flamingovin natanam

ஃப்ளமிங்கோவின் நடனம்

தண்ணீரில் தாமரை மலர்களைப்போல் வாழும் இளஞ்சிவப்பு ஃப்ளமிங்கோக்கள், இயற்கையின் அபூர்வமான அழகுகளில் ஒன்று. அவை ஏன் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளன? ஒருவேளை, அவை அழகுப்பொருள்களைப் பயன்படுத்தி ஒப்பனை செய்துகொள்ளுமோ? அவற்றின் நீளமான கழுத்தில் ஏதேனும் எலும்புகள் உண்டா? இந்தப் புகைப்படப் புத்தகத்தை வாசியுங்கள், இப்பறவைகளைப்பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

- Lalitha Ranganathan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பளபளக்கும் இளஞ்சிவப்புச் சிறகுகளை விரித்து நீல நிற ஏரியில் இளஞ்சிவப்பு மேகம்போல், பாலே நடனமணிகள்போல் ஒற்றைக்காலில் நிற்கும் ஃப்ளமிங்கோக்கள்... பறவை உலகின் அழகு ராணிகள்.

பாலே: இசைக்கேற்ற லேசான நளினமான அசைவுகளுடன் கூடிய ஒரு வகை நாட்டியம்.

ஃப்ளமிங்கோவின் சிறகுகளுடைய நிறத்தினால்தான் அவற்றுக்கு இந்தப் பெயர் வந்தது. ‘ஃப்ளமென்கோ’ என்றால், ஸ்பானிய மொழியில் ‘நெருப்பு’ என்று பொருள்.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஒரு புகழ்பெற்ற நடனத்துக்கும் ‘ஃப்ளமென்கோ’ என்று பெயர். இந்த நடனத்துக்கு இந்தப் பெயர் வரக் காரணம், நடனமணிகளின் அசைவுகள் ஃப்ளமிங்கோவின் அசைவுகளைப்போலவே இருந்ததுதான் என்கிறார்கள் சிலர்.

ஃப்ளமிங்கோ என்றவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருவது அதன் இளஞ்சிவப்பு நிறம்தான். அந்த நிறத்துக்கு என்ன காரணம் தெரியுமா? அவை சாப்பிடும் உணவுகள்தான்! ஃப்ளமிங்கோக்கள் சிறு மீன்கள், நண்டுகள் மற்றும் நீரில் வளரும் சிறு செடி,கொடிகளை உண்ணுகின்றன. இவற்றில் உள்ள சில நிறமிகள்தான் ஃப்ளமிங்கோவை இளஞ்சிவப்பாக மாற்றுகின்றன.

ஒருவேளை யாராவது ஃப்ளமிங்கோக்களை அவற்றின் இயற்கையான இருப்பிடத்திலிருந்து மாற்றிவிட்டால், அவற்றுக்கு இந்த உணவுகளைத் தராவிட்டால், கொஞ்சம்கொஞ்சமாக அவை வெண்மையாக மாறும்.

ஃப்ளமிங்கோக்கள் நீர்ப்பறவைகள் ஆகும். அவற்றுக்குத் தேவையான உணவானது நீரில் கிடைப்பதால், அவை கடற்கரை, ஏரிகளுக்கு அருகில் வசிக்கும்.

இவை மிகவும் உயரமான பறவைகள். சில பறவைகள் 1.5மீட்டர் உயரம்கூட வளரும், கிட்டத்தட்ட ஒரு சராசரி மனிதனின் உயரம்!

தண்ணீரில் வெகுதூரம் நடப்பதற்காக, ஃப்ளமிங்கோக்களுக்கு மிக நீண்ட கால்கள் உள்ளன.

பொதுவாக ஃப்ளமிங்கோக்களின் புகைப்படங்களில் அவை அதிக ஆழமில்லாத நீரில் நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கலாம். ஆனால் உண்மையில், அவற்றால் நீந்தவும் முடியும். வாத்துகள் போன்ற பிற நீர்ப்பறவைகளைப்போலவே, ஃப்ளமிங்கோக்களுக்கும் கால் விரல்கள் மெல்லிய தோலினால் இணைக்கப்பட்டிருக்கும்.

பறவைகளின் கால் விரல்கள் இணைக்கப்பட்டிருந்தால், அவற்றால் தண்ணீரைப் பின்னோக்கித் தள்ள இயலும், நீரில் நீந்திச்செல்ல இயலும்.

ஃப்ளமிங்கோக்கள் நன்கு பறக்கக்கூடியவை, அவற்றால் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்துக்குமேல் பறக்க இயலும்,

கிட்டத்தட்ட ஒரு காரின் வேகம்!

அதேபோல், அவை நெடுந்தூரம் பறக்கவல்லவை, ஒரே மூச்சில் 500 கிலோமீட்டர்வரைகூடப் பறக்கும். இது சென்னைக்கும் மதுரைக்கும் இடையிலுள்ள தூரத்தைவிட அதிகம்.

ஃப்ளமிங்கோக் கூட்டம் வானில் பறக்கத்தொடங்குவதே ஓர் அழகு!

விமானத்தைப்போல, இவையும் பறப்பதற்குமுன் வேகமெடுக்கவேண்டும். அதற்காக, அவை நளினமாகச் சிறகடித்தபடி ஓடிவரும், பிறகு அழகாக வானில் எழும்பிப் பறக்கும்.

மற்ற பறவைகளுகும் ஃப்ளமிங்கோவுக்கும் என்ன வித்தியாசம்?

அவற்றின் இளஞ்சிவப்பு நிறம் ஒரு முக்கியமான வித்தியாசம். அதேபோல், அவற்றின் கழுத்து மிக மிக நீளமானது. அதில் 19 எலும்புகள் உள்ளன. ஃப்ளமிங்கோவின் நீண்ட கழுத்து கிட்டத்தட்ட ஒரு நீளமான தூண்டிலைப்போலவே வேலைசெய்யும், அவை மீன்பிடிக்க உதவும்.

பறவைகளின் அளவுக்கும் அவற்றின் ஆயுளுக்கும் தொடர்புண்டு. ஒரு பறவை பெரியதாக இருக்கிறது என்றால், அதன் ஆயுள் அதிகம் என்று பொருள். அந்தக்கோணத்தில் பார்த்தால், மிகப்பெரிய பறவையான ஃப்ளமிங்கோ நீண்டநாள் வாழ்வதில் ஆச்சர்யமில்லை.

பொதுவாக ஃப்ளமிங்கோக்கள் 20 முதல் 30 ஆண்டுகள்வரை வாழுகின்றன. ‘கிரேட்டர் ஃப்ளமிங்கோ’ வகைப் பறவைகள் 30 முதல் 33 வருடங்கள்வரை வாழுகின்றன. மிக அதிக நாள் வாழும் பறவைகளில் ஒன்று ஃப்ளமிங்கோ!

ஆயுள்: ஒரு மனிதர் அல்லது பறவை வாழுகிற ஆண்டுகளின் எண்ணிக்கை

ஃப்ளமிங்கோக்களில் மொத்தமே 6 வகைகள்தான். ஆனால், அவை உலகின் எல்லாப் பகுதிகளிலும் உள்ளன: வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியாவில் இவற்றைக் காணலாம்.

உங்களுக்குத் தெரியுமா?

ஃப்ளமிங்கோக்களிலேயே அருகிவரும் வகை, ‘ஆண்டியன் ஃப்ளமிங்கோ’. தற்போது உலகில் இந்தப் பறவைகள் 30,000க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன.

அருகிவரும் பிராணிகள்: அழியும் நிலையில் உள்ள பிராணிகள். அதாவது, ஒரு குறிப்பிட்ட விலங்கு அல்லது பறவையில் ஒன்றுகூட உலகில் மீதமில்லாமல் அழிந்துவிடக்கூடிய நிலை.

ஃப்ளமிங்கோக்களை இந்தியாவில் பல இடங்களில் காணலாம். இவை ராஜஸ்தான், குஜராத், ஒடிஸா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் அதிகம் காணப்படுகின்றன.

இந்தியாவில் இருவகையான ஃப்ளமிங்கோக்கள் உள்ளன: கிரேட்டர் ஃப்ளமிங்கோ, லெஸ்ஸர் ஃப்ளமிங்கோ. இதில் கிரேட்டர் பிளமிங்கோ என்பது லெஸ்ஸர் பிளமிங்கோவைவிட உயரமானது.

நீல நிற ஏரிகள், நீர்நிலைகளில், இளஞ்சிவப்புப் பூவிரிப்புகளைப்போல் ஆயிரக்கணக்கான ஃப்ளமிங்கோக்களைக் கூட்டம்கூட்டமாகக் காணலாம். மற்ற இடங்களைவிட, கிழக்கு ஆப்பிரிக்க ஏரிகளில் காணப்படும் ஃப்ளமிங்கோக் கூட்டங்கள் மிகப்பெரியவை. இங்கே ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பறவைகள் கூடுவதுண்டு.

ஃப்ளமிங்கோக்கள் பெரிய கூட்டமாகவே வாழ விரும்புகின்றன. காரணம், கூட்டமாக வாழும்போதுதான் அவை பாதுகாப்பாக உணர்கின்றன.

உங்களுக்குத் தெரியுமா?

- குஜராத்தின் மாநிலப் பறவை ஃப்ளமிங்கோ. அங்கே ஆயிரக்கணக்கான ஃப்ளமிங்கோக்கள் உள்ளன.

- ஃப்ளமிங்கோக்களின் கூட்டத்தை ‘மந்தை’ அல்லது ‘காலனி’ என்பார்கள்.

இவை நீரில் உணவைத் தேடும்போது, நெடுநேரம் தலையை நீருக்குள் வைத்திருக்கும். அதுபோன்ற நேரங்களில் ஏதேனும் ஆபத்து வந்தால், ஒரு பறவை இன்னொரு பறவையை எச்சரித்துப் பாதுகாக்கும்.

இந்தப் புகைப்படம், கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ‘பகோரியா ஏரி’யில் எடுக்கப்பட்டது. இங்குள்ளவை லெஸ்ஸர் ஃப்ளமிங்கோக்கள். பகோரியா ஏரி மிகவும் தனித்துவமானது, அதைச் ‘சோடா ஏரி’ என்று கூறுவார்கள். காரணம், இந்த ஏரியின் நீரில் விதவிதமான உப்புகள் மிக அதிக அளவில் கலந்திருக்கின்றன. ஆகவே, பல விலங்குகள் இங்கே வருவதில்லை.

ஆனால், ஃப்ளமிங்கோவுக்கோ, இதுபோன்ற ஏரிகள் ‘ஐந்து நட்சத்திர உணவக’ங்களைப்போன்றவை. காரணம், இந்த ஏரிகளில் ஃப்ளமிங்கோக்களுக்கு மிகவும் பிடித்த தாவரங்கள் நிறைய வளர்கின்றன. உப்பு நீர் ஏரி என்பதால் மற்ற விலங்குகள், பறவைகள் இங்கே வராது. ஆகவே, போட்டியில்லாமல் ஃப்ளமிங்கோக்கள் நன்றாக உண்ணலாம். இந்தச் சோடா ஏரியில் இன்னொரு பிரச்னை, இதன் நீர் கிட்டத்தட்ட ‘காரத்தன்மை’யோடு காணப்படுகிறது. பல மிருகங்களின்மீது இந்த நீர் பட்டால், அவற்றின் தோல் எரிய ஆரம்பித்துவிடும். ஆகவே, அவை ஒதுங்கியே நிற்கின்றன.

ஆனால், இதே நீர் ஃப்ளமிங்கோக்களை எதுவும் செய்வதில்லை. ஆகவே, ஃப்ளமிங்கோக்கள் இங்கு பாதுகாப்பாக உணர்கின்றன. ஏதாவது விலங்கு தாக்க முயன்றால், சட்டென்று நீருக்குள் ஆழமாகச் சென்று தப்புகின்றன.

உங்களுக்குத் தெரியுமா?

ஃப்ளமிங்கோக்கள் தலையைத்

தலைகீழாக வைத்தபடி உண்ணுகின்றன.

ஃப்ளமிங்கோக்கள் உணவு உண்பதே விநோதமாக இருக்கும்:

*   அவை முதலில் மண்ணையும் தண்ணீரையும் தன் காலாலும் அலகாலும் கலக்குகின்றன

*   பிறகு, அலகை நீரில் விட்டு மண்கலந்த நீரை அள்ளுகின்றன, சில சமயங்களில் மொத்தத் தலையையும் நீரில் விடுவதும் உண்டு.

*   அவற்றின் தலைகீழான அலகு, ஒரு சல்லடைபோல் செயல்பட்டு நீரை வடிகட்டுகிறது. ஆனால், அதிலுள்ள சிறு தாவரங்கள், பிராணிகள் அலகிலேயே தங்கிவிடுகின்றன, தேநீர் போடும்போது தேநீர் இலைகள் சல்லடையிலேயே தங்கிவிடுவதைப்போல!

*   பின்னர், அந்தச் சிறு தாவரங்கள், பிராணிகளை ஃப்ளமிங்கோ சுவைத்து உண்கிறது.

இனப்பெருக்கக்காலம் வந்தவுடன் ஃப்ளமிங்கோக்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ளத் தொடங்குகின்றன. ஃப்ளமிங்கோக்களுக்கு முகப்பூச்சுப் பவுடரோ உதட்டுச்சாயமோ தேவையில்லை, அவற்றின் வாலின் அருகே ஒரு சுரப்பி இருக்கிறது, அதில் சுரக்கும் எண்ணெயை இறகுகளில் பூசிக்கொள்கின்றன, அதன்மூலம் அந்த இறகுகள் பிரகாசமான இளஞ்சிவப்பு நிறத்தைப் பெறுகின்றன.

மற்ற பறவைகளைப்போல் இவை ஒவ்வொரு வருடமும் முட்டையிடுவதில்லை. மழை வரும்போதுதான் முட்டை இடுகின்றன. இதற்குப் பல காரணங்கள் உண்டு: அவை கூடுகட்டத் தேவையான பொருட்கள் மழையின்போதுதான் நன்கு கிடைக்கின்றன. அதேபோல், மழைநீரினால் நிரம்பிய ஏரி, குளங்களில் நிறைய சிறு ஜீவராசிகள் நிறைந்திருக்கும். அவற்றை ஃப்ளமிங்கோக்கள் விரும்பி உண்ணும். தாய்ப்பறவைகளுக்கு, எப்போதும் பசியாக இருக்கும் குஞ்சுகளுக்கு மழை மிக அவசியம். ஃப்ளமிங்கோக்கள் கூட்டமாக வசிப்பதால், மழையைப்பொறுத்து அவற்றின் கூட்டம்முழுவதும் குஞ்சுகளால் நிரம்பியிருக்கும். இல்லையானால், குஞ்சுகளே இருக்காது.

முட்டை இடுவதற்குமுன் கூடு கட்டவேண்டும். மற்ற பறவைகள் மரத்தில் குச்சிகளை வைத்துக் கூடுகட்டுகின்றன. ஆனால், ஃப்ளமிங்கோக்கள் தரையில் கூடுகட்டுகின்றன! அதாவது, குச்சிகள், கல் மற்றும் மண்ணினால் தரையில் ஒரு சிறு எரிமலைபோல் உருவாக்குகின்றன.

அதுதான் அவற்றின் கூடு! இங்கேதான் ஃப்ளமிங்கோக்களின் இன்னொரு புத்திசாலித்தனத்தைப் பார்க்கலாம், அவை தங்களுடைய கூட்டின் மேல்பகுதியை உட்குழிவாக அமைக்கின்றன, அப்போதுதான் முட்டைகள் உருண்டு ஓடாது!

ஃப்ளமிங்கோவின் முட்டைகள் பெரியதாக இருக்கும். அதனால், பெண் பறவை அநேகமாக ஒரே ஒரு முட்டைதான் இடும். அதனைப் பெற்றோர் பறவைகள் ஒருமாதம்வரை மாறி மாறி அடைகாக்கும். அதாவது, முட்டையின்மீது அமர்ந்து அதனைக் கதகதப்பாக வைத்திருக்கும்.

அதன்பிறகு, ஃப்ளமிங்கோ குஞ்சுகள் வெளிவருகின்றன. ஆச்சர்யமான விஷயம், இவை தங்களுடைய பெற்றோரைப்போல் இளஞ்சிவப்பாக/சிவப்பாக இருக்காது, சாம்பல்நிறமும் வெள்ளையுமாகதான் இருக்கும். இளஞ்சிவப்பு நிறம் மூன்று வருடத்துக்குப்பிறகுதான் வரும்.

குஞ்சு வெளியே வந்ததும், தாய், தந்தைப் பறவைகளுக்கு வேலை ஆரம்பமாகிறது. இரண்டு வாரம்வரை குஞ்சுப்பறவை கூட்டிலேயே இருக்கும் பெற்றோர் பறவைகள் தங்கள் உடலிலேயே உண்டாக்கும் ஒருவிதப் பாலை அதற்கு ஊட்டுகின்றன. அதன்பிறகு, நீரில் வாழும் ஜீவராசிகளைத் தேடியெடுத்துச் சாப்பிடுவது எப்படி என்று தங்கள் குஞ்சுக்குக் கற்பிக்கின்றன. குஞ்சு ஃப்ளமிங்கோ சுதந்தரமாகிறது.

மனித இனத்தில், வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்களுடைய குழந்தைகளைக் காப்பகத்தில் விடுவதுண்டு. சிறுவயதில் நீங்கள்கூட ஒரு காப்பகத்துக்குச் சென்றிருக்கலாம்.

அதுபோல, ஃப்ளமிங்கோக் கூட்டத்திலும் காப்பகங்கள் உள்ளன. சில பெரிய பறவைகள் பல குஞ்சுகளைக் கவனித்துக்கொள்கின்றன.

சில காப்பகங்களில் ஆயிரக்கணக்கான குஞ்சுகள்கூட இருக்கும். பெற்றோர் பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்கு உணவளிக்க அங்கே வரும்.

ஆனால், அத்தனை குஞ்சுகளில் தங்கள் குஞ்சு எது என்று பெற்றோர் பறவைகள் எப்படிக் கண்டுபிடிக்கும்?

குரல்தான் அடையாளம். குஞ்சுகளின் குரலை வைத்துப் பெற்றோர் பறவைகள் அவற்றைக் கண்டுபிடித்துவிடும்!

ஃப்ளமிங்கோக்கள் ஒன்றுடன் ஒன்று அதிகமாகப் பேசிக்கொள்கிறவை. உறுமுதல், கார் ஹார்னைப்போல சத்தமிடுதல் போன்றவைதான் அவற்றின் ‘பேச்சு’. இப்படி அவை அடிக்கடி தங்களுக்குள் பேசிக்கொள்வதால், அவற்றின் கூட்டம் ஒற்றுமையாக இருக்கும்.

நம்முடைய சுற்றுச்சூழலில், ஃப்ளமிங்கோக்களின் பங்கு என்ன?நீர்ப்பறவைகளான ஃப்ளமிங்கோக்கள் நீர்நிலைகளில் உள்ள பாசி மற்றும் நுண்ணிய ஜீவராசிகளை உண்ணுகின்றன. அதன்மூலம், நீரில் பாசி நிரம்புவதைத் தடுக்கின்றன.

இன்னொரு விஷயம், இந்தப் பிரபலமான பறவைகளைக் காண்பதற்காகவே சுற்றுலாப்பயணிகள் உலகின் பல பகுதிகளுக்குச் செல்கிறார்கள். அந்தப் பகுதிகளில் வாழுகிறவர்கள் இவர்களுக்கு ஏற்ற தங்கும் விடுதிகள், உணவகங்களை நடத்துகிறார்கள், வாகனங்களை இயக்குகிறார்கள், அதன்மூலம் சம்பாதிக்கிறார்கள். அதாவது, ஃப்ளமிங்கோக்களை நம்பிப் பல மக்கள் வாழ்கிறார்கள்.

இந்த அழகான பறவைகளுக்கு இயற்கையான எதிரிகள் உண்டா? சோடா ஏரிகள், அதிக கரிப்புத்தன்மை உள்ள நீர்நிலைகளில் ஃப்ளமிங்கோக்கள் வசிப்பதால், அவை பெரும்பாலும் நன்கு பாதுகாக்கப்படுகின்றன. சில நேரங்களில் ஃப்ளமிங்கோக் குஞ்சுகளைப் பருந்துகள், கழுதைப்புலிகள் மற்றும் குள்ளநரிகள் வேட்டையாடுவதுண்டு.

ஆனால், மனிதனால்தான் இந்தப் பறவைகளுக்கு மிகப்பெரிய ஆபத்து. மனிதர்கள்  ஃப்ளமிங்கோக்களை இறைச்சிக்காக வேட்டையாடுவதில்லை, ஆனால், அவை வாழும் இடங்களுக்கருகே சாலைகள், பண்ணைகள், தொழிற்சாலைகள், நகரங்களை அமைத்துத் தொந்தரவுசெய்கிறார்கள், அதன்மூலம் ஃப்ளமிங்கோக்களை அங்கிருந்து துரத்திவிடுகிறார்கள். அந்த ஃப்ளமிங்கோக்கள் என்ன செய்யும்? அவற்றுக்குப் பொருந்தும் வேறு இடம் கிடைப்பது சிரமமாக இருப்பதால், அவற்றின் இனப்பெருக்கம் குறைந்துவிடும்.

உயிருள்ள தாமரைபோல் நீரில் வாழும் இந்த நளினமான, அழகான பறவைகள் இயற்கை உலகின் ஒரு மிக அற்புதமான காட்சி. இந்தக் காட்சி என்றென்றும் நிலைத்திருக்க நாம் உறுதிகொள்வோம்.

இந்தப் புத்தகம், ‘பறவைகளின் அழகைப் பார்க்கச்சொல்லி, அதற்காக என்னுடைய கண்களை விண்ணை நோக்கித்

திறந்துவைத்த மைத்ரேயாவுக்காக.’