chilbullin vaal

சில்புல்லின் வால்

சில்புல் அணிலுக்கு அதன் வாலைப் பிடிக்கவே இல்லை. இப்போது என்ன செய்வது. பேசாமல் டாக்டர் பாம்போவிடம் சென்று வேறு வாலை மாற்றிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தது. அப்பறம் என்னாச்சு? தெரிந்து கொள்ள கதைக்குள் நுழையலாமா?

- Tamil Madhura

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு மரத்தில் சில்புல் என்ற குறும்புக்கார குட்டி அணில் வசித்து வந்தது. ஒருமுறை இமைப்பதற்குள் அது மரத்தின் மேல் இருக்கும், இரண்டாவது முறை இமைப்பதற்குள் கீழே நிற்கும். சிலசமயம் இரண்டு குட்டிக் கால்களில் நிற்கும். சில சமயங்களில் பறவைகளைத் துரத்திக் கொண்டிருக்கும்.

ஒரு நாள் சில்புல் மரக்கிளையில் அமர்ந்து வாதுமைக் கொட்டையை மென்றுக் கொண்டிருந்தது. திடீரென்று அதன் பார்வை அதன் வால் மீது பட்டது.

"ஹே...! இதெல்லாம் ஒரு வாலா! இப்படி லேசா இருந்தா எப்படி வாலுன்னு ஒண்ணு இருக்கிறது  தெரியும்" என்று சலித்துக் கொண்டது.

"ஹ்ம்ம்... இப்ப இதை எப்படி சரி படுத்தலாம்... " யோசிக்க ஆரம்பித்தது.

நீண்ட நேரம் தனது பிரச்சனையைப் பற்றி யோசித்து ஒரு முடிவுக்கு வந்தது. நான் ஏன் மருத்துவராக இருக்கும் பாம்போ கரடியிடம் போகக் கூடாது.

சில்புல், டாக்டர் பாம்போ பணி புரியும் மருத்துவ மனைக்கு சென்றது.

மருத்துவமனையில் அலமாரி முழுவதும் பல வகையான மிருகங்களின் வால்கள், கால்கள், காதுகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. 'பாம்போ வருவதற்குள் எனக்குப் பொருத்தமான வால் ஒன்றினை நானே தேர்ந்தெடுக்கிறேன்' என்று நினைத்தது  சில்புல். நீண்ட நேரப் பரிசீலனைக்குப் பிறகு ஒரு குரங்கின் வாலைத் தேர்ந்தெடுத்தது.

மருத்துவர் பாம்போ வந்ததும் சில்புல் அவர் மேசைக்கு அருகே சென்று "டாக்டர் பாம்போ தயவு செய்து இந்த குரங்கின் வாலை எனக்குப் பொருத்துகிறீர்களா?" என்று கேட்டது.

தனது மூக்குக் கண்ணாடி வழியே சில்புல்லைப் பார்த்த டாக்டர் பாம்போ "ஏன் சில்புல்? உன் வாலுக்கு என்ன ஆனது?" என்று கேட்டார்.

"எனக்கு இந்த வால் வேண்டாம். வேற நல்ல வால் வேணும்" என்றது சில்புல்.

"குரங்கோட வால் உனக்கு பொருந்தாது சில்புல்" என்று டாக்டர் பாம்போ அறிவுரை சொன்னார்.

"இல்லை டாக்டர். யாரு என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன். நீங்க எனக்கு குரங்கு வாலை வச்சு விடுங்க" அடம் பிடித்தது சில்புல்.

வேறு வழியில்லாமல் "சரி சில்புல் நீ ஆசைப்பட்ட மாதிரியே செய்றேன். ஆனா... இது உனக்கு பெருசா இருக்கும். வேண்டாம்னு சொன்னா கேக்கவா போற..." என்று பெருமூச்சுடன் டாக்டர் பாம்போ சில்புல்லுக்கு குரங்கு வாலைப் பொருத்தி அனுப்பியது.

"வாலுன்னா இதுதான் நிஜமான வால்" என்றபடி சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது சில்புல்.

"இப்ப என்னால உயரமான மரக்கிளைல கூட உக்கார முடியும். அப்பறம் குரங்கு மாதிரியே கிளைகளை வால்ல பிடிச்சுகிட்டு தலைகீழா தொங்க முடியும்" என்றபடி மருத்துவமனையை விட்டுக் கிளம்பியது.

ஆனால்... "கடவுளே! எனக்கு என்னாச்சு? நடக்கக் கூட முடியலையே. என் உடம்பு ஏன் இவ்வளவு பாரமா இருக்கு?"

சில்புல்லுக்குக் கவலையாக இருந்தது. அவ்வளவு எடையுடன் கூடிய வாலை வைத்துக் கொண்டு நடப்பதே சிரமமாக இருந்தது. அதை எப்படியோ தள்ளிக் கொண்டும், இழுத்துக் கொண்டும் தான் வசித்த மரத்திற்கு சென்றது.

'மரத்துல ஏறி கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கணும்' எண்ணிக் கொண்டு மேலே ஏற முயற்சி செய்தது. ஆனால் ஒரு அடி கூட அதனால் ஏற முடியவில்லை. ஒவ்வொரு தடவையும் முயற்சித்த பொழுது கீழே விழுந்து விட்டது. கடைசியில் களைத்து மரத்தின் கீழே அமர்ந்து கொண்டது.

"இந்த வால் சரிபட்டு வராது. வேற வாலை மாத்திக்கலாம்" என்றது சில்புல் அந்த நீண் வாலினைக் கைகளால் பிடிக்க முயற்சி செய்தபடி.

தட்டுத் தடுமாறியபடி டாக்டர் பாம்போவின் மருத்துவமனையை மீண்டும் அடைந்தது.

"ப்ளீஸ் டாக்டர், இந்த வால் எனக்கு ரொம்ப பெருசா இருக்கு. கொஞ்சம் லேசான வாலைப் பொறுத்த முடியுமா" சில்புல் களைத்த குரலில் கேட்டது.

"நான்தான் சொன்னேனே" டாக்டர் பாம்போ சில்புல்லைத் திட்டினார்.

"மன்னிச்சிடுங்க பாம்போ. இந்த முறை பூனையின் வாலை பொருத்திடுங்க" என்று யோசனை சொல்லியது.

டாக்டர் பாம்போவும் குரங்கின் வாலுக்கு பதில் பூனையின் வாலைப் பொருத்தி அனுப்பியது.

"அப்பாடி, இந்த வால் போன வாலை விட லேசா இருக்கு" என்றது சில்புல்.

வால் மாற்றியதால் களைப்படைந்த சில்புல் மரத்திற்கு பின்னால் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது.

விரைவில் அப்படியே தூங்கியும் விட்டது. திடீரென்று ஒரு பலமான குரைக்கும் சத்தம் சில்புல்லை எழுப்பி விட்டது.

"அய்யோ! நாய்கள் என் வாலைப் பாத்துட்டு பூனைன்னு நினைச்சு பிடிக்க வருதே!" கத்தியபடி உயிர் பிழைக்க ஓடியது.

நாய்கள் பின்னால் துரத்தின.

"என்னால இந்த வாலைத் தூக்கிட்டு ஓட முடியலையே! என்னோட சொந்த வால் ஓட வசதியா எவ்வளவு லேசா இருக்கும்" சில்புல் வருந்தியது.

மேலும் கீழும் விழுந்து ஒரு வழியாக டாக்டர் பாம்போவின் மருத்துவமனையை வந்தடைந்தது.

"காப்பாத்துங்க டாக்டர்!" என்று கத்திக் கொண்டே உள்ளே ஓடியது. நாய்கள் வெளியே நின்று குரைத்தன.

"இப்ப என்னாச்சு?" என்றார் பாம்போ.

"நாய்கள் எல்லாம் பூனைன்னு நினைச்சிட்டு என்னைத் துரத்துதுங்க. எனக்கு என்னோட வாலே போதும் டாக்டர். வேற யாரோடதும் வேணாம்" என்றது.

"கடைசியா உனக்கு உண்மை புரிஞ்சுதே!" புன்னகைத்தது பாம்போ. பூனையின் வாலை நீக்கிவிட்டு சில்புல்லின் சொந்த வாலையே பொருத்தி அனுப்பியது.

"அப்பாடி.... " ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி தனது வீட்டை நோக்கி மகிழ்ச்சியாக பாடியபடி  நடந்தது சில்புல்.

"என் வாலுதான் பெஸ்ட்டு

ரொம்ப ரொம்ப லைட்டு!

இப்ப வேகமா ஓடுவேன் டே லைட்டில்

ஆடிப் பாடுவேன் நைட்டில்!"