இன்று வசந்த பஞ்சமி. இதுதான் வசந்தத்தின் முதல் நாள் என்று என் பெற்றோர் சொல்கிறார்கள். குளிர்காலத்துக்கும் வெயில் காலத்துக்கும் நடுவில் வருவதுதான் வசந்தம், சமஸ்கிருதத்தில் ‘வசந்த் ரிது’.
இன்றைக்கு இந்தியாவில் பல இடங்களில் மக்கள் கல்வி, இசை மற்றும் கலைக் கடவுளை வணங்குவார்கள். என் வீட்டருகே உள்ள மரத்தில் பல பறவைகள் உட்கார்ந்திருக்கின்றன. அவை எனக்காகப் பாடுகின்றன என்று நான் நினைக்கிறேன்!
மரத்தில் இலைகளெல்லாம் புத்தம்புதிதாக மின்னுகின்றன, என்னுடைய புது ஃப்ராக்போலவே! அம்மாவும் ஒரு மஞ்சள் சேலை அணிந்திருக்கிறார். வசந்தத்தின் நிறம் அது. பெயரைப்போலவே நிறமும் அழகு!
தாத்தா என்னை ஒரு செடி நடச் சொல்கிறார்.
‘எதற்காக?’ என்று கேட்கிறேன் நான்.
‘மீனு, நீ வளர்ந்தபிறகு அது உனக்கு ஒரு தோழியாக இருக்கும்’ என்கிறார் தாத்தா. ‘வசந்த காலத்தில் புது விஷயங்களைத் தொடங்கவேண்டும்!’
நாங்கள் தோட்டத்துக்குச் செல்கிறோம். தாத்தாவும் நானும் மண்ணில் ஒரு குழி வெட்டி ஒரு செடியை நடுகிறோம். ‘இது எவ்வளவு உயரமாக வளரும்?’ என்று தாத்தாவைக் கேட்கிறேன் நான்.
‘காத்திருந்து பார் மீனுக் குட்டி!’ என்கிறார் தாத்தா.
அணில்கள் ஒன்றை ஒன்று துரத்துகின்றன.
டிங்குப் பூனை ஓர் அணிலைத் துரத்துகிறது. நான் டிங்குவைத் துரத்துகிறேன்.
தோட்டமெங்கும் பூக்கள்! எனக்கு அவற்றில் மிகவும் பிடித்தது மஞ்சள் ரோஜா, தாத்தாவுக்கு மிகவும் பிடித்தது, வெள்ளை மல்லிகை!
சில மரங்களுக்குக் கீழே இலைகள் போர்வை விரித்திருக்கின்றன.
பல மரங்களில் பூக்கள் மலர்ந்துள்ளன. எனக்கு வசந்த காலம் மிகவும் பிடிக்கும்.
வசந்தத்தில் எல்லாமே மிக அழகாகத் தோன்றுகிறது!
நாளைக்கு ஹோலிப் பண்டிகை. பள்ளி விடுமுறை. நாங்கள் குச்சிகள், கட்டைகளை வைத்து ஒரு பெரிய ஹோலிகா செய்கிறோம்.
காட்டிலிருந்து தேசு மலர்களைப் பறித்துவருகிறோம். மனு அந்த மலர்களை ஒரு தண்ணீர்த் தொட்டியில் போடுகிறான். தண்ணீர்முழுவதும் ஆரஞ்சு வண்ணமாகிவிடுகிறது!
அந்த ஆரஞ்சுத் தண்ணீரைக் கொண்டு நாளைக்கு நாங்கள் ஹோலிப் பண்டிகை கொண்டாடுவோம். எங்களுக்கு குஜியாவும் பூரியும் தின்னக் கிடைக்கும். வசந்த காலம் மிகவும் மகிழ்ச்சியானது. காரணம், இங்கே குளிரும் இல்லை, வெயிலும் இல்லை, நனையவேண்டியதில்லை,
நாள்முழுக்க சந்தோஷமாக விளையாடலாம்!