ஒருநாள் எறும்பு ஒன்று
உணவு தேடிச் சென்றது.
அதற்கு, சமையலறையில் முளைகட்டிய
பச்சைப்பயறு ஒன்று கிடைத்தது.
எறும்பு அந்த பச்சைப் பயறை
தூக்க முயன்றது.
அது மிகவும் கனமாக இருந்தது.
எனவே எறும்பு அந்த பச்சைப் பயறை
இழுத்துக் கொண்டு அதன்
வீட்டிற்குச் செல்ல ஆரம்பித்தது.
அதன் வீடோ மிக தொலைவில் இருந்தது.
வழியில் தெருவிலிருந்த குழாயை
யாரோ திறந்து விட்டிருந்தார்கள்.
தண்ணீர் அதிலிருந்து விழுந்து
பாய்ந்து கொண்டிருந்தது.
அந்தச் சிறிய எறும்புக்கு அதுவே ஒரு
நதிபோலத் தோன்றியது.
எப்படியோ அதைத் தாண்டி வந்துவிட்டது.
அதன் வீடோ மிக தொலைவில் இருந்தது.
எறும்பு ஒரு வாளியைப் பார்த்தது.
பச்சைப் பயறை கையில் பிடித்துக்
கொண்டு அதன் மீது ஏற முயன்றது.
எவ்வளவு முயன்றும் வழுக்கி
விழுந்து கொண்டே இருந்தது.
சற்று நேரத்தில் இன்னொரு
எறும்பு அங்கு வந்தது.
இருவரும் பேசிக் கொண்டு,
வாளியைச் சுற்றி பச்சைப் பயறை
இழுத்துச் சென்றார்கள்.
சற்று தூரத்தில் ஒரு பெண் தன் வீட்டை
சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
விஷ்... என்று ஒரு வீச்சு... எறும்பு ஒரு பக்கமும்,
பச்சைப் பயறு இன்னொரு பக்கமும் விழுந்தது.
எறும்பு தன் பச்சைப் பயறை எடுக்க ஓடியது.
அதன் வீடோ இன்னும் மிக தொலைவில் இருந்தது.
அடுத்து எறும்பு தூங்கிக்கொண்டிருந்த
ஒரு நாயின் அருகில் வந்தது.
நாய் பலமாகத் தும்மியது... பச்சைப் பயறு
உருண்டு நாயின் வாயருகே சென்றது.
எறும்பு மிக கவனமாக
நாயின் அருகே சென்றது.
நாய் ஒரு கண்ணை மட்டும் திறந்து
எறும்பைப் பார்த்தது.
எறும்பு பச்சைப் பயறை எடுத்துக்
கொண்டு செல்லத் தொடங்கியது.
அதன் வீடோ வெகு தொலைவில் இருந்தது.
மிக அருகிலேயே ஒரு கோழிக்குஞ்சு
தானியங்களை கொத்தி சாப்பிட்டுக்
கொண்டிருந்தது.
பச்சைப் பயறு அதன் கண்ணில் பட்டுவிட்டது.
அதனைக் கொத்த முயன்றது.
ஐயோ... பச்சைப் பயறு எனக்கில்லை
என்று வருத்தத்துடன் நினைத்தது எறும்பு.
அதே சமயம் பப்பாளி மரத்தின்
கீழே இருந்த தாய்க் கோழி குஞ்சை அழைத்தது.
க்ளக்... க்ளக்... க்ளக்.
கோழிக்குஞ்சு பச்சைப் பயறை
விட்டு விட்டு தாயை நோக்கி ஓடியது.
திரும்பவும் எறும்பு பச்சைப் பயறை
எடுத்துக் கொண்டு, வீட்டை நோக்கி நடந்தது.
அவளது வீடோ இன்னும்... இல்லை இல்லை,
இப்பொழுது அவள் முன்னாலேயே இருந்தது!
பருப்பு வகைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
இந்தப் புத்தகத்தில் ஒரு எறும்பு முளைகட்டிய ஒரு பச்சைப் பயறை பார்க்கிறது. முளை கட்டிய பருப்பு வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ராஜ்மா, காராமணி, உளுந்து மற்றும் கொள்ளு இவைகளையும் முளை விடச்செய்யலாம்.
தானிய விளையாட்டு
உங்கள் நண்பர்களோடு சேர்ந்து இந்த விளையாட்டின் மூலம் விதவிதமான தானியங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டு சமையலறையிலிருந்து காராமணி, ராஜ்மா, துவரம் பருப்பு, சோயா, பச்சைப் பயறு மற்றும் பட்டாணி போன்ற பருப்பு வகைகளைக் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.
எல்லாவற்றையும் ஒரு கிண்ணத்தில் போடுங்கள். ஒருவரது கண்ணைக் கட்டுங்கள், அவர் தானியத்தை தடவிப் பார்த்து அதன் பெயரைச் சொல்ல வேண்டும். எத்தனை பெயர்களை சரியாகச் சொல்கிறார் என்று பாருங்கள்.
இன்னொரு விளையாட்டு: எல்லோரையும் கண்களை மூடிக்கொள்ள சொல்லி, கலந்துள்ள விதவிதமான தானியங்களை தனித்தனியாக பிரிக்கச் சொல்லுங்கள்.