இதான் நான். அமன். இது என் டி-ஷர்ட். எவ்வளவு பளிச்சென்று சிவப்பாக இருக்கிறது பார்த்தீர்களா? என் சிவப்பு டி-ஷர்ட்டை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
என் சிவப்பு டி-ஷர்ட் ரொம்பப் பழசு. நான் சின்னப் பிள்ளையாக இருக்கும்போது இது எனக்குக் கிடைத்தது.
இது அடிக்கடி பழசாகியிருக்கிறது. மீண்டும் மீண்டும் இதைத் துவைத்திருக்கிறோம். இப்போது இதில் மூன்று ஓட்டைகள் இருக்கின்றன. அதைவிட நிறையவும் இருக்கலாம். ஆனால் என் டி-ஷர்ட் மெத்தென்று இருக்கிறது. எனக்குப் பிடித்தமாதிரி எனக்குப் பொருத்தமாக இருக்கிறது.
இது என் அம்மா. எனக்கு அம்மாவை ரொம்பப் பிடிக்கும். அம்மாவுக்கும் என் மேல் ரொம்ப பாசம்.
அவர் எனக்கு சாக்லேட்டுகள் தருவார். என் வீட்டுப்பாடம் செய்ய உதவுவார். சில சமயம் அவரை எனக்கு தலைசீவி விடவும் சொல்வேன்.
அம்மா என் சிவப்பு டி-ஷர்ட்டை வெறுத்தார். அதைத் தூக்கிப்போட விரும்பினார். “நான் உனக்கு புதுசா நல்லதா ஒரு டீஷர்ட் வாங்கித் தர்றேன்” என்பார். நான் அமைதியாக இருப்பேன்.
“இனிமே இந்த டி-ஷர்ட்டை நான் துவைக்க மாட்டேன்” என்று சத்தமாக சொன்னார்.
“என் டி-ஷர்ட்டை நீங்க தூக்கிப்போட முடியாது” என்று நான் இன்னும் சத்தமாக சொன்னேன்.
அம்மா என்னைப் பார்த்தார். நான் அவரை முறைத்தேன். நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. அவர் கொடுத்த ஜிலேபிகளை “வேண்டாம்” என்றேன். ஜானு அக்கா என் ஜிலேபிகளையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டாள்.
மாலை ஆகிவிட்டது. நண்பர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். எனக்கு விளையாட மனதில்லை. நான் ஓரமாக உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கிறேன். நிறைய குழந்தைகள் பழைய டி-ஷர்ட்டுகள் அணிந்திருக்கிறார்கள். பாருங்கள், சிலதில் ஓட்டைகளும் இருக்கின்றன.
குளிரத் தொடங்கிவிட்டது. இப்போது நான் வீட்டுக்குப் போகவேண்டும். இதுதான் பூ-பூ. எங்கள் தெருவில் இருக்கும் நாய். பாவம். இதற்கும் ரொம்ப குளிரும் இல்லையா!
அம்மா எனக்காக வீட்டில் காத்திருக்கிறார். நான் வந்ததும் கட்டிப் பிடித்துக்கொண்டார். “இந்த டி-ஷர்ட்டை இன்னும் மூன்று நாட்கள் போட்டிருக்கிறேன். அப்புறம் இதை பூ-பூவுக்கு கொடுத்துவிடுகிறேன். குளிர்காலத்தில் அதுக்கு கதகதப்பாக இருக்கும். என்னம்மா?” என்கிறேன். “தாராளமாக கொடுக்கலாம்” என்று அம்மா சிரிக்கிறார்.
எனக்கு என் சிவப்பு டி-ஷர்ட்டை ரொம்பப் பிடிக்கும். பூ-பூவுக்கும் அதைப் பிடித்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.
எப்போதாவது நான் கேட்டால் சிலநாட்கள் வைத்துக்கொள்ள தரும்தானே?