ஆன்டி பிரகாஷுக்கு எட்டு வயதாகிறது. ஆனால், பத்தாம் வகுப்பில் படிக்கிறான்.
அவனுடைய பள்ளியில் மற்ற எல்லாரையும்விட ஆன்டிக்கு மூளைத்திறன் அதிகம். எல்லாரையும்விட என்றால், சக மாணவர்களை விட, ஆசிரியர்களை விட, பள்ளி முதல்வரையும்விட அறிவாளி அவன்!
ஆன்டியின் சிறப்பான அறிவுக்கு ஒரு நடமாடும், பேசும் சான்று பிட்டு போட்டு. அவனே உருவாக்கிய ஓர் இயந்திர மனிதன்!
எந்தக் கேள்வி கேட்டாலும் பிட்டு போட்டு பதில் சொல்லிவிடுவான்.
“பிட்டு போட்டு, எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன?” “கடல்மட்டத்திலிருந்து சுமார் 8,848 மீட்டர்கள்” என்றான் பிட்டு போட்டு.
“பிட்டு போட்டு, முதலில் கோழி வந்ததா, முட்டை வந்ததா?”
கிட்டத்தட்ட எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிடுவான்.
பிட்டு போட்டுதான் ஆன்டியின் வீட்டுப்பாடங்களைச் செய்வான்.
பிட்டு போட்டுதான் ஆன்டியின் வீட்டு வேலைகளைச் செய்வான்.
“ஆன்டி, உன் அறையை நீதான் சுத்தப்படுத்த வேண்டும்!”
பிட்டு போட்டுதான் ஆன்டியின் ஆய்வக வேலைகளைச் செய்வான்.
“இதையெல்லாம் யார் வாங்கியது? இருமுனையங்கள், மின்தடைகள், மின்தேக்கிகள், திரிதடையங்கள்... மின்சாரக் கட்டணத்தைப் பார்த்தியா, ஆன்டி!”
ஒருமுறை, ஆன்டி தனக்கு பதிலாக பிட்டு போட்டுவை பள்ளிக்கு அனுப்பினான்.
“ஆன்டி பிரகாஷ்!” “உள்ளேன் மிஸ்!”
வகுப்பாசிரியர் பிட்டு போட்டுவைப் பள்ளியிலேயே பிடித்துவைத்துக் கொண்டார். பின்னர் ஆன்டியின் பெற்றோருக்கு கோபமாக குறுஞ்செய்தி அனுப்பினார்.
“ஆன்டி!”
“அம்மா, எனக்கு பிட்டு போட்டு வேண்டும். அவன் இல்லாமல் ஒருமாதிரி இருக்கிறது! தயவுசெய்து என் வகுப்பாசிரியருக்கு ஒரு கடிதம் எழுதுங்கள்” என்று அம்மாவிடம் கேட்டான் ஆன்டி.
“அந்த இயந்திர மனிதனால்தான் நீ கெட்டுப்போகிறாய். நான் எழுதமாட்டேன்!”
“அப்பா, தயவுசெய்து நீங்களாவது ஒரு கடிதம் எழுதிக்கொடுங்கள்!”
“எழுதி மின்சாரக் கட்டணத்தை எகிறவைக்கவா? நான் கண்டிப்பாக எழுதமாட்டேன்!”
அன்று இரவு, ஆன்டி பள்ளிக்குள் ஏறிக் குதித்தான்.
அங்கே அவன் கண்டுபிடித்தது...
ஒரு இருமுனையம்
ஒரு தொகுப்புச் சுற்று
ஒரு திரிதடையம்
பிட்டு போட்டுவின் உதிரிபாகங்களைப் பின்தொடர்ந்து கணினி ஆய்வகத்தைச் சென்றடைந்தான் ஆன்டி.
‘பிட்டு போட்டு உடைந்து விழுந்து கொண்டிருக்கிறானே! நான் அவனுக்கு அளவுக்கதிகமாக வேலை கொடுத்துவிட்டேனோ? பாவம் பிட்டு போட்டு! எங்கே இருக்கிறானோ?’ ‘கணினி ஆய்வகத்தில் இருக்கிறாயா? உன் உதிரிபாகங்கள் என்னிடம்தான் இருக்கின்றன.’
ஆய்வக அறை பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்தான் ஆன்டி. சரக் சரக் யாரோ வருகிறார்கள்!
ஆன்டி ஒரு தூணுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டான். பள்ளிக் காவலாளர் கணினி ஆய்வகத்தைக் கடந்து சென்றார். இப்போது ஆன்டி என்ன செய்வான்? பிட்டு போட்டுவுடைய உதிரிபாகங்களை அவனிடம் எப்படித் தருவான்?
“ஏய், பிட்டு போட்டு” என்று கிசுகிசுத்தான் ஆன்டி.
பிட்டு போட்டு மிகவும் வலுவிழந்திருந்தான். அவனால் நடக்கவோ பேசவோ முடியவில்லை.
ஆன்டி இருமுனையம், தொகுப்புச் சுற்று மற்றும் திரிதடையங்களை ஒரு பையில் போட்டு சாளரத்தின் வழியாக உள்ளே தள்ளினான்.
அந்தப் பாகங்களை வைத்து பிட்டு போட்டு தன்னைத்தானே சரிசெய்து கொண்டான். பின்னர் அங்கிருந்து தவழ்ந்து ஒரு மூலைக்கு வந்தான்.
“எப்படி இருக்கிறாய், பிட்டு போட்டு? ஒன்றும் பிரச்சினையில்லையே?” என்று கேட்டான் ஆன்டி. “நான் என்னுடைய மின்கலத்துக்கு மின்னேற்றுகிறேன், ஆன்டுஉஉஉஉஉ...” “ம்ம்ம்...சமத்து! ஆனால், என்னை ஆன்டுஉஉஉஉஉ என்று கூப்பிடாதே!” “சரி, ஆன்டுஉஉஉஉஉ...”
மறுநாள் காலை ஆன்டி, வகுப்பாசிரியரிடம் தன் அம்மா எழுதிய ஒரு கடிதத்தைக் கொடுத்தான்.
மதிப்பிற்குரிய வகுப்பாசிரியருக்கு,
உங்கள் வகுப்பில் படிக்கும் என் மகன் ஆன்டி பிரகாஷ் தன்னுடைய வேலைகள் அனைத்தையும் இயந்திர மனிதனின் உதவியில்லாமல் செய்வதாக வாக்களித்திருக்கிறான். தயவுசெய்து அவனுடைய இயந்திர மனிதனை அவனிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்.
நன்றி, தங்கள் உண்மையுள்ள, ஆன்டியின் அம்மா
பிகு: இந்தக் கடிதத்தை எழுதியது இன்னோர் இயந்திர மனிதனோ, ஆன்டியோ இல்லை. ஆன்டியின் அம்மாதான் எழுதியிருக்கிறேன்.
அன்று மாலை, பிட்டு போட்டுவை ஆன்டியுடன் வீட்டுக்கு அனுப்பினார்கள்.
ஆன்டி, தன் வேலையைத் தானே செய்தான்!
ஆய்வக வேலைகளையும் செய்தான்.
வீட்டுப் பாடங்களையும் தானே செய்தான்.
ஆனால், எல்லா முறையும் அல்ல.
பிட்டு போட்டு என்னும் இயந்திர மனிதன் நான்கு அடிப்படைப் பகுதிகளால் ஆனவன்:
1. மின்சார இணைப்பு
இயந்திர மனிதர்கள் இயங்குவதற்கு மின்சாரம் தேவை. பிட்டு போட்டுவுக்குள் திரும்பத்திரும்ப மின்னேற்றக்கூடிய ஒரு மின்கலன் உள்ளது. வெளிப்பகுதியில் சூரிய ஆற்றலில் இயங்கும் மின்கலன்கள் உள்ளன. இருமுனையங்கள், மின்தடைகள் மற்றும் மின்தேக்கிகள் தேவைக்கேற்ப மின்னாற்றலைக் கட்டுப்படுத்துகின்றன.
2. முனைப்பிகள்
மின்சாரத்தைப் பயன்படுத்தி இயந்திர மனிதன் நகர்வதற்கு உதவும் மோட்டார்களை முனைப்பிகள்என்கிறோம். பெரிய மோட்டார்களின் உதவியுடன் பிட்டு போட்டு ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்கிறான். சிறிய மோட்டார்களின் உதவியுடன் பிட்டு போட்டு தன்னுடைய தலை, கை, கால்களை நகர்த்துகிறான்.
3. உணரிகள்
இயந்திர மனிதர்கள் காண்பதற்கும் கேட்பதற்கும் உணரிகள் உதவுகின்றன. பிட்டு போட்டுவுடைய உணரிகளான கேமராக்களும் ஒலிவாங்கிகளும் அவனுடைய கண்களாக, காதுகளாகச் செயல்படுகின்றன.
4. கட்டுப்படுத்தி
கட்டுப்படுத்திதான் இயந்திர மனிதனுடைய மூளை. அது உணரிகளிடமிருந்து வருகிற தகவலைப் புரிந்துகொள்கிறது. அதற்குப் பதிலாக என்ன செய்யவேண்டும் என்று முனைப்பிகளுக்குச் சொல்கிறது. நம்முடைய கட்டளைகளைப் பின்பற்றும்படி இதற்கு நிரலெழுதலாம். கட்டுப்படுத்தி என்பது பொதுவாக தொகுப்புச் சுற்றுகளால்(ICs) ஆனது.