இதோ ஒரு இறகு, இதோ ஒரு கல். இவற்றில் எது கனமானது, எது இலேசானது?
என்ன முட்டாள்தனமான கேள்வி என்கிறீர்களா? கல் கனமானது; நிச்சயமாக இறகுதான் இலேசானது.
இதோ ஒரு யானை மற்றும் அதே கல்.
இவற்றில் எது கனமானது, எது இலேசானது?
என்ன அர்த்தமில்லாத கேள்வி இது என்கிறீர்களா? யானை கனமானது; நிச்சயம் கல்தான் இலேசானது.
பொறுங்கள்! இப்போதுதானே கல் கனமானது என்று சொன்னீர்கள்?
ஆமாம், அது இறகைவிட கனமானது என்பதால்! ஆனால் அது யானையைவிட மிகமிக இலேசானது.
அப்படியென்றால், “இது கனமானது” என்றோ அல்லது “இது இலேசானது” என்றோ சொல்வது சரியல்லதானே?
‘இது வேறு ஒன்றைவிட கனமானதா?
இது வேறு ஒன்றைவிட இலேசானதா?’ இப்படிக் கேட்பது சரியாக இருக்குமோ?
அப்படியென்றால் - இந்தக் கல் எவ்வளவு கனமானது? - இப்படிக் கேட்பது சரியா? யானைகளையும் இறகுகளையும் பற்றிப் பேசாமல் இதற்கான விடையைக் கண்டுபிடிக்க முடியுமா? நிச்சயம் முடியும்!
நாம் இந்தக் கல்லின் எடையை கிலோகிராம்* என்ற ஒன்றோடு ஒப்பிடலாம். கிலோகிராம் என்பது, ஒரு பொருள் எவ்வளவு கனமானது அல்லது இலேசானது என்று தெரிந்துகொள்ளப் பயன்படுகிறது.
அவ்வாறெனில் - இந்தக் கல் ஒரு கிலோகிராமை விட எவ்வளவு கனமானது? அல்லது இந்தக் கல் ஒரு கிலோகிராமை விட எவ்வளவு இலேசானது? என்று கேட்பதுதான் ஒரு நல்ல கேள்வியாகும்.
*கிலோகிராம் என்பது ’கிலோ’ அல்லது ‘kg’ என்றும் குறிப்பிடப்படும். இனி நாம் கிலோகிராமைக் குறிக்க கிலோ என்று சுருக்கமாகச் சொல்வோம்.
ஆனால், 1 கிலோ என்பது எவ்வளவு கனமானது? அறியலாம் வாருங்கள்.
சந்தையில் காய்கறிக்காரரிடம், “1 கிலோ வெங்காயம் கொடுங்கள்,” என்று நீங்கள் கேட்கிறீர்கள். உடனே காய்கறிக்காரர், தராசின் ஒரு தட்டில் 1 கிலோ எடைக்கல்லை வைத்து, இரு தட்டுகளும் சமமாகும் வரை மறு தட்டில் வெங்காயங்களை வைப்பார்.
நீங்கள் தராசில் இருக்கும் வெங்காயங்களை எண்ணுகிறீர்கள். 13 வெங்காயங்கள் இருக்கின்றன. எனவே, 1 கிலோ என்பது13 வெங்காயங்களின் அளவு கனமானது என்று அறிகிறீர்கள்.
ஆனால் இது நிலையாக நம்பத்தகுந்ததல்ல. வெங்காயங்கள் சிறியதாக இருந்தால்,1 கிலோ என்பது 16 வெங்காயங்களின்எடை அளவு கனமாகவும் இருக்கலாம். வெங்காயங்கள் பெரியதாக இருந்தால், 1 கிலோ என்பது 10 வெங்காயங்களின்எடை அளவு கனமாகவும் இருக்கலாம்.
எனவே நாம் துல்லியமாக 1 கிலோ எடை கொண்ட எதையாவது கண்டுபிடிக்க வேண்டும். ஒரு லிட்டர் அளவு தண்ணீர் கொண்ட குப்பி துல்லியமாக 1 கிலோ எடை இருக்கும் என்பது எனக்குத் தெரியும்! இதைத் தெரிந்து கொண்ட நாம், இப்போது நமது யானையை நிறுக்கலாம், வாருங்கள்!
கிலோ கணக்கில், ஒரு யானை எவ்வளவு கனமானது தெரியுமா? ஏறக்குறைய 4,000 கிலோ! அதாவது, யானையை தராசின் ஒரு தட்டில் உட்கார வைத்தால் அதன் எடையை சமன் செய்ய இன்னொரு தட்டில் நீங்கள் 1 லிட்டர் தண்ணீர் கொண்ட 4,000 குப்பிகளை மலைபோல குவித்து வைக்கவேண்டும்.
இந்த 4,000 கிலோ என்பது 10 மாடுகள் அல்லதுசராசரி அளவுள்ள 200 நாய்களின் எடையுமாகும்!
இப்பொழுது நாம் மிகுந்த எடையுள்ள பொருட்களைப் பற்றி பேசிவிட்டோம்; இன்னொரு தைரியமான கேள்வியையும் கேட்கலாம் வாருங்கள் - பூமி எவ்வளவு கனமானது?
பூமியிலிருக்கும் எல்லா உயிரினங்களையும் சேர்த்து, பூமியின் எடை...
...5,974,000,000,000,000,000,000,000 கிலோ! அல்லது 5,974,000,000,000,000,000,000,000 ஒரு லிட்டர் தண்ணீர்க்குப்பிகளின் எடைக்குச் சமம்!
அது மிகமிக கனமானதாகும்!
பூமியில் இருக்கும் மொத்த நீரையும் பயன்படுத்தினாலும் அத்தனைக் குப்பிகளையும் நிரப்ப முடியாது!
அம்மாடி. இந்தப் பேச்சில் கனம் ஏறிக்கொண்டே போகிறதே! நாம் இறகைத் திரும்பக் கொண்டுவருவோம்.
ஒரு இறகு எவ்வளவு இலேசானது? அது 1 கிலோவை விட ஏறக்குறைய 2,00,000 மடங்கு இலேசானது.
தராசின் ஒரு தட்டில் 1 லிட்டர் தண்ணீர்க்குப்பியை வைத்தால், அதைச் சமன்செய்ய மறு தட்டில் 2,00,000 இறகுகளை வைக்கவேண்டும்.
ஒரு மழைத்துளி ஒரு கிலோவைவிட 30,000 மடங்கு இலேசானது. ஏறக்குறைய 30,000 மழைத்துளிகள் சேர்ந்தால் 1 லிட்டர் தண்ணீர்க் குப்பியொன்றின் எடைக்குச் சமமாக இருக்கும். ஒரு உப்புத்துகள் ஒரு கிலோவைவிட 2,00,00,000 (இரண்டு கோடி) மடங்கு இலேசானது. அது மிக, மிக இலேசானதாகும்!
அப்பாடா! உங்களுக்கு இலேசாக தலைசுற்றுவது போலிருக்கிறதா? உங்கள் மூளை முழுவதும் கேள்விகளும் துளைத்துக் கொண்டிருக்குமே! கீழ்க்கண்டவை போன்ற கேள்விகள்:
ஒரு மணல் துகளை எப்படி எடைபோடுவது?
எப்படி பூமியில் இருந்தபடியே பூமியை எடை போட்டார்கள்?
ஒரு கிலோவின் எடையை யார் முடிவு செய்தது?
இவற்றுக்கு பதில் கண்டுபிடிக்க நீங்கள் வளரும்வரைக் காத்திருக்க முடியாதுதானே!
யூகியுங்கள், மதிப்பிடுங்கள்!
வகுப்பறைக்கும் வீட்டுக்கும் பொருத்தமான இந்தச் செயல்பாடு, எடை மதிப்பீட்டைப் பற்றிக் குழந்தைகள் உணர்ந்து அறிந்து கொள்ள உதவும். தேவையானவை: · எடைக்கற்கள் மற்றும் இரண்டு தட்டுகள் கொண்ட ஒரு தராசு*. · தண்ணீர் நிரப்பப்பட்ட 1 லிட்டர் குப்பி ஒன்று. · பள்ளியிலோ வீட்டிலோ இருக்கக்கூடிய வெவ்வேறு எடையுடைய பொருட்களான காய்கறிகள் நிரம்பிய ஒரு சிறிய பை, புத்தகம், அழிப்பான், அரிசிப் பொட்டலம் போன்றவை. செய்யவேண்டியது: 1. தண்ணீர் பாட்டிலை வகுப்பில் இருக்கும் குழந்தைகள் அனைவரையும் கையில் எடுத்துப்பார்த்து அதன் எடையை உணரச்சொல்லவும். இது 1 கிலோ என்பது எவ்வளவு கனம் என அவர்களுக்கு உணர்த்தும். 2. ஒவ்வொருவருக்கும் மற்ற பொருட்களையும் ஒன்றொன்றாகக் கொடுக்கவும். அதை1 கிலோவைவிட கனமாகவோ அல்லது இலேசாகவோ உணர முடிகிறதா என்று கேட்டறியவும். ஒவ்வொன்றின் சரியான எடையையும் யூகித்து கரும்பலகையில் எழுதச் சொல்லவும். 3. ஒவ்வொரு பொருளையும் முதலில் 1 லிட்டர் தண்ணீர்க் குப்பிக்கு ஈடாக தராசில் வைத்து அளக்கவும். ‘அது 1 கிலோவைவிட கனமானதா அல்லது இலேசானதா?’ என்ற கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்ள உதவும். பின் சரியான எடைக்கற்களை வைத்து ஒவ்வொரு குழந்தையின் யூக மதிப்பீடு எவ்வளவு சரியானது என்று கண்டுபிடிக்கவும்.. *தராசு கிடைப்பது கடினமாக இருந்தால், அருகாமையிலுள்ள காய்கறிக்காரரை வகுப்பறைக்கு அழைக்கவும்(அவரது தராசுகளுடன்தான்!). மேற்கண்ட செய்முறை 2-க்கு வேறுபட்டஎடை கொண்ட காய்கறிப்பைகளை வகுப்பினருக்குக் கொடுக்கவும்.
சிந்தித்துப் பார்!
1. இப்புத்தகத்தின் 8ஆவது பக்கத்தில் 1 லிட்டர் தண்ணீர்க் குப்பி துல்லியமாக 1 கிலோ எடை கொண்டதெனத் தெரிந்து கொண்டீர்கள். எத்தனைத் தண்ணீர்க்குப்பிகள் சேர்ந்தால் உங்கள் எடைக்குச் சமமாகும்?
2. ஒரு சராசரி இந்திய யானை 4,000 கிலோ எடை கொண்டதென உங்களுக்குத் தெரியும். பயணிகள் நிரம்பிய ரயிலின் எடை 250 யானைகளின் மொத்த எடைக்குச் சமமானது என்றால், ரயில்வண்டியின் எடை எத்தனை கிலோ என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
3. 1 கிலோ இரும்பு மற்றும் 1 கிலோ பருத்திப்பஞ்சு - இவற்றில் எது கனமானது?
பதில்கள்:
2. 10,00,000 (பத்துலட்சம்) கிலோ கிராம்கள் (250 x 4000 = 10,00,000)
3. இரண்டும் சம அளவு கனமானதே, ஏனென்றால் இரண்டும் ஒரே எடை கொண்டவை - 1 கிலோதான்! ஆனால் 1 கிலோ பருத்திப்பஞ்சை வைக்க1 கிலோ இரும்பை விட நிறைய இடம் தேவைப்படும்.