hakeem sahibin vikkal piracchinai

ஹக்கீம் சாஹிபின் விக்கல் பிரச்சினை!

ரம்ஜான் நோன்பு மாதத்தில் ஒரு நாள் ஹக்கீம் சாஹிபுக்கு விக்கல் பிரச்சினை வந்துவிட்டது. தண்ணீர் குடித்து விக்கலை நிறுத்தவும் குடிக்கமுடியாது. விக்-விக்-விக்கலை என்ன செய்வார் ஹக்கீம் சாஹிப்? தங்கள் நேசத்துக்குரிய மருத்துவருக்கு அவரது நோயாளிகள் எப்படி உதவுவார்கள்?

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

காய்கறிச் சந்தை தெருக்களில் ஒன்றில்,வரிசை வரிசையாகக் காயும் வத்தல்கள் நடுவேமண்சட்டிகளில் பொடிகளையும் திரவங்களையும் கலந்தபடிநாள் முழுக்க நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஹக்கீம் சாஹிப்.

மாலைக்குள் ஹக்கீமின் உதடுகள் வறண்டு வெடிப்பு வந்துவிட்டது. அவர் வயிறு கடமுடாவென்று இடி இடித்தது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும்! ஆனால் அவர் நோன்பில் இருந்தார், நோன்பு முடிக்க இன்னும் நேரம் இருந்தது.

சோடாக்காரரின் இதயத் துடிப்பை கேட்கும்போது தனது நாடியும் கொஞ்சம் படபடப்பதை கவனித்தார்.

ஹக்கீம் சாஹிப் தன் வெண் மிளகு மருந்தை எடுக்க எக்கியபோது வயிற்றிலிருந்து ஒரு குமிழி தொண்டைக்கு வருவதை உணர்ந்தார்.

விக்!

விக்கல்!

விக்!

அடடா என்னடா இது! மூச்சைப் பிடி, காதை இழு.

விக்கல் வந்தது. வந்தபடியே போயிற்று, என்ன ஒரு வினோதம்!

விக்

விக்!

விக்

மீன்காரம்மாவின் மஞ்சள் கண்களை பரிசோதித்து ஹக்கீம் சாஹிப் கண்ணைச் சுற்றி நுஸ்கா தடவச் சொன்னார்.

மூச்சைப் பிடி, காதை இழு.

அடடா என்னடா இது!

விக்!

விக்!

விக்கல்!

மிட்டாய்காரர் நெஞ்சில் ஒரு மருவோடு வந்தார் ஹக்கீம் அதில் மஞ்சள் வைத்து பற்று போடச் சொன்னார்.

மூச்சைப் பிடி, காதை இழு.

விக்!

விக்!

விக்கல்!

அடடா என்னடா இது!

மடக். டமக். டொப்! அமைதியாக இரு. ஹக்கீம் சாஹிப் காய்கறிக்காரரின் உடைந்த கையை  சரிசெய்து கொண்டிருந்தார்.

மூச்சைப் பிடி, காதை இழு.

அடடா என்னடா இது!

விக்!

விக்!

விக்கல்!

குட்டிப்பையன் முன்னா வயிற்று வலியில் அழுதான், “உனக்கு சோம்பும் ஓமமும் மருந்து, இனிமே கிடையாது கேக் விருந்து!”

மூச்சைப் பிடி, காதை இழு.

அடடா என்னடா இது!

விக்!

விக்கல்!

விக்!

விக் விக் என விக்கியபடி ஹக்கீம் சாஹிப் வீட்டுக்குக் கிளம்பியபோது, காத்திருந்தது ஒரு ஆச்சரியம்…

வழியெங்கும் அவர் மருத்துவமளித்தவர்கள்!

வண்ண வண்ண உணவுகளுடன், ஒவ்வொருவரும் ஒரு வீட்டு வைத்தியம் சொன்னார்கள்.

மீன்காரம்மா நல்ல சிவப்பாக உரைப்பாக, வறுத்த மீன் போட்டு குழம்பு வைத்திருந்தார்.

சோடாக்காரர் ஒரு ஸ்பெஷல் எலுமிச்சை சோடா செய்திருந்தார். நுரை பொங்கிய அதில் மாதுளை முத்துகள் மிதந்தன.

மித்தாய்க் காரர் ஒரு வகையான போளி செய்து எடுத்து வந்திருந்தார். கறுமொறுவென்று, இனிப்பாக, தொண்டைக்கு இதமாக!

காய்கறிக்கடைக்காரர் ஒரு கிலோ பாகற்காய் கொண்டுவந்திருந்தார். உணவுக் குழாயில் கொஞ்சம் கசப்பு சேர்ந்தால் சரியாகிவிடுமாம்.

எந்த வைத்தியம் சரிவருமென்று அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது. திடீரென்று எல்லோரையும் பயமுறுத்தியபடி வந்து குதித்தது ஒரு குட்டிப் பேய்!

மீன்காரம்மா கத்தினார், சோடாக்காரர் பயத்தில் குதித்தார். விக் விக், ஹக்கீம் சாஹிப் மட்டும் சத்தமாக தெளிவாக விக்கினார்.

ஹக்கீம் சாஹிப் அந்த வெள்ளைத் துணியை தூக்கினார். உள்ளே நம் முன்னா.

“அடடே! ஏன் இந்த வேடிக்கை கலாட்டா?” “நல்லா பயமுறுத்தினா விக்கல் ஓடிப் போயிடும்னு அம்மா சொன்னாங்க!”

அட ஹக்கீம் சாஹிப எங்க காணோம்? இங்கதானே, இதோ இங்கதானே இருந்தார்? திறந்திருந்த ஒரு கதவின் வழியாக எல்லோரும் எட்டிப் பார்த்தனர். அங்கே ஹக்கீம் சாஹிபும் அவர் குடும்பத்தினரும் தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தனர்.

நெஞ்சில் கையை வைத்து, அவர் சொன்னார் “உங்கள் அன்புக்கு மிக்க நன்றி நண்பர்களே. இப்போது வாருங்கள், எங்களுடன் சேர்ந்து கொஞ்சம் சாப்பிடுங்கள்.” அதற்குத்தான் காத்திருந்தது போல, அவர்களும் டக்கென வந்தார்கள். எல்லோரும் தங்கள் தட்டுகளை வைத்துவிட்டு சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டார்கள்.

பேகம், ஃபரியா, ரஹீம் மூவரும் தட்டுகளும் டம்ப்ளர்களும் கொண்டுவந்தார்கள். எல்லோருக்கும் பேரிச்சம்பழங்கள் கொடுத்தார்கள். கிழக்கிலிருந்து அசான் ஓதும் சத்தம் கேட்டது. எல்லோரும் விருந்தைத் தொடங்கினார்கள்.

ஹக்கீமின் விக்கல் காணமல் போனது! ஆனால் அவர் முகம் ஏன் வேப்பங்கொட்டையைத் தின்றது போலிருக்கிறது? “அய்யோ! ஒரு குட்டிக் குமிழி அவர் வயிற்றில் மாட்டியிருக்கிறது, அது இப்போது வெளியே வருகிறது!”

எல்லோரும் பதட்டமாக காத்திருந்தனர். ஹக்கீம் சாஹிப் வாயிலிருந்து வந்தது ஒரு… பெரிய…

ஏவ்வ்வ்வ்!ஏப்பம்!

விக்