bayama enakkaa

பயமா? எனக்கா?

சுரங்க நடைபாதையைக் கடப்பதென்றால் அர்ச்சனாவுக்கு மிகவும் பயம். கற்பனைகளைப் பயன்படுத்தி அவளுடைய பயத்தை மாயாஜாலங்களாக மாற்றி எதிர்கொள்ள அர்ச்சனாவின் தாத்தா உதவுகிறார். தாத்தா மற்றும் பேத்தியின் அற்புதமான உறவும், மாயசக்திகள் நிரம்பிய கற்பனைகளும் தான் இந்த நாடகம்.

- Gireesh

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அரங்க அமைப்பு: இந்த நாடகம் முதன்மையாக இரண்டு இடங்களில் நடைபெறுகிறது. பள்ளியின் வாசலுக்கு வெளியே தாத்தா அர்ச்சனாவை அழைத்துச் செல்லும் இடம் (மேடைக்குக் கீழே). மந்திரத் தோட்டமாகவும், சர்க்கஸாகவும், ராஜகுடும்ப நடன அரங்காகவும் மாறக்கூடிய சுரங்க நடைபாதை (மேடைக்கு மேலே – உயர்ந்த மேடையாக இருப்பது நல்லது).

மேடையின் மையத்தில்: பூங்கா இருக்கை (பூங்கா காட்சிகளில் மட்டும்)

மேடைக்குக் கீழே, இடமும், வலமும்: கதைசொல்லிகள் மேடையின் பின்னணி சுரங்க நடைபாதையின் உள்பகுதியை ஒத்திருக்க வேண்டும்.

வசனங்கள் பேசும் கதாபாத்திரங்கள்:

1. சம்பக்லால்/தாத்தா

2. அர்ச்சனா

3. எல்லாக் காட்சிகளுக்கும் இரண்டு கதைசொல்லிகள்

4. புஷ்பா அக்கா

5. சவிதா

6. திரு. ஐயர்

7. ஷர்மா ஜி

அர்ச்சனா

சம்பக்லால்/தாத்தா

புஷ்பா அக்கா

திரு. ஐயர்

சவிதா

ஷர்மா ஜி

காட்சி 1

அரங்கு: மேடையின் நடுவே பூங்கா இருக்கை வைக்கப்பட்டிருக்க வேண்டும். மேடைக்கு கீழே, இடமும் வலமும் கதைசொல்லிகள் நிற்க வேண்டும். மேடையில் விளக்குகள் அணைக்கப்பட்டு கதைசொல்லிகளின் மேல் மட்டும் வெளிச்சம் இருக்க வேண்டும்.

கதைசொல்லி 1: இது குட்டிப் பெண். அர்ச்சனாவைப் பற்றிய கதை. அர்ச்சனாவுக்கு பள்ளிக்குச் செல்ல மிகவும் பிடிக்கும். தினமும் பிற்பகலில் அர்ச்சனாவின் தாத்தா பள்ளிக்கு வந்து அவளைஅழைத்துக் கொண்டு, வீட்டுக்கு நடத்திச் செல்வார்.

கதைசொல்லி 2: அந்த நடைப்பயணமே அவ்வளவு அழகாக இருக்கும். மரங்களின் நிழலில் இருக்கும் அந்தக் குறுகிய பாதையில் வியாபாரிகள் எல்லா விதப் பொருட்களும் விற்றுக் கொண்டிருப்பார்கள். அர்ச்சனாவுக்கு பிடித்தமான ஐஸ்கிரீம் விற்பவரும் அங்கு அவளுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்.

கதைசொல்லி 1: ஆனால் அங்கே, ஐஸ்கிரீம் விற்பவரையும் தாண்டிச் சென்றால், அர்ச்சனா மிகவும் பயப்படும் ஒரு பகுதியின் நுழைவாயில் இருக்கிறது. அதுதான் சுரங்க நடைபாதை.

கதைசொல்லி 2: அங்கே பயங்கரமானவர்கள் வாழ்வதாக அர்ச்சனா நினைத்துக் கொண்டிருக்கிறாள்.

கதைசொல்லி 1: தினமும் அர்ச்சனாவின் தாத்தா அவளைத் தூக்கிக்கொண்டு அவள் கண்களை இறுக்கமாக மூடச் செய்து வேகமாக நடைபாதையைக் கடந்துவிடுவார்.

கதைசொல்லி 2: ஒருநாள், தாத்தா உதவி கேட்பதற்கு முடிவு செய்கிறார்.

(மேடையின் நடுவே விளக்குகள் எரிகின்றன. வயதான பெரியவர்கள் ஒரு குழுவாக சிரிப்புப் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்)

அனைவரும்: ஹ ஹ ஹா! ஹெ ஹெ ஹே! ஹொ ஹொ ஹோ!

சம்பக்லால்/தாத்தா: (மேடையின் இடதுபுறம் வழியாக உள்ளே வருகிறார்) ஹலோ!

புஷ்பா அக்கா: காலை வணக்கம், சம்பக் அண்ணா!

அனைவரும்: காலை வணக்கம்!

ஷர்மா ஜி: இன்னிக்கு ஏன் ரொம்ப நேரமாயிருச்சு? பிரச்சினை ஏதும் இல்லையே?

சவிதா ஆன்ட்டி: எல்லாரும் இங்க வாங்க. பெஞ்சுல உக்காருங்க! எல்லாரும் இங்க வாங்க. என்னாச்சு? உட்காருங்க! உக்காந்து சொல்லுங்க என்னாச்சு?

சம்பக்லால் தாத்தா: நான் அர்ச்சனாவை தினமும் பள்ளிக்கூடத்துல இருந்து கூட்டிக்கிட்டு வருவேன். வழியில அந்தச் சுரங்க நடைபாதையைக் கடந்துதான் வீட்டுக்கு போகணும். அந்த பாதையைப் பாத்தாலே அவ பயப்படுறா. பாவம்! தினமும் அழுவுறா. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல.

எல்லாரும்: ஐயோ! கடவுளே… பாவம் சின்னப் பொண்ணு.

ஐயர்: ஏதாவது பண்ணித்தான் ஆகணும். நாம எல்லாரும் சேர்ந்து யோசிச்சு திரு. சம்பக்லாலோட பிரச்சினையை சரி பண்ணலாம்.

(புஷ்பா காரசேவு பாக்கெட் ஒன்றை வெளியில் எடுக்கிறார்)

புஷ்பா அக்கா: இந்தாங்க.. எல்லாரும் இந்த சுவையான காராசேவை சாப்பிடுங்க.. சாப்பிட்டுக்கிட்டே யோசிங்க.. யோசிச்சுக்கிட்டே சாப்பிடுங்க..

ஷர்மா தாத்தா: எனக்கும் கொஞ்சம் காரசேவு குடுங்க.. சாப்பிடாம எதுவும் யோசிக்க முடியாது.

(சவிதா அந்த காரசேவு பாக்கெட்டை ஷர்மாவுக்கு தர மறுக்கிறார். ஷர்மா கோபப்படுகிறார்)

சவிதா ஆன்ட்டி: முடியாது. ஷர்மா.. ஏற்கனவே உங்களுக்கு கொழுப்பு ரொம்ப அதிகமா இருக்கு.

புஷ்பா அக்கா: என் பேத்திக்கு கூட தூங்கும் போது நிறைய கெட்ட கனவுகள் வரும். அதனால என் பொண்ணு அவ தூங்குறதுக்கு முன்னாடி நல்ல கதைகள் சொல்லுவா.

ஐயர்: இதுவும் நல்ல யோசனை தான். நீங்க உங்க பேத்திக்கு கோமாளிகள், வித்தைக்காரங்க பத்தின கதைகள் சொல்லலாம்.

சவிதா: ஆமா.. கூடவே ராஜா ராணி கதைகள் கூடச் சொல்லலாம்.

சம்பக்லால்: யோசனை நல்லாதான் இருக்கு! எல்லாருக்கும் ரொம்ப நன்றி.

நான் இந்த யோசனையை முயற்சி செய்து பாத்துட்டு நாளைக்கு வாட்ஸ்ஆப் குழுவுல எல்லாருக்கும் சொல்றேன்.

(விளக்குகள் மெதுவாக அணைகின்றன)

காட்சி 2இடம்: பள்ளிக்கு முன்னால், அதைத் தொடர்ந்து சுரங்க நடைபாதையின் தோட்டக்காட்சிகள்.மேடைக்குக் கீழே இடமும், வலமும் கதைசொல்லிகள்.மேடையில் விளக்குகள் அணைக்கப்பட்டு கதைசொல்லிகளின் மேல் மட்டும் வெளிச்சம் இருக்க வேண்டும். கதைசொல்லி 1: அடுத்தநாளும் வந்தது, தாத்தா பள்ளிக்கு வந்து அழைத்துச் செல்வதற்காக அர்ச்சனா காத்திருக்கிறாள். கதைசொல்லி 2: வீட்டுக்கு நடந்து செல்வதைத் தவிர்த்துவிட்டு டாக்சியில் செல்ல அர்ச்சனா வெவ்வேறு சாக்குகளை யோசித்துகொண்டிருக்கிறாள். ஆனால், தாத்தா அவளுக்காக ஒரு பெரிய திட்டத்தை வைத்திருப்பதை அவள் அறிந்திருக்கவில்லை.

அர்ச்சனா: தாத்தா, ப்ளீஸ்! இன்னைக்கு நாம அந்த சுரங்க நடைபாதையில நடக்க வேண்டாம். அந்த பயங்கரமானவங்க எல்லாம் நம்மைக் கண்டிப்பா கடத்திட்டுப் போயிடுவாங்க.

தாத்தா: ஆனா உனக்கு இன்னைக்கு சுரங்க நடைபாதையில பெரிய ஆச்சரியம் காத்துக்கிட்டு இருக்கு.

அர்ச்சனா: ஆச்சரியமா? என்ன ஆச்சரியம்? அது ஒரு பயங்கரமான இடமாச்சே.

தாத்தா: நான் வரும்போது வழியில இந்த பூ கிடந்துச்சு. இந்தப் பூவுல இருந்து ஒரு குட்டி தேவதை வெளியே வந்துச்சு!

அர்ச்சனா: தேவதையா? நிஜமாவா? இப்போ அந்த தேவதை எங்கே?

தாத்தா: தேவதைக்கு நேரமாயிடுச்சுன்னு ஓடிப் போயிடுச்சு. ஆனா போறதுக்கு முன்னாடி இன்னைக்கு சுரங்க நடைபாதையில தேவதைகளோட விருந்து இருக்குன்னு சொல்லிட்டுப் போச்சு.

அர்ச்சனா: என்ன? தேவதைகளோட விருந்தா? ஆஹா! நாம போகலாமா? பிளீஸ்?

தாத்தா: ஆனா உனக்குதான் சுரங்க நடைபாதைன்னாலே பயமாச்சே. நீ அழுவே.

அர்ச்சனா: இல்ல, இல்ல, நாம போகலாம், ப்ளீஸ். சத்தியமா நான் அழமாட்டேன்.

தாத்தா: ஆனா, விதிமுறை என்னன்னா நீ இந்த பூவை உன் தலையில வச்சுக்கிட்டு கண்களை மூடிக்கணும். அப்பத்தான் உன்னால அந்த விருந்தைப் பார்க்க முடியும்!

அர்ச்சனா: நான் தயார், தாத்தா! வாங்க போகலாம்.

(அர்ச்சனா தலையில் பூவை வைத்துக்கொண்டு கண்களை மூடிக்கொள்கிறாள். தாத்தா அவளை அழைத்துக்கொண்டு சுரங்க நடைபாதைக்குப் போகிறார். பின்னணியில் இசைக்கோர்வை 1 ஒலிக்கிறது. மேடைக்கு மேல் விளக்குகள் மறைந்து சுரங்க நடைபாதையில் ஒளி மெதுவாக விழுகிறது.)

கதைசொல்லி 1: கண்களை இறுக மூடிக்கொண்டு அர்ச்சனா சுரங்க நடைபாதைக்குள் நடந்து கொண்டிருக்கும்போது தேவதைகளைப் பற்றியும் அவர்களின் பெரிய பூக்களைப் பற்றியும் தாத்தா அர்ச்சனாவிடம் சொல்லத் தொடங்குகிறார்.

கதைசொல்லி 2: தாத்தாவின் விரிவான வருணனையால் தேவதைகளின் விருந்தை அர்ச்சனாவால் கண்களை மூடிக்கொண்டே பார்க்க முடிந்தது.

(இதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே பெரிய பெரிய பூக்களை எடுத்து, இருட்டாக இருக்கும் மேடைக்கு கீழே வைக்க வேண்டும். உயரத்தில் இருக்கும் சுரங்க நடைபாதையின் மேல் உயரத்தில் நின்றுகொண்டிருக்கும் தாத்தாவின் மீதும் அர்ச்சனாவின் மீதும் விளக்கொளி இருக்க வேண்டும். பின்னர்,விளக்குகள் மெதுவாக ஒளிர ஆரம்பிக்க வேண்டும்)

அர்ச்சனா: சுத்தி என்னென்ன இருக்குன்னு சொல்லுங்க தாத்தா!

தாத்தா: எங்கு பார்த்தாலும் நிறைய பெரிய பூக்கள். ஊதா, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்கள்ல இருக்கு. எல்லா தேவதைகளும் தேவதூதர்களும் நடனமாடிக்கிட்டு இருக்காங்க.

அர்ச்சனா: ஓ!

தாத்தா: உன்னால பார்க்க முடியுதா அர்ச்சனா?

அர்ச்சனா: ஆமா ஆமா! என்னால எல்லாத்தையும் பாக்க முடியுது, தாத்தா!

(இசைக்கோர்வை 2 ஒலிக்கத் தொடங்குகிறது. விளக்குகள் ஒளிர்ந்ததும் தேவதைகளும் தேவதூதர்களும் மேடையில் வந்து பூக்களைச்சுற்றி நடனமாடத் தொடங்குகிறார்கள். அர்ச்சனாவும் தாத்தாவும் அதைப் பார்த்து அவர்களும் இணைந்து நடனமாடுகிறார்கள். இசை மெதுவாகக் குறைந்து நிற்கிறது, நடனக்காரர்களுடன் தாத்தாவும் அர்ச்சனாவும் மேடையில் இருந்து வெளியேறுகிறார்கள்)

காட்சி 3

இடம்: பள்ளிக்கு முன்னால், அதைத் தொடர்ந்து சுரங்க நடைபாதையின் சர்க்கஸ் காட்சிகள்.

மேடைக்குக் கீழே, இடமும் வலமும் கதைசொல்லிகள்.

மேடையில் விளக்குகள் அணைக்கப்பட்டு கதைசொல்லிகளின் மேல் மட்டும் வெளிச்சம் இருக்க வேண்டும்.

கதைசொல்லி 1: தேவதைகளும் தேவதூதர்களும் நடத்திய விருந்து முடிந்துவிட்டது. அர்ச்சனாவும் மகிழ்ச்சியாகவே சுரங்க நடைபாதையைக் கடந்துசென்றாள். திட்டம் வெற்றி பெற்றது!

கதைசொல்லி 2: இப்போது தாத்தா வேறு ஒரு திட்டத்தை யோசிக்க வேண்டி இருந்தது. அதற்குள்ளே அடுத்தநாளும் வந்துவிட்டது. அர்ச்சனா தாத்தாவுக்காக பள்ளியின் வாசலில் காத்திருக்கிறாள்.

அர்ச்சனா: தாத்தா, தாத்தா, நீங்க இன்னைக்கும் தேவதையைப் பாத்தீங்களா? வேற ஏதாவது விருந்து இருக்கா?

தாத்தா: கீழே விழுந்து கிடக்குற பூக்கள்ல எல்லாம் நான் தேடிப் பார்த்தேன். ஆனால் என்னால தேவதையைக் கண்டுபிடிக்கவே முடியல.

அர்ச்சனா: ஐய்யோ! அப்போ நாம இன்னைக்கு சுரங்க நடைபாதை வழியா போக வேண்டாம். பயங்கரமானவங்க இன்னைக்கு நம்மை கண்டிப்பா கடத்திடுவாங்க.

தாத்தா: சரி, அப்படின்னா நான் கோமாளி கொடுத்த இந்த சிவப்பு மூக்கைத் தூக்கிப் போட்டுடுறேன்.

அர்ச்சனா: ஆ, நிஜமான கோமாளி மூக்கு! (கோமாளி மூக்கைத் தாத்தாவின் கையில் இருந்து வாங்குகிறாள்) நீங்க கோமாளியைப் பாத்தீங்களா?

தாத்தா: ஆமா, யாரெல்லாம் இந்த மூக்கை வச்சுக்கிட்டு கண்ணை மூடிக்கிறாங்களோ அவர்களால சர்க்கஸைப் பாக்க முடியும்னு கோமாளி என்கிட்ட சொன்னாரு.

அர்ச்சனா: நாமும் சர்க்கஸ் பார்க்கப் போகலாமா தாத்தா பிளீஸ்! அங்க சர்க்கஸ் நடந்துட்டு இருந்தா பயங்கரமானவங்க எல்லாம் நம்மை கண்டுக்கவே மாட்டாங்க.

தாத்தா: சரி. உனக்கு விதிமுறை என்னன்னு தெரியும். மூக்கை மாட்டிக்கிட்டு கண்களை மூடிக்கணும்.

அர்ச்சனா: (மூக்கை மாட்டிக் கொள்கிறாள்) நான் தயார் தாத்தா! போகலாம், வாங்க!

தாத்தா: சரி, ஒன்னும் பிரச்சினையில்ல! ஆனா இன்னைக்கு சுரங்க நடைபாதையில சர்க்கஸ் நடக்குறதா நான் கேள்விப்பட்டேன்.

அர்ச்சனா: சர்க்கஸா? சுரங்க நடைபாதையிலயா? நான் நம்பமாட்டேன்.

(அர்ச்சனாவும் தாத்தாவும் சுரங்க நடைபாதையை நோக்கி நடக்கிறார்கள். இசைக்கோர்வை 1 பின்னணியில் ஒலிக்கிறது. மேடையில் இருந்து விளக்குகள் மறைந்து சுரங்க நடைபாதையில் விளக்குகள் மெதுவாக ஒளிர்கின்றன)

கதைசொல்லி 1: அப்படியாக, மறுபடியும் தாத்தாவும் அர்ச்சனாவும் கவனமாக சுரங்க நடைபாதையில் காலெடுத்து வைக்கிறார்கள்.

கதைசொல்லி 2: சர்க்கஸைப் புகழ்ந்து தாத்தா சொன்ன வருணனையால் கண்களை மூடிக்கொண்டே அர்ச்சனாவும் அதைத் தெளிவாகப் பார்த்தாள்.

(இந்த கதைசொல்லல் நடந்துகொண்டிருக்கும்போதே ஒரு சர்க்கஸ் கூடாரத்தை எடுத்து மேடைக்கு கீழே இரண்டு பக்கத்துக்கும் நடுவே ஒரு பக்கமாக வைக்க வேண்டும். விளக்கொளி, சுரங்க நடைபாதையின் மேல், உயரத்தில்நின்றுகொண்டிருக்கும் தாத்தாவின் மீதும் அர்ச்சனாவின் மீதும் இருக்க வேண்டும். பின்னர், விளக்குகள் மெதுவாக ஒளிர வேண்டும்)

அர்ச்சனா: என்ன நடக்குது தாத்தா? யார் என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க?

தாத்தா: ஒரு பக்கம் ஏழு பந்துகளை வச்சு, ஒரு கோமாளி வித்தை காட்டிக்கிட்டு இருக்காரு! இன்னொரு பக்கம் ஒரு பொண்ணு ஒரு டஜனுக்கு மேல ஹூலா வளையங்களை வச்சு சுத்திக்கிட்டு இருக்காங்க. சர்க்கஸ் ஊஞ்சல்ல சாகசம் செய்யுறவரு அதுல கழுகு மாதிரி நமக்கு மேல பறந்துக்கிட்டு இருக்காரு. (தாத்தாவைச் சுற்றி யாரும் இல்லாதபோதும் தாத்தா தன்னைச் சுற்றிலும் கை காட்டி இதைச் சொல்லுவதால் தனது பேத்திக்காக இந்தக் கதைகளை எல்லாம் உருவாக்குகிறார் என்பதைப் பார்வையாளர்களுக்குப் புரிய வைக்கிறார்)

அர்ச்சனா: ஆஹா!

தாத்தா: உன்னால பார்க்க முடியுதா அர்ச்சனா?

அர்ச்சனா: ஆமா ஆமா தாத்தா, என்னால எல்லாத்தையும் பார்க்க முடியுது.

(இசைக்கோர்வை 3 ஒலிக்கத் தொடங்குகிறது. விளக்குகள் ஒளிர்ந்ததும் கோமாளிகளும் கழைக்கூத்தாடிகளும் சர்க்கஸ் கூடாரம் வழியே மேடையில் வந்து கோமாளித்தனமாக சர்க்கஸ் தந்திரங்களுடன் நடனமாடத் தொடங்குகிறார்கள். அர்ச்சனாவும் தாத்தாவும் அதைப் பார்த்து அவர்களும் இணைந்து நடனமாடுகிறார்கள். இசை மெதுவாகக் குறைந்து நிற்கிறது, நடனக்காரர்களுடன் தாத்தாவும் அர்ச்சனாவும் மேடையில் இருந்து வெளியேறுகிறார்கள்)

காட்சி 4

இடம்: பள்ளிக்கு முன்னால், அதைத் தொடர்ந்து சுரங்க நடைபாதையில் பிரம்மாண்டமான அரண்மனைக் காட்சி. மேடைக்குக் கீழே, இடமும் வலமும் கதைசொல்லிகள். மேடையில் விளக்குகள் அணைக்கப்பட்டு கதைசொல்லிகளின் மேல் மட்டும் வெளிச்சம் இருக்க வேண்டும்.

கதைசொல்லி 1: அர்ச்சனா அன்று மாலை முழுவதும் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டும், சர்க்கஸ் தந்திரங்களைச் செய்து கொண்டும் இருந்தாள்.

கதைசொல்லி 2: மாலை முழுவதும் அவள் இப்படித் துள்ளித் திரிந்து கொண்டிருந்தபோது தாத்தா அடுத்த நாளுக்கான திட்டத்தைப் பரபரப்பாகத் தயார்செய்து கொண்டிருந்தார்.

தாத்தா: நான் இன்னைக்கு யாரைப் பார்த்தேன்னு தெரியுமா?

அர்ச்சனா: தெரியாதே! யாரைப் பார்த்தீங்க?

தாத்தா: அரண்மனையோட தூதுவனை நான் இன்னைக்குச் சந்திச்சேன். ராஜாக்கள் மற்றும் ராணிக்களோட பெரிய சந்திப்பு நடக்கப் போறதா அவன் சொன்னான்.

அர்ச்சனா: எங்க சந்திக்கப் போறாங்க?

தாத்தா: வேற எங்கே? சுரங்க நடைபாதையில தான்.

அர்ச்சனா: நாம எப்படிப் போக முடியும்? நாம் ராஜாவோ ராணியோ கிடையாதே?

தாத்தா: நாம இந்த மகுடங்களை தலையில அணிஞ்சுக்கிட்டா யாருக்கும் தெரியாது! விருந்துக்குள்ள நுழைஞ்சுக்கலாம்.

அர்ச்சனா: எனக்கு உங்க திட்டம் ரொம்பப் பிடிச்சுருக்கு. நீங்க என்னோட ராஜாவா இருப்பீங்களா?

தாத்தா: கண்டிப்பா இருப்பேன். எனக்கும் அதில் மகிழ்ச்சிதான், என் அழகான இளவரசியே!

அர்ச்சனா: (தாத்தாவும் அர்ச்சனாவும் ராஜா ராணியைப் போல தங்கள் கைகளைப் பின்னிக் கொள்கிறார்கள்) அப்போ நாம போகலாம்!

(அவர்கள் சுரங்க நடைபாதையை நோக்கி நடக்கிறார்கள். இசைக்கோர்வை 1 பின்னணியில் ஒலிக்கிறது. விளக்குகள் மேடையில் குறைந்து சுரங்க நடைபாதையில் ஒளிர்கின்றன.)

கதைசொல்லி 1: இப்ப, அர்ச்சனாவும் தாத்தாவும் மகுடங்களை அணிந்துகொண்டு அரண்மனை வாசலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் இறங்கி வருகிறார்கள்.

கதைசொல்லி 2: ராஜாக்களையும் ராணிக்களையும் அரச விவகாரங்களையும் பற்றி தாத்தா பேசிக்கொண்டே வருகிறார்.

அர்ச்சனா கண்களை மூடிக்கொண்டே எல்லாவற்றையும் பார்க்கிறாள்.

தாத்தா: அரண்மனையோட சுவரெல்லாம் தங்கநிறத்துல இருக்கு. ரத்தினங்களும்ம் வைரங்களும் எல்லா இடத்துலயும் இருக்கு.

அர்ச்சனா: உங்களால வேற என்ன பாக்க முடியுது தாத்தா?

தாத்தா: எல்லாரும் உடுத்தியிருக்குற உடைகள் எல்லாம் எவ்வளவு அழகா இருக்குன்னு பாரு. உன்னால பாக்க முடியுதா அர்ச்சனா?

அர்ச்சனா: ஆமா, ஆமா தாத்தா! என்னால எல்லாமே பாக்க முடியுது!

(இசைக்கோர்வை 4 ஒலிக்கத் தொடங்குகிறது. விளக்குகள் ஒளிர்ந்ததும் ராஜாக்களும் ராணிகளும் மேடையில் வந்து அரண்மனை விருந்துகளில் நடனமாடுவது போல ஜோடி ஜோடியாக இணைந்து நடனமாடுகிறார்கள். அர்ச்சனாவும் தாத்தாவும் அதைப் பார்த்து அவர்களும் இணைந்து நடனமாடுகிறார்கள். இசை மெதுவாகக் குறைந்து நிற்கிறது, நடனக்காரர்களுடன் தாத்தாவும் அர்ச்சனாவும் மேடையில் இருந்து வெளியேறுகிறார்கள்)

அரங்கு: பூங்கா இருக்கை மேடையின் நடுவே வைக்கப்பட்டிருக்க வேண்டும். மேடைக்கு கீழே, இடமும் வலமும் கதைசொல்லிகள் நிற்க வேண்டும். மேடையில் விளக்குகள் அணைக்கப்பட்டு கதைசொல்லிகளின் மேல் மட்டும் வெளிச்சம் இருக்க வேண்டும்.

கதைசொல்லி 1: ஒருவாரம் கடந்து விட்டது, தாத்தாவிடம் புதிய திட்டங்கள் ஏதும் கைவசம் இல்லை. அவரால் அர்ச்சனாவுக்கு சொல்ல புதிய கதைகளை யோசிக்க முடியவில்லை.

கதைசொல்லி 2: எனவே காலையில் நடை பயில வரும் தன் நண்பர்களை சந்தித்து அடுத்து என்ன செய்யலாம் எனக் கேட்க தாத்தா முடிவு செய்கிறார்.

(எல்லா பாட்டி, தாத்தாக்களும் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். பேசியபடியே உடற்பயிற்சியும் செய்கிறார்கள்)

சவிதா: என்ன நீங்க! இதுக்கெல்லாம் கவலைப்படலாமா? அவ சின்ன பொண்ணு தானே? நீங்க அவளையே கதைகளை உருவாக்கச் சொல்லலாமே!

ஷர்மா: ரொம்ப நல்ல யோசனை சவிதாம்மா! குழந்தைங்க எல்லாம் நல்லா கதை சொல்லுவாங்க!

ஐயர்: என்ன சம்பக் அண்ணா, இப்போ பிரச்சினை சரியாப் போச்சா?

சம்பக்லால்: இந்த யோசனை ரொம்ப அருமையா இருக்கு. நான் யோசிச்சு ஏதாவது சுவாரசியமா பண்றேன்.

புஷ்பா: நாம இதை தட்டை முறுக்கு சாப்பிட்டு கொண்டாடலாம், வாங்க.

(ஒரு தட்டை முறுக்கு பாக்கெட்டை எடுத்து எல்லோருக்கும் பிரித்துக் கொடுக்கிறார்)

(விளக்குகள் அணைகின்றன)

கதைசொல்லி 1: தாத்தா, இப்பொழுது புதிய உற்சாகத்தோடு வீட்டுக்குத் திரும்புகிறார்.

கதைசொல்லி 2: எது எப்படி இருந்தாலும் தாத்தாவுக்கும் பேத்திக்குமான விளையாட்டு தொடங்கி விட்டது. யாரும் அதை நிறுத்த விரும்பவில்லை.

இடம்: பள்ளிக்கு முன்னால். அதைத் தொடர்ந்து சுரங்க நடைபாதையில் சூப்பர் ஹீரோக்களின் காட்சி. மேடைக்கு கீழே இடமும் வலமும் கதைசொல்லிகள் நிற்க வேண்டும். மேடையில் விளக்குகள் அணைக்கப்பட்டு கதைசொல்லிகளின் மேல் மட்டும் வெளிச்சம் இருக்க வேண்டும்.

கதைசொல்லி 1: அடுத்தநாள் தாத்தா மிதிவண்டி ஓட்டும்போது அணியும் தலைக்கவசத்தை கொண்டு வந்திருக்கிறார்.

கதைசொல்லி 2: அர்ச்சனாவுக்கு தாத்தாவின் திட்டம் என்ன என்பதைக் குறித்து எந்த யோசனையும் இல்லை, ஆனால் அவள் உற்சாககமடைய தயாராக இருக்கிறாள்.

தாத்தா: நான் இன்னைக்கு இந்தத் தலைக்கவசத்தை சுரங்க நடைபாதையில இருந்து எடுத்தேன். இது யாரோடதுன்னு உனக்கு தெரியுமா?

அர்ச்சனா: எனக்கு எப்படி தாத்தா தெரியும்?

தாத்தா: அப்போ, சரி. விடு, நான் இதை தூக்கி வீசிடுறேன்.

அர்ச்சனா: இல்ல! இல்ல! இதை தூக்கிப் போடாதீங்க..... வந்து... வந்து... (தயக்கத்துடன்) இது நெருப்புக்கை மாயாவியோடது..

தாத்தா: என்ன? நெருப்புக்கை மாயாவியா? யார் அது?

அர்ச்சனா: அவர் ஒரு சூப்பர் ஹீரோ தாத்தா. அவர் கையில இருந்து நெருப்பு வர வெச்சு சுடுவாரு!

தாத்தா: அட! ஆனா நாம இந்த தலைக்கவசத்தை வச்சு என்ன பண்ண முடியும்?

அர்ச்சனா: அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல தாத்தா. நாம இந்த தலைக்கவசத்தைப் போட்டுக்கிட்டு கண்களை மூடிக்கிட்டு சுரங்க நடைபாதைக்குள்ள போயிடலாம்.

தாத்தா: அப்புறம்?

அர்ச்சனா: அப்புறம் சூப்பர் ஹீரோ விருந்து தொடங்கிடும்!

கதைசொல்லி 1: ஆகா! இந்தத் திட்டம் வேலை செய்துவிட்டது. அர்ச்சனா தலைக்கவசத்தை அணிந்தபடி கண்களை மூடிக்கொண்டாள். தாத்தாவும் அவளும் எல்லா சூப்பர் ஹீரோக்களையும் அவர்களின் அபூர்வ சக்திகளையும் கண்டனர்.

கதைசொல்லி 2: அர்ச்சனா அவளாகவே மொத்த சூப்பர் ஹீரோ கதையையும் உருவாக்கிக் கொண்டாள். தினமும் ஒரு புதுக்கதையை இனி தாத்தா யோசிக்க வேண்டியதே இல்லை!

(இசைக்கோர்வை 1 பின்னணியில் ஒலிக்கிறது. மேடைக்கு முன்னால் இருக்கும் விளக்குகள் மறைய சுரங்க நடைபாதையில் விளக்குகள் எரிகின்றன. கதை சொல்லல் முடிந்ததும் இசைக்கோர்வை 5 ஒலிக்க சூப்பர் ஹீரோக்கள் மேடையில் வந்து அவர்களின் அபூர்வ சக்திகளையும் அசைவுகளையும் காண்பிக்கிறார்கள். தாத்தாவும் அர்ச்சனாவும் அதைப் பார்த்து அவர்களோடு இணைந்து கொள்கிறார்கள். இசை முடிய, நடனம் ஆடியவர்களுடன் தாத்தாவும், அர்ச்சனாவும் மேடையில் இருந்து வெளியேறுகிறார்கள்.)

இடம்: பள்ளிக்கு முன்னால், அதைத் தொடர்ந்து சுரங்க நடைபாதையில் பேய்க் காட்சி. மேடைக்கு கீழே இடமும் வலமும் கதைசொல்லிகள் நிற்க வேண்டும். மேடையில் விளக்குகள் அணைக்கப்பட்டு கதைசொல்லிகளின் மேல் மட்டும் வெளிச்சம் இருக்க வேண்டும்.

கதைசொல்லி 1: தான் உருவாக்கிய சூப்பர் ஹீரோக்களை நினைத்து அர்ச்சனா மிகவும் உற்சாகமாக இருந்தாள். அடுத்தநாள் அவள் தோழிகளிடம் அந்தக் கதைகளைச் சொல்லுவதில் கழித்தாள். வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்ததும் அவள் கதவை நோக்கி விரைந்தாள். ஆனால் அங்கே அவள் தாத்தா இல்லை.

கதைசொல்லி 2: அர்ச்சனா வெகுநேரமாகக் காத்திருந்தும் அவளால் தாத்தாவைப் பார்க்க முடியவில்லை. கடைசியில் தூரத்திலிருந்து தாத்தா வருவதைப் பார்த்தாள். அவர் நொண்டிக்கொண்டே வந்தார், அவர் உடைகள் அழுக்காக இருந்தன. கண்ணாடியும் அணியவில்லை.

அர்ச்சனா: என்னாச்சு தாத்தா? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?

தாத்தா: நான் தாமதமா வந்ததுக்கு என்னை மன்னிச்சுக்கோ அர்ச்சனா.. வர்ற வழியில ஒரு பள்ளம் இருந்துது, அதை நான் பாக்காம உள்ளே விழுந்துட்டேன்.

அர்ச்சனா: ஐய்யய்யோ!

தாத்தா: என் முதுகில அடிபட்டுடுச்சு. என் கண்ணாடியும் உடைஞ்சு போச்சு.

அர்ச்சனா: இப்போ பரவாயில்லையா, தாத்தா?

தாத்தா: என் முதுகு இப்பவும் கொஞ்சம் வலிக்குது. ஆனா பிரச்சினை அது இல்ல., என்னால கண்ணாடி இல்லாம நல்லா பார்க்க முடியாது. நாம டாக்சி பிடிச்சு வீட்டுக்குப் போகலாமா?

கதைசொல்லி 1: உடனே அர்ச்சனாவின் கண்கள் மலர்ந்தன. அவளிடம் ஒரு திட்டம் இருக்கிறது.

அர்ச்சனா: டாக்ஸி எல்லாம் வேண்டாம் தாத்தா! உங்களால நடக்க முடியுமா? ஏன்னா சுரங்க நடைபாதையில உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்துக்கிட்டு இருக்கு.

தாத்தா: இன்னைக்கு விளையாட நேரம் இல்லை அர்ச்சனா. பேய்கள் எல்லாம் அங்கே இருக்கும். நீ பயந்துடுவே.

அர்ச்சனா: இல்லை தாத்தா. பேய்களும், பயங்கரமானவர்களும் என்னோட நண்பர்களாயிட்டாங்க. எனக்கு இனிமேல் பயமே இல்லை. உங்களால நடக்கமுடியுமான்னு மட்டும் சொல்லுங்க.

தாத்தா: முடியும். ஆனா என்னால சரியா பார்க்க முடியாதே. நான் எப்படி உன்னை சுரங்க நடைபாதையில கூட்டிக்கிட்டு போக முடியும்?

அர்ச்சனா: இன்னைக்கு நான் உங்களை கூட்டிக்கிட்டு போறேன். நீங்க தயாரா, தாத்தா? என் கையைப் பிடிங்க, நாம போகலாம்.

(இம்முறை தன்னால் பார்க்க முடியாதது போல தாத்தா தடுமாறி நடந்தார். அதேசமயம் அர்ச்சனா அவர் கையைப் பிடித்துக் கொண்டு சுரங்க நடைபாதையை நோக்கி நடத்திச் சென்றாள். இசைக்கோர்வை 1 பின்னணியில் ஒலிக்கிறது. மேடையின் கீழுள்ள விளக்குகள் மங்கி சுரங்க நடைபாதையின் விளக்குகள் ஒளிர்கின்றன)

கதைசொல்லி 1: அர்ச்சனா தன் துணிவையெல்லாம் திரட்டி தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு, அவரை கவனமாக சுரங்க நடைபாதைக்குள் அழைத்துச் சென்றாள்.

கதைசொல்லி 2: சுரங்க நடைபாதைக்குள் தான் பார்த்த பயங்கரமானவர்கள் மற்றும் பேய்களின் கண்கவர் காட்சிகளை தாத்தாவிடம் விவரித்தாள்.

தாத்தா: என்ன நடக்குது அர்ச்சனா? என்னால எதையும் பார்க்கவே முடியல?

அர்ச்சனா: தாத்தா! பேய்களெல்லாம் பேய் நடனம் ஆடிக்கிட்டு இருக்கு. சில பேய்கள் ரொம்ப பெரிதாகவும், சில பேய்கள் ரொம்ப சிறியதாகவும் இருக்கு, பேய்களுக்கு எல்லாம் எந்த வண்ணமும் இல்லை, நீங்க இருட்டுல மட்டும்தான் அவற்றைப் பார்க்க முடியும்.

தாத்தா: ஓ அப்படியா? வேற என்னென்ன இருக்கு?

அர்ச்சனா: அப்புறம் பெரிய கண்களோடு, வித்தியாசமான முகத்தோடு நிறைய பயங்கரமானவங்க இருக்காங்க. உங்களால பார்க்க முடியுதா, தாத்தா?

தாத்தா: (மூடிய கண்களுடன்) ஆமா, ஆமா அர்ச்சனா. என்னால எல்லாமே பார்க்க முடியுது.

(இசைக்கோர்வை 6 ஒலிக்கிறது. விளக்குகள் மங்குகின்றன நிழலைக் கூட்டிக் குறைப்பதன் மூலம் பேய் நடனத்தைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக விசித்திரமான நிழல் நடனம் தொடங்குகிறது. அர்ச்சனாவும் தாத்தாவும் பார்த்துக்கொண்டே அதில் கலந்துகொள்கிறார்கள். இசை மெதுவாகக் குறைகிறது. நடனம் ஆடுபவர்களுடன் தாத்தாவும் அர்ச்சனாவும் மேடையில் இருந்து வெளியேறுகிறார்கள். இரண்டு கதைசொல்லிகளும் மேடைக்கு கீழே நடுவில் வருகிறார்கள்.)

கதைசொல்லி 1: அர்ச்சனா கவனமாக தாத்தாவை வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். அர்ச்சனாவுக்கு சுரங்க நடைபாதையில் செல்ல இனிமேல் பயமில்லை என்பதும் எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. ஆனால், அதனால் எல்லாம், தாத்தாவும் அர்ச்சனாவும் தங்கள் மாயாஜாலப் பயணத்தை நிறுத்தப்போவதில்லை.

கதைசொல்லி 2: தெருவில் சிறுவர்கள் சுழன்று ஆடிக் கொண்டிருப்பதையோ சூப்பர் ஹீரோக்கள் போல பறந்து கொண்டிருப்பதையோ நீங்கள் எப்போதாவது

பார்த்தால் அவர்கள் யாரோடு என்ன கதைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்துவிடும். அவை கண்டிப்பாக அவர்களின் பிரியமான தாத்தா பாட்டியோடு சேர்ந்து உருவாக்கிய கதைகளாகத்தான் இருக்கும்!

(இசைக்கோர்வை 7 ஒலிக்கத் தொடங்குகிறது. தாத்தா, பாட்டிக்கான பாடல் இசையோடு பாடப்படுகிறது. எல்லா நடிகர்களும் வரிசையாக மேடையில் வந்து நிற்கிறார்கள். திரை விழுகிறது.)

இசைக்கோர்வை பட்டியல்:

இசைக்கோர்வை 1: இனிமையான வாத்திய இசை. ஒவ்வொரு காட்சியின் ஆரம்பத்திலும் இதே இசைக்கோர்வை தொடங்கி திரும்பத் திரும்ப ஒலிக்கவேண்டும்.

இசைக்கோர்வை 2: இது ஒரு பாலே நடனம். மெதுவான அசைவுகள், கால்நுனியில் ஆடுவது, கைகளை வீசி, சுற்றிச் சுழன்று ஆடும் நடனம் இது. இதற்கு பியானோ இசைதான் உகந்தது.

இசைக்கோர்வை 3: இது கோமாளிகள், ஜிம்னாஸ்டிக் கலைஞர்கள், கயிற்றில் ஆடுபவர்கள் எல்லாம் உள்ள சர்க்கஸ். இதன் இசை திருவிழா இசை மாதிரி, வேகமாக இருக்கவேண்டும்.

இசைக்கோர்வை 4: இது ராஜா ராணிக்கள் ஆடும் பால்ரூம் நடனம். அதற்கு பயன்படுத்தப்படும் வால்ட்ஸ் இசையை பயன்படுத்தலாம். இதில் செல்லோதான் முக்கியமான வாத்தியம்.

இசைக்கோர்வை 5: இந்த நடனத்தில் எல்.ஈ.டி விளக்குகள், ஒளிரும் ஆடைகள், ரோபோ போன்ற இயந்திர, ஹிப்ஹாப் நடன அசைவுகள் எல்லாம் இருக்கவேண்டும். இசையும் எலக்ட்ரானிக் டிஸ்கோ இசையாக இருக்கவேண்டும்.

இசைக்கோர்வை 6: இது ஒரு நிழல் நடனம். நடனக்கலைஞர்கள் ஒரு திரைக்குப் பின்னே நின்றபடி, அவர்களுக்குப் பின்னே வெளிச்சம் இருக்குமாறு ஆடுவார்கள். நிறைய தாள வாத்தியங்கள் உள்ள இசையாக இருக்கலாம்.

இசைக்கோர்வை 7: திரை விழும்போது எல்லோரும் மேடைக்கு வரும்போது ஒலிக்கும் கடைசி இசை இது குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து பாடுவதாக இருக்கலாம்.