முனி ஒரு கொத்தனார். ஊரில் உள்ள பெரிய கட்டடங்கள், சின்ன கட்டடங்கள் எல்லாவற்றையும் அவர்தான் கட்டுவார். ஒரு நாள் காலை, மருத்துவர் ஷீலா தனக்கொரு சிறிய மருத்துவமனை கட்டித் தருமாறு முனியிடம் கேட்டார்.
“என்னோட பழைய கொட்டகையை இடிச்சுக் கொடுங்க, முனி! அந்த இடத்துலதான் புதிய மருத்துவமனையைக் கட்டணும்” என்றார் மருத்துவர் ஷீலா.
“கண்டிப்பா செஞ்சுடலாம், டாக்டர் அம்மா! ஆனா, அதுக்கு என்னோட உதவியாளர்கள் அஞ்சுவும் சஞ்சுவும் வேணும். அவங்க வீடு மலைமேல இருக்கு” என்றார் முனி.
முனி தன்னுடைய உதவியாளர்களை அழைத்துவரப் புறப்பட்டார். போகும் வழியில், குழாய்களைச் சரிசெய்பவரான பஹதூரைப் பார்த்தார். “கொட்டகையில் இருக்கும் குழாய்களைக் கழட்ட நான் உதவி செய்கிறேன்” என்றார் பஹதூர். “இங்கேயே இரு பஹதூர். நான் போய் அஞ்சுவையும் சஞ்சுவையும் கூட்டிட்டு வரேன்.”
இன்னும் மேலே ஏறிப் போகும்போது, முனி, பால்காரர் பாபுவையும் எருமை ராணியையும் பார்த்தார். “பாபு! ராணி! டாக்டர் அம்மாவோட கொட்டகையை உடைக்க எனக்கு உதவி செய்யமுடியுமா?” என்று கேட்டார் முனி. “அய்யோ… அவங்க ஒரு நல்ல டாக்டர். அவங்களோட கொட்டகையை நான் உடைக்க மாட்டேன்” என்றார் பாபு.
முனி, அடுத்ததாக ஆசாரி மஸ்தானை சந்தித்தார். “கொட்டகையில் இருக்கும் மரத்தை எல்லாம் அகற்ற நான் உதவி செய்கிறேன்” என்றார் மஸ்தான்.
இறுதியாக, மலையின் மீது முனி அஞ்சுவையும் சஞ்சுவையும் சந்தித்தார். “உங்ககிட்ட இருக்க அந்த கனமான பெரிய சுத்தியலை எடுத்துக்கலாம்” என்றார் முனி.
அந்த சுத்தியல் மிகப் பெரியதாகவும் கனமாகவும் இருந்ததால் முனி தடுமாறி விழுந்தார். “அய்யோ! பார்த்து” என்றார் அஞ்சு.
முனி சஞ்சுவைப் பிடித்தார்.
சஞ்சு அஞ்சுவைப் பிடித்தார்.
குடுகு-குடுகு-குடுகு!
முனியும் சஞ்சுவும் அஞ்சுவும் மலையிலிருந்து சறுக்கிக்கொண்டு வந்து மஸ்தான் மீது விழுந்தார்கள்.
முனி, சஞ்சு, அஞ்சு, மஸ்தான் நால்வரும் மலையிலிருந்து உருண்டு வந்தார்கள். “ஏய்” என்றார் பாபு. “பே” என்றது ராணி.
தடுகு-தடுகு-தடுகு!
“நானும் வர்றேன்!” என்று பஹதூரும் அவர்களோடு சேர்ந்து கொண்டார்.
முனி, சஞ்சு, அஞ்சு, மஸ்தான், பாபு, ராணி, பஹதூர் அனைவரும் மலையில் இருந்து உருண்டு வந்து...
படகட-தடுகுடு, படகட-தடுகுடு!
...மருத்துவரின் கொட்டகை மீது மோதினார்கள். தடபுடால்!
கொட்டகை நூறு துண்டுகளாக சிதறியது.
மருத்துவர் ஷீலா மகிழ்ந்தார். அவர்களுக்கு சம்பளம் கொடுத்து, அனைவருக்கும் இனிப்புகளும் கொடுத்தார். “முனிக்கும் அவருடைய உதவியாளர்களுக்கும் நன்றி!” என்ற அவர், “ரொம்ப வேகமா கொட்டகையை உடைச்சு முடிச்சிட்டீங்க. அதே மாதிரி வேகமா எனக்கு மருத்துவமனையையும் கட்டிக் கொடுத்துடுங்க” என்றார்.