சுஸ்கித் அன்று காலை மிகச் சீக்கிரமாகவே எழுந்திருந்தாள். அன்று ஒரு விசேஷமான தினம். அவளுக்குப் பரபரப்பில் தூக்கமே வரவில்லை. படுக்கைக்குப் பக்கத்திலிருந்த ஜன்னல் வழியாக ஆவலுடன் வெளியே பார்த்தாள். லடாக்கில் அது வசந்த காலம்.
ஆப்ரிகாட் மரங்கள் முழுமையாகக் காய்த்துக் குலுங்கியது. அதற்குள்ளேயே இரண்டு ’மேக்பை’ பறவைகள் உண்பதற்கு புழு, பூச்சிகளைத் தேடும் பணியில் மிக சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தன. சுஸ்கித்தின் அமா-லே(அம்மா)யும் எழுந்திருந்து, சமையலறையில் குர் குர் தேநீர் தயாரிக்கும் பணியைத் தொடங்கியிருப்பது தெரிந்தது.
பள்ளிக்கூடம் அவள் வீட்டிலிருந்து அதிக தூரமில்லை. அங்கு செல்வதற்கு, பிரதான சாலை வரை நடக்க வேண்டும். பிரார்த்தனைச் சக்கரத்திற்குச் சற்று முன்னே, இடது பக்கமாகச் சென்று, குறுகிய நீரோடையோடு இணைந்து செல்லும் பாதையில் செல்லவேண்டும். பொப்லார்மரங்களிருக்கும் இடத்தில்,பெரிய பாறைகளின் மீது தாவித்தாவி ஓடையைக் கடக்கவேண்டும்.ஓடையின் அடுத்த பக்கம் சென்றபின்னே, முன்னே தெரியும் சரிவான பாதையில் கொஞ்சம் தூரம் நடந்தால் பள்ளிக்கூடம். சுஸ்கித்தின் ”ஸ்கிட்போ யூல்” கிராமத்துக் குழந்தைகள் எல்லோரும், பள்ளிக்குச் சிரமமின்றி நடந்து செல்கிறார்கள்.
ஆனால் சுஸ்கித்தால் அப்படிமுடியாது. ஏனெனில் அவளுக்குநடக்கமுடியாது.
சுஸ்கித் பிறந்தபோதே அவள் கால்கள் மற்றவர்களுடையதைப்போல் இயங்கவில்லை. முதலில் உள்ளூர் ’அம்சி(வைத்தியர்)யிடமும், பிறகு ’லே’யில் உள்ள மருத்துவரிடமும், சுஸ்கித்தின் தந்தை அவளைக் காண்பித்தார். எந்த மருந்தும் அவளை நடக்கச்செய்ய உதவவில்லை.
முதலில் அவள் தனக்கும் அவள் தம்பி ஸ்டப்தன் மற்றும் உறவினரின் பிள்ளைகளுக்குமிடையே எதுவும் வித்தியாசமாக உணரவில்லை. ஆனால் விரைவில் அவர்கள் எளிதில் செய்யும் வேலைகளைத் தன்னால் செய்யமுடியாதென்று புரிந்துகொண்டாள்.
சுஸ்கித் வருத்தப்படும்போதெல்லாம் “அதனாலென்ன? இது பிரச்சனையேயில்லை” என்று அவளின் ’அபா-லே’ (அப்பா) தேற்றுவார்.
“எல்லோரையும்விட நீ நன்றாகத் தைக்கிறாய், எத்தனை அழகாய்ப் படம் வரைகிறாய்” என்று சொல்லி, அடிக்கடி ’லே’யிலிருந்து கலர் பென்சில்கள் வாங்கித் தருவார்.
தினம் சமையலறையில் அம்மா சமைக்கும்பொழுது, சுஸ்கித் ஜன்னலோரம் உட்கார்ந்து கொண்டு வெளியே காண்பதைப் படமாக வரைவாள்.
அவர்களது வீட்டு மிருகங்களை தினம் காலையில் மேய்ச்சலுக்குஅழைத்துச் செல்வதை அவள் பார்ப்பாள். வீட்டினருகில் ஓடும் நீரோடையில் உள்ள தண்ணீர் நீல நிறமாகத் தெரியும். வீட்டிற்கு விருந்தினர்கள் வரும்பொழுது, சுஸ்கித்தான் முதலில் பார்த்துச் சொல்வாள்.
அங்குமிங்கும் செல்வதற்கு சக்கரங்கள் பொருத்தப்பட்ட நாற்காலியை சுஸ்கித் உபயோகித்தாள். இதைப் பெரியவர்கள் ’சக்கர நாற்காலி’ என்று அழைத்தனர். இந்த நாற்காலியை முன்னால், இடது பக்கம், வலது பக்கம், ஏன் பின்னால்கூட நகர்த்தமுடியும். (கைகளால் சக்கரங்களை நகர்த்துவதன் மூலம்).உடம்பின் எடையோடு அந்த சக்கர நாற்காலியை நகர்த்த, நல்ல வலுவான கைகள் தேவை. அப்பா அந்த சக்கர நாற்காலியை வாங்கி வந்தபோது வீட்டில் எல்லோருக்கும் அது உற்சாகத்தைத் தந்தது.
“இனி நான் சுஸ்கித்தை கைகளில் தூக்கிக்கொண்டு செல்லவேண்டாம். சக்கரநாற்காலியில் தள்ளிக்கொண்டு போவேன்”, ஆனந்தக் கண்ணீருடன் சுஸ்கித்தின் அம்மா சொன்னார்.“நான் இனி விரும்பிய இடத்திற்கெல்லாம் போகலாம்” என்று உற்சாகத்துடன் சொன்னாள் சுஸ்கித்.“இந்த சக்கர நாற்காலியில் நானும் எப்பொழுதாவது உட்கார்ந்துகொண்டு போகலாமா?” என தம்பி ஸ்டப்தன் கெஞ்சினான். சக்கர நாற்காலியைத் தள்ளிச் செல்லவும் அவனுக்குப் பிடித்திருந்தது.அவர்கள் வீட்டுப் பெரிய கருப்புப் பூனை சக்கர நாற்காலியின் மீது தாவிச் சென்று, அதில் படுத்துக்கொண்டு கத்தியது.“என்னுடைய சாக்குத் துணிப் படுக்கையை விட இது சொகுசு” என்று சொல்வதுபோல் அது இருந்தது.
சிறிது நேரம் கழித்து, மாலை நேர பஸ் ’லே’யிலிருந்து திரும்பி வரும். அதில் வேலைக்கும் சந்தைக்கும் சென்றவர்கள் திரும்பி வருவார்கள். சமையலறை ஜன்னலிலிருந்து பார்ப்பதைவிட, இங்கிருந்து பார்ப்பதற்கு உலகம் உல்லாசமாகத் தெரிகிறது.
ஒரு நாள் மாலை. சுஸ்கித் தன் மேமே-லே(தாத்தா)வுடன் வெளியே உட்கார்ந்திருந்த போது, ஒரு சிறுவன் அவர்களிடம் வந்தான். அவனிடம் ஒரு கடிதம் இருந்தது. அதை அவன் பெரியவரிடம் கொடுத்தான். “ஜூலே(வணக்கம்)! பஸ் டிரைவர் இதனைக் கொடுக்கச் சொன்னார்” என்று கூறினான். பிறகு சுஸ்கித்தைப் பார்த்து, “என் பெயர் அப்துல். நான் அரசாங்கப் பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கிறேன். நீ ஏன் பள்ளிக்குச் செல்வதில்லை?” என்று கேட்டான்.“ஜூலே(வணக்கம்) அப்துல்! நான் இதுவரை பள்ளிக்குச் சென்றதில்லை. பள்ளிக்குச் செல்லும் பாதை மேடு பள்ளங்களுடனும், கற்கள் நிறைந்ததாகவும் இருப்பதால், என் சக்கர நாற்காலி சிக்கிக் கொள்ளும். அதோடு பள்ளிக்கு முன்னால் உள்ள சிறிய நீரோடையை என்னால் கடக்கமுடியாது.
என்னை தினமும் பள்ளிக்குத் தூக்கிக் கொண்டுவந்து விடுவது என் பெற்றோருக்குக் கடினமான காரியம் ” என்று சுஸ்கித் பதில் சொன்னாள்.“உனக்குப் பள்ளிக்கூடம் போக ஆசையா?” என்று அப்துல் கேட்டான்.“நிச்சயமாக” சுஸ்கித் சொன்னாள். “என் தம்பி அவன் பள்ளியில் செய்வதை எல்லாம் என்னிடம் சொல்வான். எனக்கும் உங்களைப்போலப் படிக்க ஆசை. நண்பர்களோடு விளையாட, சீருடை அணிய, ஏன் பரீட்சை எழுதக்கூட எனக்கு ஆசை. சிலசமயம் பள்ளியில் கற்றுக்கொண்ட பாடல்களை என் தம்பி எனக்குச் சொல்லிக்கொடுப்பான். அது ரொம்பப் பிடிக்கும். நீ இதை நம்பமாட்டாய்! சிலசமயம் என் கனவில் நான் புத்தகப்பையைச் சுமந்து செல்வதைப்போல, டிபன்பாக்ஸிலிருந்து சாப்பிடுவதுபோல வரும்” என்றாள் அவள்.“போதும் ! போதும் !” தாத்தா குறுக்கிட்டார்.
“சுஸ்கித், சும்மா கனவு காணாதே! உன்னால் பள்ளிக்குச் செல்லமுடியாதென்று உனக்கே தெரியும். இதைப் பலமுறை சொல்லியிருக்கிறேன். வீட்டில் என்ன கற்றுக்கொள்ளமுடியுமோ அதைச் செய், போதும்” என்றார்.
“தாத்தா” சுஸ்கித் மெதுவான, கெஞ்சும் குரலில், கண்ணில் நீருடன், கோபத்துடன் எழுந்து செல்லும் தன் தாத்தாவைக் கூப்பிட்டாள். பிறகு, அப்துலிடம் “தாத்தாவுக்கு என் உணர்வுகள் புரியவில்லை. என் தம்பி வாய்ப்பாடுகளை பெருமிதத்தோடு ஒப்பித்த அந்த நாள் எனக்கு ஞாபகமிருக்கு. அவன் படிக்கக் கற்றுக்கொண்ட நாளும்தான். என் பெற்றோர் பள்ளிக்குப் போகாதவங்க. அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். எனக்கும் படிக்கணும், கணக்குப் போடணும்னு ஆசை.
அடுத்த நாள் அப்துல், பள்ளியில் காலை நேர பிரார்த்தனைக் கூட்டத்திற்குப்பிறகு தலைமையாசிரியரைச் சந்திக்கச் சென்றான். “வணக்கம் அஸாங்-லே (மதிப்பிற்குரிய ஐயா)! நம்ம கிராமத்திலே உள்ள, பள்ளிக்குச் செல்லாத ஒரு பெண்ணைப்பற்றி உங்களிடம் பேச விரும்புகிறேன். ஸ்டப்தனின் சகோதரி” என்று கூறினான்.
“ஆமாம் ஐயா! அவள் வீட்டில் நடமாட ஒரு சக்கர நாற்காலி உபயோகிக்கிறாள். ஆனால் அதில் பள்ளிக்கு வருவது கடினம். ஏனெனில் பள்ளிக்கு வரும் பாதை கரடு முரடானது. அவளுக்கு நாம் ஏதாவது உதவி செய்ய முடியுமா ஐயா? நாமெல்லோரும் சேர்ந்தால் பாதையைச் சமனாக்குவதும், ஓடையின் குறுக்கே ஒரு சிறு பாலம் கட்டுவதும் முடியுமல்லவா?” என்றான்.
“மதிப்பிற்குரிய ஐயா! கடந்த வாரம் நம் பள்ளி சமூகவியல் வகுப்பில் மக்களின் அடிப்படை உரிமைகள்பற்றிப் படித்தோம். எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வியறிவு பெறும் உரிமை உண்டாம். அப்படியானால் அந்த உரிமை சுஸ்கித்துக்கும் உண்டு அல்லவா?” என்றான் அப்துல்.
“ஆம்! நீ சொல்வது சரிதான் அப்துல். மற்ற ஆசிரியர்களுடன் இதுபற்றிப் பேசி முடிவெடுக்கிறேன்” என்றார் தலைமையாசிரியர்.
அடுத்த நாள் ஆசிரியர்கள் அனைவரையும் தலைமையாசிரியர் ஒரு கூட்டத்திற்கு அழைத்தார். அவர்களிடம் அப்துல் கூறிய யோசனையை பகிர்ந்துகொண்டு, அவர்களின் அபிப்ராயத்தைக் கேட்டார்.
”முடியாத காரியம்” என்றார் ஓர் ஆசிரியர். “எப்படி உடல் ஊனமுற்ற குழந்தையை நம் பள்ளியில் சேர்ப்பது? அவள் எப்படி எழுதுவாள், விளையாடுவாள், மற்ற குழந்தைகளைப்போலக் கழிப்பிடம் செல்வாள்?” கேட்டார் அவர்.
“சரியாகச் சொன்னீர்கள். இதைத்தான் நாம் திட்டமிட வேண்டும்” என்றார் தலைமையாசிரியர்.
பிறகு “மென்டக்யூல் கிராமத்தில், கிராம கல்விக்குழு இது மாதிரியான உடல் ஊனமுற்ற குழந்தைக்காக விசேஷ கழிப்பிடம் அமைத்திட உதவியதாக நான் கேள்விப்பட்டேன். என்ன செய்தார்களென்று அவர்களிடம் கேட்போம். ஆனால் முதலில் நாம் செய்யவேண்டியது, சுஸ்கித் பள்ளிக்கு வர சாலையை ஒழுங்கமைப்பதுதான். பின்னர் பள்ளியில் செய்யவேண்டிய வசதிகளைப்பற்றி யோசிப்போம்” என்று கூறினார்.
இரண்டு வாரத்திற்குப்பின் ஒரு நாள்
அந்த அரசாங்கப் பள்ளியில் மாணவர்களிடையே பெரும் பரபரப்பு. எல்லாக் குழந்தைகளும் வெளியே விளையாட்டு மைதானத்தில் கூடியிருந்தனர். யாருமே பள்ளிக்குப் புத்தகப் பையைக் கொண்டுவரவில்லை. ஏனென்றால் அன்று வகுப்புகள் ஏதும் கிடையாது.
ஆசிரியர்கள் மாணவர்களைப் பல குழுக்களாகப் பிரித்தனர். ஒரு குழு சுஸ்கித்தின் வீட்டின் முன்புறம் வேலை செய்தது. மற்றொரு குழு ஓடைக்கு இணையாக சென்ற பாதையில் பணி புரிந்தது. சற்று பெரிய மாணவர்களைக் கொண்ட மூன்றாவது குழு, ஆசிரியர்களின் உதவியோடு ஓடையின் குறுக்கே உறுதியான மரப்பாலம் ஒன்றை உருவாக்கியது.
மாணவர்கள் கற்களையும் பாறைகளையும் அகற்றும்போதும், பாதையைச் சீரமைக்கும்போதும், ஓடைக்கு அருகே மரத்துண்டுகளை எடுத்துச் சென்றபோதும், சிரித்துக்கொண்டும் பாடிக்கொண்டும் வேலை செய்தனர்.
தலைமையாசிரியரோ ஒவ்வொரு குழுவினரின் அருகிலும் சென்று, திட்டமிட்டபடி வேலைகள் நடப்பதை உறுதி செய்துகொண்டார்.
சுஸ்கித்தின் பெற்றோர் வேலையில் ஈடுபட்ட அனைவருக்கும் சூடான தேநீரும் பிஸ்கெட்டும் அளித்தனர். ஓடை அருகே உள்ள வில்லோ மரத்தின்கீழ் அமர்ந்துகொண்டு சுஸ்கித்தின் தாத்தா, “இப்படி ஒரு நாளைப் பார்ப்பேனென்று கனவிலும் எதிர்பார்த்ததில்லை” என நினைத்து, கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.
சுஸ்கித் இன்று முதன்முறையாக பள்ளிக்கூடம் செல்லப்போகிறாள். ஆகவேதான் அவளிடம் அத்தனை பரபரப்பு.