மினியுடைய அம்மூம்மாவின் தோட்டத்தில் மூன்று பெரிய பழ மரங்கள் இருந்தன.
ஒரு மரத்தில் நன்றாகப் பழுத்த மஞ்சள் நிற மாம்பழங்கள் இருந்தன. அவை மென்மையாகவும் இனிப்பாகவும் இருந்தன.
இரண்டாவது மரத்தில் பழுப்பு நிறமான புளியம்பழங்கள் இருந்தன.
புளியம்பழத்தின் ஓடு கடினமானது. ஓட்டின் உள்ளே புளிப்பான சதைப்பற்று இருக்கும். அதைச் சாப்பிடும்போது உங்கள் முகம் கோணுவதைத் தவிர்க்கவே முடியாது.
மூன்றாவது கொய்யா மரம்.
அதன் பச்சை நிறப் பழம் சில சமயம் கடினமாகவும் சில சமயம் மென்மையாகவும் இருக்கும்.
அது இனிக்குமா அல்லது புளிக்குமா என்று நம்மால் சொல்ல முடியாது.
“இந்தப் பழ மரங்கள் என்னுடைய நல்ல நண்பர்கள். நான் இவற்றை, பல வருடங்களுக்கு முன் நட்டேன். இந்த மரங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்றார் அம்மூம்மா.
“எனக்கும் ரொம்பப் பிடிக்கும், அம்மூம்மா!” என்றாள் மினி.
மறுநாள், மினியின் நண்பன் ராகேஷ் விளையாட வந்தான். மினி, ராகேஷை அம்மூம்மாவிடம் தள்ளினாள், “அம்மூம்மா! என்னுடைய மரத்தைப் பாருங்கள்!” என்றாள்.
“உன் நண்பன் மரமா என்ன?
உன் மர நண்பனிடமும் பழங்கள் இருக்கிறதா?” என்று அம்மூம்மா சிரித்தார்.
“இவன் ஒரு வேடிக்கையான மரம். மாமரம், புளியமரம், கொய்யாமரம் என எல்லாவற்றின்கலவை!” என்று சிரித்தாள் மினி.
பிறகு மினி, “அம்மூம்மா! இவன், சில சமயம், மாம்பழத்தைப் போல மென்மையாகவும் இனிமையாகவும் இருப்பான். நாங்கள் பல விளையாட்டுகள் விளையாடுவோம். இவன் தன்னுடைய கால்பந்தை என்னோடு பகிர்ந்துகொள்வான்” என்று விளக்கினாள்.
“சரி! அவன் புளியமரத்தைப் போல இருப்பது எப்படி?” என்று கேட்டார் அம்மூம்மா.
“சில சமயம் கோபித்துக் கொண்டு புளியைப் போல கடுமையாக இருப்பான். அதன்பின் இருவரும் சண்டை போட்டுக்கொண்டு மாலை நேரம் முழுவதும் பேசாமல் இருப்போம்” என்றாள் மினி.
“அவன் கொய்யாவைப் போலக்கூட இருப்பானா?” என்று கேட்டார் அம்மூம்மா.
“ஓ, ஆமாம்! சில சமயம், அவன் இனிப்பாக இருப்பானா அல்லது கடுமையாக இருப்பானா என்று சொல்ல முடியாது! சின்னக் குழந்தைகளிடம் இனிமையாக இருப்பான். ஆனால், கால்பந்தாட்ட மைதானத்திலிருந்து எங்களைத் துரத்தும் பெரிய பையன்களிடம் கடுமையாகவும் கோபமாகவும் இருப்பான்” என்றாள் மினி.
அம்மூம்மா ராகேஷை அணைத்துக் கொண்டார்.
“விதவிதமான பழங்கள் உள்ள
ஒரு மரத்தை நான் பார்த்ததே இல்லை! நீ எனக்கும் நண்பனாக இருப்பாயா?” என்று கேட்டார்.
ராகேஷ் சிரித்துக் கொண்டே, “இருப்பேன், அம்மூம்மா!” என்றான்.
மினி கைத்தட்டி,
“மரங்களைப் போல
நண்பர்கள் இருப்பது
அருமையான விஷயம்!”
என்று குதித்தாள்.
“அதேபோல மரங்கள்
நண்பர்களாக இருப்பதும்!”
என்றார் அம்மூம்மா.