"அப்பா... இம்மா... சீக்கிரம் இங்க வாங்க" என்று அலமாரிக்குப் பக்கத்திலிருந்து கத்தினாள் லாங்லென்.
லாங்லென் அலமாரிக்குப் பக்கத்தில் குனிந்து பார்த்துக்கொண்டிருந்தாள். அங்கே மூன்று பூனைக்குட்டிகள் மென்மையாக மியாவ் என்றபடி விளையாடிக் கொண்டிருந்தன.
"இம்மா..." என்று ஆரம்பித்தாள் லாங்லென்.
"உஷ், மெதுவாகப்பேசு" என்றார் அவளுடைய தாய். ”பூனைக்குட்டிகள் சத்தம் கேட்டால் பயந்துவிடும்!”
திடீரென்று, ஒரு பெரிய ஆரஞ்சுநிறப் பூனை ஜன்னல் வழியாகக் குதித்தது. அங்கே நின்ற மனிதர்களை பொருட்படுத்தாமல் விறுவிறுவென்று நடந்து அலமாரிக்கு அருகே சென்று படுத்துக்கொண்டது. மூன்று பூனைக்குட்டிகளும் அதனிடம் ஓடிச் சென்று பால் குடிக்க ஆரம்பித்தன. லாங்லென்னும் அவளுடைய பெற்றோரும் சத்தமில்லாமல் அங்கிருந்து வெளியேறினார்கள்.
வெளியே வந்ததும் லாங்லென் கேட்டாள், "அந்த சாம்பல் நிறப் பூனைக்குட்டிக்கும் இந்தப் பூனைதான் இம்மாவா?"
"மூன்று குட்டிகளுக்கும் ஒரே இம்மாதான் லாங்லென்" என்றார் அவளுடைய தந்தை.
"ஆனால், இம்மாப் பூனை ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது. இந்தப் பூனைக்குட்டி மட்டும் சாம்பல் நிறத்தில் இருக்கிறது, ஏன்?" "ஒருவேளை, அப்பா பூனை சாம்பல் நிறமாக இருக்கலாம்." லாங்லென் இதைப்பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தாள்.
அவளுடைய தந்தை தொடர்ந்து சொன்னார், "லாங்லென், என்னுடைய சுருட்டைமுடி உனக்கும் வந்திருக்கிறது, இல்லையா? அதுபோல, அப்பா பூனையின் சாம்பல் நிறம் அந்தக் குட்டிக்கு வந்திருக்கிறது!"
"ஆனால், என்னைப் பார்க்கிறவர்களெல்லாம் நான் என் இம்மாவைப்போல் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள்" என்றாள் லாங்லென். "பாருங்கள், இம்மாவுக்கும் எனக்கும் தாடையில் பிளவுகள் இருக்கின்றன." "லாங்லென், உன்னுடைய சில குணங்கள் என்னிடமிருந்து வந்தவை. சில குணங்கள் அப்பாவிடமிருந்து வந்தவை" என்றார் அவளுடைய தாய். "காரணம், நீ எங்களுடைய செல்ல மகளல்லவா!" என்றபடி அவளைக் கட்டிக்கொண்டார்."அப்படியானால், அந்தச் சாம்பல் நிறப் பூனைக்குட்டிக்கும் சில குணங்கள் அப்பா பூனையிடமிருந்து வந்திருக்கும், சில குணங்கள் இம்மா பூனையிடமிருந்து வந்திருக்கும், இல்லையா?"
"ஆமாம் லாங்லென், இந்த உலகத்தில் இருக்கிற எல்லா உயிர்களும் தங்களுடைய தந்தை, தாய் இருவரிடமிருந்தும் குணங்களைப் பெற்றுக் கொள்கின்றன" என்றார் அவளுடைய தந்தை. "குணம் என்றால் என்ன?" என்று யோசித்தாள் லாங்லென். "கொஞ்சம் பொறுங்கள், நானே ஊகிக்கிறேன். என்னுடைய சுருட்டை முடி ஒரு குணம், சரியா?"
"ஆமாம் லாங்லென். அது ஒரு குணம்தான்" என்றார் அவளுடைய தாய். "இதுபோல வேறு ஏதாவது குணங்களை உன்னால் ஊகிக்க முடிகிறதா?"
"ம்ம்ம்… என்னுடைய உயரம்?"
"ஆமாம். அதுவும் ஒரு குணம்தான். உன்னுடைய கண்களின் நிறம், காதுகளின் வடிவம், விரல்களின் நீளம், மூக்கின் வடிவம்… எல்லாமே குணங்கள்தான்" என்று விளக்கினார் அவளுடைய தாய்.
"ஆக, என்னுடைய சுருட்டை முடி என்கிற குணம் அப்பாவிடமிருந்து வந்தது, தாடைப்பிளவு என்கிற குணம் இம்மாவிடமிருந்து வந்தது, அப்படியானால், உங்களுக்கு அந்தக் குணங்கள் உங்களுடைய அப்பா, இம்மாவிடமிருந்து வந்ததா?"
"ஆமாம் லாங்லென், நீ புத்திசாலி! சட்டென்று புரிந்துகொண்டு விட்டாயே" என்றார் அவளுடைய தாய். "இதேபோல், எங்கள் பெற்றோர் இந்தக் குணங்களை அவர்களுடைய பெற்றோரிடமிருந்து பெற்றுக்கொண்டிருப்பார்கள்."
"ஆனால், புஃபு, இபோக்குக்கெல்லாம் தாடையில் பிளவுகள் இல்லையே" என்று குழப்பத்துடன் கேட்டாள் லாங்லென். "உனக்கு மட்டும் அந்தக் குணம் எங்கிருந்து வந்தது?""சில சமயங்களில் சில குணங்கள் ஒரு தலைமுறை அல்லது இரண்டு, மூன்று தலைமுறைகள் தாண்டியும் வருவதுண்டு" என்றார் அவளுடைய தாய். "என்னுடைய புஃபுக்குப் பிளவுபட்ட தாடை இருந்தது. அவருடைய குழந்தைகள் யாருக்கும், என்னுடைய தாய்க்கும் கூட, பிளவுபட்ட தாடை இல்லை. ஆனால், எனக்குப் பிளவுபட்ட தாடை வந்தது. அதே குணம் இப்போது உனக்கும் வந்திருக்கிறது!"
"அப்படியானால், நான் வெறுமனே உங்களுடைய குணங்களின் தொகுப்புதானா?" கொஞ்சம் வருத்தத்துடன் கேட்டாள் லாங்லென். "இல்லை லாங்லென்" என்று அவளை அணைத்துக் கொண்டார் அவளுடைய தாய். "இப்படி இம்மா, அப்பாவிடமிருந்து குழந்தைகளுக்குக் குணங்கள் வருவதை மரபுவழி என்பார்கள். நமக்கெல்லாம் குணங்கள் ஒரேமாதிரி இருக்கலாம். ஆனால், உன்னிடம் இருக்கும் குணங்கள் மொத்தமாக வேறு யாருக்கும் இல்லை. நீ தனித்துவமான பெண்!"
"ஆமாம் லாங்லென்" என்றார் அவளுடைய தந்தை. "என்னைப்பார், நானும் தனித்துவமான ஆள்தான். நான் ரொம்ப உயரமானவன். என்னுடைய தலையில், முகத்தில், ஏன், காதுகளில்கூட நீளமான, சுருட்டைமுடி இருக்கிறது.
இந்த உலகத்திலேயே மிக அகலமான பாதங்கள் என்னுடையவைதான்" என்றவர் அவளைக் கூர்ந்து கவனித்து, "ஒருவேளை உன்னுடைய காதுகளில் நீளமான, சுருட்டைமுடி வந்தால், நீ என்ன செய்வாய்?"
"ம்ம்ம், பின்னல் போட்டு வண்ணமயமான ரப்பர்பாண்ட்களை அணிந்துகொள்வேன் அப்பா!" என்றாள் லாங்லென்.
இதைக்கேட்டு அவளுடைய தாய் சிரித்தார், "லாங்லென், பெண்களுக்குக் காதில் முடிவராது. ஆனால் ஒன்று, உன் அப்பாவைப்போலவே கெக்கேபிக்கே என்று நகைச்சுவையாகப் பேசுகிற குணம் உனக்கும் வந்திருக்கிறது!"
அவளுடைய தந்தை ஏதோ வேலையாக வெளியே செல்ல, லாங்லென் தன் தாயின் மடியில் படுத்துக்கொண்டாள், "இம்மா, இபோக்குக்குக் கன்னத்தில் குழிவிழுமில்லையா?"
"ஆமாம், அதற்கென்ன?"
"உனக்கும் அதேபோல் கன்னத்தில் குழிவிழும் என்று இபோக் சொன்னார்கள்" என்றாள் லாங்லென். "ஆனால், இப்போது உனக்கு அப்படிக் கன்னத்தில் குழிவிழுவதில்லையே, அது ஏன்?"
இதைக்கேட்ட அவளுடைய தாய் பெரிதாகச் சிரித்தார். "இபோக்குக்கு இருந்த கன்னக்குழி என்கிற குணம் எனக்கும் வந்தது உண்மைதான்" என்றார். "ஆனால், ஒவ்வொரு குணமும் நம்மை வெவ்வேறு விதமாக பாதிக்கும். சில பாதிப்புகளால் நமக்குச் சில குணங்கள் வரும், வேறு சில பாதிப்புகளால் அதே குணங்கள் காணாமல் போய்விடும்!"
இப்போது, அவளுடைய தந்தை கையில் ஒரு தட்டுடன் அந்த அறைக்குள் வந்தார். "என்னுடைய பாதிப்பால் இந்தத் தட்டில் இந்தச் சூடான, சுவையான வடைகள் தோன்றியிருக்கின்றன" என்றபடி அதை மேசை மீது வைத்தார்.
"நல்லது அப்பா, எங்களுடைய பாதிப்பால் அந்த வடைகள் இப்போது காணாமல் போய்விடும்" என்றபடி ஒரு வடையை எடுத்து வாயில் திணித்துக்கொண்டாள் லாங்லென். "ஆஹா, பிரமாதமான ருசி!"
கடினமான சொற்களைப் புரிந்து கொள்ளுங்கள்:
இம்மா: மணிப்புரி மொழியில் தாய்
இபோக்: மணிப்புரி மொழியில் பாட்டி
புஃபு: மணிப்புரி மொழியில் தாத்தா
பிளவு: பிரிந்து காணப்படுவது
குணங்கள்: ஒருவரிடம் காணப்படும் தன்மைகள். உதாரணமாக, சுருட்டைமுடி, பிளவுபட்டதாடை, கன்னத்தில் குழி விழுவது போன்றவை
மரபுவழி: பெற்றோருடைய குணங்கள் குழந்தைகளுக்கு வருவது
தலைமுறை: ஒரே காலகட்டத்தில் பிறந்து வளர்கிற மனிதர்கள்
தனித்துவம்: தன்னைப்போல் வேறு யாரும் இல்லாமல் வித்தியாசமாக இருப்பது
பாதிப்பு: எதையேனும் மாற்றுவது
உங்களுடைய குடும்பத்தை மரவடிவப் படமாக வரையுங்கள்
லாங்லெனின் தாய் மணிப்பூரைச் சேர்ந்தவர், அவளுடைய தந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர். இதை நீங்கள் ஏற்கெனவே ஊகித்திருப்பீர்கள்.
7வது, 8வது பக்கங்களில் லாங்லென் தன்னுடைய குடும்பத்தை மரவடிவில் படமாக வரைந்திருக்கிறாள். அதுபோல, நீங்களும் வரைந்து பாருங்களேன்.
ஒரு தாள், ஒரு பேனாவை எடுத்துக்கொள்ளுங்கள். லாங்லெனைப் பின்பற்றி உங்கள் குடும்ப விவரங்களை மரவடிவில் படமாக்குங்கள். ஏதாவது சந்தேகம் வந்தால், உங்களுடைய பெற்றோரிடம் உதவி கேட்டு, படத்தைப் பூர்த்தி செய்யுங்கள்.
ஒரு புத்தம்புது செல்லப்பிராணியைக் கற்பனை செய்யுங்கள்!
உங்களுடைய கற்பனைச் செல்லப்பிராணியின் தலைமுடி நேராக இருக்குமா? அல்லது, சுருண்டு இருக்குமா? அதன் மூக்கு வட்டமாக இருக்குமா? அல்லது, முக்கோண வடிவில் இருக்குமா? அதற்கு எத்தனை கால்கள்? ஒன்றா, இரண்டா, இன்னும் பல கால்களா? அதன் வால் ஒரு நாய் வாலைப்போல் இருக்குமா? அல்லது, ஒரு சிங்கத்தின் வாலைப்போல் இருக்குமா?
கற்பனையை ஓடவிடுங்கள். நீங்கள் விரும்பும் வடிவில் ஒரு செல்லப்பிராணியை வரையுங்கள். பல மிருகங்களின் பண்புகளை இணைத்து விளையாடுங்கள்!