elumbu pudhir

எலும்புப் புதிர்

ஸோயாவும் அர்மானும் அம்மாவின் மருத்துவமனையில் ஒரு குளறுபடி செய்துவிட்டனர். அம்மாவுக்குத் தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகிவிடும். அவர்கள் இருவரும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒற்றுமையாக வேலை செய்ய முடியுமா?

- Anitha Ramkumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

“என் முடியை இழுக்காதே!” என்று கத்தினாள் ஸோயா. “நீ முதலில் என்னை குண்டு பூசணிக்காய் என்று கூப்பிடுவதை நிறுத்து!” என்று அர்மான் பதிலுக்குக் கத்தினான்.

“குழந்தைகளே, ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். இருவரும் என் மருத்துவமனையில்இருப்பது ஞாபகம் இருக்கட்டும். நோயாளிகள் வெளியில் காத்திருக்கிறார்கள்.நீங்கள் இருவரும் அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள்”என்றார் அம்மா.

“ஆனால், அம்மா...”

“போதும்! இனி ஒரு சத்தம் வந்தால் கூட, இருவருக்கும் அடி விழும்,” என்று அம்மா கண்டிப்பாகக் கூறினார்.

1, 2, 3... சிறிது நேரம் அமைதி நிலவியது. ஆனால் அது வெகு நேரம் நீடிக்கவில்லை!

“எல்லாம் உன்னால்தான் ஸோயா. ஏன் இப்படி முட்டாளாக இருக்கிறாய்?”

“யார் முட்டாள்? உனக்கு ‘முட்டாள்’ என்று எழுதக்கூடத் தெரியாது. அசமஞ்சம்!”

“என்னைத் திட்டுவதை நிறுத்து! அம்மாவிடம் சொல்லி விடுவேன்,” என்று சொல்லிக் கொண்டே ஸோயாவின் கையைக் கிள்ளிவைத்தான் அர்மான்.

“நீ ஒரு சரியான கோள் மூட்டி!” என்று சொல்லி அர்மானைத் தள்ளிவிட்டாள் ஸோயா. அர்மான் நிலை தடுமாறிப்போனான். பின்புறமாய்ச் சாய்ந்துகடினமான ஏதோ ஒன்றின் மீது விழுந்தான்.

டமால்!

அய்யய்யோ! ஸோயாவும் அர்மானும் தரையில் கிடக்கும் எலும்புக் குவியலைப் பார்த்து ‘திரு திரு’ என்று முழித்தார்கள்.

“அம்மாவின் எலும்புக்கூடு மாதிரியை உடைத்து விட்டாய் பார்!” என்று வருத்தமாகக் கூறினாள் ஸோயா.

“எல்லாம் உன்னால்தான்! நீதான் என்னைத் தள்ளி விட்டாய்!” என்றுகத்தினான் அர்மான்.

“நாம் சீக்கிரம் ஏதாவது செய்தாக வேண்டும்! இல்லாவிட்டால் இருவரும் அம்மாவிடம் மாட்டிக் கொள்வோம்” என்றாள் ஸோயா.

“ஆமாம்” என்று  அர்மான் ஒரு  எலும்பை எடுத்தான்."இது மண்டை ஓடாக இருக்கலாம். இதில் கண்களுக்கான இரு ஓட்டைகள் உள்ளன; மூக்கிற்கான ஒரு ஓட்டை உள்ளது. பற்களுக்கான இடமும் உள்ளது” என்றான்.

“சரியாகச் சொன்னாய். இது நிச்சயமாக மண்டை ஓடுதான். இது ஒரு புதிரைப் போல! எந்த எலும்பு எங்கே பொருந்தும் என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும்” என்றாள் ஸோயா.

“இதை எங்கே வைக்கலாம் என்று நினைக்கிறாய்? “ என்று ஒரு பெரிய கூண்டு போன்ற எலும்பைக் கையில் எடுத்தபடி கேட்டாள் ஸோயா.

“உம்ம்ம்… மேலே உள்ள கூடு மார்புப்பகுதி என்று நினைக்கிறேன். அதன் கீழே இருக்கும் காலி இடம் வயிற்றிற்காக இருக்க வேண்டும்,” என்று தன் கை முஷ்டியால் அவன் மார்பைத் தட்டிக் காண்பித்துக் கூறினான் அர்மான்.

ஸோயா தலையை ஆட்டிப் புன்னகைத்தாள். இருவருமாய் அந்தப் பகுதியை தூக்கிப் பிடித்துத் தாங்கியில் மாட்டினார்கள்.

“இந்தத் துண்டைப் பார்! இந்த எலும்புகள் கை விரல்களைப் போல் இருக்கின்றன அல்லவா?” என்று அதன் சிறிய எலும்புகளை அர்மானை நோக்கி ஆட்டினாள் ஸோயா.

“ இது கை என்று நினைக்கின்றேன். இன்னொரு கையைக் கண்டுபிடிக்கிறாயா?” என்றாள்.

“அது கால் எலும்பு இல்லை என்று உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான் அர்மான். “இங்கே பார்!” ஸோயா தரையில் அமர்ந்து தன் கையை, தன் காலுக்கருகில் தரையில் வைத்துக் காண்பித்தாள்.

சீக்கிரமே, அர்மான் மற்றொரு கை எலும்பையும் இரு கால் எலும்புகளையும் கண்டுபிடித்தான். “கை எலும்புகள் கால் எலும்புகளை விடக் குட்டையாக இருக்கும். நம் கணக்கு சரிதான்!” என்றான் அர்மான்.

ஸோயா நுனிக் காலில் நின்று எக்கி கை எலும்புகளைப் பொருத்தினாள். அதே சமயம் அர்மான் அந்த மாதிரி எலும்புக் கூட்டில் கால் எலும்புகளைப் பொருத்தினான்.

ஒரு வாரம் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் வரச் சொல்லி ஒரு நோயாளியிடம் அம்மா கூறுவது கேட்டது. அம்மாவின் வேலை  முடிந்து விட்டது போல் இருக்கின்றதே!

மண்டை ஓட்டைமட்டுவது மட்டும்தான் பாக்கி. அடடா! எட்டவில்லையே!

'அர்மான் சீக்கிரம், அந்த நாற்காலியை இங்கே இழு,” என்று கிசுகிசுத்தாள் ஸோயா. நாற்காலியில் ஏறி மண்டை ஓட்டை உச்சியில் வைத்தாள். அர்மான் நாற்காலியை அதன் இடத்தில் நகர்த்தி வைத்தான்.

சரியான நேரத்தில் வேலை முடிந்தது.

“ஒரு வழியாக சமாளித்து விட்டோம்!” என்று கூறியபடி அர்மானை கட்டிக்கொண்டாள் ஸோயா. அம்மா உள்ளே வந்தார்.

“இருவரும் சமாதானமாய், அன்பாய் இருப்பதைப் பார்க்க எவ்வளவு நன்றாக இருக்கிறது! என் வேலை முடிந்தது, ஐஸ்கிரீம் சாப்பிடப் போகலாமா?” என்று கேட்டார் அம்மா.

“எலும்புக் கூட்டைக்கூட சாமர்த்தியமாக அடுக்கி வைத்து விட்டீர்களே!” என்றார் அம்மா.

ஸோயாவும் அர்மானும் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டனர்.

அம்மாவிற்கு எப்படித் தெரிந்தது?

எலும்புகளைப் பற்றி சில வேடிக்கையான தகவல்கள்

1. உங்கள் கைகளில்தான் மற்ற எந்த உடல்பாகத்தையும் விட அதிக எண்ணிக்கையிலான எலும்புகள் உள்ளன.

2. பிறந்த குழந்தையின் உடலில் 300 எலும்புகள் இருக்கும். நாம் வளர்ந்த பின் 206 எலும்புகளே இருக்கும்.

3. மனித உடலின் மிக நீளமான எலும்பு, தொடை எலும்பு ஆகும்.

4. உங்கள் உடலின் மிகச் சிறிய எலும்பு, உங்கள் காதுக்குள்ளே இருக்கின்றது.

5. எலும்புகள் சேரும் இடத்திற்கு மூட்டு என்று பெயர்.