divyavin nilappadam

திவ்யாவின் நிலப்படம்

திவ்யா மிகுந்த உற்சாகத்துடன் இருந்தாள். விரைவில் அவளது சித்தியின் மகன் ரவி கஜபூருக்கு வருகிறான். ஆனால் அவனால் சரியாக அவளது வீட்டைக் கண்டுபிடித்து வந்து சேர முடியுமா என்று கவலைப்பட்டாள். அவனுக்கு வழிகாட்ட ஒரு நிலப்படம் உதவுமா?

- Sheela Preuitt

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

விடுமுறையின் முதல் நாள் காலையில், வழக்கத்திற்கு மாறாக சற்று தாமதமாகவே எழுந்தாள் திவ்யா. இந்தக் கோடை விடுமுறை ஜாலியாக இருக்கப் போகிறது.

அவளது சித்தியின் மகன் ரவி கஜபூருக்கு வரப் போகிறான். அவன் வெகு தொலைவில் இருக்கும் கட்டாக்கில் வசிக்கிறான்.

‘ரவியோடு வெளியே விளையாடலாம், சைக்கிள் ஓட்டலாம், குளத்தில் நீச்சலடிக்கலாம், மாங்காய் பறிக்கலாம்… ஒரே கொண்டாட்டம்தான்!’

என்று மகிழ்ந்தாள் திவ்யா.

ஆனால், ரவி முதல் முறையாக தனியாக பயணம் செய்யப் போகிறான். திவ்யா, தொலைபேசியில் அவனுக்கு வழி சொன்னாள்:

“பஸ் ஸ்டாண்டிலிருந்து நேரா, நேரா, நேரா நடந்து வந்தா ஒரு குளம் இருக்கும். நேரா அப்படியே நடந்து வந்து வலது பக்கம் திரும்பு… இல்ல, இல்ல, இடது பக்கம் திரும்பி நடந்துட்டே வா… ம்ம்ம்.. மூணு நிமிஷத்துக்கு… அப்படியே போனா போஸ்ட் ஆபீஸ் வரும், அங்க இடது பக்கம் திரும்பு…”

கட்டாயம் ரவி குழம்பிப் போயிருப்பான் என்று திவ்யா நினைத்தாள். ’அவன் எப்படி வீட்டைக் கண்டுபிடித்து வருவான்?’ என்று கவலைப்பட்டாள்.

அவளுக்கு ஒரு யோசனை வந்தது.

‘ரவிக்கு நான் ஒரு மேப் வரையப் போகிறேன். அது அவனுக்கு வழி கண்டுபிடிக்க உதவும்‘ என்று நினைத்தாள்.

அலமாரியிலிருந்து ஒரு பென்சிலும், ஒரு பெரிய தாளும் எடுத்தாள். முதலில் தன் வீட்டை வரைந்தாள்; அதன் பக்கத்தில் தன்னை வரைந்தாள்.

பின்னர் வெளியே சென்றாள். ஒன்றை அடுத்து ஒன்றாக வேறு கட்டடங்களையும், தெருக்களையும் வரையத் தொடங்கினாள்.

சந்தையில் பினோய் மாமாவும் சரிதா மாமியும் தங்களது கடையில் அமர்ந்திருந்தனர்.

“என்ன செய்யறே, திவ்யா?” என்று கேட்டார் பினோய் மாமா.

“மேப் வரையறேன், மாமா, நம்ம ஊர் மேப்” என்றாள் திவ்யா.

“அற்புதம்!, நாங்க இருக்கோமா உன்னோட மேப்ல” என்று உற்சாகமாகக் கேட்டார் சரிதா மாமி.

இருவரும் அந்த நிலப்படத்தைப் பார்க்க வெளியே வந்தனர்.

“இதோ, நீங்க இங்கே இருக்கீங்க, பாருங்க,” என்றாள் திவ்யா.

பளிச்சென்று ஒரு மஞ்சள் நிற சதுரத்தை வரைந்து, அதன் பக்கத்தில் பினோய் மாமாவையும் சரிதா மாமியையும் சேர்த்து வரைந்தாள்.

பிறகு சாலையைக் கடந்து, அரசு மருத்துவமனை பக்கத்தில் இருக்கும் பெரிய ஆலமரத்தருகில் சென்றாள் திவ்யா.

எப்பொழுதும் அங்கேயே இருக்கும் ரமேஷ் கேட்டார், “என்னம்மா திவ்யா, என்ன செய்யறே?”

“நான் ஒரு மேப் வரையறேன்.”

“அட, நிஜமாவா? என்னையும் சேர்த்துக்க, திவ்யா. ஆலமரத்தடில.”

திவ்யா சிரித்தாள். அவர் சொல்வதும் சரி தான்! ஆலமரத்தடி ரமேஷ் ஒரு நிரந்தர காட்சிதானே! அதனால் அதையும் வரைந்தாள்.

திவ்யா தனது வழியில் தொடர்ந்தாள்.

தபால் நிலையத்தருகில் தபால்காரர் மோகன் அண்ணா அவரது சைக்கிளிலிருந்து இறங்கினார்.

“என்னம்மா திவ்யா, என்ன செய்யறே?” என்றார்.

திவ்யாவைத் தொடர்ந்து வந்த ரமேஷ் சத்தமாக பதிலளித்தார், “மேப் வரைஞ்சிட்டு இருக்கா நம்ம திவ்யா! நாம எல்லோரும் அதுல இருக்கோம்.”

“அப்படியா? போஸ்ட் ஆபீஸ மறந்துடாதேம்மா” என்றார் மோகன் அண்ணா.

தபால் நிலையத்தைக் குறிக்க ஒரு சிவப்புச் சதுரத்தை வரைந்தாள் திவ்யா.

பிறகு திவ்யா தெற்குப் பக்கமாக நடந்தாள். ஐந்து நிமிடங்களுக்குப் பின் அவள் ஒரு குளத்தின் பக்கம் வந்தாள். அங்கே சில பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தனர்.

“எங்களையும் உன் மேப் படத்துல போட்டுக்கம்மா திவ்யா” என்றார் ஷப்னம் அக்கா.

ஒரு பெரிய நீல குளத்தருகில் பெண்கள் இருக்கும் காட்சியை வரைந்தாள் திவ்யா.

அங்கே திவ்யாவைச் சுற்றி சிறுவர்கள் கூடினர்.

“வாங்க என் கூட,” என்றபடி தன் வீட்டை நோக்கி அவர்களை அழைத்துச் சென்றாள் திவ்யா.

“உங்களுக்கு ஒண்ணு காட்டறேன் பாருங்க…”

திவ்யா அவர்களை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றாள். அவர்கள் எல்லோரும் கீழே பரந்திருக்கும் தங்களது ஊரைப் பார்த்தார்கள்.

அந்த மாலையில், மறையும் சூரியனின் பிரதிபலிப்பு

அங்கிருந்த குளத்தில் தெரிந்தது.

அவர்கள் திவ்யாவின் நிலப்படத்தைப் பார்த்தார்கள். பின் அவர்கள் எதிரில் பரவியிருக்கும் ஊரைப் பார்த்தார்கள்.

“கஜபூர் எவ்வளோ பெரிசு! ஆனா அதோட அடையாள இடங்களையும் பாதைகளையும் இந்த சின்ன மேப்ல காட்ட முடியும்,” என்றாள் திவ்யா.

“இந்த மேப்பிலிருந்து வீட்டுக்கு வரும் வழியை ரவி எப்படித் தெரிந்து கொள்வான்?” என்று கேட்டாள் கலா.

திவ்யா தனது நிலப்படத்தை உற்றுப் பார்த்தாள். “ஆஹா! ஒரு ஊர்த்தடம் வரைந்தால் போதுமே!”

“ஊர்த்தடமா? அப்படின்னா என்ன?” என்று சாரு கேட்டாள்.

“ஊர்த்தடம் என்பது நடந்து செல்ல வேண்டிய பாதையைக் குறிப்பிட்டுக் காட்டும்” என்று.

திவ்யா, மஞ்சள் நிறப் பாதையை வரைந்து சிவப்பு அம்புக்குறிகளையும் போட்டாள்.

வண்ணமயமான நிலப்படம் இப்போது பார்க்கப் பிரமாதமாக இருந்தது.

அந்த வரைபடத்தை மடித்து ஒரு தபால் உறையில் போட்டு, தபால்தலையை ஒட்டி, ரவியின் முகவரியை எழுதி, தபால் பெட்டியில் போட்டு கட்டாக்கில் இருக்கும் ரவிக்கு அனுப்பினாள் திவ்யா.

ஒரு வாரத்துக்குப் பின் அவள் வீட்டின் அழைப்புமணி அடித்தது. கதவைத் திறந்தால் வெளியே ரவி அவளது மேப்பை கையில் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான்.

“இதோ வந்துட்டேன்!” என்று வாயெல்லாம் பல்லாகச் சிரித்தான் ரவி.

திவ்யாவின் மேப் சரியாகத் தான் வழிகாட்டியுள்ளது!

திவ்யா நிலப்படம் வரையும் கலைஞர் ஆகலாம்

நிலப்படம் வரைவது ஒரு தனிக் கலைதான். அப்படி வரைபவரை நிலப்பட வரையாளர்(cartographer) என்பார்கள். நிலப்பட வரைவியல் என்பது அறிவியல், புவியியல், கணிதம் மற்றும் கலைத்திறன் ஆகிய அனைத்தும் சேர்ந்த படிப்பாகும்.

நிலப்படங்கள் கீழ்க்கண்டவாறு உங்களுக்கு உதவும்

• ஒரு சிற்றூர் அல்லது நகரம் இருக்கும் இடத்தை அறிய

• ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம் எவ்வளவு தூரத்தில் உள்ளது, அங்கு சென்று சேர சிறந்த வழி எது போன்றவை அறிய

• இடங்களின் சிறப்பை அறிய

•  நிலப்பரப்பில் இருக்கும் மலைகள், ஆறுகள், பாலைவனங்கள், மற்றும் மக்கள் தொகை, இயற்கை வளங்கள் போன்றவற்றை அறிய

இவை அனைத்தும் இடுகுறிகள், சின்னங்கள், மற்றும் வண்ணங்களைக் கொண்டு சுட்டிக்காட்டப் பட்டிருக்கும்.

அளவுகோல்

நீங்கள் நிலப்படம் வரையும்பொழுது, ஒரு மலை எவ்வளவு உயரமாக உள்ளது என்று எப்படிக் காட்டுவீர்கள்? அல்லது ஒரு வீட்டின் உயரம் தென்னை மரத்தின் அளவில் பாதிதான் என்று எப்படிக் குறிப்பிடுவீர்கள்?

இதற்கு நீங்கள் அளவுகோலைப் பயன்படுத்தலாம். உங்கள் நிலப்படத்தில் இருக்கும் ஒவ்வொன்றையும் அதன் உண்மையான அளவுடன் இணைத்துக் காட்ட உதவுவதுதான் அளவுகோல். ஒரு நிலப்படத்தில் ஒரு சென்டிமீட்டர் என்பது ஒரு கிலோமீட்டரைக் குறிப்பிடுகிறது என்ற அளவுகோலை வைத்துக் கொள்வோம். அப்படியென்றால், 2 சென்டிமீட்டர் அகலமுள்ள ஒரு குளத்தை வரைந்தால் அது உண்மையில் 2 கிலோமீட்டர் அகலத்தைக் குறிப்பதாகும்.

ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம் எவ்வளவு தூரம் என்பதை அறியவும் அளவுகோல் உதவுகிறது. ஒரு நிலப்படத்தில், இரு இடங்களுக்கு இடையே உள்ள தூரம் 5 செ.மீ என்றும்,

அளவுகோல் 1 செ.மீ = 1 கி.மீ என்றும் இருந்தால் அவ்விரு இடங்களுக்கு இடையே உள்ள உண்மையான தூரம் 5 கிலோமீட்டர் ஆகும்.