chuchu maanthuvin mittai jaadi

சூச்சூ மாந்துவின் மிட்டாய் ஜாடி

சூச்சூ மாந்துதான் ப்ரீத் சந்தித்ததிலேயே ரொம்ப அன்பானவர். அவருடன், அவருடைய அன்பும் மறைந்து போய்விட்டதா என்று ப்ரீத் வியக்கிறாள். இழப்பு, சோகம், பரிவு இவற்றைப் பற்றிய ஒரு கதை.

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

“சூச்சூ மாந்து, அங்க பாருங்க!”

ப்ரீத் சுட்டிக் காட்டும் திசையில் பார்த்தார் சூச்சூ மாந்து. அதற்குள் அவரது தட்டில் இருக்கும் சிப்ஸை கடகடவென தின்றுவிட்டாள் ப்ரீத். எப்போதும் இந்த மாதிரி தந்திரங்களுக்கு ஏமாந்துவிடுவார் அவர்!

சூச்சூ என்பது ப்ரீத் அவருக்கு வைத்த செல்லப் பெயர். மாந்து என்றால் கொங்கணி மொழியில் ‘பெரியப்பா’ என்று அர்த்தம்.

சூச்சூ மாந்துதான் ப்ரீத்தின் உலகில் மிகவும் அன்பான நபர். அவளுடைய நெருங்கிய நண்பனும்கூட!

ஒருநாள், சூச்சூ மாந்து ஒரு ஜாடியிலிருந்து கைநிறைய மிட்டாயை அள்ளி தன் படுக்கையறை ஜன்னல் வழியாக கீழே போடுவதைப் பார்த்தாள் ப்ரீத். பின் கீழே குனிந்துகொண்டு சிரிப்பதையும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். தெருவிலிருந்து உற்சாகக் கூச்சல் எழுந்தது!

அந்தத் தெருமுனையில் ஒரு பள்ளி இருக்கிறது. மதிய சாப்பாட்டு மணி அடித்து, பள்ளிக் குழந்தைகள் அவரது வீட்டைக் கடக்கும்போது சூச்சூ மாந்து யாருக்கும் தெரியாமல் ஜன்னல் வழியாக மிட்டாய்களைப் போடுவார்.

சாப்பாட்டு நேரம் முடிந்ததும் சூச்சூ மாந்து தன் பெட்டியைத் தூக்கிக்கொண்டு அலுவலகத்துக்குத் திரும்புவார். விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் அவரை நிமிர்ந்துகூட பார்க்க மாட்டார்கள். வெள்ளை உடையில் செல்லும் இந்த அமைதியான ஒல்லி மனிதர்தான் தினம் அவர்களுக்கு மிட்டாய் போடுகிறார் என அவர்கள் நினைத்திருக்கவே மாட்டார்கள்.

ஒருநாள் சூச்சூ மாந்துவுக்கு வயிற்றில் கடுமையான வலி. மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படும் வழியில், அவர் ப்ரீத்தின் கையை கடைசியாக ஒருமுறை அழுத்திப் பிடித்துக்கொண்டார்…

சில நாட்கள் கழித்து, ப்ரீத், சூச்சூ மாந்துவின் காலி அறையில் அமர்ந்திருந்தாள். அவரது யோகா பாய் தரையில் கிடந்தது. வெகுநாட்களுக்கு முன், ஒருநாள் அவரது அறைக்குள் நுழைந்த போது, நீண்ட ஒல்லிக் கால்கள் மேலே நீட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தது அவளுக்கு ஞாபகம் வந்தது.

“காப்பாத்துங்க! சூச்சூ மாந்து கவுந்துட்டாரு!” என்று ப்ரீத் கத்தினாள்.

அம்மாவும் மாவேயும் அவசரமாக ஓடிவந்து பார்த்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

“அவர் கவுந்து கிடக்கல” என்றார் அம்மா.

“அவர் யோகா செய்றாரு!” என்றார் மாவே.

“கோகா” என்று சொல்லிப் பார்த்தாள் ப்ரீத். சூச்சூ மாந்து பறவைகள் பறக்கத் தயாராவதைப் போல கையை ஊன்றி தன் மொத்த உடலையும் தூக்கியதை கண்கள் விரியப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ப்ரீத் ஒருமுறை கண்ணை மூடித் திறந்தாள். அவள் இதயத்தில் சூச்சூ மாந்துவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

“சூச்சு மாந்து எங்கே? அவரது அன்பு எங்கே?” என்று வியந்தாள் ப்ரீத்.

யோகா பாய்க்கு அடியில் பார்த்தாள். அவரது மேசை டிராயரில் தேடினாள். அவரது அலமாரியைத் திறந்து பார்த்தாள்.

டபக்!

ஒரு வெள்ளை சட்டை ப்ரீத்தின் தலைமேல் விழுந்தது.

சூச்சூ மாந்துவிடம் இரண்டு வெள்ளை சட்டைகளும், இரண்டு வெள்ளை கால்சராய்களும் இருந்தன. அவற்றை ஒவ்வொரு நாளும் மாற்றி மாற்றி அணிவார்.

இப்போது அலமாரியில் ஒரே ஒரு வெள்ளை சட்டையும் கால்சராயும்தான் இருந்தன.

ப்ரீத் கவனமாக சட்டையை மடித்து அலமாரியில் வைத்தாள். அப்போதுதான் அது கண்ணில் பட்டது. சூச்சு மாந்துவின் மிட்டாய் ஜாடி!

சத்தமின்றி ப்ரீத்தின் கண்ணீர்த் துளிகள் அதில் விழுந்தன.

தூரத்தில் மணி அடிக்கும் ஓசை கேட்கிறது. பள்ளியில் மதிய இடைவேளை. விரைவில் குழந்தைகள் சூச்சூ மாந்துவின் அறையைத் தாண்டிச் செல்வார்கள்.

ஆனால் அவர்களுக்கு மிட்டாய் கொடுக்கத்தான் யாருமில்லை.

ஜாடியிலிருந்து கைநிறைய மிட்டாய்களை எடுத்து ஜன்னல் வழியாகப் போட்டாள். பின் ஜன்னலருகே குனிந்து பார்த்து, மகிழ்ச்சியோடு தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.

தெருவிலிருந்து உற்சாகக் கூச்சல் எழுந்தது!

இருக்கிறார்களே! ப்ரீத் துள்ளிக் குதித்தாள்.