haru

ஹாரு

இவள்தான் ஹாரு. ஹாருவுக்கு சாப்பிடவும் ஓடவும் விளையாடவும் பிடிக்கும். சில நாட்களில் இரவில் தூங்க கதகதப்பான இடமும் சாப்பிட போதிய உணவும் இல்லாமல் போனால் கூட, அடுத்து வரும் நாட்கள் நன்றாக இருக்கும் என்று ஹாரு நம்பினாள். அன்பும் மகிழ்ச்சியும் இருந்துவிட்டாலே இந்த வாழ்க்கை இனிமையானதுதானே!

- Livingson Remi

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

வணக்கம். நான்தான் ஹாரு!

இங்குதான் என்னுடைய காலைப் பொழுதுகளைக் கழிப்பேன். என்னுடைய காலை உணவு காரசாரமான கடலைக் கறியும் மேலே சீனி தூவி வெண்ணெய் தடவிய பிரெட்டும். அத்துடன் இனிப்பான பால் கலந்த தேநீரும்.

வெயில் நாட்களில் நான் நிழலைக் கண்டுபிடிப்பேன்.

மழை நாட்களில் தங்குமிடத்தை.

குளிரான இரவுகளில் கதகதப்பை.

ஒருநாள், வாகன நெரிசலான சாலையில் எனக்கு அடிபட்டுவிட்டது.

டிடாதான் என்னைக் கண்டெடுத்தார்.

என்னை தன் வீட்டுக்கு கொண்டு சென்றார்.

என்னை நன்றாக கவனித்துக் கொண்டார்.

எனக்கு காய்கறிகளும் பழங்களும் கொடுத்தார்.

என் புது குடும்பம் அருமையானது. பையன்கள் இன்று நிறைய குறும்பு செய்துவிட்டார்கள். எனவே டிடா அவர்களை சால்வைகள் பின்ன வைத்திருக்கிறார்.

என் கால்கள் சரியாகிவிட்டன. இதோ, நான் துணி துவைப்பதற்கு உதவுகிறேன்.

இந்த வாழ்க்கை ஒன்றும் மோசமானதில்லை.

ஹாரு ஒரு உண்மையான ஆடு!

1970களில், மேற்கு வங்காளத்தின் சாந்திநிகேதனில் உள்ள இடுக்கோ என்னும் பாட்டி அதைக் காப்பாற்றினார். அவர்களுடைய குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக ஹாரு வளர்ந்தது. அதனுடன் நிறைய நாய்கள், பறவைகள்,மாடுகள், அணில்கள், புறாக்கள், வாத்துகள், ஒரு பாம்பும் சேர்ந்து வளர்ந்தன.

ஆடுகள் புத்திசாலித்தனமும் விளையாட்டுத்தனமும் கொண்டவை. என்னைப் போலவே நீங்களும் ஆடு மாதிரி கத்தி அழைத்தால், ஓடோடி வந்து சேரும். ஆடுகள் குறும்பு நிறைந்தவை. எது கிடைத்தாலும் அதை வாயில் போட்டு மெல்லத் தொடங்கிவிடும். அதனாலேயே அவற்றுக்குப் பிரச்சினைகளும் வரும்!

ஹாருவின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று நான் கற்பனை செய்தேன்!