ellaam antha poonaiyaalthaan

எல்லாம் அந்தப் பூனையால்தான்...

இந்தப் பையன் தன்னுடைய வீட்டுப்பாடத்தைச் செய்யவில்லை. ஏன் என்று கேட்டால், ஒரு குறும்புப் பூனையைக் காரணமாகச் சொல்கிறான். பூனைக்கும் வீட்டுப்பாடத்துக்கும் என்ன சம்பந்தம்? கதையைப் படித்தால் புரியும்!

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

வீட்டுப்பாடம் செய்துவிட்டாயா?

இல்லை மிஸ்!

ஏன்?

எல்லாம் அந்தப் பூனையால்தான்!

பூனைக்கும் வீட்டுப்பாடத்துக்கும் என்ன சம்பந்தம்?

அந்தப் பூனை மரத்தின்மேல் ஏறிவிட்டது. ஆனால், அதற்கு இறங்கத் தெரியவில்லை. பயத்தில் கத்தியது.ஆகவே, நான் அந்தப் பூனைக்கு உதவுவதற்காக, ஓர் ஏணியைக் கொண்டுவந்தேன்.

அந்த ஏணியில் ஒரு படி உடைந்திருந்தது. அதை ஆணி அடித்துச் சரி செய்தேன்.அந்தச் சத்தம் கேட்டுக் குழந்தை தூக்கத்திலிருந்து விழித்து அழுதது.

குழந்தை அழும் சத்தம் கேட்டு, அம்மா சமையலறையிலிருந்து ஓடி வந்தார்.

அப்போது, குரங்கு ஒன்று சமையலறைக்குள் புகுந்து எல்லாச் சாப்பாட்டையும் சாப்பிட்டுவிட்டது.

ஆகவே, அப்பா டீக்கடையிலிருந்து சப்பாத்தியும் குருமாவும் வாங்கிவந்தார்.சப்பாத்தி, குருமா வாசனையில், ஒரு நாய் அவர் பின்னாலேயே வந்தது.

அந்த நாய், என்னுடைய வீட்டுப்பாட நோட்டைத் தின்றுவிட்டது.

என்னது? உன் வீட்டுப்பாட நோட்டை நாய் தின்றுவிட்டதா?

ஆமாம் மிஸ், எல்லாம் அந்தப் பூனையால்தான்!