, சுறுசுறுப்பிலேயே மயங்கிப் போயிருக்கானே தவிர மரியாதையைப் பத்திக் கவலையே படல” என்று குமரேசனைச் சீண்டினர்.

குமரேசனும் அவரை லேசில் விட்டுவிடவில்லை. “இதோ பாருங்க ஆடிட்டர் சார்! சும்மா விடலை அது இதுன்னு ராங் சைடுலே ரப் பண்ணாதிங்க. அண்ணன் சொல்றதைக் சேர்த்துக்கறேன். ஆனா நான் இதை எந்த வகையிலும் சீப்பா எழுதிடலே. சீப்பாவும் கொச்சையாவும் இதை மொழி பெயர்க்கிறதுங்கிறது எப்படித் தெரியுமா? ஒரு வம்புக்காக அதையும் உங்களுக்குப் பண்ணிக் காட்டறேன் பாருங்க” என்று வேறு ஒரு காகிதத்தை எடுத்து அவசர அவசரமாக எழுத ஆரம்பித்தான் குமரேசன்.

‘பருவ மங்கை பார்கவி எங்கே? எப்போது? விரைவில் எதிர்பாருங்கள். ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே சமயத்தில் ஐந்து பருவப் பாவையர் பணிபுரியும் கவர்ச்சி உணவகம்! பார்க்கவும் பருகவும். மகிழவும் உடனே வருக நியூ பார்கவி. ஏ. சி. உணவகம் குருபுரம் ஹைலேண்ட்ஸ்’ என்று எழுதி நீட்டினான்.

“உங்கிட்ட விவாதிக்க முடியுமா குமரு? நீ பட்டிமன்ற ஆளாச்சே? இலேசிலே விடுவியா? நான் வாபஸ் வாங்கிக்கறேன்” என்று கைகளை மேலே தூக்கிவிட்டார் ஆடிட்டர்.

“நம்ம தெப்பம்பட்டி டூரிங் தியேட்டரில் ‘ஸீக்ரட் லவ்’னு முதல் தரமான இங்கிலீஷ் நாவல் ஒண்ணை ஃபேஸ் பண்ணி ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ்காரங்க எடுத்த படம் ஒண்ணை ஒரு ஞாயிற்றுக்கிழமை நூன் ஷோ போட்டான். படத்திலே ஒரு ஹாட் சீன் கூட இல்லே. தியேட்டர்காரன் பார்த்தான். அவனாகவே தலைப்பைக் ‘கன்னியின் காமவெறி ரகசியங்கள்’னு போட்டு ஜட்டியோட ஒரு பொண் குளிக்கிற மாதிரி வேற ஏதோ ஒரு ஸ்டில்லை ப்ளோ அப் செஞ்சு விளம்பரம் பண்ணிட்டான். என்னை அது மாதிரின்னு நெனச்சீங்களா? ஐ வாஸ் எ ஸ்டூடண்ட் ஆஃப் லிட்டரேச்சர் சார்!”

“சரீப்பா! என்னை விட்டுடு, தெரியாத்தனமா உங்கிட்ட வாயைக் குடுத்திட்டேன்” என்று ஆடிட்டர் அலறியே விட்டார். குப்தாவுக்கு இதை எல்லாம் தண்டபாணி மொழி பெயர்த்துச் சொன்னபோது அவன் சிரித்து ஓய அதிக நேரம் பிடித்தது.

நியூ பார்கவியின் திறப்பு விழா விளம்பரங்கள் தமிழ் ஆங்கில தினசரிகளில் எல்லாம் முழுப்பக்க அளவில் வெளியாயிற்று. குப்தா சொன்னபடி மூத்தவன் தண்டபாணியும், இளையவன் குமரேசனும் முக்கியப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டனர்.

திறப்பு விழாவுக்குச் சிறப்பு விருந்தினர்களாகச் சிம்லாவில் இருந்து குப்தாவின் மைத்துனன் அஜீத்குமார், குப்தாவின் மாமனார் குருசரண் இருவரும் வந்திருந்தனர். அங்கே போயிருந்த சுஷ்மாவும் பார்கவியும் இவர்களையும் அழைத்துக் கொண்டு ஒரு வாரம் முன்னதாகவே குருபுரம் வந்து சேர்ந்து விட்டனர். குருபுரமும் சிவவடிவேலுவின் வீடும் கல்யாணக் களை கட்டின.

ஓட்டல் நியூ பார்கவியின் திறப்பு விழா விளம்பரங்கள் பத்திரிகைகளில் தடபுடல் பட்ட அதே நேரத்துக்கு டீ எஸ்டேட் லொக்கேஷனில் ஒரு பிரமாதமான தமிழ்த் திரைப் படத்தை எங்கே எடுக்கலாம் என்று உரிய இடத்தையும் வசதி களையும் தேடி அலைந்து கொண்டிருந்த கோடீசுவரனான புரொட்யூசர் ஒருத்தர் குருபுரம் வந்து சுமார் இரண்டு மாத காலத்துக்கு ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகை டைரக்டர் புரொட்யூசருக்கு 4 ஏ. சி. ரூம் - மற்ற யூனிட் ஆட்களுக்கு பாத் அட்டாச்டு ரூம்ஸ் என்று முக்கால் ஓட்டலையும் அட்வான்ஸ் கொடுத்து ரிஸர்வ் பண்ணிவிட்டார்.

நியூ பார்கவியின் மேல் அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கியது. தமிழ்ப்பட உலகில் வரப்பு, வயல்வெளி, கிராமம், கிராமத்துத் திரைக்கதைகளுக்கு ஒரு யோகம் அடித்தது. அப்படிப் படங்கள் ஸீன், ஸ்டூடியோ, ஸெட் வாடகை ஃப்ளோர் அரேன்ஜ்மெண்ட்ஸ் செலவுகள் இல்லாமல் யூனிட்டோட ஒரு கிராமத்துக்குப் போனாலே நிறைவேறியது. சிக்கனமாகவும் லாபகரமாகவும் புரொடக்ஷன் முடிந்தது. படங்களும் பணத்தை வாரிக் கொண்டு வந்து தயாரிப்பாளரிடம் கொட்டின. சிங்கிள் புரொடக்ஷன் யூனிட்டோடு போய்ப் படத்தையே முடித்துக் கொண்டு வருகிற வசதி இருந்தது. பாட்டு, மெட்டு, இசையமைப்பு முதல் சகலத்திலும் கிராமாந்தரத்துக்கு ஒரு திடீர் யோகம் வந்தது. டீ ஷர்ட், ஸ்ஃபாரி, ஜீன்ஸ், பெல்பாட்டம், நாகரிகங்கள் தோற்றுத் தலைப்பாகை, உருமால், வண்டி ஓட்டுவது, வயல்களில் உருளுவது, பெண்கள் தொளி கலக்குவது, நாற்று நடுவது, களை எடுப்பது, தேயிலை ஏலக்காய் பறிப்பது என்று இப்படி ஒரு புதுக் காற்று விச ஆரம்பித்தது. கல்லூரி வகுப்பறை, பஸ்கள் ஸ்டாண்டு, நகரத்து வீதிகள், கடைகள், தியேட்டர் முகப்புக்களில் காட்ட முடிந்ததை விட வயலின் சேற்றுக்கு நடுவே, களை பிடுங்க முழங்கால் வரை சேலையைத் தூக்கிக் கட்டிய கோலத்தில் கிராமக் கலாச்சாரம் என்ற பெயரில் இரவிக்கை அணியாமல் மேற்சேலை மட்டும் கட்டிய வாளிப்பில் அதிகமாக ஸெக்ஸைக் காட்ட முடிகிற உத்தியை - ரகசியத்தைத் தயாரிப்பாளர்கள் திடுதிப்பென்று புரிந்து கொண்டு படை எடுத்திருந்தார்கள்.

ஆனால் அதில் ஒரு பிரசினை. ஆறு, ஓடை. வயல்வெளி, மரக்கூட்டம், அருவிக்கரை, எஸ்டேட் என்று லொக்கேஷன் கலர் ஃபுல்லாக அழகாகக் கிடைத்தால் அங்கே ஆர்ட்டிஸ்ட்டுகளும், யூனிட்டும் தங்க வசதி இருப்பதில்லை. தங்க வசதி பிரமாதமாகக் கிடைத்தால் அங்கே லொக்கேஷனே கிடைப்பதில்லை. பார்கவியும் இயற்கை லொக்கேஷன் வசதிகளும் சேர்ந்தே குருபுரம் கிடைத்தவுடன் திடீரென்று குருபுரத்திற்கு ஒரு யோகம் அடித்தது, பார்கவிக்கும் சான்ஸ் அடித்தது.

நியூ பார்கவியில் முதலில் நாலே நாலு ‘சூட்’ மட்டுமே ஏ.சி. செய்திருந்தார்கள். இந்தச் சினிமா யோகம் அடித்த பின் பல சூட்களை ஏ.சி. செய்யும் அவசரமும் அவசியமும் நேர்ந்தன. லாட்ஜிங் சைடில் இப்படி அதிர்ஷ்டம் என்றால் பெண்களே பரிமாறும் கவர்ச்சியால் ரெஸ்டாரெண்டில் உட்கார இடம் கிடைக்காத அளவு கூட்டம் நெரிசல் பட்டது. லாப தசை ஆரம்பமாகி விட்டது.

அவசர அவசரமாக ஐந்நூறு பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து சாப்பிட முடிந்த இன்னொரு டைனிங் ஹாலேக் கட்டி அதிலும் பெண்களே பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தைச் சமாளிக்க முடியவில்லை.

ஓட்டல் திறந்து இரண்டே மாதங்களில் நியூ பார்கவி பிரபலமாகி விட்டாள். ஒரே சயயத்தில் பார்கவியில் தங்கள் ஸ்டார்களுக்கும் யூனிட்டுக்கும் ரிஸர்வேஷன் கேட்டுப் பல புரொட்யூஸர்கள் போட்டி போட்டார்கள். பார்கவியில் இடம் கிடைப்பதே குதிரைக் கொம்பாகி விட்டது. ஒரு வியாபார விஷயமாக வருகிற கார்டமம் எக்ஸ்போர்ட் வியாபாரிக்கோ, குருபுரம் ஆஞ்சநேயருக்குப் பிரார்த்தனை நிமித்தம் வடை மாலை சாற்ற வருகிற ஒரு வெளியூர்ப் பிரமுகருக்கோ அறை வசதி கிடைக்காமல் பார்கவியின் அறைகளைச் சினிமா யூனிட்டுகள் மாதக் கணக்கில் புக் செய்யத் தொடங்கினர்கள். லாட்ஜிங்கில் இந்த இடம் போதாது என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. ஒட்டல் நியூ பார்கவியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற நிலைமை அவசரமாக ஏற்பட்டது.

அத்தியாயம் - 14

ஆம்ஸ்டர்டாமிலிருந்து சிவவடிவேலு எழுதின ஒரு ஏர்மெயில் கடிதத்தில் குருபுரம் நிலவரங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல், ‘நான் வந்து சேருகிறவரை மேற்கொண்டு நஷ்டமில்லாமல் எப்படியாவது பார்கவியை இழுத்துப் பறித்து நடத்தி வாருங்கள். மகாஸ்ரீ குப்தா சொல்லும் புதிய யோசனைகளை நான் வந்தபின் அமுல் பண்ணலாம்,’ என்று ஆடிட்டருக்கு ஒரு குறிப்பு எழுதியிருந்தார் சிவவடிவேலு. அதை எல்லோரும் படித்துச் சிரித்துக் கொண்டார்கள். இந்த மூன்று நான்கு மாதங்களுக்குள் பெரிய யுகப் புரட்சியே நடந்த மாதிரி மாறுதல்கள் நடந்து பார்கவி நியூ பார்கவி ஆகி லாபம் கொழித்துக் கொண்டிருக்கும் விஷயம் தெரியாமல் சிவவடிவேலு ‘அதைச் செத்து விடாமல் காப்பாற்றிக் கொண்டிருங்கள்! நான் வந்து முழுக்கவும் பிழைக்க வைத்துக் கொள்கிறேன்’ என்பது போல எழுதியிருந்தது வேடிக்கையா யிருந்தது.

சில படத்தயாரிப்பாளர்கள் திரையில் டைட்டில் காண்பிக்கும் போதே, ‘இந்தப் படத்தின் தயாரிப்புக் காலத்தில் எங்களோடு பெரிதும் ஒத்துழைத்த குருபுரம் நியூ பார்கவி உரிமையாளருக்கும் ஊழியர்களுக்கும் நன்றி கூறக் கடிமைப் பட்டிருக்கிறோம்’ - என்றும் சேர்த்துக் காட்டவே விளம்பரமாகி விட்டது. பேர் பெரிதாகி இருந்தது. பார்கவி பிரபலமாகி இருந்தாள்.

மதுரையில் அப்படியும் இப்படியுமாகத் தொடர்ந்து போராட்டம் கதவடைப்பு என்று குமாரி பார்கவியின் கல்லூரி வதைப்பட்டாலும் ஒருவழியாக ஃபைனல் பரீட்சை எழுதி விட்டாள் அவள். கல்லூரிக்கு ‘குட்பை’ சொல்லியாயிற்று. சுஷ்மா குப்தாவுடன் பழக ஆரம்பித்ததிலிருந்தே அவளிடம் பல இனிய மாறுதல்கள் நிகழத் தொடங்கியிருந்தன. குமரேசனின் பாஷையில் மாறுதல் என்பது வளர்ச்சியின் ஆரம்பம். அதுவும் அவள் சுஷ்மாவுடன் சிம்லாவுக்குப் போய்ச் சில நாட்கள் இருந்துவிட்டு வந்ததும் சில நளினமான மாற்றங்கள் பார்கவியிடம் தென்பட்டன. தனக்குத் தானே புதுமாதிரி உடுத்தி அழகு பார்த்துக் கொண்டாள். சின்னதும் பெரிதுமாக இந்திப் பட ட்யூன்களை ‘ஹம்மிங்’ செய்ய ஆரம்பித்தாள். நிறைய அடிக்கடி ஆங்கிலத்திலும் கொஞ்சம் இந்தியிலும் உரையாடத் தொடங்கினாள். திடீரென்று அழகாகி இருப்பது போல் அவள் தோற்றத்தில் ஒரு செழுமை தெரிந்தது. நியூ பார்கவியின் திறப்பு விழாவுக்குச் சுஷ்மாவின் தம்பி அஜித்குமாரும், அவனுடைய வயதான நோய்வாய்ப்பட்ட தந்தை குருசரனும் வந்து இரண்டு மூன்று நாட்கள் குருபுரத் தில் தங்கிய போது பார்கவி அஜீத்திடம் இழைவதைக் குமரேசன் கவனித்தான். அந்த இரண்டு மூன்று நாள் நெருக்கம் அதற்கு முந்திய நெருக்கத்தின் தொடர்ச்சி போலக் குமரேசனுக்குத் தோன்றியது. சுஷ்மா குப்தாவோடு அவளுடைய உடல் நலங்குன்றிய தந்தை குருசரணைப் பார்ப்பதற்காகப் பார்கவி முதல் முதலாகச் சிம்லா சென்ற போதே இந்த நெருக்கம் ஏட்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.

குப்தா, தண்டபாணி, ஆடிட்டர் எல்லாருமே இந்தப் புதிய நெருக்கத்தைக் கவனித்தார்கள். இவர்களில் யாரும் இதைக் கண்டிக்கிற - அல்லது பொறுக்க முடியாத மனப்பான்மை உள்ளவர்கள் இல்லை என்பதால் இது எந்தப் பாதிப்பையும் உண்டாக்கவில்லை. சிவவடிவேலுவோ ஆச்சி என்று எல்லாரும் மரியாதையாக அழைக்கும் திருமதி சிவவடி வேலுவோ அப்போது ஊரில் இருந்திருந்தால்தான் இது கொஞ்சம் கசமுசா ஆகி வெடிக்கும் போன்ற நிலைமையைத் தவிர்த்திருக்க முடியாது.

நல்லவேளையாகப் பிரதேசம், மாநிலம், திசை, மொழி எல்லாம் கடந்த இந்தக் காதல் அரும்பத் தொடங்கிய சமயத்தில் சிவவடிவேலு இந்த நாட்டிலேயே இல்லை. ஆச்சியும் அவரோடு போயிருந்தாள்.

ஓர் இளம் பெண்ணும், ஆணும் கலகலப்பாகச் சிரித்துப் பேசிப் பழகுவது என்பது அப்படி ஒன்றும் மன்னிக்க முடியாத குற்றமில்லை என்று நினைக்கிற தாராள மனசு உள்ள இந்தக்கால மனிதர்களே சுற்றிலும் இருந்ததால் அஜீத் பார்கவி விவகாரம் எந்தத் திருப்பத்திலும் எதிர்ப்பைச் சந்திக்கவில்லை.

“அஜீத்துக்கு நம்ம பார்கவியின் மேலே, ரியல் இண்ட்ரெஸ்ட் இருக்கு சார்!” என்று திறப்பு விழாவன்று குமரேசன் ஆடிட்டரிடம் சொன்ன போது பார்கவிக்கு அவன் பதினைந்து லட்சம் கடன் கொடுத்திருப்பதை எண்ணித்தான் சொல்லி யிருந்தான்.

அதை வேறு மாதிரிப் புரிந்து கொண்ட ஆடிட்டர், “இருக்காதா பின்னே? ரொம்பப் பிரியமாப் பழகறாங்க ரெண்டு பேரும்,” என்று சிரித்தபடியே ஆரம்பித்தார். குமரேசனும் சிரித்தான். அதை ரசிக்கவும் செய்தான்.

“அப்பா இப்போ இங்கே இருந்தாச் சினிமா ஆளுங்களை ஓட்டலுக்குள்ளேயே நுழைய விட்டிருக்க மாட்டார்,” என்றான் குமரேசன்.

“லாபத்தையே மூணு வருசமா இந்த ஓட்டலுக்கு உள்ளே நுழைய விடாம வச்சிருந்தாரே அப்பா?” என்று தண்டிபாணி கிண்டல் பண்ணினான்.

“அவரு கவனிப்பிலே பார்கவி இருந்தப்போ ஒவ்வொரு பில்லிலேயும் ரசீதிலேயும் ‘சிவமயம்’ ‘விநாயகர் துணை’ன்னு போட்டுட்டுத்தான் கரும்பாயிரம் மத்ததை எழுதவே ஆரம்பிப்பாரு.”

“இப்போ நீ ‘சினிமா மயம் - புரொட்யூஸர் துணை’ன்னு போடறியாக்கும்?” என்று குமரேசனை வம்புக்கு இழுத்தார்.

“எப்படிப் போடறமோ போடலியோ நஷ்டத்திலே இருந்த தொழிலை நாலே மாசத்திலே சும்மா குட்வில்னு கேட்டாக் கூட விலைக்கு மேலே பத்துப் பன்னிரண்டு லகரம், கேட்கிற மாதிரிப் பண்ணிட்டமா இல்லியா சார்?”

“அது சரிப்பா. நீ நாலு மாசத்திலேன்னு சொன்னதும் தான் நினைவு வருது, அப்பா வர்ற நாளு நெருங்குது. அந்த மாதவி டூர்ஸ் மெட்ராஸ் ஆபீஸுக்கு ஃபோன் பண்ணி உங்கப்பா வர்ற தேதியை விசாரிக்கணும்,” என்று ஆடிட்டர் ஞாபகப்படுத்தினார்.

“இந்த ஃபாரின் டூர் எங்கப்பாவை ஏதாச்சும் மாத்தி யிருக்கும்னு நெனைக்கிறீங்களா? ஒரு அங்குலம்கூட மனசு அகலமடைஞ்சிருக்காது. நான் வேணும்னாச் சேலஞ்ச் பண்றேன். காசிக்குப் போயும் கர்மம் விடலேங்கிற மாதிரி எப்ப அத்தினி தூரம் போயும் ‘கரும்பாயிரத்துக்கு அன்பைச் சொல்லவும்’னு மனுசன் எழுதினாரோ, அப்பவே புரிஞ்சு போச்சு சார்!”

“அட உனக்குக் கோபம்லாம் அவர் உன்னை விசாரிச்சு எழுதலேங்கிறதுதானே? இல்லியா?” என்று ஆடிட்டர் கிண்டலில் இறங்கியதும், “என்னையோ குமரேசனையோ எங்கப்பா மனுஷங்களாகவே மதிக்க மாட்டார்ங்கிறதுதான் ஊரறிஞ்ச விஷயமாச்சே?” என்று தண்டபாணி தம்பிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்தான்,

“சரி! இந்த நல்ல நேரத்துலே எதுக்கு வீண் கசப்பான பேச்சு? சப்ஜெக்ட்டை மாத்து. அப்பாவை அஜெண்டாவில இருந்து தூக்கு. அந்த இடத்திலே குப்தாவைப் போடு. குஷியா அவரைப் பத்திப் பேசலாம். பார்கவி எக்ஸ்பான்ஷன் பற்றி முன்னலே பாதி பேசினதோட நிக்குது. குப்தா எங்க இருக்கார்? எப்ப வருவார்? அவர் வந்ததும் எக்ஸ்பான்ஷன் விஷயமா மறுபடி யோசிக்கணும்,” என்றான் குமரேசன்.

“குப்தா, இன்னிக்கு அகமதாபாத்திலே இருக்கணும்! அங்கே ஒரு டெக்ஸ்டைல் இண்டிஸ்ட்ரீ ‘லாக் அவுட்’. அது சம்பந்தமா அந்த இண்டஸ்ட்ரியோட உரிமையாளர்களுக்கு யோசனை கூறப் போயிருக்கார். அது முடிஞ்சதும் அங்கேயிருந்து நேரே டில்லி போயிட்டு அப்புறம் இங்கே வர்றேன்னிருக்கார்,” என்றான் தண்டபாணி.

ஏற்கெனவே இருந்த அறைகள், இப்போதுள்ள ஏ.சி. சூட்கள் ஆகியவற்றிற்கே ஆள் வருமா என்று முதலில் பயந்தது போகப் பக்கத்திலேயே ‘நியூ பார்கவி - அனெக்ஸ்’னு இன்னொரு மூணு மாடி கட்டினாலும் ஃபுல் ஆகும் போலிருந்தது. ஹாலிடே, ஓய்வு, பில்கிரிமேஜ், சினிமாத் தயாரிப்பு, பார்கவியின் ரெஸ்டாரெண்டில் பெண்களே பரிமாறும் அழகு, எல்லாமாகச் சேர்ந்து குருபுரத்தையே கேந்திரமாக்கி இருந்தன.

அந்த நாளில் பழைய கிராமாந்தரத்துக் கல்யாணங் களுக்குக் கிணற்றடியில் கொல்லைப் பக்கம் நீளமாகக் குழி தோண்டிக் கோட்டை அடுப்பு என்று டன் டன்னாக விறகுக் கட்டையைப் போட்டு எரித்துச் சமையல் பண்ணுவார்களே அது போல், கோட்டையடுப்பும் விறகு போட்டு எரிக்கும் முறையும்தான் பழைய பார்கவியில் இருந்தன. அதனால் சமையலறை புகை மயமாகக் கரி படிந்து இருண்டிருக்கும். ரூம்களில்கூடச் சமையல்கட்டுப் புகை அடித்து மூச்சுத் திணறும். இதனால் கட்டிய முதல் வருடக் கடைசிக்குள்ளேயே பாதிக் கட்டிடங்கள் மங்கிக் கறுத்திருந்தது. கெட்டுப் போயிருந்தது.

இவர்கள் ‘நியூ பார்கவி’யாக மாற்றிய போது அந்தக் கோட்டை அடுப்புக்களை இடித்துவிட்டு காஸ் அடுப்பு வரிசை களை உருவாக்கியதால் கட்டிடம் பிழைத்தது. குருபுரத்தில் காட்டு விறகும் கரியும் கொஞ்சம் மலிவு என்பதால் சிவவடி வேலுவும் காதில் பூச்சுற்றிக் கொண்ட கரும்பாயிரமும் கோட்டையடுப்பைக் கட்டியிருந்தார்கள்.

இப்படிச் சிவவடிவேலுவை வெளிநாடு அனுப்பிவிட்டுக் கரும்பாயிரம் வகையறாக்களை வெளியே அனுப்பிவிட்டு இந்த மாறுதல்களை வேகமாகச் செய்ய முடிந்ததுபோல் அவர்களை வைத்துக்கொண்டு வேகமாகச் செய்ய முடியாது என்பதை இப்போது மாறுதல் நடந்தபின் சம்பந்தப்பட்ட அனைவருமே உணர்ந்திருந்தனர்.

“சிவவடிவேலுவின் பையன்கள் எவனோ ஒரு வட நாட்டு ஆசாமியின் ஒத்துழைப்போடு கேரளாவிலிருந்து பொம்பளைங்களை வரவழைச்சு என்னென்னமோ பண்ணிப் பழைய பார்கவியின் கண்ணியத்தையும் மரியாதையையும் கெடுத்து விட்டார்கள். தண்ணியும், பொண்ணுங்களுமா பார்கவியிலே எல்லாம் சினிமாக்காரனுவளாத் தங்க ஆரம்பிச்சிட்டாங்க. முதலாளி மட்டும் இப்ப இங்கே இருந்து இதைப் பார்த்தாங்கன்னா அப்படியே கண்ணுலே ஜலம் விட்டு அளுவாக!” என்று கொஞ்ச நாள் பேசிப் பேசி அலுத்து அப்புறம் ஓய்ந்து போனான் கரும்பாயிரம்.

அவன் பேச்சை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. தான் மாதவி டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் மூலம் சிவவடிவேலுவுக்கு அனுப்பிய கடிதம் கிடைத்துத் தன் விஷயமாக அவர் ஆடிட்டர் அனந்துக்கு அல்லது வேறு யாருக்காவது கடிதம் எழுதித் தன்னைக் காப்பாற்றுவார் என்று கரும்பாயிரம் காத்திருந்தது வீணாயிற்று. அவனும், தவசிப் பிள்ளையும், பழைய பார்கவியின் ஸ்டோர் கீப்பரும், விலக்கப்பட்ட வேறு சிலரும் சேர்ந்து மலை மேல் ஆஞ்சநேயர் கோயில் வாசலில் ஒரு கேன்டீன் திறந்தனர்.

கோவிலுக்காக மலை மேல் வந்து போகிற கூட்டத்தைச் சமாளிக்க அது மாதிரி ஒன்று தேவையாகவும் இருந்தது. வியாபாரம் தான் ஸ்டடியாக இல்லை. ஒரு நாள் ஆயிரம் ரூபாய் இன்னொரு நாள் எண்ணூறு ரூபாய் என்று முன்னும் பின்னுமாக வந்தது.

எப்போதும் போல் வலது காதில் பூவும் வில்வமும் நெற்றியில் விபூதி சந்தனம் குங்குமமுமாகப் பார்கவியில் உட்கார்ந்திருந்து வியாபாரத்தை ஓட்டினான்.

தவசிப் பிள்ளை மலையில் கிடைக்கிற விறகுகளில் தாராளமாக அடுப்பெரித்து இட்டிலிப் பானையை ஏற்றி இறக்கினார்.

மலை மேலே வியாபாரம் டல்லாயிருந்த நாட்களில் இரண்டு பேரும் பழைய பார்கவி நாட்களை அசை போட்டனர்.

“ஓய் பண்டாரம்! (இப்படித்தான் கரும்பாயிரத்தைத் தவசிப் பிள்ளை வழக்கமாக அழைப்பார்) நீரு அந்தப் பயலுக காதிலே பூ வைக்கப் பார்த்தீரு! அவனுக நம்ம காதிலேயே பூச்சுத்திப் போங்கடான்னு இப்படி வெளியிலே துரத்தி விட்டுட்டானுவ.”

“இதா பாரும் தவசிப் பிள்ளை! எங் காதிலே எவனும் பூச்சுத்திவிட முடியாதுன்னேன். நெனைவு தெரிஞ்ச நாளிலேருந்து இன்னொருத்தன் பூச்சுத்த வழியில்லாமே நானே என் காதிலே பூ வச்சுக்கிடுதேன். சிவவடிவேலு முதலாளி மட்டும் வரட்டும். பசங்களை என்ன பாடு படுத்தப் போறார்னு நீரே உம்ம கண்ணுலே பார்க்கத்தான் போறீரு!”

“அதெல்லாம் ஒரு பாடும் படுத்த மாட்டாரு! வீணா நீரு கனாக் கண்டுக்கிட்டிருக்கீரு. பசங்க பார்கவியை ஃபைவ் ஸ்டார் ஓட்டல் கணக்கா ஆக்கிப் பழைய கடனை எல்லாம் அடைச்சி லாபத்திலே கொண்டு போயிட்டிருக்காங்க... சிவவடி வேலு இதைப் பாத்தே அசந்து போயிடப் போறாரு...”

“இருக்கலாம் தவசிப் பிள்ளே! ஆனாலும் இந்தப் பொம்பிளைங்க விஷயம் அவருக்குப் பிடிக்காது. ஒரே சினிமாக்காரனா வந்து தங்கறானுவ. அதுவும் அவருக்குப் பிடிக்காது.”

“அட சும்மா இரும்யா! என்னமோ பொம்பிளை பொம்பிளைன்னு கரிச்சுக் கொட்றீரே. அவளுகளை ரொம்ப மரியாதையாத் தனி வீடு எடுத்துக் குடுத்துத் தங்க வச்சிருக் காங்க. நல்ல சம்பளம், போனஸ் எல்லாம் தர்றாங்க. டூட்டி முடிஞ்சதும் அதது தான் தங்கற வீட்டுக்குப் போயிடுது. ஒரு பொண்ணு அங்க நின்னிச்சு, இங்கே நின்னிச்சு அவனோட தங்கிச்சு, இவனோட தங்கிச்சுன்னு எவனும் நாக்குமேலே பல்லுப் போட்டுப் பேசிற முடியாது. இதிலே கொறை சொல்ல என்னய்யா இருக்கு? சும்மாச் சொல்லக் கூடாது. அந்தக் குமரேசன் பயலும் தண்டபாணியும் அந்தக் கேரளப் பொண்ணு களை அக்கா தங்கச்சி மாதிரித்தான் நடத்தறாங்க.”

“நீரே சர்டிபிகேட் எழுதிக் குடுப்பீரு போலிருக்கே?”

“என் சர்டிபிகேட் அவங்களுக்கு எதுக்குப் பண்டாரம்? நீ சொல்ற மாதிரிச் சிவவடிவேலு மொதலாளி திரும்பி வந்து இவங்களை என்னமோ பண்ணிடுவாருன்னு நான் நெனைக்கல்லே. வேணும்னா தனக்கு இல்லாத பிஸினஸ் சாமர்த்தியம் தன் பையங்களுக்கும் பொண்ணுக்கும் இருக்கிறதைப் பார்த்து வெட்கப்பட்டுக்குவாரு.”

“உனக்குத் தெரியாது தவசி! பெரியவருக்கு இதெல்லாம் பிடிக்காதுப்பா. இந்தப் பார்கவி அந்தக் குப்தாவோட மச்சான் ஒருத்தன் அஜீத்னு வந்திருந்தானே அவனேட சுத்துதாம். இந்தக் குமரேசன் பய கேரளாவிலே இருந்து வந்திருக்கிற குட்டிங்களிலே படு ஷோக்கா இருக்கிற ஒண்ணோட ரொம்ப இழையறானாம்.”

“போயிட்டுப் போறாங்க! அதைப் பார்த்து உனக்கு ஏம்பா பத்திக்கிட்டு எரியுது? நீ நினைக்கிற மாதிரி சிவவடி வேலு அதையெல்லாம் கண்டுக்க மாட்டாரு. பணம் இருந்தா மத்ததெல்லாம் அவருக்கு மறந்துடும்.”

மலை மேல் தாங்கள் புதிதாக வைத்திருக்கும் கான்டீனில் ஈயாடுகிற சமயத்தில் இப்படி அரட்டையில் நேரத்தைக் கழித்தனர் கரும்பாயிரமும் தவசிப்பிள்ளையும். கரும்பாயிரத்துக்கு இன்னும் கொஞ்சம் நைப்பாசை உள்ளூர இருந்தது. சிவவடிவேலு திரும்பி வந்தவுடன் தன்னைக் கூப்பிட்டனுப்பிப் பார்கவியிலேயே ஒரு வேலை போட்டுக் கொடுத்து விடுவார் என்று அவன் நம்பினான். தவசிப் பிள்ளைக்கு அந்த மாதிரி நம்பிக்கை எல்லாம் அறவே கிடையாது.

“சும்மா நைப்பாசை வைக்காதேயும் பண்டாரம்! புதுப் பார்கவி உம்ம மாதிரி ஆளத் தாங்காது! அதுலே தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கிலீஷ் பேசற ரிசப்ஷனிஸ்ட் வந்தாச்சு. போர்டிங் ரிஸப்ஷன்லே மூணு ஆங்கிலோ இந்தியன் லேடீஸ் ஜம்னு குந்திக்கிட்டிருக்காங்க! சரக்கு மாஸ்டருக்கே ஆயிரம் ரூபாய் சம்பளங்கிறான். நாம கனவு கூடக் காண முடியாது” என்று உறுதியாகச் சொன்னார் தவசிப்பிள்ளை.

“உனக்குத் தெரியாது தவசி! நான் பெரியவரோட டூர் அரேஞ்ச் பண்ணியிருக்கிற டிராவல் கம்பெனி மூலமாப் பெரிய முதலாளி அட்ரஸுக்குப் போறாப்பல ஏரோப்ளேன் கடிதாசியே ரகசியமா அனுப்பியிருக்கேனாக்கும்,” என்று மார் தட்டினான் கரும்பாயிரம்.

அதைக் கேட்டுத் தவசிப் பிள்ளை வறட்சியாகச் சிரித்தார். கரும்பாயிரத்துக்கு இருப்பது போல் தனக்கு மறுபடி பார்கவியில் போய் வேலை பார்க்கும் ஆசை அறவே இல்லை என்பதை அவர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

“அப்பிடி ஒருவேளை பெரிய முதலாளி வந்து உங்களை எல்லாம் திரும்ப எடுத்துக்கிட்டாக் கூட நான் அங்கே வர்றதா இல்லே. சரக்கு மாஸ்டரா இருந்த இடத்திலே கறிகாய் நறுக்கறவனாக் கூப்பிடுவாங்க. எனக்குப் பிடிக்காது. இங்கே மலையிலே அநுமார் காலடியிலேயே என் காலம் போயிரட்டும்” என்றார் தவசிப்பிள்ளை.

அத்தியாயம் - 15

ஏப்ரல் மாத முதலில் சிவவடிவேலு பம்பாய் வருவதாக ஆஸ்திரேலியாவிலிருந்து டெலக்ஸ் வந்திருக்கிறது என்றும் சரியான தேதி ஃபிளைட் நேரம் பம்பாய் அரைவல், மெட்ராஸ் அரைவல், மதுரை அரைவல் விவரங்களைப் பின்பு தெரிவிப்பதாகவும் மாதவி டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட்டிலிருந்து ஆடிட்டருக்கு ஒரு கடிதம் கிடைத்தது.

சவுத் ஈஸ்ட்டிலிருந்து வருவதாயிருந்தால் பம்பாய் போகாமல் நேராகச் சென்னையிலேயே லேண்டிங் ஆகிற மாதிரி பிளைட் இருக்கலாம் என்று ஆடிட்டர் திரும்ப அவர்களுக்கு எழுதினார்.

“அது அவர் திரும்புகிற விமானக் கம்பெனியைப் பொறுத்தது. மணிலா டூ துபாய் அண்ட் துபாய் டூ பம்பாய் என்று ஒரு பிளைட் இருக்கிறது. அவர் மணிலா சிங்கப்பூர் எங்கிருந்து புறப்பட்டாலும் பம்பாய் - சென்னை எங்கு வேண்டு மானாலும் வந்து இறங்கலாம். கடைசி போர்டிங் பாயிண்ட் வந்ததும் அதுபற்றி மறுபடி எழுதுகிறோம் என்று டிராவல் ஏஜென்டிடமிருத்து பதில் கிடைத்தது.

“ஏப்ரலில் நீ டில்லி புறப்பட்டு வா; நாம் சிம்லா போகலாம்” என்று பார்கவிக்குச் சுஷ்மா குப்தா கடிதம் போட்டிருந்தாள்.

அவள் கடிதத்தை அண்ணன் தண்டபாணியிடம் காட்டி விமான டிக்கெட் எடுத்துத் தரும்படிக் கேட்டாள். தண்டபாணி சிரித்தான்.

“இப்போ மார்ச் கடைசி வாரம். இங்கே ‘நியூ பார்கவி அனெக்ஸ்’ கட்டறது சம்பந்தமாக முக்கிய மீட்டிங் இருக்கு. குப்தா அவன் மனைவி, அஜித், எல்லாருமே குருபுரம் வராங்க. நீயும் இங்கே இருந்தாகணும், ஏப்ரல்லேயே அப்பா ஊர் திரும்புகிறார். அவர் முதல்லே மெட்ராஸ்லே இறங்குகிற மாதிரி ஃபிளைட்டில் வருகிறாரா, பம்பாயில் இறங்குகிற மாதிரி ஃபிளைட்டில் வருகிறாரா என்று இன்னும் உறுதியாகவில்லை. அவரை ரிஸீவ் பண்ண நீயும் இருக்கணும்! இப்போ சிம்லாவில் போய் என்ன பண்ணப் போறே? கோடையிலே குருபுரமே சிம்லாவை விடப் பிரமாதமாக இருக்குன்னு சிம்லாக்காரங்களே கொண்டாடறாங்க. நீ என்னடான்னா சிம்லாவுக்குப் போகணும்கிறியே?”

“யார் கொண்டாடறாங்க அப்படி?”

“ஏன்? அஜீத், அவனோட அக்கா சுஷ்மா குப்தா எல்லோருமே குருபுரத்தைக் கொண்டாடறாங்க.”

“எனக்கு என்னமோ சிம்லாவைத்தான் பிடிச்சிருக்கு அண்ணா!”

“வேடிக்கைதான். அஜீத் அவனுக்குக் குருபுரம்தான் பிடிச்சிருக்குன்னு சொல்றான். நீயோ உனக்குச் சிம்லாதான். பிடிக்குதுன்னு சொல்றே. நீ அங்கே இருக்கறப்போவோ அவன் இங்கே இருக்கறப்போவோ உங்களுக்கு எது பிடிச்ச இடம்ன்னு ரெண்டு பேருமே ஒண்ணும் சொல்றதில்லை.”

இதைக் கூறிவிட்டுத் தண்டபாணி நமுட்டு விஷமத்தனமாகச் சிரித்தான். “கிண்டல் வேணாம் அண்ணா! நான் சீரியஸாகவே கேட்கிறேன்.”

“நானும் சீரியஸ்ஸாகத்தான் சொல்றேன். பார்கவி! சிம்லாவே இங்கே வரப்போகுது. நீ ஏன் அங்கே போகணும்ங் கறே?”

அவள் தலை குனிந்தாள். தான் பிடிபட்டு விட்டோம் என்கிறாற்போல் உள்ளுணர்வு குறுகுறுத்தது அவளுக்கு.

“பவர் உன்பேர்ல இருக்கு. நிறையக் கையெழுத்து எல்லாம் தேவைப்படும். அஜீத் ஏற்கனவே பதினைந்து லட்சம் இதிலே போட்டிருக்கான். ஸ்விம்மிங் பூல், கார்டன் ரெஸ்டாரெண்ட், ஷாப்பிங் காம்பிளக்ஸ், பெர்மிட் ரூம் இத் தனையோடவும் அனெக்ஸ் கட்டி இன்னும் அறுபது லட்சம் அவன் போடறான். நாம அறுபது போடறோம். அவனே நம்ம போர்டு ஆஃப் டைரக்டர்ஸ்ஸா சேர்த்துக்கிறோம். பார்ட்னர் ஆகிறான். அப்பா வர்றதுக்கு முன்னலேயே எக்ஸ்பான்ஷன் ப்ளுபிரிண்ட் ரெடியாகிடணும்,”

“சரி, நான் இங்கேயே இருக்கேன். ஓ.கே.” என்றாள் பார்கவி.

“ஏன்? பார்ட்னர் இங்கேயே தேடி வரான்கிறதாலியா?”

“என்ன சொன்னே?” என்று பொய்யான கோபத்துடன் சீறினாள் பார்கவி.

“தப்பா ஒண்ணும் சொல்லலே. ஓட்டலோட பார்ட்னர் இங்கேயே வரப்போறார்ன்னு சொன்னேன்” என்று சிரித்து மழுப்பினன் தண்டபாணி.

பார்கவி உள்ளுர மகிழ்ச்சியில் மிதந்தாள். ‘அஜித் பார்கவியின் பார்ட்னர் ஆகிறான்’ என்ற வாக்கியத்தை எண்ணிக் குறுகுறுப்பு அடைத்தாள். அந்த வாக்கியத்திலேயே இரட்டை அர்த்தம் இருந்தது.

சிலேடை இரட்டை அர்த்தப் பேச்சுக்களிலே அடிக்கடி கைதட்டல் வாங்கிப் பழக்கப்பட்டிருந்த குமரேசன் இப்போது பார்கவியைக் கிண்டல் செய்ய இந்த வாக்கியம் மிகவும் பயன்பட்டது.

“பார்கவிக்கு ஒரு யங் பார்ட்னர் நார்த்திலிருந்து கிடைக்கிறது நம்ம அதிர்ஷ்டம்.”

“எந்த இம்ப்ரூவ்மெண்ட்டுக்கும் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அவசியம்.”

“பார்கவியின் புதிய பார்ட்னர் ஏற்கெனவே சிம்லாவிலேயும், நைனிட்டால்லேயும் ரெண்டு பெரிய ஓட்டலை சக்ஸஸ் ஃபுல்லா நடத்திக்கிட்டிருக்கான்,” என்று குமரேசன் தற்செயலாக ஏதாவது சொன்னால்கூட அது சிலேடையாகவே குமாரி பார்கவியின் காதில் ஒலித்தது. அவள் நாணி முகம் சிவந்தாள்.

பார்கவி புது அனெக்ஸ் சம்பந்தமான மீட்டிங்குக்கு வந்த போது குப்தாவே அகமதாபாத்திலிருந்து ஒரு பெரிய ஆர்க்கிடெக்டையும் கையோடு கூட்டிக் கொண்டு வந்திருத் தான். அனெக்ஸ் பில்டிங்கைத் தூரத்திலேர்ந்து பார்க்கறப்ப ஒரு ஜயண்ட் சைஸ் ஓட்டல் அதாவது தாமரைப் பூ தெரியற மாதிரி அமைத்திருந்தான் அந்த இஞ்சினியர். அவனுடைய மாடலும், வரைபடமும் மிக மிக எடுப்பாயிருந்தன. ஸ்விம்மிங் பூல் அருகில் தென்னந்தோப்பின் இயற்கைச் சூழல் கெடாமல் அமைக்கப்பட வேண்டும் என்று அவனிடம் சொன்னார்கள். அனெக்ஸில் ஒவ்வொரு சூட்டுக்கும் ஒரு பால்கனி வருகிற மாதிரிப் பிளான் இருந்தது. அஜித் யோசனை சொல்லித்தான் இந்த ஆர்க்கிடெக்டை அழைத்து வந்ததாகக் குப்தா சொன்னான். அவனும் அவனுடைய மனைவியும் மீட்டிங்குக்குச் சில தினங்கள் முன்னதாகவே வந்து சேர்ந்து விட்டார்கள்.

தான் என்ன கேட்கிறோம் என்ற நினைப்பே இன்றி, “நீங்க ரெண்டு பேர் மட்டும்தான் வந்தீங்களா அக்கா?” என்று சுஷ்மாவிடிம் பார்கவி கேட்டுவிட்டு அப்புறம் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

“அஜீத் நாளன்னிக்கு வந்துடறான் அம்மா!” என்று சிரித்தபடி பதில் சொன்னாள் சுஷ்மா.

“பார்கவி, உன் இந்தி பத்தாது. புதுப் பார்ட்னர் இந்திக்காரன். உன்னோட புரோக்கன் இந்தியை வச்சு இனிமேல் காலந்தள்ள முடியாது” என்று குப்தா அவளைச் சீண்டினான்.

“ஏன்? அவ பார்ட்னருக்குத் தமிழ் கத்துக் குடுத்துட்டாப் போறது” இது சுஷ்மா.

“எப்படியானாலும் இந்தப் பார்ட்னர்ஷிப்பாலே ஏதோ ஒரு பாஷை சங்கடப்படப் போறது உறுதி. பார்கவி இந்தி படிச்சா அதுனால இந்தி கஷ்டப்படும், அஜீத் தமிழ் படிச்சா அதுனாலே தமிழ் கஷ்டப்படும்.”

“இல்லாட்டி ரெண்டு பேருமே கஷ்டப்படுவாங்க.”

“பாஷையைக் கடந்த உறவு இது. இதுலே பாஷைப் பிரச்சினை வரவே வராது. தமிழ்நாட்டுச் சித்திராங்கதையை வடநாட்டு அருச்சனன் இதிகாச காலத்திலேயே காதலிச்சிருக் கான், அதிலே பாஷைப் பிரச்சினை வரலே. அந்தக் காதல் வெற்றியடைந்திருப்பது இன்று காவியங்களிலேயே பொறிக் கப்பட்டிருக்கிறது,” என்று குமரேசன் பிரசங்கத்தில் இறங்கிய போது,

“எ பாயின்ட் ஆஃப் ஆர்டர் குமரேசன்! இப்போ நாம பார்கவியோட பார்ட்னர்ஷிப் பற்றிப் பேசிக்கிட்டிருக்கோம், வேற எதையும் பற்றிப் பேசலே, ஞாபகமிருக்கட்டும்.”

“ஆமாம் நானும் பார்கவியோட பார்ட்னர்ஷிப் பற்றித் தான் பேசிக்கிட்டிருக்கேன். கத்தரிக்காய் வெலையைப் பற்றிப் பேசலை.”

“ஐ மீன் ஓட்டல் நியூ பார்கவி” என்று குப்தா புன்னகை புரித்தான். நியூ பார்கவி என்றதும் குமரேசன் சுதாரித்துக் கொண்டு பின் வாங்கினான்.

“நீ பட்டி மன்றங்களிலே பேசறதை விட்டப்புறமும் எதிர்க்கட்சியை அடிக்கணும்கிற மனப்பான்மையும் தலைவர் மணியடிச்சப்புறமும் விடாமப் பேசிக்கிட்டிருக்கிற பழக்கமும் உன்னைவிட்டுப் போகலே” என்றார் ஆடிட்டர்.

“எங்கப்பா வந்தப்புறம் நிறைய கட்சி பேசணும்கிற ஆர்வத்திலே பழக்கம் விட்டுப்போகாமல் காப்பாத்திக்கிட்டிருக் கேன் சார்!”

“அதுக்கெல்லாம் அவசியமே இராது. பார்கவியின் வளர்ச்சியைப் பார்த்துக் குருபுரமே வியந்து போயிருக்கு. உங்கப்பா அப்படியே மலைச்சுப் போயிடுவார்! எதிர்த்துப் பேச ஒண்ணுமே இராது!”

“நீங்க நினைக்கிறீங்க; அவருக்குப் புதுமைன்னாலே அலர்ஜி, பார்கவியைப் புதுசா மாத்திப்பிட்டோம்கறதே அவருக்குப் பிடிக்காது.”

“யூ மீன் ஓட்டல் பார்கவி ஆர் யுவர் யங்கர் சிஸ்டர் பார்கவி?”

“ஐ மீன் போத்...”

“நியாயந்தான். இரண்டு பார்கவிகளுமே மாறித்தான் போயிருக்காங்க. சல்வார்கம்மீஸோட இந்தப் புது பார்கவி நிக்கறதைப் பார்த்துச் சிவசிவா என்று கண்ணைப் பொத்திக் கொள்ளப் போகிறார் அவர்.”

“பூனை கண்களை மூடிக் கொள்வதால் உலகம் இருண்டு போய் விடாது.”

“ஆனால் எலிகள் கவலைப்பட வேண்டியிருக்கும்.”

“எங்கப்பாவும் நாங்களும் பூனையும் எலியுமா இருக்கோம்னு சொல்றீங்க...”

“அய்யய்யோ! நான் அப்படியெல்லாம் ஒண்ணும் சொல்லல சாமீ. உங்க கணிப்பெல்லாம் சரியா இல்லாமப் போனாலும் போகும். மனுஷனோட முக்கால்வாசி முரண்டுக்குக் காரணமே பல இடங்களைப் பார்க்காமல் பழகாமல் கிணற்றுத் தவளையா இருக்கிறதுதான். நாலு இடம் சுத்திட்டுத் திரும்பி வந்தா மனசு விசாலப்படும். விட்டுக் கொடுக்கிற மனசு வரும். பிரயாணம் ஒரு மனுஷனை ஞானஸ்தனாக்கா விட்டால் வேற எதாலயும் அவனை ஞானஸ்தனாக ஆக்கவே முடியாது. உங்கப்பா முக்கால்வாசி இந்தப் பிரயாணத்திலேயே ‘மெல்லோ’ ஆகியிருப்பார்னு நான் நினைக்கிறேன்” என்றார் ஆடிட்டர்.

“‘மொதலாளி கும்புடறேனுங்க. என்னைக் காப்பாத்த ணும்’னு கரும்பாயிரம் கால்லே விழுந்தவுடனே பிரயாணத்தாலே வந்த அத்தனை ஞானமும் போயிடும் சார்!”

“தெரியுமா சங்கதி! கரும்பாயிரம் மலையிலே கோயில் முகப்பிலே காண்டீன் போட்டிருக்கானாம், தவசுப் பிள்ளைதான், சரக்கு மாஸ்டர்.”

“சொந்த ஓட்டல்லியாவது திருடாமே இருப்பாங்கன்னு நினைக்கிறேன். தனக்குத்தானே திருட முடியாது.”

“பரவாயில்லாமே நடக்குன்னு சொல்றாங்க.”

“ஜான்சனுக்கு பாஸ்வெல் மாதிரி எங்கப்பாவுக்குக் கரும்பாயிரம்னு சொல்லலாம்.”

“கரும்பாயிரம் வாட் எ ஃபன்னி நேம். வாட் இஸ் தி மீனிங்...?” என்று குப்தா கேட்டான்.

“ஒன் தவுஸண்ட் ஷுகர் கேன்னு மொழிபெயர்க்கலாம்.”

“ஈவன் தென் குமரேசன் ஹாவ் ஏ வெரி பிட்டர் ஒப்பினியன் எபெளட் ஹிம்.”

“ஆமாம் இது பேய்க் கரும்பு.”

“அது சரி, அந்த ஆள் ஏன் காதிலே பூ சுத்திக்கிறான்?” இது ஆடிட்டர்.

“தன் காதுலே சுத்திக்கிறதுக்கு முன்னலேயே எங்கப்பா காதுலே வகையாகச் சுத்திவிட்டிருக்கான்.”

“சரி, சரி! ஒரே கரும்பாயிரம் புராணமாப் போரடிக்காம விஷயத்துக்கு வா. அந்த அகமதாபாத் ஆர்க்கிடெட் கொண்டாந்திருக்கிற மாடலும் ப்ளு பிரிண்ட்டும் பற்றி என்ன அபிப்பிராயப்படறே?” என்று தண்டபாணி பிஸினஸை நினைவு படுத்தினான்.

“எனக்குப் பிடிச்சிருக்கு, சவுத்திலேயே இது மாதிரிப் பில்டிங் நம்மதுதான்னு பேர் கிடைக்கும். பிரமாதமா ப்ளான் பண்ணியிருக்கான். ஆடிட்டர் சார் என்ன நினைக்கிறார்ன்னு தெரியலையே?” என்றான் குமரேசன்.

“லோட்டஸ் நம்ம புராண இதிகாசங்களிலே வர்ற புனித மலர். அதனாலே ராசியாத்தான் இருக்கும். பார்கவிங்கற பேருக்கும் தாமரைக்கும் பொருத்தம் இருக்கு. பார்கவி வாசம் செய்ய ஒரு தாமரைங்கிற மாதிரி ஆயிடும். ரொம்பப் பொருத்தம்.”

“ஆடிட்டிர் சார் எங்கப்பாவோட பழகிப் பழகி அதே மாதிரிப் பொருத்தம் பார்க்க ஆரம்பிச்சுட்டார். ஆர்க்கிடெக்சுரல் ப்யூட்டியைப் போய் ஜோஸியத்திலே பொருத்திப் பார்க்கக் கூடாது. அழகுங்கிறதே ஒரு அதிர்ஷடம்தான் சார். எங்கப்பா ஆயிரம் நாள் நட்சத்திரம் பார்த்து ஆரம்பிச்ச பார்கவி தேறவே இல்லை. அவரை வெளியிலே அனுப்பிச்சு அவர் வேலைக்கு வச்ச ஆளுங்களையும் அனுப்பிச்சுட்டு நியூ பார்க்கவியா மாத்தினப்புறம்தான் லட்சுமி கடாட்சம் பொங்குது இப்ப. நல்ல மனசும் முயற்சியும் இருக்கணும் சார், அது போதும்” என்று குமரேசன் மறுபடி ஆடிட்டிருக்கு ஒரு பிரசங்கம் பண்ணினான்.

“என்னை விட்டுடுப்பா! போதும்! ஒத்துக்கறேன்” என்று கைகளை மேலே தூக்கி அலறினார் ஆடிட்டர்.

“இங்கே இத்தினி புரொட்யூஸர் வந்து தங்கறாங்களே, எவனாவது உன்னை ஒரு படத்துக்கு வசனம் எழுதப் போடலாம்பா. ஏன்னா தமிழ்ப் படத்திலேதான் ஒவ்வொரு கேரக்டரும் டயலாக் என்கிற பேர்லே ஒரு மினி பிரசங்கமே பண்ண முடியும்.”

“புரொட்யூஸருங்க நல்லா இருந்தாத்தான் பார்கவிக்கு நல்லது! இவனை மாதிரி ஆளுங்களைக் கதை வசனம் எழுதச் சொல்லி அவங்க பிழைப்புலே மண்ணைப் போட்டுட்டீங்கன்னா அப்புறம் பார்கவிக்குக் கஸ்டமர்ஸ் இருக்க மாட்டாங்க” என்று தண்டபாணி கவலைப்பட்டான்.

“நான் இன்னொருத்தனுக்கு ஏன் எழுதணும்? ரெண்டு வருஷம் போனால் நானே படம் எடுப்பேன்” என்றான் குமரேசன்.

“நீ ஏண்டா படம் எடுக்கணும்? பாம்புதான் படமெடுக்கும். உனக்கு எதுக்கு அந்த வேலை? மறுபடி கடனாளியாகணும்னு ஆசையா இருக்கா உனக்கு?” என்று குமரேசனை ஆடிட்டர் சாடினார்.

அத்தியாயம் - 16

ஊர் திரும்புகிற நாள் நெருங்க நெருங்கச் சிவவடி வேலுவுக்குக் கவலைகள் அதிகமாகி விட்டனவோ என்னவோ டோக்கியோவிலிருந்து எழுதிய கடிதத்தில் ஊரில் கோடெள னில் இருக்கிற ஏலக்காயைப் பற்றி அதிகமாகப் புலம்பி யிருந்தார். பார்கவி பற்றியும் அதிகமாகப் புலம்பியிருந்தார்.

‘பார்கவிக்குச் சூதுவாது தெரியாது. ஆனால் என் மேலே பிரியம் அதிகம். பசங்களைப் போல என்னை எதிர்த்துப் பேசற துணிச்சல் அவளுக்கு இல்லை. பவர் பத்திரம் கொடுத்துட்டு வந்திருக்கிறதைப் பயன்படுத்தி அவளை யாராவது ஏமாத்தி எதுக்காவது கையெழுத்து வாங்கிடப் போறாங்க. அதனாலே அந்த விஷயம் ரகசியமாவே இருக்கட்டும்.

‘அத்தியாவசியமான செலவு மட்டும் நடக்கட்டும்! எதுக்காகவும் எஃப்.டி. எதையும் மெச்சூர் தேதிக்கு முன்னால் எடுக்க வேண்டாம். குப்தாவே சொன்னாலும் மாறுதல் எதையும் அவசரப்பட்டுப் பண்ணிட வேண்டாம். ஒரு தடவைக்கு நூறு தடவை யோசனை பண்ணாமே எதையும் பண்றது சரியா வராது.

‘கோடெளன் ஏலக்காயை விலைவாசி நேரம் பார்த்து மார்க்கெட்டில் விடவேண்டும். இல்லாவிட்டால் எஸ்டேட். மெயின்டெனன்சுக்குக் கூடக் கட்டுபடி ஆகாது. ஞாபகம் வச்சுக்குங்க.

‘தினசரி ராத்திரி வீட்டுக் கதவைப் பத்திரமாகத் தாழ் போட்டுக் கொள்ளச் சொல்லவும், அந்தத் தறுதலை குமரேசன் ஊரெல்லாம் சுத்திட்டு ராத்திரி ஒரு மணி ரெண்டு மணிக்கு வீடு திரும்புவான். அவனுக்கு மறதி அதிகம். பார்கவி சிறிசு. இப்போ ஹாஸ்டல் விட்டுப் பரீட்சை முடிஞ்சு லீவுக்கு வந்திருப்பாள். வேலையாட்களிடம் சொல்லியாவது கதவைப் பத்திரமாகத் தாழ் போடச் சொல்லும்படி ஆச்சியும் சொல்லு கிறாள். ஆச்சியும் நானும் செளக்கியம் என்று அனைவரிடமும் கூறவும். கரும்பாயிரத்துக்கு அன்பு. ஸ்ரீமான் குப்தாவை நான் விசாரித்ததாகத் தெரிவிக்கவும்.’

என்று ஆடிட்டருக்கு எழுதியிருந்தார் சிவவடிவேலு. ஆடிட்டர் இந்தக் கடிதம் வந்ததும் குமரேசனிடம் கொடுத்து “உன் மேலேதாம்பா அவருக்குக் கொள்ளைப் பிரியம். உனக்கு ஞாபகமறதி அதிகம்கறது அவருக்கு டோக்கியோவிலே வச்சுத்தான் நினைவு வந்திருக்கு. சதாகாலமும் உன் நினைவு தான் போ” என்றார் ஆடிட்டர். கிண்டலாகத்தான் சொன்னார்.

“என்னை அத்தனை சுலபத்திலே மறந்துட முடியுமா? ஆடிட்டர் சார்! இந்த மிராசுதார் குடும்பத்திலே இவர் மாதிரி ஒரு தந்தைக்குத் தப்பித் தவறிப் பிறந்து விட்ட அறிவு ஜீவி நான் ஒருவன் தானே சார்? இந்த வட்டாரத்திலேயே தமிழ் இலக்கியக கூட்டம் நடத்தற எவனை வேணாக் கேளுங்க! ‘குமரேசன்’னாத் தமிழ்த் தெரிஞ்ச எவனும் உடனே துள்ளிக் குதிச்சாகணும். முந்தா நாள்கூட ஒருத்தன் ‘மகிழ்ச்சி தருவது காதலா - பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணமா?’ங்கிற பட்டிமன்றத்திலே பேச அழைக்க வந்தான். நேரமில்லே. பிஸினஸ்ல இறங்கியாச்சுப்பான்னு திருப்பி அனுப்பிச்சேன்,” என்று சவடால் பேசிவிட்டுக் கடிதத்தைப் படித்த குமரேசன், “ஒரு மண்ணுமில்லை வழக்கமான பொலம்பல்தான். அன்பைக் கரும்பாயிரத்துக்குத்தான் அனுப்பியிருக்காரு,” என்று அலுத்துக் கொண்டே கடிதத்தை அவரிடம் திருப்பி நீட்டினான்.

“ஆமாம், அதென்னமோ அறிவு ஜீவின்னியே? என்னப்பா அர்த்தம்?”

“இண்டலெக்சுவல்ங்கிறதுக்குத் தமிழ் சார்.”

“நீ இண்டெலக்சுவலா...?”

“சந்தேகமென்ன? எங்கப்பா மட்டும்தான் அதை ஒத்துக்க மாட்டாரு.”

“எனக்கும் கூட டவுட்ஸ் இருக்கு...”

“சந்தேகமும், அவநம்பிக்கையும் மனிதனின் முதல் எதிரிகள். வளர்ச்சியின் வழித்தடைகள், அதை நீங்க புரிச்சுக்கணும் சார்!”

“பொதுவிலே சொல்றியா? அல்லது உன்னை அறிவு ஜீவியா இல்லையான்னு நான் சந்தேகப்படறதாலே மட்டும் சொல்றியா?”

“எல்லாத்துக்கும் சேர்த்துத்தான் சொல்றேன். எங்கப்பா கூடப் பழகின ஆடிட்டர்தான்னு நீங்க அடிக்கடி நிரூபிச்சிடிறீங்க...”

“சரிப்பா. எல்னை விட்டுடு. ஒப்புக் கொண்டு விடுகிறேன். நீ அறிவு ஜீவிதான்.”

“இந்த ஆபரேஷன் நியூ பார்கவியே ஐயாவோட பிரைன் சைல்டுதான். பெண்களையே சர்வீஸுக்கு அமர்த்தற ‘சுபமங்களம்’ ஐடியாவும் நான் கொடுத்ததுதான் சார்! இன்னிக்கு இங்கே இத்தினி சினிமாக்காரன் வந்து தங்கற மாதிரி அவங்களோட பேசி லொகேஷன் சொல்லி மலைமேலே எங்கே அருவி இருக்கு எங்கே சூயிஸைட் சீன் எடுக்கிற மாதிரிப் பள்ளத்தாக்கு இருக்கு, எங்கே டூயட் பாடற மாதிரி லேக் தோட்டம் மரக்கூட்டம்ல்லாம் இருக்குன்னு விவரமாத் தகவல் குடுத்து அவங்களை வசப்படுத்தி இருக்கேனாக்கும். இன்னிக்கு மெட்ராஸ்ல எந்தப் புரொட்யூஸரை வேணாக் கேளுங்க... கண்ணை மூடிக்கிட்டுச் சொல்வான்: ‘நேரே குருபுரம் போங்க, நியூ பார்கவியிலே குமரேசன்னு இருக்காரு, அங்கே அவர் தான் ஆல் இன் ஆல். லொக்கேஷன் சொல்றதிலே அவர் நடமாடும் பல்கலைக் கழகம்பாங்க’” உற்சாகம் மேலிட்டுச் சுய அறிமுகப் பிரசங்கத்தில் இறங்கிவிட்ட குமரேசனை நிறுத்துவதற்காக, “ஹேண்ட்ஸ் ஆஃப்! நான் தோல்வியை ஒத்துக்கிறேன், விட்டுடு. நீதான் அறிவு ஜீவி. நீதான் மொபைல் யூனிவர்சிடி! நீதான் சகலமும்,” என்றார் அனந்த்.

“என்ன சார்? நான் கஷ்டப்பட்டுத் தமிழாக்கம் செய்யற வார்த்தைகளை எல்லாம் நீங்க மறுபடி ஆங்கிலமாக்கிடறீங்க?”

“சில சமயத்திலே உன் தமிழாக்கம் எனக்குப் பிடிபட லேப்பா...”

“இங்கே போர்டு ஹைஸ்கூல்லே மறைக்காடர்ன்னு ஒரு தமிழாசிரியர் இருக்கார். தஞ்சாவூரு சைடு, கோடிக்கரை சொந்த ஊரு. அவர் எல்லாத்தையும் தமிழ்ப்படுத்திச் சொல் றேன்னு குருபுரம் லோகல் ஃபண்டு ஆஸ்பத்திரி டாக்டரை அவர் பாணியிலேயே மாத்தி ‘இடாக்குடர்’-ங்கிறாரு. தமிழ்லே ‘டா’ முதல்லே வராதாம். ‘இடாக்குடர்னா’ அர்த்தமே அனர்த்தமாயிடுது. ‘காலிவயிறுன்னு’ அர்த்தம். அதாவது ஒன்றும் இடாத குடல்ன்னு ஆகும்! அதுமாதிரி எல்லாம் நான் தமிழை வம்பு பண்ணறதில்லே ஆடிட்டர் சார்!”

“உன்னலே எந்த அளவு முடியுமோ அந்த அளவு வம்பு பண்றேன்னு ஒத்துக்கறியா?”

“குறும்புக்காரப் பேர்வழி சார் நீங்க.”

“இல்லே! அந்த மறைக்காடர் உன்னை விட அதிகமாக வம்பு பண்றார்னா ஒரு வேளை உன்னைக் காட்டிலும் பெரிய அறிவு ஜீவின்னு தோணுது.”

“ஐயையோ கொல்றீங்களே, சார்.”

“அறிவு ஜீவிகளை மத்தவங்கக் கொல்றது வழக்கம்.”

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது குப்தாவும் ஆர்க்கிடெக்ட்டும் அந்தப் பக்கமாக வந்து சேர்ந் தார்கள். இவர்கள் அரட்டைக்கு முற்றுப்புள்ளி விழுந்தது.

“இன்னிக்கு அஜீத் வரான். மதுரை ஏர்போர்ட்டுக்குக் கார் அனுப்பிடுங்க. மத்தியானம் மூணு மணிக்கு போர்டு மீட்டிங். நீங்களும் கூட இருக்கீங்க. பார்ட்னர்ஷிப் டீட் தயாராயிடணும். இன்னிக்கும் நாளைக்கும்தான் அஜீத் குருபுரத்திலே தங்க முடியும்” என்றான் குப்தா.

எல்லாம் தயாராயிருப்பதாக ஆடிட்டர் கூறினார். இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே ஏ.சி. சுபமங்களம் ரெஸ்டாரெண்ட்டில் பரிமாறும் தேவசேனா என்ற பெண் வந்து குமரேசனின் அருகில் நெருங்கி, “சார், உங்க பிரேக்ஃபாஸ்ட் ரெடி! இட்டிலி சூடா இருக்கு. இப்பவே வந்து சாப்பிட்டுடுங்க” என்றாள். குமரேசன் உடனே அவளைப் பின் தொடர்ந்து ஏ.சி. ரெஸ்டாரெண்டில் நுழைந்தான்.

ஆடிட்டர், குப்தா இருவரும் அர்த்த நிறைவுடன் தங்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகை பூத்தனர். குப்தா சொன்னான்.

“குமரேசன் இஸ் ஆல்வேஸ் கெட்டிங் ஸ்பெஷல் அட்டென்ஷன் ஃப்ரம் தேவசேனா.”

“நானும் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். அந்தப் பொண்ணு இவனையும் இவன் அந்தப் பொண்ணையும் ஒருத் தரை யொருத்தர் விசேஷமாகக் கவனிச்சுக்கிறாங்க.”

“எவ்வரிதிங் ஸ்டார்ட்டட் அட் சுப மங்களம். ஆம் ஐ கரெக்ட் மிஸ்டர் அனந்த்?”

“சுப மங்களத்திலே ஸ்டார்ட் ஆகிற விஷயம்லாம் சுப மங்களத்திலே போய்த்தான் முடியும் போல் இருக்கு மிஸ்டர் குப்தா!”

“ஓல்ட் மேன் திரும்பறத்துக்குள்ள நல்லதை எல்லாம் முடிச்சுடணும்! இல்லாட்டா அன்ப்ரடிக்டபிளாப் போயிடும்.”

“நாம் முடிக்கணும்கிறதே இல்லே மிஸ்டர் குப்தா! அதது தானாகவே முடிஞ்சுடும் போல இருக்கு. இன்னிக்குப் போர்டு மீட்டிங் முடிஞ்சதுமே ‘நியூ பார்கவி அனெக்ஸ்’ உறுதியாயிடுது. அஜீத் பார்கவியோட பார்ட்னர் ஆயிடறான். தேவசேனா குமரேசனை ப்ரேக் ஃபாஸ்ட்டுக்குக் கூப்பிடற அளவு முன்னேறியாச்சு, லஞ்சுக்கும். டின்னருக்கும் அப்புறம் ஒரு டம்ளர் காய்ச்சிய பாலோடு... தூங்கறதுக்கும் அவள் அவனைக் கூப்பிட அதிக நாள் ஆகாது.”

“ஸ்டாப் இந்த இடத்திலேயே சென்ஸார் பண்ணிடுங்க. அதுக்கப்புறம் உள்ளது எல்லாம் அவங்க சொந்த விஷயம்.”

இதைக் கேட்டு ஆடிட்டர் சிரித்தார்.

“இதிலே ஒரு வேடிக்கை மிஸ்டர் குப்தா. குமரேசன்கிறது முருகக் கடவுளுடைய பெயர். புராணங்களிலேயே முருகக் கடவுளின் ஒரு மனைவிக்குத் தேவசேனான்னுதான் பெயர்.”

“இன்னொருத்திக்கு பெயர்?”

“வள்ளிம்பாங்க.”

“குமரேசன் தேவசேனாவோட மட்டும் நிப்பானா? அல்லது ஒரு வள்ளியையும் தேடிப்பானா?”

“இந்தத் தேவசேனா கெட்டிக்காரி! எந்த வள்ளியையும் குமரேசன்கிட்ட நெருங்க விடமாட்டாள். தவிர ‘இதிகாசத் தலைவர்களில் சிறந்தவர் அர்ச்சுனனா, இராமனாங்கிற பட்டி மன்றங்களில் எப்பவும் இராமன் கட்சியையே பேசியிருக்கிறான் குமரேசன்.”

“அது ஜெயிக்கிற கட்சிங்கறதால் அதைப் பேசியிருப் பான், குமரேசனுக்கு எப்போதும் தோற்கிற கட்சியைப் பிடிக் காது மிஸ்டர் அனந்த்!”

“எதுக்கும் டு பீ ஆன் த ஸேஃப் ஸைட். இந்தத் தேவசேனாவோட ஃபேமிலி பேக்ரவுண்ட் முதலிய டீடயில்ஸ் விசாரிச்சு வைக்கணும். இல்லாட்டி சிவவடிவேலு கூப்பாடு போடுவாரு.”

“காதல் டீடயில்ஸ் பார்க்காது. லவ் ஹாஸ் நோ அய்ஸ்.”

“பட் சிவவடிவேலு ஹாஸ் அய்ஸ்.”

“அவர் வர்றப்ப ஆசீர்வாதம் பண்ணறதைத் தவிர வேற வேலையே மிச்சம் இருக்கப்படாது மிஸ்டர் அனந்த், எந்த டெஸிஷனையும் அவருக்காக காக்க வைக்காதீங்க, எல்லாமே கெட்டுப் போகும். அட்சதையைக் கையிலே கொடுத்து, ‘குழந்தைகளை ஆசீர்வாதம் பண்ணுங்க’ன்னு அஜீத்-பார்கவி, குமரேசன்-தேவசேனா ரெண்டு ஜோடிங்களையும் விழுந்து கும்பிட வச்சிறணும்.”

“குமரேசன் சுய மரியாதைக்காரன். அவரைக் கால்லே விழுந்து கும்பிட மாட்டான்.”

“அதெல்லாம் அந்தத் தேவசேனையை விட்டுச் சொல்ல வச்சுடலாம். அவள் சொன்னால் தானா விழுந்து கும்பிடறான்.”

ஆடிட்டர் சிரித்தார், குமரேசன் ஏ.சி. ரெஸ்டாரெண்டி லிருந்து ஏப்பத்தோடு வெளியே வந்தான்.

“இது என்னப்பா? அந்தப் பொண்ணு நாங்கள்ளாம் இருக்கறப்ப உன்னை மட்டும் கூட்டிட்டுப் போய் டிபன் குடுக்குது. என்னப்பா இதிலே ரகசியம்?”

“ரகசியம் ஒண்ணுமில்லே! பரம ரசிகன் யாருன்னு அதுக்குத் தெரியும். அதான் என்னை மட்டும் வந்து கூப் பிட்டுச்சு.”

“ஓகோ! இது ரசனை விஷயமா?” என்று சிரித்தார் ஆடிட்டர்.

அத்தியாயம் - 17

அன்று அஜித் வந்து சேர்ந்தான். பார்கவிதான் அவனை விமான நிலையம் சென்று காரில் அழைத்து வந்தான்.

தானும் கூட வருவதாகத் தண்டபாணி சொன்னபோது, “அஜீத் பார்கவியோட பார்ட்னர்ஷிப்புக்காகத் தானே வர்றான்! அவள் போனாலே போதும் அண்ணே. அவதானே கூப்பிடப்போறது முறை,” என்று குமரேசன் கண்களைச் சிமிட்டித் தண்டபாணியைத் தடுத்தான்.

பார்கவி பார்வையாலேயே குமரேசனுக்கு நன்றி கூறினாள். புது ஏற்பாட்டின்படி தண்டபாணி, குமரேசன், சிவவடிவேலு உட்பட எல்லாரும் நியூபார்கவியில் டைரக் டர்ஸ், இப்பொழுது அனெக்ஸுக்கான போர்டு மீட்டிங்கில் அஜீத் ஒரு டைரக்டராகிறான். பார்கவி மானேஜிங் டைரக்டர்.

இதில் சிவவடிவேலு தகராறு செய்தால் அவர் திரும்பி வந்ததும் அவரைச் சேர்மென் ஆஃப் டைரக்டர்ஸ் போர்டு ஆகப் பண்ணி விடலாம் என்று முடிவு பண்ணி இருந்தார்கள். ஏனென்றால் ‘நியூ பார்கவி-ஓட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட்’டில் அதிக அதிகாரங்கள் உள்ள பதவி மானேஜிங் டைரக்டர் பதவிதான். அது பார்கவியிடம் இருந்தது. சேர்மன் மீட்டிங்குக்குத் தலைமை தாங்கலாம். நீட்டற இடத்திலே கையெழுத்துப் போடலாம். அது சும்மா ஜனாதிபதி பதவி மாதிரி இருந்தது. பிரதம மந்திரி மாதிரி எம்.டி. போஸ்ட்தான் இருந்தது.

குப்தா, ஆடிட்டர், மூத்தவன் தண்டபாணி எல்லாரு மாகச் சேர்ந்து இந்த செட்அப்பை ஏற்பாடு பண்ணியிருந் தார்கள். இதில் சிவவடிவேலுவின் எஸ்டேட்டுகளும் வேறு தாவர ஜங்கமச் சொத்துக்களும் சேர்க்கப்பட இருக்கிற மாதிரிச் சிவவடிவேலு புறப்படும் முன்பே சாதுரியமாக எழுதி வாங்கிப் பார்க்கவியின் பெயருக்குப் பவர் பெற்றிருந்தார், ஆடிட்டர். மரண பயம் என்று கிளப்பி விட்டிருந்ததால் கொஞ்சம் மிரண்டு போயிருந்த சிவவடிவேலு கேட்ட இடத்தில் கேட்ட பத்திரங்களில் எல்லாம் போகிறபோது கையெழுத்துப் போட்டுவிட்டுப் போயிருந்தார். ஆடிட்டர் அதில் எதையும் துஷ்பிரயோகம் பண்ணிப் பயன் பெறவில்லை. எல்லாவற்றையும் சிவவடிவேலுவின் குடும்ப நலனுக்காகவே பயன்படுத்தியிருந்தார். குப்தாவும் யோசனைகள் கூறி இருந்தான்.

அன்று மாலை போர்டு ஆஃப் டைரக்டர்ஸ் மீட்டிங் நினைத்தபடி நடந்தது. அஜீத் டைரக்டர் ஆனான். ‘நியூ பார்கவி அனெக்ஸ்’ ப்ளு பிரிண்ட் அப்ரூவ் ஆயிற்று.

இவற்றைக் கொண்டாடுவதற்காக ஒரு விருந்தும் இருந்தது. அந்த விருந்தில் பார்கவி டைரக்டர் குழுவைத் தவிர, குடும்பத்துக்கு வேண்டிய பிரமுகர்களும், சில தொழிலதிபர்களும், வேண்டிய வியாபாரிகளும் கூட அழைக்கப்பட்டிருந்தனர். பெண்கள்தான் பரிமாறினார்கள்.

“தேவசேனா! எல்லாரையுமே கவனிச்சுப் பரிமாறு! குமரேசனை மட்டுமே கவனிக்காதே,” என்று அவளை வம்புக்கு இழுத்தார் ஆடிட்டர்.

எல்லார் முன்னிலையிலுமே அவர் அப்படிப் போட்டு உடைத்ததுமே அவள் திணறிப் போனாள். கையும் காலும் பதறின அவளுக்கு. அந்த அழகிய இளம் பெண்ணின் மிரட்சியிலும், பதற்றத்திலும் கூட ஒர் அழகு தெரிந்தது.

“என்னப்பாது! உங்கப்பா வந்து பார்த்தால் என்னைத் திட்டப் போறாரு. உன்னோட சாய்ஸ் கேரளா. பார்கவியோட சாய்ஸ் ஹிமாசலப் பிரதேசம். மொழி, இனம், பிரதேசம் எல்லாத்தையும் மறந்து எங்கெங்கியோ மனசைப் போக விட்டுட்டீங்க... பெரியவங்க ‘மனம் போன போக்கில் போக வேண்டாம்’னு உங்களுக்குத்தான் சொன்னங்க...” என்று அவன் காதருகே ஆடிட்டிர் முணுமுணுத்தார்.

குமரேசன் சிரித்தான். “அதுலே பாருங்க ஆடிட்டர் சார்! மகாகவி பாரதியாருக்குத் துரோகம் பண்ணப்படாதுன்னு பார்க்கிறோம். அவர் சொன்னதெல்லாம் பலிச்சுப் போச்சு! ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’னு சுதந்திரம் வர்றதுக்கு முன்னடியே பாடினாரு. சுதந்திரம் வந்திடிச்சு. ‘இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே, இயந்திரத் தொழில்கள் செய்திடுவிரே’ன்னு பாடினாரு. இயந்திரத் தொழில்கள் பெருகிடிச்சு. ஒரே ஒரு விஷயத்திலே மட்டும் அவர் சொன்னது இன்னும் அதிகமாப் பலிக்காமே இருக்கு!”

“எதுலே குமரேசன்?”

“ஒருமைப்பாட்டிலேதான். ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நன்னட்டு இளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம்னாரு.’ இதிலே பாதியையாவது நான் பூர்த்தி செய்து அவருக்கு விசுவாசமா நடந்துக்கணும்னு பார்க்கிறேன் ஆடிட்டர் சார்.”

“எந்தப் பாதியை அப்பா?”

“அதாவது சேர நன்னாட்டு இளம் பெண்களுடன் விளையாடுவோம்கிற நடுப்பாதியை.”

“அப்ப சிந்து நதியின் மிசைங்கிற முதல் பாதிப் பகுதி?”

“அதைப் பார்கவி பார்த்துக்கிறா. கங்கை நதிப் புறத்துக் கோதுமை பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்கிற பின் பாதியையும் சேர்த்து அவளும் அஜித்தும் பூர்த்தி செய்யறாங்க...”

“சபாஷ்டா பாண்டியா! போட்டியே ஒரு போடு! அப்ப பாரதியாருக்குக் கெட்ட பெயர் வரப்படாதுங்கிற நல்லெண் ணத்திலே தான் நீங்க அண்ணனும் தங்கையுமா இப்படி இனம், மொழி, பிரதேசம் கடிந்து காதலிக்கிறீங்களாக்கும்.”

“அதுமட்டுமில்லை! இன, மத, மொழி, பிரதேச வெறிகளைத் தணிக்கவும் ஒருமைப்பாடு பரவவும் இந்தக் குருபுரம் ஃபேமிலியிலிருந்து ஒரு ஸ்மால் நேஷனல் காண்ட்ரிபியூஷன். எ ஹம்பிள் பிகினிங்...”

“பரவாயில்லேப்பா! பேச்சாளனாயிருக்கிறதாலே உனக்கு ஒரு வசதி! சின்ன விஷயங்களைக் கூட நேஷனல் லெவலுக்கு என்லார்ஜ் பண்ணிப் பேசக் கத்துக்கிட்டே?”

“சும்மா பேசறது மட்டுமில்லை சார்! ஆதாரத்தோட நிரூபிப்பேன் சார். இப்போ பார்கவி தீவிரமா இந்தி படிக்குது. அஜீத் ‘முப்பது நாளில் தமிழ் கற்கும் முறைகள்’ங்கிற இங்கிலீஷ் புத்தகத்தை நேத்துத்தான் ஏர்போர்ட்லே வாங்கி யிருக்கான். ஒரு தமிழ் வாத்தியார் - வித் இந்தி ஒர்க்கிங் நாலட்ஜ் அல்லது இங்கிலீஷ் ஒர்க்கிங் நாலஜ்ட் தேடிகிட்டே இருக்கான். சல்லடை போட்டுக் சலிச்சாலும் அந்த ரேர் காம்பினேஷன்ல ஆள் அகப்படவே மாட்டேன்றான். இங்கே தமிழ் மட்டுமே தெரிஞ்ச தமிழறிஞர்கள்தான் ஆப்படறாங்க. அதனலே தமிழ் தெரியாதவனுக்கு தமிழ் கற்பிக்கிற மாதிரி ஆள் அகப்படறதே கஷ்டமாயிருக்கு. தமிழை வேற ஏரியாவிலே பரப்பணும்னாலும் அதுக்குத் தமிழோட இன்னொரு பாஷையாவது கூடத் தெரிய வேண்டியிருக்கு, இங்கே அப்படி இல்லே சார், நான் மலையாளம் படிக்கிறேன். தேவசேனா தமிழ் கத்துக்குது. இப்படி எங்களாலே முடிஞ்ச மட்டும் பாரதியாருக்கு நல்ல பேர் தேடிக் குடுத்திட்டிருக்கோம்! அவர் மானத்தைக் காப்பாத்திக் கொண்டு வருகிறோம்.”

“எமகாதகன்டா நீ! ஏதோ பாரதியார் உன்னைத் தேடி வந்து, ‘அப்பனே! தேவசேனையைக் காதலிச்சு என் வாக்கை மெய்ப்பிப்பாயாக’ன்னு வரம் கேட்ட மாதிரியில்லே அடிச்சு விடறே”

“அவரு வந்து கேட்பாரா என்ன? இதெல்லாம் நாமாப் புரிஞ்சுக்கிட்டுப் பண்ண வேண்டியது தான் ஆடிட்டர் சார்!”

இப்படி அவன் அதை வெகு சகஜமாகவும் சவடாலாகவும் சொல்லிய விதத்தை ஆடிட்டர் சுவாரஸ்யமாக ரசித்துக் கேட்டார். பயல் கெட்டிக்காரன்தான் என்று உள்ளூர வியந்தார். மனசுக்குள் பாராட்டினார் கொண்டாடினார்.

“தோணிகள் ஓட்டுவது, சுந்தரத் தெலுங்கில் பாடுவது எல்லாம் என்ன ஆறது குமரேசன்?”

“அதெல்லாம் அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சுச் செய்யலாம்னு இருக்கோம்.”

“ஆக ஒருமைப்பாட்டு நோக்கம் விணாயிடப்படாதுங்கிற பரந்த எண்ணத்திலேதான் நீங்கள்ளாம் இந்த மாதிரிக் காதலிக்கிறீங்களாக்கும்?”

“ஆமாம் சார்! பாரதியார் வாக்கை நிறைவேத்தறது என்னை மாதிரி நல்ல தமிழனுக்கு உயிர் இலட்சியமா இருக் கணுமில்லையா?”

“அடே நல்ல தமிழா! ‘காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம் காதற் பெண்கள் கடைக் கண் பணியிலே’ன்னு கூடப் பாரதியார் பாடியிருக்காரே!”

“எனக்குத் தேவசேனாவோ அஜீத்துக்குப் பார்கவியோ அப்படிக் கட்டளையிட்டால் நாங்கள் செய்யத் தயாராயிருக்கிறோம். ஆனால் எங்கள் காதலிகளுக்கு எங்களைப் பற்றி நன்றாகப் புரியுமாதலால் அப்படி எல்லாம் ரிஸ்க் எடுத்துக் கொண்டு சிரமப்படமாட்டார்கள்.”

“உன் மலையாளப் படிப்பு எந்த அளவு வந்திருக்கு? கிளாஸ்லே உன்னோட நிலைமை என்ன? ரேங்க் ஏதாவது வருமா?”

“வொர்க்கிங் நாலட்ஜ் வந்திருக்கு!”

“காதல்லே வொர்க்கிங் நாலட்ஜாவது ஒண்ணாவது? என்னப்பா நீ இப்படி எல்லாம் அசிங்கமாப் பேசிக்கிட்டிருக்கே?”

“அப்படிச் சொன்னீங்கன்னாக் காதலுக்குப் பாஷையே வேணாம். ‘சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை’ங்கிறாரு பாரதியார்.”

“அடடே! நீ சொல்றதைப் பார்த்தாப் பாரதியார் உனக்கு வசதியாகவே எல்லாம் சொல்லிட்டுப் போயிருக் கிறார்னு தெரியுது.”

குமரேசன் ஆடிட்டரை நோக்கி ‘ஆம்’ என்பது போல் தலையை அசைத்தான்.

அத்தியாயம் - 18

‘ஏப்ரல் முதல் வாரம் திரும்புவார்’ - என்று சிவவடி வேலு தம்பதிகள் பற்றி மறுபடி டெலக்ஸ் கிடைத்தது. குப்தாவும், ஆடிட்டரும் சித்திரை பிறந்து ஏப்ரல் பதினாறில் ஒரு முகூர்த்தம் பார்த்து அஜீத்-பார்கவி, குமரேசன்-தேவசேனா திருமணத்திற்கு ரகசியமாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

ஏப்ரல் முதல் வாரமே சிவவடிவேலு தம்பதி திரும்பினால் கல்யாண ஏற்பாடுகளில் ஏதாவது குழப்பமாகலாம் என்று பயம் இருந்தது.

“எங்கப்பா இங்கே ஏப்ரல் பிறந்ததுமே வந்துடாமே சிங்கப்பூரிலியோ, கோலாலம்பூரிலேயோ பத்துநாள் டூர் புரோக்ராமை நீட்டச் சொல்லுங்க. மாதவி டூர்காரன்தான் உங்க நெருங்கின தோஸ்த் ஆச்சே? இப்படி அப்பா, அம்மாவை மட்டும் லாஸ்ட் போர்டிங் பாயிண்டிலே அதிக நாள் நீட்டிக்கிறதுனாலே அடிஷனல் செலவு ஆளுக்கூடப் பரவாயில்லே. இங்கே வந்தார்னா ஏதாச்சும் நம்மை ஏப்ரல் ஃபூல் பண்ணிடுவாரு... ஜாக்கிரதை. எல்லா ஏற்பாடுமே எகிறிப் போயிரும்,” என்று குமரேசன் ஆடிட்டரை எச்சரித்தான்.

சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கும் அது சரியான யோசனையாகவே பட்டது. செலவுகூட ஆகுமென்று தெரிந்தால் சிவவடிவேலு உயிரையே விட்டுவிடுவார். பந்துநாள் நீட்டித் தங்க வைக்க என்ன செய்வதென்று யோசனை செய்தார்கள். அதற்கும் குமரேசனே ஒரு வழி கூறினான்:

“என்ன யோசிக்கிறீங்க? கிரகங்கள், தசா புத்திகள் லாம் பின்னே எதுக்காக இருக்குங்கிறேன்! கடுக்கையூர்க் கண்ணபிரான் ஜோசியர் தலையிலே பழியைப் போடுங்க. அவரைக் கூப்பிட்டுத் தசா புத்தி சரியாகாததாலே ஏப்ரல் பதினைந்தாம் தேதி இரவு சிங்கப்பூர்லே ஃப்ளைட் பிடிச்சுப் பதினாறாந் தேதி காலையில் இங்கே வர்ற மாதிரிப் புறப்படச் சொல்லி அவர் கையெழுத்தோடவே ஒரு கேபிள் அல்லது டெலக்ஸ் குடுக்க ஏற்பாடு பண்ணுங்க.”

“கடுக்கையூர் என்ன சொல்லுவாரோ...”

“நூறு ரூபாய் தட்சிணை வையுங்க. தசா புத்தி கிரகம் சனி, குரு, ராகு, கேது எல்லாமே அப்பாலே நாம சொல்றபடியே கேக்க வச்சிடுவாரு.”

உடனே கடுக்கையூராரை வரவழைத்து அவர் சொல்வதாக அதே பாணியில் கேபிள் கொடுத்தார்கள். அப்படியே அரேன்ஞ் செய்வதாக மறுநாள் பதிலும் கிடைத்து விட்டது. எல்லாரும் நிம்மதியாக மூச்சு விட்டார்கள். ஆடிட்டர் குமரேசனிடம் சொன்னார்:

“நீ உங்கப்பாவைப் பத்தி அதிகமா ஒர்ரி பண்ணிக்கிறே குமரேசா! நான் பந்தயம் வேணும்னாப் போடறேன். அவர் பழைய கஞ்சத்தனம், கன்ஸர்வேடிஸம், குறுகிய மனப்பான்மை எல்லாத்தையும் விட்டுவிட்டுப் புது மனுஷனா மனசு விசாலமடைஞ்சுதான் திரும்பி வரப்போறாரு.”

“எப்படி அத்தனை உறுதியாகச் சொல்றீங்க! ஏதாச்சும், அடையாளம் இருக்கா?”

“அடையாளம்லாம் ஒண்ணுமில்லே! பிரயாணமும் புது இடமும் புது மனிதர்களும் எப்படிப்பட்ட ஆளையும் மாத்திப்பிடும்ங்கற உலக நியதியை வச்சு அனுமானம் பண்ணித்தான் சொல்றேன்.”

“எங்கப்பா விஷயத்திலே உங்க அனுமானம் சரியா ஒத்து வராது! ‘நீருட்கிடப்பினும் கல்லிற்கு மெல்லென்றல் சால அரிதாகும்’னு ஒரு பழைய தமிழ்ப்பாட்டு இருக்கு சார்! அதுக்கு அர்த்தம் ‘கருங்கல் எத்தனை யுகமாகத் தண்ணீருக்குள் ஊறினாலும் அதனால் சிறிதும் கரைந்து போய் விடாது’ என்பது. எங்கப்பா மனசும் அந்தக் கருங்கல் மாதிரிதான்.”

“அவர் உன்னைச் சோம்பேறி, தறுதலைன்னெல்லாம் திட்டிப்பிட்டாருங்கிறதுனாலே நீ அவர் மேலேயும் கரும்பாயிரத்தும் மேலேயும் ரொம்ப பிரெஜிடிஸ் ஆகியிருக்கே. அதுதான் உன்னோட கோபத்துக்குக் காரணம் குமரேசன்!”

“கோபமாவது ஒண்ணாவது? எனக்கு அவர் மேலே இருக்கிறதெல்லாம் வெறும் பரிதாபம்தான் சார். கோபப்படறது வேறே. தேறாத கேஸ்னு பரிதாபப்படறது வேறே.”

“அதெல்லாம் உனக்கு இருக்கிற வீண் பிரமை குமரேசன்! ரொம்பப் பெருந்தன்மையா உங்களை எல்லாம் ஆசீர்வாதம் பண்ணிட்டுப் பிஸினஸை எல்லாம் உங்கிட்டவும், தண்டபாணி கிட்டவும் ஒப்படைச்சிட்டு ஹாயாக ரிட்டயாட் ஆகிடப் போறாரு அவரு.”

“ஒதுங்கறது வேற, ஒதுக்கப்படறது வேற. துறக்கிறது வேற, துறக்க வைக்கப்படறது வேற. கிளவரான ஏற்பாடு மூலம் நாமே அவரை ஒதுக்கியாச்சு. இனிமே ஒதுங்கறது முடியாத காரியம். இப்பப் பந்தயம் நமக்குள்ளே அது இல்லே! எங்கப்பா மனமாற்றத்தோடு வருகிறாரா இல்லையா என்பதுதான்! அதுக்கு என்ன பதில் சொல்றீங்க? கரெக்ட்டா ஒரு வாக்கியத்திலே சொல்லுங்க.”

“கண்டிப்பாக மனமாற்றத்தோடு வருகிறார்னு சொல்கிறேன்.”

“நான் இல்லேங்கிறேன். பந்தயம் என்ன சொல்லுங்க?”

“ஆயிரம் ரூபாய் வெச்சுக்கலாம்.”

“சீ! பிச்சைக் காசு! குருபுரம் சார்ட்டர்ட் அகௌண்ட் அஸோஸியேஷன் தலைவர், ஓட்டல் நியூ பார்கவியின் ஃபைனான்ஷியல் அட்வைஸர் உயர் திரு அனந்தசாமி சொல்ற தொகையா இது? கேவலம் சார்! ஐயாயிரம்னாவது சொல் லுங்க... உங்க மானம் கப்பலேறாது.”

“சரி, தொலை. ஐயாயிரம்னே வச்சுப்போம்.”

“அப்போ பந்தயத் தொகை ஐயாயிரம்னு ஃபிக்ஸ் ஆயிடிச்சி! ஆனா ஒரு மனுஷன் மாறிட்டானா இல்லியான்னு கண்டு பிடிக்கறது கொஞ்சம் ஸ்லோ பிராசஸ். நீங்களே ஐயாயிரத்தை எங்கிட்டப் பறிக்கிறதுக்காக எங்கப்பாவைத் தன்னைக் கட்சி மாறின மாதிரி நடிக்கச் சொல்லி என்னை ‘சீட்’ பண்ணிட முடியும். அதனலே அவர் பிளேன்லே இருந்து கீழே இறங்கினதும் இன்னவாக்கியம் தான் வாயிலே வரும். அந்த வாக்கியமே அவர் மாறலங்கிறதுக்கு அத்தாட்சின்னு ஒரு வாக்கியத்தை இப்பவே எழுதி நான் உங்ககிட்டே காமிக் கிறேன். அதை நீங்க ஒத்துக்கிட்டா அந்த செண்டென்ஸை அப்படியே எழுதி உங்க முன்னாடியே கவர்லே போட்டு ஒட்டி சீல் வச்சு ரெண்டு பேருக்கும் பொதுவா அதைக் குப்தாகிட்ட டெபாஸிட் பண்ணிடுவோம். எங்கப்பாவை ஏர் போர்ட்லே ரெஸிவ் பண்றப்போ, நான் எழுதிக் குடுத்த செண்டென்ஸைத் தான் அவர் முதல்லே சொல்றாரான்னு அவர் வந்து இறங்கினப்புறம் குப்தா சீல் வச்ச கவரைப் பிரிச்சுப் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். அவர் பேசற முதல் வாக்கியமும் சீல்டு கவர்லே உங்களுக்குக் காண்பிச்சப்புறம் நான் ஒட்டிச் சீல் வைச்சுக் குடுக்கிற வாக்கியமும் ஒண்ணாயிருந்தால் அன்னிக்கி - அதாவது ஏப்ரல் 16 ந் தேதி மாலைக்குள் நீங்க எனக்கு ஐயாயிரம் ரூபாய் குடுத்திடணும். அந்த மாதிரி இல்லாமே அவர் வேற வாக்கியத்தைப் பேசிட்டார்னா நான் உங்களுக்கு அதே நேரத்திற்குள் ஐயாயிரம் ரூபாய் குடுத்துடுவேன்.”

“எல்லாம் சரி! ரொம்பக் காம்ப்ளிகேடட் ஆகச் சொல்றியேப்பா? அதென்ன கணக்கு? ஒரு வாக்கியம்கிற நிபந்தனை எதுக்கு? மாறியிருக்கிறாரா இல்லையான்னு உங்கப்பாவைக் கவனிச்சு முடிவு பண்ணினாப் போறாதா?”

“அது ரொம்பச் சிக்கல்! அந்த ஒரு வாக்கியத்தை நீங்க சம்மதிச்சா இப்பவே எழுதிக் காண்பிக்க நான் தயார்...”

“எங்கே எழுதிக் காட்டு! பார்க்கலாம்.”

குமரேசன் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு துண்டுத் தாளை எடுத்து அவசரமாக இரண்டே இரண்டு சொற்களை எழுதி ஒரு கேள்விக் குறியையும் முடிவில் போட்டு அவரிடம் காட்டினான். அதைப் படித்துவிட்டு, “இதுக்கு என்ன அர்த்தம்? இந்த ரெண்டு வார்த்தையைத்தான் அவர் முதல்லே கேட்பார்னு சொல்றியா?”

“ஆமாம்! இப்படிக் கேட்டார்னா நீங்க எனக்குப் பந்தயத் தொகை தரணும். இப்படிக் கேட்காவிட்டாலும் - வேறு எப்படிக் கேட்டாலும் நான் உங்களுக்குப் பந்தயத் தொகையைத் தரணும். தந்து விடுவேன்.”

“அப்படியானா எனக்குத்தான் சான்ஸ் அதிகம். சம்மதிக்கிறேன்” என்றார் ஆடிட்டர்.

திட்டமிட்டபடியே அந்தத் துண்டுத் தாளை ஒரு கவரில் போட்டு நாலு முனையிலும் நடுவிலும் அரக்கு சீல் வைத்து விவரம் சொல்லி இருவருமாகக் குப்தாவிடம் போய்க் கொடுத்தார்கள்.

குப்தா கேட்டான், “இதிலே நான் உங்க ரெண்டு பேருக்கும் ரெஃபரியா? விரக்தியிலே இரண்டு பேருமாச் சேர்ந்து ரெஃபரியை உதைக்க மாட்டீங்களே?”

“அதெல்லாம் உங்களுக்கு எந்த அபாயமும் வராது. பிளேன்ல இருந்து இறங்கினதும் எங்கப்பா பேசற வாக்கியமும் இந்த சீல்டு கவருக்குள்ள எழுதி வச்சிருக்குற வாக்கியமும் ஒண்ணா இருந்தா நான் ஜெயிக்கிறேன். இல்லாட்டி மிஸ்டர் அனந்த் ஜெயிக்கிறார்,” என்றான் குமரேசன்.

“சரி! உங்க இரண்டு பேரிட்டவும் பணப் புழக்கம் அதிகமா இருக்குன்னு நினைக்கிறேன். அதான் பந்தயம் கிந்தயம்ன்னு ஐயாயிரம் ரூபாயை வாரி விடறீங்க!”

“ஐயாயிரம் ரூபாய் மட்டும் முக்கியமில்லை! இதிலே தெரியற முடிவு யார் நிஜமான அறிவுஜீவிங்கிறதைத் தீர்மானம் பண்ணிடும்,” என்று குமரேசன் சொன்னவுடன், “இந்தாப்பா குமரு. எனக்கு ரூபாய் கிடைச்சாலே போதும். இந்த அறிவு ஜீவி, அது இது எல்லாம் நீயே வச்சுக்க...” என மறுத்தார் ஆடிட்டர்.

“கவலையே படாதீங்க! பணம், அறிவு ஜீவிப் பட்டம் ரெண்டுமே எனக்குத்தான்,” என்று தீர்மானமாகப் பதில் வந்தது குமரேசனிடமிருந்து.

“அப்படி என்னதான் இதுக்குள்ளே எழுதி சீல் வச்சிருக்கீங்க? நான் பிரிச்சுப் பார்க்கலாமா?”

“இப்பப் பிரிக்கப்படாது மிஸ்டர் குப்தா! எங்கப்பா வந்து இறங்கி முதல் வாக்கியத்தைப் பேசினதும் பிரிக்கலாம்.”

“படு மர்மமாக இருக்கிறதே?”

“மர்மம்தான்! கவரைப் பத்திரமாக வச்சிக்குங்க. சீல் உடைஞ்சிருந்தா ஒத்துக்க மாட்டோம்.”

“பயமுறுத்தாதீங்க. பத்திரமா இருக்கும். குப்தா இருவருக்கும் உறுதி கூறி அனுப்பினான். அவனிடம் கவரை அளித்துவிட்டுத் திரும்பும்போது மறுபடியும் ஆடிட்டர் குமரேசனைப் பிடித்துக் கொண்டார்.

“அது எப்படி அப்பா அத்தனை கரெக்டா இப்படித்தான் எங்கப்பா கேட்பார்னு என்னமோ கம்ப்யூட்டர்லே புரோக்ராம் பண்ணிவச்சு ஆன்ஸர் வரவழைச்ச மாதிரி உன்னாலே எழுதிக் குடுக்க முடியுது?”

“ஆடிட்டர் சார்! அதுதான் பட்டிமன்ற மூளை! எதிரி என்ன பேசுவார்னு தீர்மானிச்சு முன்கூட்டியே அதைச் சமாளிக்க நம்மைத் தயார் பண்ணிக்கிற சாமர்த்தியம் பட்டி மன்றங்கள் எனக்குக் கற்றுத் தந்த செல்வம்.”

“சும்மாப் புருடா விடாதே அப்பனே! இதிலே என்னமோ இருக்கு. இல்லாட்டி நீ இத்தினி துணிச்சலாப் பந்தயம் போடமாட்டே?”

“நீங்க மெல்ல இப்போ பேக் அடிக்கிற மாதிரித் தெரியுதே ஆடிட்டர் சார்! விஷயம் முடிஞ்சுது. இனிமேல் பந்தயம் பந்தயம்தான். இப்போ வேறே விஷயம் எதினாச்சும் பேசுங்க. இது போதும்” என்றான் குமரேசன். ஆடிட்டருக்குத் தைரியமாகவும் இருந்தது; பயமாகவும் இருந்தது.

அத்தியாயம் - 19

கோட்டயம் இன்ஸ்டிட்யூட்டில் விசாரித்துத் தேவ சேனாவின் பெற்றோர் விலாசத்தை வாங்கி அவர்கள் ஊரான இரிஞ்சால குடாவுக்குப் போனபோது தான் ஆடிட்டரும் தண்டபாணியும் வேறொரு புது உண்மையைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இ.ஆர்.எம்.தேவசேனா என்ற அவளுடைய முழுப் பெயர் இரிஞ்சால குடா ராபின்ஸன் மேரி தேவசேனா, என்பது என அறிந்ததும் இதை ஏன் குமரேசன் தங்களிடம் முன்பே சொல்லவில்லை என வியந்தார்கள் அவர்கள்.

அவர்களுக்கு இந்தப் புது விஷயம் சிறிது அதிர்ச்சியைக் கொடுத்தது. தேவசேனாவின் பெற்றோர் பரமஏழைகள். தந்தை ராபின்சன் ஒரு மரம் அறுக்கிற ஸா மில்லில் வேலை பார்த்தார். தாயும் அதிலேயே கூலி வேலை செய்தாள். மொத்தம் ஆறு பெண்கள் அவர்களுக்கு. தேவசேனாவின் சம்பளம் இவர்களுக்குப் பெரிய உதவியாயிருந்திருக்கும் எனத் தோன்றியது.

ஆனால் இந்தக் கல்யாணத்தில் அவர்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இருக்கவில்லை. “அவள் எங்கேயாவது சுகமா ஜீவிச்சால் எனிக்கு அது மதி” என்றார் ராபின்சன்.

“நீங்க இண்டு கஸ்டம்ஸ்படி மேரேஜ் பண்ணிக்கிறதிலே கூட ஆட்சேபணை இல்லே, ஆனா. அதுக்கப்புறமாவது மேரேஜை ரிஜிஸ்டர் பண்ணிடணும். அது எங்களுக்கும் ஸேஃப்ட்டி” என்றார். கல்யாணத்துக்கு மூன்று நான்கு பேர் வருவதாக ஒப்புக் கொண்டார்கள்.

“வந்து போகச் செலவுக்கு இருக்கட்டும்” என்று ஆடிட்டர் ஐந்நூறு ரூபாய் ரொக்கமாக எடுத்துக் கொடுத்த போது உபசாரத்துக்காகக் கூட யாரும் வேண்டாம் என்று மறுக்கவில்லை.

இவர்கள் ஊர் திரும்பியதும் குமரேசனைத் தனியாகக் கூப்பிட்டு விவரம் சொன்னதும் அதில் அவன் எந்த அதிர்ச்சியும் அடையவில்லை.

“ஆமாம்! அது கிறிஸ்டியன் கேர்ள்தான். இதுலே நான் எந்த வேற்றுமையையும் உணரலே. அதனாலே உங்ககிட்ட சொல்லவும் விருப்பலே” என்றான்.

“அவ ஃபாதர் அதாவது உன்னோட வுட் பீ ஃபாதர் இன்லா மிஸ்டர் ராபின்ஸன் ஒரு ஸா மில்லிலே மரம் அறுக்கிற தொழிலாளி.”

“இப்படி ஒரு தொழிலாளியின் மகளை மணக்கிறதுக்காகப் பெருமைப் படறேன். என் தங்கை ஒரு பெரிய முதலாளி மகனை மணக்கிறாள். நான் ஒரு பரம ஏழைத் தொழிலாளியின் மகளை மணக்கிறேன். இரண்டு கல்யாணமும் ஒரே மேடையிலே நடக்குது.”

“சும்மா எங்களுக்கு தெரிஞ்ச தகவல்களை உனக்கு மறைக்காமே எல்லாம் சொல்லணும்கிறதுக்காக இதைச் சொல்றோம். தப்பா நெனைச்சுக்காதே. வி ஆல் அக்ரி வித் யூ” என்றார் ஆடிட்டர்.

கல்யாணப் பத்திரிகைகள் அச்சாயின. மண விழா முழுவதையும் தன் பொறுப்பில் வீடியோ எடுக்க இவர்களுக்கு வேண்டிய ஒரு புரொட்யூசர் முன் வந்தார். இரட்டை நாதஸ் வரம், மாலையில் நாட்டியக் கச்சேரி எல்லாம் ஏற்பாடு ஆயிற்று. குமரேசன் விரும்பியபடி இரவில் ஒரு பட்டிமண்டபம் வேறு ஏற்பாடு ஆகியிருந்தது.

“அப்பாவை வரவேற்க ஏர்போர்ப் போக வேண்டிய நேரத்தில் நான் தேவசேனாவுக்கும் அஜீத் பார்கவிக்கும் தாலி கட்டிக்கிட்டிருப்போம். அதனாலே நாங்க அவரை வரவேற்க முடியாது. குப்தா சார் உங்ககூட ஆடிட்டர் வருவார். மறக்காமல் அந்த சீல்டு கவரை எடுத்திட்டுப் போங்க. எனக்கு ஒரு ஐயாயிரம் ரூபாய் வரும்படி இருக்கும்” என்றான் குமரேசன்.

“சும்மா ரீல் விடாதே! அது உனக்குத்தான்னு என்ன உறுதி? வரும்படி எனக்குக்கூட இருக்கலாம். உனக்கு நஷ்ட மாகவும் இருக்கலாம். குருட்டாம் போக்கிலே கெஸ் பண்ணி இதைத்தான் பேசுவார்னு ரெண்டு வார்த்தையை நீயா எழுதிக் கொடுத்துட்டாப்லே ஆச்சா?” என்று ஆடிட்டர் குறுக்கிட்டுச் சீறினார்.

“பார்க்கலாமே?” என்று அமுத்தலாகப் பதில் சொன்னான் குமரேசன்.

“இந்தியாவில் அவர் லாண்ட் ஆகிற தினத்தன்று பேப்பர்களில் வருகிற மாதிரி விளம்பரம் கொடுக்கணுமே? குமரேசா தமிழில் அழகா ஒரு டிராஃப்ட் எழுது.”

“என்னன்னு எழுதறது. ஆடிட்டர் சார்? விவரம் சொல்லுங்க.”

“15-4 அன்று இரவு 12 மணிக்கு அவர் மெட்ராஸ்ல்லே இறங்கறார். கஸ்டம்ஸ் ஃபார்மாலிட்டிஸ் முடிஞ்சி அவர் வெளியேற இரவு 2 மணி ஆகும். காலையிலே அஞ்சு மணிக்கு மதுரை ஃப்ளைட்டிற்கு போர்டிங் பாஸ் கொடுப்பாங்க. 6 மணிக்கு டேக் ஆஃப். ஏழு முப்பத்தைஞ்சுக்கு மதுரை லேண்டிங். ஆறே காலுக்கு நம்ம முகூர்த்த நேரம்.”

“இதெல்லாமா விளம்பரத்திலே வரணும்?”

“இந்தக் கிண்டல்தானே வேண்டாம்கிறது? 16-4. அன்று காலைப் பேப்பரில் விளம்பரம் வரணும். அது மாதிரி எழுது.”

‘வெளிநாடுகளில் வெற்றி வாகை சூடிப் பயணம் முடித்து வரும் உயர்திரு சிவவடிவேலு அவர்களையும் லேடி சிவவடிவேலு அவர்களையும் வரவேற்கிறோம்.

இப்படிக்கு, மகள் பார்கவி மகன் தண்டபாணி, குமரேசன் மற்றும் ஊழியர்கள்’

-என்று எழுதி, “சரியா இருக்கான்னு பாருங்க” என்று ஆடிட்டரிடம் நீட்டினான் குமரேசன்.

“அப்ரப்ட்டா பார்கவின்னு போடாதே! அருமை மகள் குமாரி பார்கவி அல்லது செல்வி பார்கவின்னு போடு.”

“தப்பு விளம்பரம் மத்தவங்க கண்ணிலே படற சமயத்திலே சட்டப்படி அவள் திருமதி பார்கவி அல்லது பார்கவி அஜித்குமார் ஆயிடறாள்.”

“அப்போ எல்லோர் பேரையும் போட்டுடுப்பா.”

“ஓகோ! உங்க பேரை இன்னும் நான் போடலியே? எத்தனை பெரிய மடையன் நான்! கொடுங்க திருத்திக் கொடுத்துடறேன்” என்று அந்தத் தாளை வாங்கி மறுபடி புதிதாய் எழுதலானான்.

இப்போது இப்படிக்கு என்பதன் கீழே பெயர்கள் கூடி யிருந்தன. ‘திரு. சந்திரஜித் குப்தா - திருமதி சுஷ்மா குப்தா, குருசரண் வர்மா, ஆடிட்டர் அனந்த், மகள் பார்கவி, ஆஜித் குமார், குமரேசன் - தேவசேனா குமரேசன், தண்டபாணி, திருமதி தண்டபாணி, கடுக்கையூர் ஜோதிடர் கண்ணபிரான் மற்றும் விசுவாச ஊழியர்கள்” என்று போட்டு அவரிடம் கொடுத்தான்.

குமரேசன் விளம்பரத்தை எழுதிப் பேப்பர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தான்.

கல்யாணத்துக்கு ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். வீடும், ஓட்டலும் களை கட்டின. சில சூப்பர் ஸ்டார் நடிகர்களும், நடிகைகளும் குருபுரமே வந்துவிட்டதால் பார்கவியில் திருவிழாக் கூட்டம் கூடிவிட்டது. திருமணத்துக்கு முந்திய நாள் குருபுரமே தேர்த் திருவிழாவுக்குத் தயாரானது போல் தயாராயிருந்தது. எங்கே பார்த்தாலும் சீரியல் செட் ஒளி விளக்குகள். ஊர் முழுவதும் பார்கவி - குமரேசன் அவர்களுடைய திருமணம் பற்றிய பேச்சு. மறுநாள் காலை முகூர்த்த வேளையில் எல்லோருமே மதுரை விமான நிலையம் போக முடியாது என்பதால் சிவவடிவேலு தம்பதிகளை வரவேற்க ஆடிட்டரும் குப்தாவும் மட்டும் போக இருந்தனர்.

அத்தியாயம் - 20

அதிகாலையில் முகூர்த்தம் முடிந்த சூட்டோடு ஆடிட்டரும் குப்தாவும் சிவவடிவேலு தம்பதிகளை வரவேற்கக் குருபுரத்திலிருந்து மதுரை விமான நிலையம் புறப்பட்டனர். மதறாஸ் டு மதுரை ஃப்ளைட் டேக் ஆஃப் டயமே இரண்டு மணி தாமதம் என்று காலை நாலு மணிக்கே அவர்களுக்குச் சென்னையிலிருந்து டிராவல் ஏஜென்ஸிஸ்காரர்கள் டெலிபோன் மூலம் சொல்லிவிட்டிருந்தனர். அதனால் குருபுரத்திலிருந்தே முகூர்த்தம் முடிந்து கேசரி, இட்டிலி, வடை சாப்பிட்டுவிட்டுப் புறப்பட முடிந்தது.

இவர்கள் மதுரை போன பின்பும் நேரம் இருந்தது. ஆடிட்டரும் குப்தாவும் அம்மன் சந்நிதிப் பூக்கடைக்குச் சென்று, இரண்டு பெரிய ரோஜாப்பூ மாலைகள் வாங்கிக் கொண்டார்கள். தங்கள் போதாத காலம் ஒருவேளை சிவவடிவேலு பிளேனிலேயே பேப்பர் கீப்பர் பார்த்திருந்து, “இதெல்லாம் யாரு? பார்கவி அஜீத்னு போட்டிருக்கீரே, அவளுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு? இந்த பயல் குமரேசன் பேரோட தேவசேனான்னு ஒட்ட வச்சிருக்கிரே அது யாரு? குருசரண் யாரு”ன்னு கேட்டால் நிதானமாக எப்படி எப்படித் தொடங்கி இருவருமாக அவருக்குச் சொல்லிக் ‘கன்வின்ஸ்’ செய்வது என்று பலமுறை ரிஹர்ஸல் பார்த்துக் கொண்டார்கள், அவர்கள். நெஞ்சு படக் படக் என்று அடித்துக் கொண்டது. ஒரு வில்லனை எதிர்கொள்ளும் கதாநாயகராகத் தவித்தனர்.

மதுரை விமான நிலையத்தில் கூட்டமே இல்லை. ஃப்ளைட் லேட் என்பதால் அதற்காகக் காத்திருந்த பயணிகள் கூடக் கான்ஸல் செய்துவிட்டுப் போயிருந்தனர். பதினோரு மணிக்கு வந்து திரும்பவும் புறப்பட்டு மெல்ல மெட்ராஸ் போகிற விமானத்தைவிட அதிகாலை வைகையில் போய் இரண்டு மணிக்குள் சென்னையை அடைந்து விடலாம் எனப் பயணிகள் எண்ணியிருக்கக் கூடும். சென்னையிலிருந்து அதிகாலையில் மதுரை வந்து மறுபடி திரும்பச் சென்னை போகிற அந்த விமானம் அன்று சென்னையிலிருந்தே தாமதமாகப் புறப்பட்டிருந்ததால் எல்லாமே தாறுமாறாகக் குளறுபடி ஆகி இருந்தது.

சென்னையிலிருந்து வருகிற விமானம் சில விநாடிகளில் தரை இறங்கும் என்பதை விமான நிலைய ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள். தாம் வந்து இறங்குகிற விமானத்தையே தாமதமாக்கக் கூடிய ஆற்றல் சிவவடிவேலுவுக்கு இருந்தாற் போலத் தோன்றியது. “இவரைக் கொண்டு போய் நிறுத்திப் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தச் சொல்லி அத்தனை விருந்தாளிகள் முன்னாடியும் ஏதாவது ஸீன் கிரியேட் பண்ணிட்டார்னா ரசாபாசமாப் போயிடுமே மிஸ்டர் அனந்த்!”

“ஆள் மாறியிருந்தார்னு அப்படி எல்லாம் செய்துவிட மாட்டாருங்கிற நம்பிக்கை இருக்கு.”

“மாறலேன்னு வச்சுப்போம். அப்போ என்ன பண்ணறது?”

“அதுக்கும் ஒரு எமெர்ஜென்ஸி வழி வச்சிருக்கேன். சிவவடிவேலுவுக்கு மூக்குக் கண்ணாடி இல்லாட்டி சட்னு ஆள்களை அடையாளம் தெரியாது. கல்யாண மேடையிலே அழைச்சுட்டுப் போய் நிறுத்தி அட்சதையைக் கையிலே கொடுக்கிறதுக்கு முந்தியே கண்ணாடியைக் காணாமல் ஒளிச்சு வச்சிடலாம்.”

“அதனாலே கொஞ்ச நேரம்தானே சமாளிக்க முடியும்? அப்புறம் என்ன பண்ணுவது?”

“சபை நடுவிலே மனுஷன் கத்தி இரையாமல் பண்ணிட்டா அப்புறம் வீட்டுக்குள்ளே நடக்கிற கூப்பாட்டைப் பத்திக் கவலை இல்லே. அட்சதை போட்டு முடிச்சதுமே அவருக்குப் பிராயணக் களைப்பாலே உடல் நலம் இல்லேன்னு உதவிக்கு ஒரு மனுஷனைப் போட்டு வீட்டிலே தள்ளி அடைச்சு வச்சிடலாம்.”

“மிஸஸ் சிவவடிவேலுவை என்ன பண்ணுவீங்க? அவங்க ரிவோல்ட் பண்ண மாட்டாங்களா?”

“இதெல்லாம் பிடிக்காட்டியும் சபை நடுவிலே ரசாபாசம் பண்ண மாட்டாங்க. இங்கிதமாக நடந்துப்பாங்க. அந்தம்மாளைப் பத்திக் கவலை இல்லே.”

“கொஞ்சம் கஷ்டமான வேலைதான்.”

“ஒரு கஷ்டமும் இல்லை. அவருக்கு எதுவும் தெரியாது. பேப்பர் பார்க்க மாட்டார். உங்களுக்குச் சிரமமாயிருக்குமே. இருந்தாலும் போற வழியிலே ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போயிடலாம்னு கொண்டு போய் என்னன்னு சொல்லாமே அட்சதையைக் கொடுத்துக் காரியத்தை முடிச்சிடலாம்.”

விமானம் கீழிறங்கி ஓடுபாதையில் விரைந்து வரும் ஓசை கேட்டது. குப்தாவும், ஆடிட்டரும் மாலைகளோடு எழுந்தார்கள். ரகசியம் பரம ரகசியம் என்பதால் டிரைவர் கூடக் கிடையாது. அனந்தே காரை ஓட்டி வந்திருந்தார். ‘ஆப்பரேஷன் நியு பார்கவி’யை விடக் கஷ்டமான ஒரு வேலையில் அவர்கள் இப்போது இறங்கியிருந்தார்கள். நிலைய அதிகாரியிடம் அனுமதி பெற்று விமானம் நின்ற இடத்திற்கே கூடப் போக முடிந்தது. சிவவடிவேலு தம்பதி இறங்குவதற்கு முன் வேறு யார் யாரோ இறங்கினர்கள்.

கடைசியாகச் சிவவடிவேலுவும் ஆச்சியும் மெதுவாக இறங்கினார்கள். சூட், கோட், கழுத்திலே டை கட்டிய தோற்றத்தில் விமானத்தின் லேடரில் அவர் ஒவ்வொரு ஸ்டெப்பாக வைத்து இறங்கியபோது நடைதான் அந்த சூட் கோட், டைக்கு ஒவ்வாத நாட்டுப்புறத்து நடையாக இருந்தது. ஆச்சி நீல நிறக் காஞ்சீபுரம் பட்டுப் புடவையை அணிந்து எப்போதும் போல் தோன்றினாள். சிவவடிவேலுவை நோக்கி ஆடிட்டரும், குப்தாவும் படு உற்சாகமாகக் கையை ஆட்டோ ஆட்டென்று ஆட்டினார்கள். அவர் பார்வை எங்கோ பார்க்கத் தோன்றியது. பராக்காக நோக்கியது. திருவிழாவில் காணாமல் போன குழந்தை பெற்றோரைத் தேடி விழிகளைச் சுழல விட்டுப் பதறுகிற மாதிரி யாரையோ அவர் கண்கள் தேடின. கடைசிப் படியில் இறங்கி ரன்வேயில் தரை மீது காலை வைத்த பின்பு தான் சிவவடிவேலு இவர்கள் இருவரும் மாலையோடு நிற்பதைப் பார்த்தார். ஆச்சி மேலேயே இவர்களையும் இவர்கள் கை அசைப்பதையும் பார்த்துப் பதிலுக்குக் கையசைத்து விட்டாள். சிவவடிவேலு கீழே இறங்கிய பின்பும் அவர் கண்கள் வேறு யாரையோ தேடி வட்டமிட்டன. குப்தா, அனந்த் இருவரும் மாலைகளோடு தம்மை நெருங்குவதைப் பார்த்த பின்பும் அவர் கண்கள் வேறு யாரையோ தேடிக் கொண்டிருந்தன.

“மிஸ்டர் சிவவடிவேலு மிஸஸ் சிவவடிவேலு வெல்கம் டு குருபுரம்” குப்தாவும், அனந்துவும் அவர் கழுத்தில் மாலையைப் போட்டு அதை அப்படியே ஆச்சி கழுத்தில் மாற்றும்படி அவரையே வேண்டியபோது கூட எதுவும் பதிலுக்கு விசாரிக்காமல் இயந்திர கதியில் தம் கழுத்தில் விழுந்த இரு மாலைகளையுமே ஆச்சி கழுத்துக்கு மாற்றிவிட்டுப் பார்வையை அவர்களுக்கு அப்பால் விரைய விட்டபடி: “கரும்பாயிரம் வரலியா?” என்றார் சிவவடிவேலு.

அவரோ குப்தாவோ இதற்குப் பதிலே சொல்லாமல், “ஹெள வாஸ் யுவர் டிரிப்? டிட்யூ ஹாவ் எ நைஸ் டிரிப்? உங்கள் பிரயாணம் எல்லாம் செளக்கியமா?” என்று தமிழிலும், ஆங்கிலத்திலுமாக விசாரணையைத் தொடங்கினார்கள்.

அவரோ மறுபடியும், “கரும்பாயிரம் எங்கே? அவன் வரலியா? அவனைக் காணலியே?” என்று கிளிப்பிள்ளை மாதிரி ஒரே வாக்கியத்தை அரற்றிக் கொண்டிருந்தார்.

குப்தாவின் சட்டைப் பையிலிருந்த சீல்டு கவரை வாங்கி உடைத்துப் பிரித்துப் படித்தார் ஆடிட்டர் அனந்த். கவருக்குள்ளே இருந்த துண்டுத் தாளில் ‘கரும்பாயிரம் வரலியா?’ என்று குமரேசனின் கையெழுத்தில் எழுதியிருந்தது.

“என்ன? பந்தயம் என்ன ஆச்சு?” குப்தா ஆவலோடு விசாரித்தான்.

“குமரேசன் வாஸ் கரெக்ட். ஐ லாஸ்ட் இட்,” என்று சோகமாக ஆடிட்டரிடமிருந்து பதில் வந்தது.

“சரி ஒரு தோல்வி போதும்! இப்போ அடுத்த தோல்வி வராமல் உஷாராகுங்க ஆசீர்வாத விஷயமா ஏற்பாடு பண்ணுங்க” என்று ஆங்கிலத்தில் சொன்னான் குப்தா.

“இதோ ஒரு நிமிஷத்திலே முடிக்கிறேன். நீங்க கொஞ்சம் ஓல்ட் மேனை எங்கேஜ் பண்ணிக்குங்க,” என்று கூறியபடியே ஆச்சியை ஜாடை காண்பித்துத் தனியே அழைத்துச் சென்றார் ஆடிட்டர். ஆச்சியிடம் சுருக்கமாக விஷயத்தைச் சொல்லி “மகாலட்சுமி மாதிரி இருக்கீங்க, மங்களகரமான விஷயம். நீங்கதான் ஒத்துழைக்கணும்,” என்றார் அனந்த். ஆச்சியை அவர் தாராளமாகப் புகழவே செய்தார்.

“ஒண்ணும் கவலைப்படாதீங்க, ஆடிட்டர். இந்த மனுஷன் கொஞ்சம் கூட மாறவில்லை. குருபுரத்திலேயிருந்து ரெண்டு மூணு மணி நேரத்துக்கு மதுரை போயிட்டுத் திரும்பினால் கூடத் திரும்பி வந்ததும் தான் இல்லாதபோது இங்கே என்ன நடந்ததுன்னு கரும்பாயிரத்தைக் கூப்பிட்டுக் கேட்கிற பழக்கம். அவனை உளவறிய ஆளாகப் பயன்படுத்திக்கிற பழக்கமெல்லாம் ஆதி நாளிலிருந்தே இந்த மனுஷன் கிட்டே உண்டு, கோள் சொல்லிக் கோள் சொல்லிப் பெத்த பிள்ளைகளுக்கும் அப்பனுக்கும் ஆகாமல் பண்ணினதே அந்தக் கரும்பாயிரம் தடியன் தான், இப்பவும் அதுக்குத்தான் அந்தக் கடன்காரன் வந்திருக்கானான்னு அரிப்பெடுத்துப் போய்த் தேடறது கிழம்.”

“கரும்பாயிரத்தை நாங்க வேலையை விட்டே போகச் சொல்லியாச்சு! அவன் குருபுரத்திலேயே இப்போ இல்லே ஆச்சி, மலை மேலே எங்கேயோ கேண்டீன் நடத்தறானாம்.”

“நல்ல காரியம் பண்ணினீர். இனிமே இந்தக் குடும்பம் க்ஷேமமாக இருக்கும். அப்பனுக்கும் மகனுக்கும் நடுவிலே வத்திவச்சுக் குச்சி முறிச்சுப் போட்டுக் கோள் சொல்லிப் பிழைக்கிற கிராதகன் அந்தக் கரும்பாயிரம்.”

“சரி! இப்போ சபை நடுவிலே ஆசீர்வாதம் பண்ணனுமே ஆச்சி.”

“சமாளிச்சிடலாம். இவருக்கு வெள்ளெழுத்துப் படிக்க, ஆள் யாருன்னு பார்க்கத் தனித் தனியே இரண்டு மூக்குக் கண்ணாடி. மெட்ராஸ்லே சிங்கப்பூர் பிளேன்லேயிருந்து இறங்கினதும் படிக்கிற கண்ணாடியை உள்ளே வாங்கி வச்சுப் பூட்டிட்டதாலே மதுரை வர்றப்போ இத்த மனுஷன் பேப்பர் எதுவும் படிக்கலே. நான்தான் படிச்சேன். ஆனால் இவர் கிட்டே ஒண்ணும் சொல்லலே. இப்போ ஆள் பார்க்கிற கண்ணாடியையும் நைஸாகப் பறிமுதல் பண்ணிட்டாப் போச்சு! ரொம்ப வேண்டிய கல்யாணம் ஏர்போர்ட்லே இருந்து போறப்பவே ரெண்டு அட்சதையைப் போட்டு வாழ்த்திட்டுப் போயிடலாம்’னு நீங்களே சொல்ற மாதிரிச் சொல்லுங்க. மத்ததை நான் பார்த்துக்கறேன்” என்றாள் ஆச்சி.

ஆடிட்டர், ஆச்சி இருவரும் குப்தாவும் சிவவடிவேலுவும் நின்ற இடத்துக்குப் போனபோதும் கூட, “கரும்பாயிரம் வரலியா?” என்கிற அதே கேள்வியைத்தான் குப்தாவிடம் பதினைந்தாவது தடவையாகக் கேட்டுக் கொண்டிருந்தார் கிழவர்.

அங்கே இவர்கள் போய்ச் சேர்ந்ததும் மறுபடி ஆடிட்டரிடம் கேட்டார். ஆடிட்டர் வேறு ஏதோ பேசி மழுப்பினர்; “இந்தாங்க... முகத்திலே ஒரேயடியா எண்ணெய் வடியுது. என் கிட்டே கண்ணாடியைக் கழட்டிக் கொடுத்திட்டு வாஷ் பண்ணித் தொடைச்சிட்டு வந்திடுங்க. வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி இங்கேயிருந்து போறப்பவே ரொம்ப வேண்டிய கல்யாணம் ஒண்ணுக்குப் போய் ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போகணும்கிறாங்க” என்று கூறி ஆச்சி அவரது கண்ணாடியைப் பறிமுதல் செய்தாள். அனந்த் கையைப் பிடித்துத் தடுக்கி விழாமல் அவரை விமான நிலைய வாஷ் பேஸினுக்கு அழைத்துச் சென்றார்.

இந்த மனுஷன் ஆறு மாசத்துக்கு அப்புறம் சொந்த ஊரிலே வந்து இறங்கினால் மகள், மகன்கள், சுற்றத்தார் வேண்டியவர்கள் எதிரே வந்து மாலையோடு நிற்பவர்களைப் பற்றிக்கூட க்ஷேமலாபம் விசாரிக்காமல் கரும்பாயிரம் வரலியா என்றே பிதற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆடிட்டருக்கே ‘சே’ என்றாகி விட்டது.

கார் குருபுரம் போகிறபோது, “நெள எ டேஸ் பார்கவி இஸ் யேர்னிங் மோர் ப்ராஃபிட். வீ ஹாவ் கிளியர்டு ஓல்டு லோன்ஸ்,” என்று குப்தா சொல்லிக் கொண்டு வந்ததை எல்லாம் காரை ஓட்டியபடியே ஆடிட்டர் மொழிபெயர்த்துத் தமிழில் சொல்லியும் சிவவடிவேலு, “கரும்பாயிரம் வரலியா?” என்பதிலேயே இருந்தார்.

மிகவும் தேர்ந்த பிஸினஸ் டாக்டரான சந்திரஜித் குப்தா எம்.பி.ஏ, சி.எ., எஃப்.ஆர்.சி.எஸ். இப்போது தொழி லுக்குச் சிகிச்சை முடிந்து நாடப்பட்ட முதிய நோயாளியான தொழிலதிபருக்குச் சிகிச்சை தேவைப்படுகிறது என்ற நிலை மையை உணர்ந்தார். திட்டமிட்டபடி ஆசீர்வாத நாடகத்தை நிமிடத்தில் முடித்து, “பிரயாண அலுப்பு! சிவவடிவேலு இஸ் நாட் டூயிங் வெல். இன்னும் நாலைந்து நாள் கம்ப்ளீட் ரெஸ்ட்லே இருக்கணும்,” என்று எல்லாரிடமும் சொல்லி அவரையும் ஆச்சியையும் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு அவரைக் கவனிக்கிற பொறுப்பை ஆச்சியிடம் விட்டு விட்டுத் திரும்பினார், ஆடிட்டர். ஆப்பரேஷன் நியு பார்கவி! திட்டத்தின் கிளைமாக்ஸ் சீனை வெற்றிகரமாக முடித்துவிட்டு நிம்மதியாக ஆளுக்கு ஒரு ஸ்ட்ராங் காப்பியை அருந்தினார்கள் குப்தாவும் ஆடிட்டரும்.

அன்று மாலையில் கல்யாண ரிசப்ஷனின் போது, “என் சிகிச்சை முடிந்து விட்டது! போத் த பார்கவிஸ் ஆர் இன் வெரிகுட் கண்டிஷன். கீப்பிங் ஸ்வுண்ட் ஹெல்த் அண்ட் யேர்னிங் மோர் ப்ராஃபிட்! நாளை நானும் சுஷ்மாவும் ஊர் திரும்புகிறோம்,” என்று சொல்லிக் கொண்டிருந்த குப்தாவை இடைமறித்து, “பார்கவி லாபம் தருகிறாள். ஆனால் பார்கவி யோட ஆடிட்டர் ரூபாய் ஐயாயிரம் நஷ்டமடைகிறார்,” என்று குமரேசனுக்குப் பந்தய வகையில் தரவேண்டிய ஐயாயிரத் துக்கு எடுத்திருந்த கிஃப்ட் செக்கைக் குப்தாவிடம் காட்டினார் அனந்த்.

“நோ நோ! இந்தக் கஞ்சத்தனத்தை நான் அனுமதிக்க மாட்டேன். நீங்க குமரேசனுக்குத் தரவேண்டிய பந்தயப் பணம் தனி. மேரேஜ் கிஃப்ட் தனி. நோ டூ இன் ஒன் பிஸினஸ்,” என்று குப்தா ஆடிட்டரைக் கண்டித்தான். குப்தா கூறியதைக் கேட்டுத் தண்டபாணி சிரித்தான்.

“மிஸ்டர் குப்தா இந்தக் கஞ்சத்தனம் ஒரு இன்ஃபெக்ஷன். சிவவடிவேலுவிடமிருந்து தொற்றிக் கொண்டு விட்டது. இருப்பத்தைஞ்சு முப்பது வருஷமா அவரிட்டம் பழகறேன் இல்லியா?” என்று ஜோக் அடித்தார் ஆடிட்டர்.

“பை த பை, சிவவடிவேலு எப்படி இருக்கிறார்? எனி இம்ப்ரூவ்மெண்ட்” என்று ஆடிட்டரைக் கேட்டான் குப்தா.

உதட்டைப் பிதுக்கிவிட்டு ஆடிட்டர் சொன்னார்.

“இப்போ மணி ஏழு! ஆறே காலுக்குக் கூட ஆச்சியிடமிருந்து இங்கே ஃபோன் வந்தது! ஆறு பத்துக்கு நூத்தி எட்டாவது தடவையாகக் கூட, ‘கரும்பாயிரம் வரலியா? நான் அவனைப் பார்த்தாகணுமே?’ன்னு தான் கேட்டாராம்.”

“தேறாது! ஹோப்லெஸ் கேஸ்! இனி இதுக்கு ஒரே ட்ரீட்மெண்ட்தான் இருக்கு. ‘தசாபுக்தி சரியாகலே. அர்த்தாஷ்டமச்சனி அது இதுன்னுசொல்லி இன்னும் கொஞ்ச நாள் வீட்டை விட்டு வெளியே விடாமலும் வெளியிலேயிருந்து கரும்பாயிரம் மாதிரி யாரையும் உள்ளே விட்டுடாமேயும் அவரைக் கவனிச்சுக்க வேண்டியதுதான்.”

“அந்தப் பொறுப்பை ஆச்சியே கவனிச்சிக்கிறேன்னு வாக்களிச்சிருக்காங்க.” என்றார் ஆடிட்டர். அப்போது தற் செயலாக ரிசப்ஷன் டிரெஸ்ஸோடு தடபுடலாக மாப்பிள்ளைக் கோலத்தில் தேவசேனா சகிதம் அங்கே வந்த குமரேசன், “என்ன? பந்தயத்திலே தோத்தீங்களா? நான், அப்பவே சொன்னேன், கேட்டீரா?” என்று ஆடிட்டரை வம்புக்கு இழுத்தான்.

உடனே தணிந்த குரலில் ஆடிட்டர், “தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமியை ஜெயிக்க முடியுமா அப்பா?” என்ற படியே கிஃப்ட் செக்கை எடுத்து நீட்டினார்.

“கலலைப்படாதீரும்! உம்ம டாட்டர் மேரேஜின்போது இதை வட்டியோட திரும்பித் தந்துடறேன்,” என்றான் பழைய பட்டிமன்ற வெற்றிவீரன் குமரேசன்.