சாந்தியும் அருணும் நல்ல நண்பர்கள். அவர்கள் ஒன்றாக நிறைய விளையாடுவார்கள்.
அவர்கள் வகுப்பில் நிறைய ரகசியங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்லும் போது, பந்தயம் வைத்து ஓடுவார்கள்.
அவள் எப்போதும் சந்தோஷமாக இருந்தாள்.
ஒரு நாள் சாந்தி மெதுவாக வகுப்பிற்குள் வந்தாள். தலை குனிந்து சோகமாக இருந்தாள். "யாராவது உன்னை திட்டினார்களா?", என்றான் அருண்.
சாந்தி இல்லை என்று தலையை ஆட்டினாள். பின் வகுப்பில் உட்கார்ந்து, அவள் தலை நிமிரவே இல்லை. சோனா மிஸ் அவள் பெயரை கூப்பிட்ட போது, 'உள்ளேன்' என்று அவள் பதில் கூறவில்லை. சோனா மிஸ் மீண்டும் உரத்த குரலில் 'சாந்தி குமார்' என்று கூப்பிட்ட போது, அவள் மெதுவாக கையை உயர்த்தினாள்.
"உனக்கு தொண்டை வலியா?", என்று ஆசிரியர் கேட்டார்கள். அவள் இல்லை என்று தலையை ஆட்டினாள்.
அவள் கன்னங்கள் சிவந்து போய், அவளுக்கு காய்ச்சல் இருந்தது போல தெரிந்தது.
"நீ நன்றாக இருக்கிறாயா?" என்று சோனா மிஸ் கேட்டார்கள்.
அவள் ஆமாம் என்று தலையை ஆட்டினாள். ஆனாலும் அவள் யாரையும் நிமிர்ந்து பார்க்கவே இல்லை.
"சாந்தி ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறாள்?"
"உன் குட்டித் தம்பி நன்றாக இருக்கிறானா?"
"உன் நாய்க்குட்டி நன்றாக உள்ளதா?"
"உன் பாட்டி நன்றாக உள்ளார்களா?"
சாந்தி அவள் நண்பர்களின் கேள்விகளுக்கெல்லாம் ஆமாம் என்று தலையை ஆட்டிய படி இருந்தாள். ஆனால் அவள் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.
அருண் அவளை சிரிக்க வைக்க விரும்பினான். அவனுக்கு திடீரென்று ஒரு நல்ல யோசனை வந்தது. அவன் தன் பையில் இருந்து எதையோ எடுத்தான்.
சாந்தியிடம் அதனை காண்பிக்க சென்ற போது, அது அவன் கையில் இருந்து நழுவியது. சாந்தி அவளை நோக்கி ஏதோ பறந்து வருவதைப் பார்த்து, அதனை பிடித்தாள்.
அது ஒரு பெரிய, பச்சை நிற ரப்பர் தவளை.
அதனை பார்த்து, சாந்தியின் கண்கள் விரிந்தன. அவள் தன் வாயை திறந்து சிரிக்கத் தொடங்கினாள்.
அதன் பின் தான், அருணுக்கு அவள் நண்பர்களுக்கும் சாந்தி ஏன் நாள் முழுவதும் சிரிக்கவோ பேசவோ இல்லை என்று புரிந்தது!
அவள் வாயில் இருந்த நான்கு முன் பற்கள் காணாமல் போயிருந்தன!