boink marmam

பொய்ங்க் மர்மம்

அமனுக்கு அந்த ‘பொய்ங்க்! பொய்ங்க்! பொய்ங்க்!’ சப்தம் நன்றாகக் கேட்டது! இந்த பொய்ங்க் சப்தம் என்ன? ஜெய்ப்பூரில், ஜந்தர் மந்தரில் நடை பெரும் இந்தக் கதையை சுத்தமாக...மன்னிக்கவும், சத்தமாக படித்து... பொய்ங்க் மர்மத்தைக் கண்டுபிடியுங்கள்.

- Anitha Ramkumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அமனுக்கு அந்த ‘பொய்ங்க்! பொய்ங்க்! பொய்ங்க்!’ சப்தம் நன்றாகக் கேட்டது! அமனும், டாங்கில் இருக்கும் அவன் பள்ளி நண்பர்களும் ஜந்தர் மந்தர்க்குச் சுற்றுலா வந்திருந்தார்கள். ஜந்தர் மந்தரில் பல விதமான வானியல் அளவு பார்க்கும் கருவிகள் ராஜா சவாய் ஜெய் சிங்கால் கி.பி 1738-ல் கட்டப்பட்டது. கிரகங்கள் வானத்தில் எப்படி நகருகின்றன என்று ஆராய்ச்சி செய்ய இந்தக் கருவிகள் உபயோகப்படுத்தப்பட்டன.

அவன் ஜெய்ப்பூரில், ஜந்தர் மந்தரில், உலகின் மிகப் பெரிய சூரிய கடிகாரமான சம்ராத் எந்திரத்தின் முன், அவன் தங்கை ரசியாவுடன் நின்று கொண்டிருந்தான். ரசியாவுக்கருகில் அவன் இது வரை கண்டிராத ஒரு வித்தியாசமான, சிறிய வளைவான ஜந்து மிதந்து கொண்டு இருந்தது. அந்த ஜந்துவில், கடிகாரம் போல எண்கள் மற்றும் முட்கள் இருந்தன. அந்த முள் வேகமாக ஆடிக் கொண்டும் ‘பொய்ங்க்! பொய்ங்க்! பொய்ங்க்!’ என்று சப்தம் செய்து கொண்டும் இருந்தது.

"ரசியா! சீ! மூக்கிலிருந்து விரலை எடு. அந்தச் சப்தத்தை கவனி" என்று அவன் தங்கையிடம் கூறினான்.

ரசியாவோ அவன் கூறியதை கொஞ்சம் கூட கேட்கவில்லை. தான் உண்டு, தன் விரல் உண்டு, அந்த விரலால் தன் மூக்கைக் குடைவது உண்டு என்று இருந்தாள்.

‘பொய்ங்க்! பொய்ங்க்! பொய்ங்க்! பொய்ங்க்க்க்க்க்க்க்க்க்!’

அமன் அவன் கண்களுக்கு முன்னால் மிதந்து கொண்டிருந்த கருநீல நிற ஜந்துவை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அதை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று அவன் துடித்துக் கொண்டிருந்தான்.

ஆனால் அந்த ஜந்துவோ ‘விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று பறந்து சக்கிர எந்திரத்தைச் சுற்றி உள்ள புல்வெளியைத் தாண்டி, ஜெய் பிரகாச எந்திரத்தைச் சுற்றி கொண்டு, புதிதாக வண்ணம் பூசப்பட்ட துருவ எந்திரத்துக்கு மேலே... அய்யய்யோ!

அந்த ஜந்து இப்பொழுது 5ஆம் வகுப்பிலேயே மிகவும் முரடர்களான அந்த நான்கு மாணவர்களின் தலைக்கு மேலே பறந்து கொண்டிருந்தது.

அந்த முரட்டு மாணவர்கள் நான்கு பேரும் சம்ராத் எந்திரத்தின் சுவரின் மேலே யாரால் எச்சில் துப்ப முடியும் என்று போட்டி போட்டுக் கொண்டிருந்திருந்தார்கள்.

அமனுக்கு அந்த நான்கு மாணவர்களிடமும் மிகவும் பயம் உண்டு. மற்ற நாட்களில் அவர்களைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்வான். ஆனால் இன்று அவன் கவனம் முழுவதும் அந்த கருநீல நிற ஜந்துவின் மேலேயே இருந்தது. தன் பயத்தை மறந்து அவர்கள் முன்னால் குதித்து குதித்து அந்த ஜந்துவை பிடிக்க முயற்சி செய்தான்.

அமன் தங்கள் முன்னால் குதிப்பது மட்டும் தான் அந்த முரட்டு மாணவர்களுக்குத் தெரிந்தது. அவர்கள் சத்தமாக சிரித்தார்கள்.

"அய்யோ. இந்த நான்கு பேரையும் சும்மா இருக்கச் சொல்லு. இவர்களைத் துப்ப வேண்டாம் என்று சொல்லு. அய்யோ, இவர்கள் எச்சில் துப்பினால் என் கண்களில் ஒரே தலை வலி வருதே," என்று வினோதமான குரல் ஒன்று கேட்டது.

அமன் கொஞ்சம் கூட யோசிக்காமல், "நிறுத்துங்கடா. சிரிக்காதீங்கடா. துப்பாதீங்கடா. அய்யோ என் கண்ணில் ஒரே தலை வலி வருதே," என்று கத்தி விட்டான்.

எல்லாரும் அமனைக் கண் கொட்டாமல் பார்த்தார்கள். புதிதாகப் பள்ளியில் சேர்ந்திருந்த பெமா குருங் சிரித்துவிட்டாள்.

"அமன் உன் கண்களுக்கு... உன் காதில்..." என்று பெமா பேசி முடிப்பதற்குள் ரசியா அவளை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

அமன் சில நிமிடங்கள் தன்னை மறந்து சுற்றி பார்த்தான். அவனுக்கு கருவிகளை கவனிப்பது, வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சயின்ஸ் ஆராய்ச்சி செய்வது, புதுப் புது மீட்டர்களை பிரித்துப் பார்ப்பது எல்லாம் மிகவும் பிடிக்கும்.

"ஆஹா! ராஜா எவ்வளவு கருவிகளை கண்டு பிடித்திருக்கின்றார்! துருவ நட்சத்திரம் இருப்பதை வைத்து எவ்வளவு கிரக நிலைகளை இந்த ராஜா கண்டு பிடித்திருக்கின்றார்! சூரிய கடிகாரத்தை வைத்து எப்படிச் சரியான நேரத்தைக் கண்டு பிடித்திருக்கின்றார்!" இப்படி அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ‘பொய்ங்க்! பொய்ங்க்! பொய்ங்க்! பொய்ங்க்க்க்க்க்க்க்க்க்!’ என்று மறுபடியும் அந்தச் சப்தம் ஆரம்பித்து விட்டது.

ஒரு பக்கம், "அண்ணா. அண்ணாஆஆ அங்கே பாரேன். அந்த ஆட்கள் செய்யும் அசிங்கத்தை. சே!" என்று ரசியா ஒரு பக்கம் அமனை இழுத்தாள். பெமாவோ முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். ரசியா காட்டிய இடத்தில் மூன்று ஆட்கள் சிறுநீர் கழிக்க தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

சட்டென்று அந்த ‘பொய்ங்க்! பொய்ங்க்! பொய்ங்க்!’ சப்தம் கேட்க ஆரம்பித்து விட்டது.

அதேநேரம், "அய்யோ. நிறுத்து. உடனே நிறுத்து. என் மூக்கில் ஒரே தலை வலி," என்ற சப்தம் கேட்டது. அமனும், "நிறுத்துங்கள். பொது இடத்தில் சிறுநீர், மலம் கழிக்காதீர்கள். இந்த நாற்றத்தால் என் மூக்கில் ஒரே தலை வலி," என்று கத்தினான்.

அந்த மனிதர்கள் ஓட ஆரம்பித்த போது தான் அமன் ஒரு நிலைக்கு வந்தான்.

ஒரு வேளை ராஜா சவாய் ஜெய் சிங்கின் பிசாசு நம்மைப் பிடித்துக் கொண்டதோ என்று அமன் யோசிக்க ஆரம்பித்தான்.

அப்போது, "நான் பிசாசு இல்லை. நான் ஒரு சுத்தர். கிரகம் சுத்தபுரியிலிருந்து பூமியைச் சுற்றி பார்க்க இந்த விண்கலத்தில் வந்திருக்கிறேன். பூமியில் பல இடங்கள் மிக அழகாக இருக்கின்றன. ஆனால் சில இடங்கள் மிக அழுக்காக இருக்கின்றன. அழுக்கான இடங்களால் எனக்கு தலை வலி வருகின்றது. ஒரு இடம் எவ்வளவு அழுக்காக இருக்கின்றதோ அவ்வளவு சத்தமாக என் மீட்டர் பொய்ங்க்! பொய்ங்க்! என்று கத்த ஆரம்பித்து விடும்.

நான் உன் தோளில் சிறிது நேரம் உட்கார்ந்து கொள்ளவா?” என்று சுத்தர் கேட்டார்.

அமனுக்கு என்ன சொல்லுவது என்றே புரியவில்லை.

பிற மாணவர்களுடன் டாங்கில் இருக்கும் தன் பள்ளிக்குத் திரும்பி செல்லப் பேருந்தில் ஏறச் சென்றான். இந்த நேரம் பார்த்து சாலை ஓர கடைக்காரர் அசுத்தமான தண்ணீரை அமனின் பேருந்தின் மேலே கொட்ட, சுத்தரின் மீட்டர் ‘பொய்ங்க்! பொய்ங்க்! பொய்ங்க்! பொய்ங்க்க்க்க்க்க்க்க்க்!’ என்று அடிக்க ஆரம்பித்து விட்டது.

"அய்யோ. என் காது. என் காதில் ஒரே தலை வலி," என்று அலற ஆரம்பித்து விட்டார் சுத்தர்! "ராஜா சவாய் ஜெய் சிங் ஜந்தர் மந்தரைக் கட்டிய போது நான் இங்கு வந்தேன். அப்பொழுது இந்த இடம் எவ்வளவு அழகாக இருந்தது தெரியுமா? இப்பொழுது இவ்வளவு அசுத்தம் செய்து விட்டீர்களே?! நீங்கள் வாழும் இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள கூட உங்களுக்குத் தெரியவில்லையே!" என்று சுத்தர் விடாமல் பேசிக் கொண்டே வந்தார்.

பெமா அமனை உற்றுப் பார்த்தாள். “உனக்கு தலை வலிக்கின்றதா?” என்று அன்பாகக் கேட்டாள்.

“ஆமாம். எனக்கும் ஒரே தலை வலி,” என்று அமன் கூறினான்.

“உனக்கும் என்றால்?... வேறு யாருக்குத் தலை வலிக்கின்றது?"

"ம்ம்ம்ம்ம்... இந்த உயிரினம்... இந்த ஜந்து... அதன் காதில் ஒரே தலை வலி…"

"சுத்தர்! சுத்தரைப் பற்றி தானே கூறுகின்றாய்? சரியாகத் தான் நினைத்தேன். நான் கேங்டாகில் இருந்த போது ஒரு சுத்தரை சந்தித்தேன். அவர் சுத்த-எந்திரத்தைப் பற்றி எனக்குக் கூறினார். அவரைச் சந்தித்த பிறகு தான் நம் நகரத்தை ஏன் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று எனக்குப் புரிந்தது."

ரசியாவிற்கு இந்தச் சுத்த பேச்சு சுத்தமாக ரசிக்கவில்லை! பேருந்தின் உள்ளே ஓட்டுனர் வெற்றிலை எச்சில்லை துப்ப அது காற்றின் வேகத்தில், ஜன்னலுக்கருகில் உட்கார்ந்திருந்த ரசியவின் மேலே தெறித்தது. அவளுக்குக் கோபம் வந்து விட்டது. ‘ஏய்ய்ய்ய்ய்’ என்று கத்திக் கொண்டே கையில் இருந்த சிப்ஸ் பொட்டலத்தை ஓட்டுனர் மீது எறிந்தாள்.

சுத்தர் சும்மாவா இருப்பார்? "அய்யோ. நிறுத்து. உடனே நிறுத்து. என் கையில் ஒரே தலை வலி. பொய்ங்க்! பொய்ங்க்!" என்று சப்தம் போட ஆரம்பித்து விட்டார்.

அமனும், "எச்சில் துப்பாதே. குப்பை போடாதே. என் கையில் ஒரே தலை வலி," என்று கத்தினான். அமனின் ஆசிரியர் ரன்வீர் இதைக் கேட்டு, "அமன். என்ன உளறுகிறாய்? கையில் எப்படி தலை வலி வரும்?" என்று கேட்டார்.

அமன், பயந்து கொண்டே, சுத்தர் அவன் காதில் கிசுகிசுத்ததை சத்தமாகச் சொல்ல ஆரம்பித்தான்.

"ஐயா, எனக்கு ஒரு நண்பனர் இருக்கிறார். அவருக்கு வெற்றிலை எச்சில் துப்பிய சுவர்கள், அழுக்கு தண்ணீர், குப்பை, நாற்றம், பொது இடங்களில் சிறுநீர், மலம், அழுக்கான இடங்கள்... இதை எல்லாம் பார்த்தால் உடம்பு சரியில்லாமல் போய் விடும். அவருடைய தலைக்கு தலை வலி, கண்களில் தலை வலி, கைகளில் தலை வலி... ஏன் உடம்பில் எல்லா இடத்திலும் தலை வலி வந்து விடும்."

இதைக் கேட்ட மாணவர்கள் எல்லாரும் சிரித்து விட்டார்கள். ரன்வீர் ஆசிரியரும் சிரித்துக் கொண்டே, "போதும் அமன், நிறுத்து," என்று கூறினார்.

ஆனால், அமன் தொடர்ந்து, "நாம் வாழும் இடத்தைச் சுத்தமாக வைத்திருந்தால், என் நண்பரின் மூளைக்குத் தலை வலி வராது. சுத்தமான இடங்களில் வாழ்ந்தால் நாம் சந்தோஷமாக இருப்போம்," என்று கூறி முடித்தான்.

ஆசிரியர் ரன்வீரும், "மிகச் சரியாக சொன்னாய் அமன்! நீ ஒரு அசுத்தம்-அளவு-மீட்டர் கண்டு பிடித்து விட்டால், உன் நண்பருக்கும் மட்டும் இல்லை, எல்லாருக்கும் வசதியாக

ஒரு பொய்ங்க்! கூடக் கேட்கவில்லை. "என்ன அற்புதமான யோசனை! இந்த அற்புதமான யோசனை எனக்கு நிறையசக்தியை கொடுக்கின்றது. நான் ஒரே தாவில் என் உலகத்திற்குப் பறந்து செல்லப் போகின்றேன். டாட்டா," என்று சொல்லிவிட்டு சுத்தர் ‘விர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று பறந்து சென்று விட்டார்.

சுத்தர் கூறுகின்றார்:

* எச்சிலில் உள்ள என்சைம் செரிமானத்திற்கும், நம் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. எச்சில் நம் உடலில் உள்ள வரை தான் அது நன்மை தரும். பொது இடங்களில் எச்சில் துப்பும் போது நோய்க் கிருமிகள் அதிலிருந்து பரவும். காச நோய் பரவுவதற்கு பொது இடங்களில் எச்சில் துப்புவது ஒரு முக்கிய காரணம். பாண், வெற்றிலை, குட்கா மென்று பொது இடங்களில் துப்பினால் பார்க்க மிக அசிங்கமாக இருக்கும். மூக்குச் சிந்துதல், எச்சில் துப்புதல் போன்ற காரியங்களை அவர் அவர் குளியலறையில் செய்ய வேண்டும். துப்பிய பிறகு சிறிது தண்ணீர் விட்டு எச்சிலை அலம்ப வேண்டும்.

Ž

* அசுத்தமான நீர் பொது இடங்களில் தேங்கி நின்றால் அதில் கொசு பெருகும். கழிவு நீரைச் சாக்கடையில் மட்டுமே கொட்ட வேண்டும்.

* பிளாஸ்டிக் பைகள் மற்றும் மக்காத குப்பைகள் திறந்த சாக்கடைகளை அடைத்துக் கொள்ளும். இதனால் சாக்கடைத் தேக்கம் உண்டாகும். தேங்கிய சாக்கடை நீர் கீழே வழிந்து குடி நீரைப் பாதிக்க வாய்ப்பு உண்டு. பல விதமான நோய்கள் பரவவும் வாய்ப்பு உண்டு.

Ž* வீட்டை விட்டுக் கிளம்பும் முன் வீட்டுக் கழிப்பறையில் சிறுநீர்/மலம் கழிக்க வேண்டும். பொது இடங்களில் சிறுநீர்/மலம் கழித்தால் நோய்க் கிருமிகள் அதிலிருந்து பரவும். வயிற்றுப்போக்கு, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவும்.