சில நேரங்களில், என் இதயம் வேகமாகத் துடிக்கிறது. சில நேரங்களில், நான் கத்துகிறேன், அலறுகிறேன். சில விஷயங்கள் என்னை சிரிக்க வைக்கின்றன. வேறுசில விஷயங்கள் முகம்கோணச் செய்கின்றன.
நான் எப்படி உணர்கிறேன் என்று தெரியுமா உங்களுக்கு? நான் அப்படி உணர்வது ஏன் என்று தெரியுமா உங்களுக்கு? நான் ஏன் சிரிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் ஏன் அழுகிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா?
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! என்ன சத்தம் அது? அந்த சீறும் ஒலி எங்கிருந்து வருகிறது? நான் உறைந்து போகிறேன், திணறுகிறேன், நடுங்குகிறேன். என் கண்கள் பயத்தில் விரிகின்றன.
இப்போது நான் எப்படி உணர்கிறேன்? அது உங்களுக்குத் தெரியுமா?
ஹைய்ய்ய்ய்யா! இன்று ஒரு சிறப்பான நாள். பாட்டி வருகிறார்! எங்களுடன் இருக்கப் போகிறார்! என் முகம் ஒளிர்கிறது, கண்கள் மின்னுகின்றன. நான் துள்ளிக் குதித்து கத்துகிறேன், “ஹே ஜாலி!”
இப்போது நான் எப்படி உணர்கிறேன்? அது உங்களுக்குத் தெரியுமா?
அய்யே! என்னுடைய காலணிகளில் துர்நாற்றம். என்னவென்று பார்த்தால், மாட்டுச் சாணி! நான் கையை முறுக்குகிறேன். மூக்கைச் சுருக்குகிறேன். அய்யே! அய்யய்யே!
இப்போது நான் எப்படி உணர்கிறேன்? அது உங்களுக்குத் தெரியுமா?
நூலகத்திலிருந்து எடுத்து வந்த புத்தகம் இது. இதை நான் திருப்பித் தரவேண்டும். ஆனால், அதில் சில பக்கங்கள் கிழிந்துவிட்டன. நான் நகங்களைக் கடிக்கிறேன், கொஞ்சம் வேர்க்கிறது. என் கால்கள் நடுங்கத் தொடங்குகின்றன.
இப்போது நான் எப்படி உணர்கிறேன்? அது உங்களுக்குத் தெரியுமா?
அதோ, அந்தப் பெரிய பெட்டியைப் பாருங்கள்... அது உண்மையிலேயே எனக்கு வந்திருக்கும் பரிசுதானா? வாயைப் பிளக்கிறேன், என் புருவங்கள் உயர்கின்றன. அது என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன்.
இப்போது நான் எப்படி உணர்கிறேன்? அது உங்களுக்குத் தெரியுமா?
அடடா! நான் நெளிகிறேன், கால்களை மாற்றி மாற்றி வைக்கிறேன். இன்று நான் ஒரு பொய் சொல்லிவிட்டேன். நான் தலையைக் குனிகிறேன், என் முகம் சிவக்கிறது. என்ன பேசுவது என்றே எனக்குத் தெரியவில்லை.
இப்போது நான் எப்படி உணர்கிறேன்? அது உங்களுக்குத் தெரியுமா?
உம்ம்ம்! பாட்டி ஊருக்குக் கிளம்புகிறார். நான் கையசைத்து அவரை வழியனுப்புகிறேன். என் உதடுகள் பிதுங்குகின்றன, கண்கள் சிவக்கின்றன. நான் அழத் தொடங்குகிறேன்.
இப்போது நான் எப்படி உணர்கிறேன்? அது உங்களுக்குத் தெரியுமா?
கிர்ர்ர்ர்ர்! எனக்கு தூக்கம் வரவில்லை! நான் தூங்க விரும்பவில்லை! பற்களை நறநறவென்று கடிக்கிறேன். தரையில் உதைக்கிறேன். என் முகம் மிகவும் சிவந்துவிட்டது.
இப்போது நான் எப்படி உணர்கிறேன்? அது உங்களுக்குத் தெரியுமா?
அம்மாவின் அணைப்புகள் அன்பானவை. அவை இதமாய், இனிமையாய் இருந்திடும். நான் பெருமூச்சு விடுகிறேன், புன்னகை செய்கிறேன். அவருடைய கன்னத்தில் முத்தமிடுகிறேன். என் கண்கள் பெரிதாய் ஒளிர்கின்றன.
இப்போது நான் எப்படி உணர்கிறேன்? அது உங்களுக்குத் தெரியுமா?