enakku motor bike otta aasai

எனக்கு மோட்டார் பைக் ஓட்ட ஆசை

தியாவுக்கு மோட்டார் பைக் என்றால் கொள்ளை ஆசை. எப்போது 16 வயதாகும், பைக் ஓட்டலாம் என்று காத்திருக்கிறாள். தன் சித்தி பைக் ஓட்டுபவர் என்று தெரிந்ததும் அவள் ஆசை இன்னும் அதிகமானது. சுய அடையாளம், சுதந்திரத்தை அடையும் முயற்சியைப் பற்றிய கதை இது.

- Saalai Selvam

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இவள்தான் தியா! இவள் தன் எட்டு வயதில் ஒரு பெண் மோட்டார் பைக் ஓட்டுவதைப் பார்த்தாள். அந்தக் காட்சி இவள் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.

தியாவுக்கு ஒன்பது வயதிருக்கும்போது ஒருநாள், தூரம் குறைவு என்று ஒருவழிப்பாதையில் தவறான திசையில் சென்றார் அவள் அப்பா. அப்போது எதிரில் ஒரு பெண் காரை ஓட்டி வந்ததால் தடுமாற்றம் ஏற்பட்டது. அது அப்பாவின் தவறுதான். ஆனால் அவர் “பெண்கள் ஓட்டினாலே இப்படித்தான்!” என்றார். தியாவால் அதை மறக்கவே முடியவில்லை.

தியா பதினோரு வயதில் பயணித்த ஒரு விமானத்தை ஓட்டிய இருவரும் பெண் விமானிகள். இறங்கியதும் காத்திருந்து அவர்களைச் சந்தித்து உரையாடிவிட்டு, புகைப்படமும் எடுத்துக் கொண்டாள் தியா.

12 வயதில் அப்பகுதியிலேயே மிகச்சிறப்பாக மிதிவண்டி ஓட்டுபவளாக மாறினாள். பெரும்பாலான போட்டிகளில் தியாதான் வென்றாள்.

11 ஆண்டுகள்

8 ஆண்டுகள்

9 ஆண்டுகள்

இப்பொழுது தியாவுக்கு 14 வயது! அவள் விமானியாக ஆகவேண்டும் என ஆசைப்படுகிறாள். ஆனால் அதற்குமுன் பைக் ஓட்ட ஆசை.

தியா தன் பக்கத்து வீட்டு ஷயனிடம் தனக்கு பிடித்த பைக் பற்றி பேசினாள். அதற்கு அவன், “பெண்கள் பைக் ஓட்ட முடியாது. மோட்டார் பைக் ஓட்டும் பெண்கள் எத்தனை பேரைப் பார்த்திருக்கிறாய்?” என்றான். “பல பேர் இருக்கின்றனர். உனக்குதான் தெரியவில்லை” என்றாள் தியா.

தியா தன் அப்பா அம்மாவிடம் வாகனங்கள், மோட்டார் பைக் குறித்து அடிக்கடி பேசிக்கொண்டே இருப்பாள். “அப்பா, ஸ்கூட்டரை விட பைக் பாதுகாப்பானது, தெரியுமா?” “அம்மா, நான் அனுப்பிய கட்டுரையைப் படித்தீர்களா? இந்தியாவில் பெண்கள் மோட்டார் பைக் குழுக்கள் பதினெட்டு உள்ளன. அவர்கள் ஒவ்வொரு வருடமும் ஒன்றுகூடி தொலைதூரம் பயணிக்கிறார்கள். எனக்கும் அவர்களுடன் பயணிக்க ஆசையாக இருக்கிறது.”

“ஷயன், அவனது அண்ணன் தில்லியிலிருந்து பெங்களூருவுக்கு பைக்கில் போனது பற்றி சொன்னான். அவ்வளவு தூரம் பைக்கிலேயே!” என்றாள் தியா. “இதற்கு செலவழிக்கும் நேரத்தில் பாதியை கணக்குப் பாடத்திற்கு செலவிட்டால் கூட, தேர்வுகளை இன்னும் நன்றாக எழுதலாம், தியா. போ, போய் வீட்டுப்பாடத்தைக் கவனி” என்றார் அப்பா.

ஒருநாள் தியா வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்தாள். அப்போது அம்மா கையில் ஒரு புத்தகத்துடன் அவள் அறைக்கு வந்தார்.

“என்னம்மா அது?” “இது புகைப்பட ஆல்பம்.  நாங்கள் கல்லூரி படித்தபோது எடுத்த புகைப்படங்கள்.”

தியா ஆர்வமுடன் புகைப்படங்களைப் பார்க்கத் தொடங்கினாள். “மோட்டார் சைக்கிளில் இருப்பது

அனிதா சித்தியா?” அனிதா சித்தி மும்பையில் வசிக்கிறார். அம்மாவின் உயிர்த்தோழி. தியாவுக்கு பிடித்த சித்தி.

“ஆம் அவளேதான்! ஆனால், அந்த பைக் சில வாரங்கள் மட்டுமே அவளுடையதாக இருந்தது. அனிதா வகுப்பில் இல்லை என்றால், ஊரைச் சுற்றி வலம் வந்து கொண்டிருப்பாள். அப்போது அவள் தன் தோழியிடமிருந்து வண்டி ஓட்டக் கற்றுக்கொண்டதே எனக்குத் தெரியாது.” “யமஹா வண்டியா வைத்திருந்தார்கள்? அது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்திருக்குமே! சரி, அப்புறம் என்ன ஆனது?” “கல்லூரிக்குச் செல்வதற்கும் அங்கிருந்து பகுதி நேர வேலைக்குப் போகவும் வண்டி வேண்டும் என தன் அப்பாவிடம் கேட்டாள். அவர் பணம் அனுப்பினார். அவர் ஸ்கூட்டர் என்று நினைத்து பணம் அனுப்பினார். இவள் யமஹா வாங்கிக்கொண்டாள்.”

தியா வியந்தாள். அம்மா ஏன் இந்தக் கதையை இதுவரை தன்னிடம் சொல்லவில்லை என்றும் புரிந்துகொண்டாள். “இது அப்பாவிற்கு தெரிந்ததும் கோபப்பட்டார். உடனே பைக்கை விற்கும்படி சொல்லிவிட்டார். இல்லாவிட்டால் படிப்பை நிறுத்திவிட்டு ஊருக்கு வரவேண்டும் எனக் கட்டளையிட்டார். அதனால் பைக்கை விற்றுவிட்டாள். அதற்காக மிகவும் வருத்தப்பட்டாள்” என்றார் அம்மா. “அவருக்கு எவ்வளவு வருத்தமாக இருந்திருக்கும் என்று யோசிக்க முடிகிறது” என்றாள் தியா. “இந்தப் புகைப்படம் உனக்குப் பிடிக்கும் என நினைத்தேன்” என்றார் அம்மா.

அதன் பிறகு சில வாரங்களுக்கு அனிதா சித்தியையும் அவளது வண்டியையும் அடிக்கடி நினைத்துக் கொண்டாள் தியா. பின் அனிதா சித்தியுடன் பேசலாமா என்று அம்மாவிடம் கேட்டாள். ஃபரா அத்தைதான் ஃபோனை எடுத்தார். “ஹலோ அத்தை, தியா பேசுகிறேன். எப்படி இருக்கீங்க? அனிதா சித்தி இருக்காங்களா?” “தியாவா? இரு அனிதாவிடம் போனைத் தருகிறேன்.” தியா நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

”அனிதா சித்தி, உங்களுக்கு ஒன்று தெரியுமா? நீங்கள் யமஹாவில் இருக்கும் போட்டோவை அம்மா என்னிடம் காட்டினார்களே!” அனிதா சித்தி பதில் சொல்ல கொஞ்சம் தாமதித்தார். “ஓ! அவள் அந்த போட்டோவை இன்னும் வைத்திருக்கிறாளா?”

“ஆமாம் சித்தி. சூப்பராக இருந்தது. எனக்குத் தெரியவே தெரியாது. எனக்கு மோட்டார் பைக் ரொம்பப் பிடிக்கும். ஆனால் அப்பாவுக்கு அது பிடிக்கவில்லை. பெண்கள் பைக் ஓட்டக்கூடாது என்கிறார். அதெல்லாம் பெண் பிள்ளைகள் செய்யும் வேலையில்லை என்று எல்லாருமே சொல்கிறார்கள். அது எரிச்சலாக இருக்கிறது.” தியா கொஞ்சம் தயங்கியவாறு தொடர்ந்தாள். “நீங்க எனக்கு பைக் ஓட்டக் கற்றுக் கொடுப்பீர்களா?” இதை கேட்டுக் கொண்டிருந்த அம்மா ஆச்சரியப்பட்டார். புன்னகைத்தார்.

அனிதா சித்திக்கும் ஆச்சரியமாக இருந்தது. “அதற்கு முதலில் கற்றுக்கொள்வதற்கான உரிமம் பெற வேண்டுமே, தியா. உனக்கு 16 வயது ஆனபிறகுதான் வாங்க முடியும்.”

“ஆமாம் அது அடுத்த வருஷம். ஆனால் எனக்கு உங்களிடம் பைக் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் எனக்கு சொல்லித் தருவீர்களா?” “நான் முதலில் உன் பெற்றோர்களிடம் இது பற்றிக் கேட்கிறேன்...” தியா நம்பிக்கையுடன் அம்மாவைப் பார்த்தாள். அம்மா தலையசைத்தார். “அம்மா சரி என்கிறார்கள் ! நான் அப்பாவிடம் பிறகு சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் செய்தது போல.” “இல்லை இல்லை. அப்படி செய்யக் கூடாது. நான் உன் அம்மாவுடன் பேசுகிறேன். நாங்கள் இருவரும் சேர்ந்து இதை அப்பாவிடம் எப்படிச் சொல்வது என்று யோசிக்கிறோம்.” “சரி, நன்றி சித்தி!”

“உன் அப்பா ஏன் கவலைப்படுகிறார் என்று எனக்குப் புரிகிறது. மோட்டார் பைக்ஓட்டுனராக மட்டுமல்லாமல் ஒரு மனிதராக நாம் பாதுகாப்புடனும் அக்கறையுடனும் நடந்து கொள்வது மிக முக்கியம். பைக் ஓட்டுவது மகிழ்ச்சியூட்டுவதே. ஆனால் நீ எவ்வளவு வேகமாய் ஓட்டுகிறாய் என்பதைவிட வண்டியை எப்படி ஓட்டுகிறாய் என்பது முக்கியம்.”

அன்று இரவு, தியா அவள் அறையில் இருந்தாள். அப்பாவும் அம்மாவும் பேசிக்கொள்வது கேட்டது. “நீ ஏன் அந்த போட்டோவை தியாவிடம் காட்டினாய்? இனி அவள் அதை விடப்போவதில்லை.” என்றார் அப்பா. “அவள் சுதந்திரமாக செயல்பட விரும்புகிறாள். அது நல்லதுதானே!” அம்மா பதிலளித்தார். “அவள் பஸ்ஸில் போகட்டும்! பைக் எதற்கு? அது பாதுகாப்பில்லை!” “ராகுல் கற்றுக்கொள்ள உரிமம் பெற்றபோது உற்சாகமாக பாராட்டினீர்களே! இதென்ன இரட்டை நியாயம்?” அப்பா எப்பொழுதுமே புரிந்துகொள்ளப் போவதில்லை. தியா வருத்தமுற்றாள்.

அடுத்த நாள் தியாவும் ஷயனும் கிரிக்கெட் ஆடி முடித்து எப்பொழுதும்போல் சைக்கிளை போட்டியுடன் ஓட்டி வந்தனர். ஷயன், தான் ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தான். சாலையோரம் நடந்து கொண்டிருந்த சிறுவனை இடித்துவிடுவது போல மிக அருகே ஓட்டிச்சென்றான்.

“நான் ஜெயித்துவிட்டேன் பார். சைக்கிளிலும் நான்தான் உன்னைவிட சிறந்தவன்...” என்றான் ஷயன். “நீ அந்தச் சிறுவனை இடித்திருப்பாய். உனக்கு என்ன ஆச்சு?” என்றாள் தியா. அவள் அச்சிறுவனிடம் ஓடிச்சென்று அவனுடைய பயத்தைப் போக்கி ஆறுதல்படுத்திவிட்டு வந்தாள். அப்பா மாடியிலிருந்து இதை கவனித்ததை அவள் அறியவில்லை. அன்று மாலை அனிதா சித்தியை அழைத்தார் அப்பா.

சில நாட்கள் கழித்து அப்பா, தியாவின் அறைக்கு வந்தார். அப்பொழுது தியா கம்ப்யூட்டரில் விளையாடிக்கொண்டிருந்தாள். “நீ அனிதா சித்தியோடு பேசினாயாமே!” தியா பதட்டத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.

“அப்பா ப்ளீஸ், சித்தியே எனக்கு பாதுகாப்பாகக் கற்றுக் கொடுப்பதாக சொன்னார்கள். நான் பணம் சேர்க்கவும் தொடங்கிவிட்டேன். ஸ்கூட்டரை விட பைக் பாதுகாப்பானது என்று உங்களுக்குத் தெரியும்தானே! அதற்கு பெரிய சக்கரங்கள்...” ”பைக் பற்றி இவ்வளவு உனக்குத் தெரிகிறது. ஆனால் ஹெல்மட் பற்றி என்ன தெரியும்?” என்று அப்பா கேட்டார். தியா குழம்பினாள். “முதலில் ஒரு ஹெல்மெட் வாங்கிக் கொள்! நீ பாதுகாப்பாய் இருக்க வேண்டும்.” என்றார் அப்பா. “அப்படின்னா சித்தி எனக்கு சொல்லிக்கொடுக்கப் போகிறார்களா, அப்பா ?” “ஆமாம், அடுத்த வருடம் மும்பை செல்லும்பொழுது. உனக்கு அப்போதும் கற்றுக்கொள்ள விருப்பம் இருந்தால்.” “நன்றி அப்பா!” அப்பாவை அணைத்துக்கொண்டாள் தியா. “இதற்கு பதிலாக, நீ பைலட் ஆனதும் என்னை எல்லா இடத்திற்கும் விமானத்தில் அழைத்து செல்ல வேண்டும்.” “என்னையும்தான்!” என்றார் அம்மா. “நிச்சயமாக! ஆனால் முதலில் பைக்கில் அழைத்துச் செல்கிறேன்” என்றாள் தியா.

உலகெங்கும் உள்ள முன்னோடி பெண் பைக் ஓட்டுநர்கள்

- ஆன்னி லாண்டன்டெரி, லாட்வியாலிருந்து அமரிக்காவில் குடியேறியவர். 1894 – 95இல் மோட்டார் சைக்கிளில் உலகைச் சுற்றி வந்த முதல் பெண்.

- அமெரிக்காவைச் சேர்ந்த, சமூக உரிமைகளுக்காகப் போராடிய தலைவர் ஸூசன் பி ஆண்டனி 1894இல்“சைக்கிள், பெண்களின் வாழ்வை முன்னேற்றியது போல் இவ்வுலகில் வேறு எதுவும் செய்யவில்லை என்பது என் எண்ணம். பெண்களுக்கு சுதந்திர உணர்வை அளிப்பதோடு தன்னிச்சையாக செயல்பட ஏதுவாக இருந்தது.” என்று எழுதினார்.

- பெஸ்ஸி ஸ்ட்ரிங்ஃபீல்ட், ஆப்பிரிக்க-அமெரிக்க பெண் மோட்டார் பைக் ஓட்டுநர். 1930களில் (சிவில் உரிமை இயக்கத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்)அமெரிக்கா முழுவதும் பல முறை வலம் வந்தவர், ஆண்களுக்கான மோட்டார் பைக் பந்தயங்களில் பங்கெடுத்தவர். (ஆனால் அவர் பெண் என்று தெரிந்ததும் அவரது பரிசு நிராகரிக்கப்பட்டது.) - எல்ஸ்பெத் பியர்ட், கட்டிட வடிவமைப்புக்கலைஞர் மற்றும் மோட்டார் பைக் ஓட்டுநர். 1982 -1984இல் மோட்டார் சைக்கிளில் முதன்முதலாக உலகைச் சுற்றி வந்த பெண்களில் ஒருவராக அறியப்படுபவர்.

- ரோஷிணி ஷர்மா, 2014இல் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை மோட்டார் சைக்கிளில் பயணித்த முதல் இந்தியப் பெண். - 2018இல் எல்லை பாதுகாப்புப் படையில் பெண்கள் பைக் குழு இருந்தது. சீமா பவானி அல்லது எல்லை வீரர்கள் என அக்குழுவை அழைத்தனர். வரலாற்றில் முதல் முறையாக இக்குழுதான் குடியரசு தின மோட்டார் பைக் சாகச நிகழ்வில் பங்கெடுத்தது.