bommakka seitha bommai

பொம்மக்கா செய்த பொம்மை

இந்தியாவின் கைவினைப் பொம்மைகளைச் சிறப்பிக்க எழுதப்பட்ட அழகான அடுக்குக் கதை இது. இந்த கதையைப் படிக்கப் படிக்க, ஒரு சிறிய களிமண் உருண்டையிலிருந்து தமிழ்நாட்டின் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உருவாவதைப் பார்ப்போம். மீண்டும் மீண்டும் வரும் கதை வரிகள் குழந்தைகளைக் கூடவே பாடத் தூண்டும்! கண்ணைக் கவரும் ஓவியங்கள் இந்தக் கதையை முழுமையாக்குவதைக் காணுங்கள்!

- Anitha Ramkumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நான் ஒரு பொம்மை தலையாட்டி பொம்மை வெகுகாலம் முன்னே பொம்மக்கா செய்த

அழகான பொம்மை!

இதோ அந்தக் களிமண், மிருதுவான களிமண்! ஒரு நாள் பொம்மக்கா

என்னை உருவாக்க

அள்ளிய களிமண்!

இதோ அந்தக் கைகள், மென்மையான கைகள்! ஒரு நாள் பொம்மக்கா என்னை உருவாக்க அள்ளிய களிமண்ணை பிசைந்த கைகள்! நான் ஒரு பொம்மை தலையாட்டி பொம்மை வெகு காலம் முன்னே

பொம்மக்கா செய்த

அழகான பொம்மை!

இதோ அந்தக் கருவிகள், எளிமையான கருவிகள்! அச்சிலிட்ட என்னை செதுக்கிய கருவிகள்! ஒரு நாள் பொம்மக்கா என்னை உருவாக்க அள்ளிய களிமண்ணை பிசைந்த கைகளில் சீராக்கிய கருவிகள்!

நான் ஒரு பொம்மை தலையாட்டி பொம்மை வெகு காலம் முன்னே

பொம்மக்கா செய்த

அழகான பொம்மை!

இதோ அந்த சூரியன், வானில் உள்ள சூரியன்! ஒரு நாள் பொம்மக்கா என்னை உருவாக்க அள்ளிய களிமண்ணை பிசைந்த கைகளில் அச்சிலிட்ட என்னை செதுக்கிய கருவிகளை பார்த்து நின்ற சூரியன்!

நான் ஒரு பொம்மை தலையாட்டி பொம்மை வெகு காலம் முன்னே

பொம்மக்கா செய்த

அழகான பொம்மை!

இதோ அந்தத் தூரிகைகள், மூங்கில் இழைத் தூரிகைகள்! பல வண்ணக் கலவைகளில், மூழ்கிய தூரிகைகள்! ஒரு நாள் பொம்மக்கா என்னை உருவாக்க அள்ளிய களிமண்ணை பிசைந்த கைகளில்

அச்சிலிட்ட என்னை

செதுக்கிய கருவிகளைப்

பார்த்து நின்ற சூரியன்

உலர்த்திய வண்ணங்களை

என் மேல் பூசிய தூரிகைகள்!

நான் ஒரு பொம்மை

தலையாட்டி பொம்மை

வெகு காலம் முன்னே

பொம்மக்கா செய்த

அழகான பொம்மை!

இதோ அந்தச் சந்தை,

வாரச் சந்தை! சுட்டிப் பெண் ஒருத்தி

துள்ளிக் கொண்டு

பார்க்க வந்த சந்தை!

மெல்லிய சிரிப்புடன்

மூங்கில் கூடையில்

நின்றிருந்த என்னை

எடுத்துச் செல்ல

யார் வருவார் என்று

காத்திருந்த சந்தை!

மகிழ்வோடு சுட்டிப் பெண்

விளையாட என்னை வீட்டிற்கு கொண்டு சென்ற சந்தை!

இதோ அந்தப் படிகள், அடுக்கிய படிகள்! நீண்ட காலம் வாழ

பாசமான வீட்டை

எதிர்பார்த்து நின்று

மெல்லிய சிரிப்புடன்

மூங்கில் கூடையில்

நான் காத்திருந்த சந்தைக்கு

துள்ளி வந்து என்னைக்

கொண்டு சென்ற

சுட்டிப் பெண்ணின் வீட்டில்

அழகிய மூலையில் இருக்கும்

ஏழு கொலுப் படிகள்!

நானே அந்தப் பொம்மை, தலையாட்டி பொம்மை அந்த சுட்டிப் பெண் வீட்டில் வருடா வருடம்

பொம்மைக் கொலுவை

அலங்கரிக்கும் பொம்மை!

மெல்லிய பல, பருத்தி சேலைகளில்மெத்தென சுருட்டி, சீதனப் பெட்டியில்பத்திரப் படுத்தி, அடுத்தடுத்த மகளுக்கு கொடுக்க

எடுத்து வைத்த பொம்மை நான்!

நான்தான் அந்தப் பொம்மை! பரிசாக வந்த பொம்மை! பளபளக்கும் சட்டையுடன், பட்டுப் பாவாடை கட்டி, இடுப்பை அசைத்து

மெல்லச் சுழன்று

தலையை அழகாய் ஆட்டி

உன்னை அழைக்கும்

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை!

நான் அந்தப் பொம்மை ஆடுகின்ற பொம்மை வெகு காலம் முன்னே

பொம்மக்கா செய்த

அழகான பொம்மை!