jadavin kaadu

ஜாதவின் காடு

இந்த உலகத்திலேயே மிகச்சிறந்த ஒரு வேலையை செய்துகொண்டிருக்கிறார் ஜாதவ்: காடுகளை உருவாக்குதல்! அவர் காடுகளை எப்படி உருவாக்குகிறார்? தெரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தை வாசியுங்கள்.

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இவர் பெயர் ஜாதவ், இவர் ஒரு மரம் நடுபவர்.

ஜாதவுக்கு மரங்கள் நிறைந்துள்ள இடங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். காரணம் அங்கே உயிர் ததும்பி வழிகிறது.

மரங்கள் இல்லாத இடங்கள் ஜாதவுக்குப் பிடிக்காது. காரணம் அந்த இடங்களில் துளியும் உயிரில்லை!

பல வருடங்களுக்கு முன்னால் ஒருநாள், பிரம்மபுத்திரா நதிக்கரையில் நடந்துகொண்டிருந்தார் ஜாதவ். அப்போது, அவர் ஒரு பெரிய, காலியான, மரங்கள் இல்லாத இடத்திற்கு வந்தார். அந்த இடம் மிகவும் வறண்டும் சூடாகவும் இருந்தது. மண் பொடிப்பொடியாகவும் கோடுகோடாகவும் இருந்தது.

மண்ணில் கோடுகளா? என்ன வினோதம் இது?

ஜாதவ் சற்றே நெருங்கிப் பார்த்தார். அப்போதுதான் அவை கோடுகள் அல்ல என்று அவருக்குப் புரிந்தது. அங்கே இருந்தவை அனைத்தும் பாம்புகள்!ஒருவேளை நேற்றிரவின் வெள்ளத்தில் கரைக்கு அடித்துவரப்பட்டிருக்குமோ என்று யோசித்தார் ஜாதவ்.

அந்தப் பாம்புகள், வழக்கமாக ஆரோக்கியமான பாம்புகள் நெளிந்துகொண்டும் அசைந்துகொண்டும் இருப்பதுபோல் இல்லை. அவற்றின் நடுவே ஜாதவ் நடந்துசென்றபோது, அவை சீறவில்லை, ஓடவில்லை, அவரைக் கடிக்க முயற்சி செய்யவில்லை. அவை ஏதோ பழைய கயிறுகளைப்போல வெறுமனே ஓய்ந்து கிடந்தன.

இதைக் கண்ட ஜாதவ் மிகவும் வருந்தினார், ‘பாவம், இந்தப் பாம்புகள்! சூட்டில் செத்துகொண்டிருக்கின்றன! இந்தக் காலியிடத்தில் சில மரங்கள் இருந்தால் இந்தப் பாம்புகளுக்கு நிழல் கிடைக்குமே!’

அந்தப் பாம்புகள் கொஞ்சம்கொஞ்சமாக இறந்துகொண்டிருப்பதை ஜாதவால் பார்க்க இயலவில்லை. அங்கேயே உட்கார்ந்து அழ ஆரம்பித்தார்.

சில நிமிடங்களில் அவர் தெளிவடைந்து அழுகையை நிறுத்திவிட்டு எழுந்தார். ”இன்னும் புலம்பிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. ஏதாவது செய்ய வேண்டும்.”அவர் அவசரமாகத் தன்னுடைய கிராமத்துக்கு ஓடினார். தன் பை கொள்ளும் அளவுக்கு மூங்கில் கன்றுகளை எடுத்துக் கொண்டு ஓடிவந்தார். ”சூடான இந்த மணலில் மற்ற செடிகள் வளராது. ஆனால், மூங்கில்கள் வலுவானவை, அவை இந்த நிலத்தில் வளரும்.”

ஜாதவ் அந்த மூங்கில் கன்றுகளை மரமில்லாத அந்தக் காலியிடத்துக்குக் கொண்டுவந்தார். அவற்றை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத் தொடங்கினார். அது மிகவும் கடினமாக, சூடான வேலையாக இருந்தது. அதைச் செய்வதற்கு அவருக்குப் பல ஆண்டுகள் தேவைப்பட்டன. ஒரு கோடையில் ஆற்றில் தண்ணீர் வரவில்லை, அடுத்த கோடையில் பெருவெள்ளம் வந்தது. சில நேரங்களில் ஆறு நிறைய மண்ணைக் கொண்டுவந்தது. சில நேரங்களில் அங்கிருந்து மண்ணைக் கொண்டுசென்றது. பெரிய மழைகள் வந்து போயின. ஆனால், ஜாதவ் மரம் நடுவதை மட்டும் நிறுத்தவே இல்லை.

சில நாட்களில், மூங்கில்கள் வேர் பிடித்து வளர்ந்தன, பெரியதாகத் தொடங்கின. அவை வளர வளர அங்கே நிழல் கிடைக்க ஆரம்பித்தது, அந்த நிழலில் வசிப்பதற்காகப் பூச்சிகள் வந்தன. அந்தப் பூச்சிகள் மண்ணில் ஓட்டை போட்டுக்கொண்டு சென்றுதங்கின, கொஞ்சம் கொஞ்சமாக, அந்த மூங்கில்களுக்குக் கீழே இருந்த மண்ணின் தன்மை மாறத்தொடங்கியது. வறண்டுபோய் வெள்ளையாக இருந்த அந்த மண், இப்போது வளமான பழுப்பு நிற மண்ணாக மாறிவிட்டது. உயிர் இல்லாத மணல் உயிருள்ள மண்ணாக மாறிவிட்டது.

இப்பொது ஜாதவ் வருத்தமாக இல்லை, அதேசமயம் அவர் மகிழ்ச்சியாகவும் இல்லை.

அவர் தன்னுடைய மூங்கில் காட்டை பார்த்து யோசித்தார், ”கொஞ்சம் மரங்கள் உள்ள ஒரு இடம் நன்றாகதான் இருக்கிறது. ஆனால், இங்கே இன்னும் நிறைய மரங்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” அந்த யோசனை அவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.ஆகவே, ஜாதவ் தன்னுடைய கிராமத்துக்கு சென்று இன்னும் நிறைய விதைகளையும் கன்றுகளையும்  திரட்டத் தொடங்கினார்.

மூன்று பெரிய பைகள் நிறைய அர்ஜுன், எஜார், குல்மொகர், கொராய், மோஜ், ஹிமோலு போன்ற மரங்களின் விதைகள் கன்றுகளை நிறைத்துக் கொண்டார்.“இப்போது நம் கொஞ்சம் மரங்கள் நிறைந்த இடத்தில் அற்புதமான பழுப்புநிற மண் இருப்பதால்,இவற்றையும் இன்னும் நிறையவும் இங்கே நடமுடியும்!”

ஜாதவ் தனது விதகளையும் கன்றுகளையும் கொஞ்சம் மரங்கள் நிறைந்த இடத்துக்கு கொண்டுவந்து எல்லா பக்கமும் நட்டார்.அது கடினமான முதுகு ஒடியும் வேலை. அதற்கு பல ஆண்டுகள் பிடித்தது. அவரைச்சுற்றி ஆரஞ்சும் நீலமுமாக இருந்த வானம் ஊதாவும் இளஞ்சிவப்புமாகியது. கிராமங்கள் நகரங்களாயின. காற்றில் தூசு கூடியது. நதி சாம்பல் நிறமாகியது. ஆனால், ஜாதவின் பூச்சி நண்பர்கள் மண்ணை உழுது உதவினர். அவரது உயரமான மூங்கில்கள் நிழல் கொடுத்து காற்றைக் குளிர்வித்தன. அவர் தொடர்ந்து நட்டுக்கொண்டே இருந்தார்.

விரைவில் அவருடைய அர்ஜுன், எஜார், குல்மொகர், கொராய், மோஜ், ஹிமோலு போன்ற மரங்கள் நன்கு மண்ணுக்குள் சென்று வேர் பிடித்து வளரத் தொடங்கின. அவை வளர வளர, புதிய விதைகள் விழுந்தன. அவையும் வேர் பிடித்து வளர்ந்தன. செடிகள் மரங்களாயின, மரங்களில் கிளைகள் வளர்ந்தன, கிளைகள் வானத்தைத் தொடுவதுபோல் வளர்ந்தன.

முன்பு மரங்களே இல்லாத இடம், கொஞ்சம் மரங்கள் நிறைந்த இடமாகியது. இப்போது அது அற்புதமான பசுமையான பல மரங்கள் நிறைந்த இடமாகிவிட்டது.

ஆனால், பல மரப் பிராணிகள் இல்லாமல் வெறுமனே பல மரங்கள் நிறைந்த இடமாக இருந்து என்ன பயன்? ஒன்று வந்ததும் மற்றவையும் வரிசையாக வந்துசேர்ந்தன.

முதலில் பறவைகள் வந்தன.

உள்ளூர்ப் பறவைகளும் வெளியூர்ப் பறவைகளும் ஜாதவ் நட்ட மரங்களில் தங்களுடைய கூடுகளை அமைக்க வந்தன. கழுகுகள், பெலிக்கன்கள், நாரைகள், வாத்துகள், பாடும் பறவைகள், திரஷ்ஷஸ்கள், வாலாட்டிக் குருவிகள், சேட்கள் எல்லாம் வந்தன.

அடுத்து விலங்குகள் வந்தன. அவை அங்குமிங்கும் குதித்தன, கிளைகளில் தொங்கின, விளையாடின, மரங்களுக்கிடையே தங்களுடைய வீடுகளை அமைத்துக்கொண்டன. எருதுகள், முயல்கள், கிப்பன் குரங்குகள், யானைகள், புலிகள், காண்டாமிருகங்கள் என அனைத்தும் அங்கே வசிக்கத் தொடங்கின.

கடைசியாக அங்கே பாம்புகளும் வந்தன.

அவை அங்குமிங்கும் நெளிந்து ஓடின, ஜாதவ் நட்ட மரங்களின்கீழே குளுமையாக ஓய்வெடுத்தன.

அந்தப் பாம்புகளைப் பார்த்தவுடன், ஜாதவ் உட்கார்ந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார். மகிழ்ச்சியில், பாம்புகள் தன்னைக் கடித்துவிடுமோ என்றுகூட அவர் பயப்படவில்லை.

ஜாதவின் மரங்கள் நிறைந்த இடத்தில் இப்போது  இறகுகள், அலகுகள், இறக்கைகளும் நகங்கள், வால்கள், விஷப்பற்களும் நிறைந்து காணப்பட்டன.

ஆங்காங்கே விதவிதமான புள்ளிகள், வண்ணங்கள், கோடுகள், மினுமினுப்புகளோடு எங்குபார்த்தாலும் பச்சை, பச்சை, பச்சைதான். நிறைவாக, அந்த மரங்கள் நிறைந்த இடம் ஒரு காடாகிவிட்டது. ஜாதவுக்கு மகிழ்ச்சியாகிவிட்டார்.

ஆனால், ஜாதவ் மனதில் வேறொன்று ஓடியது. "ஓர் இடத்தில் நிறைய மரங்களை நல்ல விஷயம்தான்.ஆனால் ஒவ்வோர் இடத்திலும் நிறைய மரங்களை இருந்தால் எவ்வளவு  நன்றாக இருக்கும்!"ஆகவே, அவர் விதைகளும் கன்றுகளும் நிறைந்த பைகளைத் தூக்கிக்கொண்டு உலகெங்கும் நடந்துசெல்ல ஆரம்பித்தார். மரங்கள் இல்லாத இடங்களிலெல்லாம் அவர் விதைகளை  நட்டார்.ஆனால்,  உலகத்தில் மரங்கள் இல்லாத இடங்கள் நிறைய  இருக்கின்றன. மரங்கள் நிறைந்த இடங்களைவிட மரங்கள் இல்லாத இடங்கள்தான் இப்போது அதிகம். இது மிகவும் சோகமான விஷயம்தான்.அதேசமயம், ஜாதவ் இம்முறை அதை நினைத்து அழுதுகொண்டு உட்கார்ந்திருப்பதில்லை.

ஜாதவ் மரம் நடுகிறார்.

மேலும் மரங்களை நடுகிறார்.

இன்னும் நிறைய மரங்களை நடுகிறார்.

பழைய காடுகளை மீண்டும் கொண்டுவருவது கடினமான வேலைதான்.

கடல்மட்டங்கள் உயரத் தொடங்கிவிட்டன, காற்றில் குளிர் அதிகமாகிக்கொண்டிருக்கிறது.நகரங்கள் பெருநகரங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன, ஜாதவுக்கும் வயதாகிறது. ஆனால், அவர் தொடர்ந்து  மரங்களை நடுகிறார், இன்னும் நடுகிறார். மேலும் நடுவார்.

மொத்த உலகமும் மகிழ்ச்சியான, மரங்கள் நிறைந்த இடமாகும்வரை ஜாதவ் தொடர்ந்து மரங்களை நட்டுக்கொண்டே இருப்பார்.

நிஜ வாழ்வில் ஜாதவ்!

ஜாதவ் ‘முலய்’ பெயங், அஸாமில் உள்ள மஜுலியில் வசிக்கும் இயற்கைப் பாதுகாவலர். இந்திய அரசாங்கம் தனது குடிமக்களுக்கு வழங்கும் மிகப் பெரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ கௌரவத்தைப் பெற்றவர்.பதினாறு வயது ஜாதவ், பிரம்மபுத்திரா நதிக்கரையில் ஒரு மணற்பரப்புக்கு அடித்துவரப்பட்டிருந்த பாம்புகள் இறந்துகொண்டிருப்பதைப் பார்த்து வருந்தினார். அங்கே சில மரங்களை நடத் தீர்மானித்தார். முதலில், சிறிய அளவில் மூங்கில்களை மட்டும் நடத் தொடங்கினார். ஒவ்வொரு செடியாக சிரமப்பட்டு மிகப் பெரிய காட்டையே உருவாக்கினார். இவை நிகழ்ந்தது 1979இல். அடுத்த 30 ஆண்டுகளில், ஜாதவாலும் அவருடைய மரங்களாலும் அந்த வறண்ட நிலத்தின் மண் தன்மையே மாறிவிட்டது. 550 ஹெக்டேருக்கு பரந்து விரிந்திருந்த அந்த வெற்று மணற்பரப்பு, இப்போது ஓர் அடர்த்தியான பசுமையான காடாகத் திகழ்கிறது. அங்கே பலவிதமான மரங்களும் செடிகொடிகளும் வளர்ந்திருக்கினறன. யானைகள், புலிகள், குரங்குகள், மான்கள் மற்றும் பலவிதமான உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகளும் அங்கே வசிக்கின்றன. ஜாதவ் தினந்தோறும் தன்னுடைய காட்டைச் சென்று பார்க்கிறார். எங்கெல்லாம் காலி இடங்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் மரங்களை நட்டுக்கொண்டே இருக்கிறார்.

மரம் நடும் விளையாட்டு: மாமரம் வளர்ப்போம்.

மாம்பழம் சாப்பிட்டீர்களா? நன்றாக இருந்ததா? இன்னொன்று வேண்டுமா? கடைக்குச் சென்று இன்னொரு மாம்பழத்தை வாங்குவது சுலபம். ஆனால் அதைவிட ஜாலியான (இலவசமான!) ஒரு வழியும்  இருக்கிறது: நீங்கள் இப்போது  சாப்பிட்ட மாம்பழத்தின் விதையை நட்டு நீங்களே சில பழங்களை உருவாக்கலாம்.

அதற்குத் தேவை நேரமும் பொறுமையும்தான்.முதலில், உங்கள் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு நல்ல காலி இடத்தைக் கண்டறியுங்கள். உங்கள் கூடப்பிறந்தவர்கள் அல்லது நண்பர்கள் அல்லது உறவினர்கள் ஒருவருடைய உதவியுடன்,நீங்கள் சாப்பிட்ட மாம்பழத்தின் கொட்டையை அங்கே நட்டு வையுங்கள். கொட்டையை நட்ட இடத்தில் மண் தளர்வாக இருக்கட்டும், அங்கே நிறைய சூரியவெளிச்சம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு, நீங்கள் பல வாரங்களுக்குக் காத்திருக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் அந்த இடத்தில் தண்ணீர் விடுங்கள், அவசரமில்லாமல் காத்திருங்கள், மெதுவாக, உங்களுடைய விதை செடியாக வளர்வதைக் காண்பீர்கள்.

உங்களுடைய விதை முளை விட்டதும், அது ஒர் ஆரோக்கியமான மாங்காய்ச் செடியாக வளரும். இப்போதும் அவசரம்வேண்டாம். நீங்கள் இன்னும் நிறைய காத்திருக்கவேண்டும். தினமும் உங்கள் செடிக்கு நிறைய தண்ணீர் விடவேண்டும், அதைக் கவனித்து வரவேண்டும். உங்களுடைய செடியை பூச்சியோ மிருகமோ சாப்பிட்டுவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள், யாராவது அதை மிதித்து விடாதபடி கண்காணியுங்கள், இதையெல்லாம் செய்யும்போது உங்களுக்கு போரடித்தால், சில புத்தகங்களைப் படியுங்கள், நல்ல பாடல்களைப் பாடுங்கள்,  அல்லது, இன்னும்  சில   செடிகளை நட்டுவையுங்கள். சில வருடங்கள் கழித்து, நீங்கள் உயரமாக வளர வளர உங்களுடைய மாங்காய்ச் செடியும் உங்களோடு உயரமாக வளரும். ஒருகட்டத்தில் அது மிகப் பெரிய மரமாகிவிடும். அதன்மீது ஏறி நீங்கள் விளையாடலாம், அதன் கீழே நண்பர்களுடன் ஆனந்தமாக நேரம் செலவிடலாம்.  இப்போது, உங்களுடைய மரம் சில மாங்காய்களைத்  தானே உருவாக்கத் தொடங்கியிருக்கும். அவற்றை நீங்களும் உங்களுடைய நண்பர்களும் சாப்பிடலாம். இன்னொரு முக்கியமான  விஷயம், இந்த மரத்தைப் பார்ப்பதற்காக நிறைய மாங்காய்ப் பிரியர்கள் வருவார்கள்: பறவைகள், எறும்புகள், அணில்கள், வௌவால்கள், குரங்குகள், சிலந்திகள், இன்னும்  நிறைய.இந்த உயிரினங்களில் சில, மாம்பழங்களைச் சாப்பிடும், சில, அந்த மரத்தின் பட்டைகளைச் சாப்பிடும், வேறு சில, அந்தப் பூக்களிலிருந்து தேனைக் குடிக்கும், சில உயிரினங்கள் அந்த மரத்தில் இருக்கும் மற்ற உயிரினங்களைச் சாப்பிடும். ஆனால், சாப்பாடு மட்டும்தான் எல்லாம் என்று நினைத்துவிடாதீர்கள். சில உயிரினங்கள் உங்களுடைய மரத்தின் நிழலில் ஓய்வெடுக்க வரலாம், அல்லது அதன் கிளைகளில் தூங்கலாம். உங்களுடைய மரத்தால், ஒவ்வொரு உயிருக்கும் பலவிதமான பயன்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் செலவிட்டு உங்களுடைய மரத்தைக் கவனியுங்கள். அங்கே என்னென்ன உயிரினங்கள் வருகின்றன, எந்த நேரத்தில் வருகின்றன, எந்த நாள்களில் வருகின்றன,  அவை என்ன செய்கின்றன என்பதைக் கவனியுங்கள். அவற்றை உங்களுடைய நோட்டுப் புத்தகத்தில் எழுதிவையுங்கள். நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அதைப் படங்களாகவும் வரையுங்கள். ஒரே ஒரு மாம்பழ விதையின் மூலமாக நீங்கள் என்னென்ன செய்திருக்கிறீர்கள், என்னென்ன கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று கொஞ்சம் யோசியுங்கள்.  மரம் நடுவது ஒரு மகிழ்ச்சியான விளையாட்டுதானே? ஒரு மரத்துக்கே இவ்வளவு ஆனந்தம் என்றால், மரங்கள் நிறைந்த ஒரு மிகப் பெரிய காட்டையே உருவாக்கிய ஜாதவ் எவ்வளவு மகிழ்ச்சியுடன் வாழ்வார் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்!