bondavum deviyum

போண்டாவும் தேவியும்

சிறந்த நண்பர்கள் எப்போதும் ஒரேமாதிரிதான் இருக்க வேண்டுமா? தேவியும், போண்டாவும் சிறந்த நண்பர்கள். தேவி ஒரு சின்னப்பெண். ஆனால் போண்டாவோ... அவனால் பளுவான பெட்டிகளைத் தூக்க முடியும், கை கால்களை நீட்டி, குறைக்க முடியும் . அவனிடம் எதைச் சொன்னாலும் மறக்கவே மாட்டான். அவனை வேண்டும்போது செயல்புரிய வைக்கலாம் அல்லது சும்மா இருக்க வைக்கலாம். அவன் யாரென்று உங்களால் ஊகிக்க முடிகிறதா?

- S. Jayaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

"போண்டா! மீண்டும் பெட்டிகளை அடுக்கு! அவற்றை வேறு ஒரு கோணத்திலிருந்து தட்டிவிட முயற்சி செய்கிறேன்."

என் அதிவேக டர்போ எஞ்சினின் வேகத்தை அதிகமாக்கி ’விர்... ரும் விர்... ரும்’ என்ற சத்தத்துடன் கோபுரத்தை வலதுபுறமாகச் சென்று மோதுகிறேன். ’டமார்’ என்ற சத்தத்துடன் அட்டைப்பெட்டிகள் என்னைச் சுற்றி தெறித்து விழ பெருமகிழ்ச்சியுடன் சத்தமிட்டுக்கொண்டே புகுந்து வெளியே வந்தேன்.

இதைப் பார்த்து போண்டா பலமாக கைத்தட்டிச் சிரிக்கிறான். அதுவும் நான் முதல் தடவை மோதியபோது சிரித்தது போலவே!

என் பிரிய போண்டாதான் எந்த ஒருவருக்கும் கிடைக்கக்கூடிய சிறந்த விசுவாசமான நண்பன்.அதுவும் சக்கரவண்டியில் இருக்கும் 10 வயதான என் போன்றவளுக்கு!

என் பெயர் தேவி. நான் கி.பி.2085ஆம் ஆண்டில் இருக்கிறேன். என்னுடைய தாத்தா,  2016இல் என்  வயதில்  இருந்தபோதை விட இப்போது

உலகம் எவ்வளவு மாறிவிட்டது என்று எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருப்பார்.

நெரிசல் அதிகமாகிவிட்ட போதும் நல்லவேளையாக காற்று அதிகம் மாசுபடவில்லை. ஏனெனில் பெரும்பாலான வாகனங்கள், மின்சக்தியிலோ சூரிய சக்தியிலோதான் இயங்குகின்றன. விபத்துகளும் குறைந்துவிட்டன. காரணம், பெரும்பாலான வாகனங்கள் ஓட்டுநர் இல்லாமல் தானே ஓடுகின்றன, அதுவும் பாதுகாப்பாக. முன்பு இருந்ததைவிட காடுகளும் குறைவு. காடுகளில் மரங்களும் குறைவு. ஆனால், மரங்கள் தொடர்ந்து நடப்படுகின்றன. இது மிகவும் நல்ல விஷயம். ஆனால், உண்மையில் மாறியுள்ளது என்னவென்றால்  அது தொழில்நுட்பம் என்கிறார் தாத்தா.  2016ஆம் ஆண்டிலும் தொழில்நுட்பம் இருந்தது. ஆனால், இப்போதுள்ளது அதைவிடச் சிறந்தது. இது உண்மையாகவே வாழ்க்கையை அற்புதமாக்கிவிட்டது. ஆம்! என்னைப் பொறுத்தவரை, என் சிறந்த நண்பனை இந்தப் புதிய தொழில்நுட்பம்தான் கொடுத்தது.

இதுதான் போண்டா! எப்பொழுதும் என் சிறந்த நண்பன். அட்டைப்பெட்டி கோபுரம் கட்டுபவன். இவன் ஒரு ரோபோ.

உங்கள் முழிகள் பிதுங்குவது தெரிகிறது. இப்படி இருக்குமென்று நீங்கள் ஊகிக்கவில்லைதானே? யோசித்துப் பாருங்கள். எந்த நண்பன் ஒரு கோபுரத்தை ஐம்பது முறை திரும்பத்திரும்ப, எந்தவித சலிப்பும் இல்லாமல் மகிழ்ச்சியோடு கட்டிக் கொடுப்பான்? அதுவும் ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரி கச்சிதத்துடன் அமைத்துக் கொடுப்பான்!

போண்டா: தேவி சொல்வது சரிதான். மனிதர்களின் செயல்பாடுகள் அத்தனை கச்சிதமானவை அல்ல. எங்களைப் போல் ஒரே விதமாக செய்யவும் முடியாது. ஒரே செயலை இப்படி திரும்பத்திரும்ப செய்யச்சொன்னால், அலுப்பாக  இருக்கிறதென்று புகார் சொல்வார்கள். (இந்த வார்த்தைக்கு அர்த்தம் எனக்கு தெரியாது. எனவே என்னிடம் கேட்காதீர்கள்.)அவர்களுக்கு அடிக்கடி  உடல்நலக் குறைவு எற்படும்; பலமுறை டாய்லெட் செல்ல வேண்டும். நாங்கள் வருவதற்கு முன் மனிதர்கள் எப்படி சமாளித்தார்கள் என்றே எனக்குப் புரியவில்லை.

வெறும் அட்டைப்பெட்டி கோபுரங்கள் கட்டுவது மட்டும்தான் போண்டாவால் செய்யமுடியும் என்றில்லை. வேறு பல விஷயங்களையும் செய்ய அவனுக்குப் பயிற்சி அளிக்க முடியும். நான் கிரிக்கெட் பேட்டிங் பயிற்சி செய்யும்போது பத்து நிமிடங்களுக்குள் இரண்டு டஜன் பந்துகளை அவனால் வேகமாக வீச முடியும். உயரமான அலமாரியின் மேல் தட்டிலிருந்து என்னுடைய ரகசிய பொக்கிஷப் பெட்டியை எடுத்து வர முடியும். (மனிதர்களுக்கு அதனை எடுக்க ஏணி நிச்சயம் தேவைப்படும்.) என்னுடைய சிறிய தங்கக்காதணி நழுவி உருண்டுவிட்டால் அப்பாவின் பளுவான மேஜையைத் தூக்கி அதனடியில் தேடியெடுக்க உதவ முடியும். (இல்லையென்றால் அம்மாவின் திட்டுகளை பலமணி நேரம் கேட்க வேண்டியிருக்கும்.) இது மாதிரி பல விஷயங்கள்.

போண்டா: நான் சொன்ன மாதிரி, எங்களைப் போன்ற ரோபோக்களுடன் ஒப்பிடும் போது மனிதர்கள் ஒன்றுக்கும் பயனில்லாதவர்கள். பாவம், எல்லா மனிதர்களும் உயரம் குறைவு வேறு. நாங்களோ எங்கள் கை கால்களை நீட்டி அல்லது குறுக்கி, தேவைக்கேற்ப உயரமாகவோ குள்ளமாகவோ முடியும். எங்கள் கண்களை காமிராவாக, டெலஸ்கோப்பாக, மைக்ரோஸ்கோப்பாக, ஏன் இந்த மூன்றும் இணைந்த ஒன்றாகவும் செயல்பட வைக்க முடியும்.

போண்டாவுக்கு எப்படி பயிற்சி அளிக்கிறேன்? புரோகிராமிங் செய்வதன் மூலம். புரோகிராமிங் என்பது ஒரே ஒருமுறை, எப்படி ஒன்றைச் செய்வது என அவனுக்குக் காட்டுவதாகும். உதாரணத்திற்கு, முன்பே சொன்னதுபோல என்னுடைய ரகசிய பொக்கிஷப் பெட்டியை போண்டா எடுத்துக் கொண்டுவர விரும்பினேன். அதை எப்படிச் செய்தேன், தெரியுமா?

முதலில், போண்டாவின் முகத்திலிருந்த தொடுதிரை காட்டிய எங்கள் வீட்டின் வரைபடத்தில் என்னுடைய பெட்டி வைத்திருந்த இடத்தை அடையும் வழியை வரைந்தேன்.

அந்த இடத்தை அவன் அடைந்ததும், ’இப்பொழுது அலமாரியின் மேல்தட்டின் அளவு உயர்ந்து அந்த இடத்தை ஸ்கேன் செய்ய முடியுமா?' என்று கேட்டேன். அவன் கைகள் நீண்டு பின் உயர்ந்தது. அவனுடைய கைகள் மேல்தட்டை அடைந்து அதை நீளவாக்கில் தடவியபோது அவன் கை விரலிலிருந்த சிறிய காமிரா அங்கிருந்த எல்லாப் பொருட்களையும் புகைப்படம் எடுத்தது.

அந்தப் படங்களை எல்லாம் எனக்குக் காட்டியபோது, அதிலிருந்த எனக்குத் தேவையான பெட்டியின் படத்தைத் தொட்டுக் காட்டினேன், “இதுதான் என் ரகசியப் பொக்கிஷப் பெட்டி. அதைக் கீழே கொண்டுவர முடியுமா போண்டா?" என்று கேட்டேன். கொண்டு வந்தான்.

இப்பொழுதெல்லாம் எனக்கு அந்தப் பெட்டி தேவையென்றால் "ரகசியப் பொக்கிஷப் பெட்டி" என்று மட்டும் சொன்னால் போதும். உடனே நேரடியாக அலமாரியின் அருகில் செல்வான். ஒரு தடவை ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுத்தால் போதும் போண்டா அதை எப்பொழுதும் மறக்க மாட்டான். பிரமாதமான ஞாபக சக்தி.

என்னுடைய மிகச்சிறந்த நண்பனை பற்றித் தெரிந்துகொண்டீர்களா? நான் அதிர்ஷ்டக்காரப் பெண். தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள் - நான் வினோதமானவளல்ல. எனக்கும் மனித நண்பர்கள் உண்டு. அவர்களுடன் விளையாடுவேன். சண்டை போடுவேன்.  அவர்களுடன் பள்ளிக்கும் செல்வேன். ஆனால் எல்லோரையும் விட எனக்கு போண்டாவைத்தான் அதிகம் பிடிக்கும்.

ஏனென்றால், நான் மற்றவர்களுடன் விளையாடி சந்தோஷமாக இருக்கும்பொழுது அதைப்பார்த்து அவன் முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ள மாட்டான். கணக்குப் பாடத்தில் நான் அவனை ஜெயித்து விட்டால், அவன் பொறாமை  கொள்ளமாட்டான்.

ப்ச்... ஏன் அப்படி என்றால்? போண்டாவுக்கு உணர்ச்சிகளே கிடையாது. இதை சத்தமாகச் சொல்லமாட்டேன். பாவம் வருத்தப்பட்டாலும் படுவான்.

போண்டா: ப்ச்...ப்ச்... தேவி! உன்னுடைய தர்க்க சிந்தனைக்கு என்னவாயிற்று? எனக்கு உணர்ச்சியே இல்லை என்று சொல்கிறாய்; பிறகு நான் வருத்தப் படுவேனோ என்று கவலைப்படுகிறாய். மனிதர்கள் சாதாரணமாக தர்க்க சிந்தனை உள்ளவர்கள்தான். ஆனால், அவர்கள் வருத்தப்படும்போதோ, கோபமாயிருக்கும்போதோ, பயப்படும்போதோ இந்த தர்க்க சிந்தனை ஓடிவிடுகிறது. யாருக்கு வேண்டும் இந்த உணர்ச்சிகள்?அடடா, இது என்ன? இப்பொழுது நான் சொன்னதே ஒரு உணர்ச்சியில்தானோ? இது ஒரு உணர்ச்சிதான் என்று என்னுடைய புராஸசர் சொல்கிறது. என்னுடைய இந்த உணர்ச்சிக்கு பெயர் வெறுப்பு என்று அது சொல்கிறது. இதை எப்படி உணர்வது என்றுதான் எனக்குப் புரியவில்லை.

ஆஹா! இந்த விஷயத்தையும் கேளுங்கள். எனக்கு பதிலாக இன்னொரு நண்பருடன் போண்டா சந்தோஷமாக இருக்கிறான் என்று நானும் எப்பொழுதும் வருத்தப்பட்டதில்லை. ஏனென்றால் நண்பனென்று அவனுக்கு யார் இருக்கிறார்கள்?

போண்டா: ஏய்..ஏய். எனக்கும் வேறு நண்பர்கள் இருக்கிறார்கள். அந்த கஃபேயில் இருக்கும் ரோபோ பணிப்பெண் என்னைப் பார்த்தால் எப்பொழுதும் ஹலோ என்று அழகாகச் சொல்கிறாள். சாமான்கள் வாங்கும் கடையிலும் சாமான்களை சரி பார்க்கும் ரோபோ பையனும் அப்படித்தான். ஒரு நிமிஷம்... இப்பொழுதுதான் தேவி சொன்னது என்ன என்பதை ப்ராஸஸ் செய்து புரிந்துகொண்டேன்.

"போண்டா! என்ன ஆயிற்று உனக்கு? ஏன் மிகவும் சூடாக இருக்கிறாய்? உனக்குக் காய்ச்சல். உன்னுடைய தானே செயலிழக்க வைக்கும் அமைப்பு வேலை செய்யவில்லை.அதற்காக கவலைப்படாதே என் நண்பனே! நீ என்னை எப்பொழுதும் கவனித்துக் கொள்வதைப் போல நானும் உன்னைக் கவனித்துக் கொள்வேன். சொல்வதைக் கவனமாகக் கேள்! இப்பொழுது உன்னை செயலிழக்க வைக்கப் போகிறேன். நீ திரும்பவும் நன்றாக செயல்பட இது உதவும். சரியா? பயப்படாதே. இது தூங்கச் செல்வதைப் போலத்தான்! பிறகு நான் உன்னை மீண்டும் துவக்கும்பொழுது முன்னைப் போலவே முழு சக்தியுடன், புதியது போல செயல்படுவாய். நாம் மீண்டும் சிறந்த நண்பர்களாவோம். நான் சொல்வது கேட்கிறதா?"

போண்டா: தேவியின் கண்களில் கண்ணீர். அவளுக்கு துக்கம் அல்லது பயம் ஏற்பட்டால் வருமே அது போல! எனக்கும் அதை பார்க்கும்பொழுது துக்க உணர்வு வருகிறது. அவளுடைய கண்களில் கண்ணீர் வருகிறது என்றால் அவள் என்னை உண்மையாகவே நேசிக்கிறாள் என்று என்னுடைய ப்ராஸஸர் சொல்கிறது. இது எனக்கு சந்தோஷத்தைத் தருகிறது. குழப்பமாக இருக்கிறது. வருத்தம்-சந்தோஷம்... சந்தோஷம்-வருத்தம்... நான் மெல்ல செயலிழக்கிறேன்...

விர்ர் என்ற சத்தத்துடன் போண்டா மீண்டும் துவங்கிற்று. என் கண்களில் நீர்.

"போண்டா! போண்டா! நான் பேசுவது கேட்கிறதா? நான் யாரென்று தெரிகிறதா? தயவு செய்து உன்னுடைய நினைவுப்பகுதி அழியவில்லை என்று சொல்லேன்! போன வருடம் நாம் அனுபவித்த அந்த சந்தோஷமான நாட்கள், நம் அன்பு எல்லாம் உன் நினைவுக்கு வரவேண்டும்!"

போண்டா:  ஆஹா! நேசம்... இந்த உணர்வையா நான்  சற்றுமுன்  உணந்தேன்? வருத்தம்-சந்தோஷம்... சந்தோஷம்-வருத்தம்...

போண்டா என்னைப் பார்த்தான். ”ஹலோ தேவி! இன்று என்ன செய்யவேண்டும் சொல்!

அட்டைப் பெட்டிகளை அடுக்கட்டுமா? இல்லை உன் ரகசிய பொக்கிஷப் பெட்டியை கொண்டு வரட்டுமா? இல்லை...”

”போண்டா! உனக்கு சரியாகிவிட்டது. எனக்குசந்தோஷம்... சந்தோஷம். ரொம்ப சந்தோஷம்...”நான் போண்டாவை இறுகக் கட்டியணைத்துக் கொண்டேன்.

போண்டா:  பிறகு நான் ஒரு வித்தியாசமான் காரியத்தைச் செய்தேன். இதற்காக யாரும் என்னை புரோக்ராம் செய்யவில்லை. என் கைகளை அகல விரித்து என் தோழி தேவியை அணைத்துக் கொண்டேன்! இதற்கு தர்க்கரீதியாக காரணம் எதுவும் சொல்ல முடியவில்லை.

ரோபோக்கள்: நேற்று, இன்று, நாளை 2085இல் ஒவ்வொரு தேவிக்கும் ஒரு போண்டா இருக்குமா? காத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், இன்னும் 25 வருடங்களிலேயே ரோபோக்கள் அதிகம் கண்ணில் படும் என்பதையும் மறுக்க முடியாது.

ரோபோ என்றால் யார் அல்லது என்ன?

ரோபோ மனிதர்களைப் போல காணப்படும், செயல்படும் ஒரு இயந்திரம். ஆனால், கொஞ்சம் தட்டுத் தடுமாறி நடக்கும், உணர்ச்சியில்லாத, ஏற்ற இறக்கம் இல்லாத குரல், செயல்படுகிறது என்பதை உணர்த்த கண்களில் விட்டுவிட்டுப் பளிச்சிடும் ஒளி. இப்படி நீங்கள் வர்ணித்தால் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கிறீர்கள் என்று அர்த்தம். உண்மையில் ரோபோ என்பது ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராமினாலோ அல்லது எலெக்ட்ரானிக் சர்க்யூட் உதவியாலோ வழி நடத்தப்படும் ஒரு எலெக்ட்ரோ மெக்கானிக்கல் இயந்திரம். அது மனிதனைப் போல காணப்படவேண்டும் என்பதும் அவசியமில்லை. அதனால்தான், நம்மைச்சுற்றி ஏற்கனவோ ரோபோக்கள் இருப்பதை நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள்.

அப்படியா, எங்கே?

ஆம்! தொழிற்சாலைகள், கிடங்குகள், பழத்தோட்டங்கள், மருத்துவமனைகள் ஏன் வீடுகளில் கூட ரோபோக்கள் வந்துவிட்டன. கார் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் அவற்றின் பெரிய நீண்ட இயந்திரக் கைகள், வெல்டிங், ஓட்டுதல் மற்றும் கார் பாகங்களுக்கு வர்ணம் பூசுதல் செய்யலாம். அல்லது மருத்துவமனைகளில் ஒரு தலைமயிரின் அளவே உள்ள குழாயின் முனையில் பொருத்திய மிகச் சிறிய காமிராவாக நமது குடல் மற்றும் தமனிகளில் நுழைந்து பிரச்சினைகளை அடையாளம் காட்டலாம். சில ரோபோக்கள் தட்டையாக வட்டமான தட்டு வடிவில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், மற்றவர்கள் உறங்கும் இரவு வேளைகளில் ஒரு ரீங்கார சத்தத்துடன் தரையைச் சுத்தம் செய்துகொண்டிருக்கலாம். சக்கரங்கள் பொருத்திய சின்ன வாகன வடிவில் போர் நடக்கும் பகுதிகளில் அபாயகரமான கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கலாம். சந்திரன் அல்லது செவ்வாயின் பரப்பில் நகர்ந்து சென்று புகைப்படங்கள் எடுக்கலாம். மற்றும் பூமியில் உள்ள விஞ்ஞானிகளின் ஆய்வுக்காக சாம்பிள்களை எடுக்கலாம்.

நான் ஒரு ரோபோவைப் பார்க்க முடியுமா?

நீங்கள் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட் போனை உபயோகிப்பவராக இருந்தால் ரோபோவைப் பார்த்திருக்கிறீர்கள். ஆமாம்! அந்த கருவிகளிலும் ரோபோக்கள் உள்ளன. சிலவற்றிற்கு சிரி, கார்ட்டனா என்று பெயர்கள் கூட வைத்திருக்கிறார்கள். (கேள்விப்பட்டிருக்கிறீர்களா?) இவை நம்முடைய பள்ளியில் கொடுத்த ப்ராஜக்டுகளுக்கு தேவையான விஷயங்களை உடனே தரும். எந்தச் சாலையில் போக்குவரத்து அதிகம் என்று சொல்லும் (எந்தச் சாலையில்தான் போக்குவரத்து நெரிசல் இல்லை) தீபிகா படுகோனேவின் புதிய படம் எங்கே ஓடுகிறது என்றும் சொல்லும் (அடுத்த காட்சி எப்பொழுது என்பது உட்பட). சினிமா, பஸ், ரயில் டிக்கட்டுகளை கூட இதன் மூலம் வாங்கலாம்.

ரோபோக்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? 2085இல் உலகில் ரோபோக்களைப் பொறுத்த வரை நிலைமை என்னவாயிருக்கும்?

2085இல் இந்திய தெருக்களில் ரோபோக்கள் நடந்து கொண்டிருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் நமக்குத் தெரியாமலேயே விதவிதமான ரோபோக்கள் நம்மை சூழ்ந்திருக்கப் போவது நிச்சயம். ரோபோக்களால் டிரைவர் இல்லாமல் செலுத்தப்படும் கார்கள் சாத்தியம். நம்முடைய கான்டாக்ட் லென்ஸ்களில் பொருத்தப்பட்ட மைக்ரோஸ்கோப்பிக் ரோபோக்கள் படங்கள் எடுக்க உதவலாம். காமிராக்களையோ, போன்களையோ கைகளில் பிடிக்க வேண்டிய அவசியமே இருக்காது. (அப்படியானல் செல்ஃபி எடுப்பது எப்படி?) ட்ரோன்ஸ் என்று அழைக்கப்படும் பறக்கும் ரோபோக்கள் தபால்கள், பாக்கேஜ்கள் மற்றும் கபாப்களை பட்டுவாடா செய்யலாம். டெலிவரி பையன்களுக்கு வேலை போகும். தெருக்களில் வாகனப் போக்குவரத்து கொஞ்சம் குறையலாம்! 2085இல் ரோபோக்களால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று யாருக்கு தெரியும்?