“ஜேனிஸ், எழுந்திரு!” பாட்டி அழைக்கிறார்.
ஜேனிஸ் படுக்கையில் இருந்து கீழே குதித்தாள்.
இன்றுதான் லியு பாட்டியின் வீட்டில் தங்கியிருக்கும் கடைசி நாள்.
திரும்பி வரும்போது மும்பையில் இருக்கும் தனது குடும்பத்தினருக்கு பரிசுகள் வாங்கி வருவதாக ஜேனிஸ் உறுதியளித்திருந்தாள். ஆனால், இதுவரை அவள் ஒன்றும் வாங்கவில்லை!
“லியு பாட்டி, என்னைக் கடைக்கு அழைத்துச்
செல்கிறீர்களா?” என்று ஜேனிஸ் கேட்டாள்.
லியு பாட்டி கொல்கத்தாவில் டிரெட்டி பஜாரில்
வசிக்கிறார். அந்த இடத்தை ‘சைனா டவுன் ’
என்றும் அழைக்கின்றனர்.
ஜேனிஸும் லியு பாட்டியும் கிளம்பி சைனா டவுனுக்குச் சென்றனர்.
அங்கே குறுக்கும் நெடுக்குமாய் ரிக்ஷாக்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவற்றின் மரச் சக்கரங்கள் ‘கடக் முடக்’ என்று சப்தம் எழுப்பின. அவற்றில் கட்டியிருந்த மணிகள் ‘ஜிங் ஜாங்’ என்று ஒலித்தன. காற்றில் வந்த வாசனை சாப்பிடும் ஆசையைத் தூண்டியது.
முதலில் திரு. லீயின் கடைக்குச் சென்றனர். “லீ அவர்களே! நான் நாளை மும்பையில் உள்ள என் வீட்டுக்குச் செல்கிறேன். நான் என்ன வாங்கிச் செல்லலாம்?”
“இந்த ஊதா பிளம் மிட்டாய்கள் வேண்டுமா?” என்றார் லீ. “ம்ம்ம்ம்! இனிப்பும் புளிப்புமாக இருக்கும் இவை என் சகோதரனுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்றாள் ஜேனிஸ்.
அடுத்ததாக, திருமதி. சென்னின் கடைக்குச் சென்றனர்.
“சென் அவர்களே, நான் நாளை மும்பையில் உள்ள என் வீட்டுக்குச் செல்கிறேன். நான் என்ன வாங்கிச் செல்லலாம்?”
“இந்த கருப்புக் காளான் வேண்டுமா? இதை சூப்பில் போட்டுக் குடித்தால் சளி குணமாகும்.”
“ஓ! பார்ப்பதற்கு இது ஒரு பெரிய கருப்புக் காது போல் இருக்கிறது!” என்றாள் ஜேனிஸ். “என் அம்மாவுக்கு நிச்சயம் பிடிக்கும்.”
பின்னர், திருமதி. வோங் அவர்களின் கடைக்குச் சென்றார்கள். “வோங் அவர்களே,
நான் நாளை மும்பையில் உள்ள என் வீட்டுக்கு திரும்பிப் போகிறேன். நான் எதை வாங்கிச் செல்லட்டும்?” “இந்த அழகான விளக்கைப் பாரேன்!”
“இது குல்மொஹர் பூக்களின் நிறம். என் தந்தைக்கு நிச்சயம் பிடிக்கும்” என்றாள் ஜேனிஸ்.
எல்லோருக்கும் பரிசுகள் வாங்கியாகி விட்டது.
ஜேனிஸுக்கு ஒரே பசி!
பாட்டி லியு, ‘டம்ப்ளிங் சூப்’ மற்றும் ‘பாஸி’ பன்களை வாங்கிக் கொடுத்தார்.
‘ ஸ்ரூ...ப்! ’
“இது ரொம்ப ருசியாக இருக்கிறது” என்று ரசித்து சாப்பிட்டாள் ஜேனிஸ்.
ஜேனிஸும், பாட்டியும் கோவிலுக்குச் சென்றனர். அங்கிருந்து தூபவாசனை வந்தது.
“மக்கள் இறந்த பின்னர், அவர்கள் ஆவிகள் ஆகிவிடுகிறார்கள். பயணம் போகும் முன் அவர்களுடைய ஆசீர்வாதங்களை வேண்டிக் கொள்வோம்” என்றார் லியு பாட்டி.
ஒரு பெரிய அறையில் ஒரு மேஜையில், சிலர் ‘மாஜோங்’ விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். விளையாட்டில் சில்லுகள் ‘க்ளிக் கிளாக்’ என்று ஓசை எழுப்புகின்றன.
“சில்லுகள் எல்லாம் டிராகன்கள், காற்றின் திசை மற்றும் மலர்கள் என்று பலவகையாக இருக்கும்,” என்று பாட்டி விளக்குகிறார்.
“இது பாண்டி விளையாட்டை விட சுவாரஸ்யமாக இருக்கும் போல் தோன்றுகிறதே!” என்றாள் ஜேனிஸ்.
வீட்டுக்குப் போகும் வழியில் செய்தித்தாளைப் படிக்கும் ஒருவரை ஜேனிஸ் பார்த்தாள்.
“இது சீன மொழியிலா உள்ளது?” என்று கேட்கிறாள் ஜேனிஸ்.
“ஆமாம்! இந்தியாவின் ஒரே சீன செய்தித்தாள் இதுதான். இதை நீ கொல்கத்தாவில் மட்டும்தான் காண முடியும்” என்றார் லியு பாட்டி.
வீட்டில், ஜேனிஸ் தான் வாங்கிய அன்பளிப்புகள் அனைத்தையும் எடுத்து வைக்கத் தொடங்குகிறாள்.
“ஜேனிஸ்! நீ எல்லோருக்கும் அன்பளிப்புகளை வாங்கிவிட்டாய். ஆனால் நீ உனக்காக என்ன எடுத்துச் செல்லப் போகிறாய்?” என்று கேட்டார் லியு பாட்டி.
“நமது நினைவுகள் பாட்டி! எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த பரிசு அதுதான்” என்று பாட்டியைக் கட்டிக் கொண்டாள் ஜேனிஸ்.