டிர்ரிரிரிரிரிரிரிங்… உணவு இடைவேளை நேரம்!
மீனு உணவு டப்பாவைத் திறந்தாள். அதில் இட்லியும் பொடியும் இருந்தன. அம்மா எப்போதுதான் புதிதாக எதையாவது கொடுத்தனுப்புவார்?மீனு உணவு இடைவேளையையே வெறுத்தாள்.
மற்ற மேசைகளிலிருந்து சுவையான உணவின் வாசனை அவளை நோக்கி வந்தது. மீனுவின் வயிறு உறுமியது, எச்சில் ஊறியது. டப்பாவைக் கொஞ்சம் தள்ளி வைத்தாள்.
மூன்று வரிசைகளுக்குப் பின்னால் கமலேஷ் சுணங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய உணவு, பார்க்க சுவையாகத்தான் தெரிகிறது! அவளுக்குப் பிடிக்கவில்லையோ?
கமலேஷ் நிமிர்ந்து மீனுவையும் அவள் உணவு டப்பாவையும் பார்த்தாள்.“அம்மா இன்றைக்கும் இட்லி கொடுத்து அனுப்பியிருக்கிறார்.”
“எனக்கு ஜோவர் பாக்ரியும் பாஜியும்! திரும்பவும்” என்று தன் டப்பாவைப் பார்த்து தோளைக் குலுக்கினாள் கமலேஷ்.
மீனுவின் வயிறு உறுமியது.
கர்
கர் முர்
முர்
“நான் அதை சாப்பிட்டுப் பார்க்கவா?” என்று மீனு கேட்டாள். கமலேஷ், தன் உணவு டப்பாவை மீனுவிடம் தள்ளினாள். மீனுவுடையதை தான் எடுத்துக் கொண்டாள்.
கமலேஷ் இட்லிகளை விழுங்கினாள். மீனு வேகவேகமாக ஜோவர் பாக்ரிகளைத் தின்றாள்.
மறுநாள், மீனு உணவு இடைவேளை நேரத்தை எதிர்பார்த்து நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்தாள். அம்மா கமலேஷுக்காக கூடுதலாக சில இட்லிகள் வைத்திருந்தார்.
ட்ர்ரிரிரிரிரிரிரிங்!
கமலேஷ் மீனுவுக்கு இடம் கொடுத்து சிறிது தள்ளி உட்கார்ந்தாள். இன்று கமலேஷின் டப்பாவில் முட்கே இருந்தது.
தன் உணவுடன் அங்கே வந்தாள் சச்சி. “என்னிடம் பகாலா பாட்டாவும் உருளைக் கிழங்கும் இருக்கின்றன. நேற்று நீங்கள் இருவரும் உங்கள் உணவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்த்தேன். நானும் உங்களுடன் சேர்ந்துகொள்ளலாமா?” என்று கேட்டாள்.
“நிச்சயமாக சச்சி!” என்றாள் மீனு. பின் எழுந்து நின்று தன் டப்பாவின் மூடியை மேஜையில் தட்டினாள்.
“எல்லோரும் கவனியுங்கள்! நான், கமலேஷ், சச்சி மூவரும் எங்களுடைய உணவைப் பகிர்ந்து விருந்து கொண்டாடப் போகிறோம். இட்லி, முட்கே மற்றும் பகாலா பாட்டா சாப்பிடப் போகிறோம். யார் எங்களோடு சேர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள்?” என்று கேட்டாள் மீனு.
ஒரே தள்ளுமுள்ளுதான்! மொத்த வகுப்பும் சாப்பாட்டைப் பகிர்ந்து கொண்டாடுவதற்காக கமலேஷின் மேசையில் கூடியது.
சில டப்பாக்களில் உணவு கொஞ்சமாக இருந்தது, சிலவற்றில் நிறைய இருந்தது. சிலவற்றில் காரம், சிலவற்றில் இனிப்பு. நிறைய புளிப்பான ஊறுகாய், கொஞ்சம் கசப்பான பாகற்காய். ஆனால், அந்த அறையில் இருந்த எல்லா பசித்த வயிறுகளையும் நிரப்பும் அளவிற்கு உணவு இருந்தது.
இப்போது உணவு இடைவேளை மீனுவிற்கு விருப்பமான ஒன்றாகிவிட்டது. தினமும் விருந்தென்றால் பிடிக்காதா பின்னே!
சந்துலா, தர்வட் பாஜி, ஆலு போஹா, பராட்டா மற்றும் ஊறுகாய்... மீனு தனக்கான உணவு டப்பா நண்பர்களைக் கண்டுகொண்டாள்!
இட்லி: இது ஒரு வேகவைக்கப்பட்ட அரிசிப் பண்டம்.
பொடி: இது மசாலாக்களை அரைத்து செய்யப்படுவது. இதை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் குழைத்து இட்லியில் தொட்டு சாப்பிடுவார்கள்.
ஜோவர் பாக்ரி: இது கம்பு அல்லது சோள மாவுடன் தண்ணீர் கலந்து செய்யப்படும் ரொட்டி.
முட்கே: இது கம்பு மாவுடன் கொத்தமல்லி இலைகள் சேர்த்து செய்யப்படுவது.
பகாலா பாட்டா: இலேசாக நீர்ப்பதம் உடைய சோற்றிலிருந்து செய்யப்படும் இதை, பல வகையான காய்கறிகளோடு சேர்த்து சாப்பிடலாம்.
பாஜி: இது தர்வட் என்னும் கீரையில் செய்யப்படுவது.