himaniyai pol prachchinaiyai theerppathu eppadi

ஹிமானியைப் போல் பிரச்சினையை தீர்ப்பது எப்படி?

உத்தராகண்ட் மலைகளின் நடுவே உள்ள ஒரு சிறிய பள்ளியில் படிக்கும் ஹிமானியும் அவளது தோழிகளும் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்று கண்டறிகிறார்கள். சிறிய, பெரிய பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிமுறைகள் பற்றி தன் நாட்குறிப்பேட்டில் ஹிமானி எழுதியவையே இந்தக் கதை.

- Rajam Anand

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மார்ச் 28

இன்று ஒரே வெயில்.

கோலூவும் இன்று நிறைய குறும்பு செய்தாள். மேட்டின் மேலே ஏறிக்கொண்ட அவள் கீழே வர மறுத்தாள். கோலூ ஒரு முட்டாள் ஆடு.

அவளைக் கீழே கொண்டுவர எனக்கு சீமா, குல்லுவின் உதவி தேவைப்பட்டது.

மார்ச் 30

பனி படர்ந்த நந்தகோட், மேக்டொலி, பஞ்சசுலி, சவுகாம்பா போன்ற இமயமலைச் சிகரங்களை வீட்டிலிருந்து பார்க்க முடியும். ஆனால், குமாவோன் மட்டும் வறண்டுதான் இருக்கிறது. குல்லுவும் நானும் இஜாவுக்கும் பாஜ்யுவுக்கும் தெருக்கோடியிலிருந்தோ அதற்கும் அப்பால் உள்ள ஓடையிலிருந்தோ தண்ணீர் கொண்டுவர உதவுவோம். ம்ம்ம்! பனி படர்ந்த மலையிலிருந்து தண்ணீர் நேராக வீட்டிற்கு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! பனிபொழியும் ஜனவரி மாதத்தில் கூட குடிநீர் கிடைப்பது கடினம்தான்.

*இஜா, பாஜ்யு: குமாயுனி மொழியில் அம்மா, அப்பாவைக் குறிக்கும் சொற்கள்.

ஏப்ரல் 2

இன்று ரீனா அக்காவின் பத்து நாள் பயிற்சிப் பட்டறை தொடங்கியது. மும்பையிலிருந்து வந்துள்ள ரீனா அக்கா எத்தனை கேள்விகள் கேட்கிறார்! பள்ளிக்கூடத்தில், உனக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது? பள்ளிக்கு நீ எப்படி வருகிறாய்?திடீரென என் பக்கம் திரும்பி, “உன் பெயருக்கு என்ன அர்த்தம்?” என்றார்.

“ஹிமானி என்றால் பனி” என்றேன்!

அக்கா ஏன் இவ்வளவு கேள்விகள் கேட்கிறார்?

ஏப்ரல் 3

இன்றைய நாள் வேடிக்கையாகக் கழிந்தது. நாங்கள் ஒரு விளையாட்டு விளையாடினோம். எங்களில் ஒருவர், தான் சந்தித்த ஏதாவது ஒரு பிரச்சினையை எடுத்துக்கொண்டு, அதைக் கேள்வியாக கேட்க வேண்டும். இன்னொருவர் அதன் தொடர்பாக மற்றொரு கேள்வி கேட்க வேண்டும்.

நாங்கள் கேட்ட கேள்விகள்தான் எத்தனை எத்தனை!

பள்ளியில் நமக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வழி என்ன?

ஏன் நீர் சுத்தமாக இருக்க வேண்டும்? நீர் எங்கிருந்து கிடைக்கும்?

உருகும் பனிப்பாறைகளிலிருந்து நேராகக் குழாய் அமைக்க முடியாதா?

ஏன் இந்த மாதிரி கேள்விகள் கேட்க வேண்டும்?

நமது குடிநீர் பிரச்சினையை மட்டும் கவனிப்போமா?

நாம் ஏன் ஒரு நீர் வடிகட்டி வைக்கக் கூடாது?

வடிகட்டி எங்கே கிடைக்கும்? நாமே ஏன் ஒரு வடிகட்டியை உருவாக்கக் கூடாது? யாருக்கு அதை செய்யத் தெரியும்?

எந்த ஒரு பிரச்சினையையும் படிப்படியாக அணுகவும்

> முதலில் பிரச்சினை என்ன என்று அறியவும். > அது குறித்து முடிந்தவரை எல்லா விவரங்களையும்          அறிந்து கொள்க. > அது பற்றி விவாதிக்கவும். > மிகவும் பொருத்தமான யோசனையைத் தீர்மானிக்கவும். > அதை சோதித்துப் பார்க்கவும். > பிரச்சினை தீர்ந்தால் மிகவும் நல்லது! > இல்லாவிட்டால், வேறொரு யோசனையை    முயற்சித்துப் பார்க்கவும்.

ஏப்ரல் 4

நாங்கள் இணையதளத்தில் தேடியபோது இந்த அட்டவணையைக் கண்டுபிடித்தேன்:

இந்த அணுகுமுறையை வைத்து எங்களால் ஒரு பிரச்சினையைத் தீர்க்கமுடியுமா?

ஏப்ரல் 5

பள்ளியில், எங்களுக்கு உள்ள பிரச்சினைகளைப் பட்டியலிட்டோம். எங்களுக்குத்தான் எத்தனை பிரச்சினைகள்!

பெரிய பிரச்சினைகள்

குடிபோதையில் அடிதடியில் ஈடுபடுவோர்

மருத்துவமனைகளோ சுகாதார மையங்களோ அருகில் இல்லாதது

மழைக்காலங்களில் காலுறைகளில் அட்டைப் பூச்சிகள்

நேரடி நீர் வசதியற்ற வீடும் பள்ளியும்

நிலச்சரிவுகள்

மழைக்காலங்களில் வழுக்கும் சாலைகள்

தீர்வு காணக்கூடிய பிரச்சினைகள்

எங்கும் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்

சுத்தமற்ற குடிநீர்

கனமான பள்ளிப் பை

இரவில் விளக்கொளியற்ற இருண்ட சாலைகள்

ஏப்ரல் 6

இன்று பூக்கோசு வளரும் நிலத்தில் இஜாவுக்கும் பாஜ்யுவுக்கும் உதவி செய்துவிட்டு பள்ளிக்கு ஓடினேன். இன்று பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நாள்! நாங்கள் இருவர் இருவராக நூலகத்திற்குச் சென்றோம். அதன்பின் ஆசிரியர்களிடம் பேசிவிட்டு ஒருவரோடொருவர் கலந்து ஆலோசித்தோம். கடைசியாக வகுப்புக்குத் திரும்பினோம்.

1. அடையாளம் காண்க: பள்ளியில், வடிகட்டாத குடிநீர்தான் பிரச்சினை. இதனால் மாணவ மாணவிகள் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றனர். 2. கண்டுபிடிக்க: இங்கே சுத்தமான நீர் கிடைப்பது குதிரைக்கொம்பானது ஏன்? குமாவோனைச் சுற்றி நல்ல நீர் கிடைக்கும் ஓடைகள் நிறைய உள்ளன. ஆனால், பள்ளிக்கருகில் இல்லை. 3. விவாதிக்க: சிலர் நீரை வடிகட்ட, துணியை உபயோகிக்கின்றனர். இது பெரிய, கரைய முடியாத துகள்களை மட்டுமே வடிகட்டும்; தீங்கு விளைவிக்கும் நுண்கிருமிகளை வடிகட்டாது! மனோரமா, தங்கள் வீட்டில் சிறிய நீர் வடிகட்டி இருப்பதாகக் கூறினாள். முருங்கை விதைகள் நீரைச் சுத்தப்படுத்தும் என ஒரு ஆசிரியர் கூறினார். 4. தீர்மானிக்க: நீர் சுத்திகரிக்கும் உபகரணம் எங்களுக்கு உதவுமா?

கூழாங்கற்கள்

முருங்கை விதைகள்

கரடுமுரடான மணல்

கரி

மெலிதான மணல்

துணி

முயன்று பாருங்கள்!

நாங்கள் ஒவ்வொருவரும் நீர் வடிகட்டிகளை வரைந்தோம்! எங்கள் தண்ணீர் பாத்திரத்தின் குழாய் முனையில் பொருத்தக்கூடிய வடிகட்டியே எங்களுக்குத் தேவையென முடிவெடுத்தோம்!

மூத்தவர்களான சந்தோஷ் மற்றும் ஆஷிஷ் அண்ணன்கள், எங்களது வரைபடங்களை வைத்து ஒரு நீர் வடிகட்டியைத் தயாரிக்க எங்களுக்கு உதவினர். அவர்கள், கல்லூரியிலிருந்து சில நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு எங்கள் பள்ளியில் ஒரு நீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்கினர். அதிலிருந்து வடிகட்டிய நீர்தான் என்ன சுத்தம், எவ்வளவு சுவை!

ஏப்ரல் 11

கடந்த மூன்று நாட்களாக நாங்கள் நிறைய ஓவியங்களை உருவாக்கினோம். பிரச்சினைக்குத் தீர்வு காணும் அணுகுமுறையைப் பின்பற்றி மேலும் பல யோசனைகளைக் கண்டுபிடித்தோம்.

மிதிவண்டி கலப்பை இதை இழுக்க மாடோ டிராக்டரோ தேவையில்லை. இது குறுகிய படிக்கட்டு விவசாய நிலங்களுக்கு ஏற்றது.

பாட்டில் கைவிளக்கு வேண்டாத பொருட்களை மறுசுழற்சி முறையில் கைவிளக்காக மாற்றி ஒரு தேவையற்ற பிளாஸ்டிக் குப்பியில் அதைப் பொருத்தி வைக்கவேண்டும். இதனால் அது ஈரமாகி வீணாகாமல் இருக்கும். எங்கள் பகுதியில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதலால் பாட்டரியில் இயங்கும் கைவிளக்குகள் விரைவில் சேதமடைந்து விடும்.

சிறிய நீர் தெளிப்பான் இது மண் எப்போதும் ஈரமாக இருக்க வேண்டிய திராட்சை போன்ற பயிர்களுக்கு சொட்டு நீர் விவசாயத்திற்குப் பயன்படும். தேவையற்ற தண்ணீர் பாட்டில்களை மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் ஐவி குழாய் போல செடிகளோடு இணைத்து இதைச் செய்யவேண்டும்.

ஏப்ரல் 13

எங்கள் பயிற்சிப் பட்டறை முடிந்துவிட்டது. ஆப்ரிகாட், பேரி, ஆப்பிள் போன்ற பழங்களையும் காட்டு பூவரச மலர்களையும், பறிப்பதிலும் கட்டிவைப்பதிலும் ஈடுபட்டோம். இஜாவையும் பாஜ்யுவையும் போல விரைவாகவும் நேர்த்தியாகவும் என்னால் பழங்களைப் பறிக்க முடியாது! நேற்று, பழம் பறிக்கையில் வழுக்கி விழுந்து என் கால் பிசகிவிட்டது. நல்ல வேளை, எலும்பு முறிவு ஏதும் இல்லை! பழங்கள் பறிக்க ஒரு கருவி இருந்தால் எவ்வளவு நல்லது!

கோலூவையும் பிற ஆடுகளையும் இதற்குப் பழக்கினால் என்ன? ஹிஹிஹி!

அட, நிஜமாகவே திறன்வாய்ந்த, பாதுகாப்பான, இயற்கைக்கு உகந்த ஆப்பிள் பறிக்கும் கருவி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

சத்கோல் கதைகள்

இக்கதை, 2018ஆம் ஆண்டு ‘த வாக்கிங் ஸ்கூல் பஸ்’ஸின்(TWSB) இமயமலைப் பயணத்தின்போது சத்கோலில் ஆற்றிய பணிகள் கொடுத்த ஊக்குவிப்பினால் எழுதப்பட்டது. TWSB, பாதுகாப்பான போக்குவரவு, ஊட்டச் சத்து, புதுமையான கல்வி புகட்டும் திட்டங்கள் இவற்றை அளிப்பதற்காகப் பணியாற்றுகிறார்கள். அவர்களின் ‘ஸர்ச் ஃபார் ஜுகாட்’ போட்டி சமூகத்தில் சந்திக்கும், குறிப்பாக கல்வி தொடர்பான பிரச்சினைகளுக்கு புதுமையான, செயல்படுத்தக்கூடிய உள்ளூர் தீர்வுகளைக் கண்டுபிடிக்க உதவியது.

இக்கதையின் சித்திரங்கள் திவ்யா, மானசா, பூஜா, தீபான்ஷூ ஜே, ரித்தேஷ், லக் ஷித், உஜ்வால், தீபான்ஷூ எம் மற்றும் புஷ்பாவால் வரையப்பட்டவை. இவர்கள் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள இமாலயன் பப்ளிக் ஸ்கூலில் மூன்று முதல் எட்டு வரை உள்ள வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள். TWSB நடத்திய கலைவகுப்புகளில் எண்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.