பாஷாவும் அவனுடைய சகோதரி சாய்நபியும் தங்கள் பெற்றோருடன் ஹைதராபாதில் வசிக்கிறார்கள்.பாஷாவுக்கு நன்றாகச் சாப்பிடப் பிடிக்கும். அதைவிட முக்கியமாக, சமைக்கப் பிடிக்கும்!அவன் தினமும் தன் அம்மிக்குச் சமையல் வேலைகளில் உதவுவான். அவனுடைய அம்மி பலவண்ணக் காய்கறிகளை நறுக்கும்போது, அவருடைய கைகளையே பார்த்துக்கொண்டிருப்பான். பழுத்த சிவப்புத் தக்காளிகள், மொறுமொறு பச்சைக் குடைமிளகாய்கள், உறுதியான ஆரஞ்சு கேரட்டுகள், கொழுகொழு இளஞ்சிவப்பு வெங்காயங்கள்…
ம்ம்ம்! பருப்புகளும் அரிசியும் காய்கறிகளும் இறைச்சியும் மசாலாப் பொருள்களும் அடுப்பில் வண்ணம் மாற, சுவையான உணவு தயாராகும்போது அம்மியின் சமையலறையை நிரப்பி, சுண்டியிழுக்கும் வாசனைகள் அவனுக்கு மிகவும் பிடிக்கும். தானும் அப்படிச் சமைத்துப் பார்க்கவேண்டும் என்பது அவனுடைய ஆசை. என்றைக்காவது அம்மி அதற்கு ஒரு வாய்ப்புத் தருவாரா என்று அவன் ஏங்கினான்.
ஒருநாள், பாஷாவும் சாய்நபியும் பள்ளியிலிருந்து திரும்பியபோது, அம்மி காய்ச்சலோடு படுத்திருந்தார். அவர்களுடைய பாபா இன்னும் அலுவலகத்திலிருந்து வந்திருக்கவில்லை.அப்போது, அம்மியின் அலைபேசி ஒலித்தது. அம்மியின் நெருங்கிய சிநேகிதியான சாய்ரா அத்தைதான் அழைக்கிறார் என்பதை பாஷா பார்த்தான்.அலைபேசி தொடர்ந்து ஒலித்தால் அம்மியின் தூக்கம் கலைந்துவிடுமோ என்று சட்டென்று அதை எடுத்துப் பேசினான்.
"நான் ஒரு கல்யாணத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருக்கிறேன். என்னோடு நிறைய நண்பர்களும் இருக்கிறார்கள்" என்று களைப்பான குரலில் சொன்னார் சாய்ரா அத்தை. "இன்னும் இரண்டு மணி நேரத்தில் நாங்கள் உங்கள் வீட்டைத் தாண்டிச் செல்வோம். நாங்கள் அங்கே இரவு உணவு சாப்பிடலாமா? நாங்கள் மொத்தம் 24 பேர், அதில் 4 பேர் சைவம்!" என்று கேட்டார்.சாய்ரா அத்தையும் அவரது நண்பர்களும் வீட்டுக்கு வருகிறார்கள் என்றால், அம்மி மிகவும் மகிழ்வார். அவருக்கு சாய்ரா அத்தையை மிகவும் பிடிக்கும்.ஆகவே, "நீங்க தாராளமாக வரலாம் அத்தை!" என்றான் பாஷா.
சாய்ரா அத்தையுடன் பேசியது பாஷாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவனே சமைப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பு! அதேசமயம், பாஷாவுக்குப் பதற்றமாகவும் இருந்தது, அவனால் சமைத்துவிட முடியுமா!
பாஷா குளிர்பதனப்பெட்டியைத் திறந்து பார்த்தான். அத் அவனுக்குப் பிடித்த பல காய்கறிகள் இருந்தன: காலிஃப்ளவர், பட்டாணிகள், பீன்ஸ். கேரட்களுக்குக் கீழே ஒரு கொத்து தளதள புதினாக்கீரைக் கட்டுகூட எட்டிப்பார்த்தது.
"ஆஹா! சுவையான வெஜிடபிள் தம் பிரியாணி செய்யத் தேவையான எல்லாமே இங்கே இருக்கின்றன" என்றான் பாஷா.
அவர்கள் வீட்டில் இருக்கும் 4 பேருக்காக அம்மி, வெஜிடபிள் தம் பிரியாணி செய்வதை பாஷா பலமுறை பார்த்திருக்கிறான்.
ஆனால், இப்போது அவன் 24 பேருக்குச் சமைக்கவேண்டும். அதாவது, அம்மி வழக்கமாகச் சமைப்பதுபோல் ஆறுமடங்கு* பேருக்குச் சமைக்கவேண்டும்.*(4+4+4+4+4+4 = 24. அல்லது, 4 x 6 (4 முறை 6) = 24)"அதாவது, நான் ஆறுமுறை பிரியாணி சமைக்கவேண்டும்" என்று நினைத்த பாஷா பதறினான். "ஆனால், அதற்குள் அத்தையும் அவரது நண்பர்களும் வந்துவிடுவார்களே!"
வேறு வழியில்லை. அவன் சமையலுக்குத் தேவையான ஒவ்வொரு பாத்திரத்தையும் ஆறு ஆறாக எடுத்துவைக்கத் தொடங்கினான்.அப்போது, சாய்நபி சமையலறைக்குள் எட்டிப்பார்த்தாள். முகத்தைச் சுளித்தபடி, "என்ன செய்கிறாய்?" என்றாள்.பாஷா அவளுக்குத் தன் பிரச்சினையை விளக்கியதும், சாய்நபி சத்தமாக சிரிக்கத் தொடங்கினாள்.
"முட்டாள் அண்ணா!" என்று அவனைச் செல்லமாகக் கோபித்துக்கொண்டாள். "நீ ஆறுமுறை பிரியாணி செய்யவேண்டியதில்லை, ஒரே ஒருமுறை செய்தால் போதும். அதற்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் ஆறுமடங்கு போடவேண்டும், அவ்வளவுதான்!"தன்னுடைய புத்திசாலித் தங்கை தன்னைக் கேலி செய்வது பாஷாவுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், அவள் சொல்வதும் உண்மைதானே? அவன் ஆறுமுறை பிரியாணி செய்யவேண்டியதில்லையே! இப்படி ஒரு அற்பமான தவறு செய்துவிட்டோமே என்று அவன் தன்னைத்தானே நொந்துகொண்டான்.
"அதெல்லாம் எனக்குத் தெரியும்" என்று அவசரமாகச் சொன்னான். "உனக்குத் தெரிகிறதா, இல்லையா என்று பார்ப்பதற்காகச் சும்மா கேட்டேன்!""ஆமாம், அண்ணா! நீ பெரிய புத்திசாலி ஆயிற்றே" என்று குறும்பாகச் சொன்னாள் சாய்நபி. "சரி, 4 பேருக்கு எவ்வளவு அரிசி தேவை?""1.5 கப்.""அப்படியானால், 24 பேருக்கு 1.5 * 6 = 9 கப் அரிசி தேவை" என்று உடனே சொன்னாள் சாய்நபி.
பாஷா சாய்நபியை ஆச்சர்யத்துடன் பார்த்தான். இவள் எப்படி இந்தக் கணக்குகளை இவ்வளவு விரைவாக மனக்கணக்கு போடுகிறாள் என்று வியந்தான்.முரட்டுத்தனமாக "சரி, சரி" என்று சொன்னபடி 9 கப் அரிசியை அளந்து ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டான். "சரி, இப்போது மற்றப் பொருட்களையும் இதேமாதிரி கணக்கிட்டுச் சொல். நீ சொல்வது சரியா, தவறா என்று நான் பார்க்கிறேன்!" என்றான்."கண்டிப்பாகச் சொல்கிறேன், அண்ணா" என்றாள் சாய்நபி. வேகமாக ஓடிச் சென்று ஒரு பென்சிலையும் காகிதத்தையும் கொண்டுவந்தாள்.
அண்ணனுடன் சேர்ந்து வேலை செய்வதென்றால் சாய்நபிக்கு மிகவும் பிடிக்கும். நான்கு பேருக்கு பிரியாணி செய்யத் தேவைப்படும் ஒவ்வொரு பொருளாக அவன் சொல்லச் சொல்ல 24 பேருக்கு தேவைப்படும் அளவைஅவள் கணக்கிட்டாள்.
"4 பேருக்கு 15 பச்சை பீன்ஸ்" என்றான் பாஷா."அப்படியானால்... 15 x 6 = 90. இருபத்து நான்கு பேருக்கு 90 பச்சை பீன்ஸ் தேவை" என்றாள் சாய்நபி."4 பேருக்கு 3/4 கப் தயிர்.""அப்படியானால், 3/4 x 6 = 0.75 x 6 = 4.5. இருபத்து நான்கு பேருக்கு 4.5 கப் தயிர் தேவை" என்று காகிதத்தில் விரைவாகக் கணக்கிட்டுச் சொன்னாள் சாய்நபி. "அவ்வளவு தயிர் நம் வீட்டில் இருக்கிறதா?""இருக்கிறது" என்றான் பாஷா. "அடுத்து…"
நிறைவாக, அவர்கள் எல்லாப் பொருள்களையும் அளந்து எடுத்துக்கொண்டுவிட்டார்கள்.இவ்வளவு காய்கறிகளா என்று மலைத்துப்போனான் பாஷா. "இவற்றை நறுக்குவதற்கு நீ எனக்கு உதவுவாயா?" என்று சாய்நபியிடம் கேட்டான்."கண்டிப்பாக உதவுகிறேன் அண்ணா" என்று சிரித்தாள் சாய்நபி. இன்றைக்கு அவளுக்கு அதிர்ஷ்ட தினம்தான்!பாஷா முதலில் ஆரஞ்சு நிறக் குங்குமப்பூ இதழ்களைப் பாலில் நனைத்துவைத்தான். அரிசியைத் தண்ணீரில் ஊறப்போட்டான். பிறகு, சாய்நபியுடன் சேர்ந்து காய்கறிகளை வெட்டினான். அடுப்பை ஏற்றி மசாலாப்பொருள்களை நெய்யில் வறுக்கத் தொடங்கினான்: பட்டை, கிராம்பு, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய். அடுத்து, நறுக்கப்பட்ட காய்கறிகளையும் அதில் போட்டு வதக்கினான்.
இப்போது, அவனுக்குப் பரிச்சயமான, நல்ல உணவிலிருந்து வருகிற, இனிமையான நறுமணம் வீடுமுழுவதும் பரவியது. பாஷாவுக்குத் தன்னுடைய சமையல் திறமையில் நம்பிக்கை வந்தது.அடுத்து, அவனுக்கு மிகவும் பிடித்த வேலை: பாதி வெந்த அரிசியையும், மசாலாப்பொருள்கள், காய்கறிகளையும் ஒரு ஹண்டியில் அடுக்கடுக்காக அமைத்து மெதுவாகச் சமைத்தல்!பாஷா பாத்திரத்தில் எல்லாவற்றையும் அடுக்கடுக்காக அமைத்து, மெதுவாகச் சமைக்கத் தொடங்கினான்.
அப்போது, வாசல் மணி ஒலித்தது. பாஷாவும் சாய்நபியும் சமையலறையிலிருந்து வருவதற்குள், அம்மி எழுந்து விருந்தினர்களை ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியோடு வரவேற்றார். மறுநிமிடம், இவர்களுக்கு என்ன சாப்பிடக் கொடுப்பது? எதுவும் சமைக்கவில்லையே என அவரது ஆச்சரியம் கவலையாக மாறியது.
அதே நேரம், சமையலறையிலிருந்து அருமையான மணம் வந்தது. குழப்பத்துடன் அங்கே வந்தார் அம்மி.
"அம்மா, நாங்கள் பிரியாணி சமைத்திருக்கிறோம்" என்றபடி பாஷாவும் சாய்நபியும் ஹண்டியைத் திறந்து காட்டினார்கள். அதைப் பார்த்துத் திகைத்தார் அம்மி."பாஷா, அருமையாக பிரியாணி சமைக்கிறான் அம்மி!" என்றாள் சாய்நபி. "நானும் அவனுக்கு உதவி செய்தேன்!"இதைக் கேட்ட பாஷா பெருமையுடன் அம்மியைப் பார்த்துச் சிரித்தான். தன் தங்கை அவ்வளவு மோசமில்லைதான் போல என நினைத்துக்கொண்டான்.
அம்மி பாஷாவையும் சாய்நபியையும் அணைத்துக்கொண்டார். "மாஷால்லா!" என்று சிரித்தார். "என்னுடைய இரண்டு குழந்தைகளும் மிகவும் திறமைசாலிகள். உங்களை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது!""சரி, எல்லாரும் உட்காருங்கள். நானும் சாய்நபியும் உங்களுக்கு பிரியாணி பரிமாறுகிறோம்!" என்றான் பாஷா. சாய்நபியும் ஆர்வத்துடன் புன்னகைத்தாள். இனிமேல் அண்ணனுடன் சேர்ந்து இதுபோல் இன்னும் பல சுவாரசியமான வேலைகளைச் செய்யலாம் என்று நினைத்தபோது, அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
சாய்ரா அத்தையும் அவரது நண்பர்களும், பாஷாவும் சாய்நபியும் செய்த பிரியாணியை ருசித்துச் சாப்பிட்டார்கள். "இத்தனை அருமையான தம் பிரியாணியை நாங்கள் இதுவரை சாப்பிட்டதே இல்லை" என்றார்கள்."உண்மைதான்!" என்று விரல்களைச் சுவைத்தபடி சொன்னார் அம்மி. அதைக்கேட்டு பாஷாவும் சாய்நபியும் மகிழ்ச்சியுடன் சிரித்தார்கள்.
பாஷா, சாய்நபியுடன் சேர்ந்து சமையுங்கள்!உங்களுக்குத் தெரியுமா? பாஷா, சாய்நபியின் அம்மி மிகவும் நல்லவர். அவருடைய தம் பிரியாணி செய்முறையை அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்! நீங்களும் இதைச் சமைக்க முயலலாம். ஆனால், அப்படிச் செய்யும்போது, பெரியவர்கள் யாராவது உங்களுடன் இருக்கவேண்டும்.உட்பொருட்கள் (4 பேருக்கு பிரியாணி)- பாஸ்மதி அரிசி - 1 1/2 கப்கள், நீரில் ஊறவைத்தது- 3 இழை குங்குமப்பூ ஊறிய சூடான பால் - 2 டேபிள்ஸ்பூன்- தண்ணீர் - 4 கப்கள்- நெய் - 4 டேபிள்ஸ்பூன்கள்- வெங்காயம் - 1, வெட்டியது- ஷாஹி ஜீரகம் - 1/2 டீஸ்பூன்
- பிரிஞ்சி இலை - 1- பட்டை - 2 அங்குலத் துண்டு- கிராம்பு - 8- இஞ்சிப் பூண்டு விழுது - 1 1/2 டேபிள்ஸ்பூன்- கலந்த காய்கறிகள் (காலிஃப்ளவர், பீன்ஸ், கேரட், பட்டாணி) - 3 கப்கள், நறுக்கப்பட்டவை- தக்காளி - 2 சிறியவை, நறுக்கப்பட்டவை- பச்சை மிளகாய் - 1, நறுக்கப்பட்டது- மசாலாத் தூள்கள் (கரம் மசாலா - 1 டீஸ்பூன்; மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்; தனியாத் தூள் - 1 டேபிள்ஸ்பூன்)- தயிர் - 3/4 கப்- புதினாக்கீரை - 2 டேபிள்ஸ்பூன்கள், நறுக்கியது- கொத்தமல்லித் தழை - 1 டேபிள்ஸ்பூன், நறுக்கியது- முந்திரி மற்றும் உலர்திராட்சை - தலா 5- பச்சை ஏலக்காய் - 5- கருப்பு ஏலக்காய் - 1- பால் - 2 டேபிள்ஸ்பூன்- உப்பு - 1 1/2 டீஸ்பூன்
1. பாதியளவு நெய்யை ஒரு பாத்திரத்தில் சூடாக்கி, வெங்காயத் துண்டுகள் பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதை ஒருபக்கம் வைத்துவிடவும்.
2. அதே பாத்திரத்தில், மீதமுள்ள நெய்யைச் சூடாக்கவும். ஷாஹி ஜீரகம், பிரிஞ்சி இலை, பட்டை மற்றும் கிராம்பை அதில் வறுக்கவும். இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
3. இதில் காய்கறிகள், தக்காளி மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.
4. எல்லா மசாலாக்களையும் சேர்க்கவும். 2 நிமிடங்களுக்கு நன்கு வதக்கவும்.
5. அத்துடன் தயிர் மற்றும் பாதி உப்பைப் போட்டு நன்றாகக் கலக்கவும். இதனை மூடிவைத்து சுமார் 10 நிமிடங்களுக்குக் குறைந்த தீயில் சமைக்கவும். இதனால் காய்கறிகள் மென்மையாகும், ஆனால் மசிந்துவிடாது.
6. அடுப்பிலிருந்து பாத்திரத்தை எடுத்துவிட்டு, அதில் புதினா மற்றும் கொத்தமல்லித் தழைகளைச் சேர்க்கவும்.
7. இன்னொரு பாத்திரத்தில், தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். மீதமுள்ள உப்பு, கருப்பு ஏலக்காய் மற்றும் பச்சை ஏலக்காயைச் சேர்க்கவும்
8. ஊறவைத்த அரிசியை வடிகட்டவும், அதைக் கொதிக்கும் நீரில் போடவும், பாத்திரத்தை மூடாமல் 8 நிமிடங்கள் சமைக்கவும். அரிசி ஓரளவு வெந்ததும், அதை வடிகட்டி மூலம் வடிகட்டவும்.
9. பிரியாணியின் அளவுக்கு ஏற்ற ஒரு ஹண்டியில்* அடுக்குகளை உருவாக்கத் தொடங்கவும்.
* நீரை வடிகட்டுவதற்காகக் கீழே சிறு துளைகளைக் கொண்ட ஒரு பாத்திரம்
1ஆம் அடுக்கில் சமைத்த காய்கறிக் கலவையில் (5ம் படிநிலைப்படி ) 1/3 பங்கையும், முந்திரிகள் மற்றும் உலர்திராட்சைகளில் 1/3 பங்கையும் வைக்கவும். 2ஆம் அடுக்கில், சமைத்த அரிசியில் (8ம் படிநிலை) 1/3 பங்கை வைக்கவும், அதற்குமேல், வறுத்த வெங்காயத்தில் (1ம் படிநிலை) 1/3 பங்கையும் குங்குமப்பூ கலந்த பாலில் 1/3 பங்கையும் வைக்கவும். இந்த இரண்டு அடுக்குகளையும் திரும்பத் திரும்ப வைத்து மொத்தம் 6 அடுக்குகளை உருவாக்கவும்.
10. ஹண்டியை மூடி அதை ஒரு சூடான தவாவில் வைக்கவும். 5 நிமிடங்கள் நடுத்தர அளவுத் தீயிலும், மேலும் 7 நிமிடங்கள் குறைந்த அளவுத் தீயிலும் சமைக்கவும்.
11. ஹண்டியை அடுப்பிலிருந்து எடுத்து பிரியாணியைக் கலக்கவும், மசாலாப்பொருள்களின் நிறங்கள் ஒரேமாதிரியாகப் பரவவேண்டும்.
12. வெஜிடபிள் தம் பிரியாணி பரிமாறத் தயார்!
2. 24 பேருக்கு பிரியாணி செய்ய பாஷாவுக்கு 72 காலிஃப்ளவர் சிறுபூக்கள் தேவையென்றால், 3 பேருக்கு பிரியாணி செய்யும்போது அதில் எத்தனை காலிஃப்ளவர் சிறுபூக்களைப் போடவேண்டும்?
3. 6 பேருக்கு பிரியாணி செய்யும்போது, 3/4 கப் தயிர் சேர்க்கவேண்டும் என்றால், 48 பேருக்கு பிரியாணி செய்யும்போது எவ்வளவு தயிர் சேர்க்கவேண்டும்?
5. 8 பேருக்கு பிரியாணி செய்யும்போது அதற்கு இரண்டு அங்குல அளவு பட்டை 2 தேவை, 64 பேருக்கு பிரியாணி செய்யும்போது அதற்கு எத்தனை இரண்டு அங்குல அளவு பட்டைகள் தேவைப்படும்?கணக்கு போட்டதும், அடுத்த பக்கத்துக்குச் சென்று உங்கள் விடைகளைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். முன்கூட்டியே பார்த்துவிடக்கூடாது, சரியா?
விடைகள்:1. 6 வெங்காயங்கள்2. 9 சிறுபூக்கள்3. 6 கப்கள்4. 40 பேர்5. 16 பட்டைகள்